ஹாமித் பக்ரி கைதும் கைவிட்ட தமுமுகவு

ஹாமித் பக்ரி கைதும் கைவிட்ட தமுமுகவும்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாநிலப் பேச்சாளரும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் (இது தான் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.) முன்னாள் மாநிலத் தலைவருமான மவ்லவி ஹாமித் பக்ரி 2002 ஆம் ஆண்டு புனித ரமலான் மாதம் பிறை 27 ல் (2/12/2002) கைது செய்யப்பட்டார். பொதுவாக அநியாயமாக யார் கைது செய்யப்பட்டாலும் குரல் கொடுப்பதற்காகவும் களம் இறங்கி போராடுவதற்காகவும் இருந்த ஒரே அமைப்பாக அன்று தமுமுக மட்டுமே இருந்தது. இந்த இயக்கத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் பாதிக்கப்படும் போது கூட இந்த இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தது.

ஹாமித் பக்ரி இந்த இயக்கத்தின் ஆரம்ப கால தூண்களில் ஒருவராக இருந்தும், தமுமுக இயக்கத்தை நாடு முழுவதும் பிரச்சாரத்தின் மூலம் கொண்டு சென்ற பேச்சாளர்களில் ஒருவராகவும், பீஜே, ஜவாஹிருல்லா, ஹைதர், பாக்கர், ரிபாயி உள்ளிட்ட தமுமுகவின் அன்றைய தலைவர்களின் தனிப்பட்ட நண்பராக இருந்தும் ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்டதற்காக அன்றைய தமுமுக கண்டன அறிக்கை கூட விடவில்லை. அவரை விடுதலை செய்வதற்காக எந்தப் போராட்டத்தையும் தமுமுக அறிவிக்கவில்லை. கைது செய்யப்பட்ட ஹாமித் பக்ரி வழக்குக்காக உதவி கேட்டு தமுமுகவுக்குக் கடிதம் எழுதிய போதும் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

இது உண்மையில் அன்றைக்கு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும்.

யார் யாருக்கோ போராட்டம் நடத்தி வந்த தமுமுக இயக்கம் ஹாமித் பக்ரிக்காக ஏன் போராட்டம் நடத்தவில்லை? என்ற கேள்வி நியாயமானது என்றாலும் அதற்கு பகிரங்கமாக தமுமுக அன்றைக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை.

செயல் வீரர்கள் கூட்டத்தில் நெருக்கமானவர்கள் மத்தியில் மட்டும் தான் தமுமுக விளக்கம் அளித்ததே தவிர மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எந்த விளக்கத்தையும் தமுமுக அளிக்கவில்லை.

தமுமுக எப்படி ஹாமித் பக்ரியை கைவிட்டதோ அது போல் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பும் ஹாமித் பக்ரியைக் கை விட்டது. அவருக்காக எந்த உதவியும் செய்யவில்லை. மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் வெளிப்படையான எந்த விளக்கத்தையும் தவ்ஹீத் ஜமாஅத்தும் அளிக்கவில்லை.

தமுமுக அவரைக் கைவிட்டதிலும் தவ்ஹீத் ஜமாஅத் அவரைக் கைவிட்டதிலும் எனக்கும் பங்கு உண்டு. சொல்லப் போனால் அதிகப் பங்கு எனக்கு உண்டு. தமுமுக மீது பழியைப் போட்டு விட்டு நான் ஒதுங்க முடியும் என்றாலும் நானே சம்மந்தப்பட்ட விஷயத்தில் எனக்குப் பொறுப்பு இல்லை என்று மறுக்கும் கயமைத் தனம் பொய்யனுக்குத் தேவையாக இருக்கலாம். எனக்குத் தேவை இல்லை.

இது நம்ப முடியாத ஆச்சரியமாகவே மக்களுக்கு இருந்தது.

அப்போது தமுமுகவோ தவ்ஹீத் ஜமாஅத்தோ வாய் திறந்திருந்தால் ஹாமித் பக்ரியின் நிலை இன்னும் மோசமாகப் போய் இருக்கும் என்பதால் இரண்டு இயக்கங்களும் அவர் விஷயத்த்ல் அசாத்திய மவுனம் சாதித்தன. 

ஆனால் இன்று எல்லாம் பழைய செய்தியாகி விட்டதால் இப்போது இந்த உண்மைகளைக் கூறுவதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை இல்லை. ஆகவே இந்த உண்மைகளை நாம் சொல்லும் நிலை இப்போது ஏற்பட்டு விட்டது. பொய்யன் கூட்டமும் இந்த உண்மைகள் வெளிவர வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டிருப்பதால் நாம் இந்த விஷயத்திலும் வாய் திறக்கும் அவசியம் திணிக்கப்பட்டு விட்டது. இதனால் சிலருக்கு ஏதேனும் சங்கடம் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பும் இது குறித்து உண்மைக்கு மாறான அவதூறு பரப்பி இதை விளக்கும் நிலைக்குத் தள்ளிய பொய்யன் கூட்டத்தைத் தான் சாரும். என்னைச் சாராது.

இது குறித்த உள் விபரங்களுக்குச் செல்வதற்கு முன்னாள் ஹாமித் பக்ரி எதற்காகக் கைது செய்யப்பட்டார்? எப்படி அவர் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது என்பதை நான் விளக்க வேண்டியுள்ளது.

மவ்லவி அப்துர் ரஹ்மான் ஷிப்லி தென்காசியைச் சேர்ந்தவர். தமுமுகவில் நெல்லை மாவட்டத்தில் மாவட்டப் பொறுப்பை வகித்தவர். அவர் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் நம்முடைய தவ்ஹீத் பள்ளியில் இமாமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் ஹாமித் பக்ரி கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு ஆந்திரப் போலீஸார் அப்துர்ரஹ்மான் ஷிப்லியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடந்த குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டவரிடம் அல்லது கொல்லப்பட்டவரிடம் கைப்பற்றப்பட்ட செல் போனில் அப்துர் ரஹ்மான் ஷிப்லியின் போன் நம்பர் பதிவாகி இருந்ததன் அடிப்படையில் அவர் செய்யப்பட்டார். அவருக்காக நாங்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளோம் என்று பேர்ணாம்பட் தமுமுக கிளை தெரிவித்த போது தமுமுக தலைவர்கள் இதற்காகப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று பேர்ணாம்பட் கிளைக்கு கூறினார்கள். நானும் அதையே கூறி காரணத்தையும் விளக்கினேன். காரணத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டாம் என்றும் கூறினேன்.

இதன் பின்னர் அப்துர் ரஹ்மான் ஷிப்லி கொடுத்த தகவலின் படி தான் 2/12/2002 அன்று ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் போலீஸ் படை குவிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அவர் நடத்திய தாவா செண்டரும் சோதனை இடப்பட்டது. அவர் முதல்வராக இருந்த ஆயிஷா சித்தீகா பெண்கள் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டு காயல்பட்டணமே அல்லோல கல்லோலப்பட்டது.

இது குறித்து காயல்பட்டணம் தமுமுகவினரும் உள்ளூர் பிரமுகர்களும் தமுமுக தலமையின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். ஹாமித் பக்ரி விடுதலைக்காக ஏதாவது செய்யும் படி கேட்டுக் கொண்டனர். ஆனால் தமுமுக தலைவர்கள் இதில் இப்போது நாம் தலையிட முடியாது. 8/12/2002 அன்று பீஜே கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் உங்கள் ஊரில் நடக்க உள்ளதால் அப்போது பீஜே வரும் போது அதற்கான காரணங்களைத் தமுமுக சார்பில் அவர் தெரிவிப்பார் என்று அனைவருக்கும் ஒரே பதில் சொல்லப்பட்டது.

ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்ட மறு நாளோ அல்லது அதே நாளிலோ காயல்பட்டிணம் ஜாமியுல் அஸ்ஹர் இமாம் மவலவி அப்துல் மஜீத் மஹ்ளரி கைது செய்யப்பட்டார். இதே காரணத்துக்காக அதிராம்ப்பட்டிணம் தவ்பீக் என்பவரும். சென்னை மண்ணடி ஜக்கரியா என்பவரும் கைது செய்யப்பட்டனர். யாருக்கும் அறிமுகமில்லாத மல்லிப்பட்டிணத்தைச் சேர்ந்த இருவரோ மூவரோ இதே காரணத்துக்காக கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு குற்றாலத்தில் ரகசியக் கூட்டம் நடத்திய வழக்காக மாற்றப்பட்டது.

மூன்று மவ்லவிகள் உள்பட பத்துக்கும் உட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டும் தமுமுகவும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தும் மொளனம் சாதித்தது.

அது மட்டுமில்லாமல் உணர்வு இதழில் தமுமுக சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பு இது தான்

 


இந்த அறிவிப்பு மூலம் ஹாமித் பகரி கைது விஷயத்தில் தமுமுக தலையிடாது என்பது மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
 

இந்த அறிவிப்பு வெளியிடப்படும் போது தமுமுக தலைவராக ஜவாஹிருல்லாவும் பொதுச் செயலாளராக ஹைதர் அலியும் பொருளாளராக பாக்கரும் இருந்தனர். நான் அமைப்பாளராக இருந்தேன். ஹாமித் பகரியைக் கைவிட்டு வெளியிட்ட இந்த அறிவிப்பில் எங்களுக்குச் சம்மந்தம் இல்லை என்று தமுமுகவின் அன்றைய நிர்வாகிகளாக யார் இருந்தார்களோ அவர்கள் மறுத்தால் அவர்கள் வடிகட்டிய பொய்யர்கள் என்பதில் ஐயம் இல்லை.

அனைவரும் சேர்ந்து தான் இந்த அறிவிப்பை வெளியிட்டோம். இதில் அனைவரும் சம பங்காளிகள் என்று இருந்தும் பொய்யன் கூட்டம் வழக்கம் போல் ஹாமித் பக்ரிக்கு பீஜே அநீதி இழைத்து விட்டார் எனக் கூறி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறது. ஹாமித் பக்ரியைக் கைவிட்டதில் பீஜேக்கு உரிய பங்கு போல் பொய்யருக்கும் உண்டு என்பதற்கு இது ஆதாரமாகும்.

அத்துடன் அதே பக்கத்தில் பெண்கள் மதரஸா பற்றிய அறிவிப்பு ஒன்றும் என் பெயரில் வெளியிடப்பட்டது. ஹாமித் பக்ரியின் இரண்டாம் மனைவி மதுரையில் நடத்திய பெண்கள் மதரஸாவுக்கு என் பெயரைப் பயன்படுத்தி வசூல் வேட்டை நடத்தியதால் அதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுவும் நிர்வாகிகள் அனைவரும் ஆலோசித்தே உணர்வில் வெளியிடப்பட்டது. 

இப்படி ஹாமித பக்ரியையும் இன்னும் சிலரையும் நாங்கள் அனைவரும் சேர்ந்து கைவிடக் காரணம் என்ன? இன்ஷா அல்லாஹ் நாளை அதை விளக்குகிறேன்.

இரண்டாம் தொடர்

ஹாமித் பக்ரியின் பண மோசடிகள்

ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்ட போது பீஜே அவருக்கு உதவவில்லை என்று சிலர் பயங்கரமான உண்மையைப் பரப்பி வருகின்றனர். நான் ஹாமித் பக்ரிக்கு உதவியதாக எந்தக் காலத்திலும் குறிப்பிட்டதில்லை. உதவவில்லை என்று தான் சொல்லி வந்தேன். எனவே இது கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய உண்மை அல்ல.

மேலும் ஹாமித் பக்ரிக்கு உதவவில்லை என்பதில் பிஜே மட்டுமின்றி அன்று தமுமுக நிர்வாகிகளாகவும் இருந்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளாகவும் இருந்த அனைவரின் கூட்டு முடிவு என்பதை வழக்கம் போல் மறைக்கப் பார்க்கின்றனர். எனவே தான் அனைவரும் சேர்ந்து தான் அவரைக் கைவிடும் முடிவை எடுத்தோம் என்ற உண்மையை முதல் தொடரில் ஆதாரத்துடன் விளக்கினேன்.

இதற்கான காரணங்கள் ஓரிரு பக்கங்களில் சொல்லி முடியக் கூடியதல்ல.

அதைச் சொல்வதற்கு முன்னால் ஒரு விஷயத்தை மட்டும் முதல் கட்டமாகச் சொல்லிக் கொள்கிறேன்.

ஹாமித் பக்ரிக்கு நெருக்கமான அனைவரும் சேர்ந்து அவரைக் கைவிடும் முடிவை எடுக்கிறார்கள் என்றால் தக்க காரணம் இல்லாமல் இப்படி ஒருமித்த முடிவை அவர்களால் எடுக்க முடியுமா என்பதைச் சிந்தித்தாலே இதில் ஏதோ நியாயம் இருக்கும் என்று அறிவுடையோர் மனதிற்குத் தெரிந்து விடும்.

தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்ட வரலாறில் இருந்து ஆரம்பித்தால் தான் முழு விளக்கம் கிடைக்கும் என்பதால் அதைச் சுருக்கமாகச் சொல்லி விட்டு காரணங்களைச் சொல்கிறேன்.

தவ்ஹீத் ஜமாஅத் உருவாக்கம்

ஜாக் இயக்கத்தில் இருந்து முக்கியமான தவ்ஹீத் பிரச்சாரகர்களும், செயல் வீரர்களும் விலகிய பின்னர் அமைப்பு ரீதியாக அவர்கள் செயல்படாமல் ஜாக் இயக்கத்தில் மாற்றம் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

தவ்ஹீத் பிரச்சாரக் குழு என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்து வெறும் பிரச்சாரம் மட்டும் செய்து வந்தனர். கிளை மாவட்டம், மாநிலம் என அமைப்பு ரீதியாக நிர்வாகம் எதுவும் இல்லாமல் பிரச்சாரம் செய்து வந்தோம். ஜாக் தன் போக்கைத் திருத்திக் கொள்ளும் என்ற நம்பிக்கை காரணமாக இன்னொரு அமைப்பு கட்ட வேண்டாம் என்பது இதற்குக் காரணமாகும்.

1995 முதல் 2000 வரை ஐந்து ஆண்டுகள் ஜாக் திருந்தும் என்று எதிர்பார்த்து மாற்று அமைப்பை உருவாக்காமல் வெறும் பிரச்சாரம் மட்டும் செய்து வந்தோம். ஐந்து ஆண்டுகள் பொறுத்துப் பார்த்து விட்டு இது வேலைக்கு ஆகாது என்று முடிவுக்கு வந்து அமைப்பு ரீதியாக சரியான இயக்கம் கண்டாக வேண்டும் என்று முடிவுக்கு வந்தோம்.

அதைச் செயல்படுத்தும் விதமாக மதுரையில் மாபெரும் மாநாட்டை நடத்தி அதன் பின்னர் அமைப்பு ஏற்படுத்துவோம் என்று முடிவு செய்தோம்.

இதனடிப்படையில் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு மாநாட்டின் அவசியம் குறித்து விளக்கக் கூட்டங்கள் நடத்தி மக்களுக்கு அழைப்பு விடுத்தோம்.

2000 ஆவது ஆண்டு ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்தப்பட்ட அந்த மாநாட்டில் பல்லாயிரம் தவ்ஹீத்வாதிகள் பேரார்வத்துடன் கலந்து கொண்டனர்.

(அந்த மாநாட்டின் உரையை நமது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளோம். காணக. அதில் நாம் நடத்திய கண்காட்சியையும் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளோம். பார்க்க)

அந்த மாநாட்டில் தான் மார்க்கப் பணி செய்ய இயக்கம் அவசியம் என்று முடிவு செய்யப்பட்டது. வந்திருக்கும் ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த சகோதரர்களும் தனித்தனியாகக் கூடி தம்மில் இருந்து ஒரு பிரதிநிதியைத் தேர்வு செய்ய வேண்டும் அந்தப் பிரதிநிதிகள் மட்டும் மாநாடு முடிந்து மறுநாள் தங்கி மாநில அளவிலான அமைப்புக்கு பொறுப்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று முதல் நாள் அறிவிக்கப்பட்டது.

அதனடிபடையில் பிரதிநிதிகள் கூடினார்கள். ஜாக் இயக்கத்தின் தவறான செயல்பாடுகள் ஆதாரங்களுடன் விளக்கப்பட்டன. ஐந்து ஆண்டுகள் கொடுத்த அவகாசமும் வீணாயின என்று விளக்கப்பட்டது. அதன் பின்னர் தனி அமைப்பு தேவை என்ற ஒருமித்த கருத்து எட்டப்பட்டதால் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு என்ற பெயரில் அப்போது தான் ஒரு இயக்கம் உருவாக்கப்பட்டது.

அதன் தலைவராக பீஜே இருக்க வேண்டும் என்று அனைவரும் வற்புறுத்தினாலும் அப்போது பீஜே தமுமுகவின் மாநில அமைப்பாளர் என்ற பொறுப்பை வகித்தார். அது தான் அப்போது தமுமுகவின் அனைத்து பொறுப்புகளிலும் முதல் நிலை பொறுப்பாக இருந்தது. மிகப் பெரும் பொறுப்பு என் மீது உள்ள நிலையில் இன்னொரு பொறுப்பைச் சுமக்க முடியாது என்று பீஜே மறுத்ததாலும், ஷம்சுள்ளுஹா, சைபுல்லாஹ் ஹாஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பொறுப்பு ஏற்க மறுத்ததாலும் ஹாமித் பக்ரி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

மிகப்பெரும் பொறுப்பு அவர் மீது மக்களால் சுமத்தப்பட்டது. அவரை விட மூத்த தலைவர்கள் கூட அவர் மீது நன்னம்பிக்கை வைத்தனர்.

ஆனால் ஹாமித் பக்ரி அவர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களைப் படுகுழியில் தள்ளப் பார்த்தார். அல்லாஹ்வின் மறைமுகமான பேரருள் இல்லாவிட்டால் அவரது துரோகத்தால் பல சகோதரர்கள் சொல்லொண்ணாத துன்பத்தை அடைந்திருப்பார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் எனும் அமைப்பில் தம்மை இணைத்துக் கொள்ளும் மக்கள் எந்த நம்பிக்கையில் இணைத்துக் கொள்கிறார்கள்?

இந்த ஜமாஅத் மார்க்கப் பிரச்சாரம் செய்யும். அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு எந்தக் காரியத்தையும் செய்யும் என்று நம்பித்தான் இணைகிறார்கள். இவ்வாறு நம்பிய இயக்கத்தின் தலைவர்கள் இரகசியமாக வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்து அதன் காரணமாக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்கள் மட்டும் பாதிக்கப்பட மாட்டார்கள். மாறாக பட்டி தொட்டி எங்கும் இந்த ஜமாஅத்தில் பொறுப்பு வகிக்கும் அனைவரும் சந்தேக வளையத்தில் கொண்டு வரப்படுவார்கள்.

அது மட்டுமின்றி தவ்ஹீத் பிரச்சாரம் செய்வதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும். தீவிரவாதிகள் என்று ஒரு இயக்கம் தக்க ஆதாரத்துடன் முத்திரை குத்தப்பட்டால் அதன் ஒட்டு மொத்த செயல்பாடுகளும் முடக்கப்பட்டு விடும். இனி ஒரு காலத்தில் தவ்ஹீத் எனும் உயிர் மூச்சான கொள்கையைச் சொல்வதற்கு பல வருடங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும்.

வெளியே மக்களுக்குச் சொல்வதற்கு மாற்றமாக தலைவர்கள் ஹிட்டன் அஜண்டா எனும் மறைமுக இரகசியத் திட்டம் வைத்துக் கொள்வது அந்த மக்களுக்குச் செய்த துரோகமாகும். இது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். இந்த துரோகத்தைத் தான் ஹாமித் பக்ரி செய்து இந்த ஏகத்துவ இயக்கத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையில் இகசிய திட்டங்கள் தீட்டினார்.

குஜராத கலவரம் காரணமாக முஸ்லிம் மக்களிடம் காணப்பட்ட கொந்தளிப்பைச் சாதகமாக்கிக் கொண்டு இயக்கத்தின் கொள்கைக்கு எதிரான போக்கில் பயணம் செய்தார்.

ஜனநாயக வழி சரிப்பட்டு வராது; பதிலடி தான் சரிப்பட்டு வரும் என்று ஒருவர் நினைத்தால் ஜனநாயக அமைப்பின் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு தீவிரவாதத்தை எதிர்பார்த்து வந்து சேரும் மக்களைக் கொண்டு தனி இயக்கம் காணட்டும். அதன் விளைவுகளை அவர்கள் மட்டும் சந்திக்கட்டும். அதை விடுத்து அதில் உடன்பாடில்லாத மக்களை நம்மை நம்பி வந்த மக்களைச் சந்தியில் நிறுத்துவது எந்த வகை நியாயம்?

இத்தகைய துரோகத்தைத் தான் ஹாமித் பக்ரி செய்தார்.

ஹாமித் பக்ரி வீரத்தின் விளை நிலமாக இருந்து கொண்டு அந்தப் பாதிப்பு காரணமாக இப்படி ஒரு முடிவை எடுத்தால் அவருக்கு அதற்கான தகுதி உள்ளது என்று கருத இடமிருக்கும். இயல்பிலேயே கோழைத்தனம் கொண்ட ஹாமித் பக்ரி இந்த வழியைத் தேர்வு செய்ததற்குக் காரணம் எதிரிகளுக்குப் பதிலடி கொடுப்பதல்ல. மாறாக பணத்தாசை தான் அவரை இந்தச் சதியில் தள்ளியது.

ஜிஹாத், சமூகப் பாதுகாப்பு என்று யார் இறங்கினாலும் அப்பாவி மக்கள் அள்ளிக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். மற்ற பணிகளுக்கு உதவக் கூடியவர்கள் கணக்குக் கேட்பார்கள்; ஆனால் இது போன்ற காரியத்துக்கு கொடுப்பவர்கள் தங்கள் பெயரைக் கூட சொல்லக் கூடாது என்று நினைப்பார்கள். எனவே இந்தப் பெயரில் நல்ல வசூல் வேட்டை நடத்தலாம். யாரும் கணக்கு கேட்க மாட்டார்கள் எனபதால் அவர் இந்த வழியை தேர்ந்தெடுத்தார்.

தவ்ஹீத் ஜமாஅத் பிரமுகர்களில் இவர் மட்டும் பணத்தில் குறியாக இருந்தார்.

இப்போதும் இது போன்ற பெயர்களில் வசூல் நடத்துவோர் நன்றாக மஞ்சள் குளிப்பதைக் காணலாம். இவர் ஜிஹாத் என்ற பெயரில் என்ன செய்தார் என்பதைச் சொல்வதற்கு முன்னாள் இவரது பணப் பேராசையை சுட்டிக் காட்டும் அவசியம் உள்ளது.

