ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் இலக்கணம்

ஆதாரப்பூர்வமானஹதீஸ்களின் இலக்கணம் என்ன?

தொடர் 1

(இஸ்மாயில் சலபியின் நடவடிக்கைகளை விமர்சிக்காமல் அவரது ஆய்வை மட்டும் மறு ஆய்வு செய்யும் தொடர்)

மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற தலைப்பில் இஸ்மாயில் சலபி அவர்கள் தனது பத்திரிகையில் எட்டு தொடர் கட்டுரை எழுதி நிறைவு செய்திருக்கிறார்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களையும் ஏற்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் அவர் எடுத்து வைக்கவில்லை. குர்ஆனுக்கு முரண்பட்டாலும் ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்று ஹதீஸ் கலையில் விதி இருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டவில்லை.

அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். அல்குர்ஆனில் அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள் என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத் தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் நபி(ஸல்) அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்களாகும்.

இந்த அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஏற்க மறுப்பது நபித்துவத்தின் ஒருபகுதியை மறுப்பது போன்ற முக்கிய பிரச்சினையாக நோக்கப்பட வேண்டிய அம்சமாகும். இந்த அடிப்படையில் நாம் அலசப் போகும் அம்சம் அவசியமானதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும் என்பதை வாசகர;கள் முதலில் கவனத்திற் கொள்ள வேண்டும்.

என்று இஸ்மாயில் சலஃபி தனது மறுப்புக்கட்டுரையைத் துவக்குகிறார்

(அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள் என்று குர்ஆனில் இல்லை. அல்லாஹவை பின்பற்றக் கூடாது. பின்பற்ற முடியாது. அல்லாஹ்வைப் பின்பற்றினால் நாம் உண்ணவோ பருகவோ கூடாது. அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுங்கள்; தூதரைப் பின்பற்றுங்கள் என்றுதான் குர்ஆன் கூறுகிறது.)

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பது நுபுவ்வத்தை மறுத்ததாக ஆகும் என்ற தொடக்கத்துடன் கட்டுரை எழுதியவர் இந்தத் தலைப்பு குறித்து ஆதாரங்களை எடுத்துக் காட்டி ஒரு வாதத்தையும் எடுத்து வைக்கவில்லை. எதைப் பாரதூரமான விஷயம் என்று கூறினாரோ அந்தப் பாரதூரமான விஷயத்தைப் பற்றி எதையுமே நிறுவாமல் கட்டுரையை முடித்துக் கொண்டார்.

எனது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில்

ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்களே!

திருக்குர்ஆன் எவ்வாறு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரமும் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் தான் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஹதீஸ்களின் துணையின்றி மார்க்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனாலும் ஒரு அடிப்படையான விஷயத்தை நாம் மறந்து விடக் கூடாது.

நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் சமமானவை அல்ல. குர்ஆனைப் பொறுத்த வரை அனைத்து நபித்தோழர்களும் அது இறை வேதம் என்பதற்குச் சாட்சிகளாக உள்ளனர்.

குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டி இது என் இறைவனிடமிருந்து வந்தது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித் தோழர்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர்.

ஹதீஸ்களைப் பொறுத்த வரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித் தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிக பட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்.

ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும் ஒருவரே சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது.

எவ்வளவு தான் நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) இப்படிச் சொல்லியிருப்பார்களா என்ற கடுகளவு கூட குர்ஆன் விஷயத்தில் சந்தேகம் வராது. ஹதீஸ்களைப் பொறுத்த வரை இந்த நிலை கிடையாது.

ஆனாலும் நபித் தோழர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுச் செயல்படுகிறோம். குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் ஏற்பட முகாந்திரம் இல்லை. குர்ஆனுடன் மோதும் போது இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிப்பது தான் முறையாகும்.

ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை; திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது; இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்து விடாமல், குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைப்பது தான் நேர்மையான பார்வையாகும். இந்த நேரத்தில் மட்டும் இது போன்ற ஹதீஸ்களை மட்டும் நாம் விட்டு விட வேண்டும்.

இத்தகைய ஹதீஸ்கள் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் சரி தான்.

புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்ட சில ஹதீஸ்களை இங்கே நாம் உதாரணமாகக் குறிப்பிட்டால் இதில் அதிகத் தெளிவு கிடைக்கும்.

என்று நான் குறிப்பிட்டு இதற்கு உதாரணமாகச் சில ஹதீஸ்களையும் குறிப்பிட்டிருந்தேன். இதற்கு மறுப்பாகவே இஸ்மாயில் சலபி அந்தத் தொடரை எழுதினார். ஆனால் எட்டுத் தொடர்களிலும் அவர் எடுத்துக் கொண்ட தலைப்புக்குள் செல்லவே இல்லை.

மேலும் எனது தமிழாக்கத்தில் குர்ஆனுக்கு முரண்படும் சில ஹதீஸ்களை எடுத்துக் காட்டி இதற்கு பதில் என்ன என்று கேட்டிருந்தேன். சூனியம் பற்றிய ஒரே ஒரு ஹதீஸ் பற்றி மட்டுமே அவர் சமாளிப்புகளைச் செய்துள்ளார். (இதற்கு பின்னர் பதிலளிக்கப்படும்) ஆனால் அவரது கட்டுரையின் தலைப்பு மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்

(ஹதீஸ் அல்ல , ஹதீஸ்கள்)

இந்தத் தலைப்பில் எழுதப் புகுந்தவர் நான் மறுத்துள்ள பல ஹதீஸ்களில் அனைத்தையும் புறக்கணித்து விட்டு சிஹ்ர் பற்றிய ஒரு ஹதீஸுக்கு மட்டுமே பதில் அளித்துள்ளார். அப்படியானால் சிஹ்ர் பற்றிய ஹதீஸ் தவிர நான் மறுத்துள்ள மற்ற ஹதீஸ்களை அவர் மறுக்கிறாரா? ஏற்கிறாரா? என்பதை அவர் தெளிவாகச் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்.

நம்மைப் போலவே அந்த ஹதீஸ்களை அவரும் மறுப்பார் என்றால் நுபுவ்வத்தை மறுத்த குற்றத்தை அவரும் செய்தவராகி விடுவார்.

அந்த ஹதீஸ்களையும் அவர் ஏற்கிறார் என்றால் அதற்கு அவர் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் என்ன என்பதை விளக்குவது தான் இக்கட்டுரையின் முதன்மையான நோக்கம். என்றாலும் இந்தக் கேள்விகளைக் கேட்ட பின்பு அதை விளக்குவதில் தான் மக்களுக்கு கூடுதல் தெளிவு கிடைக்கும்.

திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நான் எடுத்துக்காட்டிய ஒரு செய்தியை சுட்டிக் காட்டுகிறேன்.

இது போல் அமைந்த மற்றொரு ஹதீஸையும் இறுதியாக நினைவுபடுத்துகிறோம்.

அபூஹுதைபா (ரலி) அவர்களின் மனைவியால் வளர்க்கப்பட்ட ஸாலிம் எனும் இளைஞர் அபூஹுதைபாவின் வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந் தார். தமது மனைவியுடன் ஸாலிம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபூஹுதைபா விற்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. இது பற்றி அபூஹுதைபாவின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது ஸாலிமுக்குப் பாலூட்டு! இதனால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லிம் 2638, 2636, 2639, 2640 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

அன்னிய இளைஞர் ஒருவருக்குப் பால் கொடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) நிச்சயம் கூறியிருக்க மாட்டார்கள். பால் ஊட்டுதல் என்பது இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தான் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியை ஏற்காது நாம் விட்டு வருகிறோம். நம்மால் கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை இந்த அறிவிப்பில் இருக்கலாம். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்கிறோம்.

இதைச் சரியானது என்று எவராவது வாதிட்டால் இன்றைக்கு இதன் அடிப்படையில் நடக்கலாம் என்று ஃபத்வா வழங்குவார்களா? நிச்சயம் வழங்க மாட்டார்கள்.

அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் விரல் விட்டு எண்ணக் கூடிய சில ஹதீஸ்களின் கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப் படைக்கு எதிராக உள்ளன. இது போன்ற ஹதீஸ்களை நம்பி இஸ்லாத்தின் அடிப் படையையும் குர்ஆன் வசனங்களையும் மறுக்கும் நிலை ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இதைக் குறிப்பிடுகிறோம்.

இது போல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்ட செய்தியையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனது தமிழாக்கத்தில் மறுக்கப்படும் ஹதீஸ்கள் என்ற பட்டியலில் மேற்கண்ட ஹதீஸை ஹதீஸையும் நான் குறிப்பிட்டிருந்தேன். இஸ்மாயில் சலபி அது ஆதாரப்பூர்வமானது என்கிறார். அப்படியானால் நாம் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் அவர் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்.

திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் மேலோட்டமாக மட்டுமே சில கேள்விகளைக் கேட்டிருந்தோம். ஒருவரது ஆய்வை மறுக்கும் கட்டுரையாக இருப்பதால் விரிவாகவே இதை விளக்குகிறோம்.

அபூஹுதைஃபா (ரலி) அவர்களும் ஸஹ்லா (ரலி) அவர்களும் தம்பதிகளாவர். அன்சாரிப் பெண் ஒருவரிடம் அடிமையாக இருந்த ஸாலிம் என்பாரை இவ்விருவரும் தமது வளர்ப்புப் பிள்ளையாக ஆக்கிக் கொண்டனர். தத்தெடுத்துக் கொள்வது தடுக்கப்படாத காலத்தில் இது நடந்தது. பின்னர் 33.5 வசனத்தின் மூலம் தத்துப் பிள்ளைகள் சொந்தப் பிள்ளைகளாக மாட்டார்கள் என்ற சட்டம் அருளப்பட்டது.

இந்த விபரங்களை புகாரி 5088வது ஹதீஸில் காணலாம். இந்த ஹதீஸில் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸில் தான் பல கேள்விகள் எழுகின்றன.

ஹதீஸ் 1

(3555) ـ حدّثنا عَمْرٌو النَّاقِدُ وَ ابْنُ أَبِي عُمَرَ: قَالاَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ الرَّحْمَـنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ، قَالَتْ: جَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ إِلَى النَّبِيِّ . فَقَالَتْ: يَا رَسُولَ اللّهِ! إِنِّي أَرَى فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ مِنْ دُخُولِ سَالِمٍ (وَهُوَ حَلِيفُهُ). فَقَالَ النَّبِي صلى الله عليه وسلم: أَرْضِعِيهِ قَالَتْ: وَكَيْفَ أُرْضِعُهُ؟ وَهُوَ رَجُلٌ كَبِيرٌ. فَتَبَسَّمَ رَسُولُ اللّهِ وَقَالَ: قَدْ عَلِمْتُ أَنَّهُ رَجُلٌ كَبِيرٌ. زَادَ عَمْرٌو فِي حَدِيثِهِ: وَكَانَ قَدْ شَهِدَ بَدْراً. وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي عُمَرَ: فَضَحِكَ رَسُولُ اللّهِ .

லஹ்லா பின்த் ஸுஹைல் (ரலி) என்ற பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே, ஸாலிம் (எனது வீட்டுக்கு) வருவதில் (எனது கணவரான) அபூஹுதைஃபாவின் முகத்தில் வெறுப்பைக் காண்கிறேன் என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ அவருக்குப் பாலூட்டு என்றார்கள். அவர் பெரிய ஆளாக இருக்கும் போது அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன் என்று நான் கேட்டேன். இதைக் கேட்டு புன்னகை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் பெரிய ஆள் என்பதை நான் அறிவேன் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்-ஆயிஷா (ரலி)

நூல்-முஸ்லிம்

ஹதீஸ் 2

(3556) ـ وحدّثنا إِسْحَـقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ وَ مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ. جَمِيعاً عَنِ الثَّقَفِيِّ قَالَ ابْنُ أَبِي عُمَرَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ عَنْ أَيُّوبَ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنِ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ، ؛ أَنَّ سَالِماً مَوْلَى أَبِي حُذَيْفَةَ كَانَ مَعَ أَبِي حُذَيْفَةَ وَأَهْلِهِ فِي بَيْتِهِمْ. فَأَتَتْ (تَعْنِي ابْنَةَ سُهَيْلٍ) النَّبِيَّ . فَقَالَتْ: إِنَّ سَالِماً قَدْ بَلَغَ مَا يَبْلُغُ الرِّجَالُ، وَعَقَلَ مَا عَقَلُوا، وَإِنَّهُ يَدْخُلُ عَلَيْنَا، وَإِنِّي أَظُنُّ أَنَّ فِي نَفْسِ أَبِي حُذَيْفَةَ مِنْ ذلِكَ شَيْئاً. فَقَالَ لَهَا النَّبِيُّ أَرْضِعِيهِ تَحْرُمِي عَلَيْهِ، وَيَذْهَبِ الَّذِي فِي نَفْسِ أَبِي حُذَيْفَةَ فَرَجَعَتْ فَقَالَتْ: إِنِّي قَدْ أَرْضَعْتُهُ، فَذَهَبَ الَّذِي فِي نَفْسِ أَبِي حُذَيْفَةَ.

அபூஹுதைஃபாவினால் விடுதலை செய்யப்பட்டவரான ஸாலிம் அபூஹுதைஃபாவின் குடும்பத்தினருடன் அவர்களின் வீட்டில் இருந்து வந்தார். (ஒரு நாள்) ஸஹ்லா அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ஆண்கள் அடைய வேண்டிய பருவத்தை ஸாலிம் அடைந்து விட்டார். ஆண்கள் புரிந்து கொள்வதை அவர் புரிந்து கொள்பவராகி விட்டார். அவர் எங்களிடம் வருகிறார். இது என் கணவர் அபூஹுதைஃபாவின் உள்ளத்தில் ஏதோ ஒன்றை ஏற்படுத்துவதாக நான் அறிகிறேன் என்று கூறினார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு நீ பாலூட்டு, இதனால் நீ அவருக்குத் தாயாகி விடுவாய். அபூஹுதைஃபாவின் உள்ளத்தில் இருப்பது இதனால் நீங்கிவிடும் என்று கூறினார்கள். அவர் திரும்பிச் சென்று விட்டார். நான் ஸாலிமுக்கு பாலூட்டினேன். உடனே அபூஹுதைஃபாவின் உள்ளத்தில் இருந்தது போய்விட்டது என்றும் ஸஹ்லா குறிப்பிட்டார்.

அறிவிப்பவர்-ஆயிஷா (ரலி)

நூல்-முஸ்லிம்

ஹதீஸ் 3

(3557) ـ وحدّثنا إِسْحَـقُ بْنُ إِبْرَاهِيمَ وَ مُحَمَّدُ بْنُ رَافِعٍ. (وَاللَّفْظُ لاِبْنِ رَافِعٍ) قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ: أَخْبَرَنَ0ا ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ؛ أَنَّ الْقَاسِمِ بْنَ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ سَهْلَةَ بِنْتَ سُهَيْلِ بْنِ عَمْرٍو جَاءَتِ النَّبِيَّ . فَقَالَتْ: يَا رَسُولَ اللّهِ! إِنَّ سَالِماً (لِسَالِمٍ مَولَى أَبِي حُذَيْفَةَ) مَعَنَا فِي بَيْتِنَا، وَقَدْ بَلَغَ مَا يَبْلُغُ الرِّجَالُ وَعَلِمَ مَا يَعْلَمُ الرِّجَالُ. قَالَ أَرْضِعِيهِ تَحْرُمِي عَلَيْهِقَالَ: فَمَكَثْتُ سَنَةً أَوْ قَرِيباً مِنْهَا لا أُحَدِّثُ بِهِ وَهِبْتَهُ، ثُمَّ لَقِيتُ الْقَاسِمَ فَقُلْتُ لَهُ: لَقَدْ حَدَّثْتَنِي حَدِيثاً مَا حَدَّثْتُهُ بَعْدُ. قَالَ: فَمَا هُوَ؟ فَأَخْبَرْتُهُ. قَالَ: فَحَدِّثْهُ عَنِّي أَن عَائِشَةَ أَخْبَرَتْنِيهِ.

ஆயிஷா(ரலி) கூறுவதாக அறிவிப்பவர் காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் ஆவார்.

அவர் கூறுவதாக அறிவிப்பவர் இப்னு அபீ முளைக்கா ஆவார்.

இவர் மேற்கண்ட ஹதீஸை அறிவித்துவிட்டு பின்வரும் செய்தியையும் கூறுகிறார்.

நான் ஒரு வருடம் அல்லது ஏறத்தாழ ஒரு வருடம் இச்செய்தியை யாருக்கும் அறிவிக்காமல் இருந்தேன். இதை அறிவிக்க நான் பயந்தேன். பின்னர் காசிம் அவர்களைச் சந்தித்து நீங்கள் எனக்கு ஒரு ஹதீஸைக் கூறினீர்கள். இது வரை அதை நான் அறிவிக்கவில்லை என்று கூறினேன். அது எந்த ஹதீஸ் என்று அவர் கேட்டார். நான் இந்த ஹதீஸைக் கூறினேன். ஆயிஷா (ரலி) எனக்கு அறிவித்து நான் உனக்கு அறிவித்ததாக நீ அறிவித்து விடு என்று விடையளித்தார் என்ற விபரம் மேலதிகமாக இடம் பெற்றுள்ளது.

ஹதீஸ் 4

(3558) ـ وحدّثنا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قَالَتْ أُمُّ سَلَمَةَ لِـ عَائِشَةَ، : إِنَّهُ يَدْخُلُ عَلَيْكِ الْغُلاَمُ الأَيْفَعُ الَّذِي مَا أُحِبُّ أَنْ يَدْخُلَ عَلَيَّ. قَالَ: فَقَالَتْ عَائِشَةُ: أَمَالَكِ فِي رَسُولِ اللّهِ إِسْوَةٌ؟ قالَتْ: إِنَّ امْرَأَةَ أَبِي حُذَيْفَةَ قَالَتْ: يَا رَسُولَ اللّهِ إِنَّ سَالِماً يَدْخُلُ عَلَيَّ وَهُوَ رَجُلٌ. وَفِي نَفْسِ أَبِي حُذَيْفَةَ مِنْهُ شَيْءٌ. فَقَالَ رَسُولُ اللّهِ صلى الله عليه وسلم: أَرْضِعِيهِ حَتَّى يَدْخُلَ عَلَيْكِ.

ஆயிஷா அவர்களே, உங்கள் இல்லத்தில் பருவ வயதுக்கு நெருக்கமான இளைஞர்கள் வருகின்றனர். அத்தகைய வயதுடையவர்கள் என் வீட்டில் நுழைவதை நான் விரும்ப மாட்டேன் என்று உம்முஸலமா (ரலி), ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் பருவமடைந்த ஆண் மகனான ஸாலிம் என் வீட்டுக்கு வருவதில் என் கணவர் அபூ ஹுதைஃபாவுக்கு அதிருப்தி உள்ளது என்று அபூ ஹுதைஃபாவின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது அவருக்குப் பாலூட்டு இதன் பின் வீட்டுக்குள் ஸாலிம் நுழையலாம் என்று கூறினார்களே? இதில் உங்களுக்கு அழகான முன்மாதிரி இல்லையா? என்று திருப்பிக் கேட்டார்கள்.

