உபரியான நோன்புக்கு சஹர் உணவு அவசியமா

உபரியான நோன்புக்கு சஹர் உணவு அவசியமா?

உபரியான நோன்பு நோற்க சஹர் உணவு உட்கொள்வது அவசியம் இல்லை என்பதற்கு ஹதீஸ் ஆதாரம் உள்ளது என்று ஒரு நண்பர் கூறுகிறார். அப்படி ஹதீஸ் உள்ளதா

 ஹாஜா

 பதில்

அந்தச் சகோதரர் பின்வரும் செய்தியைத்தான் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

 1951 و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى عَنْ عَمَّتِهِ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَقَالَ هَلْ عِنْدَكُمْ شَيْءٌ فَقُلْنَا لَا قَالَ فَإِنِّي إِذَنْ صَائِمٌ ثُمَّ أَتَانَا يَوْمًا آخَرَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أُهْدِيَ لَنَا حَيْسٌ فَقَالَ أَرِينِيهِ فَلَقَدْ أَصْبَحْتُ صَائِمًا فَأَكَلَ رواه مسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் வந்து, "உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "இல்லை' என்றோம். "அப்படியானால் நான் (இன்று) நோன்பாளியாக இருந்து கொள்கிறேன்'' என்றார்கள். பிறகு மற்றொரு நாள் அவர்கள் எம்மிடம் வந்த போது, "அல்லாஹ்வின் தூதரே! நமக்கு ஹைஸ் எனும் பலகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது என்றோம். அதற்கு அவர்கள், "எனக்கு அதைக் காட்டு. நான் இன்று காலை நோன்பு நோற்றிருந்தேன்'' என்று கூறிவிட்டு, அதைச் சாப்பிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் 2125

உண்ணாமலும், பருகாமலும் இருந்தால் விடிந்த பிறகு கூட அன்றைய நாளில் உபரியான நோன்பு நோற்க அனுமதியுள்ளது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபரியான நோன்பு நோற்பதாக பகலில் தான் முடிவு செய்கிறார்கள். சூரியன் உதித்த பிறகு சஹர் செய்ய முடியாது என்பதால் நபியவர்கள் சஹர் செய்யாமல் நோன்பு நோற்றுள்ளார்கள் என்று தான் இதில் இருந்து தெரிகிறது.

சஹர் செய்ய வாய்ப்பு இல்லாதவர் சஹர் செய்யாமல் நோன்பு நோற்றால் அதில் தவறில்லை என்பதற்குத் தான் இது ஆதாரமாகும். இயலாத நிலையில் ஒன்றை விட்டுவிட்டால் இயலும் போதும் அதை விட்டுவிடலாம் என்று முடிவு செய்வது தவறாகும்.

சஹர் செய்ய வாய்ப்பு உள்ளவர் சஹர் செய்து நோன்பு நோற்பதே நபிவழி. பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

1923حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் சஹர் செய்யுங்கள்;  சஹர் செய்வதில் பரகத் இருக்கிறது.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

 நூல் : புகாரி 1923

1836حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ مُوسَى بْنِ عُلَيٍّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي قَيْسٍ مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ أَكْلَةُ السَّحَرِ رواه مسلم

 அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நமது நோன்பிற்கும் வேதம் கொடுக்கப்பட்ட பிறசமுதாயத்தின் நோன்பிற்கும் உள்ள வேறுபாடு சஹர் நேரத்தில் உண்பது தான்.

அறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 2001

சஹர் செய்வது குறித்து நபியவர்கள் இந்த அளவு முக்கியத்துவப்படுத்தி கூறி இருப்பதால் சஹர் செய்வது கடமையான நோன்புக்கு மட்டுமின்றி கடமையல்லாத நோன்புக்கும் அவசியமாகும். காலைப் பொழுதை அடைந்த பின்னர் நோன்பாளியாக இருக்கும் முடிவை ஒருவர் எடுத்தால் சஹர் செய்யும் நேரம் முடிந்து விட்டதால் சஹர் செய்யாமல் நோன்பைத் தொடர வேண்டும் என்பதுதான் சரியான கருத்தாகும்.உபரியான நோன்புநமது நோன்புவேதக்காரர்கள் நோன்புவித்தியாசம்சஹர் உணவு

Published on: May 26, 2011, 2:31 PM Views: 4573

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top