தவறு செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை
தவறு செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை
கேள்வி தவ்ஹீத் கொள்கையில் இருந்து கொண்டும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து கொண்டும் சிலர் தவறான கெட்ட வழிகளில் செல்கின்றனர். இதற்கு என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்.?
சிராஜுத்தீன் அம்மாபேட்டை
பதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅ்த் என்பது மார்க்க விசயங்களிலும் உலக விசயங்களிலும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு சரியான வழியை எடுத்துரைக்க வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.
திருமறைக் குர்ஆன், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல் ஆகிய இரண்டு மட்டும்தான் இஸ்லாம் என்பதை நம்பிக்கை கொண்ட யாரும் நம்முடைய ஜமாஅத்தில் உறுப்பினராக அங்கம் வகிக்கலாம்.
அது போன்று நம்முடைய ஜமாஅத் ஏகத்துவப் பிரச்சாரத்தை உயிர் மூச்சாகக் கொண்டு பிரச்சாரம் செய்கின்ற காரணத்தினால் இந்த ஜமாஅத்தில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் தவறு செய்தால் நம்முடைய ஜமாஅத்தின் கொள்கையை மக்களில் சிலர் தவறாக நினைத்து வழிகெட்ட கொள்கைகளின் பக்கம் சென்று விடக்கூடாது என்பதற்காக நிர்வாகிகளுக்கென்று பல விதிமுறைகளை உருவாக்கி அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கும் வகையில் விதிகளை உருவாக்கியுள்ளோம்.
ஜமாஅத்தின் விதிமுறைகளை மீறி தவறு செய்யும் நிர்வாகிகளி்ன் மீது அந்தத் தவறு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகின்றனர்.
அவர்களைப் பொறுப்பிலிருந்து தான் நாம் நீக்க முடியுமே தவிர அவர்களுடைய உள்ளங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அந்தத் தவறிலிருந்து விலகச் செய்வது நம்முடைய அதிகாரத்தில் உள்ளது கிடையாது.
இது போன்று தான் நிர்வாகிகளாக இல்லாத உறுப்பினர்களின் நிலையும்.
தவ்ஹீத் கொள்கைக்கு எதிராகச் சென்றாலோ அல்லது தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராகச் செயல்பட்டாலோ அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நாம் நீக்கம் செய்ய இயலும். அவருக்கும் ஜமாஅத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அறிவிக்க முடியும்.
ஆனால் அவருடைய உள்ளத்தில் மாற்றம் ஏற்படுத்துகின்ற அதிகாரம் நமக்குக் கிடையாது.
பொதுவாகவே மனிதன் என்பவன் தவறு செய்யக் கூடியவனாகத்தான் படைக்கப்பட்டுள்ளான். எந்த ஒரு மனிதனும் நான் தவறே செய்யாத பரிசுத்தவான் என்று வாதிட முடியாது. அப்படி வாதிட்டால் நிச்சயமாக அவன் இறைமறுப்பாளனாகத் தான் இருப்பான்.
அது போன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்களும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்.
ஒருவர் தவறு செய்யும் போது அது தவறு என்பதை சுட்டிக் காட்டுவதுதான் நம்முடைய கடமையே தவிர உள்ளங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது இறைவனுடைய அதிகாரத்தில் உள்ளதாகும்.
நம்முடைய கடமை மார்க்கத்தை எடுத்துரைப்பதுதான். உள்ளத்தில் மாற்றத்தில் ஏற்படுத்துவது இறைவனுக்குரிய அதிகாரமாகும்.
(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்.
அல் குர்ஆன் 28:56
அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே. அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர்.
(அல்குர்ஆன் 88 : 21, 22)
அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் நேர் வழி பெற்றனர். புறக்கணித்தால் எடுத்துச் சொல்வதே உமக்குக் கடமை. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.
(அல்குர்ஆன் 3 : 20)
எடுத்துச் சொல்வதே உமது கடமை. விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.
(அல்குர்ஆன் 13 : 40)
அவர்கள் புறக்கணித்தால் தெளி வாக எடுத்துச் சொல்வதே உமது கடமை.
(அல்குர்அன் 16 : 82)
எனவே தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் தவறான வழிகளில் சென்றால் அவற்றைப் பற்றிய உபதேசங்களைத்தான் நாம் செய்ய இயலும். உள்ளங்களில் மாற்றம் ஏற்படுத்தும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும்.
தீமையான காரியங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கைகளையும், போதனைகளையும் எழுத்துக்கள் மூலமாகவும் பேச்சுக்கள் மூலமாகவும் நம்முடைய ஜமாஅத் மக்களுக்கு மத்தியில் மிக வீரியமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
19.01.2012. 02:55
