இமாம் கடைசி இருப்பில் இருக்கும் போது நாம் ஜமாஅத்தில் சேர்ந்தால் என்ன ஓத வேண்டும்?

? இமாம் கடைசி இருப்பில் இருக்கும் போது நாம் வந்து சேர்ந்தால் அத்தஹிய்யாத்து மட்டும் ஓதினால் போதுமா? அல்லது இறுதி ரக்அத்தில் ஓத வேண்டிய ஸலவாத், துஆக்களையும் சேர்த்து ஓத வேண்டுமா?

எஸ். அப்துல் ஹக்கீம், சக்கராப்பள்ளி

தொழுகையில் இமாம் என்ன நிலையில் இருக்கின்றாரோ அதே நிலையைத் தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸ் வலியுறுத்துகின்றது.

இமாம் ஏதேனும் ஒரு நிலையில் இருக்கும் போது உங்களில் எவரேனும் தொழுவதற்கு வந்தால் அவர் இமாம் செய்வது போலவே செய்யட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)

நூல்கள்: திர்மிதி 539, இப்னு அபீஷைபா

இந்த ஹதீஸின்படி இறுதி ரக்அத்தில் வந்து இமாமுடன் இணையும் போது, இறுதி ரக்அத்தில் என்னென்ன ஓத வேண்டுமோ அவை அனைத்தையும் நாம் ஓத வேண்டும். "இமாம் செய்வது போலவே செய்யட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதிலிருந்து இதை அறியலாம்.

பின்னர் சேர்க்கப்பட்ட குறிப்பு 

இந்த ஹதீஸில் முஆத் பின் ஜபல் கூறியதாக அறிவிப்பவர் அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா என்பவராவார். இவர் முஆத் பின் ஜபல் அவர்களிடம் எதையும் செவியுற்றது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால் இதை பலவீனமான ஹதீஸ் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

سنن الترمذي (2/ 485)

 591 - حدثنا هشام بن يونس الكوفي حدثنا المحاربي عن الحجاج بن أرطاة عن أبي إسحق عن هبيرة [ بن يريم ] عن علي وعن عمر بن مرة عن ابن أبي ليلى عن معاذ بن جبل قالا : قال النبي صلى الله عليه و سلم إذا أتى أحدكم الصلاة والإمام على حال فليصنع كما يصنع الإمام

سبل السلام (1/ 383)

[الدُّخُول مَعَ الْإِمَام فِي أَيْ حَال أَدْرَكَهُ]

وَعَنْ عَلِيٍّ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: «إذَا أَتَى أَحَدُكُمْ الصَّلَاةَ، وَالْإِمَامُ عَلَى حَالٍ فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الْإِمَامُ» رَوَاهُ التِّرْمِذِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ) أَخْرَجَهُ التِّرْمِذِيُّ مِنْ حَدِيثِ عَلِيٍّ وَمُعَاذٍ، وَفِيهِ ضَعْفٌ وَانْقِطَاعٌ وَقَالَ لَا نَعْلَمُ أَحَدًا أَسْنَدَهُ إلَّا

 هَذَا الْوَجْهِ وَقَدْ أَخْرَجَهُ أَبُو دَاوُد مِنْ حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ حَدَّثَنَا أَصْحَابُنَا - الْحَدِيثَ.

وَفِيهِ أَنَّ مُعَاذًا قَالَ " لَا أَرَاهُ عَلَى حَالٍ إلَّا كُنْت عَلَيْهَا " وَبِهَذَا يَنْدَفِعُ الِانْقِطَاعُ إذْ الظَّاهِرُ أَوْ الرَّاوِي لِعَبْدِ الرَّحْمَنِ غَيْرُ مُعَاذٍ بَلْ جَمَاعَةٌ مِنْ الصَّحَابَةِ وَالِانْقِطَاعُ إنَّمَا اُدُّعِيَ بَيْنَ عَبْدِ الرَّحْمَنِ وَمُعَاذٍ قَالُوا؛ لِأَنَّ عَبْدَ الرَّحْمَنِ لَمْ يَسْمَعْ مِنْ مُعَاذٍ وَقَدْ سَمِعَ مِنْ غَيْرِهِ مِنْ الصَّحَابَةِ وَقَالَ هُنَا " أَصْحَابُنَا "، وَالْمُرَادُ بِهِ الصَّحَابَةُ - رَضِيَ اللَّهُ عَنْهُمْ -، وَفِي الْحَدِيثِ دَلَالَةٌ عَلَى أَنَّهُ يَجِبُ عَلَى مَنْ لَحِقَ بِالْإِمَامِ أَنْ يَنْضَمَّ إلَيْهِ فِي أَيِّ جُزْءٍ كَانَ مِنْ أَجْزَاءِ الصَّلَاةِ فَإِذَا كَانَ الْإِمَامُ

இவர் முஆத் பின் ஜபல் அவர்களிடம் எதையும் செவியுறவில்லை என்பது சரியான கருத்து தான். ஆனால் முஆத் அவர்கள் வழியாக இந்தச் சட்ட்த்தைக் கூறும் கருத்தை வேறு நபித்தோழர்கள் இவருக்கு அறிவித்து உள்ளனர்.

அபூதாவூதில் இடம்பெறும் ஒரு ஹதீஸைக் கவனிக்கும் போது முஆத் அவர்களிடம் அப்துர்ரஹ்மான் நேரடியாக எதையும் கேட்காவிட்டாலும் முஆத் கூறியதாக மற்ற நபித்தோழர்களே இவருக்கு கூறியுள்ளனர் என்று தெரிகிறது.

அந்தச் செய்தி இதுதான்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தும் போது தாமதமாக வரும் நபித்தோழர்கள் தொழுகையை துவக்கத்தில் இருந்து தொழுவார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றாமல் ஒவ்வொருவரும் ஒரு நிலையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது முஆத் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) எந்த நிலையில் இருப்பார்களோ அந்த நிலையில் நான் சேர்ந்து கொள்வேன் எனக் கூறி அவ்வாறு செய்யலானார். இதைக் கண்ட நபியவர்கள் முஆத் ஒரு முறையைக் காட்டித் தந்துள்ளார். அதையே நீங்கள் என் வழிமுறையாக எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள். இதை எனக்கு நபித்தோழர்கள் அறிவித்தனர் என்று அப்துர் ரஹ்மான் கூறுகிறார்.

அபூதாவூத் (சுருக்கம்)

எனக்கு நபித்தோழர்கள் அறிவித்தனர் என்ற வாசகம் கவனிக்கத் தக்கது. முஆத் அவர்களை அப்துர்ரஹ்மான் நேரில் சந்தித்து எதையும் கேட்காவிட்டாலும் சில நபித்தோழர்கள் வழியாகவே அறிந்துள்ளார் என்று இச்செய்தி கூறுகிறது. நபித்தோழர் அல்லாத மற்றவர்களிடம் கேட்டு இருந்தால் அவர்களின் நாணயம் பற்றி நாம் ஆய்வு செய்ய வேண்டும். இதை அப்துர்ரஹ்மானுக்குச் சொன்னவர்கள் நபித்தோழர்கள் என்பதால் இதில் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாது. ஏனெனில் நபித்தோழர்கள் அனைவரும்  நம்பகமானவர்கள் என்பது அனைவரும் ஏற்றுக் கொண்ட விதியாகும்.

மேற்கண்ட திர்மிதியின் ஹதீஸை முஆத் பின் ஜபலிடம் அப்துர்ரஹ்மான் கேட்காவிட்டாலும் அந்தச் சட்டத்தைக் கூறும் அபூதாவூத் ஹதீஸை பல நபித்தோழர்கள் வழியாக இவர் கேட்டுள்ளதால் இந்தச் சட்டத்துக்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.

இதுபோல் "பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார்'' என்பதை வலியுறுத்தும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவையனைத்துமே இமாம் ஓதுவதைத் தான் நாமும் ஓத வேண்டும் என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

குறிப்பு : 2004 ஆகஸ்ட் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 14, 2015, 7:51 AM

தொழுகையில் பேசி விட்டால் என்ன செய்வது?

? நான் அறையில் தனியாகத் தொழுது கொண்டிருக்கும் போது என் தாயார் என்னை அழைத்தார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் என்ன என்று கேட்டு விட்டேன். இதற்காக தொழுகை முடிந்தவுடன் ஸஜ்தா செய்து விட்டேன். இது சரியா? ஆதாரத்துடன் விளக்கவும்.

எஸ். ஜெஹபர் சாதிக், கருக்கங்குடி

தொழுகையில் பேசுவதற்குத் தடை உள்ளது. எனினும் மறதியாகப் பேசி விட்டால் தொழுகை முறியும் என்றோ, ஸஜ்தா செய்ய வேண்டும் என்றோ கூறப்படவில்லை.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான், "யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக)'' என்று கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான், "என்னை என் தாய் இழக்கட்டும். நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டேன். மக்கள் தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்பதை நான் அறிந்து கொண்டு நான் அமைதியாகி விட்டேன்.

