வசதி உள்ளவர்கள் தமது வசதிக்கேற்ப விழ
வசதி உள்ளவர்கள் தமது வசதிக்கேற்ப விழாக்கள் நடத்துவதில் என்ன தவறு?
பெரோஸ் கான்
பதில்
இன்றைக்கு சமுதாயத்தில் பல காரணங்களுக்காக நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. இவற்றில் மார்க்கம் அனுமதித்தவைகளும் மார்க்கம் தடைசெய்தவைகளும் இருக்கின்றன. திருமணம், அகீகா, புதுவீடு கட்டியதற்காக விருந்தளித்தல் ஆகியவை மார்க்கம் அனுமதித்த கொண்டாட்டங்களாகும்.
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை முறையான அடிப்படையில் செய்வது தவறல்ல. ஆனால் வீட்டு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நடக்கும் விழாக்களில் பெரும்பாலும் வீணான காரியங்களுக்கே பெருந்தொகை செலவிடப்படுகின்றது. வீண் விரையம் செய்வதை மார்க்கம் தடை செய்துள்ளது.
வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
(அல் குர்ஆன் 6:141)
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.
(அல் குர்ஆன் 7:31)
விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
(அல் குர்ஆன் 17:27)
அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான்; இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார் (என ஆதாரமின்றிப் பேசுவது), பொருள்களை வீணாக்குவதும் அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஃபா (ரலி)
நூல் : புகாரி (1477)
பிறர் மெச்ச வேண்டுமென்பதற்காகவும், தம்முடைய செல்வச் செழிப்பு உலகுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் நிகழ்ச்சிகளில் வீண் விரையம் செய்யப்படுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வீண்விரயமும் பெருமையும் இல்லாமல் சாப்பிடுங்கள். தர்மம் செய்யுங்கள். (விரும்பிய ஆடையை) அணிந்துகொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : நஸயீ (2512)
விழாக்கள் என்பது சமுதாயத்துக்குத் தெரியாமல் நான்கு சுவற்றுக்குள் நடத்தப்படுகின்றவை அல்ல. வீட்டு விழாக்கள் என்று நீங்கள் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சமுதாய மக்கள் கலந்து கொள்ளும் பொது நிகழ்வுகளாகவே இருக்கும். எனவே நம் வீட்டு நிகழ்ச்சிகளானாலும் அவற்றில் வீண் விரையம் பகட்டு பெருமை ஆகியவை இல்லாமல் இருப்பது அவசியம்.
13.04.2011. 05:27
