அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் அறுத்

அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் அறுத்ததை உண்ணலாமா

கேள்வி: முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அவற்றை உண்ணலாமா? அது போன்று பெயரளவில் முஸ்லிம்களாக இருந்து கொண்டு அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள் அறுப்பதை உண்ணலாமா? இரண்டு பேரும் ஈமானில் குறை உள்ளவர்கள் தானே? விளக்கம் தேவை.

அப்துல் வதூத்

பதில் :

முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தாலும் அவற்றை உண்ணக் கூடாது. ஏனென்றால் பிராணியை அறுக்கும் போது அல்லாஹ்வின் பெயர் கூறுவது எவ்வாறு அவசியமோ அது போன்று அறுப்பவர் முஸ்லிமாக இருப்பதும் அவசியம்.

அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்பதன் பொருள் அதை மனதில் ஏற்றுக் கூற வேண்டும். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்பதை ஒருவர் நம்பாமல் அல்லாஹ்வின் பெயரைக் கூறினால் அவர் அல்லாஹ்வின் பெயர் கூறியவராக மாட்டார்.

ஒருவர் மனதில் அல்லாஹ்வை நம்புகிறாரா என்பதை மனிதர்களால் அறிய முடியாது. அதே சமயம் வெளிப்படையாக அவர் அல்லாஹ்வை நம்புவதாக உறுதி மொழி அளித்தால் அதற்கு முரணான செயல் அவரிடம் வெளிப்படாவிட்டால் அவர் சொல்வதை நாம் நம்ப வேண்டும்.

முஸ்லிமல்லாதவர் அறுக்கும் போது மட்டும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறார். ஆனால் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்று அவர் வெளிப்படையாக அறிவிக்காததால் அவர் வாயளவில் தான் கூறுகிறார் என்பது உறுதியாகிறது.

எனவே முஸ்லிமல்லாதவர் அல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்தாலும் அது அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்ததாக ஆகாது.

அதே நேரத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஒருவர் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்று உறுதி கூறியுள்ள தால் அவர் அல்லாஹ்வின் பெயர் கூறினால் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு கூறுகிறார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து துருவி ஆராய்ந்து கொண்டிருக்கத் தேவை இல்லை. அதே நேரம் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கும் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறார் என்பது தக்க ஆதாரத்துடன் நமக்குத் தெரிய வந்தால் அவர் தனது செயலின் மூலம் உள்ளத்தில் அல்லாஹ்வை ஏக இறைவனாக நம்பாமல் பல கடவுள்களில் பெரிய கடவுளாக அல்லாஹ்வை நம்பியுள்ளார் என்பது பொருள்.

இது போன்ற நிலையில் உள்ளவர்கள் அறுப்பது உறுதியாகத் தெரிந்தால் அது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர் அறுத்ததாகத் தான் ஆகும். அதை உண்ணக் கூடாது.

உலக விஷயத்தில் அவர் முஸ்லிம்கள் பட்டியலில் தான் சேர்க்கப்படுவார். வணக்கவழிபாடுகள் விஷயத்தில் இது போன்றவர்களை முஸ்லிம் பட்டியலில் சேர்க்கக் கூடாது. இது குறித்து அறிய இந்த லின்கை பார்க்கவும்

26.04.2010. 00:23

தாடியை ட்ரிம் செய்யலாமா

தாடியை ட்ரிம் செய்யலாமா
அபூபக்கர்
இந்தக் கேள்விக்கு விரிவான ஆய்வுக்கட்டுரை நமது இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது பார்க்கவும்

11.07.2010. 15:15

நடுவிரலில் மோதிரம் அணியலாமா

நடுவிரலில் மோதிரம் அணியலாமா

மோதிரம் நடுவிரலுக்கும் பக்கத்து விரலில் மட்டும் தான் அனிய வேண்டும் என்று ஹதீஸ் படித்து இருக்கிறேன். எல்லா விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்று சிலர் கூறுகின்றனர். எது சரி?

ஷேக் தாவூத், திட்டச்சேரி

பதில் :

நடுவிரலிலும் அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலை பாட்டைத் தான் நாம் முன்னர் கொண்டிருந்தோம். இவ்வாறு தான் நேரடி கேள்வி பதிலின் போதும் ஏகத்துவம் தீன் குலப்பெண்மணி இதழிலும் இவ்வாறே முன்னர் எழுதி இருந்தோம். ஆனால் அது குறித்த ஹதீஸை மறு ஆய்வு செய்த போது மேற்கண்ட விரல்களில் மோதிரம் அணிவது தவறல்ல என்ற முடிவுக்கே வர முடிகிறது. இது குறித்த விபரம் வருமாறு.
இதற்கு அடிப்படையாக முஸ்லிமில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.

 3911 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ عَنْ أَبِي بُرْدَةَ قَالَ قَالَ عَلِيٌّ نَهَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَتَخَتَّمَ فِي إِصْبَعِي هَذِهِ أَوْ هَذِهِ قَالَ فَأَوْمَأَ إِلَى الْوُسْطَى وَالَّتِي تَلِيهَا رواه مسلم

நடுவிரலையும் அதை அடுத்துள்ள விரலையும் சுட்டிக்காட்டி இந்த விரலிலோ அல்லது இந்த விரலிலோ மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தடை செய்தார்கள் என்று அலீ (ரலி) கூறியதாக ஆஸிம் கூறினார்.

 இந்த ஹதீஸில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை. இரண்டு விரல்களில் மோதிரம் அணியக் கூடாது என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. இரண்டில் ஏதோ ஒரு விரலில் அணியக் கூடாது. அது எந்த விரல் என்பது தெரியவில்லை என்றே கூறப்பட்டுள்ளது.

 முஸ்லிம் நூலில் இடம் பெற்ற மற்றொரு அறிவிப்பில் " نهاني - يعني النبي صلى الله عليه وسلم - أن أجعل خاتمي في هذه ، أو التي تليها - لم يدر عاصم في أي الثنتين இரண்டு எந்த விரல் என்பது ஆஸிமுக்குத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது

இதே செய்தி இப்னுமாஜாவில் வேறு விதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا عبد الله بن إدريس عن عاصم عن أبي بردة عن علي قال نهاني رسول الله صلى الله عليه وسلم أن أتختم في هذه وفي هذه يعني الخنصر والإبهام

இப்னுமாஜா

கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று இந்த அறிவிப்பில் கூறப்படுகிறது.

இரண்டையும் அலீ (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். இரண்டையும் அலீ (ரலி) வழியாக அபூபுர்தாவும் அவர் வழியாக ஆஸிமும் தான் அறிவிக்கிறார்கள்.

அதாவது ஒரே செய்தி நான்கு விரல்களில் மோதிரம் அணிவதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதியாக அறிவிக்கப்படுவதையே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சந்தேகத்துக்கு இடமான சொற்களைக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.

எனவே குறிப்பிட்ட விரலில் மோதிரம் அணியக் கூடாது என்பதை உறுதியாக ஆறிவிக்கும் ஹதீஸ் இல்லாததால் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்பதே சரியானதாகும்.

