பரமக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி?

பரமக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி?
பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நமது அமைப்பின் சார்பாக அறிக்கையோ அல்லது உணர்வில் அதுபற்றி செய்தி விமர்சனமோ வரவில்லையே. இந்த விஷயத்தில் நமது அமைப்பின் நிலைப்பாடு என்ன
?

- சாதிக். கீழக்கரை

இது குறித்து ஜெயலலிதா மாறவில்லை என்ற தலையங்கத்தில் நாம் நமது கருத்தைக் கூறியுள்ளோம்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது.

தடியடி நடத்தி மக்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை எளிதாக கலைத்திருக்க முடியும். அதை காவல் துறையினர் செய்யவில்லை.

துப்பாக்கிச் சூடு நடத்துவதாக இருந்தால் கூட ரப்பர் குண்டுகளைத் தான் முதலில் பயன்படுத்த வேண்டும். அதையும் காவல் துறையினர் செய்யவில்லை.

அதையும் மீறி துப்பாக்கி சூடு நடத்துவதாக இருந்தால் முதலில் வானத்தைச் நோக்கிச் சுட்டு எச்சரித்து விட்டு பின்னர் முட்டுக்காலுக்குக் கீழே தான் சுட வேண்டும். இதனால் காயம் ஏற்படுமே தவிர யாரும் சாக மாட்டார்கள்.

இதில் எந்த ஒன்றையும் காவல் துறையினர் கடைப்பிடிக்கவில்லை. தலித் சமுதாயம் அல்லாத மேல் சாதி மக்களாக இருந்தால் இப்படி நடப்பார்களா என்ற கேள்வியை நாம் ஒதுக்கி விட முடியாது.

அதே நேரத்தில் தலித் சமுதாய மக்களுக்கும் தலைவர்களுக்கும் நாம் சில செய்திகளைச் சொல்லியாக வேண்டும்.

ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் ஒடுக்கப்பட்டு கிடந்தனர். இதை மாற்றியமைக்க வேண்டுமானால் நாம் மற்ற சமுதாய மக்களுக்குப் பயந்து நடுங்கியது போல் நம்மைப் பார்த்து மற்ற சமுதாயத்தினர் அஞ்ச வேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு விதைக்கப்படுகிறது.

மற்ற சமுதாய மக்களின் சொத்துக்களை அபகரித்தல், கூட்டம் சேர்த்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எதிர்ப்பவர்கள் மீது வன்முறையை ஏவுகின்றனர். அடங்க மறுப்போம் அத்து மீறுவோம் என்பது அவர்களின் பிரதான கொள்கையாக ஆக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு அவர்களின் தலைவர்கள் இப்படித் தான் அவர்களை வழி நடத்துகிறார்கள்.

தலித் சமுதாய மக்கள் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினால் மற்ற சமுதாய மக்கள் அஞ்சி நடுங்கி கடைகளை மூடி விடக் கூடிய நிலையை நாம் பார்க்கிறோம். அது போல் தான் அரசுக்கு எதிராக நடத்தும் ஆர்ப்பாட்டங்களின் போதும் அரசின் அதிகார பலத்தையும் விளைவுகளையும் பற்றி கவலைப்படாமல் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய வகையில் நடந்து கொள்கின்றனர்.

ஜனநாயக நாட்டில் நாம் போராட்டத்தின் மூலம் பல காரியங்களைச் சாதிக்க முடியும்
, ஆனால் நமக்கும் பொதுச் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படாத வகையில் அறிவுப்பூர்வமாக நடந்து கொண்டால் நமக்கு ஏற்படும் சேதங்களைத் தவிர்க்க முடியும்.

தூண்டிவிட்ட தலைவர்கள் 
போன உயிர்களைத் திருப்பித் தர முடியாது. அந்தக் குடும்பங்களுக்கு நிரந்தர பாதுகாப்பை தலைவர்கள் செய்ய மாட்டார்கள். அச்சம் என்பது மடமையடா என்பதை மட்டும் அறிந்தால் போதாது. அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்பதையும் சேர்த்து அறிந்து கொள்ள வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத் இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி பல போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆனால் ஒரு தடியடியோ பொதுச் சொத்துக்களுக்கு சேதமோ ஏற்படுத்தியதாக வரலாறு இல்லை. நம் மக்களுக்கு எந்தச் சேதாரமும் ஏற்படாமல் காரியம் சாதிக்க வேண்டும் என்ற கொள்கையே இதற்குக் காரணம்.

ஒரு அளவுக்கு மேல் போனால் போலீஸார் அதிகார பலத்தைக் காட்டுவார்கள் என்பதை உணர்ந்து ஒரேயடியாக பயந்து நடுங்காமலும் ஒரேயடியாக எகிராமலும் பக்குவமாக நடந்து கொண்டால் அது தான் சிறந்தது. இது கசப்பாக இருந்தாலும் உண்மையை நாம் சொல்லித்தான் ஆக வேண்டும்.
உணர்வு 16:7

 

Published on: November 14, 2011, 6:27 PM Views: 941

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top