விருதுகள் பற்றி TNTJ நிலைபாடு என்ன?
விருதுகள் பற்றி TNTJ நிலைபாடு என்ன?
சமுதாயப் பணியில், மிகச் சிறந்த சேவையில் முதன்மையாக இரத்த தானம், முதியோர் இல்லம், அனாதை இல்லம், மற்றும் சமுதாய சிந்தனை, மக்கள் முன்னேற்றம், நிவாரண நிதி என்று மக்கள் பணியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு, யார் யாரோ ஊர் பேர் தெரியாத சிலருக்கு பத்மபூஷன் விருது கொடுத்து கவுரவப்படுத்தி இருக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி தங்கள் கருத்து என்ன?
- எம்.அலாவுதீன்
அண்ணாநகர், மதுரை
? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையை அறியாமல் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். நம்முடைய ஜமாஅத் அரசாங்கத்தின் சார்பில் தரப்படும் இது போன்ற விருதுகளைப் பெற்றுக் கொள்வது இல்லை என்பதைக் கொள்கையாக்க் கொண்டுள்ளது.
வெளிப்படையாக நிரூபிக்கப்படும் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெறும் போது அளிக்கும் விருதுகளும் பரிசுகளும் மட்டுமே உண்மையானது.
மற்ற அனைத்துமே கள்ளவிருதுகளாகும். ஒரு எழுத்தாளருக்கு விருது வழங்கும் போது வெளிப்படையாக அனைத்து எழுத்தாளர்களுக்கும் போட்டி வைத்து அதில் வெற்றி பெற்ற அடிப்படையில் வழங்கினால் அது தான் விருதாகும். சிந்தனையற்ற சிலர் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு அரசியல்வாதிகள், மற்றும் பணமுதலைகளின் பரிந்துரை அடிப்படையில் சிலருக்கு வழங்கும் விருதுகளை மானமுள்ள யாரும் ஏற்கக் கூடாது.
நாட்டில் பல இயக்கத்தினர் இரத்ததானம் செய்கின்றனர். அவர்களில் யார் அதிக எண்ணிக்கையில் செய்துள்ளனர் என்பதற்காக வழங்கப்படும் விருதுகளை மட்டும் தான் நாம் பெற்றுக் கொள்வோம். வெளிப்படையாக தகுதிகளை நிரூபிக்காமல் கண்டவர்களுக்கும் வழங்கும் விருதுகளை அரசாங்கம் வழங்கவும் கூடாது, நாணயமுள்ள யாரும் அதைப் பெற்றுக் கொள்ளவும் கூடாது. எனவே இதற்காக கவலைப்பட வேண்டாம்.
உணர்வு 16:24
21.02.2012. 12:39
