திரும்பவும் வராதா என்று போலீஸார்

திரும்பவும் வராதா என்று போலீஸார் ஏங்கிய அந்த மூன்று நாட்கள்!

 

தலைப்பைக் கண்டவுடன் போலீஸார் என்ன ஏக்கம் கொண்டார்கள்? திரும்பவும் வராதா என்று எந்த மூன்று நாட்கள் குறித்து ஏங்கினார்கள்? அளவுக்கதிகமாக மாமூல் வசூல் செய்யப்பட்ட நாளா அவர்கள் ஏங்கும் நாள்? என்ற சந்தேகமெல்லாம் உங்களது உள்ளத்தில் எழலாம்.

போலீசாரின் ஏக்கம் உண்மையாகவே மதிப்பளிக்கக்கூடிய வகையிலான நியாயமான ஏக்கம்தான் என்பதை அதற்கான செய்தியைப் பார்த்து விளங்கிக் கொள்ளலாம். போலீஸார் ஏங்கியதைப்போல ஒவ்வொரு தமிழக மக்களும் அந்த மூன்று நாட்களைப்போலவே வருடத்தின் மற்ற 365 நாட்களும் ஆகிவிடக்கூடாதா என்று ஏங்கக்கூடிய அளவுக்கு திரும்பவும் வராதா என்று போலீசார் ஏங்கிய அந்த நாட்கள் அமைந்துவிட்டன.

 

 

அதுகுறித்து தகவல்கள் இதோ :

கடந்த ஜனவரி மாதம் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

ஜனவரி 25, 26, 27 (மீலாடி நபி, குடியரசு தினவிழா, வள்ளலார் தினம்) ஆகிய அரசு விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வந்த காரணத்தால் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த மூன்று நாட்கள் மதுக்கடைகளை பூட்டியதன் விளைவாக எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் குற்றச்செயல்கள் குறைந்துள்ளனவா என்று சிவகங்கை மாவட்ட காவல்துறை மூலம் புள்ளிவிபரங்கள் திரட்டப்பட்டன.

மதுக்கடைகளை பூட்டியதன் காரணமாக அந்த மூன்று நாட்கள் குற்றச்செயல்கள் மிக மிகக் குறைவாகவே நடந்துள்ளன. இப்படி குற்றச்செயல்களே இல்லாத இதுபோன்ற மூன்று நாட்கள் திரும்பவும் வராதா என்று போலீசார் ஏங்கியுள்ளதாக அந்தப் புள்ளிவிபரங்கள் குறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகள் உங்கள் பார்வைக்கு!

மூன்று நாள் நிம்மதி மீண்டும் வருமா? - போலீசார் ஏக்கம்

காரைக்குடி: "டாஸ்மாக்' கடைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது. இந்த நாட்களில் குற்றங்கள் வெகுவாகக் குறைந்திருந்தது. மீண்டும் அத்தருணம் வருமா எனப் போலீசார் ஏங்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் நடக்கும் 75 சதவீத விபத்துக்களுக்கும், கொலை, கொள்ளைகளுக்கும் மதுவே காரணமாக உள்ளது. கடந்த ஜனவரி 25, 26, 27 தேதிகளில், முறையே மிலாடி நபி, குடியரசு தினம், வள்ளலார் தினம் என மூன்று நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை விடப்பட்டது. "டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டன.

அந்த 3 நாட்களிலும் போலீஸ் ஸ்டேஷன்களில் குறைவான வழக்குகள் பதிவானது, போலீசாரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது, காரைக்குடி வடக்கு ஸ்டேஷனில் 138 மது பாட்டில்கள் பறிமுதல் , குன்றக்குடியில் 52 மது பாட்டில்கள் பறிமுதல், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 வரதட்சணை வழக்குகள், தெற்குப் பிரிவில் ஒரு தற்கொலை வழக்கு, குன்றக்குடியில் ஒரே ஒரு டூவீலர் விபத்து வழக்கு ஆகியன மட்டுமே பதிவானது.

மதுவிலக்கு போலீசார் நடத்திய ரெய்டில், காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டையில், 427 மது பாட்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 இதே போல், 108 ஆம்புலன்சில், தினமும் 2 கேஸ்கள் எடுத்து வருவர். கடந்த ஜனவரி மாதம் மதுபானக் கடைகளுக்கு விடப்பட்ட 3 நாள் விடுமுறையில், காரைக்குடி, சிவகங்கையில் தலா 2 கேஸ்கள் வந்தன. மானாமதுரை, திருப்புவனத்தில் எதுவுமில்லை. அந்த 3 நாட்களிலும்அடிதடிதிருட்டு சம்பவங்களும் குறைந்ததால், மீண்டும் இதுபோன்ற தருணம் வருமா என்ற ஏக்கத்தில், போலீசாரும், பொதுமக்களும் உள்ளனர்.

சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: டாஸ்மாக் கடைகள் லீவு விட்டதால், வழக்குக்கு வேலை இல்லாமல் போனது. இதே நிலைமை தினமும் இருந்தால், குற்றங்கள் பாதியாகக் குறையும். மக்கள் நிம்மதியாக வாழ முடியும். இதற்கு அரசு முன் வர வேண்டும், என்றார்.

மேற்கண்ட புள்ளிவிபரங்கள் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்ட அந்த மூன்று நாட்களிலும் மற்ற மாவட்டங்களிலும், மற்ற ஊர்களிலும் உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ஆய்வு செய்தால் அங்கும் இதுபோல குற்றச் செயல்கள் குறைந்து இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

இப்படி போலீசார் அந்த மூன்று நாட்கள் வராதா என்று ஏங்கக்கூடிய நிலையில், பொதுமக்களும் அந்த மூன்று நாட்கள் திரும்பவும் வராதா என்று ஏங்கக்கூடியவர்களாக உள்ளார்கள் எனும்போது அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமாகத் திகழும் இந்த மது தேவைதானா என்பதை தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

நாட்டில் நடக்கக்கூடிய அடிதடி தகராறு, கொலைகள், கொள்ளைகள், வாகன விபத்துக்கள் போன்ற 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பிரச்சனைகளுக்கு மதுதான் காரணமாக உள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலுமா?

அப்படி இருக்கும்போது இந்த மது விறபனை மூலம் கல்லாகட்டி மக்களது வாழ்விலும், வயிற்றிலும் அடிக்கும் இந்தப்பிழைப்பு தேவைதானா என்பதை அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.

ஆனால் இவற்றையெல்லாம் அரசாங்கம் சிந்திப்பதுபோலத் தெரியவில்லை. மாறாக அந்த மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட்டால் ஏற்படும் பலகோடி ரூபாய் இழப்புகளை எப்படி சரிக்கட்டுவது என்று ஆய்வு செய்து எப்படியாவது குடிமகன்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மூன்று நாட்கள் கடை விடுமுறை விடப்போகின்றோம். எனவே முன்கூட்டியே ஸ்டாக் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று இவர்கள் அறிவிப்பு ஓட்டியுள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல், இதற்கென்றே டாஸ்மாக் மேலாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தைக் கூட்டி விற்பனையை அதிகரிப்பது எப்படி என்று ஆலோசனை செய்துள்ளனர்.

விற்பனை அதிகமில்லாத கடைகளில் உள்ள டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மீது, "சஸ்பெண்ட்' உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்

இதுபோன்று லீவு நாட்களில் குடிமகன்கள் வேறு எங்கும் சென்று குடித்துவிடக்கூடாது; அப்படி வேறு எங்காவது சென்று குடித்துவிட்டால் நமக்கு விற்பனை பாதிப்பு ஏற்படும் என்று கணக்குப்போட்ட அரசாங்கம், இதுபோன்ற விடுமுறை நாட்களில் ஹோட்டல்களில் உள்ள பார்களில் குடிக்கலாம் என்று ஏற்கனவே கொடுத்து வைத்திருந்த அனுமதிக்கும் ஆப்பு வைத்தது.

இந்த அளவிற்கு படுபிரயத்தனம் எடுத்து நாட்டு மக்களை குடிகாரர்களாக மாற்ற, சிறந்த குடிமகன்(?)களாக உருவாக்க அரசாங்கம் பாடுபடுகின்றதைப் பார்த்தால் நாடு எந்த நிலையை நோக்கி சென்று கொண்டுள்ளதோ என்ற அச்சம் நமக்கு ஏற்படுகின்றது. இவ்வளவு கூத்துக்களையும் இவர்கள் அடிக்கக் காரணம் பணம்தான்.

அதாவது டாஸ்மாக் கடைகள் மூலம் ஈட்டப்பட்ட விற்பனை விபரத்தைப் பாருங்கள் :

  தமிழகத்தில் செயல்படும், 6,850 "டாஸ்மாக்' கடைகள் மூலம், மது விற்பனை நடக்கிறது. மது விற்பனையை அரசே ஏற்று நடத்தத் துவங்கிய, 2003-04 நிதியாண்டில், 3,500 கோடியாக இருந்த மது விற்பனை, 2011-12ம் நிதியாண்டில், 20 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. நடப்பு, 2012-13ம் நிதியாண்டில், "டாஸ்மாக்' மூலம், 25 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்து, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் கடைகளில் வார நாட்களில், 50 கோடி ரூபாய் வரையிலும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில், 75 கோடி ரூபாயும், விசேஷ தினங்களில், 90 கோடி ரூபாயைத் தாண்டியும், மது விற்பனை நடப்பது வழக்கமாக உள்ளது.

 2013 புத்தாண்டை முன்னிட்டு, “டாஸ்மாக்விற்பனை இலக்கு, 200 கோடி ரூபாய்க்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 177 கோடிக்கு மட்டுமே விற்பனை நடந்தததால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், பொங்கல் பண்டிகை விற்பனை இலக்கு, 400 கோடி ரூபாயில் இருந்து, 300 ரூபாயாக அதிரடியாகக் குறைப்பு செய்யப்பட்டது. அதற்கு ஏற்ப விற்பனை இலக்கை பூர்த்தி செய்யும் வகையில், கடைகளில், 15 நாள் விற்பனைக்கு, தேவையான சரக்குகள் குவிக்கப்பட்டன.

இந்நிலையில், பொங்கலுக்கு முதல் நாள், ஜன., 13ம் தேதி, அதிகாரிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, 108 கோடி ரூபாய்க்கு, சரக்கு விற்பனை நடந்தது. அதைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகை நாளில், 112 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடந்து உள்ளது. இரண்டே நாளில், 220 கோடி ரூபாய் வரை, சரக்கு விற்பனை நடந்துள்ளது. இதுவே முதல் முறை. இதனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் நிர்ணயித்த இலக்கு பூர்த்தி ஆகிவிடும் என, அதிகாரிகள் நம்புகின்றனர். இது, அதிகாரிகளை நிம்மதிப் பெரு மூச்சு விடச் செய்துள்ளது.

மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டு மார்தட்டிக் கொள்கின்றனர். மதுக்கடைகள் மூலம் வரக்கூடிய வருமானம்தான் இவர்களது கண்களுக்குத் தெரிகின்றதே தவிர, மக்களுக்குத் தேவையான நிம்மதியை நாம் வழங்க வேண்டும்; சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் கிஞ்சிற்றும் இல்லை.

சட்டம் ஒழுங்குப் பிரச்சனை வராமல் பாதுகாப்பதுதான் சிறந்த ஆட்சி. அதைவிட்டுவிட்டு சட்டம் ஒழுங்கைக் கெடுக்க வழிவகை செய்துவிட்டு, அதற்கு அனுமதி அளித்துவிட்டு, அதனால் பெரும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்ட பிறகு, அதைத் தடுப்பது சட்டம் ஒழுங்கைப் பேணுவதாக ஆகாது என்று விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் முதலமைச்சர் கூறினார்.

அது இந்த மது விற்பனையை தமிழக அரசே ஏற்று நடத்தும் விஷயத்தில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அப்படியே பொருந்தும்.

இந்த மதுவினால்தான் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், அடிதடி, வெட்டு குத்து, விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதனால்தான் சட்டம் ஒழுங்கு கெடுகின்றது என்பது அப்பட்டமாகத் தெரியும்போது, மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தி விற்பனைகளைப் பெருக்கி சட்டம் ஒழுங்கைக் கெடுத்துவிட்டு, நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்புகளை ஒழிக்க குண்டாஸ் கொண்டு வந்து என்ன பிரயோஜனம் என்பதை தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களைக் காட்டிலும், மதுபான, சரக்கு விற்பனையில், தமிழகம், நம்பர் 1 இடத்தில் உள்ளது என்பதை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் அதிகமான விபத்துக்கள் நடப்பதும் தமிழகத்தில்தான் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

  இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இந்தியா முழுவதும் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதியினர் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் ஆண்டுக்கு, 4.4 லட்சம் சாலை விபத்துக்கள் நடப்பதாகவும், ஒரு லட்சத்து, 5 ஆயிரம் பேர் இறப்பதாகவும் அந்தப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கள் பட்டியலில் மற்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி, கடந்த ஆண்டில் தமிழகம் முதல் இடத்தை எட்டியுள்ளது. வாகன எண்ணிக்கையில், 1.4 கோடி வாகனங்களுடன், தேசிய அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள தமிழ்நாடு விபத்துக்களில் முதலிடம் பிடிக்கக் காரணம் இந்த மதுதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கும் அடிப்படையாகத் திகழும் டாஸ்மாக் கடைகளை அரசே ஏற்று நடத்தி மக்களை வழிகெடுக்கலாமா என்று நாம் கேள்வியெழுப்பினால், நாம் டாஸ்மாக் கடைகளை நடத்தாவிட்டால், மக்கள் கள்ளச்சாராயம் காய்ச்ச ஆரம்பித்துவிடுவார்கள். அதனால்தான் நாங்கள் குடிமகன்களுக்கு ஊத்திக் கொடுக்கின்றோம் என்று அரசாங்க தரப்பில் ரெடிமேட் பதில் ஒன்றை வைத்துள்ளனர். இது சரியா? மதுவை ஒழிக்க வழி என்ன? மதுக்கடைகளை ஒழித்தால் கள்ளச்சாராயம் பெருகுமா? கள்ளச்சாராயத்தை ஒழிக்க வழி என்ன? இவை குறித்த செய்திகளை 10ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள தனிக்கட்டுரையில் காண்க!

 

 

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

 

 

அல்குர் ஆன் 5 : 90, 91

Published on: March 14, 2013, 1:26 PM Views: 1151

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top