தனி ஈழம் சாத்தியமா?

 தனி ஈழம் சாத்தியமா?

(திமுக மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவிப்பதற்கு முன் இந்த பதில் உணர்வில் வெளியானது என்பதைக் கவனத்தில் கொள்க)

இலங்கைப் பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இவர்கள் எதிர்பார்க்கும் பலன் ஏற்படுமா?

மசூது, கடையநல்லூர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்களின் முதல் கோரிக்கையாக தனிஈழம் என்பதை முன்வைக்கின்றனர். அதாவது இலங்கையின் வடக்கு மாகாணத்தை இலங்கையிலிருந்து பிரித்து அதைத் தமிழர்களின் தனிநாடாக ஆக்கவேண்டும் என்பது முதல்கோரிக்கை. 

அமெரிக்கா  கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கையாகும்.

இதில் முதலாவது கோரிக்கை எள்முனையளவும் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. எந்தநாடும் தனது நிலப்பரப்பைப் பிரித்து இன்னொரு நாட்டை ஏற்படுத்திவிட்டு ஒதுங்கிக்கொள்ள ஒப்புக் கொள்ளாது.

தனிநாடு கோருவோரின் கடுமையான பதிலடி காரணமாக, ராணுவமும் காவல்துறையும் சோர்வடைந்து இனிமேல் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்ற அளவுக்கு பலவீனம் அடையும்போது மட்டுமே வேறுவழி இல்லாமல் தொலைந்து போகட்டும் என இதற்கு ஒப்புக் கொள்வார்கள்.

அல்லது உலகநாடுகள் அனைத்தும் அல்லது வல்லரசுநாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கடும்விளைவு ஏற்படும் என்று எச்சரிக்கும் அளவுக்கு ஒருநாடு தனிமைப்படுத்தப்பட்டால் அப்போது வேறுவழியில்லாமலும், எஞ்சிய பகுதியையாவது தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தனிநாடு கோரிக்கையை அந்தநாடு ஏற்றுக்கொள்ளும்.

இலங்கையில் பிரபாகரன் உயிருடன் இருந்து இலங்கை அரசுக்கு எதிராகக் கடுமையான பதிலடி கொடுத்துவந்த போதும், வடக்குப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இலங்கை ராணுவம் நுழையவிடாமல் தடுத்துக்கொண்டு இருந்தபோதும், வடக்குப் பகுதியைக் கடந்து கொழும்பு நகருக்குள் ஊடுருவி இலங்கைத் தலைவர்கள் மற்றும் இராணுவத் தளங்களைத் தாக்கிய போதும், வேறுநாடாக இருந்தால் தொலைந்து போகட்டும் என்று தனிநாடாக ஆக்கி இருப்பார்கள்.

ஆனால் விடுதலைப்புலிகளின் கடுமையான அனைத்து தாக்குதல்களுக்குப் பின்னரும், இலங்கையானது தனிநாடு கோரிக்கையை ஏற்கமறுத்து விட்டது. சில ராணுவவீரர்கள் ராணுவத்தைவிட்டு ஓட்டம்பிடிக்கும் அளவிற்கு நிலைமை இருந்தும், அந்தநாடு தனிநாடு கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

இன்று அங்கு விடுதலைப்புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளனர். சரணடைந்த புலிகள்கூட பெரும்பாலும் கொன்று குவிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் குடும்பத்தில் இருந்த பெண்களும் சிறுவர்களும்கூட அழிக்கப்பட்டுவிட்டனர். தனிநாடு என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஒருவர் கூட இல்லாத அளவுக்கு துடைத்து எறியப்பட்ட பின்னர், தமிழகத்தில் உண்ணாவிரதம் இருப்பது இலங்கை அரசால் கோமாளித்தனமாகத்தான் பார்க்கப்படும். வேறு எந்தப் பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை.

விடுதலைப்புலிகளின் கடுமையான போராட்டத்தின்போது இலங்கைக்கு உலகநாடுகள் நெருக்கடி கொடுத்து இருந்தால், தனிஈழம் கிடைத்துவிடும் என்றநிலை ஒருகாலத்தில் இருந்தது. அப்போது இந்தியாவில் இருந்த ஐந்துகோடிக்கும் மேலான தமிழர்கள் மொழிஉணர்வின் காரணமாக ஒட்டுமொத்தமாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தனர். அரசியல் கட்சியினர் பெருமளவில் அவர்களுக்கு நிதியுதவி அளித்தனர்.

தமிழக ஆட்சியாளர்கள் விடுதலைப்புலிகள் தங்கிட இங்கு அடைக்கலம் கொடுத்தனர். ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுதிரண்டு ஆதரிக்கிறது என்ற நிலைமை காரணமாக, மத்திய அரசும் இலங்கை விவகாரத்தில் தலையிட்டது. அமைதிப்படையை அனுப்பி விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப்படாமல் காப்பாற்றியது. இலங்கையின்மீது அத்துமீறிப் பறந்து தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணவுப்பொட்டலங்கள் போட்டு, இலங்கை அரசுக்கும் கடுமையான எச்சரிக்கையும் விட்டது.

அந்தநிலை நீடித்து இருந்தால், உலகநாடுகளின் ஆதரவுடன் தனிநாடு அமைய இந்திய அரசும் உதவுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் விடுதலைப் புலிகள் தங்களது செயல்களால் நாசமாக்கி விட்டனர்.

இந்தியாவிற்குள்ளேயே தங்களது பயங்கரவாதச் செயல்களை விடுதலைப்புலிகள் அரங்கேற்றினார்கள். முன்னாள் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தியை இந்திய மண்ணில் அதுவும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்த தமிழகத்தில் வைத்தே சமாதி கட்டினார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடான இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக இவர்கள் நடத்திய போர் ஆறாதவடுவாக அதிகாரிகள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக யாரும் வாய்திறக்க முடியாதநிலை அப்போது தமிழகத்தில் ஏற்பட்டது. ஜெயலலிதா போன்ற சிலதலைவர்கள் விடுதலைப்புலிகளின் செயல்களை துணிவுடன் கண்டித்தனர். விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில் ஜெயலலிதாவும் உள்ளார் என்ற உளவுத்துறையின் தகவலால், அவருக்கு இசட்பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் மன்னிக்க முடியாத பாதகத்தைச் செய்த புலிகளை ஒழித்துக் கட்ட மத்தியஅரசு முழுவீச்சில் களமிறங்கியது.

ராஜிவ்காந்தியின் மனைவியிடமும், அவரது மகனிடமும் முழுஅதிகாரமும் குவிந்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் கணக்கைத் தீர்க்க அவர்கள் நினைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எனவே புலிகளை ஒழித்துக்கட்ட அனைத்து விதமான உதவிகளையும் இலங்கை அரசுக்கு மத்தியஅரசு செய்து கொடுத்ததிலும் ஆச்சரியம் இல்லை.

ஆயுத சப்ளை வழங்கி இந்திய ராணுவத்தின் உதவியுடன் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளித்தும், தேவையான வியூகங்களை வகுத்துக் கொடுத்தும், புலிகளை முற்றிலுமாக ஒழிக்க எல்லா உதவிகளையும் மத்திய அரசுசெய்து கொடுத்ததால்தான் இலங்கை ராணுவம் புலிகளை வேறோடு அழிக்கமுடிந்தது.

விடுதலைப்புலிகள் தங்களுக்கு பக்கபலமாக இருந்த மாபெரும் நாட்டை தங்களது கொடும் செயலால் எதிரியாக ஆக்கிக் கொண்டு இருக்கா விட்டால், தனிஈழம் இன்னேரம் அமைந்திருக்கலாம்.

அல்லது அதிகாரப் பகிர்வுடன் கூடிய தனிமாகாணம் இந்துத் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம். அதைக் கெடுத்து விடுதலைப்புலிகள் நாசமாக்கிக் கொண்டனர்.

மதத்தால் வேறுபட்டாலும், மொழியால் ஒன்றுபட்ட தமிழ்கூறும் முஸ்லிம்களைத் தங்களின் முதல்எதிரியாக இவர்கள் ஆக்கிக் கொண்டதாலும், முஸ்லிம்களை வேறோடு கிள்ளி எறிய அவர்கள் செய்த கொடுமைகளாலும், அவர்களின் பலம் குன்றியது. இந்துத்துவாவிற்கு நிகரான விடுதலைப்புலிகளை விட சிங்களபௌத்த வெறியர்கள் பரவாயில்லை என்ற நிலைமை இதனால் ஏற்பட்டது.

இவர்கள் போராளிகள் அல்ல பிறநாடுகளிலும் புகுந்து வன்முறையில் ஈடுபடும் பயங்கரவாதிகள் என்ற எண்ணம் (வல்லரசு நாடுகள் உட்பட) எல்லா நாடுகளுக்கும் ராஜிவ் கொலையால் ஏற்பட்டது. பலநாடுகளும் இவர்களைப் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது.

இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட சிங்களஅரசு அனைத்து நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டு புலிகளை முற்றாக ஒழித்தே கட்டிவிட்டது.

புலிகளின் கொடூரமான ஆட்சிமுறையால் சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து வந்த வடமாகாணத் தமிழர்கள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். எப்போது என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழ்ந்த நிலை மாறியுள்ளது. எனவே விடுதலைப் புலிகளின் பாதையில் செல்லக் கூடாது என்று இலங்கைத் தமிழர்கள் உறுதியுடன்உள்ளனர்.

இவர்களின் விருப்பத்திற்கு நேர்மாறாகத்தான் இங்குள்ளவர்கள் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி தங்களைத் தாங்களே ஏமாற்றி வருகிறார்கள்.

இங்கே இந்தக் கோரிக்கை வைப்பதால் அங்குள்ள இலங்கைத் தமிழர்கள்மீது அடக்குமுறை அதிகரிக்கத்தான் செய்யும். சிங்களர்களின் கோபம் தமிழர்களுக்கு எதிராகத் திரும்பும்பட்சத்தில் ராஜபக்சேஅரசு அதை வேடிக்கை பார்க்குமே தவிர, தமிழர்களைப் பாதுகாக்காது.

திராவிடநாடு கேட்டு அண்ணாதுரை போராடினார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்றெல்லாம் வாதங்களை எடுத்து வைத்தார். இந்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அதை அடக்கி விட்டது.

திராவிடநாடு கோரிக்கையை நாங்கள் கைவிடுகிறோம், ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியேதான் உள்ளன என்று அண்ணா அந்தர்பல்டி அடித்ததை நாம் மறந்துவிட முடியாது. காரணங்கள் இருந்தாலும் அதைக் கேட்டுப்பெற முடியாத அளவிற்கு அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அது கைவிடப்பட்டது. தனிநாடு கோரிக்கைக்கு இதுதான் முடிவாகும்.

ஆந்திராவை இரு மாநிலங்களாகப் பிரிப்பதற்கே பல உயிர்களைப் பலிகொடுத்து போராட வேண்டியிருக்கிறது. இன்னும் தெலுங்கானா உருவானபாடில்லை.

பாகிஸ்தான் பிரிவினையின் போது இருநாடுகளையும் வெள்ளையர்களே பிரித்துத் தந்துவிட்டு சென்றதால் பாகிஸ்தான் சாத்தியமானது. அவ்வாறு செய்யாமல் அவர்கள் சென்றிருந்தால் இந்த இருநாடுகளும் ஒரே நாடாகத்தான் இன்றுவரை இருந்திருக்கும்.

பங்களாதேஷ் நாடானது முஜிபுர்ரஹ்மானின் அவாமிலீக் கட்சியின் போராட்டங்களாலும், கடும் பதிலடிகளாலும் மட்டுமே உருவானதல்ல. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இந்திய ராணுவத்தை அனுப்பியதால்தான் கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷாக மாறியது.

பாலஸ்தீனம் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று சுதந்திரநாடாக ஐநாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்றால், அவர்கள் தங்கள் மண்ணுக்கு வெளியே வேறுநாடுகளில் எந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்பதும், முழு இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களிடத்திலிருந்து பிடுங்கப்பட்டது என்பதால் ஏற்பட்ட அனுதாபமும் காரணமாகஇருந்தது.

இது போன்ற எந்தச் சாதகமான அம்சமும் இலங்கையில் இல்லாத போது, இங்கிருந்து தனிநாடு கேட்பதற்கு நிகரான அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது.

அடுத்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அபத்தமான ஒன்றே. அமெரிக்கா தீர்மான நகலை வெளியிட்டு, அதன் நகலை வாசித்துப் பார்த்துவிட்டு இப்படியான கோரிக்கையை தமிழீழ ஆதரவாளர்களும் மாணவர்களும் வைக்கவில்லை.

மனிதஉரிமை மீறல்களிலும், போர்க்குற்றங்களிலும் முதல்இடத்தில் உள்ள அமெரிக்காவைப் பற்றி இங்குள்ள அரசியல்கட்சித் தலைவர்களுக்கு எந்த அறிவும் இல்லை என்று தான் நமக்குத் தோன்றுகிறது.

தனது ஆதாயத்திற்காக உலகநாடுகளை மிரட்டுவதும், காரியம் சாதித்துக் கொள்வதும் அமெரிக்கவிற்கு கைவந்த கலையாகும். தீர்மானம் கொண்டு வரப்போகிறோம் என்று பயம்காட்டி புரோக்கர் சுப்பிரமணியசாமி மூலம் அமெரிக்காவுக்குச் சாதகமாகப் பேசவேண்டியதைப் பேசிமுடிக்கத்தான் அமெரிக்கா இந்த நாடகத்தை நடத்தியது.

இலங்கை அரசுடன் அரசியல் புரோக்கர் மூலம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதால், உப்புசப்பு இல்லாத தீர்மானத்தைக் கொண்டு வந்து தமிழகப் போராளிகள் அனைவர் மீதும் கரியைப்பூசி விட்டது. ராஜபக்சே அரசு தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தத் தீர்மானம் உள்ளது.

ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக்கி அவரைத் தூக்கில் போடப் போகிறோம் என்ற தமிழகத் தலைவர்களின் கனவு முற்றிலும் கலைந்து விட்டது. இப்போது அனைவரும் அந்தர்பல்டி அடித்து, அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியஅரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றுபுரண்டு பேசுகிறார்கள்.

ஒரு தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கூறுவதற்கு முன் அந்தத் தீர்மானத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச பொறுப்புணர்வுகூட இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

அறிவுஜீவிகளுக்கும், ஊடகங்களுக்கும் கூட இந்த அறிவு இல்லாமல் போய்விட்டது.

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் ஒன்றே தனிஈழத்தைப் பெற்றுத்தரும், ராஜபக்சேயைத்த ண்டிக்கும் என்று சிறுபிள்ளைத்தனமாக ஊடகங்களில் முகம் காட்டியவர்கள் வெட்கமின்றி பல்டி அடிக்கின்றனர்.

எமது கணிப்பு பிரகாரம், தமிழகமே கொந்தளித்தாலும், மத்திய அரசு இலங்கைக்கும் ராஜபக்சேவுக்கும் எதிராக ஒன்றுமே செய்யாது. ராஜிவ்காந்தி படுகொலைக்கு கணக்கு தீர்ப்பதற்காக எந்த விலையையும் காங்கிரஸ் தமிழகத்தில் கொடுக்கும். ராஜபக்சேவுக்கு வலிக்காத வகையில் தடவிக் கொடுக்கும் மத்திய அரசின் நிலையில் எந்தமாற்றமும் இருக்காது.

Published on: March 20, 2013, 12:07 AM Views: 1285

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top