டிசம்பர் மாத ஏகத்துவம் இதழ்

தலையங்கம்

எண்ணிக்கைக்கு அல்ல!

இறைஉதவி ஏகத்துவத்திற்கே!.

தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை வேர் பிடிக்கத் துவங்கியது முதல் விழுது விட்டுக் கொண்டிருக்கின்ற இக்காலம் வரை அசத்தியவாதிகள் அதை வீழ்த்தவும், வேரறுக்கவும் பல்வேறு முயற்சிகளைச் செய்து கொண்டேயிருக்கின்றனர். தனியாகவும் அணியாகவும் பல்வேறு கட்டங்களில், பல பரிமாணங்களில் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த முயற்சிகளில் ஒன்று தான் மத்ஹபு மாநாடுகள். அன்று இந்த மாநாடுகள் மறைந்த கலீல் ரஹ்மான் ரியாஜி, கலீல் அஹ்மது கீரனூரி போன்றோர் தலைமையில் நடந்தன.

ஏகத்துவவாதிகளுக்கு எதிராக மக்களை ஏவி விடுகின்ற வேலைகளை இந்த மாநாடுகளில் ஆலிம்கள் செய்து வந்தனர். ஏகத்துவவாதிகளை இடம் தெரியாமல் அழித்து விடுகின்றோம் என்று இறுமாப்புடன் எக்காளமிட்டனர்.

இதற்குத் தக்க ஒரு சில ஊர் நிர்வாகங்கள் இந்த சத்திய மரத்தின் வேர்களில் கோடரிகளைப் பாய்ச்ச முனைந்தனர்; காட்டுத் தர்பார்களை நடத்தினர்; காட்டுமிராண்டித்தனங்களைக் கட்டவிழ்த்து விட்டனர்.

இதன் விளைவாக அல்லாஹ்வின் பள்ளியில் தொழவிடாமல் ஏகத்துவவாதிகளை அடித்து விரட்டினர். ஊர் நீக்கம் செய்தனர். ஜனாஸாவை அடக்க விடாமல் சர்வாதிகாரம் செய்தனர். திருமணப் பதிவேடு தர மறுத்தனர். ஏகத்துவப் பிரச்சாரத்திற்குத் தடை விதித்தனர்.

இந்த எதிர்ப்புகளில் ஒரு சிலர் அடங்கி, அமுங்கிப் போயினர். ஆனால் அதிகமான ஏகத்துவவாதிகள் எதிர்த்து நின்றனர். ஏகத்துவத்திற்காக மரணத்தைக் கூட ஏற்க அவர்கள் தயாராக இருந்தனர்.

உச்சக்கட்டமாக ஒவ்வொரு ஏகத்துவவாதியும் உயிர் அர்ப்பணிப்பை இலக்காகவும் லட்சியமாகவும் கொண்டதால் இவர்களின் அடக்குமுறை அட்டகாசங்கள் எதுவும் அவனிடம் எடுபடவில்லை. அவனைப் பொறுத்த வரை இவை அனைத்தும் குறைந்தபட்ச நடவடிக்கைகளாகவே அமைந்தன.

அதனால் அவன் ஓர் இரும்புப் பாளமாக, எஃகுக் கோட்டையாக ஆடாமல் அசையாமல் இவற்றை எதிர் கொண்டான்; எதிர்த்து நின்றான். இதன் எதிர் விளைவு ஏகத்துவம் ஓங்கி வளர்ந்தது. ஊருக்கு ஊர் ஒரு தவ்ஹீதுவாதி என்றிருந்த நிலை மாறி, வீட்டுக்கு வீடு ஒருவர் என்றானது. ஏகத்துவவாதிகளின் எண்ணிக்கை எகிறியது. அல்லாஹ்வின் அருளால் ஏறிக் கொண்டேயிருக்கின்றது. இதுதான் உண்மை நிலை. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த உண்மை இவ்வளவு பளிச்சென்று வெளிச்சமான பிறகும் இந்த ஆலிம்கள் பொதுக்கூட்டம், மாநாடு என்று போட்டு ஏகத்துவத்திற்கு எதிராக மக்களை உசுப்பேற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்களது பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் பிசுபிசுத்து விடுகின்றன. கடந்த காலத்தில் மாநாடுகள் என்ற பெயரில் ஏகத்துவவாதிகளுக்கு எதிராக இவர்கள் வைத்த வத்திகள், வெடிகள் கொஞ்சம் கொஞ்சம் வேலை செய்தன. ஆனால் இப்போது அவை அப்படியே நைத்து, நாறிப் போய்விட்டன. ஆனால் இவர்கள் மாநாடு நடத்துவதை விடவில்லை.

கடந்த நவம்பர் 8ம் தேதி வெள்ளிக்கிழமையன்று சென்னை எழும்பூர் இம்பீரியல் வளாகத்தில் ஒரு மாலை நேர மாநாடு நடந்துள்ளது. இதற்கு மத்ஹபு விளக்க மாநாடு என்று பெயர் வைத்துள்ளனர். வழக்கம் போல இந்த மாநாடும் பிசுபிசுத்த உசுப்பேற்றும் மாநாடு தான். மக்கள் செல்வாக்கு இல்லாமல் மண்டபத்தில் அடைபட்டுப் போன இந்த மாநாட்டைப் பற்றி தமிழகத்தில் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் உண்மை.

தப்லீக் வேடம் போட்டு, பரேலவிசம் பேசுகின்ற பொய்களின் சக்கரவர்த்தி ஸைபுத்தீன் ரஷாதி தான் இந்த மாநாட்டின் கதாநாயகன். கூடவே ஒரு சதீதுத்தீன் பாகவி! இந்த மாநாட்டில் தவ்ஹீதுக் கொள்கைக்கு எதிராக அத்தனை விஷத்தைக் கக்கியிருந்தார்கள். அத்துடன் தங்களது தலை கால் புரியாத ஆணவத்தையும் தலைக்கனத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

"இன்று தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஹல்லா ஜமாஅத் பள்ளிவாசல்கள் இருக்கின்றன. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் வீடுகளையும் கடைகளையும் வாடகைக்கு எடுத்து பள்ளிவாசல் எனப் பெயர் சூட்டி சுமார் 300 இடங்களில் நடத்துகிறார்கள். இந்த 300, பன்னிரெண்டாயிரத்தை அழித்துவிட முடியுமா?'' என ஆணவத்தின் உச்சியிலிருந்து கொழுப்பேறிய வார்த்தைகளைக் கொப்பளிக்கின்றார்கள்.

நமது ஜமாஅத்திற்கு 650க்கும் மேற்பட்ட பள்ளிகள், மர்கஸ்கள் இருக்கின்றன. இதை முன்னூறு என்று சொல்லியிருக்கின்றார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். நம்முடைய மர்கஸ்கள் வாடகை வீடுகளிலும், கடை மாடிகளிலும் தான் இயங்குகின்றன. சொந்தக் கட்டிடங்களாக இருந்தாலும் அவையும்கூட அதன் முகடுகள் கீற்றுக் கூரைகளிலும், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளிலும் தான் அமைந்திருக்கின்றன. இதைத் தான் இவர்கள் கேலியும் கிண்டலும் செய்கின்றார்கள்.

மஸ்ஜிதுந்நபவீ ஆரம்பத்தில் இப்படித் தான் ஈச்ச மரக் கீற்றுகளில் வேயப்பட்டிருந்தது. வெறும் மணற்பரப்பைத் தரையாகக் கொண்டிருந்தது. சரியான வாயிற்கதவுகள் இல்லாத, நாய்கள் கூட உள்ளே வந்து செல்கின்ற அளவுக்குத் திறந்தவெளிப் பள்ளியாகத் தான் மஸ்ஜிதுந்நபவீ இருந்தது.

பத்ருக் களப் போராளிகளைப் புறப்படச் செய்து, ஏகத்துவ எதிரிகளைப் புறங்காணச் செய்தது கூரையால் வேயப்பட்ட இந்தக் குடிசைப் பள்ளி தான்.

வீராவேசத்தோடும் வெறித்தனத்தோடும் முஸ்லிம்களை வேரறுக்க வந்த எதிரிகளை, அதன் பெருந்தலைகளை, வேரறுந்த மரங்களாக, வெறும் பிணங்களாக பத்ரின் கலீப் எனும் பாழுங்கிணற்றில் வீசியெறியச் செய்தது, வீழச் செய்தது இந்தச் சிறு கூடாரம் தான்.

இந்த இரு அணிகளும் சந்திக்கும் போது, "யா அல்லாஹ்! உறவைத் துண்டித்து, தெரியாத புதுக் கருத்தைக் கொண்டு வந்தவரை (முஹம்மதை) அதிகாலையில் அழித்து விடு'' என்று அபூஜஹ்ல் பிரார்த்தனை செய்தான். (நூல்: முஸ்னத் அஹ்மத் 2255)

ஆனால் அபூஜஹ்லை வீழச் செய்து, முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவர்களது தோழர்களையும் அல்லாஹ் வாழச் செய்தான்.

இதைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகின்றான்.

(ஏக இறைவனை) மறுப்போரே! நீங்கள் தீர்ப்பைத் தேடுவீர்களானால் இதோ தீர்ப்பு உங்களிடம் வந்து விட்டது. நீங்கள் விலகிக் கொண்டீர்களானால் அது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் மீண்டும் போரிட வந்தால் நாமும் வருவோம். உங்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதும் அது உங்களுக்குச் சிறிதளவும் உதவாது. நம்பிக்கை கொண்டோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

அல்குர்ஆன் 8:19

மத்ஹபு மாநாட்டில் இவர்கள் நம்முடைய மர்கஸ்களைப் பற்றிக் குறிப்பிடும் எண்ணிக்கை 300 தான். இந்த எண்ணிக்கை பத்ருப் போராளிகளின் எண்ணிக்கையை ஒத்திருக்கின்றது. அந்த முன்னூற்றுச் சொச்சம் பேர் ஆயிரத்தை வென்றது போன்று இன்ஷா அல்லாஹ் ஏகத்துவப் படை இவர்களின் பன்னிரண்டாயிரத்தை வெல்லும். ஏனெனில் அல்லாஹ்வின் உதவி எண்ணிக்கைக்கு அல்ல! ஏகத்துவத்திற்குத் தான் என்று இந்த இறைவசனம் இயம்புகின்றது. இந்த ஆணவக்காரர்களுக்கு அல்லாஹ்வின் வசனத்தையே பதிலாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குடும்பவியல்                             தொடர்: 8

நெருங்காதீர்!

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

இன்று நம் குடும்பங்களிலுள்ள நிலையை ஆராய்ந்தால், எல்லோருமே விபச்சாரம் எனும் அசிங்கத்தில் சர்வ சாதரணமாக ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. குடும்பத்தில் இருக்கிற எல்லாருமே சினிமாக்களை (சின்னத்திரை, பெரியதிரை) பார்க்கிறோம். இப்படிப் பார்ப்பது விபச்சாரம் செய்த குற்றத்தில் வராவிட்டாலும், விபச்சாரத்தைச் செய்வதற்கு நெருங்கிய குற்றத்தில் வரும்.

சினிமாப் படங்களில், சின்னத் திரைகளில் யாரோ எவரோ கட்டிப் பிடித்து ஆடுகிற அந்தரங்கத்தைக் காட்சியாக்குகிறார்கள். பாடல்களும் அருவருக்கத்தக்க வகையில் தான் இருக்கின்றன. இதைப் பார்த்து ரசித்தால் விபச்சாரம் செய்வதற்குரிய ஒரு படியைத் தாண்டிவிட்டீர்கள் என்றே அர்த்தம். இதற்கு அடுத்த படி, நாமே செய்து பார்த்தால் என்ன தவறு இருக்கிறது? என்று அதற்குரிய முயற்சியில் இறங்கிவிடுவது தான்.

முதலில், பிறர் செய்வதைப் பார்க்கின்ற போது நமக்கு அருவருப்பாகத் தெரியவில்லை, கூச்சமாக இல்லை என்றால், அதைப் பார்க்கத்தக்கதாக நமது மனம் மாறிவிட்டதெனில், அடுத்ததாக நாமே அதைச் செய்தால் என்ன? என்று நமது எண்ணங்களில் தோன்றிவிடும். நமது செயல்களில் அதற்குரிய வழிகளைத் தேடி முயற்சியில் ஈடுபட வேண்டிய நிலை வந்துவிடும். இப்படித்தான் மனிதனின் மனநிலை படைக்கப்பட்டிருக்கிறது. இதுகூட ஒருவகையான மனோதத்துவ இயல் தான்.

இன்றைய சூழ்நிலையில் சமூகம் கெட்டு, குட்டிச் சுவராகப் போனதற்குக் காரணம், விபச்சாரத்தின் அனைத்து வாசல்களையும் திறந்து வைத்து விட்டு, விபச்சாரம் செய்யாதே என்று கூறுவது தான்.

இஸ்லாம் ஒன்று மட்டும் தான் "அதன் அருகில் கூடச் சென்று விடாதே!' என்று கூறுகிறது. விபச்சாரத்தைச் செய்யாதே என்று கூறுவதால் மட்டும் பயனில்லை. ஏனெனில் விபச்சாரத்திற்குரிய காரண காரியங்களை நெருங்கிவிட்டால் அதைச் செய்துவிடுவாய் என்று கூறும் மார்க்கம் இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் ஒன்று தான் இருக்கமுடியும்.

இன்று இவ்வுலகில் நடக்கிற எல்லாவிதமான கேடுகளுக்கும் காரணம், விபச்சாரத்திற்குத் தூண்டுகின்ற ஆபாசப் படங்களையும் காட்சிகளையும் பாடல்களையும் பார்ப்பது தான். இதையும் அம்மா, அப்பா, பிள்ளைகள் என குடும்ப சகிதம் அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து ரசித்துப் பார்க்கும் அளவுக்கு நமது மனநிலை மாறியிருப்பது தான் காரணம்.

இரட்டை அர்த்தம் தருகிற பாடல்களைக் கேட்கிறோம். அதில் வரும் உடல் சேட்டைகளைப் பார்த்து ரசிக்கிறோம். இதில் எந்தவிதமான வெறுப்பும் நமக்கு வராமல் இருக்கிறது. இந்தக் காட்சியில் காட்டுவதை நமது பிள்ளைகள் செய்தால் ஒத்துக் கொள்வோமா? இந்த மாதிரி நமது தங்கையோ தம்பியோ அந்நியர்களுடன் ஆட்டம் போட்டால் ஒத்துக் கொள்வோமா? எதை நாம் நடைமுறையில் அருவருக்கத்தக்கதாக நம் ஆள்மனது நம்புகிறதோ, எண்ணுகிறதோ அதை நாம் செய்யவில்லை. ஆனால் நெருங்கிவிட்டோம். அதைப் பார்க்கிற போது நமக்கு வெட்கம், ரோஷம் வரவேண்டும். ஆனால் நம்மிடம் அது இல்லாத அளவுக்கு மாற்றியிருப்பது இந்தக் காட்சிகள் தான் என்பதை நாம் முதலில் புரிய வேண்டும். அதனால் தான் அல்லாஹ், "அதன் அருகில் கூட நெருங்காதீர்கள்' என்று கூறுகிறான்.

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.  (அல்குர்ஆன் 17:32)

விபச்சாரத்திற்கு நெருங்குதல் என்றால் இதுபோன்ற கேடுகெட்ட காட்சிகளைப் பார்த்துப் பார்த்து ரசிப்பது, குழைந்து குழைந்து பேசுவது, கணவன் மனைவி அல்லாத ஆண் பெண் இருவர் கொஞ்சுவது போன்றவை தான்.

கணவனிடம் மனைவி கொஞ்சுவதற்குப் பெயர் இல்லறம். குடும்பவியல். ஆனால் சம்பந்தமே இல்லாத ஆண் பெண்ணிடமோ, பெண் ஒரு ஆணிடமோ கொஞ்சுவது விபச்சாரத்திற்கு நெருங்குதல் ஆகும். இப்படியே நெருங்கி, நெருங்கி கடைசியில் எதை விபச்சாரம் என்று அல்லாஹ் சொல்கிறானோ, எதை இந்தச் சமூகமும் விபச்சாரம் என ஒத்துக் கொள்கிறதோ அதில் விழுந்துவிடுகிற நிலையைப் பார்க்கிறோம்.

அதனால்தான் விபச்சாரத்தின் பக்கம் கூட நெருங்காதே! அப்படி நெருங்குவது அருவருக்கத்தக்கதும் கெட்ட வழியுமாகும் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.

"வெட்கக் கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்'' என (முஹம்மதே!) கூறுவீராக!    

(அல்குர்ஆன் 7:33)

இந்த வசனத்தில் சொல்லப்படும் வெளிப்படை என்பது நேரடியாகச் செய்யக் கூடிய விபச்சாரத்தைக் குறிக்கும். அந்தரங்கமானது, இரகசியமானது என்பது நேரடியாகச் செய்வதற்குத் தூண்டக் கூடிய இரகசியப் பேச்சுகள் போன்ற காரண காரியங்களைக் குறிப்பதாகும். சிலர் அந்தரங்கமாக அசிங்கமாகப் பேசிவிட்டு, நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று வாதிடுகின்றனர். விபச்சாரம் என்ற தவறைச் செய்யவில்லை தான். விபச்சாரத்திற்கு நெருங்கி விட்டார்கள்.

அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.

(அல்குர்ஆன் 25:68)

ஒழுக்கக்கேட்டை ஒருவன் செய்தால் அவன் மறுமையில் கடும் தண்டனைக்கு ஆளாகுவான் என அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்.

ஒழுக்கக்கேடான விபச்சாரத்தைச் செய்பவனுக்குரிய தண்டனையை நபிகள் நாயகமும் நமக்கு எச்சரித்துள்ளார்கள். இந்தச் செய்தியை நபிகள் நாயகம் தமக்கு ஏற்பட்ட ஒரு கனவின் மூலம் நமக்கு விளக்குகிறார்கள். நபிமார்கள் கனவு காண்பது இறைவன் புறத்திலிருந்து வருகிற வஹியாகும். நபிமார்களல்லாத நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் காணும் கனவுகள் பெரும்பாலானவை பொய்யாகவும் கற்பனையாகவும்தான் இருக்கும். அதைப் பெரிதுபடுத்தவே கூடாது. நபிமார்களின் கனவில் ஷைத்தான் குறுக்கிட இயலாது. ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் நபிமார்களைப் பாதுகாப்பான். அதனால்தான் இப்ராஹீம் நபியவர்கள் கனவில் தனது மகன் இஸ்மாயீல் அவர்களை அறுப்பதாகக் கண்டதைச் செயல்படுத்தினார்கள்.

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது "என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று கேட்டார். "என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று பதிலளித்தார்.

(அல்குர்ஆன் 37:102)

நேற்றிரவு கனவு கண்டீர்களா? என மக்களிடம் நபிகள் நாயகம் கேட்கிறார்கள். நபித்தோழர்கள் இல்லை என்றார்கள். அப்போது நபியவர்கள் நான் நேற்று இரவு ஒரு கனவு கண்டேன். அதில் இரண்டு வானவர்கள் வந்து, மறுமையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் காட்டுவதற்காக என்னை அழைத்துச் சென்றார்கள். தீய செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர்களுக்குரிய தண்டனையின் பல்வேறு காட்சிகளைப் பார்த்ததை நபித்தோழர்களுக்கு விவரிக்கிறார்கள். அந்தக் காட்சியில் நமக்குரிய ஆதாரம் இருக்கின்றது.

...அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. நெருப்பின் சூடு அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான் "இவர்கள் யார்?' எனக் கேட்டேன்..... "அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்'' என்று சொல்லப்பட்டது. (ஹதீஸ் சுருக்கம்)

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி), நூல்: புகாரி 1386

இதன் முழுச் செய்தியையும் புகாரி 1386வது எண்ணில் பார்க்கவும். இன்னும் பல்வேறு தீமைகளுக்குரிய தண்டனைகளும் அதில் உள்ளன.

சட்டியில் தண்ணீர் கொதிக்கும் போது நுரை பொங்குவதைப் போன்று மனிதர்கள் பொங்கி வருவார்கள். பிறகு நெருப்பு அணைக்கப்பட்டதும் மீண்டும் கீழே சென்றுவிடுவார்கள். அதன் பிறகு மீண்டும் நெருப்பு மூட்டப்படும். அப்போதும் பொங்கி வெளியே வழியும் அளவுக்கு மேலே வருவார்கள். மீண்டும் நெருப்பு அணைக்கப்படும். இப்படி வெளியேற முடியாத அளவுக்கு அதில் ஒழுக்கம் கெட்டவர்கள் தனித் தண்டனையை அனுபவிப்பதாக நபிகள் நாயகம் மறுமைக் காட்சியை வர்ணிக்கிறார்கள்.

ஒழுக்கக் கேட்டில் ஈடுபட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறப்புத் தண்டனை தான் வேக வைக்கும் தண்டனையாகும். இதைத்தான் அல்லாஹ் மேற்சொன்ன வசனத்தில் கடும் தண்டனை என எச்சரிக்கிறான்.

எனவே மறுமையில் இவ்வளவு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டால் ஆணுக்கும் பெண்ணுக்கும் குடும்ப வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் கணவன் மனைவியர்கள் வாழ்வார்கள். அதனால் இந்தச் சமூகமும் தழைத்தோங்கும். இல்லற வாழ்க்கையிலிருந்து தடுமாறி ஒழுக்கக் கேட்டிற்குச் செல்வதுதான் இன்று குடும்ப வாழ்க்கை கசப்பாவதற்குக் காரணமாகி விடுகின்றது.

முஸ்லிம்களாகிய நம் அனைவரின் ஆசை, நம்பிக்கை எல்லாம் மறுமை வாழ்க்கையில் சுவனத்தை அடைய வேண்டும் என்பது தான். அதற்கு இவ்வுலகில் வாழும் போது பல விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கும். இருந்தாலும் இரண்டு காரியங்களுக்குப் பொறுப்பேற்கும் மனிதர்களுக்கு சொர்க்கம் கிடைக்க அல்லாஹ்வின் தூதர் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தம் இரு தாடைகளுக்கு இடையே உள்ளத(ôன நாவி)ற்கும், தம் இரு கால்களுக்கு இடையே உள்ளத(ôன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அüக்கிறாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் அüக்கிறேன்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ர-), நூல்: புகாரி 6474, 6807

நாக்கை ஒரு மனிதன் ஒழுங்காகப் பயன்படுத்த வேண்டும். நாக்கினால் தான் எல்லா பிரச்சனைகளுமே உருவாகிறது. அதற்காக ஊமையாக இருக்க வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. அதாவது நாக்கை அல்லாஹ் அனுமதித்த அனைத்து நல்லவற்றுக்குப் பயன்படுத்த வேண்டும். அல்லாஹ் தடுத்திருக்கிற காரியங்களுக்கு இந்த நாக்கைப் பயன்படுத்தக் கூடாது. பொய் பேசாமல், அவதூறு கூறாமல், பிறரைப் பழித்துவிடாமல், சபிக்காமல், கோள் சொல்லாமல், ஆபாசமான பேச்சுக்களைப் பேசாமல் நாவைப் பேணவேண்டும்.

அதே போன்று ஆண்களும் பெண்களும் தங்களது கற்புகளைப் பேணிக் காப்பாற்றினால் அவர்களின் சுவனத்திற்கு நபிகளார் பொறுப்பாளார் ஆவார்கள். இந்தப் பொறுப்பை நபிகள் நாயகமாக, சொந்தமாகச் சொல்லவே இயலாது. அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த வஹியின் மூலம் தான் நபிகளார் இப்படிச் சொல்லவே முடியும்.

எனவே நபிகள் நாயகம் சுவனத்திற்குப் பொறுப்பாளர் என்றால் அல்லாஹ் தான் பொறுப்பு என்று விளங்க வேண்டும். அல்லாஹ் சொல்லாமல் நபிகள் நாயகத்தினால் சுயமாக இப்படிச் சொல்லவே முடியாது என்பதையும் சேர்த்தே விளங்க வேண்டும்.

அதுபோக இந்த ஒழுக்கக்கேடான விஷயங்களில் இன்னும் சில அடிப்படையான செய்திகளைத் தெரிய வேண்டும். பொதுவாக எல்லா மனிதர்களுமே ஏதாவது ஒரு வகையில் ஒழுக்கக்கேட்டை செய்பவர்களாகத் தான் இருப்பார்கள் என இஸ்லாமிய மார்க்கம் சொல்கிறது. அதாவது ஒவ்வொரு மனிதனும் விபச்சாரத்தின் ஒரு பங்கை எப்படியாவது செய்துவிடுவான். எப்படியெனில் ஒழுக்கங்கெட்டதைத் தன் பார்வையின் மூலம் பார்க்கும் போது கண்ணினால் ஒருவன் விபச்சாரம் செய்கிறான் என்று அர்த்தம். விபச்சாரத்திற்குரிய செய்தியைக் காது மூலமாக ஒருவன் கேட்டால் அதனைச் செய்த பங்கு அவனுக்கு உண்டு. இந்தக் கருத்தில் தான் நபியவர்கள் சொல்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-), நூல்: புகாரி 6243, 6612, முஸ்லிம் 5164, 5165

மனிதன் எப்படியாவது ஒரு தடவையாவது விபச்சாரத்தின் பங்கில் விழுந்துவிடுவான். கண்டிப்பாக இது நடந்தே தீரும் என்கிறார்கள். உதாரணத்திற்கு ஒருவன் நான் எந்தப் பெண்ணையும் பார்த்ததே இல்லை என்று சொன்னால் நிச்சயமாக அது பொய்யாகத் தான் இருக்க முடியும். அல்லாஹ் விதியாக்கி விட்டான் என்ற பிறகு ஒருவன், நான் அப்படி இல்லை என்று சொல்லவே முடியாது.

ஒருவர் தவறான போஸ்டரைப் பார்த்தாலோ அல்லது ஒரு மாதிரியான பெண்ணைப் பார்த்தாலோ மனதில் இதுபோன்ற சலனங்கள் வரத்தான் செய்யும்.

இவ்வளவு ஏன்? யூசுஃப் நபியின் நிலைமை என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

யூசுஃப் நபியவர்களுக்கும் கூட இலேசான சலனம் ஏற்பட்டுவிட்டதாகத் தான் அல்லாஹ் நமக்குச் சொல்கிறான்.

அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடிவிட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக் கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்.

(அல்குர்ஆன் 12:24)

அந்தப் பெண் யூசுஃப் நபியை அழைத்த போது அவரும் ஆணாக இருப்பதால் அவரது மனதிலும் சிறிய அளவிலான ஒரு எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் இறைவனின் அத்தாட்சியைப் பார்த்திருக்காவிட்டால் அவரும் அந்த கெட்ட செயலில் விழுந்திருப்பார் என அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அப்படியெனில் யூசுஃப் நபியவர்களுக்கும் இதில் ஒரு எண்ணம் வரத்தான் செய்திருக்கிறது.

இது எல்லா மனிதர்களுக்கும் வந்தே தீரும் என்பதைத் தான் நபியவர்கள் விபச்சாரத்தின் ஒரு பங்கை ஆதமின் மகன் அடைந்தே தீருவான் என்று பிரகடணப்படுத்துகிறார்கள்.

இதுபோன்ற எண்ணமே வராமல் நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது. இப்படி எண்ணம் வந்தால் அதை முறியடித்து அதைச் செயல்படுத்தாமல் இருப்பதில்தான் வெற்றி இருக்கிறது.

நமது மறுமை வெற்றியைப் பாழாக்கிவிடாமல் இவ்வுலகில் நாம் கவனத்துடன் வாழ்வதற்குத் தான் இவற்றை நாம் கூறுகிறோம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?             தொடர்: 5

சூபிஸத்தின் சுய வரலாறு

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

சூபிஸத்தின் காலம் எப்போது துவங்கியது?

முதல் மூன்று நூற்றாண்டுகளில் சூபிஸம் என்ற வார்த்தை பிரபலமாகவே இல்லை என்று ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகின்றார்கள். இப்னு தைமிய்யாவிற்கு முன்பு இதே கருத்தை இப்னுல் ஜவ்ஸி, இப்னுல் கல்தான் ஆகியோரும் கூறியுள்ளனர்.

உலக வாழ்க்கையில் நாட்டம் கொள்ளாமல் மறுமை வாழ்க்கையை மையமாகக் கொண்டு வணக்கத்தில் திளைத்த ஏழை எளியவர்களாக நபித்தோழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். ஆனால் சூபிகள் என்று அவர்களில் யாருக்கும் பட்டம் சூட்டப்படவில்லை. எனவே இது ஆரம்ப காலத்தில் இல்லாத, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வார்த்தையாகும். இப்படி ஒரு வாதத்தை சூபிஸ மறுப்பாளர்கள் முன்வைக்கின்றனர்.

இதற்கு சூபிஸ ஆதரவாளரான சிராஜ் அத்தூஸி என்பவர் அளிக்கும் பதிலைப் பார்ப்போம்.

நபித்தோழர்களுக்கு, "நபித்தோழமை' என்பதை விட வேறு எந்தப் பட்டமும் அவர்களுக்குப் பெரிது கிடையாது. அதுதான் அவர்களுக்கு மாபெரும் பட்டமும் பதவியுமாகும். இதைத் தவிர்த்து அவர்களுக்கு வேறு எந்தப் பட்டத்தையும் சூட்டக்கூடாது.

அவர்களில் உலக வாழ்வை மறந்து மறுமை வாழ்க்கையில் மூழ்கியவர்கள் இருந்தனர். அவர்களுக்குக் கிடைத்த அனைத்து அந்தஸ்தும் மரியாதையும் நபித்தோழமை என்ற பரக்கத்தின் மூலமே கிடைத்தது. அவர்களை நபித்தோழர்கள் என்ற வார்த்தையுடன் இணைக்கும் போது இவர்கள் அந்த வார்த்தையை விட வேறு வார்த்தையைத் தேர்வு செய்வது அசாத்தியமாகும்.

சூபிஸம் என்ற வார்த்தை பாக்தாதைச் சேர்ந்த சிலர் கண்டுபிடித்த புதிய வார்த்தை என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதமும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

காரணம் இந்த வார்த்தை ஹஸன் அல்பஸரீ காலத்திலேயே அறிமுகமாகியுள்ளது. ஹஸன் பஸரீ நபித்தோழர்களின் ஜமாஅத்தையே சந்தித்தவர்.

நான் தவாஃப் செய்யும் போது ஒரு சூபியைக் கண்டேன். அவருக்குப் பணம் கொடுத்தேன். அவர் வாங்க மறுத்து, "என்னிடம் ஆறில் ஒரு பகுதி நாணயம் உள்ளது. அது எனக்குப் போதும்' என்று கூறிவிட்டார்.

இவ்வாறு ஹஸன் பஸரீ கூறியதாக அவரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அபூஹாஷிம் என்ற சூபி இல்லையென்றால் மயிரிழை அளவிலான முகஸ்துதி எனும் ரியாவை நான் அறிந்திருக்க முடியாது என்று சுஃப்யான் அஸ்ஸவ்ரீ கூறியதாக அவரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

"இஸ்லாம் வருவதற்கு முன்னால் ஏதோ ஒரு நேரத்தில் கஅபாவை தவாஃப் செய்ய ஒருவர் கூட இல்லை என்ற ஒரு கட்டம் ஏற்படும் கட்டத்தில் தூரமான ஊரிலிருந்து சூபி ஒருவர் வந்து தவாஃப் செய்துவிட்டுத் திரும்புவார்'' என்று ஒரு சம்பவத்தை சுஃப்யான் அஸ்ஸவ்ரீ, மக்கா சம்பவங்கள் என்ற நூலில் முஹம்மது பின் இஸ்ஹாக் மற்றும் சிலரிடமிருந்து அறிவித்துள்ளார்.

இது சரியான சம்பவம் என்றால் சூபி என்ற பெயர் இஸ்லாம் வருவதற்கு முன்னாலேயே அறிமுகமான வார்த்தை என்பதை விளங்கலாம். சீரும் சிறப்பும் உள்ளவர்கள் இந்தப் பெயருடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளனர். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இது தான் சிராஜ் அத்தூஸி என்பவர் அளிக்கும் பதிலுரையாகும்.

இந்தப் பதிவுகள் அனைத்தும் சூபிஸம் என்ற வார்த்தை ஆரம்ப காலத்தில் இருந்தது என்பதற்கு ஒருபோதும் ஆதாரமாகாது. இஸ்லாத்தில் இணைந்தவர்கள் இந்த வார்த்தையை இறக்குமதி செய்த பின்னர் தான் முஸ்லிம்களிடம் இது அரங்கேறி விட்டது.

அல்ஜரஹ் வத்தஃதீல் - அறிவிப்பாளர்களின் குறை நிறை என்ற நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இந்த நூல்கள் நல்லவர்களை, கெட்டவர்களை அலசி, உரசிப் பார்க்கின்ற ஆய்வு நூல்களாகும். அவர்களை எடைபோட்டுப் பார்க்கின்ற நூற்களாகும். இந்நூல்களில் நல்லவர்களை எடைபோடுவதற்குச் சில வார்த்தைகளையும் கெட்டவர்களை எடைபோடுவதற்குச் சில வார்த்தைகளையும் பயன்படுத்துகின்றனர். இந்த சூபி என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதே இது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இல்லாத வார்த்தை என்பதற்குப் போதிய சான்றாகும்.

இரண்டாவது ஆய்வு

சூபிஸம் என்ற இந்தச் சரக்கின் அடிப்படையும் மூலமும் முன்சென்ற திரிக்கப்பட்ட மார்க்கங்களிலிருந்தும் தகர்க்கப்பட்ட பழைய சித்தாந்தங்களிலிருந்தும் எடுக்கப்பட்டது தான். இதை இஹ்யா உலூமித்தீன் மற்றும் இதர நூல்களிலிருந்து எடுத்துக் காட்டுகின்ற செய்திகள் மூலம் பின்னர் தெளிவாக விளக்குவோம். அப்போது, கஸ்ஸாலி அவர்கள் இஹ்யாவில் நிரப்பி வைத்திருக்கின்ற முடை நாற்றமெடுக்கும் மூல ஆதாரங்களை, மாய்மாலங்களை அடையாளம் காட்டுவோம்.

கிறித்துவத்தின் சூபிஸ வழிகேடு வெட்ட வெளிச்சமானது. யூதத்தின் சூபிஸ வழிகேடும் நன்கு தெளிவானது. புத்த மதத்தின் சூபிஸச் சிந்தனையும் பட்டவர்த்தனமானது. பிளேட்டோவின் சூபிஸ விஷமும் பகிரங்கமானது.

ஷியா கொள்கையை எடுத்துக் கொண்டால் அதன் முதுகெலும்பும் அதன் உடம்பில் ஓடுகின்ற உதிரமும் வழிகேடான சூபிஸ சிந்தனை தான்.

சூபிஸத்தைப் படித்து, ஆழ்ந்து சிந்தனை செய்யக்கூடிய ஒவ்வொருவரும் அதன் வேர்களும் கிளைகளும் இலைகளும் அனைத்துமே ஷியாயிஸம் என்பதைத் தெரிவாகப் புரிந்து கொள்வார். இதன் அத்தனை தன்மைகளையும் நன்கு விளங்கிக் கொள்வார். இந்தத் தொடரிலும் அந்தந்த இடங்களில் பொருத்தமாக நாம் சுட்டிக் காட்டும் போது மிகத் தெளிவாக விளங்கும்.

இஸ்லாம் என்றால் அல்லாஹ்வின் வேதமும் அவனது தூதரின் வழிகாட்டலும் மட்டும் தான்.

அந்தத் தூய மார்க்கம் இந்த அந்நிய இறக்குமதிகளை ஒருபோதும் அனுமதிக்காது; ஆதரிக்காது. ஏனெனில் அவ்வாறு அந்த இறக்குமதிகளை உள்வாங்க ஆரம்பித்தால் இஸ்லாத்தின் தூய பாதைக்கு நேர் எதிரான பாதையில் பயணிக்க வைத்துவிடும்.

இஸ்லாத்தைப் படித்துப் பாதுகாத்தவர்கள், நபி (ஸல்) அவர்களின் செயல்திட்ட வரலாற்றையும் நபிவழி நடந்த தோழர்கள், நல்லவர்களின் வரலாற்றையும் புரட்டுபவர்கள் யாருமே உருப்படாத, ஒன்றுக்கும் உதவாத இந்தச் சித்தாந்தங்களின் பக்கம் அறவே திரும்பிப் பார்க்க மாட்டார்.

மூன்றாவது ஆய்வு

வரலாற்று நெடுகப் பார்த்தோமென்றால் சூபிஸம் என்பது முஸ்லிம்களுக்கு ஒரு சோதனையாகவே அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இது முஸ்லிம்களுடைய ஒற்றுமையைக் குலைத்துள்ளது. அவர்களது ஒருங்கிணைப்பை உடைத்திருக்கின்றது. அவர்களது புகழை மங்கச் செய்திருக்கின்றது.

இஸ்லாத்தின் மிக உயர்தரமான, உன்னதமான கடமை ஜிஹாத் என்ற அறப்போராகும். தான் திரட்டி வைத்த அனைத்து சக்திகள் மூலம் தன்னை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தலே ஜிஹாத் ஆகும். இந்த அறப்போரை விட்டும் முஸ்லிம்களை அப்புறப்படுத்தி அவர்களை ஒரு மூலையில் முடக்கி, முடமாக்கிப் போட்டு விட்டது. (ஜிஹாத் என்பது தீய சக்திகளுக்கு எதிராக ஒரு நல்ல அரசாங்கம் நடத்தும் புனிதப்போராகும். தனிநபர்கள் செய்யும் பயங்கரவாதச் செயல்கள் அல்ல.)

அறப்போருக்கு அடுத்தபடியாக, நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் எனும் பணி.

இந்தப் பணியை ஆற்றுவதை விட்டு முஸ்லிம்களை செயலிழக்க வைத்தது சூபிஸம் என்ற விஷச் சிந்தனை!

ஒதுங்கி இரு! ஓரத்தில் ஒடுங்கி இரு! தனித்திரு! தாகித்திரு! பசித்திரு! பட்டினியாயிரு! தள்ளியிரு! தவமிரு என்ற மந்திரங்களைச் சொல்லி, செயல்திறன்மிக்க, வீரமிக்க ஒரு முஸ்லிமைச் செத்த பிணமாக்கியது இந்த சூபிஸச் சிந்தனை தான். இவற்றையும் ஆங்காங்கே உதாரணங்களுடன் நாம் விளக்குவோம்.

முஸ்லிம்களின் அறிவையும், அவர்களது மார்க்கத்தையும் பறித்து, ஆதாரமோ அடிப்படையோ இல்லாத கற்பனைகளிலும் கனவுகளிலும் போதையுண்டவர்களைப் போன்று மிதக்க வைத்து விட்டது இந்தச் சூபிஸம்.

ஒரு சூபிஸவாதியின் ஒட்டுமொத்த சித்தனையுமே தொழுகை, நோன்பு, ஹலால், ஹராம் போன்ற ஷரீஅத் சட்டங்களின் கட்டுப்பாடுகளைக் கடந்து, மோ(ட்)ச நிலையை அடைவதாகும்.

நான்காவது ஆய்வு

அதிகமான எழுத்தாளர்கள் கஸ்ஸாலியின் ஆக்கத்தைப் பற்றியும் அவரது ஆளுமை பற்றியும் எழுதித் தள்ளியிருக்கின்றனர். அவர்களில் முஸ்லிம்களும் கிழக்கத்தியர்களும் அடங்குவர். ஒவ்வொருவரும் தங்கள் கண்களில் என்னென்ன கண்ணாடியை அணிந்தார்களோ அந்தக் கண்ணாடிக்குத் தக்க அவர்கள் கஸ்ஸாலியைப் பார்த்தனர்.

தத்துவவியலாளர்கள் கஸ்ஸாலியை தத்துவார்த்த அடிப்படையில் பார்த்தனர். கடவுள் கோட்பாட்டாளர்கள் தனது கோட்பாட்டின் அடிப்படையில் அவரைப் பார்த்தனர். சூபிகள் அவரை சூபிஸம் அடிப்படையில் பார்த்தனர். கஸ்ஸாலியோ சூபிகளின் ஆசானாகத் திகழ்ந்தார். அவர் தான் சூபிஸப் பாதைக்கு அடித்தளம் அமைத்த ஆசான்.

கஸ்ஸாலியை குர்ஆன், ஹதீஸ் என்ற கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தவர்களும் உண்டு. அவர்களது பார்வையில் முன்னோர்களின் சரியான நிலைப்பாட்டை என்னால் காண முடிந்தது. அவர்களில் ஹாபிழ் தஹபியும் ஒருவராவார். அவரது கருத்தை இன்ஷா அல்லாஹ் இதில் கொண்டுவர இருக்கின்றேன்.

அபூஹாமித் அல்கஸ்ஸாலியும் சூபிஸமும் என்ற தலைப்பில் டமாஸ்கஸைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் என்பவர் ஓர் அற்புதமான ஆய்வு நூலை ஆக்கம் செய்திருக்கின்றார். அது ஒரு புறமிருக்க, இன்னொரு புறத்தில் கஸ்ஸாலியின் நூற்களை ஆய்வு செய்து, அதில் மலையளவுக்குக் கொட்டிக் கிடக்கின்ற கொள்கை ரீதியிலான தவறுகளை முஸ்லிம்களிடம் எடுத்துரைப்பது அதற்கான திறமை படைத்த ஒவ்வொரு சிந்தனையாளர் மீதும் கடமையாகும்.

வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.

அல்குர்ஆன் 2:159

வேதத்தில் உள்ள செய்திகளை மறைப்பவர்களை, இருட்டடிப்பு செய்பவர்களை சாபத்திற்குரியவர்கள் என்று இறைவன் இந்த வசனத்தில் சாடியுள்ளான். அதனால் இதற்கு ஆற்றல் படைத்த அறிஞர்கள் இந்தச் சாபத்தின் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அபூதர் (ரலி) அவர்கள் தமது பிடரியைச் சுட்டிக் காட்டி, "இதன் மீது வாளை வைத்து, நபி (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்ற ஒரு செய்தியைச் சொல்லக் கூடாது என்று தடுத்தாலும் அதனை நான் சொல்லியே தீருவேன்'' என்று கூறினார்கள்.

நூல்: தாரமீ 544

கழுத்துக்கே கத்தி வந்தாலும் காரணங்கள் எதுவாக இருந்தாலும் சத்தியத்தை அடுத்தவருக்கு எடுத்துச் சொல்வதில் முன்னோர்களான நபித்தோழர்கள் முன்னுதாரணங்களாகத் திகழ்ந்துள்ளனர் என்பதையே இது நமக்கு உணர்த்துகின்றது.

சத்தியத்தை இப்படித் துணிச்சலாக மக்களிடம் சமர்ப்பிப்பதில் அவர்களை முன்னுதாரணங்களாகக் கொண்டு, அவர்களிடமிருந்து நாம் பாடம் பயில வேண்டும். எழுத்து, சொல் வடிவத்தில் செவிக்கு வந்த, கண்ணில் பட்ட எந்த அசத்தியத்தையும் மக்களிடம் சொல்லாமல் நாம் ஊமைகளாக ஆகிவிடக் கூடாது.

ஆண்களே! அஞ்சிக் கொள்ளுங்கள்!

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

மனித இனத்தை ஜோடியாகப் படைத்திருக்கும் இறைவன், அந்த ஆண், பெண் எனும் ஜோடிக்கு இடையே பல்வேறு வேறுபாடுகளை வைத்திருக்கிறான். இருவருக்கும் மத்தியில் ஒருவருக்கொருவர் கவரப்படுவதிலும் வித்தியாசத்தை வைத்துள்ளான். ஆண் மூலம் பெண் ஈர்க்கப்படுவதற்கும் பெண் மூலம் ஆண் ஈர்க்கப்படுவதற்கும் இடையே வேறுபாடு இருப்பதை எவரும் மறுக்க இயலாது.

பெண்கள் தொடுதல் எனும் தீண்டுதல் மூலம் உணர்வு தூண்டப்படுகிறார்கள். ஆண்கள் தங்களது பார்வையின் மூலம் அதாவது பெண்களைப் பார்த்தாலேயே கவரப்படுபவர்களாக இருக்கிறார்கள். இதனால் தான் இஸ்லாம் பெண்களுக்கு ஹிஜாபைப் பேணச்சொல்கிறது. இரு சாராருக்கும் இடையே இன ரீதியாக இருக்கும் இந்த இயற்கையான இயல்பை, யதார்த்தமான தன்மையை நடைமுறை நிகழ்வுகளும் விஞ்ஞானமும் மெய்ப்படுத்துகின்றன.

எனவே தான் எல்லாப் படைப்பினங்களைப் பற்றியும் முற்றும் அறிந்தவனான ஏக இறைவன், இஸ்லாம் எனும் இயற்கையான, இனிமையான வாழ்க்கைத் திட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு பிரத்யோகமான பல்வேறு சட்டங்களைப் பிறப்பித்துள்ளான். பெண்கள், அவற்றை அறிந்து அதன்படி செயல்படுவது தான் அவர்களின் நல்வாழ்வுக்கு உகந்தது. அதுபோன்று ஆண்களுக்கும் அவசியமான அறிவுரைகளை, எச்சரிக்கைகள் கலந்த தகவல்களை எடுத்துரைத்துள்ளான். ஆண்கள் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய அந்தச் செய்திகளைத் தொடர்ச்சியாக நாம் தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

மனதை கவரும் இன்பம்

ஏக இறைவனை வணங்குவதற்காக நாம் படைக்கப்பட்டு இருப்பினும் நமது வாழ்க்கை இன்பமாக இருப்பதற்கு அளவற்ற அருட்கொடைகளை அவன் அள்ளி வழங்கியிருக்கிறான். ஏராளமான இன்பம் தரும் காரணிகளை காணுமிடமெங்கும் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். பரந்து விரிந்த பூமியில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான பல்வேறான வாய்ப்புகளை வாரி வழங்கியிருக்கிறான். இவ்வாறு நமது வாழ்க்கையை அலங்கரிப்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் கவர்ச்சிகரமானவைகளுள் முக்கியமான ஒன்றுதான் ஆணுக்குப் பெண்; பெண்ணுக்கு ஆண் என்று வாழ்க்கைத் துணையைக் கொடுத்திருப்பது ஆகும்.

பின்வரும் வசனத்தில், தங்கம், வெள்ளி என்று மனதை மயக்கும், கவனத்தைக் கொள்ளை கொள்ளும் உலக இன்பங்களின் பட்டியலில் வாழ்க்கைத் துணை என்பதும் முதன்மையாக சொல்லப்பட்டிருப்பதின் மூலம் அதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளலாம்.

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளைநிலங்கள் ஆகிய மனவிருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.

(திருக்குர்ஆன் 3:14)

கவனத்தைக் கவரும் கவர்ச்சிகரமான விஷயங்களில் பெண்கள் இடம்பெற்றிருப்பதை ஆண்கள் கண்டிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். உலக இன்பங்களில் மயங்கி வழிகேடுகளில் விழுந்து விடக்கூடாது என்று  எச்சரிக்கையோடு இருக்கும் ஆண்கள், பெண்கள் விஷயங்களிலும் எல்லை மீறிவிடக்கூடாது. மார்க்கத்தில் அனுமதிக்கபட்ட முறையிலே தவிர அதற்கு அப்பாற்பட்ட வகையில் எந்தவொரு அணுகுமுறையையும் அவர்களிடம் அமைத்துக் கொள்ளக்கூடாது. காரணம், மற்ற உலக இன்பங்களினால் ஏற்படும் பாதிப்பை விட இதனால் நிகழும் பாதிப்பு பாரதூரமானதாக இருக்கும். அதனால் தான் ஆண் பெண் ஒழுக்கத்தைப் பற்றி இஸ்லாம் அதிகமதிகம் பேசுகிறது.

நிய்யத்தை மாற்றும் மங்கைகள்

பெண் பித்து பொல்லாதது என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். ஒரு ஆண்மகன், ஒரு பெண் மீது கண்மூடித்தனமாகக் கொண்டிருக்கும் பாசம், மோகம் இரண்டும் அவனை எப்படி வேண்டுமானாலும் செயல்பட வைக்கும். பெண்கள் விவகாரங்களில் பலவீனமாக இருந்ததன் விளைவாகப் பலர் தங்களது கொள்கை கோட்பாடுகளையே மறந்து, படுமோசமான பாதையில் பயணிப்பதைப் பார்க்கவே செய்கிறோம். அந்த அளவிற்குக் குருட்டுத்தனமான பெண்ணாசை நமது நம்பிக்கையின் வேர்களைக் கரைத்துவிடும் கொடிய அமிலத்தைப் போன்றது.

எந்தவொரு வணக்கத்தையும் நற்காôரியத்தையும் படைத்தவனுக்காகச் செய்து அவனிடம் நற்கூலியைப் பெற வேண்டும் என்ற மறுமை நோக்கத்தையே மறக்கடித்து, தூய எண்ணத்தை நிறம் மாற்றி, திசைமாற்றி பயணிக்க வைக்கும் வல்லமை பெண் மீதான ஈர்ப்புக்கு இருக்கிறது என்பதைப் பின்வரும் போதனை நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது.

எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. ஆகவே, எவரது ஹிஜ்ரத் (நாடுதுறத்தல்) அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)

நூல்: புஹாரி 1

நமது இலட்சியத்தில் இருந்து விலகச் செய்யும் விஷயங்களில் மிக முக்கியமானது முதன்மையானது பெண்ணும் பொன்னும்தான் என்று சொன்னால் மிகையாது. காதல் என்ற பெயரில், ஏகஇறைவனை மறுக்கின்ற பெண்களை திருமணம் செய்வதற்காக சத்திய மார்க்கத்தைத் தூக்கி எறிந்து அசத்தியத்திற்குச் செல்பவர்கள் இதற்குச் சரியான உதாரணமாக இருக்கிறார்கள்.

பெண்களால் வரும் சோதனைகளும் குழப்பங்களும்

இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கும் இன்பங்கள், அருட்கொடைகள் அனைத்திலும் நமக்கு சோதனைகள் இருக்கின்றன. செல்வம் போன்ற இன்பங்கள் சோதனையாக இருப்பது போன்று நம்மைச் சுற்றியிருக்கும் எதிர்பாலினத்தின் மூலமும் நமக்குச் சோதனைகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பெண்களின் மூலம் தாங்கள் சோதிப்படுவோம் என்பதை ஆண்கள் மறந்து விடக்கூடாது. இதை மறந்து செயல்பட்டு சிக்கல்களில், குழப்பங்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதைப் பின்வரும் செய்தியில் விளங்கலாம்.

இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிலிருந்தும் பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூஇஸ்ராயீல் சமுதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால் தான் ஏற்பட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5292

பெண்களால் வரும் பிரச்சனைகள்

மோசமான சிந்தனைகள், தவறான நடத்தைகள் கொண்ட பெண்கள் மூலமும், பெண்கள் விவகாரங்களில் பலவீனமாக இருத்தல், பக்குவப்படாமல் செயல்படுதல் மூலமும் நாம் சர்ச்சைகளில் விமாச்னங்களில் மாட்டிக் கொள்ளும் சூழ்நிலைகள் நமக்கு ஏற்படலாம். நாம் நல்லவர்களாக இருந்தபோதும் நம்மைச் சுற்றியிருக்கும் இழிகுணமும் தீய நோக்கமும் கொண்ட பெண்களால் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கும் சூழல் இன்று மட்டுல்ல! எல்லாக் காலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கும். நற்பெயர் பெற்று நல்ல முறையில் வாழ்பவர்களையும் கூட இதுபோன்ற இடையூறுகள் இடம்தேடி வரும் என்பதற்குப் பின்வரும் கடந்த கால சம்பவங்கள் சான்றுகளாக இருக்கின்றன.

யூசுஃப் (அலை) அவர்கள் வளர்ந்து ஆளான மன்னருடைய வீட்டிலேயே அந்த மன்னருடைய மனைவி மூலம் தவறான நடத்தைக்கு அழைக்கப்படுகிறார்கள். அந்த அழகிய தூதர் அவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சி அவளை விட்டும் அகலும்போது பொய்யான குற்றம் சுமத்தப்பட்டு சிறைவாசம் செல்கிறார்கள். இப்படி ஒரு பெண் மூலம் அவர்கள் அடைந்த சிரமங்களை நமது படிப்பினைக்காக வல்ல இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான். இதை நபிகளாரும் தமது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் போது ஒப்பிட்டு நினைவு கூருகிறார்கள்.

எவளது வீட்டில் (யூசுஃப் நபி) அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து "வா!' என்றாள். அதற்கவர் "அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்'' எனக் கூறினார். அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடிவிட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்களில் ஒருவர்.

இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர். அவள் அவரது சட்டையைப் பின்புறமாகப் பிடித்துக் கிழித்தாள். அப்போது அவளது கணவனை வாசல் அருகே இருவரும் கண்டனர். "உமது மனைவியிடம் தீய செயல் செய்ய நினைத்தவருக்கு சிறையிலடைத்தல், அல்லது துன்புறுத்தும் வேதனை தவிர வேறு என்ன தண்டனை இருக்க முடியும்?'' என்று அவள் கூறினாள். "இவள் தான் என்னை மயக்கலானாள்'' என்று அவர் கூறினார்.

"அவரது சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள்; அவர் பொய்யர். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மையாளர்'' என்று அவளது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சான்றுரைத்தார். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்ட போது, "இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியது'' என்றார்.

அல்குர்ஆன் 12:23-28

இதுபோன்று முந்தைய காலத்தில் வாழ்ந்த ஜுரைஜ் என்ற நல்லடியாருக்கும் ஒரு நடத்தை கெட்ட பெண் மூலம் வந்த பிரச்சனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துச் சொல்லியுள்ளார்கள். அவற்றைத் தெரிந்து கொள்வோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முற்காலத்தில்) ஒரு பெண்மணி, ஆசிரமம் ஒன்றில் இருந்த தம் மகனை "ஜுரைஜ்' என்று அழைத்தார். ஜுரைஜ் "இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே' என்று  (மனதிற்குள்) கூறினார்.  மீண்டும் அப்பெண் "ஜுரைஜ்' என்று அழைத்தபோது "இறைவா! நான் தொழுதுகொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே!' என்று (மனத்திற்குள்) கூறினார். அப்போது அப்பெண் "இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்காமல் ஜுரைஜ் இறக்கக்கூடாது' என்று துஆச் செய்தார். ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தி ஜுரைஜுடைய ஆசிரமத்திற்கு வந்து செல்பவளாக இருந்தாள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றாள். இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று அவளிடம் கேட்கப் பட்ட போது, "ஜுரைஜுக்குத் தான்; அவர் தமது ஆசிரமத்திலிருந்து இறங்கி வந்து இவ்வாறு செய்து விட்டார்'' என்று  அவள் கூறினாள். "தனது குழந்தையை எனக்குப் பிறந்தது எனக் கூறும் அப்பெண் எங்கே?'' என்று ஜுரைஜ் கேட்டுவிட்டு அவள் பெற்ற குழந்தையை நோக்கி "சிறுவனே! உன் தந்தை யார்?'' எனக் கேட்டார். அதற்கு அக்குழந்தை'' ஆடுமேய்க்கும் இன்னார்''  என விடையளித்தது.           

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புஹாரி 1206

தொழில் நிறுவனம், இயக்கம், அலுவலகம், கல்விச்சாலை, கடைத்தெரு, இருப்பிடம் என்று ஆண்கள் பெண்கள் கலந்து இருக்கும் எல்லா இடங்களிலும் இதுபோன்று ஏதாவதொரு பிரச்சனைகள் வெடிப்பதற்கு, ஒழுக்கத்தில் சறுகி விடுவதற்குச் சிறிதளவேனும் வாய்ப்புகள் இருக்கவே செய்யும். சமுதாய அக்கறை கொண்டவர்கள், ஒழுக்கக் கேடுகளை எதிர்ப்பவர்கள், நன்முறையில் வாழ்ந்து மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் மாட்டிக் கொள்ளாத வகையில் சுதாரித்து நடந்து கொள்ள வேண்டும். யாரெல்லாம் சமுதாயத்தில் நற்பெயரை இழந்து மக்களின் வெறுப்பிற்கும் இழி சொல்லுக்கும் ஆளானார்களோ அவர்களில் அனேகமானவர்கள் பெண் விஷயத்தில் தவறிழைத்து அகப்பட்டுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை கவனிக்கத் தவறி விடக்ககூடாது.

மதியை மாற்றும் மாதுக்கள்

வீரம், வாதத் திறமை, முற்போக்குக் குணம், முடிவெடுக்கும் மதி நுட்பம் இப்படிப் பல திறமைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் ஒரு ஆண்மகனை ஒரு பெண் எளிதில் ஏமாற்றிவிடுவாள். தமது அழகின் கவர்ச்சியால் வீழ்த்திவிடுவாள். இப்படி அறிவிலும் ஆற்றலிலும் பலம் கொண்ட பல ஆண்கள், பெண் மோகத்தில் மூழ்கிப் பலியாகி, கைசேதப்பட்டுக் கிடக்கிறார்கள். இவ்வாறு ஆண்களை மயக்கும் பேராயுதமான கவர்ச்சி பெண்களிடம் இருக்கிறது. அவர்களால் ஆண்கள் மார்க்கத்தையே தொலைக்கும் தருணமும் ஏற்படலாம் என்பதைப் பின்வரும் செய்தி விளக்குகிறது.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். "மக்களே! தர்மம் செய்யுங்கள்!'' என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, "பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்!'' என்றார்கள். "அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை?'' எனப் பெண்கள் கேட்டதும், "நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறுசெய்கிறீர்கள்; கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையி)லும் குறைவுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கிவிடுகிறீர்கள்'' என்று நபி(ஸல்) கூறிவிட்டு, (வீட்டிற்குச்) சென்றார்கள். இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் (ரலி) வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினர். "அல்லாஹ்வின் தூதரே! ஸைனப் வந்திருக்கிறார்'' என்று கூறப்பட்டது. "எந்த ஸைனப்?'' என நபி (ஸல்) அவாகள் வினவ, "இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப்!'' என்று கூறப்பட்டது.  "அவருக்கு அனுமதி வழங்குங்கள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப்பட்டது. அவர் (வந்ததும்) "அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் எனக்குச் சொந்தமான ஒரு நகை இருக்கிறது. அதை தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்வூத், தாமும் தமது குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார்.  (என்ன செய்ய?)'' என்று கேட்டார். "இப்னு மஸ்வூத் கூறுவது உண்மைதான்! உன் கணவரும் உன் குழந்தைகளுமே உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி),

நூல்: புஹாரி 1462

"கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்திலும் குறைவுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கிவிடுகிறீர்கள்'' என்று நபிகளார் உதிர்த்த வார்த்தைகளை நாம் உதிரம் இருக்கும் வரை மறுந்து விடக்கூடாது. தாய், மனைவி, சகோதரி, தோழி என்று தங்களைச் சுற்றியிருப்பவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை, மதியீனமான செயல்களைச் செய்பவர்கள் இதைப் புரிந்து கொண்டு திருந்துவதற்கு முற்பட வேண்டும்.

மார்க்கப் பற்றை மறக்கடிக்கும் மங்கைகள்

பெரும்பாலும் பெண்களால் ஆண்கள் வழிகேட்டில் விழுந்து விடுவது, அவர்கள் தமது வாழ்க்கைத் துணைவியைத் தேர்ந்தெடுக்கும் தருணத்தில் தான். பிரகாசமான மறுமை வாழக்கைக்காக மார்க்கத்தின் போதனைகளைப் பேணுதலுடன் கடைப்பிடிக்கும் பல இளைஞர்கள், மணமகளைத் தேர்வு செய்யும் விஷயத்தில் தவறிழைத்து விடுகிறார்கள். மார்க்கத்தைக் காட்டிலும் இனக் கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து இணை வைக்கும் பெண்களை மணமுடிக்கும் காட்சிகளைப் பார்க்கிறோம்.

மணமுடிக்கும் பெண்ணை தவ்ஹீத் சிந்தனைக்கு மாற்றி விடுவேன் என்று முழக்கமிட்டு அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் மாறு செய்யும் பெண்களைத் திருமணம் செய்த பல இளைஞர்கள், அதற்குப் பிறகு தங்களது தவ்ஹீதையே மறந்து, துறந்து வழிகேடுகளின் பக்கம் திரும்பிய நிகழ்வுகள் ஏராளமாக நடக்கின்றன.

மார்க்கத்திற்கு மாற்றமாக இருக்கும் தமது மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற இறுதியில் மார்க்கத்தையே வளைத்து, திரித்துப் பின்பற்றும் பாதகமான நிலையில் விழுந்து விடுகிறார்கள். இவ்வாறு நமது குடும்ப வாழ்க்கையின் அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் பெண்ணால் வழிகெடாமல் இருப்பதற்காகவே அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்குப் பின்வருமாறு போதிக்கிறார்கள்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கைக் கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவுதான் உங்களைக் கவர்ந்தாலும் அவளைவிட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவுதான் கவர்ந்தாலும் அவனைவிட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

அல்குர்ஆன் 2:221

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.

1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)

நூல்: புகாரி 5090

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை        தொடர்: 8

ருகூவின் சிறப்புகள்

அப்துந் நாசிர், கடையநல்லூர்

தொழுகை என்ற வணக்கம் அதனை முறையாகப் பேணி நிறைவேற்றுபவர்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியங்களை வாரி வழங்குகிறது என்பதை நாம் தொடராகப் பார்த்து வருகின்றோம்.

அதன் வரிசையில் நாம் தற்போது தொழுகையின் மிக முக்கியமான ஒரு நிலையான "ருகூவு'' என்ற நிலையைப் பற்றியும் அதனால் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றியும் பார்க்கவிருக்கின்றோம்.

திருமறைக் குர்ஆனில் பல்வேறு இடங்களில் அல்லாஹ் ருகூவு செய்வதைப் பற்றியும், ருகூவு செய்யக் கூடியவர்களைப் பற்றியும் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளான்.

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்!

அல்குர்ஆன் 2:43

நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்

அல்குர்ஆன் 22:7

அல்லாஹ்வும், அவனது தூதரும், தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, ருகூவு செய்கிற நம்பிக்கை கொண்டோருமே உங்கள் உதவியாளர்கள்.

அல்குர்ஆன் 5:55

அவர்கள்) மன்னிப்புத் தேடுபவர்கள்; வணங்குபவர்கள்; (இறைவனைப்) புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; ருகூவு செய்பவர்கள்; ஸஜ்தாச் செய்பவர்கள்; நன்மையை ஏவுபவர்கள்; தீமையைத் தடுப்பவர்கள்; அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிக் கொள்பவர்கள். (இத்தகைய) நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

அல்குர்ஆன் 9:112

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிலிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணம்

அல்குர்ஆன் 48:29

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் "ருகூவு'' செய்வது ஒருவன் இறை நம்பிக்கையாளன் என்பதற்கு அடையாளமாகும் என்பதை நமக்குத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

நாம் தொழுகையை நிறைவேற்றும் போது ருகூவையும் நிறைவேற்றுகிறோம். எனவே மேற்கண்ட வசனங்களில் ருகூவு செய்வோருக்கு என்னென்ன சிறப்புகளையும் பாக்கியங்களையும் அல்லாஹ் வாக்களிக்கின்றானோ அவை அனைத்தையும் பெறக்கூடிய நன்மக்களாக தொழுகை என்ற வணக்கம் அமைந்துள்ளது.

தொழுகை என்ற வணக்கம் எவ்வளவு நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது என்பதை இதன் மூலமும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

முதல் ஆலயமான கஅபாவை அல்லாஹ் நிர்மாணம் செய்யக் கட்டளையிட்டதன் முக்கியமான நோக்கங்களில் ஒன்று "ருகூவு'' செய்தல் ஆகும்.

''தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.

அல்குர்ஆன் 2:125

"தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத் துவீராக!'' என்று (கூறி) அந்த ஆலயத்தின் இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 22:26

தொழுகையின் ஒரு அம்சமான ருகூவு எவ்வளவு சிறப்பிற்குரிய செயல் என்பதை மேற்குறிப்பிடப்பட்ட வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

ருகூவு செய்யாதவர்களுக்கு நரகம் என்பதை அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான். ருகூவு செய்யுங்கள்! என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அவர்கள் ருகூவு செய்ய மாட்டார்கள்

அல்குர்ஆன் 77:47, 48

நாம் தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் கொடிய நரகத்திலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

ருகூவு செய்தல் சிறுபாவங்களை அழிக்கும்

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்த ஒரு இளைஞரைப் பார்த்தார்கள். அவர்  தனது  தொழுகை(யின் நிலை)யை நீட்டி அதிலேயே நீண்ட நேரம் நின்றார். இப்னு உமர் (ரலி) அவர்கள் "இவரை யாருக்குத் தெரியும்?'' என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர்  "நான் (அறிவேன்)'' என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "அவர் எனக்குத் தெரிந்தவராக இருந்திருந்தால் அவர் ருகூவையும், ஸுஜூதையும் நீட்டி(த் தொழுமாறு) ஏவியிருப்பேன். ஏனென்றால் "ஒரு அடியான் தொழுகின்றவனாக நிற்கும் போது அவனுடைய பாவங்கள் கொண்டு வரப்பட்டு அவனது தலையின் மீது அல்லது தோள்புஜத்தின் மீது வைக்கப்படுகிறது. அவர் ஒவ்வொரு தடவை ருகூவு செய்யும் போதும், ஸுஜூது செய்யும் போதும் அவனிடமிருந்து அந்தப் பாவங்கள் உதிர்ந்து விழுந்துவிடும்'' என்ற நபியவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் எனக் கூறினார்கள்.

நூல்: இப்னு ஹிப்பான் (1734),  பாகம்: 5 பக்கம்: 26

ருகூவு செய்தல் நம்முடைய பாவங்களை அழிப்பதற்கு உதவுகின்றது. இந்தப் பாக்கியத்தை தொழுகையாளிகள் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

இறைவனே மகத்துவப் படுத்துவதே ருகூவு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அறிந்துகொள்ளுங்கள்: ருகூஉ  அல்லது சஜ்தாச் செய்து கொண்டிருக்கையில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று நான் தடை விதிக்கப்பெற்றுள்ளேன். ருகூஉவில் வலிவும் மாண்பும் உடைய இறைவனை மகிமைப் படுத்துங்கள். சஜ்தாவில் முனைந்து பிரார்த்தியுங்கள். உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (824)

நாம் இறைவனை மகத்துவப்படுத்தும் போது அது அல்லாஹ்வின் அன்பையும், நேசத்தையும் நமக்குப் பெற்றுத் தருகிறது. நபியவர்கள் ருகூவில் பல விதங்களில் இறைவனை மகத்துவப்படுத்தியுள்ளார்கள். அந்த வாசகங்களைக் கூறி நாம் மகத்துவப் படுத்தும் போது அவற்றில் அடங்கியுள்ள ஏராளமான பாக்கியங்களுக்கு நாம் சொந்தக்காரர்களாகி விடுகின்றோம்.

ருகூவில் ஓதும் துஆ - 1

"சுப்ஹான ரப்பியல் அழீம்'

பொருள்: மகத்துவமிக்க என் இறைவன் தூயவன்

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)

நூல்: முஸ்லிம் (1421)

ருகூவில் ஓதும் துஆ - 2

சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்ஃபிர்லீ

பொருள்: இறைவா! எம் அதிபதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (794)

ருகூவில் ஓதும் துஆ - 3

"சுப்பூஹுன் குத்தூசுன், ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ்'

பொருள்: இறைவா! நீ தூயவன். மிகப் பரிசுத்தமானவன். வானவர்கள் மற்றும் ரூஹின் அதிபதி.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (840)

ருகூவில் ஓதும் துஆ - 4

"அல்லாஹும்ம, லக ரகஃத்து, வ பிக ஆமன்து, வ லக அஸ்லம்து. ஹஷஅ லக சம்ஈ வ பஸரீ வ முஹ்ஹீ வ அழ்மீ வ அஸபீ''

பொருள்: இறைவா, உனக்காகக் குனிந்தேன். உன் மீதே நம்பிக்கை கொண்டேன். உனக்கே கட்டுப் பட்டேன். உனக்கே என் செவியும் பார்வையும் மூளையும் எலும்பும் நரம்பும் பணிந்தன

அறிவிப்பவர்: அலீ பின் அபீதாலிப் (ரலி) 

நூல்: முஸ்லிம் (1419)

ருகூவில் ஓதும் துஆ - 5

சுப்ஹான தில்ஜபரூத்தி, வல்மலகூத்தி, வல்கிப்ரியாயி வல் அள்ம(த்)தி

பொருள்: அடக்கி ஆள்தலும், அதிகாரமும், பெருமையும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் பரிசுத்தமானவன்

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)

நூற்கள்: நஸாயீ (1049), அபூதாவூத் (873), அஹ்மத் (24026)

ருகூவில் ஓதும் துஆ - 6

"சுப்ஹானக்க வபி ஹம்திக்க லாயிலாஹ இல்லா அன்த்த'

பொருள்: இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (838)

ருகூவிலிருந்து எழும் நிலையில் உள்ள நன்மைகள்

ருகூவிலிருந்து எழுந்த பின் ஓத வேண்டிய பல துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றை நாம் முறையாக ஓதி வரும் போது அந்த அற்புத துஆக்களில் கூறப்பட்டுள்ள பாக்கியங்களையும், நன்மைகளையும், இறைவனின் பொருத்தத்தையும் அடைவதற்கு, தொழுகை காரணமாக அமைகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இமாம் (தொழுகையில்) சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினால் நீங்கள் "அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து' (இறைவா! எம் அதிபதியே! உனக்கே புகழ் அனைத்தும் உரியது) என்று கூறுங்கள். ஏனெனில் (இறைவனைத் துதிக்கும்) வானவர்களின் (துதிச்) சொல்லுடன் எவரது (துதிச்)சொல் (ஒரே நேரத்தில்) ஒத்து அமைகின்றதோ அவர், அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (796)

ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆ - 1

ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறிய பிறகு பின்வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றைக் கூறலாம்.

ரப்பனா ல(க்)கல் ஹம்து

நூல்: புகாரீ 789

ரப்பனா வல(க்)கல் ஹம்து

நூல்: புகாரீ 732

அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து

நூல்: புகாரீ 796

அல்லாஹும்ம ரப்பனா வல(க்)கல் ஹம்து

(பொருள்: எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்!)

நூல்: புகாரீ 7346

ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆ - 2

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தமது முதுகை நிமிர்த்தி விட்டால்,

"சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ். அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல்அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது''

என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கின்றான். இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது.)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)

நூல்: முஸ்லிம் (819)

ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆ - 3

நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவிலிருந்து  நிமிர்ந்ததும்),

"அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து, மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அல்லாஹும்ம, தஹ்ஹிர்னீ பிஸ்ஸல்ஜி வல்பரதி வல்மாயில் பாரித். அல்லாஹும்ம, தஹ்ஹிர்னீ மினத் துனூபி வல்ஹத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினல் வஸஹி''

என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: இறைவா! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது. இறைவா, பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் குளிர்ந்த நீராலும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! இறைவா, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுத்தப்படுவதைப் போன்று பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)

நூல்: முஸ்லிம் (821)

ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆ - 4

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும்,

"ரப்பனா! ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்த். அஹக்கு மா காலல் அப்து, வ குல்லுனா ல(க்)க அப்துன். அல்லாஹும்ம, லா மானிஅ லிமா அஃதைத்த, வலா முஃத்திய லிமா மனஃத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத்''

என்று கூறுவார்கள்.

(பொருள்: எங்கள் அதிபதியே! வானங்களும் பூமியும் நிரம்பும் அளவுக்கு, நீ நாடும் இன்ன பிற பொருள்கள் யாவும் நிரம்பும் அளவுக்குப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நாங்கள் அனைவரும் உன் அடிமைகள் தாம். அடியார்கள் கூறும் சொற்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்தது, "இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமிலர். எந்தச் செல்வரின் செல்வமும் அவருக்கு உ(ந்தன் வேதனை த)ன்னிலிருந்து பயன் அளிக்காது' என்பதேயாகும்.)

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (822)

கால கால ரசூலுல்லாஹ்...

கண்டு கொள்ளுமா பள்ளி நிர்வாகம்?

ஷாபி மத்ஹப் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆவின் போது இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்னால் முஅத்தின் ஒரு வரவேற்புரை நிகழ்த்துவார். அதற்கு நடைமுறையில் மஃஷர் என்று கூறுவார்கள்.

மஆஷரில் முஸ்லிமீன் என்ற வாசகம் அதில் இடம்பெறுவதால் அதற்கு இந்தப் பெயர் கூறப்படுகின்றது. மஆஷர் என்பது மஃஷர் என்ற வார்த்தையின் பன்மையாகும். மஃஷர் என்றால் "மக்களே' என்று பொருள்.

முஅத்தின் இவ்வாறு அழைத்து, "ரவல் புகாரி வ முஸ்லிம் அன் அபீஹுரைரத்த கால கால ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்'' என்று அரபியில் விளாசித் தள்ளுவார்.

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அறிவிக்கின்றார்கள். இதை புகாரி, முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கள்'' என்பது இதன் பொருளாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுவது என்ன? புகாரி, முஸ்லிம் பதிவு செய்த செய்தி என்ன?

"அல்ஜும்அத்து ஹஜ்ஜுல் ஃபுகராஇ வஈதுல் மஸாகீன். இதா ஸயிதல் கதீபு அலல் மிம்பரி ஃபலா யதகல்லம் அஹ்துக்கும் ஃபமன் தகல்லம ஃபகத் லகா. வமன் லகா ஃபலா ஜும்அத்த லஹு''

இது தான் அந்த முஅத்தின் கூறும் செய்தியாகும். இப்படி ஒரு ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லவே இல்லை. புகாரி, முஸ்லிமில் இருந்தால் எடுத்துக் காட்டுங்கள் பார்ப்போம் என்று கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அறைகூவல் விட்டுக் கொண்டிருக்கிறோம்.

பொய்யான ஹதீஸ், புரட்டான ஹதீஸ் தங்களது நூல்களில் பதிவாகி விடக்கூடாது என்பதற்காகப் பெரும் முயற்சியும் முனைப்பும், உழைப்பும் அர்ப்பணிப்பும் செய்த இமாம்களான புகாரி, முஸ்லிம் பெயரால் இப்படி ஒரு பொய்யா? என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்தோம். ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை. வழக்கம் போல் மத்ஹபு ஆலிம்களிடமிருந்து மவ்னமே பதிலாக வந்தது.

"என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரி 110, முஸ்லிம் 4

அல்லாஹ்வின் தூதருடைய எச்சரிக்கையைச் சொல்லி பலமுறை எச்சரித்துள்ளோம். இவ்வளவு எச்சரிக்கைக்குப் பிறகும் வெள்ளிக்கிழமைகளில் புனித ஜும்ஆவில் முஅத்தின் புளுகித் தள்ளிக் கொண்டு தான் இருக்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக புகாரி, முஸ்லிமில் வருவதாக இரண்டு பொய்களைப் புனைந்து சொல்கின்றார்.

1. அல்ஜும்அத்து ஹஜ்ஜுல் ஃபுகரா வ ஈதுல் மஸாகீன் - ஜும்ஆ என்பது ஏழைகளுக்கு ஹஜ்; வறியவர்களுக்குப் பெருநாள்.

இது நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

2. உரையாற்றுபவர் மிம்பரில் ஏறிவிட்டால் உங்களில் எவரும் பேச வேண்டாம்.

இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்கள் சொன்னதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

இது மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு செய்திகள் சொல்லப்படுகின்றன.

3. யார் பேசுகின்றாரோ அவர் ஜும்ஆவை வீணாக்கி விட்டார்.

4. யார் வீணாக்கி விட்டாரோ அவருக்கு ஜும்ஆ இல்லை.

இப்படி நேரடியாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸில் இடம்பெறவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாüல் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிப்பவரிடம் நீ "மௌனமாக இரு!' என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 934, முஸ்லிம் 1404

இந்த வார்த்தைகளைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

கால கால ரசூலுல்லாஹ்... என்று சொல்லி விட்டால் அது ஹதீஸ் ஆகிவிடாது. தாங்கள் கூறுவது ஹதீஸ் இல்லை. புகாரி, முஸ்லிமில் இந்தச் செய்தி பதிவாகவில்லை என்பது அந்த அப்பாவியான முஅத்தின்களுக்குத் தெரியாது. தான் சொல்வதன் பொருள் என்ன என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. ஆனால் ஆலிம்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் தெரிந்தே, திட்டமிட்டே அதை ஆதரிக்கின்றார்கள். அதாவது ஒவ்வொரு ஜும்ஆவின் போதும் நரகத்திற்கு முன்பதிவு செய்து கொள்கின்றார்கள்.

இத்தனைக்கிடையே தவ்ஹீத் ஜமாஅத் சொல்லிக் காட்டிய பிறகும் வம்புக்கும் வீம்புக்கும் இதைச் செய்கின்றார்கள்.

"அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!'' என்று அவனிடம் கூறப்பட்டால் அவனது ஆணவம் அவனைப் பாவத்தில் ஆழ்த்துகிறது. அவனுக்கு நரகமே போதுமானது. அது மிகக் கெட்ட தங்குமிடம்.

அல்குர்ஆன் 2:206

இப்போது முஅத்தின் கூறுகின்ற அந்தப் பொய்யான ஹதீசுக்கு வருவோம்.

இவ்வளவு நாளும் நாம் இந்தப் பொய்யான செய்தியை நிறுத்துங்கள் என்று சொன்ன போது நிறுத்த மறுத்தார்கள். இப்போது ஒரு பரேலவி மாத இதழ் மேற்படி பொய்யான ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை என்று மறுக்கின்றது. பொய்யான செய்திகளை ஹதீஸ்கள் என்று சொல்லி நியாயப்படுத்துபவர்கள் தான் பரேலவிகள். அவர்களே இந்தச் செய்தியை மறுத்துள்ளனர். இப்போதாவது சுன்னத் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் ஆலிம்கள் இந்தப் பொய்யை நிறுத்துவார்களா? என்று கேள்வி எழுப்புகின்றோம்.

ஜும்ஆ வசதியற்றோருக்கு ஹஜ்ஜாகும். ஏழைகளுக்குப் பெருநாளாகும். பிரசங்கி மிம்பர் (மேடை) ஏறிவிட்டால் உங்களில் ஒருவரும் பேச வேண்டாம். அப்படிப் பேசினால் அவர் பாழாக்கி விட்டார். எவர் பாழாக்கிவிட்டாரோ அவருக்கு ஜும்ஆவின் நன்மைகள் இல்லை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அபூஹுரைரா (ரலி) அறிவித்ததாகவும் இதை இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் தங்களின் நூல்களில் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேல்குறிப்பிட்ட நபிமொழியின் வாசகம் முழுவதுமாக புகாரி, முஸ்லிம் ஆகிய இரு நபிமொழிக் கிரந்தங்களில் மட்டும் காணமுடியவில்லை. ஆனால் வேறு சில நூல்களில் இதன் கருத்தைக் காணமுடிகின்றது. இங்கும் அங்குமாய் சேகரித்து இதை புகாரி, முஸ்லிம் நூல்களில் வருவதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும். மேலும் இக்குற்றத்திற்கு பள்ளியின் இமாமே மூல காரணியாவார். இது முஅத்தாவில் இடம்பெற்றுள்ள நபிமொழியைக் கவனிக்கவும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜும்ஆ தினத்தில் இமாம் (குத்பா) பிரசங்கம் செய்யும் போது (பேசிக் கொண்டிருக்கும்) உன் தோழரிடம் "மௌனமாக இரு' என்று கூறினால் நீ (ஜும்ஆவை) பாழாக்கிவிட்டாய். (நூல்: முஅத்தா இமாம் மாலிக்)

இந்த நபிமொழியை இமாம் மிம்பரின் மீது ஏறுவதற்கு முன்பு தமிழில் வாசித்தால் அனைவருக்கும் பிரயோஜனமாகும். மாறாக அரபியில் வாசிப்பதால் யாருக்கு என்ன பயன்?

அஹ்லுஸ் சுன்னா, நவம்பர் 2013

பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள்!

