சந்தோஷமான வார்த்தைகளை கேட்கும் பொழுது அல்லாஹு அக்பர் என்று சொல்லலாமா?

? நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க விரும்புகின்றீர்களா? என்று கேட்ட போது நாங்கள் அல்லாஹு அக்பர் என்று சப்தமாகக் கூறினோம் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. பெருநாள் தினத்திலும் மற்ற சந்தோஷமான வார்த்தைகளைக் கேட்கும் போதும் அல்லாஹு அக்பர் என்று சப்தமாகக் கூறுவதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றார்களே! இந்த ஹதீஸின் அடிப்படையில் இவ்வாறு செயல்படலாமா?

ஈ. இஸ்மாயீல் ஷெரீப், பெரம்பூர்

நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் புகாரியிலும் இடம் பெற்றுள்ளது.

"என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மேல் ஆணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நாங்கள் "அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்'' என்று கூறினோம். உடனே அவர்கள், "சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார்கள். நாங்கள், "அல்லாஹு அக்பர்'' என்று கூறினோம். அவர்கள், "சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். நாங்கள், "அல்லாஹு அக்பர்'' என்று கூறினோம்.

அப்போது அவர்கள், "நீங்கள் மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு நிற முடியைப் போலத் தான் இருப்பீர்கள் அல்லது கருப்பு நிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை நிற முடியைப் போலத் தான் (குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), 

நூல்: புகாரி 3348, 4741

இந்த ஹதீஸின்படி பெருநாள் தொழுகையில் சப்தமிட்டு தக்பீர் கூறலாமா? என்று கேட்டுள்ளீர்கள். பொதுவாக திக்ருகளைச் செய்யும் போது சப்தமிட்டு செய்வதற்குத் தடை உள்ளது.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! 

(அல்குர்ஆன் 7:205)

இந்த வசனத்திற்கு முரணில்லாத வகையில் தான் நீங்கள் குறிப்பிடும் ஹதீஸை விளங்க வேண்டும். பெருநாள் தொழுகையில் தக்பீர் சொல்வதென்பது அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காக செய்யப்படுவதாகும். இதில் சப்தம் குறைவாக தக்பீர் சொல்வது தான் சிறந்தது. மேற்கண்ட ஹதீஸில் ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போது நபித்தோழர்கள் அல்லாஹு அக்பர் என்று கூறுகின்றார்கள். எனவே இதை மற்ற திக்ருகளைப் போல் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த ஹதீஸின் அடிப்படையில் மகிழ்ச்சியான ஒரு செய்தியைக் கேட்கும் போது அல்லாஹு அக்பர் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாமே தவிர எல்லா சந்தர்ப்பத்திலும் இதை அனுமதியாக எடுத்துக் கொள்ள முடியாது. 

குறிப்பு : 2004 ஆகஸ்ட் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 14, 2015, 8:12 AM

வயதில் குறைந்தவரை திருமணம் செய்யலாமா?

? எனக்கும் என் உறவினர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப் பட்டுள்ளது. மணமகன் என்னை விட ஒரு வயது இளையவர். இவரைத் திருமணம் செய்வது சரியா? இந்நிலையில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய ஒருவர் என்னைப் பெண் கேட்டார். அவரிடம் எனக்குத் திருமணம் நிச்சயிக்கப் பட்ட விஷயத்தைச் சொல்லி விட்டேன். (மாற்று மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த) அவரை மறுத்ததால் நான் பாவத்திற்குள்ளாவேனா?

எம். ராபியா பஸ்ரின்


திருமணம் செய்யும் ஆணை விட பெண்ணுக்கு வயது குறைவாகத் தான் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. எனவே வயதில் இளைய ஆணைத் திருமணம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவருக்கு உதவிகள் செய்யலாம். அதற்காக அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. திருமணத்தைப் பொறுத்த வரை இஸ்லாம் பெண்களுக்கு முழு உரிமையை வழங்கியுள்ளது.

இணை வைப்பவர்களைத் திருமணம் செய்து கொள்ளத் தடை இருக்கின்றது. மற்றபடி ஒரு பெண் தான் விரும்பிய மணமகனைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நபரை நீங்கள் விரும்பினால் அவரை உங்களது தந்தை அல்லது சகோதரர் போன்ற பொறுப்பாளர் முன்னிலையிலோ அல்லது சமுதாயத் தலைவரின் முன்னிலையிலோ மணம் முடிக்கலாம். விருப்பம் இல்லாவிட்டால் விட்டு விடலாம். இதில் தவறேதும் இல்லை.

(குறிப்பு: 2004 மார்ச் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை)

January 2, 2015, 7:35 AM

சம்பளம் வாங்கி தொழுகை நடத்தும் இமாம் பின்னால் நின்று தொழுதால் பாவமா?

? அற்ப ஆதாயத்திற்காக குர்ஆனை விற்காதீர்கள் (5:44) என்ற வசனத்தின் படி சம்பளம் பெற்று தினமும் குர்ஆன் ஓதி தொழ வைப்பது ஹராம் என்று ஒரு சகோதரர் கூறுகின்றார். மேலும் சம்பளம் பெற்று தொழ வைக்கும் இமாம்கள் பின்னால் நின்று தொழுவது பாவம் என்றும் அவர்களுக்குச் சம்பளம் வழங்குவது பாவம் என்றும் கூறுகின்றார். இது சரியா?

அஹ்மது நைனா, சிங்கப்பூர்


இமாமுக்கு சம்பளம் கொடுப்பது கூடுமா என்பதைப் பார்ப்பதற்கு முன், தாங்கள் அதற்கு ஆதாரமாகக் காட்டியுள்ள வசனத்தின் பொருள் அது தானா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

தவ்ராத்தை நாம் அருளினோம். அதில் நேர் வழியும், ஒளியும் இருக்கிறது. (இறைவனுக்கு) கட்டுப்பட்ட நபிமார்களும், யூத வணக்கசாலிகளும், மேதைகளும் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க அவர்கள் கட்டளையிடப்பட்டதாலும், அதற்கு அவர்கள் சாட்சிகளாக இருந்ததாலும் யூதர்களுக்கு அதன் மூலமே தீர்ப்பளித்து வந்தனர். மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்! அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள்.

(அல்குர்ஆன்5:44)

இந்த வசனத்திலும் 2:41, 2:174, 3:199 ஆகிய வசனங்களிலும், "அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.

இமாமத் பணியில் இருப்பவர்கள் குர்ஆன் ஓதி தொழுவிப்பதால் அவர்கள் சம்பளம் வாங்குவது குர்ஆனை விற்பதற்குச் சமம்; எனவே இந்த வசனங்களின் அடிப்படையில் இமாம்களுக்குச் சம்பளம் வழங்கக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர்.

இந்த வசனங்களில் கூறப்படும் அற்ப விலைக்கு விற்றல் என்பதற்கு வசனங்களை விற்று சம்பாதித்தார்கள் என்று நேரடிப் பொருள் இருந்தாலும் அந்தக் கருத்தில் மட்டும் இந்த வாசகம் குர்ஆனில் பயன்படுத்தப் படவில்லை. உலக ஆதாயத்திற்காக வேதத்தை மறைத்தல், அதன் படி தீர்ப்பளிக்காமல் இருத்தல், வேதத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தல், வேதத்திற்கு மாறு செய்தல், வேதத்தின் பொருளை விளங்கிக் கொண்டே அதைப் புறக்கணித்தல் போன்ற செயல்களைப் பற்றிக் குறிப்பிடும் போது தான் அல்லாஹ் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துகின்றான்.

தவ்ராத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்காதவர்களை நோக்கித் தான் அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள் என்று அல்லாஹ் 5:44 வசனத்தில் கூட கூறுகின்றான். யூதர்கள் தங்களின் வேதமான தவ்ராத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்காமல், உலக ஆதாயத்திற்காக அதற்கு மாற்றமான தீர்ப்பை வழங்கும் போது அல்லாஹ் அதைக் கண்டிப்பதற்காக இவ்வாறு கூறுகின்றான்.

அந்த இணை கற்பிப்போருக்கு அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் எவ்வாறு உடன்படிக்கை இருக்க முடியும்? மஸ்ஜிதுல் ஹராமில் நீங்கள் உடன்படிக்கை செய்தோரைத் தவிர. அவர்கள் உங்களிடம் நேர்மையாக நடக்கும் வரை அவர்களிடம் நீங்களும் நேர்மையாக நடங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை நேசிக்கிறான். எப்படி? அவர்கள் உங்களை வெற்றி கொண்டால் உங்களிடம் உள்ள உறவையும், உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள். தமது வாய்களால் அவர்கள் உங்களைத் திருப்திப்படுத்துகின்றனர். அவர்களின் உள்ளங்கள் மறுக்கின்றன. அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிந்தவர்கள். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கின்றனர். அவனது பாதையை விட்டும் தடுக்கின்றனர். அவர்கள் செய்து கொண்டிருப்பவை கெட்டவையாகும். (அல்குர்ஆன் 9:7-9)

இந்த வசனத்தில் மக்காவிலிருந்த முஷ்ரிக்குகளை நோக்கி, அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கின்றனர் என்று அல்லாஹ் கூறுகின்றான். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மக்கத்து முஷ்ரிக்குகளிடம் வேதம் எதுவும் இருக்கவில்லை. அவர்கள் குர்ஆனை மறுப்பதைத் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

எனவே இந்த அடிப்படையில் பார்த்தால், அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள் என்ற திருமறையின் கூற்று நாம் புரிந்து வைத்திருக்கும் பொருளில் கூறப்படவில்லை என்பதை அறியலாம்.

ஆனால் அதே சமயம் குர்ஆன் ஓதி கூலி வாங்குவதைக் கண்டித்து பல ஹதீஸ்கள் உள்ளன.

"நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். அதன் மூலம் சாப்பிடாதீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் ஷிப்ல் (ரலி)

நூல்கள்: அஹ்மத் 14981, 14986, 15110, 15115, 15117, அபூயஃலா 1518, தப்ரானி2103

"யாரேனும் குர்ஆனை ஓதினால் அதைக் கொண்டு அல்லாஹ்விடமே கேட்கட்டும். குர்ஆனை ஓதிவிட்டு அதன் மூலம் மக்களிடம் கேட்கக் கூடியவர்கள் இனி மேல் தோன்றுவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

நூல்: அஹ்மத் 19039, 19070, 19097, 19146

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் குர்ஆன் ஓதிவிட்டு, அதற்காகக் கூலி வாங்கக் கூடாது என்பது தெளிவாகின்றது. குர்ஆன் ஓதிவிட்டு கூலி வாங்கலாம் என்ற கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன.

நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. இந்நிலையில் அந்தக் கூட்டத்தின் தலைவனை (தேள்) கொட்டிவிட்டது. "உங்களிடம் மருந்தோ அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா?'' என்று அவர்கள் கேட்டனர்.

அதற்கு நபித்தோழர்கள், "நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்'' என்று கூறினார்கள். அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள்.

அதன் பின்னர் ஒருவர், "அல்ஹம்து' சூராவை ஓதி உமிழ்ந்தார். இதனால் அவர் குணமடைந்து விட்டார். அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். "நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி விசாரிக்காது இதைப் பெற மாட்டோம்'' என்று கூறி, நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டார்கள். இதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். "அல்ஹம்து சூரா ஓதிப் பார்க்கத் தக்கது என்று உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டு விட்டு "எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள்' என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 2276, 5749, 5736, 5007

மற்றொரு அறிவிப்பில், (புகாரி 5737) நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் வேதத்திற்குக் கூலி பெற்று விட்டீரே'' என்று மந்திரித்தவரைக் கண்டித்தனர். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, "கூலிகள் பெறுவதற்கு மிகவும் அருகதை உள்ளது அல்லாஹ்வின் வேதம் தான்'' என்று கூறினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இரு வகையான ஹதீஸ்களும் முரணாகத் தோன்றினாலும் மறுமையின் நன்மையை நாடி ஓதுவதற்குக் கூலி வாங்கக் கூடாது என்றும், நோய் நிவாரணத்திற்காக ஓதிப் பார்த்து அதில் நிவாரணம் கிடைத்தால் கூலி வாங்கலாம் என்றும் விளங்கிக் கொண்டால் முரணில்லை. இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி, அதற்காகக் கூலி வாங்குவது போன்ற காரியங்கள் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பள்ளிவாசலில் இமாமாக வேலை பார்ப்பவர்களுக்குக் கூலி வழங்கக் கூடாது என்பதற்கு நீங்கள் சுட்டிக் காட்டிய வசனத்திலோ அல்லது மேற்கண்ட ஹதீஸ்களிலோ நேரடியாக ஆதாரம் எதுவும் இல்லை.

"பாங்குக்காக கூலி எதுவும் பெறாத முஅத்தினை ஏற்படுத்துவீராக!'' என்பது தான் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட உடன்படிக்கைகளில் இறுதியானதாகும்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி)

நூற்கள்: திர்மிதீ 193, நஸயீ 666, அஹ்மத் 15679, 15680, 15681, 17230

இந்த ஹதீஸில் கூலி வாங்காத முஅத்தினை ஏற்படுத்துமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால், இமாமத்துக்கும் அதே சட்டம் தான்! பாங்கைப் போலவே தொழுகை என்பது வணக்கம் தான் என்பதால் தொழுகை நடத்துவற்குச் சம்பளம் கொடுப்பதோ வாங்குவதோ மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் தவறானது தான்.

இமாமத் அல்லது பாங்கு சொல்வது போன்ற வேலைகளுக்காக மட்டுமே ஆட்களை நியமிக்காமல் பள்ளிவாசல் பராமரிப்பு, மார்க்கக் கல்வி பயிற்றுவித்தல், இதர நிர்வாகப் பணிகள் போன்றவற்றுக்காக ஒருவரை நியமித்து அதற்காக சம்பளம் வழங்குவதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. இத்தகைய பணிகளைக் கவனிப்பதற்கு ஆட்கள் இல்லாமல் ஒரு பள்ளிவாசலைப் பராமரிக்க முடியாது.

தொழுகை நடத்துதல் என்பது மட்டுமே ஒரு வேலை அல்ல! ஒவ்வொரு முஸ்லிமும் நிறைவேற்ற வேண்டிய கடமை தான் தொழுகை! ஐவேளை ஜமாஅத்திற்கு வருபவர்களில் குர்ஆன் ஓதத் தெரிந்த ஒருவர் தொழுகை நடத்தலாம்.

இந்தப் பணியை எல்லோரும் செய்வது போல் பள்ளியின் இதர வேலைகளைக் கவனிப்பதற்காக நியமிக்கப் பட்ட ஒருவரும் செய்யலாம். ஆனால் அதே சமயம் தொழுகை நடத்துவதற்கு வரவில்லை என்பதற்காக அவரை பள்ளி நிர்வாகத்தினர் குறை சொல்வதோ அல்லது கடிந்து கொள்வதோ கூடாது. அவ்வாறு செய்தால் தொழுகை நடத்துவற்காக அவருக்கு சம்பளம் கொடுப்பதாகி விடும். தொழுகை நடத்துவதற்காக மட்டும் கூலி கொடுப்பது மேற்கண்ட ஹதீசுக்கு மாற்றமான செயலாகும்.

சம்பளம் வாங்கும் இமாமாக இருந்தாலும் அவரைப் பின்பற்றித் தொழுவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை. சம்பளம் கொடுப்பதும் வாங்குவதும் தான் ஹதீஸ் அடிப்படையில் தவறே தவிர பின்பற்றித் தொழுவதற்குரிய தகுதியில் இது அடங்காது.

பொதுவாகவே மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது, அவர்கள் தரித்திரர்களாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது.

மவ்லிது, ஃபாத்திஹா போன்ற பித்அத்துக்கள் உருவானதற்கும், மார்க்கத்தின் பெயரால் பொருளீட்டும் நிலை தோன்றியதற்கும் சமுதாயத்தில் நிலவுகின்ற இந்த நிலையும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல!

ஆனால் மார்க்கப் பணிகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு உதவிகள் வழங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது மட்டுமல்லாமல் வலியுறுத்தப் பட்டும் உள்ளது.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

(அல்குர்ஆன் 2:273)

பொதுவாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு தர்மம் செய்யலாம் என்பதை அனைவரும் அறிவர். ஒருவர் ஏழையாக இருப்பதுடன் மார்க்கப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளார். மார்க்கப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது தான் அவர் ஏழையாக இருப்பதற்கே காரணமாகவும் உள்ளது. இதன் காரணமாக அவரால் பொருளீட்டவும் இயலவில்லை.

இத்தகையவர் ஏழையாக இருக்கிறார் என்பதற்காக மட்டுமின்றி மார்க்கப் பணியிலும் ஈடுபடுகிறார் என்பதையும் கவனத்தில் கொண்டு தர்மங்கள் வழங்குவது தவறில்லை என்று இவ்வசனத்தி-ருந்து தெரிகிறது.

ஒருவர் பொருளீட்டுவதற்கான முயற்சி எதனையும் மேற்கொள்ளாமல் முழுக்க முழுக்க மார்க்கப் பணிக்காக அர்ப்பணித்துக் கொள்வது குறை கூறப்படக் கூடாது; மாறாக இது பாராட்டப்பட வேண்டிய சேவை என்பதை இவ்வசனத்தி-ருந்து அறியலாம்.

அதே சமயத்தில் இவ்வாறு மார்க்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொள்வோர் வேறு வருமானத்திற்கு வழியில்லை என்பதால் மற்றவர்களிடம் யாசிப்பதோ, சுயமரியாதையை இழப்பதோ கூடாது.

எந்த நிலையிலும் எவரிடமும் கேட்பதில்லை என்பதில் உறுதியாக அவர்கள் நிற்க வேண்டும். அவ்வாறு சுயமரியாதையைப் பேணுபவர்களுக்குத் தான் மார்க்கப் பணியைக் காரணம் காட்டி உதவியும் செய்ய வேண்டும். அவர்கள் யாசிக்க ஆரம்பித்து விட்டால் இந்தத் தகுதியை இழந்து விடுகிறார்கள் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

 

(குறிப்பு: 2004 மார்ச் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

January 2, 2015, 6:58 AM

மனித உடலில் ஜின்கள் மேலாடுமா?

? தியாகதுருகம் என்ற ஊரிலுள்ள என் உறவுக்காரப் பெண் ஒருவருக்கு உடம்பில் ஜின் இருப்பதாகக் கூறுகின்றார்கள். அவருக்கு அபார சக்தி இருப்பதாகவும், இரவு 12 மணி, 1 மணிக்கு எழுந்து தொழுவதாகவும் (அந்தப் பெண் தொழும் வழக்கம் இல்லாதவர்) மற்றவர்கள் கேட்டால் தெரியாது என்று கூறுவதாகவும் சொல்கின்றனர். மனித உடம்பில் ஜின் இருக்க வாய்ப்புள்ளதா?

கே. மெஹபூப், சென்னை - 81.


குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் "ஜின் என்ற படைப்பினம் உள்ளது; அது மனிதர்களைப் போன்றே பகுத்தறிவு வழங்கப்பட்டது; மனிதர்களை விட சக்தி வாய்ந்தது'' என்றெல்லாம் ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். ஆனால் அந்த ஜின்கள் மனிதர்கள் மேல் வந்து உட்கார்ந்து கொண்டு, மனிதனை ஆட்டுவிக்கும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

ஒரு மனிதனின் உடம்பில் ஜின் இருக்கின்றது என்றால் அந்த மனிதனுக்கு மனித உள்ளம், ஜின் உள்ளம் என்று இரண்டு உள்ளங்கள் இருப்பதாக ஆகின்றது. அதிலும் இரவில் ஜின் உள்ளத்தைக் கொண்டு தொழுகின்றாள், பகலில் தெரியாது என்று கூறுகிறாள் என்றெல்லாம் கூறுவது இரண்டு உள்ளங்கள் அப்பெண்ணிடம் இருக்கின்றது என்று தான் அர்த்தம்.

ஆனால் இவ்வாறு இரண்டு உள்ளங்கள் யாருக்கும் இருக்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.

(அல்குர்ஆன் 33:4)

மனிதனிடம் இரண்டு உள்ளங்களை ஏற்படுத்தவில்லை என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இதற்கு மாற்றமாக அப்பெண் கூறுவதால் இது ஏமாற்று வேலையாக இருக்கலாம். மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஆதாயம் கருதியோ அப்பெண் இவ்வாறு நடிக்கலாம்.

அவர் நடிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அவர் மன நோய்க்கு ஆளாகியிருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை. திருமணம் அல்லது வேறு ஏதேனும் தேவைகள் இருப்பவர்கள் அதை நேரடியாக வீட்டில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்திருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இது, ஹிஸ்டீரியா என்ற ஒருவகை மன நோயாகும்.

அப்பெண்ணுக்கு அபார சக்தி இருப்பதாகக் கூறி, அதற்கு ஆதாரமாக இரவில் எழுந்து தொழுவதைக் கூறியுள்ளீர்கள். இரவில் எழுந்து தொழுவதெல்லாம் அபார சக்தி கிடையாது. ஜின்களின் சக்தியைப் பற்றி திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.

"பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?'' என்று (ஸுலைமான்) கேட்டார். "உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்'' என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.

"கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன்'' என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும், "நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா? என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன்" (என்று சுலைமான் கூறினார்)

(அல்குர்ஆன் 27:38-40)

கண் மூடித் திறப்பதற்குள் வேறு ஒரு நாட்டிற்குச் சென்று அந்த நாட்டு அரசியின் சிம்மாசனத்தைத் தூக்கி வரும் அளவுக்கு ஜின்களுக்கு ஆற்றல் இருந்ததாக அல்லாஹ் இந்த வசனங்களில் சொல்லிக் காட்டுகின்றான். இதை அபார சக்தி என்று கூறலாம்.

நீங்கள் கூறும் அந்தப் பெண் இது போன்ற அற்புதத்தைச் செய்து காட்டுவாரா? என்று கேட்டுப் பாருங்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஜெயலலிதாவின் நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து, அதை அபார சக்தி என்று கூறினால் ஒரு அர்த்தம் இருக்கும். இரவில் எழுந்து தொழுவதெல்லாம் சாதாரணமாக எல்லோரும் செய்யக் கூடிய செயல் தான். இதை வைத்து ஜின் இருப்பதாகக் கூறுவது தெளிவான ஏமாற்று வேலை! முறையாக விசாரித்தால் உண்மை வெளியாகும்.
 

 

(குறிப்பு: 2004 மார்ச் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

January 2, 2015, 6:54 AM

தற்கொலை தாக்குதல் பற்றி இஸ்லாம் கூறும் பதில் என்ன?

? தற்கொலைத் தாக்குதல் பற்றி இஸ்லாம் கூறும் பதில் என்ன?

ஏ.எல். ஹாஸிம், ராசல் கைமா, யூ.ஏ.இ.


தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாத அளவுக்குச் சான்றுகள் உள்ளன.

ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்த்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி),

நூல்: புகாரி 1364

யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கி, தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 1365

தற்கொலை செய்து கொண்டால் நிரந்தர நரகம் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே தற்கொலை கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் போரில், எதிரிகளை அழிப்பதற்காக தற்கொலை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தற்கொலை அல்ல! இதுவும் போர் தான் என்றும் கூறுகின்றனர். எனவே இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.

ஒரு காரியம் நிரந்தர நரகம் என்று தெரிந்த பின்னால் அதில் விழுந்து விடாமலிருக்க மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தற்கொலைத் தாக்குதல் கூடும் என்று வாதிட்டால் அதற்கான தெளிவான நேரடியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அது போன்ற நேரடியான ஆதாரம் எதையும் இவர்கள் காட்டுவதில்லை. இன உணர்வைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இவர்களிடம் இல்லை என்பது தான் உண்மை!

போர் என்பதே தற்கொலை தான், எத்தனையோ நபித்தோழர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர், இதுவெல்லாம் தற்கொலையா? என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். இதுவும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.

போரில் பங்கெடுக்கும் போது வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. தவறினால் உயிர் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இரண்டையும் ஒருசேர எதிர்பார்த்துத் தான் போரில் களம் இறங்குவர். ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இதில் உயிரோடு திரும்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை. உயிரை மாய்ப்பது மட்டுமே இங்கு உள்ளது. இதையும் போரில் வீர மரணம் அடைவதையும் சமமாகக் கருத முடியாது.

போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை புகாரியின் 2898, 3062 போன்ற ஹதீஸ்களில் காணலாம்.

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்த இவர்கள் மற்றொரு வாதத்தையும் எடுத்து வைக்கின்றனர். ஒருவன் வாழ முடியாத நிலையில் செய்வது தான் தற்கொலை. ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுவோர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்யவில்லை. எதிரிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்கின்றனர். எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி கிடைக்கும் என்ற அடிப்படையில் தற்கொலைத் தாக்குதல் அனுமதிக்கப் பட்டது தான் என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.

எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி என்பதற்கு இவர்கள் கூறும் தவறான வியாக்கியானத்தின் மூலம் இதை நியாயப்படுத்த நினைக்கின்றனர்.

எண்ணத்தின் அடிப்படையில் கூலி என்பது அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் தான். தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை நல்ல எண்ணத்தில் செய்கின்றேன் என்று கூறி யாரும் நியாயப் படுத்த முடியாது.

உதாரணமாக நோன்பு வைப்பவர் அல்லாஹ்வுக்காக நோன்பு வைப்பதாக எண்ணிக் கொண்டு வைத்தால் அவருக்கு நோன்பின் கூலி கிடைக்கும். ஆனால் தனது உடல் இளைப்பதை நோக்கமாகக் கொண்டு நோன்பு வைத்தால் நோன்பின் எல்லா விதிகளும் பின்பற்றப்பட்டாலும் அவருக்கு நோன்பிற்கான கூலி கிடைக்காது. இதே உதாரணத்தை தடுக்கப்பட்ட செயல்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது.

போரையே எடுத்துக் கொள்வோம். போரில் காயம் ஏற்படும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஒருவர் மது அருந்தினால் அது குற்றமில்லை என்று கூற முடியுமா? அவருக்குப் போதையில் இருக்க வேண்டும் என்பது நோக்கமல்ல! வலி தெரியாமல் மேலும் மேலும் போரிட வேண்டும் என்பதற்காகத் தான் குடிக்கின்றார். இதற்காக அல்லாஹ் அவருக்கு நன்மையை வழங்கி விடுவான் என்று யாரும் வாதிட மாட்டார்கள்.

விபச்சாரம் என்ற நோக்கம் இல்லாமல், எதிரிகளின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதை நோக்கமாகக் கொண்டு அவர்களின் பெண்களைக் கற்பழிக்கலாம் என்று கூற முடியுமா? அல்லது இஸ்லாத்தின் விரோதிகள் என்பதால் அவர்களுடைய சொத்துக்களைக் கொள்ளையடிக்கலாம், திருடலாம் என்று வாதிட முடியுமா? நோக்கம் நல்லதாக இருந்தாலும் செயல் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவையே போதுமான உதாரணங்கள்.

தற்கொலைத் தாக்குதல்கள் கூடும் என்று வாதிப்பவர்கள் இந்தப் பிரச்சனையை மார்க்க அடிப்படையில் சிந்திக்காமல் உணர்வுப்பூர்வமாக மட்டுமே சிந்திக்கின்றார்கள். உலகெங்கும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், நேருக்கு நேர் மோத முடியாத அளவுக்குள்ள எதிரியின் ஆயுத பலம், இன உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல்களை நியாயம் கற்பிக்கின்றனர்.

ஆனால் ஒரு முஸ்லிம் எவ்வளவு தான் அநீதி இழைக்கப்பட்டாலும், என்ன நியாயம் அவனிடம் இருந்தாலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டுமே நடக்க வேண்டும். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விடக் கூடாது. இதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது.

இதைக் கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய்ந்தால் உலகின் பல பகுதிகளில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.

உலகில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை யாருக்கு எதிராக நடத்தப்படுகின்றன என்று பார்த்தால், இதில் பலியாவோர் பொது மக்களாக இருப்பதைக் காண முடியும்.

பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகள், இரயில்கள், விமானநிலையங்கள், கடைவீதிகள், வணிக வளாகங்கள் போன்றவை தான் தற்கொலைத் தாக்குதல்களின் முக்கிய இலக்காக உள்ளன.

போர்க் களத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேர் நின்று மோதும் போது எதிரிகளைக் கொல்வதை யாரும் கொலை என்று கூற மாட்டார்கள். ஆனால் இத்தகைய போர்க்களங்களில் கூட பணிவிடை செய்வதற்காக வந்துள்ள பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற செய்தி புகாரி 3014, 3015 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன.

புகாரியில் 3012, 3013 ஆகிய ஹதீஸ்களில், பெண்களும் குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி அவர்களைக் கொல்வதை நியாயப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொல்வது தடையில்லை என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். ஆனால் இந்த ஹதீஸ் மாற்றப்பட்டு விட்டது.

நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் பெண்களும் சிறுவர்களும் கொல்லப்படுவதை முதலில் அனுமதித்தனர். பின்னர் இதைத் தடை செய்து விட்டனர் என்ற செய்தி அபூதாவூதில் 2298வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

ஒரு செயல் முதலில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடை செய்யப்பட்டால் தடையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே போர்க்களத்தில் கூட பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதற்கு அனுமதியில்லை என்பது தான் அல்லாஹ்வின் தூதருடைய தெளிவான தீர்ப்பாகும்.

நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் அனுப்பிய ஒரு படையினர் சிறுவர்களையும் கொன்று விட்டனர். இதைக் கேள்விப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரணை நடத்திய போது, அவர்களும் இணை வைப்பவர்களின் வழித் தோன்றல்கள் தானே என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள்  நாயகம் (ஸல்) அவர்கள், "கொலை செய்வதில் இவர்கள் வரம்பு மீறி விட்டனர். சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம் எனும்) இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. அவர்கள் உணர்ந்து கொள்ளும் வரை அதிலேயே உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றி விடுகின்றனர்'' என்று கூறினார்கள்.

(நூல்: அஹ்மத் 15036, 15037)

குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் அதற்கான காரணத்தையும் இங்கு குறிப்பிடுகின்றார்கள்.

முன்னர் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் யஸீத் பின் அபீசுஃப்யான் தலைமையில் படை அனுப்பியபோது பிறப்பித்த பத்து கட்டளைகளில் பெண்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும் கொல்லாதீர்கள் என்ற கட்டளையையும் சேர்த்துப் பிறப்பிக்கின்றார்கள். இந்தச் செய்தி முஅத்தாவில் 858வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களையும் சிறுவர்களையும் போரில் கொல்லக் கூடாது என்ற தடை தான் இறுதியானது என்பதை அபூபகர் (ரலி) அவர்கள் உறுதிப்படுத்துகின்றார்கள்.

ஆனால் இதற்கு மாற்றமாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள், பொதுமக்கள், பயணிகள், வர்த்தகர்கள் என்று போருக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிகளை இலக்காக வைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதே இது மார்க்கத்திற்கு முரணானது என்பதை வலியுறுத்துகின்றது.

மார்க்கம் அனுமதித்த காரியத்தைச் செய்யும் போது இது போன்ற விளைவுகளைப் பற்றி கவலைப்படக் கூடாது. ஆனால் தற்கொலைத் தாக்குதலுக்கு அனுமதி இல்லை என்பதால் இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் இங்கு நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.

அப்பாவிகள் கொல்லப்படுவதைக் காணும் முஸ்லிமல்லாதவர்கள், முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் வெறுப்புடன் பார்க்கத் துவங்குகின்றனர். இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்துவோரில் பலர் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத போது, அதாவது தொலைவான பகுதிகளில் நடக்கின்ற போது மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால் அதே சமயம் தாங்கள் வாழும் பகுதியில் நடந்து, அதனால் இவரது குடும்பமோ சொத்துக்களோ பாதிக்கப்படும் போது அதைக் கண்டிக்கின்றார்கள்.

மார்க்க அடிப்படையிலும் சரி! இதுபோன்ற தர்க்க ரீதியிலான காரணங்களாலும் சரி! தற்கொலைத் தாக்குதல்களுக்கு அனுமதி இல்லை என்பது தான் உண்மையாகும். 

(குறிப்பு: 2004 பிப்ரவரி ஏகத்துவம் இதழில் வெளி வந்த கேள்வி)

December 31, 2014, 8:10 AM

காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா?

? திருக்குர்ஆனின் 4:119 வசனத்தில் "அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளை மாற்றுவார்கள்'' என்று ஷைத்தான் கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான். எனவே காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா?

இஸ்லாமிய பொது நூலகம், வடகரை.

காதுகளைக் குத்தி ஓட்டை போடுவது அல்லாஹ்வின் படைப்பில் மாறு செய்வது என்பதை யாரும் மறுக்க முடியாது. பெண்களைப் படைக்கும் போது காதுகளில் ஓட்டை போட அல்லாஹ் மறந்து விட்டது போன்ற ஒரு நிலையை இது ஏற்படுத்தி விடுகின்றது. எனவே இதை அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கின்றான்.

"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு (தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்;அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் ஷைத்தான் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

(அல்குர்ஆன் 4 : 119)

இந்த வசனத்தை நன்கு சிந்தித்தால் இது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புரியும். இவ்வாறு படைப்பினங்களின் கோலத்தை மாற்றுவது ஷைத்தானுடைய முக்கிய இலக்காக அமைந்துள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதில் இரண்டு வகை உள்ளது. ஒருவர் தன்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொள்வதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டால் அது மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் தடுக்கப்பட்ட செயலாகும். ஆனால் அதே சமயம் பொதுவான மனிதத் தோற்றத்திற்கு மாற்றமாக அமைந்த, உடலியல் ரீதியான குறைபாடுகளைச் சரி செய்வதற்காக சர்ஜரி செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. இதற்கான ஆதாரம் வருமாறு.

அறியாமைக் காலத்தில் நடந்த கிலாப் போரின் போது என்னுடைய மூக்கு உடைபட்டு விட்டது. எனவே நான் வெள்ளியினால் மூக்கு செய்து பொருத்திக் கொண்டேன். அதில் எனக்குக் கெட்ட வாடை ஏற்பட்டது. அதனால் நபி (ஸல்) அவர்கள் எனக்குத் தங்கத்தால் ஆன மூக்கு பொருத்தும் படி உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர் : அர்ஃபஜத் பின் அஸ்அத் (ரலி)

நூல்கள் : திர்மிதீ 1692, அபூதாவூத் 3696

இது பற்றி கூடுதல் விளக்கம் பெற கீழ்க்காணும் ஆக்கங்க்களையும் பார்க்க

http://www.onlinepj.com/kelvi_pathil/penkal_kelvi/pengal_kathu_muku_kuthalama/#.VJ5NUl4Dpg

http://www.onlinepj.com/kelvi_pathil/penkal_kelvi/pengal-kathu-muku-kuthuvathu/#.VJ5NDF4Dpg

 

(குறிப்பு: 2003 அக்டோபர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 25, 2014, 7:41 AM

இறந்த பிறகு கண்தானம் உடல்தானம் செய்யலாமா?

? இறந்த பிறகு கண் தானம், உடல் தானம் செய்யலாமா?

அ. முஜிபுர்ரஹ்மான், சிவகங்கை

! ஒருவர் தன்னுடைய கண்களை தானம் செய்கின்றார் என்றால் இதன் மூலம் கண் தெரியாத இரண்டு பேருக்குப் பார்வை அளிக்கின்றார்.

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்

(அல்குர்ஆன் 5:32)

என்ற வசனத்தின் அடிப்படையில் கண் தானம் என்பது நன்மையைப் பெற்றுத் தரக் கூடியது என்பதில் சந்தேகமில்லை.

உடல் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஏனெனில் உடல் தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல. உடல் தானம் செய்யும் மனிதனின் உடலிலுள்ள பாகங்களை எடுத்து பிற மனிதர்களுக்குப் பொருத்துவதில்லை. மாறாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து மருத்துவக் கல்வியின் பாடத்திற்காகவும் ஆய்வுக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றன. கண் தானத்தின் போது கண்ணோ மற்ற உறுப்புகளோ சிதைக்கப் படுவதில்லை. இறந்தவரின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால் உடல் தானம் செய்வதரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி),

நூல் : புகாரி 2474, 5516

இது குறித்து மேலும் அறிய

http://www.onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/kan_thanam/#.VJ5PX14Dpg

http://www.onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/thanam_seytha_kan_sorkam_selluma/#.VJ5PjV4Dpg

 

(குறிப்பு: 2003 அக்டோபர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 25, 2014, 7:30 AM

பொது சிவில் சட்டம் சாத்தியமா?

பொது சிவில் சட்டம் சாத்தியமா?

கேள்வி -  1

இந்தியா மதச்சார்பற்ற நாடு எனும் போது முஸ்லிம்களுக்கு மட்டும் தனியாக சிவில் சட்டம் இருப்பது நியாயமா என்று அறிவுஜீவிகளும் வழக்கறிஞர்களும் கேட்பது நியாயமாகத்தானே உள்ளது?

தமிழ்ச் செல்வன், திருச்சி

கேள்வி -  2

அரசியல் சாசனத்தில் பொதுசிவில் சட்டம் கொண்டு வருமாறு சொல்லப்பட்டுள்ளதால், அதை நிறைவேற்றுவோம் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அரசியல் சாசனத்தில் அவ்வாறு கூறப்பட்டுள்ளதா?

சலீம் கான், தாம்பரம்

கேள்வி -  3

முஸ்லிம்களுக்குத் தனி சிவில் சட்டம் கேட்கும் முஸ்லிம்கள் தனி கிரிமினல் சட்டத்தையும் கேட்கத் தயாரா? இஸ்லாமியக் கிரிமினல் சட்டம் கடுமையாக உள்ளதால் அதற்குப் பயந்து கொண்டு இஸ்லாமியக் கிரிமினல் சட்டத்தை முஸ்லிம்கள் கோருவதில்லை என்று எங்கள் பகுதியைச் சேர்ந்த தி.க.வைச் சேர்ந்த பெரியவர் கேட்கிறார். இதற்கு நாம் எவ்வாறு பதில் சொல்வது?

தர்மபுரி டிஎன்டிஜே கிளை

கேள்வி -  4

ஒரு வேளை பாஜக ஆட்சிக்கு வந்து பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் நாம் என்ன செய்வது? அதை எப்படி எதிர்கொள்வது?

அஸ்மா மைந்தன், திருவாரூர்

கேள்வி -  5

பொது சிவில் சட்டம் சாத்தியமா?

இப்ராஹீம் கல்லிடைக் குறிச்சி

பதில்

நமது நாட்டில் எல்லா மக்களுக்கும் ஒரே சிவில் சட்டம்தான் உள்ளது. இதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சிவில் எனும், உரிமை சம்மந்தப்பட்ட விவகாரங்களில் முஸ்லிம்கள் நீதிமன்றத்தை அணுகினால் அல்லது முஸ்லிமுக்கு எதிராக மற்றவர் நீதிமன்றத்தை அணுகினால் அப்போது இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படாது. அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டப்படிதான் தீர்ப்பு அளிக்கப்படும்.

உதாரணமாக ஒரு 15 வயது சிறுவன் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்பதாக வைத்துக் கொள்வோம். ஒருவன் விரும்பும் மதத்தைத் தழுவுவது சிவில் - உரிமை சம்மந்தப்பட்ட விஷயமாகும்.

இது குறித்து யாராவது நீதிமன்றத்தை அணுகினால் இஸ்லாமியச் சட்டப்படி 15 வயதில் ஒருவன் மேஜர் ஆகிறான் என்பதால் அந்தச் சட்டப்படி நீதிமன்றம் தீர்ப்பளிக்காது. பொதுவான சிவில் சட்டப்படி 18 வயதில்தான் மேஜர் ஆக முடியும் என்பதால் சிறுவன் இஸ்லாத்தை ஏற்றது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். அத்துடன் அந்தச் சிறுவனை இஸ்லாத்தில் இணைக்க துணை நின்றவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும்.

இஸ்லாத்தில் இதற்கு வேறு சிவில் சட்டம் இருந்தும் அதற்கு மாற்றமான பொது சிவில் சட்டத்தின்படிதான் நமது நாட்டில் தீர்ப்பு அளிக்கப்படும்.

ஒருவர் தனது இடத்தை வாடகைக்கு விடுகிறார். இன்னொருவர் வாடகைக்குப் பெறுகிறார், இது சிவில் பிரச்சனை.

இதற்கு இஸ்லாத்தில் தனிச் சட்டம் உள்ளது. இந்தியாவில் வேறு சட்டம் உள்ளது. வீட்டின் உரிமையாளருக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் இந்தியச் சட்டப்படி தான்  தீர்ப்பு  அளிக்கப்படுமே தவிர, இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படாது.

இரண்டு முஸ்லிம்கள் மத்தியில் இப்பிரச்சனை ஏற்பட்டாலும் இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படுவதில்லை. அனைவருக்கும் பொதுவான சட்டப்படி தான் இதில் தீர்ப்பளிக்கப்படும்.

ஒருவர் ஒரு பொருளை வாங்குகிறார். அல்லது விற்கிறார். இது சிவில் உரிமை சம்மந்தப்பட்ட விஷயம். இஸ்லாத்தில் வியாபாரத்துக்கு என தனியாக சிவில் சட்டம் உள்ளது. ஆனால் அந்தச் சட்டப்படி தீர்ப்பு அளிக்காமல் இந்திய சட்டப்படிதான் முஸ்லிமுக்கும் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

கடன் வாங்குதல், கொடுத்தல் ஆகியன சிவில் பிரச்சனையாகும். எந்தக் கடனுக்கும் வட்டி இல்லை என்பது இஸ்லாமியச் சிவில் சட்டம். ஆனால் முஸ்லிம்கள் சம்மப்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் வழக்கு, நீதிமன்றத்துக்குப் போனால் இஸ்லாத்துக்கு எதிரான இந்தியச் சட்டப்படிதான் தீர்ப்பு அளிக்க முடியும். அப்படித்தான் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

இப்படி ஆயிரமாயிரம் சிவில் உரிமை சம்மந்தப்பட வழக்குகளில் இந்து முஸ்லிம் என்ற பேதமில்லாமல் அனைவருக்கும் பொதுவான சட்டம்தான் உள்ளது.

ஆனால் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எல்லா விஷயத்திலும் தனியாகச் சட்டம் உள்ளது போல் சங்பரிவாரக் கும்பல் திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றது.

திருமணம், ஆண் செய்யும் விவாக ரத்து, பெண் செய்யும் விவாக ரத்து, இறந்தவரின் சொத்துக்களை அவரது உறவினர்கள் பிரித்துக் கொள்ளுதல், வஃக்பு சொத்துக்களை நிர்வகித்தல் ஆகிய விஷயங்கள் தவிர மற்ற அனைத்திலும் பொதுவான சட்டம்தான் முஸ்லிம்களுக்கும் உள்ளது.

மேற்கண்ட விஷயங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டும் நடக்கக் கூடியதாகும். இதில் முஸ்லிம்கள் தமது மதச் சட்டப்படி நடந்து கொண்டால், பிற சமுதாய மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நாட்டுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு முஸ்லிம் தனது அக்காவின் மகளைத் திருமணம் செய்தால் அது செல்லாது என்று இஸ்லாம் கூறுகிறது. இந்த விஷயத்தில் இந்தியாவின் நீதி மன்றமும் இப்படித்தான் கூறும்.

இதுபோல் திருமண விஷயத்தில் எல்லா மதத்துக்கும் தனியான சட்டங்கள் உள்ளன.

ஒரு இந்து, உடன் பிறந்த சகோதரியைத் திருமணம் செய்தால் அதை இந்து மதம் திருமணமாக ஏற்காது என்பதால் நீதி மன்றமும் ஏற்காது.

ஒருவர் இறந்துவிட்டால் அவரது சொத்தை அவரது உறவினர்கள் எந்த விகிதாச்சாரத்தில் பிரித்துக் கொள்வது என்பதிலும் மற்ற சமுதாயத்துக்குச் சம்மந்தம் இல்லை. வஃக்பு சொத்தை இஸ்லாம் கூறும் முறைப்படிதான் செலவிட வேண்டும் என்பதிலும் மற்ற மதத்துக்கோ, சமுதாயத்துக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை.

இப்படி இந்துக்களுக்கும் தனியாக சிவில் சட்டம் இந்தியாவில் உள்ளது.

இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தால் அவர்களுக்கு வருமான விலக்கு உண்டு. இது முஸ்லிம்களுக்கு இல்லை. உண்மையில் இது அநியாயம். முஸ்லிமுக்கு அதிக வரியும் இந்துக்களுக்கு குறைந்த வரியும் என்ற நிலை இருந்தும் இது போல் இந்துக்களுக்கு மட்டும் சலுகை உள்ளது.

தத்தெடுக்கும் குழந்தை சொந்தப் பிள்ளையாகக் கருதப்படுவான் என்று இந்துக்களுக்கு மட்டும் தனிச்சட்டம் உள்ளது.

நிர்வாணமாகக் காட்சி தருவது சட்டப்படி குற்றம். ஆனாலும் இந்து மதத்திலும், ஜைன மதத்திலும் நிர்வாணச் சாமியார்களுக்கு அனுமதியிருப்பதால் நிர்வாணச் சாமியார்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடமாடி வருகின்றனர்.

குருவாள் என்ற பெயரில் கத்தியை எப்போதும் வைத்துக் கொள்ள சீக்கியர்களுக்கு நம் நாட்டுச் சட்டம் அனுமதி வழங்குகிறது. இதை மற்றவர்கள் செய்தால் சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது.

இப்படி எல்லா மதத்தவர்களுக்கும் ஐந்தாறு விஷயங்களில் அவரவர் மதப்படி நடக்க அனுமதி அளிக்கப்பட்டதை மாற்றச் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.

இந்து முறைப்படி எல்லோரும் தாலி கட்டி திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னால், வஃக்பு சொத்தை ஆடல் பாடலுக்கும் கோவில் திருவிழாக்களுக்கும் செலவிட வேண்டும் என்று சொன்னால் அதை ஏற்க முடியுமா? அது நியாயமாகுமா?

இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் சிவில் சட்டங்கள் அனைவருக்கும் சமமாகத்தான் உள்ளன. ஆனால் கிரிமினல் சட்டங்கள்தான் ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றன. அனைவருக்கும் ஒரே மாதிரியான கிரிமினல் சட்டம் வேண்டும் என்று கூறுவதுதான் நியாயமாகும். அதுதான் இந்த நாட்டுக்கு மிக அவசியம்.

ஒரு மாநிலத்தில் மது அருந்துவது தண்டனைக்குரிய குற்றம். இன்னொரு மாநிலத்தில் அரசாங்கமே மதுக் கடைகளை நடத்தும். இதனால் கட்டுக்கோப்பு குலைந்து விடாதா? மதுவைத் தடை செய்த மாநிலத்திலும் பெர்மிட் உள்ளவர்கள் மது குடிக்கத் தடை இல்லை. இது பாரபட்சம் இல்லையா?

நாட்டு மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படவில்லையே இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

விபச்சாரமும், சூதாட்டமும், நைட் கிளப்புகளும், ஆடை அவிழ்ப்பு நடனங்களும் ஒரு மாநிலத்தில் தண்டனைக்குரிய குற்றம். இன்னொரு மாநிலத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள். தடை செய்யப்பட்ட மாநிலங்களில் கூட, நட்சத்திர ஹோட்டல்களில் இவற்றுக்கு அனுமதியும் பிற இடங்களில் தடையும் உள்ளன.

நாட்டு மக்கள் அனைவரும் இப்போது சமமாக நடத்தப்படவில்லையே? இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்?

சைக்கிளில் இருவர் செல்வது, இரு சக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமல் ஓட்டுதல் போன்ற சிறிய விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்கள்வரை மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமான சட்டங்கள்; வித்தியாசமான நடைமுறைகள்.

நாட்டு மக்கள் அனைவரும் இப்போது சமமாக நடத்தப்படவில்லையே? இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்?

ஒரே செயலை இருவர் செய்கின்றனர். ஆனால் ஒருவன் செய்தது குற்றம். மற்றவன் செய்தது குற்றம் இல்லை. இப்படி சட்டம் இருப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? ஒரு நாடு என்று சொல்லிக் கொண்டு நாட்டு மக்களைப் பாரபட்சமாக நடத்துவது பற்றி இவர்களுக்கு கொஞ்சமும் வெட்கம் இல்லை.

மாநிலத்துக்கு மாநிலம் வரி விதிப்பில் வித்தியாசங்கள் உள்ளதா இல்லையா?

தமிழ்நாட்டுக்காரன் ஒரு கார் வாங்கினால் அவன் அரசுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரி கட்டுகிறான். ஆனால் அருகில் உள்ள பாண்டிச்சேரிக்காரன் அதே காரை வாங்கினால் அவன் பத்தாயிரம்தான் வரி கட்டுகிறான். ஒரே பொருளுக்கு குடிமக்களிடம் பாரபட்சமாக வரி விதிப்பதற்குத்தான் இவர்கள் வெட்கப்பட வேண்டும். இதை மாற்றுவதற்குத்தான் துடிக்க வேண்டும்.

பெட்ரோல் டீசல் வாங்கும் போது ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமாக  வரி போடப்படுகிறதே, இது நாட்டு மக்கள் அனைவரையும் சமமாக நடத்தவில்லை என்பதற்கு ஆதாரமாக இல்லையா?

ஒரு மாநிலத்தின் உணவுப் பொருட்களை இன்னொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லத் தடை!

நாட்டில் ஓடும் நதிகளின் நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் தகராறு!

இவற்றால் எல்லாம் கட்டுக்கோப்பு குலையாதாம். இப்படி வித்தியாசமான சட்டங்கள் இருப்பது அறிவுக்குப் பொருத்தமாக உள்ளதாம். நான்கே நான்கு விஷயங்களில் முஸ்லிம்கள் தங்கள் மதத்தின் கட்டளைப்படி நடந்தால் மட்டும் கட்டுக்கோப்பு குலைந்து விடுமாம். இப்படிக் கூறக் கூடியவர்கள்தான் அறிவுஜீவிகளாம்.

முஸ்லிம்கள் நான்கே நான்கு விஷயங்களில் தமது மார்க்கப்படி நடந்து கொண்டதால் நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் எத்தனை? இதன் காரணமாகப் பிரிந்து போன மாநிலங்கள் எத்தனை? கூறுவார்களா?

மொகலாய மன்னர்கள் இந்த நாட்டை ஆண்டபோது இந்துக்கள் தமது மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறிப் போகவில்லை. ஆயிரம் நாடுகளாக இருந்த பகுதிகள் ஒரு நாடாகத்தான் மாறின. இதுதான் உண்மை.

வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்டபோதும் முஸ்லிம்களும், இந்துக்களும் தத்தம் மதத்தின்படி சில சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறவில்லை. இத்தகைய அணுகுமுறையினால் தான் பரந்த இந்தியாவே உருவானது. மொகலாயர்களும், வெள்ளையர்களும் மதச் சுதந்திரத்தில் தலையிட்டிருந்தால் இன்றைய இந்தியாவை நாம் பார்க்க முடியாது. இதையும் அறிவுஜீவிகள் உணர வேண்டும்.

வெள்ளையர்களும், மொகலாய (முஸ்லிம்) மன்னர்களும் வழங்கிய தனி சிவில் சட்ட உரிமையால் ஒன்றுபட்ட இந்தியா, இவர்கள் கொண்டு வர எண்ணுகின்ற பொது சிவில் சட்டத்தினால் சிதறுண்டு போகும் நிலைக்குத் தள்ளப்படும். நாட்டில் குழப்பங்களும் கொந்தளிப்பும் ஏற்படும். இதைத்தான் சில விஷம சக்திகள் விரும்புகின்றன. இதற்காகவே பொது சிவில் சட்டம் பற்றிப் பேசுகின்றன.

புத்த மதத்தவர்கள் பெரும் பான்மையாக உள்ள தாய்லாந்து நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது. புத்தமத நாடு என்று பிரகடனம் செய்து கொண்ட இலங்கையிலும் கூட முஸ்லிம் தனியார் சட்டம் அமலில் உள்ளது. கிரீஸ், எத்தியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இத்தகைய சட்டங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்த நாடுகள் சிதறிப் போகவில்லை.

அறிவுஜீவிகளுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரிந்திருந்தும் இஸ்லாத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பொது சிவில் சட்டம் எனக் கூப்பாடு போடுகின்றனர்.

அடுத்து அரசியல் சாசனத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதை ஆதாரமாகக் கொண்டு பாஜக இதை தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளது என்றால் பாஜகவுக்கு சட்ட அறிவு இல்லை என்று தான் பொருள்.

குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்' என்று அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுகிறது.

அரசியல் சாசனத்தில் 44வது பிரிவு இவ்வாறு கூறுவது உண்மை தான். ஆனால் இது எந்தத் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது? அந்தத் தலைப்பின் நிலை என்ன? என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.

இந்தியாவின் எல்லைகள்

குடியுரிமை

பொதுவானவை

கொள்கை விளக்கம்

அடிப்படைக் கடமைகள் 

 ஆகிய ஐந்து தலைப்புகள் அரசியல் சாசனத்தில் உள்ளன.

 கொள்கை விளக்கம் என்ற தலைப்பின் கீழ் 36முதல் 51முடிய உள்ள பிரிவுகள் கூறப்பட்டுள்ளன.

 44வது பிரிவும் இந்தத் தலைப்பின் கீழ் தான் வருகின்றது.

 கொள்கை விளக்கம் என்ற இந்தத் தலைப்பு ஏனைய தலைப்புகளிலிருந்து மாறுபட்டது. ஏனைய தலைப்புக்களில் கூறப்பட்டவைகளை அமல் செய்யாவிட்டால் அதில் நீதிமன்றம் தலையிடலாம். அமல் செய்யாதவர்கள் அரசியல் சாசனத்தை அவமதித்தவர்களாகக் கருதப்படலாம். ஆனால் கொள்கை விளக்கம்' என்ற தலைப்பில் கூறப்படுபவற்றை அரசு கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. செயல்படுத்துமாறு நீதிமன்றமும் கட்டளை ஏதும் வழங்க முடியாது. இது அரசுக்குச் சொல்லப்பட்ட ஆலோசனைகள்தான். இது கொள்கை விளக்கம் என்ற தலைப்பிலேயே கூறப்பட்டுள்ளது.

'இந்தப் பகுதியில் விதிக்கப்பட்டவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது'

என்று கொள்கை விளக்கத்தின் 37வது பிரிவு கூறுகின்றது.

விருப்பமான மதத்தில் குடிமக்கள் நம்பிக்கை கொள்ளலாம்; ஏற்கலாம்; பின்பற்றலாம்; பிரச்சாரம் செய்யலாம்

 என்று 25 (1) பிரிவு உரிமை வழங்கியுள்ளது.

எப்படித் திருமணம் செய்யலாம்? யாரைத்  திருமணம்  செய்யலாம்?  என்பன போன்ற விஷயங்களும், விவாகரத்து, பாகப்பிரிவினை போன்ற  சட்டங்களும் முஸ்லிம்களுக்கு  அவர்களின்  மார்க்கம் சம்பந்தப்பட்டவை   ஆகும். தொழுகை மற்றும் வணக்க வழிபாடுகள் எவ்வாறு மார்க்கம்  சம்பந்தப்பட்டதாக உள்ளனவோ அவ்வாறே இந்தக் காரியங்களும் மார்க்கம் சம்பந்தப்பட்டவையாகும். இதற்கான கட்டளையும் வழிகாட்டுதல்களும் முஸ்லிம்களின் வேதமான திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளன.

இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தப்பட்ட இந்தக் காரியங்களை இஸ்லாம் கூறக்கூடிய முறையில் நடைமுறைப் படுத்துவதற்குத் தடுக்கப்பட்டால், அவர்களின் மதச் சுதந்திரமும், வழிபாட்டுச் சுதந்திரமும் பறிக்கப்படுகின்றது என்பதே பொருள்.

அரசியல் சாசனம் வழங்கியுள்ள இந்த உரிமையை,  அவசியம் வழங்கியே தீர வேண்டிய இந்த உரிமையை,  மறுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. இதற்கு முரணாக அமைந்துள்ள கொள்கை விளக்கத்தைத்தான் விட்டுவிட வேண்டுமே தவிர, அடிப்படை உரிமையை மறுக்க முடியாது.

அரசியல் சாசனத்தில் கூறப்படும் கொள்கை விளக்கம் எனும் தலைப்பில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்தாததால் நாடு சீரழிந்து வருகின்றது. அந்தப் பிரிவுகள் பற்றியெல்லாம் பாஜகவுக்கு அக்கறை இல்லை.

இந்த அரசியல் சாசனம் துவக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குள், குழந்தைகள் அனைவருக்கும் 14வயது முடிவடையும் வரையில் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.

(அரசியல் சாசனம் 45வது பிரிவு)

 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் பத்து ஆண்டுகளுக்குள் கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் என்று இந்தப் பிரிவு கூறுகின்றது. இன்று வரை கட்டாயக் கல்வி கொடுக்கவில்லை. ஏன் என்று கேட்டால் இது கொள்கை விளக்கம் தலைப்பில் உள்ள விஷயங்கள். இதைச் செய்வது கட்டாயம் இல்லை என்று பதில் கூறுகிறார்கள். அதே தலைப்பில் தானே பொதுசிவில் சட்டம் பற்றிய ஆலோசனையும் உள்ளது?

உணவுச்   சத்துக்களை   மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும் தேவையானவற்றைத் தமது தலையாய கடமையாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாக, போதையூட்டும் மது வகைகளையும் உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருட்களையும் மருந்துக்காக அன்றி வேறு விதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மது விலக்கை அமல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

கொள்கை விளக்கம், 47வது பிரிவு

 இன்றுவரை இந்தக் கொள்கை பின்பற்றப்படவில்லை.

மக்களுக்குக் கேடு தரும் நச்சுப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்றால் மதுவையும் தடுக்க வேண்டும். நச்சுப்புகை உள்ளதால் பட்டாசுகளையும் தடை செய்ய வேண்டும். ஆனால் நாடு முழுவதும் அரசே மதுபானத்தை விற்பனை செய்கிறது. அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டதை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பவர்களையும் விற்பவர்களையும் ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டால் இது கொள்கை விளக்கம்தான்; கட்டாயம் இல்லை என்கிறார்கள்.

இந்தக் கொள்கையின் அடிப்படையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படாது. பெரும்பாலான மக்கள், குறிப்பாகப் பெண்கள் முழுமையாக இதை வரவேற்பார்கள். இதைப் பற்றிப் பேசத் துப்பில்லாத பாஜக பொதுசிவில் சட்டம் பற்றி மட்டும் ஊளையிடுவது ஏன்?

தனது பொருளாதார சக்திக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும், கல்வி பெறுவதற்கும், வேலை இல்லாத போதும் வயது முதிர்ந்தோருக்கும் ஊனமுற்றோருக்கும் மற்றும் தேவையற்ற வறுமையில் வாடுவோருக்கும் பொது நிதியிலிருந்து உதவி பெறுவதற்கு உற்ற துணை புரிவதற்கேற்ற வழிவகைகள் காணப்பட வேண்டும்.

அரசியல் சாசனம் 41வது பிரிவு

அனைவருக்கும் வேலை வாய்ப்பு தரப்பட வேண்டும்; சக்திக்கு மீறிய வேலையாக அது இருக்கக்கூடாது வேலையில்லாதோருக்கும் முதியோருக்கும், நோயாளிக்கும், பொது நிதியிலிருந்து உதவ வேண்டும் என்றெல்லாம் இந்தப் பிரிவு கூறுகின்றது.

தேவையான, அவசியமான இந்தக் கொள்கைகள் யாவும் இன்று வரை அமல்படுத்தப்படவில்லை. அதனால் ஏற்பட்டுள்ள தீய விளைவுகளைக் கண்ட பின்பும் இதைச் செய்வோம் என்று சொல்ல பாஜகவுக்கு திராணி இல்லை.

இதுபோல் சொல்லப்பட்ட கொள்கை விளக்கத்தை அடிப்படையை உரிமையைப் பறிக்கும் கொள்கை விளக்கத்தை அமல்படுத்த துடிப்பது முஸ்லிம்களுடன் மோதிப்பார்க்கும் நோக்கம் தவிர வேறு இல்லை.

இஸ்லாமிய சிவில் சட்டம் கோருபவர்கள், இஸ்லாமியக் கிரிமினல் சட்டம் கோர மறுப்பதேன்?  என்ற கேள்விக்கு வருவோம்.

திருமணம் உள்ளிட்ட அந்த ஐந்து விஷயங்கள் முஸ்லிம்கள் தமக்குள் செயல்படுத்தக் கூடியவை. அதில் அரசுக்கு எந்த வேலையும் இல்லை.

கிரிமினல் சட்டங்கள் ஆட்சியாளர்களால் நடைமுறைப் படுத்தப்படுபவை. சிவில் சட்டங்களிலும் பெரும்பாலானவை ஆட்சியாளர்களால் அமல் படுத்தப்படுபவை. மக்கள் இதைத் தாங்களாகவே அமல்படுத்த முடியாது. மக்கள் தமக்கிடையே நடைமுறைப்படுத்திக் கொள்ளக் கூடிய,  மதம் சம்பந்தப்பட்ட, மிகச் சில விஷயங்களில் மட்டுமே தனியார் சிவில் சட்டம் உள்ளது.

இஸ்லாமிய ஆட்சி முறையில் கூட கிரிமினல் சட்டத்தை ஆட்சியாளர்கள்தாம் அமல்படுத்த முடியும். இந்தச் சாதாரண உண்மை கூட அறிவுஜீவிகளான இவர்களுக்கு விளங்கவில்லை.

கிரிமினல் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய கடுமையான தண்டனைகளை உங்களுக்குள் நீங்களே அமல்படுத்திக் கொள்ளுங்கள் என்று அரசு, முஸ்லிம்களை நச்சரித்து வருவது போலவும், அச்சட்டத்தின் கொடுமைக்கு அஞ்சி முஸ்லிம்கள் தயங்குவது போலவும் இத்தகைய கேள்விகளால் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

 இஸ்லாமியக் கிரிமினல் சட்டங்களை, முஸ்லிம்கள் கிரிமினல் விவகாரங்களில் அமல்படுத்திக் கொள்ள அரசு அனுமதித்தால் முஸ்லிம்கள் அதை மனப்பூர்வமாக ஏற்கத் தயாராக உள்ளனர். இஸ்லாமிய கிரிமினல் சட்டங்களால்தான் குற்றங்களைக் குறைக்க முடியும் என்பதில் முஸ்லிம்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு என்பதை அறிவுஜீவிகள் உணரட்டும்

ஆனால் தண்டனை வழங்கும் அதிகாரத்தை உலகில் எந்த நாடும் குறிப்பிட்ட சமுதாயத்தின் கைகளில் கொடுக்காது. ஒருவன் கொலை செய்து விட்டால் அவனை ஜமாஅத்தில் இழுத்து வந்து தூக்கில் போட்டுக் கொள்ளுங்கள் என்று ஒரு நாடு கூறினால் அந்த ஜமாஅத் மீது அந்த நாட்டுக்கு ஆளுமை இல்லை என்று ஆகிவிடும். இதனால்தான் இந்தக் கிறுக்குத்தனமான சட்ட விரோதமான இக்கோரிக்கையை முஸ்லிம்கள் வைக்கவில்லை.

ஆனால் முஸ்லிம்கள் செய்யும் கிரிமினல் குற்றங்களுக்கு இஸ்லாமிய அடிப்படையில் தீர்ப்பு அளிப்போம் என்று அரசு முடிவு செய்தால், இஸ்லாம் கூறுகின்ற அடிப்படையில் முஸ்லிம்களைக் கொண்ட தனி நீதிமன்றம் அமைத்தால் நாட்டில் உள்ள ஒரு முஸ்லிமும் அதை மறுக்கமாட்டான்.

இந்த்த் தண்டனைகளால் முஸ்லிம்களில் கொலையாளிகளும் திருடர்களும் இல்லாமல் போனால் அல்லது பெருமளவில் குறைந்தால் அது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதை உறுதிபடக் கூறிக் கொள்கிறோம்.

அறிவுஜீவிகள் என்போர், "இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் சிறுபான்மையினருக்குத் தனி சிவில் சட்டம் உண்டா?" என  சிறுபிள்ளைத்  தனமான கேள்வி கேட்கின்றனர்.

சவூதி அரேபியா முழுக்க முழுக்க முஸ்லிம்களை மட்டுமே குடிமக்களாகக் கொண்ட நாடு. இங்கு பிற சமய மக்கள் குடிமக்களாக இல்லை. இந்தியாவில் ஏறத்தாழ எட்டு சமயத்தவர்கள் குடிமக்களாகவும், மண்ணின் மைந்தர்களாகவும் வாழ்கின்றனர்.

நாட்டில்  குடிமக்களாக உள்ளவர்கள் மத அடிப்படையிலான தனி சிவில் சட்டத்தின்படி வாழ்வதற்கும், பிழைப்புக்காக அயல்நாடு சென்று அந்நாட்டுக் குடிமக்களாக ஆக முடியாதவர்கள் தனி சிவில் சட்டம் கோருவதற்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது.

முஸ்லிம் தனியார் சட்டத்தினால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே அதை மாற்ற வேண்டும் என்பது இவர்களின் கடைசி அஸ்திரம்.

பெண்களுக்குக் கொடுமை இழைக்கப்படுகிறது என்ற கூற்றில் உண்மை இருக்கின்றதா? என்றால் அதுவும் இல்லை.

ஒரு மனைவி இருக்கும்போது இன்னொரு மனைவியைத் திருமணம் செய்வதால் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள்; இது கொடுமை என்கின்றனர்.

இன்னொருத்தியை மணந்து கொள்வது கொடுமை! ஆனால் வைப்பாட்டியாக வைத்துக் கொள்வது கொடுமை இல்லை. என்னே அறிவுஜீவித்தனம் இது!

திருமணம் செய்து மனைவியுடன் வாழ்பவர், விபச்சாரம் செய்யலாம்; சிவப்பு விளக்குப் பகுதியில் சல்லாபம் செய்யலாம்; எத்தனை பெண்களையும் வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் எந்தத் தண்டனையும் கிடையாது. இதனாலெல்லாம் முதல் மனைவி பாதிக்கப்பட மாட்டாள். இவர்களின் அறிவு எவ்வளவு விசாலமானது என்பது தெரிகின்றதல்லவா?

முதல் மனைவி இருக்கும்போது, இன்னொருத்தியை மனைவி என்று பிரகடனம் செய்வதுதான் தவறு! மற்றபடி மனைவியிடம் அனுபவிப்பது போன்ற இன்பத்தை மனைவி அல்லாத பெண்களிடம் அனுபவிக்கலாம். அது தவறில்லை என்பது தான் இங்குள்ள பொது சிவில் சட்டம்.

வைப்பாட்டிகளின் குழந்தைகளுக்கு சொத்துரிமை உள்ளதாக நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது.

இப்போது நாம் கேட்கிறோம்.

எதற்காக இன்னொருத்தியைத் திருமணம் செய்கிறானோ அவை அனைத்தையும் இன்னொரு பெண்ணிடம் அனுபவிக்கலாம். வசதிகள் செய்து கொடுக்கலாம். மனைவி என்று மட்டும் சொல்லக் கூடாது. இதுதான் பொது சிவில் சட்டம்.

இதற்கும் பலதார மணத்திற்கும் அடிப்படையில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? பொது சிவில் சட்டமும் (மனைவி என்று பிரகடனம் செய்யாமல்) வைப்பாட்டி வைத்துக் கொள்ளவும், விரும்பி விபச்சாரம் செய்யவும் அனுமதித்து முதல் மனைவியைத் துன்புறுத்தத்தான் செய்கிறது.

ஒரு பெண்ணுடைய அழகை, இளமையை அனுபவிக்கக்கூடியவன், அவளுக்கு மனைவி என்ற அந்தஸ்தை அளித்துவிட்டு அனுபவிக்கட்டும் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுவது இவர்கள் ஆதரிக்கும் சட்டத்தை விட எந்த விதத்தில் குறைவானது? விளக்குவார்களா?

ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது இஸ்லாத்தில் ஒரு அனுமதிதான். அதுவும் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட அனுமதியே! வைப்பாட்டிகளை வைத்துள்ள மற்ற சமுதாயத்தவரைவிட இரண்டு மனைவியரை மணந்த முஸ்லிம்களின் சதவிகிதம் மிகவும் குறைவானது என்பதையும் இவர்கள் உணர வேண்டும்.

கண்ட பெண்களுடன் கூடி விட்டுப் பெருநோய்க்கு ஆளாகி, மனைவிக்கு அந்த நோயைப் பரிசாகக் கொடுப்பதை விட, இன்னொருத்திக்குச் சட்டப் பூர்வமான மதிப்பு அளித்து, மணந்து கொள்வது எல்லா வகையிலும் சிறந்தது என்பதில் ஐயமில்லை.

நீதிமன்றத்தை அணுகாமல் முஸ்லிம் கணவன், தனது முதல் மனைவியை விவாகரத்துச் செய்யலாம் என்பது கொடுமையில்லையா? இதனால் பெண்களுக்குப் பாதிப்பில்லையா? என்பதும் அறிவுஜீவிகளின் மற்றொரு அபத்தக் கேள்வி!

நிச்சயமாகக் கொடுமை இல்லை. பெண்களுக்கு இதை விடப் பாதுகாப்பான சட்டம் வேறு இருக்க முடியாது என்பதுதான் உண்மை.

நீதிமன்றத்தை அணுகித்தான் விவாகரத்துப் பெற முடியும் என்ற சட்டத்திற்கு உட்பட்ட பிற சமுதாயத்தில்தான் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

நீதிமன்றத்தில்தான் விவாகரத்துப் பெற வேண்டும் என்றால் விவாகரத்துப் பெறுவதற்காக மனைவியின் மேல் கணவன் பகிரங்கமாக அவதூறு கூறுகின்றான். அல்லது தீயிட்டுக் கொளுத்திவிட்டு, ஸ்டவ் வெடித்து விட்டது என்று கூறுகின்றான். இதற்குக் காரணம் விவாகரத்துச் சட்டத்தில் உள்ள கடுமைதான்.

எந்த முஸ்லிம் கணவனும், தன் மனைவியை தீயிட்டுக் கொளுத்தியதாக வரலாறு இல்லை. காரணம், மனைவியைப் பிடிக்காவிட்டால் எளிதாக அவன் விவாகரத்துச் செய்ய முடியும் என்பதுதான்.

மேலும் மனைவிக்குக் கணவனைப் பிடிக்காவிட்டால் அவளும் கணவனை விவாகரத்துச் செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது. இந்த அறிவுஜீவிகள் எதிர்க்கக் கூடிய முஸ்லிம் தனியார் சட்டத்திலேயே இது கூறப்பட்டுள்ளது.

விவாகரத்துச் செய்யும் உரிமையை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக இஸ்லாம் வழங்கி இருப்பதாலும், விவாகரத்துச் செய்த பின் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதித்து ஆர்வமூட்டுவதாலும், விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருந்தால் ஏற்படும் தீய விளைவுகள், இஸ்லாமிய சட்டத்தில் இல்லாததாலும் இதில் பெண்களுக்கு எந்தக் கொடுமையும் இல்லை. மாறாக அவர்களுக்கு இதில் பாதுகாப்பே இருக்கின்றது என்பதுதான் உண்மை.

விவாகரத்துச் செய்தபின் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியதில்லை என்பது கொடுமையில்லையா? என்பதும் அறிவுஜீவிகளின் கேள்வி!

விவாகரத்துச் செய்யப்பட்டவள் மறுமணம் செய்யும்வரை அல்லது மரணிக்கும்வரை ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய சட்டத்தில் திருத்தம் கோருகிறார்கள்.

இப்படி ஒரு சட்டம் இருந்தால் எந்தப் பெண்ணும் பெரும்பாலும் மறுமணம் செய்ய மாட்டாள். மாறாகக் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுக் கொண்டு, மற்ற ஆண்களுடன் சல்லாபம் நடத்தத் துணிவாள். ஜீவனாம்சம் இல்லை என்றால்தான் தனது வாழ்க்கையின் பாதுகாப்புக்காகப் பொருத்தமான துணையைத் தேடிக் கொள்வாள். இரண்டில் எது சரியானது என்று சிந்திக்க வேண்டாமா?

பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வந்தால் முஸ்லிம்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு வருவோம்.

பொதுவாக சிவில் விஷயங்களில் அரசு நேரடியாகத் தலையிட முடியாது. ஒருவர் வாங்கிய கடனைக் கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றமோ அரசோ அதில் தலையிட முடியாது. கடன் கொடுத்தவன் வழக்கு தொடுத்தால் மட்டுமே தலையிட முடியும்.

இவர்கள் பொது சிவில் சட்டம் என்ற பெயரில் எதைக் கொண்டு வந்தாலும் முஸ்லிம்கள் இஸ்லாமியச் சட்டத்தின் படி நடப்போம், நீதிமன்றத்தை நாட மாட்டோம் என்று முடிவு செய்தால் அந்தச் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது. அதைப் படித்துப் படித்து சந்தோசப்பட்டுக் கொள்ளலாமே தவிர, நம்மை அது ஒன்றும் செய்யாது என்பது தான் இதற்கான பதில்.

இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு சிறந்தது என்பதை முஸ்லிம் சமுதாயத்துக்கு விளக்கி நீதிமன்றத்தை அணுகாத நிலையை ஏற்படுத்துவோம். முஸ்லிம் சமுதாயம் அதிகத் தெளிவுடனும் மார்க்கப் பற்றுடனும் திகழ்ந்து அதை முறியடிக்கும். (இறைவன் நாடினால்)

பொதுசிவில் சட்டம் என்ற பெயரில், முஸ்லிம்களாக வாழும் உரிமை பறிக்கப்பட்டால், முஸ்லிம்கள் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பொங்கி எழுவார்கள். உலகத்துச் சலுகைகள் எதையும் அவர்கள் இழப்பார்கள்.

ஆனால் முஸ்லிம்களாக வாழ்வதற்கே தடை என்றால் இஸ்லாத்தை விட உயிர் பெரிதில்லை என்பதை நிரூபித்துக் காட்டுவார்கள். அத்தகைய நிலை ஏற்பட்டால் எந்தச் சக்தியாலும் அவர்களைத் தடுக்க முடியாது என்று ஆட்சியாளர்களை எச்சரித்து வைக்கிறோம்.

April 29, 2014, 7:24 PM

நபிகள் பற்றி சினிமா எடுக்கலாமா

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பற்றி திரைப்படம் எடுத்தால் என்ன? இசை இல்லாமல் முகம் காட்டாமல் எடுக்கலாமே? இதனால் அனைத்து சமுதாய மக்களுக்கும் எளிதில் புரியுமே?

தொடர்ந்து படிக்க April 14, 2011, 1:28 AM

ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குண�

ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா சஹீஹுல் புஹாரி 5686 வது ஹதீஸில் ஒட்டகத்தின் சிறுநீர் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டதாக உள்ளது. இது சவூதியில் நடை முறையில் உள்ளது. இது பற்றிய விளக்கம் தேவை

தொடர்ந்து படிக்க April 26, 2011, 11:06 PM

ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா?

ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா?

பதில்

ஷேர் மார்க்கெட்  என்பது ஒரு கம்பெனி நடத்துகிறவர் தன்னிடமுள்ள 1 கோடி மதிப்புள்ள தொழிலில் 30 லட்சம் ரூபாய் அளவிற்கு பிறர் கூட்டு சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிப்பார். ஒரு பங்கு என்பது 10 ரூபாயக்கு மேல் தாண்டக் கூடாது என்பது தான் சட்ட விதிமுறை.

தொடர்ந்து படிக்க April 25, 2011, 10:10 AM

வருமான வரியில் இருந்து தப்பிக்க

வருமான வரியில் இருந்து தப்பிக்க

இன்கம் டாக்ஸ் குறைக்க எள் ஐ சி, முட்சுவல் பான்ட் போன்றவை போடலாமா? அல்லது வேற என்ன வழி இருக்கிறதா?.  நான் ஹலாலான முறைப்படி வாழ விரும்புகின்றேன். பதில் தரவும்?

ஹிதாயதுல்லாஹ்

தொடர்ந்து படிக்க April 25, 2011, 9:32 AM

வேறு கிரகங்களில் உயிரினம் உண்டா

 வேறு கிரகங்களில் உயிரினம் உண்டா

வேறு கிரகங்களில் உயிரினம் வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கு குர்ஆனில் ஆதாரம் உள்ளதா?

தொடர்ந்து படிக்க April 14, 2011, 12:48 AM

உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் கு

உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா 

எனக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன. மூன்று குழந்தைகளும் ஆபரேஷன் மூலம் தான் பிறந்தது. இப்போது மீண்டும் என் மனைவி கர்ப்பமாக உள்ளார். இதுவும் ஆபரேசன் முலம் தான் பிறக்கும் எனவும் கர்ப்பத்தை அறுவை சிகிச்சை செய்து விடுங்கள் எனவும் டாக்டர் கூறுகிறார். மீண்டும் கர்ப்பமானால் உயிருக்கு ஆபத்து எனவும் எச்சரிக்கிறார். இந்த நிலையில் கர்ப்பத்தடை ஆபரேசன் செய்யலாமா

தொடர்ந்து படிக்க April 8, 2011, 10:28 AM

கழிவறைக்கு செல் போனை எடுத்துச் செல்ல

கழிவறைக்கு செல் போனை எடுத்துச் செல்லலாமா ரிங் டோன் பதில் பார்த்தேன் இதில் எனக்கு சிறிது மேல் விளக்கம் தேவை. நீங்கள் சொல்லும் பதில் ஒரு விதத்தில் சரி என்றாலும் அதே குரான் வசனம் சுமந்து கொண்டு அவர்கள் கழிவறை செல்வதும் உண்டு. எனவே குரான் வசனம் அப்போதும் ரிங் டோன் போன்றே இசைக்கும். குரான் வசனங்கள் கழிவறையில் பயன்படுத்தலாமா என்பதை விளக்க வேண்டும்

தொடர்ந்து படிக்க March 29, 2011, 9:20 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top