இவர் ஒட்டு மொத்த தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவராக இருந்தார். அந்த ஜமாஅத்துக்குக் கடுமையான நிதி நெருக்கடி இருந்த நேரம். அந்த நேரத்தில் ரமலான் மாதத்தில் மக்களிடம் நீதி திரட்ட முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இவர் தவ்ஹீத் ஜமாஅத்துக்குத் தலைவராக இருந்து கொண்டே இஸ்லாமியக் கல்விச் சங்கம் என்ற பெயரில் லட்டர் பேட் அமைப்பை ஏற்படுத்தி அதற்காக தமிழகம் முழுவதும் வசூல் வேட்டையில் இறங்கினார். சம்பளம் கொடுக்கக் கூட நிதி இல்லாமல் தவ்ஹீத் ஜமாஅத் தள்ளாடும் நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளை தனது லட்டர் பேடு சங்கத்துக்கு நிதி திரட்ட பயன்படுத்திக் கொண்டார். தனக்கும் மட்டுமே சொந்தமான லட்டர் பேட் இயக்கத்தின் பெயரில் எவ்வளவு திரட்டினாலும் யாரும் அதைக் கேட்க முடியாது என்பது இதற்குக் காரணம்.

இந்த விஷயம் தெரிந்த பின்னர் தமுமுக அலுவகத்துக்கு அவரை அழைத்து நான், ஷம்சுள்ளுஹா, சைபுல்லா ஹாஜா அலாவுதீன் ஆகியோர் அடங்கிய குழுவில் கடுமையாக விசாரணை நடத்தினோம். ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தி கள்ள வசூல் செய்வதற்கா உம்மைத் தலைவராக நியமித்தோம்? என்று நான் மிகக் கடுமையாகக் கண்டித்தேன். என் வாழ்நாளிலேயே நான் அதிகம் கோபப்பட்ட முன்று நான்கு சந்தர்ப்பங்களில் அதுவும் ஒன்று எனலாம். எந்தக் காலத்திலும் நம்பிக்கைத் துரோகத்தை நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது என்று எச்சரித்தோம்.

தவ்ஹீத் ஜமாஅத் அரபு நாடுகளிடம் உதவி பெறாது என்பது தெரிந்திருந்தும் அதன் தலைவராக இருந்த ஹாமித் பக்ரி இதன் பின்னர் தான் செய்யாத பல சேவைகளைச் செய்வதாக அரபியில் கடிதம் எழுதி அரபு நாட்டில் உள்ள உதவி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்பினார். இன்னும் சில சக இயக்கங்களிடம் பரிந்துரையும் வாங்கி அரபு நாட்டு உதவி மூலம் பணம் திரட்ட திட்டமிட்டார்.

இவரது இந்த ஈனச் செயலால் அதை நான் தான் எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இது குறித்து இஸ்மயீல் சலபி கூட கேள்வி எழுப்பினார். அதற்கு 2009 லேயே பதில் அளித்துள்ளேன். இஸ்மாயில் சலபியின் கேள்வியும் பதிலும் இது தான். (இஸ்மாயீல் சலபியின் மறுப்புக்கு மறுப்பு கட்டுரை காணக)

இஸ்மாயீல் சலபி கேள்வி

அடுத்து, அனைத்துத் தவ்ஹீத் கூட்டமைப்பு என்ற பெயரில் இவர்கள் இயங்கிய போது, இவர்களது அப்போதைய தலைவரும், அதற்கடுத்த தலைவராகச் செயல்பட்ட, தற்போதும் இவரது அமைப்பில் உள்ள ஒரு ஆலிமும் 1999 களில் குவைட்டிலுள்ள லுஜினதுல் காரதில் ஹிந்திய்யா என்ற அமைப்பிடம் நிதி உதவி பெற முயற்சி செய்து முடியாமல் போனது. இது குறித்து நான் தங்கியிருந்த அறையில் இருந்துதான் அவர்கள் பேசித் திட்டங்கள் பலவும் தீட்டினார்கள். அறபுப் பணம் கிடைக்காதவர்கள் உள் நாட்டு வசூலை இலக்காக் கொண்டு,சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று நரி நாடகமாடுகின்றனர். இதுதான் உண்மையாகும்.

பீஜே பதில்

சொல்வதைத் தெளிவாகச் சொல்ல உங்களுக்குத் திராணி இல்லை. ஏனெனில் அவர்களில் ஒருவர் பலவேசத்தில் இருக்கிறார். இன்னொருவர் நமது ஜமாஅத்தில் இருக்கிறார் என்கிறார். எங்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எனவே அவர்கள் யார் என்பதையும் அது பற்றிய விபரங்களையும் நாமே உடைத்துச் சொல்வோம். நமது ஜமாஅத் சார்பில் வெளிநாட்டு உதவி வாங்குவதில்லை என்ற நிலைபாட்டில் எங்களிடம் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் ஜமாஅத் சார்பில் அரபு நாட்டுப் பனத்துக்கு முயற்சித்து அது கிடைக்கவில்லை என்பதற்காக நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவும் இல்லை. 

ஹாமித் பக்ரி அவர்கள் காயல்பட்டிணத்தில் இஸ்லாமியக் கல்விச் சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தினார். அது தவ்ஹீத் ஜமாஅத்தின் கீழுள்ள நிறுவனம் அல்ல. அதில் சைஃபுல்லாஹ் ஹாஜாவும் அங்கமாக இருந்தார். அதில் நான் அங்கம் வகிக்கவில்லை. இந்த நிலையில் அந்தக் கல்விச் சங்கத்தினர் ஆலோசனை செய்து தவ்ஹீத் ஜமாஅத் தான் வெளிநாடுகளில் உதவி வாங்காது. நாம் சுயேட்சையான நிறுவனம் தானே? நாம் உதவி வாங்கினால் என்ன என்று ஆலோசித்து அதற்கான முயற்சியில் இறங்கினர். அதனடிப்படையில் வெளிநாடுகளுக்குக் கடிதங்கள் அனுப்பினார்கள். இலங்கை சென்ற போது ஜம்மியது அன்ஸாரிஸ்ஸுன்னா, ஷபாப் ஆகிய நிறுவனங்களிடம் பரிந்துரைக் கடிதம் கேட்டனர். இதில் எனக்கும் சம்மந்தமில்லை. தவ்ஹீத் ஜமாஅதுக்கும் சம்மந்தம் இல்லை. 

இந்த விபரங்கள் சில நிர்வாகிகளுக்குத் தெரிந்த போது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக் குழுவில் விவாதித்தோம். அப்போது அனைவரும் இது சரியான நடைமுறை அல்ல என்று சுட்டிக் காட்டினர்கள். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளாக உள்ளவர்கள் வேறு பெயரிலும் இது போன்ற் உதவிகளைப் பெறக் கூடாது என்று முடிவு செய்தோம். இதன் பின் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டனர். இதைத் தான் பயங்கரமான விஷயம் போல் காட்டி எட்டாத பழம் புளிக்கும் என்பதால் அரபு நாட்டுப் பணத்தை வெறுத்ததாகக் கூறுகிறார். எட்டிய பழத்தையே நாங்கள் வேண்டாம் என்று சொன்னவர்கள். 

இவ்வாறு அன்றைக்கே இதே இணயதளத்தில் பதில் எழுதியுள்ளேன்.

ஆலாய்ப் பறந்த ஐந்து லட்சம்

ஒரு நாள் 2002ல் என் வீட்டுக்கு ஹாமித் பகரி வந்த போது இலங்கை நியாஸ் ஹாஜியாரும் என்னைத் தேடி வந்திருந்தார். அவர் ஹாமித் பக்ரி என்னுடன் இருக்கும் போதே ஒரு தகவலை என்னிடம் சொன்னார்.

அதாவது இலங்கையைச் சேர்ந்த ஒரு தனவந்தர் பீஜேயாகிய உங்களுக்காக ஐந்து லட்சம் ரூபாய் என்னிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார். அந்தத் தனவந்தரை எனக்குத் தெரியாது. எனவே அதை நான் மறுத்து விட்டதாகச் சொல்லி விடுங்கள் என்று கூறினேன்.

வேண்டுமானால் கடையநல்லூரில் உள்ள மதரஸாவுக்கு பணத் தேவை உள்ளது. அவர் விரும்பினால் அந்தத் தொகையை அவர் மதரஸாவுக்கு கொடுக்கலாம் என்றும் நான் கூறினேன். நியாஸ் ஹாஜியார் அவர்கள் அந்தத் தனவந்தருக்கு போன் போட்டு சொன்னார். பீஜே என்ன சொல்கிறாரோ அப்படியே செய்து விடுங்கள் என்று அந்தத் தனவந்தர் கூறி விட்டார். அந்தப் பணத்தை மதரசா நிர்வாகி சைபுல்லா ஹாஜவிடம் கொடுக்கச் சொல்லி அதன் படி கொடுக்கப்பட்டது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஹாமித் பக்ரி நியாஸ் ஹாஜியார் போன பிறகு என்னிடம் சண்டைக்கு வந்தார். உங்களுக்கு அந்தப் பணம் தேவை இல்லை என்றால் அதை வாங்கி எனக்குத் தரலாமே? ஏன் மதரஸாவுக்குத் தர வேண்டும்? என்று சணடைக்கு வந்து விட்டார்.

அந்த மதரஸாவுக்க்கு நான் நிர்வாகி கூட கிடையாது ஆனால் ஹாமித் பாக்ரி அதன் நிர்வாகிகளில் ஒருவராக இருந்தும் அவரது நிர்வாகத்தில் உள்ள நிறுவனத்துக்கு அந்த நிதியைக் கொடுத்தது அவருக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

எனக்கும் தான் தேவை உள்ளது. உங்களை விட அதிகத் தேவை இருக்கிறது. தேவை என்ற அடிப்படையில் நான் இதைப் பார்க்கவில்லை. இது எனது சுய மரியாதையைப் பாதிக்கும் என்ற அடிப்படையில் தான் பார்க்கிறேன் என்று பதில் கூறினேன்.

இதன் பின்னரும் அவர் விடவில்லை. தவ்ஹீத் மூத்த அறிஞர்களிடம் இதைப் பஞ்சாயத்தாக ஆக்கி பீஜே எனக்கு அந்தத் தொகையை வாங்கித் தராமல் துரோகம் செய்து விட்டார் என்றெல்லாம் புலம்பினார்.

கடன் வாங்கி மோசடி
அது மட்டுமின்றி சென்னையில் ஃபாதிமா ஜுவல்லர்ஸ் ஜாகிர் (இவர் பாக்கரின் மச்சான்) பாக்கருடன் தான் இப்போதும் இருக்கிறார். இவர் ஒரு நாள் எனக்கு போன் போட்டார். என்னிடம் ஹாமித் பக்ரி நாலு லட்சம் (மூனு லட்சமா என்பது நினைவில் இல்லை) கடனாக வாங்கினார். அதை ஜமாஅத்தில் இருந்து எப்போது தருவீர்கள் என்று கேட்டார்.

ஜமாஅத்தின் சார்பில் அப்படி கடன் வாங்கி இருந்தால் நிச்சயம் தந்து விடுவோம். முன்னாள் நிர்வாகத்தில் இருந்த சைபுல்லவிடம் கேட்டு சொல்கிறேன் எனக் கூறினேன்.

ஜாகிர் இவ்வாறு கேட்கும் போது ஹாமித் பக்ரி நம் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்.

சைபுல்லாவிடம் நான் விசாரித்த போது நான் செயலாளராகவும் ஹாமித் பக்ரி பொருளாளராகவும் இருந்த போது பாத்திமா ஜுவல்லர்சில் எந்தக் கடனும் ஜமாஅத்துக்காக வாங்கவில்லை என்று கூறி விட்டார். இருந்தாலும் பழைய கணக்கு புத்தகத்தை பார்த்து கூறுகிறேன் எனக் கூறி முன்னர் சொன்னதையே உறுதிப்படுத்தினார். அப்படி ஒரு தொகை கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று கூறி விட்டார்.

இந்த தகவலை நான் பாத்திமா ஜுவல்லர்ஸ் ஜாகிரிடம் தெரிவித்து தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் கடன் வாங்கினாரா? என்று மீண்டும் கவனித்துச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அவர் ஆதாரங்களப் பார்த்து விட்டு கல்விச் சங்கம் என்ற பெயரில் தான் வாங்கியுள்ளார். அது தவ்ஹீத் ஜமாஅத் அங்கம் என்று தான் கூறினார் என்றார். கல்விச் சங்கம் இப்போதும் ஹாமித் பக்ரி பெயரில் உள்ளது. எனவே அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று கூறி விட்டேன். இது போல் இன்னும் சிலரும் இது போன்ற புகார்களை இவர் விஷயமாகக் கொண்டு வந்துள்ளனர்.

வெளிநாட்டு ஷேர்
இது போல் வெளிநாடு சென்று அபூதாவூத் நூலை வெளியிடப் போகிறேன் அதற்கு ஷேர் தாருங்கள் லாபம் தருகிறேன் என்று பல லடசங்கள் திரட்டினார்.

என்னிடம் தொலை பேசியில் கேட்டவர்களுக்கு யாரும் இதில் சேர வேண்டாம் என்று கூறினேன்

ஆயினும் சுமார் பத்து லட்சத்துக்கும் மேல் என்று நினைக்கிறேன் அவ்வளவு பெரிய தொகையைத் திரட்டி வந்தார். ஆனால் சொன்ன படி நடக்கவில்லை. இது குறித்து புகார்கள் வந்தன. நிர்வாகக் குழுவில் வைத்து கண்டித்தோம்.

அபூதவூத் தயாராக இல்லாததால் நான் மொழி பெயர்த்து வைத்திருந்த திர்மிதியை வெளியிட ஒப்படைத்தேன். திர்மிதி வெளியிட்டு அது விற்பணையாவதற்கு ஏற்ப ஹாமித் பக்ரி வாங்கிய கடனை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அடைப்பது என்று முடிவு செய்தோம். அதன் படி திர்மித்தி விற்கும் பணத்தைக் கொண்டு நாங்கள் கடனை அடைத்தோம்.

ஆனால் அவர் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்ட பின் புத்தக வியாபாரி சாஜிதா ஜக்கரியாவிடம் சென்று திர்மிதி பணத்தை தவ்ஹீத் ஜமாஅத்தில் கொடுக்கக் கூடாது என்னிடம் தான் தர வேண்டும் என்று கூறி வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தார். இந்த மோசடிக்கு உதவ ஜக்கரியா முன் வந்தார், இதன் பிறகு ஜமாஅத் எப்படி ஹாமித் பக்ரி கடனை அடைக்க முடியும்? அவர் ஒப்படைத்த படி திர்மிதி விற்கும் பணம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டால் தான் அதில் இருந்து கடனை அடைக்க முடியும். திமிதிக்கான பணத்தை ஒப்பந்தத்தை மீறி அவர் வாங்க ஆரம்பித்த பிறகு அவரிடம் கடன் ஷேர் கொடுத்தவர்களுக்கு இனி ஜமாஅத் பொறுப்பில்லை என்று தெரிவித்து விட்டோம்.

திர்மிதி விறகப்படும் காசு எங்களிடம் வந்தால் தான் உங்கள் பணத்தை நாங்கள் தர முடியும். திர்மிதியை அவரும் ஜக்கரியாவும் பங்கு போட்டுக் கொண்ட பின் இதில் நாங்கள் ஒன்ரறும் செய்ய முடியாது என்று கூறி வீட்டொம். ஏனெனில் அவர்களிடம் நாம் பணம் வாங்கவில்லை. இன்னும் பலருக்கு ஹாமித் பக்ரி பணம் கொடுக்க வேண்டியுள்ளது.

பள்ளிவாசல் பனமும் அம்போ
இது போல் இலங்கைக்கு என்னுடன் வந்த போது சில நிறுவங்களுடன் ரகசிய தொடர்பு கொண்டு பள்ளிவாசல் கட்டப் போகிறேன் என்று ஒரு தொகையை வாங்கி வந்தார். அதையும் பள்ளிவாசல் கட்டவில்லை. ஆனால் ஜாக் பொய்யர் அய்யூப் என்பவர் பீஜே பள்ளிவாசல் கட்ட பனம் வாங்கி ஏமாற்றி விட்டார் என்று கூறும் அளவுக்கு இவரது செயல்பாடு இருந்தது. இப்படி பணத்தாசையில் இவரை மிஞ்ச முடியாது. நாம் அவரை நிக்கிய பிறகு கூட ரமலானில் சிறை வாசிகள் பெயரைச் சொல்லி பல லட்சங்கள் வசூல் நடத்தினார்ர. அது என்ன ஆனது என்று தெரியவில்லை, இனி தவ்ஹீத் வாதிகீடம் வசூல் செய்ய முடியாது என்பதால் குராபிகள் கூட்டத்தில் சேர்ந்து அடுத்த வசூலுக்கு அடிப்போட்டு விட்டார்.

கோவை அய்யூபின் புளுகு மூட்டை

 

 

பள்ளிவாசல் கட்ட என்று பீஜே பண மோசடி செய்தாரா

 

 

அப்பாவி போல் முகம் காட்டிக் கொண்டு காசுக்காக எதையும் செய்யும் இவர் அதே பணத்தாசை காரண்மாகவே ஜிஹாத் என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தார். அந்தக் கதையை அடுத்த தொடரில் பார்ப்போம்.

மூன்றாம் தொடர்
இரகசிய திட்டங்கள்

ஜமாஅத்தை வைத்து தன்னை வளப்படுத்திக் கொள்வதில் ஹாமித் பக்ரி, பாக்கரைப் போன்றவராக இருந்தாலும் இவர் எளிதில் மாட்டிக் கொள்வார்; பாக்கர் மாட்டிக் கொள்ளாமல் சாதித்துக் கொள்வார் இது தான் இருவருக்கும் உள்ள வித்தியாசம்.

குர் ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்க ஆதாரம் என்ற கொள்கையை அர்ப்பணிப்புடன் நிலை நாட்டும் அமைப்புக்கு மாநிலத் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டவரிடம் பணத்துக்கு அடிபணியாத தன்மை முக்கியமான தகுதியாக இருக்க வேண்டும். இவரிடம் அந்தத் தன்மை அறவே இல்லாதது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இவரைக் குறித்து மட்டுமே அடிக்கடி புகார்கள் வரலாயின.

மளிகைக் கடை வைக்கப் போகிறேன்; பங்குதாரராக சேருங்கள் என்று மக்களிடம் நிதி திரட்டி காயல்பட்டிணத்தில் கடை வைத்தார், இவருக்கு வியாபாரத் திறமை இல்லை என்பது எனக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் தெரியும். ஆனாலும் மக்களுக்குத் தெரியாததால்  நம்பி பணத்தை முதலீடு செய்தனர்.

இவரது நோக்கம் மளிகைக் கடை நடத்தி லாபம் ஈட்டி பங்கு தாரர்களுக்கு லாபம் கொடுப்பது அல்ல; மாறாக பேருக்கு கடை திறந்து நட்டக் கணக்குடன் கடையை மூடி விட்டு ஏப்பம் விடுவது தான் இவரது நோக்கம் என்று நான் மூத்த தலைவர்களிடம் எச்சரித்தேன். நான் எச்சரித்தது போல் காயல் பட்டிணத்தில் கடை திறந்து சில மாதங்களில் நட்டக் கணக்குடன் மூடி விட்டார்.

அந்தத் தொழில் செய்யலாம்; லாபம் கிடைக்கும் இந்தத் தொழில் செய்யலாம் லாபம் கிடைக்கும் என்றெல்லாம் பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வழக்குகள் அதிகம் வந்தன.

அவரது மனைவியின் தலைமையில் தனியாக ஒரு மதரசா ஆரம்பித்து அதன் பெயரில் வசூல்,
இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு பயிற்சி நிலையம் நடத்துவதாக அதன் பெயரில் வசூல்,
சிறைவாசிகளுக்கு உதவுவதாக வசூல்,
தொழில் முதலீடு என வசூல்,
அரபு நாட்டு ஏமாளிகளிடம் சீன் காட்டி வசூலிக்கும் முயற்சி
என்று தனிப்பட்ட முறையில் பண வசூல் செய்தார்.
ஆனால் இவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் தான் மக்கள் நம்பி பணம் கொடுக்கின்றனர் என்பதை மறந்து விட்டார். மதரசா தாவா செண்டர் ஆகியவற்றை ஜமாஅத் பெயரில் நடத்தாமல் தன் பெயரில் நடத்திக் கொண்டார். எனக்குத் தெரிந்து பத்து நிறுவனங்கள் பெயரில் பத்து லட்டர் பேடுகள் வைத்துக் கொண்டு பணம் திரட்ட அவற்றைப் பயன்படுத்தினார்.

இவருக்காகவே நான் உணர்வில் எச்சரிக்கை விளம்பரம் அடிக்கடி போடும் நிலை ஏற்பட்டது. தொழில் முதலீடு என்று யார் பணம் திரட்டினாலும் அதில் ஏமாற வேண்டாம் என்றும், தனி நபர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு உதவுவதற்கு முன் நல்ல முறையில் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றும் பல முறை உணர்வில் அறிவிப்பு செய்தேன்.

ஆனால் சோத்துக்கு வழியில்லாதவர் என்ற முகபாவத்துடன் அவர் நடமாடுவதால் அவரைப் பார்க்கும் யாருக்கும் சந்தேகம் வராது. கார் பங்களா என்று ஆடம்பரம் செய்ய மாட்டார் என்பதால் அவர் எப்படி பணம் திரட்டுவார் என்று தான் மக்கள் நினைப்பார்கள். நான் சென்ற தொடரில் எடுத்துக் காட்டிய ஆதாரங்களை அறிந்தவர்களால் தான் இவரது பண மோசடிகளை அறிய முடியும்.

பண மோசடி காரணமாக நாங்கள் கவலை கொண்டாலும் அவர் ஜமாஅத் பெயரில் இவற்றைச் செய்யாமல் தனித்தனி நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டு தனிப்பட்ட முறையில் செய்ததால் அதிகாரப் பூர்வமாக ஜமாஅத் பாதிக்கவில்லை என்பதில் ஆறுதல் அடைந்தோம். அவ்வப்போது கண்டித்தோமே தவிர அவரைப் பற்றி மக்களிடம் அசிங்கப்படுத்தவில்லை. ஜமாஅத் பெயரில் எந்த மோசடியும் செய்யாமல் பார்த்துக் கொண்டோம்

இப்படி அவரது நடவடிக்கைகள் இருந்தாலும் அதற்காக அவர் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்படவில்லை.

அவர் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் முன்னரே நான் சொன்ன படி ரகசிய இயக்கம் அமைத்தது தான் காரணம்.

முதல் சம்பவம்

சென்னையில் இருந்து மப்ரூக் ஹஜ் சர்வீஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தப்பட்டு வந்தது. அதன் உரிமையாளர் தவ்ஹீத் கொள்கை உடையவராக இருந்ததால் தனது நிறுவனத்தின் மூலம் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லும் மக்களுக்கு வழிகாட்டியாகச் செல்ல நல்ல ஆலிம் ஒருவர் வேண்டும். அவருக்கான அனைத்து செலவுகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று அந்த நிறுவனம் 2002 ஆம் ஆண்டு தவ்ஹீத் ஜமாஅத்தில் கோரிக்கை வைத்தது. அப்போது ஹாமித் பக்ரி தான் தலைவராக இருந்தார்.

இது குறித்து மாநில நிர்வாகிகளின் ஆலோசனக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது போன்ற காரியங்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆலிம்கள் பயன்படக் கூடாது என்று நான் ஆட்சேபம் தெரிவித்தாலும் அதிகமான நிர்வாகிகள் அதை ஏற்கவில்லை. எனவே ஒரு ஆலிமை கைடாக அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொருவரும் தன்னை அனுப்ப வேண்டாம் என்று மறுத்து விட்டனர். ஹாமித் பக்ரி நான் போகிறேன் என்று முன் வந்தார். அதன் படி மப்ரூக் ஹஜ் சர்வீஸின் சார்பில் ஹஜ் செய்யும் மக்களுக்கு வழிகாட்டியாக ஹாமித் பக்ரி அனுப்பி வைக்கப்பட்டார்.

அந்தக் காலகட்டத்தில் சவூதியில் தமுமுகவுக்கு மட்டும் தான் அமைப்பு ரீதியாக கிளைகள் இருந்தன. அவர்கள அனைவரும் என்னுடன் தமுமுக அமைப்பாளர் என்ற முறையில் தொடர்பில் இருந்தனர். தவ்ஹீத் ஜமாஅத்துக்கு தனியாக கிளைகள் அப்போது சவூதியில் இருக்கவில்லை.

ஹாமித் பக்ரி சவூதியில் இருக்கும் காலத்தில் எனக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் அங்கிருந்து வந்தன.

அதாவது ஜித்தாவில் விருது நகர் முஜீபுர்ரஹ்மான் உமரி என்பவர் சவூதியின் பிரச்சாரக் கேந்திரமான ஜாலியாத்தில் பணிபுரிந்தார். முஜீபுர்ரஹ்மானுடைய அந்த அலுவலகத்தில் வைத்து ஹாமித் பக்ரி பாகிஸ்தானைச் சேர்ந்த் லஷ்கர் தய்யிபா இயக்கத்தின் முக்கிய தலைவரைச் சந்தித்து பேசியுள்ளார் என்பது அதில் ஒரு தகவல்.

மேலும் அங்குள்ள தமிழ் முஸ்லிம் சகோதரர்களைச் சந்தித்து குஜராத் கலவரம் பற்றியும் நாம் பதிலடி கொடுக்க பாதுகாப்புப் படை அமைப்பது பற்றியும் அதற்காக அதிகமான நிதி தேவை என்பது பற்றியும் பேசி இருக்கிறார் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்த இரண்டு செய்திகளையும் அறிந்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவர் எந்தப் படையையும் அமைக்க மாட்டார்; பணம் சம்பாதிக்க அடுத்த வழியைத் தேர்ந்தெடுத்து விட்டார் என்று நான் நினைத்தாலும் லஷ்கர் தலைவருடனான சந்திப்பு தான் அதிகக் கவலை அளித்தது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஹாமித் பக்ரி எதையாவது செய்து விட்டு சிக்கினால் தவ்ஹீத்  ஜமாத்தே தடை செய்யப்படும் நிலை ஏற்பட்டு விடுமே? அனைத்து கீழ்மட்ட நிர்வாகிகளுக்கும் சிக்கல் வருமே? இதனால் தீவிரவாத இய்க்கம் என்ற காரணத்தைக் கூறி ஏகத்துவப் பிரச்சாரத்துக்கே மூடுவிழா நடத்தப்படுமே என்று நான் கவலைப்பட்டேன்.

ஆனால் இதை தமுமுக நிர்வாகியிடமோ தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகியிடமோ கூறவில்லை. முதலில் ஹாமித் பக்ரி தாயகம் வரட்டும். அவரைத் தனிப்பட்ட முறையில் விசாரித்து விட்டு மற்றவர்க்ளிடம் இதைப் பகிர்ந்து கொள்வோம் என்று எனக்குள் அதை வைத்துக் கொண்டேன்.

ஹாமித் பக்ரி ஹஜ் பயனத்தை முடித்து விட்டு சென்னை வந்து இறங்கியவுடன் என்னை உடனே சந்திக்க வேண்டும் என்று போன் மூலம் கூறினார். நானும் உடனே வீட்டுக்கு வரச் சொன்னேன்.

அதன் படி எனது வீட்டுக்கு வந்தார். வந்தவுடன் அவராக சில செய்திகளைக் கூறினார்.

அதாவது குஜராத் கலவரம் காரணமாக சவூதி முழுவதும் நம் மக்களிடம் கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் இது போல் நடக்காமல் காப்பாற்ற நாம் ஒரு பாதுகாப்புப் படையை அமைக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாரி வழங்கத் தயாராக இருக்கிறார்கள். தமுமுகவும் தவ்ஹீத் ஜமாஅத்தும் இதில் எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பதில் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே இது பற்றி நாம் முடிவு செய்ய வேண்டும் என்பது தான் அவர் என்னிடம் கூறிய செய்தி.

நான் எதை விசாரிக்க நினைத்தேனோ அது அவரது வாயில் இருந்தே வந்து விட்டது. தான் கொளுத்திப் போட்டதை மக்கள் சொன்னதாக மாற்றிக் கூறுகிறார் என்று விளங்கிக் கொண்டேன்.

அவர் இவ்வாறு கூறியதும் நான் கேள்விப்பட்டதை அவரிடம் விசாரிக்கவில்லை. இவர் இது போன்ற மடத்தனமான வேலையில் இறங்கக் கூடாது என்பதற்காக அநதக் கருத்து எப்படி தவறானது என்று விளக்கினேன். இது நன்மை செய்வதற்கு பதிலாக தீமை தான் செய்யும் என்றும் கூறினேன். சுமார் மூன்று மணி நேரமாவது இது பற்றி விவாதித்திருப்போம். நான் இதற்கு உடன்பட மாட்டேன் என்பதை அவர் விளங்கிக் கொண்டார்.

அவர் அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டார் என்று தான் நான் நினைத்தேன். ஆனால் அந்தக் கருத்தை அவர் மாற்றிக் கொள்ளவில்லை என்பதும் எனக்குத் தெரியாமல் இரகசியமாக செயல்பட நினைத்துள்ளார் என்பதும் பின்னர் தான் எனக்குத் தெரிய வந்தது.

அவர் குறித்து கிடைத்த இரண்டு செய்திகளில் ஒரு செய்தி ஹாமித் பக்ரி வாயாலேயே வந்து விட்டது. அவர் லஷ்கர் தய்யிபா தலைவரைச் சந்தித்த விஷயம் தான் உறுதிப்படுத்தபடாமல் இருந்தது.

பின்னர் முஜீபுர்ரஹ்மான் உமரி என்னை எனது வீட்டுக்கு வந்து சந்தித்த போது ஹாமித் பக்ரி லஷ்கர் தய்யிபா தலைவரை எனது அலுவலகத்தில் சந்தித்தது உண்மை என்றும் ஆனால் நான் அப்போது ஜித்தாவில் இல்லை என்றும் தெரிவித்தார். எனக்கு வந்த தகவல் உண்மை என்பதை இதன் மூலம் உறுதி செய்து கொண்டேன். 

ஹாமித் பக்ரி ஆபத்தான பாதையில் செல்கிறார்; அவர் எப்படியோ போகட்டும். ஜமாஅத்தைக் காப்பாற்ற வேண்டுமே என்ற கவலை தான் அப்போது எனக்கு இருந்தது.

நம்மை நம்பிய மக்களுக்கு அவர்கள் விரும்பாத சுமையைச் சுமத்தி துரோகம் செய்து விடக் கூடாது என்பது பற்றியே சிந்தித்தேன், இதை வெளிப்படுதினால் ஹாமித் பக்ரி உள்ளே போய் விடுவார். வெளிப்படுத்தாமல் அவர் தலைவராக இருக்கும் போதே அவராக எதையாவது செய்து மாட்டிக் கொண்டால் ஒட்டு மொத்த இயக்கமும் பாதிக்கப்படும் என்று கவலைப்பட்டேன். அனைத்தையும் விட பல தடைகளுக்கு மத்தியில் நாம் செய்துவரும் தவ்ஹீத் பிரச்சாரமும் முடக்கப்பட்டு விடுமே பட்டபாடெல்லாம் ஒரு நொடியில் பாழாகி விடுமே என்பது தான் பெருங்கவலையாக இருந்தது. 
 

இது நமக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கக் கூடாது என்பதால் அப்போது நான் மிகவும் நம்பிய ஜவாஹிருல்லாவிடமும் ஹைதர் அலியிடமும் மட்டும் இதைக் கூறி என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தேன். இதை அம்பலப்படுத்தவும் கூடாது. மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது. ஆனாலும் இவர் எதையாவது செய்து மாட்டிக் கொண்டால் தமுமுக பாதிக்காது. ஏனெனில் அவர் தமுமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. தவ்ஹீத் ஜமாஅத்துக்குத் தான் பாதிப்பு ஏற்படும். எனவே தவ்ஹீத் ஜமாஅத்தைத் தான் எச்சரிக்க வேண்டும் என்று அவர்களும் கூறினார்கள். இன்னும் பொறுத்திருந்து அவரது நடவடிக்கைகளைக் கண்காணிப்போம் என்றும் அவர்கள் கூறினார்கள். தமுமுகவின் மற்ற நிர்வாகிகளுகுக் கூட இதைச் சொல்ல வேண்டாம் எனக் கூறினார்கள்

இது மட்டுமல்ல. இன்னும் சில சம்பவங்களும் நடந்தன. அவற்றையும் பார்ப்போம்.

இரண்டாவது சம்பவம் நாளை இன்ஷா அல்லாஹ்

 
நான்காவது தொடர்

இரண்டாவது சம்பவத்துக்கு முன் இடையில் ஒரு செய்தி
 

ஹாமித் பக்ரி ஜமாஅத்துக்குச் செய்ததுரோகம் குறித்த இரண்டாவது சம்பவத்துக்கு முன் தற்போது புதிதாகக் கிடைத்த செய்தியையும் இடையில் சொல்லிக் கொள்கிறேன்

பேர்ணாம்பட்டைச் சேர்ந்த ஆரம்ப கால தவ்ஹீத்வாதியும் இப்போது தம்மாமில் பணிபுரியக் கூடியவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தணிக்கைக் குழு உறுப்பினருமான தவ்பீக் அவர்கள் ஹாமித் பக்ரியிடம் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாற்றப்பட்ட செய்தியை நமக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்.

இனியும் ஹாமித் பக்ரியை நம்பி இப்போதைய புதிய சகாக்கள் ஏமாந்து போய்விடக் கூடாது என்பதற்காக அந்த சம்பவத்தை மக்கள் மத்தியில் வைக்கிறேன். 

அன்புள்ள சகோ. பி.ஜே அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

சகோ. ஹாமித் பக்ரி சம்மந்தமாக தாங்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளீர்கள். இது சம்மந்தமாக ஒரு தகவலை தங்களின் கவணத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று பல முறை யோசித்து, முக்கியமில்லை என்று நானே என்னி தவிர்த்து விட்டேன். இருந்தாலும் தற்போது, தங்களின் கவணத்திற்கு மட்டும் இந்த தகவலைக் கொண்டு வர விரும்புகிறேன். 

தாங்கள் கூறியது போல, 2002ல் மப்ருக் ஹஜ் குருப்பில் தம்மாமிலிருந்து நான் மட்டும் ஹஜ்ஜுக்குச் சென்றேன். அப்போது எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த சகோ. ஹாமித் பக்ரியுடன் நெருக்கம் ஏற்பட்டது. அச்சமயம், தமிழகம் மற்றும் இந்தியாவில் தவ்ஹீத் பிரச்சாரத்தை எப்படி எடுத்துச் செல்வது என்று பல ஆலோசனைகளைச் சென்னேன்.

அந்த ஆலோசனைகளில் ஒன்றாக தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஒரு நூலகத்தை நிறுவி அதில் தவ்ஹீத் நூல்களை மக்களுக்கு இலவசமாகப் படித்து திருப்பி அனுப்பிடும் வசதி ஏற்படுத்த வேண்டும்.  குறிப்பாக கல்லுரி மற்றும் மதரஸா மாணவர்கள் மத்தியில் தவ்ஹீத் பிரச்சாரத்தைச் செய்து, அவர்களை எதிர்காலத்தில் ஏகத்துவ கொள்கையை ஏற்கச் செய்ய வேண்டும்.  இதனால் மாணவப் பருவத்திலேயே ஏகத்துவக் கொளகையை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அதற்கான பொருளாதாரத்தில் நானும் பங்கு எடுத்துக் கொள்வதாகச் சென்னேன்.