27.06.2010. 22:22

பள்ளிவாசல் கட்ட நிதி திரட்டுதல்

 கேள்வி : தற்போது நமது தவ்ஹீத் ஜமாஅத்தினர் பள்ளிவாசல்கள் கட்டுவதற்காக ஒவ்வொரு கிளையிலும் அட்வான்ஸ் என ஒரு தொகையைக் கொடுத்து விட்டு ,

மீதமாக ஒரு பெரிய தொகையை அதாவது செலுத்த வேண்டிய தொகைக்காக தங்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்கிக் கொள்கிறார்கள். மற்றவர்களிடம் சிரமப்பட்டு கோரிக்கை வைக்கிறார்கள் , இது சரியா ? இப்படிச் செய்யலாமா ?

முபாரக் , ஈரோடு

பதில் :

நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சனையில் நிர்பந்தத்திற்கு வேலை இல்லை. பேசிய தொகையைக் கொடுத்தால் இடத்தை தரப் போகிறார்கள். இல்லையென்றால் வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தரப்போகிறார்கள். இதில் நிர்பந்தம் எதுவும் இல்லை.

மக்களிடம் உதவி வேண்டும் பொறுப்பாளர்கள் சிரமப்பட்டு கோரிக்கை வைப்பதாகக் கூறினீர்கள். அல்லாஹ்வின் ஆலயத்தை எழுப்புவதற்காக வலியுறுத்தி உதவியைக் கேட்பது தவறல்ல. மாறாக நன்மையான விஷயமே. நல்ல விஷயத்துக்காக கோரிக்கை இருக்குமானால் அதில் தவறேதுமில்லை. இவ்வாறு உதவி தேடுபவர்கள் மக்களை நிர்பந்தப்படுத்துவதில்லை.

இப்பணிக்காகக் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவரவரது இஷ்டம். இதில் யாருடைய உரிமையும் பறிக்கப்படவில்லை. மார்க்கத்திற்கு மாற்றமான எந்த ஒரு அம்சமும் இதில் இல்லை. எனவே இதை நாம் தவறு என்று கூற முடியாது.

10.06.2010. 23:45

தற்கொலை செய்தவருக்கு பாவ மன்னிப்பு க

 

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா? அவருக்காக பாவ மன்னிப்பு தேடலாமா

எனது தகப்பனார் தற்கொலை செய்தல் நிரந்தர நரகத்திற்குரியது என தெரியாமல் தற்கொலை செய்து கொண்டார். தெரியாமல் செய்த தற்கொலைக்கு நரகம் உண்டா? அவருக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டா? அவருக்கு பாவமன்னிப்பு கேட்கலாமா?

பதில் :

ஒரு இறை நம்பிக்கையாளர் தற்கொலை செய்தால் அவருக்கு நிரந்தர நரகமா?

தெரியாமல் செய்த தற்கொலைக்கு மன்னிப்பு உண்டா?

நாம் அவருக்காக பாவமன்னிப்பு கேட்கலாமா?

ஆகிய மூன்று கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள்.

இவை ஒவ்வொன்றையும் நாம் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

முதலாவதாக, தற்கொலை செய்து கொண்டவருக்கு பவமன்னிப்பு கேட்கலாமா? என்ற கேள்வியை எடுத்துக் கொள்வோம்.

நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்

அல்குர்-ஆன் 4 : 93.

ஒரு உயிரை வரம்பு மீறி கொலை செய்வது எப்படி குற்றமோ, அதைப் போல ஒருவர் தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வதும் கொலை செய்வதில் அடங்கும். முஃமினான உயிரை வேண்டுமென்றே கொலை செய்பவருக்கு கூலி நரகம். அதில் அவர் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார் என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்று இந்தத் திருக்குர்ஆன் வசனத்தின் வாயிலாக விளங்கிக் கொள்ளலாம். மேலும், இதே எச்சரிக்கையை நபி (ஸல்) அவர்களும்  சொல்லிக் காட்டுகின்றார்கள்.


5778 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ قَالَ سَمِعْتُ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி (5778)

மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தற்கொலை செய்தவரைப் பற்றி கூறும் போது,

خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا

என்ற வாசகத்தை பயன் படுத்துகின்றார்கள். ”காலிதன்” என்றாலும் நிரந்தரமாக இருப்பார் என்றே அர்த்தம், ”முகல்லதன்” என்றாலும் அதே பொருளைத் தான் குறிக்கும். ”அபதா” என்ற வாசகமும் அதே பொருளைத் தான் குறிக்கும்.  ”காலிதன், முகல்லதன், அபதா” என்ற இந்தச் சொற்கள், தற்கொலை செய்து கொண்டவர் “என்றென்றும், என்றைக்குமே, நிரந்தரமாக அதில் இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் “நிரந்தரமாக நரகில் கிடப்பார்” என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் அழுத்தமாகப் பதிய வைக்கின்றார்கள்.

ஒருவர் என்றைக்குமே நிரந்தரமாக நரகத்தில் இருப்பார் என்று அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் கூறுகிறார்கள் என்றால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படாது என்பது தான் அதன் பொருள்.

ஒருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்று இறைவன் கூறிய பிறகு அவருக்கு பாவமன்னிப்பு கோரக்கூடிய “ஜனாஸா தொழுகையை அவருக்கு தொழ வைக்க முடியாது, அவருக்கு தொழவைக்கக் கூடாது” என்பதனால் தான் நபி (ஸல்) அவர்களும் தற்கொலை செய்து கொண்டவருக்கு “ஜனாஸா தொழுகை” தொழ வைக்கவில்லை.

தற்கொலை செய்தவர்களுக்கு ஜனாஸா தொழ வைக்க நபி (ஸல்) அவர்கள் மறுத்துள்ளார்கள். தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு பாவமன்னிப்பு கோரக் கூடாது என்பது தான் இதற்குக் காரணம்.

 1624حَدَّثَنَا عَوْنُ بْنُ سَلَّامٍ الْكُوفِيُّ أَخْبَرَنَا زُهَيْرٌ عَنْ سِمَاكٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ رواه مسلم

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழ வைக்கவில்லை.

