ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் ஒளு செய்வதால் ஹிஜாப் முறையை பேணுவது சாத்தியம் இல்லையே

? மே இதழில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக ஒரே இடத்தில் ஒரே பாத்திரத்தில் உளூச் செய்ய அனுமதி இருப்பதாக விளக்கம் தந்துள்ளீர்கள். அப்படியானால் உளூச் செய்யும் போது ஹிஜாப் முறையைப் பேணுவது சாத்தியமில்லையே!

ஷம்சுதீன், துபை

? ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் உளூச் செய்யலாம் என்று கூறுவது 24:31வசனத்திற்கு மாற்றமாக உள்ளதே!

முஹம்மது இர்ஷாத், லால்பேட்டை.

மார்க்கத்தில் பொதுவாக ஒரு விஷயம் தடை செய்யப்பட்டு ஓரிரு சந்தர்ப்பங்களில் அந்தத் தடை மீறப்பட்டது போன்ற சான்றுகளைக் கண்டால் அதை முரண் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக அது மட்டும் விதிவிலக்கு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நூற்றுக்கணக்கான சான்றுகள் ஹதீஸ்களில் உள்ளன.

உதாரணமாக உளூச் செய்யும் போது இரு கால்களையும் கழுவியாக வேண்டும். இது பொதுவான சட்டம். ஆனால் சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கால்களைக் கழுவாமல் காலுறை மீது மஸஹ் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கால்களைக் கழுவ வேண்டும் என்பதற்கு இது முரணானது என்று கருதக் கூடாது. கால்களைக் கழுவுவதில் இது விதிவிலக்கு பெறுகின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோல் தான் உளூச் செய்யும் போது மட்டும் உளூச் செய்வதற்கான உறுப்புக்கள் தெரிவது விதிவிலக்கு பெறுகின்றது என்று புரிந்து கொண்டால் முரண்பாடாகத் தோன்றாது.

December 23, 2014, 5:54 AM

நபிகள் நாயகத்திற்கு முந்தைய காலத்திலேயே ஜின்கள் பூமியை கடந்து சென்றுள்ளதே? இதற்கு விளக்கம் தரவும்

? மனிதனும் ஜின்னும் ஆற்றலைப் பெற்றுத் தான் வானங்கள் மற்றும் பூமியைக் கடந்து செல்ல முடியும் என்று 55:33 வசனம் கூறுகின்றது ஆனால் 72:8,9 வசனங்களில் நபிகள் நாயகத்திற்கு முந்தைய காலத்திலேயே ஜின்கள் பூமியைக் கடந்து சாதாரணமாகச் சென்றதாக உள்ளதே! விளக்கவும்.

அ. அப்துர்ரஹீம், டி.ஆர். பட்டிணம்

வானம் மற்றும் பூமியைக் கடப்பதற்கு ஆற்றல் தேவை என்று குர்ஆன் கூறுவதை ஒரு முன்னறிவிப்பு என்ற கோணத்தில் மட்டுமே பார்ப்பதால் இந்தச் சந்தேகம் எழுந்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மனிதனுக்கு அத்தகைய ஆற்றல் இல்லை. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்பே ஜின் இனத்திற்கு அந்த ஆற்றல் வழங்கப்பட்டிருந்ததாக குர்ஆன் கூறுகிறது. இது எந்த வகையிலும் 55:33வசனத்திற்கு முரண்பட்டதல்ல!

இரண்டு பேரை அழைத்து, உங்களிடம் அதிக பணம் இருந்தால் தான் நீங்கள் வெளிநாடு செல்ல முடியும் என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். இதில் இரண்டு பேரிடமும் பணம் இருக்கின்றதா இல்லையா என்ற தகவல் இல்லை. இரண்டு பேரில் ஒருவரிடம் பணம் இருக்கலாம். மற்றவரிடம் இல்லாமல் இருக்கலாம். அது இங்கு குறிப்பிடப்படவில்லை. வெளிநாடு செல்வதற்கு அதிகப் பணம் தேவை என்ற செய்தி மட்டுமே சொல்லப்படுகின்றது.

இது போல் இந்த வசனத்தில், வானம் மற்றும் பூமியின் விளிம்பைக் கடப்பதற்கு ஓர் ஆற்றல் தேவை என்று தான் கூறப்படுகின்றதே தவிர, இன்னும் யாருக்குமே அந்த ஆற்றல் இல்லை என்று கூறப் படவில்லை. மனிதனுக்கு தற்காலத்தில் அந்த ஆற்றல் கிடைத்திருப்பது போல் ஜின்களுக்கு முற்காலத்திலேயே அந்த ஆற்றல் வழங்கப் பட்டிருந்தது என்று தான் இதை விளங்கிக் கொள்ள வேண்டும். பூமியைக் கடந்து செல்வது பற்றி மனிதன் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அந்தக் காலத்தில் இதைப் பற்றி குர்ஆன் கூறுவதால் இதை மனித சமுதாயத்திற்குக் கூறப்பட்ட முன்னறிவிப்பாக எடுத்துக் கொள்கிறோம்.

December 23, 2014, 5:51 AM

போர் நேரங்களில் தொழுகையில் குனூத் ஓதுவதற்கு ஆதாரம் இருக்கின்றதா?

? இராக் போரின் போது இங்குள்ள பள்ளி ஒன்றில் ஃபஜ்ரு மற்றும் அஸர் தொழுகைகளில் குனூத் ஓதினார்கள். இதற்கு ஆதாரம் உள்ளதா? நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குனூத் ஓதிய போது அதை அல்லாஹ் தடை செய்து விட்டதாக ஹதீஸ் உள்ளதே! விளக்கவும்.

இஸ்மாயீல் ஷெரீப், சென்னை

நபி (ஸல்) அவர்கள் ருகூவுக்குப் பிறகு ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த இணை வைப்பவர்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கும் அந்த இணைவைப்பவர்களுக்கும் இடைய ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிக்கீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிக்கீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : புகாரி 1002

இந்த ஹதீஸின் அடிப்படையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு சோதனை ஏற்படும் காலத்தில் எதிரிகளுக்கு எதிராகப் பிரார்த்தித்து குனூத் ஓதலாம் என்று விளங்குகின்றது. ஆனால் திருக்குர்ஆனின் 3:128வது வசனம் அருளப்பட்டவுடன் இவ்வாறு குனூத் ஓதுவது தடை செய்யப்பட்டதாக சில ஹதீஸ்கள் உள்ளதால் அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின் போது தமது தலையை உயர்த்தி, "அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து'' என்று சொல்- விட்டுப் பிறகு, "இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையி-ருந்து அப்புறப்படுத்துவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே மகத்துவமும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், "(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்'' என்ற (3:128) வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் : புகாரி 7346

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதை அல்லாஹ் 3:128 வசனத்தை அருளி தடை செய்து விட்டதாகக் கூறப்படுகின்றது. எனவே இதன் அடிப்படையில் எவருக்கும் எதிராகப் பிரார்த்தனை செய்து குனூத் ஓதுவது கூடாது என்று சிலர் வாதிக்கின்றனர்.

இதே கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறைபாடும் இல்லை. எனினும் இந்த ஹதீஸ்களுக்கு மாற்றமாக உஹதுப் போரின் போது தான் 3:128 வசனம் இறங்கியது என்ற கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன. அவையும் ஆதாரப்பூர்வமானவையாக இருப்பதால் அது குறித்தும் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்களின் முன் பற்கள் உடைக்கப்பட்டன. அவர்களுடைய தலையில் காயம் ஏற்பட்டது. அவர்கள் இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு, "தங்களுடைய நபிக்குக் காயத்தை ஏற்படுத்திய, தங்களது நபியின் முன் பற்களை உடைத்து விட்ட சமுதாயம் எப்படி வெற்றி பெறும்? அவரோ அவர்களை அல்லாஹ்வின் பாதையில் அழைக்கின்றார்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், "(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்'' என்ற (3:128) வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : முஸ்-ம் 3346

ஒரே வசனம் அருளப்பட்டது குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. இரண்டு சந்தர்ப்பத்திலுமே இந்த வசனம் அருளப்பட்டது என்ற கருத்து உள்ளது. ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் இரண்டு சந்தர்ப்பங்களிலும் அருளப்பட்டிருந்தால் குர்ஆனில் இரண்டு இடங்களில் அந்த வசனம் இருக்க வேண்டும். ஏனெனில் பல தடவை அருளப்பட்ட வசனங்கள் பல தடவை குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த வசனம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே உள்ளது.

இந்த ஒரு வசனம் அருளப்பட்டதற்குத் தான் இரு வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எனவே இரண்டில் ஏதாவது ஒன்று தான் சரியாக இருக்க முடியும்.

ஒன்று, நபித்தோழர்களைக் கொன்ற கூட்டத்தினருக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதிய போது இறங்கியிருக்க வேண்டும்.

அல்லது உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்கள், முஷ்ரிக்குகளைச் சபித்த போது இறங்கியிருக்க வேண்டும்.

இதில் எந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வசனம் இறங்கியது என்பதை நாம் ஆய்வு செய்யும் போது,நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதைக் கண்டித்து இவ்வசனம் அருளப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

குர்ஆனை மனனம் செய்த 70 நபித்தோழர்களை, உடன்படிக்கைக்கு மாற்றமாகக் கொலை செய்த கூட்டத்திற்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இதைக் கண்டித்து வசனம் அருளும் அளவுக்கு இதில் வரம்பு மீறல் எதுவும் இல்லை. அநீதி இழைத்த ஒரு கூட்டத்திற்கு எதிராகப் பிரார்த்தனை செய்வது அல்லாஹ் அங்கீகரித்த ஒரு செயல் தான். இதற்கு குர்ஆனிலேயே சான்றுகள் உள்ளன.

"என் இறைவா! பூமியில் வசிக்கும் (உன்னை) மறுப்போரில் ஒருவரையும் விட்டு வைக்காதே!'' என்று நூஹ் கூறினார்.

(அல்குர்ஆன்71:26)

இந்த வசனத்தில் இறை மறுப்பாளர்களை அழித்து விடுமாறு நூஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றார்கள். அதை அல்லாஹ்வும் ஏற்றுக் கொண்டு பெருவெள்ளத்தின் மூலம் அம்மக்களை அழித்தான். அநியாயக்காரர்களுக்கு எதிராகப் பிரார்த்தனை செய்வது நபிமார்களின் நடைமுறைக்கு மாற்றமானதல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.

அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை அஞ்சிக் கொள், அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(நூல்: புகாரி 1496)

எனவே பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை விளங்க முடிகின்றது.

குர்ஆனை மனனம் செய்தவர்கள் மிகவும் குறைவான அந்தக் காலத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட காரிகளை படுகொலை செய்தது மிகப் பெரும் பாதிப்பை நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அந்தக் கூட்டத்தினருக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இது அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயல் தான். இதைக் கண்டித்து அல்லாஹ் வசனம் அருளினான் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.

"அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை'' என்று அல்லாஹ் அந்த வசனத்தில் கூறுகின்றான். அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் எந்தச் செயலும் இந்தச் சம்பவத்தில் நடக்கவில்லை. அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது அவனது அதிகாரத்தில் தலையிடுவதாக ஒரு போதும் ஆகாது. இன்னும் சொல்வதென்றால் இப்படிப் பிரார்த்திப்பது அல்லாஹ்வின் அதிகாரத்தை, அவனது வல்லமையை நிலை நிறுத்துவதாகவே அமைந்துள்ளது. எனவே நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிக்குகளுக்கு எதிராக குனூத் ஓதிய போது இந்த வசனம் அருளப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அதே சமயத்தில் உஹதுப் போரின் போது இந்த வசனம் அருளப் பட்டிருக்க நியாயமான காரணங்கள் உள்ளன.

உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்ட போது, நபியின் முகத்தில் காயம் ஏற்படுத்திய இந்தச் சமுதாயம் எப்படி வெற்றி பெறும்? என்று கேட்கின்றார்கள். இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவில்லை. தாம் ஒரு நபியாகவும், நேர்வழிக்கு மக்களை அழைத்துக் கொண்டும் இருப்பதால் தம்மைக் காயப்படுத்தியவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று அவர்களாகவே முடிவு செய்வது போல் இந்த வார்த்தைகள் அமைந்துள்ளன.

தாங்க முடியாத துன்பம் ஏற்படும் போது மனிதர்கள் இது போன்ற வார்த்தைகளைக் கூறி விடுவதுண்டு. பாதிக்கப்பட்டவனின் வாயில் இத்தகைய வார்த்தைகள் வெளி வருவதை அல்லாஹ்வும் பொருட்படுத்துவது கிடையாது என்பதை திருக்குர்ஆன் 4:148வசனத்திலிருந்து அறியலாம்.

ஆனால் இறைவனின் தூதர் இவ்வாறு கூறினால், ஒருவரை வெற்றி பெற வைக்கவும்,தோல்வியுறச் செய்யவும் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதோ என்ற கருத்தை அது விதைத்து விடும். எனவே தான் "எனக்கு இரத்தச் சாயம் பூசியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்?'' என்று வேதனை தாளாமல் கூறியதைக் கண்டிக்கிறான்.

உம்மைத் தாக்கியவர்களுக்குக் கூட நான் நினைத்தால் வெற்றியளிப்பேன்; அல்லது அவர்களை மன்னித்தும் விடுவேன். இது எனது தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ள விஷயம். இதில் தலையிட ஒரு நபிக்குக் கூட உரிமையில்லை என்ற தோரணையில் தான் இவ்வாறு இறைவன் கூறுகிறான். இறைவனுடைய அதிகாரத்தில் தமக்குப் பங்கு இருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைக்க மாட்டார்கள்; என்றாலும் இது போன்ற வார்த்தைகள் கூட இறைவனுக்குக் கோபம் ஏற்படுத்துகிறது என்பதை இந்த வசனம் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.

இதை வைத்துப் பார்க்கும் போது, உஹதுப் போர் சமயத்தில் இந்த வசனம் அருளப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. மேலும் இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களும் உஹதுப் போர் குறித்த வசனங்களாகவே உள்ளன என்பதும் இந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிக்குகளுக்கு எதிராக குனூத் ஓதியதைத் தடை செய்து 3:128 வசனம் அருளப்படவில்லை என்பது தெளிவாகின்றது.

புகாரியில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் 4560வது ஹதீஸில், "நபி (ஸல்) அவர்கள் எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் குனூத் ஓதுவார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது. 70 காரிகள் கொல்லப்பட்ட இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குனூத் ஓதவில்லை; பொதுவாக யாருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் குனூத் ஓதுவார்கள் என்று இந்த வாசகம் தெரிவிக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதுவது பற்றித் தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது என்று ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் முஸ்-ம் மற்றும் பல நூல்களில் கூறப்படும் காரணம் தான், அதாவது உஹதுப் போரின் போது அருளப்பட்டது என்பது தான் ஏற்புடையதாக உள்ளது.

மேலும் குனூத் பற்றியே இவ்வசனம் அருளப்பட்டது என்ற ஹதீஸ் இப்னு ஷிஹாப் எனும் ஸுஹ்ரி வழியாகவே அறிவிக்கப்படுகின்றது. அவர் நபித்தோழரிடம் கேட்டு அறிவிப்பது போல் புகாரியின் வாசக அமைப்பு இருந்தாலும், முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இதே ஹதீஸின் வாசக அமைப்பு ஸுஹ்ரி அவர்கள் நபித்தோழர்கள் வழியாக இல்லாமல் சுயமாக அறிவிக்கின்றார் என்று தெளிவுபடுத்துகின்றது. "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்ட கொலையாளிகளைச் சபித்து குனூத் ஓதினார்கள். மேற்கண்ட வசனம் அருளப்பட்டவுடன் குனூத்தை விட்டு விட்டார்கள் என்று நமக்குத் தகவல் கிடைத்துள்ளது''என்று ஸுஹ்ரி கூறியதாக முஸ்லிம் 1082 ஹதீஸ் கூறுகின்றது.

இவ்வசனம் குனூத் குறித்துத் தான் அருளப்பட்டது என்ற விபரத்திற்கு நபித்தோழர்கள் வழியான சான்று ஏதும் ஸுஹ்ரியிடம் இல்லை என்பதை இதி-ருந்து அறியலாம். ஸுஹ்ரியின் கூற்றுடன் ஹதீஸ் கலந்து விட்டது என்று ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்களும் தமது ஃபத்ஹுல் பாரியில் கூறுகின்றார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதாகக் கூறப்படும் செய்தி மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது. அதைத் தடை செய்து வசனம் இறங்கியதாகக் கூறப்படும் செய்திகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இல்லை.

சமுதாயத்திற்குச் சோதனையான கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் கடமையான தொழுகைகளில் குனூத் ஓதியுள்ளார்கள் என்பதால் நாமும் இது போன்ற கட்டங்களில் குனூத் ஓதலாம்.

December 23, 2014, 5:46 AM

ஹஜாத் தொழுகை என்று உள்ளதா? இதில் கலந்து கொள்ளலாமா?

? இங்கு (புருனையில்) அமெரிக்காவின் அராஜகத்திற்கு எதிராக ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்கு முன்னும் பின்னும் "ஹாஜத்' தொழுகை என்று நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுகின்றனர். இந்தத் தொழுகையில் கலந்து கொள்ளலாமா?

அப்துர் ரஹீம், புருனை

நபி (ஸல்) அவர்கள் "ஹாஜத்' தொழுகை என்ற பெயரில் தொழுததாக ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸையும் காண முடியவில்லை. ஹாஜத் தொழுகை குறித்து திர்மிதியில் ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும்.

"யாருக்காவது அல்லாஹ்விடமோ அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும். அதை அழகிய முறையில் செய்யட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும். பின்பு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, "லாயிலாஹ இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீம். சுப்ஹானல்லாஹி ரப்பில் அர்ஷில் அழீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்அலுக மூஜிபாதி ரஹ்மதிக, வஅஸாயிம மஃபிரதிக. வல்கனீமத மின் குல்லி பிர்ரின் வஸ்ஸலமாத மின் குல்- இஸ்மின் லாததஃலீ தன்பன் இல்லா கஃபர்தஹு வலாஹம்மன் இல்லா ஃபர்ரஜ்தஹு வலா ஹாஜதன் ஹிய லக ரிளன் இல்லா களைதஹா யா அர்ஹமர் ராஹிமீன்' என்று கூறட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி),

நூல் : திர்மிதி 441

"இதன் அறிவிப்பாளர் வரிசையில் குறை கூறப்பட்டுள்ளது. ஃபாயித் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பலவீனமானவர்' என்று திர்மிதி இமாம் கூறுகின்றார்கள்.

இந்தப் பெயரில் தொழுகை இல்லை என்றாலும் தொழுகையைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும் என்பது குர்ஆனின் கட்டளையாகும்.

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.

(அல்குர்ஆன் 2:45)

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்!

(அல்குர்ஆன் 2:153)

நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தொழுவார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி),

நூல் : அபூதாவூத் 1124

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் ஏதேனும் ஒரு நாட்டம் நிறைவேற வேண்டும் என்பதற்காகத் தொழுவது மார்க்கத்தில் வலியுறுத்தப் பட்டுள்ள ஒன்று தான்.

இந்தத் தொழுகையில் கலந்து கொள்ளலாமா? என்று நீங்கள் கேட்டிருப்பதன் மூலம் ஜமாஅத்தாகத் தொழுவதாகத் தெரிகின்றது. இவ்வாறு ஜமாஅத்தாகத் தொழுவது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத ஒன்றாகும். அவரவர் தனித்தனியாகத் தொழுது இது போன்ற சோதனைகளை விட்டும் பாதுகாப்பு தேடலாம்.

 

December 23, 2014, 5:41 AM

ஜுமுஆ தொழுகையில் ருகூவில் நீண்ட துஆ ஓதுவதற்கு ஆதாரம் உள்ளதா?

? ஜும்ஆ தொழுகையின் முதல் ரக்அத்தில் ருகூவு செய்து எழுந்து நிற்கும் அந்த சிறு நிலையில் ரப்பனா லகல் ஹம்து சொல்லியதும் இமாம் ஸுஜூது செய்யாமல் தொடர்ந்து நீண்ட துஆவை ஓதுகின்றார். இதற்கு ஆதாரம் உள்ளதா?

 

இமாம், ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா கூறியதும், ரப்பனா லகல் ஹம்து மட்டும் தான் கூற வேண்டும் என்றில்லை. இந்த நிலையில் ஓதுவதற்கு நபி (ஸல்) அவர்கள் பல்வேறு திக்ருகளை கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும்,

"ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வல் அர்ழி வமில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அஹ்லஸ் ஸனாயி வல் மஜ்த். அஹக்கு மா காலல் அப்து. வகுல்லுனா லக்க அப்துன். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத்த வல முஃத்திய லிமா மனஃத்த. வல யன்ஃபஃ தல்ஜத்தி மின்கல் ஜத்'' என்று கூறுவார்கள்.

பொருள் : எங்கள் அதிபதியே! வானங்களும், பூமியும் நிரம்பும் அளவுக்கு நீ நாடும் இன்ன பிற பொருட்கள் யாவும் நிரம்பும் அளவுக்குப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நாங்கள் அனைவரும் உன் அடிமைகள் தாம். "இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடமிருந்து பயன் அளிக்காது' என்பது தான் அடியார்கள் கூறும் சொற்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்ததாகும்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),

நூல்:முஸ்லிம் 735 (தமிழாக்கம் 822)

இது போன்ற நீண்ட திக்ரை அந்த இமாம் ஓதியிருக்கலாம். அவர் என்ன ஓதினார் என்பது தெரிந்தால் தான் அது ஆதாரமானதா? இல்லையா என்று கூற இயலும். ஆயினும் ஜும்ஆ தொழுகையின் போது மட்டும் குறிப்பிட்டு எதையும் ஓதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

December 23, 2014, 5:36 AM

முதல் ஜமாஅத்தில் கிடைக்கும் நன்மை இரண்டாவது ஜமாஅத்தில் தொழுதால் கிடைக்குமா?

? ஜமாஅத் தொழுகை முடிந்த பின் இரண்டாவது ஜமாஅத் நடக்கின்றது. முதல் ஜமாஅத்தில் தொழுவதில் கிடைக்கும் நன்மை இரண்டாவது ஜமாஅத்தில் தொழுதால் கிடைக்குமா?

அதிரை அபூஷஹீத் தவ்லத், துபை

தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு நன்மை என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்களில் முதல் ஜமாஅத், இரண்டாவது ஜமாஅத் என்று பிரித்துக் கூறப்படாமல் பொதுவாக ஜமாஅத் என்றே கூறப்படுகின்றது. இதை வைத்து முதல் ஜமாஅத்திற்கும் இரண்டாவது ஜமாஅத்திற்கும் நன்மை வித்தியாசம் எதுவும் கிடையாது என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இது தவறாகும்.

பொதுவாக ஜமாஅத் தொழுகையை வலியுறுத்தும் ஹதீஸ்கள் அனைத்திலும் பள்ளியில் பாங்கு சொல்லி, நடத்தப்படும் முதல் ஜமாஅத்தையே குறிப்பதாக அமைந்துள்ளன. ஹதீஸ்களில் முதல் ஜமாஅத்திற்கென்று ஒரு முக்கியத்துவம் இருப்பதைக் காண முடிகின்றது.

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து,கள்ளிகளாக உடைக்கும் படி உத்தரவு பிறப்பித்து விட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்பு செய்யும் படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுவிக்கும் படி ஒருவருக்குக் கட்டளையிட்டு விட்டு, (ஜமாஅத் தொழுகைக்கு வராத) மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்து விட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. என் உயிர் எவன் கைவசத்திலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஒரு எலும்போ அல்லது ஆட்டின் இரு குளம்புகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் இஷா தொழுகையில் கலந்து கொள்வார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 644, 7224

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், பள்ளியில் பாங்கு சொல்லி நடத்தப்படும் முதல் ஜமாஅத்திற்கு வராதவர்களைத் தான் கண்டிக்கின்றார்கள். பள்ளியில் இஷா தொழுகையின் ஜமாஅத் எட்டு மணிக்கு என்றால் பத்து மணிக்குக் கூட இரண்டாவது ஜமாஅத் நடத்தித் தொழ முடியும். ஆனால் இது முதல் ஜமாஅத்தில் தொழுததைப் போன்று நன்மையைப் பெற்றுத் தராது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

பொதுவாகவே முதல் ஜமாஅத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது ஜமாஅத்திற்குக் கொடுக்கவில்லை.

நபி (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் மிஹ்ஜன் (ரலி) இருந்தார். அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் சென்று (தொழுது விட்டு) திரும்பி வந்தார்கள். மிஹ்ஜன் (ரலி) அதே சபையில் இருந்தார். "நீ தொழாமல் இருந்தது ஏன்?நீ முஸ்லிம் இல்லையா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மிஹ்ஜன் (ரலி), "அப்படியில்லை! நான் வீட்டிலேயே தொழுது விட்டேன்'' என்று கூறினார். நீ வீட்டில் தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு) வந்தால் மக்களோடு சேர்ந்து தொழு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புஸ்ர் பின் மிஹ்ஜன்,

நூற்கள் : நஸயீ 848, அஹ்மத் 15799

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவருக்கு தர்மம் செய்யக் கூடியவர் யார்? அவர் இவரோடு சேர்ந்து தொழட்டும்'' என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி),

நூல் : அஹ்மத் 10980

பாங்கு சொல்லப்பட்டு முதல் ஜமாஅத் நடைபெறும் போது, தொழாமல் இருந்த நபித்தோழரைப் பார்த்து, நீ முஸ்லிம் தானா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு,ஜமாஅத்தோடு சேர்ந்து தொழுதாக வேண்டும் என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் அதே சமயம் இரண்டாவது ஜமாஅத் நடைபெறும் போது எல்லோரும் அதில் சேர்ந்து தொழ வேண்டும் என்று கூறவில்லை. இதிலிருந்து முதல் ஜமாஅத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் இரண்டாவது ஜமாஅத்திற்கு இல்லை என்பதை அறியலாம்.

ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதற்கு அதிக நன்மை என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. முதல் ஜமாஅத்தில் தொழுவதற்குத் தனிச் சிறப்பு இல்லையென்றால் முதல் ஜமாஅத்தில் இரண்டாவது வரிசையில் தொழுபவரை விட, இரண்டாவது ஜமாஅத்தில் முதல் வரிசையில் தொழுபவருக்கு அதிக நன்மை என்றாகி விடும். இதிலிருந்து ஹதீஸ்களில் கூறப்படும் ஜமாஅத் தொழுகை என்பது பள்ளியில் நடத்தப்படும் முதல் ஜமாஅத்தையே குறிக்கும் என்பதை அறிய முடியும். எனவே இரண்டாவது ஜமாஅத்தை விட முதல் ஜமாஅத்தில் தொழுவது தான் சிறந்ததாகும்.

அதே சமயத்தில் இணை வைக்கும் இமாம், சுன்னத்துக்களைப் புறக்கணிக்கும் இமாம் போன்றவர்கள் தொழுகை நடத்தும் பள்ளிகளிலும், நபிவழியைப் பேணி தொழுபவர்களை ஜமாஅத்தில் சேர்ந்து தொழ விடாமல் தடுக்கும் பள்ளிகளிலும் முதல் ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுவதற்கு குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்களுக்கு வாய்ப்பில்லை. இதுபோன்ற மார்க்கக் காரணங்களுக்காக இரண்டாவது ஜமாஅத்தில் தொழும் போது, அது முதல் ஜமாஅத்தை விட சிறப்பு குறைந்ததாக ஆகாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

December 23, 2014, 5:29 AM

குற்றம் புரியும் மனிதனால் குர்ஆனை சுமக்கும்பொழுது எந்த தவறும் செய்யாத மலையினால் ஏன் தாங்க முடியாது?

? இறைவன் குர்ஆனை இறக்கும் போது, மலையின் மீது இறக்குகின்றேன் என்று கேட்க, என் மீது குர்ஆனை இறக்கினால் வெடித்துச் சிதறி விடுவேன் என்று மலை கூறியதால் மனிதன் மீது இறக்கியதாக இறைவன் கூறுகின்றான். அதிகமாக குற்றம் புரியும் மனிதன் குர்ஆனைச் சுமக்கும் போது, எந்தத் தப்பும் செய்யாத மலையினால் ஏன் தாங்க முடியாது?

டி. திவான் பஜிரா, பெரிய குளம்.

குர்ஆனை மலையின் மீது இறக்குவதாக இறைவன் அனுமதி கேட்டதாகவும், அதற்கு மலை மறுத்ததாகவும் நீங்கள் கூறுவதற்கு குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை.

இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம்.

(அல்குர்ஆன் 59:21)

இந்த வசனத்தை அடிப்படையாக வைத்து இவ்வாறு நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் இந்த வசனத்தில் தாங்கள் கூறுவது போன்ற கருத்து இடம் பெறவில்லை.

குர்ஆனில் இடம் பெற்றுள்ள அறிவுரைகள், செய்திகள் ஆகியவற்றின் காரணமாக மலை கூட இறையச்சத்தால் பணிந்து விடும், ஆனால் மனிதன் இந்தக் குர்ஆனைச் சிந்திக்காமல் இருக்கின்றான் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் உதாரணம் கூறுகின்றான். இது மனிதர்கள் சிந்திப்பதற்காக அல்லாஹ் கூறுகின்ற உதாரணம் தான் என்று இவ்வசனத்திலேயே இடம் பெற்றுள்ளதைக் கவனிக்கவும்.

December 23, 2014, 5:23 AM

ஸஜ்தாவில் குர்ஆனை ஓதலாமா?

? தொழுகையில் ருகூவு மற்றும் ஸஜ்தாவில் குர்ஆன் ஓதுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்ற செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இதற்கு மாற்றமாக, “உமது இரட்சகனின் பெயரைக் கொண்டு தஸ்பீஹ் செய்வீராக” என்ற வசனம் இறங்கிய போது இதை உங்கள் ருகூவில் ஓதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பல்வேறு நூல்களில் இடம் பெற்றுள்ளதே, விளக்கவும்.

ஈ. இஸ்மாயில் ஷெரீப், சென்னை.

மகத்துவமிக்க உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக (அல்குர்ஆன் 56 : 96 பஸப்பிஹ் பிஸ்மி ரப்பிகல் அளீம்) என்ற வசனம் இறங்கிய போது இதை உங்கள் ருகூஃவில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உய்ர்ந்த உனது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 87 : 1 ஸப்பிஹிஸ்ம ரப்பிகல்அஃலா) என்ற வசனம் இறங்கியதும் இதை உங்களுடைய சுஜூதில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி),

நூல் : அபூதாவூத் 836

ருகூவில் அந்த வசனத்தை ஓதுங்கள் என்று இங்கு கூறப்படவில்லை. மாறாக இதை உங்கள் ருகூவில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. அதாவது இந்தவசனத்தை ருகூவில் செயல்படுத்துங்கள் என்பது தான் இதன் பொருள்.

அதனால் தான் ருகூவில், குர்ஆன் வசனத்தை அப்படியே ஓதாமல், சுப்ஹான ரப்பியல் அளீம் என்று ஓதுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். எனவே ருகூவில் குர்ஆன் ஓதக்கூடாது என்று இடம் பெறும் அறிவிப்புக்கு இது முரண்பாடானதல்ல.

December 21, 2014, 7:17 AM

வட்டித் தொழில் செய்பவரிடம் வேலை பார்க்கலாமா?

? நான் ஒரு துணி வியாபாரியிடம் ஒட்டுனராகப் பணி புரிகின்றேன். அவர் ஒரு மார்வாடி நல்ல சம்பளமும், தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளுக்கு அனுமதியும் தருகின்றார். இருப்பினும் அவர் மறைமுகமாக வட்டித் தொழிலும் செய்கின்றாரோ என்ற சந்தேகம் எழுகின்றது. நான் அவரிடம் வேலை செய்வது தவறாகுமா? அவர் வீட்டு விஷேசங்களில் சாப்பிடச் சொன்னால் சாப்பிடலாமா?

ஏ.எல். காதர் ஷரீஃப், சென்னை.

 நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்!பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!

(அல்குர்ஆன் 5 - 2)

இந்த வசனத்தின் அடிப்படையில் பாவத்திற்குத் துணை போகக் கூடாது.

உங்களுடைய முதலாளி வட்டித் தொழில் பார்க்கின்றார் என்றே வைத்துக் கொள்வோம். அந்த வட்டித் தொழில் சம்பந்தமாக உங்களை வேலை செய்யச் சொல்கின்றார் என்றால் அதைச் செய்யக் கூடாது. அவ்வாறின்றி பொதுவான, மார்க்கத்தில் தடுக்கப்படாத வேலைகளையே செய்யச் சொன்னால் அவரிடம் வேலை செய்வதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.

மார்க்கத்தில் தடுக்கப்படாத உணவாக இருந்தால் அதை அவரது வீட்டில் சாப்பிடுவதற்கும் எந்தத் தடையும் இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் யூதர்களின் வீட்டில் விருந்துண்டதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

கீழ்க்காணும் ஆக்கத்தையும் வாசிக்கவும்

http://www.onlinepj.com/kelvi_pathil/porlatharam/vatti_vangiyavarin_nonbukanji_halala/#.VJasgV4Dpg

December 21, 2014, 7:15 AM

திருமண நாள் கொண்டாடலாமா?

? திருமண நாள் வந்தால் அன்றைய தினம் சந்தோஷமாக மற்றவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழலாமா? புது ஆடை அணியலாமா?

ஆர்.ஷம்சுல்ஹுதா, பெரம்பலூர்

பிறந்த நாள், இறந்த நாள், திருமண நாள் என்று பல்வேறு நினைவு நாட்களைக் கொண்டாடுவது இஸ்லாத்தில் இல்லை. இவை அனைத்துமே பிற மதக் கலாச்சாரமாகும். இது போன்று நினைவு நாள் கொண்டாடுவதை மதச் சடங்காகக் கருதி மாற்று மதத்தவர்கள் செய்து வருவதால் அதை முஸ்லிம்கள் செய்யக் கூடாது.

யார் இன்னொரு சமுதாயத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சார்ந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் – இப்னு உமர் (ரலி),

நூல் – அபூதாவூத்

 மேலும் இது போன்ற விழாக்களைக் கொண்டாடும் போது அது அவசியம் கொண்டாடியாக வேண்டிய ஒன்று என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கும். வசதி இல்லாதவர்களும் இதைத் தவிர்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எனவே இது ஏற்படுத்தும் பின்விளைவுகளைக் கருதியும் இதைத் தவிர்த்தாக வேண்டும்.

December 21, 2014, 7:12 AM

இறைமறுப்பாளரின் பிரார்த்தனை ஏற்றுக்க்கொள்ளப்படுமா?

 இஸ்லாமிய மார்க்கத்திற்குப் புறம்பான குணம் உள்ளவர் ஈராக் வெற்றி பெறுவதற்காக பிரார்த்தனை செய்கின்றார். இவரது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படுமா?

அப்துர்ரஹ்மான், லெப்பைக்குடிக்காடு

தலை கலைந்து, புழுதி படர்ந்த நிலையில் நீண்ட பயணம் செய்யக் கூடிய ஒரு மனிதன், “எனது இறைவனே, எனது இறைவனே” என்று வானத்தை நோக்கி தனது இரு கைகளையும் நீட்டுகின்றான். அவனுடைய உணவு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய குடிப்பு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய உடை ஹராமாக இருக்கின்றது. அவன் ஹராமிலேயே மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றான். இவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் – அபூஹுரைரா (ரலி),

நூல் – முஸ்லிம் 1844

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒருவரது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமாயின் அவர் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியங்களைச் செய்பவராக இருக்கக்கூடாது என்பதை அறியலாம். இது பொதுவாக பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படுவதற்கு இஸ்லாம் கூறும் நிபந்தனையாகும்.

ஆனால் அதே சமயம் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட ஒருவர் இறை நிராகரிப்பாளராக இருந்தாலும் அவர் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் ஏற்று, அவரை காப்பாற்றுவான் என்பதை அல்குர்ஆன் 10 – 22வசனம் கூறுகின்றது.

December 21, 2014, 7:10 AM

வேலை பார்க்கும் கம்பெனிக்கு வாங்கி கொடுக்கும் பொருட்களில் கமிஷன் வைக்கலாமா?

? நான் வேலை பார்க்கும் கம்பெனியில் தேவையான பொருட்களை வாங்குவதற்கு என்னை அனுப்புவார்கள். இதற்காக நான் வெளியூர் சென்று பல கடைகள் ஏறி இறங்கி பொருட்களை வாங்கி வந்து கம்பெனியில் சேர்க்கிறேன். பொருட்கள் நன்றாக இருப்பதால் கம்பெனி நிர்வாகத்தினருக்கு திருப்தியாக உள்ளது. இதற்காக நான் பொருட்களை வாங்கும் கடைகளில் 10 சதவிகிதம் கமிஷன் பெற்றுக் கொள்ளலாமா?

இப்னு அப்துல் ஹபீப், கன்னூர்

நீங்கள் இவ்வாறு கமிஷன் வாங்குவது நிர்வாகத்திற்குத் தெரிந்து அவர்கள் சம்மதித்தால் வாங்கிக் கொள்ளலாம். அது உங்கள் கம்பெனியினர் உங்களுக்குத் தருகின்ற அன்பளிப்பாக ஆகிவிடும். ஆனால் கம்பெனியினருக்குத் தெரியாமல் கமிஷன் வாங்குவதற்கு அனுமதி இல்லை.

அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நபி (ஸல்)அவர்கள் நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது, “இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், “இவர் தன் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டும். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில் யாரேனும் அந்த ஸகாத் பொருளிலிருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும். பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்” என்றுகூறினார்கள்.

பிறகு அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தமது கைகளை உயர்த்தி, “இறைவா, நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?” என்று மும்முறை கூறினார்கள்.

அறிவிப்பவர் – அபூஹுமைத் அஸ்ஸாயிதீ (ரலி),

நூல் – புகாரி 2597

இந்த ஹதீஸில் ஸகாத் பொருள் குறித்துக் கூறப்பட்டாலும், அதை வசூலிக்கும் பணியில் அமர்த்தப்பட்டவர், தமக்கென்று அன்பளிப்பு வழங்கப்பட்டது என்று கூறுவதை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. வீட்டில் இருந்தால் இது கிடைத்திருக்குமா என்று கேட்கின்றார்கள். இந்த அடிப்படையில் கமிஷன் உங்களுக்கென்று வழங்கப்பட்டாலும்,அது அந்தப் பொருளை வாங்கியதற்காகத் தான் வழங்கப்படுகின்றது. எனவே அந்தக் கமிஷனும் கம்பெனிக்குச் சொந்தமானது தான். கம்பெனியினர் சம்மதிக்காத வரை அதைவாங்கிக் கொள்ள உங்களுக்கு அனுமதியில்லை.

December 21, 2014, 6:53 AM

லுஹர் தொழாத நிலையில் அஸர் ஜமாஅத் நடந்தால் முதலில் எந்த தொழுகையை தொழவேண்டும்?

? பயணத்தில் இருக்கும் போது லுஹர் தொழுகை தொழ முடியாமல் இருந்து பிறகு பள்ளியில் அஸர் தொழுகை ஜமாஅத் நடைபெறும் போது ஜமாஅத்துடன் சேர்ந்து அஸர் தொழ வேண்டுமா? அல்லது லுஹரைத் தொழுத பிறகு தான் அஸர் தொழ வேண்டுமா?

ஏ.ஆகிலா பானு, வடகால்

அகழ்ப் போரின் போது சூரியன் மறைந்த பின் உமர் (ரலி), குறைஷிக் காஃபிர்களை ஏசிக் கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே, சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக நானும் அஸர் தொழவில்லை” என்று கூறினார்கள். நாங்கள் புத்ஹான் எனும் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பின்அஸர் தொழுதார்கள். அதன் பின் மக்ரிப் தொழுதார்கள்.

அறிவிப்பவர் – ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்கள் – புகாரி 596, முஸ்லிம் 1000, திர்மிதி 164, நஸயீ 1349

இந்த ஹதீஸில் குறைஷிக் காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களின் அஸர் தொழுகையை தாமதப் படுத்திவிட்ட போது, தவற விட்ட அஸர் தொழுகையை முதலில் நிறைவேற்றி விட்டுப் பின்னர் தான் மக்ரிப் தொழுகின்றார்கள். இந்த அடிப்படையில் லுஹரைத் தொழுத பிறகே அஸர் தொழவேண்டும்.

பள்ளியில் அஸர் தொழுகையின் ஜமாஅத் நடந்து கொண்டிருந்தால் அந்த ஜமாஅத்திலேயே சேர்ந்து லுஹர் தொழுகையை நிறைவேற்ற அனுமதி உள்ளது. ஜமாஅத் தொழுகையில் இமாமுடைய நிய்யத்தும் பின்பற்றித் தொழுபவருடைய நிய்யத்தும் வெவ்வேறாக இருப்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது விட்டு தமது சமுதாயத்தினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : புகாரி 700, 701

இந்த ஹதீஸில் முஆத் (ரலி) அவர்கள் கடமையான தொழுகையை நபி (ஸல்) அவர்களுடன் நிறைவேற்றி விட்டு அதே தொழுகைக்கு தமது சமுதாயத்தினரிடம் சென்று இமாமத் செய்துள்ளார்கள். அப்படியானால் முஆத் (ரலி) இமாமத் செய்யும் போது மீண்டும் அந்தத் தொழுகையைத் தொழுதிருக்க முடியாது. நஃபிலான தொழுகையைத் தான் தொழுதிருக்க வேண்டும். அதே சமயம் பின்பற்றித் தொழுபவர்கள் கடமையான தொழுகையை நிறைவேற்றுகின்றார்கள்.

இது போல் மற்றொரு ஹதீஸில், கடமையான தொழுகையின் ஜமாஅத்தைப் பிற்படுத்தும் ஆட்சியாளர்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, உரிய நேரம் வந்ததும் தொழுகையை நிறைவேற்றி விட்டு ஜமாஅத் நடக்கும் போது நஃபிலாகத் தொழ வேண்டும் என்று நபித் தோழருக்குக் கட்டளையிட்ட செய்தியையும் ஹதீஸ்களில் காண்கிறோம்.

எனவே இமாம் ஒரு தொழுகையைத் தொழுது கொண்டிருக்கும் போது, பின்பற்றித் தொழுபவர் வேறொரு தொழுகையைத் தொழுவதில் எந்தத் தவறும் இல்லை. எனவே லுஹர் தொழுத பின்னர் தனியாக அஸர் தொழுது கொள்ள வேண்டும். அஸர் தொழுதுவிட்டு லுஹர் தொழுவதற்கு அனுமதி இல்லை.

மேல் கூறப்பட்ட அஹழ்ப் போர் சம்பந்தமான ஹதீஸில், அஸர் தொழுகையை சூரியன் மறைந்த பிறகு நிறைவேற்றியிருப்பதால் இதை வைத்துக் கொண்டு தொழுகைகளை களா செய்யலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் மேற்கண்ட இதே அறிவிப்பு நஸயீயில் 655ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், போர்க் காலங்களில் தொழுவது சம்பந்தமான (4 - 102) வசனம் அருளப்படுவதற்கு முன்னர் இந்த சம்பவம் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வசனம் அருளப்பட்ட பிறகு அவ்வாறு தொழுவதற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

December 21, 2014, 6:49 AM

இரகசியமாக திருமணம் செய்யலாமா? வலீமாவை திருமணத்தோடு சேர்த்து கொடுக்கலாமா?

?திருமணம் செய்வதற்கு உற்றார் உறவினர் தேவையில்லை, ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு சாட்சி இருந்தால் போதும் என்று நீங்கள் கூறி வருகின்றீர்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) திருமணம் செய்த போது அனைவருக்கும் வலீமா விருந்து கொடுக்கச் சொன்னார்கள். இதை திருமண அன்றே அனைவரையும் அழைத்துக் கொடுத்தால் செலவு, காலம் ஆகியவை குறையும். எனவே இவ்வாறு செய்யலாமா?

எஸ். ராஜா முஹம்மது, கோடம்பாக்கம்

செலவு குறைந்த, எளிமையான திருமணத்தில் பரக்கத் இருக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதன் அடிப்படையில் எளிமையாக திருமணம் நடத்த வேண்டும், வீண் விரயம் செய்யக் கூடாது என்றெல்லாம் நாம் கூறி வருவது உண்மை தான்.அதற்காக யாருக்கும் தெரியாமல் இரகசியத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இதற்கு அர்த்தமல்ல. இரகசியத் திருமணம் செய்வது நபிவழியுமல்ல.

“திருமணத்தை நீங்கள் அறிவியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் – அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி),

நூல் – அஹ்மத் 15545

இந்த ஹதீஸ் திருமணம் பகிரங்கமாக, பலருக்கும் தெரியும் வகையில் நடத்தப்பட வேண்டும் என்பதையே காட்டுகின்றது. மார்க்கத்தில் அனுமதி உள்ள விஷயங்களைக்கூட வியாக்கியானங்கள் கொடுத்து, செய்யக்கூடாது என்று தடுப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

இரண்டு சாட்சிகளுடன் வேறு யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட ஒருவர், தமது மனைவியுடன் சென்றாலும் அவரைப் பற்றிய அவதூறுகள் பரவுவதற்கு அவரது செய்கை காரணமாகி விடும். இதற்குக் காரணம் திருமணத்தை அறிவிக்காமல் இரகசியமாக்கிக் கொள்வது தான். எனவே திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் போதும் என்று சொல்வது குறைந்தபட்ச தகுதி தானே தவிர, வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்பது இதன் பொருளல்ல.

தாங்கள் கூறுவது போல் திருமணம் முடிந்தவுடன் வலீமா விருந்தை மணமகன் கொடுப்பதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. இதனால் செலவு குறையும் என்றால் தாராளமாக அவ்வாறு செய்யலாம்.

திருமணம் முடித்த பின் மணமகன் வலீமா விருந்து கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னையும்ஸஅது பின் ரபீஃ அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி), “நான்அன்சாரிகளில் அதிக செல்வமுள்ளவன். எனவே என் செல்வத்தில் பாதியை உமக்குப்பிரித்துத் தருகின்றேன். எனது இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகின்றீர் என்றுபாரும். அவரை உமக்காக விவாகரத்துச் செய்கின்றேன். அவரது இத்தா முடிந்ததும்அவரை உமக்குத் திருமணம் முடித்துத் தருகின்றேன்” என்று கூறினார். அப்போது நான், “இது என்க்குத் தேவையில்லை. வியாபாரம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதும்இருக்கின்றதா?” என்று கேட்டேன். அவர், “கைனுகா எனும் கடைவீதி இருக்கின்றது”என்றார்.

நான் அங்கு சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (லாபமாகக்) கொண்டுவந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின்கறையுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி (ஸல்) அவர்கள், “நீ மணம் முடித்துவிட்டாயா?” என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். யாரை? என்று கேட்டார்கள். “ஓர்அன்சாரிப் பெண்ணை” என்று நான் கூறினேன். ”எவ்வளவு மஹர் கொடுத்தாய்?” என்றுகேட்டார்கள். “ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்” என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், “ஓர் ஆட்டையேனும் மண விருந்தாக அளிப்பாயாக” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் – அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி),

நூல் – புகாரி 2048

இந்த ஹதீஸில் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களைப் பார்த்து, திருமணம் முடித்து விட்டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, வலீமா விருந்து கொடுக்கச் சொல்கின்றார்கள். ஆனால் அதே சமயம் திருமண ஒப்பந்தம் முடிவதற்கு முன்னரே சில இடங்களில் விருந்தளிக்கப்படுகின்றது. இது வலீமா விருந்தாக ஆகாது. திருமண ஒப்பந்தம் முடிந்த பின்னர் அளிப்பது தான் வலீமா விருந்தாகும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

December 21, 2014, 6:39 AM

திருமணம் முடித்து மணப்பெண்ணை சந்தித்த பிறகுதான் வலீமா விருந்து கொடுக்க வேண்டுமா?

? ஒருவர் நிக்காஹ் முடிந்தவுடன் அன்றைய தினமே வலீமா விருந்தைக்கொடுக்கலாமா? அல்லது மணப்பெண்ணை சந்தித்த பிறகு தான் வலீமா விருந்துகொடுக்க வேண்டுமா?

ரியாஸ்,இர்ஃபான், சென்னை

திருமணம் முடித்த பின் மணமகன் வலீமா விருந்து கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள்வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர்தான் வலீமா விருந்தளிக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையையும் நபி (ஸல்) அவர்கள்விதிக்கவில்லை.

முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னையும்ஸஅது பின் ரபீஃ அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி), “நான்அன்சாரிகளில் அதிக செல்வமுள்ளவன். எனவே என் செல்வத்தில் பாதியை உமக்குப்பிரித்துத் தருகின்றேன். எனது இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகின்றீர் என்றுபாரும். அவரை உமக்காக விவாகரத்துச் செய்கின்றேன். அவரது இத்தா முடிந்ததும்அவரை உமக்குத் திருமணம் முடித்துத் தருகின்றேன்” என்று கூறினார். அப்போது நான், “இது என்க்குத் தேவையில்லை. வியாபாரம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதும்இருக்கின்றதா?” என்று கேட்டேன். அவர், “கைனுகா எனும் கடைவீதி இருக்கின்றது”என்றார்.

நான் அங்கு சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (லாபமாகக்) கொண்டுவந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின்கறையுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி (ஸல்) அவர்கள், “நீ மணம் முடித்துவிட்டாயா?” என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். யாரை? என்று கேட்டார்கள். “ஓர்அன்சாரிப் பெண்ணை” என்று நான் கூறினேன். ”எவ்வளவு மஹர் கொடுத்தாய்?” என்றுகேட்டார்கள். “ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்” என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், “ஓர் ஆட்டையேனும் மண விருந்தாக அளிப்பாயாக” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் – அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி),

நூல் – புகாரி 2048

இந்த ஹதீஸில் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களைப் பார்த்து, திருமணம்முடித்து விட்டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, வலீமா விருந்துகொடுக்கச் சொல்கின்றார்கள். இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் வலீமா விருந்துகொடுக்க வேண்டும் என்றிருந்தால், நபி (ஸல்) அவர்கள், நீ இல்லறத்தில் ஈடுபட்டுவிட்டாயா? என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால், யாரை மணம் முடித்தாய்? எவ்வளவுமஹர் கொடுத்தாய்? என்றெல்லாம் விசாரிக்கும் நபி (ஸல்) அவர்கள், இல்லறத்தில்ஈடுபட்டது குறித்து எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

வலீமா விருந்தளிப்பதற்கு, இல்லறத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனைஎதுவும் இல்லை என்பதை இதிலிருந்து அறிய முடிகின்றது. ஆனால் அதே சமயம்திருமண ஒப்பந்தம் முடிவதற்கு முன்னரே சில இடங்களில் விருந்தளிக்கப் படுகின்றது.இது வலீமா விருந்தாக ஆகாது. திருமண ஒப்பந்தம் முடிந்த பின்னர் அளிப்பது தான்வலீமா விருந்தாகும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

December 21, 2014, 6:34 AM

வருடம் முழுவதும் நோன்பு வைப்பதும் ஒரு நாளைக்கு 1000 ரக்அத் தொழுவதும் நபிவழியா?

? பெரியார்கள் வருடம் முழுவதும் நஃபில் நோன்புகள் நோற்றுள்ளதாகவும் ஒரு நாளைக்கு 1000 ரக்அத்துகள் தொழுததாகவும் எங்கள் ஊர் ஆலிம் பயான் செய்தார். இவை நபிவழியா?

எஸ்.ஏ. அமீர் அலீ, கிள்ளை.

! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து கேட்டனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள், நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு, "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே?'' என்று சொல்லிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், "நான் என்ன செய்யப் போகின்றேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகின்றேன்'' என்றார். இன்னொருவர், "நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகின்றேன்'' என்றார். மூன்றாம் நபர், "நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகின்றேன். ஒரு போதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்'' என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தானே! அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவனாவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கின்றேன். விட்டு விடவும் செய்கின்றேன். தொழவும் செய்கின்றேன். உறங்கவும் செய்கின்றேன். மேலும் நான் பெண்களை மணம் முடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல் : புகாரி 5063

"அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூது (அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூது (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பை விட்டு விடுவார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி),

நூல் : புகாரி 1131

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஆண்டு முழுவதும் நஃபிலான நோன்புகள் நோற்பதற்கும், உறங்காமல் தொழுது கொண்டிருப்பதற்கும் தடை உள்ளதை அறியலாம்.

ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பதாவது சாத்தியம் என்று கூறலாம். ஆனால் ஒரு நாளில் ஆயிரம் ரக்அத்துகள் தொழுவது சாத்தியமில்லாத விஷயம். எவ்வளவு விரைவாகத் தொழுதாலும் ஒரு ரக்அத் தொழுவதற்குக் குறைந்தது இரண்டு நிமிடங்களாவது ஆகும். அப்படியானால் ஆயிரம் ரக்அத்துக்கள் தொழுவதற்கு 2000 நிமிடங்கள் தேவை. ஆனால் ஒரு நாளைக்கு 1440நிமிடங்கள் தான் இருக்கின்றன.

தொழுகையைத் தவிர வேறு எந்தக் காரியத்திலும் ஈடுபடாமல் தொடர்ந்து தொழுது கொண்டேயிருந்தாலும் 720 ரக்அத்துகளுக்கு மேல் தொழ முடியாது. எனவே பெரியார்கள் ஆயிரம் ரக்அத்கள் தொழுததாகக் கூறுவது முழுக்க முழுக்க கட்டுக் கதை என்பதில் சந்தேகமில்லை.

அப்படியே அவர்கள்  தொழுதிருந்தாலும் அவர் மார்க்க அடிப்படையில் அவர்கள் பெரியார்கள் அல்லர் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் உணர்த்துகின்றன. இது போன்றவர்களை நபி (ஸல்) அவர்கள், "என்னைச் சார்ந்தவர் இல்லை' என்று தெளிவாகப் பிரகடனம் செய்து விட்ட பிறகு, "பெரியார்' பட்டம் கொடுத்து புகழ்ந்து பேசுவதற்கு உண்மை முஸ்லிம்கள் யாரும் முன்வர மாட்டார்கள்.

December 20, 2014, 6:04 AM

வேலை பார்க்கும் இடத்தில் தொழ முடியவில்லையென்றால் களாச் செய்து தொழலாமா?

? எங்கள் வீட்டில் அனைவரும் கம்பெனியில் வேலை பார்க்கிறோம். அங்கு எங்களால் தொழ முடியவில்லை. ஃபஜ்ரும், இஷாவும் தொழுது கொள்கிறோம். இடையில் உள்ள மூன்று தொழுகைகளையும் களாச் செய்து தொழலாமா?

எஸ். ராஜா முஹம்மது, எஸ். ஷேக் முஹம்மது, கோடம்பாக்கம்

! நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

இந்த வசனத்தின் அடிப்படையில் தொழுகைகளை அந்தந்த நேரத்தில் தான் தொழுதாக வேண்டும். ஒரு நேரத் தொழுகையை அதன் நேரம் முடிந்த பின் களாவாகத் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

நோன்பைக் கடமையாக்கியுள்ள அல்லாஹ் அல்குர்ஆனின் 2:185வது வசனத்தில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால் அந்த நோன்பைக் களாச் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளான். ஆனால் தொழுகைக்கு அவ்வாறு எந்தச் சலுகையும் அல்லாஹ் தரவில்லை.

மிகவும் இக்கட்டான போர்க்களத்தில் கூட தொழுதாக வேண்டும் என்று 4:102வசனம் கூறுகின்றது.

தூக்கமும், மறதியும் மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் என்பதால் அவ்விரண்டு காரணங்களால் தொழுகை தாமதமானால் மட்டுமே அவற்றை நிறைவேற்றுவதற்கு அனுமதி உள்ளது.

''யார் தொழுகையை மறந்து விடுகின்றாரோ அல்லது தொழாமல் உறங்கி விடுகின்றாரோ அதற்குரிய பரிகாரம் நினைவு வந்ததும் அதைத் தொழுவது தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அனஸ் (ரலி)

நூல் முஸ்லிம் 1216 

இதன் அடிப்படையில் தூக்கம், மறதி ஆகியவற்றால் தொழுகையை விட்டு விட்டால் விழித்ததும் அல்லது நினைவு வந்ததும் அந்தத் தொழுகையின் நேரம் கடந்து விட்டாலும் தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். இதைத் தவிர எந்தக் காரணத்தை முன்னிட்டும் தொழுகையைக் களாச் செய்வதற்கு அனுமதி இல்லை.

தங்களைப் போன்று அலுவலகத்தில் பணி புரிபவர்கள் நேரம் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி தொழுகையைக் களாச் செய்கின்றனர். தொழுகையை மிகவும் சிரமமான ஒரு வணக்கமாக நினைத்துக் கொள்வது தான் இதற்குக் காரணம். எந்த அலுவலகமாக இருந்தாலும் மதிய உணவுக்கு இடைவேளை விடாமல் இருப்பதில்லை. அதுபோல் டீ குடிப்பதற்கும், மலஜலம் கழிப்பதற்கும் அனுமதி தராமல் இருக்க மாட்டார்கள். இந்தக் காரியங்களை நிறைவேற்றத் தேவைப்படும் நேரத்தை விட தொழுகையை நிறைவேற்றுவதற்குக் குறுகிய நேரமே தேவைப்படும்.

அடுத்து, அலுவலகத்தில் தொழுவது கூடுமா? அந்த இடம் சுத்தமானது தானா? என்ற சந்தேகங்கள் ஏற்படுவதும் தொழுகையைத் தாமதப் படுத்துவதற்கான காரணங்களில் ஒன்று! பள்ளிவாசலில் சென்று ஜமாஅத்துடன் தொழுவதற்கு வசதியுள்ளவர்கள் அங்கு சென்று தொழுவது தான் சிறப்பு! ஆனால் அலுவலகத்தில் பணி புரிபவர்கள் அது போன்ற வாய்ப்பைப் பெற முடியாத போது தொழுகை நேரம் வந்து விட்டால் அலுவலகத்திலேயே தொழுது கொள்ளலாம். இதைக் கீழ்க்காணும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய உம்மத்தில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்து விட்டால் அவர் (எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தில்) தொழுது கொள்ளட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),

நூல் : புகாரி 335, 438,

December 20, 2014, 5:56 AM

மாற்று மதத்தவர்கள் குர்ஆனை தொடலாமா?

? ஒரு முஸ்லிம் பத்திரிகையில் மாற்று மதத்தவர்கள் குர்ஆனைத் தொடலாமா? என்ற கேள்விக்கு கூடாது, ஹராமாகும் என்று பதிலளித்துள்ளார்கள். இது சரியா? தவறாக இருந்தால் விரிவாக விளக்கவும்.

எஸ். ராமதாஸ், தஞ்சாவூர்-6.

அந்தப் பத்திரிகையில் கூறப்பட்ட பதில் தவறு மட்டுமல்ல! வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒரு பதிலாகும். இது போன்ற குறுகிய சிந்தனைகளால் இஸ்லாத்தின் வளர்ச்சிக்குத் தடைக் கல்லாக முஸ்லிம்களே நிற்பது தான் வேதனை!

இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை.

(அல்குர்ஆன்38:87)

குர்ஆன் மனித சமுதாயம் முழுமைக்கும் வழிகாட்டி என்று கூறக்கூடிய ஏராளமான வசனங்கள் குர்ஆனில் உள்ளன.

(2:185, 3:138, 14:52, 17:89, 18:54, 30:58, 39:27)

இந்தக் குர்ஆனைச் சிந்திப்பவர்கள் உண்டா? என்று மக்கள் அனைவருக்கும் குர்ஆன் பொது அழைப்பு விடுக்கின்றது.

 (4:82, 23:68, 47:24, 54:17, 54:22, 54:32, 54:40)

இப்படி முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டியாக அருளப்பட்ட குர்ஆனை முஸ்லிமல்லாதவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க! இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.

"வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!'' என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் "நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!'' எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64)

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி 7, 2941

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத ஒரு மன்னருக்கு "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' மற்றும் 3:64 ஆகிய குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியுள்ளார்கள். மாற்று மதத்தவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எழுதியிருக்க மாட்டார்கள். எனவே முஸ்லிமல்லாதவர்கள் குர்ஆனைத் தொடலாம்; படிக்கலாம் என்பதை இதிலிருந்து அறிய முடிகின்றது.

முஸ்லிமல்லாதவர்களிடம் ஒரு வசனத்தை எழுதிக் கொடுப்பதில் தவறில்லை, முழுக் குர்ஆனைத் தான் அவர்கள் தொடக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றார்கள். இது அர்த்தமற்ற வாதமாகும். ஒரு வசனத்துக்கு என்ன சட்டமோ அது தான் முழுக் குர்ஆனுக்கும் உள்ள சட்டமாகும். நபி (ஸல்) அவர்களுக்கு முழுக் குர்ஆனும் தற்போதுள்ளது போல் மொத்தமாக அருளப்படவில்லை. சிறிது சிறிதாகத் தான் அருளப்பட்டது. அப்போதும் அது குர்ஆன் என்றே கூறப்பட்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது போல், "மாற்று மதத்தவர்களிடம் குர்ஆனின் மொழி பெயர்ப்புகளை வழங்கலாம் - அரபு மொழியில் அமைந்த குர்ஆனைத் தான் அவர்கள் தொடக் கூடாது' என்றும் சிலர் கூறுகின்றார்கள். இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் அரபு மொழி மட்டுமே தெரிந்த முஸ்லிமல்லாதவருக்கு எந்த மொழி பெயர்ப்பைக் கொடுக்க முடியும் என்று சிந்தித்தால் இது அர்த்தமற்ற வாதம் என்பதை அறியலாம்.

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரி அவர்களை நோக்கி, "நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள். தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது'' என்று கூறினார்கள் என்ற செய்தி முஸ்னத் பஸ்ஸார் என்ற நூலில் 279வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள உஸாமத் பின் ஸைத் என்பார் பலவீனமானவர் என்று மஜ்மவுஸ்ஸவாயித் என்ற நூலில் ஹைஸமீ குறிப்பிடுகின்றார்.

இதே அறிவிப்பு பைஹகீயிலும் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான காஸிம் பின் உஸ்மான் அல்பஸரீ என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரது ஹதீஸ் பின்பற்றக் கூடியதல்ல என்று இப்னு ஹஜர் அவர்கள் ஸிஸானுல் மீஸானில் குறிப்பிடுகின்றார்கள்.

ஒரு வாதத்திற்கு இந்தச் செய்தி ஆதாரப்வூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இதன் அடிப்படையில் முஸ்லிமல்லாதவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிட முடியாது. ஏனெனில் இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவோ, அல்லது அவர்கள் இதை அங்கீகரித்ததாகவோ இதில் குறிப்பிடப்படவில்லை. உமர் (ரலி) அவர்களது சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

December 20, 2014, 5:52 AM

மறைவான விஷயங்களை இறைநேசர்களுக்கு அல்லாஹ் இல்ஹாம் மூலம் அறிவித்து கொடுப்பானா?

? மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது. எனினும் நபிமார்களுக்கு வஹீயின் மூலமாகவும், இறை நேசர்களுக்கு (இல்ஹாம் எனும்) உதிப்பின் மூலமாகவும் பொதுமக்களில் சிலருக்கு சில அடையாளங்கள் மூலமாகவும் மறைவான விஷயங்களை அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கின்றான் என்று சிலர் கூறுகின்றார்கள். இது மார்க்க அடிப்படையில் சாத்தியமானது தானா?

ஈ. இஸ்மாயில் ஷெரீஃப், சென்னை.

! மறைவான செய்திகளை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்று அல்லாஹ் தெளிவாகத் தனது திருமறையில் அறிவித்து விட்டான்.

"வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 27:65)

6:59, 10:20, 31:34, 34:3 ஆகிய வசனங்களும் இதே கருத்தில் அமைந்துள்ளன. இந்த வசனங்களின் அடிப்படையில் நபிமார்கள், மலக்குகள், ஜின்கள், மனிதர்கள் உள்ளிட்ட எவரும் மறைவானவற்றை அறிய முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கை!

நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.

(அல்குர்ஆன் 3:179)

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.

(அல்குர்ஆன் 72:26-28)

இறைத்தூதர்களில் தான் நாடியோருக்கு அல்லாஹ் மறைவானவற்றை அறிவித்துக் கொடுப்பதாக இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றன. இதை வைத்து நபிமார்களுக்கு மறைவான விஷயங்கள் அனைத்தும் தெரியும் என்று சிலர் வாதிடுகின்றனர். இது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான வாதமாகும். நபிமார்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் குர்ஆனில் உள்ளன. இறுதித் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மறைவான ஞானம் இல்லை என்று திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றது.

(பார்க்க அல்குர்ஆன் 5:109, 6:50, 7:188, 11:31, 11:49)

அப்படியானால் மேற்கண்ட இரண்டு வசனங்களும் மறைவானவற்றை இறைத்தூதர்களில் தான் நாடியவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான் என்று கூறுவதன் பொருள் என்ன?

3:179 வசனத்தில் மறைவானவற்றை தனது தூதருக்கு இறைவன் அறிவித்துக் கொடுப்பதாகக் கூறுவது பொதுவானதல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நயவஞ்சகர்கள் முஸ்லிம்களைப் போலவே வேடமிட்டு முஸ்லிம்களுடன் இரண்டறக் கலந்திருந்தனர். இத்தகைய நயவஞ்சகர்களை நபிகள் நாயகத்திற்கு அறிவித்து கொடுப்பதையே இவ்வசனம் குறிப்பிடுகிறது. இவ்வசனத்தின் துவக்கத்திலேயே முஸ்லிம்களையும் நயவஞ்சகர்களையும் இரண்டறக் கலந்திருக்குமாறு இறைவன் விட்டு வைக்க மாட்டான் என கூறிவிட்டுத் தான்,மறைவானதை தான் தேர்ந்தெடுத்த தூதர்களுக்கு அறிவிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

அது போல் 72:26,27 வசனங்களில் அனைத்து மறைவான விஷயங்களையும் இறைத் தூதர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான் என்று கூறப்படவில்லை. மாறாக நம்பிக்கை கொள்ள வேண்டிய மறுமை, சொர்க்கம், நரகம் போன்ற மறைவானவைகளைப் பற்றி இறைத் தூதர்களுக்கு அறிவிப்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன. இதைப் புரிந்து கொள்வற்கு இவ்வசனங்களிலேயே போதுமான சான்றுகள் உள்ளன.

தமக்கு அறிவிக்கப்படுகிற செய்திகளைத் தூதர்கள் மக்களுக்கு அறிவிக்கிறார்களா? என்று கண்காணிப்பதற்காக, கண்காணிக்கும் வானவர்களை தொடர்ந்து அனுப்புவதாக இவ்வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். எனவே நம்பிக்கை கொள்ள வேண்டிய மறைவான விஷயங்களை இறைத் தூதருக்கு அறிவித்துக் கொடுத்து அதை அவர் மக்களுக்கு அறிவிப்பார் என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

எனவே நபிமார்களுக்கு மறைவான செய்திகளை அல்லாஹ் அறிவித்துக் கொடுப்பான் என்பது பொதுவானதல்ல என்பதை இதிலிருந்து அறியலாம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் நடைபெற்ற எத்தனையோ சம்பவங்கள் அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளதை ஹதீஸ்களில் நாம் காண முடிகின்றது.

மறைவான விஷயங்களை நபிமார்களால் கூட அறிய முடியாது எனும் போது, இறைநேசர்கள் "இல்ஹாம்' என்ற உதிப்பின் மூலம் அறிவார்கள் என்பது மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான கருத்து என்பதை நாம் விளக்கத் தேவையில்லை.

உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும்,தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.

(அல்குர்ஆன் 91:7,8)

மனிதனின் உள்ளத்திற்கு நன்மை, தீமையை இறைவன் அறிவித்துக் கொடுத்தான் என்று கூறுவதற்கு "இல்ஹாம்' என்ற வார்த்தையைத் தான் இந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்துகின்றான். எனவே இந்த "இல்ஹாம்' என்பது இறை நேசர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டதல்ல! எல்லா மனிதனுக்கும் பொதுவான ஒன்று தான் என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளுணர்வுகள் ஏற்படுவதுண்டு. ஏதோ சோதனை ஏற்படப்போகின்றது என்று மனதில் சில எண்ணங்கள் தோன்றும். பல சமயங்களில் அது பொய்யாகிப் போய் விடும். சில சமயங்களில் அதற்கேற்ப ஏதேனும் சோதனை ஏற்படுவதும் உண்டு. கனவுகள் தோன்றுவதும் இதே வகையைச் சேர்ந்தது தான். இது அவரவருக்கு உள்ளத்தில் ஏற்படுகின்ற உள்ளுணர்வுகள்! இவற்றை வைத்துக் கொண்டு மறைவான விஷயம் எனக்குத் தெரியும் என்று யாரும் வாதிட முடியாது.

அது போல் ஒருவருக்கு ஏற்படும் உள்ளுணர்வையோ அல்லது கனவையோ அடுத்தவரிடத்தில் செயல்படுத்தவும் முடியாது. உதாரணமாக, உங்களுக்கு ஒருவர் பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று நீங்கள் கனவில் கண்டதன் அடிப்படையில் அவரிடம் போய் பணம் கேட்க முடியாது.

உனது வாழ்க்கையில் இது நடக்கும் என்று எனக்கு "இல்ஹாம்' மூலம் தெரிந்தது என்று கதைகளை அவிழ்த்து விட்டு முரீது வியாபாரிகள் ஏமாற்று வேலைகளைச் செய்து வருகின்றார்கள். இது அப்பட்டமான பொய் என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

"உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில் "முன் கூட்டியே (சில செய்திகள்) அறிவிக்கப்பட்டவர்கள்' இருந்திருக்கின்றார்கள். அத்தகையவர்களில் எவராவது எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் தாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 3469

"முன் கூட்டியே (சில செய்திகள்) அறிவிக்கப்பட்டவர்கள்' என்று யாராவது எனது சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் (ரலி) தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவது இந்த உம்மத்தில் அப்படிப்பட்ட யாரும் கிடையாது என்பதையே காட்டுகின்றது.

December 20, 2014, 5:48 AM

இமாம் ஷாஃபி அவர்கள் 24 மாதங்கள் தாய் வயிற்றில் இருந்து பிறந்தார்களா?

? இமாம் ஷாஃபி அவர்கள் 24 மாதங்கள் தாய் வயிற்றில் இருந்து, பல், முடி போன்றவை முளைத்துப் பிறந்ததாக ஒரு ஆலிம் ஜும்ஆவில் பேசினார். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இது சாத்தியமா?

எம். திவான் மைதீன், பெரியகுளம்.

! மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

(அல்குர்ஆன் 31:14)

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும்,பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.

(அல்குர்ஆன் 46:15)

இந்த வசனங்களில் முதல் வசனத்தில் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள் என்றும் இரண்டாவது வசனத்தில் குழந்தையைச் சுமப்பதும், பாலருந்தும் பருவமும் சேர்த்து முப்பது மாதங்கள் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

முப்பது மாதங்களில் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகளைக் கழித்துப் பார்த்தால் மீதம் ஆறு மாதங்களே குழந்தையைக் கருவில் சுமப்பதாக அல்குர்ஆன் கூறுகின்றது. உலக நடப்பின் படி ஒன்பது முதல் பத்து மாதங்கள் தாய் தனது கருவில் சுமப்பதாகக் கணக்கிடப்படுகின்றது. கருத்தரித்த மூன்று மாதங்கள் கழித்த பின்னர் தான் அக்கரு மனித உருவையும் மனிதத் தன்மையையும் அடைவதாக அறிவியல் கூறுகின்றது. இந்த மாபெரும் அறிவியல் உண்மையைக் கொண்டே இந்த வசனத்தில் மனிதனை அவனது தாய் ஆறு மாதங்கள் சுமப்பதாக அல்குர்ஆன் கூறுகின்றது.

மனிதத் தன்மையை அடையாத மூன்று மாதங்களையும், அதன் பிறகு குர்ஆன் கூறும் ஆறு மாதங்களையும் சேர்த்தால் மொத்தம் ஒன்பது மாதங்கள் தான் கருவில் குழந்தை வளரும் காலம் என்பது அல்குர்ஆன் மற்றும் அறிவியல் வழங்கும் தீர்ப்பாகும். ஒன்பது மாதங்கள் முடிவடைந்து பத்தாவது மாதத்தில் குழந்தை பிறந்தே ஆக வேண்டும். இதைத் தாண்டி ஒரு குழந்தை கருவில் இருந்தால் அது அந்தத் தாய்க்கோ, அல்லது குழந்தைக்கோ அல்லது இருவருடைய உயிருக்கும் ஆபத்தாக அமையும் என்று மருத்துவ உலகம் அறுதியிட்டுக் கூறுகின்றது.

கருவில் குழந்தை இருக்கும் நாட்களின் எண்ணிக்கை 278 ஆகும். "ரிலாக்டின்' என்ற ஒருவகை திரவம் சுரப்பது குறைவாக இருக்கும் பட்சத்தில் இதை விட ஒரு சில நாட்கள் குழந்தை பெறுவதற்குத் தாமதமாகலாம். ஆனால் அவ்வாறு தாமதமாவது தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதால் தான் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்து விடுகின்றார்கள். எனவே தாய் வயிற்றில் பத்து மாதங்களுக்கு மேல் எந்தக் குழந்தையும் இருக்க முடியாது என்பது மருத்துவ உலகில் நிரூபிக்கப்பட்ட உண்மை!

இந்த அடிப்படையில் ஷாஃபி இமாம் இரண்டு ஆண்டுகள் தாய் வயிற்றில் இருந்தார்கள் என்பது முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதில் சந்தேகமில்லை. இமாம்கள், பெரியார்கள் மீது மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதற்காக, ஷாஃபி இமாம் 24 மாதம் கருவில் இருந்தார், ஷாகுல் ஹமீது பாதுஷா வெற்றிலையை மென்று கொடுத்து கருத்தரிக்க வைத்தார் என்பன போன்ற இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் செய்திகளைப் பிரச்சாரம் செய்கின்றார்கள்.

இந்தப் பிரச்சாரத்தை மாற்று மதத்தவர் யாரும் கேட்டால் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் இவர்கள் கவலைப்படுவதில்லை. குர்ஆன், ஹதீஸ் என்ற வட்டத்தை விட்டு விலகியது தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதை இத்தகைய ஆலிம்கள் உணர வேண்டும்.

December 20, 2014, 5:43 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top