நான்கு இமாம்கள் பற்றி நபியவர்கள் முன

நான்கு இமாம்கள் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்களா?

ஈஸா நபி, மஹ்தீ ஆகியோர் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். அது போல் நான்கு இமாம்கள் வருகை குறித்து முன்னறிவிப்பு உண்டா?

அப்துல் கபூர்

பதில்

ஈசா (அலை) அவர்களும் மஹ்தீ அவர்களும் வருவார்கள். உலகத்தில் நல்லாட்சி புரிவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

ஆனால் இமாம் அபூஹனீஃபா, இமாம் ஷாஃபி, இமாம் மாலிக், இமாம் அஹ்மது ஆகிய நான்கு பேர் குறித்து எந்த முன்னறிவிப்பையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

இமாம் அபூஹனீஃபாவை மேன்மைப்படுத்தி இமாம் ஷாஃபி அவர்களை இழிவுபடுத்தி மத்ஹப் வெறியர்கள் நபியின் பெயரால் இட்டுக்கட்டியுள்ளார்கள். இமாம்கள் தொடர்பாக இந்தப் பொய்யான செய்தியைத் தவிர ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை.

09.12.2011. 09:11

மூஸா நபி இறைத்தூதராக ஆன பின்னர் தான்

மூஸா நபி இறைத்தூதராக ஆன பின்னர் தான் கொலை செய்தாரா

 

மூஸா நபிக்கு ஞானம் வந்த பின்னர் தான் ஒருவரை தவறுதலாகக் கொலை செய்ததாக கஸஸ் அத்தியாயத்தில் இருந்து தெரிகிறதே? அப்படியானால் அவர்கள் நபியாக ஆன பின்னர் தான் கொலை செய்தார்களா?

பதில்

அவர் பருவமடைந்து சீரான நிலையை அடைந்த போது அவருக்கு அதிகாரத்தையும் கல்வியையும் அளித்தோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. "இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி'' என்றார். ""என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!'' என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். "என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்'' என்றார்.

அல்குர்ஆன் (28 : 15)

20:40, 26:14, 28:15, 28:16, 28:19 ஆகிய வசனங்களில் மூஸா நபியவர்கள் ஒருவரைத் தவறுதலாகக் கொலை செய்த நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட வசனத்தில் அவருக்கு கல்வியையும் ஞானத்தையும் அளித்தோம் என்று கூறி விட்டு கொலை நடந்த சம்பவம் கூறப்பட்டுள்ளதால் அவர் நபியாக ஆன பின்னர் இந்த சம்பவம் நடந்ததாக நினைக்க இடம் உள்ளது. ஆனால் இதே அத்தியாயத்தின் தொடர்ச்சியாக கூறப்படுவதைக் கவனித்தால் இதன் பின்னர் தான் இறைவன் அவருடன் உரையாடி அவரை நபியாக நியமித்ததாகக் கூறப்படுகிறது. எனவே இந்த வசனத்தில் கூறப்படுவது பொதுவாக பருவ வயதை அடைந்து அதன் மூலம் கிடைக்கும் ஞானம் பற்றியே கூறப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

இந்தக் கொலை நடந்த பிறகு மூசா நபி ஊரை விட்டும் வெளியேறி மத்யன் என்ற நகரத்திற்குச் செல்கிறார்கள். அங்குள்ள ஒரு பெண்ணை மணக்கிறார்கள். சில வருடங்கள் கழிகின்றது. இதன் பிறகு ஒரு நாள் மூசா நபி நெருப்பைத் தேடிச் செல்லும் போது அவர்களுக்கு இறைவனிடமிருந்து இறைச்செய்தி வந்து இறைத்தூதராக நியமிக்கப்படுகிறார்கள்.

எனவே மூசா நபி கொலை செய்த நிகழ்வு அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு நடந்தவையாகும். மேலும் அவர்கள் கொலை செய்யும் நோக்கத்தில் தாக்கவில்லை என்பது இவ்வசனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

18.04.2011. 10:32

மூஸா நபி கொலை செய்தது ஏன்

மூஸா நபி கொலை செய்தது ஏன்
கொலைக் குற்றத்துக்கு இவ்வுலகில் கிடைக்கும் தண்டனை வேறு; மறுமை தண்டனை வேறு. இவ்வுலகில் இஸ்லம் கூறும் தண்டனையை அளிப்பதாக இருந்தால் அதற்கு இஸ்லாமிய ஆட்சி இருந்தாக வேண்டும். மூஸா நபி அவர்களால் ஒருவர் கொல்லப்பட்ட போது மூஸா நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கவில்லை. இறைவனின் சட்டத்தின் படி தண்டிக்கும் எந்த அரசாங்கமும் அப்போது இருக்கவில்லை. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் மூஸா நபி செய்தது கொலைக் குற்றத்தில் சேராது.  ஏனெனில் கோபத்தில் ஒருவரைத் தாக்குவது தான் அவர்களின் நோக்கம். கொலை செய்வது அவர்களின் நோக்கம் அல்ல. அவர்கள் அடித்த அடி படாத இடத்தில் பட்டதால் தாக்கப்பட்டவர் இறந்தது எதிர்பாராதது. இஸ்லாமிய அரசு இருந்தால் இதற்காக நட்ட ஈடு தான் கொடுக்க வேண்டும். மரண தண்டனை கொடுக்க முடியாது. நட்ட ஈடு பெற்றுத் தருவதாக இருந்தாலும் அதைச் செயல் படுத்த ஒரு இஸ்லாமிய அரசு இருந்தால் தான் சாத்தியமாகும். அப்படி ஒரு அரசு இல்லாவிட்டால் இந்தத் தண்டனையும் கொடுக்க முடியாது.

தவறுதலாகக் கொலை செய்து அதற்காக மன்னிப்புக் கேட்டால் இறைவன் விரும்பினால் அதை மன்னிப்பான். மூஸா நபியை அல்லாஹ் மன்னித்து  விட்டதாகக் குர்ஆன் கூறுகிறது.

அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. "இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி'' என்றார்.  ""என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!'' என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். . "என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்'' என்றார்.

திருக்குர்ஆன் 28:15-17

ஆனால் தவறுதலாகவே கொல்லப்பட்டிருந்தாலும் கொல்லப்பட்டவர் மறுமை நாளில் முறையிட்டால் அவருக்கு உரிய நியாயத்தை அல்லாஹ் அவருக்கு வழங்காமல் இருக்க மாட்டான். மூஸா நபியின் சில நன்மைகளை எடுத்து கொல்லப்பட்டவருக்கு இறைவன் கொடுக்கலாம். இதனால் மூஸா நபி போன்றவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாமல் போகலாம். இறைத் தூதர்கள் பார்டரில் பாஸாக மாட்டார்கள். அதிகமான நன்மைகளைச் செய்திருப்பார்கள் என்பதால் அதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் போகலாம்.

18.04.2011. 08:37

மூஸா நபி போடப்பட்டது கடலிலா? ஆற்றிலா

மூஸா நபி போடப்பட்டது கடலிலா? ஆற்றிலா

மூசா நபியை சிறு வயதில் அவரது அம்மா ஆற்றில் போட்டார்களா? அல்லது கடலிலா

சலாம்

பதில்

أَنْ اقْذِفِيهِ فِي التَّابُوتِ فَاقْذِفِيهِ فِي الْيَمِّ فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَأْخُذْهُ عَدُوٌّ لِي وَعَدُوٌّ لَهُ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَلِتُصْنَعَ عَلَى عَيْنِي(39)20

"இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான்'' (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன்.

அல்குர்ஆன் (20 : 39)

وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنْ الْمُرْسَلِينَ(7)28

"இவருக்குப் பாலூட்டு! இவரைப் பற்றி நீ பயந்தால் இவரைக் கடலில் போடு! பயப்படாதே! கவலையும் படாதே! அவரை உன்னிடம் நாம் திரும்ப ஒப்படைத்து, அவரைத் தூதராக ஆக்குவோம்'' என்று மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம்.

அல்குர்ஆன் (28 : 7)

மேலுள்ள இரு வசனங்களிலும் கடல் என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் அல்யம்மு என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடல் என்பது இவ்வார்த்தையின் பொருள் என பல அரபு அகராதி நூற்களில் கூறப்பட்டுள்ளது. இவ்வார்த்தை கடல் என்ற அர்தத்தில் ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிலர் இவ்வார்த்தைக்கு நதி என்ற பொருளும் இருப்பதாகக் கூறுகின்றனர். இவர்கள் தங்கள் கூற்றுக்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. மூசா (அலை) அவர்களின் தாயார் மூசா (அலை) அவர்களை நைல் நதியில் போட்டார்கள் என்ற கருத்தை அடிப்படையாக வைத்தே இவ்வார்த்தைக்கு நதி என்ற பொருளும் இருப்பதாக இவர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் மூசா நபியின் தாயார் நைல் நதியில் தான் போட்டார் என்பதற்கு குர்ஆனிலோ நபிமொழியிலோ எந்தச் சான்றும் இல்லை.  எனவே இவார்த்தைக்குரிய சரியான பொருளின் படி கடலில் போட்டார்கள் என்ற கருத்தே ஏற்புடையது.

18.04.2011. 03:43

இப்ராஹீம் நபிக்கு எத்தனை மொழி தெரியு

இப்ராஹீம் நபிக்கு எத்தனை மொழி தெரியும்

இப்ராஹீம் நபிக்கு எத்தனை மொழி தெரியும்? ஒரு மொழிதான் தெரியும் என்றால் தனது மருமகளிடம் எந்த மொழியில் பேசினார்கள்?

அஸ்வர் முஹம்மத்

இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இஸ்மாயீல் அவர்களையும் கஅபாவில் விட்டுவிட்டுத் திரும்பினார்கள். இதன் பிறகு ஜுர்ஹும் குலத்தினர் அங்கே வருகை தந்து தங்குகின்றனர். இவர்களிடமிருந்தே இஸ்மாயீல் (அலை) அவர்கள் அரபு மொழியை கற்றுக் கொண்டார்கள் என்று புகாரியின் 3364 ஆவது செய்தி கூறுகின்றது.

இப்ராஹீம் (அலை) அவர்களும் அவரது குடும்பத்தினரும் அரபு அல்லாத வேறுமொழி பேசக் கூடியவர்கள் என்று இச்சம்பவம் கூறுகிறது. அப்படியானால் அரபு மொழி பேசக்கூடிய இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய மனைவியிடம் வேறு மொழி பேசக்கூடிய இப்ராஹீம் (அலை) எவ்வாறு பேசியிருக்க முடியும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழுகின்றது.

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஒரு மொழி மட்டும் தான் தெரியும் என்று எந்தச் செய்தியும் கூறவில்லை. அவர்கள் அரபு மொழியையும் கற்றிருக்கலாம். ஒருவர் இரண்டு மூன்று மொழிகளை அறிந்திருப்பது இன்றைக்கும் சாதாரணமான ஒன்று தான். எனவே இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் மருமகளிடம் அரபுமொழியில் பேசியிருக்கலாம்.

அல்லது அந்த பெண் அரபு மொழியுடன் இப்ராஹீம் (அலை) அவர்களின் மொழியையும் அறிந்திருக்கலாம். இந்த மொழியில் இவ்விருவருக்கும் இடையே உரையாடல் நடந்திருக்கலாம்.

எத்தனையோ பேர் வேறு மொழி பேசுவோரிடம் திருமண சம்மந்தம் செய்கின்றனர். காலப்போக்கில் ஒருவர் மொழியை மற்றவர் கற்றுக் கொள்கின்றனர். அல்லது சைகையில் பேசிக் கொள்வதை சாதாரணமாக நாம் பார்க்கலாம். இது போல் இப்ராஹீம் நபி சம்பவத்தையும் புரிந்து கொண்டால் குழப்பம் இல்லை.

11.04.2011. 14:12

அபூபக்ர் ரலியுடன் பாத்திமா ரலிக்கு ச

அபூபக்ர் ரலியுடன் பாத்திமா ரலிக்கு சண்டை என்பது உண்மையா

 

அபூபக்ர் ரலி அவர்களுடன் பாத்திமா ரலி சண்டை போட்டதாகவும் தன்னுடைய ஜனாஸாவில் அபூபக்ர் ரலி கலந்து கொள்ளக் கூடாது என்று பாத்திமா ரலி கூறியதாகவும் சொல்லப்படுவது உண்மையா

ஜாகிர் ஹுஸைன் ஜித்தா

பதில்

ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் மரணிக்கும் வரை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பேசவேயில்லை என்பதே ஆதாரப்பூர்வமான செய்தி.

ஆனால் அபூபக்ர் (ரலி) தன்னுடைய ஜனாஸாவில் கலந்து கொள்ளக் கூடாது என ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறியதாக எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகüன் சொத்துக்களிலிருந்தும் மதீனாவில் இருந்த, அவர்கள் தருமமாக விட்டுச்  சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கேட்டுக் கொண்டிருந்தார். ஃபாத்திமாவுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார்கள்'' என்று பதிலளித்தார்கள். இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசுவதை விட்டு விட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசாமலேயே இருந்து விட்டார்கள்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஆறு மாதங்களே ஃபாத்திமா வாழ்ந்தார்கள்.

புகாரி (3093)

19.03.2011. 23:21

மண்ணின் தந்தை என்ற பெயர் வரக்காரணம்

மண்ணின் தந்தை என்ற பெயர் வரக்காரணம் என்ன?

 

அலீ (ரலி) அவர்களுக்கும் பாத்திமா (ரலி) அவர்களுக்கும் அடிக்கடி பிணக்கு ஏற்பட்டதாகவும் அதனால் அவர்கள் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்வார்கள் என்றும் அதன் காரணமாகவே மண்ணின் தந்தை அபூதுராப்- என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுவது உண்மையா

ஜாகிர் ஹுஸைன் ஜித்தா

பதில்

அலீ (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபுத் துராப் - மண்ணின் தந்தை - எனப் பெயர் வைத்தார்கள். இவ்வாறு அவர்கள் பெயர் வைத்ததற்கான காரணத்தைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

441 حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتَ فَاطِمَةَ فَلَمْ يَجِدْ عَلِيًّا فِي الْبَيْتِ فَقَالَ أَيْنَ ابْنُ عَمِّكِ قَالَتْ كَانَ بَيْنِي وَبَيْنَهُ شَيْءٌ فَغَاضَبَنِي فَخَرَجَ فَلَمْ يَقِلْ عِنْدِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِإِنْسَانٍ انْظُرْ أَيْنَ هُوَ فَجَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هُوَ فِي الْمَسْجِدِ رَاقِدٌ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُضْطَجِعٌ قَدْ سَقَطَ رِدَاؤُهُ عَنْ شِقِّهِ وَأَصَابَهُ تُرَابٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُهُ عَنْهُ وَيَقُولُ قُمْ أَبَا تُرَابٍ قُمْ أَبَا تُرَابٍ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி ஃபாத்திமா (ரலி அவர்கüன் இல்லத்திற்கு வந்த போது (மருமகனான) அலீ (ரலி) அவர்களை வீட்டில் காணவில்லை. ஆகவே, உன் (தந்தையின்) பெரிய தந்தையின் புதல்வர் எங்கே?'' என்று கேட்க, அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், "எனக்கும் அவருக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டது. ஆகவே அவர் என்னைக் கோபித்துக் கொண்டு என்னிடம் ஏதும் சொல்லாமல் (வீட்டிலிருந்து) சென்று விட்டார் என்று கூறினார்கள்உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "அவர் எங்கே என்று பாருங்கள்'' என்றார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்து, "அவர் பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே!'' என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிக்குள்) வந்த போது அவருடைய மேலங்கி அவரது முதுகிலிருந்து (தரையில்) விழுந்து விட்டிருக்க அவரது மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அவர் ஒருக்களித்துப் படுத்திருக்கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  அலீ (ரலி) அவர்களின் மேனியிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே "எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே! எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே!!'' என்று கூறலானார்கள்.

அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி)

நூல் : புகாரி (441)

அலீ (ரலி) அவர்களுக்கும் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்படும். அப்போது அலீ (ரலி) தன் தலையில் மண்ணை இட்டுக் கொள்வார்கள் என்ற கருத்து தவறானது. மேற்கண்ட சம்பவம் இவ்வாறு கூறவில்லை.

19.03.2011. 23:07

ஹதீஸ்களைத் தொகுத்த இமாம்களின் வரலாற

ஹதீஸ்களைத் தொகுத்த இமாம்களின் வரலாறை வெளியிடலாமே?

 

அப்துல் அலீம் அய்யம்பேட்டை

ஹதீஸ்களைத் தொகுத்து வழங்கிய இமாம்களின் வாழ்க்கைக் குறிப்புகள்

இமாம் புகாரீ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆதாரப்பூர்வமான செய்திகளுடன் தொகுத்தவர்களில் முதலிடம் பெற்றவர்.

இயற்பெயர் : முஹம்மத்

தந்தை பெயர் : இஸ்மாயீல்

பிறந்த ஊர் : ரஷ்யாவில் உள்ள புகாரா, இந்த ஊரில் பிறந்ததால் புகாரீ (புகாரா என்ற ஊரைச் சார்ந்தவர்) என்று அழைக்கப்படுகிறார்.

பிறந்த நாள் : ஹிஜ்ரி 194, ஷவ்வால் 13, வெள்ளிக்கிழமை

கல்விக்காக பயணம் செய்த ஊர்கள் : குராஸான், பஸரா, கூஃபா, பக்தாத், மக்கா, மதீனா, சிரியா, மிஸ்ர்

இமாம் புகாரியின் மாணவர்களில் சிலர் :  இமாம் முஸ்லிம், இமாம் திர்மிதீ, இமாம் இப்னு ஹுஸைமா, இமாம் அபுதாவூத் மற்றும் பலர்

தற்போது நடைமுறையில் புகாரீ என்று குறிப்பிடப்படும் ஹதீஸ் நூலுக்கு இமாம் புகாரீ அவர்கள் வைத்த பெயர் : "ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் ஹதீஸி ரஸுலில்லாஹி வ ஸுனனிஹி வஅய்யாமிஹி" (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை மற்றும் வழிமுறைகள் தொடர்பாக அவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளருடன் வந்துள்ள செய்திகளின் தொகுப்பு) ஆனால் அந்தப் பெயர் மக்களிடம் சென்றடையவில்லை. புகாரி என்பதே அந்த நூலின் பெயராக ஆகி விட்டது.

இவர் தொகுத்த மற்ற நூல்கள் : அல்அதபுல் முஃப்ரத், அத்தாரிகுல் கபீர், அல்லுஃபவுஸ் ஸகீர் இன்னும் பல நூல்கள் தொகுத்துள்ளார்.

இறப்பு : ஹிஜ்ரீ 256, நோன்புப் பெருநாள் அன்று சனிக்கிழமை

இமாம் முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆதாரப்பபூர்வமாக தொகுத்தவர்களில் இரண்டாம் இடத்தை இமாம் முஸ்லிம் பெற்றுள்ளார்.

இயற்பெயர் : முஸ்லிம்

தந்தைபெயர் : ஹஜ்ஜாஜ்

பிறந்த ஊர் : குராஸான் பகுதியில் உள்ள பெரிய பட்டணமான நைஸாபூர்

பிறந்தநாள் : ஹிஜ்ரீ 204 அல்லது ஹிஜ்ரீ 206

கற்றமுறை : இமாம் முஸ்லிம் அவர்கள் பிறந்த ஊர் அதிகமான அறிஞர்களைப் பெற்றிருந்தது. முஸ்லிம் அவர்கள் ஹதீஸ்கலையில் வல்லுனராக ஆவதற்கு ஏற்ற சிறந்த சூழ்நிலை அங்கு காணப்பட்டது. தனது 14 ஆம் வயதிலே இந்த அறிஞர்களிடமிருந்து கற்க ஆரம்பித்தார்கள்.

கல்விக்காக பயணம் செய்த ஊர்கள் : நைசாபூரைச் சுற்றியுள்ள சில ஊர்கள், ரய், இராக்கில் உள்ள கூஃபா, பஸரா, மற்றும் பக்தாத், ஹிஜாஸ், ஷாம், மிஸ்ர்

இவருடைய ஆசிரியர்களில் சிலர் : இமாம் புகாரி, அஹ்மத் பின் ஹம்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹி, யஹ்யப்னு மயீன், அபூபக்கர் பின் அபீ ஷய்பா

இவரது மாணவர்களில் சிலர் : முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப், அபூஹாதிம், இமாம் திர்மிதி, இப்னு ஹுஸைமா, மற்றும் இப்னு அபீ ஹாதம்

இறப்பு : இமாம் முஸ்லிம் அவர்கள் ஹிஜ்ரி 261 ஆம் ஆண்டு ரஜம் மாதம் ஞாயிற்றுக்கிழமையன்று நைசாபூர் என்ற தமது ஊரிலே மரணம் அடைந்தார்கள்.

இமாம் திர்மிதி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைத் தொகுத்த இமாம்களில் இமாம் திர்மிதியும் ஓருவராவார்.

இயற்பெயர்                                               : முஹம்மத்

குறிப்புப் பெயர்                           : அபூ ஈஸா

தந்தைபெயர்                                             : ஈஸா

கோத்திரம்                                      : சுலமி கூட்டத்தாரைச் சார்ந்தவர்

பிறந்த ஊர்                                                : ஈரான் நாட்டின் கிழக்கில் அமைந்துள்ள திர்மித் என்னும் ஊரிலே பிறந்தார். இமாம் புகாரி புகாரா என்ற ஊரில் பிறந்த காரணத்தால் அவர்களை புகாரி என அழைப்பதைப் போன்று இமாம் திர்மிதி, திர்மித் என்ற ஊரிலே பிறந்தமையால் திர்மிதி என்று அழைக்கப்படுகிறார்.

பிறப்பு                                                          : திர்மிதி இமாம் பிறந்த வருடத்தை வரலாற்று ஆசிரியர்கள் யாரும் அறுதியிட்டுச் சொல்லவில்லை. சிலர் ஹிஜ்ரீ 209 வது ஆண்டு என்று கூறுகின்றனர். இமாம் தஹபீ அவர்கள் ஹிஜ்ரீ 210 வது ஆண்டு என்று கூறியுள்ளார்கள்.

கல்வி                                                           : இருபது வயது பூர்த்தியான பின் இமாம் திர்மிதி அவர்கள் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். தாமதமாகக் கற்க ஆரம்பித்தமையால் பெரும் பெரும் அறிஞர்களிடத்தில் ஹதீஸை நேரடியாகக் கற்கும் வாயப்பு இவருக்குக் கிடைக்கவில்லை. இவர் தொகுத்த ஜாமிஉத்திர்மிதி இவர் மாபெரும் ஹதீஸ்கலை மேதை என்று சான்று பகர்கின்றது.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்   : ஹுராஸான், பஸரா, கூஃபா, வாசித்,  ஈராக், பக்தாத், மக்கா, மதீனா.

இவரது ஆசிரியர்கள்                : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், குதைபா, அலீ பின் ஹஜர், அஹ்மத் பின் மனீஃ, தாரமீ, அபூ சுர்ஆ, மற்றும் பலர்.

இவரது படைப்புகள்                 : ஜாமிஉத்திர்மிதி, இலல், ஷமாயில், அஸ்மாஉ ஸ்ஸஹாபா.

இதைத் தவிர அத்தாரீஹ், அஸ்ஸுஹ்த், அல்அஸ்மாஉ வல்குனா ஆகிய நூற்களைத் தொகுத்துள்ளார். ஆனால் இவை நம் கைக்குக் கிடைக்கவில்லை.

மரணம்                                            : அவர் பிறந்த ஊரான திர்மிதில் ஹிஜ்ரீ 279 ஆம் ஆண்டு ரஜப் மாதம் பதிமூன்றாம் நாளான திங்கட்கிழமை மரணித்தார்.                                

இமாம் அபூதாவூத்

ஹதீஸ்களைத் தொகுத்து மார்க்கத்திற்குப் பெரும் தொண்டாற்றிய அறிஞர்களில் இமாம் அபூதாவூதும் ஓருவர்.

இயற்பெயர்                                               : சுலைமான்

குறிப்புப் பெயர்                           : அபூதாவூத்

தந்தை பெயர்                               : அஷ்அஸ்

பிறப்பு                                                          : சஜஸ்தான் என்ற ஊரிலே ஹிஜ்ரீ 202வது  வருடத்தில் பிறந்தார். ஆகயால் தான் மக்கள் மத்தியில் அபூதாவூத் சஜஸ்தானீ என்று பிரபலமாகியுள்ளார்.

கல்வி                                                           : இமாம் அபூதாவூத் வாழ்ந்த காலம் அறிஞர்கள் நிறைந்த காலம். இத்துடன் அவர்கள் சிறுவயதிலேயே பத்திசாலியாகவும் திகழ்ந்தார்கள். இக்காலச் சூழ்நிலை அபூதாவூத் கல்வி கற்க மிக ஏதுவாக இருந்தமையால் சிறு வயதிலேயே ஹதீஸ் துறையில் ஈடுபட ஆரம்பித்தார்கள். ஹதீஸ் துறையில் துரிதமாகச் செயல்பட்டதால் அரும்பெரும் அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இமாம் அபூதாவூதிற்குக் கிடைத்தது. ஹதீஸ் துறையிலும் மார்க்கச் சட்டத் துறையிலும் பெரும் பங்கு வகித்தார்கள்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்   : தன்னுடைய 18 வது வயதிலே கல்விக்காக பல ஊர்களுக்குப் பயணிக்க ஆரம்பித்தார்கள். ஈராக், கூஃபா, பஸரா, ஷாம், ஜஸீரா, ஹிஜாஸ், எகிப்து, ஹுராஸான், சஜஸ்தான், ரய் ஆகிய ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளார்கள்.

இவரது மாணவர்கள்               :இமாம் திர்மிதி, நஸயீ, இப்னு அபித்துன்யா, அபூ உவானா, இப்ராஹிம் பின் ஹம்தான் மற்றும் பலர்.

இவரது ஆசிரியர்கள்                : இமாம் அஹ்மத், அலீ பின் மதீனி, யஹ்யா பின் மயீன், முஹம்மத் பின் பஷ்ஷார் மற்றும் பலர்.

மரணம்                                            : பஸராவில் எழுபத்து மூன்று வயது நிறைவுற்றவராக ஹிஜ்ரீ 275 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் பதினாறாம் நாள் வெள்ளிக்கிழமையன்று மரணித்தார்.

இமாம் நஸாயீ

இயற்பெயர்                                               : அஹ்மத்

குறிப்புப் பெயர்                           : அபூ அப்திர் ரஹ்மான்

தந்தை பெயர்                               : ஷுஐப்

பிறப்பு                                                          : ஹிஜ்ரீ 215 ஆம் ஆண்டில் நஸா என்ற ஊரில் பிறந்தார்கள். இவர் பிறந்த ஊரான நஸா என்பதுடன் இணைத்து நஸாயீ என்று இவர் மக்களால் அழைக்கப்படுகிறார்.

கல்வி                                                           : ஹிஜ்ரி 230ஆம் ஆண்டு பதினைந்தாவது வயதை அடைந்த போதே குதைபா பின் சயீத் அவர்களிடம் பயிலுவதற்காக பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். அவரிடம் 14 மாதங்கள் தங்கினார்கள். இவர் எழுதிய அல்அஹாதீசுல் லிஆஃப் (பலகீனமான ஹதீஸ்கள்) என்ற புத்தகம் ஹதீஸ் துறையில் இவர் பெற்றிருந்த பாண்டித்துவத்தைக் காட்டுகிறது.

இது மட்டுமின்றி மார்க்கச் சட்ட வல்லுனராகவும் திகழ்ந்துள்ளார்கள். இவர் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களை விட இமாம் நஸாயீ அவர்களே  மார்க்கச் சட்டத்தை அதிகம் அறிந்தவராக இருந்தார் என  இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார். எகிப்து நாட்டிலும் ஹிமஸ் நாட்டிலும் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் பொறுப்பை ஏற்றார்கள்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்   : ஹுராஸான், ஈராக், ஜஸீரா, ஷாம், ஸஹுர், ஹிஜாஸ், எகிப்து

மாணவர்கள்                                             : இப்னு ஹிப்பான், உகைலீ, இப்னு அதீ, அத்தவ்லாபீ, அத்தஹாவீ, அபூஉவானா, அத்தப்ரானி, இப்னு சின்னீ போன்ற பெரும் பெரும் அறிஞர்கள் இமாம் நஸயீ அவர்களிடம் மாணவர்களாகப் பயின்றுள்ளார்கள். இவர்களன்றி இன்னும் பலரும் உள்ளனர்.

ஆசிரியர்கள்                                 : குதைபா, இஸ்ஹாக பின் ராஹவைஹி, அஹ்மத் பின் மனீஃ, அலீ பின் ஹஜர், அபூதாவூத், திர்மிதி, அபூஹாதம், அபூசுர்ஆ, முஹம்மத் பின் யஹ்யா, முஹம்மத் பின் பஷ்ஷார் ஆகியோர். இவர்களில் பெரும்பாலோர் இமாம் புகாரி மற்றும் முஸ்லிமின் ஆசிரியர்கள்.

படைப்புகள்                                               : அஸ்ஸுனனுஸ் சுஹ்ரா, அஸ்ஸுனனுல் குப்ரா, அல்குனா, அமலுல் யவ்மி வல்லய்லா, அத்தஃப்சீர், அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன், தஸ்மியது ஃபுகஹாயில் அம்ஸார், இஷ்ரதுன்னிஸா ஆகியவை.

மரணம்                                            : இமாம் நஸயீ பாலஸ்தீனத்தில் இறந்தார் என சில அறிஞர்கள் கூறுகின்றனர். தாரகுத்னீ போன்ற சில அறிஞர்கள் மக்காவில் இறந்ததாகக் கூறுகின்றனர். ஹிஜ்ரீ 303வது வருடம்  ஸஃபர் மாதம் 13 ஆம் நாள் திங்கட்கிழமை மரணித்தார்.

இமாம் இப்னுமாஜா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளைத் தொகுத்து இம்மார்க்கத்திற்கு தொண்டாற்றிய இமாம்களில் இமாம் இப்னுமாஜா ஒருவராவார்.

இயற்பெயர்                                               : முஹம்மத்          பின் யஸீத்

குறிப்புப் பெயர்                           : அபூ அப்தில்லாஹ்

தந்தை பெயர்                               : யஸீத். மாஜா என்பது இவரது

பிரபலியமானப் பெயர்                        : இப்னு மாஜா

கோத்திரம்                                      : ரபயீ கோத்திரத்தைச் சார்ந்தவர்.

பிறப்பு                                                          : ஹிஜ்ரீ 209 ஆம் ஆண்டு.

வளர்ந்த இடம்                             : கஸ்வீன் என்ற ஊர்

கல்வி                                                           : இப்னு மாஜா அவர்கள் கஸ்வீன் என்ற தன்னுடைய ஊரில் ஏறத்தாழ 20ஆவது வயதில் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். இவர்கள் தொகுத்த இப்னு மாஜா என்ற ஹதீஸ் புத்தகம் ஹதீஸ் கலையில் இவர்கள் பெற்றிருந்த பாண்டித்துவத்தை எடுத்துரைக்கிறது. அறிவிப்பாளர்களின் வரலாறுகள் தொடர்பாக இவர் எழுதிய அத்தாரீஹ் என்ற நூலும் இவரது அந்தஸ்தை உயர்த்துகிறது. மேலும் இவர் குர்ஆனிற்கு விளக்கம் அளிப்பதிலும் மார்க்கச் சட்டங்களிலும் தலை சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார் என இமாம்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்   : குராசான், ஈராக், ஹிஜாஸ்,  மிஸ்ர், ஷாம் மற்றும் பல ஊர்கள்.

இவரது ஆசிரியர்கள்                : அப்துல்லாஹ் பின் அபீஷைபா, அலீ பின் முஹம்மத், முஸ்அப் பின் அப்தில்லாஹ் உஸ்மான் பின் அபீஷைபா, மற்றும் பலர்.

இவரது மாணவர்கள்               : அலீ பின் இப்ராஹீம் அல்கத்தான், சுலைமான் பின் யஸீத், முஹம்மது பின் ஈஸா மற்றும் அபூபக்கர் ஹாமித்.

இறப்பு                                                          : ஹிஜ்ரீ 273 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் திங்கட்கிழமை அன்று மரணித்து புதன் கிழமை அடக்கம் செய்யப்பட்டார்.

இமாம் அஹ்மத்

இயற்பெயர்                                               : அஹ்மத்

குறிப்புப்பெயர்                              : அபூ அப்தில்லாஹ்

குலம்                                                            : இவரது தாயும் தந்தையும் அரபு குலத்தைச் சார்ந்தவர்கள்.

பிறப்பு                                                          : இமாம் அஹ்மத் அவர்கள் பக்தாதில் ஹிஜ்ரீ 164 வது வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் பிறந்தார்கள்.

கல்வி                                                           : இவர் ஹிஜ்ரீ 179 ஆம் வருடம் கல்வி கற்க ஆரம்பித்தார். அப்போது இவருக்கு பதினான்கு வயதாக இருந்தது. குர்ஆனை மனனம் செய்து எழுதப்படிக்க கற்றுக் கொண்ட பின் இமாம் அஹ்மத் அவர்கள் பக்தாதில் உள்ள ஆசிரியர்களிடமிருந்து ஹதீஸ்கலை தொடர்பான விஷயங்களைக் கற்றார்.

இவர் முதன் முதலாக அபூஹனீஃபா இமாமின் மாணவரான அபூயூசுஃப் அவர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கற்றார். இவர் காலத்தில் இருந்த பல கல்வித் துறைகளில் சிறந்து விளங்கினார். குறிப்பாக இவர் எழுதிய முஸ்னத் அஹ்மதும் அறிவிப்பாளர்களைப் பற்றி நல்லவரா கெட்டவரா என்று பிரித்தறிவதற்கு இவர் எழதிய நூலும் இவர் ஹதீஸ் கலையில் மாபெரும் மேதையாகத் திகழ்ந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது. ஹதீஸ்களில் எளிதில் கண்டுபிடிக்க இயலாத குறைகளுக்கு இல்லத் என்று சொல்வார்கள். இக்குறைகளை ஆராய்ந்து இது தொடர்பாக விளக்கியுள்ளார்.

கல்விக்காகப் பயனித்த ஊர்கள்    : இவர் பஸரா, கூஃபா, மக்கா, யமன், தர்சூஸ், ரிகா, அபாதான், எகிப்து, ரய் ஆகிய ஊர்களுக்குச் சென்றுள்ளார்.

இவரது ஆசிரியர்கள்                : இமாம் ஷாஃபி, அபூயூசுஃப் சுஃப்யான் பின் உயைய்னா, அப்துர்ரஸ்ஸாக், வகீஃ, இப்ராஹிம் பின் சஃத், ஹுஷைம் பின் பஷீர், யஹ்யா பின் சயீத், இப்னு நுமைர், யசீத் பின் ஹாரூன், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ  மற்றும் பலர் இவருக்கு ஆசிரியராக இருந்தார்கள்.

இவரது மாணவர்கள்               : இமாம் ஷாஃபி, யஹ்யா, அப்துர்ரஸ்ஸாக், அப்துர்ரஹ்மான், மஹ்தீ, வகீஃ, போன்ற இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து பல ஹதீஸ்களைத் தெரிந்து கொண்டு இவருக்கு மாணவராக இருந்துள்ளார்கள். இன்னும் பிரபலமான புத்தகங்களின் ஆசிரியரான இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், இமாம் திர்மிதி, இமாம் இப்னுமாஜா, இமாம் அபூதாவூத், இமாம் நஸாயீ, ஆகியோர் இவரிடம் பயின்ற மாணவர்கள். இன்னும் அலீ பின் அல்மதீனீ, யஹ்யா பின் மயீன், அஹ்மத் பின் சாலிஹ் போன்றோரும் இவரிடம் பயின்ற மாணவர்கள்..

படைப்புகள்                                               : இவர் எழுதிய முஸ்னத் அஹ்மத் என்ற புத்தகம் முப்பதாயிரத்திற்கும் அதிகமான ஹதீஸ்களை உள்ளடக்கியுள்ளது. இன்னும் அல்இலல், அன்னாஸிக் வல்மன்சூக், அஸ்ஸுஹ்த், அல்அஷ்ரிபத், அல்ஃபளாயில், அல்ஃபராயில், அல்மனாசிக், தாஅதுர்ரசூல், அல்முகத்தமு வல்முஅஹ்ஹர், ஜவாபாத்துல் குர்ஆன், ஹதீஸு சுஃபா, நஃப்யுத்தஷ்பீஹ், அல்இமாமா, கிதாபுல் ஃபிதன், கிதாபு ஃபளாயிலி அஹ்லில் பைத், முஸ்னது அஹ்லில் பைத், அல்அஸ்மாஉ வல் குனா, கிதாபுத்தாரீஹ் ஆகிய புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

மரணம்                                            : இவர் ஹிஜ்ரீ 241 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமையன்று மரணித்தார்.

இமாம் மாலிக்

இயற்பெயர்                                               : மாலிக்.

குறிப்புப் பெயர்                           : அபூஅப்தில்லாஹ்

தந்தை பெயர்                                           : அனஸ் பின் மாலிக்

குலம்                                                            : இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.

பிறப்பு                                                          :  ஹிஜ்ரீ 93 ஆம் ஆண்டு  மதீனாவில் பிறந்தார்.

வளர்ப்பு                                           :  சவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.

கல்வி                                                           :  பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

கல்விக்காகப் பயனித்த ஊர்கள்    : இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்குப் பயனம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்குச் சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

இவரது ஆசிரியர்கள்                : தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது. நாஃபிஃ, ஹிஷாம் பின் உர்வா, யஹ்யா பின் சயீத், அப்துல்லாஹ் பின் தீனார், சைத் பின் அஸ்லம், முஹம்மத் பின் முஸ்லிம், அப்துல்லாஹ் பின் அபீபக்கர், சயீத் பின் அபீ சயீத் ஆகியோர் இவருடைய ஆசிரியர்கள்.

மாணவர்கள்                                             : முஹம்மத் பின் முஸ்லிம், யஹ்யா பின் சயீத், நாஃபிஃ பின் மாலிக் ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள். இன்னும் இமாம் அபூஹனீஃபா, சுஃப்யான் சவ்ரீ, அல்லைஸ் பின் சஃத், ஷுஃபா, அப்துல் மலிக், மஃமர் பின் ராஷித், யஹ்யா பின் சயீத், இப்னுல் முபாரக், வகீஃ மற்றும் இமாம் ஷாஃபீ ஆகியோர் இவருடைய மாணவர்கள்.

படைப்புகள்                                               : புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முவத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள். ரிஸாலத்துன் ஃபில் கத்ர், ரிசாலத்துன் ஃபின்னஜ்ம், ரிசாலத்துன் ஃபில் அக்ளியா, ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான், ரிசாலத்துன் இலல்லைஸ், ஜுஸ்உன் ஃபித் தஃப்சீர், கிதாபுஸ் ஸிர், ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.

மரணம்                                            : இவர் ஹிஜ்ரீ 179 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது என்பத்து ஆறாகும்.

இமாம் தாரமீ

இயற்பெயர்                                               : அப்துல்லாஹ்

குறிப்புப்பெயர்                              : அபூமுஹம்மத்

குலம்                                                            : இவர் தமீமீ அல்லது தாரமீ என்ற கூட்டத்தைச் சார்ந்தவர். இவர் சமர்கன்த் என்ற ஊரில் தங்கிய காரணத்தினால் சமர்கன்தீ என்றும் இவர் கூறப்படுகிறார்.

தந்தைப் பெயர்                            : அப்துர் ரஹ்மான்

பிறப்பு                                                          : இவர் ஹிஜ்ரீ 181 ஆம் ஆண்டு சமர்கன்த் என்ற ஊரில் பிறந்தார்.

கல்வி                                                           : இமாம் தாரமீ அவர்கள் நன்கு புத்திக் கூர்மையுள்ளவராக இருந்தார். பல ஆசிரியர்களைச் சந்தித்து கற்றார். இவர் எப்பொழுது கல்வி கற்க ஆரம்பித்தார் என்பது நமக்கு சரியாக தகவல்கள் மூலம் கிடைக்கவில்லை. இவர் பெரியவர் சிறியவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் தன்னை விட வயதில் கீழ் உள்ளவர்களிடமிருந்தும் கற்றுள்ளார். இவர் தொகுத்துள்ள சுனனுத் தாரமீ என்ற ஹதீஸ் தொகுப்பு நூல் இவரை ஹதீஸ் வல்லுனராக காட்டுக்கிறது. அறிவிப்பாளர்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார். பல அறிஞர்கள் இவரை சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

கல்விக்காகப் பயனித்த ஊர்கள்    : ஹுராசான், ஈராக், கூஃபா, பஸரா, ஷாம், பக்தாத், வாசித், திமஷ்க், ஹிமஸ், ஜசீரா, சஃர், ஹிஜாஸ் ஆகிய ஊர்களுக்குச் சென்றுள்ளார்.

ஆசிரியர்கள்                                 : யசீத் பின் ஹாரூன், யஃலா பின் உபைத், ஜஃபர் பின் அவ்ன், பிஷ்ர் பின் உமர், முஹம்மத் பின் பிக்ர், வஹப் பின் ஜரீர், அன்னள்ர் பின் ஷுமைர், உஸ்மான் பின் உமர், சயீத் பின் ஆமிர் மற்றும் பலர் இவருக்கு ஆசிரியராக இருந்துள்ளார்கள்.

மாணவர்கள்                                             : இமாம் முஸ்லிம், இமாம் அபூதாவூத், இமாம் திர்மிதி, அப்து பின் ஹமைத், அல்ஹசன் பின் சப்பாஹ், முஹம்மத் பின் பஷ்ஷார், முஹம்மத் பின் யஹ்யா இன்னும் பலர் இவருடைய மாணவராக உள்ளார்கள்.

தொகுப்புகள்                                             : சுனனுத் தாரமீ என்ற சிறந்த ஹதீஸ் தொகுப்பு நூலை இமாம் தாரமீ அவர்கள் தொகுத்துள்ளார்கள். இன்னும் அல்ஜாமிஃ, அத்தஃப்சீர் என்ற நூலையும் தொகுத்துள்ளார். எனினும் இவை காணாமல் போய்விட்டன.

மரணம்                                            : இமாம் தாரமீ அவர்கள் ஹிஜ்ரீ 255 ஆம் ஆண்டு இறந்தார்கள். அப்போது இவருடைய வயது 75 ஆக இருந்தது. வெள்ளிக்கிழமையன்று அடக்கம் செய்யப்பட்டார்.

இப்னு ஹுசைமா

இயற்பெயர்                                              :           முஹம்மத் பின் இஸ்ஹாக்

குறிப்புப் பெயர்                           :           அபூபக்கர்

தந்தை பெயர்                               :           இஸ்ஹாக் பின் ஹுசைமா

குலம்                                                            :           சுலமி கோத்திரத்தைச் சார்ந்தவர்.

பிறப்பு                                                          :           ஹிஜ்ரீ இருநூற்று இருபத்து மூன்றாம் ஆண்டு                                                       நைசாபூர் என்ற ஊரில் பிறந்தார்.

ஆசிரியர்கள்                                 :           இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், முஹம்மத் பின் முஸன்னா, முஹம்மத் பின் பஷ்ஷார் மற்றும் பலர்.

படைப்புகள்                                               :           கிதாபுத் தவ்ஹீத் (ஏகத்துவத்தைப் பற்றிய புத்தகம்) ஷஃனுத் துஆ வ தப்சீரு மற்றும் சஹீஹு இப்னி ஹஸைமா ஆகிய மூன்று புத்தகங்கள்.

மரணம்                                            :           ஹிஜ்ரீ 311 வது வருடம் துல்கஃதா மாதத்தில் சனிக்கிழமை இரவு அன்று இவர் மரணித்தார்.

இப்னு ஹிப்பான்

இயற்பெயர்                                               : முஹம்மத் பின் ஹிப்பான்

குறிப்புப்பெயர்                              : அபூஹாதிம்

தந்தையின் பெயர்                     : ஹிப்பான்

குலம்                                                            : பனூ தமீம் குலத்தைச் சார்ந்தவர்

பிறப்பு                                              : ஆப்கானிஸ்தானில் உள்ள புஸ்த் என்ற ஊரில் ஏறத்தாழ ஹிஜ்ரீ 280 ல் பிறந்தார்.

கல்வி                                                           : ஹிஜ்ரீ 300 ல் கல்வி கற்க ஆரம்பித்தார். சஜஸ்தான் நைசாபூர், ஷாம், மிஸ்ர், ஹிஜாஸ், போன்ற ஊர்களுக்குக் கல்வியைத் தேடி பயணம் செய்தார். இந்தப் பிரயாணத்தின் மூலம் 2000 க்கும் மேலான ஆசிரியர்களைப் பெற்றார். ஹதீஸ் கலையிலும் சட்டத் துறையிலும் சிறந்து விளங்கியதால் நஸா, சமர்கன்த், புல்தான் போன்ற இடங்களில் தீர்ப்பு வழங்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் இல்லாமல் மருத்துவம் வாணியல் ஆகிய கலையிலும் சிறந்து விளங்கினார். இவர் காலத்தில் இவருக்கும் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களுக்கும் அடிக்கடி விவாதங்கள் நடைபெறும். இமாம் அபூஹனீஃபாவை விமர்சித்து பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

ஆசிரியர்கள்                                 : அபூ யஃலா இப்னு ஹுஸைமா, ஹசன் பின்   சுஃப்யான், அபூ அரூபா இன்னும் பலர்.

இவரது மாணவர்கள்               : இவர் கல்விக் கடலாக அந்தக் காலத்தில் விளங்கியதால் பெரும் பெரும் அறிஞர்களான இமாம் தாரகுத்னீ, இமாம் ஹாகிம், இப்னு முன்தஹ், இன்னும் பல மேதைகள் இவரிடம் கற்று இவருக்கு மாணவராகத் திகழ்ந்தார்கள்.

படைப்புகள்                                               : இவர் அனைத்து அறிவிப்பாளர்களைப் பற்றிய விபரங்களை மக்களுக்குத் தருவதற்கு அத்தாரீஹ் (வரலாறு) என்ற பெரும் புத்தகத்தைத் தொகுத்தார். பின்புகிதாபுஸ்ஸிகாத் (நம்பகமானவர்கள்) என்ற பெயரில் சரியான அறிவிப்பாளர்களைப் பட்டியலிட்டார். பிறகு கிதாபுல் மஜ்ரூஹீன் மினல் லுஅஃபாயி வல்மத்ரூகீன மினர்ருவாத் (பலஹீனமானவர்கள் மற்றும் குறை காணப்பட்டவர்கள்) என்ற பெயரில் பலஹீனமான அறிவிப்பாளர்களைப் பட்டியலிட்டார். இந்த இரண்டு புத்தகமும் அவருடைய அத்தாரீஹ் என்ற பெரும் நூலின் சுருக்கம் தான்.  இமாம் புகாரி, முஸ்லிம், இப்னு ஹுஸைமா ஆகியோரைப் போல் ஆதாரப்பூர்வமான செய்திகளை மட்டும் தொகுக்கும் பாணியில் சஹீஹு இப்னி ஹிப்பானை தொகுத்தார். இது ஹதீஸ்களை உள்ளடக்கிய நூல். அவர் காலத்தில் வாழ்ந்த மக்கள் அறியாமையால் பலஹீனமான ஹதீஸ்களைக் கடைபிடித்ததைக் கண்டு உத்வேகத்துடன் இப்புத்தகத்தைத் தொகுத்தார். இன்னும் மஷாஹீரு உலமாயில் அம்சார், மற்றும் ரவ்ளதுல் உகலாயி வ நுஸ்ஹதுல் ஃபுளலாயி ஆகிய புத்தகங்களையும் நமக்குக் கிடைக்காத பல புத்தகங்களையும் படைத்துள்ளார்.

குறைகள்                                        : நல்லவரா கெட்டவரா என்று அறியப்படாத அறிவிப்பாளர்களையெல்லாம் இவர் நல்லவர் என்று சான்று தந்துள்ளார். ஒருவரைப் பற்றி நிறை வராவிட்டாலும் குறையில்லாமல் இருந்தால் அவரை நல்லவர் என்று முடிவுகட்டி விடுவார். நல்ல அறிவிப்பாளர்கள் விஷயத்தில் தேவையில்லாத குறைகளையும் கூறியுள்ளார்.

மரணம்                                            : ஹிஜ்ரீ 354 வது வருடத்தில் புஸ்த் என்ற ஊரில் இறந்தார்.

அபூ அப்தில்லாஹ் அல் ஹாகிம்

இயற்பெயர்                                               : முஹம்மத் பின் அப்தில்லாஹ்

குறிப்புப்பெயர்                              : அபூ அப்தில்லாஹ்

பட்டப்பெயர்                                  : இவர் குறிப்பிட்ட காலம் நீதிபதியாக இருந்ததால்             ஹாகிம் (நீதிபதி) என்றழைக்கப்பட்டார்.

தந்தைபெயர்                                 : அப்துல்லாஹ்

குலம்                                                            : அள்ளப்பீ குலத்தைச் சார்ந்தவர்

பிறப்பு                                              : நைசாபூர் என்ற ஊரில் ஹிஜ்ரீ 321 வது வருடம் பிறந்தார்.

கல்வி                                                           : 9 வது வயதிலே கற்க ஆரம்பித்தார். 20 தாவது வயதை அடைந்திருக்கும் போது ஈராக் குராஸான் இன்னும் நதிகள் பல கடந்து கற்றுள்ளார். நைசாபூர் போன்ற ஊர்களில் 2000 ஆசிரியர்களிடமிருந்து ஹதீஸைக் கற்றுள்ளார்.

ஆசிரியர்கள்                                 : இப்னு ஹிப்பான், முஹம்மத் பின் யஃகூப், அஹ்மத் பின் சுலைமான், தஃலஜ் பின் அஹ்மத் இன்னும் பல ஆசிரியர்கள் இவருக்கு உள்ளனர். ஹதீஸ்கலை அறிஞர்களின் ஆசிரியர் என்று இமாம் தஹபி அவர்கள் கூறியுள்ளார். இவர் மார்க்கப் பற்று மற்றும் பேணுதல் உள்ளவராக இருந்தார் என இப்னு கசீர் கூறியுள்ளார்.

மாணவர்கள்                                 : இமாம் பைஹகி, அபூ யஃலா, அபூதர் அல்ஹர்வீ போன்ற கல்விச் செம்மல்கள் இன்னும் பலர் இவருடைய மாணவர்கள் ஆவார்கள்.

அறிஞர்களின் கூற்று              : இவர் சிறப்புக்குரியவர். கல்வி ஞானம் வழங்கப்பட்டவர். ஹதீஸ் கலையில் பல தொகுப்புகள் இவருக்கு உள்ளது என்று இமாம் ஹதீப் பஹ்தாதீ கூறியுள்ளார். இவர் தன்னுடைய காலத்தில் ஹதீஸ் கலை இமாமாகவும் அதை உண்மையான அடிப்படையில் விளங்கியவராகவும் இருந்தார் என அப்துல் ஹஃப்பார் என்பார் கூறியுள்ளார். 

குறைகள்                                        : இமாம் ஹாகிம் அவர்கள் அறிவிப்பாளர்களை எடைபோடும் போது பல பலஹீனமான அறிவிப்பாளர்களை நம்பகமானவர்கள் என்று கவனக் குறைவாக கூறியுள்ளார்கள். பல பலஹீனமான ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமான செய்தி என்று குறிப்பிடுவதால் இவர் அலட்சியப் போக்குடையவர் என்ற அறிஞர்களால் வர்ணிக்கப்படுகிறார்.

படைப்புகள்                                               : கிதாபுல் அர்பயீன், அல்அஸ்மாஉ வல்குனா, அல்இக்லீலு ஃபீ தலாயிலுன் நுபுவ்வா, அமாலில் அஷிய்யாத், அல்அமாலி தாரீஹு நய்சாபூர், கிதாபுத் துஆ, அல்லுஅஃபா, இலலுல் ஹதீஸ், ஃபளாயிலு ஃபாத்திமா, ஃபவாயிது ஷுயூஹ், அல்மத்ஹல், அல்முஸ்தத்ரக், மஃரிஃபது உலூமில் ஹதீஸ், மனாகிபுஷ் ஷாஃபி இன்னும் பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

மரணம் : இவர் ஹிஜ்ரீ 45 வது வருடத்தில் மரணித்தார்.

19.01.2011. 01:49

நபித்துவ முத்திரை என்பது உண்மையா

 நபித்துவ முத்திரை என்பது உண்மையா

அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது 1996 ஜனவரி யில் அளித்த பதில்

கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் இரு புஜங்களுக்கிடையே நபித்துவத்தின் முத்திரையை நான் பார்த்தேன். அது புறாமுட்டை போன்று இருந்தது என்று ஸாயிப் பின் யஸீது (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் 190 வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது. இது ஆதாரப்பூவமான ஹதீஸா? ஆம் எனில் அந்த முத்திரை நபிகள் நாயகம் (ஸல்) பிறக்கும் போதே இருந்ததா?

மு.யூசுப் ரஹ்மத்துல்லாஹ் சேட், மத்திய சிறை, திருச்சி

கேள்வி கேட்டவர் நாகூர் கலவரத்தில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தள்ளாத வயதில் கைத்தடி ஊன்றி நடக்கும் நிலையில் இருந்த அவரை கலவர வழக்கில் அப்போதைய அரசு கைது செய்தது. அவர் சிறையில் இருந்த போது இக்கேள்வியைக் கேட்டார்

நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் தோள்புஜத்தில் புறா முட்டை போன்ற சதை இருந்தது என்பதற்கு ஏராளமான நபிமொழிகள் சான்றுகளாக உள்ளன.

باب حدثنا عبد الرحمن بن يونس قال حدثنا حاتم بن إسماعيل عن الجعد قال سمعت السائب بن يزيد يقول ذهبت بي خالتي إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن ابن أختي وجع فمسح رأسي ودعا لي بالبركة ثم توضأ فشربت من وضوئه ثم قمت خلف ظهره فنظرت إلى خاتم النبوة بين كتفيه مثل زر الحجلة

190 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் சிறிய தாயார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் (இரு பாதங்களில்) நோய் கண்டுள்ளான் என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பரிவுடன்) எனது தலையை வருடிக்கொடுத்து எனது சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் உளூ செய்தார்கள். அவர்கள் உளூ செய்துவிட்டு மீதி வைத்த தண்ணீரில் சிறிதை நான் அருந்தினேன். பிறகு நபி (ஸல்) அவர்களுடைய இரு புஜங்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையை நான் பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்றிருந்தது.

புஹாரி 190

ஸல்மான் பார்ஸி அவர்கள் அந்த அடையாளத்தைப் பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்களை நபியென அறிந்து கொண்டதாக அஹ்மதில் சில ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. முஹம்மத் (ஸல்) அவர்களின் தனிப்பட்ட அடையாளமாக முந்தைய வேதங்களில் இது குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் ஊகம் செய்யலாம்.

இந்த அடையாளத்தை நபித்துவ முத்திரை என்று நபி (ஸல்) கூறியதாக எந்த ஒரு ஹதீஸிலும் கூறப்படவில்லை. வருவோர் போவோரிடமெல்லாம் அந்த அடையாளத்தைக் காட்டி இந்த அடையாளம் இருப்பதால் நான் நபி என நபி ஸல் வாதிட்டதாகவும் எந்த ஹதீஸும் இல்லை.

தம் வாழ்நாளில் முதுகுப் பகுதியைப் பெரும்பாலும் அவர்கள் மறைத்தே இருந்தனர். அது விலகக் கூடிய ஓரிரு சந்தர்ப்பங்களில் ஓரிரு நபித்தோழர்கள் அதைப் பார்த்துள்ளனர். நபி என்பதற்கே அது தான் அடையாளம் என்றால் அதைக் காட்டி நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்தை வாதிட்டிருப்பார்கள்.

ஒரு நபரைப் பற்றி அடையாளம் கூறும் போது அவரது கண், வாய், உயரம், நிறம், மச்சம் மற்றும் பல அடையாளங்களைக் கூறுவோம். அது போன்ற அடையாளமே அது . வேறு யாரிடமும் இல்லாமல் நபி (ஸல்) அவர்களிடம் மட்டும் அது காணப்பட்டதால் நபித்தோழர்களில் சிலர் அதை நபித்துவ முத்திரை என்று குறிப்பிட்டனர். இப்படித் தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி என்பதற்கான ஆதாரமாக இறைவன் இட்ட முத்திரை என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. அவ்வாறு இருந்திருந்தால் அதை அனைத்து மக்களிடமும் நபி (ஸல்) காட்டி தமது நுபுவ்வத்தை நிரூபித்திருப்பார்கள்.

அந்த சதைப் பகுதியில் முஹம்மது ரஸுலுல்லாஹ் என்று பதியப்பட்டிருக்கும் என்றெல்லாம் சிலர் கூறுவர் . இது ஆதாரமற்ற பொய்யாகும். எந்த ஹதீஸ் நூலிலும் இவ்வாறு கூறப்படவில்லை.

ஆயினும் அன்றைய நாளில் வேறு எவரிடமும் காணப்படாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மாத்திரம் அது இருந்தது என்பதும் இறுதி நபிக்குரிய பல அடையாளங்களில் ஒன்றாக அதுவும் கூறப்பட்டிருந்தது என்பதும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

27.09.2010. 22:59

ஆதாரப்பூர்வமான வரலாறுகள்

ஆதாரப்பூர்வமான வரலாறுகள்

  • வரலாற்று ஒளியில் நபிகள் நாயகம் வீடியோ மற்றும் ஆடியோ

  • மனித குல வழிகாட்டி நபிகள் நாயகம் வீடியோ மற்றும் ஆடியோ

  • நபிமார்கள் வரலாறு வீடியோ மற்றும் ஆடியோ

  • நபிகள் நாயகம் வரலாறு வீடியோ மற்றும் ஆடியோ

  • அந்த 72 கூட்டத்தினர் யார் வீடியோ மற்றும் ஆடியோ

  • நபித்தோழர்கள் தியாக வரலாறு வீடியோ மற்றும் ஆடியோ

  • மாமனிதர் நபிகள் நாயகம் வீடியோ மற்றும் ஆடியோ

  • நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு வீடியோ மற்றும் ஆடியோ


16.05.2010. 14:15

ஆதம் அலை அவர்களுக்கு தொப்புள் உண்டா

ஆதம் அலை அவர்களுக்கு தொப்புள் உண்டா

ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகியோருக்கு தொப்புள் கிடையாது என்று கூறப்படுவது உண்மையா?

எம்.ஏ. ஜின்னாஹ், கடலூர் துறைமுகம்

அவ்விருவருக்கும் தொப்புள் உண்டா என்று கேட்டுள்ளீர்கள். தொப்புள் என்பது கருவில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் செல்லும் குழாயின் இணைப்பாகவுள்ளது. கருவில் வளரும் குழந்தைக்குத் தான் தொப்புள் கொடி இருக்கும். இறைவனால் நேரடியாக இருவரும் படைக்கப்பட்டதால் தொப்புள் இருக்க முடியாது என்ற லாஜிக்கின் அடிப்படையில் அவ்விருவருக்கும் தொப்புள் கிடையாது என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால் இந்த லாஜிக்கை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் தொப்புள் கொடிக்கு இவர்கள் கூறுகின்ற காரணம் பொருந்தினாலும் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் கவர்ச்சியை அதிகரிக்கக் கூடிய ஒரு படைப்பாக அமைந்துள்ளது.

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம் என்று இறைவன் கூறுவது தொப்புளையும் சேர்த்துத் தான். தொப்புள் இல்லாத ஆணையோ பெண்ணையோ கற்பனை செய்து பாருங்கள். விகாரமாக இருக்கும். எனவே ஆதம், ஹவ்வா ஆகிய இருவரும் அவ்வாறு இருந்திருந்தால் நிச்சயமாக அது அழகிய வடிவமாக இருக்காது.

தொப்புள் இல்லாமல் இருப்பது தான் அழகிய வடிவம் என்றால் அவ்விருவரின் வழித் தோன்றல்களுக்கு மற்ற தழும்புகள் காலப்போக்கில் மறைவது போல் தொப்புளும் மறைந்து சமமாக ஆகி விடவேண்டும்.அவ்வாறு ஆகாமால் வேண்டுமென்றே அல்லாஹ் குறிப்பிட்ட வடிவத்தில் அதை விட்டு வைத்துள்ளான். எனவே தொப்புள் கொடி லாஜிக் பேசி, ஆதம், ஹவ்வாவுக்கு தொப்புள் கிடையாது என்று கூறுவதை ஏற்க முடியாது.

19.01.2010. 15:58

ஆதம் அலை எந்த நாட்டில் இறக்கப்பட்டார

ஆதம் அலை எந்த நாட்டில் இறக்கப்பட்டார்கள்

ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகியோர் எந்த நாட்டில் இறக்கப்பட்டார்கள்? அவர்களுக்குத் தொப்புள் கிடையாது என்று கூறப்படுவது உண்மையா?

எம்.ஏ. ஜின்னாஹ், கடலூர் துறைமுகம்

ஆதம் (அலை) அவர்கள் எங்கு இறக்கப்பட்டார்கள் என்பது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்தக் குறிப்பும் இல்லை. இது குறித்து ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன. இவற்றில் எதற்குமே ஆதாரம் இல்லை. ஆனால் முதன்முதலில் அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் மக்காவில் உள்ள கஃபா தான் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

அல்குர்ஆன் 3:96

மனித சமுதாயம் இறைவனை வழிபடுவதற்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் கஃபா என்றால் அதை ஏற்படுத்தியவர் ஆதம் (அலை) அவர்களாகத் தான் இருக்க வேண்டும். ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதராக இருந்ததால் அவர்கள் வணங்குவதற்காக நிச்சயம் ஓர் ஆலயத்தை நிர்மாணித்திருப்பார்கள்.அந்த ஆலயம் மக்காவில் உள்ள கஃபா என்று இறைவன் கூறுகின்றான். எனவே இதை வைத்துப் பார்க்கும் போது ஆதம் (அலை) அவர்களும் அவரது துணைவியாரும் இறக்கப்பட்டது மக்காவில் தான் என்பது தெளிவாகின்றது.

19.01.2010. 15:55

முதலில் இஸ்லாத்தை ஏற்ற மதீனாவாசி யார

முதலில் இஸ்லாத்தை ஏற்ற மதீனாவாசி யார்

ஜாபர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்த துவக்க காலத்தில் மதீனாவைச் சேர்ந்த யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. பின்னர் ஹஜ் செய்ய வரும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு ஹிஜ்ரத்துக்கு ஒரு ஆண்டுக்கு முன்னர் பன்னிரண்டு பேர் கொண்ட குழுவினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இரகசியமாகச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.

நீங்கள் மதீனா வந்தால் எங்கள் மனைவி மக்களைக் காப்பது போல் உங்களைக் காப்போம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி கொடுத்தனர். இந்தப் பன்னிரண்டு பேர் தான் மதீனாவாசிகளில் இஸ்லாத்தை முதலில் ஏற்றவர்களாவர்.

அவர்கள் விபரம் வருமாறு:

அஸ் அத் பின் சுராரா (ரலி)

உசைத் பின் ஹுலைர் (ரலி)

அபுல் ஹைஸன் (ரலி)

சஅது பின் கைஸமா (ரலி)

சஅது பின் அர்ரபீவு (ரலி)

அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி)

அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஹராம் (ரலி)

சஅது பின் உபாதா (ரலி)

முந்திர் பின் அம்ரு (ரலி)

பரா பின் மஃரூர் (ரலி)

உபாதா பின் சாமித் (ரலி)

ராஃபிவு பின் மாலிக் (ரலி)

14.08.2011. 16:18

ஆதம் அலை சமாதி எங்கே உள்ள்து?

ஆதம் அலை சமாதி எங்கே உள்ள்து?

இப்னு ஹாஷிம்

பதில்

நம்மில் பலர் தேவையான கேள்விகளை விடுத்து தேவை இல்லாத கேள்விகளைக் கேட்டு பொன்னான நேரத்தை வீணாக்கி வருகின்றனர். அத்தகைய கேள்விகளில் இதுவும் அடங்கும்.

ஆதம் அலை அவர்களின் கப்ரு எங்கே இருக்கிறது என்பது குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. இதை அறிந்து கொள்வதில் சமுதாயத்துக்கு எந்த நன்மையும் இல்லை. இதில் நன்மை இருந்தால் அதை அல்லாஹ் சொல்லி இருப்பான்.

இந்த நபி எந்த தேதியில் பிறந்தார்? அவரது மனைவி பெயர் என்ன? எத்தனை பிள்ளைகள்? எப்போது திருமணம் முடித்தார் என்பன போன்றவைகளை அல்லாஹ்வோ அவன் தூதரோ சொல்லாமல் அறிந்து கொள்ள முடியாது.

மார்க்கத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டிய விஷயங்கள், வணகக் வழிபாடுகள் ஹலால் ஹராம் சட்டங்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதில் நமக்கு நன்மை உள்ளது. சமாதிகளை அறிந்து கொண்டு நமக்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை. நீ ஏன் ஆதம் அவர்களின் கப்ரைக் கண்டு பிடிக்கவில்லை என்று அல்லாஹ் கேட்க மாட்டான்

12.08.2011. 17:48

ஒட்டகப்போரின் பின்னணி என்ன

ஒட்டகப்போரின் பின்னணி என்ன

அலீ (ரலி) அவர்களுக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்குமிடையே நடந்து போருக்கு என்ன காரணம்?

ஸயீம் அலி

தில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு மூன்றாவது ஆட்சித் தலைவராக இருந்த உஸ்மான் (ரலி) அவர்களைக் கயவர்கள் கொலை செய்தனர். உஸ்மான் (ரலி) அவர்களுக்குப் பிறகு அலீ (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக வருகிறார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், உடனே அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆனால் அலீ (ரலி) அவர்கள், "இந்தக் கோரிக்கையின் நியாயத்தை நான் நன்றாக உணர்வேன். ஆனால் அதற்குரிய தருணம் இதுவல்ல! குற்றவாளிகள் நம்மை விட அதிக வலிமையுடன் மதீனாவில் உள்ளனர்.  நிலைமை சற்று நமக்கு சாதகமாக அமைந்தவுடன் நாம் நடவடிக்கையில் இறங்குவோம்'' என்று கூறினார்கள்.

இருவருக்கும் இடையில் சரியான புரிந்துணர்வு ஏற்படாத காரணத்தால் போர் மூண்டது.

இது பற்றி மேலும் அறிய அந்த 72 கூட்டத்தினர் யார் என்ற தொடர் உரையைக் கேட்கவும்

 http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/antha_72_koottathinar_yar_video/

03.08.2011. 15:56

அய்யூப் நபி உடல் முழுதும் புழு வைத்த

அய்யூப் நபி உடல் முழுதும் புழு வைத்து இருந்ததா

இறைத்தூதர் அய்யூப் (அலை) அவர்கள் தோல் நோயால் பாதிக்கப்பட்டு அவர்களின் உடல் முழுவதும் புழுக்கள் பரவியது என்றும் சில புழுக்கள் உடலிலிருந்து கீழே விழுந்தால் அவர்கள் அவற்றை எடுத்து மீண்டும் தன் உடலுக்குள் செலுத்துவார்கள் என்றும் கூறப்படுகின்து. இது உண்மையா?

ரனீஸ் முஹம்மத்

பதில்

சில ஆலிம்கள் இப்படியொரு பொய்யான கதையை உரைகளில் கூறி வருகின்றனர். சில தஃப்ஸீர் நூற்களில் இந்தக் கதை கூறப்பட்டுள்ளது.

ஆனால் அய்யூப் (அலை) அவர்களுக்கு இது போன்று நடந்ததாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இதற்கு எந்தச் சான்றும் ஹதீஸ் நூற்களில் இடம் பெறவில்லை.

அய்யூப் (அலை) அவர்களுக்கு குஷ்ட நோய் இருந்ததாக இப்னு மாஜாவில் பதிவாகியுள்ள 3478 வது செய்தி கூறுகின்றது.

இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் உஸ்மான் பின் மத்தர் என்பவரும் ஹசன் என்பவரும் தொடர்ந்து இடம் பெறுகின்றனர். இவ்விருவரும் பலவீனமானவர்கள் என்று இமாம்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அய்யூப் (அலை) அவர்களுக்கு இறைவன் ஏதோ ஒருவிதமான நோயை வழங்கியிருந்தான். அந்த நோயிலிருந்து தன்னைக் குணப்படுத்துமாறு அவர்கள் இறைவனிடம் மன்றாடினார்கள். இறைவன் அந்த நோயைக் குணப்படுத்தினான். அய்யூப் (அலை) அவர்களின் நோயைப் பற்றி இந்த அளவிற்குத் தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

وَاذْكُرْ عَبْدَنَا أَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الشَّيْطَانُ بِنُصْبٍ وَعَذَابٍ (41) ارْكُضْ بِرِجْلِكَ هَذَا مُغْتَسَلٌ بَارِدٌ وَشَرَابٌ (42)38

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! "ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்'' என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, "உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்!'' (எனக் கூறினோம்).

அவருக்கு அவரது குடும்பத்தினரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் வழங்கினோம். இது நம்மிடமிருந்து கிடைக்கப் பெறும் அருளும், அறிவுடையோருக்கு அறிவுரையுமாகும்.

உமது கையால் புல்லில் ஒரு பிடியை எடுத்து அதன் மூலம் அடிப்பீராக! சத்தியத்தை முறிக்காதீர்! (என்றோம்.) நாம் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் சிறந்த அடியார். அவர் (நம்மிடம்) திரும்புபவர்.

அல்குர்ஆன் (38 : 41)

அய்யூப் (அலை) அவர்களுக்கு நோய் ஏற்பட்டவுடன் அந்த நோயைக் குணப்படுத்துமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள் என்று குர்ஆன் கூறுகின்றது. ஆனால் நீங்கள் கூறிய கதை கீழே விழுந்த புழுக்களை எடுத்து மீண்டும் தன் உடலுக்குள் செலுத்தி அய்யூப் (அலை) நோயை அதிகப்படுத்திக் கொண்டார்கள் எனக் கூறுகின்றது.

உடலை அரித்து அழிக்கக்கூடிய புழக்களை அகற்ற வேண்டும் என்று நினைப்பதே மனித இயல்பு. நோயால் உடல் பாதிக்கப்பட்டால் மருத்துவம் செய்து உடல் நலத்தைப் பேண வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது. அய்யூப் (அலை) அவர்களின் பிரார்த்தனையும் இந்த அடிப்படையில் தான் அமைந்துள்ளது.

ஆனால் மேற்கண்ட சம்பவம் இந்த அடிப்படைகளுக்கு மாற்றமான கருத்தைக் கொடுக்கின்றது. இது பொய்யான கட்டுக்கதை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

02.08.2011. 16:05




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
115 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி