கடன் கொடுத்த பின் பண மதிப்பு குறைந்த�

கடன் கொடுத்த பின் பண மதிப்பு குறைந்து விட்டால் 

?என்னுடைய நண்பர் அவசரத் தேவைக்காக 4000சவூதி ரியால் கடன் வாங்கினார். அன்றைய தினம் வங்கி மதிப்பு இந்திய ரூபாய் 1000க்கு 91ரியால்களாகும். நான்கு மாதம் கழித்து அவர் கடனைத் திருப்பித் தந்த போது வங்கி மதிப்பு இந்திய ரூபாய் 1000க்கு 96ரியால் என உயர்ந்து விட்டது. இரண்டுக்கும் வித்தியாசம் இந்திய ரூபாய் 2000. அதனால் என்னிடம் 4000ரியால் கடன் வாங்கிய எனது நண்பர் கூடுதலாக 200ரியால் தந்தார். இது வட்டியா? விளக்கம் தரவும். 

அதிரை தீன் முஹம்மது புரைதா

எந்தக் கரன்ஸியின் அடிப்படையில் கடன் கொடுத்தீர்களோ அதே கரன்ஸியின் அடிப்படையில் தான் திருப்பி வாங்க வேண்டும். அதிகப்படுத்தி கேட்கக் கூடாது. 

நாணயம் மாற்றும் போது தங்கத்திற்குத் தங்கத்தையோ, வெள்ளிக்கு வெள்ளியையோ மாற்றினால் சரிக்குச் சரியாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி)

நூல்: புகாரி 2176

இந்த ஹதீஸின் அடிப்படையில் 4000ரியால் கடன் கொடுத்திருந்தால் அதே 4000ரியால் மட்டுமே வாங்க வேண்டும். அதிகமாகக் கேட்டு வாங்கினால் அது வட்டி என்பதில் சந்தேகமில்லை.

அதே சமயம், கடன் கொடுத்தவர் எதையும் கூடுதலாகக் கேட்காமல், கடன் பெற்றவர் தாமாக விரும்பி எதையேனும் அதிகப்படுத்திக் கொடுத்தால் அதில் தவறில்லை. 

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித் தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, (அவரைத் தண்டிக்க வேண்டாம்;) விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள். நபித் தோழர்கள், அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம் தான் எங்களிடம் இருக்கின்றது என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களீல் சிறந்தவர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2390

கடன் வாங்கியவர் தாமாக விரும்பி, வாங்கிய கடனை விட அதிகமாகத் தந்தால் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம். இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்து விட்டதால் அதிகமாகத் தர வேண்டும் என்று கடன் கொடுத்தவர் நிபந்தனை விதித்தால் அது வட்டியாகி விடும்.

ஆனால் அதே சமயம், கடன் கொடுக்கும் போதே, இன்ன கரன்ஸியின் அடிப்படையில் கடன் தருகிறேன்; அதே கரன்ஸி மதிப்பின் அடிப்படையில் தான் திருப்பித் தர வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கடன் கொடுக்கலாம்.

உதாரணமாக 4000ரியால்கள் கடன் கொடுக்கும் போது, அப்போதைய இந்திய ரூபாயின் மதிப்பில் கணக்குப் போட்டு 44,000ரூபாய் தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கடன் கொடுக்கிறீர்கள்; கடன் வாங்கியவர் திருப்பித் தரும் போது இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து விட்டது. அதாவது 44,000ரூபாய்க்கு 4200ரியால்கள் வருகின்றது என்றால், ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 200ரியால்கள் அதிகமாக வாங்கிக் கொள்ளலாம்.

அது போல் 44000 ரூபாய்க்கு 3800 ரியால் என்று மதிப்பு குறைந்து விட்டால் 3800 தான் வாங்க வேண்டும். 4000 ரியால் கொடுத்ததால் 4000 ரியால் தான் தர வேண்டும் என்று கேட்கக் கூடாது. ஏனெனில் நீங்கள் ரியால் அடிப்படையில் கடன் கொடுக்கவில்லை. இந்திய ரூபாயின் அடிப்படையில் தான் கடன் கொடுத்தீர்கள். 

நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்!

அல்குர்ஆன் 5:1

ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமான வசனங்கள், ஹதீஸ்கள் உள்ளன.

எனவே கடன் கொடுக்கும் போது எந்தக் கரன்ஸியின் அடிப்படையில் திருப்பித் தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொடுக்கிறோமோ அதே கரன்ஸியின் மதிப்பின் அடிப்படையில் வாங்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தும் போகலாம். 4000ரியால்கள் கொடுத்ததற்கு, 3800ரியால் மட்டுமே திருப்பிக் கிடைக்கும் நிலை ஏற்படலாம்.

வெளிநாட்டு கரன்ஸிகளின் மதிப்பு மட்டுமல்ல! இந்தியாவிலேயே பண மதிப்பு நாளுக்கு நாள் மாறிக் கொண்டு தான் வருகின்றது. ஒரு நாட்டின் பண மதிப்பு குறைவதற்கும், உயர்வதற்கும் அந்த நாட்டை ஆள்பவர்களின் நிர்வாகத் திறனே காரணம். தவறான பொருளாதாரக் கொள்கைகளால் பண மதிப்பு குறைந்து போகின்றது.

ஆட்சியாளர்களின் நிர்வாகக் குளறுபடிகளால் ஏற்படும் இந்த மாற்றங்களுக்கு, கடன் கொடுத்தவர்கள் நட்டமடைந்து வருகின்றனர். இது எந்த விதத்திலும் நியாயமில்லை.

ஒரு பவுன் நகை 12 ஆயிரமாக இருக்கும் போது நாம் ஐந்து பவுன் நகை வாங்குவதற்காக 60 ஆயிரம் ரூபாய் சேமித்து வைத்திருக்கிறோம். அவசரத்துக்காக ஒருவர் கடன் கேட்கும் போது 60 ஆயிரத்தைக் கொடுக்கிறோம். அவர் ஆறு மாதம் கழித்து திருப்பித் தரும் போது ஒரு பவுன் விலை 15 ஆயிரமாகி விடுகிறது. இப்போது 60 ஆயிரம் ரூபாயில் ஐந்து பவுன் வாங்க முடியாது. நான்கு பவுன் தான் வாங்க முடியும். கடன் கொடுக்காமல் அப்போதே நகையாக வாங்கி இருந்தால் நாம் ஐந்து பவுன் வாங்கி இருக்க முடியும். கடன் கொடுத்ததால் நமக்கு ஏற்பட்ட நட்டம் ஒரு பவுன் அதாவது 15 ஆயிரம் ரூபாய்.

இதன் காரணமாகத் தான் கடன் கொடுப்பதற்கு பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.

நாம் கடன் கொடுக்கும் போது நமக்கு நட்டம் வராத வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஐந்து பவுன் தங்கத்தின் மதிப்புக்கு உரிய தொகையை உனக்குக் கடனாகத் தருகிறேன். நீ திருப்பித் தரும் போது ஐந்து பவுன் தங்கத்துக்கு உரிய தொகை என்னவோ அதைத் தான் தர வேண்டும் என்று பேசி கடன் கொடுத்தால் அதில் தவறு இல்லை.கேள்வி பதில்வியாபாரம்நாம் கடன் கொடுக்கும் போதுநமக்கு நட்டம் வராத வகையில்ஒப்பந்தம் செய்து

Published on: March 20, 2010, 11:42 PM Views: 1997

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top