ஒரு ஊரில் திரட்டிய பித்ரா தர்மத்தை வேறு ஊரில் விநியோகம் செய்யலாமா?

ஒரு ஊரில் திரட்டிய பித்ரா தர்மத்தை வேறு ஊரில் விநியோகம் செய்யலாமா?

? ஃபித்ரா ஜகாத் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை எந்த ஊரில் திரட்டுகிறோமோ அந்த ஊரில் தான் விநியோகிக்க வேண்டும் எனவும், தனித் தனியாகத் தான் அதை வழங்க வேண்டுமே தவிர கூட்டாகத் திரட்டி வழங்கக் கூடாது எனவும், நோன்புப் பெருநாள் அன்று காலையில் தான் அதை வழங்க வேண்டும்; முன் கூட்டியே வழங்கக் கூடாது என்றும் இங்குள்ள அறிஞர்கள் சிலர் வாதிடுகின்றனர். இவர்களின் வாதம் சரியா? ஃபித்ரா குறித்த முழு விபரத்தையும் கூற முடியுமா?
- அப்துல் காதிர், அல்ஜுபைல்

! ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.
ஒரு ஸாவு என்பது இரு கைகள் கொள்ளும் அளவு போல் நான்கு மடங்காகும். நிறுத்தல் அளவையில் சுமார் இரண்டரைக் கிலோ அரிசியாகும். அல்லது அதற்கான கிரயமாகும்.
நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா  எனப்படுகிறது.

ஃபித்ராவின் நோக்கம்:
இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அபூதாவூத் 137, இப்னுமாஜா 1817

நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.

கொடுக்கும் நேரம்:

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503, 1509

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.
பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் பொருள் கொள்ளலாம்.
பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, "பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்'' என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.

ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்'' என்று நான் கூறினேன். அதற்கு அவன் "எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது'' எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, "நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?'' என்று கேட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்'' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்'' என்று கூறினார்கள். நான் அவனுக்காக்க் காத்திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து "உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகிறேன்'' என்று கூறினேன். "எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்'' என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, "உன் கைதி என்ன ஆனான்?'' என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். "அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்.... என்ற ஹதீஸ் புகாரியில் வக்காலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாக புகாரி 3275, 5010
ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.

(இங்கே ஷைத்தான் என்பது திருட்டுத் தொழில் செய்யும் கெட்ட மனிதனைக் குறிக்கிறது.  திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் கெட்ட மனிதர்களை ஷைத்தான் என்று சொல்லும் வழக்கம் உள்ளது )

ஜகாத் வேறு ஃபித்ரா வேறு:

"இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை'' என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.

ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும் நிதியாகும். ஆனால் 'ரமளான் ஜகாத்' என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.
இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

"ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத்தினார்கள்'' என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.
எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.

எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது.
திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.

ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.

நபித் தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.

எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது.

ஒரு ஊரில் திரட்டி வேறு ஊரில் கொடுத்தல்:
ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.

ஜகாத்தை அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்களில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூறி முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யமன் பகுதிக்கு அனுப்பினார்கள்.
(புகாரி 1395, 1496, 4347)

"அவர்களில் செல்வந்தர்களிடம் திரட்டி அவர்களில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் எந்தப் பகுதியில் திரட்டப்பட்டதோ அங்கு தான் விநியோகிக்க வேண்டும் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
இது நோன்புப் பெருநாள் தர்மத்தைப் பற்றிய ஹதீஸ் அல்ல. ஜகாத் பற்றிய ஹதீஸாகும் என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும்.

அவர்களில் ஏழைகள், அவர்களில் செல்வந்தர்கள் என்பது அந்த ஊரைச் சேர்ந்த ஏழைகள், அந்த ஊரைச் சேர்ந்த செல்வந்தர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதா?
முஸ்லிம்களில் உள்ள செல்வந்தர்கள், முஸ்லிம்களில் உள்ள ஏழைகள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா? இரண்டுக்கும் இடம் தரக்கூடிய வகையில் இது அமைந்துள்ளது.

இரண்டாவது கருத்தில் தான் இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உறுதி செய்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பனூசுலைம் கோத்திரத்தினரிடம் ஜகாத்தைத் திரட்ட ஒருவரை நியமனம் செய்தார்கள். அவர் வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள். "இது உங்களுக்கு உரியது; இது எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது'' என்று அவர் கூறினார்...
(புகாரி 6979)

பனூ சுலைம் கூட்டத்தார் மதீனாவைச் சேர்ந்தவர்கள் அல்லர். வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் வசூலித்த ஜகாத்தை அந்த நபித்தோழர் நபிகள் நாயகத்திடம் மதீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு இடத்தில் வசூலித்து இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
எனவே, ஜகாத்தாக இருந்தாலும் ஃபித்ராவாக இருந்தாலும் ஒரு இடத்தில் திரட்டி இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம்.

மேலும் ஏழைகளுக்கு உணவாகப் பயன்படுவதற்காகவே ஃபித்ரா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய காரணமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
வசதிபடைத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியில் திரட்டி ஏழைகள் அதிகம் வாழும் பகுதியில் விநியோகம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. பொருள் வசதி படைத்த நாடுகளில் வசிப்போர் ஏழைகள் வசிக்கும் பகுதிக்கு அனுப்பினால் தான் ஃபித்ராவின் இரண்டு நன்மைகளையும் பெற முடியும்.

ஃபித்ராவைத் திரட்டி வழங்கும் பணியில் பல இயக்கத்தினர் செயல்பட்டு வருகின்றனர். ஃபித்ரா என்பது மார்க்கக் கடமையாக உள்ளதால் எந்த இயக்கம் ஃபித்ராவைத் திரட்டி ஃபித்ராவுக்குத் தகுதியானவர்களுக்கு முழுமையாகவும், முறையாகவும் விநியோகிக்கிறதோ அந்த இயக்கத்தில் தான் கொடுக்க வேண்டும்.

எந்தெந்தப் பகுதியில் எவ்வளவு திரட்டப்பட்டது என்ற முழு விபரத்தையும், எந்தெந்த ஊருக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்ற விபரத்தையும் வெளியிடாமல் எங்களிடம் கணக்கு உள்ளது வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுவோரிடமும், விபரம் இல்லாமல் 20 லட்சம் வந்தது 1000 பேருக்குக் கொடுத்தோம் என்று ஏமாற்றுவோரிடமும், எந்தக் கணக்கையும் யாரிடமும் தெரிவிக்கத் தேவையில்லை என்று நடந்து கொள்வோரிடமும் ஃபித்ராவைக் கொடுத்தால் ஃபித்ரா கொடுத்த நன்மை கிடைக்காது. அக்கடமை நிறைவேறாது. தெரிந்து கொண்டே இவ்வாறு செய்வது இக்கடமையை அலட்சியம் செய்ததாக ஆகிவிடும். TNTJ-யினரைப் பொருத்தவரை வரவும், செலவும் முழுமையாக வெளியிடப்படும் என்று உறுதி கூறுகிறோம்.

July 2, 2015, 3:19 AM

உயிருள்ள பொருட்களை வரையக்கூடாது எனும் பொழுது மரத்தை வரையலாமா?

? ஜூன் இதழ் கேள்வி பதில் பகுதியில் உயிருள்ள உருவங்களைத் தவிர உயிரற்ற பொருட்களை வரையலாம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் இதற்கு ஆதாரமாக நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸில் மரம் மற்றும் உயிரற்றவைகளை வரையலாம் என்று கூறப்பட்டுள்ளது. மரம் வரையலாம் எனும் போது மரமும் உயிருள்ளது தானே! மரம் வரையலாம் என்பது விடுபட்டு விட்டதா? அல்லது தாங்கள் குறிப்பிட்டிருப்பது தான் சரியா? விளக்கவும்.

அபூநஸீரா, துபை

மரம் வரையலாம் என்று அந்த ஹதீஸிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதால் மரம் வரைவதற்குத் தடையில்லை. நாம் இதைத் தனியாகக் குறிப்பிடாததற்குக் காரணம், அந்தக் கேள்வியில் கட்டடங்கள், வரலாற்றுச் சின்னங்கள் போன்றவற்றை வரைவது தொடர்பாகத் தான் கேட்கப்பட்டிருந்தது. எனவே உயிரற்ற பொருட்களை வரையலாம் என்று பொதுவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

மரம் வரையலாம் என்று அந்த ஹதீஸில் கூறப்படுவது நபி (ஸல்) அவர்களின் கருத்தாகக் கூறப்படவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்தாகவே கூறப்பட்டுள்ளது. எனவே நபி (ஸல்) அவர்கள் பொதுவாக உருவங்களை வரைவதற்குத் தடை செய்திருக்கும் போது மரமும் ஓர் உயிரினம் தானே! அதன் உருவத்தையும் வரைவது தடை செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழலாம்.

மரத்திற்கு உயிர் உள்ளது என்றாலும் ஹதீஸ்களில் உருவங்கள் என்று கூறப்படுவது மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களைத் தான் குறிப்பிடுகின்றன.

நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் வந்து அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உள்ளே வருமாறு கூறினார்கள். உங்களது வீட்டில் உருவங்கள் பொறிக்கப்பட்ட திரைச் சீலை இருக்கும் போது நான் எப்படி உள்ளே வர முடியும்? என்று ஜிப்ரீல் கேட்டார்கள். அதன் தலை துண்டிக்கப்பட வேண்டும் அல்லது மிதிபடக் கூடிய விரிப்பாக ஆக்கப்பட வேண்டும். ஏனென்றால் உருவங்கள் உள்ள வீட்டில் நாங்கள் நுழைய மாட்டோம் என்று ஜிப்ரீல் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 

நூல்: நஸயீ 5270

இந்த ஹதீஸில் உருவத்தின் தலை துண்டிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுவதிலிருந்து உருவம் என்பது தாங்கள் குறிப்பிடும் தாவரவியல், விலங்கியல் என்ற இரண்டையும் சேர்த்து பயன்படுத்தப்படவில்லை என்பதை அறியலாம். இதே கருத்தில் திர்மிதீயில் 2730வது ஹதீசும் இடம் பெற்றுள்ளது. அதில் உருவத்தின் தலை துண்டிக்கப்பட்டு அது மரத்தின் தோற்றத்தில் ஆக்கப்பட வேண்டும் என்று ஜிப்ரீல் கூறியதாக இடம் பெற்றுள்ளது. எனவே மரம் போன்றவை உயிருள்ளவையாக இருந்தாலும் அவற்றை வரைவதற்குத் தடையில்லை என்பதை அறியலாம்.

January 14, 2015, 8:07 AM

பண்டிகை காலங்களில் பூஜை செய்யாத உணவை மாற்று மத சகோதரர்கள் கொடுத்தால் அதை சாப்பிடலாமா?

? தீபாவளிக்கு பூஜை செய்த உணவுகளை உண்ணக் கூடாது. ஆனால் மாற்று மதத்தவர்கள், நாங்கள் செய்யும் அனைத்துப் பொருட்களையும் படைக்கவில்லை என்றும் செய்கின்ற பொருட்களிலிருந்து கொஞ்சம் எடுத்து தனியாகத் தான் படைப்போம் என்றும் கூறுகின்றனர். சாமிக்குப் படைக்காத பொருட்களை சாப்பிட வேண்டியது தானே என்றும் கேட்கின்றனர். இதற்கு பதில் என்ன?

எம். சாதிக், மயிலாடுதுறை

சாமிக்குப் படைக்கப்பட்ட பொருட்களை சாப்பிடுவதற்குத் தான் தடை உள்ளது. படைக்கப்படாத பொருட்களை சாப்பிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. மாற்று மதத்தினர் எல்லோருமே சாமிக்குப் படைப்பதற்காக உணவுகளைத் தயாரிப்பது கிடையாது. அந்த நாளில் சந்தோஷமாக இருப்பதற்காக பலகாரங்கள் தயாரித்து அதை நண்பர்களுக்கு வழங்குவார்கள். இந்த அடிப்படையில் இருந்தால் அதை சாப்பிடுவதில் தவறில்லை.

குறிப்பு : 2004 ஆகஸ்ட் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 14, 2015, 8:04 AM

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனை பார்த்தார்களா?

? பார்வைகள் இறைவனை அடையாது என்று குர்ஆன் வசனம் உள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்ற போது 7 வானத்திற்கு அப்பால் ஜிப்ரீல் செல்ல முடியாமல் 8வது வானத்திற்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று இறைவனைப் பார்த்ததாக எங்கள் பள்ளியில் ஒருவர் பிரச்சாரம் செய்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? விளக்கம் தரவும்.

எம். திவான் மைதீன், பெரியகுளம்

அல்லாஹ்வை இந்த உலகத்தில் யாரும் பார்க்க முடியாது. அல்லாஹ்வை எந்த மனிதனோ, அல்லாஹ்வின் தூதர்களோ பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. மறுமையில் தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும்.

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன் 6:103)

முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்து விட்டான். எனினும் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களுடைய அசல் உருவிலும், அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைத்தபடி கண்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 

நூல்: புகாரி 3234

மஸ்ரூக் பின் அஜ்தஉ அறிவிப்பதாவது:

முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைக் கண்டார்கள் என்று உங்களிடம் யார் அறிவிக்கின்றாரோ அவர் பொய் சொல்லி விட்டார். இறைவனோ "கண்கள் அவனைப் பார்க்காது' என்று கூறுகின்றான் (அல்குர்ஆன் 6:103). மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று யார் உங்களிடம் அறிவிக்கின்றாரோ அவரும் பொய் சொல்லி விட்டார். இறைவனோ, "அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறிய மாட்டார்' என்று கூறுகின்றான் (அல்குர்ஆன் 27:65) என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

(நூல்: புகாரி 7380)

புகாரியில் 4855வது ஹதீஸில் ஆயிஷா (ரலி) அவர்கள், வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன் என்ற திருக்குர்ஆனின் 42:51 வசனத்தையும் தமது கூற்றுக்குச் சான்றாகக் காட்டுகின்றார்கள்.

"நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?'' எனக் கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம் 261)

திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் ஆலிம்கள் பலர், நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிஃராஜின் போது பார்த்ததாக கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஆதாரமாகக் கீழ்க்கண்ட வசனத்தை முன் வைக்கின்றனர்.

ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்.

(அல்குர்ஆன் 53:13)

இந்த வசனத்தில் அவரைக் கண்டார் என்பது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டதைப் பற்றித் தான் குறிக்கின்றது என்பது இவர்களது வாதம். இந்த வசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள், தாம் கண்டது ஜிப்ரீல் (அலை) அவர்களைத் தான் என்று விளக்கமளித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டதில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய போது, 53:13 வசனத்தை ஆதாரமாகக் காட்டி, அவரை மற்றொரு முறையும் கண்டார் என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதே என்று இந்த ஹதீஸை அறிவிக்கும் மஸ்ரூக் கேட்கும் போது ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்.

இந்தச் சமுதாயத்தில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான் தான். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அது ஜிப்ரீலைக் குறிக்கின்றது'' என்று பதிலளித்தார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

எனவே நபி (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது இறைவனைக் கண்டார்கள் என்பது பொய் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பு : 2004 ஆகஸ்ட் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 14, 2015, 7:58 AM

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை முபாஹலா செய்வதற்கு அழைக்கலாமா?

? ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை முபாஹலா செய்வதற்கு அழைக்கலாமா?

இ. அஷ்பாக் அஹ்மது, பனங்காட்டூர்.

இரு தரப்பினருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு முரண்பாடான இரண்டு கருத்துக்களைக் கூறுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இருவருமே தாங்கள் கூறுவது தான் உண்மை என்று வாதிக்கின்றார்கள். இந்நிலையில் அவர்கள் தங்கள் கூற்றுக்கு உரிய ஆதாரத்துடன் நேரடியாக விவாதிப்பதன் மூலம் எது உண்மை என்பதை நிரூபிக்கலாம்.

இதற்கு வழியில்லாத பட்சத்தில் இரு தரப்பினரும் தங்கள் குடும்பத்துடன் ஒரு சபையில் வந்து, தங்கள் கருத்தைக் கூறி, பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு முபாஹலா என்று பெயர்.

உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டா வாதம் செய்தால் "வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்'' எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 3:61)

இந்த வசனத்தின் அடிப்படையில் முபாஹலா செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. எனினும் தற்போது அர்த்தமற்ற சில வாதங்களை முன் வைத்து முபாஹலா செய்வது கூடாது என்று சிலர் ஃபத்வா கொடுத்து வருவதால் இது குறித்து நாம் விரிவாக விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

முபாஹலா செய்வதற்கு அனுமதி உள்ளது, ஆனால் முஸ்லிமல்லாதவர்களுடன் மட்டும் தான் செய்ய வேண்டும்; முஸ்லிம்களுக்கு மத்தியில் முபாஹலா செய்யக் கூடாது என்று இவர்கள் கூறுகின்றனர். மேலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் முபாஹலா செய்வது குர்ஆன், ஹதீசுக்கு முரணானது என்றும் கூறி வருகின்றனர்.

ஒரு விஷயம் குர்ஆன், ஹதீசுக்கு முரணானது என்று ஒருவர் கூறினால் அதற்கு நேரடியான தடையை குர்ஆன், ஹதீஸிலிருந்து எடுத்துக் காட்ட வேண்டும். அவ்வாறு எடுத்துக் காட்டவில்லை என்றால் அல்லாஹ்வின் பெயராலும், நபி (ஸல்) அவர்களின் பெயராலும் இட்டுக்கட்டி கூறுகின்றார் என்று தான் பொருள்.

முஸ்லிம்களுக்கிடையே முபாஹலா செய்யக் கூடாது; முஸ்லிமல்லாதவர்களிடம் மட்டும் தான் முபாஹலா செய்ய வேண்டும் என்று இந்த வசனத்திலோ, அல்லது வேறு வசனங்களிலோ, அல்லது ஹதீஸ்களிலோ கூறப்படவேயில்லை.

இந்த வசனத்தில் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் என்ற பிரச்சனையே கூறப்படவில்லை. உண்மையா? பொய்யா? என்பதை முடிவு செய்வதற்குத் தான் முபாஹலாவுக்கு அழைக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான் என்பதை இந்த வசனத்தை மேலோட்டமாகச் சிந்தித்தால் கூட விளங்கலாம்.

இந்த வசனத்தில் "காஃபிர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்'' என்று கூறப்பட்டிருந்தால் இவர்களுடைய வாதத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு கூறப்படாமல் "பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்'' என்று கூறப்படுவதிலிருந்து உண்மை, பொய்யைத் தீர்மானிப்பதற்குத் தான் முபாஹலா செய்யும் வழிமுறையை அல்லாஹ் கற்றுத் தருகின்றான் என்பதை அறிய முடியும். நான்கு மாதம் பத்து நாட்கள் என்ற தலாக் குறித்த வசனம் அருளப்பட்ட பிறகு தான் தலாக் அத்தியாயம் அருளப்பட்டது என்று யார் விரும்பினாலும் அவரிடம் முபாஹலா செய்யத் தயாராக இருக்கிறேன் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ஊத்,

நூல்: அபூதாவூத் 1963

இதே கருத்தில் நஸயீயில் 3464 ஹதீசும் இடம் பெற்றுள்ளது.

நபித்தோழர்களுக்கு மத்தியில் தலாக் வசனம் குறித்த சர்ச்சை ஏற்பட்ட போது அது குறித்து முபாஹலா செய்யத் தயார் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறுகின்றார்கள். இதுபோல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியுள்ளதை நாம் ஹதீஸ் நூற்களில் பார்க்க முடிகின்றது.

இந்தச் சமுதாயத்திற்கு ளிஹார் இல்லை என்று (நிரூபிப்பதற்காக) விரும்பியவரிடம் முபாஹலா செய்ய நான் தயாராக இருக்கின்றேன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்: ஸுனன் பைஹகீ 7/383, தாரகுத்னீ 3/318

நானும் வாரிசுரிமைச் சட்டத்தில் எனக்கு மாறுபடக் கூடிய இவர்களும் ஒன்றிணைந்து, நம்முடைய கைகளை கஅபாவின் ஒரு மூலையின் மீது வைத்து பிறகு முபாஹலா செய்து, அல்லாஹ்வின் சாபத்தைப் பொய்யர்கள் மீது ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றேன் என்று இப்னுஅப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக் 10/255

முஸ்லிம்களுக்கு மத்தியில் முபாஹலா செய்யலாம் என்பதால் தான் நபித்தோழர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள். எனவே முஸ்லிமல்லாதவர்களுடன் மட்டுமே முபாஹலா செய்ய வேண்டும் என்று கூறுவது தவறான வாதமாகும்.

முபாஹலா தொடர்பாக மேலே குறிப்பிட்டுள்ள வசனத்திற்கு முந்தைய வசனங்களில் கிறித்தவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான். எனவே இந்த வசனம் கிறித்தவர்கள் தொடர்பாக இறங்கிய வசனம் என்பதால் கிறித்தவர்களுடன் மட்டும் தான் முபாஹலா செய்ய வேண்டும் என்ற ஒரு விநோதமான வாதத்தை முன் வைக்கின்றனர்.

குர்ஆனில் சொல்லப்படும் கட்டளைகள் அனைத்தும் எல்லோருக்கும் பொதுவானது தான். வேதம் கொடுக்கப்பட்டோருக்கு தடை செய்யப்பட்டவை முஸ்லிம்களுக்கு அனுமதி என்றால், அல்லது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டு நமக்குத் தடை என்றால் அது குறித்து குர்ஆனிலோ, ஹதீஸிலோ விளக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பிரத்தியேகக் கட்டளை இல்லாத வரை அது அனைவருக்கும் பொதுவானது தான். இந்த அடிப்படையைக் கூட விளங்காமல் இது போன்ற அர்த்தமற்ற வாதங்களை முன் வைக்கின்றனர்.

யூத, கிறித்தவர்களின் செயல்பாடுகளைக் கண்டித்து நூற்றுக்கணக்கான வசனங்கள் குர்ஆனில் உள்ளன. அவையெல்லாம் யூத கிறித்தவர்களுக்கு மட்டும் தான். முஸ்லிம்களுக்கு இது பொருந்தாது என்று கூற முடியுமா?

எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்காதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!

(அல்குர்ஆன் 2:41)

இந்த வசனம் யூதர்களைப் பற்றியே குறிப்பிடுகின்றது. அதனால் நாம் குர்ஆனுடைய வசனங்களை அற்ப ஆதாயத்திற்கு விற்கலாம் என்று கூற முடியுமா?

வேதமுடையோரே! நீங்கள் விளங்கிக் கொண்டே ஏன் அல்லாஹ்வின் வசனங்களை மறுக்கிறீர்கள்?

(அல்குர்ஆன் 3:70)

வேதமுடையோரே! உண்மையை ஏன் பொய்யுடன் கலக்கிறீர்கள்? அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?

(அல்குர்ஆன்3:71)

வேதமுடையோரே! நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ்வின் பாதையை விட்டும் ஏன் தடுக்கின்றீர்கள்? தெரிந்து கொண்டே அதைக் கோணலா(ன மார்க்கமா)கச் சித்தரிக்கின்றீர்கள்.

(அல்குர்ஆன் 4:171)

இந்த வசனங்கள் அனைத்திலும் யூத, கிறித்தவர்களை அழைத்தே அல்லாஹ் கூறுகின்றான். எனவே அல்லாஹ்வின் வசனங்களை மறுத்தல், உண்மையை மறைத்தல், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தல் போன்ற காரியங்களை முஸ்லிம்கள் செய்தால் தப்பில்லை என்று கூறுவது எந்த அளவுக்கு மடத்தனமோ அது போலத் தான் இந்த வாதம் அமைந்துள்ளது.

லூத்தையும் (தூதராக அனுப்பினோம்). "உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக்கேடான காரியத்தையா செய்கிறீர்கள்?'' என்று தமது சமுதாயத்திடம் கேட்டார். "நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்'' (என்றும் கூறினார்.)

(அல்குர்ஆன் 7:80, 81)

லூத்துடைய சமுதாயத்திற்கு ஓரினச் சேர்க்கையைத் தடை செய்ததாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இதே கருத்தை 27:55 மற்றும் 29:29 ஆகிய வசனங்களிலும் குறிப்பிடுகின்றான். அந்த வசனங்களிலும் லூத்துடைய சமுதாயத்தைப் பற்றியே கூறப்படுகின்றது. எனவே ஓரினச் சேர்க்கை லூத்துடைய சமுதாயத்திற்கு மட்டும் தான் தடை, நமக்கு அனுமதிக்கப் பட்டது தான் என்று யாரேனும் வாதிடுவார்களா?

சமாதி வழிபாடு குறித்த ஹதீஸ்களை எடுத்துக் கொண்டால் யூத, கிறித்தவர்கள் குறித்துத் தான் கூறப்படுகின்றது.

யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்கள் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டனர் என்று நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 1330

இந்த ஹதீஸ் யூத, கிறித்தவர்களைக் குறித்துத் தான் கூறுகின்றது. எனவே நாம் நபி (ஸல்) அவர்களின் கப்ரை வழிபடலாம் என்று வாதிட முடியுமா?

இவ்வளவு ஏன்? இந்த வாதத்தின் அடிப்படையில் பார்த்தால் ஒட்டுமொத்த குர்ஆனில் எதையுமே நாம் பின்பற்ற முடியாது. ஏனென்றால் எல்லா வசனங்களும் மக்கத்து முஷ்ரிக்குகள், யூத, கிறித்தவர்களைக் குறித்து அருளப்பட்டவை தான்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

"அவர்களுக்கு நடக்கிற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கிற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கிற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கிற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 7:194,195)

இந்த வசனங்களை ஆதாரமாகக் காட்டி அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்கக் கூடாது என்று நாம் பிரச்சாரம் செய்யும் போது, ஏகத்துவத்திற்கு எதிரானவர்கள் இந்த வாதத்தைத் தான் எடுத்து வைத்தார்கள். இந்த வசனங்கள் எல்லாம் மக்கத்து முஷ்ரிக்குகள் வணங்கிய சிலைகளைப் பற்றித் தான் கூறுகின்றன, முஹைதீன் அப்துல் காதர் ஜீலானியைப் பற்றி கூறவில்லை என்று அவர்கள் கூறியது போல் தவ்ஹீதுவாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களும் கூறுவது தான் வேதனை.

முஸ்லிம்களுடன் முபாஹலா செய்யக் கூடாது என்பதற்கு இவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம் (?) இதை விட கேலிக் கூத்தானது.

முபாஹலா செய்தால் அதில் பொய் சொல்லியவர்களின் குடும்பத்தினர் ஒரு சிறிய காலத்திற்குள் அழிந்து விட வேண்டும். ஆனால் ஏற்கனவே முஸ்லிம்களுக்குள் முபாஹலா செய்து, இது போன்ற விளைவு எதுவும் ஏற்படவில்லை. 20 வருடங்களுக்கு முன் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கும் காயல்பட்டணத்தைச் சேர்ந்த ஜலீல் முஹைதீன் என்பவருக்கும் முபாஹலா நடைபெற்றது. அதன் பிறகு 20 வருடங்களாகியும் இருவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே முஸ்லிம்களுக்கு மத்தியில் முபாஹலா செய்யக் கூடாது என்று கூறுகின்றனர்.

இவர்கள் எந்த அளவுக்கு மார்க்கத்தை விளங்கி வைத்துள்ளார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

முபாஹலா தொடர்பாக நாம் மேலே சுட்டிக்காட்டிய வசனத்தில், பொய்யர்கள் மீது மரணம் உண்டாகட்டும் என்றோ அல்லது பொய்யர்களுக்கு கை, கால் விளங்காமல் போகட்டும் என்றோ பிரார்த்திக்குமாறு கூறப்படவில்லை. பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் - லஃனத் உண்டாகட்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் லஃனத் என்றால் என்ன அர்த்தம் என்பது கூட விளங்காமல் இந்த வாதத்தை முன் வைக்கின்றனர்.

அல்லாஹ்வின் சாபம் எப்படி ஏற்படும் என்று யாரும் அறிய முடியாது. அது இம்மையிலும் ஏற்படலாம், மறுமையிலும் கிடைக்கலாம். அல்லாஹ்வின் சாபம் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று யாரும் அவனை நிர்ப்பந்திக்க முடியாது. இதே லஃனத் - சாபம் என்ற சொல் பல்வேறு வசனங்களிலும் ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான். 

(அல்குர்ஆன் 4:93)

ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்பவனை அல்லாஹ் சபிக்கின்றான் என்று இந்த வசனம் கூறுகின்றது. ஜார்ஜ் புஷ் முதற்கொண்டு எத்தனையோ பேர் முஃமின்களை வேண்டுமென்றே கொலை செய்து கொண்டிருப்பதை நிதர்சனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ்வின் சாபம் என்பதற்கு இவர்கள் கொடுக்கும் அர்த்தத்தின் படி உலகில் எத்தனையோ பேருக்கு கை, கால் விளங்காமல் போயிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் யாரும் கை, கால் விளங்காமலோ அல்லது அழிந்தோ போய் விடவில்லை.

(ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது.

(அல்குர்ஆன் 2:161)

அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுத்த பின் அதை முறிப்போர், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப்போர், மற்றும் பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கு சாபம் உள்ளது. அவர்களுக்கு அவ்வுலகில் கேடு உண்டு.

அல்குர்ஆன் 13:25)

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன் 24:23)

மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.

(அல்குர்ஆன் 2:159)

நயவஞ்சகர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், (தன்னை) மறுப்போருக்கும் நரக நெருப்பை அல்லாஹ் எச்சரித்து விட்டான். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அது அவர்களுக்குப் போதுமானது. அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு.

அல்குர்ஆன் 9:68)

அல்லாஹ்வை மறுப்பவர்கள், அல்லாஹ்விடம் வாக்குறுதிக்கு மாறு செய்தோர், உறவுகளைத் துண்டிப்போர், குழப்பம் விளைவிப்போர், அவதூறு கூறுவோர், அல்லாஹ்வின் சான்றுகளை மறைப்போர், நேர்வழியை மறைப்போர், முனாஃபிக்குகள் ஆகியோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருப்பதாக இந்த வசனங்கள் கூறுகின்றன.

பச்சை குத்திக் கொள்ளும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். 

புகாரி 4886)

திருடர்களை அல்லாஹ் சபிப்பானாக என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(புகாரி 6783)

யூத, கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(புகாரி 1330)

இவர்களது வாதப்படி அல்லாஹ்வின் சாபம் உள்ளவர்கள் அழிந்து போக வேண்டும் என்றால் உலகில் 90க்கும் மேற்பட்ட சதவிகிதத்தினர் அழிந்து போயிருக்க வேண்டும். ஏனெனில் மேலே குறிப்பிட்ட காரியங்களை அவ்வளவு பேர் செய்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே அல்லாஹ்வின் சாபம் என்பது இவர்கள் குறிப்பிடுவது போல் அழிந்து போவதோ அல்லது உடனடியாக தண்டனைக்குள்ளாவதோ மட்டும் அல்ல. அது எந்த விதத்திலும் ஏற்படலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானியை அழைத்து இருட்டு திக்ரு செய்வது கூடாது என்று கூறி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள், ஜலீல் முஹைதீன் என்பவருடன் முபாஹலா செய்தது உண்மை தான். இன்று அவர்கள் இருவருக்கும் வெளிப்படையாக எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் இரு தரப்பினரின் கொள்கைக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் சிந்தித்தால் முபாஹலாவினால் ஏற்பட்டுள்ள பயன் தெரிய வரும்.

20 வருடத்திற்கு முன்பு ஒரு சிலரை மட்டுமே கொண்டிருந்த இந்த ஏகத்துவக் கொள்கை இன்று தமிழகமெங்கும் பல்கிப் பெருகியிருப்பதை யாரும் மறுக்க முடியாது. இது தான் முபாஹலாவில் உண்மையாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அதே நேரத்தில் 20 வருடத்திற்கு முன்பு கொடி கட்டிப் பறந்த இருட்டு திக்ருகள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய்க் கொண்டிருக்கின்றன. இது முபாஹலாவில் பொய் கூறியவர்களுக்கு ஏற்பட்ட தோல்வியாகும். இது தான் அல்லாஹ்வின் சாபம் என்று கூற முடியாது என்றாலும் அல்லாஹ்வின் சாபம் இந்த வகையிலும் ஏற்படலாம்.

உண்மை, பொய் குறித்த தீர்ப்பை இறைவனிடம் ஒப்படைத்து விடுவது தான் முபாஹலா ஆகும். அவனது தீர்ப்பு இந்த உலகத்திலேயே நமக்குக் காட்டப்படலாம். அல்லது தெரியாமலும் போகலாம். இறைவனின் உண்மையான தீர்ப்பு என்ன என்பது மறுமையில் தான் தெரிய வரும்.

குறிப்பு : 2004 ஜூலை மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 11, 2015, 8:49 AM

கப்ரு வேதனையில் பாகுபாடு உள்ளதா?

? ஒருவர் ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் இறந்து விடுகின்றார். இன்னொருவர் கியாமத் நாள் சமீபத்தில் இறக்கின்றார். இவர்கள் இருவருக்கும் கப்ருடைய வேதனையில் பாகுபாடு உள்ளதே?

ஜே. அப்துல் அலீம், அய்யம்பேட்டை

ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவர் அவர் செய்த ஒரு தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். உலகம் அழிவதற்கு பத்து நாட்களுக்கு முன் மரணித்த ஒருவனும் அதே தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம்.

இரண்டாமவன் வெறும் பத்து நாட்கள் மட்டுமே கப்ரில் வேதனையை அனுபவிக்கிறான். ஆனால் ஆதம் (அலை) அவர்களின் மகனோ இலட்சோப லட்சம் வருடங்கள் கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.

ஒரே குற்றத்தைச் செய்த இருவரில் ஒருவருக்கு பத்து நாள் தண்டனை என்பதும், இன்னொருவருக்கு பல லட்சம் வருடங்கள் தண்டனை என்பதும் எப்படி நீதியான தீர்ப்பாக இருக்க முடியும்? இத்தகைய அநீதியான தீர்ப்பை இறைவன் வழங்குவானா? என்று கேட்டுள்ளீர்கள்.

பொதுவாக இது தான் இறைவனின் ஏற்பாடு என்பது தெரிந்த பின்னர் அதில் நாம் கேள்வி கேட்கக் கூடாது. எனினும் இதற்கான விளக்கம் ஹதீஸ்களில் உள்ளது.

உலகில் ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும் போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர் தான் முதன் முதலாகக் கொலை செய்து (ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

நூல்: புகாரி 3335

நூறு வருடங்களுக்கு முன் ஒருவன் ஒரு பாவத்தைச் செய்கிறான். இன்றைக்கு ஒருவன் அதே பாவத்தைச் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

பாவத்தைப் பொறுத்த வரை இரண்டும் ஒரே மாதிரியானவை என்றாலும் குற்றத்தில் இருவருக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

நூறு வருடங்களுக்கு முன் பாவம் செய்தவன் தனக்கு அடுத்து வருபவன் அதே பாவத்தைச் செய்திட தைரியமளித்து விட்டுச் செல்கிறான். தனக்குப் பின்னுள்ளவர்கள் அப்பாவத்தைச் செய்வதற்கு முன் மாதிரியாகவும் திகழ்கிறான்.

நூறு வருடத்திற்குப் பின், நாம் செய்யும் அந்தப் பாவத்துக்கு அவன் வழிகாட்டியாக இருந்துள்ளான். நூறு வருடத்தில் நடைபெற்ற அந்தப் பாவங்களுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளான்.

எனவே இவன், தான் செய்த தப்புக்கும் தண்டிக்கப்பட வேண்டும். இத்தனை பேரைக் கெடுத்ததற்கும் தண்டிக்கப்பட வேண்டும். கப்ரு வேதனையின் மூலமே இத்தகைய நீதியை வழங்க முடியும்.

ஆதமுடைய ஒரு மகன் செய்த கொலை தான் உலகில் நடக்கும் எல்லாக் கொலைகளுக்கும் முன்னோடியாக இருந்தது. அவன் தான் கொலையாளிகளின் வழிகாட்டி. எனவே, அவன் மற்ற எவரையும் விட அதிக நாட்கள் தண்டனை அனுபவிப்பது தான் சரியான நீதியாகும்.

எத்தனை பேரைக் கெடுத்தார்கள் என்ற வகையில் சிந்தித்தால் ஒருவர் அதிக நாட்களும், இன்னொருவர் குறைவான நாட்களும் கப்ரில் தண்டிக்கப்படுவது சரியானது தான் என்பதை விளங்கலாம்.

குறிப்பு : 2004 ஜூலை மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 11, 2015, 8:33 AM

திருமணத்தில் வீடியோ எடுக்கலாமா, உரை நிகழ்த்தலாமா?

? திருமண நிகழ்ச்சிகளில் ஷிர்க், பித்அத் இல்லாமல், மாலை போன்றவற்றைக் கூட மாற்று மதக் கலாச்சாரம் என்று தவிர்க்கும் நாம் வீடியோ, போட்டோ போன்ற வீண் விரயங்களைச் செய்யலாமா? நபி (ஸல்) அவர்களைக் கூட அழைக்காமல் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் போன்ற நபித்தோழர்கள் திருமணம் முடித்துள்ள போது, நம் திருமண நிகழ்ச்சிகளில் குத்பா நிகழ்த்துவது சரியா? திருமணத்தில் குத்பா நிகழ்த்துவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதேனும் உள்ளதா? விளக்கவும். 

பின்த் காஸிம், சென்னை 

திருமணங்களில் வீடியோ, போட்டோ போன்ற காரியங்களைச் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதைக் கடந்த இதழில் "வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்' என்ற கட்டுரையில் விளக்கியுள்ளோம். திருமணத்தை வீடியோ எடுக்கவில்லை, சொற்பொழிவுகளை மட்டும் வீடியோ எடுக்கிறோம் என்று சிலர் கூறினாலும் உண்மையில் அவர்களும் திருமண நிகழ்ச்சிகளை எடுப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றார்கள்.

எளிமையான திருமணத்தில் தான் பரக்கத் இருக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது இந்த வீடியோ கலாச்சாரத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

நபி (ஸல்) அவர்களுக்குக் கூட தெரியாமல் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் திருமணம் நடத்தியிருப்பதால் திருமண உரை நிகழ்த்துவது சரியா என்று கேட்டுள்ளீர்கள்.

குத்பா என்று சில வாசகங்களைக் குறிப்பிட்டு, இவற்றைக் கூறினால் தான் திருமணம் நிறைவேறும் என்று மக்கள் விளங்கி வைத்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கும் பிரசங்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. பிரசங்கம் எதுவும் நிகழ்த்தாவிட்டாலும் திருமணம் நிறைவேறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால் அதே சமயம் திருமணத்தில் உரை நிகழ்த்தப்படுவதை மார்க்கத்திற்கு முரணான செயலாகச் சித்தரிப்பதும் தவறு.

பொதுவாக அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் செய்தியை அடிப்படையாக வைத்து, திருமணத்திற்கு யாரையும் அழைக்கக் கூடாது, யாருக்கும் தெரியாமல் திருமணம் நடத்த வேண்டும் என்ற கருத்து ஏகத்துவவாதிகளிடம் பரவலாக உள்ளது. 

திருமணத்தை நீங்கள் அறிவியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி), 

நூல்: அஹ்மத் 15545 

இந்த ஹதீஸில் திருமணத்தை அறிவியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதே பலருக்கும் தெரியும் வகையில் திருமணம் நடத்தப் படவேண்டும் என்பதையே காட்டுகின்றது. தற்போதுள்ள நடைமுறையில் இருப்பது போல் பலரையும் அழைத்து திருமணம் நடத்துவது மார்க்க அடிப்படையில் சரியான செயல் தான் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறிய முடியும். இவ்வாறு செய்வதால் அதை செலவு குறைந்த திருமணம் இல்லை என்று யாரும் கூறி விடமுடியாது. மேள தாளங்கள், மேடை அலங்காரங்கள், ஆடியோ வீடியோ கலாச்சாரம் போன்ற அனாச்சாரங்களைக் கூடாது என்று கூறலாம். ஆனால் யாரையுமே அழைக்கக் கூடாது என்று கூறுவது மார்க்க அடிப்படையில் ஏற்புடையதல்ல! 

திருமண உரை என்று தனியாக எதுவும் இல்லை. பொதுவாக எந்த இடத்திலும் பிரசங்கம், சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஏகத்துவப் பிரச்சாரம் செய்வதற்காக பொதுக்கூட்டம் போடுகின்றோம். இதைத் தவறு என்று யாரும் வாதிடுவது கிடையாது. அது போல் திருமணத்தின் போதும் ஒருவர் மார்க்கத்தைப் போதித்தால், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தால் அது கூடாது என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. 

இந்த இடத்தில் இந்தக் கருத்தைக் கூறினால் அது மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று ஒருவர் நினைத்தால் அதை திருமண சபை மட்டுமல்ல, எந்த சபையிலும் சொல்லலாம்.

உதாரணமாக ஜனாஸா தொழுகையை நடத்துவதற்காக ஒருவர் முன்னே நிற்கின்றார். அந்தத் தொழுகையில் கலந்து கொள்பவர்கள் ஹதீஸ் அடிப்படையில் அந்தத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, ஜனாஸா தொழுகையின் சட்ட திட்டங்களைப் பற்றி ஒரு சிறிய உரை நிகழ்த்துகின்றார். இதற்கு ஜனாஸா உரை என்று பெயரிட்டு, இது கூடுமா என்று கேட்க மாட்டோம்.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வார்கள். அந்த சமயத்தில் நிகழ்த்துகின்ற சொற்பொழிவு நிச்சயமாக ஒரு பயனைத் தரும் என்று ஒருவர் கருதினால் அவர் அங்கு பிரச்சாரம் செய்யலாம். 

நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் போதும் (மக்களுக்குப் பிரச்சாரம் செய்யும்) தேவை ஏற்படும் போதும் தஷஹ்ஹுதை கற்றுத் தந்தார்கள். தொழுகையில் உள்ள தஷஹ்ஹுத் அத்தஹிய்யாத் (என்று துவங்கும் துஆ) ஆகும். (மக்களுக்குப் பிரச்சாரம் செய்யும்) தேவை ஏற்படும் போது சொல்லும் தஷஹ்ஹுத் கீழ்க்கண்ட தஷஹ்ஹுத் ஆகும். நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனிடமே நாம் உதவி தேடுகின்றோம். அவனிடமே நாம் பாவமன்னிப்பு தேடுகிறோம். நம்முடைய உள்ளங்களின் தீங்குகளை விட்டும் நமது கெட்ட செயல்பாடுகளை விட்டும் அவனிடமே நாம் பாதுகாவல் தேடுகின்றோம். அல்லாஹ் நேர்வழி காட்டியவரை கெடுப்பவன் இல்லை. அல்லாஹ் வழிகெடுத்தவனுக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று ஒப்புக் கொள்கிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று ஒப்புக் கொள்கிறேன். அல்லாஹ்வை அஞ்சக் கூடிய விதத்தில் அஞ்சிக் கொள்ளுங்கள். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்காதீர்கள். எந்த இறைவனை முன்னிறுத்தி நீங்கள் கேட்கிறீர்களோ அந்த இறைவனை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி), 

நூல்: திர்மிதீ 1023 

இந்த அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் தேவை ஏற்படும் போது இறையச்சத்தைப் பற்றி மக்களுக்குப் போதிக்குமாறு கற்றுத் தந்துள்ளதால் எங்கு தேவை ஏற்பட்டாலும் நாம் பிரச்சாரம் செய்வது நமது கடமையாகும். அது திருமண சபையாக இருந்தாலும் வேறு எந்த சபையாக இருந்தாலும் சரி. அதனால் தான் இந்த ஹதீஸை, இமாம் திர்மிதீ அவர்கள் திருணமத்தில் பிரசங்கம் செய்வது பற்றிய பாடம் என்ற தலைப்பில் இடம் பெறச் செய்துள்ளார்கள். 

ஆனால் அதே சமயம், திருமணத்தின் போது உரை நிகழ்த்துவதை திருமணம் நிறைவேறுவதற்கான விதிமுறைகளில் ஒன்றாகக் கருதும் நிலை உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. குத்பா ஓதினால் தான் திருமணம் நிறைவேறும் என்று மக்கள் கருதும் நிலை இருப்பதால் அதைத் தவறு என்று நிரூபிப்பதற்காக குத்பா இல்லாமலும் திருமணங்களை நடத்திக் காட்ட வேண்டும். 

ஒரேயடியாக பிரசங்கம் செய்வதே தவறு என்று கூறவும் கூடாது. அதேபோல் திருமணத்தில் பிரசங்கம் செய்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தவும் கூடாது. திருமணத்திற்கு குத்பா அவசியமில்லை என்பதை மக்களுக்கு விளங்க வைப்பதற்காக குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் அவ்வப்போது குத்பா இல்லாத திருமணங்களையும் நடத்த வேண்டும்.

குறிப்பு : 2004 ஜூன் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 11, 2015, 7:49 AM

நபி்மார்களின் உயிரை கைப்பற்றும் பொழுது மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா? என்று கேட்க்கப்படுமா?

? சாதாரண மனிதர்களின் உயிர் கைப்பற்றப்படுவது போல் நபிமார்களின் உயிர் கைப்பற்றப்படுவதில்லை. மலக்குல் மவ்த் வந்து, உங்களுக்கு மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா என்று கேட்டு அவர்களின் சம்மதத்தின் பேரில் தான் கைப்பற்றுவார்கள் என்று ஒரு மவ்லவி ஜும்ஆவில் கூறினார். இதற்கு ஆதாரம் உள்ளதா? 

எஸ்.எம். செய்யது முஹம்மது, சென்னை 


இது ஆதாரப்பூர்வமான செய்தி தான். புகாரியில் இந்தக் கருத்தைத் தாங்கிய ஹதீஸ் உள்ளது. எனினும் நபிமார்களின் சம்மதம் கேட்டு உயிரைக் கைப்பற்றுவதாக இல்லை. 

"(இறுதியாக) நோயுற்று விடுகின்ற எந்த ஓர் இறைத்தூதருக்கும் உலகவாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்ததில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன். நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் கைப்பற்றப்பட்டார்களோ அந்த நோயின் போது அவர்களின் குரல் கடுமையாகக் கம்மிப் போய்விட்டது. அப்போது அவர்கள், "அல்லாஹ் யார் மீது தன் அருட்கொடைகளைப் பொழிந்தானோ அந்த இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், உத்தமர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)'' என்று சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்களுக்கும் (அந்த இறுதி) வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன். 
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 


நூல்: புகாரி 4586 

இந்த ஹதீஸில் "நோயுற்று விட்ட இறைத்தூதருக்கு உலகம், மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்து, மரணிக்கும் தருவாயில் வாழ்நாளை நீட்டிக்கும் வாய்ப்பை அல்லாஹ் வழங்குகின்றான் என்பதை அறிய முடியும். 
நபிமார்கள் சம்மதித்தால் தான் உயிர் கைப்பற்றப்படும் என்ற கருத்தில் இது கூறப்படவில்லை. மாறாக நபிமார்களின் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அவர்கள் விரும்பினால் மேலும் சிலகாலம் உலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அல்லது மறுமையைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற ஒரு வாய்ப்பை அல்லாஹ் வழங்குகின்றான். இதைத் தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது. 

 

குறிப்பு : 2004 ஜூன் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 11, 2015, 6:57 AM

முஸாபஹா, முஆனகா இரண்டையும் தெளிவாக விளக்கவும்?

? முஸாபஹா, முஆனகா இரண்டையும் தெளிவாக விளக்கவும்.

ஜே. அப்துல் அலீம், அய்யம்பேட்டை

இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது, ஒருவருடைய கையை மற்றவர் பிடித்து பரஸ்பரம் நட்பைப் பரிமாறிக் கொள்வதற்கு முஸாபஹா என்று பெயர்.

இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து அவர்களில் ஒருவர் மற்றொருவருடைய கையைப் பிடித்தால் அவர்களின் துஆவை ஏற்றுக் கொள்வது அல்லாஹ்வின் மீது கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), 

நூல்: அஹ்மத் 11998

இந்த ஹதீஸின் அடிப்படையில், இருவர் சந்திக்கும் போது முஸாஃபஹா செய்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு செயலாகும். (இது குறித்து பிப்ரவரி 2004 இதழ் கேள்வி பதில் பகுதியில் விரிவாக எழுதப்பட்டுள்ளது)

முஆனகா என்றால் கட்டித் தழுவுதல் என்று பொருள். இரண்டு முஸ்லிம்கள் சந்திக்கும் போதோ அல்லது பரஸ்பரம் வாழ்த்து தெரிவிக்கும் போதோ, கட்டித் தழுவி முகத்தை இடது புறத்திலும் வலது புறத்திலும் மாறி மாறி வைத்துக் கொள்ளும் வழக்கம் முஸ்லிம்களிடம் பரவலாக உள்ளது. இதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஏதும் இல்லை. முஆனகா தொடர்பாக இடம் பெறும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளன. இரண்டு முஸ்லிம்கள் சந்தித்தால் முஸாஃபஹா செய்வதை வலியுறுத்தித் தான் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் பேசவில்லை. பனூ கைனுகா எனும் கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். "இங்கே அந்தப் பொடிப் பையன் இருக்கின்றானா? இங்கே அந்தப் பொடிப் பையன் இருக்கின்றானா?'' என்று கேட்டார்கள். ஃபாத்திமா (ரலி), அவர்கள் தம் மகனைச் சற்று நேரம் தாமதப் படுத்தினார். "அவர் தம் மகனுக்கு நறுமண மாலை அணிவித்துக் கொண்டிருக்கின்றார்' என்றோ அல்லது "மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்' என்றோ நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் மகன் (ஹஸன்) ஓடி வந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். "இறைவா! இவனை நீ நேசி! இவனை நேசிப்பவர்களையும் நீ நேசி!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 

நூல்: புகாரி 2122

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், ஹஸன் (ரலி)யைக் கட்டியணைத்திருப்பதால் இதை ஆதாரமாக வைத்து முஆனகா செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றார்கள். பொதுவாக பிள்ளைகளை அணைத்து முத்தமிடுவது இயல்பான ஒன்று தான். இதைத் தான் நபியவர்களும் செய்துள்ளார்கள். இதை ஆதாரமாக வைத்து இரண்டு முஸ்லிம்கள் சந்திக்கும் போது முஆனகா செய்யலாம் என்று வாதிட முடியாது.

 

குறிப்பு: 2004 ஏப்ரல் மாத ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி

January 10, 2015, 7:03 AM

மார்க்கத்தில் குறைபாடு உள்ளவர்கள் அழைப்பு பணியில் ஈடுபடலாமா?

? எங்களிடம் சில குறைபாடுகள் உள்ளன. நாங்கள் அழைப்புப் பணியில் ஈடுபடலாமா? உதாரணமாக, வேலைப் பளுவின் காரணமாக சில நேரங்களில் ஃபஜ்ர் தொழுகைக்கு எழுந்திருக்க முடியவில்லை. இதைக் காரணமாக வைத்து, நாங்கள் குர்ஆன் ஹதீஸைச் சொல்லும் போது, நீங்கள் முதலில் முழுமையாகத் திருந்துங்கள் என்று கூறி கடிந்து பேசுகின்றனர். இதை அலட்சியப் படுத்தி விட்டு தொடர்ந்து அழைப்புப் பணி செய்யலாமா? அல்லது முழுமையாகத் திருந்திய பிறகு தான் அழைப்புப் பணி செய்ய வேண்டுமா?

பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹீம், அபுதாபி.

அழைப்புப் பணி செய்பவர்களின் ஒழுக்க வாழ்வு, நேர்மை, நாணயம், வணக்க வழிபாடுகள் அனைத்தும் மக்களால் கண்காணிக்கப் படுவது இயற்கையே! எனவே சாதாரண மக்களை விட அழைப்புப் பணி செய்பவர்கள் மிகவும் கவனமாகவும், பேணுதலாகவும் நடக்க வேண்டும். நாம் சொல்லும் செய்தி எவ்வளவு தான் சரியானதாக இருந்தாலும் நம்மிடம் சில குறைபாடுகள் இருந்தால் அந்தச் செய்தியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே மற்றவர்களை விட அழைப்பாளர்கள் மிகவும் பேணுதலாக நடக்க வேண்டும். குறிப்பாக அமல்கள் விஷயத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

அல்லாஹ்வை நோக்கி அழைத்து, நல்லறம் செய்து, நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்? 

(அல்குர்ஆன் 41:33)

இந்த வசனத்தில் அல்லாஹ்வை நோக்கி அழைப்பவர் நல்லறம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை அல்லாஹ் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.

வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

(அல்குர்ஆன் 2:44)

நாம் சரியாக நடந்து கொண்டு அடுத்தவருக்கு அறிவுரை செய்ய வேண்டும் என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது. இது போல் ஏராளமான ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் இயன்ற வரை சரியாக நடக்க முயற்சிக்க வேண்டும்.

எனினும் மனிதன் என்ற முறையில் சில குறைபாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள் தான் என்பது நபிமொழி. இதை எப்படி எடுத்துக் கொள்வது? உதாரணமாக ஃபஜ்ர் தொழுகையைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். அதையே எடுத்துக் கொள்வோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பிய போது இரவு முழுவதும் பயணம் செய்தார்கள். இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்து விடவே (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம், "இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக!'' என்று கூறினார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமக்கு விதிக்கப் பட்டிருந்த அளவுக்குத் தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் உறங்கினார்கள். ஃபஜ்ர் நேரம் நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) அவர்கள் வைகறை திசையை முன்னோக்கிய படி தமது வாகனத்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். அப்போது தம்மையும் அறியாமல் சாய்ந்த படியே கண்ணயர்ந்து உறங்கி விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும் வரை விழிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் முதலில் கண் விழித்தார்கள். பதறியபடியே அவர்கள், "பிலாலே!'' என்று அழைத்தார்கள். பிலால் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களை தழுவிக் கொண்ட அதே (உறக்கம்) தான் என்னையும் தழுவிக் கொண்டது'' என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள்'' என்று கூற, உடனே மக்கள் தங்கள் வாகனங்களைச் செலுத்தி சிறிது தூரம் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறங்கி) உளூச் செய்தார்கள். பிலால் (ரலி)யிடம் இகாமத் சொல்லச் சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தார்கள். தொழுது முடித்ததும், "தொழுகையை மறந்து விட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ், "என்னை நினைவு கூரும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக' (அல்குர்ஆன் 20:14) என்று கூறுகின்றான்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 

நூல்: முஸ்லிம் 1097

நாங்கள் ஒரு இரவு நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது சிலர், "அல்லாஹ்வின் தூதரே! எங்களைச் சற்று இளைப்பாறச் செய்யலாமே?'' என்று கேட்டனர். "நீங்கள் தொழுகையை விட்டும் உறங்கி விடுவீர்களோ என்று அஞ்சுகின்றேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது பிலால் (ரலி), "நான் உங்களை எழுப்பி விடுகின்றேன்'' என்று கூறியதும் அனைவரும் படுத்துக் கொண்டனர். பிலால் (ரலி) தம் முதுகைத் தமது கூடாரத்தின் பால் சாய்த்துக் கொண்டார். அவரையும் மீறி உறங்கி விட்டார். சூரியனின் ஒரு பகுதி உதித்த பின்பே நபி (ஸல்) அவர்கள் விழித்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், "பிலாலே! நீர் சொன்னது என்னவாயிற்று?'' என்று கேட்டார்கள். "இதுபோன்ற தூக்கம் எனக்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லை'' என்று பிலால் (ரலி) கூறினார். "நிச்சயமாக இறைவன் உங்கள் உயிர்களை அவன் விரும்பிய போது கைப்பற்றிக் கொள்கிறான். அவன் விரும்பிய போது திரும்பவும் ஒப்படைக்கிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு, "பிலாலே! எழுந்து தொழுகைக்கு பாங்கு சொல்வீராக!'' என்று கூறினார்கள். (பின்னர்) உளூச் செய்து விட்டு, சூரியன் உயர்ந்து பிரகாசம் ஏற்பட்ட போது தொழுதார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), 

நூல்: புகாரி 595

இந்த ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுகைக்கு எழுப்புவதற்காக பிலால் (ரலி)யை நியமித்து விட்டு உறங்குகின்றார்கள். ஆனால் ஃபஜ்ர் தொழுகைக்கு விழிக்காமல் அனைவரும் உறங்கி விடுகின்றார்கள். விழித்தவுடன் சுப்ஹ் தொழுது விட்டு, உறக்கம், மறதி ஆகியவற்றால் தொழுகையை விட்டுவிட்டால் நினைவு வந்ததும் தொழுவதற்கு அனுமதியும் வழங்குகின்றார்கள்.

இது போன்று தொழுகைக்கு எழுவதற்கான முயற்சிகளைச் செய்து, அதையும் மீறி எழுந்திருக்கவில்லை என்றால் அது குற்றமில்லை. உதாரணமாக, ஃபஜ்ர் தொழுகையின் நேரத்திற்கு அலாரம் வைத்து விட்டுப் படுத்து, அலாரம் அடித்தும் எழுந்திருக்கவில்லை என்றால் அல்லது தூக்கத்தில் அலாரத்தை அணைத்து விட்டுப் படுத்து விட்டோம் என்றால் இவை நம் கட்டுப்பாட்டில் இல்லாத செயல்கள்.

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். (அல்குர்ஆன் 2:286) என்ற வசனத்தின் அடிப்படையில் இதற்காக அல்லாஹ் நம்மைக் குற்றம் பிடிக்க மாட்டான். எந்த விஷயத்திற்கு அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டானோ அந்த விஷயத்தில் மக்கள் குறை கூறுவார்களே என்றும் அஞ்சத் தேவையில்லை.

அதே சமயத்தில் படுக்கும் போதே நாளைக்கு சுப்ஹ் தொழுகை சந்தேகம் தான் என்ற முடிவோடு படுப்பது, யாரேனும் எழுப்பினால் கூட அலட்சியம் செய்து விட்டு உறங்குவது போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. இது போன்ற நிலை சாதாரண மக்களிடமும் இருக்கக் கூடாது. அழைப்பாளரிடத்தில் கண்டிப்பாக இருக்கக் கூடாது.

குறிப்பு : 2004 ஏப்ரல் மாத ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி

January 9, 2015, 5:57 PM

சிலை வணங்குபவர் அநியாயமாக கொல்லப்பட்டால் அவருக்கு சொர்க்கமா? நரகமா? கொலை செய்தவருக்கு என்ன தண்டனை?

? சிலையை வணங்கக் கூடிய ஒருவரை அநியாயமாக யாரேனும் கொலை செய்து விட்டால் கொல்லப்பட்டவருக்கு சொர்க்கமா? நரகமா? கொலை செய்தவருக்குத் தண்டனை என்ன?

அ. ஸைஃபுல்லாஹ், புளியங்குடி


அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம்

(அல்குர்ஆன் 5:72)

இணை வைப்பவர்களுக்கு சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டதாக அல்லாஹ் கூறுவதால் கொல்லப்பட்டவர் சுவனம் செல்வார் என்று கூற முடியாது.

அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.

(அல்குர்ஆன் 99:7,8)

இந்த வசனத்தின் அடிப்படையில் கொலை செய்தவர் முஸ்லிமாக இருந்தாலும் அதற்குரிய தண்டனை அவருக்கு உண்டு.

"கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், "ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர். (அல்குர்ஆன் 5:32)

ஒரு மனிதரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதரையும் கொலை செய்வதர் போலாவார் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். முஸ்லிம், முஷ்ரிக் என்று பிரித்துக் கூறாமல் பொதுவாக மனித உயிரைப் பற்றியே இந்த வசனம் கூறுகின்றது. இதன் அடிப்படையில் எந்த உயிரையும் கொல்வது கடும் குற்றம் தான். எனவே கொல்லப்பட்டவர் முஸ்லிமாக இருந்தாலும் இணை வைப்பவராக இருந்தாலும் கொன்றவருக்கு நிச்சயமாக தண்டனை உண்டு என்பதை இதிலிருந்து அறியலாம்.

 

 

(குறிப்பு: 2004 மார்ச் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை)
 

January 2, 2015, 7:33 AM

எழுந்திருக்கும் போது, ஸ்ஜ்தா வசனம் ஓதும் போது மற்றும் ஸஜ்தா செய்யும் போது அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டுமா?

? சிலர் உட்காரும் போது பிஸ்மில்லாஹ் என்றும் எழுந்திருக்கும் போது அல்லாஹு அக்பர் என்றும், குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போது ஸஜ்தா வசனங்களை ஓதி, ஸஜ்தா செய்யும் போது அல்லாஹு அக்பர் என்றும் கூறுகின்றனர். இதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா?


இஸ்மாயீல் ஷெரீப், சென்னை - 11

உட்காரும் போது பிஸ்மில்லாஹ் என்றும், எழுந்திருக்கும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கும் ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை.

குர்ஆன் வசனங்களை ஓதி ஸஜ்தா செய்யும் போது, அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை பலவீனமான ஹதீஸ்களாக உள்ளன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர். அவர்கள் ஸஜ்தா வசனத்தைக் கடக்கும் போது, தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்வார்கள். அவர்களுடன் நாங்களும் செய்வோம் என்று இப்னு உமர் (ரலி) அறிவித்ததாக நாஃபிஉ மூலம் அப்துல்லாஹ் பின் உமர் என்பார் அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. இந்த அப்துல்லாஹ் பின் உமர் என்பவரை பல அறிஞர்கள் குறை கூறியிருக்கின்றார்கள் என்று ஹாபிழ் முன்திரி குறிப்பிடுகின்றார்கள். அப்துல்லாஹ் பின் உமர் என்பவரை அலீ பின் முதைனீ அவர்களும் குறை கூறியுள்ளார்கள். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

அப்துல்லாஹ் பின் உமர் என்பதற்குப் பதிலாக உபைதுல்லாஹ் பின் உமர் என்ற தொடருடன் இதே கருத்தைக் கொண்ட ஹதீஸ் ஹாகிமில் பதிவாகியுள்ளது. இவர் நம்பகமானவர், எனினும் இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தக்பீர் சொன்னார்கள் என்ற வாசகம் இடம் பெறவில்லை. எனவே ஸஜ்தா வசனத்தை ஓதும் போது தக்பீர் சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை.

 

(குறிப்பு : 2004 மார்ச் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

January 2, 2015, 7:30 AM

இரண்டு கைகளால் முஸாபஹா செய்யலாமா?

? மத்ஹபை ஆதரிக்கும் சகோதரர்கள் இரண்டு கைகளால் முஸாபஹா செய்கின்றார்கள். ஆனால் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் ஒரு கையால் முஸாபஹா செய்கின்றார்கள். இரண்டில் எது சரி என்பதை ஆதாரத்துடன் விளக்கவும்.

எஸ். முஹம்மத் ஸலீம், ஈரோடு

இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது, ஒருவருடைய கையை மற்றவர் பிடித்து பரஸ்பரம் நட்பைப் பரிமாறிக் கொள்வதற்கு முஸாபஹா என்று பெயர்.

இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து அவர்களில் ஒருவர் மற்றொருவருடைய கையைப் பிடித்தால் அவர்களின் துஆவை ஏற்றுக் கொள்வது அல்லாஹ்வின் மீது கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: அஹ்மத் 11998

முஸாபஹா தொடர்பாக இடம் பெறும் மேற்கண்ட ஹதீஸில் இரண்டு கைகளையும் பிடித்தால் என்று கூறப்படவில்லை. "கையைப் பிடித்தால்' என்று ஒருமையாகவே கூறப்படுகின்றது.

மற்ற மொழிகளில் இருமைக்கு தனி வார்த்தை பயன்படுத்தும் வழக்கம் கிடையாது. ஒன்றுக்கு மேற்பட்டவற்றை பன்மையான வார்த்தையைக் கொண்டே குறிப்பிடப் படும். உதாரணமாக, கல் என்பது ஒருமை என்றால், கற்கள் என்பது பன்மையாகும். இரண்டு கல் இருந்தாலும், மூன்று கல் இருந்தாலும் அதைக் கற்கள் என்ற பதத்தைப் பயன்படுத்திக் கூறுவர்.

ஆனால் அரபு மொழியில் ஒருமை, இருமை, பன்மை ஆகிய மூன்றுக்கும் தனித்தனி வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். ஒரு கை, இரு கைகள், பல கைகள் என்பதைக் குறிக்க மூன்று விதமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அரபு மொழி இலக்கணமாகும்.

"யதுன்' என்றால் ஒரு கை என்று பொருள். "யதைனி', "யதைய்ய' என்றால் இரு கைகள் என்று பொருள். "அய்தீ' என்றால் இரண்டுக்கு மேற்பட்ட பல கைகள் என்று பொருள். இதை அரபு மொழிக்கு மட்டும் உள்ள சிறப்பு என்று கூறலாம்.

இரண்டு கைகளால் முஸாஃபஹா செய்திருந்தால் "யதைய்ய' அல்லது "யதைனி' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் முஸாஃபஹா தொடர்பான ஹதீஸ்களில் "யதுன்' என்ற ஒருமையான வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. எனவே ஒரு கையால் முஸாபஹா செய்வது தான் நபிவழியாகும். இரண்டு கையால் முஸாபஹா செய்வதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரு கைகளுக்கிடையில் என் கை இருந்த நிலையில் குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத் தருவது போன்று தஷஹ்ஹுத் (எனும் அத்தஹிய்யாத்)-ஐ எனக்கு அவர்கள் கற்றுத் தந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி),

நூல்: புகாரி 6265

இந்த ஹதீஸில் இரண்டு கைகள் என்று வருவதால் இரண்டு கைகளால் முஸாபஹா செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இரண்டு பேர் சந்திக்கும் போது செய்யப்படும் முஸாஃபஹா குறித்து இந்த ஹதீஸில் கூறப்படவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள் அத்தஹியாத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக இரண்டு கைகளால் பிடித்து சொல்லிக் கொடுக்கின்றார்கள்.

பொதுவாக ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக இவ்வாறு செய்வது நடைமுறையில் உள்ளது தான். இதை முஸாஃபஹாவுக்கு ஆதாரமாகக் காட்ட முடியாது. மேலும் இந்த ஹதீஸில் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களது ஒரு கையை, நபி (ஸல்) அவர்கள் இரு கைகளால் பிடித்திருந்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸை முஸாஃபஹாவுக்கு ஆதாரமாகக் கொண்டாலும், இரண்டு பேருமே இரு கைகளால் முஸாஃபஹா செய்வதற்கு இதில் ஆதாரம் இல்லை.

இரு கைளால் முஸாஃபஹா செய்வதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுவதற்குக் காரணம் புகாரி இமாம் இந்த ஹதீஸை, "இரண்டு கைகளால் முஸாஃபஹா செய்வது' என்ற தலைப்பில் கொண்டு வந்திருப்பது தான்.

தலைப்பில் கூறப்படும் செய்தி மார்க்க ஆதாரமாக ஆகாது. ஏனெனில் தலைப்பு என்பது புகாரி இமாமின் சொந்தக் கருத்து தானே தவிர ஹதீஸின் கருத்தல்ல! நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவை தான் மார்க்க ஆதாரங்களாகும். இமாம்களின் சொந்தக் கருத்து மார்க்க ஆதாரம் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு கையால் முஸாஃபஹா செய்வது மேற்கத்திய கலாச்சாரத்தில் கை குலுக்குவதைப் போல் உள்ளது, இதற்கு மாறு செய்ய வேண்டும் எனவே இரண்டு கைகளால் தான் முஸாஃபஹா செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். முஸாஃபஹா தொடர்பான ஹதீஸ்களில் ஒரு கை என்றே இடம் பெறுவதால் இது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இஸ்லாமிய கலாச்சாரம் தான். இதைத் தான் மேற்கத்தியர்கள் எடுத்துக் கொண்டார்களே தவிர நாம் அவர்களைப் பின்பற்றவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

கீழ்க்காணும்  நூலையும் வாசிக்கவும்

http://www.onlinepj.com/books/santhikkum-veLaiyil/

 

(குறிப்பு : 2004 பிப்ரவரி மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை)

December 31, 2014, 7:12 AM

அரசாங்கம்தான் ஜிஹாத் செய்ய வேண்டும் என்றால் மனிதனிடத்தில் எப்படி அந்த உணர்வு ஏற்படும்?

? ஜிஹாத் என்ற உணர்வு மனிதனிடத்தில் (சிறிதளவு கூட) இல்லையென்றால் அவன் முஃமினாக இருக்க முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அரசாங்கம் தான் போர் செய்ய வேண்டும் என்றால் மனிதனிடத்தில் எவ்வாறு அவ்வுணர்வு வர முடியும்?

எஸ்.எம். ஷாஃபி, நாகூர்

இஸ்லாத்தில் எந்த ஒரு வணக்கமாக இருந்தாலும் அது எப்போது கடமையாகின்றதோ அப்போது தான் அதைச் செய்ய வேண்டும்.  ஜகாத், ஹஜ் போன்ற வணக்கங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.  அன்றாடம் சாப்பாட்டுக்கு வழியில்லாத ஒருவரிடம் போய்,ஹஜ் செய்தால் தான் நீ முஸ்லிம் என்று கூற முடியாது.  அது போலவே ஜிஹாத் என்பதும் எப்போது கடமையாகின்றதோ அப்போது தான் அதைச் செய்ய வேண்டும்.

ஜிஹாத் என்ற பெயரில் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல் செயல்பட மார்க்கத்தில் இடமில்லை. இஸ்லாமிய அரசாங்கம் தான் ஜிஹாத் செய்ய வேண்டும் என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் "ஜிஹாத் ஓர் ஆய்வு' என்ற தொடரில் இன்ஷா அல்லாஹ் விரிவாகக் காணவிருக்கின்றோம்.

யார் போர் செய்யாமலும் போரைப் பற்றி மனதில் கூட எண்ணாமலும் மரணிக்கின்றானோ அவன் நயவஞ்சகத்தின் ஒரு பகுதியுடன் மரணிக்கின்றான் எனஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 

நூல் : முஸ்லிம் 3533

இந்த ஹதீஸில் போரைப் பற்றி மனதில் கூட எண்ணாமல் மரணித்தால் அவன் நயவஞ்சகத்தின் ஒரு பகுதியுடன் மரணிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஜிஹாத் செய்தால் தான் ஜிஹாதைப் பற்றிய எண்ணம் மனதில் உருவாகும் என்பதில்லை.  அப்படியென்றால் "யார் ஜிஹாத் செய்யாமல் இறக்கின்றானோ அவன் நயவஞ்சகன்' என்று மட்டும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கலாம்.  ஆனால் நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லாமல் "மனதில் கூட எண்ணாமல்' என்பதையும் சேர்த்துச் சொல்வதிலிருந்தே ஜிஹாத் செய்ய முடியாத ஒரு நிலையும் ஏற்படும் என்று இந்தஹதீஸ் உணர்த்துவதை அறியலாம்.

இப்போதைய சூழ்நிலையில் நமக்கு ஜிஹாத் கடமையில்லை என்றாலும் இதே நிலைதான் எப்போதும் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒருவேளை நாம் இஸ்லாமிய அரசாங்கத்தின் கீழ் வந்து ஜிஹாத் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் அப்போது ஜிஹாதை மறுக்கக் கூடாது என்பது தான் இந்த ஹதீஸின் பொருள்.  ஹஜ் செய்வதற்கு வசதியில்லை என்பதற்கும் வசதி வந்தாலும் ஹஜ் செய்ய மாட்டேன் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஜிஹாதைப் பற்றிய உணர்வு ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருந்தாக வேண்டும். ஏனெனில் மற்ற வணக்கங்களைச் செய்வதற்கு யாரும் எளிதாக முன்வந்து விடுவார்கள். ஆனால் ஜிஹாத் செய்வதற்கு மனதளவில் எப்போதும் தயாராக இருந்தால் மட்டுமே கடமை ஏற்படும் போது அதை நிறைவேற்ற முடியும் என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் ஜிஹாதைப் பற்றிய உணர்வுடன் இருப்பதை வலியுறுத்துகின்றார்கள்.

 

(குறிப்பு : 2003 டிசம்பர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 27, 2014, 7:33 AM

நிர்வாணமாக குளிக்கலாமா?

? குளிப்பு கடமையாகி விட்ட நிலையில் உளூச் செய்வது கட்டாயமாகின்றது. அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் பார்க்க முடியாத நிலையில் தனியறையில் நிர்வாணமாகக் குளிக்கும் போது உளூச் செய்தால் அந்த உளூ கூடுமா?

என்.எம். ஹைதர் அலீ, சென்னை.

"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும்? யாரிடம் மறைக்க வேண்டியதில்லை?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உன்னுடைய மனைவி அல்லது உனது அடிமைப் பெண்கள் ஆகியோரிடத்தில் தவிர மற்றவரிடம் உனது மானத்தை மறைத்துக் கொள்'' என்று சொன்னார்கள். "ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் இருக்கும் போது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள்'' என்றார்கள். "ஒருவர் தனியாக இருக்கும் போது?'' என்று நான் கேட்டதற்கு, "அல்லாஹ் வெட்கப்படுவதற்கு மிகவும் தகுதியானவன்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி),

நூல் : திர்மிதி 2693

இந்த ஹதீஸின் அடிப்படையில் தனியறையில் யாருமே பார்க்க முடியாத சூழ்நிலையாக இருந்தாலும் நிர்வாணமாகக் குளிக்கக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனினும் உளூ நிறைவேறுவதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

 

(குறிப்பு: 2003 அக்டோபர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 25, 2014, 7:39 AM

தான் செய்யாத ஒன்றை மற்றவர்களுக்கு அறிவுரையாக கூறலாமா?

? ஒருவர் ஓரளவு குர்ஆன் ஹதீஸ்களைத் தெரிந்து வைத்துள்ளார். அவர் மற்றவர்களுக்கும் இக்கருத்தை எடுத்துக் கூறுகின்றார். ஆனால் அவர் அவற்றை தனது நடைமுறையில் செயல்படுத்தவில்லை. தான் செய்யாவிட்டாலும் அடுத்தவருக்கு எத்தி வைக்கலாம் என்று வாதாடுகின்றார். இது சரியா?

மண்டபம் எஸ். முஹம்மது ஷாஃபி, அபுதாபி

! மக்களுக்குச் சொல்வதை தான் செய்யாமல் இருப்பது மார்க்கத்தில் மிகவும் கண்டிக்கப்பட்ட செயலாகும்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது. 

(அல்குர்ஆன் 61:2,3)

இத்தகையவர்களுக்கு மறுமையில் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவது போன்று அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, "இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலகத்தில்) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கு அவர், "நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன். ஆனால் அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை செய்ய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன். ஆனால் அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்'' என்று கூறுவார்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று உஸாமா பின் ஸைத் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல் : புகாரி 3267

 

(குறிப்பு: 2003 செப்டம்பர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 24, 2014, 6:47 AM

குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாதா?

? குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாது, சில கணக்குகள் ஃபிக்ஹைக் கொண்டு தான் பிரிக்க முடியும் என்று ஓர் ஆலிம் கூறுகின்றார். இது சரியா?

! இதன் மூலம் அவர் என்ன கூற விரும்புகின்றார்? குர்ஆன் ஹதீஸை விட ஃபிக்ஹ் தான் உயர்ந்தது என்று கூறப் போகின்றாரா? அல்லது குர்ஆன் ஹதீஸில் இல்லாதது ஃபிக்ஹில் தான் உள்ளது என்று கூறுகின்றாரா? இந்த இரண்டில் எதைக் கூறினாலும் அவருக்கும்,இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தான் அர்த்தம்!

குர்ஆன் ஹதீஸைக் கொண்டு பாகப் பிரிவினை செய்ய முடியாது, ஃபிக்ஹ் மூலம் தான் முடியும் என்றால் ஃபிக்ஹ் சட்டங்களை எழுதியவர்களுக்கு வஹீ வந்து அதன் மூலம் அந்தச் சட்டங்களை இயற்றினார்களா?

இவ்வாறு கூறுவதும், நம்புவதும் தெளிவான இறை மறுப்பாகும். மத்ஹபுகளை நிலைநாட்டுவதற்காக இது போன்ற குஃப்ரான கருத்துக்களைக் கூறுகின்றனர். குர்ஆன் ஹதீஸை ஆய்வு செய்து எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

 

(குறிப்பு: 2003 செப்டம்பர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 24, 2014, 6:40 AM

தடை செய்யப்பட்ட உயிர் எது?

? 25:68 வசனத்தில், அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றி கொல்லக் கூடாது என்று கூறப்படுகின்றது. அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட உயிர் எது? விளக்கவும்.

எஸ்.எம். இல்யாஸ்,. திருமங்கலக்குடி

! கொலை செய்யக் கூடாது என்று குறிப்பிடும் இடங்களிலெல்லாம் பெரும்பாலும், இவ்வாறே கூறப்படுகின்றது. எனவே இது பொதுவாகக் கொலை செய்யக் கூடாது என்பதையே குறிக்கும். இதை ஏன் அல்லாஹ் இப்படிக் கூறவேண்டும்? கொலை செய்யக் கூடாது என்று மட்டும் கூறினால் போதாதா? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

விபச்சாரம், திருட்டு போன்ற செயல்களைப் பொறுத்த வரை முழுமையாகத் தடுக்கப்பட்ட குற்றங்களாகும். கொலை செய்வதும் தடுக்கப்பட்ட குற்றம் தான். ஆனால் பழிக்குப் பழியாக இஸ்லாமிய அரசாங்கத்தின் மூலம் கொலை செய்வதற்கு உரிமை உள்ளது.

ஒருவன் கொலை செய்து விட்டால் இஸ்லாமிய ஆட்சியில் அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். கொலை செய்யப்பட்டவனின் பொறுப்பாளர்கள் விரும்பினால் அவ்வாறு மரண தண்டனையை நிறைவேற்றாமல் நஷ்ட ஈடு வாங்கிக் கொண்டு கொலையாளியை மன்னித்து விடலாம். இது இஸ்லாமியக் குற்றவியல் சட்டம்.

கொலை செய்வது கூடாது என்று பொதுவாகக் கூறினால் இது போன்று தண்டனைக்காகக் கொல்வதும் கூடாது என்ற கருத்தைத் தந்து விடும். கொலையாளியை அரசாங்கத்தின் மூலமாகக் கொலை செய்வது அல்லாஹ்வால் தடுக்கப்பட்டதல்ல! இது போல் இஸ்லாமிய அரசால் செய்யப்படும் போரின் போதும் எதிரிகளைக் கொல்வதற்கு அனுமதி உள்ளது. இவை கொலையாக இருந்த போதும் அது அனுமதிக்கப்பட்ட செயலாக உள்ளது.

இது போன்று அனுமதிக்கப்பட்ட கொலைகளூம் உள்ளன. எனவே தான் பொதுவாகக் கொலை செய்வது குற்றம் என்று கூறாமல், அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட உயிர்களைக் கொல்வதைப் பெரும் பாவம் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது.

(இஸ்லாமிய சட்டப்படி மட்டுமல்லாது உலகின் எல்லா நாடுகளின் குற்றவியல் சட்டத்தின்படியும் இந்தக் கொலைகள் குற்றச் செயல்களாகக் கருதப்படுவதில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்)

 

(குறிப்பு: 2003 செப்டம்பர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 24, 2014, 6:36 AM

அமானிதம் என்ற சொல்லுக்கு பகுத்தறிவு என்று விளக்கம் கொடுப்பது சரியா?

? 33:72 வசனத்திற்கு அமானிதம் என்ற சொல்லுக்கு பகுத்தறிவு என்று விளக்கம் அளித்துள்ளீர்கள். ஆனால் ஜின்களுக்கும் பகுத்தறிவு உள்ளதாக குர்ஆன் வசனங்கள் மூலம் அறிகின்றோம். ஆனால் மேற்கண்ட வசனத்தில் மனிதன் மட்டும் அதைச் சுமந்து கொண்டான் என்று கூறப்படுகின்றது. ஜின்களைக் குறிப்பிடவில்லை. விளக்கம் தரவும்.

ஹிஜாபுல்லாஹ், பல்லாவரம்

! ஜின்கள் தனி இனமாக இருந்தாலும் பொதுவான விஷயங்களில் ஜின் இனத்தை,மனித இனத்தோடு இணைத்தே கூறப்படுவதை திருக்குர்ஆனில் காண முடிகின்றது. உதாரணமாக திருக்குர்ஆன் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக அருளப்பட்டது என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜின்களுக்கும் திருக்குர்ஆன் தான் வேதம் என்பதைக் கீழ்க்காணும் வசனங்கள் விளக்குகின்றன.

ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று, "நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்' எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது என (முஹம்மதே!) கூறுவீராக! அது நேர் வழியைக் காட்டுகிறது. எனவே அதை நம்பினோம். எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டோம். (என்றும் ஜின்கள் கூறின) 

(அல்குர்ஆன்72:1,2)

இதே போல் நரகத்தைப் பற்றிக் கூறும் போதும் ஜின் இனத்தை மனித இனத்தோடு இணைத்தே கூறுவதைக் காண முடிகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள். 

(அல்குர்ஆன் 66:6)

இந்த வசனத்தில் நரகத்தில் மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பது போன்ற கருத்து இடம் பெற்றுள்ளது. ஆனால் பின்வரும் வசனத்தில் ஜின்களும் நரகத்தில் இருப்பார்கள் என்பது கூறப்படுகின்றது.

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள். 

(அல்குர்ஆன்7:179)

இதுபோன்று திருக்குர்ஆனில் மனிதர்களை நோக்கிக் கூறப்பட்டுள்ள பெரும்பாலான அம்சங்கள் ஜின்களுக்கும் பொருந்தக் கூடியவையே! எனவே 33:72 வசனத்தில் மனிதன் சுமந்து கொண்டான் என்பதும் ஜின் இனத்தையும் சேர்த்தே குறிக்கும் என்று விளங்கினால் முரணில்லை.

 

(குறிப்பு: 2003 ஆகஸ்டு மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 24, 2014, 5:47 AM

ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் ஒளு செய்வதால் ஹிஜாப் முறையை பேணுவது சாத்தியம் இல்லையே

? மே இதழில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக ஒரே இடத்தில் ஒரே பாத்திரத்தில் உளூச் செய்ய அனுமதி இருப்பதாக விளக்கம் தந்துள்ளீர்கள். அப்படியானால் உளூச் செய்யும் போது ஹிஜாப் முறையைப் பேணுவது சாத்தியமில்லையே!

ஷம்சுதீன், துபை

? ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் உளூச் செய்யலாம் என்று கூறுவது 24:31வசனத்திற்கு மாற்றமாக உள்ளதே!

முஹம்மது இர்ஷாத், லால்பேட்டை.

மார்க்கத்தில் பொதுவாக ஒரு விஷயம் தடை செய்யப்பட்டு ஓரிரு சந்தர்ப்பங்களில் அந்தத் தடை மீறப்பட்டது போன்ற சான்றுகளைக் கண்டால் அதை முரண் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக அது மட்டும் விதிவிலக்கு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நூற்றுக்கணக்கான சான்றுகள் ஹதீஸ்களில் உள்ளன.

உதாரணமாக உளூச் செய்யும் போது இரு கால்களையும் கழுவியாக வேண்டும். இது பொதுவான சட்டம். ஆனால் சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கால்களைக் கழுவாமல் காலுறை மீது மஸஹ் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கால்களைக் கழுவ வேண்டும் என்பதற்கு இது முரணானது என்று கருதக் கூடாது. கால்களைக் கழுவுவதில் இது விதிவிலக்கு பெறுகின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோல் தான் உளூச் செய்யும் போது மட்டும் உளூச் செய்வதற்கான உறுப்புக்கள் தெரிவது விதிவிலக்கு பெறுகின்றது என்று புரிந்து கொண்டால் முரண்பாடாகத் தோன்றாது.

 

(குறிப்பு: 2003 ஜூலை மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 23, 2014, 5:54 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top