பீஜே அவர்கள் பள்ளிக்கு போவதில்லை
பீஜே பள்ளிக்கு போவதில்லை
நீங்க வீட்டில் இருக்கும் போது பாங்கு சொல்லியும் ஐந்து வேலை தொழுகைக்கு செல்வது கிடையாது. மார்க்க பிரச்சாரம் செய்ய கூடிய நீங்கள் இப்படி செய்வது வருந்த தக்கது. அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவான் என்று சிலர் கேட்கிறார்கள்.
மாநில நிர்வாகப் பொறுப்புக்கு புதியவர்கள் தேர்வு செய்யப்படுவது வரை முழு நேரமும் மர்கஸில் தான் நான் இருந்திருக்கிறேன். நிர்வாக மாற்றம் ஏற்பட்ட பின்பும் அலுவலகம் சென்று கொண்டு தான் இருந்தேன்.
ஆனால் அதில் ஏற்பட்ட சில அனுபவங்களுக்குப் பின்பு தான் நான் சிறிது காலம் தலைமைக்குச் செல்லாமல் இருப்பது நல்லது என்று முடிவு செய்தேன். நான் தலையிட்டு மறைமுகமாக இயக்குகிறேன் என்ற எண்ணம் வரக் கூடாது என்பதற்காகவும், அங்கே நான் செல்லும் போதெல்லாம் வருகின்ற மக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக என்னை அணுகுகின்றனர். என்னால் எதுவும் செய்ய இயலாது என்று கூறினாலும் அவர்கள் அதை நம்புவதில்லை. மேலும் நிர்வாகம் பற்றி சம்மந்தமில்லாத பல குறைகளையும் என்னிடம் பட்டியல் இடுகின்றனர்.
மேலும் தலைமைக்குச் செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னிடம் தேதி கேட்பதற்காகவே சிலர் காத்திருப்பார்கள். அனைத்தையும் எழுத்து வடிவில் கொண்டு வரும் பணியில் நான் இறங்கியுள்ளதால் என்னால் தேதி கொடுக்க முடியவில்லை என்று எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் அதைப் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். சொந்த வேலைகள் காரணமாகவும் தேதி கொடுக்க முடியாத நிலை உள்ளது.
இதன் காரணமாகவே ஜும்ஆவுக்குக் கூட மக்கள் அதிகம் கூடாத சிறிய சிறிய கிளைகளுக்கு என்னை அனுப்புங்கள் என்று கூறி அதன்படி நடந்து வருகிறேன். ரமலான் இரவு உரைக்கும் இந்த ஆண்டு நான் செல்லவில்லை. தனி அறையில் பதிவு செய்ததைத் தான் ஒளி பரப்பினார்கள்.
நாம் அனைவரும் கூட்டாகக் கட்டிக்காத்த கட்டுக் கோப்பு என்னால் குலைந்து விடுமோ என்று அச்சமாக உள்ளதாலும் என்னைச் சார்ந்தே இந்த ஜமாஅத் நடக்கிறது என்பதை மாற்றி அமைக்கவும் வெளியில் சொல்லத் தேவை இல்லாத இன்னும் சில காரணங்களாலும் நான் தலைமை அலுவலகம் செல்வதில்லை. தலைமை அலுவலகத்தில் தொழுகையும் நடப்பதால் பள்ளிக்கு வருவதில்லை என்று பிரச்சாரம் செய்கின்றனர். மற்றவர்களைப் போல் போனோம் வந்தோம் என்ற நிலை சீக்கிரம் ஏற்பட துஆ செய்யுஙகள்.
குறிப்பு : மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தலைமைப் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் நான் காலை பத்து முதல் இரவு பத்து வரை தலைமையில் தான் இருக்கிறேன். நான்கு வேளை தொழுகை நேரமும் பள்ளியில் தான் இருக்கிறேன். ஆனால் பஜ்ருக்கு மட்டும் வருவதில்லை. காரணம் எனது பாதுகாப்புக்காக தினமும் ஆயுதம் ஏந்திய நான்கு போலீஸார் (தினம் இருவர் வீதம்) வீட்டில் இருந்து என்னை அழைத்து வருவார்கள். வீட்டில் கொண்டு போய் விடுவார்கள். என்னைக் கொல்ல சிலர் சதித்திட்ட்டம் தீட்டிய தகவல் உளவுத்துறை மூலம் அரசுக்குக் கிடைத்த்தால் இந்த ஏற்பாடு. ஆட்சி மாறிய பிறகும் கூட எனது பாதுகாப்பு நீடிக்கிறது. அதிகாலையில் பஜ்ரு நேரத்தில் அந்தக் காவலர்கள் வர முடியாது. காவலர்கள் இல்லாமல் நான் வெளியில் செல்லக் கூடாது என்று அரசு அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளதால் தான் இந்த நிலை.
28.09.2009. 01:16
