இறைவன் கூறும் ஸலவாத்

இறைவன் கூறும் ஸலவாத்!

பி. ஜைனுல் ஆப்தீன்

திருக்குர்ஆன் விளக்கம்

இது ஒற்றுமை இதழில் வெளியான கட்டுரை. நேயர்கள் பயன் பெறுவதற்காக இங்கே வெளியிடுகிறோம்.

இந்த நபியின் மீது அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் ஸலவாத் கூறுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! அவர் மீது நீங்கள் ஸலவாத்தும் நல்ல முறையில் ஸலாமும் கூறுங்கள்! (அல்குர்ஆன் 33:56)

இது முஸ்லிம்கள் அதிக அளவில் செவியுறும் வசனங்களில் ஒன்றாகும். இவ்வசனத்தைத் தமிழகத்தின் மார்க்க அறிஞர்கள் பலர் தவறான பொருள் செய்து அதன் அடிப்படையில் விளக்கம் கூறி வருவதை நாம் காண்கிறோம்..

இவ்வசனத்தில் இரண்டு வாக்கியங்கள் உள்ளன.

1-இந்த நபியின் மீது அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும் ஸலவாத் கூறுகின்றனர்.

2-நீங்கள் அவர் மீது ஸலவாத் கூறுங்கள்.

இதில் இரண்டாவது வாக்கியத்துக்கு அனைவரும் சரியாகவே பொருள் கொள்கின்றனர். ஆனால், முதல் வாக்கியத்துக்கு மேற்கண்டவாறு பொருள் கொள்வது தவறாகும்.

இது எப்படி தவறான மொழிபெயர்ப்பாக உள்ளது என்பதை அறிவதற்கு முன் ஸலவாத் கூறுவது என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.

இவ்வசனம் அருளப்பட்ட பின் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்ற சந்தேகம் நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உங்கள் மீது நாங்கள் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்று விளக்கம் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்காணும் சொற்களைக் கற்றுக் கொடுத்தனர்.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்.

ஸலாவத் எவ்வாறு கூறுவது என நபித் தோழர்கள் கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு விடையளித்தார்கள் என்ற செய்தி புகாரி (3369, 4798, 6357, 6358, 6360) ஆகிய எண்களுடைய ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த மேற்கண்ட ஸலவாத்தின் பொருளை அறிந்து கொண்டால் ஸலவாத் கூறுதல் என்பதன் பொருளும் தெரிய வரும்.

இறைவா! இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும், நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அருள் புரிவாயாக!. நீ புகழுக்குரியவன், மகத்துவமிக்கவன்.

இறைவா! இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீ பரகத் புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக! நீ புகழுக்குரியவன், மகத்துவமிக்கவன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மேற்கண்ட ஸலவாத்தின் தமிழாக்கம் இது தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருள் புரியுமாறு அல்லாஹ்விடம் நாம் வேண்டுவது தான் ஸலவாத் கூறுதல் எனப்படும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மற்ற சமுதாயத்தினர் தங்கள் நபிமார்களை வணக்கத்திற்குரியவர்களாகவும், பிரார்த்தனை செய்யப்படுவோராகவும் ஆக்கி விட்டனர். முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவ்வாறு ஆக்கி விடக் கூடாது என்பதற்கான கேடயமே ஸலவாத் கூறுதல்.

நபிகள் நாயகத்திடம் நமது தேவைகளைக் கேட்காமல் அவர்களுக்காக நாம் தான் இறைவனிடம் கேட்கிறோம். இதிலிருந்து இறந்தவருக்காக நாம் தான் பிரார்த்தனை செய்ய வேண்டுமே தவிர இறந்தவரிடம் பிரார்த்திக்கக் கூடாது என்ற கருத்தும் பெறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த - தொழுகையில் நாம் ஓதி வருகின்ற - ஸலவாத் மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்கும் போது, நாமாக ஓதி வரும் ஸலவாத்தின் பொருளைக் கவனித்தாலும் இந்த உண்மையை உணரலாம்.

அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹி என்று சிலர் கூறுவார்கள். இறைவா! அவர்கள் மீது அருளும், பாக்கியமும் பொழிவாயாக என்பது இதன் பொருள்.

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வேறு சிலர் கூறுவார்கள். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்து ஈடேற்றமளிப்பானாக என்பது இதன் பொருள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக நாம் செய்யும் பிரார்த்தனையே ஸலவாத் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதை விரிவாக விளக்குவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

ஸலவாத் கூறுதல் என்பதன் பொருளை விளங்காமல் நபிகள் நாயகத்திடம் நாம் எதையோ வேண்டுவதாகச் சிலர் நினைக்கின்றனர். சாதாரண மக்கள் இவ்வாறு நினைப்பதையாவது மன்னித்து விடலாம். மிகச் சில மவ்லவிமார்களும், இப்படி விளங்கி வைத்திருப்பது நமக்குப் பெரும் வியப்பாக இருக்கிறது.

நபிகள் நாயகத்திடம் எதையும் கேட்கக் கூடாது. அவர்களுக்காக நாம் தான் கேட்க வேண்டும் என்ற தத்துவத்தை உள்ளடக்கிய ஸலவாத்தை இதற்கு நேர் எதிராக விளங்கியுள்ளனர்.

இனி முன்னர் குறிப்பிட்ட விசயத்திற்கு வருவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று பொருள் கொள்வது எவ்வாறு தவறு என்பதைக் காண்போம்.

நபிகள் நாயகத்திற்காக இறைவனிடம் வேண்டுவதே ஸலவாத் என்பதை விளங்கியுள்ளோம். இதனடிப்படையில் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்றால் நபிகள் நாயகத்திற்காக அல்லாஹ் இறைவனிடம் அருளை வேண்டுகிறான் என்ற கருத்து வருகிறது.

அதாவது நாம் கூறுவது போலவே அல்லாஹ்வும் ஸலவாத் கூறுகிறான் என்றால்- அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹி என்று அல்லாஹ் கூறுகிறான் என்றால்- இத்தகைய விபரீத அர்த்தம் வரும்.

இறைவா! நீ அருள் புரிவாயாக என்று அல்லாஹ் எப்படிக் கூறுவான்?

அப்படி அல்லாஹ் கூறினால் அல்லாஹ்வுக்கு மேல் ஒரு அல்லாஹ் இருக்கிறானா?

அந்த அல்லாஹ்விடம் இந்த அல்லாஹ் இவ்வாறு வேண்டுகிறானா?

என்றெல்லாம் பல கேள்விகள் இதில் எழும். அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று பொருள் கொள்வது அப்பட்டமான இணை கற்பித்தலாகவே அமையும்.

அப்படியானால் இதன் சரியான பொருள் என்ன?

ஸலவாத் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.

1. பிறருக்காக அருள் வேண்டுதல்.

2. பிறருக்கு அருள் புரிதல்.

என்பதே அந்த இரண்டு அர்த்தங்கள்.

இச்சொல்லை மனிதர்கள், வானவர்கள், ஜின்கள் உள்ளிட்டவர்களுடன் தொடர்புபடுத்தும் போது, அருள் வேண்டினார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இதே சொல்லை அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்லும் போது, அருளை வேண்டினான் என்ற பொருளைக் கொள்ளாமல் அருள் புரிகிறான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இது நமது புதிய கண்டுபிடிப்பு அல்ல. அரபுக் கல்லூரிகளில் அல்ஃபியா போன்ற இலக்கண நூல்களிலேயே இந்த விபரம் கூறப்பட்டு உலமாக்கள் அறிந்து வைத்திருக்கிற சிறிய விசயம் தான். ஆனாலும், சில உலமாக்கள் தாம் அறிந்ததற்கு மாறாக அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று விபரீதம் புரியாமல் மேடைகளிலேயே பேசி விடுகின்றனர்.

இவ்வசனத்திற்கு முழுமையாகப் பொருள் கொள்வதென்றால் கீழ்கண்டவாறு தான் பொருள் கொள்ள வேண்டும்.

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே நீங்களும் அவருக்காக அருளை வேண்டுங்கள்! நல்ல முறையில் அவருக்காக ஸலாம் கூறுங்கள்.

இப்படித் தான் இவ்வசனத்திற்குப் பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திருந்தால் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பது போன்ற விபரீதமான சொற்கள் வழக்கத்தில் வந்திருக்காது.

நாம் கூறியதை மேலும் வலுப்படுத்திட இதே அத்தியாயத்தின் 43வது வசனத்தையும் உதாரணமாகக் குறிப்படலாம்.

இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக அவனும், அவனது வானவர்களும் உங்கள் மீது ஸலவாத் கூறுகின்றனர். அவன் நம்பிக்கை கொண்டோரிடம் அன்புமிக்கவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 33:43)

இவ்வசனத்தைக் கவனியுங்கள்! 56வது வசனத்தில் நபிகள் நாயகத்தின் மீது அல்லாஹ் ஸலவாத் கூறுவதாகக் குறிப்பிட்டது போல் அனைத்து நம்பிக்கையாளர்கள் மீதும் அல்லாஹ் ஸலவாத் கூறுவதாக இவ்வசனம் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பயன்படுத்திய அதே சொல்லை இவ்வசனத்தில் அனைத்து முஸ்லிம்களுக்கும் இறைவன் இங்கே பயன்படுத்தியுள்ளான்.

அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று இந்த வசனத்திற்கு பொருள் கொள்ளாமல் அல்லாஹ் அருள் புரிகிறான் என்று சரியாக பொருள் செய்யும் உலமாக்கள், அது போன்று அமைந்த 56வது வசனத்திற்கு மட்டும் ஏறுக்கு மாறாகப் பொருள் செய்வதிலிருந்து அவர்கள் அறிந்து கொண்டே தான் தவறான கருத்தைத் தருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

33:43 வசனத்திற்குச் சரியான பொருள் கீழ்கண்டவாறு தான் அமைய வேண்டும்.

இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக அவன் தான் உங்களுக்கு அருள் புரிகிறான். அவனது வானவர்கள் உங்களுக்காக அவனது அருளை வேண்டுகிறார்கள். நம்பிக்கை கொண்டோரிடம் அவன் அன்புமிக்கவனாக இருக்கிறான்.

இவ்வசனத்திற்குப் பொருள் கொள்வது போலவே 33:56 வசனத்திற்கும் பொருள் கொண்டால் எந்தக் குழப்பமும் ஏற்படாது.

பெரும்பாலான உலமாக்கள் சரியான முறையில் இதை விளக்கினாலும் மிகச் சிலர் தவறான பொருள் கொடுப்பதை எடுத்துச் சொல்லி அவர்களைத் திருத்தும் கடமை தங்களுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

18.01.2010. 09:23

லைலத்துல் கத்ர் இரவில்

லைலத்துல் கத்ர் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள். குர்ஆன் முழுவதுமாக இறக்கப்பட்டதா? அல்லது ஒரு அத்தியாயம் மட்டும் இறக்கப்பட்டதா?

தொடர்ந்து படிக்க 12.08.2009. 05:04

அல்லாஹ்வின் கைப்பிடிக்கு அளவு என்ன

அல்லாஹ்வின் கைப்பிடிக்கு அளவு என்ன

ஆதம் அலை அவர்களை இறைவன் தனது ஒரு கைப்பிடி மண்ணில் படைத்தான் என்று ஹதீஸ் உள்ளது. அறுபது முழம் அவருடைய உயரம் எனவும் ஹதீஸ்கள் உள்ளன். ஆனால் வானங்கள் அவனது கைப்பிடிக்கும் அடங்கும் என்று குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் அல்லாஹ்வின் கைப்பிடி என்பது அறுபது முழத்தை உள்ளடக்கும் அளவா? வானங்களை உள்ளடக்கும் அளவா

ராஜ் முஹம்மத் குவைத்

அல்லாஹ்வைப் பொருத்தவரை அவனது பிரம்மாண்டம் பற்றி நாம் வரையறுக்க முடியாது. ஆனால் அவனை குறிப்பிட்ட் உயரத்துக்குள் அடக்க முடியாது. சில நேரங்களில் அவன் தனது தோற்றத்தை வானம் பூமியை விடவும் பெரிதாகக் காட்டுவான். சில நேரங்களில் மனிதர்கள் அண்ணாந்து பார்க்கும் சிறிய தோற்றத்திலும் இருப்பான். நிர்ணயித்த அளவு அவனுக்கு இல்லை என்பதால் நீங்கள் கேட்ட விஷயத்தில் முரன்பாடு ஏதும் இல்லை. இது குறித்து ஷேக் அப்துல்லா ஜமாலி விவாதத்தில் ஆதாரங்களை குறிப்பிட்டுள்ளோம்.

04.08.2011. 16:14

இரவை பகல் தொடருமா?

இரவை பகல் தொடருமா?

7 : 54 வசனத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.. தயவு செய்து விளக்கம் அளிக்கவும் உங்கள் மொழியாக்கத்தில் "இரவை பகலால் மூடுகிறான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வேறு வேறு தர்ஜுமாக்களில் "இரவைக்கொண்டு பகலை மூடுகிறான்", என்று மொழிப்பெயர்த்துள்ளனர்.

இரண்டும் முரண்பாடான கருத்தல்லவா? எது சரி?

இன்னொன்று, அதே வசனத்திற்கு , உங்கள் மொழியாக்கத்தில் "பகல், இரவை தொடர்கிறது", என்று சொல்லியுள்ளீர்கள். 
வேறு வேறு மொழியாக்கங்களில் "இரவு பகலை தொடர்கிறது", என்று மொழியாக்கம் செய்துள்ளனர்.

இரண்டும் முரண்பாடான கருத்தல்லவா? எது சரி?

ந்நாஷித் அஹ்மது

பதில்

நம்முடைய மொழி பெயர்ப்பு தான் சரியானது.

إِنَّ رَبَّكُمُ اللّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثاً وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلاَ لَهُ الْخَلْقُ وَالأَمْرُ تَبَارَكَ اللّهُ رَبُّ الْعَالَمِينَ (54)

யுக்‌ஷி 

அல்லைல

அன்னஹார

என்று மூலத்தில் உள்ளது.

அல்லைல - அன்னஹார என்ற இரண்டு செயப்படு பொருட்கள் உதில் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட செயப்படு பொருள் வந்தால் முதலாவது கூறப்பட்ட செயப்படு பொருளுக்கு ஐ காரம் சேர்த்து அர்த்தம் செய்ய வேண்டும். அதாவது இரவால் என்று கூறாமல் இரவை என்று மொழி பெயர்ப்பது தான் சரியானது. 

இரண்டாவதாக கூறப்பட்ட மற்றொரு செயப்படு பொருளாக உள்ள அன்னஹார என்பதற்கு ஐ காரம் சேர்த்து பகலை என்று பொருள் கொள்ளாமல் ஆல் அல்லது மூலம் என்று சேர்த்து பொருள் செய்ய வேண்டும். அதாவது பகலால் பகல் மூலம் என்று கூற வேண்டும். தக்க காரணம் இருந்தால் தவிர இதில் மாற்றம் செய்யக் கூடாது என்பது அரபு இலக்கண விதி

இந்த இலக்கண விதி அனைவரும் அறிந்த விதியாக இருந்தாலும் அவர்கள் இரவு தான் பகலை மூடுகிறது என்று கருதியதால் அந்த அர்த்தம் வர வேண்டுமென்பதற்காக இதை மீறியுள்ளனர். தக்க காரணம் இருக்கும் போது இவ்வாறு மீறுவது இலக்கணப் பிழையாக ஆகாது என்ற அடிப்படையில் அவ்வாறு செய்துள்ளனர்.

ஆனால் இவர்கள் இரவு பகலின் அடிப்படையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உலகில் இரவு தான் இயற்கையானது. சூரியன் என்ற ஒரு பொருள் படைக்கப்பட்டதால் தான் பகல் ஏற்படுகிறது. சூரியன் என்ற ஒன்று இல்லாவிட்டால் எப்போதும் இருட்டு தான்.

பூமியின் இயற்கையான தன்மை இருட்டு எனும் போது அதை பகல் தான் மூடுகிறது. பகல் எனும் திரையை நீக்கி விட்டால் இரவாகி விடும்.

இதற்கேற்ப திருக்குர் ஆன் முதல் செயப்படு பொருளாக இரவை கூறி மாபெரும் அறிவியல் உண்மையைக் கூறியுள்ளது. ஆனால் இதை விளங்காமல் கருத்துப் பிழை வந்து விடும் என தவறாக கருதி இலக்கணத்தை மீறி பொருள் செய்துள்ளனர்.

இரவும் அவர்களுக்கு ஒரு சான்று. அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள்.
திருக்குர்ஆன் 36:37

இவ்வசனத்தில் இரவில் இருந்து பகலை உரித்து எடுக்கிறோம் என இறைவன் கூறுகிறான். அதாவது இரவின் மீது பகல் எனும் போர்வை போர்த்தப்பட்டுள்ளதாகவும் பகலை உரித்து எடுத்தவுடன் தானாக இரவு வந்து விடுகிறது எனவும் இவ்வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான். அதே கருத்தைத் தான் நீங்கள் சுட்டிக்காட்டிய வசனமும் சொல்கிறது நாம் செய்த மொழி பெயர்ப்பு தான் மிகச் சரியானது, 

உங்களின் இரண்டாம் கேள்விக்கும் இதிலேயே விடை உள்ளது.

يَطْلُبُهُ حَثِيثاً அதை இது தொடர்கிறது என்று தான் மூலத்தில் உள்ளது.

எது முதலில் உள்ளதோ அது தான் தொடரப்படும் பொருள் என்பதும் எது பிந்தையதாக உள்ளதோ அது தான் தொடரும் பொருள் என்பதும் தான் சரியான கருத்தாக இருக்க முடியும். எனவே இதிலும் நாம் செய்த அர்த்தம் தான் சரியானது. இரவு தான் இயற்கையானது எனும் போது இரவை பகல் தொடர்கிறது என்பதே சரியானது.

 

29.07.2011. 21:24

நபியின் பெற்றோருக்கு வழிகாட்டி யார்?

நபியின் பெற்றோருக்கு வழிகாட்டி யார்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தகப்பனார் மற்றும் பாட்டனாருக்கு வழிகாட்டி யார்?

ரபீக் அஹ்மத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தச் சமுதாயத்துக்கு தூதராக அனுப்பப்பட்டார்களோ அவர்களுக்கு எந்த வழிகாட்டியும் அனுப்பப்படவில்லை. இப்ராஹீம் நபி, இஸ்மாயீல் நபி ஆகியோரின் வழித்தோன்றல்களாக இவர்கள் இருந்த போதும் பல்லாயிரம் ஆண்டுகள் ஓடி விட்டதால் இப்ராஹீம் நபியின் வழிமுறை எதுவும் அவர்களிடம் மீதமாக இருக்கவில்லை. இப்ராஹீம் நபி மார்க்கத்தில் இருந்த பத்துக் காரியங்கள் மட்டுமே அவர்களிடம் மீதம் இருந்தன. இதைப் பின்வரும் நபிமொழியில் இருந்து அறியலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) அவர்கள், "பத்தாவது விஷயத்தை நான் மறந்து விட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம்'' என்று கூறினார்கள்.

நூல் முஸ்லிம் 436

இப்ராஹீம் நபியின் அனைத்து வழிமுறைகளையும் குழிதோண்டிப் புதைத்த அந்தச் சமுதாயத்தால் மேற்கண்ட பத்துக் காரியங்களையும் விட்டுவிட முடியாததால் இவை இயற்கையான வழிமுறைகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட இப்ராஹீம் நபி அவர்கள் இநதச் சமுதாயத்துக்கு அனுப்பப்பட்ட தூதராக இருக்க முடியாது.

ஆனாலும் இவர்கள் ஸாபியின்கள் எனும் கூட்டத்தில் சேர்ந்திருந்தால் அவர்கள் காபிராக கருதப்பட்டிருக்க மாட்டார்கள். இது குறித்து முழுமையாக அறிய

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/Thuthar-Anuppappadatha-NabiSal-Petror-Kafira/

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/nabiyin_petror_entha_markathi_irukavendum/

23.07.2011. 06:40

இறைவன் நாம் என்று தன்னைப் பற்றி கூறு

இறைவன் நாம் என்று தன்னைப் பற்றி கூறுவது ஏன்

குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றி குறிப்பிடும் போது நாம் படைத்தோம் என்பது போன்ற சொற்களைப் பயன்படுத்துவது ஏன்

முஹம்மது இஹ்ஸாஸ்ம்

குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றி தன்னிலையாகக் கூறும் போது மிகச் சில இடங்களில் மட்டுமே "நான்' எனக் கூறுகிறான். பெரும்பாலான இடங்களில் "நாம்' என்றே கூறுகிறான்.

தனி நபர்களும் தம்மைப் பற்றி இவ்வாறு கூறும் வழக்கம் பல் வேறு மொழிகளில் உள்ளது போல் அரபு மொழியிலும் உள்ளது.

