ஆசிட் வீச்சைத் தடுக்க என்ன வழி

ஆசிட் வீச்சைத் தடுக்க என்ன வழி

காதலிக்க மறுக்கும் பெண்மீது ஆசிட் வீசுவதைத் தடுக்க ஆசிட் கிடைக்காத வகையில் சட்டம் போடுவதும், ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதும் தீர்வாகுமா?

அப்துல்லாஹ், கீழக்கரை

காதலிக்கவில்லை என்ற கோபம்தான் இதற்குக் காரணம். இந்தக் கோபத்தை வெளிப்படுத்த ஒருவன் ஆசிட்டைப் பயன்படுத்துகிறான். ஆசிட் கிடைக்காவிட்டால் அரிவாளைப் பயன்படுத்துவான். அல்லது வேறு எத்தனையோ சாதனங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவான். எனவே ஆசிட் கிடைக்காமல் செய்வது இதற்கான தீர்வாகாது.

ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அவர்கள் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளப் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

குறிப்பிட்ட மாடலில் ஒரு சட்டை வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அது கிடைக்காவிட்டால், அல்லது கிடைத்து விலை கட்டுப்படியாகாவிட்டால், என்ன செய்கிறோம்?

அதை மறந்துவிட்டு கிடைப்பதை வாங்கி அணிந்து கொள்கிறோம்.

குறிப்பிட்ட உணவுக்கு ஆசைப்படுகிறோம். அந்த உணவு கிடைக்கவில்லை எனில், அதையே ஜெபம் செய்துகொண்டு செத்துப் போகமாட்டோம். அது கிடைக்காவிட்டால் வேறு உணவைச் சாப்பிட்டுக் கொள்கிறோம்.

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால், மருத்துவக் கல்லூரிகளைக் கொளுத்துவோமா? வேறு துறையைத்தான் தேர்வு செய்வோம். இதுதான் எதார்த்தம்.

இதுதான் வேண்டும். இது தவிர வேறு எதுவும் வேண்டாம் என்பது மனநோய்.

அதுபோல் ஒரு ஆணுக்குப் பெண் தேவை. பெண்ணிற்கும் ஆண் தேவை. ஒருவனை அல்லது ஒருத்தியை விரும்புகிறோம். அவள் இன்னொருவன் மனைவியாக இருக்கலாம். இன்னொருவனை விரும்புபவளாக இருக்கலாம். அல்லது நம்மை அவளுக்குப் பிடிக்காது இருக்கலாம். அதன் காரணமாக அவள் நம்மை நிராகரித்துவிட்டால், வேறு ஒருவரைத் தேடிக் கொண்டால், அதுதான் எதார்த்தம்.

அவன்தான் வேண்டும் - அவள்தான் வேண்டும் என்று அதையே நினைத்துக் கொண்டு இருந்தால், அது மனநோய். இந்த மனநோய்தான் ஆசிட் வீச்சிற்கும் தன்னைப் பிடிக்காதவரை அழித்தொழிக்கவும் காரணம்.

இந்த மனநோயை அறிவு ஜீவிகள்(?), ஊடகங்கள் போன்ற விஷக்கிருமிகள் காதல் என்ற பெயரில் பரப்புகின்றன.

இவன்தான் வேண்டும் - இவள்தான் வேண்டும் என்று உருகுவதுதான் சிறந்தது. அதுதான் தெய்வீகக் காதல் என்றெல்லாம் மக்களுக்கு மனச் சிதைவை இவர்கள் தான் ஏற்படுத்துகின்றனர்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிலை மாறாதவரை இதுபோன்ற எழுத்தாளர்கள் ஊடகத்துறையினரில் உள்ள விஷக்கிருமிகளை அடக்கி ஒடுக்க சட்டம் போடாதவரை இதுபோன்ற சம்பவங்களை ஒருக்காலும் தடுக்கவே முடியாது.

ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புவதும், ஒரு பெண் ஒரு ஆணை விரும்புவதும் தான் காதல். விருப்பம் நிறைவேறாவிட்டாலும் நான் அவளையே/அவனையே நினைத்து உருகுவேன் என்பது காதல் அல்ல - அது மனநோய்தான்.

தங்களது மகன் அல்லது மகளுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டு, அதையே நினைத்து உருகிக் கொண்டு இருந்தால், ஆகா தெய்வீகக் காதல் என்று ஊடகங்களின் முன்னாள் பாராட்டிக் கொண்டா இருப்பார்கள்?

தான் விரும்புவதையே மக்களுக்கும் விரும்புபவன்தான் அறிவாளி.

தொலைக்காட்சியில் முகம் காட்ட வாய்ப்புக் கிடைக்கிறது என்பதற்காக பேசுபவன் அறிவாளி இல்லை என்ற விழிப்புணர்வை எற்படுத்தினால், இதுபோன்ற செயல்களை ஓரளவு தடுக்கமுடியாது

(குறிப்பு ஆசிட் வீசியவன் அவள் தனக்கு கேடு செய்தால் என்பதற்காகவோ தனது சொத்தைப் பறித்துக் கொண்டால் என்பதற்காகவோ ஆசிட் வீசவில்லை. தனக்கு அவள் கிடைக்கவில்லை என்ற வெற்தான் காரணம். அந்த வெறியை அவனுக்கு ஊட்டியவர்கள் அறிவு ஜீவிகள் எனும் விஷக்கிருமிகள் தான்)

Published on: April 30, 2013, 5:02 PM Views: 2659

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top