உங்களின் ஆலிம்கள் ஒருபோதும் அல்லாஹ்வை அஞ்ச மாட்டார்கள். அவர்களுக்குத் தேவை வருவாய் தான். எனவே பள்ளி நிர்வாகத்தினரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம். நபி (ஸல்) அவர்கள் மீது அவர்கள் சொல்லாததை சொன்னதாக, தெரிந்தே பொய் சொல்வது நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் பாவமாகும். அத்தகைய பாவத்தை முஅத்தின், மஃஷர் என்ற பெயரில் செய்ய அனுமதித்தால் அந்தப் பாவத்தில் நிர்வாகத்தினராகிய நீங்களும் சேர்ந்து கூட்டாவீர்கள்.

எனவே இந்தப் பாவத்தைத் தடுத்து, அந்தப் பாவத்தில் பங்கெடுக்காமல் விலகிக் கொள்ள வேண்டும் என்று பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கேட்டுக் கொள்கிறோம்.

மார்க்கத்தை மறந்த மங்கையர்

ஃபாத்திமா அஜீஸ், கல்பாக்கம்

அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் படைத்து அவர்களுக்குக் கடமைகளையும் உரிமைகளையும் வழங்கியிருக்கின்றான். அவர்களுக்கு உணர்வுகளையும் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளையும் பிரித்து அறிவித்து இருக்கின்றான்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வாழ்க்கை வழிமுறைகளை இலகுவாகவும் எளிமையாகவும் கண்ணியமாக வாழும் வகையில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.

ஆனால் நாம் மார்க்க விஷயத்தில் பெரும்பாலும் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறோம். முஸ்லிம்கள் பெண்கள் ஆடைகள் விஷயத்தில் மார்க்கம் சொன்ன கட்டுப்பாட்டை மறந்து அலட்சியம் காட்டுகின்றனர். ஹிஜாப் விஷயத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம்.

ஒன்று, பர்தா எனும் அங்கங்களை மறைக்கும் ஆடைகளை அணியாமல் அடுத்தவர்களின் கண்களுக்கு மேனியை விருந்தாக்குகின்றனர்.

இரண்டாவது, பர்தா அணிந்து கொண்டு தலையில் முக்காடு இல்லாமல் அரசியல்வாதிகள் துண்டு போடுவது போல் கழுத்தில் மாலை போட்டுக் கொள்கின்றனர்.

மூன்றாவது, வெளியே தெரியலாம் என்று மார்க்கம் அனுமதித்த பகுதிக்கெல்லாம் கையுறை, காலுறை, முகத்திரை போன்றவற்றைப் போட்டு மறைத்து, எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் எது அவசியம் இல்லையோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

சில முஸ்லிமல்லாத சகோதரிகள் கூட அழகான முறையில் ஆடை அணிந்து, வயிறு, இடுப்பு, கழுத்து போன்ற பகுதிகளை மூடி கண்ணியமான முறையில் உடலை மறைத்து வாழ்வதை நாம் பார்க்கிறோம்.

இயற்கையாகவே தாய்க்கு மகன் மீதும், தந்தைக்கு மகள் மீதும் மாறுபட்ட பாலினம் காரணமாக ஏற்படும் ஈர்ப்பினால் அன்பு, பாசம், புரிந்து கொள்ளுதல், ஒத்துப் போதல் போன்ற விஷயங்களில் இணைந்து செயல்படுவார்கள்.

பெண் பிள்ளைகள் தந்தையின் அதீதமான அன்பைக் கையில் எடுத்துக் கொண்டு மார்க்க விஷயத்தில் பேணுதல் இல்லாமல் சுதந்திரமாக உலா வருகின்றனர். ஆண்களும் தங்கள் மகள்களின், மனைவியின், சகோதரிகளின் ஆடைகள் விஷயத்தில் கவனக்குறைவாக உள்ளனர்.

திருமண நிகழ்ச்சிகள் என்றாலும், நான்கு பேர் ஒன்று கூடும் இடமாக இருந்தாலும் வரம்புகளை மீறி, வரைமுறைகளுக்கு உட்படாது ஆண்களும் பெண்களும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கிறோம். மஹ்ரமானவர்களுடனும் அந்நியர்களுடனும் புர்கா போன்ற முழு ஆடைகள் இல்லாமல் அரைகுறையான மெல்லிய ஆடைகளுடன் இவர்கள் அடிக்கும் கூத்துக்கள் சொல்லி மாளாது.

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

அல்குர்ஆன் 24:31, 32

முக்காடுகளைத் தங்கள் மார்பின் மீது போட்டுக் கொள்ளுமாறு வல்ல இறைவன் கூறுகின்றான். கால்களைத் தரையில் அடித்து நடக்க வேண்டாம் என்று கூறுகின்றான்.

ஆனால் நமது பெண்களோ எந்த டிசைனில் உள்ளாடை அணிந்தால் ஆண்களின் பார்வை தம்மீது படும் என்றும் எவ்வளவு அகலமான சலங்கை அணிந்தால் மற்றவர்களை ஈர்க்க முடியும் என்றும் கால்களைத் தரையில் அடித்து நடப்பதைப் பார்க்கிறோம்.

அல்லாஹ் விடுத்துள்ள எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொள்ளாமல் நமது வீட்டின் மணவிழாக்களையும் விருந்துகளையும் படம் பிடித்து பந்தி வைக்கிறோம். நமது குடும்பத்தினரின் மானத்தையும் கற்பொழுக்கத்தையும் மாற்றான் கண்டு ரசிக்கும் வகையில் சிடிக்களாக, டிவிடிக்களாக மாற்றி மானமிழக்கிறோம்.

தாய்மார்களும் இதைக் கண்டுகொள்வதில்லை. ஏனெனில் அவர்களின் ஆடை நிலையும் அப்படித்தான் உள்ளது. பெண்களைப் பொத்தி, பாதுகாத்து வளர்க்க வேண்டிய பெற்றோர்களே வெட்க உணர்வு இல்லாமல், ரோஷம் இல்லாமல் தன் வீட்டுப் பெண்களிடம் அதை மழுங்கடிக்கச் செய்து விட்டார்கள். வெட்கம் என்பது ஈமானின் கிளைகளில் ஒன்று என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

வளர்ந்து நிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் யாரை வேண்டுமானாலும், யாராக வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாற்றி கயவர்கள் விலைபேசி விடக்கூடிய காலகட்டம் இது. விடலைப் பருவத்தில் பெண் பிள்ளைகளைப் பாதுகாத்து வளர்ப்பதில் தாய்மார்களுக்கும் பெரும் பங்குண்டு.

முதலில் ஆடை விஷயத்தில் நாம் கண்ணியத்துடன் செயல்பட்டால் நம் பிள்ளைகளையும் செப்பனிட்டு விடலாம். பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் பருவம் அடைந்து விடுவதால் பர்தா அணிந்து வெளியில் செல்ல இந்தப் பெண்கள் சங்கடப்படுகின்றார்கள்.

சிறு வயதிலேயே வெட்க உணர்வையும் கூச்சத் தன்மையையும் ஏற்படுத்தி, அவர்களின் ஆடையை முழுமைப்படுத்தி விட்டால் பிற்காலத்தில் ஏற்படும் பல்வேறு சங்கடங்களையும் சச்சரவுகளையும் நிச்சயமாகத் தவிர்த்துக் கொள்ளலாம். வல்ல அல்லாஹ் சொன்னபடி நாம் நடந்தால் நம்மைக் காக்க அவனே போதுமானவன். அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

மார்க்க அடிப்படையில் தனது தந்தை அல்லது சகோதரன் சொல்வதை நல்லொழுக்கம் உள்ள, இறைவனுக்கு அஞ்சிய எந்தவொரு பெண்ணும் மறுக்க மாட்டாள்.

உலக இன்பங்களுக்காகவும், கல்வி, பொருளாதாரம் திரட்டுவதற்காகவும் உங்கள் பெண்களை வற்புறுத்தும் நீங்கள், படைத்த இறைவன் பற்றியும் அவனது சட்டதிட்டங்கள் பற்றியும், ஆடை விஷயத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பது பற்றியும் நீங்களும் அறிந்து கொண்டு, உங்கள் குடும்பத்தாருக்கும் சொல்லுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüயே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்கüன் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாüயாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 5200

ஒரு பொறுப்பாளர் என்ற முறையில் உங்கள் குடும்பத்தாருடன் அழகான முறையில் பொறுமையாகப் பேசுங்கள். இறைவனின் சட்டதிட்டங்களை எடுத்துச் சொல்லுங்கள். அப்படிச் சொன்னால் ஆடை விஷயத்தில் அவர்கள் உண்மையை உணர்வார்கள்; ஏற்றுக் கொள்வார்கள்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் அச்சமும் இருக்குமானால் மறுமையில் அவனை சந்திக்கவுள்ளோம் என்பதையும் நமது கேள்வி கணக்கு அவனிடம் உள்ளது என்பதையும் சிந்தியுங்கள்.

தன் மக்களுக்கு மார்க்கத்தை அறிமுப்படுத்தாமல் விட்டு விட்டால் படைத்த இறைவன் உங்களை விட்டுவிடுவான் என்று எண்ணாதீர்கள். அழிந்து போகும் இவ்வுலக வாழ்க்கைக்காக என்றும் அழியாது நீடித்து நிற்கும் மறு உலக வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; அவனை அஞ்சுபவர்களுக்கு அவன் ஒரு வழியை ஏற்படுத்துவான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.

அல்குர்ஆன் 65:2

சுத்தம் ஏன்றால் சும்மாவா?

கடந்த நவம்பர் 19ம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை உலகக் கழிப்பறை தினமாக அறிவித்தது. இதன் மூலமாக மக்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படும் என்பதற்காக இப்படி அறிவித்துள்ளது.

உலக மகளிர் தினம், குழந்தைகள் தினம், முதியோர் தினம், நீரிழிவு தினம், இருதய நோய் தினம் என்றெல்லாம் அறிவிப்பதால், அனுஷ்டிப்பதால் மக்களிடம் மாற்றம் எதுவும் நிகழப் போவதில்லை. அதனால் இந்த நினைவு தினங்கள் அனுஷ்டிப்பதில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உடன்பாடு கிடையாது. மாற்றம் என்பது மனதளவில் ஏற்பட வேண்டும். இல்லையென்றால் அதில் எந்தவிதப் பயனும் இல்லை. இந்த அடிப்படையில் உலகக் கழிப்பறை தினம் கொண்டாடுவதால் மட்டுமே சுகாதார விழிப்புணர்வு ஏற்பட்டுவிடாது.

இந்தியாவில் திறந்த வெளியில் மலம் கழிப்பதைப் பற்றி உலக வங்கி வெளியிட்ட அறிக்கை அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியானது. தி இந்து தமிழ் நாளேட்டில் வெளியான அந்தச் செய்தி இது தான்.

சுமார் 60 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்று உலக வங்கி ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா. சபை சார்பில் நவம்பர் 19-ம் தேதி கழிப்பறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் சுமார் 250 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. சுமார் 100 கோடி மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் 53% வீடுகளில் கழிப்பறை இல்லை...

இந்தியாவில் சுமார் 60 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. அதாவது சுமார் 53 சதவீத வீடுகளில் கழிப்பறை இல்லை. கழிப்பறை வசதி தொடர்பாக இந்தியக் குழந்தைகளிடம் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது,

அதில், முதலாம் வயது பருவத்தில் சுகாதாரமான கழிப்பறை வசதியைப் பெற்ற குழந்தைகள் தங்களின் 6-ம் வயதில் எண்களையும் எழுத்துகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் திறனைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியக் குழந்தைகள் உயரம் குறைவாக உள்ளனர். அதேநேரம் ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையில் வாடும் குழந்தைகள், இந்திய குழந்தைகளைவிட உயரமாக உள்ளனர். சகாரா பகுதி ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 5 வயது சிறுமிகளைவிட இந்திய சிறுமிகள் 0.7 செ.மீட்டர் உயரம் குறைவாக உள்ளனர். இந்த முரண்பாட்டை 'ஆசிய புதிர்' என்றுதான் கூற வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு சுகாதாரக் குறைவு மிக முக்கிய காரணியாக உள்ளது என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பான் கி - மூன் யோசனை...

ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: உலகில் 250 கோடி பேருக்கு கழிப்பறை வசதி இல்லை. அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு கழிப்பறை இல்லை. இதை கருத்தில் கொண்டு முதல்முறையாக கழிப்பறை தினத்தை ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

'போதிய கழிப்பறை வசதி இல்லாததால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உள்பட்ட 8 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழக்கின்றனர்.

உலகளாவிய இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண 2025-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கழிப்பறை வசதி கிடைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மார்ச் 14, 2012 அன்று தி இந்து ஆங்கில நாளேட்டில் ஒரு கணக்கெடுப்பு விபரம் வெளியானது. 2011ஆம் ஆண்டுக்கான அந்தக் கணக்கெடுப்பு மக்கள் தொகை பற்றியது மட்டுமல்லாது அவர்களின் வீடுகள் பெற்றிருக்கின்ற வசதி வாய்ப்புகளையும் கணக்கெடுத்திருந்தது.

இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் செல்போன்கள் இருக்கின்றன. ஆனால் கழிப்பறைகள் இல்லை என்று அந்தக் கணக்கெடுப்பு கூறுகின்றது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற இதழ் இது தொடர்பாக ஒரு புள்ளி விபரத்தைத் தருகின்றது. பத்து கோடி பேர் வாழ்கின்ற மகாராஷ்டிரா மாநிலத்தில் 70 சதவிகிதம் பேர் செல்போன்கள் வைத்திருக்கின்றனர். 60 சதவிகிதம் பேர் டி.வி. வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்களின் பாதிப் பேர் கழிப்பறைகள் வைத்திருக்கவிலலை என்று அந்தப் பத்திரிகை குறிப்பிடுகின்றது.

நிலைகெடாத வளைகுடா

இங்கு தான் இந்தியாவும், உலகிலுள்ள இதர நாடுகளும் முஸ்லிம்கள் வாழ்கின்ற வளைகுடா நாடுகளை சற்று உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

அங்கு யாரும் திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதைப் பார்க்க முடியாது. மக்கள் நடமாடும் பாதைகள், மர நிழல்கள், பொது இடங்களில் கூட ஒருவர் மலஜலம் கழிப்பதைக் காண முடியாது. அப்படி யாராவது மலஜலம் கழிப்பதைப் பார்த்தால் நிச்சயமாக அவர் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவராகத் தான் இருப்பார்.

வளைகுடா நாடுகள் பொருளாதாரச் செழிப்பில் உள்ளன. அதனால் அவர்களிடம் கழிப்பிட வசதிகள் உள்ளன என்று இதற்குக் காரணம் கூறலாம். வளைகுடா நாடுகள் மட்டுமல்ல, இதர நாடுகளிலும் இஸ்லாத்தை சரியாகக் கடைப்பிடிக்கும் முஸ்லிம்கள் கண்ட இடத்திலும் மலஜலம் கழிப்பதில்லை.

இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் இந்த அநாகரிகக் காரியங்களில் ஈடுபடுவதற்குக் காரணம் இங்குள்ள கலாச்சாரச் சீரழிவாகும்.

முஸ்லிம் நாடுகளில் பொது இடங்களில் யாரும் மலஜலம் கழிப்பதில்லை. காரணம் அங்கு உள்ள ஒவ்வொரு பள்ளிவாசலிலும் கழிப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக, திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதற்கு இஸ்லாத்தில் தடை இல்லை. இருப்பினும் அது தொற்றுநோயை வரவழைக்கின்றது எனும் போது திருக்குர்ஆன் பொதுவான ஒரு தடையை விதிக்கின்றது. இந்த அடிப்படையில் முஸ்லிம்கள் அதைப் பின்பற்ற வேண்டும்.

அத்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை மனதளவில் இதுபோன்ற தூய்மைக்கும் துப்புரவுக்கும் பயிற்சி கொடுத்திருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள்.

அதற்கு, "மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான்'' என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 397

இன்று அதிகாலையில் ரயில்வே பாதைகளிலும் சாலையோரங்களிலும் ஆண்களும் பெண்களும் மலம் கழிக்க ஒதுங்குவதைப் பார்க்கிறோம். இதற்காக அவர்கள் சிறிதும் வெட்கப்படுவதில்லை. ஆனால் இஸ்லாம் வெட்கத்திற்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிமான கிளைகளைக் கொண்டதாகும். வெட்கமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளையே.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 9

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெட்கத்திற்கு எத்தகைய முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம். இந்த மனப்பக்குவத்தின் அடிப்படையில் தான் பெரும்பாலான முஸ்லிம்கள் திறந்த வெளியில் மலஜலம் கழிப்பதில்லை. அவர்களிடம் இந்த மனப்பக்குவம் ஏற்படுவதற்கு இந்த மார்க்கம் தான் காரணமாகும்.

இன்று அரசாங்கமே கழிவறைக்கு மானியம் வழங்குகின்றது. அதைப் பயன்படுத்தி கழிவறை கட்ட மக்கள் முன்வருவதில்லை.

செல்போன்களுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கழிப்பறைகளுக்குக் கொடுப்பதில்லை என்பதை மேற்கண்ட அறிக்கைகளும் புள்ளிவிபரங்களும் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் மனப்பயிற்சி இல்லாதது தான். இஸ்லாம் இதில் வெற்றி கண்டுள்ளது. அதைத் தழுவிக் கொண்டால் தான் இந்தியாவின் இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து விடுதலையும் விமோச்சனமும் கிடைக்கும்.

அரசு, பொதுக் கழிப்பறைகளைக் கட்டிக் கொடுக்கின்றது. மக்கள் அவற்றையும் பயன்படுத்துவதில்லை. இதற்குத் தேவை மனமாற்றம் தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)

நூல்: புகாரி 52

இங்கு சுத்தம் சும்மா வருவதில்லை. அதற்கென்று மாபெரும் புரட்சி தேவைப்படுகின்றது. அந்தப் புரட்சியை நிறைவேற்றுவதற்கு இஸ்லாம் ஒன்று தான் வழியாகும். இஸ்லாம் மனிதனுக்கு இயைந்த ஓர் இயற்கை மார்க்கமாகும். இதைத் தான் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பை மாற்றியமைக்கக் கூடாது. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 30:30)

இணை கற்பித்தல்                       தொடர்: 17

அற்புதங்களும்

அல்லாஹ்வின் தூதரும்

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபியவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பிறகு ஒரு கூட்டம் நபியவர்களிடத்தில் வந்து, நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம். ஆனால் நீங்கள் சில அதிசயங்களை, அற்புதங்களை எங்களுக்குச் செய்து காட்ட வேண்டும். நாங்கள் ஒரு பட்டியல் வைத்திருக்கிறோம். அவற்றில் எல்லாவற்றையும் நீங்கள் செய்ய வேண்டாம். ஏதாவது ஒன்றைச் செய்து காட்டினால் போதும் என்று கேட்கிறார்கள். ஆனால் இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக இதைக் கேட்கவில்லை. விதாண்டாவாதத்திற்காகத் தான் இதைக் கேட்கிறார்கள். இதைப்பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.

"இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்'' என்று கூறுகின்றனர்.

அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும்.

அல்லது நீர் நினைப்பது போல் வானத்தை துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும் வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும்.

அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) "என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

"மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?'' என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது

"பூமியில் வானவர்கள் நிம்மதியாக நடமாடி (வசித்து) வந்தால் அவர்களுக்கு வானத்திலிருந்து வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்'' என்பதைக் கூறுவீராக!

"எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்'' என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன். 17:90-96

இந்த வசனங்கள் நபியவர்களும் மனிதர் தான். அவர்களுக்கு எந்த ஆற்றலும், அதிகாரமும் இல்லை. அவர்களால் நினைத்ததையெல்லாம் உண்டாக்க, உருவாக்க முடியாது. இறைவன் நாடினால் மட்டுமே அவற்றைச் செய்ய முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றன.

ஆனால் அவ்லியாக்கள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள். அவர்களுக்கு எல்லா விதமான சக்தியும் ஆற்றலும் இருக்கின்றது. அவர்கள் அற்புதங்கள் நிறைந்தவர்கள் என்றெல்லாம் நாம் நினைத்து வைத்திருக்கிறோம். அவ்வாறு அவ்லியாக்களுக்கு, மகான்களுக்கு அற்புதங்கள் செய்யும் ஆற்றல் இருக்கிறது என்று நம்பினால் இறைவனைப் பற்றி, அவனுடைய வல்லமையைப் பற்றி நம்பாதவர்களாக நாம் ஆகிவிடுவோம். அது மட்டுமல்லாமல் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையையும் நம்பாதவர்களாக ஆகி விடுவோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் தன்னுடைய பிள்ளைகள் விஷயத்தில் தான் தன்னுடைய அதிகமான பவரை - சக்தியைப் பயன்படுத்துவான். நம்முடைய பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லையென்றால் நாம் அதிகமாகச் செலவிடுவோம். வேறு யாருக்காவது உடல்நிலை சரியில்லையென்றால் கூட நாம் அவ்வளவு செலவிட மாட்டோம். ஆனால் தன்னுடைய பிள்ளைக்கு என்றால், செலவழித்தால் தான் பிள்ளையைக் காப்பாற்ற முடியும் என்றால் தன்னுடைய வீட்டை விற்றும் செலவழிப்பான். கடன் வாங்குவான். அந்தப் பிள்ளை குணமடைவதற்காக என்னென்ன பிரார்த்தனைகள் இருக்கிறதோ, என்னென்ன நேர்ச்சைகள் இருக்கிறதோ என்னவெல்லாம் செய்ய இயலுமோ அத்தனையும் செய்வான். இப்படித்தான் மனிதர்கள் எல்லோரும் படைக்கப்பட்டிருக்கிறோம். அதுபோன்ற ஒரு சம்பவம் நபியவர்களுடைய வாழ்க்கையிலும் ஏற்படுகிறது.

நபியவர்களுக்கு இப்ராஹீம் என்ற ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை பிறந்து, தவழ்ந்து பால் குடித்துக் கொண்டிருக்கும் பருவத்தில் உடல் நிலை சரியில்லாமல் போகின்றது. அந்தக் குழந்தை மரணத் தருவாயில் மூச்சு வாங்கிக் கொண்டு துடிக்கிறது. அதைப் பார்த்த நபியவர்களுடைய கண்கள் கண்ணீரைச் சுரக்கின்றன. நபியவர்களின் கண் முன்னே அந்தக் குழந்தையின் உயிர் பிரிகிறது. அந்தக் குழந்தையின் உயிரை நபியவர்களால் காப்பாற்ற முடிந்ததா? அவர்களுக்கு அத்தகைய ஆற்றல் இருந்ததா?

இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள ஹதீஸ் பின்வருமாறு:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களுடைய குழந்தை) இப்ராஹீம் வளர்ந்து வந்த ஆபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக் கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! தாங்களா (அழுகிறீர்கள்)?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அவ்ஃபின் புதல்வரே!'' என்று கூறிவிட்டு தொடர்ந்து அழுதார்கள். பிறகு "கண்கள் நீரைச் சொரிகின்றன. உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது. எனினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உனது பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1303

அவ்லியாக்கள் பெயரைச் சொன்னாலே குணமாகிவிடும். மவ்லீதை ஓதினால் அனைத்து நோய்களும் குணமாகிவிடும். ஸலவாத்துன் நாரியா ஓதினால் நோய்கள் தீர்ந்துவிடும். நபிகள் நாயகம் நோயாளியைக் கண்ணால் பார்த்தாலே அவருடைய நோய் குணமாகிவிடும். இப்படியெல்லாம் மவ்லீது பாடல்களிலும், மீலாது விழா மேடைகளிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்வதற்காக இதைச் சொல்வது கிடையாது. நபியவர்களுக்கு இப்படிப்பட்ட தன்மைகள் இருக்கின்றன என்று சொல்லி இதைப் போன்று அப்துல் காதர் ஜீலானிக்கும் இருக்கின்றது. ஷாகுல் ஹமீது பாதுஷா, ஏர்வாடி பாதுஷா போன்றவர்களுக்கும் இந்த ஆற்றல் இருக்கின்றது என்று சொல்வதற்காகத் தான்.

ஆக, நாம் இந்த விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் அல்லாஹ்விற்குரிய தன்மைகளை, தகுதிகளை, அதிகாரத்தை வேறு எவருக்கும் நாம் கொடுத்துவிடக் கூடாது. அவ்வாறு நாம் அல்லாஹ்விற்குரிய தன்மைகளை நபியவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்து விட்டால் அதன் பிறகு மற்ற எல்லாருக்கும் கொடுத்து விடுவோம்.

ஷைத்தான் நம்மை இதிலிருந்து தான் வழிகெடுப்பான். நபியவர்களுக்குப் பல சிறப்புகள் இருக்கின்றது. பல அந்தஸ்துகள் இருக்கின்றது. அவர்களுடைய புகழ், தகுதி, அவர்களுடைய தியாகம், வீரம் இதைச் சொல்லித் தான் வழிகெடுப்பான்.

தன்னுடைய மகனுக்கு அல்லாஹ் விதித்த மரணத்தையே நபியவர்களால் தடுக்க முடியவில்லையென்றால் இன்று அவர்களிடம், "நபியே நீங்கள் பார்த்தாலே எங்களுடைய நோய்கள் துன்பங்கள் நீங்கிவிடும்' என்று மவ்லீது புத்தகத்தை வைத்து கொண்டு பாட்டு படிக்கிறார்கள். நபியவர்களால் எவ்வாறு துன்பத்தைப் போக்க முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

அவ்லியாக்களின் பெயரால் கட்டுக்கதைகள்

இன்றைய முஸ்லிம்கள் எப்படியெல்லாம் அவ்லியாக்களைப் பற்றிய எண்ணம் வைத்திருக்கிறார்கள்?

அப்துல் காதர் ஜீலானியிடம் ஒரு பெண்மனி வந்து தனது மகனின் பெயரைச் சொல்லி, தன்னுடைய மகன் இறந்து விட்டார் என்று வருத்தத்துடன் சொல்லி அழுகின்றார். அதற்கு அப்துல் காதர் ஜீலானி அந்தப் பெண்ணிடம், உன்னுடைய மகன் எப்பொழுது இறந்து போனார் என்று கேட்டார். அதற்கு அந்த பெண்மனி, "இரவில் மவுத்தானார்' என்று விடையளித்தார்.

அப்பொழுது அப்துல் காதர் ஜீலானி அவர்கள் தனது தலைக்கு மேலே எட்டிப்பார்த்தார். மலக்குல் மவ்த் அன்றைய தினம் யாரெல்லாம் இறந்து போனார்களோ அவர்களை ஒரு கூடையில் வைத்து வானத்திற்கு எடுத்துச் சென்றதைப் பார்த்தார். உடனே அப்துல் காதர் ஜீலானி அவர்கள் அந்த மலக்கிடம் அந்தப் பெண்மனி சொன்ன பெயர் உள்ள மனிதரை மட்டும் இறக்கிவிடும் படி கட்டளையிட்டார்.

அதற்கு அந்த மலக்குல் மவ்த் அதெல்லாம் முடியாது. நான் அல்லாஹ்வுடைய கட்டளையின் படிதான் நடப்பேன் என்று மறுத்து விட்டார். அதற்கு அப்துல் காதர் ஜீலானி தன்னிடம் வைத்திருந்த பாசக்கயிற்றை எடுத்து வீசினாராம். அது மலக்குல் மவ்த்தின் காலில் சிக்கிக் கொண்டதாம். உடனே அந்த மலக்குல் மவ்த் தடுமாற்றத்தால் கூடையை விட்டு விட்டாராம். கூடை கவிழ்ந்து அதில் இருந்த, இறந்து போன அனைவரும் உயிர் பிழைத்தார்களாம். பிரிந்து சென்ற உயிர் மீண்டும் அவர்களிடம் வந்து சேர்ந்து கொண்டதாம். இதுதான் அந்தக் கதை.

அவ்லியாக்கள் என்ற பெயரில் எழுதி வைத்திருக்கின்ற இந்த மாதிரியான கதைகளையும், புராணங்களை மிஞ்சுகின்ற அளவுக்குக் கிறுக்குத்தனமான இந்த கட்டுக்கதைகளையும் நம்முடைய முஸ்லிம்கள் இன்றளவும் உண்மையாக நம்புகிறார்கள் என்றால் இது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம்.

அல்லாஹ்வுடைய தூதருக்கே அவருடைய மகனுடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை. அந்த ஆற்றல் தனக்கு இல்லையென்று சொல்வதற்குத்தான் அவர்களை நபியாக அனுப்பினான். அத்தகைய தூய்மையான சிந்தனையைத் தூண்டக் கூடிய மார்க்கத்தில் இப்படி ஒரு கதையா? இந்தக் கதையைச் சொன்னால் ஒரு முஸ்லிம் நம்ப முடியுமா? இதைக் கேட்டால் நமக்கு கோபம் தானே வர வேண்டும்.

அல்லாஹ்வுடன் விளையாடுகிறீர்களா? அல்லாஹ்வை கிள்ளுக்கீரையாக ஆக்கப் பார்க்கிறீர்களா? இந்த அபத்தக் கதைகளை அல்லாஹ்வின் ஆலயத்திலேயே மக்களுக்குச் சொல்கிறீர்களே என்று நமக்குக் கோபம் வர வேண்டாமா? இதையெல்லாம் பார்க்கும் போது இவர்கள் மார்க்கத்தில் வரம்பு மீறிப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெளிவாகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த இன்னொரு சம்பவம்:

நபியவர்களுடைய மூத்த மகள் ஜைனப் (ரலி) அவர்களுடைய மகன் (அதாவது நபியவர்களுடைய பேரன்) மதீனாவில் இருக்கும் போது கடுமையான நோய்வாய்ப்பட்டு மரணத் தருவாயில் இருக்கிறார். எனவே நீங்கள் அவசரமாக வரவேண்டும் என்று நபி (ஸல்) அவர்களிடம் ஜைனப் (ரலி) ஆள் அனுப்புகிறார்கள். ஆனால் இந்தச் செய்தி நபியவர்களுக்கு வந்தடைந்த பிறகும் அவர்கள் தமது பேரனைப் பார்ப்பதற்குச் செல்லவில்லை.

உசாமா பின் ஸைத் (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகள் (ஜைனப்-ரலி) தம் மகன் மரணத் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி (ஸல்) அவர்கள், தம் மகளுக்கு சலாம் கூறி அனுப்பியதோடு, "எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பார்ப்பீராக!'' என்றும் கூறி அனுப்பினர்கள்.

அப்போது அவர்களுடைய மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத், ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந்தனர்.

(வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினார்கள். இற்றுப் போன பழைய தோல் துருத்தியைப் போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன.

"அல்லாஹ்வின் தூதரே! என்ன இது (அழுகிறீர்கள்)?'' என சஅத் (ரலி) அவர்கள் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள, "இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் விதைத்த இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்'' என்றார்கள்.

நூல்: புகாரி 1284

மேலும் இந்த ஹதீஸ் புகாரி 1204, 5223, 6163, 6829 ஆகிய எண்களில் இடம் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கடைசியாக அவர்களுடைய பேரன் இறந்து விடுகின்றார். அவர்களுடைய பேரன் அவர்களுடைய கண்களுக்கு முன்பாகவே வேதனைப்பட்டு மரணமடைகிறார்கள். அதை அவர்களால் தடுக்க முடிந்ததா? அந்தச் சிறுவனுக்கு ஏற்பட்ட வேதனையைப் போக்க முடிந்ததா? அந்தச் சிறுவனை வேதனை இல்லாமல் மரணிக்கும்படி செய்ய முடிந்ததா?

அனைத்தையும் பார்த்துக் கொண்டு அவர்களால் கண்ணீர் தான் சிந்த முடிந்தது. அவன் நேரத்தை நிர்ணயித்து விட்டால் நாம் தடுக்கவா முடியும் என்று சொல்லி ஆறுதல் தான் படுத்த முடிந்தது.

உலகத்தில் எத்தனையோ மனிதர்களுக்கு மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்று கொடுத்திருக்க நபியவர்களுக்கு மட்டும் ஏன் இத்தகைய சோதனையைக் கொடுக்கிறான்? அவர்களைத் தண்டிப்பதற்காகவா? இல்லை. இறைவனாகிய நான் ஒருவன் இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காகத்தான்.

"நான் நினைத்தால் எதையும் செய்வேன். நபிமார்கள் அனைவரும் மனிதர்கள்; என்னுடைய அடிமைகள்; ஆனால் சிறந்த அடிமைகள். அவ்வளவு தானே தவிர அவர்கள் கடவுள் கிடையாது. கடவுளுக்குரிய அந்தஸ்து அதிகாரம் எதுவும் கிடையாது' என்பதை உணர்த்துவதற்காகத் தான்.

அதே போன்று அல்லாஹ் நபியவர்களுக்கு ஜைனப், ருகைய்யா, உம்மு குல்சும், பாத்திமா என நான்கு பெண் குழந்தைகளைக் கொடுத்தான். அந்த நான்கு பெண் குழந்தைகளும் பெரியவர்களாக வளர்ந்து ஆளாகி திருமணம் முடித்தார்கள். ஆனால் அதில் பாத்திமாவைத் தவிர மற்றவர்கள் நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே மரணித்து விட்டார்கள். அந்த மூன்று பெண் குழந்தைகளும் தன் கண்முன்னே இறந்த போது அவர்களைக் காப்பாற்ற முடிந்ததா?

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், மகான்கள், அவ்லியாக்கள் நினைத்தால் எதையும் செய்வார்கள் என்ற கதைகள் எல்லாமே பொய்தான். மகான்கள், அவ்லியாக்கள் அனைவரும் மனிதர்கள் தான்.

மனிதத்தன்மையை உறுதிப்படுத்தும் மறதி

சின்னச் சின்ன விஷயமாக இருந்தாலும், வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல் என எதை எடுத்துக் கொண்டாலும் பல சந்தர்ப்பங்களில் நபியவர்களும் மனிதர் தான் என்பதை அல்லாஹ் நிருபித்துக் கொண்டே இருக்கிறான்.

அடுத்தது அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயத்தைக் கூறுவதாக இருந்தால் நபியவர்களின் தொழுகையில் ஏற்பட்ட மறதியைக் குறிப்பிடலாம். நபியவர்கள் ஒருநாள் தொழுது கொண்டிருக்கும் போது நான்கு ரக்அத் தொழுவதற்குப் பதிலாக இரண்டு ரக்அத் தொழுது ஸலாம் கொடுத்து விடுகிறார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.

- (இதன் அறிவிப்பாளர்கüல் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நபியவர்கள் (அத்தொழுகையின் ரக்அத்தை) கூடுதலாக்கினார்களா அல்லது குறைத்து விட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.-

(தொழுகையை முடிக்க) அவர்கள் சலாம் கொடுத்தபோது அவர்கüடம், "இந்தத் தொழுகையின்போது (தற்போதுள்ள தொழுகையின் ரக்அத்தை) மாற்றுகின்ற (இறை அறிவிப்பு) ஏதேனும் வந்ததா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்?)'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் இப்படி இப்படித் தொழுதீர்கள் (அதனால் தான் கேட்கிறோம்)'' என்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின் இருப்பில் உட்கார்வது போன்று) தமது காலை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சிரவணக்கங்கள் (சஜ்தாக்கள்) செய்துவிட்டுப் பின்னர் (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள். இதன் பின்னர் எங்களை முன்னோக்கித் திரும்பியபோது, "ஓர் விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் மாற்றங்க(ளை அறிவிக்கும் இறை அறிவிப்பு)கள் வருமானால், கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்துவிடுவேன். ஆயினும் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்; (சில நேரங்கüல்) நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகின்றேன். அவ்வாறு நான் (எதையேனும்) மறந்துவிடும் போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்; என்று கூறிவிட்டு, "உங்கüல் ஒருவர் தமது தொழுகையில் (எதையேனும் கூடுதலாகச் செய்ததாகவோ குறைத்துவிட்டதாகவோ) சந்தேகிக்கும் போது சரியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் (தொழுகையைப்) பூர்த்தி செய்து சலாம் கொடுத்த பின்னர் (மறதிக்குரிய) இரண்டு சிர வணக்கங்கள் (சஜ்தாக்கள்) செய்யட்டும்'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 401

இதுபோன்று மறதி ஏற்பட்ட சம்பவங்கள் ஒன்று இல்லை. பல சம்பவங்கள் நபிகளாருடைய வாழ்க்கையில் நடந்துள்ளன.

இன்றைக்கு தரீக்கா, முரீது, ஷெய்கு போன்றவர்களெல்லாம் ஒரு வாதத்தை வைத்துத் தான் ஏமாற்றுகிறார்கள். நீங்கள் தொழுகிறீர்களே அல்லாஹ்வுக்கு ஈடுபாடாகத் தொழ முடிகிறதா? அந்தப் பக்குவம் உங்களிடம் இருக்கிறதா? என்று நம்மிடம் கேட்பார்கள். அவ்வாறு நீங்கள் இரண்டரக் கலந்து முழு ஈடுபாட்டுடன் தொழ வேண்டுமானால் எங்களை போல ஷெய்கிடம் முரீதாக வேண்டும். நாங்கள் தொழுகையில் தக்பீர் கட்டினால் அல்லாஹ்வை நேரடியாகப் பார்த்துக் கொண்டே தொழுது கொண்டிருப்போம். வேறு எதுவும் எங்களுடைய சிந்தனைக்கு வராது. மழை பெய்தாலும் தெரியாது. இடி இடித்தாலும் தெரியாது என்று கூறுவார்கள்.

இதைப்போன்று நீங்களும் வர வேண்டுமானால் எங்களிடம் முரீது வாங்கி, திக்ர் செய்து வந்தால் படிப்படியாக இருபது அல்லது முப்பது வருடங்களில் எங்களைப் போன்று ஆகிவிடலாம் என்றெல்லாம் கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்று விடுகின்றனர். தரீக்காவாதிகள் இவ்வாறு நாங்கள் உங்கள் உள்ளத்தை பக்குவப்படுத்தப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள். ஆனால் அவர்களது உள்ளத்தையே அவர்களால் பக்குவப்படுத்த முடியாது.

யாருக்குமே இது இயலாத காரியம். நாம் தொழுகையில் தக்பீர் கட்டிய பிறகு தான் எல்லா ஞாபகமும் நினைவுக்கு வரும். அது வரைக்கும் எந்தச் செயலும் நினைவுக்கும் வராது. தொழுகையில் மட்டும் தான், அவன் எவ்வளவு தர வேண்டும்? இவன் எவ்வளவு தர வேண்டும்? கடையில் இன்றைக்கு எவ்வளவு வியாபாரம் நடந்தது? என்று பல செயல்கள் நினைவுக்கு வரும்.

சொல்லப் போனால் இவ்வாறு அனைத்து ஞாபகமும் வருவது தான் இந்த மார்க்கம் உண்மையான மார்க்கம் என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது. கெட்ட சக்தி ஒன்று இருக்கிறது; வணக்க வழிபாடுகளில் நம்மைக் கெடுக்கின்ற ஷைத்தான் ஒருவன் இருக்கின்றான் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.

ஷைத்தான் இருப்பது உறுதியானால் அல்லாஹ் இருப்பதும் உறுதியாகிவிடும். ஷைத்தான் இருப்பதை நாம் உறுதி செய்து விட்டால் அல்லாஹ் இருப்பதையும் நாம் உறுதி செய்து விடலாம். மற்ற எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் நினைவுக்கு வராத காரியங்கள், 10 வருடங்களுக்கு முன்னால் நாம் மறந்த காரியங்களெல்லாம் தொழுகையில் ஈடுபடும் போது மட்டும் தான் நினைவுக்கு வருகின்றது. ஆக எந்த மனிதராலும் ஒன்றிப்போய் இறைவனோடு இரண்டறக் கலந்து தொழ முடியாது. நபிகளாரும் அவ்வாறு தொழுதது இல்லை. அவ்வாறு யாரையும் அல்லாஹ் படைக்கவுமில்லை.

தொழுகையில் அடியான் தன்னுடைய இறைவனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறான் என்று கூறிய நபியவர்களுக்கே, அதுவும் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தொழுகையிலேயே அவர்களுக்கு எத்தனை தொழுதோம் என்ற மறதி ஏற்பட்டு விடுகின்றது என்றால் இந்தச் சம்பவம் நபியவர்கள் நம்மைப் போன்ற ஒரு மனிதர் தான் என்பதை உணர்த்தவில்லையா?