முஸ்லிம் (1779)

மேலும், நிரந்தர நரகத்தை அல்லாஹ் கூலியாக வழங்குவான் என்று அறிந்த நிலையில் ஒருவர் துணிந்து தற்கொலை செய்வாரேயானால் அவர் நம்பிக்கையாளராக இருக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட செய்தியின் வாயிலாகத் தெளிவுபடுத்துகின்றார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில், தம்மை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்ட ஒருவரைப் பற்றி இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்த போது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்கார வைத்து விட்டன. அப்போது நபித்தோழர்களில் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து அவர் நரகவாசி' என்று சொன்னீர்களோ அவர் இறை வழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார் என்று கூறினார். அப்போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் நரகவாசிகளில் ஒருவர் தாம் என்றே கூறினார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் நபி (ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து சந்தேகப்படும் அளவுக்குப் போய் விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும் போது, அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தமது கையை அம்புக் கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்பை உருவி அதன் மூலம் தற்கொலை செய்து கொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து அல்லாஹ்வின் தூதரே! தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மையாக்கி விட்டான். இன்ன மனிதர் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார் (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராகி விட்டார்) என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலாலே! எழுந்து சென்று இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகின்றான்' என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

நூல் புஹாரி 6606

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாதுஎன்றும், இவர் நரகவாசி என்றும்  அறிவித்ததன்  மூலம் “தற்கொலை செய்து கொண்டவர் இறை நம்பிக்கையாளரே அல்ல என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் தொழ வைக்கவில்லை; நாம் தொழவைத்தால் தவறில்லை” என்று சிலர் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கீழ்க்கண்ட செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கடன் உள்ள நிலையில் இறந்து விட்ட ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுவார். அப்போது "தம் மீதுள்ள கடனை அடைக்க ஏதேனும் அவர் ஏற்பாடு செய்துள்ளாரா?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்பார்கள். அவர் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்து விட்டுச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டால், அவருக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிப்பார்கள். அவ்வாறில்லை எனில், (முஸ்லிம்களிடம்) "உங்கள் தோழருக்கு நீங்களே தொழுதுகொள்ளுங்கள்'' என்று கூறி விடுவார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்(து மதீனா அரசில் நிதி குவிந்)த போது, "இறை நம்பிக்கையாளர்களுக்கு, அவர்களின் உயிர்களை விட நானே நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். ஆகவே, யார் தம் மீது கடன் இருக்கும் நிலையில் (அதை அடைப்பதற்காக ஒன்றையும் விட்டுச் செல்லாமல்) இறந்து விடுகிறாரோ, அந்தக் கடனை அடைப்பது எனது பொறுப்பாகும். யார் இறக்கும் போது செல்வத்தை விட்டுச் சென்றுள்ளாரோ, அது அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும்'' என்று கூறுவார்கள். 

(ஆதாரம் : முஸ்லிம் 3309)

கடனாளியாக மரணித்த ஒருவருக்கு எப்படி நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தாமல், "உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள்'' என்று சொன்னார்களோ அதைப் போல, தற்கொலை செய்து கொண்டவருக்கும் நபியவர்கள் தொழுகை நடத்த மறுத்தார்களே தவிர, நாம் தொழவைப்பதற்கு நபியவர்கள் தடை போடவில்லை என்பது தான் அவர்களின் வாதம். ஆனால் இந்த வாதம் பல வகையில் தவறான வாதமாகும்.

நபிதான் முன் மாதிரி:

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது     

அல்குர்ஆன் 33: 21

நாம் ஒரு வணக்க வழிபாட்டைச் செய்வதாக இருந்தால் அதற்கு அல்லாஹ்வுடைய தூதர் தான் அழகிய முன்மாதிரி.

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

ஆதாரம் : புகாரி : 6608

கடன் வைத்த நிலையில் மரணித்த ஒருவருக்கு, "உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள்'' கூறி பிறர் தொழுகை நடத்திய முன்மாதிரியைப் போல, தற்கொலை செய்தவருக்கும், "உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிக் காட்டிய முன்மாதிரி இருக்க வேண்டும். அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்காவிட்டால், அவர்கள் தொழ வைக்க மறுத்தவருக்கு, நாம் தொழுகை நடத்துவது என்பது அதிகப்பிரசங்கித் தனமாக ஆகிவிடும்.

“என்னை பொறுத்த வரை நான் தொழுகை நடத்த மாட்டேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி “நஸாயீ” என்ற கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

أخبرنا إسحق بن منصور قال أنبأنا أبو الوليد قال حدثنا أبو خيثمة زهير قال حدثنا سماك عن ابن سمرة أن رجلا قتل نفسه بمشاقص فقال رسول الله صلى الله عليه وسلم أما أنا فلا أصلي عليه

என்னைப் பொருத்தவரை தொழுவிக்க மாட்டேன் என்ற சொல்லமைப்பு மற்றவர்களுக்கு இல்லை என்ற கருத்தைத் தரும் என்று சிலர் இதை ஆதாரமாகக் கொண்டு வாதிடுகின்றனர்.

பொதுவாக மனிதர்களின் பேச்சுக்களுக்கு இவர்கள் கூறுவது போன்ற பொருள் உண்டு என்பது உண்மை தான். ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வணக்க வழிபாடுகள் குறித்து இவ்வாறு கூறும் போது இப்படி பொருள் கொள்ள முடியாது.  அல்லாஹ்வின் தூதரைப் பொருத்து ஒன்றைச் செய்யக் கூடாது என்றால் மற்றவர்களும் செய்யக் கூடாது என்று தான் பொருள்.

என்னைப் பொருத்தவரை நான் பொய் சொல்ல மாட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் கூறினால் அவர்களை முன்மதிரியாகக் கொண்ட அனைவரும் பொய் சொல்லக் கூடாது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இதே வாசக அமைப்போடு, மற்றொரு செய்தியினை நபிகளார் கூறிக்காட்டியுள்ளார்கள்.

முஸ்லிம்களின் அனைத்துக் காரியங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தொழுகைக்கு குறிப்பாக முன்மாதிரியாக உள்ளனர்.

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு நீங்களும் தொழுங்கள் என்பது அவர்களின் கட்டளை.

இதில் இருந்து விதிவிலக்கு அளிப்பது என்றால் உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுவித்துக் கொள்ளுங்கள் என்று கூறியது போல் தெளிவாக அறிவித்திருப்பார்கள்.

மேலும் போரில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட ஹதீஸை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். நரகவாசி என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் முன் அறிவிப்புச் செய்த போது அவர் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அவர் நரகவாசி என்று நபித்தோழர்கள் புரிந்து கொண்டார்கள் என்பது தெரிகிறது. அதாவது தற்கொலை செய்தவர் நரகவாசி என்பது நபித்தோழர்கள் அனைவரும் அறிந்து வைத்திருந்த ஒரு சட்டமாக இருந்தது என்பதை இதில் இருந்து அறியலாம். அப்படி இருக்கும் போது நபித்தோழர்கள் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை தொழ வைத்திருப்பார்கள் என்று கூற முடியாது.

மேலும் நிரந்தர நரகம் என்று தீர்ப்பளிக்கப்பட்டவருக்கு ஜனாஸா தொழுகை தொழாமல் இருந்திருப்பார்கள் என்பது பொருத்தமாக உள்ளது. எனவே மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் “இறந்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது தடை செய்யப்பட்ட காரியங்களில் ஒன்று என்பதை தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்

தற்கொலை செய்து கொண்டு மரணித்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது மார்க்க அடிப்படையில் தடுக்கப்பட்ட ஒரு காரியம் என்பதனை மேற்கண்ட குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்கள் அடிப்படையில் அறிந்து கொண்டோம்.

தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்று கடுமையாக வலியுறுத்தப்பட்டைருப்பதும், நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஜனாஸா தொழுவிக்க மறுத்திருப்பதும் அவருக்காக நாம் இறைவனிடத்தில் பாவமன்னிப்பு கோரக் கூடாது என்பதை உள்ளடக்கியுள்ளது. ஒருவர் இறைவனால் மன்னிக்கப்படுவார் என்றால் அவர் நிரந்தரமாக நரகில் கிடக்க மாட்டார். நிரந்தரமாக நரகில் கிடப்பார் என்று அவருக்கு மன்னிப்பு இல்லை என்பது தான் அதன் கருத்தாகும்.

அல்லாஹ் யாருக்கு மன்னிப்பு இல்லை என்று தீர்மானம் செய்து விட்டானோ அவருக்காக மன்னிப்புக் கேட்பது அல்லாஹ்வுக்கு எதிரான நடவடிக்கையாகி விடும்.

நிரந்தர நரகத்திற்குரிய பாவங்கள்:

திருமறையில் இறைவன் சில குறிப்பிட்ட பாவங்களுக்கு நிரந்தர நரகம் என்று கூறியுள்ளான். அந்தப் பாவங்களைச் செய்த நிலையில் மரணித்தவருக்காக நாம் பாவமன்னிப்பு கோரக் கூடாது என்பதனையும் நாம் கூடுதலாக இந்த இடத்தில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நிரந்தர நரகத்திற்குரிய பாவங்களாக குர்ஆன் குறிப்பிடுபவை:

என்றென்றும் நரகில் கிடப்போர் பட்டியல்:

இறைனை நம்ப மறுத்தவர்கள் - 2:39, 2:161,162, 2:217, 2:257, 3:116, 4:169, 9:68, 33:65, 39:72, 40:76, 41:28, 59:16, 64:10, 98:6

ஒரு நன்மையும் செய்யாது தீமைகளை மட்டுமே செய்தவர்கள் - 2:81, 10:27, 16:29, 43:74

ஏக இறைவனை ஏற்று பிறகு மறுத்தவர்கள் - 3:88

அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகள் அனைத்தையும் மீறியவர்கள் - 4:14, 5:80, 72:23

சத்தியம் செய்வதைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர் - 58:16

இறை வசனங்களை நம்ப மறுத்துப் புறக்கணித்தவர்கள் - 7:36, 20:100, 23:103

இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள் - 6:128, 9:17, 25:68, 40:76, 98:6

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிடுவோர் - 9:63

இரட்டை வேடம் போடும் நயவஞ்சகர்கள் - 9:68

மறுமையை நம்பாதவர்கள் - 10:52, 13:5, 22:14

வட்டி வாங்கியவர்கள் - 2:275

கொலை செய்தவர்கள் - 4:9

மேற்கண்ட பட்டியலை நாம் ஆய்வு செய்தால் ஏக இறைவனை நம்ப மறுத்த இறை நிராகரிப்பாளர்கள் மற்றும் இறைவனுக்கு இணை கற்பித்த இணை வைப்பாளர்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், வட்டி வாங்கியோர் மற்றும் முஃமினான உயிரை வேண்டுமென்றே கொலை செய்தவர் ஆகிய இருசாரார் முஸ்லிம்களாக தங்களைச் சொல்லிக் கொண்டாலும் அவர்கள் இறை நம்பிக்கையாளர் அல்ல. அவருக்கு நிரந்தர நரகம் என்று கூறப்படுவதை அறியலாம்.

நிரந்தர நரகம் என்பதன் பொருள் என்ன?

யாருக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது என்று இறைவன் தனது முடிவை அறிவித்துவிட்டானோ அவருக்கு நீ மன்னிப்பு வழங்கு என்று நாம் இறைவனை நிர்பந்தப்படுத்துவது என்பது அதிகப்பிரசங்கித்தனமாக ஆகிவிடும். எனவே இந்த பாவத்திலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுடைய தண்டணைகளில் ஒன்றைக் குறைக்குமாறு இறைவன் முடிவெடுத்த ஒருவருடைய விஷயத்தில் அவருக்காகப் பரிந்து பேசுவதை நபி (ஸல்) அவர்கள் வனமையாகக் கண்டித்துள்ளார்கள். இதற்கு முன்பிருந்த சமுதாயங்கள் அழிக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக இதையும் நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்

(மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தார். அவர் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். அவர் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்? என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்? என்று கூறினர். (உஸாமா (ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அவர் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய் என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன் என்று சொன்னார்கள்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி

ஆதாரம் : புகாரி: 3475

அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய் என்று நபிகள் நாயகம் அவர்கள் கேட்டதிலிருந்து, உலக விஷயத்தில் தரப்படும் தண்டணைகளில் தளர்த்துமாறு கோருவதே கூடாது என்றால் மறுமையில் குற்றவாளிகளுக்காக நாம் கேட்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விஷயம் என்பதையும் கூடுதலாக நாம் அறியலாம்.

தற்கொலை செய்தால் நிரந்தர நரகம் என்பதை விளங்காமல் தற்கொலை செய்தவருக்கு பாவமன்னிப்பு கோரலாமா? என்ற கேள்வியை அடுத்ததாக எழுப்பியுள்ளீர்கள்.

எங்களுக்கு இதைப் பற்றி முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தால் நாங்கள் நல்லவர்களாக இருந்திருப்போம் என்ற வாதத்தைத் தான் குற்றவாளிகள் மறுமையில் வைப்பார்கள் என்று இறைவன் சுட்டிக் காட்டுகின்றான். எனவே தான் நாம் வேதங்களையும், தூதர்களையும் அனுப்பி வைத்ததாக இறைவன் கூறுகின்றான்.

எனவே அல்லாஹ்வுடைய வழிகாட்டுதலையும், தூதருடைய வழிகாட்டுதல்களையும் அரிந்து கொள்வது ஒவ்வொருவர் மீது கடமையாக உள்ளது.

மறுமையில், நரகவாசிகளை வேதனை செய்யும் போது அவர்களை நோக்கி பின்வருமாறு கேட்கப்படும்,

கோபத்தால் அது (நரகம்) வெடித்து விட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் ''எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?'' என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.

அல்குர்ஆன் 67:8

மேற்கண்ட கேள்விக்கு நரகவாசிகள் என்ன பதில் சொல்லுவார்கள் என்பதையும் வல்ல இறைவன் அதைத் தொடர்ந்து சொல்லிக் காட்டுகின்றான்.

 

நாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 67: 10

நாங்கள் தூதர்கள் கூறுவதைச் செவிமடுத்திருந்தாலோ, அல்லது விளங்கியிருந்தாலோ இதிலிருந்து தப்பித்திருப்போம் என்பது தான் அவர்களுடைய பதிலாக இருக்கும். அந்த இடத்தில் எனக்குத் தெரியாது, நான் தெரியாமல் செய்து விட்டேன் என்ற எந்த சாக்குப் போக்கையும் இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

அத்தோடு மட்டுமல்லாமல், விதியை நம்புவது என்பது ஈமானின் அம்சங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில், விதியை மறுத்தவராக இந்த தற்கொலை முடிவை ஒருவர் எடுப்பதும் இறைவனுடைய தீர்ப்பை மறுக்கக் கூடிய, இறைவனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கக்கூடிய ஒரு நிலையாகும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்கொலை செய்து கொண்டவர் “முஃமின்களுடைய பட்டியலில் வர மாட்டார்” என்பதை இந்த கேள்விக்குரிய ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டியுள்ளோம்.

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்படாவிட்டால் தான் தற்கொலை செய்ய மாட்டார்கள் என்பதை மக்களுக்கு எச்சரிப்பதற்காக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தொழுவிக்காமல் இருந்திருப்பார்கள் என்று சிலர் காரணம் கூறி தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாம் எனக் கூறுகின்றனர்.

அது வெறும் ஊகம் தான். உண்மை என்று வைத்துக் கொண்டாலும் நாம் ஜனாஸா தொழுகை நடத்தாமல் இருந்தால் தான் நபிகள் நாயகத்தின் நோக்கம் நிறைவேறும். தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்று முடிவு செய்தால் தற்கொலை செய்ய அஞ்சும் நிலை ஏற்படாது. எனவே இவர்கள் கூறும் நோக்கத்துக்காக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஜனாஸா தொழுகையை தவிர்த்திருந்தாலும் அதே காரணத்துக்காக நாமும் அவ்வாறு நடந்து கொள்வதே முறையாகும்.

தற்கொலை செய்தவருக்கு பாவமன்னிப்பு தேடலாம் என்பதற்கு கீழ்க்காணும் ஹதீசை சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

167 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَنَّ الطُّفَيْلَ بْنَ عَمْرٍو الدَّوْسِيَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي حِصْنٍ حَصِينٍ وَمَنْعَةٍ قَالَ حِصْنٌ كَانَ لِدَوْسٍ فِي الْجَاهِلِيَّةِ فَأَبَى ذَلِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلَّذِي ذَخَرَ اللَّهُ لِلْأَنْصَارِ فَلَمَّا هَاجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَدِينَةِ هَاجَرَ إِلَيْهِ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو وَهَاجَرَ مَعَهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ فَاجْتَوَوْا الْمَدِينَةَ فَمَرِضَ فَجَزِعَ فَأَخَذَ مَشَاقِصَ لَهُ فَقَطَعَ بِهَا بَرَاجِمَهُ فَشَخَبَتْ يَدَاهُ حَتَّى مَاتَ فَرَآهُ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو فِي مَنَامِهِ فَرَآهُ وَهَيْئَتُهُ حَسَنَةٌ وَرَآهُ مُغَطِّيًا يَدَيْهِ فَقَالَ لَهُ مَا صَنَعَ بِكَ رَبُّكَ فَقَالَ غَفَرَ لِي بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا لِي أَرَاكَ مُغَطِّيًا يَدَيْكَ قَالَ قِيلَ لِي لَنْ نُصْلِحَ مِنْكَ مَا أَفْسَدْتَ فَقَصَّهَا الطُّفَيْلُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ رواه مسلم

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தாருக்குக் கோட்டை ஒன்றிருந்தது. தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் ஹிஜ்ரத் செய்யும் போது எதிரிகளிடமிருந்து உங்களைத்) தற்காத்துக் கொள்ள உறுதியான கோட்டை கொத்தளம் தங்களுக்கு வேண்டுமா? (அத்தகைய கோட்டை தவ்ஸ் குலத்தாரின் வசிப்பிடத்தில் உள்ளது)'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதற்கு இணங்கவில்லை. (அந்த வாய்ப்பை மதீனாவாசிகளான) அன்சாரிகளுக்கென அல்லாஹ் வழங்கியிருந்ததே அதற்குக் காரணமாகும். நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) சென்ற போது நபி (ஸல்) அவர்களிடம் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்களும் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். துஃபைல் (ரலி) அவர்களுடன் அவர்களுடைய சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதரும் நாடு துறந்து சென்றார். (அவர்கள் மதீனாவிற்குச் சென்ற போது) மதீனாவின் தட்ப வெப்ப நிலை அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அந்த மனிதர் நோய்வாய்ப்பட்டு விட்டார். (நோயின் வேதனை பொறுக்க முடியாமல்) பதறிப் போன அந்த மனிதர் தம்முடைய பெரிய அம்புகளை எடுத்துத் தமது கை நாடியை அறுத்துக் கொண்டார். கைகளிலிருந்து இரத்தம் கொட்டியது. இறுதியில் அவர் இறந்து விட்டார். அவரைத் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் கனவில் கண்டார்கள்.  அவர் நல்ல நிலையில் தான் இருந்தார். ஆனால், அவருடைய இரு கைகளும் போர்த்தி மூடப்பட்டு இருப்பதைக் கண்டார்கள். அவரிடம், "உம்மிடம் உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான்?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "நான் நபி (ஸல்) அவர்களிடம் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்ததால் அல்லாஹ் எனக்கு மன்னிப்பு அளித்தான்'' என்று பதிலளித்தார். துஃபைல் (ரலி) அவர்கள், "ஏன் உம்மிரு கைகளும் போர்த்தி மூடப்பட்டிருக்கின்றன?'' என்று கேட்டார்கள். "நீ வீணாக்கிய உனது கையை நாம் சீராக்க மாட்டோம்'' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) என்னிடம் கூறப்பட்டது'' என்று அவர் சொன்னார்.

துஃபைல் (ரலி) அவர்கள் இக்கனவு பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! அவருடைய இரு கைகளுக்கும் மன்னிப்பு அளிப்பாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.

முஸ்லிம் (184)

இந்த ஹதீஸை நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுக்கு முரண்படாத வகையில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஹதீஸில் நோய்வாய்ப்பட்ட அந்த மனிதர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. வேதனை பொறுக்க முடியாமல் அவர் தனது கையைத் தான் வெட்டிக் கொண்டார். அதனால் பொதுவாக ஒருவர் சாக மாட்டார். ஆனால் அவரே எதிர்பார்க்காத வகையில் அவர் இறந்து விட்டார். இதனால் தான் அவருக்கு நிரந்தர நரகத்தை அல்லாஹ் கொடுக்காமல் கையை வெட்டிக் கொண்டதற்காகவே  "நீ வீணாக்கிய உனது கையை நாம் சீராக்க மாட்டோம்'' என்று பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

வேதனை பொறுக்க முடியாமல் ஒருவர் தன் தலையை சுவற்றில் முட்டுகிறார். இதனால் இவர் இற்ந்து விட்டால் இது தற்கொலையில் சேராது. ஏனெனில் தற்கொலை செய்வதற்குத் தகுந்த காரியத்தை அவர் செய்யவில்லை, தற்கொலை செய்வதும் அவரது எண்ணம் இல்லை. இது போல் தான் அந்த நபித்தோழர் நடந்திருக்க வேண்டும். கை மட்டும் சீராக்கப்படவில்லை என்ற செய்தியிலிருந்து இதை அறியலாம்.

தன்னை வேதனைப் படுத்திக் கொள்ளும் வகையில் உயிரை மாய்க்காத ஒரு காரியத்தை ஒருவர் செய்து அதனால் அவர் மரணித்து விட்டால் அது தற்கொலையாகாது என்பது தால் இதில் இருந்து தெரிய வரும் உண்மையாகும்.

10.06.2010. 23:19

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்கால

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா?

முஹம்மத் அப்துல் அஜீஸ்

சிறுநீர் கழிக்கும் போது முட்டுக்காலை மறைக்க வேண்டும் மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. அதை விட மறைப்பதற்குத் தகுதியான உறுப்பையே மறைத்துக் கொண்டு சிறுநீர் கழிக்க முடியாது.

மறைத்தல் என்பது இரு வகையில் உள்ளன. ஒன்று நம் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பது. மற்றொன்று மற்றவர்களின் கண்களில் படாமல் மறைப்பது. மற்றவர்களின் கண்களில் இருந்து மறைப்பதற்குத் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர். தனக்குத் தானே மறைப்பது குறித்து எதுவும் கூறவில்லை.

حدثنا عثمان بن أبي شيبة قال حدثنا جرير عن منصور عن أبي وائل عن حذيفة قال رأيتني أنا والنبي صلى الله عليه وسلم نتماشى فأتى سباطة قوم خلف حائط فقام كما يقوم أحدكم فبال فانتبذت منه فأشار إلي فجئته فقمت عند عقبه حتى فرغ

ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் நபி(ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு சுவருக்குப் பின்னாலிருந்த ஒரு குலத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து (சாதாரணமாக) உங்களில் ஒருவர் நிற்பது போன்று நின்று சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களைவிட்டு சற்று ஒதுங்கிச் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை (த் தம்மிடம் வருமாறு) சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் வந்து அவர்கள் தமது தேவையை நிறைவேற்றும் வரை அவர்களுக்குப் பின் பக்கம் நின்று கொண்டிருந்தேன்.

புஹாரி 225

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்றால் நிச்சயம் முட்டுக்காலை மறைத்திருக்க முடியாது. ஆனால் கால்களுக்கும் மேல் ஆடை தூக்கப்பட்டிருப்பதை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக ஹுதைபா (ரலி) அவர்களை அருகில் அழைத்து தம்மை மறைத்துக் கொள்ளச் சொல்லியுள்ளனர். ஒரு சுவரை நோக்கி சிறு நீர் கழித்தார்கள் என்று இன்னொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. முன் பக்கத்தில் சுவர் இருந்ததால் ஆடை தூக்கப்பட்டதை யாரும் பார்க்க முடியாது. ஆனால் பின்புறம் இருந்து யாராவது பார்க்கக் கூடாது என்பதற்காக மறைத்துக் கொள்ள்ச சொல்லியுள்ளனர்.

மேலும் தரைக்கு நெருங்குவ்தற்கு முன்னால் ஆடையை உயர்த்த மாட்டார்கள் என்று தாரமியில் ஹதீஸ் உள்ளது.  

حدثنا عمرو بن عون عن عبد السلام بن حرب عن الأعمش عن أنس أن النبي صلى الله عليه وسلم كان لا يرفع ثوبه حتى يدنو من الأرض قال أبو محمد هو أدب وهو أشبه من حديث المغيرة

664 தாரிமி

தரைக்கு நெருங்கிய உடன் ஆடையை உயர்த்துவார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. முட்டுக்காலை மறைக்கும் வகையில் உயர்த்துவார்கள் என்று கூறப்படவில்லை.

மேலும் சிறுநீர் கழித்தல் உடலுறவு கொள்ளுதல் ஆகியன ஆடையை விலக்கித்தான் செய்ய முடியும். இது குறித்து சிலர் தேவையில்லாமல் குழப்பிக் கொண்ட போது இதைக் கண்டித்து ஒரு வசனத்தை அல்லாஹ் அருளியுள்ளான்.

. கவனத்தில் கொள்க! அவனிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக தமது நெஞ்சுகளை அவர்கள் மூடிக் கொள்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்கள் தமது ஆடைகளால் மூடிக் கொண்டாலும் அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 11:5

4681 முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த (11:5ஆவது) வசனத்தை அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும் என ஓத நான் கேட்டேன். அவர்களிடம் அது குறித்து நான் (விளக்கம்) கேட்டதற்கு அவர்கள் மக்கள் சிலர், இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்று (ஆடையை நீக்கிடத் தம் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரியும்படி உட்காருவதையும், இவ்வாறே தம் மனைவிமார்களுடன் உறவு கொள்ளும் போது (தம் ஆடையை நீக்கிப் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரிந்து விடுவதையும் எண்ணி வெட்கப்பட்டு (அதை மறைக்க முயன்று தலை குனிந்து) கொள்வார்கள். அவர்களைக் குறித்தே இந்த வசனம் அருளப்பட்டது என்று சொன்னார்கள்.

4682 முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும் என்று இந்த (11:5ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். நான், அபுல் அப்பாஸே! இந்த வசனத்திலுள்ள தங்கள் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள்' என்பதன் பொருள் என்ன? என்று கேட்டேன். அவர்கள், சிலர் தம் மனைவியுடன் உடலுறவுகொள்ள விரும்பும் போது, அல்லது (இயற்கைக் கடனை நிறைவேற்ற) தனியே ஒதுங்கச் செல்லும் போது (தம் பிறவி உறுப்பு வெளியே தெரிந்து விடுகின்றதே என்று) வெட்கப்பட்டு (குனிந்து தம் நெஞ்சுகளால் அதை மூடி மறைக்க முற்பட்டு) வந்தார்கள். அப்போது இந்த இறை வசனம் அருளப்பட்டது என்று சொன்னார்கள்.

புஹாரி 4681, 4682

மறைக்க வேண்டிய உறுப்புக்களை மறைத்தல் என்பது மற்றவர்களின் பார்வையில் இருந்து மறைக்க வேண்டும் என்ற கருத்தில் தான் மார்க்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதில் இருந்து அறியலாம்.

15.08.2011. 17:56

வலி ரலி பட்டம் எப்படி கொடுக்கப்படுகி

வலி ரலி பட்டம் எப்படி கொடுக்கப்படுகிறது?

முஹம்மத் அப்துல் அஸீஸ்

பதில் :

பெயருக்குப் பின்னால் அடைப்புக்குறிக்குள் (ரலி) என்று எழுதும் வழக்கம் நமது சமுதாயத்தில் உள்ளது. ரலி என்பது பட்டமல்ல. இது பிரார்த்தனை வாக்கியத்தின் சுருக்கமாகும். ரளியல்லாஹு அன்ஹு (அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக) என்பது இதன் விரிவாக்கம்.

நபித்தோழர்களைக் குறிப்பிடும் போது அவர்களின் பெயருக்குப் பின்னால் ரலி என்று எழுதப்படுகின்றது. இவ்வாறு எழுதப்பட்டால் கூறப்படும் நபர் நபித்தோழர் என்று புரிந்து கொள்ளலாம்.

நபித்தோழர் அல்லாதவர்களைக் குறிப்பிடும் போது அவர்களின் பெயருக்குப் பின்னால் (ரஹ்) என்று எழுதப்படும். ரஹ்மதுல்லாஹி அலைஹி (அல்லாஹ்வின் அருள் அவருக்குஹ் கிடைக்கட்டும்) என்பது இதன் விரிவாக்கம். இவ்வாறு எழுதப்பட்டால் குறிப்பிடப்படும் நபர் நபித்தோழர் இல்லை என்பதை அறியலாம்.

எனவே ரலி என்பதும் ரஹ் என்பதும் ஒருவர் நபித்தோழரா? இல்லையா? என்பதை உணர்த்துவதற்காகவே எழுதப்படுகின்றது. நபித்தோழர்களுக்குப் பின்னால் இவ்வாறு குறிப்பிட வேண்டும் என்றோ நபித்தோழர்களுக்குப் பயன்படுத்தப்படும் இவ்வார்த்தையை மற்றவர்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்றோ மார்க்கம் கட்டளையிடவில்லை. இது நாமாக ஏற்படுத்திக் கொண்ட மொழி வழக்காககும்.

எனவே (ரலி) என்று குறிப்பிடாமல் நபித்தோழர்களின் பெயரைக் கூறினால் அது தவறல்ல. இதை நபித்தோழர்கள் அல்லாத மற்றவர்களுக்குப் பயன்படுத்தினால் அதிலும் தவறில்லை.

ஆனால் வலீ என்பது இதைப் போன்றதல்ல. இறைநேசன் என்பது இதன் பொருள். ஒருவருக்கு இறைநேசன் என்ற இந்தப் பட்டத்தைச் சூட்ட யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒருவரை இறைவன் நேசிக்கின்றானா? இல்லையா என்பதை இறைவன் மட்டுமே அறிந்தவன். மனிதர்கள் யாரும் இதைச் சுயமாக அறிந்துகொள்ள முடியாத போது ஒருவரை இறைநேசன் என்று கூறுவது அதிகபிரசங்கித் தனமாகும். இறைவனுடைய அதிகாரத்தில் தலையிடுவதாகும். அல்லாஹ்வும் அவனது தூதரும் இறை நேசர் என்று அறிவிப்பு செய்தவர்களைத் தவிர வேறு யாரைப்பறியும் இறை நேசர் எனக் கூறும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

சில போலி ஆண்மீகவாதிகள் தங்களுக்கு இந்தப் பட்டத்தை சூட்டிக்கொண்டு சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கீழ்த்தரமான காரியத்தைச் செய்ததன் மூலம் இவர்கள் கண்டிப்பாக வலீயாக இருக்கவே முடியாது என்பதை உலகுக்கு உணர்த்தி விட்டனர். சமுதாயம் இந்த பித்தலாட்டக்காரர்கள் நம்பி ஏமாந்துவிடக் கூடாது.

இறை நேசரைக் கண்டு பிடிக்க முடியுமா என்பதை அறிய இதில் உள்ள முதல் மூன்று பாகத்தை கேட்கவும்

http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/

ரலி பற்றி மேலும் விபரம் அறிய கீழ்க்கண்ட நூலில் 59 ஆம் கேள்வியை பார்க்கவும்

http://onlinepj.com/books/arthamulla_kelvikal/

 

14.08.2011. 16:43

தலை முடியை வெட்டிய பிறகு குளிப்பது அ

தலை முடியை வெட்டிய பிறகு குளிப்பது அவசியமா?

மஸ்வூது

பதில்

குளிப்பைக் கடமையாக்கின்ற காரியங்களை எவை என்பதை மார்க்கம் தெளிவுபடுத்தியுள்ளது. முடியை வெட்டினால் குளிப்பது கடமை என்று மார்க்கம் கூறவில்லை.

முடிவெட்டினால் தலையிலும் உடலிலும் வெட்டப்பட்ட முடிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். இவற்றை முழுவதுமாக உடலிலிருந்து அப்புறப்படுத்த குளிப்பது சிறந்த வழிமுறை. இந்த உலக நன்மைக்காக குளிப்பது அவரவரது விருப்பத்தைப் பொறுத்தது. மார்க்கம் இதைச் சட்டமாக்கவில்லை.

எனவே ஒருவர் முடி வெட்டி விட்டு குளிக்காவிட்டால் அவர் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு எந்தத் தடையுமில்லை. தாராளமாக ஈடுபடலாம்.

03.08.2011. 15:40

இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன

இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன?
ஃபாத்திமா
பதில்
இது பண்டைய அரபுகளிடம் இருந்த ஒரு மருத்துவ முறையாகும். எல்லா நோய்களுக்கும் கெட்ட இரத்தம் தான் காரணம் என்று அவர்கள் கருதி வந்தனர். எனவே உடலில் இருந்து சிறிதளவு இரத்தத்தை நாம் வெளியேற்றும் போது புதிதாக நல்ல இரத்தம் உடனே உற்பத்தியாகி விடும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று அந்த மக்கள் நம்பினார்கள்.

உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் இரத்தத்தை வெளியேற்றும் கலை அறிந்த வைத்தியர்கள் மூலம் இதைச் செய்வார்கள். மனிதர்களின் கழுத்தில் குறிப்பிட்ட இரண்டு நரம்புகள் உள்ளன. அதைச் சரியாகக் கண்டு பிடித்து அதில் சிறு குழாயை எடுத்துக் கொள்வார்கள். அதில் ஒரு புறம் ஊசித் துவாரம் போல் சிறிய ஓட்டை இருக்கும். மறு புறம் பெரிய துவாரம் இருக்கும். ஊசித் துவாரம் கொண்ட முனையை அந்த நரம்பில் செலுத்தி மறு முணையை வாயில் வைத்து உறிஞ்சி இரத்தத்தை வெளியேற்றுவார்கள். இவ்வாறு செய்த பின் உடலில் பல நோய்கள் நீங்குவதாக அவர்கள் நம்பினார்கள்.

இந்த வழக்கம் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காலத்திலும் இருந்ததால் அவர்களும் இது போன்ற ச்கிச்சையை தமக்காக செய்து கொண்டார்கள். ஆனால் இதற்கும் மார்க்கத்துக்கும் சம்மந்தம் இல்லை. இது வஹியின் அடிப்படையில் செய்த ஒன்றல்ல. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இறைத்தூதாராக ஆவதற்கு முன்பே இந்த வழக்கம் இருந்த்தால் இது இறைவன் புரத்தில் இருந்து வந்த வழிகாட்டுதல் அல்ல. மனிதர்கள் தமது அனுபவ அறிவைக் கொண்டு கண்டறிந்த மருத்துவம் தவிர வேறில்லை. இதை நாம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. அந்த முறையில் நன்மை இருப்பதாக நமக்குத் தெரிந்தால் அதைக் கடைபிடிக்கலாம். இல்லாவிட்டால் விட்டு விடலாம். அன்றைக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டால் அதில் சாம்பலைப் பூசி இரத்த ஓட்டத்தை நிறுத்துவார்கள். இவ்வாறே நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உஹதுப் போரில் வெட்டப்பட்ட போது செய்யப்பட்டது. இது அன்றைய மருத்துவ முறை என்ற அடிப்படையில் செய்யப்பட்டதே தவிர மார்க்க அடிப்படையில் செய்யப்பட்டதல்ல. அது போன்றது தான் இரத்த்ம் குத்தி எடுத்தல் என்பதும்

03.07.2011. 23:56

இஇசையை இஸ்லாம் தடுத்தது ஏன்

இசையை இஸ்லாம் தடுத்தது ஏன்

முஹம்மத் முஸ்தஃபா

பதில்

இறைவன் மனித குலத்துக்கு நன்மை தருகின்ற சட்ட திட்டங்களையே வழங்கியுள்ளான். மக்களுக்குத் தீங்கு தரக்கூடிய காரியங்களை இறைவன் தடை செய்துள்ளான்.

இஸ்லாம் இசையைத் தடை செய்ததும் இந்த அடிப்படையில் தான். இன்றைக்கு இசையால் மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இசை கேட்பவர்களின் மூளையில் ஒரு விதமான இரசாயன மாற்றம் நிகழ்வதாகவும் இதனால் போதையில் உள்ளவர்களைப் போன்று அவர்கள் மாறுவதாகவும் இது மனிதனின் உடல் நலத்துக்கும்      சிந்தனைத் திறனுக்கும் ஆபத்தானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  சில வாரங்களுக்கு முன்னால் உணர்வில் கூட இது பற்றி விளக்கப்பட்டது.

இந்தப் பாதிப்பு பலருக்கு ஏற்படுவதை நடைமுறையிலும் பார்க்க முடிகின்றது. கேட்பதற்கு காது கூசும் அளவுக்கு ஆபாச வாசகங்களும் அபத்தமான கருத்துக்களும் அடங்கிய பாடல்களை இசையுடன் சேர்த்து படிக்கும் போது மக்கள் ரசிக்கின்றனர்.

அதே நேரத்தில் இசையில்லாமல் ராகம் இல்லாமல் இதனைக் கூறினால் இதை வெறுக்கின்றனர். ஆக இசை மக்களைச் சிந்திக்க விடாமல் அவர்களின் மூளைக்கு திரையிடும் வேலையைச் செய்கின்றது.

மனிதன் தனக்கு வழங்கப்பட்ட அறிவினால் தான் மற்ற உயிரினங்களை விட உயர்வானவனாகக் கருதப்படுகின்றான். அந்த அறிவை மழுங்கச் செய்கின்ற இந்த இசையை நாம் புறக்கணிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரத்துக்கு

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/sinima_allatha_padal_ketkalama/

http://onlinepj.com/kelvi_pathil/ithara_sattangal/isai_harama/

http://onlinepj.com/aayvukal/isai_ayvu/

http://onlinepj.com/audio_uraikal/neradi_kelvi_pathil/isai/

27.06.2011. 01:38

தந்தை எல்லா சொத்தையும் அன்னியருக்கு

தந்தை எல்லா சொத்தையும் அன்னியருக்கு கொடுத்து விட்டால் வழக்கு போடலாமா?

தகப்பன்
தான் சம்பாரித்த சொத்துக்களை மற்றவர்களுக்குக் கொடுக்கலாமா ?பிள்ளைகள் இருந்தும் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் கொஞ்சம் கூட கொடுக்கவில்லை .எல்லா சொத்தும் மற்றவருக்கு கொடுத்து விட்டார். அந்த சொத்தில் பிள்ளைகள் சொத்து உரிமை கேட்டு வழக்கு போடலாமா

அலீம்கான்

பதில்

தந்தை தன் சொத்துக்களை பிள்ளைகளுக்கு வழங்காமல் அவை முழுவதையும் மற்றவர்களுக்கு வழங்குவதை மார்க்கம் தடை செய்துள்ளது. சொத்துக்களை வாரிசுதாரர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்றே மார்க்கம் கூறுகின்றது.

வாரிசுதாரர் அல்லாமல் மற்றவர்களுக்கு வழங்குவதாக இருந்தால் அதிகபட்சமாக மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு மட்டுமே வழங்க அனுமதியுள்ளது.

5354حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ عَنْ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي وَأَنَا مَرِيضٌ بِمَكَّةَ فَقُلْتُ لِي مَالٌ أُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ لَا قُلْتُ فَالشَّطْرِ قَالَ لَا قُلْتُ فَالثُّلُثِ قَالَ الثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ وَمَهْمَا أَنْفَقْتَ فَهُوَ لَكَ صَدَقَةٌ حَتَّى اللُّقْمَةَ تَرْفَعُهَا فِي فِي امْرَأَتِكَ وَلَعَلَّ اللَّهَ يَرْفَعُكَ يَنْتَفِعُ بِكَ نَاسٌ وَيُضَرُّ بِكَ آخَرُونََ رواه البخاري

நான் மக்காவில் நோய்வாய்ப்பட்டிருந்த போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் செல்வம் உள்ளது. எனது செல்வம் முழுவதையும் (தர்மத்திற்காக) நான் மரணசாசனம் செய்துவிடட்டுமா?'' என்று கேட்டேன். அவர்கள், "வேண்டாம்'' என்று பதிலளித்தார்கள். நான் "பாதியை (மரணசாசனம் செய்துவிடட்டுமா)?'' என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் "வேண்டாம்'' என்று சொன்னார்கள். நான், "(அப்படியென்றால்,) மூன்றிலொரு பங்கை (நான் மரணசாசனம் செய்யட்டுமா)?'' என்று கேட்டேன். அதற்கவர்கள் "மூன்றிலொரு பங்கா! மூன்றிலொரு பங்கு கூட அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட அவர்களைத் தன்னிறைவு கொண்டவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் (அவர்களுக்காக) எதைச் செலவு செய்தாலும் அது நீங்கள் செய்த தர்மமே. எந்த அளவிற்கென்றால், நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகின்ற ஒரு கவளம் உணவும் கூட (தர்மமாகவே உங்களுக்கு எழுதப்படும்). அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை அளிக்கக்கூடும். அப்போது மக்கள் சிலர் உங்களால் பயன் அடைந்திடவும், வேறு சிலர் உங்களால் இழப்புக்குள்ளாகவும் கூடும்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல் : புகாரி (5354)

எனவே ஒருவர் தன் பிள்ளைகளைப் புறக்கணித்துவிட்டு மற்றவர்களுக்கு சொத்துக்களை வழங்கினால் அவர் இறைவனிடம் குற்றவாளியாகி விடுவார்.

இதற்காக வழக்கு போட்டால் அதனால் உங்களுக்கு எந்தப்பயனும் கிடைக்காது. அவர் நான் மரணித்த பிறகு இன்னார் எடுத்துக் கொள்ளட்டும் என்று எழுதி இருந்தால் அது வசிய்யத் என்ற வகையில் சேரும். இது சம்மந்தமாக வழக்கு தொடுக்கலாம்.

ஆனால் உயிருடன் இருக்கும் போதே மற்றவருக்கு உடமையாக்கி விட்டால் அவர் மீது வழக்கு போட்டு சொத்தைப் பெற உங்களுக்கு சட்ட்த்தில் வழி இல்லை.

11.06.2011. 06:09

<< First < Previous [3 / 3] Next > Last >>



செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
95 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி