கத்னாவுக்கு விருந்து உண்டா

கத்னாவுக்கு விருந்து உண்டா

கேள்வி   :கத்னா விருந்து கொடுக்க இஸ்லாத்தில் அனுமதியுண்டா ? அவ்வாறு கொடுக்கப்படும் விருந்தை உண்ணலாமா?

முஹம்மத்

பதில்

நகம் வெட்டுவது, அக்குள் முடிகளைக் களைவது, மர்மஸ்தானத்தின் முடிகளை நீக்குவது, மீசையைக் கத்தரிப்பது போன்ற செயல்களில் ஒன்று தான் கத்னா (விருத்தசேதனம்) செய்வது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 5889

நகம் வெட்டுவதற்கு ஒப்பான ஒன்றாகத்தான் நபியவர்கள் கத்னா செய்வதைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

நகம் வெட்டுவதற்கோ அக்குள் முடிகளைக் களைவதற்கோ மீசையைக் கத்தரிப்பதற்கோ யாரும் எந்த விருந்தும் வைப்பது கிடையாது. அது போன்று தான் கத்னாவிற்கு என்று நபியவர்கள் எந்த விருந்தையும் நமக்குக் கற்றுத் தரவில்லை. இது நபியவர்கள் காட்டித்தராத பித்அத் ஆகும்.

கத்னா செய்வது சுன்னத் என்று வலியுறுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பேரர்களான ஹஸன், ஹுஸைன் ஆகியோருக்கு கத்னா செய்ததை விளம்பரம் செய்ததில்லை. யாருக்கும் சொல்லவும் இல்லை. அழைக்கவும் இல்லை. அப்படி அவர்கள் செய்திருந்தால் எந்த ஆண்டு எந்த மாதம் எந்தக் கிழமையில் அது நடத்தப்பட்ட்து என்று ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். நபிகள் நாயகம் ஸல் அவர்லளின் நரைமுடி எத்தனை என்பதை எல்லாம் கவனித்து சமுதாயத்துக்கிச் சொன்ன நபித்தோழர்கள் ஹஸன் ஹுஸைன் ஆகியோரின் கத்னா எப்போது நடந்தது என்று சொல்லவில்லை என்பதே அது விளம்பரபடுத்தாமல் தான் நடந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நமக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

இது போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான அனாச்சாரங்களைப் புறக்கணிப்பது அவசியமானதாகும்.

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா( நிலையா)கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 70

17.01.2012. 11:15

ஷாஜஹான் என்று பெயர் வைக்கலாமா?

ஷாஜஹான் என்று பெயர் வைக்கலாமா?

அப்துல் ரஸாக்

பதில்

இறைவனுக்கு மட்டும் உரிய தன்மைகளைக் குறிக்கும் பெயர்களை மனிதர்களுக்குச் சூட்டக்கூடாது. அவ்வாறு சூட்டினால் இணைவைப்பு என்ற பெரும்பாவத்தில் விழ வேண்டி வரும் . பின்வரும் ஹதீஸ்கள் இதைத் தடைசெய்கின்றன.

மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரைக் கொண்டவன் மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்ற பெயருடையவனாவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6205

அறிவிப்பாளர் : அபூ ஹூரைரா (ரலி)

அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த அரசனும் இல்லை. மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்று பெயர்வைக்கப்பட்டவன் மறுமை நாளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவனாவான். இன்னும் மோசமானவனாவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 3994

அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி)

ஷாஜஹான் என்பது உருது மொழிச் சொல்லாகும். ஷாஹ் என்றால் மன்னர் என்றும் ஜஹான் என்றால் உலகம் என்றும் பொருள். அதாவது ஷாஜஹான் என்றால் அகிலத்தின் அரசன் என்று பொருள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அகிலத்தின் அதிபதி இல்லை. இது இறைவனுக்கு மட்டும் உரிய தகுதி. எனவே இந்தப் பெயரை யாருக்கும் சூட்டக்கூடாது.

10.01.2012. 23:31

இலாஹி என்று பெயர் வைக்கலாமா

 இலாஹி என்று பெயர் வைக்கலாமா

முஹம்மத்

இலாஹ் என்றால் கடவுள் இறைவன் என்று பொருள். இச்சொல்லுடன் யா என்ற எழுத்தைச் சேர்த்து இலாஹீ என்று நெடிலாக உச்சரிக்கும் போது என் இறைவன் என்றும் பொருள் கொள்ளலாம். இறைவனைச் சேர்ந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

முதல் அர்த்தத்தைக் கவனத்தில் கொண்டால் இவ்வாறு மனிதர்களுக்கு பெயர் வைக்க கூடாது. ஏனெனில் இது மனிதனைக் கடவுளாக்குவதாக ஆகி விடும்.

இரண்டாவது அர்த்தத்தை கருத்தில் கொண்டால் அவ்வாறு பெயர் வைக்கலாம்.

ஆனாலும் தவறான இன்னொரு அர்த்தமும் அதற்கு உள்ளதால் இந்தப் பெயரைத் தவிர்ப்பது தான் நல்லது

18.12.2011. 23:35

அல்லாஹ்வின் பெயர்களை மனிதர்களுக்கு

அல்லாஹ்வின் பெயர்களை மனிதர்களுக்கு வைக்கலாமா?

பதில்

இறைவனுக்கு மட்டும் உரிய தன்மைகளை அறிவிக்கும் பெயர்களை இறைவன் அல்லாத மற்றவர்களுக்குச் சூட்டக்கூடாது. எந்தத் தன்மைகள் இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இருக்கின்றதோ அது போன்ற தன்மைகளைக் கொண்ட பெயர்களை மனிதர்களுக்கு சூட்டுவது தவறல்ல.

சில தன்மைகள் இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இருந்தாலும் இறைவன் அத்தன்மைகளைப் பெற்றிருப்பதற்கும் மனிதர்கள் அத்தன்மைகளைப் பெற்றிருப்பதற்கும் இடையே பல வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹகம் என்ற பெயரைச் சூட்டவேண்டாமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். ஹகம் என்றால் யாருடைய தீர்ப்பு மறுக்கப்படக் கூடாதோ அப்படிப்பட்டவருக்குச் சொல்லப்படும். அதாவது தவறில்லாத தீர்ப்பு வழங்குபவர் என்பது இதன் பொருள். இப்பெயரில் இறைத்தன்மை இருப்பதால் இதைச் சூட்டக் கூடாது என நபியவர்கள் தடுத்தார்கள்.

ஹானிஉ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் எனது கூட்டத்தாருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். எனது கூட்டத்தினர் என்னை அபுல் ஹகம் என்ற குறிப்புப் பெயரால் அழைப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். எனவே என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து அல்லாஹ்வே ஹகம் (தவறில்லாமல் தீர்ப்பளிப்பவன்) ஆவான். (தவறிழைக்காமல்) தீர்ப்பளிப்பது அவனிடமே உள்ளது. அவ்வாறிருக்க நீ ஏன் அபுல் ஹகம் (தவறிழைக்காமல் தீர்ப்பளிப்பவனின் தந்தை) என குறிப்புப் பெயர் வைக்கப்பட்டிருக்கின்றாய்? எனக் கேட்டார்கள். அதற்கு நான் எனது கூட்டத்தினர் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிணங்கிக் கொண்டால் என்னிடம் வருவர். அவர்களுக்கிடையே நான் தீர்ப்பு வழங்குவேன். இருபிரிவினரும் (அத்தீர்ப்பை) பொருந்திக் கொள்வர் (எனவே இவ்வாறு எனக்கு அவர்கள் பெயர் வைத்தனர்) என்று கூறினார். இவ்வாறு தீர்ப்பு வழங்குவது எவ்வளவு அழகாக உள்ளது? என்று கூறிவிட்டு உனக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டார்கள். நான் ஷுரைஹ், முஸ்லிம் மற்றும் அப்துல்லாஹ் ஆகியோர் உள்ளனர் என்றேன். இவர்களில் மூத்தவர் யார்? என்று கேட்டார்கள். நான் ஷுரைஹ் என்றேன். அதற்கு அவர்கள் (இனிமேல்) நீ அபூ ஷுரைஹ் (ஷுரைஹ்வுடைய தந்தை என்பதே உனது குறிப்புப் பெயர்) என்று கூறினார்கள்.

அபூதாவுத் (4304)

அரசர்களுக்கெல்லாம் அரசராக அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. எனவே இப்பெயரை மனிதர்களுக்கு சூட்டக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரைக் கொண்டவன் மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்ற பெயருடையவனாவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி (6205)

அறிவிப்பாளர் : அபூ ஹூரைரா (ரலி)

அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த அரசனும் இல்லை. மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்று பெயர்வைக்கப்பட்டவன் மறுமை நாளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவனாவான். இன்னும் மோசமானவனாவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் (3994)

அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி)

ரஹீம் என்றால் இரக்கமுள்ளவன் என்பது பொருள். இரக்கம் என்ற தன்மை மனிதர்களிடமும் இருப்பதால் இப்பெயரை இறைவன் தனக்குப் பயன்படுத்துவதைப் போன்று மனிதர்களுக்கும் பயன்படுத்தியுள்ளான். ஆனால் இறைவன் காட்டுகின்ற கருணைக்கும் மனிதர்கள் காட்டுகின்ற கருணைக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கின்றது.

பின்வரும் வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ரஹீம் என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ (128 التوبة : 1289

உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிகஅக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்.

அல்குர்ஆன் (9 : 128)

مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ الفتح : 2948

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர்.

அல்குர்ஆன் (48 : 29)

முஜீப் என்ற சொல்லும் இதேப் போன்றதாகும். பதிலளிப்பவன் என்பது இதன் பொருள். அதாவது இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் பதிலளிப்பவன் கட்டுப்படுபவன் என்ற கருத்தில் இப்பெயரைக் குழந்தைகளுக்கு சூட்டுவது தவறல்ல.

ஆனால் ரஹ்மான் ரஸ்ஸாக் என்ற பெயர்கள் இறைவனுக்கு மட்டும் உரிய தன்மைகளை உள்ளடக்கியுள்ளது. அளவற்ற அருளாளன் கணக்கின்றி தருபவன் என்பது இவ்வார்த்தைகளின் பொருளாகும். மனிதர்கள் யாரும் அளவற்ற அருள்புரிய முடியாது. கணக்கின்றி அள்ளித் தரவும் முடியாது. இத்தன்மைகள் மனிதர்களிடம் இல்லை என்பதால் இது போன்ற பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

இது பற்றி திருமறையின் தோற்றுவாய் நூலில் மேலும் விரிவாக விளக்கியுள்ளோம். அது வருமாறு

ரஹ்மான் என்ற திருப்பெயர் எந்தச் சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் குர்ஆனிலோ நபிமொழிகளிலோ, நபித்தோழர்களின் பேச்சுக்களிலோ பயன்படுத்தப்பட்டதே இல்லை. அல்லாஹ் என்ற சொல் எவ்வாறு எந்தச் சந்தர்ப்பத்திலும் வேறு எவருக்கும் பயன்படுத்தப்படவில்லையோ அதே போல் ரஹ்மான்' என்பதும் வேறு எவருக்கும் பயன்படுத்தப்படவில்லை.

அல்லாஹ்வின் திருப்பெயரைமற்றவர்களுக்குச் சூட்டலாமா?

ரஹீம்' என்ற திருப்பெயரும் அல்லாஹ்விற்குரிய பெயரேயாகும். ஆனால் ரஹீம் என்ற இந்தச் சொல் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் சில சமயங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் புகழ்ந்துரைக்கும் போது ரஹீம்' என்ற அடைமொழியை அல்குர்ஆன் 9:128 வசனத்தில் பயன்படுத்தியிருக்கிறான்.

ரஹீம் என்ற தன் பெயரையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதால் அல்லாஹ்வைப் போலவே அவர்களும் நிகரற்ற அன்புடையவர்கள் தாம் என்று சில அறிவீனர்கள் எண்ணுகின்றனர்.

ரஹீம்' என்ற சொல்லுக்கு நிகரற்ற அன்புடையவன் என்று பொருளிருப்பதைப் போல் இரக்க குணம் உள்ளவர்' என்ற பொருளும் உண்டு. அல்லாஹ்வுக்கு அதைப் பயன்படுத்தும் போது அவனது தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றவாறு நிகரற்ற அன்புடையவன்' என்ற பொருளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது இறைவனின் அந்தஸ்தைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காக இரக்க குணம் கொண்டவர் என்ற பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சாதாரணமான உண்மையைக் கூட இத்தகையோர் உணர்வதில்லை.

ரஹீம்' என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான் என்று இவர்கள் எண்ணிக் கொண்டதே இவர்களின் தவறான விளக்கத்துக்குக் காரணமாகும்.

ரஹீம் என்ற சொல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும், நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதை இவர்கள் அறியவில்லை.

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே (ரஹீம்களாகவும்) இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர்.

(அல்குர்ஆன் 48:29)

இவ்வசனத்தில் நபித்தோழர்களை ரஹீம்கள் என அல்லாஹ் கூறுகிறான்.

நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் ரஹீம்களாக (இரக்கம் மிகுந்தவர்களாக) உள்ளவர்களுக்கே அருள் புரிகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல்: புகாரி 1284, 5655, 6655, 7377, 7448

மனிதர்கள் அனைவரும் ரஹீம்களாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே கூறியுள்ளார்கள்.

நபித்தோழர்களும், மனிதர்கள் அனைவரும் நிகரற்ற அன்புடையவர்கள் என்று இவர்கள் பொருள் கொள்வார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்குச் சமமாக அவர்களைக் கருதினார்கள். முடிவில் ரஹீம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லாமல் இவர்கள் ஆக்கிவிட்டார்கள்.

பொதுவாக அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு சில வரையறைகள் உள்ளன. அவற்றை விளங்காத காரணத்தினாலேயே இப்படியெல்லாம் கூறுகின்றனர்.

அல்லாஹ்வின் பண்புகளில் ஸமீவுன் என்பதும் ஒன்று. செவியுறுபவன் என்பது இதன் பொருள். இதே பண்பு மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் செவியுறுபவன் என்று தான் பொருள்.

எனவே அல்லாஹ்வும், மனிதனும் ஒன்று தான் எனக் கூறக் கூடாது. வார்த்தையை மட்டும் பார்க்காமல் யாருக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அவர்களது தகுதியையும் கவனத்தில் கொண்டு தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தனக்கு நிகராக யாருமில்லை என்று அல்லாஹ் திட்டவட்டமாக அறிவித்து விட்டதால் அல்லாஹ்வை ஸமீவுன்' என்று குறிப்பிடும் போது அவனது தகுதிக்கேற்ப அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எத்தனை ஓசைகளையும் ஒரே நேரத்தில் கேட்பவன், எவ்வளவு தொலைவிலிருந்தாலும் கேட்பவன், எந்த நேரத்திலும் கேட்பவன், சுருங்கச் சொன்னால் அனைத்தையும் செவியுறுபவன்' என்று கூறலாம்.

மனிதனை ஸமீவுன் எனக் கூறும் போது அனைத்தையும் செவியுறுபவன்' என்று கூற முடியாது. ஒரு நேரத்தில் இரண்டு பேரின் குரலைக் கூட அவனால் கேட்க முடியாது.

இது போலவே பார்ப்பவன், சக்தியுள்ளவன், அன்பு செலுத்துபவன், உயர்ந்தவன் போன்ற பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்தையும் பார்ப்பவன், அனைத்தின் மீதும் சக்தி உள்ளவன், நிகரற்ற அன்புடையவன், அனைத்தையும் விட உயர்ந்தவன் என அல்லாஹ்வைப் பற்றி பேசும் போது புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது சாதாரணமான பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை விளங்காதது தான் குழப்பத்திற்குக் காரணமாகும்.

ஸமீவுன் பஸீருன் (பார்ப்பவன், கேட்பவன்) என்ற தனது பண்புகளை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியதை அல்குர்ஆன் 76:2 வசனத்தில் காணலாம்.

ஜப்பார் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதை 11:59, 14:15, 40:35 ஆகிய வசனங்களில் காணலாம்.

ஹஸீப் என்ற தனது பண்பை மனிதனுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 17:14 வசனத்தில் காணலாம்.

ஃகபீர் என்ற தனது பண்பை 25:59 வசனத்தில் மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான்.

ரப்பு என்ற தனது பண்பை அல்லாஹ் மனிதர்களுக்கும் பயன்படுத்தியிருப்பதை 12:42, 12:50, 12:23 ஆகிய வசனங்களில் காணலாம்.

அஸீஸ் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 12:30, 12:51, 12:78, 12:88 ஆகிய வசனங்களில் காணலாம்.

அலீம் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 7:109-112, 10:79, 12:76, 15:53, 26:34, 26:37, 51:28 ஆகிய வசனங்களில் காணலாம்.

அலீ' என்ற அல்லாஹ்வின் பெயர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் சூட்டப்பட்டது. அதை நபிகள் நாயகம் (ஸல்) மாற்றவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் எனக் குறிப்பிட்டுள்ளான். எனவே அல்லாஹ்வும் நபியும் ஒன்று தான். அல்லாஹ்விடம் கேட்பதை நபியிடம் கேட்கலாம் என்றெல்லாம் சில அறிவீனர்கள் கூறி வருகின்றனர். அவர்களுக்காகவே இந்த விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம்.

அல்லாஹ்வின் பல பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம். அல்லாஹ்வைக் குறிக்கும் போது அவனது தகுதிக்கேற்பவும் மனிதர்களைக் குறிக்கும் போது அவர்களின் நிலைமைக் கேற்பவும் தான் புரிந்து கொள்கிறோம்.

அது போலவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் என்று குறிப்பிட்டுள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும். அது போலவே தான் மற்ற மனிதர்களை ரஹீம் எனக் கூறப்படும் போதும் புரிந்து கொள்ள வேண்டும்.

முழு நூலையும் வாசிக்க

27.04.2011. 12:22

பெயர் சூட்டு விழா நடத்தலாமா

பெயர் சூட்டு விழா நடத்தலாமா

இஸ்ஸுல்

பதில்

குழந்தைக்குப் பெயர் சூட்டுவதற்காக தனியே ஒரு விழாக் கொண்டாடுவதை மார்க்கம் காட்டித் தரவில்லை. இது மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட தேவையற்ற கலாச்சாரமாகும்.

குழந்தை பிறந்த ஏழாவது நாளில் அக்குழந்தைக்காக ஆடு அறுக்கலாம். இதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது. அன்றைய தினம் குழந்தைக்குப் பெயர் சூட்டுவது நபிவழி. இவ்வாறு செய்வது தவறல்ல.

ஓவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் அதற்காக (ஆடு) அறுக்கப்படும். அதன் முடி மழிக்கப்பட்டு அதற்குப் பெயர் சூட்டப்படும்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜன்துப் (ரலி)

நூல் : அபூதாவூத் (2455)

12.04.2011. 14:04

மூன்று வயது குழந்தைக்காக அகீகா கொடுக

மூன்று வயது குழந்தைக்காக அகீகா கொடுக்கலாமா

 

என் மகனுக்கு நான் அகீகா கொடுக்கவில்லை. இப்போது அவனுக்கு மூன்று வயதாகிறது. ஏழாம் நாளில் தான் கொடுக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. இப்போது என்ன செய்யலாம்?

சலீம் பாஷா

பதில்

அகீகா என்பது குழந்தை பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன.

ஓவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி)

நூல் : அபூதாவூத் (2455)

ஆனால் சில பலவீனமான ஹதீஸ்களில் பதினான்காம் நாளும் இருபத்து ஒன்றாம் நாளும் கொடுக்கலாம் என்று வந்துள்ளது.

السنن الكبرى للبيهقي  - كتاب الضحايا

وأخبرنا أبو الفتح هلال بن محمد بن جعفر الحفار ببغداد , أنبأ الحسين بن يحيى بن عياش القطان  ثنا الحسن بن محمد بن الصباح ، ثنا عبد الوهاب بن عطاء ، عن إسماعيل بن مسلم ، عن قتادة ، عن عبد الله بن بريدة ، عن أبيه ، عن النبي صلى الله عليه وسلم قال : " العقيقة تذبح لسبع , ولأربع عشرة , ولإحدى وعشرين " *

அகீகா(வாக கொடுக்கப்படும் பிராணி) ஏழாவது நாளும் பதினான்காம் நாளும் இருபத்து ஓன்றாம் நாளும் அறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : பைஹகீ (பாகம் 9 பக்கம் 303)

இந்த ஹதீஸ் அல்முஃஜமுல் அவ்ஸத் மற்றும் அல்முஃஜமுஸ்ஸஹீர் போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்ற பலகீனமானவர் இடம் பெறுகிறார்.

இவர் பலவீனமானவர் என்று நஸாயீ, அபூசுர்ஆ, அபூஹாதிம் அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் மயீன், அலீ பின் மதீனி, தஹபீ, இப்னு ஹஜர் மற்றும் பல அறிஞர்களும் கூறியுள்ளனர்.

பெற்றோர்கள் தனக்கு அகீகா கொடுக்காததால் பெரியவராக ஆன பின்பு தனக்குத் தானே அகீகா கொடுக்கலாமா? என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் எதுவும் இல்லை

அகீகா என்ற வணக்கம் குழந்தை பிறந்து ஏழாவது நாள் செய்யப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அன்று தான் இவ்வணக்கத்தைச் செய்ய வேண்டும். இந்த நாளைக் கடந்த பிறகு கொடுத்தால் அது சாதாரண தர்மமாக ஆகும். அகீகா கொடுப்பதற்குரிய நன்மை கிடைக்காது.

அகீகா கடமையான வணக்கமல்ல. பின்பு இதை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் தனக்காகவோ அல்லது தமது தோழர்களுக்காகவோ அகீகா கொடுக்கவில்லை. நபித்தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இந்த புதிய வழிமுறையை நாம் ஏற்படுத்தக் கூடாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தமக்காக அகீகா கொடுத்தார்கள் என்று சில ஹதீஸ்கள் வருகின்றன. இவையனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

இவைகளையும் பார்க்கவும்

http://onlinepj.com/kelvi_pathil/kuzanthai_valarpu/aqeeqa_kodupathu_sunnatha/

http://onlinepj.com/kelvi_pathil/kuzanthai_valarpu/akeeka_koduppathu_eppadi/

11.04.2011. 13:46

நாகூர் மீரான் என்று பெயர் வைக்கலாமா

நாகூர் மீரான் என்று பெயர் வைக்கலாமா

என் பெயர் நாகூர் மீரான் சுல்தான் பாய். நாகூர் மீரான் என்ற பெயரின் அர்த்தத்தை அறிய நான் இணைய தளங்களில் தேடி பார்த்தேன். அதற்கான அர்த்தம் கிடைக்கவில்லை. இதன் பொருள் என்ன? இவ்வாறு பெயர் வைக்கலாமா

நாகூர் மீரான் சுல்தான் பாய்

பதில்

நாகூர் என்றால் அது ஒரு ஊரின் பெயர். மீரான் என்றால் பார்சி மொழியில் தலைவர் என்று பொருள். நாகூர் மீரான் என்றால் நாகூர் தலைவர் என்று பொருள். நீங்கள் நாகூர் பஞ்சாயத்து போர்டு தலைவர் என்றால் இது அர்த்தமுள்ள் பெய்ராகும். இல்லாவிட்டால் அர்த்தமற்ற பெயராகும்.

பெயர்களுக்கு பொதுவாக அர்த்தம் பார்க்க அவசியம் இல்லை. ஸாலிஹ் (நல்லவன்) என்று பெயர் வைக்கப்பட்டவர் கெட்டவராக இருப்பார். இதனால் அவர் பெயரை மாற்ற அவசியம் இல்லை. நபிமார்களின் பெயர்களை வைத்துள்ள பலர் இப்லீஸாக இருக்கலாம். பெயர் என்பது ஒருவரை அறிந்து கொள்ளும் அடையாளம் தான். அதன் அர்த்தம் அப்படியே பொருந்த வேண்டும் என்று அவசியம் இல்லை.

ஆனால் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் அர்த்தம் கொண்ட பெயர்களாக இருந்தால் அதைக் கட்டாயம் மாற்ற வேண்டும். உதாரணமாக அப்துல் முத்தலிப் (முத்தலிபின் அடிமை) முத்தலிப் என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று அல்ல. எனவே முத்தலிபுக்கு அடிமை என்று கூறினால் அதில் இணை கற்பித்தல் ஏற்படுகிறது. நாகூர் பிச்சை, மைதீன் பிச்சை (நாகூரில் அடங்கப்பட்டவரால் பிச்சையாக வழங்கப்பட்டவர், முஹ்யித்தின் என்பவரால் பிச்சையாக வழங்கப்பட்டவர்) போன்ற பெயர்களும் அப்பட்டமான இணை வைத்தலாகும்.

அசிங்கமான அர்த்தம் தரும் பெயர்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆனால் அர்த்தமற்ற அல்லது பொருந்தாத பெயர்களை மாற்ற வேண்டியது அவசியம் இல்லை. எத்தனையோ நபித்தோழர்களின் பெயர்கள் அர்த்தமற்றவையாக இருந்தன. ஆனால் அவற்றை நபியவர்கள் மாற்றவில்லை.

இது குறித்த ஆதாரங்களை அறிய

http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/kuzanthaiku_peyar_sootuthal/ 

http://onlinepj.com/kelvi_pathil/kuzanthai_valarpu/Hakim_enru_peyar_soottalama/

08.04.2011. 00:28

அபுல் காசிம் என்று பெயர் வைக்கலாமா

அபுல் காசிம் என்று பெயர் வைக்கலாமா

 

அபுல் காசிம்

பதில் :

அபுல் காசிம் என்றால் காசிமின் தந்தை என்பது பொருள். நபிகள் நாய்கம் ஸல் அவர்களுக்கு காசிம் என்று மகன் பிறந்ததால் அவர்கள் அபுல் காசிம் காசிமின் தந்தை என்று அழைக்கப்பட்டார்கள்.

காசிம் என்று மகனைப் பெற்றவர்கள் இப்பெயரை புணைப் பெயராகச் சூட்டிக் கொள்ளலாம்.

ஆனால் குழந்தையாகப் பிறக்கும் போது யாருக்கும் பிள்ளை இருக்க மாட்டார்கள். எனவே காசிமின் தந்தை என்பது போல் பெயர் வைப்பது பொருளற்றதாகும். ஆனால் தடுக்கப்பட்டதாக ஆகாது. அபூ பக்ர், அபூ தாலிப் அபூ தல்ஹா, அபூ மூஸா என்றெல்லாம் பெயர் சூட்டும் வழக்கம் உள்ளது. பக்ரின் தந்தை, தாலிபின் தந்தை, தல்ஹாவின் தந்தை, மூஸாவின் தந்தை என்றெல்லாம் பெயர் வைப்பது அர்த்தமற்றதாகும். எந்தக் குழாந்தையும் யாருக்கும் தந்தையாக இருக்க முடியாது. இது போன்ற பெயர்கள் ஒருவர் தந்தையாக ஆன பிறகு சூட்டிக் கொள்ள வேண்டிய செல்லப் பெயர்களாகும்.

ஆனாலும் பொருளைக் கவனத்தில் கொள்ளாமல் அபூபக்ர் போல் அபுல் காசிம் எனும் நபிகள் நாயகம் போல் நல்லடியாராக ஆகட்டும் என்ற கருத்தில் இப்பெயர்களை எடுத்துக் கொண்டால் அப்போது பொருளற்றதாக ஆகாது.

ஆனால் அபுல் காசிம் என்ற பெயரை யாரும் சூட்ட வேண்டாம் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்ததாக சில ஹதீஸ்கள் உள்ளன. அது பொதுவான தடை அல்ல. மாறாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உயிருடன் வாழும் போது அவ்வாறு சூட்டக்கூடாது என்பதற்காகவே அந்தத் தடை விதிக்கப்பட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அபுல் காசிம் என்ற பெயரை மற்றவர்களும் வைத்திருந்தனர். சிலர் நபியவர்களுக்கு அருகில் நின்று கொண்டு நபியவர்களை அழைப்பது போன்று மற்றவர்களை அழைத்தனர். இதன் காரணமாக தனது குறிப்புப் பெயரான அபுல் காசிம் என்பதை மற்றவர்கள் சூட்டக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை விதித்தார்கள்.

ஓருவர் அபுல்காசிமே என்று பகீஃ என்ற இடத்தில் இருந்த ஓரு மனிதரை அழைத்தார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அப்போது அவர் அல்லாஹ்வின் தூதரே நான் உங்களை நாடவில்லை. இந்த நபரைத் தான் அழைத்தேன் என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனது பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். எனது குறிப்புப் பெயரை சூட்டாதீர்கள் என்று கூறினார்கள்.

நூல் : புஹாரி 2120, 2121, 3537

அறிவிப்பாளர் : அனஸ்

இன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்முடன் இல்லாத காரணத்தால் இந்தத் தடை இந்த காலத்திற்குப் பொருந்தாது. எனவே தற்காலத்தில் ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை வைத்துக் கொண்டால் அது தவறல்ல.

26.02.2011. 08:10

தத்தெடுத்தல் கூடுமா

தத்தெடுப்பது கூடுமா? 

பதில் :

குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்ப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை. ஆனால் அதே சமயம் எடுத்து வளர்ப்பதால் தந்தை, மகன் என்ற உறவோ, வாரிசுரிமையோ ஏற்பட்டு விடாது. நாம் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறோம் என்றால் அந்தக் குழந்தையின் தந்தை பெயருக்குப் பதிலாக நம்முடைய பெயரைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை.

இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒருவர் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தால் அக்குழந்தைக்கு அவர் தான் தந்தை என்று கருதும் வழக்கம் இருந்தது. வளர்ப்பு மகன் தன்னை எடுத்து வளர்த்தவருக்கு வாரிசாகி வந்தார்.  பின்பு இஸ்லாம் இதைத் தடை செய்து விட்டது.

குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்கும் அதே வேளையில் அக்குழந்தையின் தந்தை எவரோ அவர் தான் அக்குழந்தைக்குத் தந்தையாக எப்போதும் இருப்பார். வளர்ப்பவர் ஒருக்காலும் தந்தையாக முடியாது. வளர்க்கப்பட்டவர் வளர்த்தவருக்கு வாரிசாகவும் முடியாது என்று புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதைப் பின்வரும் வசனமும் ஹதீஸ்களும் தெளிவுபடுத்துகின்றன.

அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியா விட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (33 : 5)

4000حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ أَبَا حُذَيْفَةَ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبَنَّى سَالِمًا وَأَنْكَحَهُ بِنْتَ أَخِيهِ هِنْدَ بِنْتَ الْوَلِيدِ بْنِ عُتْبَةَ وَهُوَ مَوْلًى لِامْرَأَةٍ مِنْ الْأَنْصَارِ كَمَا تَبَنَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْدًا وَكَانَ مَنْ تَبَنَّى رَجُلًا فِي الْجَاهِلِيَّةِ دَعَاهُ النَّاسُ إِلَيْهِ وَوَرِثَ مِنْ مِيرَاثِهِ حَتَّى أَنْزَلَ اللَّهُ تَعَالَى ادْعُوهُمْ لِآبَائِهِمْ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான அபூ ஹுதைஃபா (ரலி) அவர்கள் சாலிமைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்கள். அவருக்குத் தம் சகோதரரின் மகளான ஹிந்த் பின்த் வலீத் பின் உத்பாவைத் திருமணமும் செய்து வைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைதை வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டது போல (சாலிமை, அபூ ஹுதைஃபா -ரலி- அவர்கள் வளர்ப்பு மகனாக்கிக் கொண்டார்கள்.) மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை(யின் பெயர்)உடன் இணைத்து மக்கள் அழைப்பதும் அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) ஆக்கும் பழக்கமும் இருந்து வந்தது. "வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள்'' என்னும் (33:5) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்தப் பழக்கம் நீடித்தது.)

புகாரி (4000)

4782 حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ قَالَ حَدَّثَنِي سَالِمٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ زَيْدَ بْنَ حَارِثَةَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا كُنَّا نَدْعُوهُ إِلَّا زَيْدَ بْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَ الْقُرْآنُ ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ رواه البخاري

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

"வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்'' எனும் (33:5ஆவது) குர்ஆன் வசனம் அருளப்படும் வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை "ஸைத் பின் முஹம்மத்' (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.

புகாரி (4782)

வளர்ப்புக் குழந்தைக்கு வாரிசுரிமை ஏற்படாது. எனினும் ஒருவர் விரும்பினால் தனது வளர்ப்பு மகனுக்கு மரண சாசனம் (உயில்) மூலம் சொத்தை எழுதி வைக்கலாம்.

(பாகப் பிரிவினை என்பது) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே.

அல்குர்ஆன் 4:11

செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.)

அல்குர்ஆன் 4:12

பொதுவாக மரண சாசனம் செய்ய அனுமதி உள்ளதை இந்த வசனத்திலிருந்து அறியலாம். ஆயினும் இவ்வாறு செய்யும் மரண சாசனம் மூன்றில் ஒரு பகுதியைத் தாண்டக் கூடாது. மூன்று லட்சம் ரூபாய் சொத்துக்களை விட்டுச் செல்பவர் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்குத் தான் மரண சாசனம் செய்யும் உரிமை படைத்துள்ளார்.

ஒருவர் முழுச் சொத்துக்கும் மரண சாசனம் எழுதி வைத்தாலும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்குத் தான் அது செல்லும். எஞ்சியவை இஸ்லாம் கூறும் முறைப்படி வாரிசுகளுக்குப் பங்கிடப்பட வேண்டும்.

விடை பெறும் ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த என்னை விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விளிம்புக்கே சென்று விட்டிருந்தேன். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு செல்வந்தன். எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கின்ற வேதனை என்னை வந்தடைந்து விட்டது. ஆகவே நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். "அப்படியென்றால் அதில் பாதியைத் தர்மம் செய்து விடட்டுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "மூன்றில் ஒரு பங்கு! ஸஅதே! மூன்றில் ஒரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டு விட்டுச் செல்வதை விட தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கும் எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அளித்தே தீருவான். உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவள உணவாயினும் சரியே!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் (ரலி)

நூல்: புகாரி 3936, 4409, 5668, 6373

மேலும் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் பெண்கள் அக்குழந்தைக்குத் தாயாக முடியாது. அக்குழந்தை திருமணம் முடிக்க தடைசெய்யப்பட்ட நெருங்கிய உறவினராக முடியாது.

எனவே அக்குழந்தை பருவ வயதை அடைந்து விட்டால் ஒரு அந்நியரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் ஒழுங்கு முறைகளைக் கற்றுக் கொடுத்துள்ளதோ அந்த ஒழுங்கு முறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக தன்னால் வளர்க்கப்பட்டவருடன் தனியாக இருப்பது, பர்தா அணியாமல் அவருக்கு முன்னால் காட்சி தருவது போன்றவை கூடாது. அந்நிய ஆணுடைய அந்தஸ்த்தையே அவருக்குக் கொடுக்க வேண்டும்.
மேலும் அதிக விபரத்துக்கு பார்க்க

14.01.2011. 07:10

முஹம்மத் எனப்பெயர் வைப்பதாக நேர்ச்ச

முஹம்மத் எனப்பெயர் வைப்பதாக நேர்ச்சை செய்யலாமா

குழந்தை பிறந்தால் முஹம்மது என பெயர் வைப்பேன் என நேர்ச்சை செய்யலாமா?

பதில் :

வணக்க வழிபாடுகளில் மட்டுமே நேர்ச்சை

தொழுகை நோன்பு தர்மம் போன்ற வணக்க வழிபாடுகளை மட்டுமே நேர்ச்சையாகச் செய்ய முடியும். வணக்க வழிபாடுகள் இல்லாத காரியங்களில் நேர்ச்சை செய்ய முடியாது.

அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6696

முஹம்மது என்ற பெயரைச் சூட்டுவது வணக்கம் என்றோ அதனால் நன்மை கிடைக்கும் என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இவ்வாறு பெயர் வைக்குமாறு அவர்கள் ஆவர்வமூட்டவுமில்லை. எனவே இவ்வாறு பெயர்சூட்டுவது வணக்கம் அல்ல. வணக்கமில்லாத இந்தக் காரியத்தை நேர்ச்சையாக செய்ய முடியாது.  

இதை நேர்ச்சையாக ஆக்காமல் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் உங்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு முஹம்மது எனப் பெயரிட்டால் அதில் தவறேதுமில்லை. அவ்வாறு பெயர் வைக்கலாம்

30.12.2010. 11:47

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

 

பதில் :

கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது.

1. குழந்தை பாலருந்தும் பருவத்தில் இருந்தால் தாய் தான் அக்குழந்தைக்கு மிகவும் உரிமை படைத்தவளாவாள். ஏனெனில் குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் பாலருந்தும் பருவத்தில் தாயினுடைய கவனிப்பில் இருப்பது தான் குழந்தையினுடைய உடல் நலத்திற்கு மிகவும் பாதுகாப்பானதாகும். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஒரு பெண்மணி '' அல்லாஹ்வின் தூதரே என்னுடைய இந்த மகனுக்கு என்னுடைய வயிறு தான் (உணவுப்) பாத்திரமாகும். என்னுடைய மார்பகங்கள் தான் அவனுக்கு  குடிபானமாகும். என்னுடைய மடி தான் அவனுக்கு தங்குமிடமாகும். இவனுடைய தந்தை என்னை விவாகரத்து செய்து விட்டு என்னிடமிருந்து இவனைப் பிரித்துக் கொண்டு செல்ல நாடுகிறார்.'' என்று (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) கூறினார். நபியவர்கள் '' நீ (மறு) திருமணம் செய்யாமலிருக்கும் வரை நீ தான் (குழந்தையாகிய) அவனுக்கு மிகவும் உரிமை படைத்தவள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அமர் (ரலி)

நூல் : ஹாகிம் பாகம் : 2 பக்கம் 225

குழந்தை தாயிடமே இருக்கும் என்ற சட்டம் விவாகரத்துச் செய்யபட்டவள் மறுமணம் செய்யாமலிருக்கும் வரை தான். அவள் மறுமணம் செய்து விட்டால் குழந்தைகளின் பொறுப்பு தந்தைக்கு வந்து விடும். இதனை

'' நீ (மறு) திருமணம் செய்யாமலிருக்கும் வரை நீ தான் (குழந்தையாகிய) அவனுக்கு மிகவும் உரிமை படைத்தவள்'' என்று நபியவர்கள் கூறியிருப்பதிலிருந்தே நாம் விளங்கிக் கொள்ளலாம்.

தாய் மறுமணம் முடித்து விட்டால் குழந்தைகளின் பொறுப்பு தந்தையிடம் வந்து விடுகிறது. என்றாலும் தாய்க்கும் அக்குழந்தைகளின் விஷயத்தில் உரிமையிருப்பதால் தாய் குழந்தைகளைச் சந்திக்க விடாமல் தடுப்பதோ, தாயைப் பற்றி குழந்தைகளிடத்தில் வெறுப்பு உண்டாக்குவதோ கூடாது. தான் பெற்றெடுத்த குழந்தைகளைச் சந்திக்க தாய்க்கு முழு உரிமையிருக்கிறது.

2. குழந்தை பாலருந்தும் பருவத்தைக் கடந்து விட்டால் குழந்தைக்கு, தாயிடம் இருக்க வேண்டுமா? அல்லது தந்தையிடம் இருக்க வேண்டுமா? என்று தீர்மானிக்கின்ற விருப்பத்தை இஸ்லாம் குழந்தைக்கு வழங்குகிறது. இதனைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ராபிஃவு பின் ஸினான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அவருடைய மனைவி இஸ்லாத்தைத் தழுவ மறுத்தாள். (அவர்களுக்கு) பால்குடி மறந்த அல்லது அதற்கு ஒத்த நிலையில் (ஒரு பெண் குழந்தை ) இருந்தது. அப்பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ''என்னுடைய மகள்'' என்றாள் . ராபிஃவு (ரலி) அவர்கள் ''என்னுடைய மகள்'' என்றார். நபிகள் நாயக் (ஸல்) அவரை ''ஒரு மூலையில் உட்காருமாறு கூறினார்கள். அப்பெண்ணையும் ஒரு மூலையில் உட்காருமாறு கூறினார்கள். அக்குழந்தையை இருவருக்கும் மத்தியில் வைத்து பிறகு ''நீங்கள் இருவரும் அதை அழையுங்கள் என்று கூறினார்கள். அக்குழந்தை தாயின் பக்கம் சென்றது.  நபியவர்கள் அல்லாஹ்வே இக்குழந்தைக்கு நேர்வழிகாட்டு என்று கூறினார்கள். அக்குழந்தை தந்தையின் பக்கம் சென்றது. அவர் அக்குழந்தையை எடுத்துக் கொண்டார்

அறிவிப்பவர் : ஜஃஃபர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) 

நூல் : அபூதாவூத் (1916)

இந்த ஹதீஸிலிருந்து குழந்தை பால் குடிப் பருவத்தைக் கடந்து விட்டதென்றால் அதனுடைய விருப்பப்படி தாயையோ அல்லது தந்தையையோ தேர்ந்தெடுக்கும்படி செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

நபியவர்கள் ஒரு சிறுவனுக்கு தாய் மற்றும் தந்தை இருவருக்கு மத்தியில் (யாருடன் வசிக்க அவன் விரும்புகிறானோ அவரை) தேர்ந்தெடுக்கும் உரிமையளித்தார்கள் 

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : திர்மிதி (1277)

இந்த ஹதீஸில் வந்துள்ள ''சிறுவன்'' என்ற வார்த்தைக்கு அரபி மூலத்தில் ''குலாம்'' என்ற சொல் வந்துள்ளது. இது குழந்தை பருவம் முதல், பருவ வயதை  அடைகின்ற வரை உள்ள நிலையில் உள்ளவர்களுக்கும் பயன்படுத்தப்படும் சொல்லாகும். இதிலிருந்து பால்குடிப் பருவம் கழிந்ததிலிருந்து பருவ வயதை அடையும் நிலையிலுள்ள குழந்தைகளின் விருப்பத்தைப் பொருத்தே அது தாயிடம் இருக்க வேண்டுமா? அல்லது தந்தையிடம் இருக்க வேண்டுமா? என்று முடிவு செய்யப்படும். குழந்தை யாரை விரும்புகிறதோ அவர்களிடம் தான் அது ஒப்படைக்கப்படும்.

குழந்தைக்கு விபரம் தெரிந்த பிறகு அதனுடைய விருப்பத்தைக் கவனத்தில் கொண்டு செயல்படுவதே குழந்தைக்கு நன்மை பயக்கும். குழந்தை விரும்பாத நபர்களிடம் அது ஒப்படைக்கப்பட்டால் இங்கு குழந்தையின் உரிமை பறிக்கப்படுவதோடு அதற்கு இதனால் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே தான் விபரமறிந்த குழந்தைளுக்கு இந்த உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.

மேலும் குழந்ததைகள் தாயிடம் இருந்தாலும் தந்தையிடம் இருந்தாலும் அதற்குச் செலவு செய்கின்ற பொறுப்பு தந்தையைச் சார்ந்ததாகும். பின் வரும் திருமறை வசனத்திலிருந்து இதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு.

அல் குர்ஆன் (2: 233)

குழந்தை தாயிடம் இருக்கும் காலத்தில் தந்தை குழந்தையைச் சந்திப்பதற்கோ அதனுடன் பழகுவதற்கோ யாரும் தடை விதிக்க முடியாது. தன் குழந்தையை எப்போது வேண்டுமானாலும் வந்து பார்த்துக் கொள்ள தந்தைக்கு முழு உரிமை உள்ளது.

25.12.2010. 09:32

கத்னா செய்யும் வயது எது?

கத்னா செய்யும் வயது எது?

மே 1991 அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது அளித்த பதில் திருத்தங்களுடன்

கேள்வி: எந்த வயதிலிருந்து எந்த வயதிற்குள் கத்னா செய்ய வேண்டும். கத்னாவை முஸ்லிம்கள் தான் செய்ய வேண்டுமா?                                                    

எம்,.ஹாஜி முஹம்மது, நிரவி

பதில்: நபி (ஸல்) அவர்கள் தம் பேரர்களான ஹஸன் ரலி ஹுஸைன் ரலி ஆகியோருக்கு ஏழாம் நாளில் கத்னா செய்தனர் என்று ஆயிஷா ரலி அறிவிக்கும் ஹதீஸ் ஹாகிம் பைஹகீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.                                                

ஏழாம் நாளில் தான் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பருவமடைந்தவுடன் (சுமார் பதினைந்து வயதில்) கத்னா செய்யலாம். நபி ஸல் காலத்தில் பருவ வயது அடைந்தவுடன் கத்னா செய்யும் வழக்கமிருந்தது. அதை நபி (ஸல்) ஆட்சேபிக்காமல் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.                                         

நபி ஸல் காலமான போது நான் கத்னா செய்யப்பட்டவனாக இருந்தேன். ஆண்கள் பருவ வயது அடையும் வரை மக்கள் கத்னா செய்ய மாட்டார்கள்  என்று இப்னு அப்பாஸ் ரலி அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.

 حدثنا محمد بن عبد الرحيم أخبرنا عباد بن موسى حدثنا إسماعيل بن جعفر عن إسرائيل عن أبي إسحاق عن سعيد بن جبير قال سئل ابن عباس مثل من أنت حين قبض النبي صلى الله عليه وسلم قال أنا يومئذ مختون قال وكانوا لا يختنون الرجل حتى يدرك وقال ابن إدريس عن أبيه عن أبي إسحاق عن سعيد بن جبير عن ابن عباس قبض النبي صلى الله عليه وسلم وأنا ختين

6299 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் (உயிர்) கைப்பற்றப் பட்ட போது தாங்கள் எவ்வாறிருந்தீர்கள்? என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள், நான் அப்போது விருத்தசேதனம் செய்தவனாயிருந்தேன் என்று பதிலளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகின்றார்:

பருவ வயதை நெருங்கிய பிறகே (அன்றைய) மக்கள் விருத்தசேதனம் செய்வது வழக்கம்.

எனவே இத்தனை நாட்களுக்குள் கத்னா செய்ய வேண்டும் என்ற கெடு எதுவும் கிடையாது என அறியலாம்.          

07.10.2010. 17:14

அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச்

 

அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா?

அல்லாஹ்விற்கு 99 அழகிய பெயர்கள் உள்ளன. பலரும் அந்த பெயர்களை தன்னுடைய பெயர்களாக வைப்பதை விரும்புவார்கள். அப்படி வைக்கும் போது அந்த பெயருக்கு முன்னால் அப்துல்(அல்லது அதற்க்கு நிகராக வேறு எதாவது இருந்தாலும்) என்று சேர்த்து கொள்ள வேண்டும். ஆனால், நடைமுறையில் அழைக்கும் போது, வெரும் 'ரஹ்மான்', 'ரஹீம்', 'ஜப்பார்', 'மாலிக்', 'கரீம்', என்று அழைக்கிறார்கள். இப்படி அழைப்பது சரியா?

ரஃபீக் நாகர்கோவில்

அல்லாஹ்வின் பெயர்களை அல்லாஹ்வுக்குப் ப்யன்படுத்தும் போது எந்தப் பொருளில் பயன்படுத்துகிறோமா அந்தப் பொருளில் பயன்ப்டுத்தினால் அது குற்றமாகும். மனிதர்களுக்குரிய விதத்தில் பொருள் கொண்டால் அது தவறாகாது.

இது குறித்து திருமறையின் தோற்றுவாய் எனும் நூலில் விரிவாக விள்க்கியுள்ளதையே இதற்கு பதிலாகத் தருகிறோம். அது வருமாறு

"ரஹீம்' என்ற திருப்பெயரும் அல்லாஹ்விற்குரிய பெயரேயாகும். ஆனால் ரஹீம் என்ற இந்தச் சொல் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் சில சமயங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் புகழ்ந்துரைக்கும் போது "ரஹீம்' என்ற அடைமொழியை அல்குர்ஆன் 9:128வசனத்தில் பயன்படுத்தியிருக்கிறான்.

ரஹீம் என்ற தன் பெயரையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதால் அல்லாஹ்வைப் போலவே அவர்களும் நிகரற்ற அன்புடையவர்கள் தாம் என்று சில அறிவீனர்கள் எண்ணுகின்றனர்.

"ரஹீம்' என்ற சொல்லுக்கு நிகரற்ற அன்புடையவன் என்று பொருளிருப்பதைப் போல் "இரக்க குணம் உள்ளவர்' என்ற பொருளும் உண்டு. அல்லாஹ்வுக்கு அதைப் பயன்படுத்தும் போது அவனது தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றவாறு "நிகரற்ற அன்புடையவன்' என்ற பொருளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது இறைவனின் அந்தஸ்தைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காக இரக்க குணம் கொண்டவர் என்ற பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சாதாரணமான உண்மையைக் கூட இத்தகையோர் உணர்வதில்லை.

"ரஹீம்' என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான் என்று இவர்கள் எண்ணிக் கொண்டதே இவர்களின் தவறான விளக்கத்துக்குக் காரணமாகும்.

ரஹீம் என்ற சொல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும், நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதை இவர்கள் அறியவில்லை.

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே (ரஹீம்களாகவும்) இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர்.

(அல்குர்ஆன் 48:29)

இவ்வசனத்தில் நபித்தோழர்களை ரஹீம்கள் என அல்லாஹ் கூறுகிறான்.

நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் ரஹீம்களாக (இரக்கம் மிகுந்தவர்களாக) உள்ளவர்களுக்கே அருள் புரிகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல்: புகாரி 1284, 5655, 6655, 7377, 7448

மனிதர்கள் அனைவரும் ரஹீம்களாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே கூறியுள்ளார்கள்.

நபித்தோழர்களும், மனிதர்கள் அனைவரும் நிகரற்ற அன்புடையவர்கள் என்று இவர்கள் பொருள் கொள்வார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்குச் சமமாக அவர்களைக் கருதினார்கள். முடிவில் ரஹீம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லாமல் இவர்கள் ஆக்கிவிட்டார்கள்.

பொதுவாக அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றிப் புரிந்து கொள்வதற்குச் சில வரையறைகள் உள்ளன. அவற்றை விளங்காத காரணத்தினாலேயே இப்படியெல்லாம் கூறுகின்றனர்.

அல்லாஹ்வின் பண்புகளில் ஸமீவுன் என்பதும் ஒன்று. செவியுறுபவன் என்பது இதன் பொருள். இதே பண்பு மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் செவியுறுபவன் என்று தான் பொருள்.

எனவே அல்லாஹ்வும், மனிதனும் ஒன்று தான் எனக் கூறக் கூடாது. வார்த்தையை மட்டும் பார்க்காமல் யாருக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அவர்களது தகுதியையும் கவனத்தில் கொண்டு தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தனக்கு நிகராக யாருமில்லை என்று அல்லாஹ் திட்டவட்டமாக அறிவித்து விட்டதால் அல்லாஹ்வை "ஸமீவுன்' என்று குறிப்பிடும் போது அவனது தகுதிக்கேற்ப அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எத்தனை ஓசைகளையும் ஒரே நேரத்தில் கேட்பவன், எவ்வளவு தொலைவிலிருந்தாலும் கேட்பவன், எந்த நேரத்திலும் கேட்பவன், சுருங்கச் சொன்னால் "அனைத்தையும் செவியுறுபவன்' என்று கூறலாம்.

மனிதனை ஸமீவுன் எனக் கூறும் போது "அனைத்தையும் செவியுறுபவன்' என்று கூற முடியாது. ஒரு நேரத்தில் இரண்டு பேரின் குரலைக் கூட மனிதனால் கேட்க முடியாது.

இது போலவே பார்ப்பவன், சக்தியுள்ளவன், அன்பு செலுத்துபவன், உயர்ந்தவன் போன்ற பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்தையும் பார்ப்பவன், அனைத்தின் மீதும் சக்தி உள்ளவன், நிகரற்ற அன்புடையவன், அனைத்தையும் விட உயர்ந்தவன் என அல்லாஹ்வைப் பற்றி பேசும் போது புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது சாதாரணமான பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை விளங்காதது தான் குழப்பத்திற்குக் காரணமாகும்.

ஸமீவுன் பஸீருன் (பார்ப்பவன், கேட்பவன்) என்ற தனது பண்புகளை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியதை அல்குர்ஆன் 76:2வசனத்தில் காணலாம்.

ஜப்பார் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதை 11:59, 14:15, 40:35ஆகிய வசனங்களில் காணலாம்.

ஹஸீப் என்ற தனது பண்பை மனிதனுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 17:14வசனத்தில் காணலாம்.

ஃகபீர் என்ற தனது பண்பை 25:59வசனத்தில் மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான்.

ரப்பு என்ற தனது பண்பை அல்லாஹ் மனிதர்களுக்கும் பயன்படுத்தியிருப்பதை 12:42, 12:50, 12:23ஆகிய வசனங்களில் காணலாம்.

அஸீஸ் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 12:30, 12:51, 12:78, 12:88ஆகிய வசனங்களில் காணலாம்.

அலீம் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 7:109-112, 10:79, 12:76, 15:53, 26:34, 26:37, 51:28ஆகிய வசனங்களில் காணலாம்.

"அலீ' என்ற அல்லாஹ்வின் பெயர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் சூட்டப்பட்டது. அதை நபிகள் நாயகம் (ஸல்) மாற்றவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் எனக் குறிப்பிட்டுள்ளான். எனவே அல்லாஹ்வும் நபியும் ஒன்று தான். அல்லாஹ்விடம் கேட்பதை நபியிடம் கேட்கலாம் என்றெல்லாம் சில அறிவீனர்கள் கூறி வருகின்றனர். அவர்களுக்காகவே இந்த விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம்.

அல்லாஹ்வின் பல பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம். அல்லாஹ்வைக் குறிக்கும் போது அவனது தகுதிக்கேற்பவும் மனிதர்களைக் குறிக்கும் போது அவர்களின் நிலைமைக் கேற்பவும் தான் புரிந்து கொள்கிறோம்.

அது போலவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் என்று குறிப்பிட்டுள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும். அது போலவே தான் மற்ற மனிதர்களை ரஹீம் எனக் கூறப்படும் போதும் புரிந்து கொள்ள வேண்டும்.

09.03.2010. 23:20

குழந்தைகளுக்கு தங்க நகை

ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பது சரி. சிறிய குழந்தைகளுக்கு ஏன் அணியக் கூடாது?

ஆண்கள் தங்கம் அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்றாலும் குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்கள் பருவ வயதை அடையும் வரை அவர்களுக்கு எந்தத் தீமையும் பதியப்படுவதில்லை.

أخبرنا يعقوب بن إبراهيم قال حدثنا عبد الرحمن بن مهدي قال حدثنا حماد بن سلمة عن حماد عن إبراهيم عن الأسود عن عائشة عن النبي صلى الله عليه وسلم قال رفع القلم عن ثلاث عن النائم حتى يستيقظ وعن الصغير حتى يكبر وعن المجنون حتى يعقل أو يفيق

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது.

1. தூங்குபவர் விழிக்கின்ற வரை

2. சிறுவன் பெரியவராகும் வரை

3. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: நஸயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா 2031

சிறுவர்கள் இரு வகைப்படுவார்கள். எதையுமே புரிந்து கொள்ளாத தத்தி தவழும் பருவத்தில் உள்ளவர்கள் ஒருவகை. இவர்கள் நிர்வாணமாக இருந்தால் கூட அது தவறாகாது. இத்தகைய பருவத்தில் உள்ளவர்களுக்கு தடை செய்யப்பட்ட தங்க நகை அணிவித்தல் தவறாகாது.

ஆனால் புரிந்து கொள்ளும் பருவத்தை அடைந்து விட்டால் அவர்களுக்கு சட்ட திட்டங்களையும் கடமைகளையும் புரியவைத்து பயிற்சி அளிக்க வேண்டும்.

حدثنا آدم حدثنا شعبة حدثنا محمد بن زياد قال سمعت أبا هريرة رضي الله عنه قال أخذ الحسن بن علي رضي الله عنهما تمرة من تمر الصدقة فجعلها في فيه فقال النبي صلى الله عليه وسلم كخ كخ ليطرحها ثم قال أما شعرت أنا لا نأكل الصدقة

ஜகாத் பேரீச்சம் பழத்தை தமது பேரர் எடுத்து சாப்பிட்டதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் துப்பிவிடச் சொன்னார்கள். முஹம்மதின் குடும்பத்துக்கு இது ஹலால் இல்லை என்று தெளிவுபடுத்தினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1491, 1485, 3072

حدثنا علي بن عبد الله أخبرنا سفيان قال الوليد بن كثير أخبرني أنه سمع وهب بن كيسان أنه سمع عمر بن أبي سلمة يقول كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصحفة فقال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك فما زالت تلك طعمتي بعد

அது போல் விபரம் தெரிந்த சிறுவரான அபூ ஸலாமாவின் மகன் உமர் சாப்பிடும் போது உணவுத் தட்டின் நாலாபுறங்களிலும் கைகளை அலைய விட்ட போது சிறுவரே! அல்லாஹ்வின் பெயர் கூறு! உன் அருகில் உள்ளதை உண் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்

நூல் : புகாரி   5376, 5377, 5378

12.08.2009. 11:43

அகீகா கொடுப்பது சுன்னத்தா?

அகீகா கொடுப்பது சுன்னத்தா? கொடுக்காவிட்டால் தண்டனை கிடைக்குமா? ஏழாவது நாள் கொடுக்காவிட்டால் மற்ற நாட்களில் கொடுக்கலாமா? குழந்தை பிறந்த ஊரில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா? ஏழாவது நாள் குழந்தையின் தலை மிகவும் மிருதுவாக இருக்கும் நிலையில் மொட்டை அடிப்பது சாத்தியமா?

أخبرنا عمرو بن علي ومحمد بن عبد الأعلى قالا حدثنا يزيد وهو ابن زريع عن سعيد أنبأنا قتادة عن الحسن عن سمرة بن جندب عن رسول الله صلى الله عليه وسلم قال كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى

'ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவிற்கு அடைமானமாக இருக்கிறது. தனது ஏழாவது நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்பட்டு, அந்தக் குழந்தையின் தலை முடி இறக்கப்பட்டு, பெயர் வைக்கப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸம்ரத் பின் ஜுன்துப் (ரலி(

நூல்: நஸயீ 4149

இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தை பிறந்த ஏழாவது நாளில் ஆடு அறுத்துப் பலியிட வேண்டும். அதே நாளில் குழந்தைக்குப் பெயரிட்டு, தலை முடியைக் களைய வேண்டும்.

அகீகா தொடர்பாக வரக் கூடிய செய்திகளில் ஏழாவது நாள் கொடுக்க வேண்டும் என்று இடம் பெறும் செய்தி மட்டுமே ஆதாரப்பூர்வமாக உள்ளது. 14, 21 ஆகிய நாட்களில் அகீகா கொடுக்கலாம் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பலவீனமானவையாக உள்ளன. எனவே குழந்தை பிறந்த ஏழாவது நாள் அகீகா கொடுப்பது தான் சுன்னத்தாகும். மற்ற நாட்களில் கொடுப்பதற்கு ஆதாரம் இல்லை.

குழந்தை பிறந்த ஊரில் தான் அகீகா கொடுக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை.

அகீகா கட்டாயக் கடமை, கொடுக்கா விட்டால் தண்டனை என்று ஹதீஸ்களில் கூறப்படவில்லை என்றாலும் நபி (ஸல்) அவர்கள் ஒரு செயலை கற்றுத் தந்தால் அதை இயன்ற வரை நாம் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

சக்தி இல்லாவிட்டால் கடன் வாங்கியாவது அதை நிறைவேற்றித் தான் ஆக வேண்டும் என்று எந்த வணக்கத்தையும் மார்க்கம் கட்டளையிடவில்லை.

حدثنا إسماعيل حدثني مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال دعوني ما تركتكم إنما هلك من كان قبلكم بسؤالهم واختلافهم على أنبيائهم فإذا نهيتكم عن شيء فاجتنبوه وإذا أمرتكم بأمر فأتوا منه ما استطعتم

'ஒன்றைச் செய்ய வேண்டாமென நான் உங்களுக்குத் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு நான் உங்களுக்குக் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்..

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7288

'எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்' (அல்குர்ஆன் 2:286) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

எனவே அகீகாவை நிறைவேற்றுவதற்குத் தேவையான பொருள் வசதி இல்லாவிட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் நிறைவேற்ற இயலாவிட்டாலோ குற்றமில்லை.

ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு மெல்லியதாக இருக்கும் என்பது இந்தக் காலத்தில் மட்டுமல்ல! நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு அவ்வாறு தான் இருந்திருக்கும். எனவே நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றை நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் செய்யுமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் இந்த ஹதீஸை நமது சகோதரர்கள் நடைமுறைப் படுத்தியே வருகின்றார்கள். இதனால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

எனினும் தங்களின் குழந்தைக்கு அவ்வாறு ஏற்படும் என்று நீங்கள் கருதினால் அல்லது இந்தக் கட்டத்தில் முடியை மழிக்க வேண்டாம் என்று மருத்துவர் ஆலோசனை வழங்கினால் மேற்கண்ட புகாரி 7288வது ஹதீஸ் மற்றும் திருக்குர்ஆன் 2:286 வசனத்தின் அடிப்படையில் இந்த சுன்னத்தை நிறைவேற்றாமல் இருப்பது குற்றமில்லை.

12.08.2009. 04:01

ஹாகிம் என்று பெயர் சூட்டலாமா?

 கேள்வி

அஸ்ஸலாமு அழைக்கும். ஆண் குழந்தைக்கு ஹாகிம் என்று பெயர் சூட்டலாமா? அல்லது அப்துல் ஹாகிம் என்று தான் சூட்ட வேண்டுமா? விளக்கவும்.

அப்துல் ஹாகிம்

பதில் :

வஅலைக்குமுஸ்ஸலாம்.

ஹாகிம் என்றால் நீதி வழங்குபவன் அதாவது நீதிபதி என்பது இதன் பொருளாகும். நீதிவழங்கும் அதிகாரத்தை அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியிருப்பதால் இந்தப் பெயரை மனிதர்களுக்கு சூட்டுவதற்கு மார்க்கத்தில் தடை ஏதும் இல்லை.

இவ்வுலகில் தீர்ப்பு வழங்கும் மனிதரைக் குறிக்க நபி (ஸல்) அவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள்.

7352حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ الْمَكِّيُّ حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ حَدَّثَنِي يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ أَبِي قَيْسٍ مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ ثُمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு.

இதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி (7352)

இந்த செய்தியில் நீதிபதி என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் ஹாகிம் என்ற வார்த்தையை நபியவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். ஹாகிம் என்பவர் சரியாகவும் தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளது. தவறாகவும் தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளது என்பதை நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்திவிட்டார்கள். இறைத்தன்மை எதுவும் இப்பெயரில் இல்லை என்பதால் இதை ஆண் குழந்தைக்கு பெயராக சூட்டுவது தவறல்ல.

ஹாகிம் என்பது இறைவனுக்குரிய பெயராக திருக்குர்ஆனிலோ நபிமொழிகளிலோ நாம் அறிந்தவரை பயன்படுத்தப்படவில்லை. எனவே அப்துல் ஹாகிம் என்று பெயர் வைக்காமல் ஹாகிம் என்று மட்டுமே பெயர் சூட்டிக்கொள்ளலாம்.

அதே நேரத்தில் ஹகம் என்ற பெயரை சூட்டவேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். ஹகம் என்றால் யாருடைய தீர்ப்பு மறுக்கப்படக்கூடாதோ அப்படிப்பட்டவருக்கு சொல்லப்படும். அதாவது தவறில்லாத தீர்ப்பு வழங்குபவர் என்பது இதன் பொருள். இப்பெயரில் இறைத்தன்மை இருப்பதால் இதை சூட்டக்கூடாது என நபியவர்கள் தடுத்தார்கள்.

4304حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ نَافِعٍ عَنْ يَزِيدَ يَعْنِي ابْنَ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ هَانِئٍ أَنَّهُ لَمَّا وَفَدَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ قَوْمِهِ سَمِعَهُمْ يَكْنُونَهُ بِأَبِي الْحَكَمِ فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ اللَّهَ هُوَ الْحَكَمُ وَإِلَيْهِ الْحُكْمُ فَلِمَ تُكْنَى أَبَا الْحَكَمِ فَقَالَ إِنَّ قَوْمِي إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ أَتَوْنِي فَحَكَمْتُ بَيْنَهُمْ فَرَضِيَ كِلَا الْفَرِيقَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَحْسَنَ هَذَا فَمَا لَكَ مِنْ الْوَلَدِ قَالَ لِي شُرَيْحٌ وَمُسْلِمٌ وَعَبْدُ اللَّهِ قَالَ فَمَنْ أَكْبَرُهُمْ قُلْتُ شُرَيْحٌ قَالَ فَأَنْتَ أَبُو شُرَيْحٍ قَالَ أَبُو دَاوُد شُرَيْحٌ هَذَا هُوَ الَّذِي كَسَرَ السِّلْسِلَةَ وَهُوَ مِمَّنْ دَخَلَ تُسْتَرَ قَالَ أَبُو دَاوُد وَبَلَغَنِي أَنَّ شُرَيْحًا كَسَرَ بَابَ تُسْتَرَ وَذَلِك أَنْهُ دَخَلَ مِنْ سِرْبٍ رواه أبو داود

ஹானிஉ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் எனது கூட்டத்தாருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். எனது கூட்டத்தினர் என்னை அபுல் ஹகம் என்ற குறிப்புப் பெயரால் அழைப்பதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். எனவே என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து அல்லாஹ்வே ஹகம் (தவறில்லாமல் தீர்ப்பளிப்பவன்) ஆவான். (தவறிழைக்காமல்) தீர்ப்பளிப்பது அவனிடமே உள்ளது. அவ்வாறிருக்க நீ என் அபுல் ஹகம் (தவறிழைக்காமல் தீர்ப்பளிப்பவனின் தந்தை) என குறிப்புப் பெயர் வைக்கப்பட்டிருக்கின்றாய்? எனக் கேட்டார்கள். அதற்கு நான் எனது கூட்டத்தினர் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிணங்கிக்கொண்டால் என்னிடம் வருவர். அவர்களுக்கிடையே நான் தீர்ப்பு வழங்குவேன். இருபிரிவினரும் (அத்திர்ப்பை) பொறுந்திக்கொள்வர் (எனவே இவ்வாறு எனக்கு இவர்கள் பெயர் வைத்தனர்) என்று கூறினார். இவ்வாறு தீர்ப்பு வழங்குவது எவ்வளவு அழகாக உள்ளது? என்று கூறிவிட்டு உனக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டார்கள். நான் ஷுரைஹ் முஸ்லிம் மற்றும் அப்துல்லாஹ் ஆகியோர் உள்ளனர் என்றேன். இவர்களில் மூத்தவர் யார்? என்று கேட்டார்கள். நான் ஷுரைஹ் என்றேன். அதற்கு அவர்கள் (இனிமேல்) நீ அபூ ஷுரைஹ் (ஷுரைஹ்வுடைய தந்தை என்பதே உனது குறிப்புப் பெயர்) என்று கூறினார்கள்.

அபூதாவுத் (4304)

06.08.2010. 10:17

அகீகா கொடுப்பது எப்படி

கேள்வி

குழந்தை பிறந்தால் தலை முடி கலையும் போது அதன் எடைக்கு நிகராக தங்கம் கொடுக்க வேண்டுமா? காது குத்துவது தவறா? அகீகா குழந்தை பிறந்து 14,21 ஆகிய நாட்களில் கொடுக்கலாமா?

டாக்டர்  ஜஸீம் அபுபக்கர்

பதில் காது மூக்கு குத்துதல் தொடர்பாக நமது இணையதளத்தில் முன்னரே வெளியிடப் பட்ட பதிலைக் காண்க.

கட்டுரை வடிவில்

ஆடியோ வடிவில்.

ஏழாவது நாளுக்குப் பிறகு அகீகா கொடுக்கலாமா?

அகீகா என்பது குழந்தைப் பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகிறது. ஆனால் சில பலவீனமான ஹதீஸ்களில் பதினான்காம் நாளும் இருபத்து ஒன்றாம் நாளும் கொடுக்கலாம் என்று வந்துள்ளது.

السنن الكبرى للبيهقي  كتاب الضحايا

 جماع أبواب العقيقة  باب ما جاء في وقت العقيقة وحلق الرأس والتسمية

 وأخبرنا أبو الفتح هلال بن محمد بن جعفر الحفار ببغداد , أنبأ الحسين بن يحيى بن عياش القطان ، ثنا الحسن بن محمد بن الصباح ، ثنا عبد الوهاب بن عطاء ، عن إسماعيل بن مسلم ، عن قتادة ، عن عبد الله بن بريدة ، عن أبيه ، عن النبي صلى الله عليه وسلم قال : ' العقيقة تذبح لسبع , ولأربع عشرة , ولإحدى وعشرين ' *

அகீகா (வாக கொடுக்கப்படும் பிராணி) ஏழாவது நாளும் பதினான்காம் நாளும் இருபத்து ஓன்றாம் நாளும் அறுக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : பைஹகீ (பாகம் 9 பக்கம் 303)

இந்த ஹதீஸ் அல்முஃஜமுல் அவ்ஸத் மற்றும் அல்முஃஜமுஸ்ஸஹீர் போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்ற பலகீனமானவர் இடம்பெறுகிறார். இவர் நம்பகமானவர் இல்லை என்று இமாம் நஸாயீ இவர் பலவினமானவர் என்று இமாம் அபூ ஸுர்ஆ இமாம் இப்னு ஹஜர் இமாம் அஹ்மது பின் ஹம்பள் இமாம் யஹ்யா பின் முயீன் இமாம் அபூஹாதிம் மற்றும் பலர் கூறியுள்ளனர். எனவே இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது.

பெற்றோர்கள் தனக்கு அகீகாக் கொடுக்காததால் பெரியவராக ஆன பின்பு தனக்குத் தானே அகீகா கொடுக்கலாமா? என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் எதுவும் இல்லை. 

அகீகா என்ற வணக்கம் குழந்தை பிறந்து ஏழாவது நாள் செய்யப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அன்று தான் இவ்வணக்கத்தை செய்ய வேண்டும். இந்த நாளைக் கடந்தப் பிறகு கொடுத்தால் அது சாதாரண தர்மமாக ஆகும். அகீகா கொடுப்பதற்குரிய நன்மை கிடைக்காது.

அகீகா கடமையில்லாத காரணத்தினால் கடமையானவைகளை பின்பு நிறைவேற்றுவதைப் போன்று இதை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்தப் பின் தனக்காகவோ அல்லது அவர்களது தோழர்களுக்காகவோ அகீகா கொடுக்கவில்லை. நபித்தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இந்த புதிய வழிமுறையை நாம் ஏற்படுத்க்கூடாது. 

நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள் என்று சில ஹதீஸ்கள் வருகின்றது. இவையனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்ய வேண்டுமா?

பிறந்த குழந்தையின் முடியை எடுத்து அதன் எடைக்கு நிகரான வெள்ளியை தர்மம் செய்வது நபிவழி என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் பலவீனமான செய்தியாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களுக்கு ஓரு ஆட்டை அகீகாவாக கொடுத்தார்கள். (தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கி) ஃபாத்திமாவே அவருடைய (ஹசன்) தலையை மளித்து அவரது முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்வீராக என்று கூறினார்கள். எனவே நான் அதை நிறுத்துப்பார்த்தேன். அதனுடைய எடை ஒரு திர்ஹம் அல்லது சில திர்ஹம்களின் எடையாக இருந்தது.

அறிவிப்பவர் : அலீ (ரலி)

நூல் : திர்மிதி (1439)

இந்த ஹதீஸை பதிவுசெய்த இமாம் திர்மிதி அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அறுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இதனுடைய அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் அலீ என்பவர் அலீ (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. இந்த வகையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதேக் கருத்தில் 25930 வது ஹதீஸாக அஹ்மதில் ஒரு அறிவிப்பு உள்ளது. இதில் இடம்பெறுகின்ற அப்துல்லாஹ் பின் முஹம்மத் பலகீனமானவர் ஆவார்.

 மேலும் இக்கருத்தில் ஹாகிம் இமாம் தொகுத்த முஸ்தத்ரக் என்ற நூ­ல் ஒரு ஹதீஸ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது நம்பத்தகுந்த நபிமொழி இல்லை என்று இமாம் தஹபி அவர்கள் கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களின் ஒருவரான அலீ பின் ஹஸைன் அவர்கள் அலீ (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கிறார்.. ஆனால் அலி பின் ஹஸைன் பிறந்த இரண்டு வருடத்தில் அலீ (ரலி) அவர்கள் மரணித்துவிட்டார்கள். எனவே இது தொடர்பு அறுந்து காணப்படுகிறது.

இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் ஆதாரமற்றவையாக இருப்பதால் இதை செயல்படுத்த வேண்டியதில்லை.

04.08.2010. 15:33

தத்துக்குழந்தைக்கு ஏன் சொத்துரிமை இ

தத்துக்குழந்தைக்கு ஏன் சொத்துரிமை இல்லை?

தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு சொத்துரிமை வழங்க ஏன் இஸ்லாம் மறுக்கின்றது?

பதில்

இஸ்லாம் குழந்தையை எடுத்து வளர்ப்பதைத் தடை செய்யவில்லை. ஒருவர் இன்னொருவருடைய குழந்தையை எடுத்து வளர்ப்பதற்கு இஸ்லாத்தில் எந்தத் தடையுமில்லை.

அவ்வாறு எடுக்கப்பட்ட குழந்தையை வளர்ப்பவர் தன் குழந்தை என்று கூறிக் கொள்வதையே இஸ்லாம் தடை செய்துள்ளது. இன்றைக்கு நடைமுறையில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு தகப்பன் ஒருவன் இருக்க அதை வளர்த்தவன் அக்குழந்தைக்கு தானே தகப்பன் என்று கூறும் நிலை உள்ளது.

பொய்யான பேச்சுக்கள், போலிச் செயல்கள், போலி உறவுகள், தவறான நம்பிக்கைகள் இவற்றை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது. ஒருவன் ஒரு குழந்தையை எடுத்து வளர்த்தால் அதற்குரிய நன்மை அவனுக்கு உண்டு என்பது தனி விஷயம். ஆனால் இதற்காக அவன் அக்குழந்தைக்குத் தந்தையாகிவிட முடியாது.

அக்குழந்தை உருவாகுவதற்கு காரணமாக இருந்தவனே அக்குழந்தையின் தந்தையாக இருக்க முடியும். இதற்கு மாற்றமாக வளர்த்தவரை தந்தை என்று கூறுவது பொய்யாகும்.

ஒரு பிராணியை ஒருவன் வளர்த்தால் அப்பிராணிக்கு அவன் தந்தை என்று கூற முடியுமா? ஒரு செடியை ஒருவன் வளர்ப்பதால் அச்செடிக்கு அவன் தந்தை என்று கூற முடியுமா?  தத்தெடுத்து வளர்ப்பவரை தந்தை என்று கூறுவது இது போன்றே அமைந்துள்ளது.

வளர்ப்பவரைப் பொறுப்பாளர் என்று கூறலாம். தந்தை என்று கூறுவது போலி உறவை ஏற்படுத்தும் செயலாகும்.

திருமணம் நெருங்கிப் பழகுதல் சொத்துரிமை போன்ற பல விஷயங்களில் இஸ்லாம் இரத்த பந்த உறவுகளுக்கும் அவ்வாறு இல்லாதவர்களுக்கும் வேறுபட்ட சட்டங்களை வழங்கியுள்ளது.

தத்தெடுத்தவரை தந்தை என்று கூறி போலியான உறவை ஏற்படுத்தினால் இறைவனுடைய சட்டங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றம் ஏற்படும். எனவே தான் இஸ்லாம் இவ்வாறு கூறுவதை தடைசெய்கின்றது.

ஒருவனுக்கு இரத்த பந்த உறவுகள் இருக்கும் போது யாரோ ஒருவர் பெற்றெடுத்த குழந்தைக்கு அத்தனை சொத்துக்களையும் வழங்குவது அந்த உறவுகளுக்குச் செய்யும் பெரிய அநியாயமாகும். எனவே தான் மகனுக்குரிய சொத்துரிமையை தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு இஸ்லாம் வழங்கவில்லை.

அதே நேரத்தில் மரணிப்பவர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமாகாமல் தான் விரும்பியவருக்கு மரண சாசனம் செய்ய இஸ்லாம் அனுமதித்துள்ளது. ஒருவர் தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு தனது சொத்து சேர வேண்டும் என்று நினைத்தால் மூன்றில் ஒரு பங்கு அளவுக்குள் அக்குழந்தைக்கு வழங்கலாம்.

இது குறித்து மேலும் விபரம் அறிய

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/317/

http://onlinepj.com/kutumbaviyal/thathu_etuthal/

http://onlinepj.com/kelvi_pathil/kuzanthai_valarpu/thatheduthal_kooduma/

http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/thatthu_etukka_koodatha/

30.08.2011. 12:40

இரண்டு வயதைக் கடந்த குழந்தைகளுக்கு ப

கேள்வி        

 

இரண்டு வயதைக் கடந்த குழந்தைகளுக்கு பால் புகட்டுவது ஹராமா?

ருகையா தாஜுத்தீன்

பதில்

பின்வரும் வசனம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் பாலூட்ட வேண்டும் என்பதைப் பற்றி பேசுகின்றது.

وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ (233) 2

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.

அல்குர்ஆன் (2 : 233)

தாய்மார்கள் குழந்தைகளுக்கு முதல் இரண்டு வருடங்கள் கட்டாயமாக பாலூட்ட வேண்டும் என்றே இவ்வசனம் கூறுகின்றது.

இரண்டு வருடத்திற்குப் பிறகு பாலூட்ட வேண்டும் என்ற கருத்தையோ பாலூட்டக் கூடாது என்ற கருத்தையோ இது கூறவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு வருடம் கழித்தும் குழந்தைகளுக்குப் பாலூட்டும் வழக்கம் இருந்துள்ளது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை. இதைப் பின்வரும் செய்திகளிலிருந்து அறியலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஒரு ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறி விட்டது போல் தோன்றியது. (ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், "இவர் என் (பால்குடி) சகோதரர்'' என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில் பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளை பால் அருந்தியிருந்தால்) தான்'' என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 5102

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்குப் பால் புகட்டுவதினாலேயே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (பால்குடி உறவு ஏற்பட வேண்டுமானால்) பால் புகட்டுவது பால்குடிக் காலம் 2 வருடம் (முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: திர்மிதி 1072

இரண்டு வயதைக் கடந்த குழந்தைகளுக்கும் பாலூட்டும் வழக்கம் மக்களிடையே இருந்துள்ளதால் இது பற்றி ஒரு சட்டத்தை நபியவர்கள் விளக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

நபியவர்கள் இரண்டு வருடத்திற்குப் பிறகு ஒரு குழந்தைக்குப் பாலூட்டினால் அதனால் பால்குடி உறவு ஏற்படாது என்ற சட்டத்தை மட்டுமே மக்களுக்கு விளக்குகிறார்கள். ஆனால் இவ்வாறு பாலூட்டுவதை அவர்கள் தடை செய்யவில்லை.

எனவே பால் குடி காலம் இரண்டு வருடம் கடந்த பின்பும் குழந்தைக்குத் தாய் பாலூட்டினால் அதில் தவறேதுமில்லை.

11.06.2011. 05:31




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
119 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி