ஷரியத் கோர்ட்டுகள் சட்டப்படி செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஷரியத் கோர்ட்டுகள் சட்டப்படி செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

கலீல் ரஹ்மான், சேலம்

ஷரியத் நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்ற தீர்ப்பை சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் ஒரு தீர்ப்பை அளிக்கும்போது அதைச் செயல்படுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தவறிய நபரைக் கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.

நீதிமன்றத்தால் ஒரு விவாகரத்து வழக்கில் கணவன், மனைவிக்கு மாதம் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிப்பதற்கும், ஜமாஅத்துகளில் விவாகரத்து வழங்கும்போது மனைவிக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. 

நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பு மீறப்பட்டால் மீறியவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஜமாஅத்களில் வழங்கப்படும் தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்தால் மறுப்பவர் மீது எந்த சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது.

இந்தக் கருத்தில்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றம் இத்தீர்ப்பை அளிக்காவிட்டாலும் முஸ்லிம்களுக்கு இது தெரிந்த செய்திதான்.

முஸ்லிம்களுக்கு, சில விஷயங்களில் தனியாக சட்டம் நமது நாட்டில் உள்ளது என்றாலும் அதை நடைமுறைப் படுத்தும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கோ ஷரியத் நீதிமன்றங்களுக்கோ இல்லை. இந்த அடிப்படையில்தான் இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

”இந்த தீர்ப்பினால் முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏனெனில் இத்தீர்ப்புக்கு முன்னரும் இதே நிலைதான் இருந்தது. எனவே இத்தீர்ப்புக்கு பின்னர் புதிதாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.”

மேலும் முஸ்லிம் ஜமாஅத்துகளில் அளிக்கப்படும் மார்க்கத் தீர்ப்பை அல்லாஹ்விற்குப் பயந்து இருதரப்பும் ஏற்றுக்கொள்வதுதான் பெரும்பாலும் நடைமுறையாக உள்ளது. இருதரப்பும் மார்க்கத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும்போது நீதிமன்றங்கள் அதில் தானாக தலையிட முடியாது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் இந்த நிலைதான் நீடிக்கும்.

ஆயிரத்தில் ஒருவர் இத்தீர்ப்பை ஏற்காமல் கடந்த காலங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு இருக்கிறது. அதே நிலைதான் இனியும் இருக்கும்.

ஜமாஅத்துகளில் அளிக்கப்படும் மார்க்கத் தீர்ப்பை ஒருவர் ஏற்க மறுத்தால் அவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க எந்த ஜமாஅத்தும் முன்வர மாட்டார்கள்.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சம்மந்தப்பட்ட ஜமாஅத்தில் என்.ஓ.சி எனும் தடையில்லா சான்றிதல் வாங்கி வந்தால்தான் திருமணம் செய்து வைப்பார்கள். பெண் கொடுக்கவும் எடுக்கவும் மக்கள் முன்வருவதும் இதனடிப்படையில்தான்.

அல்லாஹ்வின் அச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தில் இணைந்து வாழ முடியாது என்பதால் ஜமாஅத் தீர்ப்புகளை ஒருபோதும் மீற மாட்டார்கள். இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் இந்த நிலைதான் நீடிக்கும்.

ஜமாஅத்தின் தீர்ப்பு செல்லாது என்று நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துவிட்டால் சம்மந்தப்பட்டவருக்கு முஸ்லிம் சமுதாயத்தில் உள்ளவர்கள் பெண் கொடுக்க எடுக்க முன்வர மாட்டார்கள். இந்த விஷயத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

பொதுவாக மக்கள் நீதிமன்றத்தை நாடுவதற்கு  அஞ்சுகிறார்கள்.
எத்தனையோ கொடுக்கல் வாங்கள் பிரச்சனைகளை நீதிமன்றத்துக்கு வெளியே பேசி சமரசமாக்கிக் கொள்கின்றனர். அரசு வங்கிகள் கூட கடனாளிகளிடம் சமரச மையம் மூலமாகவே தீர்வு காண முயல்கிறது. நீதிமன்றம் சென்றாலே கால விரையமும் பண விரையமும்தான் ஆகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண முஸ்லிம்கள் குவியப்போவதில்லை.

எம்.பி, எம்.எல்.ஏ தேர்தல்களில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்ற வழக்குகளில் ஐந்து ஆண்டுகள் அவர்கள் பதவியை அனுபவித்து முடித்த பின்னர்தான் தீர்ப்புகள் அளிக்கப்படும். இதனால் பைசா         பிரயோஜனம்  இல்லை.

ஒரு சொத்து யாருடையது என்ற வழக்கின் இறுதித் தீர்ப்பு வழக்குக் தொடுத்தவனின் பேரன் காலத்தில்தான் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

சிவில் விவகாரங்களில் நீதிமன்றத்தை நாடுவதில்லை என்ற கருத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இத்தீர்ப்புக்கு பின்னரும் முஸ்லிம்கள் ஷரியத் கவுன்சில் அல்லது ஜமாஅத் சமரசம் போன்ற வழிகளைத்தான் தேர்வு செய்வார்கள்.

எனவே உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பும் பைசா பிரயோஜனம் இல்லாத தீர்ப்பாகத்தான் நமக்குத் தெரிகிறது.
 

July 16, 2014, 7:40 PM

பா.ஜ.க அரசின் முதல் பட்ஜெட்டில் மக்களுக்கு நன்மை விழையுமா?

பா.ஜ.க அரசின் முதல் பட்ஜெட்டில் மக்களுக்கு நன்மை விழையுமா?

ஹக்கீம், விருகம்பாக்கம்

எந்த பட்ஜெட்டினாலும் மக்களுக்கு எந்த நன்மையும் விளைந்ததில்லை. எனவே பட்ஜெட் பற்றி நாம் பெரிய முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை.

ஆனால் பா.ஜ.க எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்ததோ அதற்கு மாற்றமாக அதன் எல்லா செயல்பாடுகளும் உள்ளன.

பாகிஸ்தான் பிரதமருடன் கை குலுக்கலாமா என்று சவடால் பேசிய மோடி, பாகிஸ்தான் பிரதமருக்கு விருந்து படைக்கிறார்.

இலங்கை மீனவர்கள் பிரச்சனையில் ராஜபக்சேவுடன் காங்கிரஸ் இணக்கமாக இருப்பதாகச் சொன்ன மோடி, ராஜபக்சேவுக்கும் பட்டுக் கம்பளம், விரிக்கிறார்.

பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனை முன் போலவே இருக்கிறது. தமிழக மீனவர்கள் முன் போலவே கைது செய்யப்படுகிறார்கள்.

பட்ஜெட்டுக்கு முன்னால் ரயில் கட்டணத்தை உயர்த்தலாமா என்று காங்கிரஸ் ஆட்சியில், பிரதமருக்கு கடிதம் எழுதிய மோடி, அதே வேலையை வெட்கமில்லாமல் செய்கிறார். ஏற்ற வேண்டிய கட்டணத்தை ஏற்றிவிட்டு பட்ஜெட்டில் கட்டணத்தை ஏற்றவில்லையென்று நாட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி. 

விலை உயர்வை விளாசித் தள்ளிவிட்டு ரயில் கட்டணத்தையும் சரக்கு கட்டணத்தையும்  உயர்த்தி அதனால் விலைவாசி மேலும் உயர பாதை அமைத்துள்ளார்.

பெட்ரோல் விலை மட்டுமின்றி, கியாஸ் விலை உட்பட அனைத்தும் பழைய நடைமுறைப்படி நள்ளிரவில் உயர்த்தப்பட்டுக்கொண்டே வருகின்றன.

காங்கிரஸ், தனியாருக்கு தாரை வார்க்கிறது என்று சொன்னவர், அதைவிட அதிகமாக  அனைத்தையும் தனியாருக்கும் அந்நிய நாட்டவருக்கும் தாரை வார்க்கும் வகையில் பட்ஜெட் தாயாரித்துள்ளார்.

காங்கிரஸை விட பாஜக பட்ஜெட், மிகவும் மோசம் என்பதுதான் பொது மக்களின் கருத்தாக உள்ளது. 
 

July 16, 2014, 7:36 PM

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ,எஸ். போராளிகள் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு என்ன?

ஈராக்   மற்றும்    சிரியாவில் ஐ.எஸ்.ஐ,எஸ். போராளிகள் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு என்ன?
 

அப்துர் ரஹ்மான், கோவை 

வெளிநாடுகளில் உள்ள இயக்கங்கள் பற்றி முழுமையான, உண்மையான செய்திகள் நமக்கு கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் உள்ள இயக்கங்கள் என்றால் அவர்களின் கொள்கை, கோட்பாடு, கடந்த கால செயல்பாடு, நாணயம், நேர்மை ஆகியவை குறித்து முழுமையாக நாம் அறிய இயலும், உடனடியாக கருத்தும் சொல்ல முடியும்.

வெளிநாடுகளில் செயல்படும் இயக்கங்கள் குறித்து நமக்கு உண்மையான, முழுமையான அறிவு இல்லை. ஷியாக்களின் ஆதிக்கத்துக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு செயல்படுவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று நமக்குக் தெரியவில்லை. ஈரானில் ஏற்பட்ட ஷியா புரட்சியை இஸ்லாமிய புரட்சி என்று பாராட்டும் இயக்கத்தினர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தையும் அதே அளவு ஆதரித்து கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. இதன் மர்மம் நமக்குப் புரியவில்லை. 

சன்னி பிரிவு என்றால் மத்ஹபுகளைச் சார்ந்தவர்களா? தர்கா வழிபாடுகளில் நம்பிக்கை உள்ளவர்களா? இதை எதிர்க்கும் ஸலபு பிரிவினரா? இவர்கள் அனைவரும் சன்னி என்றுதான் தம்மைக் கூறிக் கொள்கின்றனர்.

மேலும் அப்பாவிகள் மீதும் வழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல் நடத்துவதும் அப்பாவிகளைக் கொள்வதும் ஜிஹாத் என்று கூறுபவர்களா? அல்லது போரில் மட்டுமே எதிரிகளைக் கொள்ளக் கூடியவர்களா என்பதெல்லாம் ஆதாரத்துடன் நமக்குத் தெரியவில்லை.

மேலும் அவர்களைப் பற்றி கருத்துக் கூறும் தேவை எதுவும் நம்மிடத்தில் ஏற்படவில்லை. இதை அறிந்து, நாம் அவர்களுடன் சேர்ந்து போருக்கு போகப்போவதில்லை.

எனவே இந்நிலைமை முழுமையாகத் தெளிவாகும் வரை இது பற்றி எதுவும் கூறுவதில்லை என்பதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தின் இப்போதைய நிலை.
 

July 16, 2014, 7:32 PM

இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் ஏன் மற்ற நாட்டு முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதில்லை?

கேள்வி-
இலங்கையில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதற்கு குரல் கொடுக்கும் இஸ்லாமிய அமைப்புகள், பாகிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதற்கு ஏன் கண்டனங்கள் தெரிவிக்கவில்லை?

-கடையநல்லூர் மசூது

பதில்: நீங்கள் குறிப்பிடும் நாடுகளில் முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள். அதை ஏன் கண்டிக்கவில்லை என்பது மேலோட்டமான கேள்வியாகும்.
அங்கே தாக்கும் முஸ்லிம்களும் தாக்கப்படும் முஸ்லிம்களும் ஆயுதபாணிகளாக இருந்துகொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கின்றனர்.
இருவருமே கண்டனத்துக்கு உரியவர்கள்.

ஒருவர் மட்டும் வரம்பு மீறுபவராகவும், மற்றவர் பாதிக்கப்பட்டவராகவும் இருந்தால் வரம்புமீறியவர்களைக் க்ண்டித்து போராட்டம் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருப்பதற்காகத்தான் போராட்டம் நடத்துகின்றோம்.

நீங்கள் சுட்டிக் காட்டும் நாடுகளிலும் சுட்டிக்காட்டாத நாடுகளிலும் முஸ்லிம்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் ஆயுதம் தூக்கும்போது நாம் யாரையும் ஆதரிக்க முடியாது. யாரையும் பாதிக்கப்பட்டவர்களாகச் சொல்ல முடியாது.

எனக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு இறைமறுப்பாளராகிட வேண்டாம் என்று இறுதிப் பேருரையில் நபிகள் நாயகம் செய்த இறுதி எச்சரிக்கையை இவர்கள் மீறியவர்களாவர்.

முஸ்லிம்கள் ஒருவருக்கு எதிராக மற்றொருவர் ஆயுதம் தூக்கி ஒருவரை ஒருவர் கொலை செய்வார்கள். கொல்பவனும், கொல்லப்படுபவனும் நரகம் செல்வான் என்ற நபிமொழிப்படி இவர்களில் யாருக்கு ஆதரவாகவும் நாம் போராட முடியாது.

தொலைந்துபோகட்டும் என்ற நிலைபாட்டுக்குத்தான்  நாம் வரமுடியும்.

இலங்கையில் நடந்த தாக்குதல் இதுபோன்றதல்ல.

சிறுபான்மை முஸ்லிம்கள் சட்டத்தைக் கையில் எடுக்கவில்லை. ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தி அதன் எதிரொலியாக தாக்கப்படவில்லை. 

பெரும்பான்மை என்ற திமிர் காரணமாகவும் சிறுபான்மை மக்கள் எப்போதும் எங்களுக்கு அஞ்சி எங்கள் உயர்வையும், இரண்டாந்தர குடிமக்கள் என்பதையும் ஒப்புக் கொண்டு நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதற்காக ஒரு காரணமும் இல்லாமல் தாக்கப்பட்டனர்.

ஆண்கள் அனைவரும் பள்ளிவாசலில் தஞ்சம் அடைந்தபோது பூட்டிக் கிடந்த கடைகளைத் தகர்த்தனர். பெண்கள் மட்டுமே இருக்கும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இது போன்று எந்த நாட்டில் எந்த சமூகத்துக்கு நேர்ந்தாலும் நாம் கண்டிப்போம்.

June 21, 2014, 2:56 PM

தமிழர்களுக்காக போராடாதவர்கள் முஸ்லிம்களுக்காக மட்டும் போராடுவது நியாயமா ?

கேள்வி :- இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்பாட்டங்களில் பங்கேற்காத தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம்கள் தாக்கப்படும் போது மட்டும் கண்டிப்பது என்ன நியாயம்? என்று பரவலாக கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு உங்கள் விளக்கம் என்ன?

இலங்கையிலே தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட பொழுது அனைத்து இயக்கங்களும் போராடிய பொழுது தமிழ் நாடு தௌஹீத் ஜமா அத் மௌனமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு இஸ்லாமியர்கள் என்றவுடன் போராடுவது சரியா? 

பதில்:- இலங்கைப் பிரச்சனை தொடர்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பட்டங்களின் தவ்ஹீத் ஜமாஅத் பங்கேற்கவில்லை என்பது உண்மைதான். அதற்கான காரணங்களைக் கூறுவதற்கு முன்னால் இப்படி கேள்விகேட்பவர்களை நோக்கி நாமும் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அனைத்திலும் தவ்ஹீத் ஜமாஅத் தவிர மற்ற எல்லா முஸ்லிம் இயக்கஙகளும் பங்கேற்றனர். மேற்கண்டவாறு கேள்வி எழுப்பும் அனைவரும் இதை அறிவார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் தவிர எல்லா முஸ்லிம் இயக்கங்களும்  இவர்களுடன் இணைந்து போராடியிருக்கும் போது இப்போது முஸ்லிம்கள் தாக்கப்படும் போது - தமிழ் கூறும் முஸ்லிம்கள் தாக்கப்படும் போது - இவர்கள் ஏன் களமிறங்கி போராடவில்லை?  முஸ்லிம்களுக்கு என்ன கொடுமை நடந்தாலும் முஸ்லிம்கள் தான் அதை எதிர்த்துப் போராட வேண்டும். மற்றவர்களுக்காக முஸ்லிம்கள் என்னதான் ஆதரவு கொடுத்தாலும் முஸ்லிம்கள் பிரச்சனை என்றால்  இவர்கள் ஆத்ரவு கொடுக்கமாட்டார்கள் என்பது என்ன நியாயம்?

முஸ்லிம்கள் அழிக்கப்படுவதில் உள்ளூற சந்தோஷம் காணும் மனப்பான்மை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அனைத்து இயக்கத்தவரிடமும், அறிவுஜீவிகளிடமும் உள்ளது என்பது இப்போது ஐயத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகி விட்டது.

தவ்ஹீத் ஜமாஅத் இவர்களுடன் பங்கேற்கவில்லை என்பதற்காக மற்றவர்கள் இவர்களுடன் இணைந்தும், தனியாகவும் நடத்திய போராட்டங்களுக்கு இவர்கள் செய்த நன்றிக் கடன் என்ன?

நமக்காக முஸ்லிம்களின் இரத்தம் துடித்ததே அதுபோல முஸ்லிம்கள் தாக்கப்படும் போது அதையும் நாம் கண்டிக்க வேண்டும் என்று ஏன் இவர்களால் நினைக்க முடியவில்லை? 

தனியாக போராட்டம் நடத்தும் அளவுக்கு விசாலமான இதயம் இவர்களுக்கு இல்லாவிட்டாலும் இவர்களோடு இணைந்து இவர்களுக்காக போராடிய முஸ்லிம் இயக்கங்கள் நடத்திய போராட்டங்களில் கூட இவர்கள் பங்கேற்கவில்லையே அது ஏன்?

தங்களின் அயோக்கியத்தனத்தை மறைப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத் இவர்களுடன் இணையாததைச் சுட்டிக் காட்டுகின்றனர். முஸ்லிம்கள் தாக்கப்படும் போது அதில் உள்ளூற சந்தோஷப்படுகின்றனர். இவர்களின் இந்தக் கயமத்தனத்தை இவர்களுக்குகாக குரல் கொடுத்த முஸ்லிம் இயக்கங்கள் இப்போதாவது உணர வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தில் நியாயம் இல்லை என்று கூறி மற்ற இயக்கத்தினர் நடத்திய போராட்டங்களையும் கொச்சைப்படுத்தும் அளவுக்கு இவர்களின் தமிழுணர்வு உள்ளது.

இப்படி கேள்வி கேட்டதற்கு முன்னால் இவர்கள் தங்களிடம் மேற்கண்ட கேள்வியைக் கேட்டுக் கொள்ளட்டும்.

இலங்கைத் தமிழர்களின் தாக்கப்படுகிறார்கள் என்பதற்காக நடத்தப்பட்ட சிங்கள வெறியாட்டத்தைக் கண்டித்து நடந்த போராட்டங்களில் தவ்ஹீத் ஜமாஅத் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி கேட்கும் அனைவருக்கும் அதற்கான விடை தெரியும்.