(முஸ்லிம்)

ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்துக்கு சில இளைஞர்கள் வந்து செல்வதையும் இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த இளைஞர்களுக்குப் பாலூட்டி அதன் மூலம் தாயாக ஆனார்கள் என்பதும் மறைமுகமாகக் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அழகிய முன்மாதிரி இல்லையா என்று கேட்டதன் மூலம் அதை ஆயிஷா (ரலி) அவர்களும் கடைப்பிடித்துள்ளார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

ஹதீஸ் 5

(3559) ـ وحدّثني أَبُو الطَّاهِرِ وَ هَـرُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ (وَاللَّفْظُ لِهَـرُونَ) قَالاَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ: أَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ حُميْدَ بْنَ نَافِعٍ يَقُولُ: سَمِعْتُ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ تَقُولُ: سَمِعْتُ أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ تَقُولُ لِعَائِشَةَ: وَاللّهِ! مَا تَطِيبُ نَفْسِي أَنْ يَرَانِي الْغُلاَمُ قَدِ اسْتَغْنَى عَنِ الرَّضَاعَةِ. فَقَالَتْ: لِمَ؟ قَدْ جَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ إِلَى رَسُولِ اللّهِ . فَقَالَتْ: يَا رَسُولَ اللّهِ وَالله إِنِّي لأَرَى فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ مِنْ دُخُولِ سَالِمٍ. قَالَتْ: فَقَالَ رَسُولُ اللّهِ صلى الله عليه وسلم: أَرْضِعِيهِ . فَقَالَتْ: إِنَّهُ ذُو لِحْيَةٍ . فَقَالَ: أَرْضِعِيهِ يَذْهَبُ مَا فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ. فَقَالَتْ: وَاللّهِ مَا عَرَفْتُهُ فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ.

மேற்கண்ட உம்மு ஸலமாவின் ஹதீஸின் கருத்தில் தான் இந்த ஹதீஸும் உள்ளது. ஸாலிம் தாடி உள்ள இளைஞராக இருந்தார் என்ற வாசகம் மேலதிகமாக இடம் பெற்றுள்ளது.

மேற்கண்ட அத்தனை ஹதீஸ்களையும் நாம் அடியோடு மறுக்கிறோம். இவை ஆதாரப்பூர்வமானவை அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) மீதும், ஸஹ்லா (ரலி) மீதும், ஸாலிம் (ரலி) மீதும், ஆயிஷா (ரலி) மீதும் களங்கம் சுமத்துவதற்காக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ என்று திட்டவட்டமாக அறிவிக்கிறோம்.

இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

1. பால் குடிக்கும் வயது

ஒரு பெண் தான் பெற்றெடுக்காத குழந்தைக்குப் பாலூட்டினால் அக்குழந்தைக்கு அவள் தாய் என்ற நிலையை அடைந்து விடுவாள். (வாரிசுரிமை கிடைக்காது என்பதைத் தவிர)

ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.

திருக்குர்ஆன் 2:233

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.314 எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

திருக்குர்ஆன் 31:14

பாலூட்டுதல் என்பது இரண்டு வருடங்கள் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுககுப் பாலூட்டினால் தான் தாய் பிள்ளை உறவு ஏற்படுமே தவிர அதைக் கடந்து விட்டால் தாய் பிள்ளை உறவு ஏற்படாது என்பது சிந்திக்கும் போது தெளிவாகும்.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இது தெளிவாகவும் கூறப்படுகிறது.

(2595) ـ حدّثنا محمدُ بنُ كثيرٍ أخبرَنا سفيانُ عن أشعثَ بن أبي الشعْثاءِ عن أبيهِ عن مَسروقٍ أنَّ عائشةَ رضيَ اللهُ عنها قالت: دَخلَ النَّبيُّ صلى الله عليه وسلّم وعندي رجُلٌ فقال: يا عائشةُ مَن هذا ؟ قلتُ: أخي منَ الرَّضاعةِ قال: يا عائشةُ انظُرْنَ مَن إِخوانُكنَّ، فإِنما الرضاعةُ مِنَ المجاعة . تابعَهُ ابنُ مَهْديٍّ عن سفيانَ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் வீட்டுக்கு வந்த போது என் அருகில் ஒரு ஆண் இருந்தார். இவர் யார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அதற்கு நான் இவர் எனது பால் குடி சகோதரர் என்று கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆயிஷாவே, உங்கள் சகோதரர் யார் என்பதில் கவனமாக இருங்கள். பால்குடி உறவு என்பது பசியினால் தான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்-புகாரி 5102

அதாவது பாலை மட்டுமே உணவாகக் கொண்டு பாலருந்தும் பருவத்தில் அருந்தினால் மட்டுமே பால்குடி உறவு ஏற்படும் என்பது இதன் கருத்து.

பாலை மட்டுமே அருந்தி அதன் மூலம் மட்டுமே பசியாறும் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு பால் ஊட்டினால் மட்டுமே பால் குடி உறவு ஏற்படும் என்பது மேற்கண்ட ஹதீஸின் கருத்தாகும்.

 

4412 - حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ وَإِبْرَاهِيمُ بْنُ دُبَيْسِ بْنِ أَحْمَدَ وَغَيْرُهُمَا قَالُوا حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ بْنُ بُرْدٍ الأَنْطَاكِىُّ حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لاَ رَضَاعَ إِلاَّ مَا كَانَ فِى الْحَوْلَيْنِ . لَمْ يُسْنِدْهُ عَنِ ابْنِ عُيَيْنَةَ غَيْرُ الْهَيْثَمِ بْنِ جَمِيلٍ وَهُوَ ثِقَةٌ حَافِظٌ

.

பாலூட்டும் சட்டம் இரண்டு வருடத்திற்குத் தான் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : தாரகுத்னீ பாகம் : 10 பக்கம் : 152

(1148) ـ حدثنا قُتَيْبَةُ حدثنا أبُو عَوَانَةَ عنْ هِشَامِ بنِ عُرْوَةَ عنْ أبيه عن فَاطِمَةَ بنْتِ الْمُنْذرِ عن أمِّ سَلَمَةَ ، قالَتْ: قالَ رسولُ الله لاَ يُحَرِّمُ مِنَ الرَّضَاعةِ إلاَّ مَا فَتَقَ الأمْعَاءَ في الثَّدْيِ، وكانَ قَبْلَ الفِطَامِ . قال أبو عيسى: هذَا حديثٌ حسنٌ صحيحٌ.

மார்பகத்தின் வழியாக வயிறு நிரம்பும் அளவுக்குப் பால் குடித்தாலே பால்குடி உறவு ஏற்படும். மேலும் பால் குடி மறக்கும் வயதுக்குள் அது இருக்க வேண்டும் எனவும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)

நூல் : திர்மிதி (1072)

நாம் எடுத்துக் காட்டிய திருக்குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் கவனத்தில் வைத்துக் கொண்டு ஸாலிம் தொடர்பான ஹதீஸ்களைப் பாருங்கள்.

ஸாலிம் என்பவர் தாடி உள்ளவர், இளைஞர், ஆண்களின் பருவ வயதை அடைந்தவர், ஆண்கள் அறிந்து கொள்ளும் அனைத்தையும் அறிந்தவர் என்றெல்லாம் கூறப்படுகிறது. மிக மிகக் குறைவாக வைத்துக் கொண்டாலும் சுமார் 18 வயதாவது அவருக்கு இருக்கலாம்.

ஆனால் தேடிப்பார்க்கும் போது அதை விட அதிக வயதுடையவராக இருக்கலாம் என்று அறிந்து கொள்ள முடிகிறது.

3758ـ حدَّثنا سليمانُ بن حربٍ حدَّثنا شُعبة عن عمرِو بنِ مُرَّةَ عن إبراهيمَ عن مسروقٍ قال: ذُكِر عبدُ اللّهِ عند عبدِ اللّهِ بن عمرو فقال: ذاك رجلٌ لا أزالُ أحبُّهُ بعدَ ما سمعت رسولَ اللَّهِ صلى الله عليه وسلّم يقول: استقرِئوا القرآنَ من أربعةٍ: من عبدِ اللَّهِ بن مسعود فبدَأ بهِ، وسالمٍ مولى أبي حُذَيفةَ، وأبيِّ بن كعبٍ، ومُعاذِ بن جبلٍ. قال: لا أدري، بدأ بأبيّ أو بمعاذ.[الحديث 3758ـ أطرافه في: 3760، 3806، 3808، 4999].

குர்ஆனை நான்கு நபர்களிடமிருந்து அறிந்து கொள்ளுங்கள்.

1. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)

2. அபூஹுதைபாவின் அடிமை ஸாலிம் (ரலி)

3. உபை பின் கஅப் (ரலி)

4. முஆத் பின் ஜபல் (ரலி)

ஒட்டு மொத்த நபித் தோழர்களிலேயே தேர்வு செய்யப்பட்ட நால்வரில் ஸாலிம் ஒருவராக இருக்கிறார் என்றால் முதிர்ச்சியான நிலையை அடைந்தவராகத் தான் இருக்க முடியும்.

، وأما سالم فكانمن السابقين الأولين، وقد أشير في هذا الحديث إلى أنه كان عارفاً بالقرآن، وسبق في كتاب الصلاة أنه كان يؤم المهاجرين بقباء لما قدموا من مكة، وشهد سالم بدراً وما بعدها، ويقال إن اسم أبيه معقل، وكان مولى لامرأة من الأنصار فتبناه أبو حذيفة لما تزوجها فنسب إليه، وسيأتي بيان ذلك في الرضاع، واستشهد سالم باليمامة أيضاً.

ஸாலிம் அவர்கள் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். மக்காவில் இருந்து ஹிஜ்ரத் செய்து வந்த மக்களுக்கு இவர் இமாமத் செய்து வந்தார். பத்ருப் போரிலும் இன்ன பிற போர்களிலும் பங்கெடுத்தார் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து வருவதற்கு முன்னால் பல நபித்தோழர்கள் ஹிஜ்ரத் செய்து வந்தனர். அவர்களுக்கு ஸாலிம் தொழுகை நடத்தினார் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வரும் போது இவர் எந்த வயதுடையவராக இருப்பார் என்பதை ஊகம் செய்யலாம்.

எப்படிப் பார்த்தாலும் சரியான இளைஞராக அவர் இருந்திருக்கிறார்.

அத்தகைய இளைஞருக்கு பாலூட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஹ்லா (ரலி) அவர்களுக்குக் கூறுவார்களா?

இரண்டு வயதுக்குள் பாலருந்தினால் தான் பால்குடி உறவுச் சட்டம் ஏற்படும் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள் என்று நாம் கூறுகிறோம். இது ஹதீஸ் அல்ல. கட்டுக்கதை என்று கூறுகிறோம்.

இதைச் சரி என்று வாதிடுவோர் மேலே சொன்ன குர்ஆன் வசனங்களையும், பால்குடிச் சட்டம் தொடர்பாக நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களையும் மறுத்தவர்களாக ஆவார்கள்.

2எப்போது பால் சுரக்கும்?

இளைஞருக்கு ஒரு பெண்ணைப் பாலூட்டச் சொன்னதில் இன்னொரு விஷயமும் உள்ளது. பெண்களுக்கு எல்லாக் காலத்திலும் பால் சுரந்து கொண்டிருக்காது. குழந்தை பெற்றது முதல் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குத் தான் பால் சுரக்கும். அதன் பின்னர் பால் சுரக்காது. மறுபடி குழந்தை பெற்றால் தான் பால் சுரக்கும்.

ஸஹ்லா (ரலி) அவர்களை நோக்கி ஸாலிமுக்கு பாலூட்டு என்று கூறினால் அந்தச் சமயத்தில் அவருக்குக் கைக் குழந்தை இருந்திருக்க வேண்டும். அப்போது தான் பால் சுரக்கும். பால் சுரந்தால் தான் ஸாலிமுக்குப் பாலூட்ட முடியும்.

ஸஹ்லா (ரலி) அவர்களுக்கு அந்தச் சமயத்தில் கைக் குழந்தை இருந்தது என்பதை இவர்கள் நிரூபிக்க வேண்டும். (அந்த நேரத்தில் கைக் குழந்தை ஸஹ்லாவுக்கு இல்லை என்பதை நம்மால் நிரூபிக்க முடியும்)

மேலும் இதை முன்மாதிரியாகக் கொண்டு ஆயிஷா (ரலி) அவர்களும் தம் வீட்டுக்கு வரும் இளைஞர்களிடம் செயல்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆயிஷா (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) மூலம் குழந்தை இல்லை. நபிகள் நாயகத்துக்குப் பின் வேறு திருமணம் செய்ய அவர்களுக்குத் தடை உள்ளதால் அறவே அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பது தெளிவு. இதிலிருந்தே இது இட்டுக் கட்டப்பட்டது என்பதை அறியலாம்.

தம் வீட்டுக்கு எந்த இளைஞராவது வர வேண்டும் என்று விரும்பினால் தமது சகோதரியின் புதல்விகளிடம் அவரை அனுப்பி பாலூட்டச் சொல்வார். இதன் மூலம் பால்குடி உறவு மூலம் பாட்டியாகி விடுவார்கள் என்றும் ஹதீஸ் உள்ளது. (இதைப் பிறகு பார்ப்போம்)

3அன்னியப் பெண்ணுடன் நடக்க வேண்டிய முறை

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 24:30

பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும் மார்க்கத்தில் அன்னியப் பெண்ணின் மார்பில் பால் அருந்துவது ஆபாசம் இல்லையா?

உணர்வைத் தூண்டக் கூடியது அல்லவா?

இதை எப்படி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அனுமதித்திருப்பார்கள்?

இறைவன் வகுத்துத் தந்த ஒழுக்க மாண்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குழி தோண்டிப் புதைத்தார்கள் என்று கூறும் இது ஹதீஸா? இட்டுக்கட்டப்பட்ட பொய்யா?

அந்நிய ஆண்கள் தங்களின் வீட்டுக்குள் வர வேண்டும் என்று விரும்பும் பெண்கள் பால்புகட்டி விட்டால் அதன் பின்னர் பர்தாவைக் கடைப்பிடிக்க வேண்டாமே? தனித்திருக்கவும் செய்யலாமே? இதைக் கற்பிக்கத் தான் அல்லாஹ்வின் தூதர் வந்தார்களா?

மேலும் ஒரு பெண் அன்னிய ஆணுடன் தனிமையில் இருக்கும் போது மாட்டிக் கொள்கிறாள். நான் பால் கொடுத்து இவருக்கு தாயாகிக் கொண்டு இருந்தேன் என்று இந்தக் கட்டுக் கதையின் படி கூற முடியுமா? முடியாதா?

மார்பகத்தில் வாய் வைத்திருக்கும் நிலையில் ஒரு பெண்ணுடன் அந்நிய ஆண் மாட்டிக் கொண்டாலும் அப்போதும் இதே பதிலைச் சொல்லி இருவரும் தப்பித்துக் கொள்ள முடியுமே?

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களையே கேலிக் கூத்தாக்கும் இது போன்ற ஆபாசம் குர்ஆனுக்கும், நபிகள் நாயகம் காட்டிய அறவழிக்கும் மாற்றமாகத் தெரியவில்லையா?

நிர்பந்தமான நிலையில் சில சட்டங்கள் தவிர்க்கப்படுவது இஸ்லாத்தில் சட்ட விதியாக உள்ளது. ஒரு பெண்ணின் மார்பகத்தில் கட்டி போன்றவை இருந்து தக்க பெண் மருத்துவர் இல்லாவிட்டால் ஆண் மருத்துவரிடம் காட்டினால் இதை நிர்பந்தம் என்று மார்க்கம் ஏற்றுக் கொள்ளும்.

ஸாலிமுக்கோ, ஸஹ்லாவுக்கோ அப்படி என்ன நிர்பந்தம் இருந்தது?

ஸாலிம் பச்சிளங் குழந்தையா?

ஸஹ்லாவின் அரவணைப்பு இல்லாமல் வாழ முடியாதா?

குழந்தைப் பருவத்தில் உள்ளவரா?

ஸஹ்லா வீட்டுக்குப் போகாமல் இருக்க வேண்டியது தானே? அல்லது அவர் வரும் போது ஸஹ்லா ஹிஜாபைக் கடைப்பிடிக்க வேண்டியது தானே?

வீடு வாசலோ ஸாலிமுக்கு இல்லாவிட்டால் எத்தனையோ ஏழை நபித்தோழர்கள் பள்ளிவாசலே வீடாகக் கொண்டு தங்கிக் கொண்டது போல் தங்க வேண்டியது தானே?

எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் ஆபாசத்தை நபிகள் நாயகம் போதித்தார்கள் என்ற கருத்து பரவி இஸ்லாம் எக்கேடு கெட்டாலும் உங்கள் முன்னோர் இதைக் கவனிக்கத் தவறியதால் நீங்களும் கவனிக்காமல் இருப்பீர்களா?

இஸ்மாயில் சலபியிடம் ஒரு பெண் இந்தப் பிரச்சினையைக் கொண்டு வந்தால் இந்த ஹதீஸின் படி ஃபத்வா கொடுப்பாரா?

மேலும் சிறு குழந்தையில் இருந்து அவரைத் தூக்கி வளர்த்தார்கள் என்பதால் அவரைப் பிரிய முடியவில்லை என்ற அளவுக்குக் கூட இதில் அவசியம் இல்லை.

ஏனெனில் ஸாலிம் இளைஞராக இருக்கும் போது அன்ஸாரிப் பெண்ணுக்கு அடிமையாக இருந்தார். அப்போது தான் அபூஹுதைபா அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்து வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்கள். மேலே நாம் எடுத்துக் காட்டிய பத்ஹுல் பாரி மேற்கோளில் இருந்தும் இன்ன பிற சான்றுகளில் இருந்தும் இதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் போதனைப் படி தாமும் வாழ்ந்து மற்றவரையும் வாழச் செய்யவே தூதராக அனுப்பப்பட்டார்கள். ஒழுக்கக் கேடுகளுக்கு பாதை வகுத்துக் கொடுப்பதற்காக தூதராக அனுப்பப்படவில்லை.

விபச்சாரத்தைப் பொருத்தவரை அதைச் செய்யக் கூடாது என்று மட்டும் தடை இல்லை. அதன் பக்கம் நெருங்கவே கூடாது என்பதும் கட்டளை.

வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது,நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந் தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப் படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

அல்குர்ஆன் 6.151

இளைஞன் ஒருவன் நடுத்தர வயதுப் பெண்ணின் மார்பகத்தில் வாய் வைப்பது விபச்சாரத்தின் பக்கம் நெருங்குவதா இல்லையா?

மேலும் இளைஞன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பால் குடித்தால் அதன் பின்னர் ஆசை நீங்கி தாய் பிள்ளையாகி விடுவார்கள் என்பதும் மடத்தனமானது. நடைமுறை உண்மைக்கு மாற்றமானது.

கணவன் தனது மனைவியிடம் பால் அருந்துகிறான். அப்போது மனைவி உடனே தாயாகி விடுவாள் என்று ஸலபிகள் கூறுவார்களா?

அதன் பின் மனைவியின் மீது ஆசையே ஏற்படாது என்று இவர்கள் கூறுவார்களா?

அல்லது அத்துடன் தம்பதியர் பிரிந்து விட வேண்டும் என்று கூறுவார்களா?

இந்த ஹதீஸை ஏற்றுக் கொண்டால் இப்படி ஃத்வா கொடுக்க வேண்டியது தானே?

இவரும் பால் குடிப்புகழ் முஜீபும் இதற்கு இதற்கு தருகின்ற விளக்கத்தையும் நாம் அலசிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ஸாலிமுக்கு மட்டும் உரியது

உங்கள் மனைவிமார்கள் விஷயத்தில் இப்படி நடப்பீர்களா என்று யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதற்காக ஒரு தடுப்புச் சுவரை எழுப்பி விட்டுத் தான் இது சரியான ஹதீஸ் என்று வாதிடுகிறார்கள்.

இது சரியான ஹதீஸ் தான். ஆனால் இது ஸாலிமுக்கு மட்டும் உரியது. மற்றவர்கள் கடைப்பிடிக்கக் கூடாது என்பது தான் இவர்களின் முதலாவது சமாளிப்பு.

இது தங்களை நோக்கி கேள்வி வரக் கூடாது என்பதற்காக இவர்கள் கண்டு பிடித்த தற்காப்பு ஆயுதம் தானே தவிர இதில் கடுகின் முனையளவு கூட இல்லை.

ஆபாசத்துக்கு விதிவிலக்கு உண்டா?

இஸ்லாத்தில் பொதுவான சட்டத்தில் இருந்து சிலருக்கு மட்டும் விதிவிலக்குகள் உள்ளன என்பது நமக்கும் தெரியும்.

அந்த விதிவிலக்கு வணக்க வழிபாடுகள் தொடர்பானதாகத் தான் இருக்கும். ஆபாசமான அருவருக்கத் தக்கவைகளில் நிச்சயம் இருக்காது.

ஒருவர் விபச்சாரம் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்தார்கள் (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். உதாரணத்துக்குச் சொல்கிறோம்.) என்று ஒரு நூலில் எழுதப்பட்டிருந்தால் அதைப் பொய் என்று சொல்ல வேண்டுமா? அவருக்கு மட்டும் அளித்த விதிவிலக்கு என்போமா? பொய் என்றே கூறுவோம்.

ஏனெனில் அல்லாஹ் ஆபாசமானதையும் அருவருக்கத் தக்கதையும் ஏவமாட்டான். இதில் விதிவிலக்கையும் தரமாட்டான்.

அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான் என்று கூறுகின்றனர். அல்லாஹ் வெட்கக் கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா? என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 7.28,

நீதி, நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

அல்குர்ஆன் 16.90

கொலை, இணை கற்பித்தல், விபச்சாரம், ஆபாசம் போன்றவைகளை அல்லாஹ்வின் தூதர் சிலருக்கு அனுமதித்தார்கள் என்று கூறப்பட்டால் அது எந்த நூலில் கூறப்பட்டிருந்தாலும் அது கட்டுக்கதையே. ஹதீஸ் அல்ல.

எனவே ஆபாசமான செயலாக இருப்பதால் இதில் விதி விலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஊகத்தின் அடிப்படையில் விதிவிலக்கு இல்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைகளில் சுமார் சரி பாதியை எடுத்துக் கொண்டால் அவை தனி நபர்களிடம் சொல்லியதாகத் தான் அமைந்திருக்கும். அது அவருக்கு மட்டும் உரியது என்று இஸ்லாத்தில் சரி பாதியை விட்டு விட முடியுமா?

இது உனக்கு மட்டுமே. வேறு எவருக்கும் இல்லை என்று சட்டம் வகுக்கும் அதிகாரம் படைத்த இறைவன் கூற வேண்டும். அல்லது அவனது தூதர் கூற வேண்டும்.

உதாரணத்துக்குப் பின் வரும் ஹதீஸை எடுத்துக் காட்டலாம்.

(953) ـ حدَّثنا ادمُ قال: حدَّثَنا زُبَيدٌ قال: سمعتُ الشَّعبيِّ عنِ البَراء بنِ عازبٍ قال: قال النبيُّ صلى الله عليه وسلّم: إِنَّ أوَّلَ ما نبدَأُ في يومِنا هذا أن نُصلِّيَ ثمَّ نرجِعَ فنَنْحرَ. فمن فعلَ ذلكَ فقد أصابَ سُنَّتَنا، وَمَن نَحرَ قبلَ الصلاةِ فإِنِّما هوَ لحمٌ قدَّمَهُ لأهلهِ، ليسَ منَ النُّسكِ في شيء. فقال رجلٌ منَ الأنصارِ يقالُ له أبو بُرْدةَ بنُ نِيارٍ: يا رسولَ اللهِ ذَبحتُ وعندي جَذَعةٌ خيرٌ مِن مُسِنَّةٍ. فقال: اجعلهُ مكانَهُ ولن تُوفيَ ـ أو تَجزِي ـ عن أحدٍ بعدَك.

இன்று (பெருநாளில்) நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் தொழுகை. பிறகு நம் வீட்டுக்குச் சென்று குர்பானி கொடுக்க வேண்டும். யார் இப்படிச் செய்கிறாரோ அவர் நமது வழியைக் கடைப்பிடித்தார். தொழுகைக்கு முன்னர் யார் அறுத்து விட்டாரோ அவர் தனது குடும்பத்துக்காக அவர் அறுத்த இறைச்சியாகும். இது கிரியைகளில் அடங்காது என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். அப்போது அபூபுர்தா எனும் தோழர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே, நான் முன்பே அறுத்து விட்டேன். (என்னிடம் ஒரு வருட ஆட்டுக்குட்டி இல்லை). அதைவிடச் சிறந்ததாக ஆறுமாத குட்டி உள்ளது. (அதை அறுக்கட்டுமா) என்று கேட்டார். ஏற்கனவே அறுத்ததற்குப் பதிலாக இதை அறுப்பீராக. உமக்குப் பின் வேறு எவருக்கும் இது இல்லை என்று கூறினார்கள்.

புகாரி 5560

இது போல் கூறப்பட்டால் தான் அது தனி நபருக்கு உரிய சலுகை எனக் கூற வேண்டும். இவ்வாறு கூறுவோர் இதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும்.

ஆபாசத்திலும் விதிவிலக்கு உண்டு என்பதற்கும் ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

ஒரு வகையில் இவர்களும் அதைச் செயல்படுத்த மறுத்து தங்களையும் தங்கள் குடும்பத்துப் பெண்களையும் காப்பாற்றிக் கொள்ள இந்த ஹதீஸை மறுக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் நபியின் மீது போட்ட பழி அப்படியே உள்ளது.

நாமே நபியின் மீதும் நபித்தோழியர் மீதும் போட்ட பழியைத் துடைத்து விட்டு மறுக்கிறோம். இது தான் வேறுபாடு.

மாற்றப்பட்டது என்றொரு சமாளிப்பு

நபிகள் நாயகம் இப்படிக் கூறியது உண்மை தான். ஆனால் பின்னர் இது மாற்றப்பட்டு விட்டது என்றும் சிலர் சமாளிக்கின்றனர்.

முன்னர் இது நடைமுறையில் இருந்து இப்போது மாற்றப்பட்டு விட்டது என்று இவர்கள் கூறுவதால் இவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள்.

ஆபாசமான அருவருக்கத்தக்க் ஒன்றை அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காலகட்டத்தில் ஏவியுள்ளார்கள் என்று ஆகுமே? அது பரவாயில்லையா?

அதாவது அப்பன் பாட்டன்மார்கள் இது சரியானது என்று சொல்லிக் கொடுத்து விட்டதால் நபிகள் நாயகம் அவர்களின் அப்பழுக்கில்லாத நற்குணத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இப்படிக் கூறுபவர்கள் இதற்கும் ஆதாரத்தைக் காட்ட வேண்டும். மாற்றப்பட்டது என்றால் அதற்கான ஆதாரத்தைக் வஹீ இறங்கிய காலத்தில் வாழ்ந்த நபித்தோழரின் சான்றை எடுத்துக் காட்ட வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் மரணித்த பிறகும் இதை நடைமுறைப்படுத்தியதாக முஸ்லிமில் உள்ள ஹதீஸை குறிப்பிட்டுள்ளோம். (இதுவும் பொய் தான். ஆனால் சலபிகள் வாதப்படி இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்)

இந்த ஹதீஸை அறிவிக்கும் ஆயிஷா (ரலி) ஸாலிமுக்கு மட்டும் உள்ளதை எப்படி தமக்காக நடைமுறைப்படுத்தினார்கள்?

மாற்றப்பட்டிருந்தால் நபிகள் நாயகம் காலத்துக்குப் பின் ஆயிஷா (ரலி) எப்படி செயல்படுத்தினார்கள்?

மேலும் முன்னர் இது மாதிரி அனுமதி இருந்து பின்னர் மாற்றப்பட்டிருக்க முடியாது என்பதை இவர்கள் ஏற்றிப் போற்றும் ஹதீஸ்களே தெளிவுபடுத்தி விடுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஹ்லாவிடம் மேற்கண்டவாறு கூறியவுடன் அந்தப் பெண்மணி அவர் தாடி உள்ளவராக இருக்கிறாரே, பெரியவராக இருக்கிறாரே? நான் எப்படி பால் கொடுப்பது? என்று கேட்டதாக இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாலூட்டுதல் தொடர்பான சட்டம் - அதாவது இரண்டு வயது வரை தான் பால்குடி உறவு என்ற சட்டம் நடைமுறையில் இருந்தால் தான் இவ்வாறு அவர்கள் கேட்டிருக்க முடியும். எனவே இது முன்னர் நடைமுறையில் இருந்து மாற்றப்பட்டது எனக் கூறுவது தங்கள் குடும்பத்துப் பெண்களைக் காப்பாற்றிக் கொள்ளவே என்பதில் ஐயம் இல்லை.

(3560) ـ حدّثني عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ: حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي. حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ أَنَّهُ قَالَ: أَخْبَرَنِي أَبُو عُبَيْدَةَ بْنُ عَبْدِ اللّهِ بْنِ زَمْعَةَ؛ أَنَّ أُمَّهُ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ أَخْبَرَتْهُ؛ أَنَّ أُمَّهَا أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ كَانَتْ تَقُولُ: أَبَى سَائِرُ أَزْوَاجِ النَّبِيِّ أَنْ يُدْخِلْنَ عَلَيْهِنَّ أَحَداً بِتِلْكَ الرَّضَاعَةِ. وَقُلْنَ لِعَائِشَةَ: وَاللّهِ! مَا نَرَى هَذَا إِلاَّ رُخْصَةً أَرْخَصَهَا رَسُولُ اللّهِ لِسَالِمٍ خَاصَّةً. فَمَا هُوَ بِدَاخِلٍ عَلَيْنَا أَحَدٌ بِهذِهِ الرَّضَاعَةِ، وَلاَ رَائِينَا.

இது சம்மந்தமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சில மனைவிகள் ஸாலிமுக்கு மட்டும் உரிய சலுகையாகவே நாங்கள் கருதுகிறோம் என்று கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. அதாவது தமது ஊகமாகவே அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். ஆனால் ஹதீஸை நேரில் அறிவிக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் அவர்களின் வாதத்தை மறுத்து நடைமுறைப்படுத்தினார்கள்.

(25931) ـ حدثنا عبد الله، حدثني أبي، حدثنا يعقوب قال: حدثنا ابن أخي ابن شهاب، عن عمه قال: أخبرني عروة بن الزبير، عن عائشة قالت: أتت سهلةُ بنت سهيل بن عمرو وكانت تحت أبي حذيفة بن عتبة ـ رسول الله صلى الله عليه وسلّم، فقالت: إن سالماً مولى أبي حذيفة يدخل علينا وإنا فضل وإنا كنا نراه ولداً، وكان أبو حذيفة تبناه كما تبنى رسول الله صلى الله عليه وسلّم زيداً، فأنزل الله: {ادْعُوهُمْ لآبائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ الله} (الأحزاب: 5) فأمرها رسول الله صلى الله عليه وسلّم عند ذلك أن ترضع سالماً، فأرضعته خمس رضعات وكان بمنزلة ولدها من الرضاعة، فبذلك كانت عائشة تأمر أخواتها وبنات أخواتها أن يرضعن من أحبت عائشة أن يراها ويدخل عليها، وإن كان كبيراً خمس رضعات، ثم يدخل عليها، وأبت أم سلمة وسائر أزواج النبيّ صلى الله عليه وسلّم أن يدخلن عليهن بتلك الرضاعة أحداً من الناس حتى يرضع في المهد، وقلن لعائشة: والله ما ندري لعلها كانت رخصة من رسول الله صلى الله عليه وسلّم لسالم من دون الناس.

(2065) ـ حدثنا أَحْمَدُ بنُ صَالحٍ أخبرنا عَنْبَسَةُ حَدَّثَني يُونُسُ عن ابنِ شِهَابٍ حَدَّثَني عُرْوَةُ بنُ الزُّبَيْرِ عن عَائِشَةَ زَوْجِ النَّبيِّ صلى الله عليه وسلّم وَ أُمِّ سَلَمَةَ ،: أَنَّ أَبَا حُذَيْفَةَ بنَ عُتْبَةَ بنِ رَبِيعَةَ بنِ عَبْدِ شَمْسٍ كَانَ تَبَنَّى سَالِماً وَأَنْكَحَهُ ابْنَةَ أَخِيهِ هِنْدَ بِنْتَ الْوَلِيدِ بنِ عُتْبَةَ بنِ رَبِيعَةَ، وَهُوَ مَوْلًى لاِمْرَأَةٍ مِنَ الأَنْصَارِ، كَمَا تَبَنَّى رَسُولُ الله صلى الله عليه وسلّم زَيْداً، وكانَ مَنْ تَبَنَّى رَجُلاً في الْجَاهِليَّةِ دَعَاهُ النَّاسُ إِلَيْهِ وَرُرِّثَ مِيرَاثَهُ حَتَّى أَنْزَلَ الله عَزَّوَجلَّ في ذلِكَ {أُدْعُوهُمْ لآبَائِهِمْ ـ إِلَى قَوْلِهِ ـ فإِخْوَانُكُم في الدِّينِ وَمَوَالِيكُمْ} فَرُدُّوا إلَى آبَائِهِمْ، فَمَنْ لم يَعْلَمْ لَهُ أَبٌ كَانَ مَوْلًى وَأَخاً في الدِّينِ، فَجَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلِ بنِ عَمْرٍو الْقُرَشِيِّ ثُمَّ الْعَامِرِيِّ وَهِيَ امْرَأَةُ أبي حُذَيْفَةَ، فقالَتْ: يَارَسُولَ الله إِنَّا كُنَّا نَرَى سَالِماً وَلَداً فَكَانَ يَأْوِي مَعِي وَمَعَ أبي حُذَيْفَةَ في بَيْتٍ وَاحِدٍ وَيَرَانِي فُضْلاً، وَقَدْ أَنْزَلَ الله فِيهِمْ ما قَدْ عَلِمْتَ فَكَيْفَ تَرَى فِيهِ؟ فَقال لَها النَّبيُّ صلى الله عليه وسلّم: أَرْضِعِيهِ، فأَرْضَعَتْهُ خَمْسَ رَضَعَاتٍ، فَكَان بِمَنْزِلَةِ وَلَدِهَا مِنَ الرَّضَاعَةِ، فَبِذَلِكَ كَانَتْ عَائِشَةُ تَأْمُرُ بَنَاتِ أَخَوَاتِهَا وَبَنَاتِ إِخْوَانِهَا أَنْ يُرْضِعْنَ مَنْ أَحَبَّتْ عَائِشَةُ أَنْ يَرَاهَا وَيَدْخُلَ عَلَيْهَا وَإِنْ كان كَبِيراً خَمْسَ رَضَعَاتٍ ثُمَّ يَدْخُلُ عَلَيْهَا. وَأَبَتْ أُمُّ سَلَمَةَ وَسَائِرُ أَ

தன் வீட்டுக்கு வர விரும்பும் அந்நிய இளைஞர்களை தனது சகோதரியின் புதல்விகள் வீட்டுக்கு அனுப்பி பால் குடித்து வரச் சொல்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

அபூதாவூத். அஹ்மத்

அதாவது இச்செய்தியை அறிவிக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் இதை நடைமுறைப்படுத்தி உள்ளனர் என்று மேற்கண்ட ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே அவை அனைத்துமே பொய் என்று கூறிவிட்டால் பிரச்சனை இல்லை. சரி என்று வாதிட்டால் இது மாற்றப்படவும் இல்லை; ஸாலிமுக்கு மட்டும் உரியதும் அல்ல; அனைவருக்கும் உரியது என்று தான் அவர்கள் கூற வேண்டும்.

ஆயிஷா (ரலி) தம் ச்கோதரிகளின் புதல்விகளிடம் இளைஞர்க்ளை அனுப்பி பால் கொடுக்கச் சொல்வார்கள் என்பது அதை விட் ஆபாசமாக உள்ளது. அந்தச் ச்கோதரியின் கணவன்மார்கள் இதை அனுமதிப்பார்களா என்பதைப் பொருத்த விஷயத்தில் ஆயிஷா (ரலி) எப்படி முடிவு எடுத்திருக்க முடியும்? என்ற் இன்னொரு புதுக் கேள்விக்கும் இவர்கள் பதில் சொல்ல வேண்டும்

எனவே ஸாலிமுக்கு மட்டும் உரியது என்று அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

கறந்து கொடுத்ததாக கதை விடுதல்

பச்சைப் பொய் என்று பளிச்செனத் தெரியும் ஒரு ஹதீஸை நியாயப்படுத்த முனைந்து இவர்கள் கண்டுபிடித்த மற்றொரு கயிறு திரித்தல் இது தான்.

இளைஞரான ஸாலிமுக்குப் பாலூட்டு என்பதன் அர்த்தம் வேறாகும். அதாவது பாலைக் கறந்து குவளையில் பிடித்து அவரிடம் கொடு என்பது தான் இதன் கருத்து என்கிறார்கள். அதாவது இதைச் சரி என்று கூறும் இவர்கள் நடைமுறைப் படுத்திட தயாராக இல்லை. எனவே தான் இப்படியெல்லாம் உளறுகிறார்கள்.

மேற்கண்ட ஸாலிம் தொடர்பான ஹதீஸில் அர்ளியிஹி ارضعيه என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் மார்பில் வாய் வைத்து குடிப்பது தான். கறந்து குடிப்பது அல்ல என்பதால் இவர்களின் விளக்கம் அடிபட்டுப் போகிறது.

(இதை முஜீப் விவாதத்தில் மேலும் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.)

பால் கொடுக்கச் சொன்ன போது இவர் இளைஞராகவும் தாடி உள்ளவராகவும் இருக்கிறாரே என்று ஸஹ்லா கேட்டதாக அந்த ஹதீஸ் கூறுகிறது. கறந்து கொடுப்பது தான் அர்த்தம் என்றால் இக்கேள்விக்கு இடமில்லை.

கறந்து கொடுக்கும் போது இளைஞராக இருந்தால் என்ன? சிறுவராக இருந்தால் என்ன? இவர் இவ்வாறு கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) புன்னகை செய்ததாகவும் கூறப்படுகிறது. கறந்து கொடுப்பது என்றால் இவர் கேட்டவுடன் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு சிரிப்பார்களா?

மார்பகத்தில் வாய் வைத்துக் குடித்தாலே பால்குடி உறவு ஏற்படும் என்ற திர்மிதீ ஹதீஸை முன்னர் கூறியுள்ளோம். அதற்கு மாற்றமாகவும் இவ்விளக்கம் உள்ளது.

இந்த ஹதீஸை அறிவிக்கும் இப்னு அபீமுலைக்கா என்பவர் ஒரு வருடம் வரை இதன் விபரீதத்திற்குப் பயந்து மக்களுக்கு அறிவிக்காமல் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

கறந்து கொடுப்பது இதன் பொருள் என்றால் அதற்காக ஏன் பயப்பட வேண்டும்?

கறந்து கொடுத்தார்கள் என்று பொருள் கொண்டாலும் அதுவும் குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமாகவுள்ளதே? அதற்கு என்ன பதில்?

இரண்டு ஆண்டுகளுக்குள் பால் குடித்தால் தான் பால் குடி உறவு ஏற்படும் என்பது இப்போதும் மறுக்கப்படுவதாகத் தானே அமையும்?

கறந்து கொடுத்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்போதும் இவர்கள் தப்பிக்க முடியாது. இவர்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறார்களோ அதை இப்போதும் சந்தித்தே ஆக வேண்டும்.

ஒரு அன்னியப் பெண்ணுடன் ஒரு இளைஞன் தனித்திருக்கும் போது மாட்டிக் கொள்கிறான். அவளுக்குக் கைக் குழந்தை இல்லாததால் அவளுக்குப் பால் சுரக்கவில்லை. நான் பால் கொடுத்து என் மகனாக்க முயற்சி செய்கிறேன் என்று கூறினால் மாட்டிக் கொள்வாள். உனக்கு பாலே சுரக்கவில்லை, நீ எப்படி பால் கொடுப்பாய்? என்று கேட்கும் போது அவளால் பதில் சொல்ல முடியாது.

ஆனால் இந்த விளக்கம் அவளுக்குத் தெரிந்தால் எனக்குப் பால் சுரக்கும் காலத்தில் இவருக்குக் கறந்து கொடுத்து விட்டேன் என்று கூறுவதற்கு வழியமைத்துக் கொடுக்கிறார்கள்.

இதை நியாயப்படுத்துவோரிடம் நாம் கேட்கிறோம். உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் மனைவியுடன் தனித்திருக்க விரும்பும் இளைஞர்களுக்கு கறந்து பால் கொடுத்து தாயாக்க நீங்கள் உடன்படுவீர்களா? கறந்து கொடுப்பது தான் உங்களுக்குப் பிரச்சினை இல்லையே!

நீங்கள் தான் செய்ய மாட்டீர்கள்! ஒரு இளைஞன் வந்து என் பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் அடிக்கடி சந்திக்க வேண்டியுள்ளது. அவளது பாலை நான் கறந்து குடித்து விட்டேன். இனி மேல் நான் சர்வ சாதாரணமாக அவள் வீட்டுக்குப் போகலாம் தானே என்று ஃத்வா கேட்டால் அதற்கு உங்கள் பதில் என்ன?

இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு கறந்து பால் கொடுத்தால் அப்போது கூட பால் குடி உறவு ஏற்படாது என்று ஹதீஸ்கள் கூறும் போது அப்படிக் கூறுவது உச்சகட்ட அறியாமையாக உங்களுக்குத் தோன்றவில்லையா?

பெற்ற பிள்ளைகள் ஸாலிம் வயதை அடைந்து விட்டால் தாயை விட்டு விலகி விடும் போது அந்தக் கட்டுக் கதையை நியாயப்படுத்துவது தான் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளும் முறையா?

இஸ்மாயில் சலபியிடமும், அவருக்கு ஹதீஸ் கலையைத் தப்பும் தவறுமாகச் சொல்லிக் கொடுக்கும் டாக்டர்களிடமும் நாம் கேட்பது இது தான்.

இந்த ஹதீஸை சரியான ஹதீஸ் என்கிறீர்களா? இல்லையா?

ஏற்கவில்லை என்று நீங்கள் கூறினால் நீங்களும் ஹதீஸ்களை மறுத்து நுபுவ்வத்தை மறுத்த குற்றத்தைச் செய்தவர்களாவீர்கள்.

ஏற்கிறீர்கள் என்றால் இதை ஏற்றதன் மூலம் குர்ஆனை மறுக்கிறீர்களே! நுபுவ்வத்தை மறுப்பதை விட இறைவனை மறுப்பது பயங்கரமான குற்றமாகி விடுமே!

மேலும் பாலூட்டும் சட்டம் தொடர்பான ஏராளமான ஹதீஸ்களை மறுத்து நுபுவ்வத்தையும் நீங்கள் மறுத்தவர்களாவீர்களே!

அதாவது இதை ஏற்க மறுத்தால் ஹதீஸை மறுத்தவர்களாவீர்கள். ஏற்றுக் கொண்டால் ஏராளமான ஹதீஸ்களையும் மறுத்து குர்ஆனையும் மறுத்தவர்களாவீர்கள்.

உங்கள் வாதம் (அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். அல்குர்ஆனில் அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள் என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத் தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் நபி(ஸல்) அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்களாகும்.

இந்த அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஏற்க மறுப்பது நபித்துவத்தின் ஒருபகுதியை மறுப்பது போன்ற முக்கிய பிரச்சினையாக நோக்கப்பட வேண்டிய அம்சமாகும். இந்த அடிப்படையில் நாம் அலசப் போகும் அம்சம் அவசியமானதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும் என்பதை வாசகர;கள் முதலில் கவனத்திற் கொள்ள வேண்டும்.) இப்போது என்னவாகும்?

இஸ்மாயில் சலபி அவர்களே, உங்கள் ஊழல், அராஜகம், கொள்கையில் சமரசம், வழிகெட்டவர்களுடன் உறவு. தீமைக்கு ஆதரவு ஆகிய்வற்றுக்குத் தான் பதில் சொல்ல மாட்டேன் என்று அறிவித்து விட்டீர்கள். மார்க்க விஷய்த்துக்கு பதில் தருவேன் என்று உறுதி அளித்து உள்ளீர்கள். அதன்படி நான் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

இது போன்ற ஹதீஸ்களை மறுப்பது நுபுவ்வத்தையே மறுப்பதாகும் என்ற அளவுக்கு நீங்கள் கடுமையாக இருப்பதால் இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்த உங்களிடம் நிச்சயம் பதில் இருக்கும்.

மேலும் மாபெரும் மேதைகளான பல உலமாக்களுடன் கலந்துரையாடல் நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர்கள் அனைவரையும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்.

பால்குடி புகழ் முஜீபையும் அவரது ஜால்ரா அப்துல் ரஹ்மானையும் அழைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பதிலைத் தாமதமில்லாமல் பலவேஷத்தில் வெளியிட்டால் இந்த ஹதீஸ் பற்றி நாம் இருவரும் ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.

அதன் பின்னர் அடுத்தடுத்த ஹதீஸ்களை நான் எடுத்து வைக்கலாம்.

இந்தக் கேள்விகள் யாவும் இஸ்மாயீல் சலஃபிக்கு மட்டும் அல்ல. பல்வேசத்துக்கும் சேர்த்துத் தான்.

இந்த ஹதீஸ் சரி என்பது உங்கள் கருத்தாக இருந்தால் நாங்கள் நடைமுறைப்படுத்த தயார் என்று இவர்களுடன் சேர்ந்து பலவேசமும் அறிவிக்கட்டும்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்பது ஹதீஸ் கலையில் உள்ளது என்பதைக் கடைசியாக நான் விளக்குவேன். இன்ஷா அல்லாஹ்.

இவன்,

பீ.ஜைனுல் ஆபிதீன்

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் இலக்கணம் என்ன2

தொடர் 2

(இஸ்மாயில் சலஃபியின் நடவடிக்கைகளை விமர்சிக்காமல் அவரது ஆய்வை மட்டும் மறு ஆய்வு செய்யும் தொடர் 2)

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் மறுப்பதாகவும் அதன் காரணமாக நாம் நுபுவ்வத்தை மறுப்பதாகவும் இஸ்மாயீல் ஸலஃபி குறிப்பிட்டிருந்தார்.

அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். அல்குர்ஆனில் அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள் என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத் தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் நபி(ஸல்) அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்களாகும்.

இந்த அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஏற்க மறுப்பது நபித்துவத்தின் ஒருபகுதியை மறுப்பது போன்ற முக்கிய பிரச்சினையாக நோக்கப்பட வேண்டிய அம்சமாகும். இந்த அடிப்படையில் நாம் அலசப் போகும் அம்சம் அவசியமானதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும் என்பதை வாசகர;கள் முதலில் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இஸ்மாயீல் ஸலஃபி அவர்களும் அவரைச் சேர்ந்தவர்களும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்று கருதும் சில ஹதீஸ்கள் திருக்குர்ஆனுக்கு முரணாக இருப்பதால் அவை ஹதீஸ்கள் அல்ல; கட்டுக் கதை என்று நாம் கூறுகிறோம். அத்தகைய ஹதீஸ்கள் சிலவற்றை நமது திருக்குர்ஆன் தமிழாக்கத்திலும் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

அவற்றில் ஸிஹ்ர் பற்றிய ஹதீஸ் தவிர வேறு எதனையும் இஸ்மாயீல் ஸலஃபி கண்டு கொள்ளவில்லை. ஹதீஸ் கலையின் எந்த விதியின் படி நமது நிலைபாடு தவறு என்பதையும் அவர் விளக்கவில்லை. எனவே ஸிஹ்ர் பற்றி அவர் அளித்துள்ள விளக்கத்தை ஆய்வு செய்வதற்கு முன்னால் அவர் பதில் சொல்லாமல் இருட்டடிப்பு செய்த ஹதீஸ்களில் ஒரு ஹதீஸை (அந்நிய இளைஞருக்குப் பாலூட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக வரும் ஹதீஸ்) சென்ற தொடரில் நாம் பார்த்தோம்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களுக்கு உதாரணமாக பின் வரும் ஹதீஸையும் நாம் நமது தமிழாக்கத்தில் சுட்டிக்காட்டி பின்வருமாறு விளக்கி இருந்தோம்.

இது போல் சுலைமான் நபியைப் பற்றி புகாரி உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்ற ஒரு செய்தியையும் உதாரணமாகக் கூறலாம்.

இன்று இரவு நான் நூறு பெண்களுடன் உடலுறவு கொள்வேன். அவர்களில் ஒவ்வொருத்தியும் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்'' என்று சுலைமான் நபி கூறினார். அப்போது வானவர் இன்ஷா அல்லாஹ் கூறுங்கள்'' என்று கூறினார். ஆனால் சுலைமான் நபி கூறவில்லை. மறந்து விட்டார். அவர் கூறியவாறு நூறு பெண்களுடன் உடலுறவு கெண்டார். அவர்களில் ஒருத்தியும் குழந்தை பெறவில்லை. ஒரே ஒருத்தி மட்டும் பாதி மனிதனைப் (குறைப் பிரசவம்) பெற்றெடுத்தார்.

இந்தச் செய்தி புகாரி 5242வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுலைமான் நபிக்கு நூறு மனைவிகளோ, நூறு அடிமைப் பெண்களோ இருந்ததாக வைத்துக் கொண்டாலும் ஒரு இரவில் அனைவருடனும் உடலுறவு கொள்வது சாத்தியமற்றதாகும். இது சாத்தியமற்றதா அல்லவா என்ற சர்ச்சையைத் தவிர்த்து விட்டு மார்க்க அடிப்படையில் மட்டும் இதனை ஆய்வு செய்வோம்.

இறைத் தூதராக இருந்தாலும் எந்த மனிதரும் அறிந்து கொள்ள முடியாத ஐந்து விஷயங்கள் உள்ளன.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன். (திருக்குர்ஆன் 31:34)

தனது நூறு மனைவிகளும் கருவுறுவார்கள் என்று சுலைமான் நபியவர்கள் நிச்சயம் கூறியிருக்க முடியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயத்தில் எந்த இறைத் தூதரும் மூக்கை நுழைக்க மாட்டார்கள்.

நூறு மனைவிகளும் கருவுறுவார்கள் என்று இறைவன் சுலைமான் நபிக்கு அறிவித்துக் கொடுத்திருக்கலாம் அல்லவா?'' என்று சிலர் விளக்கம் கூறுவது கேலிக் கூத்தாகும். இறைவன் அறிவித்துக் கொடுத்திருந்தால் நூறு மனைவிகளும் நூறு ஆண் குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு நடக்காததால் சுலைமான் நபி தன்னிச்சையாகத் தான் இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்ற கருத்தைத் தான் மேற்கண்ட ஹதீஸிலிருந்து பெற முடியும்.

இறைவன் அறிவித்துக் கொடுக்காத இந்த விஷயம் குறித்து எந்த நபியும் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள்.

ஜக்கரியா நபியின் மனைவியின் கருவறையில் குழந்தை உருவான பின்னரும் கூட அதை ஜக்கரியா நபியால் அறிந்து கொள்ள முடியவில்லை என்று (திருக்குர்ஆன் 19:7, 8, 9, 10) கூறும் போது நூறு மனைவியரும் குழந்தை பெற்றெடுப்பார்கள் என்று சுலைமான் நபி கூறியிருக்க முடியாது. அவ்வாறு கூற அவர்களுக்கு அதிகாரம் கிடையாது.

நூறு மனைவிகளும் குழந்தை பெறுவார்கள் என்பதை மட்டும் சுலைமான் நபி கூறவில்லை. ஆண் குழந்தையைத் தான் பெற்றெடுப்பார்கள் என்று அடித்துக் கூறுகிறார்கள். அந்த நூறு பேரும் வளர்ந்து பெரியவர்களாகி நல்லடியார்களாக வாழ்ந்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் என்றெல்லாம் எதிர் காலம் பற்றி பல விஷயங்களை அவர்கள் கூறியதாக அந்த ஹதீஸ் கூறுகிறது.

அவர்கள் கூறியவாறு எதுவுமே நடக்காததால் சுயமாகத் தான் அவர்கள் இவ்வாறு கூறியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படியெல்லாம் சுலைமான் நபியும் கூற மாட்டார்கள். சுலைமான் நபி கூறியதாக நபிகள் நாயகமும் கூறியிருக்க மாட்டார்கள்.

மேலும் இன்ஷா அல்லாஹ்' என்று கூறுமாறு வானவர் சுட்டிக் காட்டிய பிறகும் அவர்கள் கூறவில்லை என்பது ஏற்கும்படி இல்லை.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட இன்ஷா அல்லாஹ் கூற மறந்து விட்டால் யாராவது சுட்டிக் காட்டினால் உடனே திருத்திக் கொள்கிறோம். ஒரு வானவர் நினைவூட்டிய பின்னரும் சுலைமான் நபி அதைச் செய்யவில்லை என்பது அவர்களின் தகுதிக்கு ஏற்புடையதாக இல்லை.

எனவே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தகர்க்கும் வகையில் இது அமைந்திருப்பதால் இதை அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களாக இருந்த போதும் இதை நாம் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும். இதை உண்மை என நம்பினால் குர்ஆனின் பல வசனங்களை நாம் மறுத்தவர்களாகி விடுவோம்.

இது போக அந்த அறிவிப்பில் காணப்படும் முரண்பாடுகள் இந்த முடிவை மேலும் உறுதிப்படுத்துகிறது.

நூறு பெண்களுடன் இன்றிரவு உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி 5242

எழுபது பெண்களுடன் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி 3424

தொண்ணூறு பெண்களுடன் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி 6639, 6720

அறுபது மனைவியரிடம் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி 7469

ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன.

இந்த அனைத்து ஹதீஸ்களும் அபூஹுரைரா (ரலி) வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளன. 60, 70, 90, 100 என்று முரண்பட்ட எண்ணிக்கை இதில் சந்தேகத்தை அதிகமாக்குகிறது.

இந்தச் செய்திகளை உண்மை என்று நம்பினால் சுலைமான் நபி அவர்களின் தகுதிக்கு அது குறைவை ஏற்படுத்தும். திருக் குர்ஆனின் பல வசனங்களுடனும், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுடனும் மோதும் என்பதைக் கவனத்தில் கொண்டு நமக்குத் தெரியாத ஏதோ ஒரு குறை இதில் இருக்கலாம் என்று கருதி இதை நிராகரித்து விட வேண்டும்.

நமது தமிழாக்கத்தில் மேற்கண்டவாறு எழுதி மேற்கண்ட ஹதீஸையும் நிராகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தோம். இந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்று நம்பும் இஸ்மாயீல் ஸலஃபி இதில் நாம் எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்க வேண்டும். அவர் பதில் சொல்லாததால் அதை விரிவாக விளக்குகிறோம்.

இந்தச் சம்பவம் புஹாரியில் பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(தமிழாக்கம் சரியில்லை என்று இஸ்மாயீல் ஸலஃபி கூறி விடக் கூடாது என்பதற்காக ரஹ்மத் ட்ரஸ்ட் தமிழாக்கத்தையே இது தொடர்பான அனைத்து ஹதீஸ்களிலும் பயன்படுத்தியுள்ளோம்)

2819ـ وقال الليث: حدثني جعفر بن ربيعة عن عبد الرحمن بن هرمز قال: سمعت أبا هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلّم قال: قال سليمان بن داود عليهما السلام: لأطوفن الليلة على مائة إمرأة ـ أو تسعٍ وتسعين ـ كلهن يأتي بفارس يجاهد في سبيل الله. فقال له صاحبه: قل إن شاء الله، فلم يقل إن شاء الله، فلم تحمل منهن إلا إمرأة واحدة جاءت بشق رجل. والذي نفس محمدٍ بيده لو قال إن شاء الله لجاهدوا في سبيل الله فرساناً أجمعون

2819 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள் (ஒரு முறை), நான் இன்றிரவு (என்னுடைய) நூறு -அல்லது தொண்ணூற்றொன்பது- மனைவிகளிடமும் சென்று (உடலுறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருத்தியும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பாள் என்று கூறினார்கள். அவர்களுடைய தோழர் ஒருவர், (அவர்கள் மறந்திருக்கலாம் என்று கருதி) இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் நாடினால்... என்று சொல்லுங்கள் என்று கூறினார். சுலைமான் (அலை) அவர்கள் இன்ஷா அல்லாஹ் என்று (தம் வாயால்) கூறாமலிருந்து விட்டார்கள். ஆகவே, (அவர்களின் மனைவிமார்களில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அவரும் ஒரு புஜமுடைய பாதி மனிதரைத் தான் பெற்றெடுத்தார். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அவர், இன்ஷா அல்லாஹ்- அல்லாஹ் நாடினால் என்று (தம் வாயாலும்) கூறியிருந்தால் (அந்த நூறு மனைவியரும் கர்ப்பமுற்றுப் பிள்ளைகள் பெற, அப்பிள்ளைகள்) அனைவருமே அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிகின்ற வீரர்களாய் ஆகியிருப்பார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

 

 

(3424) ـ حدّثنا خالدُ بن مَخلَدٍ حدَّثَنا مُغِيرةُ بن عبدِ الرحمنِ عن أبي الزِّنادِ عنِ الأعرج عن أبي هريرةَ عن النبي صلى الله عليه وسلّم قال: قال سليمانُ بن داودَ: لأطوفنَّ الليلةَ على سبعينَ امرأةً تَحمِلُ كلُّ امرأةٍ فارساً يُجاهِدُ في سبيلِ الله. فقال لهُ صاحبه: إِن شاءَ الله. فلم يَقُل، ولم تَحمِلْ شيئاً إِلا واحداً ساقِطاً أحدُ شِقَّيِه. فقال النبيُّ صلى الله عليه وسلّم: لو قالها لجاهَدوا في سبيلِ الله. قال شُعَيبٌ وابنُ أبي الزِّنادِ تسعينَ وهو أصحُّ.

 

3424 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாவூத் (அலை) அவர்களுடைய மகன் சுலைமான் (அலை) அவர்கள், இன்றிரவு நான் எழுபது மனைவிமார்களிடம் செல்வேன். (அவர்களில்) ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் போராடும் குதிரை வீரரைக் கருத்தரிப்பார்கள் என்று கூறினார்கள். அதற்கு அவருடைய தோழர் ஒருவர், அல்லாஹ் நாடினால்... என்று சொல்லுங்கள் என்று கூறினார். சுலைமான் (அலை) அவர்கள், அல்லாஹ் நாடினால்... என்று (மறந்து போய்) சொல்லாமலிருந்து விட்டார்கள். (அவர்கள் அவ்வாறே சென்றும் கூட) தன் இரு புஜங்களில் ஒன்று கீழே விழுந்த ஒரேயொரு குழந்தையைத் தவிர வேறெதையும் அவர்கள் கருத்தரிக்கவில்லை. இன்ஷா அல்லாஹ்... (இறைவன் நாடினால்) என்று சுலைமான் (அலை) அவர்கள் கூறியிருந்தால் அவர்கள் (எழுபது பேரும் பிறந்து) அல்லாஹ்வின் பாதையில் போராடியிருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஷுஐப் (ரஹ்) அவர்களும் இப்னு அபிஸ் ஸினாத் (ரஹ்) அவர்களும் தங்கள் அறிவிப்பில் தொண்ணூறு மனைவிமார்களிடம் செல்வேன் என்று சுலைமான் (அலை) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இவர்களுடைய அறிவிப்பு தான் மேற் கண்ட அறிவிப்பை விடச் சரியானது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

7469ـ حدَّثَنا مُعَلَّى بنُ أَسَدٍ حدَّثَنا وُهَيْب عن أيوبَ عن محمدٍ عن أبي هريرة أنَّ نبيَّ اللَّه سليمانَ عليه الصلاة والسلام كان له ستُّونَ امرأةً، فقال: لأطوفَنَّ الليلةَ عَلَى نسائي لْتَحمِلْن كلُّ امرأةٍ ولْتَلِدن فارساً يقاتل في سبيل اللَّه، فطاف على نسائِهِ فما وَلَدتْ منهن إلا امرأةٌ ولدَتْ شِقَّ غلامٍ قال نبيُّ اللَّه صلى الله عليه وسلّم: لو كانَ سليمانُ استَثْنى لحملتْ كلُّ امرأة منهنَّ فولدتْ فارساً يقاتل في سبيل اللَّه.

 

7469 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களுக்கு அறுபது துணைவியர் இருந்தார்கள். சுலைமான் அவர்கள் (ஒரு முறை) இன்றிரவு நான் என் துணைவியர் அனைவரிடமும் தாம்பத்திய உறவு கொள்ளச் செல்வேன். ஒவ்வோரு துணைவியாரும் கர்ப்பமுற்று அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்ற குதிரை வீரனைப் பெற்றெடுக்கட்டும் என்று சொல்லிவிட்டுத் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஆனால், அவர்களில் ஒரேயொரு மனைவி தான் குழந்தை பெற்றெடுத்தார். அவரும் பாதி (உடல் சிதைந்த) குழந்தையைத் தான் பெற்றெடுத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுலைமான் (அலை) அவர்கள் இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) என்று (சேர்த்துக்) கூறியிருந்தால், அவர்களுடைய துணைவியரில் ஒவ்வொருவரும் கர்ப்பம் தரித்து, அல்லாஹ்வின் பாதையில் போரிடும் குதிரை வீரன் ஒருவனைப் பெற்றெடுத்திருப்பார்.

 

6720ـ حدَّثنا عليُّ بن عبدِ اللّه حدَّثنا سُفيانُ عن هشام بن حُجَير عن طاوُسٍ سمعَ أبا هريرة قال: قال سليمانُ: لأطوفَنَّ الليلةَ على تسعينَ امرأَة كلٌّ تلدُ غلاماً يقاتلُ في سبيلِ اللّهِ، فقال له صاحبهُ، قال سفيان: يعني المَلكَ قل: إن شاءَ اللّه! فنَسيَ، فطاف بهن فلم تأتِ امرأةٌ مِنهن بوَلدٍ إلا واحدةٌ بشِقِّ غلامٍ، فقال أبو هريرةَ يَرويهِ قال: لو قال إن شاء اللّه لم يَحنَثْ وكان دَرَكاً في حاجَتِهِ وقال مَرة: قال رسُولُ اللّهِ صلى الله عليه وسلّم لو استَثْنىقال: وحدثنا أبو الزنادِ عن الأعرَجِ مثل حديثِ أَبي هريرةَ.

6720 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) சுலைமான் (அலை) அவர்கள் (ஒரு முறை), நான் இன்றிரவு (என்னுடைய) தொண்ணூறு துணைவியரிடமும் சென்று (தாம்பத்திய உறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள் என்று கூறினார்கள். அப்போது அவர்களுடைய தோழர் ஒருவர், -அவர் ஒரு வானவர் என அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்- இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்று சொல்லுங்கள் எனக் கூறினார். சுலைமான் (அலை) அவர்கள் இன்ஷா அல்லாஹ் என்று கூற மறந்து விட்டார்கள்; தம் துணைவியரிடம் சென்று வந்தார்கள். ஆனால், அவர்களுடைய துணைவியரில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும் ஒரு புஜமுடைய அரை மனிதரையே பெற்றெடுத்தார். (நபி) சுலைமான் (அலை) அவர்கள் இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்று கூறியிருந்தால் சத்தியத்தை அடையாமல் இருந்திருக்க மாட்டார்கள். தமது தேவையைப் பூர்த்தி செய்திருப்பார்கள்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

 

6639ـ حدَّثنا أبو اليمان أخبرَنا شُعيبٌ حدَّثنا أبو الزِّنادِ عن عبد الرحمنِ الأعرج عن أبي هريرةَ قال: قال رسولُ اللّه صلى الله عليه وسلّم قال سليمانُ: لأطوفنَّ الليلة على تسعينَ امرأة كلهنَّ تأتي بفارسٍ يُجاهدُ في سبيل اللّه. فقال له صاحبُه قل إن شاء اللّه! فلم يقل إن شاء اللّه. فطاف عليهنَّ جميعاً، فلم تَحملْ منهنَّ إلا امرأةٌ واحدةٌ جاءت بشقِّ رجل. وايمُ الذي نفسُ محمدٍ بيده، لو قال إن شاء اللّه لجاهَدوا في سبيل اللّه فرساناً أجمعون

6639 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைத் தூதர்) சுலைமான் (அலை) அவர்கள் (ஒரு முறை), நான் இன்றிரவு (என்னுடைய) தொண்ணூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள் என்று கூறினார்கள். அப்போது அன்னாருடைய தோழர்களில் ஒருவர் இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்று (சேர்த்துச்) சொல்லுங்கள் என்று கூறினார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள் இன்ஷா அல்லாஹ் என்று கூறவில்லை. (மறந்து விட்டார்கள்.) மேலும், தம் துணைவியர் அனைவரிடமும் சென்றார்கள். அவர்களில் ஒரேயொரு மனைவியைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும் ஒரு புஜமுடைய அரை மனிதரைத் தாம் பெற்றெடுத்தார். (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர், இன்ஷா அல்லாஹ் என்று கூறியிருந்தால், (அந்த தொண்ணூறு துணைவியரும் கர்ப்பவதியாகி பிள்ளைகள் பெற்று, அப்பிள்ளைகள்) அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிகின்ற (குதிரை) வீரர்களாய் ஆகியிருப்பார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22

 

5242 ـ حدّثني محمودٌ حدثنا عبدُ الرّزاق أخبرنا مَعْمر عن ابن طاوس عن أبيه عن أبي هريرة قال: قال سليمانُ بن داودَ عليهما السلام: لأطُوفنَّ الليلةَ بمائةِ امرأةٍ، تَلِدُ كلُّ امرأةٍ غلاماً يُقاتلُ في سبيلِ الله. فقال له المَلَكُ: قُل إن شاء الله، فلم يقُلْ وَنَسيَ، فأطافَ بِهِنَّ، ولم تَلدْ منهُن إلا امرأةٌ نِصفَ إنسان. قال النبيُّ صلى الله عليه وسلّم: لو قال إن شاء اللهُ لم يَحنَثْ، وكان أرجَى لحاجَتِهِ.

5242 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை இறைத் தூதர்) தாவூத் (அலை) அவர்களுடைய புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள், நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறை வழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள் என்று கூறினார்கள். அப்போது (சுலைமான் -அலை) அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்), இன்ஷா அல்லாஹ்-இறைவன் நாடினால் என்று (சேர்த்துச்) சொல்லுங்கள் என்றார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள், இன்ஷா அல்லாஹ் என்று கூறவில்லை; மறந்து விட்டார்கள். அவ்வாறே சுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை. அந்த ஒரு மனைவியும் (ஒரு புஜமுடைய) அரை மனிதரைத் தான் பெற்றெடுத்தார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர் இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால் என்று கூறியிருந்தால் அவர் தமது சத்தியத்தை முறித்திருக்க மாட்டார். (சபதத்தை நிறைவேற்றியிருப்பார்.) தம் தேவை நிறைவேறுவதைப் பெரிதும் அவர் நம்பியிருப்பார் என்று கூறினார்கள்

 

மேற்கண்ட அறிவிப்புக்கள் அனைத்தும் புஹாரியில் இடம் பெற்றிருந்தாலும் இது ஹதீஸ் அல்ல; கட்டுக்கதை என்று நாம் கூறுகிறோம். ஸுலைமான் நபி மீதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் இட்டுக்கட்டிச் சொல்லப்பட்ட பொய் என்று நாம் உறுதியாகக் கூறுகிறோம்.

1- மேற்கண்ட அனைத்துச் செய்தியிலும் தமது மனைவியர் அனைவரும் குழந்தை பெற்றெடுப்பார்கள் என்று ஸுலைமான் நபி கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.

2- தமது மனைவியர் அனைவரும் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்று ஸுலைமான் நபி கூறியதாகக் கூறப்படுகிறது.

3- அந்தப் பிள்ளைகள அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் போராடும் வீரராகத் திகழ்வார்கள் என்று ஸுலைமான் நபி கூறியதாகக் கூறப்படுவதால் அவர்கள் நல்லடியார்களாகத் திகழ்வார்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

4- மேலும் போர் வீரராக அனைவரும் திகழ்வார்கள் என்பதில் அவர்களில் ஒருவர் கூட இளமைப் பருவத்துக்கு முன் மரணிக்க மாட்டார்கள் என்ற கருத்தும் அடங்கியுள்ளது.

இவை அனைத்துமே மறைவான விஷயங்கள். அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிந்து கொள்ள முடியாத விஷயங்கள்.

இவ்வாறு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து அதனடிப்படையில் ஸுலைமான் நபி சொல்லி இருந்தால் தான் இதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் மேற்கணட விஷயங்கள் அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கவில்லை என்பது மேற்கணட செய்திகளிலேயே தெளிவாகத் தெரிகின்றது. அல்லாஹ் ஒன்றை அறிவித்துக் கொடுத்திருந்தால் அது நிச்சயம் நடந்து விடும். ஸுலைமான் நபி கூறியதில் ஒன்று கூட நடக்கவில்லை என்பதால் இது பற்றி அல்லாஹ்விடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது உறுதி.

இந்த விபரங்களைக் கவனத்தில் கொண்டு மேற்கண்ட ஹதீஸ்களை ஆராய்வோம்.

மேற்கண்ட நான்கு செய்திகளும் மறைவான செய்திகள் எனும் போது அதைப் பற்றி சாதாரண முஸ்லிம் கூட பேச மாட்டார். அல்லாஹ்வைப் பற்றி மக்களுக்குப் புரியவைக்க வந்த இறைத் தூதரான ஸுலைமான் நபி இப்படிக் கூறியிருப்பார்களா? அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவது தான் அல்லாஹ்வுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும் செயலாகும். அத்தகைய ஒரு வார்த்தையை ஸுலைமான் நபி எப்படி கூறியிருப்பார்கள்?

வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 27:65

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.

திருக்குர்ஆன் 6:59

இறைத் தூதாராக இருந்தாலும் எந்த மனிதரும் அறிந்து கொள்ள முடியாத ஐந்து விசயங்கள் உள்ளன. எந்தக் கருவறையில் எத்தனைக் குழந்தைகள் உண்டாகும்? கருவறையில் குழந்தை உண்டாகுமா? ஆகாதா என்பதும் அவற்றில் ஒன்றாகும்.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறியமாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

அல்குர்ஆன் (34 : 31)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். கருவறையில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. மேலும் மறுமை (நாள்) எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (4697)

அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்று அல்லாஹ் சொந்தம் கொண்டாடும் ஒரு விஷயத்தில் ஸுலைமால் நபி அவர்கள் வாய் திறந்திருக்க மாட்டார்கள். இப்படி சுலைமான் நபியும் கூறியிருக்க மாட்டார்கள். சுலைமான் நபி கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியிருக்க மாட்டார்கள்.

குறிப்பாக ஒருவருக்கு குழந்தை பிறக்குமா என்ற விஷயத்தை அறிய முடியாது என்பதற்கும் தெளிவான சான்றுகள் உள்ளன.

இப்ராஹீம் நபியவர்களுக்கு தள்ளாத வயது வரை குழந்தை இல்லை. வயதான காலத்தில் அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் நற்செய்தி இறைவன் புறத்தில் இருந்து சொல்லப்பட்ட போது அவர்கள அதை நம்புவதற்கே தயங்கினார்கள் என்பதைப் பின்வரும் வசனங்கள் மூலம் அறியலாம்.

இப்ராஹீமின் விருந்தினர் பற்றியும் அவர்களுக்குக் கூறுவீராக! அவர்கள், அவரிடம் சென்று ஸலாம் கூறினர். அதற்கு அவர் நாம் உங்களைப் (பார்த்துப்) பயப்படுகிறோம்'' என்றார். நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர். எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?'' என்று அவர் கேட்டார். உண்மையின் அடிப்படையிலேயே உமக்கு நற்செய்தி கூறுகிறோம். நம்பிக்கை இழந்தவராக நீர் ஆகி விடாதீர்!'' என்று அவர்கள் கூறினர். வழி கெட்டவர்களைத் தவிர வேறு யார் தமது இறைவனின் அருளில் நம்பிக்கை இழக்க முடியும்?'' என்று அவர் கேட்டார்.

திருக்குர்ஆன் 15:51-56

அவர்களைப் பற்றிப் பயந்தார்.பயப்படாதீர்!'' என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர். உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டு, நான் மலட்டுக் கிழவியாயிற்றே'' என்றார். அதற்கவர்கள் அப்படித் தான் உமது இறைவன் கூறினான். அவன் ஞானமிக்கவன். அறிந்தவன்'' என்றனர்.

திருக்குர்ஆன் 51:26-30

 

இது போல் ஜக்கரிய்யா நபி அவர்களுக்கு தள்ளாத வயதில் அல்லாஹ் யஹ்யா எனும் ஆண் குழந்தை பிறக்க உள்ளதாக நற்செய்தி கூறினான். ஆனால் ஜக்கரியா நபி அவர்களுக்கு மனைவியின் கருவறையில் குழந்தை உண்டாகி விட்டதை அறிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் இறைவா என் மனைவி குழந்தை உண்டாகி விட்டார் என்பதை நான் அறிந்து கொள்ளும் வகையில் எனக்கொரு அடையாளத்தைத் தா என்று கேட்டார்கள். உன் மனைவி எப்போது குழந்தை உண்டாகி விட்டாரோ அப்போது முதல் மூன்று நாட்களுக்கு உன்னால் பேச முடியாது. அது தான் அடையாளம் என்று அல்லாஹ் கூறினான்.

பின் வரும் வசனங்களில் இருந்து இதை அறியலாம்.

என் இறைவா! எனக்கொரு அடையாளத்தைக் காட்டு!'' என்று அவர் கேட்டார். குறைபாடற்ற நிலையில் நீர் இருந்தும் மூன்று இரவுகள் மனிதர்களிடம் நீர் பேச மாட்டீர் என்பதே உமக்கு அடையாளம்'' என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 19:10

கருவில் குழந்தை உண்டான பின்பு கூட உடனடியாக் அதை ஜக்கரியா நபியால் அறிந்து கொள்ள முடியவில்லை. அதை அறிந்து கொள்ள அல்லாஹ்விடம் அடையாளம் கேட்கிறார்கள். ஆனால் ஸுலைமான் நபியோ மனைவிகளுடன் சேர்வதற்கு முன் குழந்தை உண்டாகும் என்பதை அறிந்து கொள்கிறார்கள்; அவை அனைத்தும் ஆண்குழந்தை என்றும் அறிந்து விடுகிறார்காள். அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்றும் அறிந்து கொள்கிறார்கள்; அவர்கள் அற்ப ஆயுளில் மரணிக்க மாட்டார்கள் என்றும் அறிந்து கொள்கிறார்கள். இவ்வாறு கூறும் இந்த ஹதீஸ்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தகர்க்கவில்லயா? தகர்த்தாலும் இது சரியான் ஹதீஸ் என்று ஸலஃபி வகயறாக்கள் கூறுகிறார்கள். எத்தனை குர்ஆன் வசனங்கள் மறுக்கப்பட்டாலும் ஸுலைமான் நபி மீது களங்கம் ஏற்பட்டாலும் இதை நம்பச் சொல்கிறார்கள்.

இன்னும் சொல்லப் போனால் இது மறைவான் விஷயங்களை அறிந்து கொள்ளுதல் என்ற தலைப்பையும் கடந்து இறை ஆற்றலில் போட்டி இடும் வகையில் அமைந்துள்ளது எனலாம். ஸுலைமான் நபி கூறியபடி நடந்திருந்தால் தான் மறைவான விஷயத்தில் தலையிட்டார்கள் என்ற கருத்து கிடைக்கும். நடக்குமா நடக்காதா என்பது தெரியாத நிலையில் நிச்சயம் இது நடக்கும் என்று கூறினால் இறைவனுக்கு இருப்பது போன்ற ஆற்றல் எனக்கும் உண்டு. நான் சொன்னால் அது நடக்காமல் போகாது என்று ஸுலைமான் நபி வாதிட்டதாகத் தான் அர்த்தமாகும். இத்தகைய மாபாதகச் செயலை ஸுலைமான் நபி செய்திருக்கிறார்கள் என்ற கருத்து கட்டுக் கதையாகத் தான் இருக்க முடியும்.

இந்தச் செய்தி சரியான செய்தி என்றால் இது போல் நாமும் கூறலாமா என்ற கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டும். நான் இன்று என் மனைவியிடம் உடலுறவு கொள்வேன். அவள் ஒரு ஆண் பிள்ளையை நிச்சயம் பெற்றெடுப்பாள். அது நல்லொழுக்கமுள்ள பிள்ளையாக இருக்கும் என்று ஒருவர் கூறினால் அவரைப் பற்றி இஸ்மாயீல் ஸலஃபி வகையறாக்களின் ஃப்த்வா என்ன?

இப்படிக் கூறக் கூடாது என்று கூறி அதற்கு எதை ஆதாரமாகக் காட்டுவார்களோ அந்த ஆதாரமே ஸுலைமான் நபி இப்படிக் கூறக் கூடாது என்பதற்கும் ஆதாரமாகும்.

இந்த ஹதீஸில் இன்ஷா அல்லாஹ் கூறாதது தான் பெரிய பிரச்சனையாகச் சொல்லப்படுகிறது. இன்ஷா அல்லாஹ் சொன்னாலும் இவ்வாறு கூறுவதற்கு அனுமதி கிடையாது என்பதே உண்மை..

இதைப் புரிந்து கொள்வதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம். இவை கூடும் என்று இஸ்மாயீ ஸலஃபி ஃப்தவா கொடுப்பாரா?

செத்தவரை இன்ஷா அல்லாஹ் நான் உயிராக்குவேன் என்று ஒருவர் கூறலாமா?

இன்னாருக்கு நான்கு ஸாலிஹான ஆண் பிள்ளைகள் இன்ஷா அல்லாஹ் பிறக்கும் என்று ஒருவர் கூற அனுமதி உண்டா?

இன்ஷா அல்லாஹ் 2009 முடிவதற்குள் பீஜே செத்து விடுவார் என்று ஒருவர் கூற அனுமதி உண்டா?

நிச்சயம் அனுமதி இல்லை. மனிதனின் கைவசம் உள்ள காரியங்களில் செய்ய வேண்டிய எல்லா முயற்சிகளையும் செய்து விட்டு இன்ஷா அல்லாஹ் நடக்கும் என்று கூற வேண்டுமே தவிர மனிதனின் கைவசம் இல்லாத காரியங்களில் இன்ஷா அல்லாஹ் சொன்னாலும் மேற்கண்டவாறு கூற அனுமதி கிடையாது.

அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைப்பீராக! எனது இறைவன் இதை விட சமீபத்தில் வழி காட்டி விடக் கூடும்'' என்று கூறுவீராக!

திருக்குர் ஆன் அ8:23,24

எனவே இன்ஷா அல்லாஹ் சொன்னால் இது போல் பேச அனுமதி உண்டு என்ற கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்ட்டார்கள்.

இது சரி என்று வாதிடக் கூடியவர்கள் மனித சக்த்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இன்ஷா அல்லாஹ் கூறி விட்டு எதை வேண்டுமானாலும் பேசலாமா? என்பதற்கும் பதில் சொல்ல வேண்டும்.

இந்தச் செய்தி பொய் என்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. நீங்கள் இன்ஷா அல்லாஹ் கூறுங்கள் என்று ஒருவர் கூறுகிறார். அந்த ஒருவர் வானவர் என்று ஒரு அறிவிப்பில் தெளிவு படுத்தப்படுகிறது. இன்ஷா அல்லாஹ் கூறுங்கள் என்று வானவர் நினைவுபடுத்தினால் ஒரு நபியின் கடமை என்ன? வானவர்கள் சுயமாகப் பேச மாட்டார்கள்; அல்லாஹ் அறிவித்துக் கொடுத்ததைத் தான் சொல்வார்கள் என்பதால் நபி உடனே அதற்குச் செவி சாய்க்க வேண்டாமா? அப்படி நினைவுபடுத்தியும் ஸுலைமான் நபி இன்ஷா அல்லாஹ் கூறவில்லை என்பதும் நபியின் தகுதிக்கு உகந்தது அல்ல.

மறந்து விட்டார் என்று மொழி பெயர்த்துள்ளது சரியானது அல்ல. இந்த இடத்தில் விட்டு விட்டார் என்று மொழி பெயர்ப்பதே சரியாகும்.

மறந்து விட்டார்கள் என்று இவர்கள் பொருள் செய்யும் இடத்தில் நஸிய என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இந்த வார்த்தை மறந்து விட்டார் என்ற பொருளையும் தரும். வேண்டுமென்றே விட்டு விட்டார் என்ற பொருளையும் தரும். பின்வரும் வசனங்களில் இந்த வார்த்தை வேண்டுமேன்றே விட்டுவிடுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

அல்குர்ஆன் (2 : 44)

'அப்படித்தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்'' என்று (இறைவன்) கூறுவான்.

அல்குர்ஆன் (20 : 126)

அவர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது, அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் வாசல்களையும் திறந்து விட்டோம்.

அல்குர்ஆன் (6 : 44)

இவ்வசனங்களில் மறதி என்று பொருள் கொண்டால் இவர்களைத் தண்டிக்க எந்த வழியும் இல்லை. வேண்டுமென்றே விட்டு விட்டார்கள் என்பது தான் மறதி என்று இங்கே கூறப்படுகிறது. தமிழில் கூட நன்றி மறந்தவன் என்று சொலவதுண்டு. நினைவு வந்தவுடன் நன்றி செலுத்துவான் என்ற் அர்த்தத்தில் இது சொல்லப்படுவதில்லை. வேண்டுமென்றே நன்றி செலுத்தாமல் இருக்கிறான் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்படுகிறது.

எனவே ஒரு மலக்கு சுட்டிக்காட்டியும் இன்ஷா அல்லாஹ் கூறாமல் இருந்தது மறதியில் சேராது. வேண்டுமென்றே விட்டதாகத் தான் ஆகும். ஸுலைமான் நபி இத்தகைய மாபாதகத்தைச் செய்ய மாட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் என்று கூறுவது பின்னால் தள்ளிப்போடுகின்ற அளவிற்கு கடினமான ஒரு காரியம் அல்ல. இன்ஷா அல்லாஹ் என்று சொல்லுங்கள் என்று சொன்னவுடனே ஒரு நொடியில் சொல்லி முடித்துவிடலாம். ஞாபகப்படுத்திய அடுத்த நொடியில் யாரும் மறக்கவும் மாட்டார்கள்.
ஒரு பேச்சுக்கு ஸுலைமான் நபி மறந்து விட்டால் மறதிக்காகத் தண்டிப்பது இறைவனின் பண்பு அல்ல. மறதியாக இன்ஷா அல்லாஹ் சொல்லத் தவறியதற்காக் ஒரு குழந்தை கூட் பெற முடியாத நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவானா? ஒரு பெண் மட்டும் அரை மனிதனைப் பெற்றெடுக்கும் வகையில் அல்லாஹ் தண்டனை கொடுப்பானா?

அவர் மறதியாக இன்ஷா அல்லாஹ் சொல்லாத் குற்றத்தினாலேயே அவர் நினைத்த படி குழந்தை பிறக்கவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருப்பார்களா?

மறதி ஏற்படுகின்ற விதத்தில் அல்லாஹ் மனிதனை படைத்துள்ளான். இஸ்லாம் விதித்த கடமைகளை மறதியாக ஒருவன் விட்டு விட்டால் கூட அல்லாஹ் அவனை தண்டிக்க மாட்டான். ஏனென்றால் மறதி என்பது அவனது சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று.

மறந்து விட்ட ஒருவனைத் தண்டிப்பது இறைவனுடைய நீதிக்கு ஏற்றதல்ல. மறதியாகத் தான் சுலைமான் நபி இன்ஷா அல்லாஹ்வை விட்டு விட்டார்கள் என்றால் மறதியாக செய்ததற்கு தண்டனை தரும் விதமாக அவர்களுக்குப் பிறக்கவிருந்த குழந்தைகளைப் பிறக்கவிடாமல் ஆக்குவது இறைவனுடைய நீதிக்கு ஏற்றதல்ல.

நாகரிகத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுப்பதே நபிமார்களின் பணியாகும். நாகரீகமுள்ள எந்த மனிதரும் இன்றிரவு என் மனைவியுடன் அல்லது மனைவிகளுடன் உடலுறவு கொள்வேன் என்று பகிரங்கமாகக் கூற மாட்டார். இதுவும் இச்செய்தியில் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

இது உண்மை என்று வைத்துக் கொண்டால் ஒரு தடவை நடந்த நிகழ்ச்சி தான். இந்த அனைத்து ஹதீஸ்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களின் வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு அறிவிப்பிலும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட எண்ணிக்கை கூறப்படுகிறது. 60 பெண்களிடம் உடலுறவு கொள்வேன் என்றும், 70 பெண்களிடம் உடலுறவு கொள்வேன் என்றும் 90 பெண்களிடம் உடலுறவு கொள்வேன் என்றும் 100 பெண்களிடம் உடலுறவு கொள்வேன் என்றும் 99 பெண்களிடம் உடலுறவு கொள்வேன் என்றும் ஸுலைமான் நபி கூறியதாக முரண்பட்டு அறிவிக்கப்படுவது இது பொய் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஸுலைமான் நபிக்கு 100 மனைவியர் இருந்ததாக வைத்துக் கொண்டாலும். அவர்களில் குறைந்தது 20 பேராவது மாதவிடாயாக இருப்பார்கள். அவர்களுடன் உடலுறவும் கொள்ள முடியாது. அவர்களுக்குக் குழந்தையும் தரிக்காது. இதுவும் மேற்கணட் செய்தியைப் பொய்யாக்குகிறது.

மேலும் எந்த மனிதனுக்கும் நூறு மனைவியுடன் ஒரு இரவில் உடலுறவு கொள்ளும் ஆற்றல் வழங்கப்படவில்லை. இது நடைமுறையில் சாத்தியமாகாது.

இது போன்ற காரணங்களை வலுவூட்டும் ஆதாரமாகத் தான் குறிப்பிட்டுள்ளோம். இது பொய் என்பதற்கு முக்கிய காரணம் இஸ்லாத்தின் பல அடிப்படைகளைத் தகர்க்கக் கூடியதாக் அமைந்திருப்பது தான். ஸலஃபி அவர்களிடம் அதற்கான பதிலைத் தான் எதிர்பார்க்கிறோம்.

ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டிய பால் குடி ஹதீஸ் தொடர்பான கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும். இந்த ஹதீஸ் தொட்ர்பாக நாம் எழுப்பியுள்ள் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும்.

இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்

ஹதீஸ்களின் இலக்கணம் என்ன?-3

தொடர் 3

(இஸ்மாயில் சலஃபியின் நடவடிக்கைகளை விமர்சிக்காமல் அவரது ஆய்வை மட்டும் மறு ஆய்வு செய்யும் தொடர்)

நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்றாலும் அவை திருக்குர்ஆனுக்கு நேர் முரணாக அமைந்திருந்தால் அவை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் எனும் தகுதியை இழந்துவிடும் என்று நாம் கூறி வருகிறோம். இது ஹதீஸ் கலை அடிப்படை விதிகளில் உள்ளது தான் என்றும் நாம் கூறி வருகிறோம். அத்தகைய ஹதீஸ்கள் சிலவற்றை எடுத்துக்காட்டி அவை எவ்வாறு குர்ஆனுக்கு முரணாக அமைந்துள்ளன என்பதையும் விளக்கி வருகிறோம்.

ஆனால் இஸ்மாயீல் ஸலஃபியும் அவரது இயக்கமான ஜம்மியத்து அன்ஸாரிஸ் ஸுன்னத்தில் முஹம்மதிய்யாவும் இதற்கு மாற்றமான நிலையில் உள்ளனர். அறிவிப்பாளர் நம்பகமானவராக இருந்தால் அது குர்ஆனுக்கு முரணாக இருக்கிறதா என்று பார்க்கக் கூடாது என்பது அவர்களின் நிலை.

குர்ஆனுக்கு முரண்படும் இத்தகைய ஹதீஸ்களைத் தக்க ஆதாரத்துடனும், தகுந்த காரணங்களுடனும் நாம் மறுப்பதால் நுபுவ்வத்தை அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே நாம் மறுத்து விட்டதாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது இஸ்லாத்தை விட்டு நாம் வெளியேறி விட்டோம் என்பது இதன் பொருள்.

நபிகள் நாயகம் (ஸல்) சொன்னாலும் ஏற்க முடியாது என்று கூறினால் அது நுபுவ்வத்தை மறுத்த குற்றத்தில் அடங்கும். குர்ஆனுக்கு முரணாக உள்ளதால் இதை நபிகள் நாயகம் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று கூறினால் அது நுபுவ்வத்தை உறுதிப்படுத்துமே தவிர மறுப்பதாக ஆகாது. இந்த வித்தியாசத்தை விளங்காத காரணத்தால் தான் இஸ்மாயீல் ஸலஃபி வகையறாக்கள் இவ்வாறு கடும் விமர்சனம் செய்கிறார்கள்.

நாம் மறுக்கின்ற ஹதீஸ்களில் இரண்டை எடுத்துக் காட்டி இவற்றை மறுக்கிறீர்களா? ஏற்கிறீர்களா? என்று கேட்டோம். இரண்டு வாரங்கள் முடிந்து விட்ட நிலையிலும் அவர்கள் பதில் சொல்ல முடியாமல் உள்ளனர்.

அத்தகைய ஹதீஸ்களில் இன்னொரு ஹதீஸையும் நாம் எடுத்துக் காட்டுகிறோம்.

 

3407ـ حدثنا يحيى بنُ موسى حدَّثَنا عبدُ الرزّاق أخبرَنا مَعمرٌ عنِ ابنِ طاوسٍ عنِ أبيهِ عن أبي هريرةَ رضيَ الله عنه قال:أُرسِلَ ملكُ الموتِ إلى موسى عليهما السلام، فلما جاءهُ صَكَّهُ، فرجَعَ إلى ربهِ فقال: أرسلَتني إلى عبدٍ لا يريدُ الموتَ. قال: ارجِعْ إليهِ فقل له يَضَعُ يدَهُ على مَتنِ ثورٍ، فلهُ بما غطى يدُهُ بكل شعرةٍ سنة. قال: أي ربّ، ثمَّ ماذا ؟ قال: ثمَّ الموت. قال: فالآن. قال: فسأَلَ اللهَ أن يُدنِيَهُ منَ الأرض المقدَّسةِ رميةً بحجرٍ. قال أبو هريرةَ: فقال رسولُ اللهِ صلى الله عليه وسلّم: لو كنتُ ثمَّ لأريتُكم قبرَهُ إلى جانب الطريقِ تحتَ الكثيبِ الأحمر. قال: وأخبرَنا مَعْمرٌ عن هَمامٍ حدَّثنا أبو هريرةَ عنِ النبيِّ صلى الله عليه وسلّم نحوَه.

3407 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மலக்குல் மவ்த் (உயிரை எடுத்துச் செல்லவரும் வானவர்) மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்த போது மூசா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்து விட்டார்கள். உடனே அவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று, மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பி விட்டாய் என்று கூறினார். இறைவன், நீ அவரிடம் திரும்பிச் சென்று அவரது கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவிற்கு) அவரது கரம் மூடுகின்றதோ (அதில்) ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில் வாழ) அவருக்கு அனுமதி உண்டு (என்று சொல்.) எனக் கூறினான். (அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூசா (அலை) அவர்களிடம் கூறிய போது) அவர், இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்? என்று கேட்டார்கள். இறைவன், மரணம் தான் என்று பதிலளித்தான். மூசா (அலை) அவர்கள், அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக் கொள் என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத் தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.

(இதை எடுத்துரைத்த போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்திருந்தால் சாலையோரமாக செம்மணற் குன்றின் கீழே அவரது மண்ணறை இருப்பதை உங்களுக்கு காட்டியிருப்பேன் என்று கூறினார்கள். 85

ஹம்மாம் (ரஹ்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்கள் இதே போன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்து உள்ளார்கள் என்று கூறுகிறார்கள்.

1339ـ حدَّثنا محمودٌ حدَّثَنا عبدُ الرزّاقِ أخبرَنا مَعْمرٌ عنِ ابنِ طاوُسٍ عن أبيهِ عن أبي هريرةَ رضيَ اللهُ عنه قال أُرسِلَ مَلَكُ المَوتِ إلى موسى عليهما السلامُ، فلمَّا جاءَهُ صَكَّهُ، فرجَعَ إلى ربِّهِ فقالَ: أرسلْتَني إلى عبدٍ لا يُريدُ المَوتَ. فرَدَّ اللهُ عليهِ عَينَه وقال: ارجعْ فَقُلْ لهُ يَضَعُ يدَهُ على مَتنِ ثَورٍ، فلهُ بكلِّ ما غَطتْ بهِ يدُهُ بكلِّ شعرةٍ سنةٌ. قال: أي ربِّ، ثمَّ ماذا؟ قال: ثمَّ الموتُ. قال فالآن. فسألَ اللهَ أن يُدنِيَهُ مِنَ الأرض المقدَّسةِ رميةً بحجَرٍ. قال: قال رسولُ اللهِ صلى الله عليه وسلّم: فلو كنتُ ثَمَّ، لأريتُكم قبرَهُ إلى جانبِ الطريق عند الكثيب الأحمر.

1339 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூசா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்த போது மூசா (அலை) அவர்கள் அவரது கண் பிதுங்கும் அளவுக்கு அடித்து விட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய், இறைவா! இறக்க விரும்பாத ஒரு அடியாளிடம் நீ என்னை அனுப்பி விட்டாய் என்றார். பிறகு அல்லாஹ் அவரது கண்ணைச் சரிப்படுத்தி விட்டு, நீர் மீண்டும் அவரிடம் சென்று, அவரை ஒரு மாட்டின் முதுகில் கையை வைக்கச் சொல்லி, அவரது கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கின்றதோ அத்தனை வருடங்கள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும் என அனுப்பி வைத்தான். (அவ்வாறே அவர் மூஸா அலை அவர்களிடம் வந்து கூறிய போது) மூசா (அலை) இறைவா, அதற்குப் பிறகு? எனக் கேட்டதும் அல்லாஹ், பிறகு மரணம் தான் என்றான். உடனே மூசா (அலை) அவர்கள் அப்படியானால் இப்பொழுதே (தயார்) எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும்) புனிதத் தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள (புனிதத் தலத்திற்கு மிக அருகிலுள்ள) இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டிக் கொண்டார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் போது, நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூசா (அலை) அவர்களது அடக்கவிடத்தைக் காட்டியிருப்பேன் எனக் குறிப்பிட்டார்கள்.

இந்தக் கருத்தில் உள்ள ஹதீஸ் முஸ்லிம், அஹ்மத் மற்றும் பல நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவும் நமது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் முன்னரே எடுத்துக் காட்டியவை தான்.

நமது தமிழாக்கத்தில் இது குறித்து நாம் குறிப்பிட்டது இது தான்.

மற்றொரு ஹதீஸையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

உயிரைக் கைப்பற்றும் வானவர் மூஸா நபியிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்ததும் மூஸா நபியவர்கள் அவரை அறைந்து விட்டார். உடனே வானவர் இறைவனிடம் சென்று மரணத்தை விரும்பாத அடியாரிடம் என்னை நீ அனுப்பி விட்டாயே?'' என்று முறையிட்டார். அதற்கு இறைவன் நீ மீண்டும் அவரிடம் செல்! காளை மாட்டின் முதுகின் மேல் அவரது கையை வைக்கச் சொல்! அவரது கையின் அடியில் உள்ள ஒவ்வொரு முடிக்கும் ஒரு வருடம் என்ற அளவில் வாழ் நாள் கொடுக்கப்பட்டதாகக் கூறு!'' என்று சொல்லியனுப்பினான். அவர் வந்து மூஸா நபியிடம் இதைத் தெரிவித்தார். அதற்கு மூஸா நபியவர்கள் இறைவா! அதன் பின்னர் என்ன?'' என்று கேட்டார். அதன் பின்னர் மரணம் தான்'' என்று இறைவன் கூறினான். அப்படியானால் இப்போதே மரணிக்க நான் தயார்'' என்று மூஸா (அலை) கூறினார்.

இது அபூஹுரைரா (ரலி)யின் கூற்றாகவும், நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகவும் புகாரி 3407வது ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரியில் இது பதிவு செய்யப்பட்டதாலும், இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருப்பதாலும் இதை அப்படியே ஏற்க இயலுமா?

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டுக்கோ, திருக்குர்ஆன் வசனங்களுக்கோ முரணாக இல்லாவிட்டால் இதை ஏற்றுத் தான் ஆக வேண்டும். இந்த ஹதீஸைப் பொறுத்த வரை திருக்குர்ஆனின் ஏராளமான வசனங்களுடன் முரண்பட்டு நிற்கிறது.

ஒரு வானவர் இறைக் கட்டளையை நிறைவேற்றாமல் தோல்வியுடன் திரும்பிச் சென்றார் என்று இதில் கூறப்படுகிறது. இது சரி தானா என்பதை முதலில் ஆராய்வோம்.

வானவர்களுக்கு என்று சில இலக்கணங்கள் உள்ளதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.

(திருக்குர்ஆன் 16:49, 50)

அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின் றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

(திருக்குர்ஆன் 21:26,27)

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

(திருக்குர்ஆன் 66:6)

இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பினானோ அதைச் செய்து முடிப்பது தான் வானவர்களின் இலக்கணம். மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற ஒரு வானவரை இறைவன் அனுப்பினால் அவர் அந்த வேலையைச் செய்யாமல் திரும்ப மாட்டார். இந்த இலக்கணத்திற்கு எதிரான கருத்தை அந்த ஹதீஸ் கூறுகிறது.

மேலும் நபிமார்கள் இறைவன் அனுப்பி வைத்த தூதரை அடித்து விரட்டுவார்களா? இறைவனின் ஏற்பாட்டுக்குச் செவி சாய்க்க மறுப்பார்களா என்றால் நிச்சயம் அப்படிச் செய்ய மாட்டார்கள்.

மிகச் சிறந்த இறைத் தூதர்களில் ஒருவரான மூஸா நபியவர்கள் இந்த ஹதீஸில் கூறப்பட்டவாறு நடந்திருப்பார்களா? என்பதும் சிந்தித்துப் பார்க்க வேண்டியதாகும்.

இவ்வுலக வாழ்க்கை அற்பமானது. மறுமை வாழ்வு தான் நிலையானது'' என்பது எல்லா இறைத் தூதர்களின் போதனையாக இருந்தது. தமக்கு மரணம் வந்து விட்டது என்பதை மூஸா நபி அறிந்து கொண்டால் அதற்குத் தம்மைத் தயார்படுத்திக் கொள்வார்களே தவிர அதை எதிர்த்து எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டார்கள்.

மேலும் வானவர்கள் சுயமாக எந்தக் காரியத்திலும் இறங்க மாட்டார்கள். அல்லாஹ் இட்ட கட்டளையைத் தான் செய்வார்கள் என்பது நமக்கே தெரியும் போது மூஸா நபிக்கு இந்த உண்மை தெரியாமல் இருக்க முடியாது.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதரை அறைவது இறைவனை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்குச் சமமாகும்'' என்பதைக் கூட மூஸா நபியவர்கள் அறிந்திருக்கவில்லை என்ற கருத்திலமைந்த ஹதீஸை நாம் எவ்வாறு நம்ப இயலும்?

அப்படியே மூஸா நபியவர்கள் வானவரை அறைந்தால் இறைவன் பணிந்து கெஞ்சிக் கொண்டிருப்பானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

யூனுஸ் நபியவர்கள் இறைவனுடன் கோபித்துக் கொண்டு போனதற்காக அவரை எவ்வாறு நடத்தினான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.

(திருக்குர்ஆன் 21:86, 87)

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்.

(திருக்குர்ஆன் 68:49)

மூஸா நபி இவ்வாறு நடந்திருந்தால் இது போன்ற கடும் நடவடிக்கை எடுப்பது தான் இறைவனது தனித்தன்மை. தனது பெருமை விஷயத்தில் அவன் சமரசம் செய்து கொண்டதே இல்லை. இறைவனைப் பொறுத்த வரை அவனது கவுரவம் தான் அவனுக்கு முதன்மையானதாகும்.

இந்த அடிப்படையையும் இந்த ஹதீஸ் அறவே தகர்த்து எறிவதால் இந்த ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

என்று திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

அதற்கு மறுப்பு எழுத முன் வந்த இஸ்மாயீல் ஸலஃபி இந்த ஹதீஸ் பற்றியும் தனது நிலைபாட்டைச் சொல்லி இருக்க வேண்டுமல்லவா? இது குறித்து அவர் எதுவுமே சொல்லவில்லை.

.இந்த ஹதீஸை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று இஸ்மாயீல் ஸலஃபி வாதிடுகிறார். அப்படியானால் கீழ்க்காணும் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும்.

1- மலக்குகள் சுயமாக எந்த அதிகாரமும் படைத்தவர்கள் அல்லர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தும் அடிமைகளே என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. திருக்குர்ஆனில் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இறைவன் சொன்னதைச் செய்யாமல் மூஸா நபியிடம் அடி வாங்கிக் கொண்டு தோல்வியுடன் ஒரு வானவர் திரும்பினார் என்று இந்த ஹதீஸ் கூறுகிறதே? இது குர்ஆனுக்கு மாற்றமானது அல்லவா? குர்ஆன் மறுக்கப்பட்டாலும் இந்த ஹதீஸை ஏற்க வேண்டும் என்று ஸலஃபி வகையறாக்கள் கூறுகிறார்களா?

2- அல்லாஹ் எந்தக் கட்டளை இட்டாலும் ஒவ்வொரு முஸ்லிமும் கடைப் பிடிக்க வேண்டும். அல்லாஹ்வின் கட்டளை இது தான் என்று தெரிந்து கொண்டு அதை எதிர்த்து நிற்பது இறை மறுப்பாகும். மலக்குல் மவ்த் அல்லாஹ்வின் கட்டளையைக் கூறிய போது ஒரு நபி என்ன செய்திருப்பார். உடனே அதற்கு தலை சாய்த்திருப்பதைத் தவிர வேறு வழி அவருக்கு இல்லை. இதோ நான் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல் படுத்தத் தயார் என்று கூறி இருந்தால் ஒரு நபியின் தகுதி அதில் வெளிப்பட்டிருக்கும். அல்லது இறைவா இன்னும் கொஞ்சம் ஆயுளை அதிகமாக்கித் தா என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருந்தால் சராசரி மூமினின் பண்பு அதில் வெளிப்பட்டிருக்கும். ஆனால் அல்லாஹ் அனுப்பிய தூதரைக் கண்ணைக் குருடாக்கும் அளவுக்கு அறைவது ஈமானில் சேருமா? இறை மறுப்பில் சேருமா? இப்படி நடப்பதற்கு அல்லாஹ் அனுமதித்திருக்கிறானா?

3- ஒவ்வொரு மனிதனும் மரணித்தே ஆக வேண்டும் என்பது ஒட்டு மொத்த மனிதரும் அறிந்து வைத்துள்ள உண்மை. இந்த உண்மை ஒரு நபிக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் நம்ப வேண்டிய அடிப்படைகளில் ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்க வேண்டும் என்பதும் முக்கியமானது. ஆனால் முஸா நபி அவர்கள் மரணத்தை நெருங்கும் வரை இந்தச் சாதாரண உண்மையை அறியாதவராக இருந்துள்ளார் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. மனிதன் மரணித்தே ஆக வேண்டும் என்ற அடிப்படையான விஷயம் கூட கடைசி நேரத்தில் அல்லாஹ் சொல்லிக் கொடுத்த பிறகு தான் அவருக்குத் தெரிய வந்துள்ளது என்றால் தனது சமுதாயத்துக்கு அவர்கள் மரணம் பற்றியோ மரணத்துக்குப் பின் உள்ள வாழ்க்கை பற்றியோ எதுவும் சொல்லித் தரவில்லை என்பதும் இந்த ஹதீஸுக்குள் அடங்கியுள்ளது.

4- மேலும் ஒரு பணியைச் செய்வதற்காக அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகிறான் என்றால் அவர் அதற்கான முழு ஆற்றலும் வழங்கப்பட்டே அனுப்பப்படுவார். மலக்குகள் எந்தப் பணியில் தோற்றாலும் அது அவர்களின் தோல்வி அல்ல. அனுப்பியவனின் தோல்வியாகத் தான் அமையும். இந்தக் கதை அல்லாஹ்வை இயலாதவனாக்கும் வகையில் உள்ளது.

5-வானவர்களின் வலிமையுடன் மனிதர்களின் வலிமையை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஒரு வானவருக்கு அல்லாஹ் கட்டளையிட்டால் ஒரு ஊரையே அவர் அழித்து விட முடியும். அத்தகைய வானவரை மூஸா நபி அறைந்து அவரது கண்ணைக் குருடாக்கி விட்டார் என்பதும் வானவர்களின் ஆற்றலை மறுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தக் கேள்விகளுக்கு ஸலஃபி வகையறாக்கள் பதில் சொல்ல வேண்டும்.

இது போல் நமது திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் மற்றொரு ஹதீஸையும் எடுத்துக் காட்டி இருந்தோம். அதற்கும் ஸலஃபி அவர்கள் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

ـ حدّثنا يَحْيَى بْنُ يَحْيَى. قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ؛ عَنْ عَبْدِ اللّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ، ؛ أَنَّهَا قَالَتْ: كَانَ فِيمَا أُنْزِلَ مِنَ الْقُرْآنِ: عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ، ثُمَّ نُسِخْنَ: بِخَمْسٍ مَعْلُومَاتٍ، فَتُوُفِّيَ رَسُولُ اللّهِ وَهُنَّ فِيمَا يُقْرَأُ مِنَ الْقُرْآنِ.

2876 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும்'' என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

ـ حدّثنا عَبْدُ اللّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ عَنْ يَحْيَى (وَهُوَ ابْنُ سَعِيدٍ)، عَنْ عَمْرَةَ؛ أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ، تَقُولُ (وَهِي تَذْكُرُ الَّذِي يُحَرِّمُ مِنَ الرَّضَاعَةِ) قَالَتْ عَمْرَةُ: فَقَالَتْ عَائِشَةُ: نَزَلَ فِي الْقُرْآنِ: عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ، ثُمَّ نَزَلَ أَيْضاً: خَمْسٌ مَعْلُومَاتٌ.

2877 அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள், எத்தனை முறை பால் குடித்தால் பால்குடி உறவு உண்டாகும் என்பதைப் பற்றிக் கூறுகையில் பின்வருமாறு கூறினார்கள்: குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் (பால்குடி உறவு உண்டாகும்) என்ற சட்டம் குர்ஆனில் இடம் பெற்றிருந்தது. பின்னர் குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்ற சட்டம் அருளப்பெற்றது.13

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

மேற்கண்ட ஹதீஸ் முஸ்லிம் நூலில் இடம் பெற்றிருந்தாலும் இது ஏற்கத்தக்கது அல்ல என்று நாம் கூறுகிறோம். இது குறித்து நாம் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் பின் வருமாறு குறிப்பிட்டோம்.

ஒரு குழந்தை தனது தாய் அல்லாத வேறு பெண்ணிடம் பாலருந்தினால் அந்தப் பெண், அக்குழந்தைக்குத் தாய் என்ற அந்தஸ்தை அடைந்து விடுவாள் என்பதை நாம் அறிவோம்.

இது பற்றி முஸ்லிம் 2634, 2635 ஹதீஸ்களில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

பத்து தடவை பாலருந்தினால் தான் தாய் பிள்ளை' எனும் உறவு ஏற்படும் என்று குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் இது ஐந்து தடவை என்று மாற்றப்பட்டது. இது திருக்குர்ஆனில் ஓதப்பட்டு வந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அதாவது ஐந்து தடவை பால் அருந்தினால் தாய் என்ற உறவு ஏற்பட்டு விடும் என்று ஒரு வசனம் குர்ஆனில் இருந்ததாகவும், இந்த வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆனில் இருந்ததாகவும் இந்த ஹதீஸில் கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை குர்ஆனில் அப்படி ஒரு வசனம் இருந்திருந்தால் அந்த வசனம் இன்றும் குர்ஆனில் நிச்சயம் இருந்தாக வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்திற்குப் பின் குர்ஆனில் உள்ள எதையும் நீக்கவோ, இல்லாததைச் சேர்க்கவோ முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே குர்ஆன் முழுவதும் எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டு விட்டதாலும், ஏராளமான நபித்தோழர்கள் முழுக் குர்ஆனையும் மனனம் செய்திருந்ததாலும் குர்ஆனில் இருந்த ஒரு வார்த்தை கூட விடுபடுவதற்கு வழியே இல்லை.

ஆனால் ஆயிஷா (ரலி) கூறுவது போல் ஒரு வசனம் குர்ஆனில் காணப்படவில்லை.

இந்த நிலையில் முஸ்லிம் நூலில் இடம் பெற்ற ஹதீஸாயிற்றே? நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே'' என்று காரணம் கூறி இதை ஏற்றுக் கொண்டால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; நபிகள் நாயகம் (ஸல்) காலத்திற்குப் பின் குர்ஆனில் இருந்த பல வசனங்கள் நீக்கப்பட்டன'' என்ற கருத்து இதனால் ஏற்படும். குர்ஆன் இறைவனின் நேரடிப் பொறுப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதையே இந்தச் செய்தி கேள்விக் குறியாக்கி விடும்.

எனவே இந்த ஹதீஸை நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும்.

முஸ்லிம் நூலில் நம்பகமானவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இதை நாங்கள் உண்மை என்று நம்புகிறோம்'' என்ற முடிவுக்கு நாம் வந்தால் ஹதீஸை நாம் மறுக்கவில்லை என்ற பெயர் நமக்குக் கிடைக்கலாம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை குர்ஆனில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு வசனம் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அனைத்து நபித் தோழர்களாலும் நீக்கப்பட்டு விட்டதாகக் கூறும் விபரீதமான கருத்து இதனால் உருவாகின்றது.

மேலும், குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; எந்த வசனத்தையும் யார் வேண்டுமானாலும் நீக்கி விடலாம் என்ற நிலையில் தான் குர்ஆன் இருந்தது என்ற கருத்தையும் இது தருகின்றது.

எனவே இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்து விடும் இந்தக் கருத்தை ஆயிஷா (ரலி) கூறியிருக்க மாட்டார்கள் என்று நல்லெண்ணம் வைப்பது தான் உண்மை விசுவாசிகளின் நிலையாக இருக்க வேண்டும்.

நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது'' என்று காரணம் கூறி இந்தச் செய்தியை உண்மை என்று நம்பினால் அது திருக்குர்ஆனின் நம்பகத்தன்மையைப் பாதிப்பதாக அமைந்து விடும் என்பதைக் கவனத்தில் கொண்டு நம்மால் கண்டு பிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை இதில் இருக்கலாம் என்று கருதி இதை நிராகரித்து விட வேண்டும்.

மேற்கண்ட ஹதீஸ்களை உதாரணமாக எடுத்துக் காட்டி இவை குர்ஆனுக்கு முரண்பட்டுள்ளதால் ஏற்கத்தக்கவை அல்ல என்று நாம் கூறியதை மறுப்பதற்காக மறுப்புக் கட்டுரை வெளியிட்ட இஸ்மாயீல் ஸலஃபி அவர்கள் சூனியம் பற்றிய ஹதீஸுக்கு மட்டும் சப்பைக் கட்டு கட்டி விட்டு மற்றவைகள் விஷயத்தில் அலட்சியம் காட்டியது எதைக் காட்டுகிறது? மேற்கண்ட கேள்விகளுக்கு அவருக்கும் அவருடன் துணை நின்ற 26 உலமாக்களுக்கும் பதில் சொல்ல முடியவில்லை என்பதைத் தானே காட்டுகிறது? எனவே நாம் மறுத்த மேற்கண்ட ஹதீஸ்களை இஸ்மாயீல் ஸலஃபியும் மறுக்கிறார் என்பது உறுதியாகி விட்டது.

மேற்கண்ட ஹதீஸ்களைத் திடீரென்று நாம் சுட்டிக் காட்டியதால் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள் என்று யாரும் கருதி விடக் கூடாது. ஏனெனில் இவை திடீரென்று இணைய தளம் மூலம் சுட்டிக் காட்டப்படவில்லை. கிட்டத்தட்ட. ஆறு ஆண்டுகளாக திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் இடம் பெற்று வருகின்றது. அதை இஸ்மாயீல் ஸலஃபியும் அவரைச் சேர்ந்தவர்களும் பார்வையிட்டிருக்கிறார்கள். அதற்கு மறுப்பாகத் தான் எட்டுத் தொடர் கட்டுரையும் எழுதினார்கள். மறுப்பு எழுதுவதற்காக முன் வந்த போதும் மேற்கண்ட ஹதீஸ்கள் குறித்து அவர்களால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.

ஆக ஆறு ஆண்டுகளாகச் சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை என்பதில் இருந்தே அவர்களிடம் உண்மை இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டி இருந்தும் அவர்கள் பதில் சொல்லவில்லை என்பதற்காக அவற்றை மட்டும் இந்தத் தொடரில் நினைவுபடுத்தியுள்ளோம்.

(திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் குறிப்பிடாத இது போன்ற ஹதீஸ்கள் இன்னும் உள்ளன. அவற்றை நாம் இறுதியாகச் சுட்டிக் காட்டுவோம்.)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் கூறுவது போல் ஹதீஸ் கலையில் இப்படி ஒரு விதி இல்லை. இவர்கள் தான் புதிதாக இதைக் கூறுகிறார்கள் என்பது தான் இவர்களிடம் இருக்கும் ஒரே பதில்.

எனவே இது பற்றியும் நாம் விளக்க வேண்டியுள்ளது. நாம் கூறுவது போல் விதி உள்ளது. அதை எடுத்துக் காட்டுவதற்கு முன்னால் அதை விட முக்கியமான ஒரு விஷயத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

ஹதீஸ் கலை விதிகள் என்பது அல்லாஹ்வும், அவனது தூதரும் வகுத்துத் தந்தது அல்ல. மாறாக ஒரு செய்தியை ஏற்பதற்கு எத்தகைய வழிகளைக் கடைப் பிடிக்கலாம் என்று திருக்குர்ஆன் அடிப்படையிலும், ஹதீஸ்கள் அடிப்படையிலும், அறிவுப்பூர்வமான வாதங்களின் அடிப்படையிலும் அறிஞர்கள் ஆய்வு செய்து விதிகளை வகுத்தார்கள். அந்த விதிகள் அனைத்தும் ஒரே நாளில் வகுக்கப்பட்டவை அல்ல. ஒரே நபராலும் வகுக்கப்பட்டவை அல்ல.

அவ்வப்போது அறிஞர் ஒருவர் ஒரு விதியைக் கூறுவார். அது குறித்து வாதப்பிரதிவாதங்கள் நடக்கும். அந்த விதியை குர்ஆன் அடிப்படையிலோ, ஹதீஸ் அடிப்படையிலோ உடைக்க முடியாமல் இருந்தால் அது விதியாக ஆகிவிடும். யாராலும் உடைக்க முடியாத நிலையில் அது இருந்ததால் தான் அது விதியாக ஆனது. எத்தனையோ அறிஞர்கள் வகுத்த விதிகள் நிராகரிக்கப்பட்டு விட்டன. காரணம் அவை உடைக்கக் கூடிய வகையில் அமைந்திருந்தது தான்.

எனவே ஹதீஸ் கலையில் இப்படி ஒரு விதி இல்லை என்று வைத்துக் கொண்டாலும் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு ஆண்டுகள் பலவாகியும் ஒருவருக்கும் பதில் சொல்ல முடியவில்லை என்றால் இதை ஹதீஸ் கலை விதியில் புதிதாகச் சேர்த்துக் கொள்ள வேண்டியது தானே?

யாராலும் பதில் சொல்ல முடியாவிட்டால் அது சரியானதாக உள்ளது என்பது பொருள். அது சரியானது என்றால் அது புது விதியாக ஆவதற்கு என்ன தடை இருக்க முடியும்?

ஹதீஸ் கலையில் இப்போது உள்ள விதிகளில் நாம் ஏற்றுக் கொள்ளும் எந்த விதியாக இருந்தாலும் அதை உடைக்கும் வகையில் யார் கேள்வி கேட்டாலும் அதற்கு முன்னரே பதில் சொல்லப்பட்டிருக்கும். அல்லது நம்மால் அதற்குப் பதில் சொல்லும் வகையில் அறிவுப்பூர்வமாக அமைந்திருக்கும்.

அறிஞர்கள் கூறிய விதிகளில் எந்த விதிகளுக்கு எதிராகக் கேள்வி கேட்கப்படும் போது முன்பே பதில் சொல்லப்படாமல் உள்ளதோ, அல்லது அந்தக் கேள்விகளுக்கு இப்போது ஒருவராலும் பதில் சொல்ல முடியாமல் உள்ளதோ அது தவறான விதி என்று நிராகரித்து விட வேண்டும்.

ஆய்வு செய்து எடுக்கப்படும் சட்ட திட்டங்களை எவ்வாறு சிந்தித்து ஏற்றுக் கொள்ள வேண்டுமோ அது போல் ஹதீஸ் கலை விதியும் சிந்தித்து ஏற்றுக் கொள்ளப்படுபவை என்பதை உசூல்(?) பேசுவோர் உணரவில்லை. அது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு ஏற்க வேண்டிய ஒன்று என நினைக்கின்றனர். (உசூல்) விதி உள்ளதா என்று இதனடிப்படையில் தான் கேட்கின்றனர். ஒரு வாதத்துக்கு இப்படி ஒரு விதி இது வரை கூறப்படாவிட்டால் கூட நாம் கூறுவது சரியானது என்றால் அது விதியாகக் கருதப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கத் தக்க பதிலைக் கூறி மறுக்க வேண்டும்.

அடுத்து இன்னொரு அடிப்படையையும் நாம் விளக்கியாக வேண்டும்.

ஹதீஸ்களாக இருந்தாலும் ஆய்வு செய்யத் தக்க வேறு எந்த நூலாக இருந்தாலும் அதில் பல துறையினருக்கு வேலை இருக்கும். ஒவ்வொரு துறையினரும் தத்தமது வட்டத்துக்குள் நின்று ஆய்வு மேற்கொள்வார்கள்.

உதாரணமாக ஒரு மனிதனின் உடல் நலம் குறித்து பல துறையினர் சோதனை மேற்கொள்வார்கள்.

பல் மருத்துவர் ஒரு மனிதனைத் தமது துறை தொடர்பான ஆய்வு செய்து இவருக்கு நோய் இல்லை என்று கூறினால் அவருக்கு எந்த நோயும் இல்லை என்று புரிந்து கொள்ள மாட்டோம். பல் நோய் இல்லை என்றே முடிவு செய்வோம்.

இதய நோய் மருத்துவர் ஒரு மனிதனைப் பற்றி நார்மல் என்று கூறி விட்ட பிறகு அவருக்குப் புற்று நோய் இருக்கலாம். இதனால் அந்த மருத்துவர் சரியாகச் சோதிக்கவில்லை என்று யாரும் கருத மாட்டோம்.

இது போல் தான் ஹதீஸ்களிலும் பல துறையினருக்கு வேலை உண்டு.

ஒரு இலக்கிய ஆர்வம் உள்ளவர் ஹதீஸில் ஆய்வு செய்தால் அவர் பார்வை இலக்கியம் குறித்ததாகத் தான் இருக்கும். ஆஹா அற்புதம் என்று இலக்கிய மேதை நற்சான்று அளிக்கும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டதாக இருக்கலாம். ஏனெனில் அவர் அறிவிப்பாளர் குறித்து ஆய்வு செய்ய மாட்டார்.

அது போல் அறிவிப்பாளர் தொடர்பாக மட்டும் ஆய்வு செய்வதே ஹதீஸ் துறையினரின் ஒரே பணி. அவர்கள் ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர்கள் குறித்து ஆய்வு செய்து பார்த்து விட்டு இது சரியான செய்தி என்று கூறினால் அதன் பொருள் என்ன? இதை அறிவிக்கும் ஆட்கள் குறித்து எங்களிடம் உள்ள தகவல்களை வைத்து ஆய்வு செய்ததில் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று தெரிகிறது என்பது தான் இதன் பொருள். இதன் கருத்து சரியானது என்பது அதன் பொருள் அல்ல. ஏனெனில் அவர்கள் கருத்தைக் குறித்து ஆய்வு செய்யவில்லை. அது அந்தத் துறையின் வரம்புக்குள் வரக் கூடியதுமல்ல. சரியான ஹதீஸின் இலக்கணம் கூறும் போது அது குர்ஆனுக்கு முரணாக இருக்கக் கூடாது என்று இவர்கள் கூற மாட்டார்கள். அவர்களின் துறைக்கு இது சம்மந்தமில்லாதது.

சட்ட வல்லுனர்கள் தான் கருத்துக்களில் கவனம் செலுத்தி மற்ற ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து கருத்து சரியானதா என்று தீர்மானிப்பவர்கள். குர்ஆனுக்கு முரணாக இருப்பவையும், நடைமுறை உண்மைக்கு முரணாக இருப்பவையும் அறிவிப்பாளர் சரியாக இருந்தாலும் அவை சரியான செய்தி அல்ல என்று இவர்கள் முடிவு செய்வார்கள்.

எனவே எந்த ஹதீஸாக இருந்தாலும் அது ஸஹீஹானது என்று ஹதீஸ் துறையினர் கூறினால் அறிவிப்பாளர்கள் சரியாக உள்ளனர் என்பதைத் தான் கூறுகிறார்கள். கருத்து சரியானது என்பதைக் கூறவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்மாயீல் ஸலஃபி போன்றவர்கள் ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்கலாமா என்று கேட்பதற்கு இது குறித்த அறியாமை தான் காரணமாக உள்ளது. இது தெளிவாக ஹதீஸ் துறை நூல்களில் தெளிவுபடுத்தப்பட்ட உண்மை தான்.

சில அறிஞர்கள் ஒரு துறையில் சிறந்து விளங்கினால் மற்றும் சிலர் இன்னொரு துறையில் சிறந்து விளங்குவார்கள்.

ஆனால் சில அறிஞர்கள் இரு துறையிலும் வல்லவர்களாக இருப்பார்கள். அவர்கள் சரியான ஹதீஸுக்கு இலக்கணம் கூறும் போது இரண்டையும் இணைத்துக் கூறுவார்கள். அதாவது அறிவிப்பாளரும் சரியானவர்களாக இருக்க வேண்டும். கருத்தும் சரியாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் அது சரியான ஹதீஸ் என்று கூறுவார்கள்.

இது குறித்து ஹதீஸ் துறையில் கூறப்பட்டுள்ளவை என்ன என்பதை அடுத்த வாரம் காண்போம் இன்ஷா அல்லாஹ்.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் இலக்கணம்_4

திருக்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று நாம் கூறுவது நமது மனோ இச்சையின் அடிப்படையில் அல்ல. மாறாக திருக்குர்ஆனிலிருந்தும் நம்பகமான ஹதீஸ்கள் என்று உறுதி செய்யப்பட்ட ஹதீஸ்களில் இருந்தும் இந்த விதியை நாம் அறிந்து கொள்ளலாம்.

நபித்தோழர்களும் தமது வாழ்வில் இந்த விதியைக் கடைப்பிடித்துள்ளார்கள். ஹதீஸ் கலை அறிஞர்களும் இந்த விதியை வகுத்துள்ளனர். நல்லறிஞர்களும் இந்த விதியின் அடிப்படையில் சில ஹதீஸ்களை மறுத்துள்ளனர்.

முஸ்லிம்களாகிய நாம் திருக்குர்ஆனை இறை வேதம் என்று நம்புகிறோம்.

மார்க்கம் தொடர்பான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் ஆகியவற்றையும் அல்லாஹ்விடமிருந்து வந்தவை என்று நாம் நம்புகிறோம். இவ்வாறு நாம் நம்பினால் தான் இஸ்லாம் என்ற வட்டத்துக்குள் இருக்க முடியும்.

அல்லாஹ்விடமிருந்து வரும் செய்திகளுக்கும் மனிதர்களிடமிருந்து வரும் செய்திகளுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. மனிதர்களின் செய்திகளில் முரண்பாடுகள் இல்லாமல் இருக்காது. ஆனால் அல்லாஹ்வின் செய்தியில் முரண்பாடு அறவே இருக்காது என்பது அவற்றுள் முக்கியமான வேறுபாடாகும்.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

திருக்குர்ஆன் 4 : 82

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.

திருக்குர்ஆன் 41 : 42

மனிதர்களிடம் ஏன் முரண்பாடுகள் ஏற்படுகின்றன? அல்லாஹ்வின் வார்த்தையில் ஏன் முரண்பாடு ஏற்படுவதில்லை?

முன்னர் பேசியதை மறந்து விடுதல்! முன்னர் தவறாக விளங்கியதைப் பின்னர் சரியாக விளங்குதல்! போதுமான கவனமின்றிப் பேசுதல்! யாரிடம் பேசுகிறோமோ அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக அல்லது அவர்களிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக வளைந்து கொடுத்துப் பேசுதல்! வயது ஏற ஏற மூளையின் திறனில் ஏற்படும் குறைபாடுகள்! விளைவுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல்!

மற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதனுக்கு இருப்பதால் முரண்பாடுகள் இல்லாமல் பேச முடியாது. இது போன்ற பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவனாக இறைவன் இருப்பதால் அவனுடைய செய்திகளில் முரண்பாடு இருக்காது.

இறைவனின் வார்த்தைகளில் எவ்வாறு முரண்பாடு வராதோ அது போல் தான் நபிகள் நாய்கம் (ஸல்) அவர்களின் வார்த்தைகளிலும் முரண்பாடு வரக் கூடாது. மேலும் திருக்குர்ஆனுக்கு முரணாகவும் இருக்கக் கூடாது.

ஏனெனில் நபிகள் நாயகம் அவர்கள் மார்க்கம் என்ற அடிப்படையில் பேசிய அனைத்தும் அவர்கள் சுயமாகக் கூறியவை அல்ல. மாறாக அவை அனைத்தும் இறைவன் புறத்திலிருந்து வந்தவையாகும்.

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

திருக்குர்ஆன் 53 : 4

திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளும் இறைவன் புறத்தில் இருந்து வந்ததால் இரண்டு செய்திகளும் ஒன்றுடன் ஒன்று பொருந்திச் செல்லுமே தவிர முரண்பட்டு விலகிச் செல்லாது.

நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஒரு செய்தி கிடைக்கிறது. அந்தச் செய்தி திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாக நமக்குத் தோன்றுகிறது. முரண்பாடு இல்லாத வகையில் இரண்டுக்கும் இணக்கமான விளக்கம் கொடுக்க எவ்வளவு முயன்றாலும் இயலவில்லை என்றால் இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

முரன்பாடான இரண்டு விஷயங்களில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். முரண்பட்ட இரண்டு விஷயங்களும் ஒருக்காலும் உண்மையாக இருக்க முடியாது.

குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸை ஏற்றுக் கொண்டால் குர்ஆனை மறுக்கும் நிலை ஏற்படும்.

குர்ஆனை ஏற்றுக் கொண்டால் குறிப்பிட்ட அந்த ஹதீஸை மறுக்கும் நிலை ஏற்படும்.

இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன?

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸை விட்டு விட்டு குர்ஆனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

இவ்வாறு நாம் முடிவு செய்வதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனுக்கு மாற்றமாகப் பேசி விட்டார்கள் என்பது பொருளல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லி இருக்க மாட்டார்கள்; சொல்லவில்லை என்பதே இதன் பொருள்.

அப்படியானால் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை என்று ஆகிவிடுமே என்ற சந்தேகம் எழலாம்.

ஹதீஸ்களும் நிச்சயம் பாதுகாக்கப்பட்டுள்ளன. எந்த மனிதரின் போதனைகளும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை அளவுக்குப் பாதுகாக்கப்படவில்லை. அந்த ஒரு மனிதரின் போதனைகளைப் பாதுகாப்பதற்காக ஐந்து லட்சம் அறிவிப்பாளர்களின் வரலாறுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்தப் பாதுகாப்பு ஏற்பட்டை திருக்குர்ஆனின் பாதுகாப்புடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

1- திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே எழுத்தர்கள் மூலம் எழுதச் செய்து பாதுகாக்கப்பட்டது. ஆனால் ஹதீஸ்கள் அனைத்தையும் பாதுகாக்க நபிகள் நாய்கம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. மிகச் சில நபித் தோழர்கள் மிகச் சில ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொண்டார்கள். அனைத்து ஹதீஸ்களும் எழுதப்படவில்லை.

2- நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது திருக்குர்ஆனைத் தாமும் மனனம் செய்தார்கள். பல நபித்தோழர்களூம் மனப்பாடம் செய்திருந்தனர். இது போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை. அனைத்து ஹதீஸ்களையும் மனப்பாடம் செய்த ஒரே ஒரு நபித்தோழர் கூட இருந்ததில்லை.

3- நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது ஒவ்வொரு ஆண்டும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து திருக்குர்ஆனைச் சரி பார்ப்பார்கள். இது போன்ற பாதுகாப்பு ஹதீஸ்களுக்கு இருக்கவில்லை.

4- நாம் இப்போது எதைத் திருக்குர்ஆன் என்று கூறுகிறோமோ அது தான் திருக்குர்ஆன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் அனைவரும் ஒருமித்து அடுத்த தலைமுறைக்குச் சொன்னார்கள். இப்படி ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த முஸ்லிம்கள் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லாமல் இது தான் குர்ஆன் என்று அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்தார்கள்.

ஆனால் ஹதீஸ்களைப் பொருத்தவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு நபித்தோழரோ இரண்டு மூன்று நபித் தோழர்களோ தான் அடுத்த தலைமுறைக்கு - அதாவது அடுத்த தலைமுறையில் சிலருக்குச் - சொன்னார்கள். இப்படி ஒவ்வொரு காலத்திலும் மிகச் சிலர் தான் அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தினார்கள்

5- எழுத்து வடிவில் அனைத்து ஹதீஸ்களும் பாதுகாக்கப்படாததால் ஹதீஸ்கள் நூல் வடிவம் பெறும் காலம் வரை கட்டுக்கதைகளும் ஹதீஸ்கள் என்ற பெயரில் நுழைந்தன. ஆனால் குர்ஆனில் எந்த வார்த்தையும் எந்தக் காலத்திலும் இட்டுக்கட்டிக் கூறப்படவே இல்லை.

6- குர்ஆனை அல்லாஹ்வே பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். ஆனால் ஹதீஸ்களைப் பொருத்தவரை அறிஞர்கள் தான் இதற்கான விதிகளைக் கண்டறிந்து ஹதீஸ்களைப் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை என்பதால் மனிதர்கள் வகுத்த பாதுகாப்பு வளையத்தை மீறி தவறான ஹதீஸ்கள் சரியான ஹதீஸ்கள் என்ற பெயரில் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதையும் களை எடுப்பதற்குத் தான் பலவித நிபந்தனைகளை அறிஞர்கள் வகுத்தனர். அவற்றில் ஒன்று தான் குர்ஆனுக்கு முரண்படாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை.

இதை நாம் புதிதாகக் கண்டு பிடித்துக் கூறுவது போல் ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. காலம் காலமாக இது ஹதீஸ் கலையில் விதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதே உண்மையாகும்.

இது குறித்து விரிவாக விளக்கினால் கட்டுரை நீண்டு விடும். இஸ்மாயீல் ஸலஃபி அவர்களின் ஸிஹ்ர் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிப்பது தாமதமாகிவிடும். எனவே கட்டுரையை நீட்டாமல் முழுமையான விளக்கத்தை அறிந்திட உதவும் வகையில் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தும் முழு நூலை வெளியிட்டுள்ளோம். அப்பாஸ் அலி எழுதிய அந்த நூலில் இது குறித்து போதுமான ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன. அந்த நூலை நமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். அதை முழுமையாக வாசிப்பது இது குறித்த முழுமையான தெளிவைத் தரும். அந்த நூலை வாசிக்க இங்கே கிளிக்செய்யவும். அந்த நூலில் எடுத்துக் காட்டப்படும் ஆதாரங்கள் அனைத்தும் நமது கட்டுரையின் ஒரு பகுதி என்று கருதி அதற்கும் இஸ்மயீல் ஸலபி அவர்கள் பாதிலளிக்க வேண்டும்.

அடுத்த தொடரில் இருந்து ஸிஹ்ர் தொடர்பாக இஸ்மாயீல் ஸலஃபி அவர்களின் வாதங்கள் ஆய்வு செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்.

19.10.2009. 06:15




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
78 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி