பெங்களூர் குண்டுவெடிப்பில் முஸ்லிம்கள் கைது சரியா?

பெங்களூர் குண்டுவெடிப்பில் முஸ்லிம்கள் கைது சரியா?

பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன? இது தவறு என்றால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நடவடிக்கை என்ன?

மசூது, கடையநல்லூர்

எவ்வித அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் பொய்யாகக் கைது செய்துள்ளனர் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை. அத்துடன் குமரி மாவட்ட பா.ஜ.க. பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கிலும் இவ்வாறு பொய்யாகக் கைது செய்துள்ளனர்.

தமிழக அரசும், கர்நாடக பா.ஜ.க. அரசும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சு நடத்தி முஸ்லிம்கள் சிலரைக் கைது செய்தால், தேர்தலில் கைகொடுக்கும் என்று கள்ள ஒப்பந்தம் செய்திருப்பார்களோ என்று நினைக்கும் அளவுக்கு இந்தக் கைதுகள் அமைந்துள்ளன. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

ஒன்றும் செய்யாமல் உள்ளே போவதைவிட எதையாவது செய்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணத்தை விதைக்கும் அநியாயமாகவே இதை நாம் காண்கிறோம்.

இதில் எள்முனையளவு கூட உண்மை இல்லை என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நடுநிலையாளருக்கும் தெரிகிறது.

ஆனால் நாம் ஏன் இதற்காகப் போராட்டம் நடத்தவில்லை என்பதற்கு முன்னரே நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

சில ஆண்டுகளுக்கு முன் சிறைவாசிகளுக்காக நாம் குரல் கொடுத்த போது எங்களை வைத்து அரசியல் பண்ண வேண்டாம் என்று அவர்கள் துண்டுப் பிரசுரம் வெளியிட்டு நாடெங்கும் பரப்பினார்கள்.

அவர்களை வைத்து தவ்ஹீத் ஜமாஅத் அரசியல் நடத்தவில்லை. சிறைவாசிகள் பெயரைச் சொல்லி நாம் எந்த வசூலும் செய்வதில்லை. சிறைவாசிகளுக்கு உதவுகிறோம் என்பதைக்கூறி நாம் ஆள் சேர்ப்பதும் இல்லை. ஏகத்துவக் கொள்கையை மட்டுமே முன் வைத்துதான் நாம் மக்களை வென்றெடுத்து வருகிறோம். அப்படி இருந்தும் அவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று பகிரங்கமாக அறிவித்தனர்.

அப்போது முதல் ஏற்கனவே வழக்கில் உள்ளவர்களுக்காக போராட்டம் எதுவும் நடத்துவதில்லை. ஆனால் இதுபோன்ற அக்கிரமங்களை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம். அரசியல் செய்கிறோம் என்று சொல்லமுடியாத வகையில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் மனுக்கள்அளித்துள்ளோம்.

 அந்த அடிப்படையில்தான் இதை இப்போது கடுமையாகக் கண்டிக்கவும் செய்கிறோம்.

கடந்த காலத்தில் தடா என்ற பொய் வழக்கை ஆரம்பித்து வைத்த தமிழக அரசின் நடவடிக்கைதான் குண்டு வெடிப்பு வரை கொண்டு போய் சேர்த்தது. அதே வழிமுறையில் செல்ல வேண்டாம். சந்தேகத்தின் பெயரில் இது போன்ற கைது நடவடிக்கை வேண்டாம். இது மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

Published on: April 30, 2013, 4:38 PM Views: 3980

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top