தவ்ஹீத் ஜமாஅத் தக்க காரணங்களை விளக்கிக் கூறியதை இவர்கள் அறிவார்கள். ஆனாலும் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை எதிர்க்கக் கூடாது என்று இவர்களின் மனசாட்சி (?)  இவர்களுக்குக் கட்டளையிடுகிறது. அதை நியாயப்படுத்தவே தவ்ஹீத் ஜமாஅத் கலந்து கொள்ளாத போது நாங்கள் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என்று கேள்வியை முன் வைக்கின்றனர்.

இந்தப் பிரச்சனையில் இவர்களிடம் சேராமல் ஒதுங்கிக்கொண்ட தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கனவே சொன்ன காரணங்களை இதற்கான பதிலாக தருகிறோம்.

பல ஆண்டுகளுக்கு முன்பே  இந்தக் காரணங்களை நாம் உணர்வு இதழிலும் ஆன்லைன்பீஜே இணையதளத்திலும் விளக்கியுள்ளோம். அதை அப்படியே எடுத்துக் காட்டுவதே இதற்கு போதுமான பதிலாகும்.

விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுக்கு பகிரங்க அறைகூவல்!

இலங்கை அதிபர் ராஜபக்சே, பிரபாகரன் மகனான பச்சிளம் சிறுவனுக்கு பிஸ்கட் கொடுத்து, பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனைப் படுகொலை செய்துள்ளார். இந்த சிறுவனைக்கூட விட்டு வைக்காமல் கொலை செய்த ராஜபக்சேவை சர்வேதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகளுக்கு ஆதாரவாக பச்சைத் தமிழர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் குரல் கொடுத்து வருகின்றனர்.

ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது கண்டிக்கத்தக்கதுதான். அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அதைவிட பன்மடங்கு படுகொலைகளை செய்த பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் அறிவிஜீவிகளது கண்களுக்கு கொலைகாரர்களாக ஏன் தெரியவில்லை என்பதுதான் நமது கேள்வி.

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் காத்தான்குடி என்ற ஊரில் தொழுது கொண்டிருக்கும்போது பள்ளிவாசலுக்குள் புகுந்து படுகொலை செய்த விடுதலைப்புலிகளின் தீவிரவாதச் செயல் பச்சைத்தமிழர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா?

இவர்கள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு இழைத்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமா?

யாழ்ப்பாணத்திலிருந்த முஸ்லிம்களை 24மணி நேர கெடு விதித்து, கையில் ஐநூறு ரூபாய் மட்டும் வைத்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்று சொல்லி விரட்டி அடித்தார்களே! இது இந்த அறிவிஜீவிகள் கண்களுக்குத் தெரியவில்லையா?

வாழ்நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துவைத்த சொத்து பத்துக்கள் அனைத்தையும் இழந்துவிட்டு கோடீஸ்வரர்களாக இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீட்டை விட்டு, ஊரைவிட்டு வெளியேறி ஒரே நாளில் ஓட்டாண்டியாக மாறி நடுத்தெருவுக்கு வந்தார்களே! இத்தகைய நிலைக்கு முஸ்லிம்களை ஆளாக்கிய விடுதலைப்புலிகளின் கோர முகம் இந்த மனிதநேயம் பேசும் மகான்(?)களுக்கு விளங்கவில்லையா?

காத்தான்குடியில் பச்சிளம் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் பள்ளிவாசலுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்ற விடுதலைப்புலிகளின் மிருகவெறியாட்டம் யாருக்கும் தெரியவில்லையா?

திரிகோணமலை என்ற மாவட்டத்தில் மூதூர் என்ற பகுதியில் வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் மீது விடுதலைப்புலிகள் கட்டவிழ்த்துவிட்ட கொலை வெறித் தாக்குதல்களால் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கின்னியா, முல்லிப்பட்டிணம், கந்தலாய் போன்ற அகதி முகாம்களில் தஞ்சமடைந்த வரலாறு விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்குத் தெரியாதா?

கடந்த 2003ஆம் ஆண்டு இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்போது ஜப்பான், நார்வே ஆகிய நாடுகளின் தலையீட்டினால் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை ஏற்பாடானது. அந்த சமாதனப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களையும் இணைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தையாக அதை அமைக்க வேண்டும் என்ற முஸ்லிம்களின் குறைந்தபட்ச கோரிக்கையைக்கூட இந்த விடுதலைப்புலிகள் நிராகரித்தார்கள் என்ற வரலாறு இவர்களுக்குத் தெரியாதா?

அதே 2003 ஆம் ஆண்டு இலங்கையில் புலிகளின் தலைமையிடமான கிளிநொச்சியில் பிரபாகரன் மற்றும் ரவூஃப் ஹக்கீமுக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை விரட்டியது தவறு என்று விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டு, முஸ்லிம்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் மீள் குடியமர்த்த வாக்குறுதி அளித்தார்களே!” அவ்வாறு வாக்குறுதியளித்துவிட்டு முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்த விடுதலைப் புலிகளின் துரோக வரலாற்றை மறைக்க முடியுமா? (இது குறித்த தனி பெட்டிச் செய்தியை கீழே காண்க!)

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கெல்லாம் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.

இது போன்ற கொடுமைகளை இந்தியாவில் நிகழ்த்துபவர்களை இந்து பயங்கரவாதிகள் என்று விமர்சிக்கும் அறிவுஜீவிகள் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தனி அளவுகோல் வைத்திருப்பது ஏன்? என்பதுதான் நமது கேள்வி.

இது குறித்து கடந்த 17 : 27 உணர்வு இதழில், “விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகக் களமிறங்காதது ஏன்?” என்ற தலைப்பில் சகோதரர் பீஜே அவர்கள் அளித்த விளக்கத்தை வெளியிட்டிருந்தோம்.

அந்தச் செய்திக்கு பதில் சொல்ல திராணியில்லாத விடுதலைப்புலி ஆதரவாளர்களும், தங்களை அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் சில அரைவேக்காடுகளும் நம்மை விமர்சித்து பல அவதூறு பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவதூறு பரப்பும் அவதூறு பேர்வழிகளுக்கும், விடுதலைப்புலி ஆதாரவாளர்களுக்கும் நாம் பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம். ராஜபக்சேவை விட மகாக்கொடிய அயோக்கியர்கள்தான் விடுதலைப்புலிகள் என்பதையும், அவர்கள் செய்த அட்டூழியங்களும், படுகொலைகளும் கொஞ்சநஞ்சமல்ல என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க நாம் தயாராக உள்ளோம். இவர்களுக்கு உண்மையிலேயே துணிவும், திராணியும் இருக்குமேயானால் நம்மை விவாதக்களத்தில் நேருக்குநேர் சந்தித்து விடுதலைப்புலிகள் அப்பாவிகள் என்பதை நிரூபிக்கட்டும்.

நம்முடன் அவர்கள் விவாதிக்க வருவார்களேயானால், அவர்களது முகத்திரையைக் கிழித்து இவர்கள் முஸ்லிம்களை எப்படியெல்லாம் கருவறுத்தார்கள் என்பதையும், இவர்களது மிருக வெறியாட்டங்களையும் ஆதாரப்பூர்வமாக தோலுரித்துக்காட்ட நாம் தயாராக உள்ளோம் என்று இவர்களுக்கு பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம். அவர்கள் தாங்கள் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் நம்முடன் பகிரங்க விவாதத்திற்கு வரட்டும்.

இன்னும் சில பெயர்தாங்கி முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் லட்டர்பேடு இயக்கங்களும் ஓட்டுப்பொறுக்க வேண்டும் என்ற ஆசையில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஜால்ரா தட்டிக் கொண்டுள்ளார்கள். அவர்களையும் பகிரங்க விவாதத்திற்கு நாம் அழைக்கின்றோம்.

வாயடைத்துப்போன புலிகளின் ஆதரவாளர் இலங்கை எம்.பி.சிவாஜிலிங்கம் :

இப்போது நாம் வைத்துள்ள இந்த வாதங்களை இதற்கு முன்பாக புலிகளின் ஆதரவாளர் இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் அவர்களிடம் நமது மாநிலத் தலைவர் பீஜே அவர்கள் புள்ளிவிபரங்களுடன் ஏற்கனவே சுட்டிக்காட்டினார்.

திரைப்பட இயக்குநர் அமீர் கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னையில் புலிகளின் ஆதரவாளர் இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் அவர்களை அழைத்துக் கொண்டு பீஜே அவர்களைச் சந்தித்தார்.

அந்த சந்திப்பின்போது, பீஜே அவர்கள் புலிகள் செய்த அட்டூழியங்களையும், அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்த அநீதிகளையும் புள்ளிவிபரங்களுடன் பட்டியலிட்டார்.

"முத்தரப்பு பேச்சுவார்த்தையை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டு, இதற்கான அறிவிப்பை புலிகளின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். இதுதான் வடக்கு-கிழக்கு முஸ்லிம்களுக்கு புலிகள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும்'' என்று பீஜே சொல்ல, புலிகள் செய்த அயோக்கியத்தனங்களுக்கு முட்டுக்கொடுக்க முடியாத சிவாஜிலிங்கம் பீஜே வைத்த வாதங்களுக்கு பதிலளிக்க முடியாமல் அதை ஆமோதித்தார்.

இதனை ஆமோதித்த சிவாஜிலிங்கம், இதைப் பற்றி புலிகளின் தலைமையிடம் தான் வலியுறுத்தப் போவதாகவும், தமிழ் முஸ்லிம் உறவை பலப்படுத்தப்போவதாகவும் உறுதி தந்துவிட்டு சென்றார். 2008ஆம் ஆண்டு சென்றவர்தான் அத்துடன் நமது பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லை எனும்போது இவர்கள் எத்தகையவர்கள் என்பதும், இவர்களது உண்மை முகமும் நமக்கு விளங்குகின்றதா இல்லையா?

இப்படி காரணங்களை விளக்கி கூறித்தான் புலிகளுக்கு ஆதரவான எந்த போராட்டத்தில் இருந்தும் தவ்ஹீத் ஜமாஅத் விலகி நிற்கிறது.

இலங்கையில் நடந்தது அப்பாவி தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் அல்ல ஆயுதம் தாங்கி அரசை எதிர்த்துப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் தான்
பொதுமக்களைக் கேடயமாக புலிகள் பயன்படுத்தியதாலே பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்கள். புலிகள் அழிக்கப்பட்டதில் சிங்கள அரசையும் சிங்கள மக்களை விடவும் புலிகளின் அராஜகக் கொடுமைகளை அணுபவித்த தமிழர்கள் அதிகம் சந்தோசப்பட்டனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் போய் புலிகள் அழிவுக்குப் பின் அவர்கள் சுதந்திரமாக இருக்கின்றார்களா? முன்னர் சுதந்திரமாக இருந்தார்களா? என்று கேட்டுப் பாருங்கள் உண்மை விளங்கும்.

புலிகள் அழிப்பை தமிழர்களில் அழிப்பாகச் சித்தரித்து இங்குள்ள தமிழர்கள் ஏமாற்றப்பட்டனர் என்பதால் தவ்ஹீத் ஜமாஅத் அந்த போராட்டங்களை சரிகாணவில்லை.

ஆயுதம் தாங்கி அரசுக்கு எதிராக யுத்தம் செய்தவர்களூக்கு எதிரான தாக்குதலும் எவ்வித ஆயுதத்தையும் எடுக்காமல் அமைதி வழியில் வாழ்ந்துவரும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலும் ஒருக்காலும் சமமில்லை. 

இதற்காகத்தான் இங்குள்ள தமிழர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து இருக்க வேண்டும்.

புலிகளுக்குத் தான் இந்த மனநிலை என்றால் புலிகள் அழிப்பை தமிழர் அழிப்பாக சித்தரித்து தமிழர்களைத் தூண்டிவிட்ட இங்குள்ள புலிகளின் ஏஜெண்டுகளின் மனநிலையும் இது தான் என்பதை இப்போது முஸ்லிம் சமூகம் தெளிவாக உணர்ந்துகொண்டது.

June 21, 2014, 2:54 PM

இலங்கையில் ராஜபக்சேவிற்கு ஆதராவாக பிஜே பிரச்சாரம் செய்தாரா ?

கேள்வி 1 :- புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்பட பேசு என்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் இலங்கை சென்று ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ராகவன் என்பவர் தெரிவித்தார். அதில கலந்து கொண்ட தமுமுகவைச் சேர்ந்த தலைவர்  ஒருவர் சில தனி நபர்கள் செய்வது சமூதாயத்தின் நிலைபாடாக ஆகாது எனக் கூறி ராகவன் கூறிய தகவல் உண்மை என்பது போன்று சித்தரித்தார். இதன் உண்மை நிலை என்ன?

அஸ்லம், அதிரை

கேள்வி 2
18/06/14 அன்று புதிய தலைமுறை டிவியின்  நேர்படபேசு நிகழ்ச்சியில் பேசும் போது பாஜாகவின் ராகவன் பீஜே இலங்கைக்குச் சென்று ராஜபக்ஷேவுக்கு ஆதரவு திரட்டியதாகவும், இப்போது அவரை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார் என்றும் கூறினார்.

இதை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜென்ராம் அவர்கள் மறுக்கவில்லை. அவருக்கு இது குறித்த உண்மை நிலவரம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தமுமுக ஹாஜா கனி நன்றாக இது பற்றி தெரிந்து இருந்தும் ராகவனின் பொய்யை மறுக்கவில்லை. மறுக்காவிட்டாலும் பராவாயில்லை. ராகவனின் செய்தியை உண்மைப்படுத்தும் விதமாக பதிலளித்தார்.

எப்படி என்றால் "தலையில் தொப்பி போட்ட சில முஸ்லிம்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது எப்படி தனி நபர் சார்ந்ததோ அது போல் இதுவும் என்று விசமத்தனமாகக் கூறினார்.

ராஜபக்சேயையை தாங்கள் ஆதரித்து பிரசாரம் செய்தீர்கள் அது உங்கள் தனி நிலைபாடு என்று ராகவனின் சொல்லை உண்மைப்படுத்தும் விதமாக பேசுகிறார்.

இது பற்றி உங்கள் கருத்து என்ன?

முகமது பைசல்
மாவட்ட செயலாளர்,  நெல்லை மாவட்டம்

கேள்வி 3

புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் ப.ஜ.க சார்பாக கலந்துகொண்ட ராகவன் என்பவர் பேசும்போது இலங்கை தேர்தலில் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் பி.ஜே பிரச்சாரம் செய்து விட்டு இப்போது ஆர்பாட்டம் செய்கின்றார் என்ற குற்றச்சாட்டை உங்கள் மீது வைத்துள்ளாரே?

- கடையநல்லூர் மசூது

பதில்:- சந்திரிகா அவர்கள் இலங்கையில் பிரதமராக இருந்த போது 2005 ஆம் ஆண்டு நான் இலங்கை சென்றேன். அங்கே பல ஊர்களில் பிரச்சாரம் செய்தேன். கடைசியாக தலைநகர் கொளும்புவில் முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் வகையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இலங்கை மக்களை மதம் மாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடத்துவதாக சமாதி வழிப்பாட்டுக்காரர்களும், தரீக்காவாதிகளும், தவ்ஹீத் போர்வையில் அரபு நாடுகளில் பணம் (பறிக்கும்) இயக்கங்களும் புகார்களுக்கு மேல் புகார்கள் அனுப்பி அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தனர். எனது விசாவையும் கேன்சல் செய்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினார்கள். 

சந்திரிகா ஆட்சி அதன் பின் தொடர்ந்த போதும், அடுத்து வந்த தேர்தலின் போதும், தேர்தலுக்குப் பின் ராஜபக்சே அதிபராக தேர்வு செய்யப்பட்டபோதும்,  இன்று வரையும் நான் இலங்கை செல்லவில்லை.

இலங்கைத் தேர்தலின் போது நான் இலங்கை செல்லவில்லை எனும் போது ராகவன் என்பவர் இலட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் மீடியாவில் இப்படி புளுகியதில் எனக்கு ஆச்சிரியம் இல்லை.

கூச்சம், வெட்கம் இல்லாமல் துணிந்து பொய் சொல்வது தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஆரம்பப்  படியாகும். முஸ்லிம்கள் தொடர்பாக எந்த அளவுக்கும் பொய் சொல்லலாம் என்பதே ஆர்.எஸ்.எஸ் காரர்களின் கொள்கையாக உள்ளதால் இதில் வியப்படைய ஒன்றும் இல்லை.

நான் இலங்கை சென்றேனா இல்லையா? ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேனா என்ற விபரம் அவருக்குத் தெரியாமல் எவனோ புளுகியதை நம்பி இப்படி சொல்லி இருப்பார் என்று சமாதானம் அடைய முடியாது. எவனோ புளுகினாலும் கொஞ்சம் மூளை இருந்தாலே இது பொய் என்று அறிந்து கொள்ள முடியும். எந்த ஒரு நாடாக இருந்தாலும் மற்ற நாட்டுக்காரர்கள் தேர்தலில் வாக்களிப்பதையும், பிரச்சாரம் செய்வதையும் சட்டம் அனுமதிக்காது. இந்தியனாகிய நான் இலங்கை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக எவனாவது இந்த ராகவனிடம் சொன்னாலும் பொது அறிவு இருந்தால் அதை அவர் நிராகரித்து இருக்க வேண்டும்.

மனமறிந்து தனது கொள்கைப்படி ராகவன் பொய் சொல்லி இருக்க வேண்டும். அல்லது எவனோ சொன்னதை நம்பி அதைக் கூறி இருந்தால் அவருக்கு பொது அறிவு இல்லை என்பது உறுதி.

ராகவனுக்குச் சொன்ன அதே இரண்டு தன்மைகளும் ராகவனை விட அதிகமாக தமுமுக ஹாஜா கனியிடம் உள்ளன.

இலங்கையில் இருந்து விசா கேன்சல் செய்யப்பட்டு இந்தியாவுக்கு நான் திருப்பி அனுப்பப்ட்ட விபரம் தமுமுக வினருக்குத் தெரியும். பி.ஜே இனிமேல் ஒருக்காலும் இலங்கை செல்ல முடியாது என்று தமுமுகவினர் பரவலாக பிரச்சாரம் செய்து வந்தனர். அப்படி இருக்கும் போது நான் இலங்கை செல்லவில்லை ராஜபக்சேவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவில்லை என்பது ராகவனை விட தமுமுக வினருக்கு (தெளிவாகத்) தெரியும்.

ஆனாலும் அதை மெய்ப்பிப்பது போன்று இவர்கள் நடக்கிறார்கள் என்றால் பொய்யுடன் அயோக்கியத்தனமும் செய்கிறார்கள் என்பது தெரிகிறது.

ஒரு நாட்டைச் சேர்ந்தவர் இன்னொரு நாட்டில் எப்படி தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியும் என்ற கேள்வியை இவர் கேட்டு இருந்தால் கொஞ்சமாவது இவருக்கு பொது அறிவு உள்ளது என்பதை மக்கள் நினைப்பார்கள்.

ஆர்.எஸ்.எஸ் ஸை விட கூமுட்டைகளாக இருப்பவர்கள் தான் தமுமுகவினர் என்பதை அவர்களே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டனர்.

