தமுமுக பேரணியை டிஎன்டிஜே தடுத்ததா?

தமுமுக பேரணியை டிஎன்டிஜே தடுத்ததா?

தமுமுக போராட்டத்துக்குத் தடை போட தவ்ஹீத் ஜமாஅத்துதான் காரணம் என்றும், வெகுண்டு எழுந்த கூட்டத்தைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் கதிகலங்கிப் போயுள்ளது என்றும் முகநூல்களில் பரப்புகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை?

சொல்லின் செல்வன், அதிராம்பட்டிணம்

தவ்ஹீத் ஜமாஅத் ஜெயலலிதா அவர்களை வானளாவப் புகழ்ந்து கொண்டிருக்கவில்லை. சட்டமன்றத்தில் பேசும்போதெல்லாம், இவர்கள் அடித்த ஜால்ராவைப்போல் ஜால்ரா அடிக்கவில்லை. மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்து கூறிக் கொண்டிருக்கவில்லை. அப்படியிருந்தும் தவ்ஹீத் ஜமாஅத் சொல்வதைக்கேட்டு முதல்வர் முடிவு செய்கிறார் என்று இவர்கள் சொல்வது உண்மையென்றால், இவர்கள் தங்களையும் அறியாமல் ஒரு உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள்.

ஜால்ரா அடிப்பவர்களைவிட தட்டிக்கேட்பவர்களுக்குத்தான் அல்லாஹ் மரியாதையை ஏற்படுத்துவான் என்ற உண்மையை இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள் என்பது தெரிகிறது. அதையாவது புரிந்துகொண்டு தவ்ஹீத் ஜமாஅத் போல் நடக்க முயற்சித்து இவர்கள் சொல்வதையும் ஜெயலலிதா கேட்பது போல் நடந்து கொள்ளட்டும்.

ஜெயலலிதா அவர்கள் நம்மைக்கேட்டு எந்த முடிவையும் எடுக்கும் அளவுக்கு நமக்கு அவருடன் நெருக்கம் ஏதுமில்லை. பிற இயக்கங்கள் குறித்து எந்த முடிவை எடுக்க வேண்டும் என்று இரகசியக் கோரிக்கை வைப்பதும் தவ்ஹீத் ஜமாஅத்தின் வழிமுறை அல்ல.

பொதுவாக சென்னையில் பேரணி நடத்துவது என்றால் போக்குவரத்துக்குப் பாதிப்பு இல்லாத வகையில்தான் அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இது போல் யார் பேரணி நடத்தினாலும் தடையை மீறி கைதாவதற்கு உடன்பட்டுத் தான் நடத்த வேண்டும். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீதி மன்றத்தை அணுகினார்கள். நீதிமன்றம் இதை அனுமதிக்காது என்ற அறிவுகூட இவர்களுக்கு இருக்கவில்லை.

நீதிமன்றத்தை அணுகாமல் காவல் துறையிடம் பேசி நாங்கள் தடையை மீறுகிறோம் என்று சொன்னால் பேச்சுவார்த்தை மூலம் ஒரு இடத்தில் கூடச் செய்து அங்கே கைது செய்வார்கள். இதுதான் வழக்கமான நடைமுறை.

அதைச் செய்யாமல் உயர்நீதி மன்றத்தை இவர்கள் அணுகியது மடத்தனமானது. உயர்நீதிமன்றம் இதை அனுமதிக்காது என்ற சாதாரண விஷயம் கூட தெரியாமல் இவர்கள் என்ன இயக்கம் நடத்துகிறார்கள்? கடுகளவு அறிவுள்ளவனைக் கேட்டாலும் இவர்கள் கேட்ட இடத்தில் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதிக்காது என்று கூறிவிடுவார்.

நீதிமன்றம் தடையை உறுதி செய்யும் நிலையை இவர்களே ஏற்படுத்தினார்கள்.

உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட பின்னர் காவல் துறையினர் பேரணிக்காக கூடாமல் தடுத்து ஆக வேண்டும். இல்லாவிட்டால் நீதி மன்றத்துக்குப் பதில் சொல்லியாக வேண்டும். இந்த நிலையை இவர்களே ஏற்படுத்தினார்கள்.

நீதிமன்றம் தலையிடும் வரைதான் புரிந்துணர்வு அடிப்படையில் காவல்துறை செயல்பட முடியும். நீதிமன்றம் தலையிட்ட பின்னர் நீதிமன்றத்துக்கு பதில் சொல்வதற்கேற்பவே காவல் துறை நடக்க முடியும்.

இயக்கம் நடத்தக் கூடியவர்களுக்கு அறிவு இல்லாவிட்டால் அடுத்தவர் மீது பழி போடுவது என்ன நியாயம்?

வெகுண்டெழுந்த கூட்டத்தைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் அரண்டு போய்விட்டது என்று இவர்கள் கூறுவது தான் உச்சகட்ட காமெடியாக உள்ளது.

தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் பெரிய பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அதைவிடக் குறைவான மக்களையே இவர்களால் திரட்ட முடிந்தது என்பதை அறியலாம்.

தவ்ஹீத் ஜமாஅத் பலவீனமாக உள்ள மாவட்டம் கரூர் மாவட்டம். காவல்துறையின் காட்டு தர்பாரைக் கண்டித்து கண்டனப் போராட்டம் சென்ற வாரம் நடத்தப்பட்டது. முடிவு எடுத்து இரு நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில் ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். எவ்வித விளம்பரமும் உழைப்பும் இல்லாமல் இரு நாட்களில் பலவீனமான மாவட்டம் கூட்டிய கூட்டத்தில் பாதியைக்கூட இவர்கள் மாநில அளவில் கூட்ட முடியவில்லை எனும் போது நாம் ஏன் கதி கலங்க வேண்டும்.

சில ஊடகங்கள் (சன் டிவி உட்பட) நூற்றுக் கணக்கானோர் கைது என்று குறிப்பிட்டனர். அதிகபட்சமாக சுமார் 3000 பேர்கள் என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அந்தக் கூட்டத்தின் வீடியோவை நிறுத்தி நிறுத்தி எண்ணிப் பார்த்தால் மூவாயிரம் பேருக்குள் தேறுவார்கள்.

பல மாதங்கள் உழைத்து இலட்சக்கணக்கில் செலவு செய்த பின்னரும், நாற்பது மாவட்டங்களுக்கு 3000 பேர்கள் என்றால், மாவட்டத்திற்கு 75 பேர் வீதம் வந்துள்ளனர்.

சமுதாயத்தின் முக்கியமான கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டமாக இருந்தும், கடுமையாக உழைத்தும், இதற்காக ஏராளமான பொதுக்கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஊட்டியும், மாவட்டத்திற்கு 75பேர் வீதம்தான் வந்துள்ளனர் என்றால் அடித்தளம் அறவே சரிந்து விட்டதை அவர்கள் இதிலிருந்து உணர்வதற்கான எச்சரிக்கை மணியாகவே இது அமைந்துள்ளது.

இவர்கள் நீதி மன்றத்தை அணுகியது இதனால் கிடைக்கும் பரபரப்பிற்கும், விளம்பரத்திற்கும் உதவலாம். ஒரு நாள் செய்தியோடு இது முடிந்துவிடும்.

கட்டப் பஞ்சாயத்தைக் கைவிட்டு அடிமைச் சேவகம் செய்யும் போக்கில் இருந்து விடுபட்டு, 1995ல் காணப்பட்ட அர்ப்பணிப்பு மனப்பான்மையை நோக்கி இவர்கள் திரும்பாவிட்டால், இருக்கும் சிலரையும் இழப்பார்கள். இதைத்தான் இந்தக்கூட்டத்திலிருந்து இவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.

உண்மையில் சொல்லப்போனால் இவர்கள் தான் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

Published on: July 14, 2013, 2:04 AM Views: 5230

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top