நபியவர்களுக்கே இந்த நிலை என்றால், தொழுகையில் நாங்கள் அல்லாஹ்வை நேரடியாகப் பார்க்கிறோம்; எங்களுக்கு தொழுகையைத் தவிர வேறொன்றும் தெரியாது; தொழும் போது எங்களை யாரேனும் தாக்கினால் கூட எங்களுக்குத் தெரியாது என்றெல்லாம் கதை விடும் போலி ஷெய்குகளின் நிலையை நாம் தெரிந்து கொள்ளலாம்.

மனதை ஒருமுகப்படுத்த முடியுமா?

நபியவர்களுடைய வாழ்க்கையில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி அடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். (தொழுது கொண்டிருக்கும் போது) அதன் வேலைப்பாடுகளை ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும், "எனது இந்த கருப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த.) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, அபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற) "அன்பிஜான்' (நகர எüய) ஆடையை என்னிடம் (வாங்கிக்) கொண்டு வாருங்கள். இந்த ஆடை சற்று முன்னர் எனது தொழுகையிலிருந்து என் கவனத்தை ஈர்த்து விட்டது'' என்று சொன்னார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், "நான் தொழுது கொண்டிருக்கும் போதே அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தேன். அது என்னைக் குழப்பிவிடுமோ என நான் அஞ்சினேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 373, 5817

அல்லாஹ்வுடைய தூதராக இருந்தும் கூட ஒருமித்த மனதாக, இரண்டறக் கலந்து முழு ஈடுபாட்டுடன் தொழ முடிந்ததா? அதுவும் தன்னுடைய பலவீனத்தை மறைக்காமல் மக்களிடத்தில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் இன்றைக்கு தரீக்காவாதிகள், ஷெய்குகள் என்று சொல்லக்கூடியவர்கள் தங்களுக்குப் பலவீனம் இல்லாதது போல் காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்.

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எந்த வகையில் உரசிப் பார்த்தாலும் சரி! உண்பது, உறங்குவது, அணிவது, நடப்பது, பேசுவது என எப்படி உரசிப் பார்த்தாலும் மனிதராகத் தான் இருந்தார்கள். மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக அவர்கள் இருக்கவில்லை என்பதற்கு இவை அனைத்தும் சான்றுகளாக இருக்கின்றன. இன்னும் இது குறித்து ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.

வளரும் இன்ஷா அல்லாஹ்

கேள்வி பதில்

? என் சகோதரிகளுக்குச் சொந்தமாக வீடு உள்ளது. ஆனால் அவர்களுக்கு வருமானம் இல்லை. இந்த நிலையில் என்னுடைய ஜகாத் பணத்தை அவர்களுடைய குடும்பத்திற்குக் கொடுக்கலாமா? ஆனால் அவர்களிடம் 11 பவுன் நகைக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளது. விளக்கவும்.

முஹம்மத்

செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்குக் கொடுப்பதே ஜகாத் என்பதன் அடிப்படை.

இந்த அடிப்படையை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

செல்வந்தர்கள், ஏழைகள் என்பது ஒப்பிட்டுப் பார்த்து வகைப்படுத்துவதாகும். ஒருவருடன் ஒப்பிடும் போது செல்வந்தராக காணப்படுபவர் இன்னொருவருடன் ஒப்பிடும் போது ஏழையாக இருப்பார்.

மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் மக்களைக் கொண்ட ஊரைச் சேர்ந்தவர் சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார். அவருக்கு மாதம் இருபதாயிரம் சம்பளம் கிடைக்கிறது. இவர் தனது சொந்த ஊரில் செல்வந்தராகக் கருதப்படுவார்.

ஆனால் சவூதியில் இவருக்குச் சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் பார்வையில் இவர் ஏழையாவார். ஒரு அரபியின் வீட்டில் வேலை செய்தால் அந்த வீட்டின் உரிமையாளர் பார்வையில் இவர் பரம எழையாவார். இவரது தரத்தில் உள்ளவர்களுக்குத் தான் அரபிகளால் ஜகாத் கொடுக்க முடியும். இல்லாவிட்டால் அரபிகள் ஜகாத் கொடுக்க முடியாது.

அரபுகளிடம் ஜகாத் பெற்ற இவர் தனது ஊரில் உள்ள ஏழைகளுக்கு ஜகாத் கொடுக்கலாம். நானே ஜகாத் வாங்கியிருக்கிறேன்; நான் எப்படி ஜகாத் கொடுப்பது என்று கருதினால் அந்த ஊர் மக்களுக்கு ஜகாத் கிடைக்காமல் போய்விடும்.

மேலும் அந்த ஊரில் இவரை விட குறைந்த வருவாய் உள்ளவர்கள் கூட ஜகாத் கொடுப்பார்கள். ஆனால் அவர்களை விட அதிக வருமானம் உள்ளவர் நானே ஜகாத் வாங்கி இருக்கிறேன் நான் எப்படி ஜகாத் கொடுப்பது என்று வாதிடுவது வரட்டு வாதமாகவே அமையும்.

ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்குபவராக இருக்கக் கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டு இருந்தால் இவ்வாறு வாதிடலாம். அவ்வாறு எந்தக் கட்டளையும் மார்க்கத்தில் இருப்பதாக நாம் தேடிப்பார்த்த வகையில் கிடைக்கவில்லை.

ஒரு ஊரில் பலகோடி ரூபாய்களுக்கு அதிபதியாக ஒருவர் இருக்கிறார். அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் லட்சாதிபதி அவர் பார்வையில் ஏழையாக உள்ளதால் இவருக்கு ஜகாத் கொடுக்கலாம். இவரும் வாங்கிக் கொள்ளலாம். அவ்வாறு வாங்கி விட்டு தனது வருமானத்தையும் தனக்கு ஜகாத்தாக கிடைத்த வருமானத்தையும் கணக்கிட்டு அதில் இருந்து தன்னை விட ஏழைகளுக்கு இவர் ஜகாத் கொடுக்கலாம்.

இதில் இன்னொரு விஷயமும் உள்ளது.

11 பவுன் தங்கம் வைத்து இருந்தால் ஜகாத் கடமை என்ற நிலையில் நாம் இருக்கிறோம். தங்கத்தை அளவுகோலாகக் கூறும் ஹதீஸில் விமர்சனம் உள்ளது. வெள்ளியை அடிப்படையாகக் கூறும் ஹதீஸ் விமர்சனம் இல்லாததாக இருக்கிறது. இது குறித்து ஜமாஅத் அறிஞர்கள் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். வெள்ளியை அளவுகோலாக கொள்ளும் ஹதீஸ் தான் சரியானது என்ற முடிவுக்கு வந்தால் இன்றைய மதிப்பில் ஐந்தாயிரம் ரூபாய் வைத்துள்ளவருக்கு ஜகாத் கடமையாகிவிடும்.

ஐந்து ஊகியா வெள்ளி வைத்து இருப்பவர் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறுகிறது. ஒரு ஊகியா என்பது 40 திர்ஹமாகும். அன்றைய ஒரு திர்ஹத்தின் இன்றைய எடை 3.6 கிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 200 திர்ஹத்தின் எடை 720 கிராம் ஆகும். அதாவது வெள்ளியை அளவுகோலாக கொள்ளும் ஹதீஸ் தான் சரியானது என்றால் இன்றைய மதிப்பில் 30 முதல் 35 ஆயிரம் ரூபாய் உள்ளவருக்கு ஜகாத் கடமையாகி விடும்.

தங்கத்தை அளவு கோலாக கொண்டால் 11 பவுன் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புடையதாகும்

தங்கத்தை அளவு கோலாகக் கொள்ளும் ஹதீஸ் சரி என்றால் மூன்று லட்சத்துக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு ஜகாத் கடமையாகாது. ஆனால் வெள்ளியை அளவுகோலாகக் கொள்ளும் ஹதீஸ் தான் சரியானது என்றால் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புக்கு பணம் அல்லது தங்கம் வெள்ளி இருந்தால் ஜகாத் கடமையாகி விடும்.

முப்பதாயிரம் ரூபாய் அல்லது அதன் மதிப்புடைய தங்கம், வெள்ளி, பணம் இல்லாதவர் மிகச் சிலரே இருப்பார்கள். அப்படியானால் ஊருக்குப் பத்து பேர் கூட ஜகாத் வாங்கத் தகுதி உடையவராக மாட்டார்கள். ஜகாத் என்ற அம்சம் வெறும் ஏட்டில் மட்டுமே இருக்கும். எனவே ஜகாத் வாங்குபவர் ஜகாத் கொடுப்பவராகவும் இருக்கலாம் என்ற நிலைபாடு இருந்தால் தான் ஜகாத் என்பது நடைமுறையில் இருக்கும்.

எனவே நமக்கு யாரும் ஜகாத் கொடுத்தால் அவர்கள் நம்மை விட மேல்நிலையில் தான் இருப்பார்கள், அவர்களிடம் இருந்து நாம் ஜகாத்தை வாங்குவது குற்றமில்லை. எனெனில் அவருடன் ஒப்பிடும் போது நாம் எழையாகத் தான் இருக்கிறோம். அதுபோல் நம்மைவிடக் கீழ் நிலையில் உள்ளவர்களுடன் ஒப்பிடும் போது நாம் அவரை விடச் செல்வந்தராக இருப்போம். அதனடிப்படையில் நாம் கொடுப்பவர்களாகவும் இருக்கலாம்.

அல்லாஹ் ஒருவன் மட்டுமே யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காமல் செல்வந்தன் என்ற பட்டத்துக்கு கனீ என்ற பட்டத்துக்கு உரியவன். மனிதர்களில் அப்படி ஒரு செல்வந்தனும் இல்லை.

? என் மனைவி என்னை இகழ்ந்து பேசிவிட்டார், இதுவரை மன்னிப்பும் கேட்கவில்லை. இதனால் தற்போது நான் அவரிடம் பேசுவதில்லை. இது போல் இருக்கலாமா, எத்தனை நாட்கள் இருக்கலாம் ?

அப்துல் ரஹ்மான்

உங்கள் மனைவி உங்களை என்ன இகழ்ந்து பேசினார்? அவரை நீங்கள் இகழ்ந்து பேசியதால் அவர் உங்களை இகழ்ந்து பேசினாரா? நீங்கள் ஒன்றுமே செய்யாமல் சொல்லாமல் இருக்கும் போது இகழ்ந்து பேசினாரா? அவர் இகழ்ந்து பேசியது முடிந்தால் பெருந்தன்மையுடன் உங்களால் அலட்சியப்படுத்தத்தக்கதா? அல்லது எவ்வளவு முயன்றாலும் அலட்சியப்படுத்தவே முடியாது என்ற அளவுக்கு இருந்ததா? இப்படிப் பல விஷயங்கள் இதில் உள்ளன.

பொதுவாக ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களிடம் உள்ள குறையை உணராமல் அடுத்தவரின் குறையை மட்டும் பேசுவார்கள். உங்கள் குற்றச்சாட்டு அது போன்றதா என்று நீங்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

மன்னிப்பு கேட்டால் தான் மன்னிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. விரும்பினால் மன்னிப்பு கேட்காவிட்டாலும் மன்னிக்க முடியும்.

பல நாட்கள் அவரும் உங்களுடன் பேசவில்லை; நீங்களும் அவருடன் பேசவில்லை என்பது உங்கள் கேள்வியில் இருந்து தெரிகிறது.

இல்வாழ்க்கை அற்றுப் போன வயது என்றால் அது பிரச்சனை இல்லை. 

ஒருவருக்கொருவர் தேவைப்படும் வயதில் இருவருமே  ஒருவருக்கொருவர் தேவையில்லை என்பது போல் நடந்து கொண்டால் அதில் வேறு பிரச்சனை இருக்கலாம்.

அதன் பிறகும் அப்படி இருந்தால் இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனைக்கு கவுன்சிலிங் எடுக்க வேண்டும்.

பேசுவதைப் பொறுத்த வரை மார்க்கம் சம்பந்தமான விஷயமாக இல்லாமல் உலக விஷயத்துக்காக என்றால் அதிக பட்சம் மூன்று நாட்கள் தான் பேசாமல் இருக்க வேண்டும்

எந்த முஸ்லிமும் தன் சகோதரனுடன் மூன்று நாட்களுக்கு மேல் பகையாக இருக்க கூடாது என்பது நபி மொழி

பார்க்க: புகாரி 6076

அவனைப் பார்த்து இவன் புறக்கணிப்பதும் இவனைப் பார்த்து அவன் புறக்கணிப்பதும் கூடாது. அவர்களில் சிறந்தவர் ஸலாம் கூறி பேச்சை ஆரம்பிப்பவர் தான் என்றும் நபியவர்கள் கூறியுள்ளனர்.

பார்க்க: புகாரி 6077

இது பேசுவதற்கான எல்லையாகும்.

கணவன் மனைவிக்கு இடையே அதையும் கடந்த உறவு உள்ளது. உடல் ரீதியான தேவைகள் இருவருக்கும் உள்ளது. அதற்கு அதிகப்பட்சமாக நான்கு மாதம் எல்லை தான் உள்ளது. அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்தால் கூட அதை முறித்து விட்டு இருவரும் இணைந்து கொள்ள வேண்டும்.

தமது மனைவியருடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாத அவகாசம் உள்ளது. அவர்கள் (சத்தியத்தை) திரும்பப் பெற்றால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். விவாகரத்துச் செய்வதில் அவர்கள் உறுதியாக இருந்தால் அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:226, 227

மனைவியின் மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி "அல்லாஹ்வின் மேல் ஆணையாக இனி உன்னைத் தீண்ட மாட்டேன்'' என்று கூறும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது.

இவ்வாறு சத்தியம் செய்தவர் இதற்காக மனைவியைப் பிரியத் தேவையில்லை. நான்கு மாத அவகாசத்துக்குள் சத்தியத்தை முறித்து விட்டு மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். காலமெல்லாம் மனைவியுடன் சேர மாட்டேன் என்று ஒருவர் குறிப்பிட்டாலும் அவருக்குரிய கெடு நான்கு மாதங்கள் தாம்.

நான்கு மாதம் கழித்துத்தான் சேர வேண்டும் என்று இவ்வசனத்திற்கு (2:226) அர்த்தம் இல்லை. நான்கு மாதத்திற்குள் சேர வேண்டும் என்றே பொருள்.

இன்றைக்குச் சத்தியம் செய்து விட்டு நாளைக்குக் கூட அதை முறிக்கலாம். நான்கு மாதம் கடந்த பின்னும் சேராவிட்டால் விவாகரத்துச் செய்து விட வேண்டும் என்று அடுத்த வசனம் கூறுகிறது.

சிலர், மனைவியுடன் வெறுப்பு கொண்டு அவளுடன் வாழ்க்கை நடத்தாமலும், அவளை விவாகரத்துச் செய்யாமலும் கொடுமைப்படுத்துவர். வருடக் கணக்கில் பெண்களை இவ்வாறு நடத்தும் கொடியவர்களை ஜமாஅத்துகள் கண்டு கொள்வதில்லை.

நான்கு மாதத்துக்குள் வாழ்வு கொடுக்காவிட்டால், அதையே விவாகரத்தாக அறிவிக்கும் கடமை ஜமாஅத்துகளுக்கு உண்டு. அந்த அதிகாரம் இவ்வசனத்தின் மூலம் சமுதாயத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

? உயிர் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கலாமா?

முஹம்மது, அஜ்மீர்

இஸ்லாத்தின் உயிர் மூச்சான கொள்கை ஏகத்துவக் கொள்கையாகும். இந்த ஏகத்துவக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் எந்தச் செயலுக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

இறந்தவர்களுக்காக நினைவுச் சின்னம் எழுப்புவது ஏகத்துவக் கொள்கைகயைக் குழி தோண்டிப் புதைக்கும் விதமாகத் தோற்றுவிக்கப்பட்ட, பிற மதக் கலாச்சாரமாகும். நாளடைவில் அவற்றுக்கு புனிதத்தன்மை இருப்பதாகக் கருதி அவற்றை வணங்கும் நிலைக்கு மக்கள் சென்றுவிடுவர்.

இதனால் தான் நபிகள் நாயகம் தமக்கோ  தமக்கு முன் வாழ்ந்து மறைந்த நல்லோர்களுக்கோ இது போன்று நினைவுச் சின்னங்கள் அமைக்க அனுமதி அளிக்கவில்லை. மாறாக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். தடை செய்துள்ளார்கள்.

யூதர்கள் தங்களில் ஒரு நல்லடியார் இறந்து விட்டால் அவர்களின் சமாதியில் கட்டடம் எழுப்பி அவர்களின் நினைவாக அவரது உருவத்தையும் பதித்து விடுவார்கள். இந்த செயலைச் செய்ததால் யூதர்களை நபியவர்கள் சபித்துள்ளார்கள்.

அபிசீனிய நாட்டில் தாம் கண்ட "மரியா' என்றழைக்கப்ட்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உம்மு சலமா அவர்கள் கூறினார்கள்.  அதில் தாம் கண்ட உருவப்படங்களைக் குறித்தும் உம்மு சலமா அவர்கள் குறிப்பிட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் எத்தகைய மக்கள் எனில், அவர்களிடையே நல்ல அடியார் (அல்லது நல்ல மனிதர்) ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டிவிடுவார்கள்; அதில் அந்த உருவங்களை வரைந்தும் விடுவார்கள். இத்தகையோர் தாம் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 434

ஒருவர் நல்லடியாராகவே இருந்தாலும் அவர் இறந்த பிறகு அவருக்காகக் கட்டடம் எழுப்புவது நினைவுச் சின்னம் அமைப்பது கூடாது என்று நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.

இணை வைப்பாளர்கள் நினைவுச் சின்னமாக ஒரு மரத்தை ஏற்படுத்தி அதற்கு புனிதத் தன்மை இருப்பதாக நம்பலானார்கள். முஸ்லிம்களும் அது போன்று தங்களுக்கும் ஒரு மரத்தை ஏற்படுத்தக் கோரிய போது நபியவர்கள் அதைக் கண்டித்துள்ளார்கள்.

மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைன் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அவ்வழியில் இணை வைப்பாளர்களுக்கு ஒரு மரம் இருந்தது. (புனிதம் கருதி) அங்கே அவர்கள் தங்குவார்கள். அதில் தங்களது ஆயுதங்களைத் தொங்க விடுவார்கள். அதற்கு "தாத்து அன்வாத்' என்று சொல்லப்படும். நாங்கள் பசுமையான பிரம்மாண்டமான ஒரு மரத்தைக் கடந்து சென்ற போது, "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் ஒரு தாத்து அன்வாத்தை ஏற்படுத்துங்கள்'' என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுள்களை எற்படுத்தித் தருவீராக!'' (7:138) என்று மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தினர்கள் கேட்டதைப் போன்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக இவையெல்லாம் (நரகத்திற்கு அழைத்துச் செல்லும்) வழிகள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் வழியை ஒவ்வொன்றாக நீங்கள் கடைப்பிடிப்பீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ வாகித் (ரலி)

நூல்: அஹ்மத் (20892)

நினைவுத் தூண்கள் அமைக்கும் பிறமதக் கலாச்சாரத்தைப் பார்த்து நாமும் அது போன்று அமைக்கலாமே என்று கேட்பது மூஸா நபியின் சமுதாயம் மூஸா நபியிடம் கோரிக்கை வைத்ததைப் போன்றதாகும்.

இன்றைக்கு நடக்கும் இணை வைப்புக் காரியங்களில் அதிகமானவை இறந்தவர்கள் பெயரில் ஏற்படுத்திய நினைவுச் சின்னங்கள் பெயரால் தான் நடைபெறுகின்றன. நபியவர்கள் தடை செய்துள்ளதால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதி கிடையாது.

December 2, 2013, 10:04 AM

ஏகத்துவம் 2013 நவம்பர்

ஏகத்துவம் 2013 நவம்பர்

தலையங்கம்

விழிகளுக்கு விருந்தாகும் வீட்டுப் பெண்கள்

திருமணம் ஒரு நபிவழியாகும். ஆனால் இன்று அந்தத் திருமணம் இறைவனுக்கு மாறுசெய்வதில் தான் துவங்குகின்றது. அதுதான் வரதட்சணை. இதனைத் தொடர்ந்து ஆடம்பரமான அழைப்பிதழ், பணத்தின் மதிப்பைக் காட்டுகின்ற விருந்து, பகட்டான மண்டபம், பந்தல், வண்ண விளக்குகள் அலங்காரம், இன்னிசைக் கச்சேரி, வாணவேடிக்கை, ஊர்வலம் என்று பாவகரமான செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

இத்துடன் மார்க்கம் பெண்களுக்கு விதித்திருக்கின்ற புர்கா போன்ற வரைமுறைகளை, வரம்புகளைத் தாண்டி சந்திப்புகளும் சங்கமங்களும் திருமண வீட்டில் நடைபெறுகின்றன.

அண்ணியிடமும், கொழுந்தியாவிடமும் ஆண்கள் இரட்டை அர்த்த வார்த்தைகளில் கிண்டல் செய்வது, பதிலுக்குப் பெண்களும் மச்சான், கொழுந்தன் என்று அதே பாணியில் கிண்டல் செய்கின்ற அநாகரீகக் காரியங்களும் நடக்கின்றன. போதாக்குறைக்கு வீடியோ கேமராக்கள் கல்யாண வீடுகளில் புகுந்து வெறித்தனமாக விளையாடுகின்றன.

கல்யாண வீடு என்றதும் வீட்டிலுள்ள பெண்களும், வெளியிலிருந்து வரும் பெண்களும் தங்களுடைய உயர் ரக பட்டாடைகளை உடுத்தி ஒப்பனை செய்துகொள்வார்கள். உதட்டுக்குச் சாயம் பூசிக்கொள்வார்கள். கூந்தலுக்குப் பூச்சூடிக் கொள்வார்கள். கழுத்துகளிலும் காதுகளிலும் விலையுயர்ந்த நகைகளை அணிந்து கொள்வார்கள். மொத்தத்தில் அழகுப் பதுமைகளாகக் காட்சியளிப்பார்கள். அவர்களின் பிம்பங்களை வீடியோ கேமராக்கள் வளைத்து வளைத்துப் படம் பிடிக்கின்றன.

வீட்டுப் பெண்கள் வீதியில் நிற்கும் உணர்வில் இருக்க மாட்டார்கள். மேனியை விளம்பரப்படுத்தும் மெல்லிய சேலைகளில் இருப்பார்கள். சகஜமாகவும், சர்வசாதாரணமாகவும் வீட்டில் அங்கிங்கென்று அலைவார்கள். குனியும் போதும் நிமிரும் போதும் அவர்களுடைய அங்க அவயங்களிலிருந்து ஆடைகள் அடிக்கடி விலகிக் கொண்டிருக்கும். இந்தக் காட்சிகளை வீடியோக்கள் ஒன்று விடாது பதிவு செய்து கொண்டிருக்கின்றன.

வீடியோக்காரனின் வேட்டை இத்துடன் நின்று விடுவதில்லை. வீடியோ மையத்தில் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து அதை சி.டி. ஆக்கும் போது அங்குள்ள பணியாளர்களின் பார்வைகளுக்கும் பெண்களின் அழகு மேனிகள் பலியாகின்றன. ஸ்லோமோஸனில் அவர்கள் பெண்களை நிறுத்தி, நிறுத்தி தங்களின் விழிகளால் வேட்டையாடித் தள்ளுகின்றனர்.

வீட்டுப் பெண்களை இப்படி அடுத்தவருக்கு அந்நியருக்கு வேட்டைக் களமாக்கலாமா? விருந்தாக்கலாமா? உடல் கூச வேண்டாமா?

மாப்பிள்ளையின் நண்பர்கள் என்ற பெயரில் அந்நியர், அயலார்களும் உறவினர் என்ற போர்வையில் ஊரார்களும் ஊதாரிகளும் தங்களது மொபைல் போன்களில் மணமகள் உட்பட நமது அக்கா, தங்கைகள் உள்ளிட்ட அனைத்து பெண்களையும் நம் கண் முன்னால் கையோடு கையாக களவாடிச் செல்கின்றனர்; கவர்ந்து செல்கின்றனர்.

இதைவிட மிகக் கொடுமையான விஷயம் அண்ணன் தம்பிமார்களே தங்கள் அக்கா தங்கைகளை, மனைவிமார்களை அந்நியர்களுக்கு இணைய தளத்தின் மூலம் நேரடி ஒளிபரப்பில் காட்டுகின்றனர்.

வெளியார் பார்வை வீட்டுக்குள் பாயக்கூடாது, பதியக்கூடாது என்பதற்காக வீட்டுவாசலில் திரைபோடும் இந்த அறிவாளிகள் வானமேறிப் பறக்கும் ஊடகத்தின் வாயிலாக தங்கள் குடும்பப் பெண்களை மானமேறச் செய்கின்றனர்.

வெளியாட்களின் வெறிப்பார்வைக்கும் வேற்றுப் பார்வைக்கும் தங்களின் வீட்டுப் பெண்களை விருந்தாக்குகின்றனர்.

ஆண்களாகிய இவர்களுக்கும் வெட்க உணர்வு, ரோஷ உணர்வு எல்லாம் வெந்து சாம்பாலாகிவிட்டது போல் தெரிகின்றது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது குறித்து(க் கண்டித்து) தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவரை(க் கண்டிக்காதீர்கள்;) (விட்டுவிடுங்கள். ஏனெனில் வெட்கம் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 24

ஓர் இறை நம்பிக்கையாளனுக்கு வெட்கம் என்பது அவனது நாடி நரம்புகளுடன் பின்னிப் பிணைந்தது என்று நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

ஆனால் இவர்களுக்கோ இந்த வெட்க உணர்வுகள் இறை மறுப்பாளர்களைப் போன்று அத்தனையும் மழுங்கி, மாயமானவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதையே இது காட்டுகின்றது. இத்தகையவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கின்ற, விடுக்கின்ற எச்சரிக்கையை இங்கே நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.

வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 24:19

அத்துடன் அடுத்தவரின் காம விழிகளுக்குக் காட்சியாகும் பெண்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடுக்கின்ற எச்சரிக்கை இதோ:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை.  ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர்.  இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள்.  அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும்.  ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 

நூல்: முஸ்லிம் 3971

இந்தக் காட்சிகளைக் கண்டு ரசிக்கின்ற ரசிகர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை:

கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.

அல்குர்ஆன் 40:19

முடிவில் அவர்கள் அங்கே வந்ததும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்

அல்குர்ஆன் 41:20

மனிதனுக்கேற்ற மார்க்கம்

எஸ். அப்பாஸ் அலீ

உலகில் ஏராளமான மதங்கள் உள்ளன. இவற்றில் இஸ்லாமிய மார்க்கம் மற்ற மதங்களைப் போன்று அல்லாமல் ஏராளமான தனிச்சிறப்புகளைப் பெற்று, தனித்து விளங்குகின்றது. அவ்வாறான தனிச்சிறப்புகளில் ஒரு விஷயம் குறித்து இந்தக் கட்டுரையில் அறிந்துகொள்ள இருக்கின்றோம்.

மனிதன் உலகத்தில் வாழும்போது நல்லவனாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான். கடவுள் நம்பிக்கை உள்ளவரானாலும் நாத்திகரானாலும் இந்த உண்மையை யாரும் மறுக்க மாட்டார்கள். இறைவனை மறுக்கும் நாத்திகன், "கடவுள் எதற்கு? உலகத்தில் வாழும் போது நல்லவனாக வாழ்ந்தால் போதும்' என்று கூறுவான்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், "நாங்கள் கடவுளை நம்புவதே நல்லவர்களாக வாழத்தான்' என்று கூறுவார்கள். பாவங்களைச் செய்பவர்கள் கூட தாங்கள் செய்வது தவறு என்பதை உணராமல் இருப்பதில்லை. மொத்தத்தில் எல்லா மனிதனிடத்திலும் இந்த உணர்வை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.

உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.

அல்குர்ஆன் (91:7)

(நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா?

அல்குர்ஆன் (90:10)

நல்லவனாக வாழும் போது கிடைக்கின்ற நன்மைகளையும் தீயவனாக வாழும் அதனால் உலகில் ஏற்படுகின்ற விளைவுகளையும் கண்கூடாகப் பார்க்கின்றோம். நல்ல பாதையில் செல்பவனின் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக உள்ளது. தீயவழியில் செல்பவனின் உடல், உள்ளம், குடும்பம், பொருளாதாரம் என அனைத்தும் கெட்டு உலகில் சீரழிகிறான். எனவே தான் உலகில் நல்லவனாக வாழ வேண்டும் என்ற அடிப்படையை அனைவரும் கூறுகின்றனர்.

ஆனால் இதற்கான சரியான வழியை அநேக மக்கள் அறியாமல் இருக்கின்ற காரணத்தால் இந்த ஆசை பலருக்கு நிறைவேறுவதில்லை. இஸ்லாம் மட்டுமே இதற்குச் சரியான தீர்வைக் கொடுக்கின்றது. இஸ்லாம் அல்லாத வேறு எந்த மதத்திலும் இதற்கான தீர்வைக் காண முடியாது.

எந்த நம்பிக்கை மனிதனிடத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துமோ அந்த நம்பிக்கையை உண்மையாகவும் ஆழமாகவும் ஏற்படுத்தும் வாழ்க்கை நெறிதான் இஸ்லாம்.

பொதுவாக, பெரும்பாலான மதங்கள் இறைநம்பிக்கையைப் போதிக்கின்றன. அது போல் மரணத்திற்குப் பிறகு சொர்க்கம் - நரகம் இருப்பதையும் கூறுகின்றன. இந்த இரண்டும் தான் மனிதன் சீர்பெறுவதற்கு அடிப்படையான விஷயங்கள்.

இந்த இரண்டு விஷயங்களையும் இஸ்லாம் மனித குலத்திற்கு எப்படிப் போதிக்கின்றதோ அதுபோல் வேறு எந்த மதமும் போதிக்கவில்லை.

உண்மையான இறை நம்பிக்கை

கல், மண், மரம், மனிதன் என இறைவனல்லாத இறைவனுடைய படைப்புகளைக் கடவுள் என்று நம்பி, அவற்றுக்கு மனிதனைப் போன்று பலவீனங்கள் இருப்பதாகவும் நம்பினால் அந்த நம்பிக்கை மனிதனிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

எவன் உண்மையான இறைவனோ அவனை இறைவன் என்று ஏற்க வேண்டும். அவனுக்குப் பலவீனங்கள் இல்லை என்றும், அனைத்திற்கும் அதிகாரம் படைத்தவன் என்றும் நம்ப வேண்டும்.

இறைவன் என்றால் யார்? அவன் எப்படிபட்டவன்? அவனுடைய அதிகாரங்கள் எவை? அவனுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்பதைச் சரியாகப் புரிந்தால் தான் அது சரியான இறைநம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையே மனிதனிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டது.

இஸ்லாம் இப்படிப்பட்ட தூய இறைநம்பிக்கையை மனிதனுக்குப் போதிக்கின்றது. இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கையைப் போன்று உலகில் வேறு எந்த மதமும் கூறவில்லை. அந்த வகையில் இஸ்லாம் தனித்து நிற்கின்றது.

மனித வாழ்வின் நோக்கம்

அடுத்து, இந்த உலகத்தில் இறைவன் மனித குலத்தை எதற்காகப் படைத்தான்? மனிதன் உலகத்தில் படைக்கப்பட்டதற்கான நோக்கம் என்ன? மரணத்திற்குப் பிறகு என்ன நிலை? ஆகிய கேள்விகளுக்கு சரியான பதிலை இஸ்லாம் மட்டுமே கூறுகின்றது.

மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற வழிகாட்டலை இறைவன் மனித குலத்திற்குக் கொடுத்துள்ளான். அந்த வழிகாட்டல் குர்ஆனும் நபிமொழியாகவும் உள்ளது. இவ்விரண்டையும் பேணி வாழ்வதே மனிதப் படைப்பின் நோக்கம்.

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.

(அல்குர்ஆன் 51:56)

இந்த உலகத்தில் மனம்போன போக்கில் வாழாமல் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தால் மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்வில் இறைவன் சொர்க்கம் என்ற சந்தோஷமான வாழ்வைத் தருவான். இறைக் கட்டளையைப் புறக்கணித்து வாழ்ந்தால் நரகம் என்ற கஷ்டமான கடும் நோவினையுள்ள வாழ்வைத் தருவான் என்ற மறுமை நம்பிக்கையை இஸ்லாம் போதிக்கின்றது.

பல சமூக மக்கள் இறைவன் தங்களை ஏன் படைத்தான் என்பதையே புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் உலகில் எப்படி வாழ வேண்டும் என்ற வழிமுறைகள் அவர்களிடத்தில் இல்லை.

இறை நம்பிக்கை, மறுமை நம்பிக்கை ஆகிய இரண்டும் தான் ஒரு மனிதனுடைய உள்ளத்தில் முதலில் ஆழமாகப் பதிய வேண்டிய அம்சங்கள். இதுதான் மனித சீர்திருத்தத்திற்கு அஸ்திவாரம்.

மனிதனைச் சீர்படுத்தும் மறுமை நம்பிக்கை

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாத ஒருவன் நீதமாக நடக்க நினைக்கின்றான். ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் கட்டுப்படாத இவன், சில லட்சங்களுக்கு அடிபணிந்து நீதம் தவறிவிடுவான். இவனுடைய கொள்கை உறுதியின் விலை சில லட்சங்கள் தான். இன்னும் உறுதி உள்ளவனாக இருந்தால் அதற்குத் தகுந்தாற்போல் விலை கொடுத்தால் சறுகிவிடுவான்.

அல்லது அவனுடைய உயிருக்கோ அவனுடைய குடும்பத்தார்களுக்கோ பாதிப்பு என்றால் அப்போது நீதம் தவறிவிடுவான். இப்படி அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாதவர்களை இந்த உலகத்தில் எப்படியும் வழிகெடுத்து விடலாம்.

ஆனால் ஒருவன் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மையாக இஸ்லாம் கூறுவது போல் நம்பினால், எந்தப் பொருளையும் கொடுத்து அவனை விலைக்கு வாங்க முடியாது. எப்படிப்பட்ட மிரட்டலுக்கும் அவன் அடிபணிய மாட்டான்.

ஏனென்றால் இந்த உலகம் முழுவதையும் அவன் அற்பமாகக் கருதுகிறான். இந்த உலகத்திற்குப் பின் மறுமை வாழ்வு உள்ளது என்றும் அந்த மறுமை வாழ்க்கை, உலக வாழ்வை விடச் சிறந்தது என்றும் நம்புகிறான். அற்பமானதைப் பெற்று சிறந்ததை இழக்க முன்வரமாட்டான்.

சுயநலம் இல்லாமல் எந்த மனிதனும் இல்லை. மனிதன் நல்லது கெட்டதைப் பார்த்து முடிவெடுப்பவனாக இல்லை. தீயதைச் செய்தால் தனக்கு நன்மை ஏற்படும் என்றால் மனிதன் தீயதையே தேர்வு செய்கிறான். நல்லது செய்தால் தனக்கு சிரமம் வரும் என்றால் நன்மையான காரியத்தைப் புறக்கணித்து விடுகிறான். இப்படிப்பட்ட மனிதனை எப்படி திருத்துவது?

வெறுமனே இந்த நன்மையான காரியத்தைச் செய் என்று சொன்னால் அவன் செய்ய மாட்டான். இதை செய். உனக்கு அதைத் தருகிறேன் என்றால் தான் நல்ல காரியத்தைக் கூட அவன் செய்வான். அவனுக்கு தரக்கூடிய பரிசு இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விட சிறந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்தப் பரிசுக்காக இந்த உலகத்தை விட்டுப் பிரிய நேர்ந்தால் அதையும் தியாகம் செய்ய முன்வருவான். நல்லவற்றின் பக்கம் நிலைத்து நிற்பான்.

மனிதனின் இந்த சுயநலத்தை அறிந்து வைத்துள்ள இறைவன், "உலகில் நீ நல்லவனாக வாழ்ந்தால் மறுமையில் உனக்கு நல்ல வாழ்க்கை உண்டு' என்று வாக்களிக்கின்றான். இந்த சுயநலத்தால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்த சுயநலம் மனிதனை நல்லவனாக வாழ வைக்கின்றது.

எனவே தான் இஸ்லாம் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புவதை இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக வலியுறுத்துகின்றது. அல்லாஹ்வும் இதைக் குர்ஆனில் பல இடங்களில் வலியுறுத்துகின்றான்.

நடந்தேறிய உண்மை

இது வார்த்தை ஜாலமோ, வாய்ப்பேச்சு தத்துவமோ இல்லை. ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது என்பபோல் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத சித்தாந்தமில்லை.

இந்த நம்பிக்கையை ஏற்றவர்களை தலைசிறந்தவர்களாக மாற்றிய பெருமை இஸ்லாத்திற்கு உண்டு.

அரபு மண்ணில் இஸ்லாம் வருவதற்கு முன்னால் அரபுகள் எல்லா தீமைகளையும் செய்து வந்தனர். இணை கற்பித்தல், கொலை, கொள்ளை, விபச்சாரம், பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல், பெண்ணடிமைத் தனம், ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு சதாவும் சண்டையிட்டுக் கொண்டிருத்தல் என எல்லா வழிகேடுகளும் அவர்களிடம் நிறைந்திருந்தது.

இஸ்லாம் கூறுகின்ற அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட பின் அவர்கள் உலகிலேயே தலைசிறந்தவர்களாகவும் மற்றவர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகவும் மாறினார்கள். இஸ்லாம் அவர்களை உலகையாளும் மன்னர்களாக மாற்றியது. ஒழுக்கம், நேர்மை, நாணயம் என அனைத்து நற்பண்புகளுக்கும் உரியவர்களாக மாறினார்கள். இது மறுக்க முடியாத, வரலாற்றில் நடந்தேறிய உண்மை.

இறை நம்பிக்கையும் மறுமை நம்பிக்கையும் தான் இப்படிப்பட்ட மாற்றத்தை அவர்களிடம் ஏற்படுத்தியது.

இன்றைக்கு மதுவுக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் அதற்கு என பிரத்தியேகமாக சிகிச்சை செய்வதைப் பார்க்கின்றோம்.

இருபத்து நான்கு மணி நேரமும் போதையிலே திளைத்திருந்த சமுதாயத்தை எந்த சிகிச்சையும் இல்லாமல் மதுவிலிருந்து முழுமையாக மீட்டெடுத்தது இஸ்லாம். குடம்குடமாக மதுவைப் பருகியவர்கள் தெருக்களில் வந்து அதைக் கொட்டினர். சரியான இறை நம்பிக்கையும் மறுமை நம்பிக்கையும் ஏற்படுத்திய விளைவு தான் இவை.

இந்த நம்பிக்கை தான் மனிதனைப் பக்குவப்படுத்துவதற்கு அடிப்படையானது. இது ஒருவருடைய உள்ளத்தில் எந்த அளவுக்கு ஆழமாகப் பதிகின்றதோ அந்த அளவுக்கு அவரிடத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இதன் பிறகு அவருக்கு உபதேசம் செய்தால் அந்த உபதேசம் அற்புதமாக வேலை செய்யும்.

ஒவ்வொரு நாளும் பயிற்சி

இந்த அடிப்படையை மனிதன் மறந்துவிடக்கூடாது என்பதற்காக இஸ்லாம் அடிக்கடி இதை நினைவுகூர வைக்கின்றது.

ஒரு முஸ்லிம் ஐந்து வேளை தொழுவதை இஸ்லாம் கட்டாயக் கடமையாக்கியுள்ளது. இந்தத் தொழுகையில் அல்பாத்திஹா அத்தியாயத்தை கண்டிப்பாக ஓத வேண்டும். இந்த அத்தியாயத்தில் அல்லாஹ்வைப் பற்றியும் மறுமை நாளைப் பற்றியும் இந்த உலகத்தில் வாழும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் நினைவூட்டப்படுகின்றது.

உறக்கத்தை விட்டுவிட்டு அதிகாலைத் தொழுகைக்கு எழுவது சாதாரண விஷயமா? ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதியம் வியாபார நேரத்தில் கடையை மூடிவிட்டு ஜும்ஆ தொழுகைக்கு வர வேண்டும். இந்தப் பயிற்சிகள் எல்லாம் எதற்காக?

இறைவனுக்காகவும் மறுமைக்காகவும் எதையும் நான் தியாகம் செய்வேன். மற்ற அனைத்தையும் விட எனக்கு இறைக்கட்டளை முக்கியமானது என்ற எண்ணத்தை மனிதனிடத்தில் ஏற்படுத்தி அவனைச் சீர்திருத்துவதற்காகத் தான்.

