மகாவீர் ஜெயந்திக்கு கறிக்கடையை மூடவேண்டுமா

 

மகாவீர் ஜெயந்திக்கு கறிக்கடையை மூடவேண்டுமா?

(இந்த வார உணர்வு இதழில் வெளியான கேள்வி பதில்)

ஆண்டுதோறும் மகாவீர்ஜெயந்தி அன்று கறிக்கடைகளை மூடவேண்டும் என்று அரசாங்கம் தடைபோடுவது நியாயம்தானா? தவ்ஹீத் ஜமாஅத் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

மசூது, கடையநல்லூர்

மதுபானக்கடைகள் போன்ற தீமைக்குத் துணைபோகும் கடைகள் எப்போதும் மூடவேண்டியவை என்பதால், குறிப்பிட்ட நாட்களிலாவது மூடுகிறார்களே என்று வரவேற்கலாம்.

நல்லவற்றுக்குத் துணை செய்யும் கடைகளை மூடச்சொல்வது கண்டிக்கத்தக்கது. யாரோ ஒருவர் அறிவில்லாமல் புலால் உண்ணக்கூடாது என்று சொன்னால், அதில் நம்பிக்கை உள்ளவர்கள் கடைப்பிடித்து விட்டுப் போக வேண்டியதுதான். அதை நம்பாத மக்களிடமும் அதைத் திணிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை.

மகாவீரராக இருந்தாலும் வள்ளுவராக இருந்தாலும் அவர்கள் புலால் உண்ணக்கூடாது என்ற கொள்கையில் இருந்தால் அதுவே தவறு என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். கிறித்தவர்கள் நம்புகின்றனர். இந்து மதத்தில் உள்ள சிறுபிரிவைத் தவிர மற்ற அனைவரும் நம்புகின்றனர். அறிவுக்குப் பொருந்தாததும் நடைமுறைக்கு சாத்தியமில்லாததுமான இந்தக் கொள்கையைக் கண்டிக்க வேண்டுமே தவிர அதற்கு மதிப்பளிக்கக்கூடாது.

ஆட்சியில் இருப்பவர்கள் அப்படி மதிப்பளிப்பதாக இருந்தால் காலமெல்லாம் கசாப்புக்கடையை மூடிக்காட்டட்டும். யாரையோ திருப்திப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடிக்கின்றன. ஒருநாள் மட்டும் கசாப்புக்கடையை மூடிவிட்டு மற்ற நாட்களில் சாப்பிடுங்கள் என்பதுதான் மகாவீரரின் கொள்கையா? ஆட்சியில் உள்ளவர்களுக்குச் சிந்திக்கும் திறன் இருந்தால் இதுபோல் மக்கள் விரோதச் சட்டங்களைப் போடமாட்டார்கள்.

எவருடைய பிறந்த நாளுக்காகவும் ஒருமதத்தின் நம்பிக்கையை மற்ற மதத்தினர் மீது திணிப்பது அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

பெருநாள் தினத்தில் மகாவீர் ஜெயந்தி வந்து, அன்று கறிக்கடைகளை மூடவேண்டும் என்று உத்தரவு போட்ட கொடுமையை மூன்று ஆண்டுகளுக்கு முன் நாம் சந்தித்தோம். இதை எதிர்த்து கசாப்புக் கடைக்காரர்கள்தான் போராடினார்கள். அதில் முஸ்லிம் சமுதாயம் பெரிய அளவில் பங்கு கொள்ளவில்லை. கிறித்தவர்களும் பங்கு கொள்ளவில்லை. அசைவ உணவு உட்கொள்ளும் இந்துக்களும் பங்கு கொள்ளவில்லை.

இது அனைத்து மதத்தினருக்குமான பிரச்சனை. அடிப்படை உரிமை சம்பந்தமான பிரச்சனை என்று மக்கள் விளங்காமல் உள்ளனர். இதனால்தான் இந்தச் சட்டம் இன்னும் குப்பைக் கூடைக்குப் போகாமல் உள்ளது.

மற்றவர்கள் ஒதுங்கி இருந்தாலும் முஸ்லிம்களாவது நம்முடைய உரிமைகளுக்கு எதிரானதாகவும், நம்முடைய மதநம்பிக்கைக்கு எதிரானதாகவும் உள்ளது என்று கருத வேண்டும். அவ்வாறு கருதாமல் கசாப்புக் கடைக்காரர்களின் பிரச்சினையாகப் பார்க்கிறார்கள். எங்கள் மதநம்பிக்கையில் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஊரே திரண்டு போராடினால் இது போன்ற சட்டங்கள் குப்பைக்கூடைக்குப் போய் இருக்கும்.

பெருநாள் தினத்தில் மகாவீர் ஜெயந்தி வந்தால் தயிர் சாதம்தான் சாப்பிட வேண்டிவரும் என்பதையும், ஹஜ்ஜுப் பெருநாளின் போது குர்பானி கொடுப்பதற்கும் தடை செய்யப்படும் என்பதையும் புரிந்துகொண்டு அனைவரும் இதற்கு எதிராகத் திரள வேண்டும். பெருநாள் மட்டுமின்றி தனிமனிதனின் திருமணம், குடும்ப நிகழ்ச்சிகள், விருந்தினரை உபசரித்தல் போன்ற நேரங்களில் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுவோம்.

ரமலான் மாதத்தில் நாங்கள் நோன்பு வைப்பதால், எல்லா ஹோட்டல்களையும் பகலில் அடைக்க வேண்டும் என்று நாம் கோரினால் இவர்கள் ஏற்பார்களா?

பெரியாரின் பிறந்தநாள் அன்று எல்லா கோவில்களும் மூடப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டு வருவார்களா?

ஏசுவின் பிறந்த நாளையொட்டி அனைவரும் சிலுவையைச் சுமக்க வேண்டும் என்பார்களா?

என்றெல்லாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அந்த நிலை சமுதாயத்தில் ஏற்பட நிறைய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்து, இதன் மோசமான விளைவுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி தயார்படுத்திய பிறகே போராட்டத்தில் இறங்க வேண்டும்.

அடுத்த மகாவீர் ஜெயந்திக்குள் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இந்தச் சட்டம் குப்பைக் கூடைக்குப் போகாவிட்டால் சமுதாயமே திரண்டு எதிர்கொள்ள வேண்டும். இதை இப்படியே விடக்கூடாது

நீதிமன்றத்தை அணுகினால் மதச்சார்பின்மை அடிப்படையிலும் சட்டத்தின்படியும் தீர்ப்பு வழங்குவார்களா என்ற சந்தேகம் நமக்கு இருக்கிறது. பாபர் மசூதி தீர்ப்பைப் போலவும், ஒட்டகத்தை குர்பானி கொடுக்கக் கூடாது என்ற தீர்ப்பைப் போலவும் தீர்ப்பு வழங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை. நீதிமன்றத்தை அணுகவே அஞ்சும் நிலைதான் நமக்கு இருக்கிறது. இல்லாவிட்டால் இதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திப் பார்க்கலாம்.

இன்ஷா அல்லாஹ் - இது கசாப்புக் கடைக்காரர்களின் பிரச்சினை இல்லை என்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கும் பிற சமுதாய மக்களுக்கும் புரிய வைத்து பின்னர் நாம் கடுமையான போராட்டத்தை இதற்காக நடத்துவோம்.

 

Published on: April 30, 2013, 4:32 PM Views: 4378

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top