என் தாயும், தந்தையும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் (எனக்கு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ, பின்னரோ அவர்களை விட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை. அடிக்கவுமில்லை. திட்டவுமில்லை. அவர்கள், "இந்தத் தொழுகையானது மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும், பெருமைப்படுத்துவதும், குர்ஆன் ஓதுவதுமாகும்'' என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி)

நூல்: முஸ்லிம் 836

தொழுகையில் தெரியாமல் பேசிவிட்ட ஒரு நபித்தோழருக்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். ஆனால் ஸஜ்தா செய்யுமாறோ, திருப்பித் தொழுமாறோ கூறவில்லை. எனவே மறதியாகப் பேசியதற்குப் பரிகாரம் எதுவும் தேவையில்லை.

குறிப்பு : 2004 ஜூலை மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 11, 2015, 8:40 AM

வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு முன்பு தக்பீர் கூறி கைகளை உயர்த்த மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா?

? ஹனபி மத்ஹபினர் வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு முன்பு தக்பீர் கூறி கைகளை உயர்த்தி பின்பு கட்டிக் கொண்டு குனூத் ஓதுகின்றார்கள். இதற்கு நபிவழியில் ஆதாரம் உள்ளதா?

எஸ். அப்துல் ஹக்கீம், சக்கரப்பள்ளி

வித்ரு தொழுகையில் ருகூவுக்கு முன்பாகவோ அல்லது ருகூவுக்குப் பின்போ குனூத் ஓத வேண்டும் என்று வலியுறுத்தி ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு குனூத் ஓதும் போது தக்பீர் கூறி கைகளை உயர்த்திக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

குறிப்பு: 2004 ஏப்ரல் மாத ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி

January 10, 2015, 7:05 AM

தொழுகையில் பார்வை எந்த திசையில் இருக்க வேண்டும்?

? தொழுகையில் நெற்றி படும் இடத்தில் பார்வை இருந்தால் தான் தொழுகை கூடுமா? அத்தஹியாத்தின் தொடக்கத்தில் பார்வை விரலின் மீது இருக்க வேண்டுமா? அல்லது நெற்றி படும் இடத்தில் இருக்க வேண்டுமா?

எஸ். அப்துர்ரஷீது, கொளச்சல்

தொழுகையில் நெற்றி படும் இடத்தில் தான் பார்வை இருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் அதே சமயம், தொழுகையின் போது, நெற்றி படும் இடத்தை விட்டு வேறு இடங்களில் பார்வை செலுத்தியதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

"நபி (ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?'' என்று கப்பாப் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர், ஆம் என்றார். "நீங்கள் எப்படி அதை அறிந்து கொண்டீர்கள்?'' என்று கேட்டோம். "நபி (ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்'' என்று கப்பாப் (ரலி) பதிலளித்தார்.

அறிவிப்பவர்: அபூமஃமர், 

நூல்: புகாரி 746, 760, 761

தொழுகையில் நெற்றி படும் இடத்தைத் தான் பார்க்க வேண்டும் என்று நபிகள் நாயகம் கட்டளையிட்டிருந்தால் நபிகள் நாயகத்தின் தாடை அசைவதை நபித்தோழர்கள் பார்த்திருக்க முடியாது

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது, (அதற்காக) தொழுதார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்க முயன்று விட்டுப் பின்வாங்கினீர்களே?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். "எனக்குச் சுவர்க்கம் எடுத்துக் காட்டப் பட்டது. அதிலிருந்து ஒரு குலையைப் பிடித்தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும் அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), 

நூல்: புகாரி 748

நபி (ஸல்) அவர்கள் தமக்கு முன்பகுதியில் தென்பட்ட குலையைப் பிடிக்க முயன்றுள்ளார்கள். இந்த சமயத்தில் நபி (ஸல்) அவர்களின் பார்வை நெற்றி படும் இடத்தில் நிச்சயம் இருந்திருக்காது. நபி (ஸல்) அவர்களின் இந்தச் செயலை நபித்தோழர்கள் பார்த்துள்ளனர். எனவே அவர்களும் நெற்றி படும் இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் தொழுகையில் நெற்றி படும் இடம் அல்லாத மற்ற இடங்களிலும் பார்வை செலுத்துவற்குத் தடையில்லை என்பதை அறியலாம். ஆனால் பார்வையை வானத்தை நோக்கி உயர்த்துவதற்குத் தடை உள்ளது.

தொழும் போது தங்கள் பார்வைகளை வானத்தில் உயர்த்துகின்றவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களின் பார்வை பறிக்கப் பட்டு விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல்: புகாரி 750

நபி (ஸல்) அவர்கள், அத்தஹிய்யாத்தில் ஆட்காட்டி விரலை அசைக்கும் போது, அதை நோக்கி பார்வையைச் செலுத்துவார்கள் என்று ஹதீஸ் உள்ளது.

தொழுகையில் இருக்கும் போது ஒருவர் கல்லை அசைத்துக் கொண்டிருப்பதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கண்டார்கள். தொழுகை முடிந்ததும் அவரிடம், "தொழுகையில் இருக்கும் போது நீ கல்லை அசைக்காதே! இது ஷைத்தானின் வேலை! மாறாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வது போன்று நீ செய்'' என்று கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படிச் செய்வார்கள்?'' என்று அவர் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி), தமது வலது கையை வலது தொடையில் வைத்து கிப்லா திசையில் பெருவிரலுக்கு அடுத்த விரலை வைத்து இஷாரா செய்து அதை நோக்கி தமது பார்வையை செலுத்தினார்கள். பிறகு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யக் கண்டேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ பின் அப்துர் ரஹ்மான், 

நூல்: நஸயீ 1148

 

குறிப்பு : 2004 ஏப்ரல் மாத ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி

January 6, 2015, 12:18 PM

இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மஹ்ரிப் தொழலாமா?

? வேலையின் காரணமாக ஒரு நாள் மக்ரிப் தொழுகையை விட்டு விட்டேன். இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டு விட்டது. இப்போது நான் மக்ரிப் தொழ வேண்டுமா? அல்லது இஷா தொழ வேண்டுமா? அல்லது இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மக்ரிப் தொழலாமா? விளக்கவும்

ஏ. ஜெஹபர் சாதிக், அதிராம்பட்டிணம்


அகழ்ப் போரின் போது சூரியன் மறைந்த பின் உமர் (ரலி) அவர்கள் குறைஷிக் காஃபிர்களை ஏசிக் கொண்டே வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே!'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அஸர் தொழவில்லை'' என்று கூறினார்கள். நாங்கள் பத்ஹான் என்ற பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். அதன் பின் மக்ரிப் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூற்கள்: புகாரி 596, முஸ்லிம் 1000, திர்மிதி 164

இந்த ஹதீஸில் மக்ரிப் தொழுகையின் நேரம் வந்து விட்டாலும் அஸரை முதலில் தொழுத பின்னரே நபி (ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகின்றார்கள். இதை வைத்து தொழுகையைக் களாச் செய்யலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

இதே அறிவிப்பு நஸயீயில் 655வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் போர்க் காலங்களில் தொழுவது தொடர்பான 4:102 வசனம் அருளப்படுவதற்கு முன்னர் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வசனம் அருளப்பட்ட பின் போர்க் காலங்களில் கூட தொழுகையை நேரம் தவறித் தொழுவதற்குத் தடை விதிக்கப் பட்டு விட்டது.

தூக்கம், மறதி ஆகிய காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் தொழுகையை நேரம் தவறித் தொழுவதற்கு அனுமதியில்லை. எனினும் தூக்கம், மறதி அல்லாத வேறு காரணத்திற்காக லுஹர் தொழுகையை அஸருடனும், மக்ரிப் தொழுகையை இஷாவுடனும் சேர்த்து, "ஜம்உ' ஆக தொழுவதற்கு அனுமதியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் மக்ரிப், இஷாவை ஏழு ரக்அத்துகளாகவும், லுஹர் அஸரை எட்டு ரக்அத்துகளாகவும் தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: புகாரி 543

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பயமோ, மழையோ இன்றி லுஹரையும் அஸரையும் ஒரு நேரத்திலும், மக்ரிபையும் இஷாவையும் ஒரு நேரத்திலும் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: திர்மிதீ 172

தொழுகையை நேரம் தவறித் தொழுவதற்குத் தடை விதிக்கப் பட்டு விட்டாலும், இங்கு அகழ் போர் குறித்த புகாரி 596வது ஹதீஸை நாம் ஆதாரமாகக் காட்டியிருப்பது, தொழுகையை வரிசை மாற்றித் தொழாமல் வரிசைப் படியே தொழ வேண்டும் என்பதற்காகத் தான்.

இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டு விட்டாலும் மக்ரிப் தொழாமல் இஷா தொழுவதற்கு அல்லது இஷாவுக்குப் பின் மக்ரிப் தொழுவதற்கு அனுமதியில்லை. இமாம் ஒரு ரக்அத் முடித்த பின் இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மக்ரிப் தொழுது விட்டு பின்னர் இஷாவைத் தனியாகத் தொழுது கொள்ளலாம்.

