மதிப்புரை இஸ்லாம் பெண்கள் உரிமையை

 
 1989 களிலிருந்து அறிஞர் பிஜே அவர்கள் அல்ஜன்னத்தின் ஆசிரியராக இருக்கும் போது, இஸ்லாத்தின் மீது மாற்றார் தொடுத்த கேள்விகளுக்கெல்லாம்  'மாற்றாரின் பார்வையில் இஸ்லாம்' என்ற தலைப்பில் எழுதி வந்தார். அந்த ஆக்கங்களில் அறிவுபூர்வமாக அவர்களின் விமர்சினங்களுக்கு இஸ்லாத்தில் தக்க பதில்களை முன்வைத்தார்.

இந்து,கிறிஸ்தவ,நாத்திக முகாம்களிலிருந்து இஸ்லாத்தின் மீது தொடுக்கப்பட்ட விமர்சனங்களுக்கெல்லாம் எவ்வாறு பதில் அளிப்பது என்று மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களில்  படித்தவர்கள் கூட விழி பிதுங்கிக் கொண்டிருந்த போது, பீஜே தனது பேனாவின் வலிமையை நிரூபித்துக்காட்டினார். அனைத்து விமர்சனங்களுக்கும் தெளிவான பதில்களை அழகான முறையில் வழங்கினார். அவை  மாற்றாரின் மனங்களையும் வேகமாக ஊடறுத்து தாக்கம் செலுத்தியது. பலரை இஸ்லாத்தின் காதலர்கலாக்கிய பெருமை இந்த நூலுக்கு உண்டு.

அந்த ஆக்கங்கள் இஸ்லாம் குற்றச்சாட்டுக்களும் பதில்களும் என்ற பொதுத் தலைப்பில் மூன்று பாகங்களாக 1994ம் ஆண்டுகளில் வெளிவந்து பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியது.

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் பதில்களும் என்ற பொதுத்தலைப்பில் இஸ்லாம் பெண்களை கொடுமைப்படுத்துகின்றதா? என்ற பிரதான உள்ளடகத்தோடு முதல் பாகம் 1994ல் வெளிவந்த போது அந்த நூலை சமரசம் இவ்வாறு அறிமுகப்படுத்தியது.

- புத்தகம் அறிமுகம்

இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறதா?

ஆண் பெண் சமத்துவம்

பலதார மணம் தலாக்

ஜீவனாம்சம்

ஹிஜாப் (பர்தா)

பாகப் பிரிவினை

சாட்சிகள்

அடிமைப் பெண்கள்

ஆகியவை குறித்து அறியாமையின் காரணமாகவோ, வேண்டுமென்றோ இஸ்லாத்தின் மீது சேறு வாரி இறைப்பது இன்று பலருக்கும் ஒரு தொழிலாகவே ஆகிவிட்டது. சில வகுப்புவாத அமைப்புகள் நடத்தும் பத்திரிகைகள் மட்டுமல்ல தேசிய நாலேடுகள் கூட இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாகவே விமர்சித்து வருகின்றன.

மேற்கண்ட விஷயங்களில் அவர்கள் சுமத்தும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு 'இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்புடுத்துகிறதா? ' எனும் இந்நூல் பதில் தருகிறது.

இந்த நூலின் ஆசிரியர் பீ. ஜைனுல் ஆபிதீன் நாடறிந்த நல்ல சிந்தனையாளர்; சிறந்த மார்க்க அறிஞர்இதழாசிரியர் தமிழ் நாட்டில் மறுமலர்ச்சிக்காக உழைத்து வருபவர்; அதன் பொருட்டு விமர்சனக் கணைகளுக்கு ஆளாகி வருபவர்;  தன்னை நோக்கிப் பாய்ந்து வரும் கூர் அம்புகளை அறிவுக்கேடயத்தால் தடுத்து முனை மழுங்கச் செய்வதில் வல்லவர். அந்த வல்லமையும் சாமர்த்தியமும் இந்த நூலின் எட்டு அத்தியாயங்களிலும் எதிரொளித்து, உண்மையை பிட்டு பிட்டு வைக்கிறது.

பலதார மணத்திற்கு இஸ்லாம் ஏன் அனுமதி அளித்தது? அதற்குக் காரணம் என்ன? அந்த அனுமதி இல்லாவிட்டால் நிலைமை என்ன ஆகும்? தலாக்கின் எதார்த்தம் என்ன? ஜீவனாம்சம் இஸ்லாத்தில் இல்லையா? போன்ற கேள்விகளுக்கு நூலாசிரியர் தரும் அறிவுபூர்வமான விஷயங்கள் விழிப்புருவங்களை வியப்பால் உயர்த்துகின்றன.

குறிப்பாக இந்த நூலில் உள்ள தலாக், ஜீவனாம்சம், பர்தா ஆகிய மூன்று அத்தியாயங்களும் நம் நாட்டு தேசிய நாளேடுகளும், முற்போக்குவாதிகளும், அறிவுஜீவிகளும், பெண்ணுரிமை பேசுவோரும் மண்டியிட்டு அமர்ந்து, படித்துத் தெளிய வேண்டிய அத்தியாயங்கள்!

ஓர் ஆற்றல் மிகு வழக்கறிஞனுக்கே உரிய மிடுக்கோடு துணிவோடு தெளிவோடு ஒவ்வோர் அத்தியாயத்திலும் தம் வாதங்களை நூலாசிரியர் அடுக்கிக்கொண்டே போகிறார். அந்த வாதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் சத்தியத்தின் ஒளிதான் சதிராடுகிறதே தவிர, மற்றவர்களைப் புண்படுத்தும் போக்கோ, இழிவுபடுத்தும் நோக்கமோ மருந்துக்கும் இல்லை. 'மாற்றாரும் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமே எனும் 'தாய்மையின் தவிப்பு' பக்கங்கள் தோறும் பளிச்சிடுகிறது.

இஸ்லாம் - குற்றச்சாட்டுகளும் பதில்களும் - 1 எனும் பொதுத் தலைப்பை சிறிய எழுத்தில் இட்டு, 'இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறதா? ' என்பதை முதன்மைத் தலைப்பாய்க் கொடுத்திருந்தால் நூல் இன்னும் சிறப்பாய் அமைந்திருக்கும்.

தமிழ் அறிந்த ஒவ்வொருவரும் குறிப்பாக மாற்று மத நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது! இஸ்லாமிய அமைப்புகளும் நிறுவனங்களும் இந்நூலை மொத்தமாக வாங்கி மாற்றாருக்கு இலவசமாக வழங்கலாம்.

நூலில் இருந்து ஒரு பகுதி:

 ஒரு கணவனுக்கு தன் மனைவியை ஏதோ ஒரு காரணத்திற்காக பிடிக்காமல் போகிறது என்று வைத்துக்கொள்வோம். இஸ்லாம் கூறுவது போன்ற தலாக் உரிமை வழங்கப்படாத நாட்டில், சமுதாயத்தில் கணவன் தன் மனைவியிடமிருந்து விவாக விலக்குப் பெற வேண்டுமானால், நீதி மன்றம் எனும் மூன்றாம் தரப்பை நாடிச் சென்று அந்த மன்றம் அனுமதித்தாலே விவாக விலக்குப் பெற முடியும்.

நமது நாட்டிலும் மற்றும் சில நாடுகளிலும் இத்தகைய நிலைதான் அமுல் படுத்தப்படுகின்றது. நீதி மன்றத்தை அனுகித்தான் விவாகரத்துப் பெற முடியும் என்றால் நீதிபதி நியாயம் என்று கருதக் கூடிய காரணங்களை கனவன் சொல்லியாக வேண்டும். அப்போது தான் நீதிபதி விவாகரத்திற்கு அனுமதி வழங்குவார்.

இத்தகைய நிலையின் விளைவுகளை நாம் பார்ப்போம்:

மனைவியை இவனுக்குப் பிடிக்காத நிலையில் விவாகரத்துப் பெறுவதற்காக காலத்தையும் நேரத்தையும் பொருளாதாரத்தையும்  ஏன் வீணாக்க வேண்டும்? என்று எண்ணுகின்ற ஒருவன் அவனுக்குப் பிடித்தமான மற்றொருத்தியை சின்ன வீடாக அமைத்துக் கொள்கின்றான். கட்டிய மனைவியுடன் இல் வாழ்க்கையைத் தொடர்வதுமில்லை. இவன் மாத்திரம் தனது வழியில் தன் உணர்வுகளுக்குத் தீனி போட்டுக் கொள்கிறான்.

இவள் பெயரளவுக்கு மனைவி என்று இருக்கலாமே தவிர பிடிக்காத கணவனிடமிருந்து இல்லற சுகம் அவளுக்கு கிடைக்காது. வாழ்க்கைச் செலவீனங்களும் கூட மறுக்கப்படும். இவை மிகையான கற்பனை இல்லை. நாட்டிலே அன்றாடம் நடக்கும் உண்மை நிகழ்ச்சிகள் தாம். மனைவி என்ற உரிமையோடு இதை தட்டிக் கேட்டால் அன்றாடம் அடி உதைகள் இத்தகைய அபலைகள் ஏராளம்.

பெயரளவுக்கு மனைவி என்று இருந்து கொண்டு அவளது உணர்வுக்கு எந்த  மதிப்பும் தரப்படாத அவளது தன்மானத்திற்கும் பெண்மைக்கும் சவால் விடக்கூடிய வரட்டு வாழ்க்கையை வழங்கி, அவளைச் சித்திரவதை செய்வதை விட அவளிடமிருந்து உடனடியாக விலகி சுதந்திரமாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்வது எந்த வகையில் தாழ்ந்தது.

தலாக் அதிகாரம் இருந்தால் இந்தக் கொடூர எண்ணம் கொண்ட ஆண் அவளை விடுவித்து விடுவான். அவளுக்கும் நிம்மதி அவள் விரும்பும் மறு வாழ்வையும் தேடிக் கொள்ளலாம். பெண்களின் மறுமணத்தை ஆதரிக்காதவர்கள் வேண்டுமானால் இந்த நிலையை எதிர் கொள்ளத் தயங்கலாம். இஸ்லாமியப் பெண் அவனிடமிருந்து விடுதலை பெற்ற உடனேயே மறு வாழ்வை அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

 சமரசம் 1-15 மே 94 பக்கம்-2கட்டுரைகள்இஸ்லாம்பெண்கள்உரிமை

Published on: June 9, 2010, 6:30 AM Views: 1905

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top