அடுத்ததாக இன்னொரு விஷயத்தையும் நான் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. ராஜபக்சே இரண்டாம் முறை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட போது அவர் வெற்றி பெறுவது சந்தேகம் என்ற நிலை இருந்தது. ராணுவத் தளபதி பொன்சேகா அவரை எதிர்த்து போட்டியிடுவதால் ராஜபக்சே ஜெயிக்க மாட்டார் என்ற கருத்து நிலவியது.

அப்போது ராஜபக்சே கட்சியின் பிரமுகர்கள் சிலர் இலங்கையில் நமது ஜமாஅத்தை அனுகினார்கள். பிஜேயும், ராஜபக்சேவும் கலந்து கொள்ளக் கூடிய ஒரு நிகழ்ச்சிக்கு பிஜேவை அழைத்து வாருங்கள். அதன் மூலம் முஸ்லிம்களின் வாக்குகள் எங்களுக்குக் கூடுதலாக கிடைக்கும் என்று அனுகினார்கள்.

என்னிடம் இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தினர் இதைக் கூறிய போது நிர்வாகக் குழுவைக் கூட்டி இதை ஏற்க இயலாது என்று தெரிவித்து விட்டோம்.

ஏதாவது பொது நிகழ்ச்சியில் நானும், ராஜபக்சேவும் கலந்து கொள்ளவேண்டும் என்றுதான் கோரினார்கள். அதையும் நாம் மறுத்து விட்டோம்.

தமுமுக வினர் ஒருக்காலும் திருந்த மாட்டார்கள் என்பதும் நமக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்குக் கூட சப்போட் பன்னக் கூடியவர்கள் என்பதும் மேலும் உறுதியாகின்றது என்பதை மட்டும் சமுதாயத்துக்கு சொல்லிக்கொள்கிறோம்.

June 21, 2014, 2:52 PM

நாளுக்கு நாள் காவிகளின் செயல் அதிகரித்துக்கொண்டே போகிறதே?

 

நாளுக்கு நாள் காவிகளின் செயல்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. முதலில் செங்கோட்டை, மல்லிபட்டினம், வேலூர் தற்போது மேலப்பாளையம் என தொடர்ந்துகொண்டே போகின்றது. இதற்கு ஏழறை இலட்சம் ஏகத்துவப் படைகளைக் கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் நடவடிக்கை என்ன?

 

நீங்கள் எதை எதிர்பார்த்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள்? அவர்களை எதிர்த்து வன்முறை வழியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இக்கேள்வியைக் கேட்டால், அது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை அல்ல.

நம்மில் சிலர் ஆயுதம் தூக்கினால் காவிகள் அதை வைத்து இன்னும் வளர்வார்கள். சிலரது செயல்களால் நம் சமுதாயம்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகும்.

இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடக்கும் போது மக்கள் சக்தியை திரட்டி அரசின் மூலம் குற்றவாளிகளைத் தண்டிக்க எல்லா முயற்சியையும் தவ்ஹீத் ஜமாஅத் செய்யும். செய்தும் வருகிறது.

மேலும் ஒவ்வொரு வன்முறைச் சம்பவத்தின்போதும் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நியாயமான நடவடிக்கை எடுக்க, தவ்ஹீத் ஜமாஅத் முயற்சிக்கிறது. காவல்துறை நமக்கு ஏற்படும் எந்த இழப்புக்கும் நடவடிக்கை எடுக்காது என்ற அளவுக்கு நிலைமை மோசமானால், காவல் துறை முற்றிலுமாக காவிமயமாக மாறினால், அப்போதுதான் வேறு வழிகளைப் பற்றி சிந்திக்க முடியும்.

தமிழகத்தைப் பொருத்தவரை அந்த நிலை நிச்சயமாக இல்லை. உயிரைக் கொடுத்தால்தான் சமுதாயத்தின் உயிரையும் உடமையையும் பாதுகாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டால் நாங்கள் சட்ட வழியையும் ஜனநாயக வழியையும் கைவிட்டு விட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டு மாற்று வழியை தேர்ந்தெடுப்பதில் இந்த ஜமாஅத்துக்கு எந்த அச்சமும் இல்லை.

அந்த நிலை தமிழகத்தில் ஏற்படாது என்றுதான் நாம் நம்புகிறோம். ஓரிரு காவல்துறையினர் காவிச் சிந்தனையுடன் செயல்பட்டாலும் மேல் அதிகாரிகளிடம் முறையிட்டு அது சரி செய்யப்படுகிறது. இப்போது அவர்கள் வழியில் பதிலடி என்று இறங்குவது நன்மைக்கு பதிலாக கேடுகளைத்தான் எற்படுத்தும் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.

மேலும் சில வன்முறைச் சம்பவங்களுக்கு, நம் சமுதாயத்தில் அறிவை இழந்து வெறும் உணர்ச்சிக்கு இடம் கொடுத்தவர்களும் காரணமாக உள்ளனர். இவர்களும் அறிவைப் பயன்படுத்தி தூர நோக்குடன் நடந்து கொள்வதும் அவசியம் என்பதையும் பதிவு செய்கிறோம்.

June 11, 2014, 5:26 PM

பெற்றோர்கள் பிள்ளைகளின் பள்ளிக் கூடத்தை வருடா வருடம் மாற்றுவது சரியா

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியை வருடா வருடம் மாற்றுகிறார்களே,இவர்களுக்கு  தாங்கள் கூறும் அறிவுரை என்ன?

 

இதில் அறிவுரை கூற ஒன்றும் இல்லை. ஒரு பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. தேவை, வசதி, தரம் உள்ளிட்ட பல காரணங்களால் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் மாற்றுவதுதான் புத்திசாலித்தனம்.

அதிக வருமானம் உள்ளவர் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பார். ஆனால் அந்த வருமானம் குறைந்தால் அதையே தொடர்ந்து கொடுக்க முடியாது. ஒரு பகுதியில் வேலை பார்ப்பவர் அல்லது தொழில் நடத்துபவர் வேறு பகுதிக்கு மாறினால் அப்போது பள்ளிக் கூடத்தையும் மாற்றுவது அறிவார்ந்த செயல்தான்.

குழந்தைகளாக இருக்கும் போது தன் பிள்ளைகளை ஒரு கல்விக் கூடத்தில் சேர்த்தவர் குழந்தைகள் வளரும் போது ஒழுக்கம் கற்பிக்கப்படுகிறதா என்பதையும் கூடுதலாகக் கவனிப்பார். எனவே நமது வசதி, பிள்ளைகளின் ஒழுக்கம் உள்ளிட்ட பல விஷயங்களையும் கவனத்தில் கோண்டு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு யாரும் அறிவுரை கூறத் தேவை இல்லை.

June 11, 2014, 5:23 PM

நம் நாட்டில் நதி நீர் இணைப்பு சாத்தியமா?

 

நம் நாட்டில் நதி நீர் இணைப்பு சாத்தியமா? இதனால் பல மாநிலங்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வாகுமா?

 

பெருமளவு பணத்தைக் கொட்டினால் நதிகளை இணைப்பது அறிவுப் பூர்வமாக சாத்தியம்தான். ஆனால் நமது நாட்டில் அதை நடைமுறை படுத்துவது சாத்தியமாகாது.

வளமான ஒரு நதியின் நீரை ஒரு பகுதி மக்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கும்போது நீர்வளம் குறைந்த நதியுடன் அதை இணைக்க முயன்றால் ஏற்கனவே வளமான நதியால் பயனடைந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற பிரச்சனை எழுப்பப்படும். கலவரம் ஏற்படுத்தப்படும்.

இணைப்பதற்காக வாய்க்கால் தோண்டுவோர் அந்த வாய்க்காலில் போட்டு புதைக்கப்படும் அளவுக்கு நிலைமை ஏற்படும்.

புதிதாக இணைப்பது கிடக்கட்டும். தமிழகத்து காவிரி நீர் கர்நாடக ஆற்றுடன் இணைக்கப்பட்டுத் தான் உள்ளது. இதனால் காவிரித் தண்ணீர் நமக்கு கிடைக்க வேண்டிய அளவுக்கு கிடைக்கிறதா?

ஆங்காங்கே அணைகளை எழுப்பி தமிழகத்துக்கு தண்ணீர் வருவதை தடுக்கிறார்கள். வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீரால் கர்நாடகம் மூழ்கிப் போய்விடும் என்றால் மட்டும்தான் நமக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

ஏற்கனவே இணைக்கப்ப்ட்டுள்ள நதிகளால் நன்மை கிடைக்கவில்லை. காரைக்குடி தண்ணீர் திருப்பத்தூர் மக்களுக்கு கிடைக்கக் கூடாது என்று போராட்டம் நடந்ததை நாம் மறந்து விட முடியாது. பாலாறு, முல்லைப் பெரியாறு, காவிரி என்று ஏற்கனவே இணைக்கப்பட்ட நதிகளால்கூட நன்மை இல்லை.

புதிதாக நதிகளை இணைப்பதாகக் கூறிக்கொண்டு ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்குக் கொண்டுசெல்ல முயன்றால் இரத்த ஆறு ஓடும். தண்ணீர் விஷயத்தில் நமது மக்களின் பண்பாடு இப்படித்தான் இருக்கிறது.

மக்கள் உணர்வுகளைப் பற்றி படிக்காமல் மெத்தப் படித்த நிபுணர்கள் இதை அதனுடன் இணைக்கலாம் அதை இதனுடன் இணைக்கலாம் என்று காகிதத்தில் திட்டம் போடுவார்கள். அதை நம்பித்தான் பாஜக தேர்தல் பிரச்சாரத்தின்போது இதை வாக்குறுதியாகக் கொடுத்தது. ஒருக்காலும் அதை நம் நாட்டில் செயல்படுத்த முடியாது.

மேலும் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க முயற்சித்ததிலிருந்து கட்டி முடிக்கப்படும் வரை இதற்கு எதிர்ப்பு பெரிதாக இருக்கவில்லை. ஆனால் வேலை ஆரம்பமாகும் போது தான் அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பை தீவிரப்படுத்தினார்கள். இதுதான் இந்திய மக்களின் சுபாவம்.

நதிகளை இணைக்க வாய்க் கால்களை வெட்டி வரும்போது மக்கள் சும்மா இருப்பார்கள். இன்னும் ஒரு மாதத்தில் இரண்டும் இணைந்து விடும் என்ற நிலை இருக்கும்போது நமது தண்ணீர் அடுத்த மாநிலத்துக்குப் போய்விடும்; நமக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கொளுத்திப் போட்டு ஊத்தி மூடுவார்கள்.

கூடங்குளம் ஒரு கிராமப்பிரச்சனை. நதி நீர் பிரச்சனை என்பது ஒரு மாநிலப் பிரச்சனை. ஒரு மாநிலமே கொந்தளித்தால் எப்படி இணைக்க முடியும். செலவழித்த பணம் பாழாவதுதான் இதன் ஒரே பலனாக அமையும்.

June 11, 2014, 5:22 PM

இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்தினால் தவ்ஹீத் ஜமாஅத் என்னசெய்யும் ?

 

நாடளுமன்றத் தேர்தலில் தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்த நிலையில் ஜெயலலிதா அரசு,  நமக்கு வாக்களித்தபடி ஆணையத்தின் அறிக்கை பெற்று இடஒதுக்கீடு அதிகரித்துத் தருமா?

ஒரு வேளை தாமதப்படுத்தினால் தவ்ஹீத் ஜமாஅத் என்னசெய்யும்.?

 

நாம் எடுக்கும் நிலையைப் பொருத்து அரசாங்கம் தனது வாக்குறுதியை மீற முடியாது. அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நம்பி முஸ்லிம்கள் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளனர் என்பதால் அதைத் தக்க வைக்க ஆவண செய்வார்கள்.

சட்டமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்பதால் இடஒதுக்கீட்டை உயர்த்தித் தருவார்கள் என்று நாம் நம்பிக்கை வைக்கிறோம். அப்படி எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றால் பொதுக்குழுவைக் கூட்டி தவ்ஹீத் ஜமாஅத், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நல்ல முடிவு எடுக்கும், இன்ஷா அல்லாஹ்.

June 11, 2014, 5:20 PM

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பெற தவ்ஹீத் ஜமாஅத் போராடுமா ?

 

பெரிய கட்சிகள் எல்லாம் இப்போது விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைதான் சரியாக இருக்கும் என்று குரலெழுப்புகிற இந்த வேளையில் இதை நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதற்காகப் போராடுமா?

விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறித்து தவஹீத் ஜமாஅத் ஆரம்பம் முதல் குரல் கொடுத்து வருகிறது. பெரிய கட்சிகள் எல்லாம் மண்ணைக் கவ்வினால்தான் இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நாம் காத்திருந்தோம். அதுபோல் இப்போது நடந்துள்ளது.

அதிமுக, பாஜக தவிர எல்லா கட்சிகளும் இதை முக்கியக் கோரிக்கையாக வைக்கும் நாள் தொலைவில் இல்லை.

அப்படி அனைவரும் கோரும்போது தேர்தல் கமிசன் தேர்தல் முறையை மாற்ற வாய்ப்புள்ளது.

தேர்தலில் போட்டியிடாத இயக்கத்தின் போராட்டத்தை தேர்தல் கமிசன் கண்டுகொள்ளாது. எனவே இதற்காக போராட்டம் நடத்துவது பயனற்றதாகும். அரசியல் கட்சிகளின் போராட்டத்தையும் கோரிக்கையையும்தான் கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.

June 11, 2014, 5:18 PM

உயிரை பழி வாங்கும் பொது தேர்வு தேவைதானா

 

வருடா வருடம் பல மாணவர்களின் உயிரைப் பழி வாங்கும் பத்தாவது மற்றும் பனிரெண்டாவது பொதுத் தேர்வு தேவைதானா?

வி.மி. ரியாஸ், ஆழ்வார் திருநகர், சென்னை

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் விபரீதங்களைப் பொதுவானதாகக் கருதும் மனப் போக்கின் காரணமாக இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.

 விபத்துக்களில் சிலர் பலியாகும்போது, மனித உயிர்களைக் கொல்லும் வாகனங்கள் தேவையா? எல்லா வாகனங்களையும் தடை செய்ய வேண்டும் என்று கேட்பதற்கு நிகராக, உங்கள் கேள்வி அமைந்துள்ளது.

 தவறான சிகிச்சையால் ஒரு சிலர் மரணித்தால் மனித உயிர்களைப் பலிவாங்கும் மருத்துவமனைகள் தேவையா என்று கேட்பீர்களா? கணவன் மீதுள்ள கோபத்தால் ஒரு பெண் தற்கொலை செய்தால் மனித உயிர்களைப் பலிவாங்கும் திருமண வாழ்க்கை தேவையா என்று கேட்பீர்களா?

 இதுபோன்ற கேள்விகள், நமது சிந்தனைக் கூர்மையாவதைத் தடுக்கும். உள்ளதை உள்ளபடி பார்க்கும் சரியான பார்வையில் இருந்து நம்மைத் திசை திருப்பும்.

 மதுபானம் முற்றிலும் கேடாக இருப்பதால் அது தேவையா என்று கேட்கலாம். இதுபோல் முற்றிலும் கேடாகவும், அல்லது பெருமளவு கேடாகவும் உள்ள விஷயங்கள் பற்றித்தான் இப்படி கேள்வி எழுப்ப முடியும்.

 இலட்சக்கணக்கான மாணவர்கள் பரீட்சை எழுதுகிறார்கள். அவர்கள் அனைவருமோ, அவர்களில் பெரும்பாலானவர்களோ தற்கொலை செய்வதில்லை.

 பரீட்சையில் பல்லாயிரம் மாணவர்கள் தோல்வி அடைகின்றனர். அவர்கள் அனைவருமோ, அவர்களில் பெரும்பாலானவர்களோ தற்கொலை செய்வதில்லை.

 ஏழெட்டுப் பேர் தற்கொலை செய்கிறார்கள் என்றால் அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்றுதான் சிந்திக்க வேண்டும். பரீட்சையே கூடாது என்றால் குலுக்கல் முறையில் வேலை கொடுக்க முடியுமா? அடிமுட்டாளுக்கு உயர்கல்வியைக் கொடுக்க முடியுமா?

 இதுபோல் தற்கொலை நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று நாம் முன்னரே தெளிவுபடுத்தியுள்ளோம்.

அதைக் கீழே தருகிறோம்.

அதிக மதிப்பெண் போதை

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களில் போதுமான முஸ்லிம்கள் தேறவில்லையே? இந்தப் பின்னடைவுக்குக் காரணமென்ன? இதை எப்படிச் சரி செய்வது?

இதில் பின்னடைவு ஏதும் இல்லை. சரி செய்வதற்கும் ஒன்றுமில்லை. முதல் மூன்று இடங்களைப் பிடிக்க வேண்டும் என்று வெறியூட்டப்படுவதே கண்டிக்கத்தக்கதாகும். பிஞ்சுப் பருவத்திற்கென்று சில ஆசைகளும் தேவைகளும் உள்ளன.

 உடலை வலுவாக வைத்திருக்கும் விளையாட்டுக்கள், நண்பர்களுடன் பொழுதுபோக்குதல், போதுமான தூக்கம், தேவையான ஓய்வு, குறித்த நேரத்தில் சாப்பாடு என்று அனைத்தையும் வழக்கம்போல் செய்துகொண்டு படிக்கவும் வேண்டும். ஆடல், பாடல், சினிமா போன்ற பயனற்றவைகளைத் தவிர்க்கலாமே தவிர எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாக இருக்கப் பழக்கப்படுத்தக் கூடாது.

 பிள்ளைப் பருவத்தின் சந் தோஷங்களைக் கெடுத்து முதல் மதிப்பெண்தான் லட்சியம் என்று போதிக்கப்படுவதாலும், அனைவரும் இதை ஊக்குவிப்பதாலும், மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டால், இதை அவமானமாகக் கருதி தற்கொலையும் செய்கிறார்கள்.

 அதிக மதிப்பெண் எடுக்காவிட்டால் நடப்பதே வேறு என்று சில பெற்றோர்கள் எச்சரித்து பயம் காட்டுவதாலும், மதிப்பெண் குறைவாகப் பெறும்போது, தற்கொலை செய்ய மாணவர்கள் தூண்டப்படுகின்றனர். இந்த மனநிலை மாறவேண்டும். முஸ்லிம் மாணவர்களுக்கு இதுபோல் வெறியேற்ற வேண்டிய அவசியம் இல்லை.

 படிப்பில் ஆர்வமூட்டி அவனது நினைவாற்றலுக்கு ஏற்ப எடுக்கும் மதிப்பெண்களை பெற்றோரும் பொருந்திக் கொள்ள வேண்டும்.  பெற்றோர் பொருந்திக் கொள்வார்கள் என்பதை அந்த மாணவனுக்கு உணர்த்தப்பட வேண்டும்.

