நம் ராணுவ வீரர்களை பாகிஸ்தான் கொன்றது ஏன்?

நம் ராணுவ வீரர்களை பாகிஸ்தான் கொன்றது ஏன்?

இந்திய வீரர்கள் இருவர் எல்லைப்பகுதியில் தலை வெட்டிக் கொல்லப்பட்டதன் உண்மை நிலவரம் என்ன?

முகம்மது அபுதாஹிர், கம்பம்

காரணத்தைக் கண்டுபிடிக்காமல் அனைவரும் பிதற்றிக் கொண்டு உள்ளனர். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள எல்லைக்கோட்டை இருநாடுகளும் காவல் காப்பதில்லை. வாகா எல்லையில் ஒரு கோட்டைப் போட்டுவிட்டால் இங்கிருந்தும் அங்கிருந்தும் எவரும் உள்ளே போக முடியாது என்று இரு நாடுகளும் நினைக்கின்றன.

பாதுகாப்பு போடப்பட்ட சாலைகள் தவிர மற்ற பகுதிகளில் அந்த நாட்டில் இருந்து இந்த நாட்டிற்கும், இந்த நாட்டிலிருந்து அந்த நாட்டிற்கும் யாரும் போகலாம் என்ற பாதுகாப்பற்ற நிலையில்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது.

அதனால்தான் பாகிஸ்தானிலிருந்து கார்கில்வரை நெடுந்தூரம் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் ஊடுருவி, கார்கிலில் பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் குவித்து வைத்தது. இதை இந்திய அரசாங்கம் அறிந்து கொள்வதற்கே பல மாதங்கள் ஆயின.

இதன் பின்னர் இந்தியாவிற்கு உள்ளேயே இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்தது. பின்னர் கார்கிலிலிருந்து பாகிஸ்தான் வீரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.

அந்த நிலையில் இப்போதும்கூட பெரிய மாற்றம் ஏற்படவில்லை. எல்லையைக் காக்கும் இராணுவத்தினர் உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் குடிமக்களைக் கொன்று குவிக்கவும் பயன்படுத்தப்படுகின்றனர். பல இராணுவ அதிகாரிகளும் வீரர்களும் குடித்துவிட்டு காமக்களியாட்டத்தில் வீழ்ந்து கிடக்கின்றனர்.

இப்படி எல்லை திறந்து கிடக்கும்போது இந்திய வீரர்கள் நமது எல்லையை அறியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் போய்விடுவார்கள். பாகிஸ்தான் வீரர்கள் கண்களில் தப்பித் தவறி பட்டுவிட்டால் அவர்களைச் சுட்டுக் கொன்று பிணத்தை இந்திய எல்லைக்குள் போட்டு விடுவார்கள்.

இந்தச் செயலை இந்திய வீரர்களும் செய்கிறார்கள்.

அரசும் இராணுவமும் எதிரி நாட்டின் எல்லையை வரையறுத்து, ஒவ்வொரு அங்குலத்தையும் கண்காணிப்பதுடன் எல்லையைக் காப்பதுதான் இராணுவத்தின் முதல் வேலை என்பதை உணர்ந்து பாதுகாப்பைப் பலப்படுத்தினால் தவிர இதுபோன்ற கொலைகளைத் தடுக்க முடியாது.

பாகிஸ்தானிலிருந்து ஊடுருவும் பாகிஸ்தான் வீரர்களை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றாலும், இந்தியாவிலிருந்து ஊடுருவும் இந்திய வீரர்களை பாகிஸ்தான் இராணுவம் சுட்டுக் கொன்றாலும், இரு அரசுகளின் உத்தரவோ, இராணுவத் தலைமையின் உத்தரவோ இதற்குக் காரணமில்லை.

மாறாக ஆயுதம் தரித்து நமது எல்லைக்குள் யார் வந்தாலும் சுட்டுக் கொல்லலாம் என்ற பொதுவான இராணுவ விதிகள்தான் காரணம். மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டி இலங்கை எல்லைக்குள் செல்லும் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இராணுவ வீரர்கள் இன்னொரு நாட்டு எல்லைக்குள் போனால் சுட்டுத் தள்ளுவதும் அதை விடக் கடுமையானது.

பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்தியாவுக்குள் புகுந்து இங்குள்ள வீரர்களைக் கொன்று போட்டுவிட்டு ஓடிவிட்டது போல் கதையளந்து கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் கதையளப்பது உண்மை என்றால் நாட்டின் பாதுகாப்பு இன்னும் பலவீனமாக உள்ளது என்பதுதான் பொருள். பாகிஸ்தான் இரணுவம் நமது நாட்டுக்குள் ஊடுருவி வந்து கொன்றுபோடும் வரை நமது இராணுவ வீரர்கள் அப்படி என்ன கடமையைச் செய்துகொண்டு இருந்தார்களோ, தெரியவில்லை.

அப்படி நடந்திருந்தால், பொறுப்பற்ற நமது இராணுவ வீரர்கள்தான் கண்டிக்கப்பட வேண்டும்.

இது போன்று பா.ஜ.க. ஆட்சியின் போதும் நடந்தது என்று இராணுவத் தளபதியே கூறியிருக்கிறார். இப்போதுதான் இது முதல் முறையாக நடக்கவில்லை.

எல்லா ஊடகங்களும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருப்பதால், வரும் தேர்தலில் காங்கிரஸைத் தோற்கடிக்க இதைக் கையில் எடுத்துப் பெரிதாக்குகின்றன. தேர்தல் நெருங்கும் போதெல்லாம் ஊடகங்களின் இதுபோன்ற பாசிசம் தலைவிரித்தாடுவது வழக்கம்.

நாடு முழுவதும் சிறுமிகள் கற்பழிக்கப்படுகின்றனர்.டெல்லியை எடுத்துக் கொண்டால் கூட பா.ஜ.க. ஆட்சியிலும் இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் நடந்து வழக்குகளும் நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதால்,  எல்லா ஊடகங்களும் சங்பரிவாரத்தில் பயிற்சி எடுத்தவர்களின் ஆதிக்கத்தில் உள்ளதால், டெல்லியை மட்டும் குறிவைத்து விமர்சிக்கிறார்கள்.

பா.ஜ.க.வுக்கு ஆதரவான  நிலையை ஏற்படுத்த இதைப் பயன்படுத்துகிறார்கள்.

இது போன்றது தான் இராணுவ வீரர்களின் தலையை வெட்டி கொலை செய்த சம்பவமும்.

இது இரு தரப்பிலும் அடிக்கடி நடக்கும் சம்பவம்தான். இரு தரப்பிலும் எல்லையைக் காப்பதில் காட்டும் மெத்தனமும் அலட்சியமும் தான் காரணம்.

இதைப் புரிந்த நடவடிக்கை எடுத்தால் தவிர இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியாது.

Published on: April 30, 2013, 4:53 PM Views: 3569

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top