இறை நினைவு கலந்த வாழ்வு

மேலும் நபி (ஸல்) அவர்கள் இறைவனை எல்லா தருணங்களிலும் நினைக்கும் வழிமுறையைக் கற்றுத் தந்துள்ளார்கள். சாப்பிடுவதற்கு முன்பு, சாப்பிட்ட பின்பு, மலம் ஜலம் கழிப்பதற்கு முன்பு, பின்பு உறங்குவதற்கு முன்பு, பின்பு இவ்வாறு மனைவியிடத்தில் இல்லறத்தில் ஈடுபடுவது உட்பட அனைத்து சூழ்நிலைகளிலும் இறை சிந்தனையை மனிதனுக்கு இஸ்லாம் ஏற்படுத்துகின்றது.

ஆன்மீகத்தை வாழ்க்கையின் ஏதாவது ஒரு ஓரத்தில் வைத்துவிடாமல் வாழ்க்கை முழுவதிலும் இறை நம்பிக்கை வியாபித்து இருக்கும் வகையில் இஸ்லாம் இறை சிந்தனையை மனிதனிடத்தில் ஏற்படுத்துகின்றது. இந்த உலகத்தில் வாழ்வதே இறைவனுக்காகவும் மறுமை வாழ்வுக்காகவும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. இப்படிப்பட்ட நம்பிக்கை தான் மனிதனைப் பக்குவப்படுத்துகிறது.

மனிதனுடைய யதார்த்த நிலையைப் பாதிக்கும் மரணம் போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அவனுக்குத் தேவையான பல விஷயங்களை மனிதன் மறந்துவிடுவான். எதை மறந்தாலும் அந்த நேரத்திலும் இறைவனை மறந்துவிடக்கூடாது என்ற அளவுக்கு இஸ்லாம் இறை சிந்தனையை மனிதனிடத்தில் ஏற்படுத்துகின்றது.

இதேபோன்று சந்தோஷ நிலையிலும் இறைவனை முதலில் நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் அளவுக்கு அவனிடத்தில் இறை சிந்தனையை இஸ்லாம் ஏற்படுத்துகின்றது. இந்த நம்பிக்கை தான் மனிதனிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.

யாரிடத்தில் கோளாறு?

முஸ்லிம் அல்லாத பலர் இஸ்லாத்திற்கு வராமல் தயங்குவதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களும் நம்மைப் போன்று வட்டி, வரதட்சணை, மோசடி போன்ற காரியங்களைச் செய்கிறார்கள். எத்தனை முஸ்லிம்கள் ஐந்து வேளை சரியாகத் தொழுகிறார்கள்? முஸ்லிம்களின் செயல்பாடும் நம்முடைய செயல்பாடும் ஏறத்தாழ ஒன்றாகத் தான் உள்ளது. பிறகு ஏன் நாம் இஸ்லாத்திற்குச் செல்ல வேண்டும் என்று முஸ்லிமல்லாத மக்கள் பலர் நினைக்கின்றனர்.

முஸ்லிம் அல்லாத மக்களுக்காக நமது ஜமாஅத் நடத்தும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியிலும் இது போன்ற கேள்விகள் அதிகமாக வருகின்றன.

முஸ்லிம்கள் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்காத காரணத்தால் மற்றவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லாத வகையில் வாழ்கின்றனர். முஸ்லிம் பெயர் தாங்கிகள் இவ்வாறு இருப்பதற்கு இஸ்லாத்தில் எந்தக் கோளாறும் இல்லை. இஸ்லாத்தை சரியாகக் கடைப்பிடிக்காத இவர்களிடத்தில் தான் கோளாறு உள்ளது.

ஒரு நோயாளி சரியான மருத்துவரிடம் சென்று நல்ல மருந்தை வாங்கியுள்ளான். ஆனால் அதை அவன் குடிக்கவில்லை. நோயும் குணமாகவில்லை.

வேறு ஒருவன் இந்த நோயாளியைப் பார்த்து, "இவன் மருந்து வாங்கியும் இவனுடைய நோய் குணமாகவில்லை. எனவே இந்த மருந்து சரியில்லை என்று முடிவெடுத்தால் அது தவறான முடிவு என்று கூறுவோம்.

மருந்தில் எந்தக் கோளாறும் இல்லை. அற்புதமான மருந்து என்றாலும் அதைக் குடித்தால் தானே குணம் கிடைக்கும். அதைக் குடிக்காவிட்டால் நோய் எப்படிக் குணமாகும்? இப்படிப்பட்ட மூடனைப் பார்த்தால் அவனைக் குறை சொல்லலாம். மருந்தை எப்படிக் குறை கூற முடியும்?

உண்மை முஸ்லிமாக வாழ்வோம்

முஸ்லிம் அல்லாத மக்கள் கேட்கும் இந்தக் கேள்வியை முஸ்லிம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இஸ்லாத்திற்குப் புறம்பான நம்முடைய நடவடிக்கைகளால் இஸ்லாத்திற்கே கெட்ட பெயர் ஏற்படுகின்றது. பலர் இஸ்லாத்திற்கு வராமல் இருப்பதற்கு இதுவே காரணமாகவும் இருக்கின்றது. இதற்குக் கண்டிப்பாக நாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இஸ்லாத்தைப் பற்றி படித்துத் தெரிபவர்களை விட, முஸ்லிம்களைப் பார்த்து அதிலிருந்து இஸ்லாத்தை அறிபவர்கள் தான் அதிகமாக உள்ளனர். முஸ்லிம் பெயர் தாங்கிகளைப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் இஸ்லாத்திற்கு வருவதில்லை. உண்மையான முஸ்லிமைக் காண்பவர்கள் தங்களை இஸ்லாத்திற்குள் உடனே இணைத்துக் கொள்கின்றனர்.

இன்று கிறிஸ்தவர்கள் தங்களின் வழிகெட்ட கொள்கையைப் பரப்புவதற்கு மேற்கொள்ளும் முயற்சியில் நூறில் ஒரு பங்கு கூட நாம் முயற்சி செய்யவில்லை. எனினும் அல்லாஹ் தூய இஸ்லாத்தை மட்டுமே உலகில் அதிவேகமாகப் பரவும் சத்தியக் கொள்கையாக ஆக்கியுள்ளான்.

இத்துடன் நாம் உண்மை முஸ்லிமாக வாழ்ந்து காட்டினால் நாம் வாழும் இந்தியா கூட இஸ்லாமிய நாடாக மாறிவிடும். இது ஆச்சரியப்படும் விஷயமல்ல. 1400 வருட கால இடைவெளியில் இன்றைக்கு உலகில் 72 நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக உள்ளன.

நாம் அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தால் இன்னும் பல நாடுகள் இஸ்லாத்தை தழுவும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி.

அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.

அல்குர்ஆன் (24:55)

எனவே உண்மை முஸ்லிமாக வாழ்வோம்; ஈருலகிலும் வெற்றி பெறுவோம்.

குடும்பவியல்                                     தொடர்: 7

ஒழுக்க வாழ்வும் உயர்ந்த கூலியும்

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்கிற இந்தத் தொடரில், குடும்ப அமைப்பைச் சிதைக்கக் கூடிய ஒழுக்கக் கேடுகளிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும் என்பதன் ஒரு பகுதியைப் பார்த்தோம்.

கணவன், மனைவி என்ற உறவின் மூலமே தவிர ஒரு ஆணோ, பெண்ணோ தன் உடல் சுகத்தை அனுபவிக்கவே கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இப்படி யாரெல்லாம் குடும்பத்திற்கு விசுவாசமாக, ஒழுக்கமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் பல அந்தஸ்துகளைப் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக நபியவர்கள் முன்னொரு காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நமக்கு சுட்டிக் காட்டுகிறார்கள். மூன்று நபர்கள் பிரயாணம் செய்வது பற்றிய செய்தியாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில்) மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்த போது (திடீரென்று) மழை பிடித்துக் கொண்டது. ஆகவே, அவர்கள் (ஒதுங்குவதற்காக) ஒரு மலைக் குகையை நோக்கிப் போனார்கள். (அவர்கள் உள்ளே நுழைந்த) உடனே மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை அவர்களது குகை வாசலை அடைத்துக் கொண்டது. (வெளியேற முடியாமல் திணறிய) அவர்கள் அப்போது தமக்குள், "நாம் (மற்றவர்களின் திருப்திக்காக இன்றி) அல்லாஹ்வுக்காகச் செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை முன் வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இதனை அகற்றிவிடக்கூடும்'' என்று பேசிக் கொண்டனர்.

எனவே, அவர்களில் ஒருவர் இவ்விதம் (இறைவனிடம்) வேண்டினார்:

இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். எனக்குச் சிறு குழந்தைகளும் உண்டு. நான் இவர்களைப் பராமரிப்பதற்காக ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். மாலையில் அவர்களிடம் நான் திரும்பி வந்தபின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டு வந்து, என் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன்பாக என் தாய் தந்தையருக்கு முதலில் ஊட்டுவேன். (ஒரு நாள்) இலைதழைகளைத் தேடியபடி வெகுதூரம் சென்று விட்டேன். அதனால் அந்திப் பொழுதிலேயே (வீட்டுக்கு) வர முடிந்தது. அப்போது (என் தாய் தந்தை) இருவரும் உறங்கிவிட்டிருக்கக் கண்டேன். உடனே எப்போதும் போல பால் கறந்து, பால் செம்புடன் வந்தேன். பெற்றோரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிட மனமில்லாமல் அவர்கள் இருவருடைய தலைமாட்டில் நின்றுகொண்டேன். அவர்கள் இருவருக்கும் முன் குழந்தைகளுக்கு முதலில் ஊட்டுவதையும் நான் விரும்பவில்லை. என் குழந்தைகளோ எனது காலருகில் (பசியால்) கதறிக் கொண்டிருந்தனர். இதே நிலையில் நானும் அவர்களும் இருக்க, வைகறை வந்துவிட்டது. (இறைவா!) நான் இச்செயலை உனது திருப்தியை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால் எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்திடுவாயாக! அதன் வழியாக நாங்கள் ஆகாயத்தைப்  பார்த்துக் கொள்வோம்.

அவ்வாறே அல்லாஹ் அவர்களுக்குச் சற்றே நகர்த்திக் கொடுத்தான். அதன் வழியாக அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தார்கள்.

இரண்டாமவர் (பின்வருமாறு) வேண்டினார்:

இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய புதல்வி ஒருத்தி இருந்தாள். பெண்களை ஆண்கள் நேசிப்பதிலேயே மிகவும் ஆழமாக அவளை நான் நேசித்தேன். (ஒரு நாள்) அவளிடம் அவளைக் கேட்டேன். நான் அவளிடம் நூறு பொற்காசுகள் கொண்டு வந்தால் தவிர (எனக்கு இணங்க முடியாதென) அவள் மறுத்து விட்டாள். நான் முயற்சி செய்து, (அந்த) நூறு பொற்காசுகளைச் சேகரித்தேன். நான் அதனுடன் சென்று அவளைச் சந்தித்து, அவளுடைய இரு கால்களுக்கிடையே அமர்ந்த போது அவள் "அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! முத்திரையை அதற்குரிய உரிமை(யான திருமணம்) இன்றித்  திறக்காதே'' என்று சொன்னாள். உடனே நான் அவளை விட்டுவிட்டு எழுந்துவிட்டேன். (இறைவா!) இதை உன் திருப்தியைப் பெற விரும்பியே நான் செய்ததாக நீ கருதினால், இந்தப் பாறையை எங்களுக்காக (இன்னும் சற்று) நகர்த்திடுவாயாக!

அவ்வாறே (அல்லாஹ்) அவர்களுக்கு சற்றே நகர்த்திக் கொடுத்தான்.

மற்றொருவர் (பின்வருமாறு) வேண்டினார்:

இறைவா! நான் ஒரு "ஃபரக்' அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்து கூலியாள் ஒருவரை (பணிக்கு) அமர்த்தினேன். அவர் தமது வேலை முடிந்தவுடன், "என்னுடைய உரிமையை(கூலியை)க் கொடு'' என்று கேட்டார். நான் (நிர்ணயித்தபடி) அவரது உரிமையை (கூலியை) அவர் முன் வைத்தேன். அதை அவர் பெற்றுக் கொள்ளாமல் (என்னிடமே) விட்டுவிட்(டுச் சென்று விட்)டார். பின்னர் நான் அதை (நிலத்தில் விதைத்து) தொடர்ந்து விவசாயம் செய்து வந்தேன். அதி(ல் கிடைத்த வருவாயி)லிருந்து பல மாடுகளையும் அவற்றுக்கான இடையர்களையும் நான் சேகரித்து விட்டேன். பின்னர் (ஒருநாள்) அவர் என்னிடம் வந்து, "அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! எனக்கு அநியாயம் புரியாதே! எனது உரிமையை என்னிடம் கொடுத்துவிடு'' என்று கூறினார்.

அதற்கு நான், "அந்த மாடுகளிடத்திலும் அவற்றின் இடையர்களிடத்திலும் நீ செல்! (அவை உனக்கே உரியவை)'' என்று சொன்னேன். அதற்கு அம்மனிதர், "அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! என்னைப் பரிகாசம் செய்யாதே!'' என்று சொன்னார். நான், "உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. இந்த மாடுகளையும் இடையர்களையும் நீயே எடுத்துக்கொள்'' என்று சொன்னேன். அவர் அவற்றைப் பிடித்தபடி நடந்தார். (இறைவா!) நான் இந்த(நற்) செயலை உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதியிருந்தால் மீதமுள்ள அடைப்பையும் நீ அகற்றிடுவாயாக!

அவ்வாறே அல்லாஹ் அப்பாறையை அவர்களைவிட்டு (முழுமையாக) அகற்றிவிட்டான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி),

நூல்: புகாரி 2215, 2272, 2233, 3465

இந்தச் சம்பவத்தில் கூறப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் இறைவனுக்குப் பயந்து செய்யப்பட்டவையாக உள்ளன. அல்லாஹ்வுக்குப் பயந்து தீய செயல்களிலிருந்து நாம் விலகினால், மறுமையிலும், இம்மையிலும் நன்மை தான். அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும் என்பது மறுமையில் கிடைக்கும் நன்மையாகும். இந்த உலகத்திலும் நமது துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

நமக்கு இவ்வுலகில் எவ்வளவோ நெருக்கடிகள் இருக்கின்றன. சிலருக்கு அது பொருளாதாரத் தேவையாக இருக்கலாம். சிலருக்கு அது வாரிசு தேவையாக இருக்கலாம். பதவித் தேவையாகவோ, படிப்புத் தேவையாகவே இருக்கலாம். இப்படி ஒவ்வொருவருக்கும் பல தேவைகளும் நிர்ப்பந்தங்களும் நெருக்கடிகளும் இருக்கத்தான் செய்கின்றன. நாமும் இவற்றைப் பூர்த்தி செய்வதற்காகப் பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் பல நேரங்களில் நமது பிரார்த்தனைகள் பூர்த்தியடைவதாக நமக்குத் தெரியவில்லை. நம் வாழ்விலும் இதுபோன்று இறைவனுக்காகவே செயல்பட்டால் நிச்சயமாக நமக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகள் பஞ்சாய் பறந்து போக வாய்ப்பு நிறையவே இருக்கின்றது.

ஒரு தடவை அல்லாஹ்வுக்காகச் செய்த காரியத்தினால் மரணம் ஏற்படுகிற அளவுக்குள்ள நெருக்கடியிலிருந்து காப்பாற்றப்படுவது மிகப் பெரிய அதிசயம் தான். இப்படியெல்லாம் நடப்பதற்குச் சாத்தியமே இல்லை என்று தான் நமது அறிவு சொல்லும். ஆனால் இறைவன் தனது அற்புதத்தைக்  நடத்திக் காட்டுவான். 

எனவே அல்லாஹ்வுக்காக ஒழுக்கமாக வாழ்ந்தால், நமது ஒழுக்க வாழ்க்கையைச் சொல்லியே நமது தேவைகளைப் பூர்த்தியாக்குமாறு அல்லாஹ்விடம் கேட்கலாம்.  "யா அல்லாஹ்! நான் இன்னாருக்குத் தர்மம் செய்தேன். இன்னாருக்குப் பொருள் உதவி செய்தேன். அதனால் எனக்கு இதைத் தா!' என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்.

அதுபோன்றே, "யா அல்லாஹ்! உனது அச்சத்தின் காரணமாக நான் திருமணத்தின் மூலமாகவே தவிர எந்த வகையிலும் தவறான பாலியல் உறவு வைத்துக் கொள்ளவில்லை. எனவே அதன் காரணத்தினால் எனது இந்தத் தேவையை நிறைவேற்று' என்று அல்லாஹ்விடம் கேட்பவர்களாக மாற வேண்டும். அதுபோன்ற தகுதிகளை நாம் வளர்த்துக் கொண்டால் இவ்வுலகில் நமக்கும் இறைவனின் அருள் அறியாப் புறத்திலிருந்து கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தச் செய்தியில் மூன்று நபர்களின் நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. அதில் இருவரின் பொதுவான பண்புகளில் எந்தக் குறையையும் காண முடியவில்லை. அவ்விருவரும் நல்லவர்களாகவே வாழ்ந்துள்ளனர்.

ஆனால் பெண்ணுடன் தவறாக நடக்க வேண்டும் என்று செயல்பட்டவரின் நிலையைப் பார்த்தால், தவறான முறையில் பாலியல் சுகத்தை அனுபவிப்பதற்காக நீண்ட நாட்கள் கஷ்டப்பட்டு காசு பணத்தைச் சேர்த்து வைத்து, அதே கெட்ட மனநிலையில் வாழ்ந்தவராகத் தான் பார்க்கிறோம். அப்படியிருந்தும் அவரிடத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள் என்று சொன்னதும் தவறு செய்யாமல் தன்னைத் தடுத்துக் கொண்டதால் அல்லாஹ் கொடுத்த அருள் தான், மரணத்திலிருந்து இவர்கள் பாதுகாக்கப்பட்ட செய்தியாகும்.

எனவே கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டு, இனி வரும் காலங்களிலாவது இல்லற சுகத்தை அனுபவிக்கும் விஷயத்தில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கணவன் மனைவி என்ற அடிப்படையில் மட்டும்தான் சுகம் அனுபவிக்க வேண்டும் என்ற தெளிவுடையவர்களாகவும் இறையச்சம் மிக்கவர்களாகவும் வாழ வேண்டும். அப்படி வாழக் கற்றுக் கொண்டால் நிச்சயம் அல்லாஹ்வின் உதவி நமக்குக் கிடைக்கும்.

நபியவர்கள் ஒழுக்கமாக வாழ்வதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்கின்ற ஆண்களிடமும் பெண்களிடமும் உறுதிமொழிகளை வாங்குவார்கள். அதில் இஸ்லாத்தின் அனைத்துக் கடமைகளையும் சொல்ல மாட்டார்கள். ஒரே நேரத்தில் அனைத்தையும் சொல்லவும் முடியாது. எனவே ஏகத்துவக் கலிமாவைச் சொல்லிக் கொடுப்பதுடன் சில முக்கியக் கடமைகளைச் செய்வதற்கும் சில முக்கிய தீமைகளைச் செய்யாமல் இருப்பதற்கும் உறுதி மொழி வாங்குவார்கள்.

பத்ருப் போரில் கலந்து கொண்டவரும், இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, "அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்து கொண்டுவரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறுசெய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலக வாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்'' என்ற சொன்னார்கள். உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),

நூல்: புகாரி 18

இதில் சொல்லப்பட்ட உறுதி மொழியில் விபச்சாரம் செய்யக் கூடாது என்பதைக் குறிப்பிடுகிறார்கள். தொழுகை, நோன்பு, ஸகாத் போன்று இன்னும் எத்தனையோ பல சிறந்த வணக்க வழிபாடுகள் பற்றி உறுதி மொழியில் கேட்காமல் மிகவும் முக்கியமானதை மாத்திரம் இஸ்லாத்திற்கு வருபவர்களிடம் உறுதிமொழியாக வாங்கிக் கொள்வார்கள் நபியவர்கள். எனவே இவ்வுலகில் ஒழுக்கமாக நடப்பது அல்லாஹ்விடத்தில் உறுதிமொழி எடுக்கின்ற அளவுக்கு முக்கியமானதாகும்.

(குறிப்பு: இந்தச் செய்தியை வைத்து நாமும் நமது இயக்கத் தலைவர்கள் அல்லது ஜமாஅத் நிர்வாகத்தினரிடம் பைஅத் (வாக்குறுதி பிரமாணம்) செய்யலாம் என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் பைஅத் சம்பந்தமாக வருகிற வசனங்களில் நபியவர்களிடத்தில் செய்கிற உறுதிமொழி அல்லாஹ்விடம் செய்கிற பைஅத் என்றுள்ளது. எனவே இது நபிக்கு மட்டும் பிரத்தியேகமானது என்று புரிந்து கொள்ள வேண்டும்.)

ஒழுக்கக்கேடான செயல்கள், விபச்சாரம், ஆபாசங்கள், அருவருக்கத்தக்க செயல்களைப் பற்றி திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கண்டித்துக் கூறுகிறான்.

வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்!

 (அல்குர்ஆன் 6:151)

இஸ்லாத்தைப் பொறுத்த வரை, அசிங்கமான காரியத்தைச் செய்யாதே என்று மட்டும் சொல்லவில்லை. அதன் பக்கம் கூட நெருங்கக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். விபச்சாரம் செய்வது என்பது வெளிப்படையாக உள்ளது. அதற்குத் தகுந்தவாறு பேச்சுக்களைப் பேசுவது, கணவன் மனைவியல்லாத அந்நிய ஆண், பெண்கள் உடலுறவு பற்றிய செய்திகளைப் பரிமாறுவது போன்றவை அந்தரங்கமானது. இதுபோன்ற காரியங்களிலும் நெருங்கக் கூடாது என்று தான் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

படத்தை வணங்கும் பரேலவிகள்

நபி (ஸல்) அவர்களின் கப்ரு என்ற பெயரில் ஒரு புகைப்படத்தை பரேலவிகள் புனிதமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்.

இது குறித்து லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் அளித்த ஃபத்வா இதோ:

பெறுதல்:

       முதல்வர் முஃப்தி ஹள்ரத் அவர்கள்

       ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி, லால்பேட்டை

கேள்வி:

கண்ணியமிகு முஃப்தி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்களூரில் சமீப காலமாக பொது இடங்களிலும் வீடுகளிலும் நமது பெருமானார் (ஸல்) அவர்களின் முபாரக்கான கப்ருடைய புகைப்படம் என்று ஒரு புகைப்படம் வைக்கப்படுகின்றது. புனிதமிகு புகாரி ஷரீப் மஜ்லிஸிலும் இப்படம் மாட்டப்பட்டு பச்சைக் குழல் விளக்கு பொருத்தப்படுகின்றது. இது உண்மையிலேயே நம் பெருமானாரின் கப்ருடைய படம் தானா? என்பதை ஆய்வு செய்வதற்காக எங்கள் முஹல்லாவைச் சேர்ந்த உலமாக்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் மேற்படி புகைப்படம் அருமைப் பெருமானாரின் கப்ருடைய புகைப்படம் என்பது தான் என்பதற்கு ஆதாரம் எதுவும் உள்ளதா? என நாங்கள் கேட்ட கேள்விக்கு புகைப்பட ஆதரவாளர்கள் சரியான பதிலும் சொல்லவில்லை. ஆதாரமும் காட்டவில்லை. உண்மையில் அது பெருமானாரின் கப்ருடைய படமாக இருந்தாலும் அதற்கு ஒளிவிளக்கு பொருத்தி வைப்பது ஆகுமா? மேலே குறிப்பிட்ட புகைப்படம் பெருமானாரின் முபாரக்கான கப்ருடைய படம் தானே? மேலே கண்ட கேள்விக்கு மார்க்க ரீதியாக ஃபத்வா வழங்கும்படியாக அன்புடன் வேண்டுகிறோம். வல்ல ரஹ்மான் என்றும் தூய்மையான நேர்மையான வழியில் செல்வதற்கு அருள்புரிவானாக!

இங்ஙனம்: மௌலவி அல்ஹாஜ் முஹம்மது பாரூக் ஆலிம், அல்ஹாஜ் ஷெய்கு முஹம்மது ஸாலிஹ் ஆலிம், மௌலவி அல்ஹாஜ் பாஸில் அஷ்ரப் ஆலிம், பேராசிரியர்கள் மற்றும் இமாம்கள், காயல்பட்டிணம்

பதில்:

நபியுடைய கப்ரு எப்படி இருந்தது என்பதற்கு அபூதாவூதுடைய ஹதீஸ் ஆதாரமாகும். புகைப்படத்தில் உள்ள கப்ரின் தோற்றம் நபியுடைய கப்ராக இருப்பதற்கு சாத்தியக்கூறு அறவே இல்லை. மௌலானா ஜலாலுத்தீன் ரூமியின் கப்ரை புகைப்படம் எடுத்து நபியின் கப்ராக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் வலைத்தளங்களில் காணக் கிடைக்கின்றன.

இப்போதும் கூட நபியின் கப்ரும், இரு தோழர்களின் கப்ருகளும் பூமி மட்டத்திலிருந்து சில அங்குலங்கள் மட்டுமே உயரமாக மேல்புறத்தில் சிகப்பு நிற மண்ணுடன் இருப்பதாக வரலாற்று கிதாபுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

சில முஸ்தஹப்பாக்களையும், ஆகுமான விஷயங்களையும் கூட பித்அத் பட்டியலில் ஆக்கி, அறவே இடம் தராத சவூதி அரசு, ஹதீசுக்கு மாற்றமாக நபியின் கப்ரு இருப்பதற்கு அறவே இடம் தராது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவைகளுக்கும் அப்பால் ஒருக்கால் அது கப்ரின் தோற்றமாக இருந்தாலும் அந்தப் புகைப்படத்திற்கு விஷேச விளக்குகள் பொருத்துவதும் மற்றுமுள்ள சடங்குகள் செய்வதும் முற்றிலும் ஹராமாகும். இதுவே பின்பு சிலை வணக்கமாக ஆக அல்லது பூஜிக்கும் பொருளாக ஆகிவிட சாத்தியம் உண்டு. எனவே அதை அகற்றுவது அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்கள் மேனியில் இருந்த பொருட்கள் ஆதாரப்பூர்வமாகக் கிடைத்தால் மட்டும் வரம்பு மீறாமல் அதிலிருந்து பரகத் பெறுவது ஆகுமானதாகும்.

இது லால்பேட்டை மதரஸா கொடுத்த மார்க்கத் தீர்ப்பாகும். இந்த மார்க்கத் தீர்ப்பைப் பொறுத்த வரையில், அது அசத்தியத்தின் மண்டைக் கபாலத்தை உடைத்துக் கலக்கும் அளவுக்கு சம்மட்டி அடியாக விழவில்லை. மாறாக, அசத்தியத்தை மயிலிறகால் வருடிக் கொடுக்கின்றது. எனினும் இந்த அளவுக்கு லால்பேட்டை மதரஸா வந்ததைப் பாராட்டியே ஆக வேண்டும்.

ஆனால் பரேலவிகளால் இதைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த ஃபத்வாவுக்கு எதிராக பரேலவிகள் பாய்கின்ற பாய்ச்சலைப் பாருங்கள்.

மேலுள்ள கேள்வியைக் கேட்டிருப்பவர்கள் வஹ்ஹாபிசத்தை ஆதரிப்பவர்கள் என்று மிகத் தெளிவாக உணர முடிகின்றது. அதனால் தான் இந்தக் கேள்வியை வஹ்ஹாபிசத்தை ஆதரிக்கும் லால்பேட்டை மதரஸாவில் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் உண்மையை விளங்க வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் ஃபத்வா பெறுவதற்கு மிக உயர்ந்த இடமான அவர்கள் வசிக்கும் காயல்பட்டணத்திலுள்ள சுன்னத் வல் ஜமாஅத்தின் கோட்டை, தமிழகத்தின் மிகப் பழமையான அரபுக் கல்லூரிகளில் ஒன்றான மஹ்லரத்துல் காதிரிய்யா அரபுக் கல்லூரியில் இக்கேள்வியைக் கேட்டுத் தெளிவுபெற்றிருக்கலாம்.

எந்தக் கப்ரைப் பற்றி வினா எழுப்பப்பட்டுள்ளதோ அந்தக் கப்ரு அல்லாமா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் கப்ரு என்று கூறுவதற்கு தக்க ஆதாரம் எதுவும் எடுத்து வைக்கப்படவில்லை. நபி (ஸல்) அவர்களின் கப்ரை யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காக கப்ரைச் சுற்றிலும் மறைப்பு ஏற்படுத்தியுள்ளது இன்றைய வஹ்ஹாபிய அரசு. சவூது குடும்பம் ஹிஜாஸ் மாகாணத்தை ஆக்கிரமித்து ஒரு நூற்றாண்டு கூட முடிவடையவில்லை. அப்படியெனில் அவர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பு நபி (ஸல்) அவர்களின் கப்ரு எல்லோரும் பார்க்கும்படியாகத் தான் இருந்தது.

இக்காலத்தில் பல இடங்களிலும் படமாகக் காட்சிப்படும் அந்தக் கப்ரு நிழற்படம் கருவியின் மூலம் படம் பிடிக்கப்பட்டதன்று. மாறாக, அது வரையப்பட்டதாகும். பிற்காலத்தில் தொழில் நுட்பத்தால் நிழற்படம் எடுக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது என்பது உலகம் அறிந்த உண்மை. பொதுவாக மிகச் சிறந்த ஓவியர்கள் ஒரே ஒரு தடவை மட்டும் பார்த்தால் அவர்கள் தங்களின் மூளையில் பதிவேற்றம் செய்து கொண்டு அதை அப்படியே வரைந்து விடுவார்கள் என்பதை நாம் அறிவோம். அப்படித் தான் இப்படமும் நபி (ஸல்) அவர்களின் கப்ரை நேரில் பார்த்த ஒரு ஓவியர் வரைந்துள்ளார். பின்பு உலகெங்கும் அப்படம் பரவியுள்ளது. அப்படம் நபி (ஸல்) அவர்களின் கப்ருடைய படம் கிடையாது என்று உறுதியுடன் கூற ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைப்படி இறைத்தூதர்களின் கப்ரு படங்களையும் இறைநேசர்களின் கப்ரு படங்கûயும் மாட்டி வைப்பதில் தவறேதும் இல்லை. அந்தக் கப்ருக்கு மாலையிடுவதும், அல்லது ஊதுபத்தி கொளுத்தி வைப்பதும் அதை பூஜிப்பதும் முற்றிலும் ஹராமாகும் என்று தீர்ப்பு கொடுப்பதை கைவிடுத்து சவூதியை மேற்கோள் காட்டித் தங்களின் உண்மை நிலைபாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள் மதரஸா மன்பவுல் அன்வார் ஆசிரியர்கள்.

லால்பேட்டை மதரஸாவின் ஃபத்வாவை விமர்சித்து பரேலவிகள் தங்கள் பத்திரிகையில் எழுதியிருப்பது இது தான்.

பொதுவாக பரேலவிகள் சமாதிகளை வணங்குபவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் சமாதிகளின் புகைப்படத்தையும் வணங்கச் சொல்லும் பைத்தியங்கள் என்பதை இவர்களின் இந்த விமர்சனம் நமக்கு உணர்த்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய கப்ரு உட்பட அனைத்தையும் தகர்க்கச் சொல்கின்றார்கள். ஆனால் இந்தப் பரேலவிகள் கப்ருகளின் புகைப்படத்திற்காகக் கச்சை கட்டிக் கொண்டு கத்த ஆரம்பித்து விட்டார்கள்.

நல்ல வேளை! சவூதி அரசு நபி (ஸல்) அவர்களின் கப்ரைச் சுற்றி சுவர் கட்டி வைத்துள்ளது. இல்லையெனில் இவர்கள் அதிலிருந்து கல், மண்ணை எடுத்து வந்து இங்கொரு சிலையை எழுப்பி விடுவார்கள். பரேலவிகளின் இலட்சணம் எப்படியிருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ள அவர்களது இந்த விமர்சனம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?

                  தொடர்: 4

சூபிஸம் - ஓர் ஆய்வு

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

வழிகேடர்கள் இஹ்யா உலூமித்தீனைப் புகழ்ந்து தள்ளிய புகழ் மாலைகளை ஆய்வு செய்ய நாம் புகுந்தோமானால் அதற்காக அதிகமான பக்கங்களை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும். அது ஒரு கடினமான பணி மட்டுமல்லாது கால விரயமுமாகும்.

அசத்தியம் எப்போதும் அதிக அளவில் இருக்கும் என்றால் அதை நோக்கி வருவோரின் எண்ணிக்கை அதை விட அதிக அளவில் இருக்கும்.

மக்கள் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிபவர்களாக இருந்தால் இஸ்லாமிய உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் வலம் வருகின்ற இத்தகைய பித்அத் மற்றும் வழிகேடான நூல்களை அவர்கள் ஏறிட்டுக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் தற்கால அறிஞர்கள் இதுபோன்ற நூல்களிலிருந்து தங்கள் விளக்கங்களையும் மேற்கோள்கûயும் பெற்றுக் கொள்கின்றனர். அந்தக் காரியங்களைச் செய்யும் அவர்கள் தாங்கள் அழகிய செயல்கள் புரிவதாகவும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களில் யாரேனும் ஒருவரிடத்தில் இஹ்யா மற்றும் அதுபோன்ற நூல்களைப் பற்றிக் கேட்டால், உடனே அந்நூல்களுக்குப் புகழ்மாலைகள் சூட்டி அவற்றைத் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றனர். தற்கால நூலசிரியர்களில் அதிகமானோரை இந்த நிலையில் தான் நாம் காண முடிகின்றது.

"என் போன்றோரிடம் கூட இஹ்யாவைப் பற்றி மக்கள் வினவுகின்றார்கள்'' என்று இந்த சாரார் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இதற்கிடையே அந்த சாரார் சூபிஸ முகாமை விட்டும் சற்று தூரமானவர்கள். சூபிஸ முகாமில் உள்ளவர்களாக இருந்தால் இவர்களின் லட்சணம் நான் ஏற்கனவே கூறியது போன்று தான். இந்தச் சிறு நூலை இயற்றுவதற்கு இது தான் அடிப்படைக் காரணமாக அமைந்தது.

இஹ்யா ஆசிரியரின் இரு நிலைகள்

நேர்மையான, நியாயமான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் மக்கள் பார்த்துப் படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த நூலை ஆக்கியுள்ளேன். கஸ்ஸாலியைப் பற்றி நான் தன்னிச்சையாக எதையும் கூறவில்லை. ஏற்கனவே ஆலிம்கள் செய்த விமர்சனங்களைத் தான் நான் தொடர்ந்துள்ளேன்.

கஸ்ஸாலிக்கு இரு நிலைகள் உள்ளன. ஒன்று அவர் சூபிஸத்துடன் உழன்று, ஒன்றிணைந்த நிலை! மற்றொன்று சூபிஸத்தை விட்டு விலகி, வெளியேறி அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடி புகாரி, அபூதாவூத் போன்ற நூல்களைப் படித்து அதிலேயே ஆழ்ந்து ஐக்கியமான நிலை!

இந்த இரண்டாம் நிலையில் உள்ள கஸ்ஸாலிக்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்க வேண்டும்; அருள் பாலிக்க வேண்டும் என்று அவனிடம் மனம் உருகி, மன்றாடிப் பிரார்த்திக்கின்றோம்.

நாம் விமர்சிப்பதும் விளாசுவதும் முதல் நிலையில் உள்ள கஸ்ஸாலியைத் தான் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தான் எழுதிய நூல்களே கஸ்ஸாலிக்குக் கசக்க ஆரம்பித்து, அவற்றை அவர் வேதனையுடன் வெறுக்கத் தலைப்பட்டார் என்பதற்கு ஒருசில சான்றுகளைத் தருகின்றேன்.

அல் அகீதத்துல் அஸ்ஃபஹானிய்யா என்ற நூலில் ஷைகு இப்னு தைமிய்யா அவர்கள் கூறியதாவது:

மார்க்கத்தில் சில விஷயங்கள் எவ்வித மாற்று விளக்கமும் இல்லாமல் நேரடியாக எளிதில் விளங்கி விடும். சில விஷயங்களை நேரடியாக விளங்க முடியாது. அதற்கு மாற்று விளக்கங்கள் தேவைப்படும். இது தொடர்பாகக் கஸ்ஸாலி கொடுக்கும் விளக்கத்தைப் பார்ப்போம்.

"இத்தகைய விஷயங்கள் அல்லாஹ்வின் தனி உதவியைக் கொண்டே தவிர ஒரு மகானுக்குப் புலனாகாது. அவர் அந்த விஷயத்தை உள்ளது உள்ளபடிக் காணுகின்றார். இவ்வாறு கண்டுவிட்டு அது தொடர்பாக செவி வழியாக இந்தச் செய்தியையும், அதன் வாசகங்களையும் ஆய்வு செய்கின்றார். உள்ளது உள்ளபடியாக, தான் கண்டதற்கு அது ஒத்திருந்தால் அதை ஏற்றுக் கொள்கின்றார். இல்லையேல் அதற்கு மாற்று விளக்கம் கொடுக்கின்றார்.

இது கஸ்ஸாலி கொடுக்கின்ற விளக்கமாகும். இதுபோன்று வேறு சிலரும் கூறியிருக்கின்றார்கள்.

இம்ரானின் மகனான மூஸா நபி, அல்லாஹ்வின் பேச்சைச் செவியுற்றது போன்று அவ்லியாக்களில் ஒருவர் செவியுற்றிருக்கின்றார் என்றும் கஸ்ஸாலி வேறொரு இடத்தில் குறிப்பிடுகின்றார்.

புகாரி, முஸ்லிமில் புகுந்த கஸ்ஸாலி

இவ்வாறு கூறிக் கொண்டிருந்த கஸ்ஸாலிக்கு அவரது வாழ்நாளின் கடைசியில் இந்த சூபிஸம் தனக்குக் கை கொடுக்காது என்ற உண்மை புலப்பட்டதும், பூரணமாகத் தெரிந்ததும் அதிலிருந்து முற்றிலும் மாறி நபிவழியில் நேர்வழியைத் தேட முயன்று புகாரி, முஸ்லிம் போன்ற நூல்களைப் படிக்கத் துவங்கி விட்டார்.

தான் எழுதிய நூல்களில் மக்கள் வெறுத்த விஷயங்களை தானும் வெறுத்து ஒதுக்கினார்.

இது இப்னு தைமிய்யா அவர்கள் அல்அகீதத்துல் அஸ்ஃபஹானிய்யாவில் கூறியுள்ள கருத்தாகும்.

"இறையியல், தத்துவயியல் போன்ற தர்க்கக் கலையினரின் வாதங்களைப் பார்த்து விட்டு வணக்கம், பயிற்சி, துறவு என்ற பாதைகளில் பயணம் சென்ற கஸ்ஸாலி, தன் வாழ்நாள் கடைசியில் ஒருவிதமான தடுமாற்றத்திற்கு உள்ளானார். அவர் தன் வாழ்நாளின் கடைசியில் புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் ஈடுபடலானார்'' என்று இப்னு தைமிய்யா, மின்ஹாஜுஸ் ஸுன்னாவில் தெரிவிக்கின்றார்.

பல்வேறு நூலாசிரியர்களால் பொறாமை கொள்ளப்படுபவர் என்று கருதப்படக்கூடியவரும், மிஷ்காத்துல் அன்வார் என்ற நூலின் ஆசிரியருமான கஸ்ஸாலியின் உரையில் இதுபோன்ற கருத்து இடம்பெற்றிருக்கின்றது. அவர் வேறு சில இடங்களில் இந்த சூபிஸப் பேர்வழிகளை இறை மறுப்பாளர்கள் என்று சாடியும் உள்ளார். அந்த சூபிஸக் கருத்திலிருந்து திரும்பி, புகாரி முஸ்லிம் போன்ற நூல்களை ஆய்வு செய்யும் பணியில் முழுமையாகக் களம் இறங்கி விட்டார் என்றும் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா மீண்டும் கூறுகின்றார்.

கஸ்ஸாலியின் வரலாற்று ஆசிரியர்கள் பலரும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் ஹதீஸ் நூற்களின்பால் தனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்து விட்டார் என்று அவர்கள் ஊர்ஜிதம் செய்கின்றனர்.

தான் எழுதிய நூற்களிலிருந்து கஸ்ஸாலியே தனது பாதையையும் பயணத்தையும் ஹதீஸ் நூற்களை நோக்கித் திருப்பி விட்ட பிறகு தற்கால அறிஞர்கள் கஸ்ஸாலியின் நூற்களை ஏன் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்? அவற்றை ஏன் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்?

பாதை மாறாத பக்தர்கள்

இந்த நவீன அறிஞர்கள் கஸ்ஸாலியைப் போன்று பாதை மாறி, புகாரி, முஸ்லிம், இதர ஹதீஸ் நூற்கள், முன்னோர்களின் குர்ஆன் விளக்கவுரைகள், சரியான கொள்கை நூல்கள், பயனுள்ள கல்வி தொடர்பான நூல்கள் போன்றவற்றைப் படிக்குமாறு மக்களிடம் அறிவுரை கூற வேண்டாமா?

பொய், புனை சுருட்டுதல், தத்துவவியல், இறையியல் போன்ற காலத்தையும் நேரத்தையும் கண்ணியமிக்க மார்க்கத்தையும் வீணாக்குகின்ற நூல்களைப் படிக்க வேண்டாம் என்று மக்களுக்கு இவர்கள் எச்சரிக்கை செய்ய வேண்டமா?

இவ்வாறு அறிவுரை செய்து எச்சரித்தால் தானே கஸ்ஸாலிக்கு ஏற்பட்ட கால விரயம் இந்த மக்களுக்கும் ஏற்படாமல் அவர்களையும் அவர்களது மார்க்கத்தையும், அவர்களின் ஆயுளையும் காக்க முடியும்.

சமுதாயத்தையே வழிகேட்டில் நிரப்பி விட்டுப் பின்னர் அதை விட்டு நேர்வழியின் பக்கம் கஸ்ஸாலி திரும்பியுள்ளார்.

நீண்ட நாட்களை வீணாகக் கழித்துவிட்ட கஸ்ஸாலியிடமிருந்தும் இன்னும் அவர்களைப் போன்றோரிடமிருந்தும் இத்தகையோர் பாடமும் படிப்பினையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்விடமிருந்து பெற்ற தண்டனையாக நாற்பதாண்டுகள் ஊர் தடை செய்யப்பட்டு, தட்டழிந்து, நாடோடிகளாகத் திரிந்த பனூ இஸ்ரவேலர்கள் போன்று தான் இவர்களின் நிலை அமைந்துள்ளது.

தூதுச் செய்திக்கும் அதன் விளக்கத்திற்கும் எதிராகப் பிடிவாதத்துடன் செயல்பட்டதால் தான் பனூ இஸ்ரவேலர்கள் இந்தத் தண்டனையை அனுபவித்தனர்.

தூதுச் செய்தியைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் இன்றைய உலமாக்களுக்கும் பனூ இஸ்ரவேலர்களின் கதி தான் ஏற்படும். கஸ்ஸாலி ஆரம்பத்தில் தட்டழிந்தது போன்று அவர்களும் தட்டழிய வேண்டியது தான்.

அல்லாஹ் மட்டும் அவரை தனது அன்பால் அரவணைக்கவில்லை என்றால் மரணம் வரும் வரை இப்படியே நீடித்திருப்பார். அவரது நல்லெண்ணம், நல்ல நோக்கம் அவர் இந்த நன்மையை அடைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் அல்லாஹ் அவரை அரவணைத்து விட்டான். இதனால் அவர் தவ்பா செய்து திருந்தி, தான் எழுதிய வழிகேட்டை வெறுத்திருக்கின்றார். ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இதை உணரவில்லை. அவர்கள் கண்மூடித்தனமாகவும் குருட்டுத்தனமாகவும் அவர் எழுதிய நூல்கள் மீது வீழ்ந்து கிடக்கின்றனர் என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.

இவற்றில் உள்ள தவறுகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகின்றனர். அவற்றில் உள்ள வழிகேடுகள், இறை மறுப்புகளுக்கு மாற்று விளக்கங்கள் கொடுக்கின்றனர்.

சாக்குப்போக்குகளும் சப்பைக்கட்டுகளும்

அல்லாஹ்வுடைய வேதமான குர்ஆன், அவனுடைய தூதரின் வழிமுறையில் சரியான நேரிய பாதையில் பிடிமானம் கொண்ட எவராலும் எள்ளளவும் ஏற்றுக் கொள்ள முடியாத சாக்குப்போக்குகளையும் காரணங்களையும் இந்த ஆசாமிகள் கஸ்ஸாலியின் நூல்களுக்கு ஆதரவாக முன்வைக்கின்றனர்.

இஹ்யா உலூமித்தீனை எரிக்க வேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டது நிச்சயமாக அரசியல் நோக்கம் தான் என்று மக்கள் பேசிக் கொண்டனர். பல்வேறு ஏடுகளும் இந்தக் கருத்தைப் பிரதிபலித்தன.

கொள்கை அடிப்படையிலான இந்த நூலை நான் எழுதுவதற்கு மேற்கண்ட தவறான பிரச்சாரமும் ஒரு காரணமாகும்.

முஸ்லிம்கள் எப்போதும் கவனக்குறைவிலும், வழிகேட்டிலும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்ற, ஆர்வம் காட்டுகின்ற ஏமாற்றுப் பேர்வழிகள், கிழக்கத்திய சிந்தனையாளர்கள் மற்றும் அவர்களது எடுபிடிகளின் ஏமாற்று வித்தை தான் இந்தத் தவறான பிரச்சாரம் என்பதை நான் எழுதிய இந்த நூலைப் படிப்பவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

இந்நூலை எழுத இன்றியமையாத காரணம்

இஹ்யா உலூமித்தீனையும் அதுபோன்ற வழிகேடு நிறைந்த ஒவ்வொரு நூலையும் எரிப்பதற்கு நான்கு முக்கியக் காரணங்கள் உள்ளன. அவை வருமாறு:

முதல் காரணம்:

நபி (ஸல்) அவர்கள் மீதும், நன்மையில் அவர்களைப் பின்பற்றிய நபித்தோழர்கள் மீதும், தாபியீன்கள் மீதும் பொய் சொல்லுதல்.

இரண்டாவது காரணம்:

சூஃபிகளிடமும் மற்றவர்களிடமும் பரவியிருக்கின்ற ஒவ்வொரு பித்அத்துக்கும் அடிப்படையாகவும் ஆணிவேராகவும் இருப்பது இந்த இஹ்யா உலூமித்தீன் தான்.

மூன்றாவது காரணம்:

அந்நூலில் உள்ள கொள்கை ரீதியிலான பெரும் வழிகேடுகளும் பேரழிவு மிக்க அசத்தியக் கருத்துக்களும்.

நான்காவது காரணம்:

இஹ்யா ஒரு வழிகேட்டு நூல். முஸ்லிம்கள் அதன் மூலமாக வழிகெட்டு விடக்கூடாது என்பதற்காக வேண்டி அதை முஸ்லிம்களை விட்டு அகற்றுவதும் அதைத் தீயிலிட்டுப் பொசுக்குவதும் காலத்தின் கட்டாயமாகும்.

முன்னுரை

சூபிஸம்...

இது இஸ்லாத்தில் புகுந்துவிட்ட ஒரு புதிய கலாச்சாரமாகும். அதன் அடிப்படை நோக்கமே இஸ்லாமிய அமைப்பைத் தாக்கி, தகர்க்க வேண்டும்; அதன் ஒருங்கிணைப்பையும் ஒன்றிணைப்பையும் உருக்குலைக்க வேண்டும்; இஸ்லாமிய அமைப்பின் ஆளுமையை அடித்து நொறுக்க வேண்டும்.

முஸ்லிம்களை என்றும் எழ முடியாத ஏமாற்றுப் பேர்வழிகளாக்க வேண்டும்.

படைப்பு மற்றும் படைப்பினத்தின் இயற்கைத் தன்மைகளைத் தலைகீழாக மாற்றி விடவேண்டும்.

மனித அறிவு, சிந்தனைகளை முற்றிலும் மழுங்கடிக்க வேண்டும்.

நீண்ட நெடிய காலமாக, தீமைக்கு எதிராக இதுவரை இஸ்லாமிய உலகம் சாத்தி வைத்திருந்த கதவடைப்பை தாமதமின்றி, தயக்கமின்றி திறந்து விடவேண்டும்.

இவை தான் சூபிஸம் என்ற இந்த அந்நியக் கொள்கையின் லட்சியமாகும்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது இஸ்லாத்திற்கு எதிராகப் பின்னப்பட்ட சதி வலை!

சூபிஸத்தின் வரலாற்றைத் தெரியாதவர்களை அதன் விபரீதத்தை அறியாதவர் என்று தான் கூற வேண்டும்.

நான் கஸ்ஸாலியின் இஹ்யாவை அக்குவேறு ஆணிவேறாக ஆய்வு செய்வதற்கு முன்னால், பிற மதத்திலிருந்து களவாடப்பட்ட இந்தக் கள்ளக் கலாச்சாரத்தின் நச்சுக்கருத்தை விவரிக்கும் விதமாக, முக்கியத்துவம் வாய்ந்த சில விஷயங்களை முதலில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன்.

முதல் ஆய்வு

சூபிஸம் என்ற பெயர் சூட்டலின் சூட்சுமம்

சூபிஸம் என்ற இந்த வார்த்தையே இஸ்லாமிய மார்க்கத்திற்கு மட்டுமல்ல, அரபிய மொழிக்கும் அந்நியமானது. இந்த வார்த்தையின் ஆணிவேரை அடைவதிலும் அடையாளம் காண்பதிலும் முன்னோர்களும் பின்னோர்களும் கருத்துவேறுபாடு கொள்கின்றனர். முரண்பட்ட இவர்களின் கருத்துக்களைப் படித்த பிறகு சூபிஸம் என்ற பெயர் சூட்டலுக்கு ஒரு பொருத்தமான விடையைக் காண முடியவில்லை. 

காரணம், இதற்கு மொழி என்ற அளவுகோலின்படி விளக்கம் காண முடியவில்லை. அதை அடுத்தது, அறிவு என்ற அளவுகோல். அதைக் கொண்டும் சூபிஸம் என்ற பெயருக்கான விடையைக் காண முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக மார்க்கம் என்ற அளவுகோல். அதைக் கொண்டும் விடை காண முடியவில்லை.

இது ஒருபுறமிருக்க, இன்னொரு புறத்தில் சூபிஸத்தின் காலம் எப்போது துவங்கியது என்று பார்க்கும் போது அதுவும் சூனியமாகவே இருக்கின்றது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

முன்சென்ற சமுதாயங்கள் அழிந்தது ஏன்?

எம்.முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி

மங்கலம்

நமக்கு முன்னால் வாழ்ந்து சென்ற சமுதாய மக்கள் சம்பந்தமான செய்திகளை திருமறையில் இறைவன் தெரிவித்திருக்கிறான். முன்சென்றவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி முழுமையாக இல்லாவிட்டாலும், அவர்களின் காரியங்களில் நமக்குப் படிப்பினையும் போதனையும் இருக்கின்ற சிலவற்றை விளக்கியுள்ளான்.

இதுபோன்று, முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் இறைச் செய்தியின் வாயிலாக முன்சென்ற சமுதாய மக்களைப் பற்றிய பல செய்திகளை நமக்குச் சொல்லியுள்ளார்கள். அவர்களில் அழிந்து போனவர்களைப் பற்றியும் அதற்கான காரணத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அழிந்தார்கள் என்று சொல்வது ஆளே இல்லாமல் மடிந்து போனார்கள் என்ற அர்த்தத்தில் இல்லை. மாறாக, சத்தியத்தை விட்டும் விலகி வழிதவறி சென்று வழிகேட்டிலே விழ்ந்து விட்டார்கள் என்ற பொருளில் எடுத்துரைத்துள்ளார்கள். இந்த விளக்கத்தை, கடந்த காலத்தில் வாழ்ந்து அழிந்து போனவர்களைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளின் மூலம் விளங்கலாம்,

இந்த வகையில், முன்சென்ற சமுதாயத்தில் இறைவனின் கோபத்திற்கு உள்ளானவர்கள், சத்தியத்தைப் புறக்கணித்தவர்கள், மார்க்கத்தைத்  தெரிந்த பிறகு வழிதவறிச் சென்றவர்கள் பற்றி நபியவர்கள் தெரிவித்த செய்திகள் நமது காரியங்களை சீர்திருத்தம் செய்து திருத்திக் கொள்வதற்குத் துணைபுரியும் என்பதால் அவற்றை இங்கு காண்போம்.

இறைத்தூதர்களுக்கு முரண்படுதல்

மார்க்கம் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் முஹம்மத் நபியவர்கள் நமக்குத் தெரிவித்து விட்டடார்கள். இவ்வாறு நபியின் போதனை வழிகாட்டுதல், விளக்கம் தெளிவாக இருக்கும் போது அதை அறிந்த பிறகும் அதற்கு எதிர்க் கருத்து கொண்டு கருத்து வேறுபாடு கொள்வது தவறான, மோசமான பண்பாகும். எந்தவொரு காரணத்திற்காகவும் எதற்காகவும் எவருக்காகவும் நமது சத்தியத்தூதரின் கருத்துக்கு எதிரான நிலைபாட்டை எடுக்கவே கூடாது என்று பின்வரும் செய்திகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

ஆதாரம்: புகாரி (7288)

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, "உங்களுக்கு முன்னிருந்தோர், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர்'' என்று சொன்னார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் (4818)

தங்களது தூதருடைய போதனைக்கு எதிரான கருத்தைக் கொண்டது முன்சென்ற மக்களை வழிகெடுத்துவிட்டது. இத்தகைய பண்பில் இருப்பவர்கள் வழிதவறிச் செல்வதை இன்றும் நாம் காணலாம். இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் போதித்த சட்டதிட்டங்கள் அறிவுரைகள் பட்டவர்த்தமாகத் தெளிவாக இருக்கும் போது அதற்கு மாற்றமாகச் சிலர் அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

நபிகளாருடைய சட்டதிட்டங்களுக்கு மாற்றமாக நபித்தோழர்கள், இமாம்கள் போன்ற முன்னோர்களின் சுய விளக்கத்திற்கும் கருத்துக்கும் முக்கியத்துவம் தருகிறார்கள். ஒற்றுமை, நடுநிலைமை என்று சொல்லிக் கொண்டு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் போதனைகளுக்கு எதிரான கருத்துகளை அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.

உள்ளங்கை நெல்லிக்கனி போல தூதரின் போதனைகள் தெளிவாக இருக்கும் போது மற்ற மற்ற காரணங்களுக்காக அவற்றிற்கு முரண்பாடாகச் சொல்வது, செய்வது, ஆதரிப்பது தவறான போக்காகும். இவ்வாறு தங்களுக்கு வந்த தூதருக்கு முரண்பாடாகச் செயல்படும் பண்பே முன்னோர்களை அழித்துவிட்டது.

தேவையில்லா கேள்வியைக் கேட்டல்

எந்தவொரு செய்தியையும் கேள்வி கேட்டு தெளிவு பெற்று கொள்வது தவறில்லை. மார்க்க விஷயமாக இருந்தாலும் உலக விஷயமாக இருந்தாலும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டறிந்து கொள்வது நல்லது. அதேசமயம், கேட்கப்படும் கேள்வி அவசியமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். தேவையில்லாமல் அறிவுக்குப் பொருத்தமற்ற வகையில் கேள்விகள் கேட்கும் பழக்கம் இருக்கவே கூடாது.

குறிப்பாக மார்க்கச் சட்டங்ளை அணுகுவதில் இந்தப் பண்பு இருக்கவே கூடாது. காரணம், முன்சென்ற சமுதாய மக்களை அழித்து நாசமாக்கிய கெட்ட பண்புகளுள் இந்தப் பண்பும் ஒன்று என்று பெருமானார் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் எதை(ச் செய்ய வேண்டாமென) உங்களுக்குத் தடை செய்துள்ளேனோ அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். நான் எதை(ச் செய்யுமாறு) உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளேனோ அதை உங்களால் இயன்ற வரை செய்யுங்கள். ஏனெனில், உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தம் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஆதாரம்: முஸ்லிம் (4702)

நபியவர்களின் வழிகாட்டுதல்கள் எவற்றிலும் தேவையின்றி கேள்வி கேட்பதை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும். ஆனால், மார்க்கத்தில் விளையாடும் மத்ஹபுகளிலே இவ்வாறான கேள்விகள் அதிகமாக இருப்பதை நாம் காணலாம். பகுத்தறிவுக்கு இடம் கொடுக்காத, பயனளிக்காத, சபையில் சொல்வதற்குத் தகாத கேள்விகளை எழுப்பி விடையளித்திருக்கும் வேடிக்கையும் கேவலத்தையும் மத்ஹபுகளில் நிறைந்து வழிவதைக் காணலாம்.

இதனாலேயே மத்ஹபுகளில் விழுந்தவர்கள் மாநபியின் போதனைக்கு மாறுசெய்யும் காரியங்களை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள். எனவே கேள்விகளை கேட்கும் முன்னர் யோசித்து செயல்பட வேண்டும். நோன்பு, தொழுகை, ஹஜ் போன்ற சட்டதிட்டங்களில் இப்படி அடுக்கடுக்கான அவசியமற்ற கேள்விக் கணைகளைத் தொடுக்கும் மக்களை இன்றும் காணலாம்.

மார்க்க வரம்புகளை மீறுதல்

இந்த உலகில் வாழும் போது நமக்கு அனுமதிக்கப்பட்டவை எவை? தடை செய்யப்பட்டவை எவை என்பதைக் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் காணலாம். அதுபோன்று எந்தவொரு மார்க்க விஷயத்தையும் எப்படிச் செய்ய வேண்டும்? எப்படிச் செய்யக் கூடாது? என்ற விளக்கமும் பரிபூரணமாக இருக்கின்றன.

இப்படியிருக்க, அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் என்ன சொன்னார்கள் என்று கடுகளவும் கண்டு கொள்ளாமல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற வகையில் கண்டபடி வாழ்பவர்களைப் பார்க்கிறோம். இந்தப் பண்பு அழிவில் தள்ளிவிடும் என்ற பயம் சிறிதும் இல்லாமல் சகட்டுமேனிக்கு செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பின்வரும் செய்தியைத் தெரிந்த பிறகாவது திருந்துவார்களா?

"மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

ஆதாரம்: இப்னுமாஜா (3020)

தனிமனித ஒழுங்குகள் முதல் சமுதாயச் செயல்பாடுகள் வரை அனைத்திலும் எப்படி இருக்க வேண்டும்? இருக்கக் கூடாது? என்ற நெறிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. அவ்வாறான சட்டதிட்டங்களை அறிந்து கொண்டதோடு அவற்றுக்கு அடிபணிந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அதிகமானோர் அவ்வாறு இருப்பதில்லை என்பது தான் வருத்தமான செய்தியாக இருக்கிறது.

பச்சை குத்துவது, அரைகுறை ஆடை அணிவது, பொய் பேசுவது, லஞ்சம் வாங்குவது, மது குடிப்பது, அடுத்தவர்களுக்கு அநீதி இழைப்பது, வட்டி, வரதட்சணை வங்குவது, அடுத்தவர்களுக்குரியதை அபகரிப்பது என்று வரம்பு மீறுவதை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டிருப்பவர்கள் பலரைப் பார்க்கிறோம். இதுபோன்ற வரம்புமீறும் காரியங்கள் மக்களை அழிவில் கொண்டுபோய் விட்டுள்ளது என்பதற்குப் பின்வரும் செய்தி சான்றாக இருக்கிறது.

ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் (மேடை) மிம்பரின் மீதிருந்தபடி, காவலர் ஒருவரின் கையிலிருந்த முடிக் கற்றை (சவுரிமுடி) ஒன்றை எடுத்து (கையில் வைத்துக் கொண்டு), "மதீனாவாசிகளே! உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே?'' என்று கேட்டு விட்டு,  "நபி (ஸல்) அவர்கள் இது போன்றதிலிருந்து (மக்களைத்) தடுப்பதையும், "பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்து போனதெல்லாம் இதை அவர்களுடைய பெண்கள் பயன்படுத்திய போது தான்' என்று சொல்வதையும் நான் செவியுற்றிருக்கிறேன்'' என்று சொன்னார்கள்.

ஆதாரம்: புகாரி (3468)

எந்த வகையிலும் மார்க்க விஷயத்தில் வரம்பு மீறுதல் நம்மிடம் இருக்கக் கூடாது. மார்க்கக் கருத்துகûளைக் கண்டு கொள்ளாமல் உதாசீனப்படுத்தி விட்டு வரம்பு மீறுபவர்கள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் பேணுதலாக இருக்கிறோம்; பயபக்தியோடு நடந்து கொள்கிறோம் என்று வரம்பு மீறுபவர்கள் இருக்கிறார்கள்.

பெண்கள் பர்தாவைப் பேணாமல் வரம்பு மீறக்கூடாது. அதேசமயம், பேணுதல் என்ற பெயரில் கால்பாதங்கள் மற்றும் முன்கைகளுக்கும் உறைகளை அணிய வேண்டும்; முகத்தை கண்டிப்பாக மறைக்க வேண்டும் என்று பர்தா விஷயத்தில் வரம்பு மீறுவதைப் பார்க்கிறோம்.

இன்னும் சிலர் தொழுகை, நோன்பு போன்ற மார்க்கக் கடமைகளில் இருக்கும் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளாமல் தங்களை சிரமத்திற்கு உள்ளாக்கிக் கொள்கிறார்கள். இந்த மாதிரி எந்த விதத்திலும் வரம்பு மீறக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் மனிதனுக்கு ஏற்ற சட்டதிட்டங்களைக் கொண்டிருக்கும் இந்த எளிமையான மார்க்கம் இத்தகையவர்களுக்கு, இன்னும் அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு காலப்போக்கில் கடுமையான, கொடுமை புரியும் மார்க்கம் போன்று தோற்றமளிக்கும் அபாயம் இருக்கிறது. இதைப் பெருமானாரின் பின்வரும் வரிகள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, (கூடுதலான வணக்கங்கள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; (கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஆதாரம்: புகாரி (39)

சட்டதிட்டங்களில் சமரசம் செய்தல்

சத்திய மார்க்கத்தின் சட்டதிட்டங்களை எப்போதும் விட்டுகொடுக்காமல், மற்ற கொள்கைகளோடு சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியான முறையில் பின்பற்ற வேண்டும். மார்க்கத்தின் சட்டதிட்டங்களை எதற்காகவும் எவருக்காகவும் வளைக்கக்கூடாது. ஆளுக்கும் இடத்திற்கும் ஏற்ப மார்க்கத்தை மாற்றிக் கொள்வது திரிப்பது நம்மை தடம் புரளச் செய்துவிடும் மோசமான பண்பு என்பதை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தப் பண்பு இருந்தவர்கள் வழிகேடுகளில் வீழ்ந்து, கெட்டழிந்தார்கள் என்று நபியவர்கள் விடுக்கும் பின்வரும் எச்சரிக்கையை ஒருபோதும் நாம் மறந்துவிடக்கூடாது.

"மக்ஸூமி' குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து  (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?'' என்று சொன்னார்கள். அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?'' என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:

மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்) விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரது கையைத் துண்டித்தே இருப்பார்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

ஆதாரம்: புகாரி (6788)

இதையறியாமல், ஏழைகளிடம் ஒருவிதமாகவும் பணக்காரர்களிடம் ஒரு விதமாகவும் மார்க்க செய்திகளைக் கையாள்பவர்களைப் பார்க்கிறோம். அதுபோல தெரிந்தவர்கள், வேண்டப்பட்டவர்கள் தவறு செய்யும் போது அலட்சியமாக விட்டுவிடுவது; அதேசமயம் அறிமுகமற்றவர்கள், நெருக்கமற்றவர்கள் தவறு இழைக்கும் போது கடுமையாக நடந்து கொள்வது என்றும் சிலர் செயல்படுகிறார்கள்.

சொந்த ஊரில் ஒருவிதமாகவும் வெளியூர்களில் வேறு விதமாகவும் இடத்திற்கு, எதிர்ப்புகளுக்கு ஏற்ப சட்டதிட்டங்களை மாற்றிக் கொண்டு வேடம் போடும் மக்கள் இருக்கிறார்கள். இந்தப் பண்பு கொண்டவர்கள் இந்தச் செய்தியைத் தெரிந்த பிறகாவது திருந்துவார்களா?

உலக இன்பங்கள் மீது மோகம் கொள்ளுதல்

தன்னை வணங்குவதற்காகவே ஏக இறைவன் மனிதர்களைப் படைத்திருந்தாலும் அவர்களின் உலக வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்காகச் செல்வம் போன்ற பல அருட்கொடைகளை கொடுத்திருக்கிறான். அவற்றின் மூலம் அவர்களை சோதிக்கவும் செய்கிறான். ஆகவே படைத்த இறைவனை மட்டும் தொழுது  அவனது கட்டளைகளுக்கு ஏற்ப வாழ்வதிலேயே நம்முடைய முதல் கவனம் இருக்க வேண்டும். அதையடுத்த இடத்தையே உலக வாழ்க்கையின் இன்பங்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால் அதிகமான  மக்கள் உலக இன்பங்களுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவற்றைச் சேகரிப்பதற்காக மார்க்த்தை மறந்து அல்லும் பகலும் அயராது உழைக்கிறார்கள். எல்லாம் இருந்தும் சிலர் போதுமென்ற மனம் இல்லாமல் மற்றவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சுகபோக வாழ்க்கைக்காக அலைந்து திரிகிறார்கள்.

இதன் விளைவாக, இத்தகையவர்கள் பணத்திற்காகக் கடமைகளைத் தவற விடுகிறார்கள். தவறானவற்றை தேடிப்பிடித்துச் செய்கிறார்கள். மார்க்க நெறிமுறைகளைப் பொருட்படுத்தாமல் மனம் போன போக்கில் சென்று வழிகேடுகளில் விழுந்துவிடுகிறார்கள்.

முந்தைய காலத்தில் இந்தப் பண்பைக் கொண்டிருந்த சமுதாயம் அழிவில் அகப்பட்டுக் கொண்டது. அவர்களைப் போன்று நாமும் ஆகிவிடுவோமோ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஞ்சியிருக்கிறார்கள். ஆதங்கப்பட்டு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பனூ ஆமிர் பின் லுஅய்' குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ருப் போரில் கலந்து கொண்டவருமான அம்ரு பின் அவ்ஃப் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் எனக்குக் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா வரியை வசூலித்துக் கொண்டு வரும்படி அனுப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஜூஸிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு அலா பின் ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா (ரலி) அவர்கள் பஹ்ரைனிலிருந்து  நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா (ரலி)  அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, அது ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, "அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்'' என்று கூற, அன்சாரிகள், "ஆமாம், அல்லாஹ்வின் தூதரே!'' என்று பதிலளித்தார்கள். "ஆகவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு  வறுமை  ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்து விட்டதைப் போல் உங்களையும் அது  அழித்து விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்'' என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)

ஆதாரம்: புகாரி (3158)

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுதுப்போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவு மேடைக்குத் திரும்பி வந்து, "(உங்களுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து வைப்பவனைப்போல்) நான் உங்களுக்கு முன்பே செல்கிறேன். நான் (அப்போது) உங்களுக்கு சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகி விடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும் நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டியிடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

ஆதாரம்: புகாரி (1344)

விதியைப் பற்றி தர்க்கம் செய்தல்

பிரபஞ்சத்தின் இரட்சகன் முக்காலத்தையும் அறிந்தவன். அவன் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் துல்லியமாக அறிந்த நுண்ணறிவாளன். அவன் அனைத்து காலத்திலும் நிகழும் சம்பவங்களையும் பதிவேட்டில் ஒன்று விடாமல் பதிவு செய்திருக்கிறான். அவனது அனுமதியின்றி அணுவும் அசையாது; எந்தவொரு காரியத்தையும் செய்ய முடியாது.

அவன் நினைத்திருந்தால் நமக்கு வாழ்க்கை எனும் வாய்ப்பே கிடைத்திருக்காது. அவன் தமது  விருப்பத்தின்படி பல்வேறு காரணங்களுக்காக இன்பத்தையும் துன்பத்தையும் கொடுக்கிறான். நன்மை மற்றும் தீமையைச் செய்வதற்கு வாய்ப்பளித்து நம்மைச் சோதிக்கிறான்.

கடந்த காலம் என்பது இறைவனின் நாட்டப்படி நடந்து முடிந்தவை; எதிர்காலம் என்பது அவன் நாடினால் நடக்கவிருப்பவை என்பதைப் புரிந்து கொண்டு நாம் நல்வழியில் செல்ல வேண்டும். தீய வழிகளைப் புறக்கணிக்க வேண்டும். இதைப் புரிந்து கொள்ளாமல் சிலர் இறைவனையும் அவன் அமைத்திருக்கும் விதியைûயும் குருட்டுத்தனமாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இறைவனும் இல்லை; விதியும் இல்லை வறட்டுவாதம் செய்கின்றனர். இறைவனின் ஆற்றலையும் அவனளித்த வாய்ப்பையும் விளங்காமல் தர்க்கம் செய்கின்றனர்.

இப்படி விமர்சிப்பவர்களில் சிலர் சத்தியத்தை விட்டும் தூர நிற்கிறார்கள். இன்னும் சிலர் கிடைத்த சத்தியத்தைத் துறந்து செல்கிறார்கள். இவ்வாறு நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் விதியைப் பற்றி சர்ச்சைகளை எழுப்பி சச்சரவுகளில் ஈடுபட்டதால் திசைமாறிப் போனார்கள. வழிகேட்டில் வீழ்ந்து கெட்டழிந்தார்கள் என்று நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

"உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம் இந்த (விதியின்) விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டதால்தான்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: திர்மிதீ (2059)

குழப்பத்தை ஏற்படுத்துதல்

மார்க்கத்தின் சட்டதிட்டங்கள் தெளிவாக இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொள்வதிலும் செயல்படுத்துவதிலும் தவறிழைப்பவர்கள் அதன் மூலம் சமுதாயத்தில் குழப்பம் தோன்றுவதற்குக் காரணமாக ஆகிவிடுகிறார்கள். எனவே எந்த வகையிலும் மக்களுக்கு மத்தியில் வீணான சந்தேககத்தை, குழப்பத்தைத் தோற்றுவித்துவிடக் கூடாது. கண்ணும் கருத்துமாக மார்க்க போதனைகளைக் கையாளவேண்டும். இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது நம்மை நாசப்படுத்திவிடும் என்பதைப் பின்வரும் சம்பவத்தின் வாயிலாக விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை தொழவைத்தார்கள். (தொழுகை முடிந்த) உடனே ஒருவர் எழுந்து தொழுதார். அவரைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், "வேதம் கொடுக்கப்பட்ட மக்கள் அழிந்ததெல்லாம் அவர்களது தொழுகைகளுக்கு மத்தியில் தெளிவு இல்லாமல் இருந்ததால் தான்'' என்று கூறினார்கள். (அதற்கு) நபி (ஸல்) அவர்கள், "உமர் உண்மையையே சொன்னார்'' என்று கூறினார்ர்கள்.

ஆதாரம்: அஹ்மத் (22041)

இதற்கு மாற்றமாகச் சிலர் சம்பந்தமில்லாத, தேவையற்ற காரணங்களை சொல்லிக் கொண்டு கண்மூடித்தனமாக மார்க்க செய்திகளை அணுகுகிறார்கள்; செயல்படுகிறார்கள். ஆரம்பத்தில் நல்ல காரியங்கள் தானே நன்மைகளைத் தரும் காரியங்கள் தானே என்று சொல்லிக் கொண்டு எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில் செய்யப்பட்ட காரியங்கள் இன்று மார்க்க  சட்டதிட்டங்களில் ஒன்றோடு ஒன்றாகக் கருதி செயல்படுத்தும் பாரதூரமான நிலைக்கு சமுதாயம் சென்றுவிட்டது. இதனால், பாங்கு சொல்வதற்கு முன்னால் நபிகளார் மீது ஸவவாத் சொல்வது, ஜுமுஆ அன்று இரண்டு பாங்கு சொல்வது, மவ்லூது ஓதுவது, கத்தம் ஃபாத்திஹா ஓதுவது என்று ஏரளாமான பித்அத்கள் சமுதாயத்திற்குள் புகுந்து மக்கள்  குழம்பிக் கிடக்கிறார்கள். இதனால், நபிகளாரின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட்டு நன்மையை இழந்ததோடு பாவத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கஞ்சத்தனம் கொள்ளுதல்

மனிதனிடம் இருக்க வேண்டிய நற்பண்புகளை மட்டுமல்லாது அவனிடம் இருக்கக் கூடாத கெட்ட பண்புகள் பற்றியும் இஸ்லாம் பேசுகிறது. அந்த வகையில் நம்மிடம் இருக்கக் கூடாத பண்புகளுள் ஒன்று கஞ்சத்தனம் ஆகும். இந்த பண்பு முந்தைய சமுதாயத்தையே அழித்திருக்கிறது.  கஞ்சத்தனம் என்பது மனிதனைத் தீமையான, தடுக்கப்பட்ட காரியங்களின் பக்கம் திசை திருப்பி வழிகெடுத்துவிடும் என்பதை இந்தச் செய்தி மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது, "மக்களே! கஞ்சத்தனம் கொள்வதை விட்டும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் கஞ்சத்தனத்தினால் அழிந்து போனார்கள். அது அவர்களுக்கு கருமித்தனத்தை கட்டளையிட்டது. அவர்கள் கருமித்தனம் கொண்டார்கள். மேலும் அவர்களுக்கு உறவுகளைத் துண்டிப்பதை கட்டளையிட்டது. உறவுகளைத் துண்டித்தார்கள். மேலும் அவர்களுக்கு பாவமான காரியங்களை கட்டளையிட்டது. பாவமான காரியங்களைச் செய்தார்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

ஆதாரம்: அபூதாவூத் (1447)

மேற்கண்ட செய்தியைப் பிரதிபலிக்கும் விதமாக இன்றும்கூட இந்தக் கஞ்சத்தனத்திற்கு அடிமையானவர்கள் தங்களுக்குத் தரப்பட்ட அருட்கொடைகளை மார்க்கம் கூறும் விதத்தில் நல்ல காரியங்களுக்குச் செலவழிக்காமல் இருப்பதைப் பார்க்கிறோம். பொருளாதார ரீதியான தங்களது கடமைகளை, நற்காரியங்களை சரிவர நிறைவேற்றாமல் பின்வாங்கிவிடுகிறார்கள். இதனால், நன்மைகளைக் கொள்ளையடிக்கும் வாய்ப்பை சரிவர பயன்படுத்தாமல் இருப்பதோடு தீமையான, மோசமான காரியங்களிலும் விழுந்துவிடுகிறார்கள்.

நம்மை நல்வழியில் நிலைக்கச் செய்யும் காரியங்களைத் தெரிந்து நடைமுறைப்படுத்தினால் மட்டும் போதாது. சத்தியத்தை விட்டு தூரப்படுத்தி அசத்தியத்தோடு ஐக்கியப்படுத்தும் காரியங்களையும் தெரிந்து அவற்றை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் இந்த உலகிலும் மறுமையிலும் சிறப்பாக வாழ்ந்து உண்மையான வெற்றியைப் பெற முடியும். ஆகவே முந்தைய சமுதாயங்களை அழித்தொழித்த காரியங்கள் ஒரு போதும் நம்மை அண்டவிடாமல் அழகிய முறையில் வாழ்ந்து ஈடேற்றம் பெறுவோமாக. வல்ல இறைவன் நமக்குத் துணைபுரிவானாக.

இணை கற்பித்தல் 

                        தொடர்: 16

நபிகளாரின் பிரார்த்தனைகள்

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாளைக்கு எழுபது தடவைக்கு மேலாக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள் என்ற செய்தியைப் பார்த்தோம்.

அதே போன்று ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் ஒரு துஆவை அதிகமதிகம் ஓதுபவர்களாக இருந்தார்கள். அந்த துஆவை நாம் பார்த்தால் முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை ஓதத் தேவையே இல்லை என்று நாம் நினைக்கின்ற அளவுக்கு இறையச்சத்துடன் கூடிய ஒரு துஆவாக இருக்கும்.

என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னைவிட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.

இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும், பகிரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.

நூல்: புகாரி 6398, 6399

நாம் இன்றைக்கு அவ்லியாக்கள், மகான்கள் என்றால் அவர்கள் பாவம் செய்யமாட்டார்கள். அவர்களிடத்தில் பாவங்கள் நிகழுமா? அவர்கள் பாவங்கள் செய்வார்களா? அவர்களுக்கு மறதி வருமா? அவர்களுக்கு அறியாமை வருமா? அவர்கள் வேண்டுமென்றே ஏதேனும் பாவங்கள் செய்வார்களா? அவர்கள் அவற்றையெல்லாம் விட்டு விதிவிலக்கு பெற்றவர்களாயிற்றே! அந்த மாதிரி தன்மைகளெல்லாம் அவர்களுக்குக் கிடையாதே! என்று நினைத்து வைத்திருக்கிறோம்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் முறையிடுகிறார்கள். அதுவும் இந்த முறையீட்டை மக்களுக்குக் கேட்கும் அளவுக்கு அத்தஹிய்யாத் அமர்வில் சப்தமாக கேட்கிறார்கள். நானும் மனிதன் தான் என்னிடமும் தவறுகள் நிகழும். மறதியாகவும் தவறு செய்து விடுவேன். வேண்டுமென்றும் தவறு செய்து விடுவேன். கேலியாகவும் தவறு செய்து விடுவேன். எல்லாவிதமான தவறுகளும் என்னிடம் நிகழும். பாவங்களை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறுயாருமில்லை. எனவே நீ என்னுடைய அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடு என்று கேட்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், அனைத்து நபிமார்களும் அனுப்பப்பட்டதன் நோக்கமே அனைவரும் அல்லாஹ்விடத்தில் சரணடைந்து விட வேண்டும். எல்லாக் காரியங்களையும் அவனிடத்தில் ஒப்படைத்து விட வேண்டும். எல்லாக் காரியங்களுக்கும் அல்லாஹ்விடத்தில் உதவி தேட வேண்டும் என்பதற்காகத் தான்.

இவ்வாறுதான் அல்லாஹ்வும் கட்டளையிட்டிருக்கின்றான்.

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் 98:5

ஆக நபிமார்களுக்கே இந்த நிலை என்றால் மகான்கள், அவ்லியாக்கள் எல்லாம் நபிமார்களை விட உயர்ந்த நிலையை அடைந்து விட முடியுமா? அவர்கள் பாவம் செய்வதை விட்டும் விதிவிலக்கு பெற்றவர்களாக முடியுமா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபிகளார் சந்தித்த சோதனைகள்

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது ஆரம்ப காலத்தில் பலவிதமான கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளானார்கள். அதில் ஒரு முக்கியமான நிகழ்வு என்னவென்றால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்து விட்டு கஅபத்துல்லாவிற்குச் சென்று தொழுகை நடத்துவார்கள். கஅபத்துல்லாஹ்வில் சிலைகள் இருந்தாலும் அது நமக்கு சொந்தமான பள்ளிவாசல் என்ற ஓர் உரிமையுடன் அதில் தொழுது வந்தார்கள்.

ஒருநாள் நபியவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது, இன்று முஹம்மதுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தது. நபியவர்கள் ஸஜ்தாவிற்குச் சென்றவுடன் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஒட்டகக் குடலை நபியவர்களின் முதுகில் வைத்தனர். அந்தக் குடல் அதிக பாரமாக இருந்ததால் நபியவர்களால் எழ முடியவில்லை. நபியவர்கள் சிரமப்படுவதைப் பார்த்து எதிரிகள் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் நபியவர்களுக்கு, இவர்கள் ஏற்கனவே திட்டம் தீட்டித் தான் இதனைச் செய்துள்ளார்கள் என்பது தெரியவந்தது.

இதைக் கேள்விப்பட்ட நபியவர்களுடைய மகள் பாத்திமா (ரலி) அவர்கள் தன்னுடைய தந்தை சிரமப்படுவதைப் பார்த்து அந்தக் குடலை அப்புறப்படுத்துகிறார்கள். உடனே நபியவர்கள் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தி ஒரு துஆச் செய்கிறார்கள். அந்தச் சம்பவம் பின்வருமாறு:

 நபி (ஸல்) அவர்கள் கஅபதுல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து "இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப் பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும் போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?' என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால் அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி (ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி) அங்கே வந்து, நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி "யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக' என்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்குக் கேடாக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், "அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்' என அவர்களும் நம்பியிருநார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள்  (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, "யா அல்லாஹ்! அபூ ஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!' என்று கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நான் மறந்துவிட்டேன். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல) அவர்க்ள குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் "கலீப்' என்ற பாழ் கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன்'' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 240

இந்தச் சம்பவத்தில், எதிரிகள் இழைத்த இந்த மாதிரியான அவமானத்திற்கு நபியவர்களுக்கு மட்டும் அபார சக்தி இருந்தால், அதிகாரம் இருந்தால், ஏதேனும் மாய மந்திரம் தெரிந்திருந்தால் இந்தக் கஷ்டம் வந்திருக்குமா? அதுமட்டுமல்ல! அல்லாஹ் அவர்களுக்கு சக்தியை - பவரைக் கொடுத்திருந்தால் அத்தனை பேருக்கும் கை, கால்கள் விளங்காமல் போயிருக்குமே! ஆனால் அப்படி ஏதேனும் நடந்ததா?  அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை பார்த்து எதிரிகள் கைகொட்டி சிரித்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

நபியவர்கள் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்த உடனேயே அவர்கள் அழிந்து போய்விட்டார்களா? துஆ செய்த பிறகு அவர்களுடைய (எதிரிகளுடைய) கை தான் ஓங்கியது. மேலும் மேலும் நபியவர்களுக்குத் துன்பங்களையும் தொல்லைகளையும் அதிகளவில் கட்டவிழ்த்துவிட்டனர்.

அதற்குப் பிறகு நபியவர்களை ஊரை விட்டு விரட்டுவதிலும் அவர்கள் தான் வெற்றி பெற்றார்கள். நபியவர்களால் அதனை வெல்ல முடியவில்லை. அத்தனை நபித்தோழர்களும் ஊரை விட்டு ஹிஜ்ரத் செய்து வேறு நாட்டிற்குத் தஞ்சம் புகுந்தார்கள். அவர்களுடைய சொத்து, செல்வங்களை சூறையாடினார்கள். அதிலும் எதிரிகளின் கை தான் ஓங்குகிறது.  ஊரை விட்டு நபிகளார் சென்ற பிறகும் அவர்களைக் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவ்வளவும் செய்த பிறகும் கூட நபிகளார் அவர்களுக்கு எதிராகச் செய்த பிரார்த்தனைக்கு எந்தவித விளைவும் ஏற்படவில்லை. அல்லாஹ் அவர்களை உடனே தண்டிக்கவுமில்லை.

நீ என்னிடம் பிரார்த்தித்தால் உடனே அவர்களை நான் தண்டிக்க வேண்டுமா? அவர்களைத் தண்டிப்பதும் தண்டிக்காமல் இருப்பதும் என்னுடைய அதிகாரத்திற்குட்பட்டது. அவர்களை உடனேயும் தண்டிப்பேன். அவர்களை சிறிது விட்டுப் பிடிக்கவும் செய்வேன் என்று அவர்களைத் தண்டிக்காமல் விட்டுவிடுகிறான்.

நபிமார்கள் அனைவரும் மனிதர்களாகத் தான் இருந்தார்கள். மனித சக்தி தான் அவர்களுக்கு இருந்தது. ஒரு மனிதனுக்கு என்ன ஆற்றல் இருக்குமோ அதற்கு மேற்கொண்ட ஆற்றல் அவர்களிடத்தில் இருந்ததில்லை. நபியவர்களும் கூட தன்மீது வைக்கப்பட்ட குடலை  தன்னுடைய  சக்தியைப் பயன்படுத்தி, தானே அப்புறப்படுத்துவதற்குக் கூட ஆற்றல் இல்லாமல் இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனைக்காக அல்லாஹ் அவர்களை உடனே தண்டித்திருந்தால் அந்த மக்கள், அல்லாஹ்வை வணங்குவதற்குப் பதிலாக, அவனை பயப்படுவதற்குப் பதிலாக, "இம்முஹம்மதுக்கு ஏதோ சக்தி இருக்கிறது; அதனால் தான் இவரை நோவினை செய்ததற்காக உடனே அவர்களை அழித்து விட்டார்' என்று நபிமார்களை வணங்கும் மக்கள் உருவாகியிருப்பார்கள். நபிமார்களுக்கு எந்த அற்புதமும் செய்ய ஆற்றல் இல்லாத போதே பல சமுதாய மக்கள் நபிமார்களைக் கடவுள்களாக ஆக்கியிருக்கிறார்கள்.

அறிவியல்- உறக்கம் ஓர் அற்புதம்

கடவுளையும் மனிதனையும் பிரிக்கின்ற பல காரணிகள் உள்ளன. அவற்றில் பசி, தூக்கம், மறதி ஆகியன முக்கியமான காரணிகள். படைத்த அல்லாஹ் இந்த பலவீனமான காரணிகளை விட்டும் தூய்மையானவன். இதை நினைவுபடுத்தும் விதமாகவும் எல்லாம் வல்ல இறைவனை என்றும் நினைக்கும் விதமாகவும் சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூய்மையானவன் - என்று நாம் அடிக்கடி  நமது நாவுகளை நனைத்துக் கொண்டிருக்கின்றோம். உயிர்ப் பிராணிகள் அத்தனையும் உறக்கத்துக்கு விதிவிலக்கல்ல! எல்லாம் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

மதுரையில் உள்ள பிரபலமான கோவிலுக்கு மீனாட்சி அம்மன் என்று பெயர்! நீரில் நீந்தும் மீனுக்கு நித்திரை கிடையாது. அது போன்று நித்திரையின்றி மதுரையை மட்டுமல்ல! இத்தரை முழுவதும் விழித்திருந்து ஆட்சி செய்வதால் அந்தக் கடவுளுக்கு மீனாட்சி என்று பெயர். இது தவறு என்பதைப் பின்வரும் அறிவியல் உண்மை தெளிவுபடுத்துகின்றது.

நீந்தும் மீனுக்கும் நித்திரை உண்டு

உண்மையில் மீனுக்கு தூக்கம் இல்லையா என்று பார்க்கும் போது மீனுக்கும் தூக்கம் உண்டு என்றே அறிவியல் கூறுகிறது. இமைகள் மூடியிருப்பதை வைத்து மனிதர்கள் தூங்குவதை அறிந்து கொள்ள முடியும். மீன்கள் தூங்குவதை எப்படி அறிய முடியும்?

நம்மைப் போன்று மீன்களுக்கு இமைகள் உள்ளனவா என்று வெளிப்படையாகப் பார்த்தால் இமைகள் இல்லை என்றே முடிவு செய்ய முடியும். ஆனால் மீன்களுக்கு விழித்திரைகள் உள்ளன. அவை கண்ணாடி போன்று இலைமறை காயானவை ஆகும். மெல்லிய இமைகளை மூடிக்கொண்டு அந்தக் கயல்களும் நீரில் கண்ணயர்கின்றன.

அவ்வாறு கண்ணயரும் போது நீரில் அவை அந்தரமாக ஆடாமல் அசையாமல் சலனமின்றி நிற்கின்றன; அல்லது மனிதர்களைப் போன்று தரையில் மண்ணோடு மண்ணாக ஒட்டி படுத்துக்கொள்கின்றன. தண்ணீரில் இழுப்பு அதிகமாக இருக்குமேயானால் நீரின் அடியில் கிடக்கும் மரத் துண்டுகளில் அல்லது கற்பாறைகளில் ஒதுங்கி உறங்குகின்றன. ஆனால் இவற்றை மீன்கள் உறங்குவதற்குரிய உறுதியான அடையாளங்களாக எடுத்துக் கொள்ள முடியாது. அவை உறங்குவதை உறுதி செய்ய ஆய்வு ரீதியிலான அணுகுமுறைகள் உள்ளன.

மீன்கள் ஏராளமான அளவு தண்ணீரை உட்கொள்கின்றன. வாய் வழியாக உட்கொள்கின்ற அந்தத் தண்ணீரைத் தாடையினால் அழுத்துகின்றன. தாடையினால் அழுத்தப்படுகின்ற அந்தத் தண்ணீர் சீப்பு போன்று அமைந்திருக்கும் செவுள் போன்ற பற்கள் வழியாக வெளியேறுகின்றது. இந்தக் கட்டத்தில் தான் தண்ணீரில் இருந்து ஆக்ஸிஜன் பிரிக்கப்பட்டு மீன்களின் இரத்தத் துளைகளிலும் துவாரங்களிலும் செலுத்தப்படுகின்றது. இதேவேளையில் கார்பன்டை ஆக்ஸைட் வெளியேற்றவும் படுகின்றது. இந்த பண்டமாற்றமும் பரிமாற்றமும் மீன் சுவாசத்தின் போது மின்னல் வேகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

இந்த ஏக்கம் கூடுதல் வேகத்தில் நடக்கும் போது அது விழித்துக் கொண்டிருக்கிறது என்றும் அந்த வேகம் குறையும் போது அது உறங்கிக் கொண்டிருக்கிறது என்று அறிவியல் உறுதி செய்கின்றது. (தி ஹிந்து 07/12/2007 அறிவியல் பகுதி).

மீனுக்கு உறக்கம் இல்லை அதனால் அது கடவுள் என்று மக்களின் ஒரு சாரார் முடிவு செய்துள்ளனர். இந்தக் கண்ணோட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு தான் மீனாட்சி என்று பெயர் அந்த தெய்வத்துக்குப் பெயர் சூட்டப்படிருகின்றது. இது தவறு என்று சுட்டிக்காட்டவே இந்த அறிவியல் உண்மை இங்கு தரப்படுகிறது.

ஒருபோதும் எந்த ஓர் உயிர்ப்பிராணியும் உறக்கம் இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதனால் அது ஒரு போதும் கடவுள் ஆக முடியாது என்பதற்கும் இந்த அறிவியல் உண்மை எடுத்துக்காட்டாகும்.

உறக்கம் இல்லாத உயர் நாயன்

உறக்கம் என்பது மனிதனையும் இறைவனையும் பிரித்துக்காட்டும் ஒரு அளவுகோல் என்பதால் எல்லாம் வல்ல அல்லாஹ் தனக்கு சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ இல்லையென்று தெளிவாக மறுக்கின்றான்.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. 

(அல்குர்ஆன் 2:255)

ஆனால் மனிதர்களைக் கண்டிப்பாக தூக்கம் ஆக்கிரமிக்கும். அது அவனை அமுக்கி படுக்க வைத்து விடும். இந்தத் தூக்கத்தை இறைவனோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது மனிதனுக்கு பலவீனம் ஆகும். அதே சமயம் மனிதனுடன் அதை இணைத்துப் பார்க்கும் போது அவனுக்கு அதுதான் பலமும் சிரமப் பரிகாரமும் ஆகும்.

அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான்.

(அல்குர்ஆன் 25:47)

உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.

(அல்குர்ஆன் 78:9)

அல்லாஹ் மனிதனின் தூக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது அதை ஓர் ஓய்வாகவும் சிரமப் பரிகாரமாகவும் ஆக்கி வைத்ததாகக் கூறுகின்றான்.

இரவிலும், பகலிலும் நீங்கள் உறங்குவதும், அவனது அருளைத் தேடுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. செவியுறும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. 

(அல்குர்ஆன் 30:23)

இந்த வசனத்தில் உறக்கம் ஓர் அற்புதம் என்று குறிப்பிடுகின்றான். குவைத்தில் அரப் டைம்ஸ் என்ற பத்திரிகை 19.10.2013 இதழில் அமெரிக்காவின் ஆய்யை மேற்கோள் காட்டி ஒரு துணுக்கை வெளியிட்டுள்ளது.

பெரிய கட்டிடத்தின் விளக்குகளை அணைத்துவிட்டு அதன் வாயிற்காப்பாளன் அதன் முற்ற வெளிகளில் குவிந்து கிடக்கும் குப்பைக் கூழங்களை கூட்டிப் பெருக்கி, துப்புரவு செய்வது போன்று தூக்கம் மூளையிலிருந்து கழிவுகளை அகற்றி துப்புரவு செய்கின்றது. அத்துடன் சில நோய்கள் வராமல் தடுத்துக் காக்கின்றது. மக்கள் ஏன் தங்கள் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதியை உறக்கத்தில் கழிக்கின்றனர் என்ற ஆய்வு வினாவுக்கு அறிவியல் இதழ் (நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங் ஓர்ன்ழ்ய்ஹப்) இவ்வாறு பதிலளிக்கின்றது. வயோதிக பருவத்தில் ஏற்படும் டிமின்ஷியா (உங்ம்ங்ய்ற்ண்ஹ) என்ற நினைவு மறதி நோய் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு நோய்க்கு தூக்கம் தான் அருமருந்து என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. அல்ஸீமியர்ஸ் (ஆப்க்ஷ்ட்ங்ம்ங்ண்ழ்’ள் உண்ள்ங்ஹள்ங்) என்ற நினைவு மறதி நோய் ஏற்பட காரணமே அமிலாய்ட் பீட்டா (ஆம்ஹ்ப்ர்ண்க் இங்ற்ஹ) என்ற புரதம் தான். இந்த புரதச் சத்து தான் மூளையில் இருந்து நீக்கப்படும் கழிவு என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.

அல்குர்ஆன் தூக்கத்தை ஓர் ஓய்வு என்று மட்டும் நிறுத்தாமல் ஓர் அற்புதம் என்று கூறுவதன் உண்மையினை இந்த ஆய்வு நமக்குத் தெளிவாக விளக்குகின்றது.

இன்று உலகில் இன்ஸோமேனியா என்ற உறக்கமின்மை நோயால் பலர் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி மனநோயாளியாக இருக்கின்றனர். இதற்காக வேண்டி தூக்க மாத்திரைகளை உட்கொண்டும் தூக்கமின்றி தவிக்கின்றனர். ஆனால் அல்லாஹ் நமக்கு இது போன்ற சிரமம் இன்றி உறக்கத்தை அளித்திருக்கின்றான். இந்த உறக்கம் என்பது பாக்கியம் ஆகும். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் உறங்கி முடிந்து எழுந்ததும் இறைவனுக்கு நன்றி செலுத்தியிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (உறக்கத்திலிருந்து) எழும்போது "அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்'' "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது' என்று கூறுவார்கள்.

(புகாரி 6312)

தூங்கிவிட்டு எழுந்ததும் நாமும் இந்த வார்த்தைகளை நாள்தோறும் சொல்லி நாயனுக்கு நன்றி செலுத்தும் நன்மக்களாக ஆவோமாக!

கேள்வி - பதில்

? ஜும்ஆத் தொழுகையில் இமாம் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு தான் உரையாற்ற வேண்டுமா?

ஃபர்சான்

ஜும்ஆத் தொழுகையில் இமாம் கைத்தடி, கத்தி போன்றவற்றைப் பிடித்த நிலையில் உரையாற்ற வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். பல பள்ளிவாசல்களில் இவ்வாறு செய்தும் வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு உரையாற்றியதாக வரும் செய்தியைத் தவறான முறையில் புரிந்து கொண்டதால் இவ்வாறு செய்து வருகின்றனர்.

ஹகம் பின் ஹஸ்ன் அல் குலஃபீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஜும்ஆவில் பங்கு கொண்டோம். அப்போது அவர்கள் கைத்தடி அல்லது வில்லை ஊன்றியவர்களாக நின்றார்கள். அல்லாஹ்வை அவர்கள் புகழ்ந்து வளமான, மணமான, எளிமையான வார்த்தைகளால் அவனைப் பாராட்டினார்கள். பிறகு "மக்களே! ஏவப்பட்ட அனைத்தையுமே நீங்கள் செய்ய முடியாது அல்லது செய்ய மாட்டீர்கள் எனினும் நீங்கள் நடுநிலையைக் கடைபிடித்து நன்மாராயம் பெறுங்கள்'' என்று கூறினார்கள். 

(நூல்: அபூதாவுத் 924)

கைத்தடியை வைத்துக் கொள்வது அல்லது பிடித்துக் கொள்வது என்ற கருத்து இந்த ஹதீஸில் இல்லை. மாறாக, கைத்தடியை ஊன்றுகோலாகக் கொண்டு உரையாற்றினார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. ஊன்றுகோல் என்பது ஒருவரது பலவீனம் காரணமாகப் பயன்படுத்துவதாகும்.

வணக்க வழிபாடுகளில் தான் நபியவர்கள் செய்த அனைத்தும் மார்க்கச் சட்டமாக ஆகும். வணக்க வழிபாடுகள் அல்லாத மற்ற செயல்களில் அது குறித்து அவர்கள் கட்டளைப் பிறப்பித்தால் தான் அது மார்க்கச் சட்டத்தில் சேரும். இல்லாவிட்டால் உலகத் தேவை என்ற அடிப்படையில் செய்ததாகக் கருதப்படும்.

கைத்தடியை ஊன்றி உரையாற்ற வேண்டும் என்பது ஜும்ஆவின் ஒழுங்கு முறைகளில் ஒன்றாக இருந்தால் இவ்வாறு செய்ய வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டிருப்பார்கள். ஆனால் நபியவர்கள் அவ்வாறு எந்த உத்தரவும் இடவில்லை.

கைத்தடியை ஊன்றி உரையாற்றுவது மார்க்க ஒழுங்கு முறை என்பதற்காக நபியவர்கள் அதைச் செய்யவில்லை. நிற்கும் போது ஒரு பிடிமானம் வேண்டும் என்பதற்காகவே கைத்தடியைப் பயன்படுத்தியுள்ளார்கள். நபியவர்கள் ஜும்ஆ அல்லாத வேறு இடங்களிலும் கைத்தடியை ஊன்றி சொற்பொழிவாற்றியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சகீஃப் குலத்தாரிடம் உதவி கேட்டு வந்த நேரத்தில் அவர்கள் வில் அல்லது கைத்தடியை ஊன்றி நின்றதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் வஸ்ஸமாயி வத்தாரிக் எனத் தொடங்கும் அத்தியாயத்தை ஓதிக்காட்டினார்கள்.

அறிவிப்பவர்: காலித் (ரலி), நூல்: அஹ்மது (18190)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேவையின் நிமித்தமாகவே கைத்தடியைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை இந்தச் செய்தி தெளிவுபடுத்துகின்றது. முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஜும்ஆவில் கைத்தடியை வைத்துக் கொள்வது சுன்னத் என வாதிடும் உலமாக்கள், இந்த இரண்டாவது ஹதீஸை ஆதரமாகக் கொண்டு மீலாது மற்றும் அவர்கள் நடத்தும் மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் ஏன் கைத்தடி வைத்துக் கொள்வதில்லை? என்பதைச் சிந்தித்தால் மன முரண்டாகவே இதை சுன்னத் போல் காட்டுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றுகையில் தமக்குப் பிடிமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு பேரீச்சை மரத் தண்டின் மீது சாய்ந்து கொண்டு உரையாற்றியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆ தினத்தில் பள்ளிவாசலில் நட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு பேரீச்சை மரத் தண்டின் மீது சாய்ந்து கொண்டு மக்களுக்கு உரையாற்றி வந்தார்கள். ரோம் நாட்டைச் சார்ந்த ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "(அல்லாஹ்வின் தூதரே) நீங்கள் அமர்ந்து கொள்வதற்காக நான் உங்களுக்கு (சொற்பொழிவு மேடை) ஒன்றை செய்து தரட்டுமா? நீங்கள் நிற்பதைப் போன்ற (தோற்றத்தை அது ஏற்படுத்தும்)'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்களுக்காக சொற்பொழிவு மேடை ஒன்றை அவர் தயாரித்துக் கொடுத்தார்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல்: தாரமீ (41)

நபி (ஸல்) அவர்கள் மிம்பர் இல்லாத போது தரையில் நின்று உரையாற்றியுள்ளார்கள். இந்தச் சமயத்தில் தான் அவர்களுக்குப் பிடிமானம் தேவைப்பட்டது. மிம்பர் வந்தவுடன் அவர்களுக்குப் பிடிமானம் தேவையற்றதாகி விட்டது. இதை மேலுள்ள செய்தி தெளிவுபடுத்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் மரத்தின் மீது சாய்ந்து உரையாற்றியுள்ளதால் இன்று ஜும்ஆவில் இமாம் மரத்தின் மீது சாய்ந்து கொண்டு உரையாற்ற வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை வணக்கம் என்ற அடிப்படையில் செய்யவில்லை. தேவை என்ற அடிப்படையில் செய்துள்ளார்கள் என்று புரிந்து கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றும் போதெல்லாம் கைத்தடியைப் பிடித்து வந்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இந்தச் செய்திகள் இப்னு சஃத் அவர்கள் தொகுத்த தபகாத் எனும் நூலிலும் பைஹகியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பலவீனமான செய்திகளாக உள்ளன.

இந்தச் செய்திகளில் யஹ்யா பின் அபீ ஹய்யா, இப்னு லஹீஆ, ஹசன் பின் உமாரா, அப்துர் ரஹ்மான் பின் சஃத், லைஸ், மற்றும் இப்ராஹீம் பின் அபீ யஹ்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நம்பகமானவர்கள் அல்லர் என அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எனவே மிம்பரில் இமாம் கைத்தடி, கத்தி போன்றவற்றை ஊன்றி நிற்க வேண்டும் என்பது மார்க்கம் கூறாத சட்டமாகும். நல்ல இளைஞராகவும் நடுத்தர வயதுடையவராகவும் இருப்பவருக்கு கைத்தடியைப் பிடித்துக் கொள்வது சிரமமாகவும் இயற்கைக்கு மாற்றமாகவும் இருக்கும். அப்படி இருந்தும் பிடிக்க முடியாமல் பிடித்து, தோளில் கைத்தடியை சாய்த்துக் கொண்டு படும் அவஸ்தைக்கும் இந்த ஹதீஸுக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

கைத்தடியின் மீது தனது பாரத்தைச் சாய்த்து ஊன்றிக் கொள்ளாமல் கைத்தடியின் பாரத்தையும் சேர்த்து சுமக்கிறார்கள். கைத்தடி தான் இவர்களை ஊன்றுகோலாகப் பயன்படுத்துகிறது. அதுவும் சொந்தமாக உரை நிகழ்த்தாமல் எழுதி வைத்ததைப் படிக்கும் இமாம்கள் என்றால் அந்தப் புத்தகத்தை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு ஒரு தோளில் கைத்தடியைச் சாய்த்துக் கொண்டு நிற்பார்கள்.

மேலும் சில ஊர்களில் முஅத்தின் அந்தக் கைத்தடியை எடுத்து சில வாசகங்களை ஓதி இமாமிடம் கொடுக்க அதை இமாம் பய பக்தியோடு வாங்கி படியில் ஏறும் போது சீன் காட்டுகின்றனர். இதற்கும் இந்த ஹதீசுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

? ஒரு இணைய தளத்தில் பெண் கருத்தரித்த தேதியையும், பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் பிறக்கப் போதும் குழந்தை ஆனா பெண்ணா என கணித்துச் சொல்கிறார்களாம். இது கூடுமா?

ஒரு பெண் கருத்தரித்து குறிப்பிட்ட காலத்தை அடைந்த பிறகு அறிவியல் சாதன வசதிகளைப் பயன்படுத்தி பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைச் சொல்ல முடியும். நீ பிறந்த தேதியையும், உனக்கு கருத்தரித்த தேதியையும் சொல் உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைச் சொல்கிறேன் என்று சொன்னால் இது வடிகட்டிய பொய்யாகும்.  ஏனெனில் மறைவானவற்றை இறைவனைத் தவிர வேறு யாராலும் அறிந்து கொள்ள முடியாது.

நாளை என்ன நடக்கும்? என்று அறியக் கூடிய மறைவான ஞானம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக நம்புபவன் இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடியவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அல்லாஹ் கூறுகிறான்:

"வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 27:65)

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். 

(அல்குர்ஆன் 6:59)

எனவே பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா என்பதை அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தாமல் எவராலும் அறிந்து கொள்ளவோ, சொல்லவோ முடியாது. அவ்வாறு ஒருவன் சொல்வான் என்று நம்புவது இணைவைப்பாகும். தாங்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிறக்கும் குழந்தையைப் பற்றி சொல்வது கிடையாது. மாறாக ஜோசியம் சொல்வதைப் போன்று குறிப்பிடுகிறார்கள். இதை ஒருபோதும் முஸ்லிம்கள் நம்பக்கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் குறிகாரனிடம் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபியாகிய என்மீது அருளப்பட்டதை (வேதத்தை) நிராகரித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: அஹ்மத் 9171

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

அறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி), 

நூல்: முஸ்லிம் 4137

மேலும் ஒரு பெண் எப்போது கருத்தரித்தாள் என்பதை எப்படி அவளால் அறிந்து கொள்ள இயலும்? ஒரு மாதத்தில் ஒரே தடவை மட்டும் உடலுறவு வைத்திருந்தால் மட்டுமே இதை அறிந்து கொள்ள முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் உடலுறவு கொண்ட பெண்ணால் கரு எந்த நாளில் உண்டானது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. கருவுற்ற நாளைச் சொன்னால் கண்டுபிடித்துத் தருவோம் என்று சொல்வது முட்டாள்தனமானது என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். இவர்கள் சொன்னபடி இல்லாமல் மாறிவிட்டால் நீங்கள் கருத்தரித்த நாளை தவறாகச் சொல்லி இருப்பீர்கள் அதனால் மாறிவிட்டது என்று தப்பித்துக் கொள்வதற்காக இப்படி கேட்கிறார்கள் போலும்.

அஞ்சா நெஞ்சம்

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

உலகில் மனிதர்கள் பல வகையான ஏற்றத்தாழ்வுகளுடனே வாழ்ந்து வருகின்றனர். குட்டை, நெட்டை, கறுப்பு, சிவப்பு, ஏழை, பணக்காரன் போன்ற எண்ணற்ற ஏற்றத் தாழ்வுகள் மனிதர்களுக்கிடையில் உள்ளன. ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்களாக, சிறு துரும்பைக் கண்டால் கூட பதறுபவர்களாக இருப்பார்கள். மறு சிலரோ எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை சட்டை செய்யாதவர்களாக இருப்பார்கள்.

இவ்வாறாக மனிதர்களில் எதையும் தைரியத்துடன் எதிர் கொள்பவர்கள் மற்றும் எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்கள் என இரு வகையினர் இருப்பதை நடைமுறையில் காண்கிறோம்.

மனிதர்களின் குறைபாடுகளில் முக்கியமானதும், களையப்பட வேண்டியதும் அச்ச குணமே ஆகும். மனதில் பயம் இருப்பவர்களால் எந்தச் செயலிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. அவர்களால் எதிலும் வெற்றி பெற முடியவதில்லை. ஆகவே இஸ்லாம் முஸ்லிம்களுக்கு தைரியத்தை அறிவுறுத்துகிறது. 

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட எந்த ஒரு முஸ்லிமும் கோழையாக இருக்கக் கூடாது. தாம் களமிறங்கும் எந்த ஒரு நல்ல செயலிலும் அஞ்சா நெஞ்சத்துடன் இறுதி வரை இருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களுக்கு அது முன் வைக்கும் அறிவுரையாகும்.

எதற்கெடுத்தாலும் அஞ்சுவதைத் தவிர்த்து மன தைரியத்துடன் ஒவ்வொரு செயலையும் அணுக வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. கோழைத்தனத்தை வன்மையாகப் பழிக்கின்றது.

எனவே தான் போர்க்களத்தில் கோழைத்தனமாகப் புறமுதுகிட்டு பின்வாங்குவதை பெரும்பாவத்தில் ஒன்றாக நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள்.

"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 2766

கோழைத்தனத்தை இஸ்லாம் எந்த அளவு பழிக்கின்றது என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.

நபி மூஸா (அலை) அவர்கள் இறைத்தூதராகத் தேர்வு செய்யப்பட்ட துவக்கம், கொடிய அரசனான ஃபிர்அவ்னிடம் ஏகத்துவக் கொள்கையை எடுத்துச் சொல்லுமாறு இறைவன் கட்டளையிட்ட சமயம், அடுத்து சூனியக்காரர்களுடனான போட்டி ஆகிய சந்தர்ப்பங்களில் மூஸா நபியவர்கள் தைரியமின்றி அச்சத்துடன் காணப்பட்டார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

மூஸாவே! நான் தான் மிகைத்தவனும், ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ். உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றும் அறிவிக்கப்பட்டார்.) அவர் அதைப் போட்டதும் அது ஒரு பாம்பைப் போல் நெளிந்ததைக் கண்டு, பின்வாங்கி திரும்பிப் பார்க்காது ஓடினார். "மூஸாவே! பயப்படாதீர்! தூதர்கள் என்னிடம் பயப்பட மாட்டார்கள்.'' 

(அல்குர்ஆன் 27:9,10)

நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறி விட்டான் (என்று இறைவன் கூறினான்) "என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!'' என்றார். எனது பணியை எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள். எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து!. அவர் மூலம் என்னைப் பலப்படுத்து! எனது பணியில் அவரையும் கூட்டாக்கு! நாங்கள் உன்னை அதிகமாகத் துதிப்பதற்காக. உன்னை அதிகமாக நாங்கள் நினைப்பதற்காக. நீ எங்களைப் பார்ப்பவனாக இருக்கிறாய் (என்றார்.) "மூஸாவே! உமது கோரிக்கை ஏற்கப்பட்டது'' என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன் 20:24-36)

மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?'' என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். "இல்லை! நீங்களே போடுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். "அஞ்சாதீர்! நீர் தான் வெற்றி பெறுவீர்'' என்று கூறினோம்.

(அல்குர்ஆன் 20:65-68)

இந்தச் சந்தர்ப்பங்களில் அல்லாஹ் அன்னாரது அச்சத்தைப் போக்கி மன தைரியத்தை ஊட்டுகின்றான். அதன் பிறகு ஒரு போர் வீரனைப் போன்று தமது பிரச்சார வாளைச் சுழற்றினார்கள் என்ற இந்த வரலாற்றுச் செய்தியும் ஒரு முஸ்லிம் எதற்கும் அஞ்சலாகாது  என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்வதாக அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்

மேலும் எதற்கும் அஞ்சாத உறுதியான முஸ்லிமே அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பலமான இறை நம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 5178

அல்லாஹ்வின் தூதர் ஓர் அஞ்சா நெஞ்சர்

இன்றைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தமது தொண்டர்களால் அஞ்சா நெஞ்சர், போர்வாள் போன்ற பல அடைமொழிகளோடு அழைக்கப்படுவதை அறிகிறோம். அவ்வாறு அழைக்கப்படும் தலைவர்களில் பெரும்பாலானோர் உண்மையில் அவ்வாறிருக்க மாட்டார்கள். கட்சிக்கு ஒரு துன்பம் அல்லது தனக்கு ஒரு துன்பம் என்றவுடன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அனைத்தையும் அம்போ என விட்டு விட்டு ஓடிவிடுவார்கள்.

அல்லது என்னை விட்டு விடுங்கள் என கதறி அழும் பரிதாப காட்சியையைத் தான் காண முடிகிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க இந்த அற்பர்களை அஞ்சா நெஞ்சர் என வர்ணிப்பது நகைச்சுவைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. தலைவனே இப்படி என்றால் இவரது தொண்டர்களின் வீரத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை.

ஆனால் நமது தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துணிவு மிக்க தலைவராகத் திகழ்ந்தார்கள்.

பத்ருக் களம் நபிகளாரின் துணிச்சலுக்கு மிகச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு.

இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்களின் மீது வலிய திணிக்கப்பட்ட முதல் போர் பத்ருக் களம். எதிரிகள் ஆயிரக்கணக்கானோர் போர்த்தளவாடங்களுடன் வலிமையான நிலையில் இருந்த போதும் சொற்ப நபர்களுடன் சொற்ப ஆயுதங்களுடன் இறை உதவியின் மீதுள்ள நம்பிக்கையில் வலிமையான அந்த அணியைச் சந்திக்க தலைமை தாங்கிப் புறப்பட்டு சென்றார்கள் எனில் இது நபிகளாரின் துணிச்சலைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

அது மட்டுமின்றி கோழைத்தனத்தை நபிகளார் தமது வாழ்வில் முற்றிலுமாக வெறுத்தார்கள். ஆதலால் தான் தமது துஆவில் கோழைத்தனத்தை விட்டும் இறைவனிடம் பாதுகாவல் தேடுவதை அன்றாட வழக்கமாக்கி இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், "இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலில் இருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகின்றேன். மேலும், வாழ்வின் சோதனையிலிருந்தும்  இறப்பின்  சோதனையிலிருந்தும் உன்னிடம்  பாதுகாப்புக் கோருகின்றேன். மேலும், கப்ரின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று    பிரார்த்திப்பது வழக்கம்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), 

நூல்: புகாரி 2823

நபிகளாரின் தைரியத்திற்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் சம்பவமும் ஆதாரமாக அமைந்துள்ளதைக் காணலாம்.

நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகானவர்களாகவும் மக்களிலேயே வீரமிக்கவர்களாகவும் மக்களிலேயே தாராள மனமுடையவர்களாகவும் இருந்தார்கள். "(ஒரு முறை, மதீனாவின் மீது பகைவர்கள் படையெடுத்து வருகிறார்கள் என்று வதந்தி பரவவே) மதீனாவாசிகள் பீதிக்குள்ளானார்கள். அப்போது அவர்களை நபி (ஸல்) அவர்கள் முந்திச் சென்று, குதிரையில் ஏறி (மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் எதிரியை எதிர்கொள்ளப்) புறப்பட்டார்கள்; மேலும், "இந்தக் குதிரையைத் தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்  (ரலி),

நூல்: புகாரி 2820

இத்தகைய அஞ்சா நெஞ்சரின் தொண்டர்களான நாம் எத்தகைய துணிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்? ஆனால் நம்மில் பலரோ பேய் என்ற தவறான நம்பிக்கையினால் நடுநிசியைத் தாண்டிவிட்டால் வெளியில் வரவே அஞ்சும் தொடை நடுங்கிகளாக இருக்கிறோம் எனில் இது சரியா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

எது துணிச்சல்?

இன்றைக்குத் துணிச்சல், வீரம், தைரியம் என்றாலே அடுத்தவனை அநியாயமாக அடித்து உதைப்பது என்ற அளவில் தான் மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். இஸ்லாம் இதைப் போதிக்கவில்லை. இஸ்லாத்தின் பார்வையில் இது துணிச்சலும் அல்ல.

தைரியம், வீரம் என்பது நம் கண்முன்னே ஒரு அநியாயம் நடக்கும் போது அதைக் கண்டித்துக் குரலெழுப்புவது ஆகும். அந்தத் தீமைக்கு எதிராக நமது கண்டனத்தைப் பதிவு செய்வதும் தைரியத்தில் உள்ளதாகும். ஒரு முஸ்லிம் இவற்றைச் செய்வதிலிருந்து கோழையாகப் பின்வாங்கிடக் கூடாது. தவறைக் கண்டிக்கும் இத்துணிச்சலை நபியவர்கள் ஈமானில் ஒரு முக்கிய அங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்:

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி  (ரலி),

நூல்: முஸ்லிம் 78

சாதாரண நிகழ்வொன்று நடந்தாலே அச்சம், பயம், நடுக்கம் ஆகியவை அனைவரையும் பற்றிக் கொள்கிறது. இதை எப்படி எதிர் கொள்வது? இதை எதிர்த்தால் நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற தயக்கம் தடைக் கல்லாய் நிற்கிறது. இந்த தடைக் கற்களைத் தகர்த்தெறிந்து அரசாங்கத்தின் மூலமாகவோ அல்லது பிறர் மூலமாகவோ மக்களுக்கு அநியாயம் இழைக்கப்படுமாயின் தைரியத்துடன் அதைத் தட்டிக் கேட்கும் துணிவுள்ளவர்களாக நாம் செயல்பட வேண்டும். இது இஸ்லாம் கூறும் தைரியத்தில் உள்ள முக்கியமான அம்சமாகும்.

ஏனெனில் அநியாயத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதை சிறந்த ஜிஹாத் என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "ஜிஹாதில் சிறந்தது எது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி),

நூல்: அஹ்மத் 18074

நபியவர்கள் ஒரு சமயம் பாதையில் நடந்து வரும் போது தம் கண்முன்ணே ஒரு வியாபாரி அநியாயமான முறையில் பொருளை விற்பதை அறிந்த போது உடனே அதைத் தட்டிக் கேட்பவர்களாக இருந்துள்ளார்கள் என்று வரலாறு நமக்குச் சான்றளிக்கின்றது.

"நபி (ஸல்) அவர்கள் உணவுக் குவியல் அருகே சென்றார்கள். அதனுள் தன் கையைப் புகுத்தினார்கள். விரல்களில் ஈரப்பதம் பட்டது. "உணவுப் பொருள் விற்பவரே! இது என்ன?'' என்று கேட்டார்கள். "இறைத்தூதர் அவர்களே! மழை பெய்து விட்டது'' என்று அவர் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், "அந்த ஈரம் பட்ட தானியத்தை மக்கள் பார்க்கும் வகையில் மேற்பகுதியில் நீர் வைத்திருக்க வேண்டாமா? நம்மை ஏமாற்றுகிறவர், நம்மைச் சேர்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 187

நாம் காணும் தீமையை நம்மால் இயன்றவரை தைரியத்துடன் தட்டிக் கேட்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துரைக்கின்றது.

தவறை உணர்த்தத் தயங்கி விடாதே!

சில நேரங்களில் அடுத்தவர்கள் தவறு செய்கிறார்கள் என்று நமக்கு நன்கு தெரியும். ஆனால் தவறிழைப்பவர்கள் நம்மை விட ஏதாவது ஒரு வகையில் பெரியவர்களாக இருப்பார்கள். பெரிய பதவியில் உள்ளவர்களாகவோ அல்லது பெரிய அந்தஸ்தில் உள்ளவர்களாக அல்லது வயதில் மூத்தவராகவோ இருப்பதால் அவர்களுடைய தவறை சுட்டிக்காட்டத் தயங்கி விடுவோம். அவரோ நம்மை விடப் பெரியவர்; அவருடைய தவறை நாம் எப்படி சுட்டிக் காட்டுவது என்ற அச்சமே இதற்குக் காரணம். இது தவறான பார்வையாகும். இந்த அச்சமும் ஒரு வகையான கோழைத்தனமாகும்.

தவறு செய்பவர் எத்தகையவராக இருந்தாலும் ஒரு பெரும் சமுதாயமாகவே இருந்தாலும் அதைத் தட்டிக் கேட்கும் மனவலிமை நம்மிடத்தில் இருந்தாக வேண்டும்.

இஸ்லாமிய வரலாறு, பல நல்லோர்களின் வரலாறு இதைத் தான் நமக்கு உணர்த்துகின்றது.

நபிகளார் மரணித்த வேளையில் நபிகளாரின் மரணம் தொடர்பாக நபித்தோழர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றியது. உமர் (ரலி) உட்பட பெரும்பாலான நபித்தோழர்கள் நபிகளார் இன்னும் மரணிக்கவில்லை, அல்லாஹ் அவரை மீண்டும் எழுப்புவான் என்ற தவறான எண்ணத்தில் இருந்தார்கள். இத்தகைய நேரத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள், நபிகளார் இறந்து விட்டார்கள் என்பதை அழகான, பக்குவமான தனது பேச்சின் மூலமாக மக்கள் அனைவருக்கும் உணர்த்தினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) கூறியதாவது:

(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (பனூ ஹர்ஸ் குலத்தாரின் இல்லங்கள் அமைந்துள்ள) "ஸுன்ஹ்' என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித் தான் - நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று தான் - தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபியவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்'' என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, "தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்யமாட்டான்'' என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள். (வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி,) "(நபியவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்'' என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசிய போது உமர் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.

அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, "எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் "அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்'' என்று சொன்னார்கள். மேலும், "நபியே! நீங்களும் இறக்கவிருப்பவர் தாம்; அவர்களும் இறக்க விருப்பவர்களே' என்னும் (39:30) இறை வசனத்தையும், "முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப்பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின்றானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான்' என்னும் (3:144) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 3667, 3668

அத்தனை நபித்தோழர்கள் தவறான நிலைப்பாட்டில் இருந்த போதும் நெஞ்சுறுதியோடு அவர்களின் தவறான நிலைப்பாட்டை, தனது தெளிவான பேச்சின் மூலம் அபூபக்கர் (ரலி) அவர்கள் உணர்த்தினார்கள். நபியவர்களின் இறப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அபூபக்கர் (ரலி) அவர்களின் உரை இருந்தது எனில் அதற்கு அடித்தளமாக அமைந்தது அன்னாரது மன தைரியமும் யாருக்கும் அஞ்சாத தன்மையுமே காரணம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இது போலவே சமுதாயம் முழுவதும் தவறில் இருந்தாலும் அதை எதிர்ப்பதற்கு அஞ்சாத நெஞ்சம் அவசியம் தேவை என்பதை இந்த நிகழ்வு தெளிவுபடுத்துகின்றது.

அவ்வாறு ஒரு சமுதாயத்திடம் காணப்படுகின்ற தவறை நாம் எச்சரிக்கும் போது அதை சரிகாணக் கூடியவர்களிடமிருந்து எத்தகைய எதிர்ப்பலைகளும் கிளம்பலாம். தொல்லைகள் தொடரலாம். அதை எல்லாம் எதிர்கொள்ள நெஞ்சுரம் வேண்டும் யாருக்கும் எதற்கும்  அஞ்சாத நெஞ்சம் வேண்டும்.

அதை நபியவர்களும் நபித்தோழர்களும் பெற்றிருந்த காரணத்தினால் தான் பல்வேறு எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் தமது இஸ்லாமிய பிரச்சாரத்தை தொடர்ந்து தொய்வின்றி நிறைவேற்றலானார்கள்.

அத்தகைய அஞ்சாத நெஞ்சத்தை நாமும் பெற இறைவனிடம் வேண்டுவோமாக!

உலகம் - அமெரிக்கா கொன்றொழித்த ஐந்து லட்சம் முஸ்லிம்கள்

பத்தாண்டுகளுக்கு முன்னால் 2003 மார்ச் 19ந்தேதி அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினர் ஐ.நா. ஒப்புதல் இன்றி இராக் மீது அநியாயமாகவும், அக்கிரமாகவும் படை எடுத்ததனர். இதற்காக ஒரு பொய்யான, போலியான குற்றச்சாட்டை அவர்கள் கூறினர். ரங்ஹல்ர்ய்ள் ர்ச்  ஙஹள்ள் உங்ள்ற்ழ்ன்ஸ்ரீற்ண்ர்ய் - பேரழிவு ஆயுதங்களை இராக் வைத்திருக்கின்றது என்பது தான் அந்தக் குற்றச்சாட்டாகும். படை எடுத்த இருபத்தோரு நாட்களில் இராக்  முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டது. போரில் தோற்ற சதாம் ஹுசைன் தப்பி, தலைமறைவானார்.

2003 டிசம்பர் 13ல் சதாம் ஹுசைன் கைது செய்யப்பட்டு, மூன்றாண்டுகள் விசாரணை நடத்தப்பட்டு, 2006 நவம்பர் 5ம் தேதி தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடுவதற்கு அவர் மீது  சாட்டப்பட்ட  குற்றச்சாட்டு துஜைல் என்ற ஊரில் 148 ஷியாக்களைக் கொலை செய்தார் என்பது தான். இராக்கைப் பிடித்து  இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் இதுவரை பேரழிவு ஆயுதங்களை அமெரிக்கா கண்டுபிடிக்கவில்லை.

கடந்த அக்டோபர் 15ம் தேதி அன்று அமெரிக்காவில் வெளியான ஒரு கல்வி ஆய்வு, "இதுவரையில் இராக்கில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டும்' என்று குறிப்பிடுகின்றது. ஏற்கனவே, பிரிட்டனைச் சார்ந்த ஓர் அமைப்பு ஊடகத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு போரினால் ஏற்பட்ட வன்முறை மூலம் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,15,000 என்று தெரிவித்திருந்தது.

அமெரிக்கா, கனடா, பாக்தாத் பல்கலைக் கழகங்கள் இந்த ஆய்வை  இராக் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் துணையுடன் நடத்தின. போர், கலவரச் சாவுகளுடன் மட்டும் இந்த ஆய்வு நிற்கவில்லை. போர் ஏற்படுத்திய மறைமுகச் சாவுகளையும் கணக்கில் எடுத்துள்ளது. உண்மையில் இந்தச் சாவுகள் அமெரிக்காவுடைய படையெடுப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரம், சட்ட ஒழுங்கு சீர்குலைவு மூலமும் நடந்துள்ளன. அந்த சாவுகளையும் இந்த ஆய்வு உள்ளடக்கியுள்ளது. இதற்கு முந்தி எடுக்கப்பட்ட ஆய்வுகள் இத்தனை நீண்ட ஆண்டு கால அளவை எடுக்கவில்லை. ஆனால் இந்த ஆய்வு 2003லிருந்து 2011 வரையிலான கால கட்டத்தை எடுத்திருக்கின்றது. போர்க் கலவரம் மிக மிக அதிகமான உயிர்களைப் பலி கொண்டிருந்தாலும், மூன்றில் ஒரு பகுதியினர் போர் மூலமாகவே கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த விபரம் இதற்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கில் வரவில்லை.

போரினால் ஏற்பட்ட மறைமுக சாவு பற்றிக் குறிப்பிடுகையில், சில நிகழ்வுகளை அது பதிவு செய்துள்ளது. பிரசவ வேதனையினால்  துடிதுடித்துக் கொண்டிருக்கும் பெண் மருத்துவமனைக்கு உடனே போக வேண்டும். ஆனால் அவள் அவ்வாறு போக முடியவில்லை. காரணம் போர் தான். அதனால் அந்த பெண் மரணத்தைத் தழுவுகின்றாள். பாதுகாப்பில்லாத மாசுபட்ட குடிநீர் குடிப்பதால் மக்கள் மரணிக்கின்றனர். போரில் அல்லது கலவரத்தில் கடுமையான பாதிப்புக்குள்ளான மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியவில்லை. காரணம் மருத்துவமனை தன் சக்திக்கு மீறிய அளவில் நோயாளிகள் சேர்க்கையினால் திக்குமுக்காடி, திணறியது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். இவை மறைமுக மரணங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், மனித குலத்திற்கு எதிரான தாக்குதல் என்ற குற்றச்சாட்டின் பேரிலும், ஒரு 148 பேர்களைக் கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலும் சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை என்றால் இராக்கில் மட்டும் இத்தனை லட்ச மக்களைக் கொன்ற உலா  மகா பாதகன், உலா மகா கிராதகன், ஈவு இரக்கமற்ற சண்டாளன் ஜார்ஜ் புஷ் மற்றும் உத்தம புத்திரனாய், உலக மகா யோக்கியனாய் வேதாந்தம் பேசி பதவிக்கு வந்து புஷ்ஷின் பாதையில் பயணம் செய்கின்ற ஒபாமா ஆகியோருக்கு என் மாதிரியான தண்டணை கொடுக்க வேண்டும் என்று நியாயம் உள்ளம் கொண்டோர் சிந்திக்க வேண்டும்.

இந்தச் சண்டாள அமெரிக்காவின் ஆப்கானிய படையெடுப்பின் போது கொல்லப்பட்டோரின் புள்ளி விபரத்தைப் பார்த்தோம் என்றால் இதயம் வெடித்து விடும். அந்த அளவுக்கு அவர்களது கொலைப் பட்டியல் நீண்டு கொண்டு போகின்றது. இந்த அமெரிக்கா தான் இன்றைக்கு உலகில் சட்டாம்பிள்ளைத்தனம் செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த அராஜகனைத் தட்டிக் கேட்க வேண்டிய இஸ்லாமிய நாடுகள் முதுகெலும்பில்லாத, கடைந்தெடுத்த கோழைகளாக இருந்து  கொண்டிருக்கின்றனர். அவர்கள் அமெரிக்காவின் அடிவருகிகளாகிவிட்டனர்.

உலகில் எங்காவது ஓரிரு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டு விட்டால் அங்குள்ள தனது தூதரகங்களேயே மூடிவிட்டு அமெரிக்கர்களை உடனே அங்கிருந்து வெளியேறச் செய்கின்ற நாடு தான் அமெரிக்கா.

தன்னுடைய நாட்டவரின் உயிர் தான் உயிர்! மற்ற நாட்டுக்காரர்களின் உயிர் மயிர் என்று நினைக்கின்ற முதல் தர சுயநலக்கார நாடு அமெரிக்கா தான்! இல்லையெனில் இராக்கில் இப்படி ஐந்து இலட்சம் உயிர்களை அநியாயமாகப் பறித்து, பலி வாங்கியிருக்குமா? அதிலும் குறிப்பாக, பேரழிவு ஆயுதங்களை இராக் வைத்திருக்கின்றது என்ற பொய்யான காரணத்தைச் சொல்லி உள்ளே அத்துமீறி நுழைந்து அந்நாட்டின் அமைதியை சீர்குலைத்திருக்குமா? இன்றளவும் அங்கு சிவகாசி சரவெடி போல் குண்டு வெடித்து உயிர்கள் அன்றாடம் அழிவதற்குக் காரணம் இந்த அக்கிரமக்காரன் அமெரிக்கா தான்.

தன்னை யாரும் தண்டிக்க மாட்டார்கள் என்ற தலைக்கனத்தில் இந்த அமெரிக்கா ஆடிக் கொண்டிருக்கின்றது.

காலத்தை மக்களிடையே நாம் சுழல விடுகிறோம்.

(அல்குர்ஆன் 3:140)

அல்லாஹ் கூறுவது போல் சுழலும் காலச் சக்கரம் அமெரிக்காவை நோக்கி வரும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை!!

அல்லாஹ்வின் பிடிக்காகக் காத்திருப்போம்!

November 10, 2013, 10:25 AM

ஏகத்துவம் செப்டம்பர் 2013

ஏகத்துவம் செப்டம்பர் 2013

தலையங்கம்

விளம்பரமாகும் ஹஜ் வணக்கம்

ஹாஜிகள் மக்காவிற்குப் பயணமாகும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இலட்சக்கணக்கில் பணத்தை செலவழித்துச் செய்கின்ற இந்த ஹஜ் எனும் வணக்கம் பாழாகிவிடக்கூடாது, பயனற்றதாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஹாஜிகளின் அன்பான கவனத்திற்கு மார்க்கம் கூறும் அறிவுரைகளை அளிக்கின்றோம்.

பொதுவாக எந்தவொரு வணக்கத்திற்கும் இக்லாஸ் எனும் தூய எண்ணம் வேண்டும். இந்தத் தூய எண்ணம் இல்லையென்றால் அந்த வணக்கம் இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்படாது.

எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் 98:5

தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற அனைத்து வணக்கங்களிலும் "ரியா' என்ற முகஸ்துதி, அதாவது பிறர் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் கலக்கின்ற அபாயமிருக்கின்றது. என்றாலும் ஹஜ் என்ற வணக்கத்தில் இந்த முகஸ்துதி அதிகம் கலக்கின்ற வாய்ப்பிருக்கின்றது. அதனால் ஹாஜிகள் இதில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏகஇறைவனை) மறுத்தால் அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன்.

அல்குர்ஆன் 3:97

தனக்காக மட்டுமே ஹஜ் செய்ய வேண்டும் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவதை ஹாஜிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹஜ் வணக்கத்தில் முகஸ்துதி எப்படியெல்லாம் கலக்கின்றது என்பதை வரிசையாகப் பார்ப்போம்.

1. ஹஜ்ஜுக்குப் பயணம் செய்வதற்கு ஒரு மாதம், இரண்டு மாதங்கள் இருக்கும் போதே, தெரிந்த ஆட்களையெல்லாம் கண்டு, அவர்களிடம் கை கொடுத்து, "நான் ஹஜ்ஜுக்குச் செல்கிறேன்; துஆச் செய்யுங்கள்' என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.

2. வீடு வீடாகப் போய் பயணம் சொல்லுதல்

ஆட்களைக் கண்டு பயணம் சொல்வதுடன் மட்டும் நிறுத்தாமல் வீடு வீடாக ஏறி, இறங்கி பயணம் சொல்கிறார்கள். இவ்வாறு பயணம் சொல்பவர்கள், ஒரு காரணத்தையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.

இவர்களில் யாருக்காவது நாம் பாவம் செய்திருப்போம் அல்லவா? அதனால் இப்போதே அவர்களைச் சந்தித்து மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று காரணம் கூறுகிறார்கள்.

ஒரு மனிதன், சக மனிதனுக்குப் பாவம் செய்தால் உடனுக்குடன் தீர்த்து விடவேண்டும். ஒரு ஹஜ் பயணத்திற்காகவோ, வேறேதும் காரணத்திற்காகவோ தாமதப்படுத்துதல் கூடாது. ஏனென்றால் எந்தச் சமயத்திலும் நாம் மரணிக்கலாம். அதனால் அதைத் தாமதப்படுத்துதல் கூடாது. ஆனால் ஹஜ்ஜை முன்னிறுத்தி இவ்வாறு சொல்லி வருவது வணக்கத்தை விளம்பரத்துவதாக ஆகும். இது பகிரங்கமான ரியா எனும் முகஸ்துதி ஆகும்.

வெளிநாடு செல்வதால் நாம் திரும்பி வர முடியாமல் மரணித்து விடக்கூடும் என்பதற்காக இவ்வாறு செய்கிறோம் என்றும் காரணம் கூறுகின்றனர். இது உண்மையாக இருந்தால் ஹஜ்ஜை விட அதிக நாட்கள் வெளிநாடுகளில் பணியாற்றச் செல்லும் போதும் இப்படி மன்னிப்புக் கேட்டு விட்டுச் செல்வார்கள். வேறு எதற்காக எவ்வளவு நாட்கள் பயணம் செய்தாலும் இதுபோல் செய்வதில்லை. இதிலிருந்து தாங்கள் செய்யும் இந்த முகஸ்துதியை நியாயப்படுத்த இந்தக் காரணத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்

3. விருந்து வைத்தல்

பயணம் சொன்னால் போதாது என்று ஹஜ் செல்வதற்காக விருந்தும் வைக்கின்றார்கள். ஒரு லட்சம் ரூபாயில் செய்ய வேண்டிய ஹஜ்ஜை, பொருளாதார ரீதியில், சமுதாயத்தில் பாரமாக்கி, அடுத்தவரை ஹஜ் செய்ய முடியாமல் தடுப்பதாகும். இந்த வகையில் இது பாவமாகும்.

4. வழியனுப்பு விழா

ஹஜ்ஜுக்குச் செல்பவர் ஏதோ சாதனை படைக்கப் போவது போன்று வழியனுப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்கின்றனர். இதற்கென மேடை போட்டு ஹஜ் செய்யச் செல்பவரை ஆளாளுக்குப் புகழ்கின்றனர்.

5. பயணம் அனுப்புதல்

ஹாஜிகளை வழியனுப்ப வீட்டிலிருந்து ரயில் நிலையம் வரைக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒரு பெருங்கூட்டம் வாகனங்களில் செல்கின்றனர். இது போதாதென்று ஒரு கூட்டம் சென்னை வரைக்கும் செல்கின்றது. இந்தச் செலவுகளையும் ஹாஜிகளே பொறுப்பேற்க வேண்டும். இதற்கென்று பெரும் பொருளாதாரத்தை விரயமாக்குகின்றனர்.

பெரும்படை புறப்பட்டுச் சென்று சென்னையில் இருக்கும் உறவினர்களின் வீடுகளில் போய் மூன்று நாட்கள், நான்கு நாட்கள் எனத் தங்குகின்றனர். இதனால் அவர்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையினால் அவர்கள் ஹஜ் சீசன் வந்தாலே பயந்து நடுங்கும் நிலைமை.

6. ரயில் மற்றும் விமான நிலையங்களில் பெருங்கூட்டம்

சாதாரண பயணிகள் அனைவரும் அல்லல், அவஸ்தைப்படுகின்ற அளவுக்கு விமான, ரயில் நிலையங்களில் பெருங்கூட்டம் கூடி அடுத்தவருக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் ஹாஜிகள் செல்லும் தினத்தில் விமான நிலையங்களும், ரயில் நிலையங்களும் ஸ்தம்பித்து விடுகின்றன.

7. மாலை மரியாதை

ஐயப்ப பக்தர்களைப் போன்று ஹாஜிகள் அனைவரும் மாலைகள் அணிந்து கொண்டு செல்கின்றனர். அந்த மாலைகளை ரயில்களின் ஜன்னல் ஓரங்களில் கட்டித் தொங்க விடுவது அதைவிடக் கொடுமை.

8. சுவரொட்டிகள் அடித்தல்

ஹஜ் பயணம் சிறக்க வாழ்த்துகிறோம் என்று ஹாஜிகளின் பெயரைப் போட்டு விளம்பரப்படுத்துகின்றனர். ஹஜ் காலம் வந்து விட்டாலே ஊர் முழுக்க சுவரொட்டிகளை ஒட்டி அமர்க்களப்படுத்துகின்றனர். ஹஜ் வணக்கம் விளம்பரமாக்கப்படுகின்றது என்பதற்கு இதை விட ஆதாரம் தேவையில்லை.

9. இந்தக் காரியங்கள் அனைத்தையும் ஹஜ் பயணம் முடித்து விட்டு ஹாஜிகள் திரும்ப வரும் போதும் செய்கின்றனர். வழியனுப்பு விழாவிற்குப் பதிலாக வரவேற்பு விழா நடக்கின்றது. மற்ற அனைத்தும் அப்படியே தொடர்கின்றது.

10. ஹாஜிகளின் துஆ கபூலாகும் என்ற நம்பிக்கையில் ஹாஜிகளிடம் சென்று, ஆண்கள் பெண்கள் என்று வித்தியாசம் பாராமல் கைலாகு கொடுத்து, துஆச் செய்யச் சொல்கின்றனர். இது தொடர்பாக வரும் ஹதீஸ் பலவீனமானதாகும்.

11. வரவேற்பு விழா

"ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக!' என்று மறுபடியும் போஸ்டர் அடித்து வரவேற்பு விழாக்கள் நடத்துகின்றனர். தெரு முழுக்க தோரணங்கள் தொங்க விட்டு, மாப்பிள்ளை ஊர்வலம் போல் ஹாஜிகளை காரில் வைத்து ஊர்வலம் நடத்துகின்றனர்.

12. ஹாஜி என்ற அடைமொழி

டாக்டர், இஞ்சினியர் என்று பெயருக்கு முன்னால் போடுவது போன்று ஹாஜி என்ற அடைமொழியைப் போட்டுக் கொள்கின்றனர். இன்னும் சிலர் கையெழுத்துப் போடும் போது கூட, ஹாஜி சுல்தான், ஹாஜி மஸ்தான் என்று கையெழுத்துப் போடுவது கொடுமையிலும் கொடுமை.

இவை அனைத்தும் எதைக் காட்டுகின்றன? ஹஜ் எனும் வணக்கத்தை இவர்கள் விளம்பரப்படுத்துவதைத் தான். இப்படி வணக்கத்தை விளம்பரப்படுத்தினால், பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக அமல் செய்தால் அதன் விபரீதம் என்ன?

முதன்முதலில் மறுமையில் அல்லாஹ் அடியார்களுக்குக் காட்சியளிப்பான். முகஸ்துதிக்காக இந்த உலகில் வணக்கங்கள் புரிந்தவர்கள் அப்போது ஸஜ்தாச் செய்ய இயலாமல் ஆகிவிடுவார்கள். இதை கீழ்க்காணும் ஹதீஸ் விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம் இறைவன் (காட்சியüப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெüப்படுத்தும் அந்த (மறுமை) நாüல், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சஜ்தா செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கüன் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி)

நூல்: புகாரி 4919

அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர் தான் மறுமையில் முதன் முதலில் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அல்லாஹ் அறிவித்துக் காட்டுவான். அதை அவர் அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன் என்று கூறுவார். நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப்படவேண்டும் என்பதற்காகவே போரிட்டாய். நீ வீரன் என்று (நீ கொல்லப்பட்டவுடன்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்.

அடுத்து (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுபவர் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்கு தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட் கொடைகளை அறிந்து கொண்டதும், இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன் என்று பதில் சொல்வார். நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப்படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார்.

அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார்அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லை என்று பதில் சொல்வார். அதற்கு அல்லாஹ், நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப்படுவதற்காக தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி

நூல்: முஸ்லிம் 3537

ஹஜ் என்ற இந்த வணக்கம் இப்படி விளம்பரம் ஆவதால் நரகம் தான் கூலியாகக் கிடைக்கின்றது. அல்லாஹ் காப்பாற்றுவானாக!

வழிகெடுக்கும் வழிகாட்டிகள்

தற்போது ஆங்காங்கே ஹஜ் விளக்க வகுப்புகள் நடத்தி, நபிவழிக்கு மாற்றமான விளக்கங்களைத் தருகின்றார்கள். தலைப்பிலேயே ஹஜ், உம்ரா, மதீனா ஜியாரத் என்று போஸ்டர் ஒட்டுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் நடத்தும் விளக்க வகுப்புகளில் கலந்து கொண்டு ஹஜ்ஜுக்குச் சென்று வருவபர்கள் எப்படி தூய்மையான அடிப்படையில் ஹஜ்ஜை நிறைவேற்றுவார்கள்? சென்று வந்த பின்னர் எப்படி ஏகத்துவக் கொள்கையில் இருப்பார்கள்? எனவே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தப்படும் நபிவழி ஹஜ் விளக்க வகுப்புகளில் கலந்து கொள்ளுங்கள்.

அதுபோன்று ஹஜ் வழிகாட்டிகளாகச் செல்லும் ஆலிம்களும் இணைவைப்புக் கொள்கை உடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஹாஜிகளுக்குத் தவறான வழியைக் காட்டுகின்றார்கள். பித்அத்தான செயல்களையும், ஷிர்க்கான விஷயங்களையும் சொல்லிக் கொடுக்கின்றனர்.

இவற்றை விட்டுத் தப்பிக்க ஒரே வழி, "நபிவழியில் நம் ஹஜ்', "ஹஜ் - உம்ரா வழிகாட்டி' போன்ற நமது ஜமாஅத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நூல்களைப் படியுங்கள்; நபிவழி அடிப்படையில் ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்.

தமிழக முஸ்லிம்களில் பலர், யா முஹ்யித்தீன், யா காஜா முஈனுத்தீன் என்று அழைத்துப் பிரார்த்திப்பவர்களாக உள்ளனர். இது மாபெரும் இணை வைப்பாகும். இந்தப் பாவத்தைச் செய்தவரை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டேன் என்று கூறுகிறான்.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை.

அல்குர்ஆன் 5:72

இப்ராஹீம் நபி அவர்கள் இந்த இணைவைப்பை எதிர்த்துத் தான் போரிட்டார்கள். இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவூட்டும் இந்த ஹஜ் வணக்கத்தைச் செய்யும் ஹாஜிகளே! ஷிர்க் எனும் கொடிய பாவம் கலக்காத தூய ஹஜ் செய்யுங்கள்.

சிலர் ஹஜ்ஜுக்குச் சென்று வந்த பின்னரும் பொட்டல்புதூருக்கும், நாகூருக்கும், அஜ்மீருக்கும் சென்று பாவ மூட்டைகளைச் சுமந்து வருகின்றனர். இணைவைப்பில் வீழ்ந்து கிடக்கின்றனர். இத்தகையவர்கள் ஹஜ் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. எனவே ஹஜ்ஜுக்குப் பிறகு, மரணிக்கின்ற வரை அல்லாஹ் ஒருவனை மட்டுமே அழைத்துப் பிரார்த்தியுங்கள்; முஹம்மது நபி (ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்றுங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நபி மீது பொய்நரகமே தங்குமிடம்!

பெண் ஜின்னின் காமெடி?

ரிஃபாஆ பின் அப்திஸ்ஸாலிஹ் (அப்துஸ்ஸாலிஹ் உடைய மகள் ரிஃபாஆ) என்ற ஒரு பெண் ஜின், பெண்களின் கூட்டத்துடன் கண்மணி நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்து போய்க் கொண்டிருந்தது.

ஒரு சமயம் அந்த பெண் ஜின் வழமையாக வரும் நேரத்தை விட சற்று நேரம் கழித்து கண்மணி நபி (ஸல்) அவர்களைக் காண வந்தது. ஏன் தாமதம்? என்று கண்மணி நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். அதற்கு அந்தப் பெண் ஜின் பின்வருமாறு விடையளித்தது.

எங்களில் ஒரு ஜின் இந்தியாவில் இறந்து விட்டது. மய்யித் வீட்டினரைக் கண்ணியப்படுத்தச் சென்றிருந்தேன். அதன் காரணமாக தாமதமாகி விட்டது என்று கூறி ஓர் அழகிய நிகழ்ச்சியை நகைச்சுவையாக விவரிக்க ஆரம்பித்தது. அந்தப் பெண் ஜின் நகைச்சுவையாக அந்த நிகழ்வைச் சொன்னதும் அதைக் கேட்ட கண்மணி நபி (ஸல்) அவர்கள் ரொம்பவும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

(தகவல்: தாரீகே ஜுர்ஜான், ஹாபிஸ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் இஸாபா)

இது "அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமிய்யா' என்ற பத்திரிகையில் பிப்ரவரி 2013 இதழில் வெளியாகியுள்ளது. பெண் ஜின் கூறிய நகைச்சுவை என்ற தலைப்பில், தாரீக் ஜுர்ஜானி வாயிலாக ஜாபிர் (ரலி) அறிவித்தார் என்று படு அசத்தலில் ஒரு பக்கா ஹதீஸைப் போன்று துவங்குகின்றது. இந்தத் துவக்கமும் தோரணையும் புகாரி, முஸ்லிம் ஹதீஸ்களைத் தூக்கிச் சாப்பிட்டு விடும் போல் தோன்றுகிறது. ஆனால் உள்ளே போனால், மீண்டும் அதே துர்நாற்றம் என்பது போல் வழக்கமான பொய் ஹதீஸையே அவிழ்த்து விடுகின்றனர்.

இந்தப் பொய்ச் செய்தியைப் பதிவு செய்பவர்கள் கொஞ்சம் கூறாகப் பதிவு செய்திருக்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை. இவர்கள் பதிவு செய்த பொய்ச் செய்தியில் பாதி விடுபட்டுள்ளது.

கோடிட்ட இடத்தை நிரப்புவது போன்று இவர்கள் விட்டு விட்ட கேடு கெட்ட ஹதீஸின் மிச்சத்தை நாம் நிரப்பி விட்டு நமது சாட்டையைச் சொடுக்குவோம்.

"மய்யித் வீட்டினரைக் கண்ணியப்படுத்தச் சென்றிருந்தேன்' என்பதிலிருந்து துவங்குவோம். இங்கிருந்து துவங்குவதற்குக் காரணம், மய்யித் வீட்டினரைக் கண்ணியப்படுத்தச் சென்றிருந்தேன் என்று இவர்கள் தவறாக மொழி பெயர்த்துள்ளதால் தான். இதற்குரிய மூலத்தில், "தஃஸியத்' என்ற வார்த்தை இடம்பெறுகின்றது. இதற்கு ஆறுதல் கூறுதல் என்று பொருள். இதன் வேர்ச் சொல் "அஸ்யுன்' என்பதாகும். இதற்குப் பொறுமை கொள்ளுதல் எனப் பொருள்.

இந்த ஹதீஸை மொழிபெயர்த்தவர் "இஸ்ஸத்' - கண்ணியம் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த வார்த்தை என நினைத்து, கண்ணியப்படுத்துதல் என்று மொழிபெயர்த்துள்ளார். இறந்தவர் வீட்டில் கண்ணியப்படுத்துவதற்கு என்ன இருக்கின்றது? அதனால் இது மொழியாக்கத்தில் உள்ள பிழை.

இப்போது அந்தச் சம்பவத்திற்கு வருவோம்.

"நான் மய்யித் வீட்டினருக்கு ஆறுதல் சொல்லச் சென்றிருந்தேன். என்னுடைய வழியில் நான் கண்ட ஓர் ஆச்சரியத்தை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்'' என்று அந்த ஜின் கூறியது. "நீ என்ன கண்டாய்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இப்லீஸை ஒரு பாறையில் நின்று தொழக் கண்டு, நீ தான் இப்லீஸா? என்று கேட்டேன். அவன், ஆம் என்றான். "நீ ஆதமை வழிகெடுத்துவிட்டு இப்போது (இதை வேறு) செய்கிறாய். (இதை வேறு) செய்கிறாய்' என்று சொன்னேன். "(வ்வாறு பேசுவ)தை நீ விட்டு விடு' என்று சொன்னான். "(இந்த லட்சணத்தில்) நீ தொழ வேறு செய்கின்றாய்?' என்று நான் சொன்னேன். "ஆம்! நல்லடியாரின் மகள் ஃபாரிஆவே! தான் செய்த சத்தியத்தை இறைவன் நிறைவேற்றும் போது எனக்கு மன்னிப்பு அளிப்பதை நான் ஆதரவு வைக்கிறேன்' என்று இப்லீஸ் பதிலளித்தான். அன்றைய தினம் நபி (ஸல்) அவர்கள் சிரித்தது போன்று நான் பார்த்தது இல்லை.

இதுதான் இந்த அற்புதமான (?) ஹதீஸின் முழுப்பகுதி.

ஆனால் கட்டுரையாளர், பன்னூலாசிரியர் என்று போட்டுள்ளனர். அவருக்கு அந்த நகைச்சுவை என்னவென்று தெரியவில்லை. நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்; அதனால் நாமும் சிரிக்க வேண்டும் என்று காரணம் சொல்கின்றார்.

சொல்வது பொய் தான். அதைக் கூட சரியாகச் சொல்லவில்லை என்றால் இப்படித் தான் அசடு வழிய வேண்டி வரும்.

இந்தச் செய்தியை இப்னுல் ஜவ்ஸி அவர்கள், மவ்லூஆத் - இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் என்று நூலில் பதிவு செய்து விட்டு, "இது நடப்பதற்கே சாத்தியமற்ற ஒரு நிகழ்வு, இந்தத் தொடரில் இடம்பெறுகின்ற இப்னு லஹீஆ நம்பத்தகுந்தவர் அல்லர். பொய்யர்கள், பலவீனமான வர்களிடமிருந்து செய்திகளை மறைத்து அறிவிப்பவர்' என்று குறிப்பிடுகின்றார்கள்.

இதே போல் இமாம் சுயூத்தி அவர்கள் தனது நூலான, அல்லஆலீ மஸ்னுஅத் ஃபில் அஹாதீஸில் மவ்லூஆத் (புனையப்பட்ட பொன்மணிகளில் இணைக்கப்பட்ட போலி முத்துக்கள்) நூலில் இந்தச் செய்தியைப் பதிவு செய்து விட்டு, இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள முன்கிர் என்பவர் யாரெனத் தெரியவில்லை என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் மீஸானில் குறிப்பிடுவதாகத் தெரிவிக்கின்றார்கள்.

இந்த முன்கிர் பின் ஹகம் என்பவர் தான் இந்த ஹதீஸை இட்டுக்கட்டியிருக்க வேண்டும் என்று இப்னு ஹஜர் அவர்கள் லிஸானும் மீஸானில் குறிப்பிடுகின்றார்கள்.

இப்படி ஒரு பொய்யான செய்தியைத் தான் பன்னூல் ஆசிரியர் (?) இந்த மாத இதழில் எழுதியிருக்கின்றார். "தகவல்' என்று பன்னூலாசிரியர் அசத்தலாகப் போட்டிருப்பது போல் தாரீக் ஜுர்ஜான், இஸாபாவிலும் இந்தச் செய்தி இடம்பெறுகின்றது.

தாரீக் ஜுர்ஜானில் இதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும் இஸாபாவில் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இந்தச் செய்தியைக் கொண்டு வந்து அதன் அடிக்குறிப்பில், "இதன் அறிவிப்பாளர் தொடரில் யாரெனத் தெரியாதவர்கள் இடம்பெறுகின்றார்கள்'' என்று குறிப்பிடுகின்றார். அத்துடன் இப்னுல் ஜவ்ஸீயின் மேற்கண்ட கூற்றையும் சேர்த்துக் கூறுகின்றார்.

இப்படி ஒரு பொய்யான செய்தியை, ஹாபிஸ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் இஸாபா என்று ஆதாரம் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். இத்துடன் பன்னூலாசிரியர் நிற்கவில்லை. "புன்னகை பூத்த பூமான் நபியுல்லாஹ்'' என்ற தலைப்பில் இன்னொரு பொய்ச் செய்தியையும் அதே தொடரில் எழுதித் தள்ளியிருக்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் சொல்லாததைச் சொல்லி நரகத் தண்டனையை அனுபவிப்பதில் இந்த எழுத்தாளருக்கு எவ்வளவு வேகமும் ஆர்வமும் உள்ளது என்று எண்ணி நாம் வேதனையடைய வேண்டியுள்ளது.

அந்த ஹதீஸை இப்போது பார்ப்போம்.

நாங்கள் ஒருமுறை கண்மணி நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்தோம். மக்காவிற்குச் செல்லும் வழியில் அரஜ் என்னுமிடத்தில் தங்க நேரிட்டது. எனவே தனித்தனியே கூடாரம் அமைத்துக் கொண்டோம். நான் என்னுடைய கூடாரத்திலிருந்து புறப்பட்டு கண்மணி நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்ற போது, அவர்கள் தங்கள் கூடாரத்தில் காணப்படவில்லை. தூரத்தில் தெரியும் ஒரு மலையில் தனித்து அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களை அடைவதற்கு நெருங்கிவிட்ட போது, கூச்சலும் இரைச்சலுமான சத்தம் என் காதில் விழுந்ததும் ஏதோ ஒரு மறைவான நிகழ்ச்சி நடக்கின்றது என்ற நான் யூகித்துக் கொண்டேன். அதே இடத்தில் அப்படியே நின்று கொண்டேன். ஏராளமான மனிதர்கள் உரத்த குரலில் பேசிக் கொள்வதும் சண்டையிட்டுக் கொள்வதுமாக இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. சற்று நேரம் கழித்து கண்மணி நபி (ஸல்) அவர்கள் புன்னகை பூத்த முகத்தினராக என்னிடம் வந்தார்கள். நான் அங்கேயே விசாரித்தேன். "யா ரசூலுல்லாஹ், இதென்ன கூச்சல்'' என்று கேட்டேன். அதற்கு கண்மணி நபி (ஸல்) அவர்கள், "முஸ்லிம் ஜின்களுக்கும் காபிர் ஜின்களுக்கும் இடையே குடியிருப்பு விஷயத்தில் தகராறு இருந்தது. அவ்விருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். தீர்ப்புக்காக என்னிடம் வந்தன. முஸ்லிம் ஜின்கள் ஹபஸ் எனும் இடத்திலும் காபிர் ஜின்கள் கௌர் எனும் இடத்திலும் குடியிருக்கச் சொல்லி தீர்ப்பளித்தேன். இத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர்'' என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: பிலால் பின் காரிஸ் (ரலி), தகவல்: கலாமுல் முபீன்)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் கஸீர் பின் அப்துல்லாஹ் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் விடப்பட்டவர் என்று இமாம் நஸயீ அவர்கள் அல்லுஅஃபா வல்மத்ரூகீன் (பலவீனமானவர்கள், விடப்பட்டவர்கள்) என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

இவரது ஹதீஸ் வெறுக்கப்பட்டது; இவர் ஒன்றுக்கும் ஆகாதவர் என்று அஹ்மத் பின் ஹன்பல் கூறியதாக அபூதாலிப் தெரிவிக்கின்றார்.

இவரிடமிருந்து எதையும் அறிவிக்காதே என்று அஹ்மத் பின் ஹன்பல் கூறியதாக அபூகைஸமா தெரிவிக்கின்றார்.

இவர் ஒன்றுக்கும் ஆகாதவர் என்று யஹ்யா பின் மயீன் கூறியதாக உஸ்மான் பின் ஸயீத் குறிப்பிடுகின்றார்.

இமாம் அபூதாவூதிடம் இவர் பற்றிக் கேட்கப்பட்ட போது, "இவர் பொய்யர்களில் ஒருவர்' என்று சொன்னதாக அபூஉபைத் அல் ஆஜுரி தெரிவிக்கின்றார்.

மேற்கண்ட இந்தக் குறிப்புகள் அனைத்தும் ஹாபிழ் மிஸ்ஸி அவர்களின் தஹ்தீபுல் கமாலில் இடம்பெறுகின்றன. ஷைகு நாஸிருத்தீன் அல்பானி அவர்கள், ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அல்லயீஃபா நூலில் இதை 2074வது ஹதீஸாகக் கொண்டு வந்து, "இது முற்றிலும் பலவீனமான ஹதீஸ். இதில் இடம்பெறும் கஸீர் பின் அப்துல்லாஹ் விடப்பட்டவர். ஹைஸமீ அவர்கள் இதே காரணத்திற்காக இதைக் குறையுள்ளது என்று கூறியுள்ளார்'' என்று குறிப்பிடுகின்றார்கள்.

இந்த அறிஞர்களின் கருடப் பார்வையையும் கடுமையான ஆய்வையும் பார்க்கும் போது நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யான ஹதீஸ் பதிந்து விடக்கூடாது என்பதில் எவ்வளவு கவனமாகவும் கண்ணும் கருத்துமாகவும் இருந்திருக்கின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது. அந்த மாமனிதரின் சொல்லுக்கு எத்தனை பாதுகாப்பு, எத்தனை முஸ்தீபு என்று எண்ணுகையில் மெய்சிலிர்க்கின்றது.

ஆனால் இந்தப் பன்னூல் ஆசிரியர்களும், பத்திரிகைகளும் அந்த மாமனிதரின் விஷயத்தில் எவ்வளவு மெத்தனப் போக்கில் இருக்கின்றார்கள்? பன்னூல் ஆசிரியர் கொண்டு வந்த ஹதீஸ்களைப் பார்க்கும் போது இவருக்கு ஹதீஸ் ஞானம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் அடுத்த நூலிலிருந்து அப்படியே காப்பி அடித்திருக்கின்றார் என்று தெரிகின்றது.

இவருக்கு முஸ்லிம் நூலில் இடம் பெறும், ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம் என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

"என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'' என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் இங்கு சமர்ப்பிக்கின்றோம். இறைவனை அஞ்சுமாறு இவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இணை கற்பித்தல் தொடர்: 15

அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: ரூபான் எம்..எஸ்.சி.

இறைநேசர்கள் என்றால் அவர்களுக்கு எல்லா அதிகாரமும் இருக்கின்றது. அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எந்தச் சோதனையிலிருந்தும் காப்பாற்றி விடலாம்; நாம் தவறு செய்து விட்டால் கூட அல்லாஹ்விடம் அவர் பரிந்து பேசி, நமக்கு சொர்க்கத்தை வாங்கித் தந்து விடுவார் என்றெல்லாம் மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இறைநேசருக்கெல்லாம் பெரிய இறைநேசரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உலகத்தில் வாழும் போது அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அதிகாரம் என்ன? என்பதைத் தெளிவாக விளக்கக்கூடிய சம்பவம் உஹதுப் போரில் நடந்த சம்பவம். அந்த உஹதுப் போரில் நபி (ஸல்அவர்கள் செய்த ஒரு செயலை அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கிறான்.

வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அதிகாரம்

உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டு, அதன் காரணமாக அவர்களின் முகத்தில் இரத்தம் வடிந்த போது, "நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெற இயலும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் சபித்தனர். ஆனால் நடந்தது என்ன? அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இறைவன் கூறிவிட்டான். மேலும் உஹதுப் போரில் எதிரிகளுக்கு வெற்றியையும் வழங்கினான். முஸ்லிம்களின் தரப்பில் பெரிய சேதத்தையும் ஏற்படுத்தினான்.

உஹதுப் போரில் அவர்களின் பல் உடைந்த போது, எதிரிகள் எப்படி உருப்படுவார்கள்? என்று கோபப்பட்டார்கள். (முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள். (3:128) என்ற வசனம் இறங்கியது

இந்தச் சம்பவம் முஸ்லிமில் 3346வது செய்தியாக இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த வார்த்தையை யாரையும் சபிப்பதற்காகச் சொல்லவில்லை. தனக்கு ஏற்பட்ட காயத்தின்