 அதிக மதிப்பெண் குறித்த இன்னும் சில உண்மைகளையும் நாம் சுட்டிக்காட்டக் கடமைப் பட்டுள்ளோம். அதில் மறைந்துள்ள மர்மங்களை அறிந்து கொண்டால் அதிக மதிப்பெண் என்ற வெறி பிடித்து அலைவது ஒழிந்துவிடும்.

 நமது நாட்டில் உள்ள கல்வி முறையில் திறமைக்கோ, சிந்திக்கும் திறனுக்கோ மதிப்பெண்கள் போடுவதில்லை. மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதற்குத் தான் மதிப்பெண்கள் போடப்படுகின்றன. புரியாமல் மனப்பாடம் செய்திருந்தால் கூட அதை எழுதினால் மதிப்பெண் கிடைத்துவிடும்.

 அதன் பின்னர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைச் சமாளிக்க இந்த மனப்பாடமும் அதனால் கிடைத்த மதிப்பெண்களும் உதவாது.

 மொழியறிவும், சிந்திக்கும் திறனும் உடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி எஸ்.எஸ்.எல்.சி.யில் பெயில் ஆனவர்தான்.

 கடந்த 20 ஆண்டுகளாக 12ஆம் வகுப்பில் முதலிடம் பெற்றவர்களின் பட்டியலைத் திரட்டிப் பாருங்கள். அவர்கள் அனைவருமே நாட்டில் சிறந்த விஞ்ஞானியாக, சிறந்த மருத்துவராக, சிறந்த எஞ்சீனியராக சிறந்த பேராசிரியராக இருக்கிறார்களா? ஓரிருவர் அப்படி இருப்பார்களே தவிர, மற்றவர்களால் பிரகாசிக்க இயலவில்லை என்பதை அறியலாம்.

 அதே நேரத்தில் முதல் நிலையில் பல்வேறு சாதனைகள் படைத்தவர்களிடம் நீங்கள் 12ஆம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவரா என்று விசாரித்துப் பாருங்கள். அவர்களில் அதிகமானவர்கள் சராசரியான மதிப்பெண் பெற்றவராகவே இருப்பார்கள்.

 எனவே மதிப்பெண்களுக்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அது மட்டுமே திறமைக்கும், அறிவுக்கும் ஒரே அடையாளம் அல்ல. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

 மனப் பாடத்திற்காகத்தான் மதிப் பெண்கள் கிடைக்கின்றன என்பது கூட முழுமையான உண்மை அல்ல. அது ஓரளவுக்குத்தான் உண்மை.

 100 கேள்விகளிலிருந்து 10 கேள்விகள் கேட்கப்படும் என்பதற்காக 100கேள்விகளுக்கான விடைகளையும் மாணவர்கள் மனப்பாடம் செய்கிறார்கள்.

 அதில் ஒரு மாணவன் 95 கேள்விகளுக்கான விடைகளை மனப்பாடம் செய்து விட்டான். ஆனால் கேட்கப்பட்ட பத்து கேள்விகளில் எட்டு கேள்விகள் அவன் மனப்பாடம் செய்ததாகவும், இரண்டு கேள்விகள் அவன் மனப்பாடம் செய்யாத ஐந்து கேள்விகளில் இருந்து கேட்கப்பட்டால் அவனுக்கு 80 சதவிகித மதிப்பெண்தான் கிடைக்கும்.

 இன்னொரு மாணவனோ 70 கேள்விகளுக்கான விடைகளை மனப்பாடம் செய்தான். கேட்ட கேள்விகள் அனைத்தும் அந்த 70க்குள் அடங்கியிருந்தால் அவன் 100சதவிகித மதிப்பெண் பெறுவான்.

 அதாவது 95 சதவிகிதம் மனப்பாடம் செய்தவனுக்கு 80 மதிப்பெண்களும், 70சதகிவிதம் மனப்பாடம் செய்தவனுக்கு 100 மதிப்பெண்ணும் கிடைத்து விடுகிறது. முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் சில நேரங்களில் இந்தத் தரத்திலும் இருப்பார்கள்.

 இதில் திறமை மட்டுமின்றி, மனப்பாடத் திறனும் கவனிக்கப் படாமல் விடப்படுகிறது. நாம் மனப்பாடம் செய்ததில் கேள்விகள் அமைவதைப் பொருத்துத்தான் இது முடிவு செய்யப்படுகிறது.

 அதாவது வாய்ப்புக்கள்தான் இதைத் தீர்மானிக்கின்றன. தினசரி வகுப்புகளிலும், டெஸ்டுகளிலும் முதலிடத்தில் வந்த மாணவர்கள் சிலரது மதிப்பெண்களை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் இதுபோன்ற தேர்வுகளில் முந்திவிடும் அவலத்திற்கும் இதுதான் காரணம்.

 இதுபோக மதிப்பெண்கள் போடக் கூடியவர்களின் குணநலன்களும் இதைத் தீர்மானிக்கின்றன. நன்றாகத் தேர்வு எழுதியவனின் விடைத்தாள் கஞ்சத்தனம் செய்யும் ஆசிரியரின் கைக்குக் கிடைத்தால், அவனுக்கு கிடைக்க வேண்டியதை விடக் குறைவான மதிப்பெண்ணே கிடைத்திருக்கும். சுமாராக எழுதியவனின் விடைத் தாள் தாராள சிந்தனை கொண்ட வர்களிடம் போனால், அவன் எதிர்பார்த்ததைவிட கூடுதல் மதிப்பெண்ணுடன் முதலாமவனை இவன் முந்திவிடுகிறான்.

 விடைத்தாள்களை யார் திருத்துகிறார்கள் என்பதும் இதைத் தீர்மானிக்கிறது. எனவே திறமைக்கும் மனப்பாடத்திற்குமான அடையாளமாக மதிப்பெண்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. என்ன எழுதியிருக்கிறது என்பதை வாசித்து நேரத்தை வீணாக்க விரும்பாத ஆசிரியர்கள் அதிக வரிகளுக்கு அதிக மதிப்பெண்களும், குறைந்த வரிகளுக்கு குறைந்த மதிப்பெண்களும் போட்டு கடமையை நிறைவேற்றுவதும் உண்டு.

 முன்னாள் முதல்வரின் கைங்கரியத்தால், கண்பார்வை குறைந்த, ஊணமானவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தேர்வுத்தாள் திருத்தும் பணியில் நியமிக்கப்படுகின்றனர். கண்ணுக்கு அருகில் வைத்தால்கூட எழுத்தைச் சரியாக வாசிக்கத் தெரியாதவர்கள், தேர்வுத்தாளைத் திருத்தினால், அவரது மனநிலையைப் பொருத்து, கீழே உள்ளவன் மேலே வருவான். மேலே வரவேண்டியவன் கீழே போய்விடுவான். இப்படியும் மதிப்பெண்கள் போடப்படுகின்றன.

 இது தவிர சில தனியார் பள்ளிகள் தங்கள் பெயரைத் தக்க வைப்பதற்காக, கேள்வித்தாளுடன் விடைகளையும் கொடுத்து, எழுத ஆசிரியர்கள் துணைசெய்வதும், மேற்பார்வையாளர்களுக்குப் பெருந்தொகை கொடுத்து சரிக்கட்டுவதும் நடப்பது உண்டு.

 எப்போதுமே நாமக்கல் மாவட்டத்தினரைச் சேர்ந்தவர்களே முதல் இடங்களைப் பிடித்து வருகின்றனர். இது ஏன் என்று ஆய்வு செய்தபோது நாமக்கல்லில் இந்த மோசடி நடப்பதைக் கண்டறிந்தனர்.

 இந்த ஆண்டு சிறப்பு பறக்கும்படை அமைத்து மாணவர்கள் காப்பி அடிக்க பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் உடந்தையாக இருப்பதைக் கையும் களவுமாகப் பிடித்து பள்ளிக்கூட அனுமதியையும் ரத்து செய்தன.

 சில பள்ளிகள் அப்படியும் தப்பித்து விட்டன. முதல் இடங்களைப் பிடிக்கும் பள்ளிக் கூடங்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்க சில பெற்றோர்கள் தயாராக இருக்கின்றனர்.

 எனவே கோடி கோடியாகக் கொள்ளையடிக்க உதவும் என்பதால், ஆசிரியர்களே தில்லுமுல்லு செய்து சராசரி மாணவனை முதல் மதிப்பெண் எடுக்க வைக்கிறார்கள்.

 இவ்வளவும் சில நேரங்களில் முதல் மதிப்பெண்ணைத் தீர்மானிக்கின்றன.

 மனப்பாடம் செய்தால் நிச்சயம் சிறந்த மதிப்பெண் என்பதற்கே உத்தரவாதம் இல்லை எனும்போது, இடம் பெறும் கேள்விகளும், திருத்தக்கூடிய ஆசிரியர்களும், தேர்வு கண்காணிப்பாளர்களும் தான் இதைத் தீர்மானிக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொண்டால் மதிப்பெண்ணுக்காக அளவற்ற தியாகங்களைச் செய்ய மாட்டார்கள்.

 மாணவர்கள் உண்ணாமலும், உறங்காமலும், சிறுபிள்ளைத் தனங்கள் செய்யாமலும் எந்திரத் தன்மையுடன் வளர்க்கப்படுவதை நாம் ஊக்குவிக்கக் கூடாது. எல்லாக் கடமைகளையும் செய்துகொண்டு உயர் கல்வி கற்பதற்கான மதிப்பெண்களை எடுக்கும் அளவுக்கு பாடுபடுங்கள் என்று ஆர்வம் ஊட்டுவதே போதுமானது.

 முதல் 10 இடம் என்பதெல்லாம் லட்சியம் இல்லை. எல்லா உயர் கல்வி இடங்களும் முதல் 10 இடத்திற்கு வந்தவர்களைக் கொண்டு நிரப்பப்படாது. இதை அனைவரும் உணர்வது நல்லது.

May 27, 2014, 1:51 PM

யாருக்கும் ஆதரவு இல்லை எனில் நமது கோரிக்கைகளை எப்படி வெல்வது

 

தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலை கூட எடுக்கக்கூடாது என்பது குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள். தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று கருத்து சொல்லாவிட்டால் நமது கோரிக்கைகளை எவ்வாறு வென்றெடுக்க முடியும்?

மசூது, கடையநல்லூர்.

 

எங்களின் இந்தக் கோரிக்கையை ஏற்றால் நாங்கள் தேர்தலில் வாக்களிப்போம் என்று சொல்லும்போது கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பு உள்ளது என்பது உண்மைதான். இதற்காகவே இந்த நிலைப்பாட்டை இது வரை நாம் எடுத்து வந்தோம்.

 ஆனால் வேறு வழியில் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்பதாலும் ஆதரவு நிலைபாட்டினால் நன்மையை விட கேடுகளே அதிகம் என்பதாலும் இது மறு பரீசீலனைக்கு உரியது என்று முடிவு எடுக்கப்பட்டது.

உயர்நிலைக் குழுவில் வைக்கப்பட்ட காரணங்களைக் கீழே தருகிறோம்.

முதல் காரணம்

 தமிழக முஸ்லிம்களைப் பொருத்தவரை பெரும்பாலானவர்கள் மாநிலத்தில் உள்ள கட்சிகளின் அபிமானிகளாகவும், விசுவாசிகளாகவும் உள்ளனர். நம்முடைய பிரச்சாரத்தின் மூலம் இதில் ஓரளவு நாம் வெற்றி பெற்றாலும் முழு வெற்றி பெறவில்லை.

 தவ்ஹீத் ஜமாஅத்தில் இத்தகையோர் அதிக அளவில் இல்லாவிட்டாலும் ஓரளவு இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது.

 திமுக அல்லது அதிமுக அல்லது ஏதோ ஒரு கட்சியில் இருந்து கொண்டுதான் முஸ்லிம்களாக உள்ளனர். நாங்கள் திமுக குடும்பம்; நாங்கள் அதிமுக குடும்பம் என்ற கொள்கை உள்ளவர்களும் உள்ளனர்.

 திமுக எவ்வளவு பெரிய நன்மை செய்தாலும் அதிமுக அபிமானிகளாக உள்ளவர்கள் அந்த நன்மையைக் கருத்தில் கொண்டு திமுகவுக்கு வாக்களிப்பதில்லை.

 அதிமுக எவ்வளவு பெரிய நன்மை செய்தாலும் அந்த நன்மைக்கு நன்றி செலுத்துவதைவிட திமுக அபிமானிகளுக்கு திமுகவே பெரிதாக தெரிகின்றது. அதிமுகவுக்கு வாக்களிக்க அவர்களின் மனம் இடம் கொடுப்பதில்லை.

 நியாயமான கோரிக்கைக்காக நாம் எடுக்கும் முடிவைக் கூட அனைவரும் ஏற்கும் நிலை எப்போதும் இருந்ததில்லை.

 கோவை குண்டுவெடிப்புக்குப் பின் நடந்த தேர்தலில் எந்த முஸ்லிமும் திமுகவுக்கு வாக்களித்திருக்கக்கூடாது என்றபோதும் சில முஸ்லிம்கள் திமுகவுக்கு வாக்களித்தார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.

 மேலும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்ததற்காக அறவே திமுகவுக்கு வாக்களித்திருக்கக்கூடாது என்றாலும் அப்போதும் சில முஸ்லிம்கள் திமுகவுக்கு வாக்களித்தார்கள் என்பதை நாம் பார்க்க முடிந்தது.

 மார்க்க சம்மந்தமான விஷயங்களை நாம் சொல்லும்போது குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் உள்ளதால் அதை ஏற்கும் அளவுக்கு தேர்தல் நிலைப்பாட்டை மக்கள் ஏற்பதில்லை என்பதையும் நாம் காண்கிறோம்.

 அனைவரும் இல்லாவிட்டாலும் 80 சதவிகிதமாவது ஏற்று வாக்களித்தால்தான் அதை வைத்து அரசிடம் கோரிக்கை வைக்க முடியும். அந்த நிலை இல்லை எனும்போது நாம் எதற்காக கருத்து சொல்ல வேண்டும்?

 இந்தக் காரணம் உயர்நிலைக் குழு உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டது.

இரண்டாவது காரணம்

 நமது முடிவை நாமே எடுக்கும்போது உறுதியான ஒருமுடிவை எடுக்க முடியும். ஆனால் பெரிய கட்சிகள் என்ன செய்கின்றன என்பதைப் பார்த்து முடிவு எடுக்கும்போது குழப்பங்கள் ஏற்படுகின்றன.

 இடஒதுக்கீட்டுக்கு ஆணையம் அமைத்தார்கள் என்பதற்காக நாம் அதிமுக ஆதரவு நிலை எடுத்தோம். அதில் உறுதியாக நிற்க முடியாத அளவுக்கு அதிமுகவின் செயல்பாடு அமைந்து விட்டது.

 அதிமுக, பாஜகவை விமர்சிக்க வில்லை என்ற நிலையிலும் நாம் ஆதரவு நிலையைத் தொடர்ந்தால் பெட்டி வாங்கிவிட்டார்கள் என்று கூசாமல் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படும். அதை மக்கள் நம்பக் கூடிய நிலையும் ஏற்படும்.

 அதிமுக ஆதரவை விலக்கிக் கொண்டால் உறுதியான முடிவை எடுக்க தவ்ஹீத் ஜமாஅத்துக்கு திராணி இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது.

 பாஜகவுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம் என்று சொன்னதற்காக திமுகவை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம். அதன் பின்னர் சன் டிவியில் மோடிக்கு வாக்களிக்குச்சொல்லி விளம்பரம் வருகிறது. நம் மக்கள் திமுகவுக்கு வேலை பார்க்க மாட்டோம் என்று சொன்னபோது உடன்பாடு இல்லாவிட்டால் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று நாம் சொல்லும் நிலை ஏற்பட்டது.

 இவர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்பதைக் கவனித்து முடிவை மாற்ற வேண்டும். அதுவும் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. மாற்றாவிட்டாலும் வேறு விமர்சனத்துக்கு உள்ளாக நேர்கின்றது.

 நாளுக்கு ஒரு நிலைப்பாடும் கொள்கையும் உள்ளவர்களை ஆதரிக்கப் புகுந்தால் நாமும் நாளுக்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் நிலைதான்  ஏற்படும்.

 இந்தக் காரணமும் முன் வைக்கப்பட்டது.

மூன்றாவ்து காரணம்

 மார்க்க விஷயத்தில் நாம் அடித்துப் பேசுவதுபோல் இந்த விஷயத்தில் உறுதியான வாதங்களை வைக்க முடியவில்லை.

 குறிப்பிட்ட காரணத்துக்காக நாம் திமுக அல்லது அதிமுக ஆதரவு நிலை எடுத்தால் அதை நூறு சதவிகிதம் நியாயப்படுத்தும் நிலை இருக்காது.

 நாம் திமுகவை ஆதரிக்கும்போது திமுகவின் துரோகங்களைப் பட்டியல் போட்டு நாம் தவறான முடிவு எடுத்து விட்டது போல் காட்ட பல இயக்கங்கள் உள்ளன.

 அதிமுகவை ஆதரிக்கும் போதும் இதே நிலை தான் ஏற்படுகிறது.

 எந்த முடிவை எடுத்தாலும் அதுதான் சரியானது என்று உறுதியாக நிலைநாட்ட மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது.

 இதுவும் கவனத்தில் கொள்ளப் பட்டது.

நான்காவது காரணம்

 யாருக்கு ஆதரவு நிலை எடுத்தாலும் நம் ஜமாஅத் தனக்காகவோ, ஜமாஅத்தின் தலைவர்களுக்காகவோ எந்த ஆதாயத்தையும் அடைந்ததில்லை. பணமோ, பதவிகளோ, இன்னபிற சலுகைகளோ நாம் அடைந்தது இல்லை. வெளிப்படையாக நமது செயல்பாடுகள் இருந்தாலும் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியே வருகின்றது.

 அனைவரும் பணம் வாங்கிக் கொண்டு பணியாற்றுவதால் தவ்ஹீத் ஜமாஅத்தும் அப்படித்தான் நடக்கும் என்ற பொதுவான கருத்துக்குள் நம்மையும் அடக்கி விடுகிறார்கள்.

 தவ்ஹீத் ஜமாஅத்துடன் அதிகத் தொடர்பு இல்லாத தவ்ஹீத் ஆதரவாளர்கள்கூட ”இருந்தாலும் இருக்கும்” என்று கூறி தலையாட்டுவதை நாம் அறியாமல் இல்லை.

 நாம் எவரிடமும் எவ்வித ஆதாயமும் அடையாமல் இருந்தும், அதுபோல் ஒரு விமர்சனத்துக்கு, நாம் ஏன் ஆளாக வேண்டும்?

 இந்தக் கருத்தும் முன்வைக்கப் பட்டது.

ஐந்தாவது காரணம்

 ஒரு கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்து நாம் பிரச்சாரம் செய்வது நம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் மன மாற்றத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 மற்றவர்களை ஆதரிப்பதற்குப் பதிலாக ஏன் நாமே போட்டியிடக் கூடாது என்ற அளவுக்கு கீழ்மட்டத்தில் பேசப்படுவதையும் நாம் அறிகிறோம்.

 இஸ்லாமிய ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் நாம் நேரில் களத்தில் குதிக்க வேண்டும் என்று உளறுவோரும் உருவாகின்றனர். இந்தத் தேர்தல் முறையில் நாம் போட்டியிட்டு இஸ்லாம் கூறும் அரசியலை நடத்த முடியாது என்ற சிந்தனைகூட இல்லாமல் போய் விடுகின்றது.

 ஆதரவு நிலையே இல்லை எனும்போது இதுபோன்ற பேச்சுக்கு அறவே இடமில்லாமல் போய் விடும்.

ஆறாவது காரணம்

 தேர்தல் பணி செய்யும்போது நம் காசில் வேலை செய்ய முடியாது. அரசியல் கட்சிகளின் செலவில்தான் நாம் வேலை செய்ய முடியும். இதற்காக அரசியல்வாதிகளை அணுகும்போது மிகுந்த சுய மரியாதையுடனும் கண்ணியத்தைக் காத்துக் கொள்ளும் வகையிலும் அதிகமான மாவட்ட கிளை நிர்வாகிகள் நடந்து கொண்டாலும் சிலர் அவ்வாறு நடப்பதில்லை.

 வேட்பாளரிடம் பணம் வாங்குவதற்கு முன் அதுகுறித்த பட்ஜெட்டை தலைமைக்கு அனுப்ப வேண்டும். தலைமை அங்கீகரித்த பட்ஜெட்டைத் தான் வேட்பாளரிடம் கொடுக்க வேண்டும் என்று தெளிவாக அறிவுறுத்தினோம்.

 உதாரணமாக ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஒரு லட்சம் ஆகும் என்றால் மூன்று லட்சம் என்று வேட்பாளரிடம் பட்ஜெட்டைக் கொடுத்தால் நம் ஜமாஅத்தின் நற்பெயர் பாதிக்கும் என்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்ட்து.

 ஆனால் இதை அனைவரும் கடைப்பிடிக்கவில்லை. பணம் வாங்கினால் எவ்வளவு வாங்கப்பட்டது என்பது தலைமைக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதையும் சிலர் கடைப்பிடிக்கவில்லை.

 வேட்பாளர்தான் நமது அலுவலகம் வந்து ஆதரவு கேட்க வேண்டும். நாம் அவர்களைத் தேடிச் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டும், அதுவும் சிலரால் மீறப்பட்டது.

 தியாகம், அர்ப்பணிப்பு என்ற அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட கொள்கைச் சகோதரர்கள் அந்த உயர் பண்பை இழப்பதற்கு இது காரணமாக ஆகிவிடுகின்றது.

ஏழாவது காரணம்

 நம்முடைய மர்கஸ்களில் தொழவரும் சகோதர்ர்களில் திமுகவாக இருந்து கொண்டு தவ்ஹீதை ஆதரிப்பவர்களும் அதிமுகவாக இருந்து கொண்டு தவ்ஹீதை ஆதரிப்பவர்களும் உள்ளனர். அதிமுக ஆதரவு நிலை எடுத்தால் அன்று முதல் திமுக ஆதரவு முஸ்லிம்கள் பள்ளிக்கு வருவதில்லை. திமுக ஆதரவு நிலை எடுத்தாலும் இதே நிலை தான்.

 தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் சமுதாய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஜும்மாவுக்கு நமது பள்ளிக்கு வந்துகொண்டு இருப்பார்கள். அவர்களை ஆதரிப்பதில்லை என்ற முடிவை நாம் எடுக்கும்போது அவர்கள் தவ்ஹீதைப் புறக்கணிக்கும் நிலை ஏற்படுகிறது.

எட்டாவது காரணம்

 ஏகத்துவக் கொள்கைக்காக நாம் பலவிதமான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டோம். இதற்கு அல்லாஹ்விடம் கூலி உள்ளது என்பதால் அதை நாம் பொருட் படுத்தவில்லை. அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு கலங்காமல் பணியாற்றி வருகிறோம்.

 கொள்கைக்காக மோதிக் கொள்வதில், மார்க்கதிற்கு முரணான வைகளைக் கண்டிப்பதற்காக நமக்குள் சண்டை ஏற்பட்டாலும் ஒற்றுமை குலைகிறது என்று பலர் கூப்பாடு போட்டாலும் அதனால் நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படவில்லை. ஆனால் தேர்தலில் யார் ஜெயிப்பது என்பதற்காக நாம் போட்டுக் கொள்ளும் சண்டை நிச்சயமாக நமக்கு உறுத்தலை ஏற்படுத்துகிறது.

 மார்க்கத்திற்காக தவிர வேறு எந்தச் சண்டையும் வேண்டாம் என்றால் இந்த அரசியல் முஸீபத்தில் இருந்து முற்றாக விலக வேண்டும் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டது.

ஒன்பதாவது காரணம்

 தேர்தல் களத்தில் இறங்கி விட்டால் சுமார் 40 நாட்கள் நமது தாவா (பிரச்சாரப்) பணிகள் நிறுத்தப்படுகிறது. இதுவே முழு நேர வேலையாக ஆகின்றது.

பத்தாவது காரணம்

 அமைச்சர்களுடனும், அரசியல் வாதிகளுடனும் ஏற்பட்ட தொடர் பையும், நட்பையும் தமது சுய நலனுக்குப் பயன்படுத்தும் எண்ணம் சிலருக்கு ஏற்படலாம் என்ற அச்சமும் உள்ளது.

 இதுபோல் பல காரணங்கள் விபரமாக எடுத்து வைக்கப்பட்டன. இன்ஷா அல்லாஹ் இந்தக் காரணங்கள் விரிவாக நமது பொதுக்குழுவில் வைக்கப்படும்போது உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

 அப்படியானால் நமது கோரிக்கைகளை வென்றெடுக்க என்ன செய்வது என்ற கேள்வியும் பரிசீலிக்கப்பட்டது.

 நம்முடைய கோரிக்கைகளுக்காக மக்களைத் திரட்டி நாம் போராட்டம் நடத்தலாம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டு நீங்கள் எங்கள் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவிக்கலாம். கோரிக்கை நிறைவேறாவிட்டால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று பொதுவான எச்சரிக்கையோடு நிறுத்திக் கொள்ளலாம்.

 எங்கள் கோரிக்கையை ஏற்றால் நாங்கள் வாக்களிப்போம் என்று சொல்லாமல் நீங்கள் நல்லது செய்து எங்கள் மக்களை வென்றெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லலாம். இதன் மூலம் கோரிக்கைகளை வென்றெடுக்கலாம்.

 மக்கள் மத்தியில் நாம் ஏற்படுத்தும் விழிப்புணர்வு காரணமாக தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால் அரசியல்வாதிகள் கோரிக்கைகளைக் கவனத்தில் கொள்வார்கள்.

 போராட்டத்தில் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும் அறிவிப்பு செய்யப்படாது; தேர்தல் நெருக்கத்திலும் செய்யப்படாது எனும்போது இப்போது கூடுவதை விட அதிக அளவில் மக்கள் திரள்வார்கள். நம் கோரிக்கை இறைவன் அருளால் சரியான முறையில் சென்று சேரும் என்று கருதுகிறோம்.

May 27, 2014, 1:48 PM

தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா

தமிழகத்தில் ஏறக்குறைய எல்லா முஸ்லிம் அமைப்புகளும் திமுகவை ஆதரித்தும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லையே? முஸ்லிம்கள் வாழும் பகுதியிலும் அதிமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளதே? தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறதே?

ஆதில் சா மதுரை

பதில்

முஸ்லிம் இயக்கங்களின் கோரிக்கையை இந்த்த் தேர்தலில் முஸ்லிம்கள் அப்படியே ஏற்கவில்லை என்பது உண்மை தான்.

பாஜக பற்றி ஜெயலலிதா வாய் திறக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காகத் தான் நாம் ஆதரவை வாபஸ் பெற்றோம். மற்றபடி அவரது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பெரிய மனக்குறை இல்லை. கலவரங்களின் போதும் குண்டு வெடிப்புகளின் போதும் அவரது நடவடிக்கை பாரபட்சமாக இருக்கவில்லை. கருனாநிதியைப் போல் அவர் அடக்குமுறை செய்யவில்லை. அத்துடன் இட ஒதுக்கீட்டுக்கான ஆணையத்தையும் அமைத்து இருந்தார். இதனால் அவரை ஆதரிக்கும் மனநிலையில் தான் அதிகமான முஸ்லிம்கள் இருந்தனர்.

பாஜகவை எதிர்க்கவில்லை என்ற் காரணத்தால் நாம் ஆதரவை வாபஸ் பெற்றவுடன் அவர் பாஜகவை விமர்சிக்க ஆரம்பித்தது முஸ்லிம்களிடம் எடுபட்டது. இதைத் தானே குற்றச்சாட்டாக வைத்தீர்கள். ஜெயலலிதாதா பாஜகவையும் விமர்சித்து விட்டாரே என்ற அதிமுகவின் பிரச்சாரத்தை முஸ்லிம் மக்கள் நம்பினார்கள். எனவே தான் முஸ்லிம் இயக்கங்களின் கோரிக்கை எடுபடவில்லை. ஆதரவு வாபஸ் என்ற பிறகு அவர் பாஜக் பற்றி வாய் திறக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அவர் பாதி இடங்களில் தோற்று இருப்பார்.

முஸ்லிம்கள் பெருவாரியாக அவருக்கு வாக்களித்துள்ளதால் இட ஒதுக்கீட்டு கோரிக்கையை அவர் சொன்ன படி நிறைவேற்றுவார் என்று வாக்களித்த முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்.

May 20, 2014, 4:15 PM

இந்தத் தேர்தல் முடிவில் இருந்து முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?

இந்தத் தேர்தல் முடிவில் இருந்து முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

சல்மான், கோவை

பதில்

காங்கிரஸ் மீது என்ன தான் கோபம் இருந்தாலும் மோடி நடத்திய பயங்கரவாதச் செயலை நடுநிலை இந்துக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நாம் நினைத்தோம்.

முஸ்லிம்கள் ஒழிய வேண்டும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் 30 சதவிகிதம் அளவுக்கு வாக்குகள் பெறுவார்கள் என்று நாம் நினைக்கவில்லை. குஜராத்தில் நடந்த கொடூரச் செயலைப் பார்த்து விட்டு, வயிற்றில் உள்ள குழந்தையைக் கூட ஈட்டியால் குத்தி கொலை செய்த கொடூரத்தைப் பார்த்து விட்டு, சிலிண்டர்களை வீடுகளில் வீசி கொளுத்திப் போட்ட கொடூரத்தைப் பார்த்து விட்டு இந்தக் கொடியவர்களை இந்துக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நாம் நினைத்தோம்.

முஸ்லிம்களை அழித்து ஒழிக்கும் கொள்கை உடையவர் என்று தெரிந்து இருந்தும் மோடியை இவர்களால் ஆதரிக்க முடிகிறது என்றால் முஸ்லிம்கள் அநியாயமாக அழிக்கப்பட்டதும் அழிக்கப்படலாம் என்பதும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

முஸ்லிம்களுக்கு எவ்வளவு பெரிய கொடுமை செய்தாலும் அது ஒரு பிரச்சனை இல்லை என்ற மனநிலைக்கு இவ்வளவு மக்கள் வந்து விட்டார்க்ள் என்பது தான் இதில் இருந்து நமக்குத் தெரியவருகிறது.

நம் சமுதாயத்தில் உள்ள சில மூடர்கள் குண்டு வைத்தல் போன்ற காரியங்களில் இறங்குவதும் மற்றவர்கள் வைக்கும் குண்டுகளும் முஸ்லிம்கள் மீது போடப்படுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலைக்கு காரணமாக இருந்துள்ளது. ஊடங்கள் இவ்வாறு சித்தரிப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

இதை மாற்ற நாம் முயல வேண்டும். ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இதை வெறுக்கிறார்கள் என்றாலும் அது உரிய முறையில் மக்களைச் சென்றடையவில்லை. முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாகவோ தீவுரவாதிகளின் ஆதாரவாளரகளாகவோ இருக்கிறார்கள் என்ற கருத்து ஆழமாகப் பதிந்துள்ளது. தமிழகத்தை விட இந்தி பேசும் மாநிலங்களில் இது அதிகமாகப் பதிந்துள்ளது.

இதை மாற்றி அமைக்க நாம் பாடுபட வேண்டும். 30 சதவிகிதத்தை குறைக்கும் வகையில் நாம் திட்டங்கள் வகுத்தாக வேண்டும்.

இதன் துவக்கமாக குண்டு வெடிப்புக்கும் தீவிரவாதச் செயலுக்கும் முஸ்லிம்கள் ஆதரவாக இல்லை என்பதை உணர்த்தும் வகையில் கட்டுக்கடங்காத கூட்டத்தைத் திரட்டி கண்டனப் பேரணிகள் எல்லா ஊரிலும் நடத்த வேண்டும். முஸ்லிம்கள் இது போன்ற செயல்களை நஞ்சாக வெறுக்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையிலும் அனைத்து சமுதாய மக்களும் இதைக் கவனிக்கும் வகையிலும் நடத்தப்பட வேண்டும். இதற்கான திட்டம் அடுத்த வாரம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் தனி நபர் சந்திப்புகளை அதிகப்படுத்தி நாட்டில் நமக்கு என்ன நடக்கிறது என்பதையும் புரியவைக்க வேண்டும். இதற்காக கடுமையாக நாம் உழைக்க வேண்டும். முஸ்லிமல்லாத மக்கள் மனங்களில் உள்ள வெறுப்பை அகற்றுவதுதான் உடனடியாகச் செய்ய வேண்டியதாகும்.

மோடி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று நாம் அஞ்சத்தேவை இல்லை. இந்தியாவில் சிறுபான்மையாக உள்ள மக்களிடம் தான் உலக நாடுகளின் அதிகாரம் உள்ளது. சிறுபான்மை மக்கள் நசுக்கப்படும் போது வல்லரசுகளான கிறித்தவ நாடுகளும், பொருளாதார வல்லரசுகளான இஸ்லாமிய நாடுகளும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். ஐநா வரை பிரச்சனையாகும். அதைக் கவனத்தில் கொண்டுதான் ஆட்சி நடத்த முடியும் என்று நம்புகிறோம். எனவே அதிகமாக நாம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.

பாடப்புத்தகங்களில் இந்து மதக்கருத்தைப் பரப்புதல், சிறுபான்மை கல்விக்கூடங்களின் சலுகைகளைப் பறித்தல், இட ஒதுக்கீட்டின் பயன் முஸ்லிம்களுக்குக் கிடைக்காமல் தடுத்தல், பசுமாடுகளை அறுக்கத் தடை செய்தல், கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் இடையூறு செய்தல் இது போல் சில்லறைத்தனமான வேலைகள் செய்ய ஓரளவு வாய்ப்பு உள்ளது. உலக அளவில் நல்ல பெயர் எடுப்பதற்காக அவ்வாறு செய்யாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

பாபர் மஸ்ஜிது சம்மந்தமாக வழக்கு போட்டவர்களை மிரட்டி அல்லது சரிக்கட்டி அது குறித்த வழக்கை வாபஸ் பெறச் செய்து .சட்டப்படியான தடை இல்லாமல் ஆக்கி அந்த இடத்தைக் கோவிலாக்க முயற்சிக்கலாம்.

வைப்பாட்டிதான் வைத்துக் கொள்ளலாமே தவிர இரண்டாம் திருமணம் கூடாது என்றும் நீதிமன்றங்கள் மூலமே விவாக ரத்து செய்ய வேண்டும் எனவும் சட்டங்கள் கொண்டு வர முயற்சிக்கலாம்.

இவை நடக்கும் போது இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை சமுதாயம் கவனத்தில் கொள்ளும். இதனால் ஏற்படும் விழிப்புணர்வு முஸ்லிம்களுக்கு நன்மையாக மாறும். எனவே நாம் இப்போது அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை

May 20, 2014, 4:14 PM

பாஜக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறக் காரணம் என்ன?

பாஜக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறக் காரணம் என்ன?

பரகத்துல்லா, பத்தமடை

பதில்

காங்கிரஸ் கட்சி ஒழிந்தால் போதும் என்ற அளவுக்கு காங்கிரஸ் மக்களின் கோபத்துக்கு உள்ளாகி இருந்தது. எப்படியாவது காங்கிரஸ் ஒழிந்தால் போதும் என்ற நிலையில் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். அதை பாஜக பயன்படுத்திக் கொண்டது. இது தான் ஒரே காரணம்.

காங்கிரஸ் செய்த ஊழல் உள்ளிட்ட எல்லா அயோக்கியத்தனங்களையும் பாஜகவும் செய்தது. பணக்கார்ர்களுக்குச் சாதகமாக ஆட்சி நடத்துவதில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அப்படி இருந்தும் காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவை ஏன் மக்கள் கருதினார்கள் என்பது தான் கவனிக்கப்பட வேண்டும். இரண்டுமே அனைத்து அயோக்கியத்தனக்களிலும் சமமானவை எனும் போது காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவை ஏன் மக்கள் தேர்வு செய்தார்கள் என்றால் சோனியா, ராகுல் மன்மோகன், சிதம்பரம் போன்ற படித்த முட்டாள்கள் தான் காரணம்.

இரண்டு திருடர்களில் ஒரு திருடன் மற்றவனை திருடன் என்று குற்றம் சாட்டினால் நீதான் திருடன் என்று திருப்பி அடிக்க வேண்டுமல்லவா? மதிகெட்ட காங்கிரஸ் தலைமை இப்படி உரிய பதிலடி கொடுக்கவில்லை. பாஜகவின் ஊழலை அம்பலப்படுத்தி இருவரும் சமம் என்ற நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற அரசியல் அறிவு இல்லை.

ஒரு மாணவி கற்பழிக்கப்பட்டதை வைத்து காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற தோற்றத்தை பாஜக ஏற்படுத்திய போது பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களைப் பட்டியல் போட்டு பாஜக ஆட்சியில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் என்று எளிதாக நிலைநாட்டி இருக்க முடியும்.

இதற்கும் ஊமை மன்மோகனும் மக்களை அணுகாத வெள்ளைக் காலர் சிதம்பரமும் காங்கிரசின் முக்கிய தலைவர்களும் தக்க பதில் கொடுக்கவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ வீரரின் தலையை வெட்டி நமது எல்லையில் போட்டது என்றார் மோடி. இது போல் வாஜ்பாய் ஆட்சியிலும் நடந்தது என்பதை இவர்கள் உரத்துச் சொல்லி மறுத்து இருந்தால் இது எடுபடாமல் போய் இருக்கும். அதைச் செய்யவும் படித்த முட்டாள்களுக்குத் தெரியவில்லை..

