மொத்த நபிமார்கள் எத்தனை?‎

மொத்த நபிமார்கள் எத்தனை?‎

உலகம் படைக்கப்பட்டது முதல்  நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் வரை அனுப்ப்ப்பட்ட மொத்த நபிமார்களின் எண்ணிக்கை ஒரு ‎லட்சத்து 24 ஆயிரம் என்று பரவலாக ஆலிம்களால் ‎சொற்பொழிவுகளில் கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரம் ‎உள்ளதா?‎

ஏ.சுலைமான், விருத்தாசலம்.‎

பதில்:‎

நபிமார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரம் என்று ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அஹ்மத், ‎தப்ரானி ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.‎

இது பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் ‎அலீ பின் யஸீத் அல் ஹானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் ‎பலவீனமானவராவார்.‎

இது போல் மற்றொரு ஹதீஸ் இப்னு ஹிப்பான் நூலில் பதிவு ‎செய்யப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.‎

இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்ராஹீம் பின் ஹிஷாம் ‎அல்கஸ்ஸானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் பொய்யர் ‎என்று சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இதுவும் பலவீனமான ‎ஹதீஸாகும்.‎

அல்லாஹ் ஏராளமான நபிமார்களை அனுப்பியுள்ளான். ‎அவர்களின் எண்ணிக்கை நமக்குச் சொல்லப்படவில்லை என்பதே ‎சரியான நம்பிக்கையாகும்.‎

இந்த எண்ணிக்கையை விட அதிகமான நபிமார்கள் ‎அனுப்பப்பட்டு இருந்தால் அவர்களை நாம் மறுத்த குற்றம் ‎ஏற்படும்.‎

அதை விட குறைவான எண்ணிக்கையில் நபிமார்கள் ‎அனுப்பப்பட்டு இருந்தால் நபியல்லாதவர்களை நபி என்று நம்பிய ‎குற்றம் ஏற்படும். இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

March 1, 2015, 8:38 PM

ஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா?

? ஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா? விளக்கவும்.

எஸ்.எம். இல்யாஸ், திருமங்கலக்குடி

ஷியாயிஸம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையாகும். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு தனி மதம் என்று கூட சொல்லலாம்.

நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) அவர்களை உயர்வானவர்களாகச் சித்தரிப்பவர்கள் ஷியாக்கள். மேலும் அபூபக்ர், உமர், உஸ்மான் போன்ற கலீஃபாக்களும் நபித்தோழர்களும் காஃபிர்கள் என்பது ஷியாக்களின் நம்பிக்கை.

ஷியாக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஷியாக்கள் புனிதமாகப் போற்றும் நூல்களிலிருந்து சிலவற்றை இங்கு தருகின்றோம்.

"தொழுகைகளைப் பேணிக் கொள்ளுங்கள்! நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்'' என்பது திருக்குர்ஆன் வசனம். இதற்கு விளக்கம் கூறப் புகுந்த ஷியாக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

(ஐந்து) தொழுகைகள் என்பது ரசூல் (ஸல்), அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவராவர். நடுத் தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது அலீ (ரலி) ஆவார்.

அய்யாஷி தப்ஸீர் பாகம் 1, பக்கம் 128, நூருஸ்ஸகைன் பாகம் 1, பக்கம் 238

ஷியாக்களின் மற்றொரு தப்ஸீரில், நபி (ஸல்) அவர்கள் ருகூவு, ஸஜ்தா செய்ய நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள், இறைவா! உன் அடியார் அலீயின் பொருட்டால் அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக! என்று துஆ செய்தார்கள் என இப்னு மஸ்ஊது (ரலி) கூறினார்களாம்.

அல் புர்ஹான் ஃபீ தப்ஸீரில் குர்ஆன் பாகம் 4, பக்கம் 226

"நான் மூஸா (அலை), கிழ்ரு (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால் அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்'' என்று அலீ (ரலி) கூறினார்களாம். ஷியாக்களில் புகாரி இமாமைப் போல் மதிக்கப் படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.

அல் உஸுலுல் காபி கிதாபுல் ஹுஜ்ஜத் பாகம் 1, பக்கம் 261

"உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியைச் சோதித்தான்'' என்று அலீ (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸீ (ரலி) கூறினார்களாம்.

அல் புர்ஹான் முன்னுரை பக்கம் 27

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது "முஹம்மதே! திரும்பிப் பாரும்'' என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலீ (ரலி) நிற்கின்றார்களாம்.

தஃப்ஸீருல் புர்ஹான் பாகம் 2, பக்கம் 404

எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப் படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்குத் தெரியாமல் நடந்திராது, நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலீ (ரலி) கூறினார்கள்.

அல்உஸுலு மினல் காபி பாகம் 19, பக்கம் 197

அலீ (ரலி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்களாம்.

காஷானியின் கிதாபுஸ்ஸாயி பாகம் 1 பக்கம் 837

நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) உயர்ந்தவர்கள் என்பது இவர்களின் கொள்கை என்பதற்கு இவை சான்றுகளாகத் திகழ்கின்றன.

நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித்தோழர்களும் மதம் மாறி விட்டனர் என்று ஷியாக்களின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸலிம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.

மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித்தோழர்களும் காபிர்களாகி விட்டனர்.

கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 8, பக்கம் 245

அபூபக்ரும், உமரும், அலீ (ரலி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்பு கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.

கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 246

(அபூபக்ருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸார்கள் மட்டும் அபூபக்ருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றோர் அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர்.

கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 296

எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலீ என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார்.

கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு

அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் புகழ்ந்துரைத்த நபித்தோழர்களைப் பற்றி தரக்குறைவாகவும், காஃபிர்கள் என்றும் திட்டுவது ஷியாக்களின் கொள்கை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இவை தவிர ஷியாக்களின் இமாம்கள் எனப்படும் 12 பேரைப் பற்றிய இவர்களின் நம்பிக்கையும் ஷியாக்கள் இஸ்லாத்திற்குத் துளியும் சம்பந்தமில்லாத கொள்கையுடவர்கள் என்பதை நிரூபிக்கின்றன.

ஷியாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள்.

அல் உஸுலு மினல் காபி பக்கம் 258

இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்களாம்.

அல் உஸுலுமினல் காபி பக்கம் 398

இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம், அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாதாம்.

அல் உஸுலுமினல் காபி பக்கம் 402

எந்த மனிதனின் பேச்சாயினும், பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பனிரெண்டு இமாம்களும் அறிவர்.

குர்புல் இஸ்ஸாத் பக்கம் 146

பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர்) "வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன், நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்'' என்றார்களாம்.

அல்உஸுலு மினல் காபி, பாகம் 1, பக்கம் 261

இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும், பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூஜஃபர் அவர்களிடம் கேட்ட போது முடியுமே என்றார்களாம்.

கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470

"யார் அலீயை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே, எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலீயை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்'' என்று அல்லாஹ் அலீ (ரலி) யைப் பற்றி கூறினானாம்.

பஹ்ரானியின் புர்ஹான் எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23

அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷியாக்கள்.

அல்லாஹ்வின் பெயராலும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் பெயராலும் இது போல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் "வரவேண்டியவர்'' என்றொரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். அல் காயிம் என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம், அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?

காயிம் வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார்.

தப்ஸீர் சாபி பாகம்1, பக்கம் 172

காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாத்திமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.

தப்ஸீர் ஸாபி பாகம் 2, பக்கம் 108

இத்தகைய கேடுகெட்ட கொள்கைக்காரர்களே ஷியாக்கள். ஷியாக்களைப் பற்றி எழுத வேண்டும் என்றால் இங்கு பக்கங்கள் போதாது. அந்த அளவுக்கு இவர்களிடம் மவ்ட்டீகங்களும் மூட நம்பிக்கைகளும் மண்டிக் கிடக்கின்றன. இவர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள இவையே போதுமான ஆதாரங்களாகும்.

குறிப்பு : 2004 ஜூலை மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 11, 2015, 8:38 AM

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிக்கக் கூடியவர்களா?

? மதீனாவில் நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் தன் பெயரைப் பற்றி கூறும் போது, நபியுத்தவ்பா என்பதையும் கூறியதாக ஹுதைஃபா (ரலி) அறிவிக்கும் செய்தி முஸ்லிம், திர்மிதீ போன்ற நூல்களில் உள்ளது. நபியுத்தவ்பா (மன்னிக்கும் நபி) என்று நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பற்றி கூறியுள்ளார்கள். இதைத் தானே மவ்லூதில் ஓதுகின்றார்கள். இது சரியா? 

ரா. ரிஸ்வான் அஹ்மத், தஞ்சாவூர் 


தாங்கள் குறிப்பிடும் ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அறிவிப்பதாக இல்லாவிட்டாலும் அபூமூஸல் அஷ்அரி (ரலி) அறிவிப்பதாக இதே கருத்தில் ஹதீஸ் உள்ளது. அந்த ஹதீஸில் நபியுத்தவ்பா என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பது உண்மை தான். ஆனால் நபியுத்தவ்பா என்றால் அதற்கு மன்னிக்கும் நபி என்று பொருள் கூறியிருப்பது தான் தவறு. 

நபியுத்தவ்பா என்றால் தவ்பாவுடைய நபி, தவ்பா செய்யும் நபி என்று தான் பொருள் கூற முடியுமே தவிர மன்னிக்கும் நபி என்று பொருளில்லை. 

நபி (ஸல்) அவர்கள் நம்மை விட அதிகமதிகம் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடக்கூடியவர்களாக, தவ்பா செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். எனவே நபியுத்தவ்பா என்று தம்மைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கலாம். இதை வைத்து மவ்லிதுகளில் பாவங்களை மன்னிப்பவர் என்று கூறப்பட்டிருப்பதை நியாயப்படுத்த முடியாது. மவ்லிதுகளில் உள்ள மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைப் பற்றி கடந்த இதழில் தெளிவாக விளக்கியுள்ளோம். 

குறிப்பு : 2004 ஜூன் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 11, 2015, 6:45 AM

பேய் பிசாசு உண்டா? ஷைத்தான் தீண்டியவன்தான் பேயா?

? பேய் பிசாசு உண்டா? சிலர் இல்லை என்கிறார்கள். சிலர் ஷைத்தான் தான் பேய் பிசாசாக மனிதன் மேலாடும் என்கிறார்கள். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும்.

ஏகத்துவ வாசகர், கடையநல்லூர்

! பேய் பிசாசைப் பற்றி முஸ்லிம்களிடம் இருவிதமான நம்பிக்கைகள் உள்ளன. இறந்தவர்கள் ஆவியாக மாறி மீண்டும் உலகிற்கு வந்து, உயிருள்ளவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். இந்த ஆவிகள் தான் பேய், பிசாசுகள் என்பது முதல் நம்பிக்கை.

இறந்தவர்களின் ஆவி திரும்ப உலகுக்கு வர முடியாது, ஆனால் ஷைத்தான் மனிதனிடம் மேலாடுவான். அது தான் பேய் என்பது இரண்டாவது நம்பிக்கை.

இந்த இரண்டு நம்பிக்கைகளுமே குர்ஆன் ஹதீசுக்கு முற்றிலும் முரணானவையாகும். பேய் பிசாசுகள் இருக்கின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் குர்ஆன் ஹதீஸை மறுத்தவராவார்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன் 39:42)

இந்த வசனத்தைச் சிந்தித்தால் இறந்தவரின் ஆவி பேயாக வரும் என்ற நம்பிக்கைக்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம். இறந்து விட்ட மனிதர்களின் உயிர்களை அதாவது ஆவிகளை இறைவன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இந்த வசனம் கூறுகின்றது. இறைவனது கட்டுப்பாட்டை விட்டு தப்பித்து,ஆவிகள் இந்த உலகுக்கு வந்து விடுகின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன் 23:99, 100)

நல்லறங்கள் செய்வதற்காக மீண்டும் என்னை உலகிற்கு அனுப்பி வை என்று மனிதன் கேட்கிறான். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. அவனுக்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும் என்று இந்த வசனம் கூறுகின்றது. நல்லறங்கள் செய்வதற்காகக் கூட மனிதனை மீண்டும் அனுப்புவதில்லை என்றால், மற்ற மனிதர்களின் மேல் பேய் பிடித்து தொல்லை தருவதற்காக ஆவிகள் எப்படி திரும்ப அனுப்பப் படும் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

இறந்தவர்கள் மீண்டும் உலகிற்கு வரமுடியாது என்பதற்கு ஹதீஸ்களிலும் ஆதாரம் உள்ளது.

உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும் மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப் படும். சொர்க்க வாசியாக இருந்தால் சொர்க்கத்திலுள்ள அவரது இடம் காட்டப் படும். நரகவாசியாக இருந்தால் நரகிலுள்ள அவரது இடம் எடுத்துக் காட்டப் படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

நூல் : புகாரி 1290, 3001, 6034

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்தவர் அடக்கம் செய்யப் பட்டதும் கருத்த நிறமும் நீல நிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள். (முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து) "இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதியிருந்தாய்?'' என்று கேட்பார்கள். "அவர் அல்லாஹ்வின் தூதராகவும் அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்'' என்று அந்த மனிதர் கூறுவார். "உலகில் வாழும் போதே இவ்வாறு நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று அம்மலக்குகள் கூறுவார்கள். பின்னர் அவரது மண்ணறை விசாலமாக்கப் பட்டு ஒளிமயமாக்கப் படும். பின்னர் அவரை நோக்கி, "உறங்குவீராக'' என்று கூறப்படும்.

நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறி விட்டு வருகின்றேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், "நெருங்கிய உறவினர்களைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு உறங்கும் புது மாப்பிள்ளை போல் இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக'' என்று கூறுவார்கள்.

இறந்த மனிதன் நயவஞ்சகனாக இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அவன், "இந்த முஹம்மதைப் பற்றி மனிதர்கள் பலவாறாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கின்றேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்று கூறுவான். அதற்கு அவ்வானவர்கள், "நீ இப்படித் தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று கூறுவார்கள். அதன் பின்னர் பூமியை நோக்கி, "இவனை நெருக்குவாயாக'' என்று கூறப்படும். அவனது விலா எலும்புகள் நொறுங்குமளவுக்கு பூமி அவனை நெருக்க ஆரம்பிக்கும். இறைவன் அவனது இடத்திலிருந்து அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப் பட்டுக் கொண்டே இருப்பான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : திர்மிதீ 991

இறந்தவர்கள் நல்லவர்களானாலும் கெட்டவர்களானாலும் கியாமத் நாள் வரை இந்த உலகத்திற்குத் திரும்பி வர வாய்ப்பே இல்லை என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவாக உணர்த்துகின்றன. எனவே இறந்தவரின் ஆவி உலகத்திற்கு வந்து பேயாக நடமாடுகின்றது என்று யாரேனும் ஒருவர் நம்பினால் அவர் மேற்கண்ட குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் மறுக்கின்றார் என்று தான் பொருள்.

ஷைத்தான் தான் பேயாக மனிதர்கள் மேலாடுகின்றான் என்பது பேய் குறித்த இரண்டாவது வகை நம்பிக்கை. இந்த வகையினர் ஷைத்தான் குறித்த வசனங்களையும் ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டி, பேய் பிடித்தல் என்றால் ஷைத்தானின் வேலை! எனவே நாங்கள் மந்திரித்து பேயை விரட்டுகின்றோம் என்று கூறி மக்களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். தாயத்து தகடு என்று மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் லெப்பைமார்கள்,தங்கள்மார்கள் இத்தகைய பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

"ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஒரு ஆதிக்கம் உண்டு. அது போல் வானவருக்கும் ஒரு ஆதிக்கம் உண்டு'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

நூல் : திர்மிதீ 2914

ஆதமுடைய மக்களின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடுகின்றான் என்ற நபிமொழி புகாரியில் (1897, 1894, 1898, 2870, 3039, 5751, 6636) இடம் பெற்றுள்ளது.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.

(அல்குர்ஆன்2:275)

இந்த ஹதீஸ்களையும் வசனத்தையும் ஆதாரமாகக் காட்டி மனிதனை ஷைத்தான் தீண்டுவதால் அவனுக்குப் பேய் பிடிக்கின்றது என்ற வாதத்தை முன் வைக்கின்றார்கள். இதுவும் அடிப்படையற்ற வாதமாகும். ஏனெனில் மேற்கண்ட ஹதீஸ்களில் ஆதமுடைய மக்கள் அனைவரிடமும் ஷைத்தானின் ஆதிக்கம் உள்ளது என்று தான் குறிப்பிடுகின்றது. அப்படியானால் உலகிலுள்ள அனைவருக்கும் பேய் பிடித்திருக்க வேண்டும். இந்த ஹதீஸ்களிலிருந்து இவர்கள் எடுத்து வைக்கும் வாதம் தவறானது என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஷைத்தான் பேயாக வந்து மனிதர்களைப் பிடிப்பான் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஷைத்தான் என்ற படைப்பைப் பற்றிக் கூறும் இஸ்லாம் அந்த ஷைத்தானின் வேலை என்ன என்பதையும் கூறுகின்றது. மனிதனை வழி கெடுப்பது தான் ஷைத்தானின் வேலையே தவிர மனிதனுடைய அறிவை நீக்கி அவனைப் பைத்தியத்தைப் போல் ஆக்குவது அவனது வேலை இல்லை. அதற்கு அவனுக்கு அதிகாரமும் இல்லை. மேற்கண்ட நபிமொழியே இதற்குப் போதுமான சான்றாகும்.

ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு வானவரும் ஒரு ஷைத்தானும் இருக்கின்றார்கள் என்று மட்டும் அந்த ஹதீஸில் கூறப்படவில்லை. மாறாக, ஷைத்தான் எவ்வாறு தீண்டுவான் என்பதையும் சேர்த்தே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

"ஷைத்தானின் தாக்கம் என்பது தீமையில் ஆர்வமூட்டுவதும், சத்தியத்தை நிராகரிப்பதுமாகும்'' என்பது திர்மிதீ ஹதீஸின் பிற்பகுதியாகும். இதையும் சேர்த்து வாசிக்கும் போது ஷைத்தான் மனிதர்களை வழி கெடுப்பான் என்பது தான் இதன் பொருளே தவிர மனிதன் மேல் ஆடி, மென்டல் ஆக்குவான் என்பதல்ல.

வானவர் நல்ல விஷயங்களைச் செய்யுமாறு மனிதனைத் தூண்டுவார். ஷைத்தான் கெட்ட விஷயங்களைச் செய்யுமாறு தூண்டுவான். இதில் மனிதன் தனது சுய சிந்தனையுடன் தான் இவர்களில் யாருக்குக் கட்டுப்படுவது என்று முடிவெடுக்கின்றான். ஷைத்தானுக்குக் கட்டுப்படுபவன் தீய காரியங்களைச் செய்கின்றான். வானவருக்குக் கட்டுப்படுபவன் நல்ல காரியங்களைச் செய்கின்றான். இதைத் தான் மேற்கண்ட நபிமொழி கூறுகின்றது.

ஷைத்தானுக்குக் கட்டுப்பட்ட மனிதன் தன்னுடைய அறிவையும் ஆற்றலையும் இழந்து பைத்தியமாகி விடுவதில்லை என்ற அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஷைத்தான் தான் பேயாக மாறி மேலாடுகின்றான் என்பது குர்ஆன் ஹதீசுக்கும் அறிவுக்கும் பொருந்தாத வாதமாகும்.

2:275 வசனத்தில் ஷைத்தான் தீண்டியவன் என்று கூறப்படுவதற்கு இந்த லிங்கில் விளக்கமளிக்கப் பட்டுள்ளதைப் பார்க்கவும்.

மேலும் விபரம் அறிய

http://www.onlinepj.com/books/pey_pisasu_unda/#.VJ5RyV4Dpg

http://www.onlinepj.com/bayan-video/siriya_uraikal/darkavum_pey_pisasum/#.VJ5RuF4Dpg

http://www.onlinepj.com/bayan-video/siriya_uraikal/pey_pisau_unda/#.VJ5Rm14Dpg

http://www.onlinepj.com/audio_uraikal/siriya_uraikal/pey_pisau_unda/#.VJ5RiF4Dpg

http://www.onlinepj.com/bayan-video/siriya_uraikal/pey_pisasu_ayvu/#.VJ5Qcl4Dpg

http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/-saithanal-manithanuku-paithiyam-pidikkuma/#.VJ5QQl4Dpg

 

(குறிப்பு: 2003 அக்டோபர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 25, 2014, 7:24 AM

இறந்தவருக்காக குர்ஆன் ஓதலாமா?

? இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அவர்கள் பெயரில் பகஸ் செய்யலாமா?

ஹெச். ஜுனைதா பேகம், மேலக்காவேரி.

? வீட்டில் ஒரு நபர் இறந்தால் அவருக்காக ஸபுர் செய்யுங்கள் என்று கூறுகின்றார்கள். ஸபுர் என்றால் என்ன? இறந்தவருக்குக் குர்ஆன் ஓதலாமா? இறந்தவருக்காக வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியிருக்கின்றார்கள்?

பி. இதாயத்துல்லாஹ், மதுராவயல்

! ஸபுர் என்றால் பொறுமை என்று பொருள். குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டதற்காக ஒப்பாரி வைத்து அழுது புலம்பாமல் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. இதைத் தான் ஸபுர் செய்யுங்கள் என்று கூறியிருப்பார்கள்.

இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அனுப்பி வைப்பதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை. இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவது நன்மை என்றிருந்தால் அதை நிச்சயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவியார் கதீஜா (ரலி) இறந்த போதோ, அல்லது மகனார் இப்ராஹீம் (ரலி) இறந்த போதோ அவர்களுக்காக குர்ஆன் ஓதவில்லை. எத்தனையோ நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இறந்துள்ளார்கள். அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதுமாறு கட்டளையிட்டதாகவோ அல்லது நபித்தோழர்கள் ஓத அதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததாகவோ ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸ் கூட இல்லை.

நம்முடைய அங்கீகாரம் இல்லாத ஒரு செயலை (மார்க்கமெனக் கருதி) செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), 

நூல் : முஸ்லிம் 3540

"(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொன்றும் பித்அத் (நூதனப் பழக்கம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), 

நூல் : நஸயீ 1560

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இன்றி நாமாக ஒரு அமலைச் செய்தால் அது நரகத்திற்குக் கொண்டு போய் நம்மைச் சேர்த்து விடும். எனவே இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

இறந்தவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது, பாவமன்னிப்புத் தேடுவது ஆகிய காரியங்கள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அவர்களுக்குப் பின் வந்தோர் "எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 59:10

இந்த வசனத்தில் நமக்கு முன் சென்று விட்டவர்களுக்காக பிரார்த்திப்பதைப் பற்றி அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். இந்த அடிப்படையில் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக பாவமன்னிப்புத் தேட வேண்டும். அன்றாடம் ஐவேளை தொழுகைகளிலும் இறந்தவருக்காக பாவமன்னிப்பு கோரி பிரார்த்தனை செய்யலாம்.

இவை தவிர இறந்தவர் மீது நோன்பு கடமை இருந்தால் அதை அவரது வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும்.

"களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்து விட்டால் அவர் சார்பாக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), 

நூல் : புகாரி 1952

இது போல் இறந்தவருக்கு ஹஜ் கடமையாக இருந்து அதை அவர் நிறைவேற்றாமல் இறந்திருந்தால் அந்த ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும்.

அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தந்தை ஹஜ் செய்யாமல் இறந்து விட்டார். அவருக்குப் பதிலாக நான் ஹஜ் செய்யலாமா? என்று ஒருவர் வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன்னுடைய தந்தையின் மீது கடன் இருந்தால் அதை நிறைவேற்றத் தானே செய்வாய்?''என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். "அப்படியானால் அல்லாஹ்வுடைய கடன் (நிறைவேற்றப் படுவதற்கு) மிகத் தகுதியானதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), 

நூல் : நஸயீ 2591

இறந்தவருக்குக் கடன் இருந்தாலோ அல்லது பொருளாதாரம் தொடர்பாக ஏதேனும் வஸிய்யத் செய்திருந்தாலோ அதை நிறைவேற்றுவது வாரிசுகளின் பொறுப்பாகும் என்பதையும் இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. இது போன்ற காரியங்களை இறந்தவருக்காக செய்ய வேண்டுமே தவிர குர்ஆன் ஓதி அனுப்புவது போன்ற மார்க்கத்தில் சொல்லப்படாத காரியங்களைச் செய்வதால் பித்அத் எனும் தீமையைச் செய்த குற்றம் தான் ஏற்படுமே தவிர நன்மை ஏற்படாது.

இதையும் கேட்கவும்

http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/iranthavarukaka_fathiha_othalama/#.VJpOe14Dpg

http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/iranthavarukkaka_dua_seyyalama/#.VJpOlV4Dpg

http://www.onlinepj.com/kelvi_pathil/ithara_vanakangal/iranthavaruku-dua-saythal/#.VJpO3l4Dpg

 

(குறிப்பு: 2003 செப்டம்பர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 24, 2014, 6:31 AM

ஷியா முஸ்லிம்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கும் மத்ஹபுகளுக்கும் என்ன வித்தியாசம்?

? மத்ஹபுகளில் மொத்தம் நான்கு பிரிவுகள் உள்ளன. ஆனால் சமீப காலமாக ஷியா முஸ்லிம் என்று கூறக் காண்கிறோம். ஷியா முஸ்லிம்கள் என்பவர்கள் யார்?அவர்களுக்கும், மத்ஹபுகளுக்கும் என்ன வித்தியாசம்?

மு.கா. அஹ்மத், மதுரை

ஷியாக்களுக்கும் மத்ஹபுகளுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்ப்பதற்கு முன்னால் மத்ஹப் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மத்ஹப் என்றால் போகுமிடம், போக்கிடம் என்பது பொருள். மலஜலம் கழிப்பதற்காகப் போகுமிடம், அதாவது கழிப்பிடம் என்ற பொருளில் தான் இந்தச் சொல் ஹதீஸில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மத்ஹபுக்குப் போகும் போது தூரமாகச் சென்று விடுவார்கள். (நூல்கள் : அபூதாவூத்1, திர்மிதீ20, நஸயீ 17, அஹ்மத் 326)

ஒருவரது சிந்தனை சென்ற இடம் என்ற கருத்தில் மத்ஹப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு பின்னர் சிந்தனை என்ற கருத்து கொள்ளப்பட்டது.

ஷாஃபி மத்ஹப் என்றால் ஷாஃபி இமாமின் சிந்தனை என்று பொருள். மத்ஹபுகள் நான்கு மட்டுமே இருப்பதாகக் கூறுவது தவறு! மத்ஹப் இஸ்ஹாக் இப்னு ராஹவை,மத்ஹப் சுஃப்யானுஸ் ஸவ்ரி, மத்ஹப் ஹஸன் பஷரீ என்று ஏராளமான மத்ஹபுகள் உள்ளன.

இந்த இமாம்கள் கூறிய மார்க்கச் சட்டங்களை அவரது மத்ஹப் என்று ஆரம்ப காலத்தில் கூறி வந்தார்கள். தனது மத்ஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என்று எந்த இமாமும் கூறவில்லை. ஆனால் பிற்காலத்தில் வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட மத்ஹபைப் பிடித்துக் கொண்டு, அதை மட்டுமே தாங்கள் பின்பற்ற வேண்டும், அது தான் இஸ்லாத்தின் கொள்கை என்பது போல் மாற்றி விட்டார்கள்.

தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளிலும் இதர மார்க்கச் சட்டங்களிலும் மத்ஹபுகளில் கருத்து வேறுபாடு காணப்பட்டாலும், கடவுள் கொள்கை அடிப்படையில் மத்ஹபுவாதிகள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வந்து விடுவார்கள். ஆனால் ஷியாக்கள் எனப்படுவோரின் கடவுள் கொள்கைக்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

அலீ (ரலி) ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு எதிராக காரிஜியாக்கள் புரட்சி செய்த போது, அலீ (ரலி) அவர்களது ஆட்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படத் தொடங்கியது. இவர்களே ஷியாக்கள் ஆவர். ஷியா என்றால் ஒரு கூட்டத்தினரைக் குறிக்கும் சொல். அலீ (ரலி) க்கு ஆதரவான கூட்டம் என்பதால் "ஷீயத் அலீ - அலீயுடைய கூட்டத்தினர்' என்று அழைக்கப்பட்டனர். இவ்வாறு தோன்றிய ஷியாக்கள் காலப் போக்கில், அலீ (ரலி) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் கொண்ட அளவுக்கதிகமான பிரியத்தால் அவர்களைக் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர். நபி (ஸல்), அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி-அன்ஹும்) ஆகிய ஐவருக்கும் தெய்வத் தன்மை இருப்பதாக ஷியாக்கள் நம்புகின்றனர்.

அலீ (ரலி) அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் தான், அவர்கள் சிறு வயதினராக இருந்ததால் நபி (ஸல்) அவர்களிடம் வழங்கப் பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும்.

நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு அலீ (ரலி) அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை வழங்காமல் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி-அன்ஹும்) ஆகியோர் ஆட்சிப் பொறுப்பை வகித்ததால், இந்த மூன்று கலீஃபாக்களையும், இவர்களுடன் இருந்த ஏனைய நபித்தோழர்களையும் "காஃபிர்கள்' (இறை மறுப்பாளர்கள்) என்று கூறுகின்றனர். இந்த நபித்தோழர்களைத் திட்டுவது இறைவனிடத்தில் நன்மையைப் பெற்றுத் தரும் என்றும் கருதுகின்றனர்.

சமாதி வழிபாடு, தரீக்கா, ஷைஹ், முரீது என சமுதாயத்தில் நிலவி வரும் எண்ணற்ற வழிகேடுகளுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது ஷியாயிஸம் தான். ஷாதுலிய்யா,காதிரிய்யா போன்ற தரீக்காக்கள் அனைத்தும் சங்கிலி தொடராகச் சென்று அலீ (ரலி) அவர்களிடம் போய் முடிவடையும். இந்த வழிகேடுகள் ஷியாக்களிடமிருந்து வந்தவை என்பதே இதற்குக் காரணம்.

இப்படி இஸ்லாத்திற்கு எள்ளளவும் சம்பந்தமில்லாத, இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான கொள்கைகளை உடையவர்கள் தான் ஷியாக்கள்.

 

(குறிப்பு: 2003 ஆகஸ்டு மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 24, 2014, 5:40 AM

ஷைத்தானால் மனிதனுக்கு பைத்தியம் பிடிக்குமா?

? ஷைத்தானால் பைத்தியம் பிடிக்காது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் 2:275வசனம் இதற்கு மாற்றமாக உள்ளதே! மேலும் ஷைத்தானிடருந்து பைத்தியம் பிடிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் உள்ளது. மேலும் மனிதனைப் பைத்தியமாக்குவதால் ஷைத்தானுக்குப் பெரிய லாபமும் உண்டு. இதன் மூலம் மனிதன் எந்த நற்செயலையும் செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது. எனவே மனிதனை ஷைத்தான் பைத்தியமாக்குகின்றான் என்று விளங்கலாம் அல்லவா? விளக்கவும்.

இஸ்மாயீல் ஷெரீப், சென்னை

! "அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!'' என்று அவன் கேட்டான். "நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான். "நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று (ஷைத்தான்) கூறினான். (அல்குர்ஆன் 7:14-16)

இந்த வசனங்களில் ஷைத்தானின் பணி என்ன என்பது பற்றி கூறப்படுகின்றது. கியாம நாள் வரை மக்களை வழி கெடுப்பதற்காக இறைவனிடம் ஷைத்தான் அவகாசம் வாங்கியுள்ளான். இதைத் தவிர வேறெந்த அதிகாரமும் ஷைத்தானுக்கு இல்லை. மனிதனைப் பைத்தியமாக்குவதோ, அல்லது அதைக் குணப்படுத்துவதோ அவனது வேலை இல்லை.

மனிதனைப் பைத்தியமாக்கும் அதிகாரம் ஒருவேளை ஷைத்தானுக்கு இருக்கின்றது என்று வைத்துக் கொண்டாலும் அவன் அதைச் செய்ய மாட்டான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப் பட்டு விட்டது.

1. தூங்குபவர் விழிக்கின்ற வரை 2. சிறுவன் பெரியவராகும் வரை 3. பைத்தியக்காரர் பைத்தியத்திலிருந்து தெளிவாகும் வரை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்கள் : நஸயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா 2031

இந்த ஹதீஸின் படி பைத்தியமாக இருப்பவர் எந்தத் தீமையைச் செய்தாலும் அவருக்கு பாவம் எழுதப்படாது. எனவே மனிதன் பைத்தியமாக இருப்பது, மனிதனை வழி கெடுப்பதாக சபதமேற்றுள்ள ஷைத்தானுக்கு மிகப் பெரிய இழப்பாகும். எனவே பைத்தியம் பிடிப்பதற்கும், ஷைத்தானுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். (அல்குர்ஆன்2:275)

இந்த வசனத்தில் மறுமையில் பைத்தியமாக எழுவதை ஷைத்தானால் தீண்டப்பட்டவன் என்று கூறப்படுவதைப் பற்றி கேட்டுள்ளீர்கள்.

பேய் விரட்டுவோர், பிசாசுகளை ஓட்டுவோர் என்று தம்மைப் பற்றிக் கூறிக் கொள்வோர் இவ்வசனத்தைக் காட்டியே மக்களை ஏமாற்ற முயல்கின்றனர்.

தீய காரியங்களைப் பற்றிக் கூறும் போது ஷைத்தான் அதை ஏற்படுத்தினான் என்று கூறுவதை குர்ஆன் அனுமதிக்கிறது.

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும்,துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்). (அல்குர்ஆன் 38:41, 42)

அய்யூப் நபியவர்களுக்கு நோயும் துன்பமும் ஏற்பட்ட போது ஷைத்தான் தீண்டி விட்டான் என்று கூறுகின்றார்கள். இதனால் நோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று கருதக் கூடாது. கெட்ட காரியத்தை அல்லாஹ்வுடன் சேர்க்கக் கூடாது என்று மரியாதை நிமித்தமாகவே அவ்வாறு அய்யூப் (அலை) கூறினார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அது போல் பைத்தியத்தையும் அல்லாஹ் தான் ஏற்படுத்துகின்றான் என்றாலும் அந்தத் தீமை ஷைத்தானுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

ஷைத்தானால் பைத்தியம் பிடிப்பதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பு தேடியதாக ஹதீஸ் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நாம் தேடிப் பார்த்த வரை இவ்வாறு ஹதீஸ் எதையும் காண முடியவில்லை. அப்படியே ஹதீஸ் இருந்தாலும் இந்த இடத்தில் பைத்தியம் என்பதற்கு "வழி கெடுத்தல்' என்ற பொருளைத் தான் தர முடியும். இல்லையென்றால் அல்லாஹ்வின் அதிகாரம் ஷைத்தானுக்கு இருப்பதாக ஆகி விடும்.

 

(குறிப்பு: 2003 ஆகஸ்டு மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 24, 2014, 5:35 AM

நபிகள் நாயகத்திற்கு முந்தைய காலத்திலேயே ஜின்கள் பூமியை கடந்து சென்றுள்ளதே? இதற்கு விளக்கம் தரவும்

? மனிதனும் ஜின்னும் ஆற்றலைப் பெற்றுத் தான் வானங்கள் மற்றும் பூமியைக் கடந்து செல்ல முடியும் என்று 55:33 வசனம் கூறுகின்றது ஆனால் 72:8,9 வசனங்களில் நபிகள் நாயகத்திற்கு முந்தைய காலத்திலேயே ஜின்கள் பூமியைக் கடந்து சாதாரணமாகச் சென்றதாக உள்ளதே! விளக்கவும்.

அ. அப்துர்ரஹீம், டி.ஆர். பட்டிணம்

வானம் மற்றும் பூமியைக் கடப்பதற்கு ஆற்றல் தேவை என்று குர்ஆன் கூறுவதை ஒரு முன்னறிவிப்பு என்ற கோணத்தில் மட்டுமே பார்ப்பதால் இந்தச் சந்தேகம் எழுந்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மனிதனுக்கு அத்தகைய ஆற்றல் இல்லை. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்பே ஜின் இனத்திற்கு அந்த ஆற்றல் வழங்கப்பட்டிருந்ததாக குர்ஆன் கூறுகிறது. இது எந்த வகையிலும் 55:33வசனத்திற்கு முரண்பட்டதல்ல!

இரண்டு பேரை அழைத்து, உங்களிடம் அதிக பணம் இருந்தால் தான் நீங்கள் வெளிநாடு செல்ல முடியும் என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். இதில் இரண்டு பேரிடமும் பணம் இருக்கின்றதா இல்லையா என்ற தகவல் இல்லை. இரண்டு பேரில் ஒருவரிடம் பணம் இருக்கலாம். மற்றவரிடம் இல்லாமல் இருக்கலாம். அது இங்கு குறிப்பிடப்படவில்லை. வெளிநாடு செல்வதற்கு அதிகப் பணம் தேவை என்ற செய்தி மட்டுமே சொல்லப்படுகின்றது.

இது போல் இந்த வசனத்தில், வானம் மற்றும் பூமியின் விளிம்பைக் கடப்பதற்கு ஓர் ஆற்றல் தேவை என்று தான் கூறப்படுகின்றதே தவிர, இன்னும் யாருக்குமே அந்த ஆற்றல் இல்லை என்று கூறப் படவில்லை. மனிதனுக்கு தற்காலத்தில் அந்த ஆற்றல் கிடைத்திருப்பது போல் ஜின்களுக்கு முற்காலத்திலேயே அந்த ஆற்றல் வழங்கப் பட்டிருந்தது என்று தான் இதை விளங்கிக் கொள்ள வேண்டும். பூமியைக் கடந்து செல்வது பற்றி மனிதன் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அந்தக் காலத்தில் இதைப் பற்றி குர்ஆன் கூறுவதால் இதை மனித சமுதாயத்திற்குக் கூறப்பட்ட முன்னறிவிப்பாக எடுத்துக் கொள்கிறோம்.

 

(குறிப்பு: 2003 ஜூலை மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 23, 2014, 5:51 AM

மறைவான விஷயங்களை இறைநேசர்களுக்கு அல்லாஹ் இல்ஹாம் மூலம் அறிவித்து கொடுப்பானா?

? மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது. எனினும் நபிமார்களுக்கு வஹீயின் மூலமாகவும், இறை நேசர்களுக்கு (இல்ஹாம் எனும்) உதிப்பின் மூலமாகவும் பொதுமக்களில் சிலருக்கு சில அடையாளங்கள் மூலமாகவும் மறைவான விஷயங்களை அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கின்றான் என்று சிலர் கூறுகின்றார்கள். இது மார்க்க அடிப்படையில் சாத்தியமானது தானா?

ஈ. இஸ்மாயில் ஷெரீஃப், சென்னை.

! மறைவான செய்திகளை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்று அல்லாஹ் தெளிவாகத் தனது திருமறையில் அறிவித்து விட்டான்.

"வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 27:65)

6:59, 10:20, 31:34, 34:3 ஆகிய வசனங்களும் இதே கருத்தில் அமைந்துள்ளன. இந்த வசனங்களின் அடிப்படையில் நபிமார்கள், மலக்குகள், ஜின்கள், மனிதர்கள் உள்ளிட்ட எவரும் மறைவானவற்றை அறிய முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கை!

நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.

(அல்குர்ஆன் 3:179)

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.

(அல்குர்ஆன் 72:26-28)

இறைத்தூதர்களில் தான் நாடியோருக்கு அல்லாஹ் மறைவானவற்றை அறிவித்துக் கொடுப்பதாக இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றன. இதை வைத்து நபிமார்களுக்கு மறைவான விஷயங்கள் அனைத்தும் தெரியும் என்று சிலர் வாதிடுகின்றனர். இது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான வாதமாகும். நபிமார்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் குர்ஆனில் உள்ளன. இறுதித் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மறைவான ஞானம் இல்லை என்று திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றது.

(பார்க்க அல்குர்ஆன் 5:109, 6:50, 7:188, 11:31, 11:49)

அப்படியானால் மேற்கண்ட இரண்டு வசனங்களும் மறைவானவற்றை இறைத்தூதர்களில் தான் நாடியவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான் என்று கூறுவதன் பொருள் என்ன?

3:179 வசனத்தில் மறைவானவற்றை தனது தூதருக்கு இறைவன் அறிவித்துக் கொடுப்பதாகக் கூறுவது பொதுவானதல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நயவஞ்சகர்கள் முஸ்லிம்களைப் போலவே வேடமிட்டு முஸ்லிம்களுடன் இரண்டறக் கலந்திருந்தனர். இத்தகைய நயவஞ்சகர்களை நபிகள் நாயகத்திற்கு அறிவித்து கொடுப்பதையே இவ்வசனம் குறிப்பிடுகிறது. இவ்வசனத்தின் துவக்கத்திலேயே முஸ்லிம்களையும் நயவஞ்சகர்களையும் இரண்டறக் கலந்திருக்குமாறு இறைவன் விட்டு வைக்க மாட்டான் என கூறிவிட்டுத் தான்,மறைவானதை தான் தேர்ந்தெடுத்த தூதர்களுக்கு அறிவிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

அது போல் 72:26,27 வசனங்களில் அனைத்து மறைவான விஷயங்களையும் இறைத் தூதர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான் என்று கூறப்படவில்லை. மாறாக நம்பிக்கை கொள்ள வேண்டிய மறுமை, சொர்க்கம், நரகம் போன்ற மறைவானவைகளைப் பற்றி இறைத் தூதர்களுக்கு அறிவிப்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன. இதைப் புரிந்து கொள்வற்கு இவ்வசனங்களிலேயே போதுமான சான்றுகள் உள்ளன.

தமக்கு அறிவிக்கப்படுகிற செய்திகளைத் தூதர்கள் மக்களுக்கு அறிவிக்கிறார்களா? என்று கண்காணிப்பதற்காக, கண்காணிக்கும் வானவர்களை தொடர்ந்து அனுப்புவதாக இவ்வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். எனவே நம்பிக்கை கொள்ள வேண்டிய மறைவான விஷயங்களை இறைத் தூதருக்கு அறிவித்துக் கொடுத்து அதை அவர் மக்களுக்கு அறிவிப்பார் என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

எனவே நபிமார்களுக்கு மறைவான செய்திகளை அல்லாஹ் அறிவித்துக் கொடுப்பான் என்பது பொதுவானதல்ல என்பதை இதிலிருந்து அறியலாம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் நடைபெற்ற எத்தனையோ சம்பவங்கள் அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளதை ஹதீஸ்களில் நாம் காண முடிகின்றது.

மறைவான விஷயங்களை நபிமார்களால் கூட அறிய முடியாது எனும் போது, இறைநேசர்கள் "இல்ஹாம்' என்ற உதிப்பின் மூலம் அறிவார்கள் என்பது மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான கருத்து என்பதை நாம் விளக்கத் தேவையில்லை.

உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும்,தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.

(அல்குர்ஆன் 91:7,8)

மனிதனின் உள்ளத்திற்கு நன்மை, தீமையை இறைவன் அறிவித்துக் கொடுத்தான் என்று கூறுவதற்கு "இல்ஹாம்' என்ற வார்த்தையைத் தான் இந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்துகின்றான். எனவே இந்த "இல்ஹாம்' என்பது இறை நேசர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டதல்ல! எல்லா மனிதனுக்கும் பொதுவான ஒன்று தான் என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளுணர்வுகள் ஏற்படுவதுண்டு. ஏதோ சோதனை ஏற்படப்போகின்றது என்று மனதில் சில எண்ணங்கள் தோன்றும். பல சமயங்களில் அது பொய்யாகிப் போய் விடும். சில சமயங்களில் அதற்கேற்ப ஏதேனும் சோதனை ஏற்படுவதும் உண்டு. கனவுகள் தோன்றுவதும் இதே வகையைச் சேர்ந்தது தான். இது அவரவருக்கு உள்ளத்தில் ஏற்படுகின்ற உள்ளுணர்வுகள்! இவற்றை வைத்துக் கொண்டு மறைவான விஷயம் எனக்குத் தெரியும் என்று யாரும் வாதிட முடியாது.

அது போல் ஒருவருக்கு ஏற்படும் உள்ளுணர்வையோ அல்லது கனவையோ அடுத்தவரிடத்தில் செயல்படுத்தவும் முடியாது. உதாரணமாக, உங்களுக்கு ஒருவர் பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று நீங்கள் கனவில் கண்டதன் அடிப்படையில் அவரிடம் போய் பணம் கேட்க முடியாது.

உனது வாழ்க்கையில் இது நடக்கும் என்று எனக்கு "இல்ஹாம்' மூலம் தெரிந்தது என்று கதைகளை அவிழ்த்து விட்டு முரீது வியாபாரிகள் ஏமாற்று வேலைகளைச் செய்து வருகின்றார்கள். இது அப்பட்டமான பொய் என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

"உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில் "முன் கூட்டியே (சில செய்திகள்) அறிவிக்கப்பட்டவர்கள்' இருந்திருக்கின்றார்கள். அத்தகையவர்களில் எவராவது எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் தாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 3469

"முன் கூட்டியே (சில செய்திகள்) அறிவிக்கப்பட்டவர்கள்' என்று யாராவது எனது சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் (ரலி) தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவது இந்த உம்மத்தில் அப்படிப்பட்ட யாரும் கிடையாது என்பதையே காட்டுகின்றது.

 

(குறிப்பு: 2003 மே மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 20, 2014, 5:48 AM

மறுமை நாளின் அடையாளமாக கஅபா இடிக்கப்படுவது உண்மையா?

? மறுமையின் பத்தாவது அடையாளமாக கஅபா இடித்துத் தரைமட்டமாக்கப்படும் என்பது உண்மையா? இதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளதா?

ஹஸன் பரீத், திருச்சி

பதில்

நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். நீங்கள் என்ன உரையாடிக் கொண்டிருக்கின்றீர்கள்? என்று கேட்டார்கள். இறுதி நாளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம் என்ற நாங்கள் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதற்கு முன்னால் பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அது ஏற்படாது, 1. புகை, 2. தஜ்ஜால், 3. அதிசய மிருகம் 4. சூரியன் மேற்கிலிருந்து உதித்தல் 5. ஈஸா (அலை) இறங்குதல் 6. யஃஜூஜ் மஃஜூஜ் 7,8,9. கிழக்கு, மேற்கு மற்றும் அரபிய தீபகற்பத்தில் ஏற்படும் மூன்று பூகம்பங்கள் 10. இவற்றில் இறுதியாக யமனிலிருந்து மக்களை அவர்களது மறுமையின் பக்கம் துரத்திச் செல்லும் நெருப்பு ஆகியவை ஆகும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா பின் உஸைதுல் கிஃபாரி (ரலி)

நூல் : முஸ்லிம் 5558

கியாமத் நாளின் பத்து அடையாளங்களைக் குறிப்பிடும் ஹதீஸ் இது தான். இந்தப் பத்து அடையாளங்களில் கஅபா இடிக்கப்படுவது குறிப்பிடப்படவில்லை. எனினும் கஅபா இடிக்கப்படும் என்று தனியாக ஹதீஸ் உள்ளது.

"(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களையுடைய கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்று இருக்கின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி 1595

"அபிஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்து பாழ்படுத்துவார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 1591, 1596

இந்த ஹதீஸ்களில் கியாமத் நாள் வரும் போது கஅபா இடிக்கப்படும் என்று கூறப்படாவிட்டாலும் பின்வரும் ஹதீஸ் அந்த விளக்கத்தைத் தருகின்றது.

"யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),

நூல் : புகாரி 1593

கியாமத் நாளின் பத்து அடையாளங்களில் ஒன்றான யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் தோன்றிய பிறகு தான் கஅபா இடிப்பு நடைபெறும் என்பதால் இதுவும் கியாமத் நாளின் அடையாளங்களில் ஒன்று தான் என்பதை அறிய முடிகின்றது.

 

(குறிப்பு: 2003 ஏப்ரல் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 18, 2014, 6:59 AM

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்தில் இருந்து வந்த கல்லா

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்து கல்லா?
 
ஹஜ்ருல் அஸ்வத் கல் தொடர்பாக பலவீனமான ஹதீஸ்கள் நிறைய இருந்தாலும் ஆதாரப்பூர்வமான செய்திகளும் இடம்பெற்றுள்ளது.

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும். இது பாலை விட வெண்மையானதாகும். ஆதமுடைய பாவங்கள் அதை கருப்பாக்கி விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : திர்மிதீ (803)

இந்த செய்தியில் இடம்பெறும் அதா பின் ஸாயிப் என்ற அறிவிப்பாளர் நல்லவர் என்றாலும் கடைசி காலத்தில் அவர் மூளை குழம்பிவிட்டது. எனவே அவர் மூளைகுழம்பிய காலத்திற்கு முன்பாக கேட்டவரின் செய்தி ஏற்றுக் கொள்ளப்படும். அதே நேரத்தில் மூளைகுழம்பிய பின்னர் கேட்ட செய்தியாக இருந்தால் அந்த செய்தி ஏற்றுக் கொள்ளக்கூடாது. இது ஹதீஸ்கலையின் விதியாகும்.

இந்த விதியின் அடிப்படையில் அதா பின் ஸாயிப் என்பவரிடமிருந்து ஜரீர் என்பவர் அறிவிக்கிறார். இவர் அதா விடம் முளைகுழம்பிய பின்னர் கேட்டதாகும். (நூல் : பத்ஹ‚ல் பாரி, பாகம் :3, பக்கம் : 462)
எனவே இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை. 

ஹஜ்ருல் அஸ்வதும் மகாமு இப்ராஹீமும் சொர்க்கத்தின் மாணிக்கக் கற்களில் உள்ளவையாகும். அவற்றின் ஒளியை அல்லாஹ் மங்கச் செய்துவிட்டான். அவற்றின் ஒளியை அவன் மங்கச் செய்யாமலிருந்தால் கிழக்குக்கும் மேற்குக்கும் இடைப்பட்ட பகுதியை அவை ஒளிரச் செய்திருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : திர்மிதீ (804)

இச்செய்தியில் இடம்பெறும் ரஜா அபூயஹ்யா என்பவர் பலவீனமானவராவார்.(நூல் : தக்ரீபுத் தஹ்தீப், பாகம் :1, பக்கம் : 208)
இந்தசெய்திகள் பலவீனமானதாக இருந்தாலும் பின்வரும் செய்திகள் ஆதாரப்பூர்வனமானதாகும்.
 

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்: நஸாயீ (2886)

இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரிலும் அதா பின் ஸாயிப் என்பவரே இடம்பெற்றுள்ளார். என்றாலும் இவரிடம் இந்த செய்தியை கேட்டவர் ஹம்மாத் பின் ஸலமா என்பவராவார். இவர் அதா முளைகுழம்பியதற்கு முன்னர் கேட்டதாகும். (நூல் : பத்ஹ‚ல் பாரி, பாகம் :3, பக்கம் : 462)
இந்த செய்தி அதா நல்ல நிலையில் இருந்தபோது கேட்டதால் இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதே! மேலும் பின்வரும் நபிமொழியும் ஆதாரப்பூர்வமானதே!

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்து கல்லாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : அஹ்மத் (13434)

May 5, 2014, 6:51 PM

விதியை வெல்ல முடியுமா

விதியை வெல்ல முடியுமா

விதி பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? ஒரு ஹதீஸ் நான் கேள்விப்பட்டேன். நபி (ஸல்) அவர்கள் அந்த வழியே செல்லும் ஒரு மனிதரைப் பார்த்து இந்த மனிதர் திரும்பி வர மாட்டார். அதாவது மரணித்து விடுவார் என்று சொல்கிறார்கள், 

தொடர்ந்து படிக்க August 15, 2011, 3:35 AM

மனத்துணிவு பெற என்ன செய்வது?

மனத்துணிவு பெற என்ன செய்வது?

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும் மனதில் துனிச்சல் இல்லாமலும் இருக்கிறேன். இது அல்லாஹ்வின் நாட்டமா? அல்லது என் தவறா?

தொடர்ந்து படிக்க August 13, 2011, 2:38 AM

தஜ்ஜால் பெயரைச் சொன்னால்

தஜ்ஜால் பெயரைச் சொன்னால்

thaதஜ்ஜால் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றான். அவனுடைய பெயரை யாராவது சொன்னால் அந்தக் கட்டு அவிழ்க்கப்படும். அவனுடைய பெயரை எழுதினால் அவிழ்க்கப்படாது என்று கூறும் ஹதீஸ் இருக்கின்றதா?

தொடர்ந்து படிக்க August 4, 2011, 2:05 AM

கடைசி நேரத்தில் திருந்தியவருக்கு மன

கடைசி நேரத்தில் திருந்தியவருக்கு மன்னிப்பு கேட்கலாமா

இணைவைப்பு வட்டி போன்ற பெரும்பாவங்களை செய்து கொண்டிருந்த என் தந்தை இவற்றை விட்டுவிடுவதாகக் கூறினார். இதன் பின் அவருக்கு மரணம் ஏற்பட்டது. இவருக்காகப் பாவமன்னிப்புக் கேட்கலாமா?

தொடர்ந்து படிக்க July 23, 2011, 6:07 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top