தவ்ஹீத் மேடையில் ஷிர்க் உரை

 தவ்ஹீத் மேடையில் ஷிர்க் உரை

தவ்ஹீத் மேடைகளில் தவறான கொள்கை உள்ளவர்களை ஏற்றுவதால் என்ன விளைவு ஏற்படும் என்பதை மாஹின் அவர்கள் அனுப்பியுள்ள உண்மைச் சம்பவம் விளக்குகிறது

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

 நமது மேடையில் பிறரை அனுமதிக்கலாமா?

 கொள்கையில் உறுதி இல்லாதவர்களை அல்லது பிற இயக்கத்தவர்களை நமது இயக்க மேடைகளில் பேச அனுமதிக்கக் கூடாது என்பது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகளில் ஒன்று. ஆனால் இது தவறு என்று சிலர் வாதிடுகின்றனர். அவ்வாறு பிறரை பேச அனுப்பதால் எத்தகைய பாரதூரமான விளைவுகள் ஏற்படுகிறது என்பதை நான் ஆதாரத்துடன் சமர்ப்பிக்கின்றேன்.

 ஆதாரம்

 நாகர்கோவில் கோட்டாறில் அமைந்துள்ள ஜாக் இயக்கத்திற்கு உட்பட்ட ஃபிர்தௌஸியா அரபிக் கல்லூரியின் ஆண்டு விழாவில் ஜாக் இயக்கத்தை சாராத பல்வேறு கொள்கைகளை உடையவர்கள் அழைக்கப்பட்டனர். தாருல் ஹூதா நிறுவனரான உமர் ஷெரீஃப், ஜாக் இயக்கத்தின் தலைவரான எஸ்.கமாலுதீன் மதனியின் சம்பந்தியும் திருக்குர்ஆனுக்கு தமிழ் ஒலிவடிவம் கொடுத்தவரும் நேஷனல் கல்லூரி பேராசிரியருமான திருவை. அப்துர் ரஹ்மான் போன்ற அறிஞர்களும் கலந்து கொண்டனர். 

 அந்த கூட்டத்தில் திருவை அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றும் போது, 'நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வரலாற்றை எழுதுவதற்காக உமறு புலவர் விரும்பினார். ஆனால் அதற்கான பொருளாதார வசதி அவரிடம் இல்லை. எனவே செல்வந்தராக இருந்த சதக்கத்துல்லா அப்பாவிடம் சென்று விஷயத்தைக் கூறி பொருளுதவி கேட்டார். ஆனால் முரட்டு மீசையும் கரடு முரடான ஒரு விறகுவெட்டியின் தோற்றமும் கொண்ட உமறுப்புலவரைக் கண்ட சதக்கத்துல்லா அவர்கள், இவருக்கு நபிகளாரின் சரித்திரத்தை எழுதும் தகுதி கிடையாது என எண்ணி மறுத்து திரும்ப அனுப்பி விட்டார்.

 அன்றைய தினம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சதக்கத்துல்லா அப்பாவின் கனவில் வந்து உமறுப் புலவர் தான் என்னுடைய வரலாற்றை எழுதத் தகுதியானவர், அவரை நீ துரத்தி விட்டாயே! தோற்றத்தை வைத்து எடை போடாதே! என்று கூறினார்கள். பதறிப் போன சதக்கத்துல்லா அவர்கள், உடனடியாக உமறுப் புலவரை அழைத்து வரலாற்றை எழுதும் படி கூறி பொருளாதார உதவி செய்தார்கள்

 என்று உரையாற்றினார்.

 இந்த கட்டுக்கதைகளை திருவை அப்துர் ரஹ்மான் ஜாக் மேடையில் கூறியதை அடுத்து பேசிய எவரும் கண்டிக்கவுமில்லை, மறுக்கவுமில்லை.

 ஜாக்கின் கொள்கை, நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியாது என்றிருந்தும் கூட ஜாக் தலைவர் கமாலுதீன் மதனியோ துணை தலைவர் செய்யதலி ஃபைஸியோ ஃபிர்தௌஸியா கல்லூரி முதல்வரான சகோ.செய்யது முஹம்மது மதனியோ அதை மறுத்துக் கூறி மக்களை தெளிவு படுத்தவில்லை. அன்றைய தினம் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அதை உண்மை என்று நம்பும் நிலையே ஏற்பட்டது. அந்த மேடையில் உமர் ஷெரீப், எஸ்.கமாலுதீன் மதனி, செய்யதலி ஃபைஸி, முஹம்மது மதனி, ஆமிர் உமரி மற்றும் பல அறிஞர்கள் அமர்ந்திருந்தனர். மதரஸா பாடத்திலே நபிகளாரைக் கனவில் காண முடியாது என பாடம் படித்த இன்றைய ஆலிம்களான அன்றைய ஃபிர்தௌஸியா மாணவர்களும் மதரஸா வளாகத்தில் நடந்த அந்த கட்டுக்கதையைக் கண்டிக்கவில்லை.

 கதைகளையும் கற்பனைகளையும் நபி சரிதை என சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவரையும் நபிகளார் மீது இட்டுக்கட்டி சொல்லப்பட்ட சதக்கத்துல்லா அப்பாவின் கதையையும் உண்மை என்று மக்கள் நம்பும் நிலை ஏற்பட்டது.

 பிறிதொரு நாளில் ஜாக் துணைத் தலைவரான செய்யதலி ஃபைஸியிடம் 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கனவில் காண முடியாது என்றிருக்க அவர் பேசியது சரியா?' என நான் கேட்ட போது 'இல்லை. அவர் பேசியது தவறு' என்று கூறினார். 'அப்படியானால் நீங்கள் ஏன் அவர் பேசிய போதே கண்டிக்கவில்லை, அல்லது கூட்ட முடிவிலாவது அதை மறுத்திருக்கலாமே' என்றேன். அதற்கவர், 'தவறு தான், இனி எந்தக் கூட்டத்திலும் அவரை அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம்' என பதிலளித்தார். (ஆனால் அடுத்த மாதம் ஹவ்வா நகர் ஜாக் மர்கஸில் நடந்த பெண்கள் பொதுக் கூட்டத்தில் திருவை.அப்துர் ரஹ்மான்; பேசினார் என்பது வேறு விஷயம்.)

 எனவே, இனிமேல் இது போன்றவர்களை மேடையில் ஏற்ற மாட்டோம் என்று கூறி அதில் வாக்கு தவறிய ஜாக் துணை தலைவர் செய்யதலி ஃபைஸியைப் போலன்றி எச்சரிகையுடன் இருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பது ஆகுமானதல்ல என்பதை தவ்ஹீத்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

 குறிப்பு : மேடையில் பேசிய திருவை.அப்துர் ரஹ்மான் மற்றும் மேடையில் அமர்ந்திருந்த ஜாக் மௌலவிகளின் போட்டோவையும் இத்துடன் இணைத்துள்ளேன்.


 கொள்கைதவ்ஹீத் மேடைகளில்தவறான கொள்கைபாரதூரமான விளைவுகள் ஏற்படுகிறது

Published on: May 14, 2010, 9:28 PM Views: 2129

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top