மனிதன் பாவியாய் பிறப்பதில்லை
பிறக்கும் குழந்தைகள் அனைவரும் பகுத்தறிவுள்ளவர்களாக இருந்த போதும் வளர்ந்து ஆளாகும் போது அவர்களில் சிலர் நல்லவர்களாகவும் சிலர் கெட்டவர்களாகவும் மாறிவிடுகின்றனர். சிலர் நன்கு சிந்திப்பவர்களாகவும், மற்றும் சிலர் சிந்தனை செய்யாதவர்களாகவும் உருவெடுக்கின்றனர்.
இந்தத் தன்மைக்குக் காரணம் என்ன? இது குறித்து மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன.
குழந்தையாகப் பிறக்கும் போது அவனுடையை இயற்கை குணம் கெட்டவனாக வளரும் வகையிலேயே உள்ளது என்பது ஒரு கருத்து. அதாவது குழந்தைக்கு எந்த போதனையும் செய்யாமல் அதன் போக்கில் வளர விட்டால் கெட்ட செயல்கள் செய்யும் மூர்க்கனாக வளர்வான் என்பது இதன் விளக்கம். மனிதன் பாவியாகப் பிறக்கிறான் என்று கூறி கிறித்தவ மதம் இதை ஆதரிக்கிறது.
மனிதன் பிறக்கும் போது நல்லவனாகவும் கெட்டவனாகவும் பிறப்பதில்லை. வெற்றுக் காகிதம் போல் தான் குழந்தைப் பருவத்தில் மனிதன் இருக்கிறான். பார்த்தும் கேட்டும் எதை அறிகிறானோ அதற்கேற்ப வளர்கிறான் என்பது இரண்டாவது கருத்து. இந்தக் கருத்தின் படி ஒரு குழந்தைக்கு நல்லது கெட்டதைச் சொல்லிக் கொடுக்காவிட்டால் எதுவும் தெரியாதவனாக வளர்வான். நல்லதைச் சொல்லிக் கொடுத்தால் நல்லவனாகவும் கெட்டதைச் சொல்லிக் கொடுத்தால் கெட்டவனாகவும் வளர்வான். ஒன்றுமே சொல்லிக் கொடுக்காவிட்டால் எதையும் முடிவு செய்ய இயலாதவனாக வளர்வான் என்பது இதன் கருத்து. இது தான் உளவியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருந்தது.
குழந்தகளுக்கு இயற்கையிலேயே நல்லது கெட்டதை பிரித்து அறியும் ஆற்றல் உள்ளது. எதையும் யாரும் சொல்லிக் கொடுக்காவிட்டாலும் இது நல்லது கெட்டது என்று அறிந்து கொள்ளக் கூடிய தன்மையுடன் தான் குழந்தை பிறக்கிறது. கெட்டவனாக மாறுவதற்கு பெற்றோரின் வளர்ப்பு முறை தான் காரணம். நல்லவனாக வலரும் இயல்புடைய குழந்தைக்கும் கெட்டவற்றை நல்லது போல் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதால தான் குழந்தை கெட்டவனாக வளர்கிறது. நல்லது கெட்டதைச் சொல்லிக் கொடுக்காமல் சுயமாக அதை வளர விட்டால் அக்குழந்தை நல்லவனாகத் தான் வளரும் என்பது மூன்றாவது கருத்து. இதை இஸ்லாம் மார்க்கம் மட்டும் சொல்லி வந்தது.
1359 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும் என்ற (30:30ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
இது குறித்து தினமலர் நாளேட்டில் வந்த செய்தியைப் பாருங்கள்.
லண்டன் : 'குழந்தைகள் நல்லது எது, கெட்டது எது என்று கண்டறியும் திறனுடன் தான் பிறக்கின்றனர்' என்று புதிய ஆய்வு கூறுகிறது. இதனால் சிக்மண்ட் பிராய்ட் போன்றவர்களின் சில கொள்கைகள் ஆட்டம் கண்டுள்ளன.
