குடல்வால் எனும் பயனற்ற உறுப்பு ஏன்?

குடல்வால் எனும் பயனற்ற உறுப்பு ஏன்?

கடவுள் என்று ஒருவன் இருந்தால் ஒரு பயனும் இல்லாத குடல்வால் எனும் உறுப்பை ஏன் படைக்க வேண்டும்? இதற்கு முஸ்லிம்கள் யாராவது பதில் சொல்ல முடியுமா என்று சில பகுத்தறிவாளர்கள் கேட்கிறார்களே? இதற்கு என்ன பதில்?

ஷரஃபுத்தீன்

இறைவன் செய்யும் எதுவும் தக்க காரணத்துடன் தான் இருக்கும். இதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. தக்க காரணம் இருக்கும் என்பதால் அந்தக் காரணங்கள் அனைத்தும் மனிதனுக்குத் தெரியும் என்பது அர்த்தமல்ல. இப்போது குடல்வால் பற்றி கேட்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இன்னும் ஏராள்மான விஷயங்கள் பற்றி ஞானமில்லாமல் கடவுளைக் கேள்வி கேட்டார்கள். அவற்றின் பயன்கள் குறித்து இப்போது மனிதன் கண்டறிந்து விட்டான். குடல்வால் எனும் உறுப்பு மனிதனுக்கு ஏன் என்ற கேள்வியும் இது போன்றது தான்.

ஆனால் இது கூட சரி இல்லை. ஏனெனில் குடல்வால் எனும் உறுப்பால் ஒரு பயனும் இல்லை என்று நீண்ட காலமாக இருந்து வந்த கருத்து இப்போது உடைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கீற்று எனும் இணைய தளத்தில் குடல்வால் மூலம் மனிதனுக்கு நன்மை உள்ளது என்று கண்டு பிடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

நமது உடலில் சிறு குடலும் பெருங்குடலும் இணையும் இடத்தில் குடல்வால் என்றொரு உறுப்பு உள்ளது. ஒரு புழுவின் வடிவத்திலான பை போன்ற இந்த உறுப்பு நான்கு அங்குல நீளமும் அரை அங்குல விட்டமும் உடையது. இந்த குடல்வால் உடலுக்கு தேவையில்லாத உறுப்பு என்றே கருதப்பட்டது. மூளை, இதயம், தோல் போன்ற உறுப்புகள் மனிதன் உயிர்வாழ அவசியமானவை. ஆனால் குடல்வால் இல்லாமல் மனிதனால் உயிர்வாழமுடியும். டான்ஸில், ஞானப்பல், உடல் ரோமம் போன்றவையும் உடலுக்கு தேவையற்ற உறுப்புகள் என்றே கருதப்படுகின்றன.

நகங்கள், கால் பெருவிரலின் ரோமங்கள், காதுகளின் தொங்கு தசை இவையெல்லாம் மனிதன் உயிர்வாழ அவசியம்தானா? இந்த தேவையற்ற உறுப்புகள் உடலின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக்கொள்வது மட்டுமன்றி, நோய்த்தொற்றுகளுக்கு இலக்காகி நம்முடைய நிம்மதியைக் கெடுக்கின்றன. இதுபோன்ற தேவையற்ற உறுப்புகளை நாம் நம்முடைய உடலில் இருந்து ஏன் அப்புறப்படுத்தக்கூடாது என்பது போன்ற கேள்வியில் நியாயம் இருப்பதாகக் கருதலாம். 

ஆனால் உண்மை அதுவல்ல. நம்முடைய உடலில் தேவையற்ற உறுப்புகளாக கருதப்படுபவை நாம் எந்த இடத்தில் வாழ்கிறோம் என்பதையும், எந்தக்காலத்தில் வாழ்கிறோம் என்பதையும் பொறுத்து அவசியமான உறுப்புகளாக மாறிவிடுகின்றன. நவீன மருந்துகளை உற்பத்தி செய்வதில் இதுபற்றிய ஆய்வுகள் பயன்படுகின்றன. மேலும் நம்முடைய மூதாதையர்களைப்பற்றிய அறிவும் இந்த ஆய்வுகள் மூலம் நமக்கு கிடைக்கிறது. வில்லியம் பார்க்கர் என்னும் அறிஞர் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் குறித்து ஆராய்வதில் ஆர்வமுடையவர். ஆனால் அவருடைய ஆய்வு அவரையறியாமலேயே குடல்வால் பற்றிய ஆய்விற்கு இட்டுச்சென்றது. உணவை செரிக்கும் வேலையை சிறுகுடல் செய்யும்போது, குடல்வால் வெறுமனே அந்த இடத்தில் உட்கார்ந்திருப்பதாக அவர் நினைக்கவில்லை.

மனித உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றுள் நன்மை செய்பவையும் தீமை செய்பவையும் உண்டு. நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உணவை செரிக்கவைப்பதோடு தீமை செய்யும் பாக்டீரியாக்களை விரட்டியடிக்கிறது. நன்மை செய்யும் பாக்டீரியாக்களை செழிக்கச்செய்வதுகூட நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதற்கு சமம். இவ்வாறு செழிப்படைந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உயிர்ப்படலங்களாக குடல்வாலின் சுவர்களை ஆக்கிரமித்துக்கொண்டு தீமை செய்யும் பாக்டீரியாக்களை தடுக்கும் அரணாக செயல்படுகிறது. குடல்வால் எனும் உறுப்பு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் கிடங்கு என்பதும், தீமைசெய்யும் பாக்டீரியாக்கள் உடலை தாக்கும்போது நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வெளிப்பட்டு உடலுக்கு பாதுகாப்பளிக்கிறது என்பதும் வில்லியம் பார்க்கரின் கருத்தாகும்.

என்று குறிப்பிட்டுள்ளனர். விஞ்ஞானி வில்லியம் பார்க்கர் அவர்களின் ஆய்வின் மூல நூலை வாசித்தவர்கள் இது பற்றிய பகுதியை அனுப்பினால் அதையும் இத்துடன் இணைத்துக் கொள்வோம்.

அல்லாஹ்வின் படைப்பில் ஒரு பயனும் அற்றவை என்று மனிதன் நினைத்தால் அதை அவன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று அர்த்தமே தவிர பயன் இல்லை என்று அர்த்தமல்ல.
ஆதாரத்துக்கு பார்க்க
http://www.dukemagazine.duke.edu/issues/030408/depqa.html
www.dukemagazine.duke.edu/issues/030408/depqa.html

13.01.2012. 11:41

வணக்கங்களால் கடவுளுக்கு என்ன லாபம்

வணக்கங்களால் கடவுளுக்கு என்ன லாபம்
நான் இந்து சகோதரரிடம் பிரச்சாரம் செய்யும் போது கடவுள் ஏன் நம்மைப் படைக்க வேண்டும்
, நம்மை படைப்பதால் கடவுளுக்கு என்ன லாபம்? அவரை வணங்க படைத்தாரென்றால் அவருக்கு அந்த வணக்கம் தேவையா? நன்மை செய்தால் சொர்க்கம் என்றும், தீமை செய்தால் நரகம் என்றும் கொடுத்து எதற்கு இந்த வேண்டாத வேலை? நம்மை படைத்ததே வேஸ்ட்தானே என்று கேட்கிறார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆகவே நீங்கள் பதில் கூறவும்.

- பாரூக், மைலாப்பூர்

?அல்லாஹ் எந்தவிதத் தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடு என்பதில் சந்தேகமில்லை. தேவையுள்ளவன் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றவன் என்று இஸ்லாம் உறுதிபடக் கூறுகிறது. இறைவனைத் தொழ வேண்டும் என இஸ்லாம் கூறுவதால் அல்லாஹ் தேவையுள்ளவன் என்று கருத முடியாது.

இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏக மனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை. இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப் போவதில்லை. இந்தக் கருத்தில் நபிகள் நாயகத்தின் பொன்மொழியும் உள்ளது.

(நூல் - முஸ்லிம் 4674)

தொழுகை உள்ளிட்ட வணக்கங்களை நிறைவேற்றுமாறு இறைவன் கட்டளையிடுவது அவனுக்கு அது தேவை என்பதற்காக அல்ல. மாறாக நிறைவேற்றும் மனிதனின் நன்மைக்காகவே.

இன்னொருவரின் நன்மைக்காக அவரை ஒரு காரியத்தில் ஈடுபடுமாறு நாம் கூறினால் நமக்கு அந்தக் காரியத்தின்பால் தேவையுள்ளது என்று எடுத்துக் கொள்ள மாட்டோம்.

உங்கள் மகன் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள். போட்டிகளில் அவன் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறார்கள். இவையெல்லாம் உங்கள் தேவைக்காக அல்ல. மாறாக உங்கள் மகனின் நன்மைக்காவே இவ்வாறு வலியுறுத்துகிறீர்கள். மகன் நல்ல நிலையில் இருந்தால் நம்மை நன்றாகக் கவனிப்பான் என்ற எதிர்பார்ப்பாவது இதில் மறைந்து நிற்கும்.

அல்லாஹ், நம்மிடம் எதிர்பார்க்கும் வணக்க வழிபாடுகளில் இது போன்ற எதிர்பார்ப்புகள் கூட கிடையாது.

எனவே நமது நன்மைக்காக இடப்படும் கட்டளைகளை கட்டளை பிறப்பித்தவனின் தேவைக்காக இடப்பட்ட கட்டளை என்று கருதுவது தவறாகும்.
உணர்வு 16:9

21.11.2011. 06:06

மாநாடு போன்ற செலவுகள் தேவைதானா

மாநாடு போன்ற செலவுகள் தேவைதானா

எத்தனையோ அவசியமான தேவைகள் சமுதாயத்துக்கு இருக்கும் போது மாநாடு போன்ற செலவுகள் தேவைதானா

அப்துல் முனாப்

ஒரு மனிதனுக்கு பல்வேறு தேவைகள் உள்ளன. ஒருவர் தரமான ஆடைக்கு செலவிடும் போது இதற்குச் செலவிடும் பணத்தில் நல்ல பிரியாணி சாப்பிடலாமே என்று கேட்பதும் இந்த ஆடைக்கு செலவிட்ட பணத்தில் நூறு ஏழைகளுக்கு உணவளிக்க முடியுமே என்றும் கேட்பது எவ்வாறு அறியமையாக உள்ளதோ அது போல் தான் உங்கள் கேள்வியும் அமைந்துள்ளது.

ஆடைக்கு இவ்வளவு பணம் செலவழிக்கும் நீங்கள் ஏழைகளுக்கும் ஏதாவது செய்தால் என்ன என்று கேட்டால் அதில் நியாயம் உள்ளது.

ஒருவரது வீட்டில் ஒரு முதியவர் நோயாளியாக இருக்கும் போது அவர் தனது மகனை கல்லூரியில் சேர்க்க பல லட்சங்களை செலவு செய்தால் கல்லூரியில் சேர்க்காமல் முதியவருக்கு வைத்தியம் பார் என்று கூறக் கூடாது. மருத்த்துவத்துக்கும் செலவு செய்யுங்கள் என்று தான் கூற நம்க்கு உரிமை உண்டு,

ஒருவர் முக்கியமானது என்று நினைப்பது மற்றவருக்கு முக்கியமற்றதாக தோன்றலாம். அவரவர் தனக்கு முக்கியமானது என்று தோன்றுவதற்கு முன்னுரிமை அவருக்கு எது முக்கியத்துவம் என்பதை அவர் தான் முடிவு செய்வார். இதில் அடுத்தவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

மேலும் ஒரு தேவைக்காக செலவிடுவதால் இன்னொரு தேவைக்கு செலவிடக்கூடாது என்று சட்டம் இல்லை. மனிதனின் மன நிலையும் அப்படி இல்லை. ஒரு மகனைக் கல்லூரியில் சேர்க்க செலவிட்டதால் மகளுடைய திருமணத்துக்கு அவர் செலவிட மறுக்க மாட்டார். உணவுக்கு செலவிடுவது உடைக்கு செலவிடுவதற்கு தடையாக இருக்காது. இந்த சாதாரண அடிப்படைக்கு மாற்றமாக உங்கள் வாதம் அமைந்துள்ளது.

தனி நபர்களுக்கு தேவை இருப்பது போல் சமுதாயத்துக்கும் இயக்கங்களுக்கும் தேவைகள் உள்ளன. தனித்தனி பார்வைகளும் உள்ளன. அவர்கள் மாநாடு அவசியம் என்று கருதும் போது மாநாடு நட்த்துவார்கள். அதற்காக செலவிடுவதால் அந்தப் பணத்தைக் கல்விக்கு செலவிடலமே என்று கேட்கக் கூடாது.

உஙகளுக்கு கல்விக்குச் செலவிடுவது முக்கியமாக தோன்றலாம். இட ஒதுக்கீடு கிடைத்து விட்டால் ஏராள்மான மக்களுக்கு இலவச்மாக உயர் கல்வி கிடைக்கலாம் என்பதால் இட ஒதுக்கீடு தான் முதன்மையானது என்று ஒரு இயக்கம் கருதலாம். நீங்கள் எதை முதன்மையானது என்று நினைக்கிறீர்களோ அதையே முக்கியமானதாக அனைவரும் கருத மாட்டார்கள்.

மாநாட்டுக்காக நிதி அளித்த மக்கள் மற்றொரு நல்ல பணிக்கு உதவி செய்ய மறுக்க மாட்டார்கள்.

வீண் விரயம் ஆடம்பரம் மார்க்க முரணான செயல்கள் இடம் பெற்றால் அந்த மாநாடுகளைக் கண்டிக்கலாம். மாநாடே கூடாது என்ற வாதம் ஏற்புடையதல்ல்/

சொந்த வாழ்க்கையில் எப்படி தமது பொருளாதாரத்தை குறிப்பிட்ட் ஒரு வகைக்கு மட்டும் மக்கள் செலவிட மாட்டார்களோ அனைத்து தேவைகளுக்கும் ஒதுக்கீடு செய்வார்களோ அது போல் தான் பொதுக்காரியங்களையும் பார்ப்பார்கள். எனவே ஒரு நற்பணிக்கு உதவுவதால் இன்னொரு நற்பணி பாதிக்காது என்பது தான் உண்மை.

10.11.2011. 03:55

நமக்காக நபி மன்னிப்பு கேட்டால் தான்

நமக்காக நபி மன்னிப்பு கேட்டால் தான் அல்லாஹ் மன்னிப்பானா?

 

நாம் பாவம் செய்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டால் தான் அல்லாஹ் மன்னிப்பானா?

நிஸாருத்தீன்

பதில்

திருக்குர்ஆன் 4:64 வசனத்தைச் சரியாக விளங்காத சிலர் இப்படி கூறித் திரிகிறார்கள்.

وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا (64) النساء : 4

(முஹம்மதே) அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்து விட்டு உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடி, அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரியிருந்தால் மன்னிப்பை ஏற்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அல்லாஹ்வைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் (4 : 64)

பாவம் செய்தவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு விட்டு நபிகள் நாயகத்திடம் வந்து, அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ் மன்னிப்பான் என்று இவ்வசனம் கூறுகிறது.

இதற்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம்.

யார் எந்தப் பாவம் செய்தாலும் அதற்கு மன்னிப்பு கிடைக்க வேண்டுமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டுமாறு கூற வேண்டும். அப்போது தான் அல்லாஹ் மன்னிப்பான் என்றும் பொருள் கொள்ள முடியும்.  

அல்லது பாவம் செய்தவர் தானும் மன்னிப்பு கேட்டு அவருக்காக நபியும் இறைவனிடம் மன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு என்ற கருத்தும் இதற்கு கொடுக்கலாம்.

ஆனால் இவ்வசனம் அருளப்பட்ட பின் பாவம் செய்த நபித்தோழர்கள் தினமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்விடம் தங்களுக்காக பாவ மன்னிப்பு கோருமாறு கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கவில்லை. இதில் இருந்து இவ்வசனத்துக்கு முதலாவது அர்த்தம் கொள்ள முடியாது என்பதை அறியலாம்.

மேலும் நமக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னிப்பு கேட்டால் தான் அல்லாஹ் மன்னிப்பான் என்று இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்துக்குப் பிறகு வாழும் யாருக்கும் இறைவனின் மன்னிப்பு கிடைக்காமல் போய் விடும். இதன் காரணமாகவும் முதல் அர்த்தம் கொடுக்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் சென்று நமக்காகப் பாவமன்னிப்புத் தேடுமாறு அவர்களிடம் கேட்கலாம் என்று இதைச் சிலர் புரிந்து கொள்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள், பாவம் செய்து விட்டு தாமும் மன்னிப்புக் கேட்டு நபிகள் நாயகமும் அல்லாஹ்விடம் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பான் என்று தான் இவ்வசனம் கூறுகிறதே தவிர மரணித்த பிறகு அடக்கத்தலம் சென்று பாவ மன்னிப்புக் கோருமாறு கூறவில்லை.

மன்னிப்பை ஏற்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அல்லாஹ்வைக் காண்பார்கள் எனக் கூறாமல் கண்டிருப்பார்கள் என்று இறந்தகால வினைச் சொல்லாக இறைவன் கூறியிருப்பதிலிருந்து இதைத் தெளிவாக விளங்கலாம்.

இவ்வாறு வாதிடக் கூடியவர்கள் ஒவ்வொரு பாவம் செய்தவுடன் மதீனா சென்று விட்டு வர வேண்டும். இவர்களின் வாதப்படி பெரிய செல்வந்தர்களுக்கு மட்டும் தான் மன்னிப்புக் கிடைக்கும். மதீனா செல்ல முடியாத ஏழைகளுக்குக் கிடைக்காது.

தனது மரணத்துக்குப் பின் மக்கள் தன் மண்ணறையைத் தேடி வரக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் வீடுகளை அடக்கத் தலங்கலாக ஆக்காதீர்கள். மேலும் எனது அடக்கத் தலத்தில் விழா எடுக்காதீர்கள். என் மீது சலவாத்துச் சொல்லுங்கள். ஏனென்றால் நீங்கள் கூறும் சலவாத்து நீங்கள் எங்கிருந்தாலும் என்னை வந்தடையும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அபூதாவுத் (1746)

தனது மண்ணறையில் மக்கள் குழுமிவிடக் கூடாது என்பதற்காக நபியவர்கள் என் மீது சலவாத்துச் சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் அது என்னை வந்தடையும் என்று போதிக்கிறார்கள்.

நபியவர்கள் மீது நாம் கூறும் சலவாத்தை வானவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பூமியில் சுற்றித் திரியும் வானவர்கள் அல்லாஹ்விற்கு இருக்கிறார்கள். அவர்கள் என் சமூகத்தினரிடமிருந்து சலாத்தை எனக்கு எத்தி வைக்கிறார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : அஹ்மத் (3484)

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது, அவர்களே அல்லாஹ்விடம் அம்மக்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும் போது இறைவன் மன்னிக்க அதிக வாய்ப்பு உண்டு என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை.

நபிகள் நாயகத்தின் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் ஒவ்வொரு பாவம் செய்யும் போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் சென்று தமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்குமாறு வேண்டவில்லை என்பதைப் புரிந்து கொண்டால் குழம்ப மாட்டார்கள்.

02.06.2011. 13:05

ஷைத்த்கானுக்கு எல்லா அதிகாரத்தையும

ஷைத்த்கானுக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்து விட்டு அவனை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவதில் அர்த்தம் இருக்கிறதா

சைத்தான் அல்லாஹ்விடம்  மனிதர்களை வழி கெடுக்கும்வாய்ப்பு  கேட்டு உலகிற்கு வந்துள்ளான் என நாம் அறிந்திருக்கிறோம். அப்போ சைத்தான் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க அல்லாஹ் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். நாம் அல்லாஹ்விடம் உதவி தேடினால் மட்டும் சைத்தானிடம் இருந்து அல்லாஹ் நம்மளைக் காப்பானா ?

பதில்

இறைவன் ஷைத்தானுக்கு எத்தகைய அதிகாரத்தை வழங்கியுள்ளான் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மனிதரையும் அவருடைய விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாக தவறான பாதைக்கு ஷைத்தான் இழுத்துச் செல்வதில்லை

தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும் நன்மையான காரியங்களைப் புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும். அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்குக் கட்டுப்படுபவர்கள் தீமையைச் செய்து விடுகிறார்கள். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள்.

மனிதன் தான் ஷைத்தானிற்குக் கட்டுப்பட்டு தவறிழைக்கிறானே தவிர ஷைத்தான் யாரையும் வலுக்கட்டாயமாக அவர்கள் விரும்பாமல் தீமைக்கு அழைத்துச் செல்வதில்லை. அது போன்று நல்ல விஷயங்களை வெறுப்பிற்குரியதாக நமக்குக் காட்டுவானே தவிர நன்மையான காரியங்களைச் செய்யவிடாமல் ஷைத்தான் யாரிடத்திலும் சண்டைக்கு வர மாட்டான். இதை நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம்.

தீய எண்ணங்களை ஏற்படுத்துவதும் தவறான வழிகளைக் காட்டுவதும் தான் ஷைத்தானுடைய வேலை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

அல்குர்ஆன் (4 : 119)

அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.

அல்குர்ஆன் (2 : 169)

அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.

அல்குர்ஆன் (114 : 5)

ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் தீமை தவறான வழியைக் காட்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்தும் விளங்கிக் கொள்ளலாம்.

"அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்'' என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு

அல்குர்ஆன் (14 : 22)

மனிதன் மிகவும் பலவீனமானவன். ஒரு நேரம் இல்லாவிட்டால் மற்றொரு சூழ்நிலையில் ஷைத்தானின் ஆசை வார்த்தைகளுக்கு இனங்கி விடுகிறான். இந்த பலவீனத்தால் நாம் தவறான வழியைத் தேர்வு செய்து விடக் கூடாது. சரியான வழியில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் அல்லாஹ்விடம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடப்படுகின்றது.

ஷைத்தானுக்கு நல்லதாகக் காட்டும் தீய காரியங்களை நமக்கு தீய காரியங்களாகவே இறைவன் காட்டி ஷைத்தனுக்கு கட்டுப்படாமல் காப்பாறுவான். எனவே நாம் இந்தப் பிரச்சனையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவது அர்த்தமுள்ளது தான். இறைவனிடம் நாம் பாதுகாப்புத் தேடும் போது நாம் அடிமை என்பதையும் அல்லாஹ் எஜமான் என்பதையும் வெளிப்படுத்துகின்றோம். தன் அடியார்கள் தன்னிடம் உதவி தேடுவதை இறைவன் மிகவும் நேசிக்கின்றான்.

13.04.2011. 04:40

பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்

பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்

பிறையைக் கணித்துத் தான் நாளை முடிவு செய்ய வேண்டும்; பிறையைப் பார்க்கத் தேவை இல்லை என்று வரட்டு வாதம் புரிவோர் தங்கள் வாதத்தை நிறுவிட பிரசுரங்கள் வெளியிட்டு தங்கள் மதியீனத்தைப் பறை சாற்றி வருகின்றனர். இவர்களின் முழு வாதமும் கிறுக்குத்தனமாகவும் ஆதாரமற்ற உளறலாகவும் உள்ளன என்பதை சிறிதளவு சிந்தனை உள்ளவர்கள் கூட அறிய முடியும்.

ஹிஜ்ரா கமிட்டி என்ற பெயரில் பித்தலாட்டம் செய்யும் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இது குறித்து வரிசை எண் போட்டு முப்பது கேள்விகளைக் கேட்டுள்ளனர். இத்துடன் நாளின் ஆரம்பம் எது என்பது குறித்தும் வரிசை எண் போட்டு கேள்விகள் கேட்டுள்ளனர்.

இவர்களின் வரட்டு வாதங்களுக்கு சகோதரர் நாஷித் அஹ்மத் என்ற நேயர் பதில் தயாரித்து அனுப்பி உள்ளார். சிறந்த பதிலாக அது இருந்ததால் இது போன்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவரது பதில்களை வெளியிடுகிறோம்.

வரட்டுக் கேள்வி -1

பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் (ரஃயல் ஐன் 3:13) என்று நேரடியாகக் கூறும் குர் ஆன் வசனமோ ஹதீஸோ இருக்கிறதா

நேயர் பதில் - 1

1பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று நேரடியாக ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று கேட்கிறார்கள். எதற்கு நேரடியாக ஆதாரம் உள்ளதோ, அதில் கேள்வி கேட்கும் இவர்களை என்னவென்று சொல்ல?

புறக்கண்ணால் பார்த்துத் தான் பிறையை முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு, பிறை குறித்து வரும் அனைத்து ஹதீஸ்களுமே ஆதாரம் தான்.

வாகனக் கூட்டத்தினர் நேற்று பிறை பார்த்ததாக நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்து சொல்கின்றனர். "நேற்று பிறை பார்த்தோம்", என்பது புறக்கண்ணால் பார்த்ததைத் தான் குறிக்கும்.

நீங்கள் பிறையைப் பார்ப்பது வரை அல்லாஹ் முந்தைய மாதத்தை நீட்டித் தருவதாக நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளதும் புறக்கண்ணால் பார்க்கப்படுவதைத் தான் குறிக்கிறதே தவிர, வேறு முறை குறித்தல்ல.

இன்னும் சொல்லப் போனால், பிறையைப் பார்த்து நோன்பை வையுங்கள், பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள், என்பதற்கும்  புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்வது தான் பொருள்!

எதற்கு நேரடியாக ஆதாரம் இருக்கிறதோ, அதில் கேள்வி கேட்கும் இவர்களை நோக்கி நாம் ஒரு கேள்வி வைக்கிறோம்..

முன்கூட்டியே கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களே , அதற்குரிய குர் ஆன், ஹதீஸ் ஆதாரம் என்ன?

இவர்களின் மதியீனத்தை காட்டும் வகையில் ரஃயல் ஐன் என்ற வார்த்தை வந்தால் தான் புறக்கண்ணால் பார்த்ததாக அர்த்தம் வருமாம். அதாவது ரஃய் என்றால் பார்த்தல் என்பது பொருள். ஐன் என்றால் கண் என்பது பொருள். பார்த்தல் என்பதுடன் கண்னைச் சேர்த்து கண்ணால் பார்த்தல் என்று ஆதாரம் உண்டா எனக் கேட்கின்றனர்.

சாப்பிட வேண்டும் என்றாலும் வாயால் சாப்பிட வேண்டும் என்றாலும் ஒரே அர்த்தம் தான். அது போல் பார்த்தல் என்றாலும் கண்ணால் பார்த்தல் என்றாலும் ஒரே அர்த்தம் தான்.

ஆனால் எந்த மொழியாக இருந்தாலும் பார்த்தல் என்பதற்கு கண்ணால் பார்த்தல் என்று தான் பொருள் செய்ய வேண்டும். அந்த அர்த்தம் பொருந்தாத இடத்தில் மட்டும் தான் வேறு பொருத்தமான அர்த்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ரஃயல் ஐன் என்ற வார்த்தை இருந்தால் தான் கண்ணால் பார்த்தல் என்று அர்த்தம் செய்வார்களாம்.

அல்லாஹவைக் காட்டு என்று மூஸா நபி சமுதாயம் கேட்ட போது வெறும் ரஃய் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்ணுக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? கருத்துக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? இது போல் நூற்றுக் கணக்கான வசனங்களில் ஐன் என்ற வார்த்தை சேராமல் தான் ரஃய் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அதற்கு கண்களால் பார்த்தல் என்று பொருள் இல்லை என்று சொல்வார்களா?

இவர்கள் சுட்டிக் காட்டும் 3:13 வசனத்தில் பார்த்தல் என்பதுடன் ஐன் அதாவது கண் என்ற சொல் ஏன் சேர்த்துச் சொல்லப்ட்டது என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை. கண் பார்வைக்கு இரு மடங்காகத் தெரிந்தது ஆனால் உண்மையில் அப்படி இல்லை என்ற கருத்தைக் கூறுவதற்காக இவ்வாறு கூறப்பட்டது. இதை அந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் மூளையுள்ள யாரும் அறிந்து கொள்ளலாம்.

அவர்களின் இரண்டாவது கேள்வி நாளை வரும்

வரட்டுக் கேள்வி -2

ஹதீதில் மேக மூட்டம் என்று இருக்கிறதா? மறைக்கப்படும் போது என்று இருக்கிறதா? பார்க்க 10:71 கும்ம குப்பிய கும்மிய இந்த அரபி பதங்களின் நேரடி தமிழ் பதங்கள் என்ன?

நேயர் பதில் 2

ஹிஜ்ரா காலண்டர் என்று மார்க்க ஆதாரமில்லாத ஒன்றை நிலை நாட்டும் இந்தக் கூட்டத்தினர் வெறும் கேள்விகளாகத் தான் கேட்பார்கள். இதற்கு இது தான் அர்த்தம் என்று ஆதாரத்துடன் வாதத்தை எடுத்து வைக்க மாட்டார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

10:71 வசனத்தை காட்டி மேற்கண்ட சொல்லுக்கு மறைத்தல் என்று தான் பொருள் என வாதிடுகின்றனர். இவர்களுக்கு ஆய்வு அறிவும் இல்லை. மொழி அறிவும் இல்லை. தனித்துச் சொல்லப்பட்டாலும் இன்னொரு சொல்லுடன் சேர்த்துச் சொல்லப்பட்டாலும் ஒரே அர்த்தம் தரக் கூடிய சொற்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன. தனித்துச் சொல்லப்படும் போது ஒரு அர்த்தமும் இன்னொரு சொல்லுடன் சேர்த்துச் சொல்லும் போது வேறு அர்த்தம் தரக் கூடிய சொற்களும் உள்ளன.

உதாரணமாக இந்த ஆணியின் மறை கழன்று விட்டது அல்லது லூசாகி விட்டது என்றால் நேரடி அர்த்தம் தான் இதற்குச் செய்ய வேண்டும். ஆனால் இந்த மனிதனுக்கு மறை கழன்று விட்டது என்று கூறினால் அல்லது லூஸ் என்று கூறினால் அதற்கு நேரடி அர்த்தம் செய்ய முடியாது. கிறுக்கன் என்று தான் அர்த்தம் செய்ய வேண்டும்.

கிறுக்கன் என்று நேரடி அர்த்தத்தில் உள்ளதா என்று கேட்பது போல் இவர்களின் கேள்வி அமைந்துள்ளது.

பிறையுடன் வானத்துடன் தொடர்பு படுத்தி மேற்கண்ட சொற்கள் பயன்படுத்தி சொல்லப்படும் போது கண்ணுக்குத் தெரியாமல் மேகம் அல்லது பனி மூட்டத்தால் மறைத்து பார்க்க முடியாமல் செய்தல் என்ற பொருளைத் தரும்.

இதனால் தான் மேகத்துக்கு கும்ம என்ற சொல்லில் இருந்து பிறந்த கமாம் என்ற சொல் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பார்க்க 2:57, 2:210, 7:160, 25:25

பொதுவாக கும்மவுக்கு மறைத்தல் என்று பொருள் சொல்லும் அகராதி நூல்கள் பிறையுடன் அதைச் சேர்த்து சொல்லும் போது கண்ணுக்குப் புலப்படாமல் கண்ணால் பார்க்க முடியாமல் மேகம் அல்லது பனி மூட்டம் பிறையை மறைப்பது என்று கூறுகின்றன.

ولَيْلَةُ الغُمى: هي اللَّيلةُ التي لا يُرى فيها الهلالُ، وكذلك الغُمَيَّةُ إذا غُمَّ الهِلالُ على الناس

[المحيط في اللغة 1/ 391، بترقيم الشاملة آليا]

ويقال أيضاً: غُمَّ الهلال على الناس، إذا ستره عنهم غيمٌ أو غيره فلم يُرَ

[الصحاح في اللغة 2/ 26، بترقيم الشاملة آليا]

وَفِي حَدِيثٍ { فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ } أَيْ فَإِنْ سُتِرَتْ رُؤْيَتُهُ بِغَيْمٍ أَوْ ضَبَابٍ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلَاثِينَ لِيَكُونَ الدُّخُولُ فِي صَوْمِ رَمَضَانَ بِيَقِينٍ .

وَفِي حَدِيثٍ { فَاقْدُرُوا لَهُ } قَالَ بَعْضُهُمْ أَيْ قَدِّرُوا مَنَازِلَ الْقَمَرِ وَمَجْرَاهُ فِيهَا قَالَ أَبُو زَيْدٍ غُمَّ الْهِلَالُ غَمًّا فَهُوَ مَغْمُومٌ وَيُقَالُ كَانَ عَلَى السَّمَاءِ غَمٌّ وَغَمْيٌ فَحَالَ دُونَ الْهِلَالِ وَهُوَ غَيْمٌ رَقِيقٌ أَوْ ضَبَابَةٌ

[المصباح المنير في غريب الشرح الكبير  7/ 84]

وصُمْنا للغُمَّى وللغَمَّى بالفتح والضم إذ غُمَّ عليهم الهلال في الليلة التي يرون أن فيها استهلاله وصُمْنا للغَمَّاء بالفتح والمد وصُمْنا للغُمِّيَّة وللغُمَّة كل ذلك إذا صاموا على غير رؤية وفي الحديث أنه قال صوموا لرؤيته وأَفطروا لرؤيته فإن غُمَّ عليكم فأَكملوا العدة قال شمر يقال غُمَّ علينا الهلال غَمّاً فهو مَغْموم إذا حال دون رؤية الهلال غَيْمٌ رَقِيق من غَمَمْت الشيء إذا غَطَّيته

[لسان العرب 12/ 441]

ويقال أيضا غُمَّ الهلال على الناس إذا ستره عنهم غيم أو غيره فلم يُر

[مختار الصحاح ص: 488]

மேற்கண்ட அரபு மூலம் கட்டுரையாளருடயது அல்ல. நாம் சேர்த்துள்ளதாகும்

(ஹும்ம்) மறைக்கப்படும், என்ற வார்த்தை ஒரு பொதுவான சொல்.  எந்த பொருளோடு அது இணைத்து பேசப்படுகிறதோ, அதை பொறுத்து அந்த சொல்லுக்கு அர்த்தம் வேறுபடும். பொதுவாக, ஒரு மனிதரை நோக்கி சொன்னால், "குழப்பமடைந்தவர்" என்று பொருள்.

பொதுவாக, ஒன்றைக் குறித்து சொன்னால், மறைக்கப்பட்டது என்று பொருள். வானத்தோடு இணைத்து சொல்லப்படுமானால், வானத்தில் எது மறைக்கும்? என்று சிந்தித்து, அதை இந்த சொல்லுக்கு பொருளாக கொடுப்பது தான் முறையான செயல். அவ்வகையில் பார்த்தால், ஹும்ம் - என்ற மறைக்கப்படுதல் என்பதற்கு இந்த இடத்தில் "மேகம் மறைத்தல் " என்ற பொருள் தான் கொடுக்க முடியும்.

எந்தப் பொருளையும் முதலில் நம் நிலையில் இருந்து மட்டும் சிந்திப்பதால் ஏற்படும் கோளாறு தான் இத்தகைய கேள்விகள். இந்த ஹதீஸ் இறங்கிய காலத்தில், இதற்குரிய பொருள் என்ன? இதைக் கூறிய பொழுது, சஹாபாக்கள் எவ்வாறு இதைப் புரிந்திருப்பார்கள்? என்பதைச் சிந்தித்தால் இது போன்ற அறிவார்ந்த(?) கேள்விகள் எழாது.

மூன்றாவது வரட்டுக் கேள்விக்கான பதில் நாளை இன்ஷா அல்லாஹ்

வரட்டுக் கேள்வி 3

நபி (ஸல்) பிறை 29 மாலை பிறை பார்க்கச் சொன்னார்களா? அல்லது தினசரி பார்க்கச் சொன்னார்களா?

நேயர் பதில் - 3

இந்தக் கேள்வியின் மூலம் பிறையைக் கணிக்க வேண்டும் என்ற நச்சுக் கருத்தை எப்படி நிறுவுகிறார்கள் என்பதை இவர்கள் விளக்கவில்லை. இத்தகைய அறிவுப்பூர்வமான வழிமுறை இவர்களிடம் கடுகளவும் இல்லை. மாற்றுக் கருத்து உடையவர்களை நோக்கி கேள்விகள் கேட்டால் அந்தக் கேள்வி மூலம் என்ன கருத்தை எப்படி நிலை நாட்டப்போகிறார்கள் என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். இவர்களின் கேள்விப்பட்டியலில் இந்த அறிவுப்பூர்வமான அம்சம் இல்லவே இல்லை.

இவர்கள் கேட்டுள்ள மூன்றாவது கேள்வி கூட முரண்பாட்டின் வடிவமாக உள்ளது

29 அன்று பிறை பார்க்கச் சொல்வது தினசரி பார்க்க வேண்டும் என்பதற்கு முரணானது அல்ல. ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்ததாகும்.

வாகனக் கூட்டத்தினர் நேற்று பிறை பார்த்ததாகச் சொல்லியுள்ள அறிவிப்பில், "நேற்று" என்பது 29 தான் குறிக்கும்.  மாதம் என்பது 29 நாட்கள் தான். பிறை தெரிந்தால் அந்த மாதம் அதோடு முடியும். பிறை தெரியவில்லை என்றால் முப்பதாக பூர்த்தி ஆகும்.
இதனடிப்படையில் பார்க்கும் போது, ஒரு மாதம் முடிவடைந்து விட்டதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க அந்த மாதத்தின் 29 நாட்கள் கழித்த பிறகு தான் பிறை பார்க்க வேண்டும். இது அந்த அறிவிப்பிலேயே புரிகிறது ; மட்டுமல்லாமல், வாகனக் கூட்டம் ஹதீசும் தெளிவுப்படுத்துகிறது.
29 இல் மட்டும் பார்க்க வேண்டுமா அல்லது ஒவ்வொரு நாளும் பார்க்க வேண்டுமா? என்ற கேள்வியை கேட்கிறார்கள்.  மாதத்திற்கு எத்தனை நாட்கள் ஆகியுள்ளது , 29 நாட்களுக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது என்பதை கணக்கிடுவதற்கு ஒவ்வொரு நாட்களையும் நாம் கணக்கிட்டாக (எண்ணியாக) வேண்டும்.

இந்தச் சாதாரண உண்மை கூட தெரியாமல் உளறியுள்ளனர். இவர்களின் அடுத்த வரட்டுக் கேள்வியை நாளை பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ் 

 வரட்டுக் கேள்வி 4, 5, 6

மாத ஆரம்ப நாட்களில் பார்க்கப்படும் பிறை மறையும் பிறையா? அல்லது பிறக்கும் பிறையா?

மறையும் பிறையைப் பார்த்து விட்டுத் தான் ஆரம்பிப்பதாக நபி (ஸல்) கூறியிருப்பார்களா

நபி (ஸல்) அந்த அளவு விளக்கக் குறைவானவர்கள் என்பது தான் உங்கள் நம்பிக்கையா

நேயர் பதில் 4, 5, 6

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைச் சொன்னால் அந்தச் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் நபிகள் நாயகம் ஸல் அவர்களைக் கேவலப்படுத்தும் வகையில் இது போன்ற கேள்வியைக் கேட்டுள்ளனர்.

இவர்கள் அறிவும் சிந்தனையும் உள்ளவர்களாக இருந்தால் இந்தக் கேள்விகளைக் கேட்பதற்கு முன் இது குறித்த தங்கள் வாதத்தை முன் வைக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறையும் பிறையைக் கூறவில்லை. அதற்கு இதோ ஆதாரம் என்று வாதிட வேண்டும். தனது தரப்பு வாதமாக எதையும் வைக்காமல் கேள்வி கேட்பதில் இருந்து இவர்களின் மடமை தெளிவாகின்றது.

மறையும் பிறையைப் பார்த்து விட்டு ஆரம்பிக்க சொல்லி இருப்பார்களா? என்று கேட்பதன் மூலம் தங்களுக்கு கடுகளவும் சிந்திக்கும் திறன் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டனர்.

நாம் மக்ரிப் தொழுகையை ஆரம்பிப்பதற்கு சூரியன் மறைவதைத் தான் காரணமாகக் கொண்டுள்ளோம். மறையும் சூரியனைப் பார்த்து விட்டுத் தான் மக்ரிப் தொழுகையை ஆரம்பிப்பதாக நபிகள் சொல்லி இருப்பார்களா? அந்த அளவுக்கு நபிகளுக்கு விளக்ககுறைவு உள்ளது என்று கருதுகிறீர்களா என்று ஒருவன் கேட்டால் அவனை நாம் என்னவென்போம்? இனி மேல் மக்ரிப் தொழுகையை சூரியன் உதிக்கும் போது தான் ஆரம்பிக்க வேண்டும் என்று அடுத்த கண்டு பிடிப்பை இந்தக் கூறு கெட்டவர்கள் வெளியிட்வார்கள் என்று எதிர்பார்ப்போம். மறையும் நேரத்தில் சில காரியங்களை துவங்கலாம். உதிக்கும் நேரத்திலும் துவங்கலாம். எதற்கு எப்படி ஆதாரம் கிடைத்துள்ளதோ அப்படி புரிந்து கொள்வது தான் மூளை உள்ளவர்களின் முடிவாக இருக்க வேண்டும்.

ஆதாரம் எப்படி உள்ளது என்பதை முதலில் பார்ப்போம்.

முந்தைய கேள்விக்கான நமது பதில் மேலே தரப்பட்டுள்ள நிலையில், அந்த பதில் குறித்த இவர்கள் நிலையை இவர்களே விளக்கினால் இதற்கு பதில் கிடைத்து விடும்.
மாலை, மறையும் பிறையா உதிக்கும் பிறையா என்பதைக் கேள்வியாக கேட்பதற்கு முன்னர், பிறையை எப்போது, எந்த நேரத்தில் பார்க்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு நாம் விடை வைத்திருக்க வேண்டும்.

வாகனக் கூட்டம் அறிவிக்கிற ஹதீஸில், மாலை பிறை பார்த்ததாக வருகிறது. இதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்தும்  இருக்கிறார்கள் எனும் போது, பிறையை மாலை தான் பார்க்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

இப்போது நமது கடமை, மாலை பிறை பார்ப்பது தானே தவிர, அது உதிக்கும் பிறையா மறையும் பிறையா என்று ஆராய்ச்சியில் இறங்குவது அல்ல!

மறையும் பிறையைப் பார்க்குமாறு நபி (ஸல்) அவர்கள் சொன்னது உறுதியாக தெரிந்த பிறகும்  இப்படி  சொல்லியிருப்பார்களா? என்று கேட்கப்படும் கேள்வி, நம்மை நோக்கிய கேள்வி அல்ல, நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்படும் கேள்வி.!

இவர்களுக்கு விபரம் இல்லை என்பது நிரூபணமாகும் விஷயத்தில் நபிகளுக்கு விளக்கக் குறைவு என்பது தான் உங்கள் நிலையா? என்று கேட்பது எவ்வளவு அகங்காரம் கொண்ட கேள்வி. விபரம் கெட்டவர்களாக இவர்கள் இருந்து கொண்டு நபிகள் நாயகத்தை அப்படி சித்தரிக்கப் பார்ப்பதில் இருந்து இவர்கள் ஷைத்தானின் வலையில் விழுந்து கிடப்பவர்கள் என்பது தெளிவாகிறது

 

வரட்டுக்கேள்வி 7

2:185ல் அல்லாஹ் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அதாவது சாட்சியமளிக்கிறாரோ (ஃபமன்ஷஹித) அவர் நோன்பு நோற்கட்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றானா? அல்லது எவர் தலைப்பிறையை புறக்கண்ணால் பார்க்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றானா?

நேயர் பதில் 7

7. "ன் ஷஹித மின்குமுஷ்ஷஹர "  என்பதற்கு "யார் அம்மாதத்திற்கு சாட்சியாக இருக்கிறாரோ", என்று பொருள் செய்வது முற்றிலும் தவறான ஒன்றாகும்.

ஷஹித என்பதற்கு சில இடங்களில் சாட்சி கூறுதல் என்ற அர்த்தம் இருந்தாலும் அதற்கு அடைவது என்ற பொருளும் உள்ளது. யார் சாட்சியாக இருக்கிறாரோ என்று இவர்கள் செய்வது போல் பொருள் கொண்டால் அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்பு கடமையாகாது. யார் பிறையைக் கண்ணால் பார்த்து அதற்கு சாட்சி கூறுகிறாரோ அவர் மீது மட்டும் தான் கடமையாகும். ஒரு ஊரில் பத்து பேர் பிறை பார்த்தார்கள் என்றால் அவர்கள் மட்டுமே பிறைக்கு சாட்சிகளாக உள்ளனர். அந்த ஊரைச் சேர்ந்த மற்றவர்கள் அதற்கு சாட்சிகளாக இல்லாததால் அவர்கள் மீது நோன்பு கடமையாகாது என்று இவர்கள் கூற வேண்டும். அவ்வாறு கூற இவர்கள் தயங்கினால் யார் சாட்சி கூறுகிறாரோ என்ற அர்த்தத்தை இவர்களே மறுத்துக் கொள்கின்றனர்.

மாதத்தை அடைந்தவர் என்று பொருள் கொண்டாலும் சிலர் பிறை பார்த்து சாட்சி சொன்னாலும் அவர்களின் சாட்சியம் மூலம் மற்றவர்களும் மாதத்தை அடைந்து விடுகின்றனர். இதை விளங்காமல் உளறியுள்ளனர்.

யார் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளதா என்று கேட்பதன் மூலம் தங்களுக்கும் சிந்தனைக்கும் அறவே தொடர்பு இல்லை என்று நிரூபித்துக் கொள்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட வசனம் அல்லது ஒரு ஹதீஸ் வாசகம் நான் விரும்புகின்ற முறையில் இருந்தால் தான் ஏற்றுக் கொள்வேன் என்பதும், அனைத்து விஷயங்களும் ஒரு ஹதீஸில் அல்லது ஒரு வசனத்தில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்பதும் மார்க்க அறிவு அற்றவர்களின் நடவடிக்கையாகும்.

இது குறித்து வந்துள்ள அனைத்து ஆதாரங்களையும் திரட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கத்தையும் பார்த்து அதற்கு ஏற்ப புரிந்து கொள்வது தான் அறிவுடையோரின் செயலாகும்.

யார் அடைகிறாரோ என்றால் அனைவரும் ஒரே நேரத்தில் அடைய மாட்டார்கள் என்ற கருத்து அதனுள் இருக்கிறது. ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நேரங்களின் அடைவார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் பிறை பார்த்து மாதத்தை முடிவு செய்தால் தான் சாத்தியமாகும். பிறையைக் கணித்தால் அனைவரும் ஒரு நேரத்தில் மாதத்தை அடையும் நிலை ஏற்பட்டு மேற்கண்ட வசனத்தை நிராகரிக்கும் நிலை ஏற்படும்.

புறக்கண்ணால் பார்த்துத் தான் மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை ஏராளமான ஹதீஸ்களின் துணையுடன் நாம் நிரூபித்துள்ளோம். அவை இந்த வசனத்தின் விளக்கமாக அமைந்துள்ளது என்பதையும் இவர்களுக்கு அறிந்து கொள்ளும் திறன் இல்லை.

புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்ற சட்டத்தை நாம் இன்று கடைப் பிடிப்பதைப் போல நபி (ஸல்) அவர்களும் கடைப்பிடித்திருக்கிறார்கள் . அவர்கள் புறக்கண்ணால் பார்த்து , அதன் மூலம் அவர்களுக்கு இரண்டு நாள் வந்த பொழுதும் "யார் அம்மாதத்தை அடைகிறாரோ", என்ற வசனம் இல்லாமல் இல்லை !..

ஆக, இந்த வசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு பொருள் கொடுத்துள்ளார்கள் என்பதைச் சிந்தித்தால் இது போன்ற உளறல் கேள்விகள் எழாது.

இன்னும் சொல்வதாக இருந்தால், ஒரே நாளில் பெருநாளை அமைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தும் கூட, நபி (ஸல்) அவர்கள் அதைச் செய்யாமல் இரண்டு நாள் ஏற்படுவதை அங்கீகரித்து நமக்கு முன்மாதிரியாக விட்டுச் சென்றார்கள் என்பதற்கு சிரியா - மதினா பிறை வேறுபாடு சம்மந்தமான ஹதீஸ், வாகனக்கூட்டம் அறிவிப்பு கொண்ட ஹதீஸ் போன்றவை நமக்கு தெளிவான ஆதாரமாக உள்ளன..

வாய்ப்பிருந்தும் செய்யவில்லை என்பது எதைக் காட்டுகிறது? ஒரே நாளில் உலகம் முழுவதும் முதல் நாள் வராது என்ற குர்ஆன் வசனத்தை நடைமுறையில் உணர்த்தும் முகமாக நபி (ஸல்) அவர்கள் நடந்துள்ளார்கள் என்பதையே காட்டுகிறது. நபி (ஸல்) அவர்கள் ஒரு குர்ஆன் வசனத்திற்கு உயிர் கொடுத்ததைப் போன்று நம் எவரும் கொடுக்க முடியாது என்பதை நினைவில் கொண்டால் இது போன்ற குழப்பவாதிகளிடமிருந்து சமுதாயம் தப்பித்துக் கொள்ளும்.!.
இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்

வரட்டுக் கேள்வி 8, 9, 10

8-எவர் அடைகிறாரோ என்ற சொல் ஒரு நாளின் 24 மணி நேரத்துக்குள் அடைவதைக் குறிக்குமா? அல்லது 2,3 நாட்களில் அடைவதைக் குறிக்குமா?

9-உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் ஜும்மா தொழுகையை வெள்ளிக் கிழமை 24 மணி நேரத்துக்குள் தொழுகிறார்களா? அல்லது வியாழன் வெள்ளி என 48 மணி நேரத்துக்குள் தொழுகிறார்களா? வியாழன் வெள்ளிம்சனி என 72 மணி நேரத்துக்குள் தொழுகிறார்களா?

10-சூரியக் கணக்கின்படி 1 தேதி 1 நாள் என்பது 24 மணி நேரம். திங்கள் செவ்வாய் போன்ற கிழமை 24 மணி நேரம் என்பது உலகறிந்த உண்மை. இதே போல் சந்திரக் கணக்குப்படி தலைப்பிறையான முதல் நாள் 24 மணி நேரத்துக்குள் வர வேண்டுமா? அல்லது இன்றைய முஸ்லிம்கள் கடிப்பிடிப்பது போல் துல்லியக் கணக்கீட்டின் படி (கணிப்பின்படி அல்ல) ஒரு சாராருக்கு ஒரு நாள் தலைப்பிறை, மற்றொரு சாராருக்கு சர்வதேசப் பிறை என்ற அடிப்படிய்ல் இரண்டா, நாள் தலைப்பிறை பிரிதொரு சாராருக்கு தத்தம் பகுதி பிறை என்ற அடிப்படியில் மூன்றாம் நாள் தலைப்பிறை என 24 மணி நேரம் கொண்ட தலைப்பிறை 2 நாள் 48 மணி நேரம்  மூன்று நாள் 72 மணி நேரம் என வருவது பகுத்தறிவு ஏற்கும் செயலா? பகுத்தறிவற்றவர்களின் பிதற்றலா

நேயர் பதில் 8, 9, 10 

8 , 9 , 10 : ஒரு நாள் என்பது 24 மணி நேரமா 48 மணி நேரமா என்று கேட்கின்றனர். ஒரு நாள் 24 மணி நேரம் தான். பிறை அடிப்படையில் இஸ்லாமிய நாட்களை முடிவு செய்யும் பொழுது ஒரு சாராருக்கு மாதத்தின் முதல் நாள் ஒரு தினத்திலும், இன்னொரு சாராருக்கு இரண்டாம் தினத்திலும் துவங்குவதை வைத்து, மாதத்தின் முதல் நாளே இரண்டு நாட்களாகி விட்டதைப் போன்று கேட்கின்றனர்.

ஒவ்வொரு சாராருக்கும் நாள் என்பது 24 மணி நேரம் தான் ஆகிறது. யாருடைய நாளும் 48 மணி நேரம் கொண்டதாக ஆகவில்லை.. கேள்வி கேட்பவர்கள் விளங்காமல் கேள்வி எழுப்புகின்றனர் என்றால் அதைப் படிப்பவர்களும் எதையும் விளங்க மாட்டார்கள் என்று எண்ணுவது வடி கட்டிய முட்டாள்தனமே தவிர வேறில்லை. 

மாதம் எந்த தினத்தில் துவங்குகிறது என்பதில் இரு நாள் வேறுபாடு வருவதால் மாதத்தின் முதல் நாளே இரண்டு நாள் ஆகி விட்டதாக அர்த்தம் இல்லை.

நாளின் துவக்கம் வேறுபடுவதால் யாருக்கும் 48 மணி நேரம் கொண்ட நாள் அல்லது 72 மணி நேரம் கொண்ட நாள் வரவே வராது. இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து தங்களின் மடமையை தாங்களே அம்பலமாக்கிக் கொள்கின்றனர்.

ஒருவர் காலை என்று சொல்லும் நேரத்தை இன்னொரு பகுதியில் உள்ளவர் மாலை என்று சொல்வார். காலையை எப்படி மாலை என்று சொல்லலாம். இதோ சூரியன் உதிப்பதை நான் பார்க்கும் போது நீ எப்படி மாலை என்று சொல்லலாம் என்று கேட்க முடியாது. ஏனெனில் நாம் உதிப்பதைப் பார்க்கும் அதே நேரத்தில் சூரியன் மறைவதை இன்னொரு பகுதியினர் பார்த்து விட்டுத் தான் மாலை என்கின்றனர்.

ஒரு பொருளை அடையக் கூடியதில்  கால வித்தியாசம் இருக்கிறது என்பதால், அந்த பொருளே இரண்டாகி விடாது. மக்ரிபை அடைவதில் நமக்கும் சவுதிக்கும் இடையே இரண்டரை மணி நேர வித்தியாசம் இருக்கிறது. இதை வைத்து , இரண்டு மக்ரிப் என்று யாரும் சொல்ல மாட்டோம். மக்ரிபை அடைவதில் இரண்டு நேரங்கள்! என்று தான் எந்த அறிவார்ந்தவரும் புரிவோம். இதை யாரேனும் பிதற்றல் என்று சொன்னால் அவர்கள் தான் பிதற்றுகின்றனர்.

அதே போன்று, மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்றால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியைப் பின்பற்றி புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்ற கொள்கையின் படி, ஒரு பகுதிக்கு புறக்கண்களில் தென்படும் தலைப்பிறையானது உலகின் இன்னொரு பகுதியில் தென்படாது.

தென்பட்டவர்கள் முதல் நாளை அனுபவிப்பார்கள், தென்படாதவர்கள் மறுநாளை முதல் நாள் என கொள்வார்கள்.

நாளை அடைவதில் கால வித்தியாசம் ஏற்ப்படுவதை எந்த நிலையிலும் மறுக்க இயலாது எனும் போது, இரண்டு நாட்கள் என்றால் மாதத்தின் முதல் நாள் 24 மணி நேரமா அல்லது 48 மணி நேரமா என்று கேட்பதெல்லாம்  வெறும் வறட்டு வாதமாக தான் கொள்ள முடியுமே தவிர, அறிவார்ந்த சபையில் ஏற்றுக் கொள்ளப்படாது.

எல்லோரும் வெள்ளிகிழமை தான் ஜும்மா தொழுகிறோம் என்பது உண்மை தான். யாரும் வியாழக்கிழமையோ சனிக்கிழமையோ ஜும்மா தொழுவதில்லை ர்ன்பதும் உண்மை தான். ஆனால் ஒருவர் வெள்ளிக் கிழமை என்று சொல்வது இன்னொருவருக்கு வியாழக்கிழமையாக இருக்குமா இருக்காதா? இது தான் கேள்வி.

உதாரணமாக தேதிக்கோட்டுக்கு (டேட்லைன்) இந்தப் பக்கம் இருப்பவர்கள் பகல் ஒரு மணியானதும் ஜும்மா தொழுவார்கள். ஆனால் தேதிக் கோட்டுக்கு அந்தப்பக்கம் உள்ளவர்கள் அதை வியாழக்கிழமையாகக் கருதுவதால் அவர்கள் அந்த நேரத்தில் ஜும்மா தொழ மாட்டார்கள். மறு நாள் அதாவது இந்தப்பக்கம் உள்ளவர்கள் சனிக்கிழமைக்குச் சென்ற பின் அவர்கள் வெள்ளிக்கிழமையை அடைந்து ஜும்மா தொழுகிறார்கள். அதாவது ஒரே நேரம் பகல் ஒரு மணி- அருகருகே உள்ள இரண்டு இடங்களுக்கு வெள்ளிக்கிழமையாகவும் வியாழக்கிழமையாகவும் இருக்கிறதே? இது பிதற்றலா? ஒரே நாள் எப்படி வெள்ளிக்கிழமையாகவும் வியாழக்கிழமையாகவும் இருக்கும் என்று கேட்பது தான் பகுத்தறிவா?

இதை விட முக்கியமான ஒரு விஷயம் இவர்களின் மேற்கண்ட கேள்விகள் மூலம் தெளிவாகின்றது. அதாவது இவர்கள் குர் ஆன் ஹதீஸ் கூறுவதை நம்பமாட்டார்கள் மாறாக இவர்களின் குறைமதிக்கு ஏற்ப அமைந்தால் தான் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தான் அந்தச் விஷயம்.

ஒருவனுக்கு காற்றுப் பிரிந்து விட்டால் உளூ செய்ய வேண்டும் என மார்க்கம் சொல்கிறது. பிந்துவாரத்தில் காற்றுப்பிரிவதற்கும் கைகால்களைக் கழுவுவதற்கும் என்ன சம்மந்தம்? என்று இவர்கள் கேட்டாலும் கேட்பார்கள். பகுத்தறிவு ஏற்கும் செயலா? பகுத்தறிவற்றவர்களின் பிதற்றலா என்று கேட்டாலும் கேட்பார்கள்.

தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்ய வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறது. மண்ணைத் தடவிக் கொண்டால் தூய்மையாகுமா? அழுக்காகுமா எனக் கூறி இதையும் மறுத்தாலும் மறுப்பார்கள் போலும். பகுத்தறிவு ஏற்கும் செயலா? பகுத்தறிவற்றவர்களின் பிதற்றலா என்று கேட்டாலும் கேட்பார்கள்.

 வரட்டுக் கேள்வி 11,12,13

11-பிறையைப் பார்த்து மாதத்தை முடிவு செய்யுங்கள் என்று அன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது துல்லிய கணிணி கணக்கீடு அன்று இல்லாத காரணத்தால். அன்று முஸ்லிம்களிடையே எழுந்த இம்மாதம் 29ல் முடிகிறது என்று ஒரு சாராரும், இல்லை 30ல் முடிகிறது என்று பிரிதொரு சாராரும் சச்சரவிட்டுப் பிளவுபட்டதை முடிவுக்குக் கொண்டு வந்து சமுதாய ஒற்றுமை (29:92, 23:52) காக்கவா அல்லது பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை மார்க்கமாக்கி அப்படிக் கூறினார்களா?

12- அன்று நபி (ஸல்) பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை மார்க்கமாக்கி அப்படிக் கூறினார்கள் என்றால் மனிதனின் கண்கள் சந்திரனில் பட்டால் தான் அது தனது சுற்றுப்பாதையில் செல்லும். மனிதக் கண் அதில் படாதவரை சந்திரன் அப்படியே நிற்கும்; சந்திரனின் ரிமோட் கண்ட்ரோல் மனிதக் கண்கள் என்று கூறியதாகப் பொருள்படுகிறதே? நபி (ஸல்) பிறையைப் புறக்கண்ணால் பார்த்தலை மார்க்கமாக்கி இருக்க முடியுமா?

13- அப்படி என்றால் சூரியன் சந்திரன் மற்றும் இதர கோள்கள் அனைத்தும் அதனதன் சுற்றுப் பாதைகளில் ஒரு நொடி கூட முன்பின் ஆகாமல் பல கோடி வருடங்கள் சீராக சுழன்று வருகின்றன என அல்குர்ஆனின் 2:189, 6:96, 7:54, 9:36,37, 10:5, 13:2, 14:33, 16:12, 17:12, 21:33, 25:61, 29:61, 31:29, 35:13, 36:40, 39:5, 55:5 போன்ற எண்ணற்ற கட்டளைகளை நபி (ஸல்) நிராகரித்து விட்டு (நவூது பில்லாஹ்) சந்திரன் மனிதனின் கண்களில் பட்டால் தான் சுழலும். பார்வையில் படும் வரை பிரை ஒன்றிலேயே சுழலாமல் நிற்கும் என்ற மூடத்தனமான் ஒரு கட்டளையைப் பிறப்பித்திருக்க முடியுமா

நேயர் பதில் 11, 12, 13

பிறையைப் பார்த்து மாதத்தை முடிவு செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறவே இல்லை என்று உளறி வந்த இவர்கள் இப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறையைப் பார்க்கச் சொன்னார்கள் என்று கூறி அந்தர் பல்டி அடித்து விட்டனர். அந்தக் காலத்தை கவனத்தில் கொண்டு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னார்களாம்!

மார்க்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமை பெற்று விட்டது. அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட மார்க்கத்தைன் எந்தச் சட்டமும் பிற்காலத்தில் மாற்றப்படாது என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

பயணிகள் ஜம்மு கஸர் செய்ய சலுகை மார்க்கத்தில் உள்ளது. அந்தக் காலத்தில் பயணம் என்பது மிகவும் சிரமமானதாகவும், அதிக நேரத்தை விழுங்கக் கூடியதாகவும் இருந்ததால் இந்தச் சலுகை அளிக்கப்பட்டது. இன்று விமானப் பயணம் மிக எளிதாகவும் எவ்விதக் களைப்பும் சிரமமும் அற்றதாகவும் ஆகி விட்டதால் இப்போது ஜம்மு கஸர் கூடாது என்று இந்த மேதாவிகள் கூறுவார்களா?

பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்று நபிகள் நாயகம் கூறியது எதற்காக தெரியுமா என்ற அற்புதமான விளக்கத்தையும் இவர்கள் கொடுக்கின்றனர். அதாவது 29 ஆ 30ஆ என்று கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது அதை நீக்குவதற்காகத் தான் பிறை பார்க்கச் சொல்லி அனைவரையும் ஒரு கருத்துக்குக் கொண்டு வந்தார்களாம்!

இவர்கள் சொல்வதில் கடுகளவாவது லாஜிக் இருக்கிறதா? மதீனாவில் மட்டும் இஸ்லாம் இருந்தால் இவர்கள் கூறுவது போண்ர நிலை ஏற்படலாம். உலகின் பல பகுதி மக்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். அப்போது தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறை பார்த்து நோன்பு நோற்கச் சொன்னார்கள். இதனால் ஏற்படும் விளைவு என்ன? மதீனாவில் பிறை பார்க்கும் நாளில் மற்ற பகுதிகளில் வாழ்பவர்கள் பிறை பார்க்க முடியாது. வெவ்வேறு நாட்களில் தான் பிறை பார்க்க முடியும். இதனால் வெவ்வேறு நாட்களில் தான் பெருநாள் ஏற்படும் என்ற சாதாரண அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

சம்மந்தமில்லாத வசனங்களைப் பொருத்தமில்லாமல் இணைத்து வாதம் செய்வதில் இவர்களை விட்டால் வேறு ஆள் இல்லை. 21 :92 வசனத்தில் அல்லாஹ் நம்மை நோக்கி "நீங்கள் ஒரே சமுதாயம்", என்கிறான். ஆகவே நாம் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டுமாம்!

ஒரே சமுதாயம் என்று பெருநாள் கொண்டாடுவதற்கா அல்லாஹ் சொல்கிறான்? இறைவனை வணங்குவதைக் குறித்து விளக்குவதற்காகச் சொல்லும் வசனம் அது. அதை பெருநாளோடு தொடர்பு படுத்தி தங்களைச் சிந்தனையற்றவர்கள் என்று தாங்களே நிரூபித்துக் கொண்டுள்ளார்கள்..

ஒரு வாதத்திற்கு, நாம் ஒரே சமுதாயம் என்று அல்லாஹ் சொல்லி விட்டதால் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்றால், நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் அவர்கள் எத்தனை சமுதாயம்? 22 சமுதாயமா? அவர்களுக்கு மேற்கூறப்பட்ட வசனம் பொருந்தாதா? அவர்கள் காலத்தில் ஏன் ஒரே நாளில் அனைவரும் பெருநாள் கொண்டாடவில்லை?

அடிப்படையற்று வாதம் வைத்தால் இவ்வாறு தான் உளறலான வாதமாக சென்று சேரும்!

அடுத்து இவர்கள் வைக்கும் இன்னொரு வாதம், சந்திரனின் இயக்கம் மிக துல்லியமாக இருக்கும் பட்சத்தில், நம் கண்களில் பட்டால் தான் மாதம் துவங்கும், இல்லையெனில் துவங்காது என்று சொல்வது சந்திரனின் துல்லியத்தில் சந்தேகம் கொள்வது போல் உள்ளதே? என்று கேட்கின்றனர்.

பிறை தெரிந்தால் மாதம் பிறக்கிறது,  என்று முடிவு செய்வதற்கும், பிறை தெரிந்தால் தான் பிறை துல்லியமாக இயங்குகிறது என்று கூறுவதற்கும் வேறுபாடு உள்ளது.

பிறை தென்பட்டாலும் தென்படாவிட்டாலும், பிறையின் ஓட்டத்தில் யாரும் சந்தேகம் கொள்வதில்லை. பிறை தென்படாவிட்டால், துல்லியமாக ஓடிக் கொண்டிருக்கும் பிறையை நம் கண்களுக்கு அல்லாஹ் காட்டித் தரவில்லை, அவ்வளவு தான் !

நம் கண்களுக்கு அல்லாஹ் காட்டித் தரவில்லை என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் அல்லாஹ்வின் தூதர் வழி சொல்லித் தருகிறார்கள்.

முதல் பிறையை நீங்கள் பார்ப்பது வரை முந்தைய மாதத்தை அல்லாஹ் நீட்டித் தருகிறான் என்ற நபி மொழி இதற்கு பொருத்தமான வழியாக இருக்கிறது.

கேள்வியையும் முன்வைத்து, அதற்குரிய வழியையும் அல்லாஹ்வே சொல்லி தந்து விட்ட பிறகு, இவர்கள் அதிலிருந்து கேள்வி எழுப்புவது நம்மிடமா அல்லது அல்லாஹ்விடமா?

வரட்டுக் கேள்வி 14

அல்குர்ஆன் 3:13ல் காணப்படுவது போல் எதிரிகள் தம் புறக்கண்ணால் பார்த்தார்கள் (ரஃயல் ஐன்) என்றிருப்பது போல் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று ஒரேயொரு ஹதீஸும் நேரடியாகக் கூறாத நிலையில் பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் நீங்கள் அல்குர்ஆன் 22:27ல் ஹஜ்ஜுக்கு நடந்தும் தொலைவிலிருந்து மெலிந்த ஒட்டகங்களிலும் வருவார்கள் என அல்லாஹ் நேரடியாகச் சொல்லி இருந்தும் அல்லாஹ்வின் இக்கட்டளையைப் புறக்கணித்து விட்டு இன்று ஹஜ்ஜுக்கு விமானத்தில் செல்வதை எந்த அடிப்படையில் சரி காண்கிறீர்கள்?

நேயர் பதில் 14

புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று ஒரு ஹதீஸ் கூட கூறவில்லை என்பது எந்த அளவுக்கு அபத்தமானது என்பதை முதலாவது கேள்விக்கான பதிலில் நாம் தெளிவுபடுத்தி விட்டோம். அதுவே இந்த உளறலுக்கும் உள்ள பதலாகும். மேலும் அந்தக் காலத்தில் சொன்னது இந்தக் காலத்துக்கு பொருந்தாது என்ற ஷைத்தானின் சிந்தனை இவர்களின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து போய் விட்டதால் ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் வருவார்கள் என்று அல்லாஹ் சொல்லி இருப்பதை உதாரணமாகக் காட்டி தங்கள் மடமைக்கு சாட்சி சொல்கிறார்கள்.

14 . மேற்கண்ட  வாதத்தை அறிவார்ந்த கேள்வி என்று நினைத்து முன் வைக்கிறார்கள்.
அதாவது, குர்ஆனில், 22 :27   இல் அல்லாஹ் ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் வருவார்கள் என்று சொல்வதால் நீங்களும் இன்று ஒட்டகத்தில் செல்ல வேண்டியது தானே? ஏன் விமானத்தில் செல்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.

குர்ஆன் குறித்த ஞானம் இல்லாத காரணத்தாலும், நுனிப்புல் மேய்வதாலும் ஏற்படும் பாதிப்பு தான் இது போன்ற கேள்விகள்..

அந்த வசனத்தையும், அது அல்லாத இன்ன பிற இறை வசனங்களையும், தெரிந்து கொண்டு வாதம் செய்தால் இது போன்ற கிறுக்குத்தனங்கள் கேள்வியாக எழுந்திருக்காது.

கியாம நாள் வரை ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்கு வருவார்கள் என்று கூறப்படிருந்தால் தான் இவர்களின் கேள்வியில் கடுகளவாவது நியாயமிருக்கும். ஆனால் இந்த வசனம் இவர்கள் கற்பனை செய்து கூறும் அர்த்தத்தைத் தரவில்லை. இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்ட உன்னிடம் என்ற சொல்லை இவர்கள் இருட்ட்டிப்பு செய்து விட்டு குழப்பப் பார்க்கின்றனர்.

இந்த வசனத்தில், "உம்மிடம்" வருவார்கள் என்று அல்லாஹ், இப்ராஹீம் நபியை நோக்கிச் சொல்கிறான்.

இப்ராஹீம் நபியை நோக்கி உம்மிடம் ஒட்டகத்தில் வருவார்கள் என்று சொன்னால் உலகம் அழியும் வரை அனைவரும் ஒட்டகத்தில் செல்ல வேண்டும் என் கருத்து எப்படி வரும்?

இவ்வாறு கிறுக்குத்தனங்கள் எழும் என்பதால் தான், "அது அந்தக் காலத்திற்கு மட்டும் உரியது, மற்ற மற்ற காலங்களில்  அவரவர் வசதிக்கேற்ப பயணம் செய்யலாம் என்பதை வலியுறுத்தும் பொருட்டு, "உம்மிடம்", வருவார்கள் என்று சேர்த்துச் சொல்கிறான் அல்லாஹ்.

இன்று நாம் ஒட்டகத்தில் செல்ல வேண்டும் என்றால் இன்றும் இப்ராஹீம் நபி மக்காவில் இருக்க வேண்டும். அப்போது தான் இவர்களது வாதம் செல்லுபடியாகும்.

இன்னும் சொல்வதாக இருந்தால், வருவார்கள், என்பதற்கும் வர வேண்டும் என்பதற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்தாலும் இவ்வாறான கேள்விகள் எழுந்திருக்காது.

ஒரு பெண் தனியாக ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்காக பயணம் செய்வாள் என்ற ஹதீஸில் வரக்கூடியதை வைத்து, எந்த பெண்ணும் ஹஜ் செல்வதாக இருந்தால் ஒட்டகத்தில் தான் பயணம் செய்ய வேண்டும் என்று யாரும் வாதம் செய்ய மாட்டோம். அல்லது, தனியாக தான் பயணம் செய்ய வேண்டும் என்றும் கூற மாட்டோம்.  தனியாக பயணம் செய்வதோ, ஒட்டகத்தில் பயணம் செய்வதோ அனுமதி தானே தவிர, கட்டாயமல்ல என்றே புரிந்து கொள்வோம்கிறோம். இதே போன்று எளிதாகப் புரிகிற ஒன்றை தங்கள் அபார(?) அறிவின் மூலம் எவ்வாறு குழப்புகிறார்கள் என்பதற்கு இந்த கேள்வியே சான்றாகும்!

எனவே இப்ராஹீம் நபியிடம் அல்லாஹ் சொன்னது ஒரு முன்ன்றைவிப்பு. யாருமே குடியிருக்காத வனாந்தரத்தில் காபாவைக் கட்டியதாக நினைத்து நீ கவலைப்படாதே! காபாவைக் கட்டிய பின் உலகின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் ஒட்டகங்களில் உம்மிடம் வருவார்கள். இதை நீயே காணப்போகிறாய் என்று அல்லாஹ் சொன்னான். உம்மிடம் என்ற சொல்லுக்குள் இந்த அர்த்தம் அடங்கியுள்ளதை உணரும் அளவுக்கு இவர்களின் அறிவு வேலை செய்யவில்லை.

வரட்டுக் கேள்வி 15

நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் தங்கள் மனைவிமார்களிடம் செல்வதில்லை எனக் கூறிவிட்டு அந்த மாதம் 29லேயே பிறயைப் பார்க்காமலேயே மாதம் முடிந்து விட்டது என்பதை ஜிப்ரீல் அலை அவர்கள் வந்து சொன்னதன் பேரில் முடித்துக் கொண்டார்களே பிறை பார்த்து மாதத்தை முடிவு செய்ய வேண்டும் என்று சொன்ன நபி(ஸல்)அவர்கள் தனது சொல்லுக்கே முரணாக நடந்தார்கள் என்று சொல்கிறீர்களா? ஜிப்ரீல் சொன்னதன் பேரில் அறிந்து கொண்டார்கள். இங்கு பிறை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பது உங்கள் பதில் என்றால் அதே போல் கோள்கள் சம்மந்தப்பட்ட நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் அல்லாஹ்வின் செயல்கள் என்ற அடிப்படையில் கணிணி கணக்கீட்டின் படி (கணிப்புப்படி அல்ல) மாதம் பிறப்பதை துல்லியமாக அறிந்த பின்பும் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பது சரியா?

நேயர் பதில் 15

15 . ஒரே கேள்வி என்றாலும் வேறு வேறு வார்த்தைகளில் கேட்பதன் மூலம் பல கேள்விகளைக் கேட்ட தோற்றத்தை ஏற்படுத்தலாம்  என்று எண்ணுவது இவர்களின் தகுதியைக் காட்டுகிறது.

நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம், மாதம் பிறந்து விட்டது என்பதைத் தெளிவாகச் சொன்ன பிறகும் கூட, புறக்கண்ணால் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்வது ஏன் என்றால், புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் என்பதால் தான்.!.

நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் என்று நீங்கள் சொல்வதில் இருந்தே என்ன புலனாகிறது என்றால், இன்றைய காலகட்டத்தில் தான் விஞ்ஞானம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்பது தான்.  நிரூபிக்கப்பட்டது தான் இன்றே தவிர, விஞ்ஞானம் என்றைக்கும் உள்ளது தான்!

என்றைக்கும் இருக்கும் விஞ்ஞானத்தை, அது நிரூபிக்கப்பட்டு விட்டது என்பதற்காக மட்டும் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதாக இருந்தால், நிரூபிக்கப்படாத காலத்திலும் விஞ்ஞானம் என்பதும், பிறை என்பதும், அதன் துல்லியமான ஓட்டம் என்பதும் இருந்து தான் வந்துள்ளது!

அந்தக் காலகட்டத்தில் எந்த வழியைச் செய்வது சரி? நிரூபிக்கப்பட்டு விட்டதால் இன்று நீங்கள் செய்வது தான் சரி என்றால், நிரூபிக்கப்படாத காலத்தில் செய்தவைகள் குறித்த உங்கள் நிலை என்ன?

சரி, நபி (ஸல்) காலத்தில், அந்தக் காலத்துக்கு ஏற்ப நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் இருந்து வந்ததே! பயணம் செய்து வந்து பிறை தகவலைச் சொல்வது அன்றைய காலத்தில் உள்ள நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் தானே!

ஒரு நபரை மற்றொரு இடத்திற்கு அனுப்பி பிறை தகவல் சேகரிப்பதும் அன்று இருந்த நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் தானே!

உலகில் ஒரு பகுதியில் பிறை பார்த்த தகவலை இன்னொரு பகுதிக்கு எடுத்துச் செல்லும் விஞ்ஞானத்தைப் பெற்றிருந்த நபி (ஸல்) அவர்கள், அதை முழுமையாக ஏன் பயன்படுத்தவில்லை என்ற நமது கேள்விக்கு இவர்கள் பதில் சொல்லாத வரை, இன்றைய நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்தைப் பற்றி பேசி எந்த தகுதியும் இல்லை.

இந்த இடத்தில் குர்ஆன் கூறும் விஞ்ஞானத்தை நாம் மறுக்கிறோமா என்ற கேள்வி எழலாம்.

குர் ஆன் ஒன்றைக் கூறினால் அதை எந்த முஸ்லிமும் மறுக்க்க் கூடாது. ஆனால், பிறை குறித்தும், விஞ்ஞானம் குறித்தும் குர்ஆன் கூறுவது என்ன என்பதைச் சிந்தித்தால் உண்மை விளங்கி விடும்.

இறைவனின் வல்லமையையும், ஆற்றலையும் பறை சாற்றுவதற்காக, சூரியன் குறித்தும் சந்திரன் குறித்தும், அதன் துல்லியமான அமைப்பைக் குறித்தும் அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான். அதன் மூலம் சூரியனும் சந்திரனும் காலம் காட்டுகின்றன என்றும் சொல்கிறான்.
இதை நாம் எந்த நிலையிலும் மறுக்கவில்லை. சூரியனும் சந்திரனும் காலம் காட்டுகின்றன என்பதை மறுக்கவே இயலாது.

ஆனால், விஷயம் என்னவென்றால், சந்திரன் காலம் காட்டும் என்பது விஞ்ஞானத்தின் படி முன்கூட்டியே கணித்து முடிவு செய்வதால் மட்டும் தான் காலம் காட்டுமா? புறக்கண்ணால் ஒவ்வொரு மாதமும் பார்த்து முடிவு செய்வதால் காலம் காட்டாதா?

காட்டும்..!

நாம் செய்து வரும் வழியை தொடர்ந்து செய்து வந்தாலும் பிறை நமக்கு காலம் காட்ட்த் தான் செய்யும்.

பிறையைப் பார்த்து அது இரண்டாம் பிறையாக இருக்குமோ, மூன்றாம் பிறையாக இருக்குமோ என்றெல்லாம் சந்தேகம் கொண்ட சஹாபாக்களிடம் இப்னு அப்பாஸ் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை எடுத்துச் சொல்கிறார்கள்.
"நீங்கள் எப்போது பார்க்கிறீர்களோ, அப்போது தான் உங்களுக்கு முதல் பிறை. ஏதேனும் காரணங்களால் முதல் பிறை (நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்தின் படி உள்ள முதல் பிறை) உங்களுக்குத் தென்படாமல் போனாலும், உங்கள் கண்களுக்குத் தென்படும்  நாள் வரை, முந்தைய மாதத்தை அல்லாஹ்வே நீட்டித் தந்து விட்டான்!""

அதாவது, நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்தின் படி பிறை வானில் இருந்தால் கூட, அது நம் கண்களுக்குத் தெரிய வேண்டும், அதனடிப்படையில் மாதத்தை நாம் முடிவு செய்ய வேண்டும் என்றே அல்லாஹ் விரும்புகிறான்.

அதற்குரிய முயற்சியில் நாம் இறங்க வேண்டும்.. ஒரு வேளை பிறை (மேகமூட்டம் காரணமாக) தெரியாமல்  இருந்தால், மாதம் பிறக்கவில்லை, முந்தைய மாதமே நீடிக்கிறது என்று  முடிவு செய்து கொள்ளலாம்.
ஆக, எந்த நிலையிலும் நம் புறக்கண்ணால் பார்க்காமல் மாதத்தை முடிவு செய்து கொள்வதை அல்லாஹ் விரும்பவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது.

25.03.2011. 13:43

மறுமை நாளில் நபியிடம் பரிந்துரை வேண

 மறுமை நாளில் நபியிடம் பரிந்துரை வேண்டுவது இணைவைப்பதாகாதா?

கியாமத் நாளில் மக்கள் தங்களுக்கு நேர்ந்துள்ள சிரமத்தை நபிமார்களிடம் முறையிடும் போது அல்லாஹ்விடம் தானே அவர்கள் முறையிடுமாறு கூறி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் முஹம்மத நபியிடம் பரிந்துரையைக் கேட்குமாறு கூறுவது இணைவைப்பதாக ஆகாதா என்று நண்பர் ஒருவர் கேட்கிறார். இது சரியா

சிராஜுத்தீன் முஹம்மத்

மறுமையில் மக்கள் நபிமார்களிடம் வந்து அல்லாஹ் விரைவாகத் தீர்ப்பளிப்பதற்கு அவனிடம் பரிந்துரை செய்யுமாறு கேட்பார்கள். அனைத்து நபிமார்களும் தங்களுக்கு இது இயலாது என்று கூற இறுதியாக முஹம்மது (ஸல்) அவர்களிடம் வருகை தருவார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதி கொடுத்த பின் அவர்கள் பரிந்துரை செய்வார்கள் என ஹதீஸ் கூறுகின்றது.

பரிந்துரை வேண்டி மக்கள் தங்களிடம் வந்த போது நபிமார்கள் அவர்களை அல்லாஹ்விடம் கேட்கச் சொல்லாமல் மற்ற நபியிடம் ஏன் அனுப்பினார்கள்? நபிமார்களுக்கு தவ்ஹீத் தெரியாதா? என்று உங்கள் நண்பர் கேள்வி கேட்டுள்ளார்.

தவ்ஹீதைப் பற்றிய சரியான தெளிவு இல்லாத காரணத்தாலே இந்தக் கேள்வி கேட்டுள்ளார்.

பரிந்துரை வேண்டுவது அனைத்தும் இணை கற்பிப்பாக ஆகாது. மாறாக சில பரிந்துரைகள் இணை வைப்பில் சேரும். சில பரிந்துரை வேண்டுதல் இணை வைப்பில் அடங்காது.

ஒருவரை இம்மையிலோ மறுமையிலோ நேருக்கு நேராக நாம் சந்திக்கும் போது அவர்களுக்கு எது இயலுமோ அது பற்றி பரிந்துரைக்குமாறு வேண்டுவது இணை கற்பித்தல் ஆகாது. ஏனெனில் இது போல் பரிந்துரை வேண்டும் போது அவருக்கு இறைத் தன்மை இருபதாக யாரும் கருதுவதில்லை. ஆனால் நாம் கண்ணால் பார்க்காத நம் முன்னே இல்லாத அல்லது செத்துப் போய்விட்ட ஒருவரிடம் நாம் பரிந்துரை வேண்டினால் அது தான் இணை வைப்பாகும். ஏனெனில் இறைவனை எப்படி நாம் பார்க்கா விட்டாலும் அவன் நம்மைப் பார்க்கிறானோ அப்படி அவர்களும் நம்மைப் பார்க்கிறார்கள் என்ற நம்பிக்கை இத்ற்குள் அடங்கி உள்ளது. இந்த வகையில் இது இணை வைப்பாக ஆகி விடுகின்றது.

நாம் கேட்பது போல் அதே நேரத்தில் இன்னும் பலர் அவர்களிடம் கேட்பார்கள். அதை எல்லாம் அவர்கள் செவியுறுகிறார்கள் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கி உள்ளது. எங்கிருந்து அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் அத்தனையையும் ஒரே நேரத்தில் இறைவன் எப்படி கேட்பானோ அது போல் இவர்களும் கேட்பார்கள் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கியுள்ளதால் இது இணை வைப்பாக ஆகி விடுகிறது.

ஆனால் இம்மையிலோ மறுமையிலோ நாம் நேருக்கு நேர் பார்த்து கேட்கும் போது அதில் இணைவைக்கும் எந்த அம்சமும் இல்லை.

நபிகள் நாயகம் ஸல் அவர்களை இந்த உலகில் நாம் பார்ப்பதில்லை. எனவே நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டால் அவர்கள் எங்கிருந்து அழைத்தாலும் செவியுறூவார்கள் என்ற கருத்து அதற்குள் உள்ளதால் அது கூடாது. ஆனால் நபித்தோழர்கள் நேரடியாக நபியை சந்திக்கும் போது பரிந்துரை செய்யுங்கள் என வேண்டி இருந்தால் இதில் எந்த இணை வைத்தலும் ஏற்படவில்லை.

அது போல் மறூமையில் நாம் நபியை சந்திக்கும் போது அவர்களை நேரடியாகக் கண்ணால் கண்டு அவர்களின் பரிந்துரை வேண்டினால் அவர்களுக்கு எந்த இறைத் தன்மையும் இருப்பதாகக் கருத இடமில்லை.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூட மிஃராஜில் மூஸா நபியை நேருக்கு நேர் பார்த்த போது அவரிடம் உதவி பெற்றது இந்த அடிப்படையில் தான்.

இணை கற்பிக்கும் தன்மை எதில் அடங்கியுள்ளதோ அது தான் இணை கற்பிப்பாகும்

17.03.2011. 06:10

பெண்களுக்கு பாதி சொத்துரிமை சரியா

பெண்களுக்கு பாதி சொத்துரிமை சரியா

ஆண்களை விட பெண்களுக்கு சொத்துரிமையில் பாதி என்பது சரியா? இதை விமர்சிப்பவர்களுக்கு நாம் எப்படி பதில் அளிப்பது

சைத் ரஹ்மான்

இது குறித்து இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா என்ற நூலில் விளக்கியுள்ளோம். அதையே பதிலாக தருகிறோம்

பாகப்பிரிவினை

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் முஸ்லிமல்லாதாரின் குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும்.

பலமுடையவர்களாகவும், பொருளைத் திரட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகம் பெற்றவர்களாகவும் உள்ள ஆண்களுக்குக் குறைந்த அளவும் பலவீனர்களாகவும், பொருளீட்டும் வாய்ப்புகளைக் குறைவாகப் பெற்றவர்களாகவும் உள்ள பெண்களுக்கு அதிக அளவும் வழங்குவதே நியாயமானதாகும். அதிகச் சொத்துரிமைக்குப் பெண்களுக்கே அதிகத் தகுதி இருக்கும் நிலையில் - இருவருக்கும் சம அளவில் வழங்குவதே நியாயமாக இராது என்ற நிலையில் - ஆணுக்குக் கிடைப்பதில் பாதியளவு தான் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டுமென்பது மாபெரும் அநீதியாகும். இப்படி அவர்களின் குற்றச்சாட்டு விரிவடைகின்றது.

இஸ்லாம் மார்க்கத்துக்கு முன் உலகில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததில்லை. பெற்றோர்களின் சொத்துக்களிலிருந்தோ ஏனைய உறவினர்களின் சொத்துக்களிலிருந்தோ பெண்கள் வாரிசுரிமை பெறுவதுமில்லை.

இஸ்லாம் மார்க்கம் தான் முதலில் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கியது. இஸ்லாம் மார்க்கம் வந்த பின்பு கூட பல நூற்றாண்டுகளாக முஸ்லிமல்லாத சமுதாயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்ததில்லை.

பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளது என்று சமீப காலத்தில் தான் நமது நாட்டில் சில பகுதிகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழக அரசு பெற்றோர்களின் சொத்துக்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அளவிலான உரிமை உண்டு என்று கருணாநிதி ஆட்சியின் போது சட்டமியற்றியது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கியது.

அறிவுப்பூர்வமான, நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் ஆண்களுக்கு இரு மடங்குகளும், பெண்களுக்கு ஒரு மடங்கும் எனப் பாகப்பிரிவினைச் சட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்களுக்கே கூடுதல் சுமை.

இஸ்லாமியச் சமூக அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது கூடுதலான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு ஆண் தனது மனைவிக்கு உணவும், உடையும், உறைவிடமும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறான். ஒரு பெண் தன் கணவனுக்காக இதைச் செய்ய வேண்டியதில்லை.

ஒரு ஆண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவையும் சுமக்கக் கடமைப்பட்டுள்ளான். குழந்தையின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் கூடுதலாகப் பங்கெடுத்துக் கொண்ட பெண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்குக் கூடப் பொறுப்பாளியாக மாட்டாள்.
தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் தூரத்து, நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் சிரம தசையிலிருக்கும் போது அவர்களையும் பராமரிக்கும் கடமை ஆண்களுக்கு இருக்கின்றது.

பெண்களைப் பொறுத்த வரை இது போன்ற கடமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது.

இஸ்லாமிய சமூக அமைப்பில் மட்டுமின்றி ஏனைய சமூகங்களிலும் கூட இந்த நிலையை நாம் காணலாம். இந்த அடிப்படையான விஷயத்தை மறந்து விடுபவர்கள் தாம் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தை குறை கூறக் கூடியவர்கள்.

யாருக்குத் தேவைகள் அதிக அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் கூடுதலாகவும் யாருக்குத் தேவைகள் குறைந்த அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் குறைவாகவும் வழங்குவது எந்த விதத்தில் அநீதியாகும்?

ஒரு ஆண், வாரிசுரிமை மூலம் பெண்ணை விட இரு மடங்குகள் பெற்றாலும் அவை போதாது என்ற அளவுக்கு அவன் மீது கடமைகள் உள்ளன. ஒரு பெண் ஒரு மடங்கைப் பெற்றாலும் அவளுக்கு அது தேவையில்லை என்ற அளவுக்குப் பொறுப்புகளிலிருந்து அவளுக்கு விலக்களிக்கப்படுகின்றது.

தனக்காகக் கூட இன்னொரு ஆண் செலவு செய்ய வேண்டும் என்ற அளவுக்கு அவளது சொத்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது.

எனவே ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்ற இஸ்லாமிய பாகப் பிரிவினைச் சட்டம் அறிவுக்குப் பொருத்தமான நியாயமான சட்டமாகும் என்பது தெளிவு!

பெண்ணின் சொத்து அன்னியருக்குச் சேரும்.

ஒவ்வொரு மனிதனும் தனது சொத்துக்கள் தன் மரணத்திற்குப் பிறகு தன் இரத்த சம்மந்தமுடையவர்களுக்குச் சேர வேண்டுமென விரும்புகிறான். தன் குடும்பத்திற்குள்ளேயே அந்தச் சொத்துக்கள் செலவிடப்பட வேண்டும் என்றும் விரும்புகிறான். இந்த விருப்பத்தில் நியாயமும் இருக்கின்றது. எல்லா மனிதரும் விரும்பக் கூடிய இந்த விருப்பம் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது நிறைவேற்றப் படுவதற்கு வாரிசுரிமைச் சட்டத்தில் இந்தப் பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

உதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும், மனைவியும் சில சகோதர சகோதரிகளும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தச் சகோதர சகோதரிகள் மிகவும் ஏழ்மையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

அவனது மரணத்திற்குப் பின்னர் அவனது மகளுக்குச் சேரும் ஒரு பங்கு அவனது இரத்த பந்தங்களுக்குச் செலவிடப்படாது. அது இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேரும். அந்த மகள் தனக்கே அதை வைத்துக் கொள்ள முடியும் என்றாலும் கணவனுக்காக அனைத்தையும் வழங்கி விடுதல்
' என்ற பலவீனம் இல்லாத பெண்கள் அரிது.

கணவனின் நலனுக்காகக் காதுகளில் கழுத்துகளில் கிடப்பதைக் கூட கழற்றிக் கொடுப்பவர்களைக் காண்கின்றோம். இந்த பலவீனத்தினால் அவளுக்குக் கிடைக்கின்ற வாரிசுச் சொத்துக்கள் தாமாக இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுகின்றன.
அந்த மகனுக்குக் கிடைத்த இரு மடங்குச் சொத்துக்கள் தந்தையின் இரத்த சம்மந்தமான உறவுகளுக்காகவும், அவனையும் அவளையும் பெற்ற தாய்க்காகவும் செலவிட ஏற்ற வகையில் இறந்தவனின் குடும்பத்தையே சுற்றி வருகின்றன. இறந்தவனின் இயல்பான விருப்பம் ஓரளவு நிறைவு செய்யப்பட்டு விடுகின்றது. இந்தக் காரணத்தைச் சிந்திக்கும் போது ஆண்களுக்குச் சிறிது அதிகமாக வழங்குவதில் எந்த அநியாயமும் இல்லை என்பதை உணரலாம்.

பெண் கைவிடப்பட்டால் பிறந்த வீடு தான் அவளைப் பாமரிக்க வேண்டும்.

பெண்கள் பலவீனர்களாக இருப்பதனால் அவர்களுக்குக் கூடுதலாக வழங்க வேண்டும் என்று முஸ்லிமல்லாதார் கூறுகின்றனர். பெண்கள் பலவீனர்களாக இருப்பதும் அவர்களின் பங்கைக் குறைத்ததற்கான காரணங்களில் ஒன்றாகும் என்று நாம் கூறுகிறோம்.

அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கணவனாலும், கணவனது குடும்பத்தினராலும் அவர்களுக்குக் கிடைக்கின்ற சொத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படலாம். எடுத்துக் கொள்ளப்படுவது கூட பிரச்சனையில்லை. எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு அவள் தள்ளப் பட்டும் விடலாம். இந்த நிலையில் அவளது வருங்காலப் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் தருவது? அவள் பிறந்தகம் தான் வந்தாக வேண்டும். அவளது உடன் பிறந்தவன் தான் அவளையும் பராமரிக்க வேண்டும்.

அவளை விடச் சிறிது கூடுதலாக அவன் பெற்றிருந்தால் தான் உடன் பிறந்தவள் மீது பச்சாதாபம் ஏற்பட முடியும். அவளைத் தொடர்ந்து பராமரிக்க முடியும்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பங்குகள் என்று பிரிக்கப் பட்டால் 'பாதிச் சொத்தைப் பெற்றுச் சென்றாளே? எனக்குக் கிடைத்தது போன்று தானே இவளுக்கும் கிடைத்தது? இவளை ஏன் நான் கவணிக்க வேண்டும்' என்ற எண்ணம் சகோதரர்களுக்கு ஏற்பட்டு அவள் புறக்கணிக்கப்படுவாள்.

ஆண் இரண்டு பங்கைப் பெற்றிருந்தால் நம் சகோதரிக்குக் கிடைத்தது போல் இரு மடங்கை நாம் பெற்றுள்ளோம். எனவே சகோதரியையும் இந்த இக்கட்டான நேரத்தில் நாம் தான் கவணிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது பெண்களின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பாக அமையும்.

சொத்தைப் பெருக்குவதில் ஆண்களின் பங்கு அதிகம்.

பெரும்பாலும் சொத்துக்களைப் பெருக்குவதில் ஆண்களே உறுதுணையாக உள்ளனர். ஒரு தந்தைக்கு ஒரு மகனும் மகளும் இருந்தால் அந்தத் தந்தைக்குச் சொந்தமான நிறுவனங்களில் தந்தைக்கு உறுதுணையாக ஆண்களே இருக்கின்றனர். சொத்து பெருகுவதில் ஆண்களுக்கே அதிக உழைப்பு உண்டு என்பதும் பாரபட்சம் காட்டப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.

பெரும்பாலும் பெண்கள் தந்தையின் சொத்து வளர்ச்சியில் ஈடுபாடு காட்டுவதில்லை. யார் சொத்து வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறார்களோ அவர்களுக்குக் கூடுதலாக பாகங்கள் வழங்குவதை அநியாயம் என்று எப்படிக் கூற முடியும்?

தந்தையிடமிருந்து அதிகம் பெறுவது பெண்களே.

உணவு, உடை போன்ற செலவினங்கள் ஆண்கள் பெண்கள் இரு பாலருக்கும் சம அளவில் செய்யப்பட்டாலும் இதர வகையில் பெண்களுக்கென்று ஆண்களை விடக் கூடுதலாக செலவு செய்யப்படுகின்றது.

ஒரு தந்தைக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தால் அந்த மகளுக்காக அந்தத் தந்தை ஆபரணங்கள், நகைகள் என்று செய்து போட்டு அழகு பார்க்கிறார். இவை வெறும் அழகு சாதனங்கள் மட்டுமல்ல. பெரும் சொத்துக்களாகவும் உள்ளன. வசதி படைத்தவர்கள் தங்கள் பெண்களுக்காக இலட்சக் கணக்கிலும் வசதியே இல்லாதவர்கள் பல ஆயிரங்களுக்கும் நகைகள் செய்து போடுகின்றனர். இது அந்தப் பெண்களின் சொத்தாகவே ஆகி விடுகின்றது. இது தவிர திருமணத்தின் போது மகளுக்காகச் சீர் என்று பல சாதனங்களையும் தந்தை வழங்குகின்றார்.

தந்தையின் சொத்தில் ஆண்கள் அனுபவிப்பதை விடக் கூடுதலாக பெண்கள் அனுபவிக்கிறார்கள். தந்தையின் மரணத்திற்குப் பிறகு எஞ்சியுள்ள சொத்துக்களில் தான் இரண்டுக்கு ஒன்று' என்ற விகிதாச்சாரம் பேணப்படுகின்றதேயன்றி தந்தை உயிருடனிருக்கும் போது பெண்களே அதிக அளவில் பெற்றுக் கொள்கிறார்கள்.

இது போன்ற நியாயமான காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளதை நாம் உணரலாம்.
2.8.2001
தினமணி நாளேட்டில் (சென்னை பதிப்பு) 'சொத்தில் சமபங்கு! கடமையில்?' என்ற கட்டுரை வெளியானது. சுதந்திர தயாகான் அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சத்தை சிந்தித்தால் இஸ்லாமியச் சொத்துரிமைச் சட்டம் எவ்வளவு அறிவுப்பூர்வமானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

கட்டுரையின் முக்கியப் பகுதி இதோ...
...'
எனவே, சொத்தில் சம உரிமை என்பது அதிசயிக்கத்தக்க ஒரு விஷயம் அல்ல. எனினும் சொத்தில் சம உரிமை கொடுக்கப்படும் போது, கடமையிலும் பெண் குழந்தைகள் பங்கு கொள்கிறார்களா என்பது ஆராய வேண்டிய ஒன்று. ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்து, நல்ல வரண் பார்த்து, ஒரு லட்சத்திற்கு நகை, ஒரு லட்சம் திருமணச் செலவு எனப் பெற்றோர் மணம் முடித்து வைக்கிறார்கள். பேறு காலம் பார்த்து, விருந்துக்கு அழைத்து, விடுமுறைக்கு அழைத்து மகிழ்விக்கின்றனர். பின், ஆண் பிள்ளைகளுக்கு கொடுப்பது போல், பணம், வீடுவாசல் என சொத்திலும் சம பங்கு அளிக்கின்றனர்.அவ்வாறு செய்யும் பெற்றோர், வயதான காலங்களில், முடியாத காலங்களில், பெண் பிள்ளைகளுடன் சென்று தங்கி, அவர்கள் கண்காணிப்பில் இருக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.
கிடைத்த வரை பெற்றுக் கொண்டு, கொடுத்தவர்களுக்கு முடியாத காலங்களில் அவர்களைக் கவனிக்க வேண்டிய கடமை மகனுக்கு மட்டுமே என்ற நடைமுறை மாற வேண்டும்.
தன் மனைவி வீட்டில் சகலமும் அனுபவிக்கும் மருமகன், தன் மாமனார், மாமியாரை, அவர்களின் வயதான காலங்களில் தம்முடன் வைத்துப் பராமரிக்க முன் வரவேண்டும். 'உரிமை மகளுக்கு கடமை மகனுக்கு' என்ற நிலை வரும் போது மகனும் மருமகளும் சற்று சோர்வடைவதில் வியப்பில்லை.
ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளும் தங்கள் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும். சொத்தில் சம உரிமை பெறுவதால், தம் சகோதரியும் பெற்றோரைக் கவனித்தால் என்ன? என்று சகோதரர்கள் நினைப்பது இயற்கை. சகோதரிகளுக்கும், பெற்றோருக்கும் கடமை செய்ய மாத்திரமே ஆண் மகன் என்ற நிலை மாற வேண்டும். உரிமையில் சமம் எனில், கடமையிலும் சமபங்கு வகிக்கப் பெண் குழந்தைகள் நிர்பந்திக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.
முதியோர் இல்லங்கள் பெருகுவது ஒருவேளை, பெண் குழந்தைகளுக்கு உரிமை (மட்டும்) சமபங்கு கொடுக்கப் படுவதால் ஏற்பட்ட கால மாற்றத்தின் விளைவோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.'
இவ்வாறு அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாம் கூறுகின்ற வாரிசுரிமைச் சட்டம் அமுல் படுத்தப்பட்டால் இந்த தீய விளைவுகளை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க இயலும்.

'பெண்களுக்கு ஒன்று ஆண்களுக்கு இரண்டு' என்ற வகையில் பங்கீடு செய்வது தான் அறிவுப்பூர்வமானது. பெண்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்தது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் காட்டப்படும் இந்த வித்தியாசம் முற்றிலும் நியாயமானதே! அறிவுக்குப் பொருத்தமானதே!

12.03.2011. 02:32

இறை மறுப்பாளருடன் விவாதம் செய்வதில்

இறை மறுப்பாளருடன் விவாதம் செய்வதில் பயன் என்ன 

 

ஹாஜா நஜ்முத்தீன்

பதில் :

சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு இறைவன் பல வழிமுறைகளை நமக்குக் காட்டித் தந்துள்ளான்.  அதில் ஒன்று தான் அழகிய முறையில் விவாதம் செய்வதாகும். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன் 16:125)

மேற்கண்ட வசனம் சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு விவாதக் களம் காண்பதும் ஒரு வழிமுறை என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

இங்கு அழகிய முறையில் விவாதம் செய்வீராக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டுகின்றான்.

அல்லாஹ் கூறும் அழகிய விவாதம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கும் போது அசத்தியவாதிகளிடமிருந்து இரண்டு விதமான வெற்றி கிடைக்கும். "ஒன்று அவர்கள் வந்து தோற்று ஓடி அசடு வழிவது! இன்னொன்று வாதத்திற்கு வராமலேயே வழுவி நழுவி ஓடுவது! இந்த இரு கட்டங்களிலுமே சத்தியமே வெற்றி பெறுகின்றது.

பல நபிமார்கள் விவாத முறையில் தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்து அசத்தியவாதிகளை வாயடைக்கச் செய்துள்ளனர். இதற்குச் சிறந்த உதாரணமாக நம்முடைய தந்தை நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நாம் கூறலாம். சிலைகளை வழிபடக்கூடிய மக்களிடம் அவர்களுடைய பிரச்சாரம் முழுவதுமே விவாதப் போங்கில் தான் அமைந்திருந்தது.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? "என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, "நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்

திருக்குர்ஆன்2:258)

இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார். "என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்?'' என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக

திருக்குர்ஆன்(19:41,42)

"இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?'' என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், "இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே விழிப்படைந்து "நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்'' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, "இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!'' என்றனர். "அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவற்றையும் உங்களுக்குத் தீங்கும் தராதவற்றையும் வணங்குகின்றீர்களா?'' என்று கேட்டார். "அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங் குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?'' என்று கூறினார்.

திருக்குர்ஆன் (21:62-67)

மேற்கண்ட வசனங்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் நாட்டை ஆளும் அரசனிடமும், தன் தந்தையிடமும், சமுதாய மக்களிடமும் விவாதத்தின் மூலமும், விவாதப் போங்கிலும் சத்தியத்தை எடுத்துரைத்ததைப் பறைசாற்றுகின்றன.

நபி நூஹ் (அலை) அவர்கள் தம்முடைய சமுதாய மக்களிடம் அதிகமான அளவில் விவாதம் செய்துள்ளார்கள். நபி நூஹ் (அலை) அவர்களின் ஆணித்தரமான வாதங்களுக்கு அவர்களால் பதிலளிக்க இயலாத போது,

"நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!'' என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன்(11:32)

திருக்குர்ஆனில் பல வசனங்கள் இறைமறுப்பாளர்களுடன் விவாதம் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த இறைமறுப்பாளர்கள் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் அல்லாஹ் அறிவிப்பூர்வமாகவும் மறுப்புத் தெரிவிக்க முடியாத வகையில் ஆணித்தரமாகவும்  பதிலளிக்கின்றான்.

இந்த மார்க்கத்தில் விவாதத்திற்கு வேலையில்லை என்றால் எதிரிகள் எழுப்பிய விமர்சனங்களுக்கு இவ்வாறு இறைவன் மறுப்புத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இறைவன் அவர்கள் எழுப்பிய ஒவ்வொரு கேள்விகளுக்கும் சரியான விளக்கத்தை அளிக்கின்றான். எனவே இஸ்லாம் குருட்டு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.

இறை மறுப்பாளர்களுடன் விவாதம் செய்வது உறுதியான நம்பிக்கைக்கு எதிரான காரியமல்ல. மாறாக உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடாகும். இஸ்லாத்தை உறுதியாக நம்பக்கூடியவர்களே அதற்காக விவாதம் செய்ய முன்வருவார்கள்.

இந்த விவாதங்களால் நம்முடன் விவாதம் செய்யக்கூடிய இறை மறுப்பாளர்கள் நேர்வழி பெறாவிட்டாலும் விவாதத்தைப் பார்க்கின்ற பலர் நேர்வழி அடையும் நிலை ஏற்படுகின்றது. இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு இந்த விவாதங்களின் மூலம் கொள்கை உறுதியும் கொள்கைத் தெளிவும் முன்பை விட அதிகமாகின்றது.

எனவே தான் நாம் இறை மறுப்பாளர்களுடன் விவாதம் நடத்தினோம். இறைவன் அருளால் அந்த விவாதத்தில் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதும் குர்ஆன் இறைவேதம் என்பதும் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகும் விதத்தில் அல்லாஹ் நமக்கு வெற்றியளித்தான். புகழனைத்தும் அல்லாஹ்விற்கே.

08.03.2011. 10:19

இஸ்லாம் மட்டும் தான் முழுமையான மார்

 இஸ்லாம் மட்டும் தான் முழுமையான மார்க்கமா

இஸ்லாத்தைப் போன்று மற்ற மதங்களும் முழுமை பெற்றவை தானே?

பதில் ;

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். அது போல் ஒவ்வொரு மதத்தவரும் தங்கள் மதம் முழுமையானது என்று தான் கூறுவார்கள். நம்புவார்கள்.

ஆனால் முழுமையான மார்க்கம் என்று நாம் நம்பினால் மட்டும் அது முழுமையான மார்க்கமாக ஆகாது. மாறாக அது முழுமையானது என்பதற்கான ஆதாரங்களையும் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும்.

ஒரு மார்க்கம் ஒரு காலத்தில் பொருந்தி பின்னர் பொருந்தாமல் போனால் அது முழுமை பெற்ற மார்க்கம் எனக் கூற முடியாது. இஸ்லாத்தைப் பொருத்த வரை அதன் கொள்கையோ கோட்பாடோ சட்டதிட்டங்களோ இன்றைக்கோ அல்லது இதற்கு முன்னரோ இதற்குப் பின்னரோ பொருந்தாமல் உள்ளது என்று ஆதாரத்துடன் கூற முடியாது. ஆனால் மற்ற மதங்களின் சட்ட திட்டங்களில் ஏராளமானவை அந்த மதத்தின் உறுப்பினர்களால் மாற்றப்படுகின்றனர். காலத்திற்கு ஒவ்வாதவை எனக் கூறி தூக்கி வீசப்படுகின்றன. எனவே மற்ற மதங்களை முழுமையானவை எனக் கூற முடியாது.

ஒரு மதம் முழுமையான மதம் என்றால் அந்த மதத்தைப் பின்பற்றுவோர் சந்திக்கும் எல்லா பிரச்சனைகள் பற்றியும் அந்த மதத்தில் தீர்வு இருக்க வேண்டும். எதைப் பற்றியும் அந்த மதம் ஒரு கருத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் வெறும் கடவுள் வழிபாட்டை மட்டும் பேசி விட்டு வியாபாரம் கொடுக்கல் வாங்கல் அரசியல் நவீன கண்டுபிடிப்புகள் போன்றவை குறித்து ஒரு மதம் மவுனம் சாதித்தால் அதை முழுமையான மார்க்கம் எனக் கூற முடியாது.

இஸ்லாத்தில் நோ கமாண்ட்ஸ் என்று சொல்லும் நிலை ஏற்படவே செய்யாது, எதைப் பற்றி கேட்டாலும் அது கூடும் என்றோ கூடாது என்றோ இஸ்லாத்துக்கு கருத்து இருக்கும். மற்ற மதங்களில் இதை காண முடியாது.

மேலும் முழுமை பெற்ற மார்க்கம் என்றால் மனித குலத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் அதில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். வெறுமனே ஆன்மிக நம்பிக்கைகள் மட்டும் உள்ள மதம் முழுமை பெற்ற மதமாக ஆக முடியாது. மாறாக மனித குலத்துக்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களும் அதில் கூறப்பட்டிருக்க வேண்டும்.

சொர்க்கம் நரகம் போன்ற நம்பிக்கை தொடர்பான விஷயங்களை இஸ்லாம் பேசுவதுடன் இந்த உலகத்தில் ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் சட்டத்திட்டங்களையும் கற்றுத் தருகின்றது.

உதாரணமாக ஒரு மனிதன் எப்படி வியாபாரம் செய்ய வேண்டும்? எவ்வாறு குடும்பம் நடத்த வேண்டும்? குடும்பத்தில் கணவன் ஆற்ற வேண்டிய கடமை. மனைவி ஆற்ற வேண்டிய கடமை. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஆற்ற வேண்டிய கடமை. பிள்ளைகள் பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை. கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது? அண்டைவீட்டாருடன் நடந்து கொள்ள வேண்டிய முறை? சமுதாயத்துக்குச் செய்ய வேண்டிய கடமை? இப்படி ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் வாழ்வில் சந்தக்கின்ற ஒவ்வொரு பிரச்சனைகளையும் எவ்வாறு அறிவார்ந்த முறையில் எதிர்கொள்வது? என்பதை இஸ்லாம் மனித குலத்துக்கு வழிகாட்டுகிறது.

இஸ்லாம் உலகுக்குக் கற்றுக் கொடுக்கும் இது போன்ற அற்புதமான வழிகாட்டல்கள் வாழ்க்கை நெறி முறைகள் மற்ற மதங்களில் இல்லை. இந்த வகையில் சிந்தித்துப் பார்த்தாலும் இஸ்லாம் மட்டுமே முழுமை பெற்ற மார்க்கம் என்று கூற முடியும்.

முழுமையான மார்க்கம் என்றால் அதில் யாரும் எதனையும் சேர்க்கவோ நீக்கவோ முடியாத நிலையில் இருக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் ஒரு மதத்தில் சேர்க்க முடியும் என்றால் அது எப்படி முழுமையாக இருக்க முடியும்? முழுமையாக இல்லாத காரணத்தால் தானே அதில் மற்றவர்கள் தமது கருத்தைச் சேர்க்க முடிகிறது!

எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

 (அல்குர்ஆன் 5:3)

26.02.2011. 04:49

பிற இயக்க பிரசுரங்களைப் பரப்பலாமா?

பிற இயக்க பிரசுரங்களைப் பரப்பலாமா?

இன்று மார்க்க பிரச்சாரங்களை , நோட்டீஸ் பிரசுரம் மூலம் நமது ஜமாஅத் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர் , அந்த வகையில் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத அமைப்புகள் நோட்டீஸ் பிரசுரம் வெளியிட்டால் நாமும் அதை விநியோகம் செய்யலாமா ?, உதாரணமாக தொழுகையின் அவசியம் , மறுமை இது போன்ற பொதுவான தலைப்புகளில் நோட்டீஸ் பிரசுரம் மற்றவர்கள் வெளியிட்டால் மற்றும் குர்ஆன் , ஹதீஸுக்கு உட்பட்டு பல்வேறு தலைப்புகளில் வேறு பலரும் வெளியிட்டால் நாமும் அதை விநியோகம் செய்யலாமா , கொள்கை அடிப்படையில் சிக்கல் என்று மறுத்தால் குர்ஆன் , ஹதீஸ் பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் , ஜமாத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியா? சிலர் ஜமாஅத் வெறியை உங்களுக்குள் வளர்க்காதீர்கள் குர்ஆன் , ஹதீஸுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று நம்மை விமர்சிக்கிறார்களே , எனவே குர்ஆன், ஹதீஸுக்கு உட்பட்டு வேறு யார் விநியோகித்தாலும் நாமும் அதை விநியோகம் செய்யலாமா ? விளக்கவும்

ரபிக் , பவானி

மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான வாதம் போல் தோன்றினாலும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் சேர்த்து பார்த்துத் தான் நாம் முடிவு செய்ய வேண்டும்.

தவறான கொள்கை உடையவர்கள் தொழுகையின் சிறப்பு என்ற தலைப்பில் சரியான பிரசுரம் வெளியிடுகிறார்கள் என்றால் அதை நாம் பரப்பும் போது மக்களிடம் இரண்டு செய்திகள் சென்றடைகின்றன. தொழுகையின் சிறப்பு பற்றிய செய்தியும் அதை வெளியிட்ட இயக்கம் நல்ல இயக்கம் இயக்கம் என்ற செய்தியும் சேர்ந்தே மக்களிடம் சென்றடையும். அதுவும் நாமே அதை பரப்பும் போது தவ்ஹீத் சகோதரர்களில் துவக்க நிலையில் உள்ளவர்கள் அந்த இயக்கம் நல்ல இயக்கம் என்று கருதுவார்கள். இதன் பின்னர் அந்த இயக்கம் வெளியிடும் தவறான கொள்கைகளூம் சரியான கொள்கைகளாக ஆரம்ப நிலையில் உள்ள சகோதரர்களுக்குத் தோற்றம் அளிக்கும். இதையும் சேர்த்தே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள சில உதாரணங்களைக் காணலாம்.

காதியானிகள் என்ற காபிர் கூட்டம் தொழுகை குறித்து சரியான தகவல் அடங்கிய பிரசுரம் வெளியிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதில் உள்ள விஷயத்தை மட்டும் கவனத்தில் கொண்டு அதை நீங்கள் பரப்பினால் காதியானிகள் நல்ல பணி செய்யக் கூடியவர்கள் என்ற எண்ணம் எற்படும்.  இப்படியே சில பிரசுரங்களை வெளியிட்டு மக்கள் மனதில் இடம் பிடித்த பின்னர் மிர்சா குலாம் என்பவன் நபி என்று கூறும் பிரசுரத்தையும் நம் மக்கள் மத்தியில் பரப்புவார்கள். இதனால் விபரமில்லாத மக்கள் வழிகேட்டுக்குச் செல்ல நேரிடும்.

அது போல் கள்ளக் கிறித்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாராட்டும் வகையில் பிரசுரம் வெளியிட்டால் அதில் உள்ளது என்ன என்பதை மட்டும் பார்க்கக் கூடாது. இதன் பின்னணியில் உள்ளதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இப்படி சில பிரசுரங்களைப் பரப்பி அப்பாவி முஸ்லிம்கள் உள்ளத்தில் இடம் பிடித்த பின் இயேசு இறைமகன் என்ற கருத்தையும் அவர்கள் பரப்பும் போது அவர்கள் மீது இருந்த நல்ல எண்ணம் காரண்மாக அப்பாவிகள் வழி கெட்டுப் போக நேரிடும்.

அது போல் கள்ள பைஅத் கூட்டம் வரதட்சனை பற்றி வெளியிடும் பிரசுரத்தைப் பரப்பினால் அதனால் அந்த இயக்கம் மார்க்கத்தைச் சரியாகச் சொல்லக் கூடிய இயக்கம் என்ற கருத்தை நாமே ஏற்படுத்தி விடுகிறோம். இதன் பின்னர் அந்த இயக்கம் விரல் அசைத்தல் கைகளை நெஞ்சில் கட்டுதல் ஆகியன சின்ன விஷயங்கள் என்று பிரசுரம் வெள்யிடுவார்கள். நாம் ஏற்படுத்திய அந்த நல்ல எண்ணம் காரண்மாக அது சரியானது என்று சில அப்பாவிகள் நினைக்கக் கூடும்.

மார்க்கத்தைச் சொல்லக் கூடிய இயக்கம் என்ற தோற்றம் தரும் எந்த இயக்கத்தின் பிரசுரமாக இருந்தாலும் அந்த இயக்கம் குர் ஆன் ஹதீஸை மட்டும் தனது கொள்கையாகக் கொண்டுள்ளதா என்று கவனித்துதான் பரப்ப வேண்டும். இல்லாவிட்டால் தீய கொள்கை உடையவர்களை நல்ல கொள்கை உடையவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய குற்றம் நம்மைச் சேரும்.

அதே சமயம மார்க்கம் சம்மந்தப்படாத விஷயத்தை மார்க்கம் குறித்து எந்தக் கருத்தும் சொல்லாத ஒரு இயக்கம் வெளியிட்டால் அது சரியானதாகவும் இருந்தால் அதைப் பரப்பலாம். உதாரணமாக பெட்ரோல் விலை உயர்வைக் குறித்து இடது சாரிகள் ஒரு பிரசுரம் வெளியிட்டால் அதை நாம் பரப்பலாம். காரணம் அவர்கள் இஸ்லாத்தில் இல்லாததை இஸ்லாம் எனச் சித்தரிக்கும் பிரசுரம் வெளியிட மாட்டார்கள்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஒரு இயக்கத்துக்கு நாம் ஏற்படுத்தும் நற்பெய்ர காரண்மாக அவர்கள் மூலம் எதிர்காலத்தில் இஸ்லாம் குறித்து தவறான கருத்து பரவும் என்றால் அது போன்ற பிரசுரத்தை நாம் பரப்பாமல் அதை நாமே தயாரித்து நமது பெயரிலோ எந்தப் பெயரும் இல்லாமலோ பரப்பலாம்.

வரதட்சனை குறித்து பிரசுரம் வெளியிடுவதாக இருதால் அதை நாமே வெளியிடலாமே? அதற்கு என்ன தடை உள்ளது?

பிற இயக்கத்தினரை நமது மேடையில் நாம் ஏற்றுவதில்லை என்பதை கொள்கையாக வைத்துளோம். இது குறித்து நாம் எழுதியுள்ளதையும் பார்க்கவும்

http://onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/pira_iyaka_medaikalil/

20.02.2011. 22:21

எதுவரை இறைவனை வணங்க வேண்டும்?

எதுவரை இறைவனை வணங்க வேண்டும்?

 

சூபியாக்கள் என்ற பெயரில் மக்களை வழிகெடுக்கும் கூட்டம் தங்கள் வழிகேட்டுக்கான ஆதாரம் ஆதாரம் குர் ஆனிலும் நபிவழியிலும் உள்ளதாகக் கூறுவதை ஒரு தந்திரமாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் வழிகேட்டுக்கு பயன்படுத்தும் வசனங்களில் 15:99 வசனமும் ஒன்றாகும். இது குறித்து ஒற்றுமை இதழில் பீஜே எழுதிய கட்டுரையை சகோதரர் இலங்கை எழுத்தாளர் மவ்லவி ஹபீல் அவர்கள் கம்போஸ் செய்து அனுப்பியுள்ளார். அதை நன்றியுடன் வெளியிடுகிறோம்

உமக்கு யகீன்  வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக.” (15:99)

உலகில் உள்ள ஆன்மீக நெறிகளில் இஸ்லாம் தலைசிறந்த ஆன்மீக நெறியாகத் திகழ்கிறது. ஆன்மீகத்தின் பெயரால் சுரண்டல்  நடப்பதை அடியோடு தடை செய்திருக்கும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றெல்லாம் நாம் பெருமிதம் கொள்கிறோம். முஸ்லிமல்லாத அன்பர்களும் கூட இதை ஒப்புக் கொள்கின்றனர்.

ஆயினும், முஸ்லிம் சமுதாயத்திலும் போலி ஆன்மீகவாதிகள் உருவானர்கள். அவர்களின் போலி ஆன்மீகக் கொள்கைக்கு குர்ஆனிலும் நபிவழியிலும் ஆதாரம் ஏதும் இல்லை என்ற போதிலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைத் தங்கள் விருப்பம் போல் வளைத்து, அதை ஆதாரமாகக் காட்டினார்கள். மார்க்கம் அறியாத மக்களை ஏமாற்றலானார்கள்.

போலி ஆன்மீகவாதிகள் தமக்குச் சாதகமாக வளைத்துக் காட்டும் வசனங்களில் மேலே கூறப்பட்ட வசனமும் ஒன்றாகும்.

ஆன்மீகக் குருமார்கள் என்று தம்மைத் தாமே கூறிக் கொள்ளும் போலிகள் இஸ்லாத்தின் ஏராளமான கட்டளைகளைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். தொழுகை, நோன்பு போன்ற கடமைகளைக் கூட நிறைவேற்ற மாட்டார்கள்.

ஆடல், பாடல் கேளிக்கைகளில் கூட மூழ்குவார்கள்! அந்நியப் பெண்ணிடம் தனித்திருப்பார்கள்!

ஏன் இப்படி நடக்கிறீர்கள் என்று கேட்டால் சட்டதிட்டங்கள் எல்லாம் சாதாரணமானவர்களுக்குத் தான். நாங்கள் ஆன்மீகத்தில் கரை கண்டு விட்டதால் எங்களுக்கு எந்தச் சட்டதிட்டங்களும் இல்லை என்று கூறுவார்கள்.

உறுதி வரும் வரை இறைவனை வணங்க வேண்டும் என்று தான் அல்லாஹ் கூறுகிறான். உறுதி வராத சாதாரண மக்கள் மீது தான் வணக்க வழிபாடுகள் கடமையாகும். எங்களுக்கு உறுதி வந்து விட்டதால் நாங்கள் இறைவனை வணங்க வேண்டியதில்லை எனக் கூறுவார்கள். மேற்கண்ட வசனத்தை இதற்கு ஆதாரமாகக் காட்டுவார்கள்.

உறுதி வரும் வரை இறைவனை வணங்கு என்று குர்ஆனில் கூறப்பட்டடுள்ளதால் போலிகளின் வாதத்தை உண்மையென்று நம்பிப் பலரும் ஏமாந்து போகின்றனர்.

எனவே இந்த வசனம் கூறுவது என்ன? என்பதை விரிவாகவே நாம் ஆராய்வோம்.

உறுதிஎன்று தமிழாக்கம் செய்யப்பட்ட இடத்தில் யகீன்என்ற மூலச்சொல் இடம்பெற்றுள்ளது. இச்சொல்லுக்கு உறுதி, உறுதியான நிகழ்வு என்று பொருள் உண்டு.

உறுதி, உறுதியான நிகழ்வு ஆகிய இரண்டு அர்த்தங்கள் இச்சொல்லுக்கு இருக்கிறது. இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

உறுதி என்றால் மனிதனின் சிந்தனையில் ஏற்படும் நம்பிக்கை.

உறுதியான நிகழ்வு என்றால் சந்தேகத்திற்கிடமில்லாத காரியத்தைக் குறிக்கும்.

உறுதியான காரியத்தைக் குறிப்ப்பதற்கும் உறுதியான நம்பிக்கையக் குறிப்பதற்கும் யகீன் என்ற சொல் அரபு மொழியில் பயன்படுத்தப்படும்.

ஒரு கல்லை எடுத்து மேலே நாம் வீசுகிறோம். வீசிய கல் கீழே விழுவது உறுதியாக நடந்து விடும் என்பதால் இதையும் யகீன் (உறுதியான நிகழ்வு) என்று எனலாம்.

கல்லை மேலே வீசாமலே ஒரு கல்லை மேலே வீசினால் கீழே விழும் என்று நம்புகிறோம். இதையும் யகீன் (உறுதியான நம்பிக்கை) எனக் கூறலாம்.

இந்த வசனத்தில் உள்ள யகீன் என்பதற்கு எவ்வாறு பொருள் கொள்வது?

உனது உள்ளத்தில் - சிந்தனையில் - உறுதி வரும் வரை என்று பொருள் கொள்வதா?

அல்லது உறுதியான ஒரு காரியம் அதாவது மரணம் உம்மிடம் வரும் வரை என்று பொருள் கொள்வதா? என்பதை முடிவு செய்து விட்டால் தெளிவு கிடைத்துவிடும்.

யகீன் (உறுதியான காரியம்) என்று பொதுவாகப் பயன்படுத்தப்பட்டால் உறுதியான காரியங்கள் பல இருந்தாலும் மரணத்தையே அரபுகள் கருத்தில் கொள்வார்கள்.

ஏனெனில், உலகிலேயே மிகவும் உறுதியான ஒரே விசயம் மரணம் மட்டுமே.

ஒவ்வொரு மனிதனும் மரணிப்பான் என்பதை நம்பாத ஒரே ஒரு மனிதன் கூட உலகில் கிடையாது. அனைத்து மக்களும் உறுதியான காரியமாக நம்புவது மரணத்தை மட்டுமே. எனவே உறுதி என்ற பொருளைத் தவிர்த்து உறுதியான காரியம் என்று பொருள் கொண்டல் அதன் கருத்து மரணம் தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த வசனத்தில் உமக்கு உறுதி(யான நம்பிக்கை) வரும் வரை என்று பொருள் கொள்ள முடியாது.

உமக்கு உறுதி(யான நிகழ்வு-மரணம்) வரும் வரை என்று தான் இங்கே பொருள் கொள்ளவேண்டும்.

இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

முதலாவது காரணம் என்னவென்றால் யகீன் என்ற சொல்லுடன் வருகைஎன்ற சொல்லோ அல்லது வருகையிலிருந்து பிறந்த சொல்லோ இணையுமானால் அப்போது உறுதியான நம்பிக்கை என்று பொருள் கொள்ளக் கூடாது. உறுதியான நிகழ்வு - உறுதியான காரியம் - (அதாவது மரணம்) என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

யகீன் வந்தது

யகீன் வரும்

யகீன் வருமானால்

யகீனின் வருகை

என்றெல்லாம் யகீன் என்ற சொல்லுடன் வருகை அல்லது அதிலிருந்து பிறந்த சொற்கள் சேர்ந்தால் மரணம் என்றே பொருள்.

நாம் மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் உமக்கு யகீன் வரும் வரை என்று கூறப்பட்டுள்ளது. வருகையுடன் சேர்த்து கூறப்பட்டுள்ளதால் உறுதியான நம்பிக்கை என்று பொருள் கொள்ளவே முடியாது.

உள்ளத்தில் உறுதியான நம்பிக்கை வருவது வரை என்று கூற வேண்டுமானால் யகீன் என்ற சொல்லை வினைச் சொல்லாக மாற்றிக் கூறவேண்டும்.

அதாவது ஹத்தா தஸ்தைகின எனக் கூறினால் உறுதியான நம்பிக்கை உமக்கு வரும் வரை எனப் பொருள். யகீன் என்பது தஸ்தைகின என்று வினைச் சொல்லாக மாற்றப்பட்டுள்ளது.

யகீன் உம்மிடம் வரும் வரை என்று (ஹத்தா யஃதியகல் யகீன்) கூறப்பட்டால் உறுதியான நம்பிக்கை உமக்கு வரும் வரை என்ற அர்த்தம் செய்யவே முடியாது. உறுதியாக நிகழ வேண்டிய ஒரு காரியம் உம்மை வந்து அடையும் வரை என்று தான் பொருள் கொள்ள முடியும்.

அரை குறையான மொழியறிவை வைத்துக் கொண்டு தான் இவ்வசனத்திற்கு இலக்கணப்படி செய்யத் தகாத அர்த்தம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதற்குச் சான்றாக திருக்குர்ஆனில் இடம்பெற்ற இது போன்ற மற்றொரு வசனத்தை நாம் எடுத்துக் காட்டலாம்.

திருக்குர்ஆனின் 74வது அத்தியாயத்தின் இறுதியில் நரகவாசிகளுடன் நல்லடியார்கள் உரையாடும் காட்சியை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

நீங்கள் ஏன் நரகத்துக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு நரகவாசிகள் விடையளிக்கும் போது:

நாங்கள் தொழுகையாளிகளாக இருந்ததில்லை.

ஏழைகளுக்கு நாங்கள் உணவளிக்கவில்லை.

வீணர்களுடன் மூழ்கிக் கிடந்தோம்.

நியாயத் தீர்ப்பு நாளை நம்பாமல் இருந்தோம.

என்றெல்லாம் காரணங்களை நரகவாசிகள் அடுக்குவார்கள். எதுவரை இவ்வாறு நடந்து கொண்டோம் எனக் கூறும் போது:

எங்களுக்கு யகீன் வரும் வரைஎன்றும் அவர்கள் கூறுவார்கள். (74:47)

15:99 வசனத்தில் இடம் பெற்ற அதே யகீன் என்ற சொல் வருகையிலிருந்து பிறந்த வரும் வரை என்ற சொல்லுடன் இணைந்து இங்கே இடம்பெற்றுள்ளது. 15:99வது வசனத்திற்கு போலி ஆன்மீகவாதிகள் எவ்வாறு பொருள் செய்தார்களோ அது போல் இங்கேயும் அவர்கள் பொருள் செய்து காட்டவேண்டும்.

அதாவது எங்களுக்கு உறுதி வரும் வரை தொழாமல் இருந்தோம்.

எங்களுக்கு உறுதி வரும் வரை நியாயத் தீர்ப்பு நாளை மறுத்து வந்தோம் என்று தான் இவர்களது வாதத்தின்படி பொருள் கொள்ள வேண்டும்.

உறுதி வரும் வரை தொழாமல் இருந்தோம். உறுதி வந்தவுடன் தொழுது விட்டோம் என்ற கருத்து அதனுள் அடங்கியுள்ளது.

உறுதி வந்த பின்னர் தொழுதார்கள் என்றால் ஏன் நரகத்தில் தள்ளப்பட வேண்டும்?

உறுதி வந்த பின் ஏழைகளுக்கு உணவளித்தவர்கள் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள்?

அவர்கள் சுவர்க்கத்திற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் இவர்களது அறியாமை அம்பலமாகின்றது.

மரணம் என்று இங்கே பொருள் செய்து பாருங்கள்!

எங்களுக்கு மரணம் வரும் வரை ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை என்று பொருள் கொண்டால் அவர்கள் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள் என்ற கேள்விக்குரிய பொருத்தமான விடையாக அமைந்து விடுகிறது.

உறுதி வரும் வரைஎன்று பொருள் கொண்டால் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள் என்ற கேளிவிக்கு விடையாக அது அமையாது.

எங்களுக்கு யகீன் (உறுதியான நிகழ்வு என்னும் மரணம்) வரும் வரை என்று இங்கே பொருள் கொள்ளும் நிலைக்கு அவர்கள் இப்போது தள்ளப்படுவார்கள்.

15:99 வசனத்திற்கும் இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும். அது தான் இலக்கண விதியாகும்.

எனவே உறுதியான நிகழ்வு என்னும் மரணம் வரும் வரை உமது இறைவனை வணங்க வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் பொருளாகும்.

மனிதர்களிலேயே அதிகமான உறுதியைப் பெற்றவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். உறுதி வரும் வரை தான் வணங்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா வணக்கத்தையும் விட்டிருப்பார்கள்.

எனக்கு உறுதி வந்து விட்டதால் நான் வணங்க மாட்டேன். வணங்கத் தேவையில்லை. நீஙகள் மட்டும் வணங்குங்கள் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மரணப் படுக்கை வரை இறைவனை வணங்கிக் கொண்டே இருந்தார்கள்.

மற்றவர்களுக்கு எதைத் தடை செய்தார்களோ அதை முதலில் தவிர்த்துக் கொள்பவர்களாக கடைசி வரை அவர்கள் இருந்தார்கள். மற்றவர்களை விட அதிகம் வணங்குபவர்களாக அவர்கள் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை இவ்வசனத்தின் பொருளை நமக்கு மேலும் தெளிவாக விளக்கி விடுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அடுத்து உறுதியான நம்பிக்கையைப் பெற்றவர்கள் நபித்தோழர்கள். இந்தப் போலி ஆன்மீகவாதிகளை விட பல கோடி மடங்கு உறுதியை அவர்கள் பெற்றிருந்தார்கள். அவர்களின் ஒருவர் கூட எனக்கு உறுதி வந்து விட்டதால் இனி மேல் வணங்க மாட்டேன் எனக் கூறவில்லை. மரணிக்கும் வரை அவர்கள் வணங்கிக் கொண்டு தான் இருந்தார்கள்.

இதன் காரணமாகவும், போலி ஆன்மீகவாதிகள் செய்த அர்த்தம் தவறானது என்பது உறுதியாகிறது.

ஆன்மீகம் என்பது மேலும் மேலும் மனிதனின் நிலையை உயர்த்த வேண்டும். மேலும் மேலும் மனிதனைக் பக்குவப்படுத்த வேண்டும். ஆனால், இந்தப் போலி ஆன்மீகவாதிகள் கொடுக்கும் விளக்கம் மனிதனை மேலிருந்து கீழே இறங்குவதாக அமைந்துள்ளது.

அதாவது உறுதி வரும் வரை தொழுவார்களாம்! உறுதி வந்து விட்டால் கஞ்சா அடிப்பார்களாம்! ஆட்டம் போடுவார்களாம்! ஒரு பொறுக்கியின் நடவடிக்கைக்கு ஒப்ப நடப்பார்களாம்!

மனிதனைப் பாதாளப் படுகுழியில் தள்ளுகின்ற இப்படி ஒரு வழியை இஸ்லாம் கூறுமா என்பதைச் சிந்தித்தால் இவர்கள் எந்த அளவுக்கு கேடுகெட்டவர்கள் என்பதை அறியலாம்.

உறுதியான காரியமாக இருக்கக் கூடிய மரணம் உங்களுக்கு வரும் வரை வணங்கிக் கொண்டே இருங்கள் என்பது தான் இவ்வசனத்தின் பொருளே தவிர போலி ஆன்மீக வாதிகள் கூறுவது போல் பொருள் கொள்ள முடியாது என்பதில் எள் முனையளவு கூட சந்தேகமில்லை.” (ஒற்றுமை)

06.02.2011. 09:26

இயக்கங்கள் வழிகேடு என்று சிலர் கூறுக

இயக்கங்கள் வழிகேடு என்று சிலர் கூறுகிறார்களே இது சரியா?

 எம்.ஐ.எம்.சைஃபுல்லாஹ்

இயக்கம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்வியின் அபத்தத்தைப் புரிந்து கொள்ளலாம். சிலர் ஒன்று சேர்ந்து சில செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்படுவதற்குப் பெயர் தான் இயக்கம்.

இயக்கம் கூடாது என்று சொல்பவர்களும் ஒரு இயக்கமாகத் தான் செயல் படுகிறார்கள். அவர்கள் தனி மனிதராக இருந்து அதைச் சொல்லாமல் ஒருவரை தலைவராக ஏற்றுக் கொண்டு அவரின் கீழ் செயல்பகிறார்கள். இது தான் இயக்கம் என்பது.

தனக்கென ஆள் சேர்ப்பது, தன்னை ஒரு குழுவுக்கு தலைவராக்கிக் கொள்வது என இயக்கமாக செயல்படக் கூடியவர்கள் இயக்கம் கூடாது எனக் கூறுவது கோமாளித்தனமானது.

இயக்கம் கூடாது என்று கூறுவோர் இதற்கு எந்த ஆதாரத்தையாவது எடுத்துக் காட்டி அதில் அர்த்தம் உள்ளதாக உங்களுக்குத் தோன்றினால் தெரிவியுங்கள். அது குறித்து விளக்கம் அளிப்போம்

06.12.2010. 05:16

செத்துப்போன வாதங்கள்

செத்துப்போன வாதங்கள்
போலிகள்
ஜாக்கிரதை

ஆதாரமில்லாமல் மகான்கள் என்று நம்பப்படும் மையித்துகளிடம் பிரார்த்தணை செய்யக் கூடாது என்று ஆதாரங்களின் அடிப்படையில் நாம் கூறி வருகிறோம். அல்லாஹ்வின் அருளால் மக்கள் இன்று விழிப்படைந்து விட்டனர். மக்கள் தெளிவாக இருந்தாலும் மார்க்க அறிஞர்கள் போர்வையில் நடமாடுவோர் மூடத்தனமான வாதங்களை எடுத்து வைத்து செத்தவர்களைக் கடவுளாக்க முயற்சித்து வருகின்றனர். அ889 களில் செத்தவர்களை பிரார்த்திப்பதை நியாயப்படுத்தி கப்ரு வணங்கிகள் கூட்டம் ஒரு நூல் வெளியிட்டது. ஹமீது அப்துல் காதிர் என்ற ஞான சூனியம் எழுதி இலவசமாக வெளியிட்ட கலிகால இமாம்கள் என்ற அந்த நூலில் எடுத்து வைத்த கோமாளித்தனமான உளறல்களுக்கு பீஜே ஆசிரியராக இருந்த போது அல்ஜன்னத் 1993 மார்ச் இதழில் மறுப்புத் தொடர் எழுதப்பட்டது. அதில் ஒரு தொடர் இப்போது வெளியிடப்படுகிறது - தேவையான திருத்தங்களுடன்

கப்ரு வணங்கிகளின் வாதம்

கலிகால இமாம்கள் நபிகள் நாயகம் (ஸல்) கபுருகளில் போய் தங்கள் தேவைகளைக் கேட்கவில்லை என்று எதற்கெடுத்தாலும் எம்பெருமானார் (ஸல்)  அவர்களையே சாடுகிறார்கள். நான் சொல்கிறேன். எம் பெருமான் (ஸல்)  அவர்களின் முன்மாதிரியில் இலட்சத்தில் ஒன்றைக் கூட சாதிப்பதற்கு நமக்கு அறிவும் இல்லை. திராணியும் இல்லையே.

(உதாரணம்)

நாம் 25 வாட்ஸ் பவர் உள்ள ஒரு மின்சார பல்பு

வலிமார்கள் 40 வாட்ஸ் பல்பு

இமாம்கள் 100 வாட்ஸ் பல்பு

எம்பெருமானார் 1000 வாட்ஸ் பல்பு .

1000 வாட்ஸ் பல்பு மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்குமிடத்தில் 25 வாட்ஸ் பல்பை இணைத்தால் அது தீய்ந்து போய்விடும் என்பதைக் கவனித்து நமது புத்திக்குத் தக்கபடி தான் செயல்கள் இருக்க வேண்டும்.

இங்கு உங்களுக்கு நான் ஒரு நிகழ்ச்சியைக் கூற ஆசைப்படுகிறேன். ஒரு நாள் ஹாங்காங் ஜாமியா பள்ளியின் இமாம் அவர்களிடம்  போய் ( அவர்கள் மிகவும் ஞானமுள்ளவர்கள்) நான் கேட்டேன். எம்பெருமான் (ஸல்) அவர்கள் தங்களது 63 வயதில் வபாத்தானார்கள். அவர்களின் அனுபவத்தை நமது வாழ்க்கையில் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் எத்தனை வயதுடையவர்கள் ( அந்த இமாம் அவர்களுக்கு 60 வயது இருக்கலாம்)  எனக் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள் . நாம் ஒன்று அல்லது ஒன்றரை வயது குழந்தைகளுக்குச் சமமானவர்கள் என்றார்கள். நான் அவர்களிடம் கேட்டேன். ஒன்றரை வயது குழந்தை பசி எடுத்தால் பால் யாரிடம் கேட்கிறது  என்றேன். குழந்தை தாயிடம் கேட்கும் என்றார்கள்.  அப்படி குழந்தை தாயிடம் கேட்பதும் சாதாரணமாக நமக்குப் பசி எடுத்தால் தாயாரிடமோ அல்லது மனைவியிடமோ பசிக்கிறது உணவு தாருங்கள் என்றால் அது ஷிர்கா? கலிகால இமாம்களின் கூற்றுப்படி எதுகேட்டாலும் அல்லாஹ்விடமே கேட்க வேண்டும். மற்றவர்களிடம் கேட்பது ஷிர்காக ஆகிறதே என்று சொன்னேன் அதற்கு அவர்கள் கலிகால இமாம்கள் சரியான ஞானமில்லாதவர்கள் என்றார்கள் (பக்கம் 7, 8,9)

நமது பதில்

சமாதியாகிவிட்டடவர்களிடம் பிரார்த்தனை செய்வது தவறில்லை என்பதற்கு ஹமீது அப்துல் காதிர் எடுத்து வைக்கும் ஆதாரம் இது தான்.

நபி (ஸல்)  அவர்கள் கபுருகளில் எதையும் கேட்டதில்லை என்றாலும் நபியவர்களை நாம் பின்பற்ற முடியாது. அவர்கள் 1000 வாட்ஸ் பல்பு என்றும் நாம் 25 வாட்ஸ் பல்பு தான்.

ஒரு வயதுக் குழந்தை தாயிடம் பால் கேட்பது ஷிர்க் அல்ல. அது போல் நபியவர்களுடன் ஒப்பிடும் போது நாமும் ஒரு வயதுக் குழந்தை போன்றவர்கள் என்பதால் சமாதிகளில் போய் வேண்டுவது ஷிர்க் அல்ல.

இது தான் அவர் கூறுவதன் சாராம்சம். ஒரு குர்ஆன் வசனத்தையோ ஒரே ஒரு ஹதீஸையோ  தனது செயலுக்கு ஆதாரமகாகக் காட்ட முடியாமல் உதாரணம் என்று உளறிக் கொட்டுகிறார். இவரது வாதத்தில் உள்ள அபத்தங்களைப் பார்ப்போம்.

நபி (ஸல்)  அவர்கள் சமாதிகளில் போய் எதையும் கேட்டது கிடையாது என்று இவர் ஒப்புக் கொள்கிறார். ஆனாலும் நபியவர்களின் நிலை வேறு நம் நிலை வேறு. அவர்களை நம்மால் பின்பற்ற முடியாது என்பதால் தான் சமாதியை வணங்கலாம் என்கிறார்.

இவர் கூறுவதை உண்மையாகவே இவர் நம்பினால் இஅவரிடம் நாம் கீழ்க்காணும் வினாக்களை எழுப்புகிறோம்.

            1.நம்மால் பின்பற்ற முடியாத ஒருவரை இறைவன் ஏன் வழிகாட்டியாக  அனுப்ப வேண்டும்?

            2.அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகான முன்மாதிரி இருக்கிறது (33:21) என்று இறைவன் கூறுவதற்கு அர்த்தம் என்ன?

            3.இந்தத் தூதர் உங்களிடம் எதைக் கொண்டு வந்தாரோ அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். எதை விட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் (59:7) என்று இறைவன் கூறுவது ஏன்?

            4.நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான் (3:31) என்று நபியவர்களைக் கூறச் சொல்வது ஏன்?

            5.ஐங்காலத் தொழுகை, சுன்னத்தான தொழுகைகள், நோன்பு , ஸகாத் மற்றும் ஏராளமான நல்லறங்களை நபியவர்கள் செய்துள்ளனர். அவர்களைப் போல்  நாம் செய்ய முடியாது என்று கூறும் ஹமீது அப்துல் காதிர் இந்தக் கடமைகளை எல்லாம் செய்யத் தேவையில்லை என்கிறாரா? செய்ய வேண்டும் என்று அவர் கூறினால் 100 வாட்ஸ் பல்பு போல் 25 வாட்ஸ் பல்பு போல் ஆகிவிடுகின்றதே. இதற்கு என்ன சொல்லப் போகிறார்.

            6.வட்டி, மதுபானம், திருட்டு, கொலை, கொள்ளை, புறங்கூறல், பொய் பேசுதல், மோசடி, ஏமாற்றுதல், விபச்சாரம், போன்ற அனைத்துத் தீமைகளிலிருந்தும் நபியவர்கள் விலகியிருந்தார்கள்.அவர்கள் மட்டும் தான் அவ்வாறு விலகிக் கொள்ள முடியுமே தவிர 25 வாட்ஸ் பல்புகளால் விலகிக் கொள்ள முடியாது என்று கூறப் போகிறாரா? மேற்கண்ட தீமைகளை 25 வாட்ஸ் பல்புகள் செய்வதில் தவறில்லை என்று போதனை செய்யப் போகிறாரா?

            7.ஏகத்துவக் கொள்கை 1000 வாட்ஸ் பல்புகளுக்கு மட்டுமே உரியவை, 25 வாட்ஸ் பல்புகளுக்கு உரியவை அல்ல என்றால் 25 வாட்ஸ்  பல்பை விடவும் குறைவான மக்கத்துக் காபிர்கள் இறைவனல்லாதவர்களை வேண்டியது எப்படித் தவறாகும்?  25 வாட்ஸ் பல்புகளே இறைவனல்லாதவர்களிடம் வேண்டலாம் என்றால் 0 வாட்ஸ் பல்புகள் இறைவனல்லாதவர்களை வேண்டுவது எந்த வகையில் தவறானது?

            8.யூதர்களும், கிறத்தவர்களும் நபிமார்களிடம் வேண்டுவதும் இந்துக்கள் பற்பல தெய்வங்களிடம் வேண்டுவதும் கூட இவரது வாதப்படி தவறானதல்லவே? விளக்குவாரா ஹமீது அப்துல் காதிர்?

            9.நபியவர்களுடன் ஒப்பிடும் போது நாம் ஒரு வயது குழந்தை போன்றவர்கள் என்றால் இந்த நிலையில் உள்ளவர்களைத் தண்டிப்பது அக்கிரமம் அல்லவா? அத்தகையவர்களின் தவறுகளுக்காக இறைவன் நரகத்தை ஏன் சித்தப்படுத்தி வைக்க வேண்டும்?

            10.நாமாவது ஒரு வயதுக் குழந்தை போன்றவர்கள். காபிர்கள் ஒரு நாள் குழந்தையை விடவும் குறைவானவர்கள் தானே. அவர்களுக்கு நிரந்தர நரகத்தைச் சித்தப்படுத்தியிருப்பது ஏன்? இது அநியாயம் அல்லவா? ஒரு வேளை நரகம் என்று ஒன்று கிடையாது என்று கூறப் போகிறாரா?

இப்படி ஏராளமான கேள்விகள்!

 ஹமீது அப்துல் காதிர் கம்பெனியாரிடம் இவற்றுக்கெல்லாம் எந்த பதிலும் கிடையாது. இது ஒருபுறமிருக்கட்டும்.

கபுரு ஜயாரத்துக்குச் செல்பவர்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகக் கேட்பதில்லை என்று இவர் கூறியதைச் சென்ற இதழில் நாம் குறிப்பிட்டிருந்தோம். அவ்லியாக்களிடம் நேரடியாகக் கேட்கவில்லை என்று மறுத்து விட்டு அடுத்த பக்கத்தில் அவ்லியாக்களிடம் கேட்பதை ஒப்புக் கொண்டு அதை நியாயப்படுத்துகிறார்.

இவர்களுக்கென்று தெளிவான எந்தக்  கொள்கையும் கிடையாது. எதையாவது உளறி தங்கள் தவறை நியாயப்படுத்துவதே இவர்களின் நோக்கம் என்பதற்கு இந்த முரண்பாடு சான்றாக உள்ளது.

அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் உதவி தேடுவது ஷிர்க் என்றால் தாயாரிடமும் மனைவியிடமும் உணவு கேட்பதும் ஷிர்காக ஆகுமே என்ற அவரது வாதமும் ஏற்கத்தக்கதல்ல.

அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் உதவி தேடக்கூடாது  என்று நாம் கூறுவதன் பொருள் கடவுள் நிலையில் வைத்து எவரிடமும் உதவி தேடக்கூடாது என்பது தான். அவ்வாறின்றி சாதாரண நிலையில் வைத்து உதவி தேடுவதை நாம் கூடாது என்று கூறவில்லை.

நபி ஸல் அவர்களே எத்தனையோ சந்தர்ப்பங்களில் தம் மனைவியிடமும் , தோழர்களிடமும், எதிரிகளிடமும் உதவி தேடியுள்ளனர். நல்ல காரியங்களில் ஒருவருக்கொருவர்  உதவிக் கொள்ளுங்கள் (5:2) என்று அல்லாஹ் கூறுகிறான். நாங்களும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் பலரிடமும் உதவி தேடுகிறோம் . இறைத் தன்மையை மற்றவர்களுக்கு வழங்கி உதவி தேடும் வகையில் இவை அமையவில்லை. அதனால் இத்தகைய உதவி தேடுதலை நாம் ஷிர்க் என்று கூற மாட்டோம்.

ஆனால் ஹமீது அப்துல் காதிர் நியாயப்படுத்தும் உதவி தேடுதல். இறந்தவர்களுக்கு இறைத் தன்மை வழங்குகின்றது. அதனால் தான் இதை மட்டும் நாம ஆட்சேபணை செய்கிறோம். இதை நாம் விரிவாக முன்பு ஒரு முறை விளக்கியிருந்தாலும் ஹமீது அப்துல் காதிருக்காக மீண்டும் விளக்குவோம்.

தாயாரிடம் , மனைவியிடம், நண்பர்களிடம், ஆட்சியாளரிடம், வேலைக்காரர்களிடம், முதலாளிகளிடம் நாம் உதவி தேடும் போது சில ஒழுங்குகளைச் சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம்.

. மேற்கண்டவர்களிடம் உதவி தேடும் போது எங்கிருந்து வேண்டுமானாலும் அவர்களை ஹமீது அப்துல் காதிர் அழைக்கிறார். அப்துல் காதிர் ஜீலானியைப் பார்க்காமல், அவரது குரலைச் செவியுறாமல் அழைக்கிறார். அப்துல் காதிர் ஜீலானியின் கேட்கும் திறனுக்கு எந்த வரம்பும் கிடையாது என்று நம்புவதாலேயே இவ்வாறு அவர் கேட்கிறார். இந்த விஷயத்தில் இறைவன் எப்படி நமது கோரிக்கையைச் செவியுறுகிறானோ அப்படிச் செவியுறும் தகுதி அப்துல் காதிர் ஜீலானிக்கு உண்டு என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? மனித நிலையில் நிறுத்தி கேட்கப்படும் உதவியும், கடவுள் நிலைக்கு உயர்த்தி தேடப்படும் உதவியும் எப்படி சமமாக முடியும்?

.மேற்கண்டவர்களிடம் நாம் உதவி தேடும் போது அவர்களுக்கு என்ன மொழி தெரியுமோ அந்த மொழியில் அவர்களிடம் கேட்கிறோம். அவர்களுக்குத் தெரியாத மொழியில் கேட்பது கிடையாது.

 அரபு மொழி மட்டுமே அறிந்திருந்த அப்துல் காதிர் ஜீலானியிடம் அவர் அறிந்திராத தமிழ் மொழியில் ஹமீது அப்துல் காதிர் ஏன் கேட்கிறார்? கேரளத்துக்காரர்கள் மலையாளத்தில் ஏன் கேட்கின்றனர்? இன்றும் பல மொழி பேசுவோர் தத்தமது மொழிகளில் கேட்பது ஏன்? இறைவனுக்கு மொழிகள் ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை என்பது போல் அப்துல் காதிர் ஜீலானிக்கும் மொழி ஒரு பிரச்சனை கிடையாது  என்று அவர்களின் உள்ளத்தில் உள்ள நம்பிக்கை தான் இதன் காரணம். இது அவருக்குக் கடவுள் தன்மை வழங்கப்படுகிறது என்பதை நிரூபிக்கவில்லையா?

.சாதாரண மனிதர்களிடம் நாம் உதவி தேடும் போது ஒரு நேரத்தில் பல்லாயிரம் பேர் ஒருவரிடம் உதவி தேடுவது கிடையாது. ஏன் ஒரு நேரத்தில் ஒருவரிடம் இரண்டு நபர்கள் கூட உதவி தேடுவது கிடையாது. ஒரு நேரத்தில் ஒருவரது பேச்சைத் தான் அவருக்குக் கேட்க முடியும். அந்த அளவு பலவீனமான மனிதர்  என்று நாம் அவரைப் பற்றி நம்புவதே இதன் காரணம்.

 அப்துல் காதிர் ஜீலானியிடம் ஹமீது அப்துல் காதிர் உதவி கோரும் அதே நேரத்தில் எத்தனையோ ஆயிரம் பேர் அவரிடம் உதவி தேடுகிறார்கள்.அத்தனை பேருடைய அழைப்பையும் ஒரு சமயத்தில் அவரால் செவியுற முடியும் என்ற நம்பிக்கை தான் இதற்குக் காரணம்

இரண்டையும்
சமமாக எப்படிக் கருதுகிறார் ஹமீது அப்துல் காதிர்?

 ) சாதாரண மனிதர்களிடம் நாம் உதவி தேடும் போது அவர்கள் தான் உதவுகிறார்கள் என்பது நமக்குத் தெரிகின்றது. அதாவது நமக்குத் தெரியும் வகையில் அவர்கள் செய்யும் உதவிகள் அமைந்துள்ளன.

அப்துல் காதிர் ஜீலானியிடம் தேடும் உதவிகளில் அவர்கள் எப்படி உதவுகிறார்கள் என்பது நமக்குத் தெரிவதில்லை. நமக்குத் தெரியாத வகையில் நாம் அறியாத விதத்தில் உதவி செய்வது என்பது இறைவனுக்கு மாத்திரமே உரியது. மற்றவர்கள் செய்யும் உதவிகள் அதற்கென்று உள்ள வழிகளில் தான் மற்றவர்களுக்கு கிடைக்கும்.

இந்த வகையிலும் இரண்டு உதவி தேடுதல்களும் வித்தியாசப்படுகின்றன.

) சாதாரண மனிதர்களிடம் உதவி தேடும் போது எதை வேண்டுமானாலும் நாம் கேட்பது இல்லை. அவரிடம் என்ன கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிகின்றதோ அதைத் தான் கேட்போம். அவரது சக்திக்கு உட்பட்டதைத் தான் கேட்போம்.

ஆனால் இறந்தவரிடம் உதவி தேடுவோர் எதை வேண்டுமானாலும் வேண்டுகின்றனர். அவரது சக்திக்கு உட்படாதது ஒன்றுமே இல்லை என்ற நம்பிக்கையில் கேட்கப்படுகிறது. அதாவது அனைத்தையும் எப்படி அல்லாஹ்விடம் கேட்போமோ அது போல் இறந்தவரிடம் கேட்கப்படுகிறது. இரண்டும் எப்படி சமமாக முடியும்?

)     சாதாரண மனிதர்களிடம் நாம் உதவி தேடும் போது நாம் அவரிடம் உதவி தேடுவது போல் அவரும் மற்றவர்களிடம் உதவி தேடும் நிலையில் இருக்கிறார் என்று நம்புகிறோம். ஒரு விஷயத்தில் அவர் உதவி செய்தால் பல விஷயத்தில் அவர் உதவி தேடும் நிலையில் இருக்கிறார் என்பது நமக்குத் தெரிகிறது. ஆனால் அப்துல் காதிர் ஜீலானி அவ்வாறானவர் அல்ல. அவரிடம் தான் நாம் உதவி தேட வேண்டும். அவர் நம்மிடம் எந்த உதவியும் தேடத் தேவையில்லை. உதவுவதற்கென்றே அவதாரம் எடுத்தவர் என்றெல்லாம் நம்பப்படுகின்றது.

கடவுள் நிலைக்கு ஒருவரை உயர்த்தி வைத்து அவரிடம் தேடப்படும் உதவியைத் தான் நாம் ஷிர்க் என்கிறோம் இறைவனின் எந்த ஒரு அம்சத்தையும் வழங்காமல் சாதாராண மனிதர் என்ற நிலையில் ஒருவரிடம் ஒருவர் உதவி தேடுவதை நாம் ஷிர்க் என்று கூறியதில்லை.

இந்த வித்தியாசங்களை உணராமல் ஹமீது அப்துல் காதிர் மனைவியிடம் உணவு கேட்பதையும் சமாதிகளில் கேட்பதையும் சமநிலையில் நிறுத்துகிறார்.

கலிகால இமாம்கள் என்ற இந்த நூலில் உருப்படியான எந்த விஷயமும் அல்ல. இலவசமாக நாடு முழுவதும் வினியோகம் செய்யும் அளவுக்குப் பலமான வாதமும் இல்லை. இது போன்ற வாதங்களை விடுத்து அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நடக்க ஹமீது அப்துல் காதிருக்கும் நமக்கும் அல்லாஹ் அருள்புரியட்டும்.

இந்த நூல் செத்தவர்களைக் கடவுளாக்குவது மத்ஹபுகளையும் நியாயப்படுத்தி நானிலம் போற்றும் மத்ஹபுகள், நன்மை செய்வோம் நஜாத் நன்பர்களே என்ற பெயரில் இரண்டு நூல்கள் இலவசமாக வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அதில் உள்ள அபத்தங்களை நாம் அடுத்த இதழில் அலசுவோம்.

21.10.2010. 09:05

அதிகமாக தர்க்கம் புரிவதால் அறிவு குற

 கேள்வி

அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிகமாக தர்க்கம் புரிவது, இருட்டறையில் தூங்குவது போன்ற பல காரணங்களினால் ஒருவருக்கு அறிவு குறைவடையும்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சிலர் கூறுகின்றனர். இது உண்மையா?விளக்கம் தேவை

முஹம்மது இஹ்ஸாஸ்

பதில் :

வஅலைக்குமுஸ்ஸலாம்.

அதிகமாக தர்க்கம் புரிவதால் அறிவு குறையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஹதீஸையும் நம்மால் பார்கக்கமுடியவில்லை. இவ்வாறு ஹதீஸ் இருப்பதாக யார் கூறுகின்றார்களோ அவர்களிடம் இந்த செய்தி எந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது எனக் கேளுங்கள்.

இதன் கருத்து குர்ஆனுக்கு முரணாகவும் அமைந்துள்ளது. ஏனென்றால் அழகிய முறையில் விவாதம் செய்ய வேண்டும் என குர்ஆன் கூறுகின்றது.

ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ(125)16

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன் அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் (16 : 125)

இறைத்தூதர்கள் இறைமறுப்பாளர்களிடம் விவாதம் செய்த வரலாறுகளை திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது. எனவே அழகிய முறையில் விவாதம் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் வந்து ஒருவர் அதிகமாக விவாதம் செய்தால் அது நன்மையான காரியமே.

மேலும் ஒருவர் முறையான அடிப்படையில் விவாதம் செய்தால் அதன் மூலம் அவருடைய அறிவு அதிகரிக்கும் என்பது தான் சரியானக் கருத்து.

எனவே அதிகமாக விவாதம் செய்தல் கூடாது குறைவாக விவாதம் செய்யலாம் என்று முடிவெடுக்காமல் அழகிய விவாதம் செய்யலாம் தேவையற்ற விவாதம் செய்யக்கூடாது என்று முடிவெடுப்பதே சரியானது.

அடுத்து இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையும் என்ற கருத்தும் தவறானதே. இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை.

ஹதீஸ்களை ஆராயும் போது நபியவர்கள் காலத்தில் நபியவர்கள் உட்பட அனைத்து நபித்தோழர்களும் இருட்டில் தான் உறங்கினார்கள் என்பதை அறிய முடியும்.

5624 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَطْفِئُوا الْمَصَابِيحَ إِذَا رَقَدْتُمْ وَغَلِّقُوا الْأَبْوَابَ وَأَوْكُوا الْأَسْقِيَةَ وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ وَأَحْسِبُهُ قَالَ وَلَوْ بِعُودٍ تَعْرُضُهُ عَلَيْه رواه البخاري

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்'' என்று சொன்னார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நான் எண்ணுகிறேன்.

நூல் : புகாரி (5624)

எரியும் விளக்குகளை எலிகள் இழுத்துச் சென்று வீட்டை எரித்துவிடும் என்பதால் விளக்கை அணைக்குமாறு நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

அன்றைய காலத்தில் இன்றைக்கு இருப்பது போல் மின் விளக்குகள் விடி பல்புகள் ஆகியவை இல்லை. எண்ணெய் ஊற்றி பற்ற வைக்கப்படும் விளக்குகளே இருந்தன.

அன்றைக்கு விளக்குகளை அணைத்துவிட்டால் எந்த வெளிச்சமும் இன்றி இருட்டு அறையில் தான் உறங்க வேண்டிவரும். இருட்டு அறையில் உறங்குவதால் அறிவு குறையும் என்றால் இவ்வாறு நபியவர்கள் உத்தரவிட்டிருக்கமாட்டார்கள். எனவே இருட்டில் உறங்குவதற்கும் அறிவு குறைவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அறிய முடிகின்றது. விஞ்ஞான ரீதியிலும் இக்கருத்து சரியானதல்ல. 

07.08.2010. 14:25

தனி இட ஒதுக்கீட்டால் பாதிப்பா

 தனி இட ஒதுக்கீட்டால் பாதிப்பா

கிறித்தவர்கள் விழித்துக் கொண்டு இட ஒதுக்கீட்டை மறுத்து விட்டனர். முஸ்லிம்கள் ஏமாந்து விழிக்கின்றனர் என்று சிலர் இட ஒதுக்கீட்டைக் கிண்டல் அடிக்கின்றனர். இது சரியா?

இட ஒதுக்கீட்டைக் கிறித்தவர்கள் ஏன் மறுத்தனர் என்ற காரணம் தெரியாமல் நுணிப்புல் மேய்ந்தவர்கள் இப்படி ஒரு வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பாதிப்பு என்று வாதிட்டால் இட ஒதுக்கீட்ட்டுக்கு முன் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வாய்ப்புகள் எவ்வளவு? இட ஒதுக்கீட்டுக்குப் பின் கிடைத்துள்ள வாய்ப்புகள் எவ்வளவு என்பதைப் புள்ளி விபரத்துடன் எடுத்துக் காட்டி தங்கள் வாதத்தை நிறுவ வேண்டும்.

மொட்டை தாதன் குட்டையில் விழுந்தான் என்பது போல் உளறக் கூடாது.

கிறித்தவர்கள் கிடைத்த இட ஒதுக்கீட்டை மறுத்தனர் என்பது பற்றியாவது அறிந்து வைத்துக் கொண்டு வாதிட வேண்டும். அந்த அறிவும் இவர்களுக்கு இல்லை.

தமிழகத்தில் 69 சதவிகிதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.

இதில் 18 தலித்களுக்கு. ஒரு சதவிகிதம் பழங்குடியினருக்கும் ஆக 19 சதவிகிதம் போய் விடும்.

எம்பிசி எனப்படும் மிகவும் பிற்பட்ட மக்களுக்கு 20 சதவிகிதம் போய் விடும்.

இந்த இரண்டு வகையிலும் முஸ்லிம்களும் கிறித்தவர்களும் வர மாட்டார்கள்.

எஞ்சிய 30 சத விகிதம் பிற்பட்டோருக்கானது.

இதில் பிறபட்ட சாதிகளும், பிற்பட்ட கிறித்தவர்களும் பிற்பட்ட முஸ்லிம்களும் அடங்குவார்கள்.

இந்த முப்பதைத் தான் 23 இந்து பிற்பட்டோருக்கு என்றும், மூன்றரை சதம் முஸ்லிம்களுக்கு என்றும் மற்றொரு மூன்றரை கிறித்தவர்களுக்கும் என்று வழங்கப்பட்டது

இதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்

முஸ்லிமளில் பிற்பட்டவர் என்றால் முஸ்லிம்களில் மட்டும் உள்ள ஆறு பிரிவினர் மட்டுமே அடங்குவார்கள்.

.ஆனால் இந்து மதத்தில் உள்ள செட்டியார், நாடார், வன்னியர் உள்ளிட்ட எல்லா பிரிவும் கிறித்தவர்களிடமும் உள்ளது. கிறித்தவர்களிடம் இந்து மத்த்தில் உள்ள எல்லா சாதிப்பிரிவும் உள்ளதால் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அடைந்து வந்தனர்.

அதாவது கிறித்தவர் இட ஒதுக்கீடு பெறுவதற்கு மத்த்தைக் குறிப்பிட வேண்டியதில்லை. நாடார், வன்னியர் என்பன போன்ற சாத்திப்பிரிவுகளைத் தான் குறிப்பிட வேண்டும்.

கிறித்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு முன்னர் 30 சதவிகிதத்தில் சுமார் 25 சத்விகித்தைப் பெற்று வந்தனர். மத அடிப்படையில் இல்லாமல் சாதி அடிப்படியில் அவர்கள் அதிகம் பயன் பெற்றனர்.

உதாரணமாக குமரி மாவட்டத்தில் நாடார்கள் அதிகம். இவர்களில் இந்து நாடார்களும் கிறித்தவ நாடார்களும் உண்டு.

ஆனால் இந்து நாடார்களை விட கிறித்த்வர் நாடார்கள் தான் படிப்பதற்கு அதிக வாய்ப்பைப் பெற்றனர். காரனம் அவர்களிடம் தான் கல்விக்கூடங்கள் உள்ளன.

தம்மைக் கிறித்தவர் என்று குறிப்பிடாமல் நாடார் எனக் குறிப்பிட்டு முப்பது இடங்களில் 25 இடங்களை அவர்கள் எடுதுக் கொண்டு வந்தனர். இந்து நாடார்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்ததால் அவர்கள் ஏமாந்து வந்தனர்.

இப்போது மத அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதால் நாடார், வன்னியர் எனக் கூறி கிறித்தவர்கள் அதிக இடங்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. கிறித்தவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டைப் பெற முடியும். அதுவும் மூன்றரை சதம் மட்டுமே கிடைக்கும் நிலை உருவானது.

இதன் காரணமாகத் தான் அவர்கள் தனி இட ஒதுக்கீடு வேண்டாம் என்றனர். இந்துக்களுக்குக் கிடைக்க வேண்டிய 25 இடங்களைத் தொடர்ந்து அனுபவிக்க இந்த தனி இட ஒதுக்கீடு அவர்களுக்கு தடையாக அமைந்தது. ஆபத்தாக முடிந்தது இதனனால் இட ஒதுக்கீடு அவர்களுக்கு பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் முஸ்லிம்களின் நிலை இதற்கு நேர் முரணானது.

தனி இட ஒதுக்கீட்டுக்கு முன்னர் முஸ்லிமக்ள் இரண்டு சதம் அளவுக்குத் தான் வாய்ப்புகளைப் பெற்றனர். மூனரை என்பது அதை விட அதிகம் என்பதால் இது முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இந்த நுணுக்மான வேறுபாடு தெரியாதவர்கள் தான் இப்படி கேள்வி எழுப்புகிறார்கள்.

16.06.2010. 01:31

அபுதாபி ஸாலிம் விவாதிக்க அழைத்தாரா

அபுதாபி ஸாலிம் விவாதிக்க அழைத்தாரா
குரானுக்கு முரண்படும் ஹதீஸ்கள் தொடர்பாக தங்களை Salem al Aamry(இவர் ஜாகிர் நாய்க்,பிலால் பிலிப்ஸ்  கூட்டத்தைச் சேர்ந்தவர்)  அவர்கள் விவாதத்துக்கு அழைத்ததாகவும் ஆனால் தமிழில் வார்தைகளால் விளையாடுவது போல் அரபியில் செய்ய முடியாது என்பதற்காக தாங்கள் பின்வாங்கியதவும் அய்யம்பேட்டயை (தஞ்சாவூர் மாவட்டம்) சேர்ந்த பிலால் பிலிப்ஸ் வகையிராக்கள் என்னிடம் சில மாதங்களுக்கு முன்னால் கூறினார்கள். விளக்கவும்.

Regards
Abdul Hakim-Bangalore

பதில்

ஸாலிம் அல் அம்ரீ என்பவர் எனக்கு நன்கு அறிமுகமானவர். நான் அமீரகம் சென்றிருந்த போது எனது நிகழ்ச்சிகள் பல தடை செய்யப்பட்டன. அப்போது இந்த அறிஞரை சந்தித்து உரையாடும் வாய்ப்பை அபுதாபி ஹாமின், யூசுப் அலி ஆகியோர் ஏற்படுத்தித் தந்தனர். அவருடன் ஜகாத், குறித்தும் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் குறித்தும் கலந்துரையாடல் நடத்தினோம். நாம் கூறியதை கவனமாகக் கேட்ட இவர் நீங்கள் சொல்வது சிந்திக்கத் தக்கதாக உள்ளது என்று கூறினார். இன்னும் பல அறிஞர்கள் மத்தியிலும் இது பற்றி நான் கலந்து பேசுகிறேன் என்று கூறினார். இது தான் நடந்தது. விவாத அழைப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை.  இதன் பின்னர் இந்தியாவில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த இவர் என்னை நினைவு வைத்து எனைச் சந்திக்க விரும்பினார். சென்னையில் அவர் தங்கியிருந்த லாட்ஜில் சந்தித்து பேசிக் கொண்டேன். அவர் எனக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை. எனது நிலைபாடு சரி என்றோ தவறு என்றோ பேசவும் இல்லை. விவாதம் தொடர்பாக எந்தப் பேச்சும் எஙகளுக்குள் நடக்கவில்லை.

20.05.2010. 10:42

அமீரின் சொல், அல்லாஹ்வின் சொல்லா?

அமீரின் சொல், அல்லாஹ்வின் சொல்லா?

தப்லீக் ஜமாஅத்தில் அமீரின் சொல் அல்லாஹ்வின் சொல் என்றும் அமீரின் முடிவு அல்லாஹ்வின் முடிவு என்றும் சொல்கிறார்கள். இது உண்மையா? குர்ஆன் ஹதீஸ் கூறுவது என்ன?

ஜிஃப்ரீ

பதில் :

இவ்வாறு தப்லீக் ஜமாஅத்தில் சொல்லியிருப்பார்களேயானால், தப்லீக் ஜமாஅத்தின் வழிகேட்டிற்கு இதை விட பெரிய ஆதாரம் வேறு எதுவும் இருக்க முடியாது. தன்னுடைய கருத்தை அல்லாஹ்வுடைய கருத்து என்று கூறுபவனை விட அநியாயக்காரன் வேறுயாருமில்லை. இது அல்லாஹ்வின் மீது துணிந்து இட்டுக்கட்டும் செயல்.

            இவ்வாறு பேசுபவர்கள் முஸ்லிம்களாகவே இருக்க முடியாது. ஏனென்றால் தன்னை அல்லாஹ்வுடைய இடத்தில் கொண்டு சென்று அல்லாஹ்விற்கு இணைகற்பிக்கும் காரியத்தை செய்கிறார்கள்.

            இதுபோன்ற இழிசெயலில் ஈடுபடுபவர்களுக்கு அல்லாஹ் கடுமையான எச்சரிக்கை விடுகிறான்.

وَمَنْ أَظْلَمُ مِمَّنْ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ قَالَ أُوحِيَ إِلَيَّ وَلَمْ يُوحَ إِلَيْهِ شَيْءٌ وَمَنْ قَالَ سَأُنزِلُ مِثْلَ مَا أَنزَلَ اللَّهُ وَلَوْ تَرَى إِذْ الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ وَالْمَلَائِكَةُ بَاسِطُوا أَيْدِيهِمْ أَخْرِجُوا أَنفُسَكُمْ الْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنتُمْ تَقُولُونَ عَلَى اللَّهِ غَيْرَ الْحَقِّ وَكُنتُمْ عَنْ آيَاتِهِ تَسْتَكْبِرُونَ(93)6

அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக் கட்டுபவன், எதுவுமே அவனுக்கு (இறைவனிடமிருந்து) அறிவிக்கப்படாதிருந்தும் "எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன், மற்றும் "அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்' என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். "உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப் படுகிறீர்கள்!' (எனக் கூறுவார்கள்).

அல்குர்ஆன் (6 : 93)

وَمَنْ أَظْلَمُ مِمَّنْ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِآيَاتِهِ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ(21)6

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.

அல்குர்ஆன் (6 : 21)

قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّي الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْإِثْمَ وَالْبَغْيَ بِغَيْرِ الْحَقِّ وَأَنْ تُشْرِكُوا بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَأَنْ تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ(33)7

"வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்'' என (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் (7 : 33)

            தங்களுடைய அசத்தியக் கருத்துக்களை மக்களிடம் விதைக்க வேதக்காரர்கள் தங்களுடைய சுயக்கருத்துக்களை அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறி அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டினார்கள். நீங்கள் கூறுவது உண்மையாக இருக்குமேயானால் இந்த மாபாதகச் செயலையே தப்லீக் ஜமாஅத்தும் செய்துவருகிறது.

وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُمْ بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنْ الْكِتَابِ وَمَا هُوَ مِنْ الْكِتَابِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ(78)3

அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். "இது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' எனவும் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் (3 : 78)

وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ(28)7

அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது "எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்'' என்று கூறுகின்றனர். "அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!

அல்குர்ஆன் (7 : 28)

எனவே போலி அமீர்களின் தவறான கொள்கைகளை நம்பி ஏமார்ந்துவிட வேண்டாம்

06.04.2010. 20:33

சூரா யூசுப் ஓதினால் குழந்தை அழகாக பி

சூரா யூசுப் ஓதினால் குழந்தை அழகாக பிறக்குமா ?

குழந்தை வயிற்றில் இருக்கும் பத்து மாதமும் சூரா யூசுப் ஓதினால் குழந்தை அழகாக பிறக்குமா ?

சூரா அன் ஆம்” ஓதினால் நாம் நினைத்த நாட்டங்கள் நிறைவேறும் என்கிறார்களே அது உண்மைதானா ?

சித்தி லைலா

பதில்:
 குழந்தை வயிற்றில் இருக்கும் போது பத்து மாதமும் சூரா யூசுஃப் ஓதினால் குழந்தை அழகாக பிறக்கும் என்று நம்புவதற்கு ஏற்கத்தகுந்த எந்த ஆதாரமும் இல்லை. இந்தக் கருத்தை கூறும் ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தியை கூட நம்மால் பார்க்க முடியவில்லை.

            மேலும் அல்அன்ஆம் அத்தியாயத்தை ஓதினால் நமது நாட்டங்கள் நிறைவேறும் என்று நம்புவதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

 இது மட்டுமல்லாமல் ”ஜின்” அத்தியாயத்தை ஓதினால் ஜின்னை வசப்படுத்தலாம் என்றும் சிலர் உளறிவருகின்றனர். அப்படிப்பார்த்தால், “நாஸ்” அத்தியாயத்தை ஓதினால் மனிதர்களை வசப்படுத்த முடியுமா?

”பகரா” அத்தியாயத்தை ஓதிகொண்டே இருந்தால் மாட்டை வசப்படுத்திவிட முடியுமா?

தேனீ, எறும்பு என்ற பெயரில் உள்ள அத்தியாயங்களை ஓதி தேனீக்களையும் எறும்புகளையும் வசப்படுதலாம் என்று சொல்வார்களா?
இது போன்று சொல்லப்படும் அனைத்தும் கட்டுக்கதைகளாகத்தான் உள்ளன.

04.04.2010. 01:14

நபியை படைக்காவிட்டால் உலகமே இல்லையா

 நபியை படைக்காவிட்டால் உலகமே இல்லையா?


இந்த நபியை படைக்காவிட்டால் உலகையே படைத்திருக்கமாட்டேன் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்வதாக பயான் கேட்டேன். இதற்கு ஆதாரம் உள்ளதா?
M.சம்சுதீன்

பதில் :

            முஹம்மதே நீ மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தை நான் படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு செய்தி இப்னு அசாகீர் என்ற நூலில் இடம்பெற்றிருக்கின்றது.

اللآلي المصنوعة - (1 / 249)

 وفضل شهر رمضان والشفاعة كلها لك حتى ظل عرشي في القيامة على رأسك ممدود وتاج الملك على رأسك معقود ولقد قرنت اسمك مع اسمي فلا أذكر في موضع حتى تذكر معي ولقد خلقت الدنيا وأهلها لأعرفهم كرامتك علي ومنزلتك عندي ولولاك ما خلقت الدنيا موضوع أبو السكين وإبراهيم ويحيى البصري ضعفاء متروكون وقال الفلاس يحيى كذاب يحدث بالموضوعات

الموضوعات لابن الجوزي - (1 / 290)

ويحيى البصري متروكان. قال أحمد بن حنبل: حرقنا حديث يحيى البصري. وقال الفلاس: كان كذابا يحدث أحاديث موضوعة. وقال الدارقطني: متروك.

            இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனமானவர்களும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்களான இப்ராஹீம் அபுஸ்ஸிக்கீன் மற்றும் யஹ்யா ஆகியோர் பலவீனமானவர்கள் என்று இமாம் தஹபீ இமாம் தாரகுத்னீ இமாம் இப்னுல் ஜவ்ஸீ மற்றும் இமாம் அஹ்மது ஆகியோர் குறைகூறியுள்ளனர்.

تلخيص كتاب الموضوعات للذهبي - (1 / 37)

195-حديث محمد بن عيسى بن حبان المدائني ثنا محمد بن الصباح ثنا علي بن الحسن عن إبراهيم بن اليسع عن العباس الضرير عن الخليل بن مرة عن يحيى البصري عن زادان عن سلمان قال أتى أعرابي جاف بدوي فذكر خبراً طويلاً سمجاً وآخره يا محمد لولاك ما خلقت الدنيا

قال ابن الجوزي موضوع بلا شك ويحيى البصري تالف كذاب والسند ظلمة

இந்த செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் இதன் அறிவிப்பாளர் யஹ்யா என்பவர் பெரும் பொய்யர் என்றும் இமாம் இப்னுல் ஜவ்ஸீ தெரிவித்துள்ளார். மேலும் இதே கருத்தில் திர்மிதீ மற்றும் ஹாகிம் ஆகிய நூல்களிலும் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதம் அலை அவர்கள் படைக்கப்பட்டவுடன் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில் 'லாயிலாஹ இல்லல்லாஹூ' என்பதுடன் 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்றும் எழுதப்பட்டிருந்ததாம். ''இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்'' என்று ஆதம் (அலை) கேட்டர்களாம். அதற்கு இறைவன் ''அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்'' என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறிய போது சொர்க்கத்தில் பார்த்தது நினைவுக்கு வந்ததாம். ''இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக'' என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம்.

 இச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும் சில நூல்களிலும் பதிவு செய்யப்பட்டடுள்ளது. இச்செய்தி அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகிறது. இவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர்.

 மேலும் இந்த செய்தியின் கருத்து குர்ஆனுடன் முரண்படுகிறது. அல்லாஹ் திருக்குர்ஆனில் இந்த உலகத்தை படைத்ததற்கான காரணத்தை பற்றி கூறும் போது அவனை வணங்குவதற்காகத் தான் இந்த உலகத்தை படைத்ததாக குறிப்பிடுகிறான்.

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِي(56)51

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.

அல்குர்ஆன் (51:56)

 இறைவன் தன்னை வணங்குவதற்காகத்தான் மனிதனையும், ஜின்களையும் படைத்திருப்பதாக கூறிக்காட்டும் போது, முஹம்மது நபி(ஸல்) அவர்களை படைக்காவிட்டால் இந்த உலகத்தையே படைத்திருக்கமாட்டேன் என்று கூறுவதாக சொல்லுவது  இந்த வசனத்தோடு நேரடியாக மோதுகின்றது. எனவே இந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பது இதன் மூலம் மேலும் உறுதியாகிறது.

02.04.2010. 23:44

<< First < Previous [1 / 2] Next > Last >>



செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
98 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி