பெண்கள் ஜாக்கிரதை!
பெண்கள் ஜாக்கிரதை!
காதல் என்ற பெயரால் பெண்கள் ஏமாற்றப்பட்டு சீரழிந்து போவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இஸ்லாம் கூறும் நற்போதனைகளை உலக மக்கள் குறிப்பாக பெண்கள் புரிந்து நடந்து கொண்டால் அது அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். 1400 ஆண்டுகளாக இஸ்லாம் இது குறித்து நல்ல பல அறிவுரைகளைக் கூறினாலும் பட்ட பிறகு தான் ஞானம் பிறக்கிறது. இஸ்லாம் கூறும் இந்த அறிவுரையை இந்தியாவின் உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவர் தனது தீர்ப்பில் பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இஸ்லாத்தின் அறிவுரை
(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
திருக்குர்ஆன் 24:30, 31
3006 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய் என்று கூறினார்கள்.120
நூல்: புஹாரி
நீதிபதியின் அறிவுரை தினமலர் நவம்பர் 15,2009
புதுடில்லி : ஆண்கள் வாக்குறுதியை நம்பி, நெருங்கி விடாதீர்கள்; கற்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு தான்' என்று காதல் செய்யும் பெண்களுக்கு ஐகோர்ட் அறிவுரை தந்துள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி கொடுத்து காதலியை கற்பழித்து விட்டார் ஒரு வாலிபர். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தபோது, கோர்ட்டில் முன்ஜாமீன் கோரினார். டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை, நீதிபதி கைலாஷ் காம்பீர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் கூறுகையில், இதில் குற்றம் சாட்டப்பட்டவர், சம்பந்தப்பட்ட பெண்ணுடன், திருமணம் செய்து கொள்வதாக கூறி, உடல் ரீதியாக உறவு கொண்டுள்ளார். எனவே, அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது' என்றார். ஆனால், இதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். அரசு தரப்பு வக்கீல் சொல்வதை ஏற்க முடியாது; இந்த விஷயத்தில் பெண்கள் தான் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும்' என்று கூறி, முன்ஜாமீன் அளித்தார்.
நீதிபதி மேலும் கூறியதாவது: தங்களுடன் பழகும் ஆண்களுடன் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு தான். எந்த ஆணையாவது காதலித்து, அதனால், நெருக்கமாக இருக்கலாம் என்று முடிவு செய்வதும், பொறுப்பை தவற விடுவதுமாக இருந்தால் அதற்கு அவர்கள் தான் முழுப்பொறுப்பு. பெண்களுக்கு, தங்கள் கற்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளது; அவர்களின் கன்னித்தன்மையை காத்துக்கொள்வதில் அவர்கள் தான் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தன்னுடன் பழகும் காதலன் தரும் வாக்குறுதிகளை மட்டும் நம்பி, தன்னை உடல் ரீதியாக இழந்து விடக்கூடாது. பெண்கள், இது போன்ற சமயத்தில், உடல் ரீதியான தொடர்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். நான் உன்னை கைவிட மாட்டேன்; திருமணம் செய்து கொள்வேன்; அப்படியிருக்கும் போது, நாம் விலகி இருக்க வேண்டுமா?' என்று மாய்மாலமாக பேசி, காதலியை கவருவது சிலருக்கு கைவந்த கலை. அதை நம்பி பெண்கள் ஏமாந்து விடக்கூடாது. வாக்குறுதிகளை நம்பி, தங்கள் நிலையை மோசமாக்கி கொள்ளக்கூடாது. அவர்கள் தங்களின் தூய்மையை தாங்களே காத்துக் கொள்ள வேண்டும். ஆணிடம் இருந்து காத்துக்கொள்ளும் பொறுப் பும், தைரியமும் பெண்களுக்கு வர வேண்டும். அதில் அவர்கள் அசட்டையாகவோ, தவறான நம்பிக்கையுடனோ இருந்து விடக்கூடாது. இவ்வாறு நீதிபதி கூறினார்.
18.11.2009. 10:33