புகழ்பெற்ற மனநல ஆய்வாளர் சிக்மண்ட் பிராய்ட்,'மனிதன் பிறக்கும் போது, வெற்றுத் தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்' என்று கருதினார்.ஆனால் சமீபகால ஆய்வுகள், இந்தக் கருத்தைத் தகர்த்துள்ளன. அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின், குழந்தைகளின் புலனுணர்வு பற்றி ஆராயும் மையத்தில் சில ஆய்வுகள் நடந்தன. இந்த ஆய்வுகளில், ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகள் பங்கெடுத்து கொண்டனர்.
முதல் ஆய்வில், அவர்களுக்கு ஒரு அனிமேஷன் படம் காண்பிக்கப்பட்டது. அதில், ஒரு சிவப்பு நிற பந்து, மெல்ல மெல்ல மலையேறும். அதன் பின்னாலிருந்து ஒரு மஞ்சள் நிற சதுரம் அது மலையேற உதவியாக உந்தித் தள்ளும். பச்சை நிற முக்கோணம் ஒன்று, மேலிருந்து பந்தை ஏற விடாமல் தடுக்கும்.
சதுரம், முக்கோணம் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி குழந்தைகளிடம் கேட்ட போது, 80 சதவீத குழந்தைகள், சதுரத்தைத் தான் தேர்ந்தெடுத்துள்ளன.
அதே போல், ஒரு நாய், ஒரு பெட்டியைத் திறக்க முயலும். ஒரு பொம்மைக் கரடி அதற்கு உதவி செய்யும். மற்றொரு பொம்மைக் கரடி அதைத் திறக்க விடாமல் தடுக்கும். இரண்டு கரடிகளில், ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்ன போது, பெரும்பான்மையான குழந்தைகள் உதவி செய்யும் பொம்மைக் கரடியைத் தேர்ந்தெடுத்தனர்.
ஆய்வுக் குழுவின் தலைவர் பேராசிரியர் பால் ப்ளூம் கூறுகையில்,'சிக்மண்ட் பிராய்ட் போன்ற மனநல ஆய்வாளர்கள் கூறிய மனிதனின் வாழ்க்கை ஒழுங்கு முறையற்ற மிருகம் போல் தான் ஆரம்பிக்கிறது என்ற கொள்கையை, இந்த ஆய்வு முறியடித்துள்ளது' என்று தெரிவித்தார்.
17-5-2010 தினமலர் சென்னை பதிப்பு
உருண்டை முக்கோனம், சதுரம் ஆகிய மூன்று வடிவங்களில் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் உருண்டை தான் அதிகம் ஈர்க்கும். அடுத்ததாக முக்கோனம் ஈர்க்கும். சதுரம் அவ்வளவாக ஈர்ப்பதில்லமூன்று வடிவத்தில் உள்ள பந்துகளில் சதுர வடிவிலான பந்து உதவக் கூடிய தமை உடையதாகக் காட்டப்பட்டது. உதவும் தன்மைதான் நல்லது என்று குழந்தையின் இயற்கைத் தனமையில் இருந்ததால் தான் எண்பது சதவிகித குழந்தைகள் சதுரத்தைத் தேர்வு செய்தன. மேலும் சதுரத்தை குழந்தைகள் அவ்வளவாக விரும்புவதில்லை. அப்படி இருந்தும் சதுர வடிவப் பொருள் உதவி செய்யக் கூடியதாகக் காட்டப்பட்டதால் அது தான் நல்லது என்று குழந்தைகள் தீர்மானித்துள்ளன. இப்படி ஏராளமான சோதனைகள் மூலம் இதை உறுதி செய்து மற்ற இரண்டு கருத்துக்களும் தவறானவை என்று தள்ளப்பட்டு விட்டன என்பது கவனிக்கத் தக்கது.
குழந்தைகளுக்கு கல்லையும் மண்ணையும் கடவுள் என்று சொல்லிக் கொடுக்காமல் இருந்தால் அது கல்லை கல்லாகவே பார்க்கும். மண்ணை மண்ணாகவே பார்க்கும். கடவுளாகப் பார்க்காது. நம்மைவிட எல்லா வகையிலும் மேலனதையே கடவுள் என்று முடிவு செய்ய்ம் வகையில் தான் குழந்தைகளின் இயற்கைத் தன்மை அமைந்துள்ளது என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் சொல்லி விட்டது.
19.05.2010. 08:05
