வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா

வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா

பள்ளிவாசலில் நோன்பு திறக்க தரும் உணவுகளை உண்ணலாமா? காரணம் வட்டி வாங்குபவர் கூட அதை வழங்கி ருக்கலாமே?

முஹம்மது ரியா

இது விரிவாக விளக்கப்பட வேண்டிய விஷயமாகும். இஸ்லாம் கூறும் பொருளியல் என்ற நூலில் இது குறித்து நாம் விரிவாக தக்க சான்றுகளுடனும், ஆதாரங்களுடனும் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அந்த நூலில் இது குறித்து எழுதியதைக் கீழே தருகிறோம்.

இரண்டு வகை ஹராம்கள்

மார்க்கத்தில் ஹராமாக உள்ளவை இரண்டு வகைப்படும்.

1 .அடிப்படையில் ஹராம்

2. புறக் காரணத்தால் ஹராம்

பன்றி இறைச்சி, தாமாகச் செத்தவை எப்படி ஹராமாக உள்ளதோ அது போல் பிறரிடமிருந்து முறைகேடாகப் பெற்ற பொருளும் ஹாராமாகும்.

ஆனால் இரண்டுக்கும் மத்தியில் வித்தியாசம் உண்டு

பன்றி இறைச்சி எந்த வழியில் நமக்குக் கிடைத்திருந்தாலும் ஹராம் என்ற நிலையில் இருந்து அது மாறப் போவதில்லை. நம்முடைய சொந்தப் பணத்தில் அதை வாங்கி இருந்தாலும் அது ஹராம் என்ற நிலையை விட்டு மாறாது.

மற்றவரிடம் வழிப்பறி செய்த ஆட்டிறைச்சியும் ஹராம் என்று நாம் விளங்கி வைத்துள்ளோம். ஆட்டிறைச்சி ஹலால் என்றாலும் அது நமக்குக் கிடைக்கும் வழி சரியாக இல்லாததால் தான் அது ஹராமாகிறது. அதுவே சரியான முறையில் நமக்குக் கிடைத்திருந்தால் ஹராமாகி இருக்காது.

அந்தப் பொருளே ஹராம் என்பது ஒரு வகை. வந்தவழி சரி இல்லாததால் ஹாராமாகிப் போனது மற்றொரு வகை என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.

முதல் வகையான ஹராமைப் புரிந்து கொள்வதில் மக்களுக்குக் குழப்பம் ஏதும் இல்லை. இரண்டாவது வகையான ஹராமைப் புரிந்து கொள்வதில் அதிகமான மக்களுக்குத் தெளிவு இல்லை.

பொதுவாக ஹராமாக்கப்பட்டவை எல்லா நிலையிலும் ஹராமாகவே இருக்கும். ஒரு காரணத்துக்காக ஹராமாக்கப்பட்டவை அந்தக் காரணம் இல்லாவிட்டால் ஹராமாகாது என்பது தான் விளங்கிக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

ஒருவர் வட்டியின் மூலமோ வேறு ஹராமான வழியிலோ பணம் திரட்டினால் அது இரண்டாம் வகையைச் சேர்ந்ததாகும். அந்தப் பணம் அவருக்குக் கிடைத்த வழி சரியாக இல்லை என்பதால் தான் அது ஹராமாகிறது. அவர் அந்தப் பணத்தை வைத்திருப்பதும் அதன் மூலம் சாப்பிடுவதும் அவருக்கு ஹராமாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மக்களுக்கும் இதில் குழப்பம் இல்லை.

இப்படி தவறான வழியில் பொருள் திரட்டியவர் நமக்கு அதில் இருந்து அன்பளிப்பு தருகிறார் என்றால் அப்பணம் நமக்கு ஹராமாகுமா?

அல்லது தடுக்கப்பட்ட வழியில் பொருளீட்டியவர் இறந்த பின்னர் அவரது வாரிசுகளுக்கு அந்தச் சொத்து கிடைத்தால் அதை வாரிசுகள் பெற்றுக் கொள்ளலாமா?

இந்த போன்ற விஷயங்களில் தான் மக்களிடம் குழப்பம் உள்ளது.

ஹராமான வழியில் பொருளீட்டியவரின் பொருட்கள் அவருக்கு எப்படி ஹராமாக ஆகின்றதோ அது போல் அவர் அன்பளிப்பாக நமக்குத் தந்தால் அது நமக்கும் ஹராமே என்று அதிகமான அறிஞர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இந்தக் கருத்துக்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் இல்லை.

ஒருவன் சாராயத்தை நமக்குத் தந்தால் அது நமக்கு ஹராம் தான். ஏனெனில் சாராயம் அடிப்படையிலேயே ஹராமானதாகும். ஆனால் சாராயத்தை விற்றுச் சம்பாதித்த பணத்தில் நமக்கு அன்பளிப்புச் செய்தால் அது நமக்கு ஹராமாகாது என்பதே சரியான கருத்தாகும். ஏனெனில் அந்தப் பணம் அவருக்கு வந்த வழி தான் சரியில்லை. பணமே ஹராம் அல்ல.

இந்தக் கருத்துக்குத் தான் திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் ஆதாரங்கள் உள்ளன.

முதலாவது ஆதாரம் ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க மாட்டார் என்ற கருத்தில் அமைந்த வசனங்களாகும்.

அவர்கள், சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 2:134

"அல்லாஹ் அல்லாதோரையா இறைவனாகக் கருதுவேன்? அவனே அனைத்துப் பொருட்களின் இறைவன். (பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்'' என்றும் கூறுவீராக

திருக்குர்ஆன் 6:164

நேர்வழி பெற்றவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப் பதில்லை

திருக்குர்ஆன் 17:15

ஒருவர் வட்டி வாங்கி பொருளீட்டினால் அவர் வட்டி வாங்கியதால் அவர் குற்றவாளியாகிறார். ஆனால் அவர் நமக்கு அன்பளிப்பாக அவர் ஒரு தொகையைத் தந்தால் அந்தப் பொருள் அன்பளிப்பு என்ற வழியில் தான் நமக்குக் கிடைக்கிறது. வட்டி என்ற அடிப்படையில் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே அது நமக்கு ஹராமாகாது.

ஒருவனுடைய தந்தை வட்டி வாங்கிச் சம்பாதித்து வாங்கிய சொத்துக்களை விட்டு இறந்து விட்டார். அந்தச் சொத்து அவரது மகனுக்கு வாரிசு என்ற முறையில் கிடைக்கிறது. அந்த மகன் அந்தச் சொத்தை அனுபவிப்பது ஹராமாகாது. ஏனெனில் அந்த மகனுக்கு வட்டி மூலம் அந்தப் பொருள் கிடைக்கவில்லை. மார்க்கம் அனுமதித்தபடி வாரிசு முறையில் தான் அது அவருக்குக் கிடைக்கிறது.

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க மாட்டார் என்ற கருத்தில் அமைந்த பொதுவான ஆதாரங்கள் மட்டுமின்றி குறிப்பான ஆதாரங்களும் உள்ளன,

செல்வந்தர்களிடமிருந்து ஜகாத் வசூலித்து எட்டு வகையான பணிகளுக்குச் செலவிட வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதை நாம் அறிவோம்.

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்

திருக்குர்ஆன் 9:60)

ஜகாத் எனும் நிதியை வசூலித்து மேற்கண்ட எட்டுப் பணிகளுக்குச் செலவிட வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

ஜகாத் கொடுக்கக் கடமைப்பட்டவர்களில் ஹலாலான முறையில் பொருளீட்டியவர்களும் இருப்பார்கள். ஹராமான முறையில் பொருளீட்டியவர்களும் இருப்பார்கள். ஹராமான முறையில் பொருளீட்டியவர்களின் பொருளாதாரத்தை மேற்கண்ட நற்பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்றால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருப்பார்கள்.

ஹலாலான முறையில் பொருளீட்டியவர்களிடமிருந்து மட்டும் ஜகாத் நிதியைத் திரட்டுங்கள். ஹராமான முறையில் பொருளீட்டியவர்களிடமிருந்து ஜகாத் நிதியை வாங்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.

பொருள் வசதி படைத்தவர்களின் வருவாய் எத்தகையதாக இருந்தாலும் அதில் ஜகாத் வசூலிப்பது கியாமத் நாள் வரை கடமையாகும். ஹராமான முறையில் ஒருவர் பொருள் திரட்டி இருந்தால் அதில் கொடுக்கப்படும் ஜகாத்துக்கு மறுமையில் நன்மை கிடைக்காது என்பதற்குத் தான் ஆதாரம் உள்ளதே தவிர அதை வாங்கக் கூடாது என்பதற்கோ, அதை ஏழைகளுக்கு வழங்கக் கூடாது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.

இஸ்லாமிய அரசில் செய்யப்படும் நற்பணிகள் ஜகாத் மூலம் மட்டுமின்றி முஸ்லிமல்லாத மக்களிடம் திரட்டப்படும் ஜிஸ்யா வரியின் மூலமும் செய்யப்பட்டு வந்தன.

முஸ்லிமல்லாத மக்களின் பொருளாதாரம் பெரும்பாலும் இஸ்லாம் அனுமதித்த வழியில் திரட்டப்பட்டதாக இருக்காது. ஒருவர் தவறாகப் பொருள் திரட்டினால் அதை மற்றவர்கள் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பது இஸ்லாத்தின் நிலையாக இருந்தால் ஜிஸ்யா எனும் வரியே சட்டமாக்கப்பட்டிருக்காது.

அது போல் போர்க்களத்தில் முஸ்லிமல்லாதவர்களை முஸ்லிம்கள் வெற்றி கொண்டால் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் கனீமத் எனப்படும். இவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அல்லாஹ் அனுமதிக்கிறான்.

போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, தூய்மையானதை உண்ணுங்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர் ஆன் 8:69

இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்து போருக்கு வந்தவர்கள் ஹலாலான முறையில் சம்பாதித்து இருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் அவர்களிடமிருந்து கனீமத் என்ற வழியில் நமக்கு வந்து சேர்வதால் அது நமக்கு ஹலாலாக ஆகி விடுகின்றது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அது போல் வாரிசுரிமைச் சட்டத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறும் போது அவர் விட்டுச் சென்றதில் வாரிசுகளுக்கு உரிமை உண்டு என்று குறிப்பிடுகிறான். அவர் விட்டுச் சென்றவற்றில் ஹலாலாகச் சம்பாதித்த்தில் இருந்து என்று அல்லாஹ் கூறவில்லை.

குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை.

திருக்குர்ஆன் 4:7

இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. அவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொரு வருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:11

அவர் விட்டுச் சென்றவைகளை வாரிசுகள் எவ்வாறு பங்கிட்டுக் கொள்ள வேண்டும் எனக் கூறும் போது அவர்கள் விட்டுச் சென்றவை என்று பொதுவாகத் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான். சொத்துக்களை விட்டு மரணிப்பவர்களில் ஹலாலாகப் பொருள் திரட்டியவர்களும் இருப்பார்கள். ஹராமான முறையில் பொருள் திரட்டியவர்களும் இருப்பார்கள். அப்படி இருந்தும் அவர்கள் விட்டுச் சென்றதில் ஹலாலானதைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறவில்லை. ஒருவர் எந்த முறையில் பொருளீட்டி இருந்தாலும் அதை வாரிசுகள் எடுத்துக் கொள்ளலாம் என்பது இதில் இருந்து தெரிகிறது.

மேலும் முஸ்லிமல்லாதவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கியுள்ளனர். முஸ்லிமல்லாதவர்கள் பொருளீட்டுவதற்கு இஸ்லாம் கூறும் நெறிமுறைகளைப் பேண மாட்டார்கள் என்ற போதும் அந்த அன்பளிப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

அய்லா என்ற ஊரின் மன்னர் நபிகள் நயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளை நிறக் கோவேறுக்கழுதையை அன்பளிப்புச் செய்து ஒரு சால்வையும் அணிவித்தார். தம் நாட்டவருக்காக (ஜிஸ்யா வரி தருகிறோம்) என்றும் அவர் எழுதிக் கொடுத்தார்.

அறிவிப்பவர் : அபூஹுமைத் (ரலி)

நூல் : புகாரி 1482, 3161

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

"தூமத்துல் ஜந்தல்' பகுதியின் மன்னர் உகைதிர் என்பவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பட்டுத்துணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கி, இதை முக்காடுகளாக வெட்டி, ஃபாத்திமாக்களிடையே (பெண்களுக்கிடையே) பங்கிட்டு விடுங்கள்'' என்று சொன்னார்கள் .

நூல் : முஸ்லிம் 1409

தூயஸன் என்ற மன்னர் 33 ஒட்டகங்கள் கொடுத்து வாங்கிய ஆடையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி).

நூல் : அபூதாவூத் 3516

மன்னர்கள் ஹலாலான முறையில் சம்பாதித்து வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. மக்களுடைய வரிப் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தான் மன்னர்கள். எனவே இந்தப் பணத்திலிருந்து வாங்கப்பட்ட பொருட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட போது அதை ஏற்றுள்ளார்கள்.

ஒருவர் தவறான முறையில் பொருளீட்டி இருந்தாலும் அவர் நமக்கு அன்பளிப்பாகத் தந்தால் அது நமக்கு ஹராமாகாது என்பதை மேற்கண்ட ஆதாரங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அது போல் யூதப் பெண் கொடுத்த விருந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றார்கள்.

நூல் : புகாரி 2617

யூதர்களின் வருவாய் வட்டி அடிப்படையில் இருந்தும் யூதப் பெண்ணின் விருந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுள்ளனர்.

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட உணவு, உடை, இன்னபிற பொருட்களை ஒருவர் ஹராமாகத் திரட்டிய பணத்தில் வாங்கி நமக்கு அன்பளிப்பாகத் தந்தால் அதை நாம் பெற்றுக் கொள்ளலாம். அது அவருக்குத் தான் ஹராமான வழியில் வந்துள்ளது. எனவே அது அவருக்குத் தான் ஹராமாகும். நமக்கு அன்பளிப்பு என்ற முறையில் வந்துள்ளதால் அது நமக்கு ஹராம் அல்ல என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் தெளிவாகக் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக ஒருவர் கொடுத்தால் அது அவர்களுக்கு ஹலால் ஆகும். அவர்கள் மீது இரக்கப்பட்டு பரிதாபப்பட்டு கொடுத்தால் அது அவர்களுக்கு ஹலால் இல்லை. இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்!

பரீரா என்ற அடிமைப் பெண்ணுக்குச் சிலர் தர்மமாக இறைச்சியைக் கொடுத்தனர். அந்த இறைச்சியை அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டனர். இது எனக்கு தர்மமாக வந்தது என்று பரீரா கூறிய போது அது உனக்கு தர்மமாக வந்திருந்தாலும் நீ எனக்கு அன்பளிப்பாகத் தந்துள்ளதால் அது எனக்கு அன்பளிப்பு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல் : புகாரி 1495, 2577

பரீரா அவர்கள் அடிமையாகவும், பரம ஏழையாகவும் இருந்ததால் ஒருவர் அவருக்குத் தர்மம் செய்துள்ளார். அந்த தர்மத்தைப் பெற்றுக் கொண்ட பரீரா அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தர்மமாகக் கொடுக்கவில்லை. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏழ்மையைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களின் தகுதியைக் கருத்தில் கொண்டு அன்பளிப்பாக வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பொருள் கிடைக்கும் வழி மாறியபோது சட்டமும் மாறுவதைக் காணலாம். பரீராவுக்குத் தர்மம் என்ற வழியில் கிடைத்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தர்மம் என்ற வகையில் அது கிடைக்கவில்லை. எனவே தான் அதைச் சாப்பிட்டுள்ளனர்.

மேற்கண்ட நமது கருத்தை இந்தச் சம்பவம் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பதற்காக இங்கே இதைக் குறிப்பிடுகிறோம்.

திருட்டுப் பொருளை அன்பளிப்பாகப் பெறலாமா

திருட்டுப் பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை உண்ணலாமா என்றால் அது கூடாது.

வட்டியின் மூலம் சம்பாதித்த பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும். திருட்டுப் பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

வட்டியின் மூலம் ஒருவன் சம்பாதித்தால் அவனுடைய சம்பாத்தியம் ஹராமாக இருந்தாலும் அது அவனுடைய பொருளாகும். இந்தியச் சட்டப்படியும், உலக நாடுகள் அனைத்தின் சட்டப்படியும், இஸ்லாமியச் சட்டப்படியும் இது தான் சட்டமாகும்.

வட்டி கொடுத்த ஒருவன் வட்டி வாங்கியவனுக்கு எதிராக என்னுடைய பணத்தை வட்டியின் மூலம் அபகரித்து விட்டான் என்று வழக்குப் போட முடியுமா?

ஆனால் திருடப்பட்ட பொருள் இஸ்லாமியச் சட்டப்படியும் ஊர் உலகத்தில் உள்ள அனைத்துச் சட்டங்களின்படியும் திருடியவனுக்கு சொந்தமானதல்ல. பறி கொடுத்தவன் திருடனுக்கு எதிராக என்னுடைய பொருளை திருடி விட்டான் என்று வழக்குப் போட முடியும்.

எனவே திருட்டுப் பொருளை அன்பளிப்பாக பெறுவதையும் திருட்டுப் பொருள் என்று தெரிந்து அதை வாங்கி வியாபாரம் செய்வதையும் மேற்கண்ட ஆதாரங்களைக் காட்டி யாரும் நியாயப்படுத்த முடியாது. அடுத்தவனின் பொருளை அன்பளிப்பு கொடுக்கவும் விற்கவும் எந்தச் சட்ட்த்திலும் அனுமதி இல்லை.

வட்டிக் கடைக்கு வாடகைக்கு விடலாமா?

வட்டியின் மூலம் சம்பாதித்த பொருளை அன்பளிப்பாகக் கொடுக்கும் போது வாங்கலாம் என்றால் நம் இடத்தை அல்லது நம் கடையை வட்டிக் கடைக்கு வாடகைக்குக் கொடுக்கலாமே என்று யாரும் கருதக் கூடாது.

இரண்டுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது.

நமது இடத்தை அல்லது கடையை வட்டிக் கடைக்கு வாடகைக்கு விட்டால் வட்டி எனும் கொடுமைக்கு நாம் துணை நின்றவர்களாக நேரும். ஆகவே இடத்தையோ, அல்லது கடையையோ வட்டிக்கடைக்கு வாடகைக்குக் கொடுப்பது தவறாகும்.

பேணுதல் என்பது எது

ஒருவர் ஹராமான வழியில் திரட்டிய பொருள் மற்றவருக்கு ஹராமாகாது என்று நாம் தக்க ஆதாரத்துடன் கூறுவதை பேணுதலுக்கு எதிரானதாகச் சிலர் நினைக்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட யாரும் அதிகப் பேணுதல் உள்ளவர் கிடையாது என்பதை ஏனோ கவனிக்கத் தவறி விடுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இருந்ததை விட தங்களிடம் அதிகம் பேணுதல் உள்ளது போல் வாதிடுகின்றனர். பேணுதலுக்காக இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் தவிர்ப்பவர்களாக இருந்திருப்பார்கள்:.

அல்லாஹ்வும், அவனது தூதரும் தெளிவாக அனுமதித்த ஒன்றைப் பேணுதல் என்ற பெயரில் தவிர்ப்பதற்கு அறவே இடமில்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் அனுமதித்தார்களா இல்லையா என்பதற்குத் தெளிவான ஆதாரம் இல்லாமல் இருந்து அதில் சந்தேகம் ஏற்படும் போது தான் பேணுதல் என்ற அடிப்படையில் அதைத் தவிர்க்கும் கடமை உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இறைவன் எண்ணற்ற நபிமார்களை அனுப்பி இருந்தாலும் நமக்கு இபராஹீம் நபியின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கட்டளை இடுகிறான். அந்த இப்ராஹீம் நபியவர்கள் ஒரு மன்னன் அன்பளிப்பாகக் கொடுத்த ஹாஜர் என்ற பணிப்பெண்ணைப் பெற்றுள்ளனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

பார்க்க : புகாரி 3358

வரதட்சணை திருமணத்திலும் பங்கெடுக்கலாமா

நாம் இவ்வாறு வாதிடுவதால் வரதட்சணை மற்றும் மார்க்கத்துக்கு விரோதமான காரியங்கள் நடக்கும் சபைகளுக்கும் நாம் போய் கலந்து கொள்ளலாமா? அவர் பாவம் அவருக்கு என்பது இதற்கு மட்டும் பொருந்தாதா என்று சிலர் கருதலாம். இந்தக் கருத்து முற்றிலும் தவறாகும்.

ஹராமான வழியில் பொருள் திரட்டிய ஒருவர் நமக்குத் தரும் அன்பளிப்பை ஏற்கலாம் என்று கூறும் நாம் மார்க்கம் தடை செய்த காரியங்கள் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கக் கூடாது என்றும் கூறுகிறோம். இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் என்பதால் வெவ்வேறு நிலைபாட்டை நாம் எடுக்கிறோம்.

வரதட்சணை வாங்கி நடத்தப்படும் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று நாம் கூறுவது அங்கு வழங்கப்படும் உணவு ஹராம் என்பதற்காக அல்ல. மாறாக ஒரு தீமை நடக்கக் கண்டால் அதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்காகவே அதைப் புறக்கணிக்கிறோம்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபிகள் நயகம் (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்களிடம் செல்லவில்லை. (திரும்பிப் போய் விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சொல்ல, "நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால் தான் திரும்பி வந்து விட்டேன்)'' என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், "அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்)'' என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர்களுக்குத் தேவையுள்ளது'' என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2613

ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டில் நபிகள் நாயகம் கண்ட வண்ணத்திரை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல. தடை செய்யப்பட்டதாக இருந்தால் மற்றவருக்கு தைக் கொடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருக்க மாட்டார்கள். ஆனாலும் அது ஆடம்பரமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தோன்றியுள்ளது. அதன் காரணமாக தமது மகளின் இல்லத்துக்குள் நுழையாமல் திரும்பி விட்டார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டில் உள்ள உணவு ஹராம் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புறக்கணிக்கவில்லை. மாறாக ஆடம்பரம் என்று தோன்றிய காரணத்துக்காகத் தான் புறக்கணித்துள்ளனர். அப்படியானால் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியங்கள் நடக்கும் சபைக்கு நாம் எப்படிச் செல்லலாம் என்ற அடிப்படையிலேயே நாம் வரதட்சணை, பித்அத் இடம் பெற்ற திருமணங்களைப் புறக்கணிக்கிறோம்.

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் கூட அளவுக்கு அதிகமான பகட்டாகத் தென்பட்டால் அதையும் புறக்கணிக்க வேண்டும் என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக திருமணத்தை ஒருவர் பல ஆயிரம் ரூபாய் வாடகையில் மண்டபம் பிடித்து நடத்துகிறார். வரக்கூடிய மக்களின் வசதிக்காகவே இதைச் செய்வதாகக் கூறுகிறார். இது ஹராம் என்று கூற நேரடி ஆதாரம் எதுவும் இல்லை. ஆனாலும் இது எளிமையாக நடக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திய அறிவுறைக்கு மாற்றமாக இருப்பதால் அதையும் நாம் புறக்கணிப்பது சரியான நபிவழி என்று நாம் கூறுகிறோம்.

அல்லாஹ்வும் இப்படித்தான் நமக்குக் கட்டளையிடுகிறான்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4:140)

ஒரு சபையில் அல்லாஹ்வின் கட்டளை மீறப்படுகிறது. அதன் மூலம் அல்லாஹ்வின் வசனங்கள் கேலி செய்யப்படுகிறது என்றால் அந்தச் சபைகளில் நாம் அமரவே கூடாது. அவ்வாறு அமர்ந்தால் நாம் அவர்களைப் போல் இறைவனால் கருதப்படுவோம் என்ற எச்சரிக்கை காரணமாகவே சில நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கச் சொல்கிறோம். அவர்கள் தரும் உணவு ஹராம் என்பதற்காக அல்ல.

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதைக் கையால் தடுக்கட்டும். அதற்கு இயலாவிட்டால் தனது நாவால் தடுக்கட்டும். அதற்கும் இயலாவிட்டால் தனது உள்ளத்தால் தடுக்கட்டும். (அதாவது அதை உள்ளத்தால் வெறுக்கட்டும்.) இது தான் ஈமானில் கடைசி நிலையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல் : முஸ்லிம் 70

மனதால் வெறுப்பது அந்தச் சபையைப் புறக்கணிப்பதன் மூலம் தான் உறுதியாகும். அதில் கலந்து கொண்டாலோ, அங்கு போய்ச் சாப்பிட்டாலோ தீய காரியம் நடக்கும் போது செய்ய வேண்டிய குறந்தபட்ச எதிர்ப்பைக் கூட தெரிவிக்கவில்லை என்பதே பொருளாகும். சிறிதளவும் அவருக்கு ஈமான் இல்லை என்பது தான் இதன் அர்த்தமாகும்.

மேலும் வீடியோ வடிவில் அறிந்து கொள்ள கீழே உள்ள ஆக்கத்தையும் பாருங்கள்.

http://onlinepj.com/porulatharam/haramin_irandu_vakai/கேள்வி பதில்பொருளதாரம்வட்டிவாங்குபவரின்நோன்புக்கஞ்சிகராம்

Published on: August 20, 2013, 5:15 PM Views: 11476

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top