குண்டு வெடிப்பைக் காட்டிக் கொடுக்கவ

குண்டு வெடிப்பைக் காட்டிக் கொடுக்கவில்லையா

கோவையில் நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முன் பீஜே அது குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்து காட்டிக் கொடுத்தார் என்ற ஒரு பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகின்றது.

இது பற்றியும் நாம் தெளிவாக விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கோவையில் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டதன் எதிரொலியாக கோவை காவல் துறை ஒட்டுமொத்தமாக அரசுக்குக் கட்டுப்படாமல் ஸ்ட்ரைக் செய்தனர். முஸ்லிம்களுக்கு எதிராக சமூக விரோதிகளை ஏவி விட்டனர். சமூக விரோதிகளுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களைச் சுட்டுத் தள்ளி 19 பேரைக் கொன்று குவித்தனர். இன்னும் சொல்லிமுடியாத கொடுமைகளை எல்லாம் செய்தனர்.

இந்தக் கொடுமையை மனித உரிமைக் கமிஷன் சிறுபான்மைக் கமிஷன் வரை அப்போதைய தமுமுக மூலம் நாம் கொண்டு சென்றோம்.

தமிழக அரசு இந்தக் கொடுமையை நிகழ்த்தியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பட்டமாக முஸ்லிம் விரோதப்போக்கை அப்போதைய முதல்வர் வெளிப்படையாகக் காட்டினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் இதற்குப் பழி தீர்ப்பதற்காக கோவையில் சில இடங்களில் குண்டு வைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட தகவல்கள் தமுமுக தலைமைக்குக் கிடைத்தது.

குண்டு வெடிப்பு நடந்தால் அப்பாவிகள் பலர் கொல்லப்படுவார்கள் என்று அப்போதைய தமுமுக நிர்வாகிகள் கவலைப்பட்டோம். மேலும் இதன் விளைவு கடுமையாக இருக்கும்; ஏற்கனவே கோவை கலவரம் காரணமாக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள கோவை முஸ்லிம்கள் இன்னும் பல இன்னல்களைச் சந்திக்க நேரும் என்பதையும் நாங்கள் ஆய்வு செய்தோம்.

மேலும் அவசரப்பட்டு இச்செயலைச் செய்தவர்கள் காகாலத்துக்கும் இன்னல்களை அனுபவிக்கும் நிலை ஏற்படும் என்பதையும் நாங்கள் உணர்ந்தோம்.

மேலும் குண்டு வெடிப்பு போன்ற சம்பவம் நடந்து விட்டால் அதற்கு முன் நடந்த கலவரம், முஸ்லிம் இனப்படுகொலை ஆகியவற்றுக்கு நீதி கோரும் தார்மீக பலத்தை நாம் இழந்து விடுவோம் என்றெல்லாம் நாங்கள் கவலைப்பட்டோம்.

இந்தச் சமுதாயம் தாங்கிக் கொள்ள முடியாத கடும் விளைவுகளைத் தடுக்க வேண்டும் என்றால் குண்டு வெடிக்காமல் தடுக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.

எனவே எங்கெங்கே குண்டு வைக்கப்படவுள்ளன என்ற தகவலை விரிவாகத் திரட்டினோம்.

அப்போது காவல் துறை டிஜிபி யாக இருந்த அலெக்ஸாண்டர் அவர்களைச் சந்தித்து விளக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

நான், ஜவாஹிருல்லா, ஹைதர் இன்னொருவர் (நினைவில் இல்லை. அநேகமாக விஞ்ஞானி ஜலீலாக இருக்கலாம்) ஆக நான்கு பேர் டிஜிபியைச் சந்தித்தோம். பொதுவாக நான் இது போன்ற சந்திப்புகளில் பங்கேற்பதில்லை என்றாலும் இதன் முக்கியத்துவம் கருதி நானும் அதில் ஒருவனாகக் கலந்து கொண்டேன்.

இன்னின்ன இடங்களில் குண்டு வைக்கப்பட்டவுள்ளன. அதனால் இன்னின்ன விளைவுகள் ஏற்படும் என்றெல்லாம் ஆதாரத்துடன் நாங்கள் எடுத்துச் சொல்லி குண்டு வெடிக்காமல் எப்படியாவது தடுத்து விடுங்கள் என்று வலியுறுத்தினோம்.

கவனமாகக் கேட்டுக் கொண்ட டிஜிபி இந்த தகவலை நீங்கள் கோவை காவல் துறையிடமும் தெரிவியுங்கள் நானும் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். இதன் படி நம்பகமானவர்கள் மூலம் கோவை காவல் துறை உயர் அதிகாரிகளிடம் முழு விபரமும் சொல்லப்பட்டது.

அவர்கள் நினைத்திருந்தால் பதுக்கி வைக்கப்பட்ட குண்டுகளைக் கண்டு பிடித்து செயலிழக்கச் செய்திருக்க முடியும். ஆனால் நாங்கள் கொடுத்த பட்டியலில் காவலர்கள் குடி இருப்பும் ஒரு இடமாகும். அந்த இடத்தில் மட்டும் குண்டு வெடிக்காமல் காவல் துறையினர் காப்பாற்றிக் கொண்டனர். மற்ற இடங்களில் குண்டு வெடிப்பைத் தடுக்க வாய்ப்பு இருந்தும் அவர்கள் தடுக்கவில்லை. தடுக்க அவர்கள் விரும்பவில்லை

19 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதிலும் மற்றும் பலர் காயப்படுத்தப்பட்டதிலும் சொத்துக்கள் சூறையாடியதிலும் கோவை காவல் துறையினர் விசாரணையை எதிர் நோக்கி இருந்தார்கள். அதில் இருந்து அவர்கள் தப்பிக்க வேண்டுமானால் அதை விடப் பெரிய கொடுஞ்செயல் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து நிகழ வேண்டும் என்று அவர்கள் கணக்குப் போட்டனர்.

இதன் காரணமாக அவர்கள் குண்டு வெடிப்பைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

குண்டு வெடிப்பைத் தடுப்பதற்காக நாம்செய்த இந்த முயற்சி யாரையும் காட்டிக் கொடுப்பதற்காகச் செய்தது அல்ல. மாறாக ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் நன்மை கருதி செய்த காரியமாகும். இன்னும் சொல்லப் போனால் குண்டு வைத்தவர்களுக்குக் கூட இது நன்மையாக அமைந்திருக்கும்.

இதையும் காட்டிக் கொடுத்தல் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

ஒட்டு மொத்த சமுதாயத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் காரியம் ஒன்று நடக்க இருப்பது தெரிய வந்தால் இப்போதும் அதைத் தடுக்க நான் முயல்வேன். இது காட்டிக் கொடுத்ததில் சேராது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். முஸ்லிம்கோவைகுண்டு வெடிப்புஅப்பாவிகள் பலர்

Published on: October 5, 2010, 8:03 AM Views: 3576

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top