கல்வி நிறுவனம் துவங்க வசூல்?

கல்வி நிறுவனம் துவங்க வசூல்?

C.M.N. சலீம் என்பவர், தான் அமைப்பு சாராதவர், தன்னைப் பொறுத்தவரை 2020ல் தமிழகத்தில் நமது சமுதாயம் முழு கல்வியறிவு பெற்ற சமுதாயமாக மாற வேண்டும் என்பது தான் நோக்கம். என சொல்லிக் கொண்டு கல்வி ஸ்தாபனங்களை உருவாக்க வேண்டும் என வெளிநாடுகளிலும் சமுதாய மக்களிடமும் நிதி திரட்டுகிறார். நமது ஜமாத்தைச் சேர்ந்த ஒரு சிலர் அதில் பங்குதாரராக இருக்கின்றனர். C.M.N. சலீமைப் பற்றிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாடு என்ன?

கூத்தாநல்லூர் ஜின்னா, குவைத்

பதில்

நீங்கள் குறிப்பிடும் நபர் திரட்டும் நிதியை தன் பெயரில் திரட்டுகிறாரா? அல்லது தனக்கு வேண்டப்பட்டவர்களைக் கொண்டு அமைத்துக் கொண்ட ட்ரஸ்டின் பெயரில் திரட்டுகிறாரா?

அல்லது சந்தா செலுத்தும் எல்லா உறுப்பினர்களுக்கும் உரிமை வழங்கும் சங்கத்தின் பெயரில் நிதி திரட்டுகிறாரா?

இதை நீங்கள் முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள்.

நாமறிந்தவரை அவர் எந்தச் சங்கமும் நடத்தவில்லை. ட்ரஸ்ட் என்ற பெயரில் நிதி திரட்டுவதாகவே கேள்விப்படுகிறோம்.

தனி நபர்களோ, அல்லது ட்ரஸ்டுகளோ எதற்கு நிதி திரட்டினாலும் அதை நம்ப வேண்டாம். சங்கமாகப் பதிவு செய்து அதன் நேர்மை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் மட்டுமே மக்கள் நிதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏமாற்றம் தான் மிஞ்சும் என்பதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.

சங்கம் என்றால் அதைப் பிரச்சாரம் செய்து மக்களிடம் கொண்டு சென்று அதில் உறுப்பினர்களைச் சேர்ப்பார்கள். சந்தா செலுத்தும் எல்லா உறுப்பினர்களுக்கும் அதில் உரிமை இருக்கும். அதன் தலைவர் நம்பிக்கையாக நடக்காவிட்டால் உறுப்பினர்கள் கூடி அவரை நீக்கலாம்.

ஆனால் ட்ரஸ்ட் என்றால் பத்து இருபது நபர்கள் கூடி அதை அமைப்பார்கள். அதற்காக மக்களிடம் கோடிகோடியாக நிதி திரட்டினாலும் நிதி கொடுத்தவர்கள் அதில் உறுப்பினராக மாட்டார்கள். அந்தப் பத்து பேர் மட்டும் கூடி எடுக்கும் எந்த முடிவையும் யாரும் தட்டிக் கேட்க முடியாது.

பணத்தை ட்ரட்ஸ்டுக்கு அனுப்பியபின் கல்விக் கூடம் அமைக்காவிட்டால் பணம் கொடுத்தவர்களால் அதில் தலையிட முடியாது. அதிகபட்சமாக வெளியில் இருந்து கொண்டு வழக்குப் போட முடியும்.

மக்கள் பணத்தில் சொத்தை வாங்கிய பின் பணம் கொடுத்த மக்கள் குறைகளைத் தட்டிக் கேட்க முடியுமா? நிச்சயம் முடியாது.

டிரஸ்ட்டுகள் ஊழல் செய்தால், அவர்களைப் பணம் கொடுத்த மக்கள் பதவி நீக்கம் செய்து நம்பகமானவர்களை நியமிக்க முடியுமா? நிச்சயம் முடியாது.

டிரஸ்ட்டிகள் என்று யாரைப் பதிவு செய்துள்ளார்களோ அவர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த உரிமையும் இருக்காது.

அந்தச் சொத்தை வங்குவதற்குப் பலரும் பலவித தியாகங்களைச் செய்திருப்பார்கள். அவர்கள் டிரஸ்ட்டில் உறுப்பினராக இருக்க மாட்டார்கள். குறிப்பிட்ட பத்துப்பேரின் கைப்பிடியில்தான் அந்தச் சொத்து இருக்கும். கோடி கோடியாக நிதி குவிந்தாலும் அதைப் பற்றி யாருக்கும் கேள்வி கேட்க சட்டப்படி உரிமை இல்லை.

ஆனால் மாநில அளவில் பதிவு செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் பெயரில் சொத்து வாங்கினால் அதற்கு நிதியளித்தவர்கள் கேள்வி கேட்க முடியும். பாடுபட்டவர்கள் தலையிட முடியும். இந்த உரிமைகள் சட்டப்படி ஒவ்வொரு உறுப்பினருக்கும் கிடைக்கும்.

இன்னும் சொல்லப் போனால் நிதி அளிக்கும் மக்கள் நமக்கெல்லாம் இதில் உரிமை இருக்கும் என்ற எண்ணத்தில் தான் வாரி வழங்குவார்கள். அறக்கட்டளையில் யார் பெயரைக் குறிப்பிட்டு பதிவு செய்தார்களோ அந்தப் பத்து பேரைத் தவிர வேறு எவருக்கும் எந்த உரிமையும் கிடையாது என்று தெரிந்து இருந்தால் உதவியிருக்க மாட்டார்கள்.

அடுத்ததாக நாடு விடுதலை அடைந்த நேரத்தில் நாங்கள் சொந்தமாகக் கல்விக் கூடம் அமைக்க அனுமதித்தால் போதும் என்று கூறி இட ஒதுக்கீட்டை நம் தலைவர்கள் காவு கொடுத்தார்கள். ஆனால் சிறுபான்மை என்ற சலுகையைப் பெற்று கல்விக் கூடங்களை ஆரம்பித்து வியாபாரம் செய்தார்கள். முஸ்லிம்களுக்கு ஒரு பயனும் இல்லை. பணம் கொடுத்தால்தான் இடம் என்று கூறி முஸ்லிமல்லாதவர்கள் நடத்தும் கல்விக் கூடங்களை விட அதிகக் கொள்ளை அடித்தார்கள். அடித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

எனவே அரசு நடத்தும் கல்விக் கூடங்களில் போதுமான இட ஒதுக்கீட்டுக்குத்தான் நாம் போராட வேண்டும். கல்வி வியாபாரிகளை ஊக்குவிக்கக் கூடாது.

மருத்துவக் கல்லூரி நடத்துவதாக கவிக்கோ அப்துர்ரஹ்மான் மூலம் ஒரு கும்பல் புறப்பட்டபோது நாம் எச்சரிக்கை செய்தோம். கொடுத்த பணம் அம்போவானதுதான் மிச்சம். மருத்துவக் கல்லூரியைக் காணவில்லை.

மேலும் பொருளாதார ரீதியாக நாணயமாக நடப்பார் என்ற அளவுக்கு சலீம் அவர்களின் செயல்பாடுகள் இதுவரை இருந்துள்ளதாக நமக்குத் தெரியவில்லை.

பல வருடங்களாக டிவியில் விளம்பரம் செய்து கல்வி உதவி செய்வதாக சொல்லி வருகிறார். தனக்கு நிதி அளிக்கும் படி விளம்பரம் செய்து வருகிறார்.

இது வரை வந்த வரவுகளை யார் யார் எவ்வளவு தந்தார்கள் என்றும் அது யார் யாருக்குக் கொடுக்கப்பட்டது என்றும் கணக்கு காட்டி தனது நேர்மையை அவர் நிரூபித்துக் காட்டவில்லை.

எனவே இது போல் புறப்படும் யாரையும் நம்ப வேண்டாம் என்று தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களை நாம் எச்சரிக்கிறோம். தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் இது போன்ற காரியங்களுக்கு உதவுவதாகத் தெரிந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளர் ஒருவர் இதுபோல் வசூலிக்கும் போது தவ்ஹீத் ஜமாஅத் அதை ஆதரிக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். நாம் எச்சரிக்கை செய்து தீய விளைவுகள் நாளை ஏற்படும்போது ஜமாஅத்தில் புகார் கொடுக்கும் நிலை ஏற்படும். எனவே இதுபோன்ற காரியங்களில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அனைத்து கொள்கைச் சகோதரர்களையும் நாம் எச்சரிக்கிறோம்.

Published on: July 14, 2013, 1:59 AM Views: 3651

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top