இந்த நூலகம் செயல் வடிவத்தில் கொண்டு வர என்னால் முடிந்தளவுக்கு பொருளாதார பங்களிப்பு வழங்குகிறேன். இத்திட்டம் வெற்றி பெரும் பட்சத்தில், இதைப் போல, மற்ற மொழிகள், மற்றும் தமிழகத்திலும் 2-3 நூலகங்களை அமைக்கலாம் என்றேன். அப்போது போசிக் கொண்ட போது 2002ல் என்னுடைய பங்களிப்பாக குறைந்தது ரூ 1லட்சம் தருவதாக உறுதியளித்தேன். இதை உடனே ஒரு டைரி எடுத்து, அதில் குறிப்பு எழுதி உங்களுடைய முபைல் நம்பரை எழுதி விடுங்கள் என்று சென்னார். 

இவருடன் ஹஜ்ஜுக்கு இந்தியாவிலிருந்து 16-20 நபர்கள் வந்து இருந்தர்கள். அதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் வந்து இருந்தார்கள். அதில் ஒருவர் என்னுடைய வயதுடையவராக இருந்ததால், நாமும் அவருடன் நண்பர் ஆகி விட்டோம்.

ஹஜ் முடிந்தவுடன் தாயகம் சென்று ஒரு மாதத்திற்குள் என்னுடைய இந்த நண்பர் மூலம் ஹாமித் பக்ரி அவர்கள் தொடர்பு கொண்டார்கள். அப்போது நான் சொன்ன இந்த நூலகம் தொடங்க இருப்பதாகவும் அதற்கு பணம் அனுப்ப வேண்டும் என்று சென்னார். இந்த நூலகம் தவ்ஹீத் ஜமாத் சார்பாக தொடங்கப்பட உள்ளதா என்று கேட்டேன்? அதற்கு ஆமாhம் என்று சென்னார்கள்.

சரி வங்கிக் கணக்கு கொடுங்கள் தவ்ஹீத் ஜமாத்துக்கு முதல் தவனையாக 25000 ரூபாய் அனுப்புகிறேன் என்று சென்னேன். அப்போது அவர்கள் வங்கி முலம் அனுப்ப வேண்டாம், ஹஜ் முலம் நண்பரான சகோ. இப்ராஹீம் அவர்களின் தாயார் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டுள்ளார். அவருக்கு வங்கிக் கணக்கு உள்ளது, அவர்களின் பெயரில் அனுப்பவும் என்று சென்னார். அதன்படி அடுத்த நாளே நான் 25000 ரூபாய்க்கு அந்த ஆசிரியின் பெயரில் செக் அனுப்பினேன். அடுத்த தவனை கொடுக்க வேண்டும் என்று 2-3 மாதத்தில் பணமும் தயார்படுத்தி வைத்தேன். ஆனால் இவர் தொடர்பு கொள்ளவில்லை... எந்தவிதத் தகவலும் இல்லை... நூலகம் சம்மந்தமாக எந்த அறிவிப்பும் எந்த பத்திரிகையிலும் வரவில்லை...

இது என்னைப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. மறுபடியும் என் மனதை நானே திருப்திப் படுத்திக் கொண்டு, குறைந்தது காயல்பட்டினத்திலாவது இப்படி ஒரு நூலகத்தை ஏற்படுத்தியுள்ளார்களா என்று ஒர் நெருங்கிய நண்பர் முலம் முழு விவரங்களையும் சொல்லாமல் விசாரித்தேன். அப்படி எந்த நூலகமும் இவரால் உருவாக்கவில்லை என்று அறிந்து, அடுத்த முறை பணம் கேட்டால், இல்லை என்று சொல்லி விடலாம் என்று நினைத்தேன். ஆனால், இது நாள் வரை என்னை தொடர்பு கொள்ளவில்லை... 
நான் கொடுத்த இந்தப் பணம், முழுக்க தவ்ஹீத் ஜமாத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தான் அளித்தேன். எனினும், இது என்னுடைய சொந்தப் பணமாக இருந்ததால், நான் இது வரை இதை யாரிடத்திலும் சொல்லவில்லை... 
வஸ்ஸலாம்
தவ்ஃபீக்
தம்மாம் 

 மாபெரும் நூலகம் அமைக்கும் திட்டம் எதுவும் அப்போது தவஹீத் ஜமாஅத்தில் இல்லாமல் இருந்தும் பொய் சொல்லி 25 ஆயிரம் ரூபாயைத் தனி நபர் பெயரில் அனுப்பச் செய்துள்ளார். இது இவரது மோசடிக்கு மற்றொரு ஆதாரமாக உள்ளது. பணமாக ஒருவர் கொடுத்த தொகையை அவரிடம் திருப்பிக் கொடுப்பது தான் மார்க்கக் கடமையாகும்.

இப்போது அவர் சேர்ந்துள்ள போலி சுன்னத் ஜமாஅத்திலும் கூட இது கட்டாயம் திருப்பித் தர வேண்டியதாகும்.

சுன்னத் ஜமாஅத்தினரும் இவர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக தவ்பீக் அவர்களின் சம்மதத்துடன் இதை வெளிப்படுத்துகிறோம்.

இரண்டாவது சம்பவம்

ஹாமித் பக்ரி இயக்கத்துக்கு துரோகம் செய்தார் என்பதற்கான இரண்டாவது சம்பவம் இது தான்.

 உணர்வு அலுவலகத்தில் நான் இருந்த போது அதிராம்பட்டிணம் தவ்பீக் என்பவர் உணர்வு அலுவலகத்திற்கு ஒரு நாள் வந்தார்ஹாமித் பக்ரியுடன் கைது செய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இது பற்றி முதல் தொடரில் குறிப்பிட்டுள்ளேன். உணர்வில் ஏதோ விளம்பரம் கொடுப்பதற்காக வந்தவர் தற்செயலாக  என்னைப் பார்த்து விட்டு விளம்பரம் கொடுக்க வந்தேன் என்று என்னிடம் கூறி விட்டு மஷ்வராவுக்கு (ஆலோசனைக் கூட்டத்துக்கு) நீங்கள் வருவீர்கள் அல்லவா என்று கேட்டார். ஜித்தாவிலோ சவூதி அரேபியாவின் வேறு நகரத்திலோ பணி செய்து விட்டு விடுமுறையில் வந்தவர் ஏதோ ஒரு மஷ்வராவுக்கு (ஆலோசனைக்கு) அழைக்கப்பட்டுள்ளார் என்பதையும், அந்த ஆலோசனை எனக்குத் தெரியாமல் நடக்கவுள்ளது என்பதையும் ஆனால் அது எனக்குத் தெரிந்தே நடக்க இருப்பதாக அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் உடனே நான் ஊகித்துக் கொண்டேன்.

ஆனாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இன்ஷா அல்லாஹ் கலந்து கொள்வேன் என்று அவரிடம் கூறினேன்.

லஷ்கரே தய்யிபா தவ்ஹீத் இயக்கம் தானே என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். அந்தக் கேள்வியில் எனக்கு விஷயம் முழுமையாக விளங்கி விட்டது.

ஹாமித் பக்ரி சம்மந்தமாக நாம் கேள்விப்பட்ட செய்தி மெய்யாகிறது என்று புரிந்து கொண்டேன்.

எனக்குத் தெரியாமல் அதே நேரத்தில் எனது ஆதரவுடன் ஏதோ செய்வதாக சிலர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எதோ ஒரு இடத்தில் கூடி ஆலோசனை செய்ய உள்ளனர் என்பதை விளங்கிக் கொண்டேன். ஆனாலும் நான் எதையும் காட்டிக் கொள்ளாமல் சிரித்து வைத்தேன்.

இந்த இரண்டு வார்த்தைகளைத் தவிர வேறு எதையும் அவர் என்னிடம் பேசவில்லை. சிறிது நேரத்தில் ஜும்மாவுக்கு புறப்படும் நிலையில் இருந்ததாலும் அவரும் வேறு ஏதோ அவசர வேலையில் இருப்பது போல் போகிற போக்கில் இதைச் சொல்லி விட்டு சென்று விட்டார்.

ஏதோ ஒரு சதி வேலை நடக்கப் போகிறது என்று நான் ஊகித்து தவ்ஹீத் பணிக்கு என்ன நேரப் போகிறதோ என்ற கவலையுடன் அன்று இரவே ஜவாஹிருல்லாவிடமும் ஹைதர் அலியிடமும் இந்தத் தகவலையும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் இந்த விஷயத்தை நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளர்களிடம் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும். ஏதாவது காரணம் சொல்லி அவரைப் பொறுப்பில் இருந்து நீக்காவிட்டால் தவ்ஹீத் ஜமாஅத்துக்குப் பின்னடைவு எற்படும் என்று தெரிவித்தனர்.

இது சரியான யோசனையாகப் பட்டதால் சைபுல்லாஹ் ஹாஜாவுக்கு போன் செய்து உடனே சென்னை வர முடியுமா என்று கேட்டேன். உடனே புறப்பட்டு வருவதாக அவர் கூறிவிட்டு சென்னை வந்தார். அத்துடன் சென்னையில் இருந்த கலீல் ரசூல் ஆகிய இருவரை மட்டும் ஒரு இடத்துக்கு வரவழைத்து ஜித்தாவில் இருந்து வந்த தகவல், தவ்பீக் கூறிய தகவல் இரண்டையும் விளக்கிக் கூறி ஜமாஅத்தைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தினேன். இதை அனைவரிடமும் பரப்ப வேண்டாம்; நம் மூவருக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கட்டும் என்று முடிவு செய்து கொண்டோம்

ஹாமித் பக்ரி ரகசிய இயக்கம் கட்டுகிறார் என்று காரணம் கூறி அவர் மீது நடவடிக்கை எடுத்தால் காட்டிக் கொடுத்ததாக பிரச்சனையை திசை திருப்ப வாய்ப்பு உண்டு. மேலும் நமது ஜமாஅத்தில் இருந்து கொண்டு இந்தக் கள்ளத்தனமான காரியத்துக்கு யார் உடந்தை என்று கண்டு பிடிக்க முடியாமல் போய் விடும் என்று முடிவு செய்தோம்.

நிகழ்ச்சிகளுக்கு ஆலிம்களை அனுப்பும் பொறுப்பு சைபுல்லாவிடம் இருந்ததால் ஹாமித் பக்ரியை இயன்ற அளவு நிகழ்ச்சி இல்லாமல் பார்த்துக் கொள்வது என்றும்., அப்படியே நிகழ்ச்சிக்கு அனுப்புவது என்றால் அவரை இரகசியமாகக் கண்காணிக்கத் தகுதியானவர்களை அனுப்புவது என்றும் முடிவு செய்தோம்.

இவர் இரகசிய இயக்கத்துக்கு ஆள் பிடிக்கிறாரா? இவரது வலையில் யாரும் விழுகிறார்களா என்று கண்காணித்து தக்க சமயத்தில் தகுந்த ஆதாரம் கிடைத்த பின் அவரைப் பொறுப்பில் இருந்து எடுக்க ஆவன செய்வது என்றும் முடிவு செய்து கொண்டோம். ஹாமித் பக்ரியிடம் எதையும் காட்டிக் கொள்ளக் கூடாது என்றும் முடிவு செய்தோம்.

தமுமுகவில் இருவர், தவ்ஹீத் ஜமாஅத்தில் இருவர் தவிர வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது.

ஆனால் கண் கொத்திப் பாம்பாக இந்த ஜமாஅத்துக்கு பங்கம் வராமல் காப்பாற்றுவது எப்படி என்பதே ஒரே சிந்தனையாக ஆனது.

இந்த நிலையில் தான் மூன்றாவது சம்பவம் நடந்தது. 

தொடரும் இன்ஷா அல்லாஹ்
ஐந்தாம் தொடர்
மூன்றாவது சம்பவம்

 

திருக்குர் ஆன் தமிழாக்கப் பணியில் முழுமையாக நான் ஈடு பட்டு அதைச் சரி பார்ப்பதற்காக அவ்வப்போது உலமாக்கள் கூட்டத்தை நடத்தி பரிசீலனை செய்து வந்தேன். சென்னையில் அடிக்கடி அறிஞர்களை வரவழைத்து அது வரை நடந்துள்ள மொழி பெயர்ப்புப் பணியைக் கூட்டாகச் சரி பார்ப்பது வழக்கம்.

அவர்கள் கூறும் ஆலோசணகள் அடிப்படையில் தேவையான மாற்றங்கள் செய்து மறுபடியும் கூடுவோம். இப்படி பல முறை கூடி எல்லாப் பணிகளும் முடிந்து எல்லா மாற்றங்களும் செய்யப்பட்டு முடித்தேன். இதன் பின் முழுமையாக ஒரு மாதம் ஒதுக்கி திருக்குர்ஆன் தமிழாக்கத்தையும் அதன் குறிப்புகளையும் படித்து இறுதி வடிவம் கொடுப்பதற்காக கூடுவது என முடிவு செய்தோம். எல்லா ஆலிம்களும் நெல்லை மாவட்டத்தில் இருந்ததால் அனைவரையும் சென்னைக்கு வரச் செய்வது முறையாக இருக்காது என்பதால் நானே நெல்லை வந்து ஒரு மாதம் தங்குகிறேன் எனக் கூறி அதன் படி நெல்லை மாவட்டம் கடையநல்லூர் சென்றேன்.

இது நடந்தது 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் என்று நினைக்கிறேன்,. கடையநல்லூர் பேட்டையில் உள்ள ஒரு சகோதரர் தனது வீட்டை ஒரு மாதம் இதற்காக ஒதுக்கித் தந்திருந்தார். அவர் வீட்டில் தங்கிக் கொண்டு சரிபார்ப்புப் பணியை மேற்கொண்டோம். இதனால் பீஜே அந்த வீட்டை வாங்கி விட்டார் என்ற செய்தி பரவியது.

சகோதரர்கள் ஷம்சுல்லுஹா, சைபுல்லாஹ் ஹாஜா, அப்துல் ஜலீல் மதனி, ஹாமித் பக்ரி, எம்.ஐ. சுலைமான் எம்.எஸ். சுலைமான், முஹம்மத் அலி ரஹ்மானி, கலீல் ரசூல் மேலப்பாளையம் இப்ராஹீம் ஆகியோருடன் நானும் சேர்ந்து சரிபார்ப்புப் பணியைப் பார்த்து வந்தோம்.

 அனைவரும் ஆர்வத்துடன் இந்தச் சரிபாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தோம்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள முக்கியமான திருமணத்துக்கு நான் செல்ல வேண்டும் என்று கூறி விட்டு ஹாமித்  பக்ரி சென்று விட்டார். நாங்கள் சரிபார்ப்புப் பணியைத் தொடர்ந்தோம்.

அந்த நேரத்தில் சவூதி அரேபியாவில் பணியாற்றும் ஒரு சகோதரர் கடையநல்லூர் மதரஸாவுக்கு வந்தார். இவர் ஆரம்பகால தவ்ஹீத் சகோதரர் ஆவார். பெரும்பாலும் தவ்ஹீத் உலமாக்கள் அனைவரையும் நன்கு அறிந்தவர்.

வந்தவர் எங்களுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த போது ஹாமித் பக்ரி அவர்களை நேற்று குற்றாலத்தில் பார்த்தேன். அவருடன் அப்துல் மஜீத் மஹ்லரி, இன்னும் சிலரையும் பார்த்தேன். குற்றாலத்தில் என்ன விஷேசம் என்று நான் கேட்ட போது தஃவா பணி சம்மந்தமாக ஆலோசனக்காக வந்துள்ளோம். என்று அவர் எங்களிடம் தெரிவித்தார் எனக் கூறினார். நான் அதிர்ச்சி அடைந்தாலும் எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளவில்லை.

தஞ்சையில் திருமணத்திற்குச் செல்லப் போகிறேன் என்று தானே நம்மிடம் கூறி விட்டுச் சென்றார்.? ஏன்குற்றாலம் போனார்?

அவர் மட்டும் செல்லாமல் அவருடன் இன்னும் சிலர் சென்றது ஏன்?

தஃவா சம்மந்தமான ஆலோசனை என்றால் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் தாவா பணியில் ஈடுபாடு உள்ள நாங்கள் இருக்கும் போது எங்களில் ஒருவரையும் ஏன் அழைக்கவில்லை?

எங்களில் ஒருவருக்குக் கூட தகவல் தெரிவிக்கவில்லையே அது ஏன்?

பொய்யான காரணத்தைக் கூறி கள்ளத்தனமாக ஏன் கூட வேண்டும்?

என்றெல்லாம் எனக்குச் சந்தேகம் வந்தது.

இப்போது தான் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளில் ஸைபுல்லாவுக்கும், கலீல் ரசூலுக்கும் மட்டும் தெரிந்த விஷயத்தை அனைவரிடமும் நான் விளக்கினேன்.

ஜமாஅத்தை அழித்தொழிக்கும் காரியத்தில் அவர் இறங்கி விட்டார் என்ற சந்தேகம் மேலும் உறுதியானது.

இதன் பின்னர் நான் விசாரிக்காமலேயே குற்றாலத்தில் தற்செயலாக இவர்களைப் பார்த்த இன்னும் சிலர் வழியாக அதில் பேர்ணாம்பட்டில் பணியாற்றிய அப்துர்ரஹ்மான் ஷிப்லீயும் அதில் கலந்து கொண்டார் என்பதையும் . இன்னும் தவ்ஹீத் ஜமாஅத்தில் அறிமுகமில்லாத சிலரையும் பார்த்ததையும் பின்னர் ஒரு சகோதரர் மூலம் நான் அறிந்து கொண்டேன்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் உள்ள ஒருவர் தாவா சம்மந்தமான ஆலோசனை என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். ஆனால் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நமக்கு எதையும் தெரிவிக்கவில்லையே? அப்படியானால் இது தஃவா பணியாக இருக்காது. நாம் சந்தேகப்பட்டது போன்ற பணியாகத் தான் இருக்க முடியும் என்று உறுதி செய்து கொண்டோம்.

(இவர்களில் மல்லிப்பட்டிணத்தைச் சேர்ந்த சில இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் யாரும் தவ்ஹீத் வாதிகள் அல்ல என்பது பின்னர் தெரிய வந்தது.)

தமிழாக்கம் சரிபார்ப்புப் பணியை முடித்து விட்டு சென்னை திரும்பியதும் இதையும் ஜப்வாஹிருல்லாவிடமும் ஹைதர் அலியிடமும் தெரிவித்தேன்.

இதன் பின்னர் அப்துல் மஜீத் மஹ்ளரி, ஹாமித் பக்ரி, அப்துர் ரஹ்மான் ஷிப்லி ஆகியோரையும் எனது கண்காணிப்புக்குள் கொண்டு வந்தேன். ஜமாஅத்தை பாதிக்கும் நடவடிக்கைகளில் இவர்கள் இறங்காமல் தடுத்து ஜமாஅத்தைக் காப்பற்ற வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளையும் செய்தோம். தமுமுகவின் மற்றொரு நிர்வாகியான ஏ.எஸ்.அலாவுத்தீனிடம் இதைப் பகிர்ந்து கொண்டேன். மற்ற நிர்வாகிகளிடம் இதை நான் சொல்லவில்லை.

அவசரப்பட்டு நாம் எடுக்கும் நடவடிக்கை மக்கள் மத்தியில் தொய்வு ஏற்படுத்தி விடாமலும்; பிளவு ஏற்படுத்தி விடாமலும், வெளிப்படையாக இதை அறிவித்து ஜாமாஅத்தை காப்பாற்றப் போய் காட்டிக் கொடுத்த நிலை ஏற்பட்டு விடாமலும் எப்படி இதைக் கையாள்வது என்பதில் எனக்கும் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கும் குழப்பம் ஏற்பட்டது. எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் தான் நான்காவது சம்பவம் நடந்தது.

தொடரும் இன்ஷா அல்லாஹ்

ஆறாம் தொடர்
நான்காவது சம்பவம் 

இலங்கையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹாமித் பக்ரியும், எம்.ஐ.சுலைமானும் இலங்கை தவ்ஹீத் சகோதரர்களால் அழைக்கப்பட்டனர். தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அவர்கள் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இருவர் மட்டுமே செல்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பயணம் நெருங்கும் போது இருவருடன் அப்துர் ரஹ்மான் ஷிப்லியும் புறப்படுகிறார் என்ற தகவல் கிடைத்தது. (அப்துர்ரஹ்மான் ஷிப்லி பற்றி முந்தைய தொடர்களில் விளக்கியுள்ளேன்.)

இவருக்கு இலங்கையில் இருந்து அழைப்பு இல்லாத நிலையில் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக் குழுவுக்குச் சொல்லாமல் இவர் ஏன் இலங்கை புறப்பட வேண்டும்? மற்றவர்கள் வழியாக இந்தத் தகவல் ஏன் நமக்கு வர வேண்டும்? என்ற சந்தேகம் எனக்கு வந்தது.

பொதுவாக லஷ்கர் தய்யிபா ஆட்கள் இலங்கையில் தான் இந்தியாவைச் சேர்ந்தவர்களைச் சந்திப்பார்கள் என்ற பிரச்சாரம் மீடியாக்களின் மூலம் பரப்பப்பட்ட நேரம் அது. இதனால் எனக்குச் சந்தேகம் வந்தது.

உங்களுடன் ஷிப்லீயும் வருகிறாரா என்று நான் நேரடியாக ஹாமித் பக்ரியிடம் கேட்டேன். தனது சொந்தச் செலவில் இலங்கையைச் சுற்றிப் பார்க்க ஷிப்லீ வருகிறார் என்று என்னிடம் ஹாமித் பக்ரி தெரிவித்தார்.

அந்த நேரத்தில் மிக அற்பமான ஊதியத்தில் குடும்பம் நடத்த சிரமப்பட்டுக் கொண்டிருந்த ஷிப்லீ எப்படி சுற்றுலாவுக்காக செலவு செய்ய முடியும் என்று நான் கேட்டேன்.

அவர் இந்தியாவில் இருந்து பொருட்களை வாங்கிச் சென்று இலங்கையில் விற்று அந்த லாபத்தில் செலவைச் சமாளித்துக் கொள்வார் என்று ஹாமித் பக்ரி கூறினார்.

எனக்குச் சந்தேகம் தீராவிட்டாலும் அதற்கு மேல் அது பற்றி கேட்கவில்லை.

ஷிப்லீ என்ன பொருட்க்ளை வாங்கிச் செல்கிறார்? என்ன வாங்கி வருகிறார் என்று கண்காணிக்க ஏற்பாடு செய்தேன். இலங்கை செல்லும் போது ஷிப்லீ இந்தியாவில் இருந்து லாபம் தரும் பொருள் எதையும் வாங்கிச் செல்லவுமில்லை. அங்கிருந்து லாபம் தரும் பொருட்களை வாங்கி வரவும் இல்லை என்பதை நான் தெரிந்து கொண்ட போது இதில் ஏதோ மர்மம் உள்ளதாக எனக்குத் தோன்றியது.

இரண்டு பேர் செல்லும் போது இன்னொருவரைக் கூட அழைத்துச் சென்றால் அது மறைக்கப்பட வேண்டிய விஷயம் அல்லவே? அப்படியே போனாலும் அதற்காகச் சொல்லப்பட்ட காரனம் பொய்யாக இருக்கிறதே என்று சந்தேகப்பட்ட நான் இது குறித்தும் ஜவாஹிருல்லாவிடமும் ஹைதர் அலியிடமும் ஆலோசனை செய்தேன்.

அவரது நடவடிக்கைகள் மர்மமாக இருப்பதாக அவர்களும் கருதினார்கள். இன்னது என்று கணிக்க முடியாத ஏதோ ஒரு திட்டத்துடன் அவர் செயல்படுகிறார் என்பது மட்டும் எங்களுக்கு உறுதியானது. இனி மேல் பொறுப்பதில் அர்த்தமில்லை. நேரடியாக சில நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.

அதன் படி மீண்டும் சைபுல்லாஹ் ஹாஜா அவர்களுடன் ஆலோசனை நடத்தினேன்.

அவர் பாரதூரமாக எதையாவது செய்து மாட்டிக் கொண்டால் ஜமாஅத் அழிந்து விடும். எனவே அவரை ஒவ்வொரு பொறுப்பில் இருந்தும் பக்குவமாக அப்புறப்படுத்துவது என்று நானும் சைபுல்லாஹ்வும் நானும் முடிவு செய்தோம். 

ஹாமித் பக்ரி கடையநல்லூரில் நடக்கும் இஸ்லாமியக் கல்லூரியின் நிர்வாகக் கமிட்டியில் அங்கம் வகித்தார். அதில் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். முதலில் அதை விட்டு அவரை அப்புறப்படுத்துவது என்று முடிவு செய்தோம்.

சைபுல்லாஹ் ஹாஜா ஹாமித் பக்ரியை நேரில் சந்தித்து நேருக்கு நேராக சில விஷயங்களைக் கேட்டார்.

நீங்கள் குற்றாலத்தில் ரகசிய ஆலோசனை நடத்தி இருக்கிறீர்கள்.

சவூதியில் இந்த இடத்தில் வைத்து லஷ்கர் தலைவரைச் சந்தித்து இருக்கிறீர்கள்.

இது போல் நீங்கள் நடப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெளிவாகக் கூறி விட்டார். இதற்கு ஏற்கத் தக்க எந்தப் பதிலையும் ஹாமித் பக்ரி சொல்லவில்லை.

இதன் பின்னர் 2002 பிப்ரவரி மாதம் மதரஸா ட்ரஸ்ட் உறுப்பினர்கள் கூடி அவர்களிடம் நிலைமை விளக்கப்பட்டு ஹாமித் பக்ரி மதரசா ஆசிரியர் பொறுப்பில் இருந்தும் ட்ரஸ்ட் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதன் பின்னர் தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமை பொறுப்பு குறித்து ஆலோசனை செய்தோம். அவர் மக்களால் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் அவரை மக்கள் கூடித் தான் பொறுப்பில் இருந்து நீக்கவோ மாற்றவோ முடியும். எனவே மாநில நிர்வாகக் குழுவைக் கூட்டி உடனே பொதுக்குழுவைக் கூட்டுவது என்று முடிவு செய்தோம்.

அதன் படி 2002 மார்ச் மாதம் மதுரையில் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடப்பட்டது.

பொதுக்குழுவுக்கு முதல் நாள் மாநிலப் பிரச்சாரகர்கள், மாநில நிர்வாகிகள் அனைவரும் கூடி தனியாக ஆலோசனை நடத்தினோம். ஹாமித் பக்ரியைத் தவிர்த்து விட்டுத் தான் இந்த ஆலோசனை நடத்தினோம்.

அப்போது ஹாமித் பக்ரி மீது குற்றம் சுமத்தி நீக்கினால் நாமே அவரைக் காட்டிக் கொடுத்து விட்டோம் என்ற நிலை வரும். மக்களுக்கு காரணத்தை விளக்கினால் அவர்கள் மத்தியிலும் குழப்பமான நிலை எற்படும். எனவே மிகவும் தந்திரமாகத் தான் அவரை அப்புறப்படுத்த வேண்டும் என்று கருதினோம்.

அதிக அளவில் ஹாமித் பக்ரி பிரச்சாரம் செய்வதால் அவரால் நிர்வாகப் பொறுப்பைச் சரியாகச் செய்ய முடியாது. நிர்வாகத்தைக் கவனித்தால் அவர் பிரச்சாரம் செய்வதற்குச் செல்ல முடியாது என்று மக்களிடம் சொல்வது என்றும் அதனடிப்படையில் வேறு தலைவர் தேர்வு செய்யுமாறு பொதுக்குழுவில் கோருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இது மக்களால் ஏற்கப்படுவது சந்தேகமே என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது.

எல்லோருமே பிரச்சாரத்தில் தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையில் அவரை மட்டும் பிரித்துப் பேசுவதை மக்கள் நம்ப வாய்ப்பு இல்லை என்ற சந்தேகம் எங்கள் அனைவருக்கும் இருந்தது.

ஆனாலும் முயற்சித்துப் பார்ப்போம் ஒன்றும் சரிவராவிட்டால் குற்றால ஆலோசனையை மட்டும் சொல்லி இது போல் ரகசிய திட்டம் போடுபவர் ஜமாஅத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியாது என்பதைக் கடைசி ஆயுதமாக வைத்துக் கொள்வோம் என்று முடிவு செய்யப்பட்டது. 

ஹாமித் பக்ரியும் தனக்கு வேண்டிய சிலரை வைத்து பிரச்சனை செய்யும் திட்டத்தில் இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது. அது போல் ஏதாவது நடந்தால் அனைத்தையும் போட்டு உடைத்து ஜமாஅத்தைக் காப்பற்றுவது என்று முடிவு செய்தோம்.

ஆனால் சூழ்ச்சி செய்வதில் வல்லவனான அல்லாஹ் எங்களுக்கு வேலை வைக்காமல் அவன் வேறு ஒரு திட்டத்தைப் போட்டிருந்தான் எனபது அன்று காலையில் தான் தெரிந்தது.

பொதுக்குழு நடக்கும் நாளில் சுபுஹ் தொழுது விட்டு தொலைக்காட்சி செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இமாம் அலி பெங்களூரில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி பரபரப்பாக அனைத்துச் சேனல்களிலும் காட்டப்பட்டது. இது வேதனையளித்தது என்றாலும் பின்னர் இதனால் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வின் அருளால் காப்பாற்றப்பட்டது என்பது ஆச்சரியமான உண்மை.

ஆம் கொல்லப்பட்ட இமாம் அலியின் சகோதரியை ஹாமித் பக்ரி இரண்டாவதாகத் திருமணம் செய்திருந்தார். இமாம் அலியின் உடலைக் கோருவது என்றால் அவரது சகோதரிக்கும் சகோதரி கணவருக்கும் மட்டுமே உரிமை உண்டு. அந்த அடிப்படையில் உடலைப் பெறுவதற்கு ஹாமித் பக்ரி தான் உரிமை படைத்தவராக இருந்தார்.

பொதுக்குழுவில் முதல் விஷயமாக இமாம் அலி கொல்லப்பட்ட செய்தி பாக்கரால் தெரிவிக்கப்பட்டது. அந்த உடலைப் பெறுவதற்காக மைத்துனர் என்ற முறையில் ஹமித் பக்ரி செல்ல இருக்கிறார். இதற்காக உங்களால் இயன்ற உதவியைத் தாருங்கள் என்று பாக்கர் பேசினா. அந்த இடத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் திரண்டது. (இன்றைக்கு இரண்டு லட்சத்துக்கு சமம்.)

அந்த ரூபாயைக் கொடுத்து ஹாமித் பக்ரி உடனே பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதன் பின் நடந்த பொதுக்குழுவில் நிர்வாக மாற்றம் என்ற பொருள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஹாமித் பக்ரியை விட வேறு தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நிர்வாகிகள் விரும்புவதைத் தெரிவித்த போது மறு பேச்சு இல்லாமல் சைபுல்லாஹ் ஹாஜா மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மக்களுக்குச் சந்தேகம் வராத வகையில் ஹாமித் பக்ரி மேலாண்மைக் குழு உறுப்பினாராக ஆக்கப்பட்டார். அப்போது மேலாண்மைக் குழு என்பது பெரிய அதிகாரம் படைத்திருக்கவில்லை. 

இமாம் அலி உடலைப் பெறுவதற்கு ஹாமித் பக்ரி செல்லாமல் இருந்தால் அவரால் அன்றைய பொதுக்குழுவில் நிச்சயம் முழப்பம் ஏற்பட்டிருக்கும். 

பல்வேறு சந்தர்ப்பங்களில் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அல்லாஹ் அருள் புரிந்து இந்த ஜமாஅத்தைக் காப்பாற்றினான். அது போல் தான் இப்போதும் காப்பாற்றினான். 

ஆந்திரப் போலீசார் வழியாகக் கிடைத்த தகவல் அடிப்படையில் ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்ட போது அவர் தலைவராக இருந்திருந்தால் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் ஒவ்வொரு கிளை நிர்வாகியும் விசாரணை வளைத்துக்குள் கொண்டு வரப்பட்டிருப்பார். ஜமாஅத்திற்கு தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு பணிகள் முடக்கப்பட்டிருக்கும். அவர் தலைவராக இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டதால் அது ஜமாஅத்தைப் பாதிக்கவில்லை. அல்ஹம்து லில்லாஹ்.

இந்த விபரங்கள் தமுமுகவில் அனைத்து நிர்வாகிகளுக்கும், தவ்ஹீத் ஜமாஅத்தில் அனைத்து நிர்வாகிகளூக்கும் முன்னரே தெரிந்ததாக இருந்ததால் ஒருவரும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை. ஏகமனதாக அனைவரும் ஏற்றுக் கொண்டதற்குக் காரணம் உளவுத்துறைக்கு முன்னரே எங்களுக்கு இந்த விஷயம் கூடுதலாகத் தெரிந்தது தான்.

ஹாமித் பக்ரியும் அவரைச் சேந்தவர்களும் தமிழக உளவுத்துறை மூலம் கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தால் அவரை நாங்கள் தான் காட்டிக் கொடுத்து விட்டோம் என்ற பிரச்சாரம் எடுபட்டிருக்கும்.

நாங்கள் அவருக்கு உதவ மறுத்ததை ஆதாரமாகக் கொண்டும், உணர்வில் வெளியிடப்பட்ட அறிவிப்பை ஆதாரமாகக் கொண்டும் அந்தப் பழி தமுமுக மீதும் தவ்ஹீத் ஜமாஅத் மீதும் எளிதாகப் போடப்பட்டிருக்கும். அப்படி இல்லாவிட்டாலும் வழக்கம் போல் பீஜே என்ற என் மீதாவது இந்தப் பழி சுமத்தப்பட்டு மக்கள் நம்பும் நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் அல்லாஹ் இதிலும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எண்ணிப்பார்க்காத வகையில் அருள் புரிந்தான். ஆந்திரப் போலிசாருக்கு சில தகவல் கிடைத்து ஆந்திரப் போலீஸாரால் ஷிப்லீ அழைத்து செல்லப்பட்டதால் ஆந்திராவின் உளவுத்துறையில் போட்டுக் கொடுத்து விட்டார்கள் என்ற பொய்ப் பிரச்சாரம் எடுபடாமல் போய் விட்டதுஅல்லாஹ்ஹாமித் பக்ரி கைதும்கைவிட்ட தமுமுக

Published on: October 19, 2010, 10:56 AM Views: 7465

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top