மும்பை தாக்குதலைச் சொல்லி பாகிஸ்தான்காரன் நமது நாட்டில் புகுந்து தாக்குதல் நடத்துகிறான். அதைத் தடுக்க காங்கிரசுக்கு துப்பு இல்லை என்றது பாஜக. உன் ஆட்சியில் தான் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடந்தது என்று பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அறிவும் இந்த மதியீனர்களுக்கு இல்லை.

மன்மோகன், பாகிஸ்தான் பிரதமரோடு கை குலுக்குகிறார் என்று பாஜக செய்த பிரச்சாரத்துக்கும் மவுனம் தான் இந்த மூடர்களின் பதிலாக இருந்தது. பாகிஸ்தானுக்கு ரயில் விட்டது யார்? கார்கில் ஊடுறுவல் நடந்தது யார் ஆட்சியில்? கார்கில் ஊடுறுவல் நாயகன் முசரபுக்கு பட்டுக் கம்பள வரவேற்பு அளித்தவர் வாஜ்பாய் தானே? தீவிரவாதிகளுக்கு பணிந்து கந்தகாருக்கு போய் தீவிரவாதிகளை ஒப்படைத்து விட்டு வந்தது யாருடைய ஆட்சி என்று எகிறி அடிக்க எண்ணற்ற ஆதாரங்கள் இருந்தும் இந்த மடையர்கள் அதற்கும் பதிலடி கொடுத்து வாயடைக்கச் செய்யவில்லை.

இந்திய மீனவ்ர்கள் இலங்கைப் படையினரால் கைது செய்யப்படுகின்றனர் என்று மோடி பேசியதற்கும் பதில் கொடுக்கவில்லை. வாஜ்பாய் ஆட்சியில் தான் இதைவிட அதிக மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்ற புள்ளிவிபரங்கள் கையில் இருந்தும் அதை எடுத்து வீரியமான பிரச்சாரம் செய்யவில்லை.

அதே நேரத்தில் மோடியின் அயோக்கியதனத்தை அம்பலப்படுத்தும் வகையில் அவருக்கு ஒரு பெண்ணுடன் உள்ள தொடர்பு தெரியவந்தது. அந்தப் பெண்ணுக்காக உளவுத்துறை அதிகாரிகள் இரு மாநிலங்களில் உளவு பார்த்தார்கள். அந்தப் பெண்ணின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டார்கள். இப்படிப்பட்ட ஒருவர் பிரதமராகலாமா என்பதைக் கையில் எடுத்து சரியான முறயில் கொண்டு சென்று இருந்தால் ஒழுக்கத்தை விரும்பும் பண்பாடுள்ள இந்திய மக்கள் மோடியை வெறுத்து இருப்பார்கள். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் பிரமுகர்களை நாம் சந்தித்து இது நல்ல வாய்ப்பு. இது ஒன்றே மோடியை ஒழித்துக் கட்டப் போதுமானது என்று ஆலோசனை சொன்னோம்.

நாடு முழுவதும் காங்கிரஸ்காரர்கள் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்துங்க்கள், மோடிமீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் மோடி பெண்பித்தர் என்ற கருத்துருவாக்கம் ஏற்படும் என்றெல்லாம ஆலோசனை கொடுத்தோம். எங்கள் கட்சியில் அதெல்லாம் செய்ய மாட்டார்கள். என்பதுதான் அவர்களின் பதிலாக இருந்தது.

பதவிப்பிரமானத்துக்கு எதிராக உளவுத்துறையைச் சொந்த வேலைக்குப் பயன்படுத்தியதாக மத்திய அரசு விசாரணைக் கமிசன் அமைத்து விசாரிப்போம் என்று கூறி விட்டு அதை அப்படியே கிடப்பில் போடும் அளவுக்கு இவர்களின் அரசியல் அறிவு இருந்தது.

எந்தப் பிரச்சனையையும் எப்படி கையாள்வ்து என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை. தெலுங்கானா பிரச்சனையை மாற்றி மாற்றி பேசி மாநிலத்தை ரணகளமாக்கினார்கள்.

தெலுங்கானா பகுதியில் வாக்கெடுப்பு நடத்துவோம். மக்கள் தனி மநிலத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் மாநிலத்தைப் பிரிப்போம் இல்லாவிட்டால் பிரிக்க மாட்டோம் என்று சொன்னால் அனைத்து கட்சியினரும் அதை ஏற்று இருப்பார்கள். பிரிப்பது என்று முடிவு எடுத்தாலும் பிரிப்பதில்லை என்று முடிவு எடுத்தாலும் அதை மக்கள் தலையில் போட்டு விடலாம் என்ற திட்டத்தை மேதாவி சிதம்பரத்துக்கு கடிதம் மூலம் நாம் தெரிவித்தோம். எந்த பிரச்சனையும் இல்லாமல் தீர்க்க வழிமுறைகள் உள்ளன என்றும் தெரிவித்தோம். இப்படி எளிதாக தீர்க்க வேண்டிய பிரச்சனையைத் தவறாக தீர்க்க முயன்று ஆந்திராவில் காங்கிரசை அழித்தார்கள்.

ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டியின் மறைவுக்குப் பின் அவரது மகனுக்கு பின்னால் மக்கள் நிற்கிறார்கள் என்பது சிறு பிள்ளைக்கும் தெரிந்தது. ஆனால் அவர் வரக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் எடுத்த ந்டவடிக்கைகளும் ஆந்திராவில் காங்கிரசை அழித்தன.

அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராகப் போராடுவது போல் சித்தரித்து காங்கிரசுக்கு எதிரான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்திய போது அவருக்கு நெருக்கடி கொடுக்காமல் விட்டு இருக்க வேண்டும். நெருக்கடியும் கொடுத்து அவரைக் கைதும் செய்து எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லும் வகையில் நாங்கள் ஊழல்வாதிகள் என்று ஒப்புக் கொள்வது போல் நடந்து கொண்டது காங்கிரஸ்.

பாஜக ஊழலுக்கு எதிராக தம்பி ஹசாரே என்று ஒருவரை உருவாக்கி பில்டப் கொடுத்து பாஜக ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்ப் போராட்டத்தை நடத்தி இருந்தால் பாஜக ஆதாயம் அடைய முடியாமல் தடுத்து இருக்கலாம்.

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்குக் கூட பிரதமரும் காங்கிரசை அழித்த சிதம்பரமும் எந்தப் பதிலும் விளக்கமும் மக்களுக்குச் சொல்லவில்லை.

மோடி டீக்கடைக்காரர் என்ற ஆயுதத்தை எடுத்தார்கள். இது மோடிக்குச் சாதகமாக அமையும் என்ற சாதாரண அறிவு கூட காங்கிரசாருக்கு இல்லை.

மோடியின் அம்மா ஆட்டோவில் போகிறார்; தாயைக் கவனிக்கவில்லை என்ற ஆயுதத்தை எடுத்தார்கள். பெற்ற தாய் என்பதற்காக எந்தச் சலுகையும் காட்டாத எளிமையானவர் என்று இது மாறும் என்பது கூட தெரியாக மடையர்களாக கங்கிரசார் இருந்தார்கள்.

கங்கிரஸ் செய்த எல்லா அயோக்கியத்தனங்களையும் பாஜக செய்து இருந்தும் பாஜக பரிசுத்தம் என்பது போலவும் காங்கிரஸ் மட்டுமே அயோக்கியர்கள் போலவும் சித்தரித்து வெற்றி பெற்றார்கள் என்றால் மூளையற்ற காங்கிரசின் தலமை தான் இதற்குக் காரணம்.

களத்தில் நின்று உழைப்பவர்களை அருகில் வைத்துக் கொள்ளாமல் ஒயிட் காலர் தலைவர்களை முன்னிறுத்தினார்கள். மக்களின் நடித்துடிப்பை அறிந்து கொள்ளாத இவர்களின் ஆலோசனையைக் கேட்டதும் இந்த வீழ்ச்சிக்குக் காரணம். ஒரு காரியம் சரியா தவறா என்பதை மட்டும் ஏசி அறையில் விவாதிப்பது அர்சியலுக்கு உகந்தது அல்ல. இதை மக்கள் ஏற்பார்களா என்பதையும் அறிந்து செயல்படுவது தான் அரசியல். இந்த அரசியல் மன்மோகனுக்கும் தெரியாது. தலைக்கணத்தில் யாராலும் மிஞ்ச முடியாத சிதம்பரத்துக்கும் தெரியாது. பல்லாண்டுகளாக காங்கிரசை வைத்து பிழைப்பு நடத்திய கிழட்டுத் தலைவர்களுக்கும் தெரியாது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தலைவரின் கீழ் செயல்பட வேண்டும். அவர் மக்களால் அறியப்பட வேண்டும். ஒரு மாநிலத்தில் ஒருவர் வளர்ந்தால் நமக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்று நினைத்து ஏராளமான கோஷ்டிகளை உருவாக்கி ஒரு தலைவரின் கீழ் கட்சி செயல்பட முடியாத நிலையை ஏற்படுத்தினார்கள். ஜகன்மோகனை ஓரம் கட்டி போட்டி தலைவர்களை உருவாக்கி கட்சியை அழித்தனர். தமிழகத்திலும் ஒரு தலைவரின் கீழ் கட்சி செயல்படவில்லை.

இன்னும் பல காரணங்கள் உள்ளன. அனைத்திலும் காங்கிரசின் முட்டாள்தனம் பளிச்சிடுகிறது. இதன் காரணமாக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து இருந்த காங்கிரஸ் ஒழிந்தால் போதும் என்று கருதிய மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தார்கள்.

இவை பாஜகவின் ஆதரவு ஓட்டு அல்ல. காங்கிரசின் எதிர்ப்பு ஓட்டுக்களாகும். இது நீடிக்காது, காங்கிரஸ் துடிப்புள்ள மூளையுள்ளவர்களின் ஆலோசனையுடன் அரசியல் நடத்தினால் அடுத்த தேர்தலுக்குள் இதை மாற்ற முடியும்.

May 20, 2014, 4:13 PM

30 சதவிகித வாக்குகள் பெற்ற பாஜகவிற்கு இது பெரிய வெற்றியல்ல என்பது சரியா

கேள்வி

பாஜக அதிகமான இடங்களை வென்றாலும் அவர்களுக்குக் கிடைத்தது 30 சதவிகித வாக்குகள் தான். எழுபது சதவிகித மக்கள் பாஜகவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். எனவே இது பெரிய வெற்றியல்ல என்று கூறுவது சரியா?

சனாவுல்லா, அய்யம்பேட்டை

பதில்

இதற்கு முன் நடந்த தேர்தல்களில் ஆட்சிக்கு வந்தவர்கள் ஐம்பது சதவிகிதத்துக்கு மேல் பெற்று ஆட்சிக்கு வந்து இருந்து பாஜக மட்டும் 30 சதவிகித வாக்குகளில் அதிக இடங்கள் பெற்று இருந்தால் தான் இந்த வாதம் சரியாக இருக்கும்.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் இது போன்ற நிலைதான் இருந்து வந்துள்ளது. நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களும் ஐம்பது சதவிகிதத்துக்குக் குறைவாகப் பெற்றுத்தான் ஆட்சிக்கு வருவார்கள். எனவே இந்த வாதத்தை வைத்து நம்மை நாமே போலியாக ஆறுதல் படுத்திக் கொள்ளக்கூடாது. பாஜக இதற்கு முன்னர் 30 சதவிகித வாக்குகளைப் பெறவில்லை. இப்போது பெற்றுள்ளது என்ற உண்மையை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் நமது நாட்டில் பிரிட்டன் ஜனநாயகத்தின் அடிப்படையிலான தேர்தல் முறை உள்ளது இது மாறினால் பாஜக இவ்வளவு அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்க முடியாது. இதற்கு முன் காங்கிரஸ் கட்சியும் பெரிய வெற்றியைக் கண்டிருக்க முடியாது.

இது குறித்து 2011 ஆம் ஆண்டு உணர்வு இதழில் நாம் எழுதியதன் ஒரு பகுதியை இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.

நமது இந்தியாவில் உள்ள தேர்தல் அமைப்பு பிரிட்டன் நாட்டில் உள்ள தேர்தல் முறையாகும். பிரிட்டன் ஜனநாயக முறை என்ற இந்தத் தேர்தல் முறை ஒரு சூதாட்டம் போன்றதாகும். பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆட்சி அமைவதற்காகத் தான் ஜனநாயகம் தேவைப்படுகிறது. ஆனால் பிரிட்டன் ஜனநாயகத்தில் சிறுபான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப பல நேரங்களில் ஆட்சி அமைந்து விடுவதுண்டு.

உதாரணமாக ஒரு தொகுதியில் ஆயிரம் வாக்காளர்கள் இருப்பதாகவும் அந்தத் தொகுதியில் ஐந்து பேர் போட்டி இடுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

ஏ என்பவர் 210 வாக்குகள் வாங்குகிறார்.

பி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.

சி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.

டி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.

இ என்பவர் 190 வாக்குகள் வாங்குகிறார்.

ஆயிரம் ஒட்டுக்கள் மேற்கண்டவாறு பிரிந்தால் ஏ என்பவர் வெற்றி பெற்றவர் என்று நம்முடைய நாட்டில் உள்ள பிரிட்டன் ஜனநாயகத் தேர்தல் கூறுகிறது. ஆனால் இவர் 790 பேரின் அதிருப்தியைப் பெற்றுள்ளார். 210 பேரின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ளார். இவர் பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின்படி தேர்வு செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.

இந்த அடிப்படையில் இது போலி ஜனநாயகமாகவும், மறைமுக சூதாட்டமாகவும் உள்ளது. இரண்டு பேர் மட்டும் போட்டியிடும் போது தவிர மற்ற சந்தர்ப்பங்களில் இது போல் நடப்பதை நாம் காணலாம்.

மேலும் இந்தத் தேர்தல் முறை அனைத்து மக்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இல்லாமல் போய் விடுகிறது.

ஒரு மாநிலத்தில் 100 தொகுதிகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் வாக்காளர் என்றும் வைத்துக் கொள்வோம்.

ஒவ்வொரு தொகுதியிலும்

ஏ கட்சி 501 ஓட்டுக்களும்

பி கட்சி 499 ஓட்டுக்களும்

பெறுவதாக வைத்துக் கொள்வோம்.

இப்போது நூறு தொகுதிகளிலும் ஏ கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. பி கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றும் அறிவிக்கப்படுகிறது. இது நம்முடைய பிரிட்டன் ஜனநாயக முறை. அதாவது ஏ கட்சிக்கு 100 எம் எல் ஏக்கள் கிடைக்க, பி கட்சிக்கு ஒரு எம் எல் ஏ கூட இல்லை.

ஆனால் இரண்டு கட்சிகளும் வாங்கிய ஓட்டுக்களில் தொகுதிக்கு இரு ஓட்டு வீதம் இருநூறு வாக்குகள் தான் வித்தியாசம்.

ஏ கட்சி நூறு தொகுதிகளில் வாங்கிய மொத்த ஓட்டுக்கள் 50100

பி கட்சி நூறு தொகுதிகளில் வாங்கிய மொத்த ஓட்டுக்கள் 49900. 

ஏ கட்சி எல்லா இடங்களிலும் வெற்றி பெற, பி கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. பி. கட்சிக்கு வாக்களித்த மக்களின் கருத்தைப் பிரதிபலிக்க சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லை. எனவே தான் இது போலி ஜனநாயகம் என்று கருதப்படுகிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் சிறுபான்மையாக உள்ள மக்களுக்கு ஒரே ஒரு பிரதிநிதித்துவம் கூட கிடைப்பதில்லை. கிடைக்க வேண்டுமானால் பெரிய கட்சிக்கு அடிமைச் சீட்டு எழுதிக் கொடுத்து ஜால்ரா போட்டால் தான் ஒன்றிரண்டு இடங்களில் வெற்றி பெற முடியும். அதுவும் மார்க்கத்தையும் மானத்தையும் விட்டு விட்டு சமுதாயத்தை மறந்து விட்டு ஜால்ரா போட்டால் தான் இது சாத்தியமாகும்.

இதை விட ஜெர்மன் நாட்டில் உள்ள ஜனநாயகம் பல வகைகளில் சிறந்து விளங்கும் ஜனநாயகமாகும். எல்லா மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தானாகவே கிடைத்து விடும். இந்த முறைதான் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் எனப்படுகிறது.

அதாவது உதாரணத்துக்கு அதே நூறு தொகுதியை எடுத்துக் கொள்வோம். விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல்முறையில் எப்படி பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

இந்தத் தேர்தலில் ஆட்கள் போட்டியிட மாட்டார்கள். சங்கம், கட்சி ஆகியவை தான் போட்டியிடும்.

ஒவ்வொரு ஆயிரம் ஓட்டுக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்று நிர்ணயிக்கப்படும்.

நூறு தொகுதியிலும் ஏ கட்சி மேலே நாம் சொன்ன அதே எண்ணிக்கையில் 50100வாக்குகள் வாங்கினால் ஆயிரத்துக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர்கள் ஐம்பது உறுப்பினர்களை நியமித்துக் கொள்ளலாம்.

அது போல் 49900 வாக்குகள் பெற்ற பி அணி 49 சட்டமன்ற உறுப்பினரை நியமிக்கலாம். 

இருவருக்கும் இடையில் ஓட்டு எண்ணிக்கையில் சிறிய வித்தியாசம் தான் உள்ளது. எனவே அதற்கேற்ப ஒரே ஒரு உறுப்பினர் தான் இரண்டு கட்சிக்கும் வித்தியாசம் இருக்கும். அனைத்து மக்களின் ஓட்டும் மதிப்பு மிக்கதாக ஆகின்றது. அனைவருக்கும் அவரவர் பலத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைத்து விடுகிறது.

யாருடனும் கூட்டணி சேராமல் சிறுபான்மை சமுதாயத்துக்கும் சிறிய கட்சிகளுக்கும் அவர்களுக்கு உரிய பங்கு கிடைத்து விடுகிறது.

மேலே சொன்ன அதே நூறு தொகுதிகளை எடுத்துக் கொள்வோம். அந்த நூறு தொகுதிகளிலும் முஸ்லிம்கள் தலா 100 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நமது நாட்டில் உள்ள பிரிட்டன் ஜனநாயகத் தேர்தல் பிரகாரம் முஸ்லிம் கட்சி நூறு தொகுதியிலும் போட்டியிட்டால் தொகுதிக்கு நூறு ஓட்டு கிடைக்கும். ஆனால் எல்லா தொகுதிகளிலும் முஸ்லிம் கட்சி தோற்றதாக ஆகும்.  ஒரு தொகுதியில் கூட முஸ்லிம் கட்சி ஜெயிக்க முடியாது. முஸ்லிம்களின் அத்தனை ஓட்டுக்களும் வீணாகி விடுகின்றன. எனவே தான் கொள்கையற்ற கூட்டணி வைத்து கேவலப்படும் நிலை ஏற்படுகிறது.

ஆனால் ஜெர்மன் ஜனநாயகம் எனப்படும் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி தொகுதிக்கு 100 என்ற கணக்குப்படி முஸ்லிம் கட்சி பத்தாயிரம் ஓட்டுகளை வாங்கும். ஆயிரம் ஓட்டுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற கணக்குப்படி முஸ்லிம்களுக்கு பத்து உறுப்பினர் கிடைப்பார்கள். யாருடனும் சந்தர்ப்பவாத கூட்டணி இல்லாமலே நமக்கு உரிய பங்கு இதன் மூலம் கிடைத்து விடும்,.

அது போல் திமுக, அதிமுக அல்லாத சிறிய கட்சிகள் இந்த ஜெர்மன் ஜனநாயக முறையில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்தித்தால் அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் எதுவும் வீண் போகாமல் வாங்கிய வாக்குகளுக்கு ஏற்ப சட்டமன்றத்துக்குள் நுழைவார்கள்.

இந்த முறையில் தேர்தல் சீர்திருத்தம் செய்தால் தான் அனைஅவரும் அரசியல் அதிகாரம் பெற முடியும். எவருடனும் கூட்டணி வேண்டாம். கூழைக் கும்பிடு வேண்டாம். இஸ்லாமிய வரம்பை மீற வேண்டாம். ஆனாலும் நமக்கு உரிய பங்கு கிடைத்து விடும்.

முஸ்லிம் சமுதாயத்தில் அதிகக் கட்சிகள் இருந்தால் கூட பங்கம் வராது. மேற்கண்ட பத்தாயிரம் வாக்குகளை இரண்டு முஸ்லிம் கட்சிகள் தலா ஐந்தாயிரம் என பிரித்துக் கொண்டால் ஒவ்வொரு கட்சிக்கும் ஐந்து உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். நாடு முழுவதும் ஆயிரம் ஓட்டு கூட வாங்காத கட்சிக்குத் தான் பங்கு இருக்காது. அத்தகைய லட்டர் பேடு கட்சிகள் ஒழிவது நல்லது தான். ஓரளவாவது மக்கள் ஆதரவு உள்ளவர்கள் மட்டுமே களத்தில் இருப்பார்கள்.

ஆனால் அந்த நிலையை அடைவதற்கு தேர்தல் முறையை மாற்றம் செய்ய வேண்டும். இதை எல்லா கட்சிகளுக்கும் புரிய வைக்க வேண்டும்.

இவ்வாறு நாம் எழுதினோம்.

இது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளுக்கும் நன்மை பயக்கக் கூடியதாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 542 ஆகும். இப்போது பாஜவுக்கு 30 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. 542ல் 30 சதவிகிதம் என்பது 162 தொகுதிகள் தான். இதுதான் பாஜகவின் ஒட்டு எண்ணிக்கைக்கு ஏற்ப கிடைக்க வேண்டிய எண்ணிக்கையாகும்.,

காங்கிரஸ் 19 சதவிகிதம் ஓட்டுக்கள் பெற்றுள்ளது. இதற்கு விகிதாசாரக் கணக்குப்படி 118 இடங்கள் கிடைத்து இருக்கும். பலமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் ஆகியிருக்கும். ஆனால் கிடைத்தது 44 இடங்கள்.

மாயாவதி கட்சி நான்கு சதவிகிதத்துக்கு மேல் ஓட்டுக்களைப் பெற்றும் அதற்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த வாக்குகளுக்கு 22 இடங்கள் அக்கட்சிக்கு கிடைத்து இருக்கும்.

அதிமுக 45 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் 19 தான். ஆனால் 37 இடங்கள் கிடைத்துள்ளன.

திமுக 23 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்குக் கிடைக்க வேண்டிய இடங்கள்  9 ஆகும். ஆனால் கிடைத்தது பூஜ்யம். இது போல் மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில் ஆறு லட்சம் வாக்குகளுக்கு ஒரு இடம் என்ற அடிப்படையில் ஓரிரு இடங்கள் கிடைத்து இருக்கும்..

நாட்டு மக்கள் தொகையில் 20 சதவிகிதமாக உள்ள முஸ்லிம்களுக்கு 120 இடங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் கேடு கெட்ட இந்தத் தேர்தல் முறையால் பத்து இடங்கள் தான் கிடைக்கின்றது. இப்படி ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அவரவர் சதவிதத்துக்கு ஏற்ப பங்குகள் கிடைத்து விடும்.

ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் எப்போதும் இதை எதிர்ப்பார்கள். 37 இடங்களை இப்போது வென்ற அதிமுக  19 இடங்களில் தான் வெற்றி பெற முடியும். இதை அதிமுக விரும்பாது. சென்ற முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இதை ஆதரிக்கவில்லை. தோற்றுப்போன பிறகு இதைப் பற்றிப் பேசுகிறது. இந்த தேர்தல் முறையினால் அடுத்த தேர்தலில் பாஜக காங்கிரசின் நிலையை அடையலாம். ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க ஜெர்மன் ஜனநாயகம் தான் ஒரே வழியாகும். இதனால் எந்தக் கட்சிக்குப் போடும் ஓட்டும் வீணாகாது. அனைவரின் ஓட்டுக்களும் மதிப்புடையதாக ஆகும்.

இதற்கான கருத்துவாக்கத்தை ஏற்படுத்தி போலி ஜனநாயகமாக உள்ள இந்த்த் தேர்தல் முறையை ஒழித்துக்கட்ட அனைவரும் தீவிரமாக உழைக்க வேண்டும். இந்தக் கருத்தை அனைத்து கட்சிகளிடமும் கொண்டு செல்வது இட ஒதுக்கீட்டை விட மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அசுர பலத்துடன் ஆட்சியாளர்கள் ஆட்டம் போடுவதற்கு கடிவாளமாகவும், எப்போதும் பலமான எதிர்க்கட்சி அமைவதை உறுதி செய்வதாகவும் இது அமையும்.

கேடுகெட்ட கூட்டணிக் கலாச்சாரத்துக்கு ஜெர்மன் ஜனநாயகத்தில் வேலை இருக்காது. கட்சி மாறுவதற்கு இடம் இருக்காது. இன்னும் எண்ணற்ற நன்மைகள் இதனால் ஏற்படும்.

கேள்வி

May 20, 2014, 4:12 PM

மோடி அரியணை ஏறினால் அச்சப்பட வேண்டுமா?

விலைபோன ஊடகங்களின் தவறான சித்தரிப்பின் காரணமாக மோடி நாட்டின் பிரதமராகிவிட்டால் அப்போது இந்திய முஸ்லிம்களின் நிலை என்னவாகும்? 

 

 விலை கொடுத்து வாங்கப்பட்ட ஊடகங்கள் தான் மோடி பிரதமராவார் என்ற மாயையை ஏற்படுத்தி வருகின்றன. அதற்கு சாத்தியமில்லை என்றுதான் அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள். எனவே மோடி ஆட்சியை பிடித்தால் இறை நம்பிக்கையுள்ள முஸ்லிம்கள் இதற்காக அஞ்சத் தேவையில்லை. ஆட்சியையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி முஸ்லிம்களை ஒடுக்க நினைத்தால் முஸ்லிம்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு  ஏற்படும்.  பெயரளவிற்கு முஸ்லிம்களாக வாழ்பவர்களும் உண்மை முஸ்லிம்களாக வாழும் நிலை ஏற்படும்.

 சமுதாயத்தைப் பற்றி அக் கரையில்லாமல் வாழ்ந்த பொறுப்பற்ற முஸ்லிம்கள் சமுதாய உணர்வு பெறுவார்கள்.  அபூஜஹில் வகையறாக்களின் அடக்கு முறை களுக்குப் பின்னால் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக இணைந்ததுபோல் அக்கிரமத்தை விரும்பாத பெரும்பாலான இந்து சகோதரர்கள் இஸ்லாத்தில் இணைவது அதிகரிக்கும். 

 சிறிய சமுதாயத்தை ஏன் நசுக்குகிறார்கள் என சிந்திக்கத் தலைப்பட்டு இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொள்வார்கள். 

 பாதிக்கப்படும் முஸ்லிம்கள் அறவழியில் போராட்டம் நடத்துவது நசுக்கப்பட்டால் இதனால் விரக்தி அடையும் மக்களில் ஐந்து விழுக்காடு மக்கள் ஜனநாயகம் அல்லாத வேறு பாதைக்குத் திரும்பினால், அவர்களை எந்த முஸ்லிம் தலைவர்களாலும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

 காவல்துறைக்கும் இராணு வத்திற்கும் அஞ்சாத நிலை ஏற்பட்டு சாகத் துணிந்த மக்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. மோடி வகையாறாக்களுக்கு மூளை சிறிதளவாவது இருந்தால், இதுபோன்ற ஆபத்தான முடிவை எடுக்க மாட்டார்கள். குஜராத்தைப்போல் எல்லா முஸ்லிம்களும் இருக்கமாட்டார்கள் என்பதை உணர்ந்த நடந்து கொள்வார்கள்.

 மன்னராட்சி நடக்கும் கற்காலத்தில் நாம் வாழவில்லை. உலக நாடுகளை அனுசரித்து ஆட்சி நடத்தும் காலத்தில் நாம் வாழ்கிறோம். சிறுபான்மை மக்களை நசுக்கி அடக்கி ஒடுக்கும் ஆட்சி நடத்தினால்,  வல்லரசுகளான கிறித்தவ நாடுகளும், அண்டை நாடுகளான முஸ்லிம் நாடுகளும், பொருளதாரத் தடை போன்ற நடவடிக்கை எடுப்பது நிச்சயம்.

 அப்படி நடந்தால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நின்றுவிடும். மருந்துகளுக்குக்கூட  தட்டுப்பாடு ஏற்படும். இன்னும் நினைத்துப் பார்க்க முடியாத நிலைமையை நாடு நிச்சயம் சந்திக்கும். எரிபொருள் தட்டுப்பாட்டால் வாகனங்கள் ஓட முடியாது. மாட்டு வண்டியில் மோடி பாராளுமன்றம் செல்லும் நிலை ஏற்படும். ஓட்டுப்போட்ட மக்கள் எல்லாம் கற்காலத்து மக்களைப்போல் நவீன(?) வசதிகளுடன் வாழும் நிலை ஏற்படும்.

 குஜராத் என்ற மாநிலத்தில் நடத்தப்பட்ட வெறியாட்டத்தை உலக நாடுகள் சாதாரணமாக எடுத்துக் கொண்டதுபோல் இந்திய அரசு நடந்துகொள்வதை எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

 கற்பனை செய்து பார்த்தாலே குலை நடுங்குகிறது.

 தொழில் நுட்பத்தில் இந்தியாவை விட பன்மடங்கு உயர்ந்து நிற்கும் பெரும் பெட்ரோல் வளம் கொண்ட ஈரானால்கூட இதுபோன்ற நெருக்கடிகளைச் சமாளிக்க முடியவில்லை.

 ஈரானுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைவிட பலமடங்கு நெருக்கடிகள் பலநாடுகளால் ஏற்பட்டு, மோடி நாட்டைவிட்டு ஓட்டம் பிடித்தாலும் ஆச்சரியம் இல்லை. 1900களில்  உருவாக்கப்பட்ட உளுத்துப்போன ஆர்.எஸ்.எஸ். கொள்கை நாட்டை அழித்து நாசமாக்கிவிட்டதை அப்போது மக்கள் உணர்வார்கள்.

 எனவே இடஒதுக்கீடு போன்ற சில பிரச்சினைகளில் சில்லரைத்தனமாக நடக்க முடியுமே தவிர, முஸ்லிம்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்க முடியாது.

 ஒவ்வொரு விளைவுக்கும் எதிர்வினை உண்டு என்ற மோடியின் பொன்மொழி நமக்கும் பொருந்தக்கூடியதுதான். எனவே மோடியைக் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை.

 நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை நம் எதிரி தீர்மானிக்கிறான் என்ற தத்துவம் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாகும்.

 ஆர்.எஸ்.எஸ். கொள்கையான ஒரே நாடு, ஒரே இனம் ஒரே கலாச்சாரம் என்பதை இவர்கள் செயல்படுத்த விரும்பினால் இன்னும் கடுமையான விளைவுகளை நாடு சந்திக்கும்.

 இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு கலாச்சாரம் உள்ளது. பிராமணக் கலாச்சாரத்தை நாட்டு மக்கள் அனைவரின் கலாச்சாரமாக மாற்றும் இவர்களின் திட்டத்தை செயல்படுத்தினால், ஒவ்வொரு சாதியினரும் கொந்தளித்து எழுவார்கள். யானைக்கு வடகலை நாமம் போடுவதா தென்கலை நாமம் போடுவதா என்பதற்காக  கொலை விழும் நாட்டில் ஒரே கலாச்சாரத்தை செயல்படுத்த விரும்பினால், அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கும்.

 ஒரே இனம் என்பது இந்துக்களை மட்டுமே கொண்ட தேசம் என்பதாக நினைக்கமுடியாது. ஒரே மொழிதான் இருக்க வேண்டும். மொழிவாரி மாநிலங்கள் இருக்கக்கூடாது என்பதுதான் இவர்களின் கொள்கை. தென்னிந்திய மொழி பேசும் மக்கள் மீது, இந்தி மொழி திணிக்கப்படும்.

 இந்தியாவின் ஆட்சி மொழி இந்திதான் என்று அரசியல் சாசனம் கூறுவதை எடுத்துக்காட்டி எல்லா மொழியையும் நசுக்குவார்கள். மாநிலங்களில் பிரிவினை முழக்கம் அதிகரிக்கும்.

 அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. அனைத்து இந்துக்களுக்கும் ஒரே சட்டம் என்ற அர்த்தமும் இதில் அடங்கியிருக்கிறது.

திருமணம், அடக்கம் செய்தல், சடங்குகள், வழிபாட்டு முறைகள் ஆகியன இந்துக்கள் அனைவருக்கும் ஒரேமாதிரியாக இல்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு ஜாதிக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான வழிமுறைகள் உள்ளன.

 அனைவருக்கும் பொதுசிவில் சட்டம் என்று பிராமணர்களுக்கான சட்டத்தை அனைவரும் மீதும் திணிக்க முயன்றால், நாடு சுடுகாடாகிவிடும்.

 இவர்களின் எல்லா கொள்கைகளும் நாட்டை சுடுகாடாக்கும் நாசகாரக் கொள்கைதான்.

 எதையாவது பேசி ஆட்சிக்கு வந்துவிட்டு, வாஜ்பாய்போல் இன்னொரு காங்கிரஸாக இருந்தால் நல்லது.

 அதைவிடுத்து சங்பரிவாரத்தின் கொள்கைகளை இந்திய மக்கள் மீது திணிக்க முயன்றால், அனைத்து சாதியினரும், அனைத்து மொழிபேசும் மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும், மதச் சிறுபான்மை மக்களும் ஒரு சேர கொதித்து எழுந்தால், அதை யாராலும் அடக்க முடியாது.

 எனவே மோடிக்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை.

 மோடியால் நாட்டுக்கு கேடுதான் ஏற்படும் என்பதை உணர்ந்து இந்துக்கள் அவரை புறக்கணித்தால் அதுவும் நல்லதுதான்.

 மோடியை அரியணையில் ஏற்றினால்,  சங்பரிவாரத்தின் கொள்கைக்கு அத்தோடு, மரண அடி கொடுக்கப்படும் என்பதால் அதன் முடிவும் நன்மையாகத்தான் இருக்கும்.

April 10, 2014, 11:37 AM

நரேந்திர மோடியைப் பிரதமராக்க நான் துணை போகமாட்டேன் என்று ஜெயலலிதா இன்றுவரை கூறவில்லையே?

நரேந்திர மோடியைப் பிரதமராக்க நான் துணை போகமாட்டேன் என்று ஜெயலலிதா இன்றுவரை கூறவில்லை. கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இதுபற்றி ஜெயலலிதா தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று மேடை தோறும் கேள்வி எழுப்பியும் வாய் திறக்காமல் இருக்கிறாரே, இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

 காங்கிரஸ் தனது மதவாதப் போக்கில் இருந்து திருந்திக் கொண்டால் காங்கிரஸை மன்னிக்கத் தயார் என்று கருணாநிதி கூறுவதன் பொருள் என்ன?

ஜெயலலிதாவும், கருணாநிதியும் தேர்தலுக்குப் பின் தமக்கு ஆதாயம் தரும் முடிவைத்தான் எடுப்பார்கள். மத்திய ஆட்சியில் தமக்கும் பங்கு இருந்தால்தான் தமிழகத்துக்கு நன்மை செய்ய முடியும் என்ற பதிலை ரெடிமேடாக வைத்துள்ளனர்.

 இருவரையும் இந்த விஷயத்தில் நாம் பிரித்துப் பார்க்க முடியாது.

 கருணாநிதியை எடுத்துக் கொண்டால் அவர் பா.ஜ.க.வுடன் கூட்டு சேர முயற்சித்து, பா.ஜ.க சேர்த்துக் கொள்ளாததால், கூட்டணி வைக்காமல் போனவர்.

 புதிய தலைமுறை தொலைக் காட்சியில் பா.ஜ.கவைச் சேர்ந்த பெண் தலைவி ஒருவர், திமுக சார்பில் கலந்து கொண்ட தலைவரை நோக்கி “எங்களை மதவாத சக்தி என்று சொல்லும் நீங்கள், எங்களுடன் கூட்டணிக்கு கெஞ்சினீர்கள், நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மறந்துவிட வேண்டாம் என்று சொன்னார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த திமுக தலைவர, இதை மறுக்கவில்லை. உலகமே பார்த்துக்கொண்டு இருந்த இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்ட குற்றச்சாட்டை திமுக தலைமை இன்று வரை மறுக்கவில்லை.

 தேர்தலுக்குப் பின்னால் பார்த்துக் கொள்வோம் என்ற அடிப்படையில்தான் அவர்களுக் கிடையே முடிவாகியுள்ளது என்பது, உன்னிப்பாக கவனிக்கும் அனை வருக்கும் தெரிகின்றது.

 இதனால்தான் திருச்சிக்கு மோடியின் முதல் வருகையை எதிர்த்து சில முஸ்லிம் அமைப்புகளும், தமிழர் அமைப்புகளும் போராட்டம் நடத்தியபோது இதைக் கருணாநிதி கண்டித்தார்.

 ஏற்காடு இடைத்தேர்தலில் பா.ஜ.க ஆதரவைக் கேட்டு கடிதம் எழுதினார்.

தினமலருக்கு அளித்த பிரத்தியோகப் பேட்டியில் ”மோடி எனது நண்பர்” என்றார்.

 தேர்தலுக்குப் பின்னால் பா.ஜ.க.வை ஆதரிக்கலாமா என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம் என்றும் கூறினார்.

 இதனால் முஸ்லிம் வாக்குகள் முழுமையாக திசை மாறுவதை உணர்ந்து, மோடியும் ராகுலும் அல்லாத ஒருவர் பிரதமராக, ஆதரவு தெரிவிப்போம் என்று பல்டி அடித்தார்.

 ராகுல் பிரதமராக ஆதரவு இல்லை என்ற சொல்லில் இருந்தும் பல்டி அடித்து காங்கிரஸை மன்னிக்கத் தயார் என்று மாற்றினார்.

 காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிட்டால் காங்கிரஸை ஆதரிப்போம் எனக் கூறி, பா.ஜ.க போலவே காங்கிரசும் மதவாதக் கட்சி என்று இப்போது கூறுகிறார். இதுதான் இவரது கடைசி நிலையாக உள்ளது. (இதன் பிறகு அடிக்கும் பல்டிகள் எத்தனை என்று இனிமேல் தெரிய வரும்)

 மதவாதக் கட்சியாக காங்கிரஸ், இருந்தது இல்லை. மதவாதத்தைக் கைவிடுவதாக காங்கிரஸ் அறிவிக்கத் தேவையில்லை. கைவிடுவதாக அறிவித்தால் இதற்கு முன் மதவாதத்தில் அக்கட்சி இருந்ததாக ஆகிவிடும். காங்கிரஸ் எதை அறிவிக்காதோ அதை அறிவிக்குமாறு கருணாநிதி கேட்கிறார்.

 காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிடுவதாக அறிவிக்கவில்லை. எனவே பாஜக காங்கிரஸ் இரண்டுமே மதவாதக் கட்சிகள்தான். இரண்டில் ஒன்றைத்தான் ஆதரிக்க முடியும் என்பதால் பாஜகவை ஆதரிக்கிறேன் என்று தேர்தலுக்குப் பின்னால் சொல்வதற்காகவே காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிடுவதாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 பத்தினிப் பெண்ணிடம் போய் இனிமேல் விபச்சாரம் செய்ய மாட்டேன் என்று, அறிவித்தால்தான் உன்னை நம்புவேன் என்று சொல்வதுபோல அவரது கடைசி வாக்குமூலம் உள்ளது.

 முஸ்லிம்களை ஏமாற்றுவதற்குரிய டயலாக்குகளும் அவரிடம் உள்ளது. அவரை ஆதரிக்கும் முஸ்லிம் இயக்கத்தினர் அதை எடுத்துக்காட்டி பிரச்சாரம் செய்கிறார்கள். இந்துத்துவா சக்திகளை ஏமாற்றும் டயலாக்குகளும் அவரிடம் உள்ளன. அவரை நம்பும் பா.ஜ.க.வினர் அதை மேற்கோளாகக் காட்டி தேர்தலுக்குப்பின் திமுகவின் ஆதரவைத்தான் கோருவோமே தவிர, அதிமுகவின் ஆதரவைக் கோரமாட்டோம் என்று கூறுவது இதனால்தான்.

 காங்கிரஸ் குறித்தும், மோடி குறித்தும் இந்த இரண்டு மாதத்தில் ஆயிரம் பல்டி அடித்தவருக்கு தேர்தல் முடிந்தபின் இன்னொரு பல்டி அடிப்பது எளிதானதுதான்.

 தேர்தலுக்குப் பின் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க, நான் ஒரு போதும் துணை நிற்கமாட்டேன் என்று கருணாநிதி, தெளிவாகக் கூறவேண்டும் என்று ப.சிதம்பரம் கூறுகிறார்.

 அப்படி தெளிவாகக் கூறினாலும் கருணாநிதி அதை அப்பட்டமாக மீறுவதற்கு வெட்கப்பட மாட்டார். இது கருணாநிதியின் நிலை.

 ஜெயலலிதா தன்னைப் பிரதமர் என்று நேரடியாக சொல்லாவிட்டாலும் அப்படித்தான் ஆரம்பத்தில் காட்டிவந்தார்.

 இதை மெய்ப்பிக்கும் வகையில் மூன்றாவது அணியில் அங்கம் வகித்தார். கம்யூனிஸ்டுகள் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ராஜ்ய சபா சீட்டு வழங்கினார்.

 மம்தா, சந்திரபாபு நாயுடு போன்றவர்களின் ஆதரவையும் திரட்டினார்.

 இப்படி அவர் காட்டிக் கொண்டாலும், பாஜக ஆட்சி அமைக்க தனது எம்பி.க்கள் பலம் உதவுமானால் நிச்சயம் அவர் பாஜகவை ஆதரிக்கத் தவற மாட்டார்.

 நான் ஒரு போதும் மோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்க மாட்டேன் என்று அவர் கூறவேண்டும் என்று ப.சிதம்பரம் கேட்கிறார்.

 நான், ஒரு போதும் மோடியை ஆதரிக்க மாட்டேன் என்று ஜெயலலிதா சத்தியம் செய்து கூறினாலும் நம்மைப் பொறுத்தவரை அதை நம்ப மாட்டோம்.

 1999ல் நாம் நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில், அவர் இதுபோல் கூறினார். நான்தான் பாஜகவை ஆட்சியில் அமர்த்தினேன். நானே அதைக் கவிழ்த்துவிட்டேன். இனி ஒரு போதும் பா.ஜ.கவை ஆதரிக்கமாட்டேன் எனக்கூறிவிட்டு பின்னர் பா.ஜ.கவுடன் சேர்ந்தார்.

 ”எனவே ஜெயலலிதாவாக இருந்தாலும், கருணாநிதியாக இருந்தாலும் நாங்கள் பாஜகவை ஆதரிக்கவே மாட்டோம் என்று தெளிவான வார்த்தைகளால் சத்தியம் செய்து சொன்னாலும் அறிவுடைய மக்கள் அதை நம்பமாட்டார்கள்.”

 ஆனால் கருணாநிதி, இரு முகம் காட்டி இருவகையாக பேசுவதால், இவர் பாஜகவை ஆதரிக்கமாட்டார் என்று அப்பாவிகள் நம்புவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

 ஜெயலலிதா பாஜக பற்றி வாய் திறக்காததால் அவர் பாஜக பக்கம்தான் போவார் என்று அப்பாவிகள் நம்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

 ”ஜெயலலிதா கருணாநிதி இருவர் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல், இருவரது கடந்த கால செயல்பாடுகளைச் சீர்தூக்கி பார்க்கும் மக்கள் தான் இதைப்புரிந்து கொள்வார்கள்.”

 கருணாநிதி, பாஜகவை ஆதரிக்க மாட்டேன் என்பதுபோல பேசுகிறார். ஆனால் ஜெயலலிதா வாய் திறக்கமாட்டேன் என்கிறார் என்பதை மட்டும் பார்க்கும் அப்பாவி முஸ்லிம்களின் ஆதரவை ஜெயலலிதா, இழப்பார். ஜெயலலிதா, பாஜகவை ஆதரிப்பார் என்ற பிரச்சாரம் ஓரளவு எடுபடக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன.

 ஆனால் “கருணாநிதி பாஜக பக்கம் போகமாட்டார் என்று நம்பும் இவர்கள் பின் ஏமாறுவார்கள். இருவருமே பாஜகவின் இரகசிய நண்பர்கள் என்று நம்புவதால் நமக்கு எந்த ஏமாற்றமும் ஏற்படாது.

 எனவே ஜெயலலிதாவின் மவுனம் முஸ்லிம்கள் மத்தியில் அவருக்கு இருந்த ஆதரவைக் குறைக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை நாம் உறுதிபடக் கூறிக்கொள்கிறோம்.”

 ஆட்சி அமைக்க 272 எம்பிக்கள் ஆதரவு தேவை என்பதை நாம் அறிவோம்.

 பாஜக.வுக்கு அந்த அளவு பெரும்பான்மை கிடைக்கும் என்று பாஜகவிடம் விலை போன ஊடகங்கள் கூட, கருத்துக் கணிப்பில் கூற முடியவில்லை.

 கடைசியாக பாஜக ஆதரவு ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பாஜகவுக்கும், பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கட்சிகளுக்கும் சேர்த்து 233 இடங்கள் கிடைக்கும் என்கிறார்கள். எனவே, இன்னும் நாற்பது எம்பி.க்களின் ஆதரவு தேவைப்படும். இதற்காக பல்வேறு மாநிலக் கட்சிகளிடம் பாஜக பேரம் பேசும்.

 அதிமுக 20, திமுக 20 என்ற அளவில் வெற்றி பெற்றால் இரு கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவைத்தான் பெறமுடியும். இரு கட்சிகளுமே பாஜகவுக்கு ஆதரவு அளிக்க போட்டி போடுவார்கள். ஒரு லட்சம் கோடி இரண்டு லட்சம் கோடி என்று ஊழல் செய்ய உதவும் பதவிகளை அடைய இருவரும் துடிப்பார்கள்.

 ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து சம்பாதித்ததை(?) விட பல மடங்கு ஒரே ஒரு மத்திய அமைச்சர் பதவியின் மூலம் சம்பாதிக்க முடியும். இதை இருவருமே எளிதாக விட்டுவிட மாட்டார்கள்.

 இருவருமே பாஜகவை ஆதரிக்க போட்டி போடும்போது, 13 மாதங்களில் ஆதரவை வாபஸ் பெற்று வாஜ்பேய் ஆட்சியைக் கவிழ்த்த ஜெயலலிதாவை விட, கருணாநிதியைத்தான் பாஜக தேர்வு செய்யும். குஜராத் கலவரம் போன்ற இன அழிப்பு நடந்தாலும், கருணாநிதி நம்மை உறுதியாக ஆதரிப்பார் என்றுதான் பாஜக நினைக்கும்.

 நாற்பது இடங்களையும் ஜெய லலிதா கைப்பற்றினார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது மானம் கெட்ட பாஜக அதிமுகவின் ஆதரவை நாடும். அதிமுகவும் ஆதரிக்கும்.

 நாற்பது இடங்களையும் திமுக வென்றாலும் இதுதான் நடக்கும்.

 ஆட்சியில் பங்கேற்று பதவிகளைப் பெற்று தம்மை வளப்படுத்திக் கொள்வதற்குத்தான் அரசியல் நடத்துகிறார்களே தவிர, சேவை செய்வதற்கு அல்ல.

 பாஜகவுக்கு கிடைக்கும் என்று கணிக்கப்பட்ட 233 இடங்கள், காங்கிரசுக்குக் கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும் இதே நிலைதான் ஏற்படும்.

 திமுக 20, அதிமுக 20 என்று வெற்றி பெற்றாலும் இருவரும் காங்கிரசை ஆதரிக்க நான், நீ என்று போட்டி போடுவார்கள். 3ஜி ஊழல் பிரச்சினை வந்தபோது, திமுகவை கழற்றிவிட்டால் காங்கிரசை ஆதரிக்க நான் தயார் என்று ஜெயலலிதா பகிரங்கமாக அறிவித்ததை நாம் மறந்து விட முடியாது.

 ஆனால் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு காங்கிரஸை ஆதரிக்க முன்வந்தாலும் காங்கிரஸ், திமுக ஆதரவைத்தான் ஏற்றுக்கொள்ளும். ஜெயலலிதா, சோனியாவை அவமானப்படுத்தியதை காங்கிரஸ் மறக்காது.

 எல்லா தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றினால், தனது ஆதரவினால் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றால் இரண்டு கட்சிகளுமே மானத்தை இழந்து கூட்டு சேருவார்கள்.

 காங்கிரசுடன் பாஜக கூட்டுசேராது, அதிமுகவுடன் திமுக கூட்டுசேராது என்பது மட்டுமே இன்றைய நிலையில் உறுதியானது.

 மற்ற யாருடனும், யாரும் கூட்டு சேருவார்கள். அரசியல் என்பது பதவி பெற்று சம்பாதிப்பதற்குத்தான். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 முடிவாகச் சொல்வது என்றால் ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே பாஜகவுடன் சேர்வதால் லாபம் கிடைக்கும் என்றால் சேர்வார்கள். ஆனால் ஜெயலலிதா, பாஜக பற்றி வாய் திறக்காமல் இருப்பது, நுணுக்கமான விஷயத்தைப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்களின் ஆதரவை இழக்கச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

 இடஒதுக்கீட்டுக்காக ஆதரிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் முஸ்லிம்களின் ஆதரவில் சிறிய அளவிலாவது இந்த மவுனம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஜெயலலிதா உணர்வது, அவருக்கு நல்லது.

April 4, 2014, 9:02 PM

அதிமுக விற்கு ஆதரவாக ஏன் பிரச்சாரத்தில் இறங்கவில்லை ?

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்காக ஆணையம் அமைத்த காரணத்தால் அதிமுகவை ஆதரிக்க தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது. ஆனால் ஜெயலலிதா அவர்களின் பிரச்சாரக் கூட்டங்களில் நமது கொடிகளைக் காணவில்லை. மாநில நிர்வாகிகளின் சூறாவளிப் பிரச்சாரத்தையும் காணவில்லை. இதற்குக் காரணம் என்ன? 
 

எந்தக் கட்சியை நாம் ஆதரிப்பதாக இருந்தாலும் தார்மீக ஆதரவு என்றால் அதற்கு எந்தச் செலவும் இல்லை. ஆனால் தீவிரப் பிரச்சாரம் செய்வதாக இருந்தால் அதற்கு பெரிய அளவில் பொருட் செலவு தேவைப்படும். நம் ஜமாஅத்தில் இது போன்ற பணிகளுக்குச் செலவிட எந்த நிதியும் இல்லை. 

மார்க்கப் பணிகளுக்காக மக்கள் தரும் நிதியை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினால், இது, நிதி அளித்த மக்களை ஏமாற்றுவதாகத்தான் இருக்கும்; மார்க்கத்திலும் இது பாவமாக ஆகிவிடும்.

தேர்தல் பிரச்சாரச் செலவுகளை நாம் ஆதரிக்கும் கட்சிகளே ஏற்றுக் கொண்டால்தான் நாம் பிரச்சாரத்தில் ஈடுபடமுடியும்.

தேவையான பணத்தை வந்து வாங்கிக் கொண்டு பிரச்சாரத்தை ஆரம்பியுங்கள் என்று, நாம் ஆதரிக்கும் கட்சியின் சார்பில் நம்மிடம் சொல்லப்பட்டது.

மாநில நிர்வாகிகள் ஆலோசனை செய்து, எக்காரணம் கொண்டும் பணமாகப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று முடிவெடுத்து அம்முடிவை அவர்களிடம் உறுதிபடக் கூறிவிட்டோம்.

பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் சொந்தப் பொறுப்பில் மேடை உள்ளிட்ட சகல ஏற்பாடுகளையும் செய்து தாருங்கள்! சூறாவளிப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதற்கான பிரச்சார வாகனங்களைத் தந்து அதற்கான செலவுகளையும் உங்கள் பொறுப்பில் செய்தால் பிரச்சாரம் செய்கிறோம். துண்டுப் பிரசுரங்களுக்காக நாங்கள் வாசக மேட்டர் தருகிறோம். துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு தாருங்கள் என்று விளக்கமாக அவர்களிடம் சொல்லிவிட்டோம்.

தேர்தல் கமிஷனின் கெடுபிடியால் இதையெல்லாம் எங்கள் பொறுப்பில் செய்தால் வேட்பாளரின் கணக்கில் சேர்ந்துவிடும். சட்ட சிக்கல் ஏற்படும் என்று எங்களிடம் அவர்கள் விளக்கினார்கள்.

அவர்கள் கூறுவது நியாயமான காரணமாக இருந்தாலும் நாம் கூறுவது அதை விட நியாயமாக இருப்பதால் தீவிரப் பிரச்சாரப் பணிகள் செய்யப்படாமல் உள்ளன.

கடந்த காலங்களில் செலவுகளுக்காக பணத்தைப் பெற்று முறையாகச் செலவிட்டு கணக்குகளையும் மீதிப் பணத்தையும் நாம் ஒப்படைத்துள்ளோம்.

அவர்களின் பணத்தில் அவர்களுக்காக செலவிட்டாலும் ஏதோ நமக்காக பணம் தந்ததுபோல அவர்களின் போக்கு மாறிவிடுவதை நாம் கண்டோம். நமக்கு எந்த ஆதாயமும் இல்லாமல் தூய்மையாக நடந்து கொண்டாலும் பணம் பெற்றபின் நம்மிடம் கூடுதல் மரியாதையை அவர்கள் எதிர்பார்ப்பதை நாம் அவ்விடத்தில் உணர்ந்தோம்.

பணம் வாங்கி தேர்தல் பணி செய்யும் போது மற்றவர்கள் பாதியைச் சாப்பிட்டுவிட்டு மீதியை தேர்தல் பணிகளுக்காக செலவிடுவார்கள். அது போல்தான் அவர்கள் நம்மையும் கருதுவார்கள். எவ்வித ஆதாயமும் இல்லாமல் உழைக்க முடியுமா என்றும் அவர்கள்  கருதுவார்கள் மறுமை நன்மைக்காகவும், சமுதாய நன்மைக்காகவும் மனிதன் பணியாற்ற முடியும் என்பதை உண்மை முஸ்லிம்கள் தவிர மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் எக்காரணம் கொண்டும் பணமாக வாங்கக் கூடாது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். நம் நிலைப்பாட்டுக்கு ஏற்ப நம்மைப் பயன்படுத்திக் கொண்டால், நம்மை பயன்படுத்திக் கொள்ளட்டும். இல்லாவிட்டால் தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற சின்னம் என்று அவர்களே பிரச்சாரம் செய்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளட்டும் என்று தெரிவித்துவிட்டோம்.
நமக்கும் மற்றவர்களுக்கும் இன்னொரு முக்கிய வித்தியாசம் உள்ளது.

அதிமுகவினர் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் அனைத்து கூட்டணிக் கட்சி பிரமுகர்களையும் மேடையில் ஏற்றி ஒரே செலவில் அனைவரது பிரச்சாரத்தையும் அவர்கள் பெற்றுவிட முடியும்.

மற்ற மேடைகளின் மார்க்க முரணான காரியங்கள் நடக்கும் என்பதால் நாம் அதில் ஏற முடியாது. எனவே நமக்காக தனி மேடைகள் அமைப்பது அவர்களுக்கு இரட்டைச் செலவாகிவிடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்கிறோம். தேர்தல் கமிஷன் நிர்ணயித்த வரம்பை இது தாண்டிவிடும்.

மானமும், மரியாதையும், நாணயமும், நம்பிக்கையும்தான் எங்களுக்கு முக்கியமானது என்ற கொள்கை முடிவின் காரணமாக இது போன்ற நிலை ஏற்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தொகுதி பொறுப்பாளர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தியுள்ளோம்.

நாம் ஆதரிக்கும் கட்சிகளின் கூட்டங்களுக்குப் போய் கொடியைத் தூக்கிக் காட்டும் கலாச்சாரத்தை நாம் எப்போதுமே தவிர்த்து வந்துள்ளோம்.  

நாம் ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டும் வகையில் இரண்டு மூன்று  கொடிகளைப் பறக்க விடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தான் அதிமுக கூட்டங்களில் நம்முடைய கொடிகளைப் பார்க்க முடியவில்லை. இது வழக்கமாக நாம் கடைப்பிடிக்கும் நிலைப்பாடுதான்.
 

March 25, 2014, 12:47 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top