இமாமுடைய நிய்யத்தும் பின்பற்றித் தொழுபவரின் நிய்யத்தும் வெவ்வேறாக இருக்கலாம் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. கடமையான தொழுகையைப் பிற்படுத்தும் ஆட்சியாளர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, உரிய நேரம் வந்ததும் தொழுகையை நிறைவேற்றி விட்டு ஜமாஅத் நடக்கும் போது அதை நஃபிலாகத் தொழுது கொள்ளுமாறு ஒரு நபித்தோழருக்குக் கட்டளையிட்ட செய்தி முஸ்லிமில் 1027வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: 2004 மார்ச் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

January 2, 2015, 7:42 AM

தொழுகையில் உலக சிந்தனை கெட்ட எண்ணங்கள் ஏற்பட்டால் தொழுகை கூடுமா?

? தொழுகையில் (நம்மையறியாமல்) ஏற்படும் உலக சிந்தனைகளால் தொழுகைக்குப் பாதிப்பு உண்டா? தொழுகையில் கெட்ட எண்ணங்கள் ஏற்பட்டால் தொழுகை கூடுமா?

எஸ். அப்துல் ரஷீது, கொளச்சல்

தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்பு கொடுக்கப்படும் போது பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்று பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவருடைய மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, "இதை நீ நினைத்துப் பார், அதை நீ நினைத்துப் பார்' என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 608

தொழுகையில் உலக எண்ணங்களை ஏற்படுத்துவது ஷைத்தானின் செயல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இதே செய்தி புகாரியில் 1231வது ஹதீஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்கண்ட இதே செய்தியுடன், "உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்துக்கள் மூன்றா அல்லது நான்கா என்று தெரியாவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தா செய்து கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

உலக எண்ணங்கள் ஏற்பட்டு விட்டால் தொழுகை முறிந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறாமல், ரக்அத்தில் மறதி ஏற்பட்டால் ஸஜ்தா செய்து கொள்ளுமாறு கூறுகின்றார்கள். இதிலிருந்து தொழுகையில் உலக எண்ணங்கள் ஏற்படுவதால் தொழுகை முறியாது என்பதை அறியலாம். அதே சமயம் இயன்ற வரை தொழுகையில் கவனம் சிதறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.

(அல்குர்ஆன் 23:1,2)

தொழுகையில் ஓதப்படும் வசனங்கள் மற்றும் திக்ருகளின் பொருளை உணர்ந்து தொழும் போது, இது போன்ற எண்ணங்கள் ஏற்படுவதை ஓரளவு தடுக்க முடியும்.

(குறிப்பு: 2004 பிப்ரவரி ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை)

December 31, 2014, 8:03 AM

ஃபஜ்ரு ஜமாஅத் நடக்கும் பொழுது சுன்னத் தொழுதுவிட்டுதான் ஜமாஅத்தில் கலந்து கொள்ள வேண்டுமா?

? ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஃபஜ்ரு ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது பள்ளிக்கு வந்தால் முதலில் சுன்னத் தொழுதுவிட்டு பிறகு ஜமாஅத் தொழுகையில் சேர்கின்றார்கள். இது பற்றிக் கேட்டதற்கு இந்த ஹதீஸைக் கூறுகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் பள்ளிக்கு வருகின்றார்கள். ஒரு ஓரமாக நின்று சுன்னத்தைத் தொழுது விட்டு பிறகு ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்கின்றார்கள் என்ற செய்தி தஹாவீயின் ஷரஹ் மஆனில் ஆஸார் என்ற நூலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார்கள். இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதா?

ஈ. இஸ்மாயீல் ஷெரீப், பெரம்பூர், சென்னை.

சுப்ஹ் தொழுகைக்காக மக்கள் வரிசையில் நிற்கும் போது அபூதர்தா (ரலி) அவர்கள் பள்ளிக்குள் வந்தார்கள். பள்ளியின் ஓரத்தில் இரண்டு ரக்அத் தொழுதார்கள். அதன் பின்மக்களோடு சேர்ந்து அந்தத் தொழுகையில் கலந்து கொண்டார்கள் என்று ஷரஹ்மஆனில் ஆஸார் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, "இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் இவ்வாறு செய்தார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

இது தான் நீங்கள் குறிப்பிடும் செய்தியாகும். இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தியதாகவோ அல்லது நபித்தோழரின் செயலை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததாகவோ கூறப்படவில்லை. மேலும் இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ள அபூபிஷ்ர் அர்ரிக்கா என்பவரைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஒருவேளை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக வைத்துக் கொண்டாலும் நபி (ஸல்) அவர்களது அங்கீகாரத்துடன் நடந்தது என்று கூற முடியாது. ஏனெனில் இகாமத் சொல்லப்பட்ட பின் சுன்னத் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். தடை செய்யப்படுவதற்கு முன்னர் இது நடைபெற்றிருந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. தடை செய்யப்பட்ட பின்னர் இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. நபி (ஸல்) அவர்கள் தடுத்ததை நபித்தோழர்கள் செய்திருக்க மாட்டார்கள்.

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு எதனையும் தொழலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 

நூல் : முஸ்லிம் 1161, திர்மிதீ 386

நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருக்கும் போது, அதைவிட்டு விட்டு நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இல்லாத ஆதாரமற்ற செய்திகளைக் காட்டி மத்ஹபுகளை நியாயப்படுத்த முனையக் கூடாது.

 

(குறிப்பு : 2003 டிசம்பர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 27, 2014, 7:37 AM

பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட ஜனாஸாவை திரும்ப அடக்கம் செய்யும் பொழுது ஜனாஸா தொழுகை நடத்த வேண்டுமா?

ஒரு முஸ்லிம் இறந்த பிறகு அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தி அடக்கம் செய்து விட்டனர். பின்னர் இறந்தவர் இயற்கை மரணம் இல்லை; கொலை என்று கூறி மறுபடியும் தோண்டி மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு மீண்டும் அடக்கம் செய்யப் பட்டார். இவருக்கு மறுபடியும் ஜனாஸா தொழுகை நடத்தப் பட வேண்டுமா?

ஏ. அமீன், கொடிக்கால் பாளையம்

! ஜனாஸா தொழுகை என்பது இறந்து விட்ட ஒரு முஸ்லிமுக்காக மற்ற முஸ்லிம்கள் செய்ய வேண்டிய ஒரு பிரார்த்தனையாகும். முதலில் அடக்கம் செய்யும் போது ஜனாஸா தொழுது விட்டால் மீண்டும் தோண்டி அடக்கும் போது தொழ வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இறந்ததற்காகத் தான் தொழுகை நடத்தப் படுகின்றதே தவிர அடக்கம் செய்வதற்கும் ஜனாஸா தொழுகைக்கும் சம்பந்தம் இல்லை.

 

(குறிப்பு: 2003 அக்டோபர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 25, 2014, 7:01 AM

அத்தாஹிய்யாத்தில் தொழுகையில் இணையும் போது எப்படி சேர வேண்டும்?

? தொழுகையில் இமாம் கடைசி ரக்அத்தில் அத்தஹிய்யாத்தில் இருக்கும் போது நாம் தொழுகைக்கு கைகளை உயர்த்தி தக்பீர் கட்டிக் கொண்டு, வஜ்ஜஹ்து ஓதி விட்டு செல்ல வேண்டுமா? அல்லது கைகளை உயர்த்தி அப்படியே செல்ல வேண்டுமா?

இஸ்மாயீல் ஷெரீப், சென்னை

தக்பீர் கூறி கைகளை உயர்த்திய பின் இமாம் எந்த நிலையில் இருக்கின்றாரோ அந்த நிலைக்குத் தான் நாம் செல்ல வேண்டும்.

இமாம் ஏதேனும் ஒரு நிலையில் இருக்கும் போது உங்களில் எவரேனும் தொழுவதற்கு வந்தால் அவர் இமாம் செய்வது போலவே செய்யட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)

நூல்கள் : திர்மிதி 539, இப்னு அபீஷைபா

 

(குறிப்பு: 2003 செப்டம்பர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 24, 2014, 6:49 AM

இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதாரம் உள்ளதா?

? ஒரு குறிப்பிட்ட நேரத் தொழுகையில் ஒரு ஜமாஅத் முடிந்த பின்னர் இரண்டாவது ஜமாஅத் தொழுவதற்கு ஆதாரம் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதாரம் உள்ளதா? விளக்கவும்.

ஏ.எல். ஹாஸிம், ராஸல் கைமா

! நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் யார்?'' என்று கேட்டார்கள். ஒரு மனிதர் முன் வந்தார். வந்த மனிதர் அவருடன் சேர்ந்து தொழுதார்.

அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி), 

நூல் : திர்மிதி 204, அஹ்மத் 10596

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவருக்கு தர்மம் செய்யக் கூடியவர் யார்? அவர் இவரோடு சேர்ந்து தொழட்டும்'' என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி), 

நூல் : அஹ்மத் 10980

ஜமாஅத் முடிந்த பின்னர் வந்த மனிதரை தனியாகத் தொழ விடாமல், ஏற்கனவே தொழுத ஒருவரை அவருக்கு ஜமாஅத் நடத்துமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். அவ்வாறு தொழுவது தனியாகத் தொழுவதை விட நன்மையானது எனவும் குறிப்பிடுகின்றார்கள். "இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் யார்?'' என்ற வாசகத்திலிருந்து இதை அறியலாம்.

எனவே முதல் ஜமாஅத் முடிந்த பின்னர் தாமதமாக வருபவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஜமாஅத்தாகத் தொழுவதே சிறந்தது. ஒருவர் மட்டும் வந்தால், ஏற்கனவே ஜமாஅத்தில் தொழுதவருடன் சேர்ந்தாவது ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.

தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு நன்மை உடையது என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன.

கீழ்க்காணும் ஆக்கங்க்களையும் பார்க்கவும்

http://www.onlinepj.com/aayvukal/2nd_jamath/#.VJpBUF4Dpg

http://www.onlinepj.com/aayvukal/2nd_jamath_marupuku_marupu/#.VJpBbV4Dpg

http://www.onlinepj.com/?action=admin_article&id=7956

 

(குறிப்பு: 2003 செப்டம்பர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 24, 2014, 6:44 AM

சூரியன் மறையாத பகுதிகளில் எவ்வாறு தொழுகை நேரத்தை கணக்கிடுவது?

? நார்வே நாட்டிலுள்ள திபெட் ஜெபர்ஜன் என்ற இடத்தில் ஆண்டிற்கு ஒரு முறை தொடர்ந்து105 நாட்கள் சூரியன் மறையாமல் பகலாகவே இருக்கும். இரவே கிடையாது. அப்படியானால் அங்கு ஐந்து நேரத் தொழுகைகளை எவ்வாறு தொழுவது? இந்தக் கேள்விக்கு வேறொரு மாதப் பத்திரிகையில் பதில் கூறும் போது, லுஹர், அஸர் மட்டுமே அங்கு கடமை என்றும் சுபுஹ், மக்ரிப், இஷா தொழுகைகளைத் தொழ வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார்கள். ஆனால் தஜ்ஜால் சம்பந்தப்பட்ட ஹதீஸில் இது போன்ற கட்டத்தில் தொழுகையைக் கணித்துத் தொழுமாறு கூறப்பட்டுள்ளதே! விளக்கவும்.

கே. அப்துர்ரஹ்மான், புதுக்கல்லூரி, சென்னை.

! குர்ஆன் ஹதீஸ் பற்றிய ஞானம் இல்லாததால், "கடமையான தொழுகைகளைத் தொழ வேண்டியதில்லை' என்ற தவறான தீர்ப்பை அந்தப் பத்திரிகையில் கூறியுள்ளார்கள். குர்ஆன் ஹதீஸ் தேவையில்லை, மத்ஹபுகள் கூறும் தீர்ப்பைத் தான் நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுவதால் ஏற்படும் மிக மோசமான விளைவு இது! மத்ஹபுகளைப் பின்பற்றுவது தவறான கொள்கை என்பதற்கு இது சிறந்த எடுத்துக் காட்டு!

மத்ஹபுகளைப் பொறுத்த வரை இன்றைய நவீன யுகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அவற்றின் மூலம் தீர்வு சொல்ல இயலாது. இந்தக் காலத்தில் ஏற்படும் பிரச்சனையை அப்போதே சிந்தித்து,தீர்வு சொல்வது சாத்தியமில்லை.

ஆனால் குர்ஆன் ஹதீஸ் என்பது அப்படியல்ல! அவை எக்காலத்திற்கும் ஏற்றவை! மனிதனைப் படைத்த அல்லாஹ்வினாலும், மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுவதற்காக அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களாலும் சொல்லப்பட்ட செய்திகள் அவை என்பதால் இறுதி நாள் வரை ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அவற்றில் நிச்சயமாக தீர்வு இருக்கும்! அவற்றை ஆய்வு செய்தால் அந்தத் தீர்வை நாம் அடைய முடியும்.

"பகலில் சூரியன் உதிக்கும் நாடு' என்று அழைக்கப்படும் நார்வே நாட்டைப் பற்றியோ அல்லது இது போன்ற ஏனைய துருவப் பகுதிகளைப் பற்றியோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் அது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பதைக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்கள். அது தான் நீங்கள் குறிப்பிடும் தஜ்ஜால் குறித்த செய்தியாகும்.

"அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தஜ்ஜால் பூமியில் எவ்வளவு காலம் உயிர் வாழ்வான்?''என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள், "அவன் பூமியில் நாற்பது நாட்கள் தங்குவான். அன்று ஒரு நாள் ஒரு வருடம் போலவும், இன்னொரு நாள் ஒரு மாதம் போலவும்,மற்றொரு நாள் ஒரு வாரம் போலவும், ஏனைய நாட்கள் அனைத்தும் உங்களது இந்த நாட்களைப் போலவும் இருக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடம் போன்று இருக்கும் ஒரு நாளில் ஒரு நாளுக்குரிய தொழுகை எங்களுக்குப் போதுமானதா?'' என்று நாங்கள் கேட்டோம். "அவ்வாறல்ல! அதன் நேரத்தை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர் : நவாஸ் பின் ஸம்ஆன் (ரலி)

நூல்கள் : முஸ்லிம் 5629, திர்மிதி 2166

இந்தச் செய்தியின் அடிப்படையில் பகல் முழுவதும் சூரியன் இருக்கும் போது தொழுகையைக் கணித்து, ஐந்து வேளைத் தொழுகையையும் தொழுதாக வேண்டும்.

 

(குறிப்பு: 2003 செப்டம்பர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 24, 2014, 6:34 AM

போர் நேரங்களில் தொழுகையில் குனூத் ஓதுவதற்கு ஆதாரம் இருக்கின்றதா?

? இராக் போரின் போது இங்குள்ள பள்ளி ஒன்றில் ஃபஜ்ரு மற்றும் அஸர் தொழுகைகளில் குனூத் ஓதினார்கள். இதற்கு ஆதாரம் உள்ளதா? நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குனூத் ஓதிய போது அதை அல்லாஹ் தடை செய்து விட்டதாக ஹதீஸ் உள்ளதே! விளக்கவும்.

இஸ்மாயீல் ஷெரீப், சென்னை

நபி (ஸல்) அவர்கள் ருகூவுக்குப் பிறகு ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த இணை வைப்பவர்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கும் அந்த இணைவைப்பவர்களுக்கும் இடைய ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிக்கீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிக்கீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : புகாரி 1002

இந்த ஹதீஸின் அடிப்படையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு சோதனை ஏற்படும் காலத்தில் எதிரிகளுக்கு எதிராகப் பிரார்த்தித்து குனூத் ஓதலாம் என்று விளங்குகின்றது. ஆனால் திருக்குர்ஆனின் 3:128வது வசனம் அருளப்பட்டவுடன் இவ்வாறு குனூத் ஓதுவது தடை செய்யப்பட்டதாக சில ஹதீஸ்கள் உள்ளதால் அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின் போது தமது தலையை உயர்த்தி, "அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து'' என்று சொல்- விட்டுப் பிறகு, "இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையி-ருந்து அப்புறப்படுத்துவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே மகத்துவமும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், "(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்'' என்ற (3:128) வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் : புகாரி 7346

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதை அல்லாஹ் 3:128 வசனத்தை அருளி தடை செய்து விட்டதாகக் கூறப்படுகின்றது. எனவே இதன் அடிப்படையில் எவருக்கும் எதிராகப் பிரார்த்தனை செய்து குனூத் ஓதுவது கூடாது என்று சிலர் வாதிக்கின்றனர்.

இதே கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறைபாடும் இல்லை. எனினும் இந்த ஹதீஸ்களுக்கு மாற்றமாக உஹதுப் போரின் போது தான் 3:128 வசனம் இறங்கியது என்ற கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன. அவையும் ஆதாரப்பூர்வமானவையாக இருப்பதால் அது குறித்தும் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்களின் முன் பற்கள் உடைக்கப்பட்டன. அவர்களுடைய தலையில் காயம் ஏற்பட்டது. அவர்கள் இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு, "தங்களுடைய நபிக்குக் காயத்தை ஏற்படுத்திய, தங்களது நபியின் முன் பற்களை உடைத்து விட்ட சமுதாயம் எப்படி வெற்றி பெறும்? அவரோ அவர்களை அல்லாஹ்வின் பாதையில் அழைக்கின்றார்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், "(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்'' என்ற (3:128) வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : முஸ்-ம் 3346

ஒரே வசனம் அருளப்பட்டது குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. இரண்டு சந்தர்ப்பத்திலுமே இந்த வசனம் அருளப்பட்டது என்ற கருத்து உள்ளது. ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் இரண்டு சந்தர்ப்பங்களிலும் அருளப்பட்டிருந்தால் குர்ஆனில் இரண்டு இடங்களில் அந்த வசனம் இருக்க வேண்டும். ஏனெனில் பல தடவை அருளப்பட்ட வசனங்கள் பல தடவை குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த வசனம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே உள்ளது.

இந்த ஒரு வசனம் அருளப்பட்டதற்குத் தான் இரு வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எனவே இரண்டில் ஏதாவது ஒன்று தான் சரியாக இருக்க முடியும்.

ஒன்று, நபித்தோழர்களைக் கொன்ற கூட்டத்தினருக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதிய போது இறங்கியிருக்க வேண்டும்.

அல்லது உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்கள், முஷ்ரிக்குகளைச் சபித்த போது இறங்கியிருக்க வேண்டும்.

இதில் எந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வசனம் இறங்கியது என்பதை நாம் ஆய்வு செய்யும் போது,நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதைக் கண்டித்து இவ்வசனம் அருளப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

குர்ஆனை மனனம் செய்த 70 நபித்தோழர்களை, உடன்படிக்கைக்கு மாற்றமாகக் கொலை செய்த கூட்டத்திற்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இதைக் கண்டித்து வசனம் அருளும் அளவுக்கு இதில் வரம்பு மீறல் எதுவும் இல்லை. அநீதி இழைத்த ஒரு கூட்டத்திற்கு எதிராகப் பிரார்த்தனை செய்வது அல்லாஹ் அங்கீகரித்த ஒரு செயல் தான். இதற்கு குர்ஆனிலேயே சான்றுகள் உள்ளன.

"என் இறைவா! பூமியில் வசிக்கும் (உன்னை) மறுப்போரில் ஒருவரையும் விட்டு வைக்காதே!'' என்று நூஹ் கூறினார்.

(அல்குர்ஆன்71:26)

இந்த வசனத்தில் இறை மறுப்பாளர்களை அழித்து விடுமாறு நூஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றார்கள். அதை அல்லாஹ்வும் ஏற்றுக் கொண்டு பெருவெள்ளத்தின் மூலம் அம்மக்களை அழித்தான். அநியாயக்காரர்களுக்கு எதிராகப் பிரார்த்தனை செய்வது நபிமார்களின் நடைமுறைக்கு மாற்றமானதல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.

அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை அஞ்சிக் கொள், அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(நூல்: புகாரி 1496)

எனவே பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை விளங்க முடிகின்றது.

குர்ஆனை மனனம் செய்தவர்கள் மிகவும் குறைவான அந்தக் காலத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட காரிகளை படுகொலை செய்தது மிகப் பெரும் பாதிப்பை நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அந்தக் கூட்டத்தினருக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இது அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயல் தான். இதைக் கண்டித்து அல்லாஹ் வசனம் அருளினான் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.

"அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை'' என்று அல்லாஹ் அந்த வசனத்தில் கூறுகின்றான். அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் எந்தச் செயலும் இந்தச் சம்பவத்தில் நடக்கவில்லை. அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது அவனது அதிகாரத்தில் தலையிடுவதாக ஒரு போதும் ஆகாது. இன்னும் சொல்வதென்றால் இப்படிப் பிரார்த்திப்பது அல்லாஹ்வின் அதிகாரத்தை, அவனது வல்லமையை நிலை நிறுத்துவதாகவே அமைந்துள்ளது. எனவே நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிக்குகளுக்கு எதிராக குனூத் ஓதிய போது இந்த வசனம் அருளப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அதே சமயத்தில் உஹதுப் போரின் போது இந்த வசனம் அருளப் பட்டிருக்க நியாயமான காரணங்கள் உள்ளன.

உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்ட போது, நபியின் முகத்தில் காயம் ஏற்படுத்திய இந்தச் சமுதாயம் எப்படி வெற்றி பெறும்? என்று கேட்கின்றார்கள். இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவில்லை. தாம் ஒரு நபியாகவும், நேர்வழிக்கு மக்களை அழைத்துக் கொண்டும் இருப்பதால் தம்மைக் காயப்படுத்தியவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று அவர்களாகவே முடிவு செய்வது போல் இந்த வார்த்தைகள் அமைந்துள்ளன.

தாங்க முடியாத துன்பம் ஏற்படும் போது மனிதர்கள் இது போன்ற வார்த்தைகளைக் கூறி விடுவதுண்டு. பாதிக்கப்பட்டவனின் வாயில் இத்தகைய வார்த்தைகள் வெளி வருவதை அல்லாஹ்வும் பொருட்படுத்துவது கிடையாது என்பதை திருக்குர்ஆன் 4:148வசனத்திலிருந்து அறியலாம்.

ஆனால் இறைவனின் தூதர் இவ்வாறு கூறினால், ஒருவரை வெற்றி பெற வைக்கவும்,தோல்வியுறச் செய்யவும் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதோ என்ற கருத்தை அது விதைத்து விடும். எனவே தான் "எனக்கு இரத்தச் சாயம் பூசியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்?'' என்று வேதனை தாளாமல் கூறியதைக் கண்டிக்கிறான்.

உம்மைத் தாக்கியவர்களுக்குக் கூட நான் நினைத்தால் வெற்றியளிப்பேன்; அல்லது அவர்களை மன்னித்தும் விடுவேன். இது எனது தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ள விஷயம். இதில் தலையிட ஒரு நபிக்குக் கூட உரிமையில்லை என்ற தோரணையில் தான் இவ்வாறு இறைவன் கூறுகிறான். இறைவனுடைய அதிகாரத்தில் தமக்குப் பங்கு இருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைக்க மாட்டார்கள்; என்றாலும் இது போன்ற வார்த்தைகள் கூட இறைவனுக்குக் கோபம் ஏற்படுத்துகிறது என்பதை இந்த வசனம் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.

இதை வைத்துப் பார்க்கும் போது, உஹதுப் போர் சமயத்தில் இந்த வசனம் அருளப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. மேலும் இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களும் உஹதுப் போர் குறித்த வசனங்களாகவே உள்ளன என்பதும் இந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிக்குகளுக்கு எதிராக குனூத் ஓதியதைத் தடை செய்து 3:128 வசனம் அருளப்படவில்லை என்பது தெளிவாகின்றது.

புகாரியில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் 4560வது ஹதீஸில், "நபி (ஸல்) அவர்கள் எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் குனூத் ஓதுவார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது. 70 காரிகள் கொல்லப்பட்ட இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குனூத் ஓதவில்லை; பொதுவாக யாருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் குனூத் ஓதுவார்கள் என்று இந்த வாசகம் தெரிவிக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதுவது பற்றித் தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது என்று ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் முஸ்-ம் மற்றும் பல நூல்களில் கூறப்படும் காரணம் தான், அதாவது உஹதுப் போரின் போது அருளப்பட்டது என்பது தான் ஏற்புடையதாக உள்ளது.

மேலும் குனூத் பற்றியே இவ்வசனம் அருளப்பட்டது என்ற ஹதீஸ் இப்னு ஷிஹாப் எனும் ஸுஹ்ரி வழியாகவே அறிவிக்கப்படுகின்றது. அவர் நபித்தோழரிடம் கேட்டு அறிவிப்பது போல் புகாரியின் வாசக அமைப்பு இருந்தாலும், முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இதே ஹதீஸின் வாசக அமைப்பு ஸுஹ்ரி அவர்கள் நபித்தோழர்கள் வழியாக இல்லாமல் சுயமாக அறிவிக்கின்றார் என்று தெளிவுபடுத்துகின்றது. "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்ட கொலையாளிகளைச் சபித்து குனூத் ஓதினார்கள். மேற்கண்ட வசனம் அருளப்பட்டவுடன் குனூத்தை விட்டு விட்டார்கள் என்று நமக்குத் தகவல் கிடைத்துள்ளது''என்று ஸுஹ்ரி கூறியதாக முஸ்லிம் 1082 ஹதீஸ் கூறுகின்றது.

இவ்வசனம் குனூத் குறித்துத் தான் அருளப்பட்டது என்ற விபரத்திற்கு நபித்தோழர்கள் வழியான சான்று ஏதும் ஸுஹ்ரியிடம் இல்லை என்பதை இதி-ருந்து அறியலாம். ஸுஹ்ரியின் கூற்றுடன் ஹதீஸ் கலந்து விட்டது என்று ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்களும் தமது ஃபத்ஹுல் பாரியில் கூறுகின்றார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதாகக் கூறப்படும் செய்தி மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது. அதைத் தடை செய்து வசனம் இறங்கியதாகக் கூறப்படும் செய்திகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இல்லை.

சமுதாயத்திற்குச் சோதனையான கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் கடமையான தொழுகைகளில் குனூத் ஓதியுள்ளார்கள் என்பதால் நாமும் இது போன்ற கட்டங்களில் குனூத் ஓதலாம்.

 

(குறிப்பு: 2003 ஜூலை மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 23, 2014, 5:46 AM

ஹஜாத் தொழுகை என்று உள்ளதா? இதில் கலந்து கொள்ளலாமா?

? இங்கு (புருனையில்) அமெரிக்காவின் அராஜகத்திற்கு எதிராக ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்கு முன்னும் பின்னும் "ஹாஜத்' தொழுகை என்று நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுகின்றனர். இந்தத் தொழுகையில் கலந்து கொள்ளலாமா?

அப்துர் ரஹீம், புருனை

நபி (ஸல்) அவர்கள் "ஹாஜத்' தொழுகை என்ற பெயரில் தொழுததாக ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸையும் காண முடியவில்லை. ஹாஜத் தொழுகை குறித்து திர்மிதியில் ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும்.

"யாருக்காவது அல்லாஹ்விடமோ அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும். அதை அழகிய முறையில் செய்யட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும். பின்பு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, "லாயிலாஹ இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீம். சுப்ஹானல்லாஹி ரப்பில் அர்ஷில் அழீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்அலுக மூஜிபாதி ரஹ்மதிக, வஅஸாயிம மஃபிரதிக. வல்கனீமத மின் குல்லி பிர்ரின் வஸ்ஸலமாத மின் குல்- இஸ்மின் லாததஃலீ தன்பன் இல்லா கஃபர்தஹு வலாஹம்மன் இல்லா ஃபர்ரஜ்தஹு வலா ஹாஜதன் ஹிய லக ரிளன் இல்லா களைதஹா யா அர்ஹமர் ராஹிமீன்' என்று கூறட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி),

நூல் : திர்மிதி 441

"இதன் அறிவிப்பாளர் வரிசையில் குறை கூறப்பட்டுள்ளது. ஃபாயித் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பலவீனமானவர்' என்று திர்மிதி இமாம் கூறுகின்றார்கள்.

இந்தப் பெயரில் தொழுகை இல்லை என்றாலும் தொழுகையைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும் என்பது குர்ஆனின் கட்டளையாகும்.

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.

(அல்குர்ஆன் 2:45)

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்!

(அல்குர்ஆன் 2:153)

நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தொழுவார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி),

நூல் : அபூதாவூத் 1124

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் ஏதேனும் ஒரு நாட்டம் நிறைவேற வேண்டும் என்பதற்காகத் தொழுவது மார்க்கத்தில் வலியுறுத்தப் பட்டுள்ள ஒன்று தான்.

இந்தத் தொழுகையில் கலந்து கொள்ளலாமா? என்று நீங்கள் கேட்டிருப்பதன் மூலம் ஜமாஅத்தாகத் தொழுவதாகத் தெரிகின்றது. இவ்வாறு ஜமாஅத்தாகத் தொழுவது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத ஒன்றாகும். அவரவர் தனித்தனியாகத் தொழுது இது போன்ற சோதனைகளை விட்டும் பாதுகாப்பு தேடலாம்.

 

 

(குறிப்பு: 2003 ஜூலை மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 23, 2014, 5:41 AM

ஜுமுஆ தொழுகையில் ருகூவில் நீண்ட துஆ ஓதுவதற்கு ஆதாரம் உள்ளதா?

? ஜும்ஆ தொழுகையின் முதல் ரக்அத்தில் ருகூவு செய்து எழுந்து நிற்கும் அந்த சிறு நிலையில் ரப்பனா லகல் ஹம்து சொல்லியதும் இமாம் ஸுஜூது செய்யாமல் தொடர்ந்து நீண்ட துஆவை ஓதுகின்றார். இதற்கு ஆதாரம் உள்ளதா?

 

இமாம், ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா கூறியதும், ரப்பனா லகல் ஹம்து மட்டும் தான் கூற வேண்டும் என்றில்லை. இந்த நிலையில் ஓதுவதற்கு நபி (ஸல்) அவர்கள் பல்வேறு திக்ருகளை கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும்,

"ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வல் அர்ழி வமில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அஹ்லஸ் ஸனாயி வல் மஜ்த். அஹக்கு மா காலல் அப்து. வகுல்லுனா லக்க அப்துன். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத்த வல முஃத்திய லிமா மனஃத்த. வல யன்ஃபஃ தல்ஜத்தி மின்கல் ஜத்'' என்று கூறுவார்கள்.

பொருள் : எங்கள் அதிபதியே! வானங்களும், பூமியும் நிரம்பும் அளவுக்கு நீ நாடும் இன்ன பிற பொருட்கள் யாவும் நிரம்பும் அளவுக்குப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நாங்கள் அனைவரும் உன் அடிமைகள் தாம். "இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடமிருந்து பயன் அளிக்காது' என்பது தான் அடியார்கள் கூறும் சொற்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்ததாகும்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),

நூல்:முஸ்லிம் 735 (தமிழாக்கம் 822)

இது போன்ற நீண்ட திக்ரை அந்த இமாம் ஓதியிருக்கலாம். அவர் என்ன ஓதினார் என்பது தெரிந்தால் தான் அது ஆதாரமானதா? இல்லையா என்று கூற இயலும். ஆயினும் ஜும்ஆ தொழுகையின் போது மட்டும் குறிப்பிட்டு எதையும் ஓதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

 

(குறிப்பு: 2003 ஜூலை மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 23, 2014, 5:36 AM

முதல் ஜமாஅத்தில் கிடைக்கும் நன்மை இரண்டாவது ஜமாஅத்தில் தொழுதால் கிடைக்குமா?

? ஜமாஅத் தொழுகை முடிந்த பின் இரண்டாவது ஜமாஅத் நடக்கின்றது. முதல் ஜமாஅத்தில் தொழுவதில் கிடைக்கும் நன்மை இரண்டாவது ஜமாஅத்தில் தொழுதால் கிடைக்குமா?

அதிரை அபூஷஹீத் தவ்லத், துபை

தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு நன்மை என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்களில் முதல் ஜமாஅத், இரண்டாவது ஜமாஅத் என்று பிரித்துக் கூறப்படாமல் பொதுவாக ஜமாஅத் என்றே கூறப்படுகின்றது. இதை வைத்து முதல் ஜமாஅத்திற்கும் இரண்டாவது ஜமாஅத்திற்கும் நன்மை வித்தியாசம் எதுவும் கிடையாது என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இது தவறாகும்.

பொதுவாக ஜமாஅத் தொழுகையை வலியுறுத்தும் ஹதீஸ்கள் அனைத்திலும் பள்ளியில் பாங்கு சொல்லி, நடத்தப்படும் முதல் ஜமாஅத்தையே குறிப்பதாக அமைந்துள்ளன. ஹதீஸ்களில் முதல் ஜமாஅத்திற்கென்று ஒரு முக்கியத்துவம் இருப்பதைக் காண முடிகின்றது.

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து,கள்ளிகளாக உடைக்கும் படி உத்தரவு பிறப்பித்து விட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்பு செய்யும் படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுவிக்கும் படி ஒருவருக்குக் கட்டளையிட்டு விட்டு, (ஜமாஅத் தொழுகைக்கு வராத) மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்து விட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. என் உயிர் எவன் கைவசத்திலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஒரு எலும்போ அல்லது ஆட்டின் இரு குளம்புகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் இஷா தொழுகையில் கலந்து கொள்வார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 644, 7224

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், பள்ளியில் பாங்கு சொல்லி நடத்தப்படும் முதல் ஜமாஅத்திற்கு வராதவர்களைத் தான் கண்டிக்கின்றார்கள். பள்ளியில் இஷா தொழுகையின் ஜமாஅத் எட்டு மணிக்கு என்றால் பத்து மணிக்குக் கூட இரண்டாவது ஜமாஅத் நடத்தித் தொழ முடியும். ஆனால் இது முதல் ஜமாஅத்தில் தொழுததைப் போன்று நன்மையைப் பெற்றுத் தராது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

பொதுவாகவே முதல் ஜமாஅத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது ஜமாஅத்திற்குக் கொடுக்கவில்லை.

நபி (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் மிஹ்ஜன் (ரலி) இருந்தார். அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் சென்று (தொழுது விட்டு) திரும்பி வந்தார்கள். மிஹ்ஜன் (ரலி) அதே சபையில் இருந்தார். "நீ தொழாமல் இருந்தது ஏன்?நீ முஸ்லிம் இல்லையா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மிஹ்ஜன் (ரலி), "அப்படியில்லை! நான் வீட்டிலேயே தொழுது விட்டேன்'' என்று கூறினார். நீ வீட்டில் தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு) வந்தால் மக்களோடு சேர்ந்து தொழு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புஸ்ர் பின் மிஹ்ஜன்,

நூற்கள் : நஸயீ 848, அஹ்மத் 15799

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவருக்கு தர்மம் செய்யக் கூடியவர் யார்? அவர் இவரோடு சேர்ந்து தொழட்டும்'' என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி),

நூல் : அஹ்மத் 10980

பாங்கு சொல்லப்பட்டு முதல் ஜமாஅத் நடைபெறும் போது, தொழாமல் இருந்த நபித்தோழரைப் பார்த்து, நீ முஸ்லிம் தானா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு,ஜமாஅத்தோடு சேர்ந்து தொழுதாக வேண்டும் என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் அதே சமயம் இரண்டாவது ஜமாஅத் நடைபெறும் போது எல்லோரும் அதில் சேர்ந்து தொழ வேண்டும் என்று கூறவில்லை. இதிலிருந்து முதல் ஜமாஅத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் இரண்டாவது ஜமாஅத்திற்கு இல்லை என்பதை அறியலாம்.

ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதற்கு அதிக நன்மை என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. முதல் ஜமாஅத்தில் தொழுவதற்குத் தனிச் சிறப்பு இல்லையென்றால் முதல் ஜமாஅத்தில் இரண்டாவது வரிசையில் தொழுபவரை விட, இரண்டாவது ஜமாஅத்தில் முதல் வரிசையில் தொழுபவருக்கு அதிக நன்மை என்றாகி விடும். இதிலிருந்து ஹதீஸ்களில் கூறப்படும் ஜமாஅத் தொழுகை என்பது பள்ளியில் நடத்தப்படும் முதல் ஜமாஅத்தையே குறிக்கும் என்பதை அறிய முடியும். எனவே இரண்டாவது ஜமாஅத்தை விட முதல் ஜமாஅத்தில் தொழுவது தான் சிறந்ததாகும்.

அதே சமயத்தில் இணை வைக்கும் இமாம், சுன்னத்துக்களைப் புறக்கணிக்கும் இமாம் போன்றவர்கள் தொழுகை நடத்தும் பள்ளிகளிலும், நபிவழியைப் பேணி தொழுபவர்களை ஜமாஅத்தில் சேர்ந்து தொழ விடாமல் தடுக்கும் பள்ளிகளிலும் முதல் ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுவதற்கு குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்களுக்கு வாய்ப்பில்லை. இதுபோன்ற மார்க்கக் காரணங்களுக்காக இரண்டாவது ஜமாஅத்தில் தொழும் போது, அது முதல் ஜமாஅத்தை விட சிறப்பு குறைந்ததாக ஆகாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

(குறிப்பு: 2003 ஜூலை மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 23, 2014, 5:29 AM

ஸஜ்தாவில் குர்ஆனை ஓதலாமா?

? தொழுகையில் ருகூவு மற்றும் ஸஜ்தாவில் குர்ஆன் ஓதுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்ற செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இதற்கு மாற்றமாக, “உமது இரட்சகனின் பெயரைக் கொண்டு தஸ்பீஹ் செய்வீராக” என்ற வசனம் இறங்கிய போது இதை உங்கள் ருகூவில் ஓதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பல்வேறு நூல்களில் இடம் பெற்றுள்ளதே, விளக்கவும்.

ஈ. இஸ்மாயில் ஷெரீப், சென்னை.

மகத்துவமிக்க உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக (அல்குர்ஆன் 56 : 96 பஸப்பிஹ் பிஸ்மி ரப்பிகல் அளீம்) என்ற வசனம் இறங்கிய போது இதை உங்கள் ருகூஃவில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உய்ர்ந்த உனது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 87 : 1 ஸப்பிஹிஸ்ம ரப்பிகல்அஃலா) என்ற வசனம் இறங்கியதும் இதை உங்களுடைய சுஜூதில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி),

நூல் : அபூதாவூத் 836

ருகூவில் அந்த வசனத்தை ஓதுங்கள் என்று இங்கு கூறப்படவில்லை. மாறாக இதை உங்கள் ருகூவில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. அதாவது இந்தவசனத்தை ருகூவில் செயல்படுத்துங்கள் என்பது தான் இதன் பொருள்.

அதனால் தான் ருகூவில், குர்ஆன் வசனத்தை அப்படியே ஓதாமல், சுப்ஹான ரப்பியல் அளீம் என்று ஓதுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். எனவே ருகூவில் குர்ஆன் ஓதக்கூடாது என்று இடம் பெறும் அறிவிப்புக்கு இது முரண்பாடானதல்ல.

 

(குறிப்பு: 2003 ஜுன் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 21, 2014, 7:17 AM

லுஹர் தொழாத நிலையில் அஸர் ஜமாஅத் நடந்தால் முதலில் எந்த தொழுகையை தொழவேண்டும்?

? பயணத்தில் இருக்கும் போது லுஹர் தொழுகை தொழ முடியாமல் இருந்து பிறகு பள்ளியில் அஸர் தொழுகை ஜமாஅத் நடைபெறும் போது ஜமாஅத்துடன் சேர்ந்து அஸர் தொழ வேண்டுமா? அல்லது லுஹரைத் தொழுத பிறகு தான் அஸர் தொழ வேண்டுமா?

ஏ.ஆகிலா பானு, வடகால்

அகழ்ப் போரின் போது சூரியன் மறைந்த பின் உமர் (ரலி), குறைஷிக் காஃபிர்களை ஏசிக் கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே, சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக நானும் அஸர் தொழவில்லை” என்று கூறினார்கள். நாங்கள் புத்ஹான் எனும் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பின்அஸர் தொழுதார்கள். அதன் பின் மக்ரிப் தொழுதார்கள்.

அறிவிப்பவர் – ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்கள் – புகாரி 596, முஸ்லிம் 1000, திர்மிதி 164, நஸயீ 1349

இந்த ஹதீஸில் குறைஷிக் காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களின் அஸர் தொழுகையை தாமதப் படுத்திவிட்ட போது, தவற விட்ட அஸர் தொழுகையை முதலில் நிறைவேற்றி விட்டுப் பின்னர் தான் மக்ரிப் தொழுகின்றார்கள். இந்த அடிப்படையில் லுஹரைத் தொழுத பிறகே அஸர் தொழவேண்டும்.

பள்ளியில் அஸர் தொழுகையின் ஜமாஅத் நடந்து கொண்டிருந்தால் அந்த ஜமாஅத்திலேயே சேர்ந்து லுஹர் தொழுகையை நிறைவேற்ற அனுமதி உள்ளது. ஜமாஅத் தொழுகையில் இமாமுடைய நிய்யத்தும் பின்பற்றித் தொழுபவருடைய நிய்யத்தும் வெவ்வேறாக இருப்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது விட்டு தமது சமுதாயத்தினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : புகாரி 700, 701

இந்த ஹதீஸில் முஆத் (ரலி) அவர்கள் கடமையான தொழுகையை நபி (ஸல்) அவர்களுடன் நிறைவேற்றி விட்டு அதே தொழுகைக்கு தமது சமுதாயத்தினரிடம் சென்று இமாமத் செய்துள்ளார்கள். அப்படியானால் முஆத் (ரலி) இமாமத் செய்யும் போது மீண்டும் அந்தத் தொழுகையைத் தொழுதிருக்க முடியாது. நஃபிலான தொழுகையைத் தான் தொழுதிருக்க வேண்டும். அதே சமயம் பின்பற்றித் தொழுபவர்கள் கடமையான தொழுகையை நிறைவேற்றுகின்றார்கள்.

இது போல் மற்றொரு ஹதீஸில், கடமையான தொழுகையின் ஜமாஅத்தைப் பிற்படுத்தும் ஆட்சியாளர்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, உரிய நேரம் வந்ததும் தொழுகையை நிறைவேற்றி விட்டு ஜமாஅத் நடக்கும் போது நஃபிலாகத் தொழ வேண்டும் என்று நபித் தோழருக்குக் கட்டளையிட்ட செய்தியையும் ஹதீஸ்களில் காண்கிறோம்.

எனவே இமாம் ஒரு தொழுகையைத் தொழுது கொண்டிருக்கும் போது, பின்பற்றித் தொழுபவர் வேறொரு தொழுகையைத் தொழுவதில் எந்தத் தவறும் இல்லை. எனவே லுஹர் தொழுத பின்னர் தனியாக அஸர் தொழுது கொள்ள வேண்டும். அஸர் தொழுதுவிட்டு லுஹர் தொழுவதற்கு அனுமதி இல்லை.

மேல் கூறப்பட்ட அஹழ்ப் போர் சம்பந்தமான ஹதீஸில், அஸர் தொழுகையை சூரியன் மறைந்த பிறகு நிறைவேற்றியிருப்பதால் இதை வைத்துக் கொண்டு தொழுகைகளை களா செய்யலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் மேற்கண்ட இதே அறிவிப்பு நஸயீயில் 655ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், போர்க் காலங்களில் தொழுவது சம்பந்தமான (4 - 102) வசனம் அருளப்படுவதற்கு முன்னர் இந்த சம்பவம் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வசனம் அருளப்பட்ட பிறகு அவ்வாறு தொழுவதற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

(குறிப்பு: 2003 ஜுன் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 21, 2014, 6:49 AM

வேலை பார்க்கும் இடத்தில் தொழ முடியவில்லையென்றால் களாச் செய்து தொழலாமா?

? எங்கள் வீட்டில் அனைவரும் கம்பெனியில் வேலை பார்க்கிறோம். அங்கு எங்களால் தொழ முடியவில்லை. ஃபஜ்ரும், இஷாவும் தொழுது கொள்கிறோம். இடையில் உள்ள மூன்று தொழுகைகளையும் களாச் செய்து தொழலாமா?

எஸ். ராஜா முஹம்மது, எஸ். ஷேக் முஹம்மது, கோடம்பாக்கம்

! நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

இந்த வசனத்தின் அடிப்படையில் தொழுகைகளை அந்தந்த நேரத்தில் தான் தொழுதாக வேண்டும். ஒரு நேரத் தொழுகையை அதன் நேரம் முடிந்த பின் களாவாகத் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

நோன்பைக் கடமையாக்கியுள்ள அல்லாஹ் அல்குர்ஆனின் 2:185வது வசனத்தில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால் அந்த நோன்பைக் களாச் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளான். ஆனால் தொழுகைக்கு அவ்வாறு எந்தச் சலுகையும் அல்லாஹ் தரவில்லை.

மிகவும் இக்கட்டான போர்க்களத்தில் கூட தொழுதாக வேண்டும் என்று 4:102வசனம் கூறுகின்றது.

தூக்கமும், மறதியும் மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் என்பதால் அவ்விரண்டு காரணங்களால் தொழுகை தாமதமானால் மட்டுமே அவற்றை நிறைவேற்றுவதற்கு அனுமதி உள்ளது.

''யார் தொழுகையை மறந்து விடுகின்றாரோ அல்லது தொழாமல் உறங்கி விடுகின்றாரோ அதற்குரிய பரிகாரம் நினைவு வந்ததும் அதைத் தொழுவது தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அனஸ் (ரலி)

நூல் முஸ்லிம் 1216 

இதன் அடிப்படையில் தூக்கம், மறதி ஆகியவற்றால் தொழுகையை விட்டு விட்டால் விழித்ததும் அல்லது நினைவு வந்ததும் அந்தத் தொழுகையின் நேரம் கடந்து விட்டாலும் தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். இதைத் தவிர எந்தக் காரணத்தை முன்னிட்டும் தொழுகையைக் களாச் செய்வதற்கு அனுமதி இல்லை.

தங்களைப் போன்று அலுவலகத்தில் பணி புரிபவர்கள் நேரம் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி தொழுகையைக் களாச் செய்கின்றனர். தொழுகையை மிகவும் சிரமமான ஒரு வணக்கமாக நினைத்துக் கொள்வது தான் இதற்குக் காரணம். எந்த அலுவலகமாக இருந்தாலும் மதிய உணவுக்கு இடைவேளை விடாமல் இருப்பதில்லை. அதுபோல் டீ குடிப்பதற்கும், மலஜலம் கழிப்பதற்கும் அனுமதி தராமல் இருக்க மாட்டார்கள். இந்தக் காரியங்களை நிறைவேற்றத் தேவைப்படும் நேரத்தை விட தொழுகையை நிறைவேற்றுவதற்குக் குறுகிய நேரமே தேவைப்படும்.

அடுத்து, அலுவலகத்தில் தொழுவது கூடுமா? அந்த இடம் சுத்தமானது தானா? என்ற சந்தேகங்கள் ஏற்படுவதும் தொழுகையைத் தாமதப் படுத்துவதற்கான காரணங்களில் ஒன்று! பள்ளிவாசலில் சென்று ஜமாஅத்துடன் தொழுவதற்கு வசதியுள்ளவர்கள் அங்கு சென்று தொழுவது தான் சிறப்பு! ஆனால் அலுவலகத்தில் பணி புரிபவர்கள் அது போன்ற வாய்ப்பைப் பெற முடியாத போது தொழுகை நேரம் வந்து விட்டால் அலுவலகத்திலேயே தொழுது கொள்ளலாம். இதைக் கீழ்க்காணும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய உம்மத்தில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்து விட்டால் அவர் (எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தில்) தொழுது கொள்ளட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),

நூல் : புகாரி 335, 438,

 

(குறிப்பு: 2003 மே மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 20, 2014, 5:56 AM

தொழுகையில் ஆடை கிழிந்துவிட்டால் தொழுகை கூடுமா?

? ஜமாஅத்தாகத் தொழுது கொண்டிருக்கும் போது இமாமுடைய லுங்கி கிழிந்து விட்டது. இமாம் தொழுகையிலேயே ஆடையைச் சரி செய்து விட்டார். தொழுகை முடிந்த பிறகு சிலர் தொழுகை கூடாது என்று கூறினார்கள். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும்!

முஜிபுர் ரஹ்மான், எர்ணாகுளம்

! ஆடையில் கிழிசல், துவாரம் இருந்தால் தொழுகை கூடாது என்று மத்ஹபுகளில் கூறப்பட்டிருப்பதை வைத்து இவ்வாறு கூறியிருக்கின்றார்கள். ஆனால் ஹதீஸ் அடிப்படையில் அவ்வாறு தொழுதது தாராளமாகக் கூடும்.

சில ஆண்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தனர். அவர்கள் சிறுவர்களைப் போன்று தங்களுடைய வேஷ்டியை தங்களுடைய கழுத்திலிருந்தே கட்டியிருந்தனர். (இதைக் கண்ட நபியவர்கள் பின்னால் தொழுது கொண்டிருந்த) பெண்களிடத்தில் "ஆண்கள் ஸஜ்தாவிலிருந்து எழுந்து அமர்வது வரை நீங்கள் உங்கள் தலைகளை ஸஜ்தாவிலிருந்து உயர்த்த வேண்டாம்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி),

நூல் : புகாரி 362

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஆடைப் பற்றாக்குறையின் காரணமாக நபித்தோழர்கள் ஒரே ஆடையைக் கழுத்திலிருந்து கட்டித் தொழுததால் ஆடையின் கீழ்ப்புறம் உயர்ந்ததை இந்த ஹதீஸ் சுட்டிக் காட்டுகின்றது. இதனால் தொழுகை முறிந்து விடும் என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

மக்கள் என்னைத் தொழுவிப்பதற்காக முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடையவனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் ஸஜ்தா செய்யும் போது அது என் முதுகைக் காட்டி வந்தது. ஆகவே அந்தப் பகுதிப் பெண்மணி ஒருவர், "உங்கள் ஓதுவோரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?'' எனறு கேட்டார். ஆகவே அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல் வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

அறிவிப்பவர் : அம்ர் பின் ஸலிமா (ரலி)

நூல் : புகாரி 4302

இந்த ஹதீஸில் இமாமுடைய பின்புறம் தெரிந்தது என்று தெளிவாகவே இடம் பெற்றுள்ளது. எனவே தொழுகையில் ஆடை கிழிந்ததைச் சரி செய்து விட்டுத் தொழுததில் தவறு இல்லை.

 

(குறிப்பு: 2003 ஏப்ரல் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 18, 2014, 7:04 AM

கடமையான தொழுகையில் இகாமத் சொல்ல மறந்துவிட்டால் தொழுகை கூடுமா?

? கடமையான தொழுகையில் இகாமத் சொல்ல மறந்த நிலையில் தக்பீர் கட்டி, தொழுது விட்டோம். இந்தத் தொழுகை கூடுமா? கூடாதா?

ஜாஹிர் ஹுசைன், காஞ்சிபுரம்

கடமையான தொழுகைக்கு பாங்கு, இகாமத் அவசியம் என்பதை வலியுறுத்தி பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. தனியாகத் தொழுதாலும் பாங்கு, இகாமத் சொல்லியே தொழ வேண்டும். ஆனால் அதே சமயம் அவை தொழுகையின் ஒரு அம்சம் அல்ல! மறந்த நிலையில் இகாமத் சொல்லாமல் தொழுது விட்டால் தொழுகை கூடும்.

"தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது முதல் தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது ஸலாம் கொடுப்பதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி),

நூல்கள் : திர்மிதி 3, இப்னுமாஜா 271, அஹ்மத் 957

இந்த ஹதீஸின் அடிப்படையில் தொழுகை என்பது தக்பீர் தஹ்ரிமாவிலிருந்து ஸலாம் கொடுப்பது வரையில் தான் என்பதை அறிய முடிகின்றது. எனவே இகாமத் சொல்லாமல் தொழுது விட்டாலும் தொழுகை நிறைவேறி விடும். இகாமத் சொல்லாவிட்டால் கடமையான தொழுகைக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டிய ஒரு சுன்னத்தின் நன்மையை இழந்து விடுகின்றோம் என்பது தானே தவிர தொழுகை கூடாது என்று கூற முடியாது.

 

(குறிப்பு: 2003 ஏப்ரல் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 18, 2014, 6:24 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top