பீஜேயா பீஇசட்டா
பீஜேயா பீஇசட்டா
மதிப்பிற்குரிய அண்ணன் பி ஜைனுல்லாபிதீன் அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வ. ப.) உங்கள் பெயர் என்ன? ஜைனுல் (அதாவது ஜீமா? ஜேயா?) மற்றும் உங்கள் தந்தை பெயர் என்ன?இன்ஷா அல்லாஹ் துஆ செய்தால் குறிப்பிடுவதற்காக வேண்டி கேட்கிறேன் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் பெற்றோர்கள் குடும்பத்தார்கள் நம் அனைவருக்கும் ஜன்னத்துல் பிர்தௌஸ் ஐ எல்லாம் வல்ல அல்லாஹ் கொடுப்பானாக ஆமீன்
துஆ செய்வதற்கு இதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் ஒருவரை எந்த வகையில் நீங்கள் அறிந்திருக்கிறீர்களோ அதைக் குறிப்பிட்டால் போதும். அல்லாஹ்வுக்கு விளங்கி விடும். முழு அட்ரசையும் சொல் என்றோ அவரது தந்தை பெயரைக் கூறு என்றோ அல்லாஹ் கேட்க மாட்டான். அல்லாஹ்வைக் கேலி செய்யும் வகையில் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.
கடந்த காலத்தில் வாழ்ந்த எத்தனையோ நன்மக்களின் பெயர் பலருக்குத் தெரியாது. அவர் எவ்வாறு அறியப்பட்டுள்ளாரோ அவ்வாறு தான் குறிப்பிடுகிறோம். குறிப்பிடுகிறீர்கள். அபூஹனீஃபா என்றால் அவரது நிஜப் பெயர் அது அல்ல. அவரது தந்தை பெயரும் அதிகமான மக்களுக்குத் தெரியாது. புகாரி, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, ஷாஃபீ, இன்னும் ஆயிரக்கணக்கானோரின் இயற்பெயர் பலருக்கும் தெரியாது. அவர்கலீன் சொந்தப் பெயரைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு துஆ செய்வது கிடையாது. அபூபக்ர் (ரலி) போன்ற ஏராளமான நபித்தோழர்களின் இயற்பெயரும் பலருக்குத் தெரியாது. துஆ செய்யும் போது இது போன்ற விபரங்களைக் கேட்பதில்லை.
எனவே மனதில் என்ன உள்ளதோ அதைக் கேளுங்கள். இது போன்ற பொருந்தாக் காரணத்தைக் கூற வேண்டிய அவசியம் இல்லை.
அரபு மொழியில் ஸே என்ற எழுத்து தான் என் முதல் எழுத்து. அந்த எழுத்து தமிழில் இல்லாததால் ஜ என்ற எழுத்தை பயன்படுத்தி ஜெய்னுல் என்று எழுதி வந்தேன். பீர் முஹம்மது என்ற என் தந்தையின் முதல் எழுத்துடன் ஜெ சேர்த்து பீஜெ என்று சிலர் குறிப்பிடலானார்கள்.
இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனை இல்லை. அடையாளம் தெரிந்து கொள்ளவே பெயர்கள். மார்க்கம் தடுத்துள்ள வகையில் இருக்கக் கூடாது. எவ்வித அர்த்தமும் இல்லா விட்டால் கூட அதற்குத் தடை கிடையாது.
எத்தனையோ நபித் தோழர்களின் பெயர்களுக்கு பொருளே இல்லை. ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றை மாற்றவில்லை.
பீஜேயா பீஜையா பீஇசட்டா என்றெல்லாம் சில மன நோயாளிகள் பேசியும் எழுதியும் வருவதை இதன் காரணமாகவே நான் கொண்டு கொள்வதில்லை. எவ்வித சம்மந்தமும் இல்லாமல் என் பெயரை பீஜே என்று நான் வைத்துக் கொண்டாலும் மார்க்க அடிப்படையில் அதில் தவறு ஏதும் இல்லை.
28.09.2009. 01:13
