அகீகா கொடுப்பது எப்படி
குழந்தை பிறந்தால் தலை முடி கலையும் போது அதன் எடைக்கு நிகராக தங்கம் கொடுக்க வேண்டுமா? காது குத்துவது தவறா? அகீகா குழந்தை பிறந்து 14,21 ஆகிய நாட்களில் கொடுக்கலாமா?
டாக்டர் ஜஸீம் அபுபக்கர்
பதில் காது மூக்கு குத்துதல் தொடர்பாக நமது இணையதளத்தில் முன்னரே வெளியிடப் பட்ட பதிலைக் காண்க.
ஏழாவது நாளுக்குப் பிறகு அகீகா கொடுக்கலாமா?
அகீகா என்பது குழந்தைப் பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகிறது. ஆனால் சில பலவீனமான ஹதீஸ்களில் பதினான்காம் நாளும் இருபத்து ஒன்றாம் நாளும் கொடுக்கலாம் என்று வந்துள்ளது.
السنن الكبرى للبيهقي كتاب الضحايا
جماع أبواب العقيقة باب ما جاء في وقت العقيقة وحلق الرأس والتسمية
وأخبرنا أبو الفتح هلال بن محمد بن جعفر الحفار ببغداد , أنبأ الحسين بن يحيى بن عياش القطان ، ثنا الحسن بن محمد بن الصباح ، ثنا عبد الوهاب بن عطاء ، عن إسماعيل بن مسلم ، عن قتادة ، عن عبد الله بن بريدة ، عن أبيه ، عن النبي صلى الله عليه وسلم قال : ' العقيقة تذبح لسبع , ولأربع عشرة , ولإحدى وعشرين ' *
அகீகா (வாக கொடுக்கப்படும் பிராணி) ஏழாவது நாளும் பதினான்காம் நாளும் இருபத்து ஓன்றாம் நாளும் அறுக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : பைஹகீ (பாகம் 9 பக்கம் 303)
இந்த ஹதீஸ் அல்முஃஜமுல் அவ்ஸத் மற்றும் அல்முஃஜமுஸ்ஸஹீர் போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்ற பலகீனமானவர் இடம்பெறுகிறார். இவர் நம்பகமானவர் இல்லை என்று இமாம் நஸாயீ இவர் பலவினமானவர் என்று இமாம் அபூ ஸுர்ஆ இமாம் இப்னு ஹஜர் இமாம் அஹ்மது பின் ஹம்பள் இமாம் யஹ்யா பின் முயீன் இமாம் அபூஹாதிம் மற்றும் பலர் கூறியுள்ளனர். எனவே இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது.
பெற்றோர்கள் தனக்கு அகீகாக் கொடுக்காததால் பெரியவராக ஆன பின்பு தனக்குத் தானே அகீகா கொடுக்கலாமா? என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் எதுவும் இல்லை.
அகீகா என்ற வணக்கம் குழந்தை பிறந்து ஏழாவது நாள் செய்யப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அன்று தான் இவ்வணக்கத்தை செய்ய வேண்டும். இந்த நாளைக் கடந்தப் பிறகு கொடுத்தால் அது சாதாரண தர்மமாக ஆகும். அகீகா கொடுப்பதற்குரிய நன்மை கிடைக்காது.
அகீகா கடமையில்லாத காரணத்தினால் கடமையானவைகளை பின்பு நிறைவேற்றுவதைப் போன்று இதை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்தப் பின் தனக்காகவோ அல்லது அவர்களது தோழர்களுக்காகவோ அகீகா கொடுக்கவில்லை. நபித்தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இந்த புதிய வழிமுறையை நாம் ஏற்படுத்க்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள் என்று சில ஹதீஸ்கள் வருகின்றது. இவையனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.
முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்ய வேண்டுமா?
பிறந்த குழந்தையின் முடியை எடுத்து அதன் எடைக்கு நிகரான வெள்ளியை தர்மம் செய்வது நபிவழி என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் பலவீனமான செய்தியாக உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களுக்கு ஓரு ஆட்டை அகீகாவாக கொடுத்தார்கள். (தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கி) ஃபாத்திமாவே அவருடைய (ஹசன்) தலையை மளித்து அவரது முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்வீராக என்று கூறினார்கள். எனவே நான் அதை நிறுத்துப்பார்த்தேன். அதனுடைய எடை ஒரு திர்ஹம் அல்லது சில திர்ஹம்களின் எடையாக இருந்தது.
அறிவிப்பவர் : அலீ (ரலி)
நூல் : திர்மிதி (1439)
இந்த ஹதீஸை பதிவுசெய்த இமாம் திர்மிதி அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அறுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இதனுடைய அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் அலீ என்பவர் அலீ (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. இந்த வகையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதேக் கருத்தில் 25930 வது ஹதீஸாக அஹ்மதில் ஒரு அறிவிப்பு உள்ளது. இதில் இடம்பெறுகின்ற அப்துல்லாஹ் பின் முஹம்மத் பலகீனமானவர் ஆவார்.
மேலும் இக்கருத்தில் ஹாகிம் இமாம் தொகுத்த முஸ்தத்ரக் என்ற நூல் ஒரு ஹதீஸ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது நம்பத்தகுந்த நபிமொழி இல்லை என்று இமாம் தஹபி அவர்கள் கூறியுள்ளார்கள்.
அதுமட்டுமின்றி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களின் ஒருவரான அலீ பின் ஹ‚ஸைன் அவர்கள் அலீ (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கிறார்.. ஆனால் அலி பின் ஹ‚ஸைன் பிறந்த இரண்டு வருடத்தில் அலீ (ரலி) அவர்கள் மரணித்துவிட்டார்கள். எனவே இது தொடர்பு அறுந்து காணப்படுகிறது.
இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் ஆதாரமற்றவையாக இருப்பதால் இதை செயல்படுத்த வேண்டியதில்லை.
04.08.2010. 15:33