"இது என் வீடு' என்று கூறும் இடத்தில் "இது நம்ம வீடு' என்று கூறுகிறோம். மற்றவர்களுக்கும் பங்கு உண்டு என இதைப் புரிந்து கொள்ள மாட்டோம்.

சொந்த மகனைக் கூட மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது "நம்ம பையன்' என்று கூறுவதுண்டு. இதை நேரடியான பொருளில் யாரும் கூறுவதுமில்லை. புரிந்து கொள்வதுமில்லை. இது போல் தான் "நாம்', "நம்மை', "நம்மிடம்' என்பன போன்ற சொற்கள் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

04.07.2011. 09:45

பூமியை நெருப்புக் கோழி முட்டை வடிவில

பூமியை நெருப்புக் கோழி முட்டை வடிவில் படைத்ததாக குர்ஆனில் உள்ளதா

இப்படி ஒரு அர்த்தம் இருப்பதாக ஜாகிர் நாயக் கூறி உள்ளார். இது சரியா

முஹம்மத் அஃப்சல்

பதில்

 

நீங்கள் குறிப்பிடும் வசனத்தின் சரியான மொழிபெயர்ப்பு இதுவே.  

وَالْأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا (30) 79

இதன் பின்னர் பூமியை விரித்தான்.

அல்குர்ஆன் (79 : 30)

ஆனால் ஜாகிர் நாயக்  இவ்வசனத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளாமல் இதன் பின்னர் பூமியை நெருப்புக்கோழி முட்டையின் வடிவில் படைத்தான் என்று மொழிபெயர்த்துள்ளார்.

இந்த வசனத்தில் வரும் தஹா என்ற சொல்லுக்கு நெருப்புக்கோழியின் முட்டை வடிவில் படைத்தான் என்று மொழிபெயர்த்துள்ளார்.

பூமி நெருப்புக்கோழியின் முட்டை வடிவில் அமைந்திருப்பதாகவும் இந்த மாபெரும் விஞ்ஞான உண்மையை இவ்வசனம் கூறுவதாகவும் அவர் வாதிடுகின்றார்.

இவர் கூறுவது போல் தஹா என்ற சொல்லுக்கு இப்பொருள் இருப்பதாக அரபு அகராதி நூற்களிலோ தஃப்சீர் நூற்களிலோ கூறப்படவில்லை. மாறாக தஹா என்ற இச்சொல்லுக்கு பசத விரித்தான் என்பதே பொருள் என அனைவரும் கூறுகின்றனர்.

தஹா என்ற இச்சொல்லிலிருந்து பிரிந்து வந்த மத்ஹா, உத்ஹீ போன்ற சொற்களுக்கு நெருப்புக் கோழியின் கூடு என்றும் அது குஞ்சு பொறிக்கும் இடம் என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது.

நெருப்புக் கோழி தனது கூட்டை தரையில் பரவிய வகையில் விரிவாக அமைக்கக் கூடியது. விரித்தல் என்ற அசலான பொருள் இதனுள் அடங்கியுள்ளது. இதனடிப்படையில் தான் இச்சொற்களுக்கு நெருப்புக் கோழியின் கூடு என்று பொருள் கொள்ளப்படுகின்றது.

தஹா என்ற சொல்லிலிருந்து பிரிந்து வந்த எந்தச் சொல்லுக்கும் நெருப்புக் கோழியின் முட்டை என்ற பொருள் அறவே கிடையாது. பரந்து விரிந்த கூடு என்ற கருத்தில் நெருப்புக் கோழியின் கூடு என்ற பொருள் மட்டுமே உள்ளது.

ஒரு பேச்சுக்கு இவர் கூறுவது போல் துஹ்யா என்ற சொல்லுக்கு நெருப்புக் கோழியின் முட்டை என்று பொருள் இருப்பதாக ஒத்துக் கொண்டாலும் இவருடைய மொழிபெயர்ப்பு சரியாகி விடாது.

ஏனென்றால் துஹ்யா என்பது பெயர்ச் சொல். தஹா என்பது வினைச் சொல். அரபு மொழியில் ஒரு வினைச் சொல்லுக்கு பொருள் கொடுப்பதாக இருந்தால் அந்த வினைச் சொல்லுக்கு என்னென்ன பொருள்கள் கூறப்பட்டுள்ளன என்றே பார்க்க வேண்டும். இதை விட்டுவிட்டு நமது இஷ்டப்படி பெயர் சொல்லிலிருந்து அந்த வினைச்சொல்லுக்கு பொருள் எடுத்தல் கூடாது.

ஒரு வினைச் சொல்லை அரபு அகராதியில் குறிப்பிடுகின்றார்கள் என்றால் அதற்குரிய அனைத்து அர்த்தங்களையும் விவரிக்காமல் விட மாட்டார்கள்.

எந்த அரபு அகராதி நூலிலும் தஹா இந்த வினைச் சொல்லுக்கு நெருப்புக் கோழியின் முட்டை வடிவில் ஆக்கினான் என்று பொருள் கூறப்படவே இல்லை.

எனவே ஜாகிர் நாயக் செய்துள்ள இந்த மொழிபெயர்ப்புக்கு எந்த ஆதாரமும் இல்லை.

மேலும் நெருப்புக் கோழியின் முட்டை என்றால் அது குறிப்பிட்ட ஒரே வடிவில் தான் இருக்கும் என்றோ அந்த வடிவில் தான் பூமியும் உள்ளது என்றோ உறுதியாக கூற முடியாது.

விஞ்ஞான உண்மைகளைப் பற்றிப் பேசும் வசனங்கள் குர்ஆனில் இருப்பதைப் போன்று விஞ்ஞானத்தைப் பற்றி பேசாமல் வேறு விஷயங்களைப் பற்றி பேசக்கூடிய வசனங்களும் குர்ஆனில் இருக்கின்றன.

குர்ஆன் வசனங்கள் கூறாத விஞ்ஞானக் கருத்துக்கள் அவ்வசனங்களில் இருப்பதாக வலிந்து வாதிடுவது தவறான போக்காகும். இவ்வாறு செய்தால் இறைவன் கூறாத கருத்தை இறைவன் பெயரால் இட்டுக்கட்டிய குற்றம் ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

14.06.2011. 12:05

ஆதமின் புதல்வர்கள் ஆதமின் புதல்விகள

ஆதமின் புதல்வர்கள் ஆதமின் புதல்விகளை திருமணம் செய்தார்களா?

 

ஆதம் ஹவ்வா இருவர் மூலம் தான் மனித குலம் பெருகியது என்றால் ஒவ்வொருவரும் தனது சகோதரியைத் தான் திருமணம் செய்தார்களா?

பதில்

இறைவன் முதலில் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தான். பின்பு அவர்களிலிருந்து அவர்களின் துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களைப் படைத்தான். இவ்விருவம் குழந்தைகளை ஈன்றெடுத்து மனித குலம் பரவியது.

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا (1)4

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.

அல்குர்ஆன் (4 : 1)

ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் படைக்கப்பட்டவுடன் மனித இனத்தில் அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

எனவே சந்ததிப் பெருக்கம் நிகழ வேண்டுமென்றால் தனக்குப் பிறந்த பிள்ளைகளில் ஒன்றை மற்றொன்றுக்கு திருமணம் செய்து வைத்தாலே இது சாத்தியம். அதாவது சகோதரன் சகோதரிக்கு இடையே திருமணம் செய்து வைத்திருக்க வேண்டும்.

மனித குலம் பெருகாத நெருக்கடியான காலகட்டத்தில் இறைவன் இதை அனுமதித்திருந்தான். மனித குலம் பெருகி விரிவடைந்தவுடன் சகோதரன் சகோதரியை திருமணம் செய்வதைத் தடை செய்து விட்டான்.

இறைவன் இவ்வழியில் மனித குலத்தைப் பரவச் செய்ததற்கு முக்கியமான ஒரு காரணமும் உள்ளது. ஒட்டுமொத்த மனித வர்க்கமும் ஒரே தாய் தந்தையிலிருந்து உருவானது என்ற நம்பிக்கை மனிதர்களில் ஒருவர் மற்றவருக்கு சகோதரர் எனும் சகோதரத்துவ உணர்வையும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்கள் என்ற சமத்துவத்தையும் ஏற்படுத்துகின்றது.

இது குறித்து மேலும் அறிய கீழ்க்காணும் நூலில் 64 வது கேள்வியையும் பார்க்கவும்

http://onlinepj.com/books/arthamulla_kelvikal/

10.06.2011. 13:05

<< First < Previous [2 / 2] Next > Last >>



செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
116 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி