ஏகத்துவம் ஜனவரி 2004

ஏகத்துவம் ஜனவரி 2004

பொருளடக்கம்

தலையங்கம்:

இறுதி நபியின் இறுதி ஹஜ்...........................2

பெருமானாரின் ஹஜ்: ஒரு நேர்முக வர்ணனை.........................................6

ஜிஹாதில் பெயரால் நடந்த உஸ்மான் (ரலி) கொலை....................................22

தொழுகை: உளூவை நீக்குபவை...........................................45

மலர் : 1

இதழ் : 11


தலையங்கம்

முரண்பாடுகள் தோன்றியது எப்படி?


இறுதி நபியின் இறுதி ஹஜ்

அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து மறைந்த ஹதீஸ் கலை விற்பன்னர் ஆவார்கள். ஹதீஸ் துறைக்கு இவர் ஆற்றிய சேவை அளப்பரிய ஒன்றாகும்.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூற்களான திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூற்களில் அடங்கியிருந்த பலவீனமான ஹதீஸ்களுக்கென தனி நூல்கள் கண்டது; புகாரி, முஸ்லிம் மற்றும் மேற்கண்ட ஆதாரப்பூர்வமான நூற்களிலிருந்து ஹதீஸ்களைப் பொறுக்கியெடுத்துப் பல்வேறு தலைப்புகளின் கீழ் வெளிவந்த ரியாளுஸ் ஸாலிஹீன், மிஷ்காத்துல் மஸாபீஹ், அத்தர்கீப் வத்தர்கீப் போன்ற நூல்களில் இடம்பெற்ற பலவீனமான ஹதீஸ்களுக்கு அடிக்குறிப்புகள் தந்தது; எண்ணற்ற நூல்களில் இடம் பெற்றுள்ள பலவீனமான, இட்டுக்கட்டப் பட்ட ஹதீஸ்களை இனங்காட்டுவதற்காக ஒரு தனி நூல் இயற்றியது என அன்னார் ஆற்றிய அருஞ்செயல்கள் ஹதீஸ் கலை தடத்தில் நாட்டப்பட்ட நிலையான மைல் கற்களாகும்.

ஹதீஸ்களின் தரங்களைப் பிரிப்பதில் இவர் வைத்திருக்கும் அளவுகோல்களில் மற்ற அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு இருப்பினும், ஹதீஸ்களில் இவர் கொண்டிருக்கும் புலமையில் அறிஞர்களுக்கு மத்தியில் மாற்றுக் கருத்தில்லை.

நபி (ஸல்) அவர்களின் தொழுகை ஒரு நேர்முகம் என்ற நூலைத் தந்து நபிவழித் தொழுகையை நேரடியாக அறியச் செய்தார். அதே பாணியில் நபி (ஸல்) அவர்களின் ஹஜ் நேர்முகம் என்ற நூலையும் தந்துள்ளார். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்கா சென்று மீண்டும் மதீனா திரும்பும் வரை ஆற்றிய ஹஜ் கடமைகள் பெரும்பாலானவற்றைப் படம் பிடித்தாற் போல் தொகுத்து நேர்முகமாக அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) அவர்கள் மட்டுமே! ஜாபிர் (ரலி) அறிவிக்கும் இந்த நீண்ட ஹதீஸ் முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா போன்ற நூல்களில் இடம் பெறுகின்றது. இந்த ஹதீஸானது ஹதீஸ் கலை அறிஞர்களிடம் அமோக வரவேற்பையும் பலத்த ஆதரவையும் பெற்றுள்ளது. இமாம் நவவீ போன்றோர் இந்த ஹதீஸை வெகுவாகப் பாராட்டுகின்றார்கள்.

ஷைஹ் அல்பானி அவர்கள், முஸ்லிமில் பதியப் பெற்ற ஜாபிர் (ரலி) ஹதீஸை மையமாகக் கொண்டு, நபி (ஸல்) அவர்களின் ஹஜ் நேர்முகத்தைத் தருகின்றார்கள். அவ்வாறு அந்த நேர்முகத்தைத் தருகையில் ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஹஜ் சம்பந்தப்பட்ட வேறு ஹதீஸ்கள் எந்தெந்த நூற்களில் பதிவாகியுள்ளனவோ அந்த ஹதீஸ்களிலிருந்து மேலதிகமான விளக்கங்களை அடைப்புக் குறிக்குள் கொண்டு வந்து நபி (ஸல்) அவர்களின் ஹஜ் பயணத்தைப் பற்றிய சட்ட ரீதியிலான மற்றும் சரித்திர ரீதியிலான முழுப் பரிமாணத்தையும் இந்த நேர்முக வெண்திரையில் ஓட விடுகின்றார்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால், நம்மை மதீனாவிலிருந்து மானசீகமாக நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கே அழைத்துச் செல்கின்றார்கள்.

பொதுவாக ஹாஜிகள் மட்டுமே ஹஜ் சம்பந்தப்பட்ட செய்திகளைப் பார்ப்பார்கள். மற்றவர்கள் இதை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அதற்குக் காரணம் ஹஜ் சம்பந்தப்பட்ட செய்திகள் பாட அமைப்பிலான சட்ட விளக்க வடிவத்தில் அமைந்திருப்பது தான். வரலாற்று ரீதியில் அமையும் போது மற்றவர்களும் அதைப் பார்க்க, படிக்க ஆர்வப்படுவார்கள்.

குறிப்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமுதாயத்திலிருந்து பிரியாவிடை கொடுக்கும் வகையில் வழிப் பயணம் சொல்லும் உருக்கமான அந்த நிகழ்ச்சி இந்த ஹஜ்ஜின் போதே துவங்கி விட்டது. ஹஜ்ஜின் போது அவர்கள் நடந்து கொண்ட விதம், உலகை விட்டுப் பிரியப் போகும் தந்தை தன் மகனுக்கு எப்படி துடித்துத் துடித்து அறிவுரை சொல்வாரோ அது போன்றே அமைந்திருந்தது.

"உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது'' என்று நபி (ஸல்) அவர்கள் வெளிப்படையாகவே முன்னறிவிப்பு செய்து விடுகின்றார்கள். அந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்களின் இந்த ஹஜ் பயணம் அதி முக்கியத்துவம் கொண்ட வரலாற்று நிகழ்ச்சியாக அமைந்து, ஹாஜிகளை மட்டுமல்லாது மார்க்கத்தில் ஆர்வம் கொண்ட அனைவரையும் ஈர்த்துப் பிடித்து வைக்கின்றது.

இப்படிப்பட்ட சிறப்பம்சங்களை இது தன்னகத்தே கொண்டிருப்பதால் ஏகத்துவம் மாத இதழ் இதன் மொழிபெயர்ப்பை உங்களுக்கு வழங்குகின்றது. இந்த மொழிபெயர்ப்பின் போது, மூல நூலாசிரியர் அல்பானி அவர்கள், ஜாபிர் (ரலி)யின் மற்ற அறிவிப்புகளிலுள்ள மேலதிகமான விளக்கங்களை எடுத்தெழுதும் போது, எந்த நூலிலிருந்து அதைப் பெற்றாரோ அந்த நூலின் பெயர்களை முஸ்லிம் ஹதீஸின் அடைப்புக் குறிக்குள் கொண்டு வந்துள்ளார்கள். படிப்பவர்களுக்கு இது தடங்கலாக அமையும் என்பதால் நாம் அது போன்று தமிழில் கொண்டு வரவில்லை.

எனவே இந்த சிறு முயற்சியில் வெளியான இந்த மொழி பெயர்ப்பை வாசகர்கள் தாங்களும் படிப்பதுடன் மற்றவர்களுக்கும் - குறிப்பாக ஹாஜிகளிடம் வழங்கி அவர்களை ஏகத்துவத்தின் சந்தாதாரர்களாக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இத்துடன்....

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இறுதி ஹஜ்ஜின் போது முஸ்லிம்கள் தங்களுக்குள் சண்டையிட்டு உயிரைப் பறித்துக் கொள்ளக் கூடாது என்பதை மிகவும் வலியுறுத்தியதை புகாரியில் இடம்பெறும் கீழ்கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது ஆற்றிய உரையில், "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களுடைய புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்கள் செயல்கள் குறித்து உங்களிடம் விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகேடர்களாக நீங்கள் மாறி விடாதீர்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),

நூல்: புகாரி 7447

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கையை, கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்திலேயே முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்கத் துவங்கி விட்டது. இறுதி நபியவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது செய்த எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விட்டு, ஜிஹாத் என்ற பெயரால் உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்ட அந்த சோக வரலாற்றையும் இதே இதழில் நாம் காணவிருப்பது இந்த இதழின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெருமானாரின் ஹஜ் ஒரு நேர்முக வர்ணனை

எம். ஷம்சுல்லுஹா

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒன்பது ஆண்டுகள் ஹஜ் செய்யாது தங்கியிருந்தனர்.

பிறகு பத்தாம் ஆண்டில் "இந்த ஆண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்கின்றார்கள்' என்று மக்களிடம் அறிவிக்கச் செய்தார்கள்.

உடனே அதிகமான மக்கள் மதீனாவிற்கு வந்தனர். வாகனத்திலோ அல்லது நடந்தோ வர சக்தி பெற்ற எவரும் மதீனா வரத் தவறவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்ல வேண்டும் என்பதற்காக மக்கள் (மதீனா) வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி அவர்கள் (ஹஜ்) செய்வது போல் தாங்களும் (ஹஜ்) செய்ய வேண்டும் என்று நாடிய வண்ணம் இருந்தனர்.

மதீனாவாசிகளின் இஹ்ராம் எல்லை "துல்ஹுலைஃபா' என்றும், ஷாம்வாசிகளின் இஹ்ராம் எல்லை "ஜுஹ்ஃபா' என்றும், இராக்வாசிகளின் இஹ்ராம் எல்லை "தாது இர்க்' என்றும், நஜ்த்வாசிகளின் இஹ்ராம் எல்லை "கர்ன்' என்றும், யமன்வாசிகளின் இஹ்ராம் எல்லை "யலம்லம்' என்றும் நபி (ஸல்) அவர்கள் (இஹ்ராம் கட்டும் எல்லைகள் பற்றிக்) குறிப்பிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்கஃதா 25 அல்லது 26ல் புறப்பட்டார்கள். அவர்கள் (தம்முடன்) பலிப் பிராணிகளைக் கொண்டு வந்தார்கள். நாங்களும் அவர்களுடன் புறப்பட்டோம். எங்களுடன் பெண்களும், குழந்தைகளும் இருந்தனர்.

நாங்கள் (இஹ்ராம் கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவை அடைந்த போது (அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியான) அஸ்மா பின்த் உமைஸ் அவர்கள், முஹம்மது பின் அபூபக்ர் என்ற குழந்தையைப் பெற்றார்கள்.

"நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அஸ்மா பின்த் உமைஸ்) கேட்டனுப்பினார்கள். "நீ குளித்து விட்டு, இரத்தத்தை உறிஞ்சுகின்ற துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு இஹ்ராம் கட்டிக் கொள்'' என்று நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்தார்கள்.

(தல்பியா எதுவும் சொல்லாமல்) மவுனமான நிலையில் பள்ளியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.

இஹ்ராம் அணிதல்

பிறகு கஸ்வா (என்ற தமது ஒட்டகத்தின்) மீது ஏறினார்கள். அவர்கள் ஏறிய ஒட்டகம் பாலைவனத் தரையில் நிமிர்ந்து நின்றதும் நபி (ஸல்) அவர்கள் (லப்பைக் ஹஜ்ஜன் - ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்து விட்டேன் என்ற) ஹஜ்ஜுக்கான தல்பியா கூறி (இஹ்ராம் கட்டி)னார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் ஹஜ்ஜுக்காக மட்டுமே இஹ்ராம் கட்டினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் என் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் வாகனத்தில் அமர்ந்தும், நடந்தும் வருவதை நான் (ஜாபிர்) கண்டேன். அது போன்றே அவர்களது வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும், அவர்களது பின் பக்கத்திலும் (மக்கள் வருவதைக்) கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மத்தியில் இருக்கும் போது அவர்களுக்குக் குர்ஆன் அருளப்படும். அவர்கள் அதன் விளக்கத்தை அறிந்து கொள்வார்கள். (அதன் அடிப்படையில்) அவர்கள் செய்கின்ற வணக்கத்தை நாங்களும் அப்படியே செய்வோம்.

"லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க், லாஷரீக்க லக்'' என்ற அல்லாஹ்வை ஒருமைப்படுத்தும் தல்பியாவை நபி (ஸல்) அவர்கள் (இஹ்ராமின் போது) சொன்னார்கள். மக்களும் இதைச் சொல்லிக் கொண்டு இஹ்ராம் கட்டினர். "லப்பைக் தல் மஆரிஜ் லப்பைக் தல் ஃபவாழில்'' என்று கூடுதலாகவும் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதில் எதையும் மறுக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தல்பியாவை விடாது முழங்கிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் - லப்பைக்கல்லாஹும்ம - லப்பைக்க பில் ஹஜ் என்று உரத்துக் கூறினோம். நாங்கள் ஹஜ்ஜையன்றி வேறெதனையும் மனதில் உறுதி கொண்டிருக்கவில்லை. ஹஜ்ஜுடன் நாங்கள் உம்ராவைக் கலக்கவில்லை. நாங்கள் (ஹஜ்ஜுடன் சேர்த்து) உம்ரா செய்வதை அறிந்திருக்கவில்லை. (அதனால்) தனி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினோம்.

ஆயிஷா (ரலி) உம்ரா செய்வதற்காக வந்து கொண்டிருக்கையில் சரிப் என்ற இடத்தை அடைந்ததும் அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டது.

மக்காவில் நுழைதல்

முற்பகல் நேரம் உயரும் போது நாங்கள் மக்காவில் நுழைந்தோம். துல்ஹஜ் மாதம் நான்காம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்களுடன் கஅபாவிற்கு (அருகில்) வந்தோம்.

அதன் பின் நபி (ஸல்) அவர்கள் பள்ளியின் வாசலுக்குச் சென்று தமது வாகனத்தைப் படுக்க வைத்து விட்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள்.

கஅபாவின் மூலையை - ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட்டார்கள்.

பிறகு (கஅபாவை தமது இடது பக்கம் ஆக்கியவாறு) தமது வலது பக்கமாகச் சென்றார்கள். மீண்டும் அதன் பால் திரும்ப வரும் வரை மூன்று முறை வேகமாக நடந்தார்கள். நான்கு முறை அமைதியாக நடந்தார்கள்.

பிறகு மகாம் இப்ராஹீமை நோக்கிச் சென்று, "வத்தஹிதூ மின் மகாமி இப்ராஹீம முஸல்லா'' என்று மக்களுக்குக் கேட்கச் செய்யும் விதமாக தமது குரலை உயர்த்திக் கூறினார்கள். தமக்கும் கஅபாவிற்கும் இடையில் மகாம் இப்ராஹீமை ஆக்கிய வண்ணம் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களிலும், "குல்யா அய்யுஹல் காஃபிரூன்' மற்றும் "குல்ஹுவல்லாஹு அஹது' ஆகிய அத்தியாயங்களை ஓதினார்கள்.

பிறகு ஜம்ஜமை நோக்கிச் சென்று அதிலிருந்து குடித்தார்கள். தமது தலையிலும் ஊற்றிக் கொண்டார்கள். பிறகு கஅபாவின் மூலைக்கு வந்து முத்தமிட்டார்கள்.

ஸஃபா, மர்வாவில்...

ஸஃபா (செல்லும்) வாசல் வழியாக ஸஃபாவை நோக்கி வந்தார்கள். ஸஃபாவை நெருங்கியதும், "இன்னஸ் ஸஃபா வல் மர்வத மின் ஷஆரில்லாஹ்'' என்று ஓதினார்கள். அல்லாஹ் முதலில் ஸஃபாவைச் சொல்லியிருப்பதால் நான் ஸஃபாவைக் கொண்டே துவக்குகின்றேன் என்று சொன்னார்கள். அதன் படி ஸஃபாவிலிருந்து (தமது ஓட்டத்தை) துவங்கும் விதமாக அதன் மீது ஏறி கஅபாவைப் பார்த்தார்கள்.

கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை மூன்று முறை ஒருமைப் படுத்தி தக்பீர் சொல்லிப் புகழ்ந்தார்கள்.

"லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீது வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு அன்ஜஸ வஃதஹு, வநஸர அப்தஹு, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு'' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணையானவன் இல்லை. அவனுக்கு ஆட்சியதிகாரம் சொந்தமானது. அவனுக்கே புகழும் சொந்தம். அவனே உயிர்ப்பிக்கின்றான். அவனே மரணிக்கச் செய்கின்றான். அவன் அனைத்திலும் ஆற்றல் பெற்றவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் இல்லை. அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றிக் கொடுத்தான். அவன் தன் அடியாருக்கு உதவி செய்தான். (எதிரிகளின்) படைகளை அவனே தோற்கடித்தான்) என்று சொன்னார்கள். பிறகு இதற்கிடையே அவர்கள் துஆவும் செய்தார்கள். அவர்கள் இவ்வாறு மூன்று தடவை சொன்னார்கள்.



பிறகு இறங்கி மர்வாவை நோக்கி நடக்கலானார்கள். அவர்கள் இறங்கி பத்னுல்வாதியில் கால் வைத்தவுடன் ஓடலானார்கள். அவர்கள் மர்வாவில் கால் வைத்து ஏறத் துவங்கி மர்வாவை அடையும் வரை நடக்கலானார்கள். இறுதியாக மர்வாவுக்கு வந்து அதன் மீது ஏறி கஅபாவைப் பார்த்தார்கள்.

ஸஃபாவில் செய்தது போன்றே மர்வாவிலும் செய்தார்கள்.

மாற்றல் உத்தரவு

மர்வாவில் ஏழாவதாக அமைந்த அவர்களது கடைசி ஸஈ முடிவுற்றதும், "மக்களே! இப்போது நான் அறிந்து கொண்ட (ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ராவும் செய்வது கூடும் என்ற) விபரத்தை முற்கூட்டியே அறிந்திருந்தால் நான் பலிப் பொருட்களைக் கொண்டு வராமல் இருந்திருப்பேன். (ஹஜ்ஜுக்குப் பதிலாக) அதை உம்ராவாக ஆக்கியிருப்பேன். எனவே உங்களில் பலிப் பிராணிகளைக் கொண்டு வராதவர் இஹ்ராமைக் களைந்து விட்டு இதை உம்ராவாக ஆக்கிக் கொள்வாராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இன்னோர் அறிவிப்பின் படி - நபி (ஸல்) அவர்கள், "உங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுங்கள். கஅபாவில் தவாஃப் செய்யுங்கள், ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸஈ செய்யுங்கள். முடியைக் குறைத்துக் கொள்ளுங்கள். (மக்காவில்) இஹ்ராமிலிருந்து விடுபட்டவர்களாகத் தங்கிக் கொள்ளுங்கள். துல்ஹஜ் பிறை 8ம் நாள் அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளுங்கள். இதற்கு முன்னர் செய்ததை - முதலில் உம்ரா செய்து இஹ்ராமைக் களைந்து விட்டு மீண்டும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி ஹஜ் செய்யும் - தமத்துஃ வகை* ஹஜ்ஜாக ஆக்கிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.)

இப்படி நபி (ஸல்) அவர்கள் சொன்னதும் மர்வாவின் அடியில் நின்று கொண்டிருந்த சுரகா பின் மாலிக் பின் ஜுஷ்அம் என்பார், "அல்லாஹ்வின் தூதரே! எங்களது உம்ரா, எங்களது இந்த (முதலில் உம்ரா செய்து இஹ்ராமைக் களைந்து விட்டு மீண்டும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி ஹஜ் செய்யும்) தமத்துஃ வகை ஹஜ் இந்த ஆண்டில் மட்டும் தான் கடமையா? அல்லது இனி என்றைக்குமா?'' என்று வினவினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இனி என்றைக்கும் தான் என்று காட்டும் விதமாக) தமது கைவிரல்களை ஒன்றை இன்னொன்றோடு கோர்த்துக் காட்டினார்கள். மேலும் "கியாமத் நாள் வரை ஹஜ்ஜில் உம்ரா நுழைந்து விட்டது. இந்த ஆண்டிற்கு மட்டுமல்ல! மாறாக என்றைக்கும் தான்! இந்த ஆண்டிற்கு மட்டுமல்ல! மாறாக என்றைக்கும் தான்!'' என்று மூன்று முறை கூறினார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இப்போது தான் படைக்கப் பட்டிருக்கின்றோம் என்பது போல் (கருதி) எங்களுக்கு எங்கள் மார்க்கத்தை விளக்குங்கள். இன்றைய தினம் செய்யும் அமல் எந்த அடிப்படையில்? ஏற்கனவே எழுதுகோல் எழுதி முடிந்து போன விதியில் அடிப்படையிலா? அல்லது இனி நமக்கு நடக்கப் போகும் விஷயங்கள் அடிப்படையிலா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(இனி நடக்கப் போகும் விஷயங்கள் அடிப்படையில்) அல்ல! ஏற்கனவே எழுதுகோல் எழுதி முடிந்து போன விதிகளின் அடிப்படையில் தான்!'' என்று பதிலளித்தார்கள். "அப்படியானால் அமல் ஏன் செய்ய வேண்டும்?'' என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் அமல் செய்யுங்கள். ஏனெனில் ஒருவர் எதற்காகப் படைக்கப் பட்டிருக்கின்றாரோ அதை நோக்கி அவர் எளிதாக இழுத்துச் செல்லப் படுவார்'' என்று பதிலளித்தார்கள்.

நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டதும் பலிப்பிராணிகளைப் பலியிடுமாறும், பலிப்பிராணி இல்லாதவர் (மக்காவில்) மூன்று நோன்புகளும் ஊர் திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும் என்றும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். எங்களில் உள்ள ஆட்கள் பிராணிகளைப் பலி கொடுப்பதில் கூட்டு சேர்ந்து கொண்டனர். எங்களில் ஏழு பேர்கள் ஓர் ஒட்டகத்திற்கு என்ற கணக்கில் பங்கு சேர்ந்தோம்.

(நபி (ஸல்) அவர்கள், இஹ்ராமிலிருந்து விடுபடுங்கள் என்று சொன்னதும், இஹ்ராமின் போது தடுக்கப் பட்ட காரியங்கள் எத்தனையோ உள்ளன. அதனால்) எந்தக் காரியத்திலிருந்து நாங்கள் விடுபடுவது? என்று கேட்டோம். எல்லாக் காரியங்களிலிருந்தும் விடுபடுதல் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

(இஹ்ராமிலிருந்து விடுபட்டு புனித பூமியிலேயே மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடலாம் என்ற) இந்த அனுமதி எங்களுக்குப் பெரும் கஷ்டமாக ஆனது. இதன் காரணமாக எங்கள் உள்ளங்கள் நெருக்கடிக்கு உள்ளாயின.

பத்ஹாவில் தங்குதல்

நாங்கள் (தங்குவதற்காக பொடிக் கற்கள் நிறைந்த ஓடைப் பகுதியான) பத்ஹாவுக்குச் சென்றோம். "இன்றைய தினம் என் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி உள்ளது'' என்று எங்களுடன் உள்ளவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஹஜ்ஜை மட்டுமே நாடி வேறெதனையும் குறியாகக் கொள்ளாமல் ஹாஜிகளாகப் புறப்பட்டு வந்தோம். நமக்கும் நாம் அரஃபா செல்வதற்கும் நான்கு அல்லது ஐந்து இரவுகள் இருக்கின்றன. அதற்குள்ளாக நம்முடைய மனைவியரிடம் இல்லறத்தில் ஈடுபடும்படி நமக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு விட்டார்களே! பெண்களிடம் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டு இந்திரியத் துளிகள் சொட்டிய (பின் குளித்து முடித்த) வண்ணம் நாம் அரஃபாவிற்கு வருவது முறையாகுமா? என்று நாங்கள் கூறிக் கொண்டோம். (மேற்கண்ட இந்தச் செய்தியை அறிவிக்ûயில், ஜாபிர் (ரலி) கையசைத்தவாறு கூறிய அந்தக் காட்சியை இப்போதும் நான் நேரில் பார்ப்பது போல் உள்ளது என்று அறிவிப்பாளர் கூறுகின்றார்) நாம் ஹஜ் என்று குறிப்பிட்டு வந்திருக்கும் போது இதை எப்படி (முதலில் உம்ரா செய்து இஹ்ராமைக் களைந்து விட்டு மீண்டும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி ஹஜ் செய்யும்) தமத்துஃ வகை ஹஜ் ஆக ஆக்கிக் கொள்ள முடியும்? என்றும் நபித்தோழர்கள் வினவினர்.

(நாங்கள் பேசிக் கொண்ட) இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்து விட்டது. இது அவர்களுக்கு வஹீ மூலம் தெரிந்ததா? அல்லது மக்கள் மூலமாகவே தெரிந்ததா? என்று எங்களுக்குத் தெரியாது.

ஆணைக்குக் கட்டுப் படுமாறு ஆற்றிய உரை

நபி (ஸல்) அவர்கள் இதைத் தெரிந்து கொண்டதும் எழுந்து நின்று உரையாற்றுகையில் அல்லாஹ்வைப் புகழ்ந்து பாராட்டினார்கள். "மக்களே! நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி என்னிடமே பாடம் நடத்துகின்றீர்களா? உங்களில் அல்லாஹ்வை மிக அஞ்சுபவன் நான்! உங்களில் மிக உண்மை சொல்பவன் நான்! உங்களில் மிக நல்லவன் நான் என்பதை நன்றாகவே நீங்கள் அறிந்து வைத்திருக்கின்றீர்கள். உங்களுக்கு நான் உத்தரவிடுவதை அப்படியே செய்யுங்கள். நான் மட்டும் பலிப்பிராணிகளைக் கொண்டு வரவில்லை என்றால் நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டது போல் நானும் விடுபட்டிருப்பேன். ஆனால் (நான் பலிப்பிராணிகளுடன் வந்துள்ளதால் அந்த) பலிப்பிராணிகள் உரிய இடத்தில் போய் சேரும் வரை நான் இஹ்ராமிலிருந்து விடுபட முடியாது. இப்போது நான் தெரிந்து கொண்டிருக்கும் (ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ராவும் செய்வது கூடும் என்ற) செய்தி முற்கூட்டியே தெரிந்திருந்தால் நான் பலிப் பிராணிகளைக் கொண்டு வந்திருக்க மாட்டேன். எனவே இஹ்ராமிலிருந்து நீங்கள் விடுபடுங்கள். (இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட காரியங்களை இப்போது செய்து கொள்ளுங்கள்)'' என்று குறிப்பிட்டார்கள்.

நாங்கள் எங்கள் மனைவியரிடம் இல்லறத்தில் ஈடுபட்டோம். நறுமணம் பூசிக் கொண்டோம். நாங்கள் எங்களது (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்து கொண்டோம். நாங்கள் செவியுற்றோம். (நபியவர்களின் கட்டளைக்குக்) கட்டுப்பட்டோம்.

நபி (ஸல்) அவர்களும், தம்முடன் பலிப் பிராணிகளைக் கொண்டு வந்தவர்களும் தவிர மற்ற மக்கள் அனைவரும் முடியைக் குறைத்துக் கொண்டு இஹ்ராமைக் களைந்தனர்.

அவ்வாறு பலிப் பிராணிகளைக் கொண்டு வந்தவர்களின் பட்டியலில் நபி (ஸல்) அவர்களையும் தல்ஹா (ரலி) அவர்களையும் தவிர வேறு யாருமில்லை.

யமனிலிருந்து அலீ (ரலி) வருகை

அலீ (ரலி) அவர்கள் யமனிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்குரிய (பலிப் பிராணிகளான) ஒட்டகங்களை வாங்கிக் கொண்டு வந்தார்கள்.

அப்போது ஃபாத்திமா (ரலி) இஹ்ராமைக் களைந்து, தலை சீவி, வண்ண ஆடை அணிந்து கண்ணுக்கு மை தீட்டியிருந்தார்கள். இந்த நிலையில் அவரைக் கண்ட அலீ (ரலி), அந்தச் செயல் தமக்குப் பிடிக்கவில்லை என்பதை அவரிடம் தெரிவித்து, "உன்னை இவ்வாறு செய்யக் கட்டளையிட்டவர் யார்?'' என்று கேட்டார். "என்னுடைய தந்தை தான் இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டார்கள்'' என்று ஃபாத்திமா (ரலி) கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியை அலீ (ரலி) அவர்கள் இராக்கில் இருக்கும் போது சொல்லிக் கொண்டிருந்தார்கள். (அப்போது அவர் குறிப்பிட்ட விபரம் வருமாறு) ஃபாத்திமா (ரலி) இவ்வாறு பதிலளித்ததும் அவர் செய்த இந்தச் செயலைக் கண்டிக்கும் விதமாகவும், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஃபாத்திமா (ரலி) குறிப்பிட்ட கட்டளை தொடர்பாக விளக்கம் கேட்டும் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். ஃபாத்திமா செய்த செயல் தனக்குப் பிடிக்கவில்லை என்று அவர்களிடம் தெரிவித்த போது என்னுடைய தந்தை தான் இவ்வாறு செய்யும் படி கட்டளையிட்டதாக அவர் பதில் சொல்கின்றார் என்று நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள், "ஃபாத்திமா உண்மை சொன்னார். ஃபாத்திமா உண்மை சொன்னார். ஃபாத்திமா உண்மை சொன்னார். நான் தான் ஃபாத்திமாவுக்கு அவ்வாறு கட்டளையிட்டேன்'' என்று பதில் சொன்னார்கள்.

"நீ ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணியும் போது என்ன சொன்னாய்?'' என்று அலீ (ரலி)யிடம் விசாரித்தார்கள். அதற்கு அலீ (ரலி), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்தது மாதிரியே நானும் ஹஜ் செய்கின்றேன் என்று கூறினேன்'' என்று பதிலளித்தார்.

"என்னுடன் பலிப் பிராணிகள் உள்ளன. (நான் இஹ்ராமைக் களையாமல் இருப்பது போல்) நீ இப்போது இஹ்ராமைக் களையாமல் இருந்து விடு'' என்று சொன்னார்கள்.

யமனிலிருந்து அலீ (ரலி) கொண்டு வந்த பலி ஒட்டகங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து கொண்டு வந்த ஒட்டகங்களின் எண்ணிக்கை மொத்தம் நூறாகும்.

ஆக, நபி (ஸல்) அவர்களும், இன்னும் யாரிடம் பலிப் பிராணிகள் இருந்தனவோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டு முடியைக் குறைத்துக் கொண்டனர்.

இஹ்ராம் அணிந்தவர்களாக மினாவை நோக்கிப் பயணம்

துல்ஹஜ் பிறை 8 ஆனதும் மக்கா எங்கள் பின்புறமாக அமைந்திருக்க மினாவை நோக்கி மக்கள் சென்றனர். (அவர்கள் தங்கியிருந்த) பத்ஹாவிலிருந்து ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தனர்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி)யிடம் சென்றார்கள். அப்போது அவர் அழுது கொண்டிருப்பதைக் கண்டதும், "என்ன விஷயம்?'' என்று கேட்டார்கள். "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள். நான் இன்னும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. கஅபாவை தவாஃபும் செய்யவில்லை. இப்போது மக்கள் ஹஜ்ஜுக்காக சென்று கொண்டிருக்கின்றார்கள்'' என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் இதை ஆதமின் பெண் மக்கள் மீது (இயற்கையாகவே) விதித்திருக்கும் விஷயமாகும். நீ குளித்து விட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொண்டு ஹஜ் செய்! ஹஜ் செய்பவர் செய்யும் எல்லா வணக்கத்தையும் செய்! ஆனால் நீ தவாஃப் செய்யாதே! தொழாதே! அது போலவே தவாஃப் செய்யாமல் (மற்றும் தொழாமல்) ஹஜ்ஜுடைய மற்ற அனைத்து வணக்கங்களையும் செய்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறிச் சென்று லுஹர், அஸர், மக்ரிப், இஷா, ஃபஜ்ர் ஆகியவற்றை மினாவிலேயே தொழுதார்கள்.

சூரியன் உதிக்கின்ற வரை கொஞ்ச நேரம் அங்கு தங்கினார்கள்.

கம்பளியால் அமைந்த கூடாரத்தை (அரஃபாவுக்கு அருகிலுள்ள) நமிராவில் அடிக்கும் படி உத்தரவிட்டார்கள்.

அரஃபாவை நோக்கிப் பயணம்

(ஒன்பதாம் நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அரஃபாவை நோக்கி) சென்றார்கள். குறைஷிகள், அறியாமைக் காலத்தில் தாங்கள் செய்து கொண்டிருந்த அதே வழக்கப்படி* நபி (ஸல்) அவர்களும் முஜ்தலிஃபாவில் உள்ள மஷ்அரில் ஹராமில் நிற்பார்கள்! அவர்களின் தங்குமிடமும் நிச்சயமாக அங்கு தான் அமையும் என்று உறுதியாக எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் (அதற்கு மாற்றமாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஜ்தலிஃபாவில் தங்காமல்) கடந்து சென்று அரஃபாவுக்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள். நமிராவில் அவர்களுக்குக் கூடாரம் அமைக்கப் பட்டு தயார் நிலையில் இருக்கக் கண்டு அங்கேயே தங்கினார்கள்.

*(குறைஷிகள் தங்களை ஹரமைப் பரிபாலணம் செய்யும் உயர் குலத்தார் என்று கருதிக் கொண்டு, மற்றவர்களைப் போல் அரஃபாவில் போய் தங்காமல் முஜ்தலிஃபாவிலேயே தங்கிக் கொள்வர். இதையே நபி (ஸல்) அவர்களும் செய்வார்கள் என்று எதிர்பார்த்தனர்)

சூரியன் சாயத் தொடங்கியதும், ஒட்டகத்தைக் கொண்டு வரும் படி கட்டளையிட்டார்கள். அது பயணத்திற்குத் தயார் ஆக்கப் பட்டவுடன் அதில் பத்னுல்வாதிக்கு வந்தார்கள். (பத்னுல்வாதி என்பது உர்னா என்ற ஓடையாகும். ஆனால் இது அரஃபா எல்லையில் இல்லை)

அரஃபா பேருரை

இப்போது மக்களுக்கு உரையாற்றத் துவங்கி அவர்கள் கூறியதாவது:

(புனித மிக்க) இந்த ஊரில், இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அது போல் உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் (உங்கள் மானம், மரியாதைகளும்) புனிதம் வாய்ந்தவையாகும். அறியாமைக் காலத்து அனைத்துக் காரியங்களும் என் இரு பாதங்களுக்கடியில் போட்டுப் புதைக்கப் படுகின்றன. அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப் படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் ரத்து செய்யப்படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும். ரபீஆ அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார். இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப் படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப் படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்) அறியாமைக் காலத்து வட்டி (இன்று) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் நான் ரத்து செய்யும் வட்டி (எனது பெரிய தந்தை) அப்பாசுக்கு வர வேண்டிய எங்களுடைய வட்டியாகும். (இன்று) அந்த வட்டி அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றது. பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை அமானிதமாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். (திருமணம் முடியுங்கள் என்ற) அல்லாஹ்வின் வார்த்தையின் அடிப்படையிலேயே அவர்களது கற்புகளை அனுபவிக்கின்றீர்கள்.

நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. இது உங்கள் மனைவியர் உங்களுக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும். இதற்கு மாற்றமாக அவர்கள் நடந்தால் காயம் ஏற்படுத்தாத வகையில் அவர்களை அடியுங்கள். நீங்கள் நல்ல முறையில் உணவும் உடையும் உங்கள் மனைவியருக்கு வழங்க வேண்டும். இது நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும். உங்களிடம் ஒன்றை விட்டுச் செல்கின்றேன். அதை நீங்கள் கடைப்பிடிக்கும் போதெல்லாம் வழி கெடவே மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும்.

"நீங்கள் (மறுமையில்) என்னைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். அப்போது நீங்கள் என்ன (பதில்) சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். "உங்கள் தூதுச் செய்தியை எடுத்து வைத்து விட்டீர்கள். அதை நிறைவேற்றி விட்டீர்கள். உங்கள் சமுதாயத்திற்கு நன்மையை நாடினீர்கள். உங்கள் மீதுள்ள பொறுப்பை ஆற்றி விட்டீர்கள் என்று நாங்கள் சான்று பகர்வோம்'' என்று பதிலளித்தனர்.

அப்போது அவர்கள் தமது ஆட்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தியும் பின்னர் அதை மக்களை நோக்கி தாழ்த்தியும், "யா அல்லாஹ்! நீயே சாட்சி! யா அல்லாஹ்! நீயே சாட்சி!'' என்று சொன்னார்கள்.

சேர்த்துத் தொழுதல் மற்றும் அரஃபாவில் தங்குதல்

பிறகு பிலால் (ரலி) ஒரே ஒரு முறை பாங்கு சொன்னார். பிறகு இகாமத் சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுதார்கள். பிறகு பிலால் இகாமத் சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் அஸரைத் தொழுதார்கள்.

இவ்விரண்டிற்கும் இடையே வேறெதையும் அவர்கள் தொழவில்லை.

பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் ஏறி (ஜபல் ரஹ்மத்திற்கு அருகிலுள்ள) இடத்திற்கு வந்தார்கள். ஒட்டகத்தின் வயிற்றுப் பகுதியை (ஜபல் ரஹ்மத்தின் அடிவாரத்தில் உள்ள) பாறைகளை நோக்கியும், நடந்து செல்லும் மக்கள் கூட்டத்தை தமக்கு முன்னாலும் ஆக்கியவாறு கிப்லாவை நோக்கி நின்றார்கள்.

சூரியன் மறையும் வரை நின்று கொண்டிருந்தார்கள். அப்போது சூரியனின் மஞ்சள் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்கி அதன் முழு வட்டமும் மறைந்து விட்டிருந்தது.

"நான் இந்த இடத்தில் நின்றேன். (இங்கு தான் எல்லோரும் நிற்க வேண்டும் என்று கருதி விடக் கூடாது) அரஃபா முழுவதுமே (தங்கி) நிற்கும் இடமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உஸாமா பின் ஸைதை தமக்குப் பின்னால் உட்கார வைத்திருந்தார்கள்.

அரஃபாவிலிருந்து கிளம்புதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமைதியாக (அரஃபாவிலிருந்து) திரும்பினார்கள். (ஒட்டகம் விரைந்து செல்லக் கூடாது என்பதற்காக) ஒட்டகத்தின் கடிவாளத்தை இறுக்கிப் பிடித்தார்கள். அதன் விளைவாக அதனுடைய தலை, ஓய்வுக்காக காலை மடக்கி வைக்கும் பகுதியைத் தொட்டது. "மக்களே! அமைதி! அமைதி!'' என்று தமது வலது கையின் உள்ளங்கை வானத்தை நோக்கி அமைந்திருந்தவாறு சைகை செய்தார்கள்.

திட்டுத் திட்டாக அமைந்திருக்கும் மணல் திட்டுக்கு அவர்கள் வரும் போது ஒட்டகம் ஏறுகின்ற வரை அதன் கடிவாளத்தைத் தளர்த்தினார்கள்.

முஜ்தலிஃபாவில் இரவு தங்குதல் மற்றும் சேர்த்துத் தொழுதல்

இவ்வாறு அவர்கள் முஜ்தலிஃபாவை அடைந்ததும் அங்கு ஒரு பாங்கு இரண்டு இகாமத்துகள் சொல்லப்பட்டு மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்.

அவ்விரு தொழுகைகளுக்கு இடையே வேறெதையும் தொழவில்லை.

பிறகு ஃபஜ்ர் உதயமாகின்ற வரை ஒருக்களித்துப் படுத்துக் கொண்டார்கள்.

ஃபஜ்ர் நேரம் தெளிவானதும் ஒரு பாங்கு, ஒரு இகாமத்தைக் கொண்டு ஃபஜ்ர் தொழுதார்கள்.

மஷ்அருல் ஹராமில் நிற்குதல்

பிறகு ஒட்டகத்தில் அமர்ந்து மஷ்அருல் ஹராமுக்கு வந்தார்கள். அதன் மீது ஏறினார்கள்.

கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். தக்பீர் சொன்னார்கள். "லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு'' என்று கூறினார்கள்.

காலை நன்கு வெளுக்கின்ற வரை நின்றார்கள்.

"இந்த இடத்தில் நான் நின்றிருக்கின்றேன். முஜ்தலிஃபா முழுவதும் நிற்கக் கூடிய இடமாகும்'' என்று சொன்னார்கள்.

முஜ்தலிஃபாவிலிருந்து கல்லெறியச் செல்லுதல்

சூரியன் உதிப்பதற்கு முன்னால் அமைதியான நிலையில் முஜ்தலிஃபாவிலிருந்து கிளம்பினார்கள்.

தமக்குப் பின்னால் ஃபழ்ல் பின் அப்பாஸை அமர்த்தி வைத்திருந்தார்கள். அவர் அழகிய முடியுடையவராகவும் வெள்ளை நிறம் கொண்டவராகவும் கவர்ச்சியானவராகவும் இருந்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செல்லும் போது அவர்கள் அருகே பெண்கள் கடந்து சென்றனர். ஃபழ்ல் பின் அப்பாஸ் அந்தப் பெண்களைப் பார்க்க முற்பட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை ஃபழ்லின் முகத்தில் வைத்து அதை மற்றொரு பக்கம் திருப்பினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பக்கத்திலிருந்து கையை மாற்றிக் கொண்டு வந்து ஃபழ்ல் பின் அப்பாஸின் முகத்தில் வைத்து அந்தப் பகுதியிலிருந்து அவர் பார்க்காதவாறு திருப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவ்வாறு பத்ன் முஹஸ்ஸிர் என்ற இடத்தை அடைந்ததும் சற்று வேகமாகச் சென்றார்கள்.

அமைதியாகச் செல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

கல் எறிதல்

பிறகு ஜம்ரத்துல் குப்ரா (கல்லெறியும் பெரிய இடத்தை) நோக்கிச் செல்லும் மையப் பாதையில் சென்று மரத்திற்கு அருகில் உள்ள கல்லெறி இடத்திற்கு வந்தார்கள்.

முற்பகல் நேரத்தில், அதில் சுண்டி விடும் அளவிற்குள்ளான ஏழு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல் எறியும் போதும் தக்பீர் சொன்னார்கள்.

பத்னுல் வாதி என்ற இடத்திலிருந்து (ஜம்ரத்தில் உகபாவில்) வாகனத்தில் இருந்த வண்ணம் (அவ்வாறு) கல்லெறியும் போது, "உங்களது ஹஜ் மற்றும் உம்ரா வணக்கங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்த எனது ஹஜ்ஜுக்குப் பிறகு ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.

நஹ்ருடைய (10ம்) நாளைக்குப் பிறகு தஷ்ரீக் (எனும் 11, 12, 13 ஆகிய) நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்த பிறகு கல்லெறிந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து கொண்டிருக்கையில் அவர்களை சுரக்கா பின் மாலிக் சந்தித்து, "அல்லாஹ்வின் தூதரே! இது எங்களுக்கு மட்டும் உரியதா? அல்லது இனி எல்லோருக்கும் பொதுவானதா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இது இனி என்றைக்கும் (எல்லோருக்கும்) உரியதாகும் என்று பதிலளித்தார்கள்.

பலியிடுதலும் மழித்தலும்

பிறகு பலியிடுமிடத்திற்கு திரும்பிச் சென்று 63 ஒட்டகங்களை தமது கையால் அறுத்தார்கள்.

மீதமுள்ளவற்றை அலீ (ரலி)யிடம் கொடுத்ததும் அவர்கள் அதை அறுத்தார்கள். தமது பலிப் பிராணிகளில் அலீ (ரலி) அவர்களைக் கூட்டு சேர்த்துக் கொண்டார்கள்.

(அறுக்கப் பட்ட) ஒவ்வொரு ஒட்டகத்திலிருந்தும் ஒரு துண்டை கொண்டு வரச் செய்தார்கள். அவை ஒரு சட்டியில் போடப் பட்டு சமைக்கப் பட்டது. அதன் இறைச்சியை அவ்விருவரும் சாப்பிட்டு, அதன் ஆனத்தையும் இருவரும் குடித்தனர்.

தமது மனைவியர் சார்பில் ஒரு மாட்டைப் பலியிட்டார்கள்.

நாங்கள் ஒட்டகத்தை அறுத்தோம். ஒட்டகம் (ஒவ்வொரு) ஏழு பேர்கள் சார்பில் அறுக்கப் பட்டது. அதுபோல் மாடும் (ஒவ்வொரு) ஏழு பேர்கள் சார்பில் அறுக்கப் பட்டது. நாங்களும் (அது போல்) ஒட்டகத்தில் ஏழு பேர்களாகக் கூட்டு சேர்ந்து கொண்டோம். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், "மாட்டில் கூட்டு சேரலாமா?'' என்று கேட்கப் பட்ட போது, "(இந்த விஷயத்தில்) மாடும் (கூட்டுச் சேர்ந்து கொடுக்கப் படும்) பலிப் பிராணி தான்'' என்று பதிலளித்தார்கள்.

நாங்கள் மினாவில் உள்ள மூன்று நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பலியிடப்பட்ட ஒட்டகம் மற்றும் மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடாமல் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களுக்கு (சாப்பிட) அனுமதியளித்து, "சாப்பிடுங்கள், சேமியுங்கள்'' என்று சொன்னார்கள். அது போன்று நாங்கள் சாப்பிட்டோம். மதீனா வரும் வரை சேமித்து வைத்தோம்.

குற்றமில்லை! குற்றமில்லை!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலியிட்டு விட்டு, தலை முடியை மழித்துக் கொண்டார்கள். மக்கள் பலியிடும் வரை பலியிடும் தினத்தில் மினாவிலேயே இருந்தார்கள். அன்றைய தினம் ஏதாவது ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக செய்து விட்ட மற்றொரு செயலைப் பற்றி அவர்கள் வினவிய போதெல்லாம் அவர்கள், "குற்றமில்லை, குற்றமில்லை'' என்று பதிலளித்துக் கொண்டிருந்தார்கள்.

அவ்வாறிருக்கையில் அவர்களிடம் ஒருவர் வந்து, "நான் பலியிடுவதற்கு முன்பு தலையை மழித்து விட்டேனே?'' என்று கேட்டார். "குற்றமில்லை'' என்று பதிலளித்தார்கள்.

வேறொருவர் வந்து "நான் கல்லெறிவதற்கு முன்பு தவாஃப் செய்து விட்டேன்'' என்று வினவினார். "குற்றமில்லை'' என்று பதிலளித்தார்கள்.

"நான் பலியிடுவதற்கு முன்பு தவாஃப் செய்து விட்டேன்''' என்று வினவினார். "நீ இப்போது பலியிடு, குற்றமில்லை'' என்று கூறினார்கள்.

பிறகு வேறொருவர் வந்து, "கல்லெறிவதற்கு முன்னர் பலியிட்டு விட்டேன்'' என்று வினவினார். "(இப்போது) கல்லெறி, குற்றமில்லை'' என்று பதிலளித்தார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், "நான் இந்த இடத்தில் அறுத்திருக்கின்றேன். இந்த (இடத்தில் தான் அறுக்க வேண்டும் என்றில்லை) மினா முழுவதுமே அறுக்குமிடம் தான்'' என்று சொன்னார்கள்.

மக்காவுடைய அனைத்து அகன்ற பாதைகளும் பாதை தான். பலியிடக்கூடிய இடம் தான். எனவே நீங்கள் உங்கள் கூடாரங்களிலிருந்தே அறுத்துக் கொள்ளுங்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பத்தாம் நாள் பேருரை

நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (10ம்) நாளில் உரையாற்றினார்கள். அப்போது, "எந்த நாள் மாபெரும் புனிதம் நிறைந்த நாள்?'' என்று கேட்டார்கள். "இந்த நாள் தான்'' என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர். "எந்த மாதம் மாபெரும் புனிதம் நிறைந்த மாதம்?'' என்று வினவினார்கள். "இந்த மாதம் தான்'' என்று தோழர்கள் பதிலளித்தனர். "எந்த ஊர் மாபெரும் புனிதம் நிறைந்த ஊர்?'' என்று வினவினார்கள். "இந்த ஊர் தான்'' என்று தோழர்கள் பதிலளித்தனர். "(புனிதமிக்க) இந்த ஊரில், இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அது போல் உங்கள் உயிர்களும், உங்கள் உடைமைகளும் புனிதம் வாய்ந்தவைகளாகும். நான் (தூதுச் செய்தியை) எடுத்துச் சொல்லி விட்டேனா?'' என்று கேட்டார்கள். தோழர்கள், ஆம் என்றனர். "யா அல்லாஹ், நீயே சாட்சியாக இரு'' என்று சொன்னார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் அமர்ந்து கஅபாவிற்கு வந்தார்கள். அனைவரும் தவாஃப் செய்தனர்.

(ஹஜ் கிரான் அடிப்படையில் இஹ்ராம் அணிந்த) அவர்கள் ஸஃபாவிற்கும் மர்வாவிற்கும் இடையில் ஸஈ செய்யவில்லை.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் லுஹர் தொழுதார்கள்.

பின்னர் ஜம்ஜம் நீரை புகட்டிக் கொண்டிருந்த அப்துல் முத்தலிப் கிளையாரிடம் வந்து, "அப்துல் முத்தலிப் கிளையினரே, (தண்ணீரை) இறையுங்கள். (நானும் நீர் புகட்ட விரும்புகின்றேன். ஆனால் நான் நீர் புகட்டுவதைக் கண்டு இதையே வணக்கம் என்று கருதி மக்களும் போட்டி போட்டுக் கொண்டு நீர் புகட்டத் துவங்கி விடுவார்கள்) நீர் புகட்டுவதில் மக்கள் உங்களை மிகைத்து விடுவார்கள் என்று நான் அஞ்சவில்லையெனில் உங்களுடன் சேர்ந்து தண்ணீர் இறைத்திருப்பேன்'' என்று சொன்னார்கள்.

அப்துல் முத்தலிப் கிளையினர் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு வாளி தண்ணீர் கொடுத்தார்கள் அதிலிருந்து அவர்கள் பருகினார்கள்.

ஆயிஷா (ரலி) சம்பவத்தின் முழு விபரம்

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. தவாஃபைத் தவிர ஹஜ்ஜின் மற்ற அனைத்து வணக்கங்களையும் செய்தார்கள்.

ஆயிஷா (ரலி) துப்புரவானதும் கஅபாவில் தவாஃப் செய்து ஸஃபா, மர்வாவில் ஸஈ செய்தார்கள். இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள், "உன்னுடைய ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் சேர்த்து முடித்து விட்டு இஹ்ராமைக் களைந்து விட்டாய்'' என்று (ஆயிஷா-ரலி-யிடம்) கூறினார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் கொண்டு செல்கையில் நான் உம்ராவை மட்டும் கொண்டு செல்ல வேண்டுமா?'' என்று ஆயிஷா (ரலி) வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களுக்குக் கிடைக்கின்ற (ஹஜ், உம்ராவுக்கான) நன்மை உனக்கும் உண்டு'' என்று சொன்னார்கள்.

"நான் (உம்ராவுக்கான) தவாஃப் செய்யவில்லை. அதற்குள் ஹஜ்ஜை முடித்து விட்டேனே என்று என்னுள் ஓர் உறுத்தல் இருந்து கொண்டிருக்கின்றது'' என்று ஆயிஷா (ரலி) சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மென்மையான மனிதராகத் திகழ்ந்தார்கள். ஆயிஷா (ரலி) எதையும் விரும்பினால் (மார்க்கத்துக்கு முரணில்லாத) அவரது விருப்பத்துக்குத் தக்க நடந்து கொள்வார்கள்.

(ஆயிஷா (ரலி)யின் சகோதரரிடம்) "அப்துர்ரஹ்மானே! ஆயிஷாவை அழைத்துச் சென்று தன்யீமிலிருந்து உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து அழைத்து வா'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனவே ஆயிஷா (ரலி) ஹஜ்ஜுக்குப் பின் உம்ரா செய்த வண்ணம் (மக்கா) வந்தார்கள். இது தஷ்ரீக் (எனும் 11, 12, 13 ஆகிய) நாட்களின் கடைசி இரவில் நடந்ததாகும்.

மக்கள் நபி (ஸல்) அவர்களை நெரிசலில் சிக்க வைத்த காரணத்தால் மக்கள் தம்மைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் (மக்களை) கண்காணிப்பதற்காகவும், மக்கள் தம்மிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்பதற்காகவும் தமது கைத்தடியால் ஹஜ்ருல் அஸ்வதைத் தொட்டு(முத்தமிட்டு)க் கொண்டு தமது வாகனத்தில் அமர்ந்தவாறே தவாஃப் செய்தார்கள்.

ஒரு பெண் தன்னுடைய குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தூக்கிக் காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! இந்தக் குழந்தைக்கும் ஹஜ் இருக்கிறதா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம், உனக்குக் கூலி உண்டு'' என்று பதிலளித்தார்கள்.

ஜிஹாத் ஓர் ஆய்வு தொடர் - 8

ஜிஹாதின் பெயரால் நடந்த உஸ்மான் (ரலி) கொலை!

அதிர்ச்சி வரலாறு

இப்னு ஜமீலா

"ஜிஹாத்' என்ற சொல்லின் விளக்கத்தையும், ஜிஹாத் (கிதால்) உட்பட இறைவன் நமக்கு விதியாக்கிய எந்தக் கடமையையும் நாம் விரும்பியவாறு செய்ய முடியாது; அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் வகுத்துத் தந்த விதிமுறைகளின் படியே நிறைவேற்ற வேண்டும் என்பதையும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் இது வரை பார்த்தோம்.

ஜிஹாத் (கிதால் - ஆயுதப் போர்) பற்றி முழுமையான ஆய்வு செய்யாமல் முஸ்லிம்களுக்குள் மோதிக் கொண்டதால் இஸ்லாமிய வரலாற்றில் பதியப்பட்டுள்ள துயரச் சம்பவங்கள் பற்றியும், அதிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் பற்றியும் பார்ப்போம்.

ஜிஹாத் (கிதால்) என்ற பெயரில் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்த போர் முனைகளில் வெட்டி வீழ்த்தப்பட்ட இஸ்லாத்தின் எதிரிகளின் எண்ணிக்கையை விட அவர்களுக்குப் பிறகு ஜிஹாத் (கிதால்) என்ற பெயரில் நடந்த கலகங்களினாலும், உள்நாட்டுக் குழப்பங்களினாலும் முஸ்லிம்களால் வெட்டிச் சாய்க்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்று சொல்லுமளவிற்கு பதிவு செய்யப்பட்ட இஸ்லாமிய வரலாறு எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது என்பது வேதனையான விஷயம்.

இத்தகைய துயரச் சம்பவங்கள் ஏற்படாமலிருக்க எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? முஸ்லிம்கள் தங்களுக்குள் ஏற்படும் பிணக்குகளுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை பெருமானார் (ஸல்) அவர்கள் வழங்காமலிருக்கவில்லை. இது பற்றிய எச்சரிக்கையைச் செய்யாமலும் மரணிக்கவில்லை.

பெருமானார் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது, அரஃபா பெருவெளியில் ஆற்றிய உரையில், முஸ்லிம்களின் உயிர்களும், உடைமைகளும், மானமும் கியாமத் நாள் வரை புனிதம் வாய்ந்தது என்று பலமுறை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். தனக்குப் பிறகு முஸ்லிம்கள் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்துக் கொண்டு இறை நிராகரிப்பாளர் (காஃபிர்)களாய் ஆகிவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் எச்சரித்திருக்கிறார்கள்.

பெருமானாரின் இறுதி ஹஜ் உரை

நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது ஆற்றிய உரையில், "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களுடைய புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்கள் செயல்கள் குறித்து உங்களிடம் விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகேடர்களாக நீங்கள் மாறி விடாதீர்கள். இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்து விடுங்கள். ஏனெனில் இந்தச் செய்தி எவரிடம் தெரிவிக்கப் படுகின்றதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவர்களில் சிலரை விட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராக இருக்கலாம்'' என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், "நான் (உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்து விட்டேனா? நான் உங்களிடம் சேர்த்து விட்டேனா?'' என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),

நூல்: புகாரி 7447

நபி (ஸல்) அவர்கள் விடை பெறும் ஹஜ்ஜின் போது, (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், "மக்களை மவுனமாக இருக்கச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். பின்னர், "எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் இறை மறுப்பாளர்களாக மாறி விடாதீர்கள்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி),

நூல்: புகாரி 6869

மேலும் பார்க்க: ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் எண்: 121, 1739, 1741, 4403, 4405, 4406, 5550, 6166, 6785, 6868, 7077, 7078, 7079, 7080

வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவிற்கு எண்ணிலடங்கா துன்பங்களை அனுபவித்தும், அரும்பெரும் தியாகங்களைச் செய்தும், ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டி, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் நிறுவினார்கள்.

அந்த சாம்ராஜ்ஜியத்தின் தூண்களான முஸ்லிம்கள் (நபித்தோழர்கள்) தங்களுக்கிடையே சண்டையிட்டு அழிந்து விடக் கூடாது, இஸ்லாமிய சாம்ராஜ்யம் வீழ்ந்து விடக் கூடாது என்பதில் எந்த அளவுக்குக் கவலையும், அக்கறையும் கொண்டு, தங்களின் இறுதிக் காலத்தில் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் எடுத்தியம்புகின்றன.

ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் மறைவிற்குப் பின் இன்று வரை முஸ்லிம் சமுதாயம் அவர்களின் எச்சரிக்கையை மறந்து செயல்படக் கூடிய காட்சியைத் தான் காண முடிகிறது. அதனால் தான் முஸ்லிம்களுக்குள் குழப்பமும், பிளவும், பிரிவும் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளக் கூடிய பரிதாப நிலை ஏற்பட்டது.

ஜிஹாத் (கிதால்) என்ற பெயரால் முஸ்லிம்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, ஒருவரையொருவர் வெட்டிச் சாய்க்கும் அளவிற்கு நிலைமை மோசமானதற்கு என்ன காரணம்? ஒன்றுபட்ட சமுதாயத்திற்கு மத்தியில் குழப்பம் எங்கிருந்து துவங்குகிறது? அது எவ்வாறு தொடர்கிறது? என்பதை பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் இஸ்லாத்தின் ஆரம்ப வரலாற்றிலிருந்து தொடங்கி தொடர்ந்து பார்ப்போம்.

பொதுவாகவே நபி (ஸல்) அவர்களின் காலந்தொட்டே முனாஃபிக் என்றழைக்கப்படும் நயவஞ்சகர்களின் ரகசிய நடவடிக்கைகள் முஸ்லிம்களைப் பெரிதும் பாதித்தே வந்துள்ளது. எதிரிகளையாவது அடையாளங்கண்டு அவர்களிடத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும். ஆனால் முனாஃபிக்குகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடக்க இயலாது. பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் முனாஃபிக்குகள் பற்றி அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்திருந்ததால், மிகுந்த எச்சரிக்கையுடன் நடக்கலானார்கள். அவர்களின் நயவஞ்சகத்தனம் எடுபடவில்லை. இஸ்லாத்தை அழிப்பதற்காக முஸ்லிம்களை அவர்களால் பயன்படுத்த முடியவில்லை.

பெருமானார் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முதல் கலீஃபாவாக அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும், அவர்களின் மரணத்திற்குப் பின் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் இருவரும் நல்ல நிர்வாகத் திறமையுடன், சிறந்த ஆட்சித் தலைவர்களாக திகழ்ந்தார்கள்.

இவ்விருவரின் ஆட்சியின் போதும், முனாஃபிக் (நயவஞ்சகர்)கள் இருந்த போதும், அவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் நரித்தனம் எடுபடவில்லை. எனவே எவ்வித குளறுபடிகளோ, கலகமோ, உள்நாட்டுக் குழப்பமோ ஏற்படவில்லை.

முனாஃபிக்குகள் விஷயத்தில் உமர் (ரலி) அவர்கள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்கள். அதன் விளைவாக உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையில் முனாஃபிக்குகள் அவர்களைக் கொலை செய்தார்கள்.

உமர் (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின் உஸ்மான் (ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மூன்றாவது ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள்.

அதன் பின்னர் தான் முதன் முதலாக குழப்பம் தலை தூக்கியது. முனாஃபிக்(நயவஞ்சகர்)களும் தங்களின் கைவரிசையைக் காட்டத் துவங்கினார்கள். அவர்கள் ஆட்சியின் போது ஏற்பட்ட சிறு சிறு அதிருப்தியால் ஏற்பட்ட குழப்பம் புரட்சியாக வெடித்து இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் போய் முடிந்தது.

இந்தத் துயரச் சம்பவத்தை நிகழ்த்துவதற்கு கையிலெடுக்கப்பட்ட ஆயுதம் "ஜிஹாத்' தான். ஜிஹாத் என்ற பெயரில் தான் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கெதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

- உஸ்மான் (ரலி) அவர்கள் மீது ஒரு சாராருக்கு அதிருப்தி ஏற்படக் காரணம் என்ன?

- அந்த அதிருப்தி நியாயமானது தானா?

- அவர்களது ஆட்சிக்கு எதிராக "ஜிஹாத்' பிரகடனம் ஏன் செய்யப்பட்டது?

- அவ்வாறு செய்யப்பட்டது சரியா?

என்பதைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ள உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிமுறை பற்றிய வரலாற்றுப் பதிவுகளுக்குள் செல்வோம்.

எந்த ஒரு உயர்ந்த அதிகாரப் பதவியாக இருந்தாலும், அந்தப் பதவியிலிருப்போரின் நண்பர்கள், உறவினர்கள் என நெருக்கமானவர்கள் யாராக இருந்தாலும், தங்களின் நெருக்கத்தைப் பயன்படுத்தி சில சலுகைகளைப் பெற்றுக் கொள்ள நினைப்பார்கள். அதிகாரத்தைப் பயன்படுத்தி சில அரசாங்க வேலைகளையோ அல்லது சிறு சிறு அதிகாரப் பதவிகளையோ பெற்றுக் கொள்ள முயற்சிப்பார்கள். அவர்களது முயற்சிக்கு அப்பதவியிலிருப்பவர் வளைந்து கொடுக்கும் போக்கைக் கடைப்பிடிப்பார்கள். இதைப் பார்க்கக் கூடிய நடுநிலையாளர்கள் இதை எதிர்க்கக் கூடிய நிலையை பொதுவாக நாம் பார்த்து வருகிறோம்.

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது இது தான் நடந்தது. அவர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமான குற்றச்சாட்டு உஸ்மான் (ரலி) அவர்களின் கோத்திரமான "பனூ உமைய்யா' கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுக்கப்படுகிறது என்பது தான்.

இஸ்லாமிய வரலாற்றில் நபி (ஸல்) அவர்கள் குலம், கோத்திரம், உறவு, நட்பு ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்டு ஆட்சி புரிந்தார்கள். பெருமானாரின் கோத்திரமான ஹாஷிம் கோத்திரத்தில் எத்தனையோ பேர் இருந்தும் அலீ (ரலி) அவர்களுக்கு மட்டும் தான் தகுதி அடிப்படையில் பல பொறுப்புகளை அளித்தார்கள்.

அவர்களுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள், தமது கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் எந்தப் பதவியையும் அளிக்கவில்லை.

அவர்களுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உமர் (ரலி) அவர்கள் தங்களின் பத்தாண்டு கால ஆட்சியில், தமது கோத்திரத்தைச் சேர்ந்த ஒரே ஒரு நபருக்கு மட்டும் தகுதி அடிப்படையில் பதவியளித்தார்கள். அதுவும் குறுகிய காலத்திலேயே அந்த நபரையும் பதவியிலிருந்து நீக்கி விட்டார்கள்.

திறமை - தகுதியின் அடிப்படையில் உறவினர்கள், நெருக்கமானவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்பது அல்லாஹ்வோ, நபி (ஸல்) அவர்களோ தடை செய்த காரியம் அல்ல. ஆனாலும், தேவையற்ற சந்தேகங்களும், குழப்பங்களும் ஏற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காகவே அபூபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் இவ்வாறு நடந்து கொண்டார்கள்.

எவ்வளவு தான் நேர்மையாகவும், திறமையாகவும் ஆட்சி செய்தாலும் உறவினர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் சலுகை காட்டினால் நிச்சயமாக அவப்பெயரையும், குழப்பங்களையும் சந்தித்து, ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்பதை உணர்ந்த காரணத்தால், உமர் (ரலி) அவர்கள் தமது இறுதிக் காலத்தில், தனக்குப் பிறகு ஆட்சித் தலைவராக வரலாம் என்று அவர்கள் கருதிய உஸ்மான் (ரலி), அலீ (ரலி), ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) ஆகிய மூவரையும் தனித்தனியே அழைத்து,

"எனக்குப் பிறகு நீங்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்க நேரிட்டால், முஸ்லிம்களின் கடிவாளத்தை உங்கள் கோத்திரத்தைச் சேர்ந்த எவரிடமும் கொடுத்துவிடக் கூடாது'' என்று வாக்குறுதி வாங்கினார்கள். (ஆதார நூல்: அத்தபரீ)

பனூ உமையாக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் முக்கியத்துவம்

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராக ஜிஹாத் என்னும் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை வரிசையாகக் காண்போம்.

முதலில் அவர்கள் மீது சுமத்தப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டான உறவினர்களைப் பதவியில் அமர்த்தியது பற்றி பார்ப்போம்.

மர்வான் பின் ஹகம்

உஸ்மான் (ரலி) அவர்களின் சிறிய தந்தையான ஹகம் பின் அபீ அல்ஆஸ் என்பவர் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தை ஏற்றவர். அதன் பிறகு மதீனாவிற்கு குடியேறினார். அவர் மதீனாவில் இருக்கும் போது, அவரது நடவடிக்கைகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காததால் ஹகமை மதீனாவை விட்டு வெளியேறி தாயிஃப் நகருக்கு செல்லும்படி கட்டளையிட்டார்கள். அப்போது மர்வானுக்கு 8 வயது.

அவர் தாயிஃபிலிருந்து மீண்டும் மதீனாவுக்கு வர அனுமதிக்குமாறு ஹகம் விடுத்த கோரிக்கையை, அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவரும் தங்களின் ஆட்சிக் காலத்தில் நிராகரித்து விட்டனர்.

உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் ஹகமும் அவரது மகன் மர்வானும் மதீனாவுக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். இது பற்றி உஸ்மான் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே திரும்ப மதீனாவுக்கு அழைக்க, நபி (ஸல்) அவர்களிடம் பரிந்துரை செய்ததாகவும், அதற்கு அண்ணலார் (ஸல்) அவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் வாக்குறுதியளித்ததாகவும் அதனடிப்படையிலேயே இருவரையும் மதீனாவுக்குத் திரும்ப அழைத்ததாகவும்'' ஒரு அறிவிப்பில் காணப்படுவதாக இப்னு ஹஜர் (ரஹ்) அல் இஸாபா என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் மீதான நன்னம்பிக்கையின் காரணமாகவே பெருமானார் (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருப்பார்கள் என்று மக்களும் நம்பினார்கள். ஹகமையும், மர்வானையும் மதீனாவுக்குத் திரும்ப அழைத்துக் கொண்டதில் மக்களிடத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆனால் மர்வான் பின் ஹகமுக்கு தனது ஆட்சியில் செயலாளர் என்னும் பெரிய பதவியை அளித்ததை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. தன் மகன் மர்வானின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசாங்க விஷயங்களில் ஹகம் தலையிட்டதையும் மக்கள் எதிர்த்தார்கள்.

அப்துல்லாஹ் பின் ஆமிர்

பஸ்ராவின் ஆளுநராக அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் ஆட்சி புரிந்து வந்தார்கள். அவர்களை நீக்கிவிட்டு, உஸ்மான் (ரலி) அவர்கள் தனது மாமா மகனான அப்துல்லாஹ் பின் ஆமிரை நியமித்தார்கள்.

முஆவியா (ரலி)

பனூ உமைய்யா கோத்திரத்தைச் சேர்ந்த முஆவியா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் சிரியாவின் ஒரு பகுதியான டமாஸ்கஸிற்கு மட்டுமே ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஹிமஸ், ஃபலஸ்தீன், உர்துன், லெபனான் மற்றும் சிரியா முழுவதையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்கள்.

இப்போதைய சிரியா, லெபனான், உர்தூன், இஸ்ரேல் ஆகிய நான்கு நாடுகளின் மொத்த நிலப்பரப்புக்கும் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் முஆவியா (ரலி) உட்பட நான்கு ஆளுநர்கள் இருந்தார்கள். ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் அனைத்தையும் முஆவியா (ரலி) தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்து விட்டார்.

மேலும், ஜனாதிபதிக்குக் கட்டுப்பட்டு மாகாண ஆளுநர் செயல்படுவதற்குப் பதிலாக, சிரியாவின் ஆளுநரான முஆவியா (ரலி), ஜனாதிபதியே தன்னைச் சார்ந்திருக்கும் நிலைமையை ஏற்படுத்தியிருந்தார். அந்த அளவுக்கு முஆவியா (ரலி) அவர்களின் ஆதிக்கம் இருந்தது. இதைப் பலரும் ஜீரணிக்கவில்லை. உஸ்மான் (ரலி) அவர்கள் மீதான எதிர்ப்புணர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

வலீத் பின் உக்பா

வலீத் பின் உக்பா என்பவர் மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். உஸ்மான் (ரலி) அவர்களது தாயாரின் வேறொரு கணவருக்கு பிறந்த சகோதரர். நபி (ஸல்) அவர்கள், பனூ முஸ்தலிக் என்ற கோத்திரத்தினரிடம் ஜகாத் வசூலிக்கும் பொறுப்பை வலீதிடம் ஒப்படைத்திருந்தார்கள். அவர் அக்கோத்திரத்தினரிடம் சென்று ஜகாத் தொகையைக் கேட்காமல், அவர்கள் தர மறுக்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து சொல்லி விட்டார். நபி (ஸல்) அவர்கள் கடுங்கோபமுற்று, அவர்களுக்கெதிராக படை திரட்டி விட்டார்கள். இதை அறிந்த அக்கோத்திரத்தினர் மதீனாவுக்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம் "நாங்கள் ஜகாத் கொடுக்கக் காத்திருந்தோம். ஆனால் இவர் எங்களிடம் வந்து கேட்கவில்லை'' என்ற உண்மையைப் போட்டு உடைத்து விட்டார்கள்.

இது சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் ஒரு வசனத்தையே இறக்கினான்.

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் 49:6)

(மேற்கண்ட வசனம் இறக்கப்பட்டதன் பின்னணியாக இச்சம்பவத்தையே எல்லா விரிவுரையாளர்களும் குறிப்பிடுகின்றனர். (ஆதாரம்: தப்ஸீர் இப்னுகஸீர்)

வலீதிற்காகவே இவ்வசனம் இறக்கப்பட்டதாக இமாம் இப்னு தைமிய்யா அவர்களும் கூறுகிறார்கள். (மின்ஹாஜுஸ் ஸுன்னதிந் நபவிய்யா)

இத்தகைய தன்மையைக் கொண்ட வலீதை சில காலத்திற்குப் பின் அபூபக்கர் (ரலி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் மீண்டும் பணியில் அமர்த்தினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் ஆட்சியின் இறுதிக் காலத்தில் பனூ தக்ளப் கோத்திரத்தினர் வாழ்ந்த அல்ஜஸீரா பகுதியில் சிறிய அதிகாரியாக பணியமர்த்தினார்கள். (ஆதாரம்: தஹ்தீபுத் தஹ்தீப்,)

உஸ்மான் (ரலி) அவர்கள் தனது ஆட்சியின் போது, சிறு அதிகாரியாக கீழ் மட்டத்தில் பதவி வகித்த வலீத் பின் உக்பாவை திடீரென கூஃபாவின் ஆளுநராக ஆக்கினார்கள். அது வரை கூஃபாவின் ஆளுநராக பதவி வகித்த ஸஃது வின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைப் பதவியிலிருந்து நீக்கினார்கள்.

ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் ஆரம்ப கால இஸ்லாமியப் பணிகளில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்கள். கல்வியறிவிலும், மார்க்கப் பற்றிலும் வலீதை விட பன்மடங்கு உயர்ந்தவர்கள். மேலும் "மஜ்லிஸ் ஷுரா' என்றழைக்கப்படும் தலைமை ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினர். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசிகள் என பத்து தோழர்களைப் பற்றி அறிவித்தார்கள். அஷ்ரதுல் முபஷ்ஷரா எனப்படும் அவர்களில் ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி அவர்களும் ஒருவர். எனவே அவர்களை நீக்கியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

பின்னர் வலீத் பின் உக்பா குடிகாரர் என்பதும், ஒரு முறை சுபுஹ் தொழுகையை 4 ரகஅத்துகள் தொழ வைத்தார் என்றும், தொழுகை முடிந்ததும் இன்னும் தொழ வைக்கவா? என்று கேட்டும் அசிங்கப்பட்டு போயிருக்கிறார். இச்செய்தி மதீனா வரை எட்டி மதீனாவில் மக்கள் எல்லாம் பேச ஆரம்பித்து, ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்களின் கவனத்திற்குச் சென்ற பின், இதற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார்கள். அக்குழுவின் விசாரணையில் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு தண்டனையும் அளிக்கப்பட்டது. (ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவுது, ஃபத்ஹுல் பாரி, உம்தத்துல் காரீ சுருக்கம்)

வலீத் பின் உக்பாவின் இச்செயலால் மக்கள் தங்களின் அதிருப்தியை உஸ்மான் (ரலி) அவர்கள் மீதே வெளிப்படுத்தினார்கள்.

அப்துல்லாஹ் பின் ஸஃது

பனூ உமைய்யா கோத்திரத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் ஸஃது என்பவர் இஸ்லாத்தைத் தழுவிய பின்பு "முர்தத்' ஆக மாறினார். மக்கா வெற்றியின் போது, கொல்லப்பட வேண்டியவரின் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு முறை அண்ணலாரிடம் இவரை அழைத்துச் சென்று மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அண்ணலார் இவரை மன்னித்தார்கள்.

எகிப்தில் அம்ர் பின் ஆஸ் (ரலி) என்ற நபித்தோழர் ஆளுநராகப் பொறுப்பேற்று, அந்நாட்டு மக்களின் நன்னம்பிக்கையைப் பெற்று நல்ல செல்வாக்குடன் ஆட்சி நடத்தி வந்தார்கள். இவரது ஆட்சியின் போது, காரிஜியாக்கள் கூட்டத்தினர் முஸ்லிம்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார்கள். (காரிஜியாக்கள் என்றால் யார்? அவர்களது கொள்கை என்ன? போன்ற விரிவான விளக்கத்தை பின்னர் பார்க்கவிருக்கிறோம். இன்ஷாஅல்லாஹ்)

அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் காரிஜியாக்களின் முயற்சிகளை முறியடித்து அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார்கள். காரிஜியாக்களின் குழப்பத்தை முறியடித்த பிறகு எகிப்திய மக்களிடத்தில் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களின் செல்வாக்கு மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை விரும்பாத சிலரைக் கொண்டு, அவரை ஆளுநர் பதவியிலிருந்து இறக்குவதற்கு காரிஜியாக்கள் திட்டம் தீட்டினார்கள். அதனடிப்படையில் ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்களிடத்தில் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை ஆளுநர் பதவியிலிருந்து நீக்குமாறு நெருக்கடிகள் தரப்படுகின்றது. ஆனாலும் உஸ்மான் (ரலி) அவர்கள் முதலில் மறுத்து விட்டார்கள். பின்னர் அளவுக்கு மீறிய நெருக்கடி ஏற்பட்ட பின், அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கி விட்டு அப்துல்லாஹ் பின் ஸஃதை எகிப்தின் ஆளுநராக உஸ்மான் (ரலி) அவர்கள் நியமிக்கிறார்கள். ஆனாலும் தொழுகை நடத்தும் அதிகாரத்தை மட்டும் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களுக்கே உஸ்மான் (ரலி) அவர்கள் அளித்தார்கள்.(அக்காலத்தில் ஆட்சித் தலைவர்கள் தான் தொழுகைக்கும் இமாமாக இருப்பது வழக்கம்). நாளடைவில் இமாமத் பொறுப்பும் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.

உஸ்மான் (ரலி) அவர்களின் இச்செயல் எகிப்திய மக்களிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த அதிருப்தி, மக்களால் உஸ்மான் (ரலி) அவர்கள் வெறுக்கப்படும் அளவுக்கு மாறிவிட்டது.

அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை தன்னை (மதீனாவுக்கு) வந்து சந்திக்குமாறு உஸ்மான் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் அம்ர் (ரலி) அவர்கள் அதைப் பற்றிக் கொஞ்சமும் சட்டை செய்யாமல், தேவையெனில் உஸ்மான் (ரலி) அவர்கள் தன்னை வந்து பார்க்கட்டும் என்று சொல்லி விட்டார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் குணநலன்

உஸ்மான் (ரலி) அவர்கள் உறவினர்களைப் பதவியிலமர்த்தினார் என்ற குற்றச்சாட்டிற்கு உதாரணமாக, பெரிய பதவியில் அமர்த்தப்பட்டவர்கள் பற்றியும், அவர்களது தகுதிகளைப் பற்றியும் அதுவே மக்களிடம் பெரும் அதிருப்தியைத் தோற்றுவிக்கக் காரணமானது என்பதையும் மேலே ஒரு சில உதாரணங்களின் மூலம் பார்த்தோம்.

பொதுவாக அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் குணநலன்களுக்கும், உஸ்மான் (ரலி) அவர்களின் குணநலன்களுக்கும் அடிப்படையிலேயே பெரிய வித்தியாசம் உண்டு. உஸ்மான் (ரலி) அவர்களைப் பொறுத்த வரை மிகவும் இரக்க குணம், வெட்க குணம், எளிதில் யாரையும் நம்பி விடக் கூடிய சுபாவமும் உடையவர்கள்.

அவர்களின் இத்தகைய வெள்ளை உள்ளம் தான் உறவினர்கள் விஷயத்திலும் அக்கறைக் காட்ட வைத்தது. அதுவும் அவர்கள் பதவியில் அமர்த்தியவர்களை தகுதியற்றவர்கள் என்று தெரிந்து பதவியில் அமர்த்தவில்லை. அவர்கள் சிறப்பானவர்கள், தகுதியானவர்கள் என்று நினைத்தே அமர்த்தினார்கள். தகுதியற்றவர்கள் என்று தெரிந்த பின் அவர்களைப் பதவியிலிருந்து நீக்கவும் செய்தார்கள், தண்டிக்கவும் செய்தார்கள் என்பதை "வலீத் பின் உக்பா'வின் சம்பவம் எடுத்துரைக்கிறது.

உஸ்மான் (ரலி) அவர்கள் பதவியில் அமர்த்தியவர்களில் பெரும்பாலோர் மக்கா வெற்றி வரை இஸ்லாத்தை ஏற்காமல், முஸ்லிம்களை எதிர்த்து விட்டு, மக்கா வெற்றியின் போது பெருமானார் (ஸல்) அவர்களால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினருமே (உ.தாரணம்: முஆவியா (ரலி), வலீத் பின் உக்பா, மர்வான் பின் ஹகம்) என்பதால் மக்கள் அதிருப்தியடைந்தனர். மூத்த நபித்தோழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாததை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை.

எகிப்திலிருந்து ரகசியப் படை கிளம்புதல்

எகிப்தின் ஆளுநர் பதவியிலிருந்து அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களை நீக்கியதை ஏற்றுக் கொள்ளாத சிலர், உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராக ஒரு கூட்டத்தைத் திரட்டுகிறார்கள். ஆட்சிக்கு எதிராக திட்டம் வகுத்து ரகசியமாக செயல்பட "பைஅத்' (உறுதிமொழி) செய்த 600 பேர் தயாராகிறார்கள்.

இந்த ரகசிய பைஅத் செய்த 600 பேர் கொண்ட கூட்டம் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய - புனித நகரமான - சண்டையிடுவதற்குத் தடை செய்யப்பட்ட இடமான - மதீனாவுக்குள் நுழைந்து தலைநகரையே கைப்பற்றுவதற்கான திட்டத்தில் - அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டது.

600 பேரும் மதீனாவுக்குள் ஒட்டுமொத்தமாக நுழைவது கடினம். அது இயலாத காரியம் என்றெண்ணி உம்ராவுக்குச் செல்வதாகக் கூறிக் கொண்டு இஹ்ராம் கட்டிய நிலையில் ஹிஜ்ரி 35-ம் ஆண்டு ரஜப் மாதத்தில் மதீனாவுக்குச் செல்கிறது.

உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிரான இந்த அதிரடி ரகசிய நடவடிக்கைகளை தனது உளவாளிகள் மூலம் அறிந்த எகிப்தின் ஆளுநராகப் பொறுப்பேற்ற அப்துல்லாஹ் பின் ஸஃத் அவர்கள், உடனடியாக உஸ்மான் (ரலி) அவர்களுக்கு தகவல் அனுப்புகிறார்கள். தகவலைப் பெற்ற உஸ்மான் (ரலி) அவர்கள், தலைநகரைக் கைப்பற்ற எகிப்திலிருந்து ரகசியப் படை வரும் தகவலைப் பக்குவமாக எடுத்துச் சொல்லி, அதை நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தும் பொறுப்பை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்ற அலீ (ரலி) அவர்கள், தம்முடன் ஒரு சிறு கூட்டத்தை அழைத்துக் கொண்டு மதீனாவின் நுழைவாயிலுக்குச் சென்று, எகிப்திலிருந்து வந்த ரகசியப் படையினருடன் சமரச முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கெதிராக அவர்கள் படை திரட்டி வந்ததற்கான காரணங்களையும், அவர்களின் கோரிக்கைகளையும் அலீ (ரலி) அவர்களிடம் எடுத்துரைக்கிறார்கள். அலீ (ரலி) அவர்கள், அவர்களின் வாதங்களைப் பொறுமையாகக் கேட்டு விட்டு, ஒவ்வொன்றுக்கும் உஸ்மான் (ரலி) அவர்கள் பக்கம் நியாயம் உள்ளது போன்றே பதிலளித்து, அவர்களை ஓரளவு திருப்திப்படுத்தி, திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.

உஸ்மான்(ரலி) மீதான குற்றச்சாட்டுக்கு அலீ (ரலி) விளக்கம்

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சி மீது ஏற்பட்ட வெறுப்புக்கும், அவர்களுக்கெதிரான புரட்சிக்கும் மிகமுக்கியக் காரணமான உறவினர்களுக்கு சலுகை அளித்தார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்த வரலாற்று ஆதாரங்களை மேலே பார்த்தோம்.

அவர்கள் தங்களின் புரட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மேலும் பல குற்றச்சாட்டுக்களையும் வைத்தார்கள். எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த புரட்சியாளர்ளை அலீ (ரலி) அவர்கள் மதீனா எல்லையில் தடுத்து நிறுத்திய போது, நாம் மேலே குறிப்பிட்டபடி மூத்த ஸஹாபாக்களையெல்லாம் புறக்கணித்து விட்டு இளைஞர்களையே உஸ்மான் (ரலி) அவர்கள் பதவியில் அமர்த்துகிறார் என்ற பிரதான குற்றச்சாட்டுடன் மேலும் பல குற்றச்சாட்டுகளையும் அலீ (ரலி) அவர்களிடம் முன்வைத்தார்கள். அவற்றுக்கு அலீ (ரலி) அவர்கள் என்ன பதில் சொல்லி அவர்களைத் திருப்திபடுத்தினார்கள் என்பதை பார்ப்போம்.

1. மூத்த ஸஹாபாக்களை விட்டு விட்டு இளைஞர்களுக்குப் பதவி

உஸ்மான் (ரலி) அவர்கள் இளைஞர்களுக்குப் பதவியளித்தார்கள் என்பதை குற்றமாகக் கருத முடியாது. நபி (ஸல் அவர்களும் கூட மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்ற இளைஞர்களுக்குத் தகுதி அடிப்படையில் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் என்று கூறி அதற்கு உதாரணமாக சில நிகழ்வுகளையும் குறிப்பிடுகிறார்கள். அவை யாவன:

• அத்தாப் பின் உஸைது என்பவர் மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவியவர், அவருக்கு 20 வயதிலேயே பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவின் நிர்வாகியாக பதவியளித்தார்கள்.

• உஸாமா பின் ஜைத் அவர்களை ஒரு போருக்குத் தளபதியாக பெருமானார் (ஸல்) அவர்கள் நியமித்தார்கள்.

• தன்னை நபி என்று சொல்லிக் கொண்டு குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த முஸைலமா என்பவனுக்கு எதிராக போருக்குப் புறப்பட்ட படையின் தளபதியாக இளைஞர் உஸாமா அவர்களை அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் மீண்டும் அனுப்பினார்கள் என்று விளக்கமளித்தார்கள்.

2. கோத்திரத்தாருக்கு முன்னுரிமை

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து குடியேறி அங்கு ஆட்சி அமைத்த பிறகு எல்லாத் துறைகளிலும் மதீனா வாசிகளான அன்சாரிகளை விட மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்கள் அதிகமாக இடம்பெற்றிருந்தார்கள். அதனால் நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளைப் புறக்கணித்து விட்டார்கள். மக்கா வாசிகள் என்பதற்காக முன்னுரிமையளித்து விட்டார்கள் என்று குற்றமாக எடுத்துக் கொள்ள முடியுமா? எனவே இது ஒரு ஆட்சித் தலைவருக்கு எதிராக படை திரட்டக் கூடிய அளவுக்கு பெரிய குற்றமாகாது என பதிலளித்தார்கள்.

3. குர்ஆனை எரித்தார்

அடுத்து அவர்கள் வைத்த குற்றச்சாட்டு உஸ்மான் (ரலி) குர்ஆனை எரித்து விட்டார். எனவே குர்ஆனை எரித்தவர்களுக்கு எதிராக போர் செய்யலாம் என்ற வாதத்தை வைத்தார்கள்.

இந்தக் குற்றச்சாட்டு ஏன் உருவானது?

நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் சிறிது சிறிதாக தேவைக்கேற்ப 23 ஆண்டுகள் இறக்கப்பட்டது. அவ்வப்போது அவர்களுக்கு அருளப்படும் வசனங்களை எழுதிக் கொள்வதற்காக "காத்திபுல் வஹீ' - வஹீயை எழுதுபவர்கள் என்று சில நபித்தோழர்கள் இருந்தார்கள்.

திருக்குர்ஆனை எழுதி வைத்திருந்த நபித்தோழர்கள் அனைவரிடத்திலும், முழுக்குர்ஆனும் இருந்திருக்கவில்லை. நபி (ஸல்) அவர்களுக்குப் பின் பல பகுதிகளுக்கும் சென்ற அந்த நபித்தோழர்கள் தங்களிடமிருந்த வசனங்களைக் கொண்டு மட்டுமே மக்களிடம் போதனை செய்து வந்தார்கள். இந்த நிலையை மாற்றுவதற்காக தமது ஆட்சியின் போது எல்லா நபித்தோழர்களிடமும் இருந்த கையெழுத்துப் பிரதியை சேகரித்து, முழுக் குர்ஆனையும் தொகுக்கும் பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் செய்தார்கள். இதனால் தான் அவர்களுக்கு "ஜாமிஉல் குர்ஆன்' (குர்ஆனை ஒன்று சேர்த்தவர்) என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

அவ்வாறு முழுக் குர்ஆனையும் தொகுத்த பின் துண்டு துண்டாக இருந்த வசனங்களை - அவை மட்டும் தான் குர்ஆன் என்ற நிலை பிற்காலத்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக எரித்து விட்டார்கள். (உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த குர்ஆனின் கையெழுத்துப் பிரதி இன்று உலகிலேயே இரண்டு தான் உள்ளது. அவற்றில் ஒன்று ரஷ்யாவிலுள்ள தாஷ்கண்ட் மியூசியத்திலும், மற்றொன்று துருக்கியில் இஸ்தான்புல் மியூசியத்திலும் உள்ளது)

அவ்வாறு நல்ல நோக்கத்திற்காக உஸ்மான் (ரலி) அவர்கள் அத்தகைய குர்ஆன் பிரதிகளை எரித்ததை, காரிஜியாக்களும், முனாபிக்குகளும் பெரிதுபடுத்தி, உஸ்மான் குர்ஆனை எரித்து விட்டார். எனவே அவருக்கு எதிராக ஜிஹாத் செய்ய வேண்டும் என்ற கருத்தை முஸ்லிம்களிடம் பரப்பி விட்டார்கள். இந்த விளக்கத்தை அலீ (ரலி) அவர்கள் சொன்ன பிறகு அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

4. ஹஜ்ஜின் போது தொழுகையில் மாறு செய்தார்

பெருமானார் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் போது தொழுகையில் கஸர் (குறைத்துத் தொழுதல்) செய்ய வேண்டும் என்றே வழிகாட்டி இருக்கிறார்கள். ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் கஸர் செய்யாமல் தொழுதார் என்பது அவர்கள் அடுத்து வைத்த குற்றச்சாட்டு

இதற்குப் பதிலளித்த அலீ (ரலி) அவர்கள், மக்காவை அவர் தனது சொந்த ஊராகக் கருதியதால் சொந்த ஊரில் கஸர் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தால் அவர் அப்படி தொழுதார் என்று விளக்கமளித்தார்கள்.

5. விளை நிலங்களை அரசுடமை ஆக்கினார்

(அக்காலத்தில் உரிமை கொண்டாடப்படாத விளைநிலங்கள் இருந்தன. அவற்றை யாரெல்லாம் தங்களுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்கிறார்களோ அது அவர்களுக்குச் சொந்தம் என்ற நிலை இருந்து வந்தது. அதை மாற்றி அத்தகைய) நிலங்கள் யாவும் அரசாங்கத்திற்குச் சொந்தம் என்று உஸ்மான் (ரலி) அவர்கள் சட்டமியற்றினார்கள். இது மக்கள் விரோதச் செயல் என்று குற்றச்சாட்டை வைத்தார்கள்.

இதற்குப் பதில் அளித்த அலீ (ரலி) அவர்கள், உரிமை கோரப்படாத விளைநிலங்களை அரசாங்கத்திற்குச் சொந்தமாக்கியதற்குக் காரணம், ஜகாத் ஒட்டகங்கள் அரசாங்கத்திடம் உள்ளன. அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அவற்றின் மேய்ச்சலுக்காக நிலங்கள் தேவைப்படுகிறது. எனவே அதைக் கருத்தில் கொண்டு தான் உஸ்மான் (ரலி) இந்தச் சட்டத்தை இயற்றினார். இது ஒரு குற்றமாகாது. மேலும் ஏற்கனவே உமர் (ரலி) அவர்களும் இது போன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்று விளக்கமளித்தார்கள்.

ஆட்சித் தலைவருக்கு அலீ (ரலி)யின் அறிவுரை

அதன்பிறகு அலீ (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் "உங்களின் ஆட்சி முறையில் மக்களின் அதிருப்தி அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நீங்கள் அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர் நடத்திய ஆட்சி முறையைப் பின்பற்றிச் செல்லுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது'' என்று அறிவுரை கூறினார்கள்.

அதைத் தொடர்ந்து உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு ஜும்ஆ குத்பாவின் போது, தனது ஆட்சியில் ஏற்பட்ட சிறு சிறு தவறுகளுக்காக மனந்திருந்தி மக்களிடம் அழுது மன்னிப்புக் கேட்டார்கள்.

தான் இது நாள் வரை ஏற்றுக் கொண்ட பொறுப்பிலிருந்து சற்று விலகி இருந்து விட்டதாகவும், இனி அது போல இருக்க மாட்டேன், எந்த நேரமும் மக்கள் என்னை வந்து சந்தித்து தங்கள் குறைகளை முறையிடலாம். இனி சிறந்த முறையில் ஆட்சி செய்வேன் என்று உத்தரவாதமளித்தார்கள். அந்த குத்பாவின் போது, உஸ்மான் (ரலி) அவர்கள் தங்களின் நிலையை விளக்கி அழுததைப் பார்த்த மக்களும் அழுதார்கள்.

அதன் பிறகு சிலகாலம் மக்கள் ஜனாதிபதியை எந்நேரமும் சந்திக்கக் கூடிய, குறை நிறைகளைப் பற்றி பேசக் கூடிய, ஆலோசனைகள் வழங்கக்கூடிய நிலை சிறிது காலம் தொடர்ந்தது.

மர்வானின் அடாவடி

உஸ்மான் (ரலி) அவர்கள் தங்கள் ஆட்சிப் பொறுப்பின் மீது அதிக கவனம் செலுத்தி, குறைகளைக் களைந்து, நடவடிக்கை எடுத்து வருவதை ஜீரணிக்க முடியாத மர்வான் பின் ஹகம் (தலைமைச் செயலர்), ஜனாதிபதிக்குத் தெரியாமலேயே பல காரியங்களைச் செய்யத் துவங்கினார். அவரது செயல்களுக்கான பழியை உஸ்மான் (ரலி) அவர்களே சுமக்க வேண்டியதாயிற்று. ஏனைய சஹபாக்களுக்கும் உஸ்மான் (ரலி) அவர்களுக்கும் இடையேயான தொடர்புகளைத் துண்டிக்க முற்பட்டார். தன்னை மட்டுமே சார்ந்திருக்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தினார். மஜ்லிஸ் ஷுராவில் சஹாபாக்களைக் கண்டித்துப் பேசவும் ஆரம்பித்தார். இதைப் பெரும்பாலான சஹாபாக்கள் விரும்பவில்லை.

உஸ்மான் (ரலி) அவர்களின் துணைவியார் நாயிலா (ரலி) அவர்களுக்குக் கூட மர்வானின் செயல் பிடிக்கவில்லை. ஒரு முறை தனது கணவரிடம், "நீங்கள் மர்வானின் பேச்சைக் கேட்டு நடந்தால் உங்களைக் கொலை செய்யாமல் விடமாட்டார். அவருக்கு அல்லாஹ்வின் மீது அச்சமோ, அன்போ, மதிப்போ இல்லை'' என்று நேரடியாகவே எச்சரிக்கவும் செய்தார்.

மக்களெல்லாம் உஸ்மான் (ரலி) அவர்களை மர்வான் தன் கையில் போட்டுக் கொண்டு ஆட்டிப் படைக்கிறார் என்று சொல்லுமளவுக்கு மீண்டும் அதிருப்தியும், குழப்பமும் தலைதூக்குகிறது. அலீ (ரலி) அவர்களும் மீண்டும் உஸ்மான் (ரலி) அவர்களைக் கண்டிக்கிறார்கள்.

ஜிஹாத் (கிதால்) பிரகடனம்

இந்நிலையில் தான் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் - ஜிஹாத் என்ற பெயரில் செய்யப்படுகிறது. எந்த அளவுக்கு என்றால், "உஸ்மானை எதிர்ப்பது தான் மிகப்பெரிய ஜிஹாத் (அக்பருல் ஜிஹாத்)'' என்ற கருத்து மக்களிடம் உருவாக்கப்படுகிறது.

முன்னர் எகிப்திலிருந்து மட்டுமே ஒரு ரகசியக் கூட்டம் மதீனாவைக் கைப்பற்ற வந்த நிலை மாறி, இப்போது பல பகுதிகளிலிருந்தும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் அடங்கிய கூட்டம் ஆயுதங்களுடன் மதீனாவை முற்றுகையிட்டுக் கைப்பற்றக் கிளம்பி விட்டது.

அக்கூட்டத்தினரில் குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால் அலீ (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு எகிப்திலிருந்து வந்த கூட்டமும், ஜுபைர் (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் கூஃபாவிலிருந்து வந்த கூட்டமும், தல்ஹா (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பஸராவிலிருந்து வந்த கூட்டமும் மதீனாவை முற்றுகையிட்டன. ஆனால் அம்மூவருமே இவர்களின் செயலை அங்கீகரிக்கவுமில்லை. ஆதரவளிக்கவுமில்லை.

மேலும் "ஜிஹாத்' என்று சொல்லிக் கொண்டு படைதிரட்டி வந்தவர்கள் யாரும் தத்தமது பகுதி மக்களின் பிரதிநிதிகளுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் அங்கீகாரத்துடன் வந்தவர்களுமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இஸ்லாமிய ஆட்சித் தலைவருக்கு எதிராக, புனித நகருக்குள் புகுந்து சண்டையிடுவதையும், ஹராமாக்கப்பட்ட ஒரு இடத்தில் ஆயுதமேந்தி வருவதையும், முஸ்லிம்களுக்குள் அதுவும் பெருமானாரின் தோழர்களுக்குள் மோதிக் கொள்ளும் போக்கையும் பெரும்பாலான நபித்தோழர்கள் விரும்பவில்லை. இந்தப் போக்கைக் கண்டிக்கவே செய்தார்கள். ஏராளமான நபித்தோழர்கள் தடுத்தார்கள். எதிர்பாராத விதமாக கிளர்ச்சிக்காரர்கள் ஆயுதங்களுடன் புகுந்ததாலும், நிராயுதபாணிகளாக அவர்கள் இருந்ததாலும், புனித மண்ணில் போரிடக் கூடாது என்ற காரணத்தாலும் அவர்கள் எதிர் நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் போனது. இத்தகைய பலவீனம் எதிரிகளுக்குச் சாதகமாக இருந்ததால் இறுதியில் கிளர்ச்சியானர்கள் உஸ்மான் (ரலி)யின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.

உஸ்மான் (ரலி) அவர்கள் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள், "நீங்கள் சொன்னவுடன் பதவி விலக முடியாது. அதேசமயம் உங்களின் நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன்'' என்றார்கள். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

உஸ்மான் (ரலி) பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்த போது நபித்தோழர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் உஸ்மான் (ரலி) அவர்கள் இது பற்றிக் கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "ஒரு சிலர் ஒன்று கூடி பதவி விலகச் சொல்கிறார்கள் என்பதற்காக நீங்கள் பதவி விலகத் தேவையில்லை. அத்தகைய ஒரு நிலையை முஸ்லிம்களிடத்தில் நீங்கள் ஏற்படுத்தி விடாதீர்கள். அதற்கான வாசலைத் திறந்து விட்டு விடாதீர்கள்'' என்று கூறினார்கள். (தபகாத்து இப்னு சஅத்)

உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். இந்நிலையில் முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்று விடுவார்களோ என்று சில சஹாபாக்கள் அஞ்சினார்கள். எனவே அவர்களைப் பாதுகாக்க உஸ்மான் (ரலி) அவர்கள் சிறை வைக்கப்பட்ட வீட்டைச் சுற்றி மதீனாவிலிருந்த சஹாபாக்களில் ஒரு கூட்டம் காவல் காத்து வந்தது. அவ்வாறு பாதுகாப்புக்காக நின்றவர்களில் அலீ (ரலி) அவர்களின் உத்தரவின் பேரில் அவர்களின் மகனார் ஹஸன் (ரலி) அவர்களும் ஒருவர். அந்தப் பாதுகாப்பு வளையத்தைச் சுற்றி உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராக வந்த ஆயுதந்தாங்கிய கூட்டம் உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறாத அளவுக்கு காவல் நிற்கிறது.

இந்நிலையிலும் உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்ஆ குத்பா நிகழ்த்துவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள். அவ்வாறு அவர்கள் நிகழ்த்திய ஜும்ஆ குத்பாக்களில் ஒரு முறை மிம்பரிலிருந்து இழுத்துக் கீழே வீசப்பட்டு உஸ்மான் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட போது, முற்றுகையிட்டிருந்த கூட்டத்தினரிடம், "ஒருசில குற்றங்களின் அடிப்படையில் ஒருவரைக் கொலை செய்ய மார்க்கம் அனுமதிக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு எந்தக் குற்றமும் செய்யாத என்னை ஏன் கொல்லத் துடிக்கிறார்கள்'' என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கேட்டார்கள். தான் செய்த நல்லறங்களையெல்லாம் ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்தார்கள்.

மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது, "ஒரு குடிநீர் கிணறு உள்ளது. அதை யாராவது விலை கொடுத்து வாங்கி வக்ஃப் செய்யுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லையா? நபியின் பள்ளிவாசலை விஸ்தீரணம் செய்தேனே! என்று ஒவ்வொன்றாகச் சொல்லி தன்னை விடுவிக்கும்படி கோரினார்கள். ஆனாலும் அக்கூட்டம் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது இரக்கம் காட்டவில்லை.

இதனிடையே உஸ்மான் (ரலி) அவர்களை வீட்டுக்காவலின் போது சந்தித்த ஜைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், நிலைமை மோசமடைவதைக் கண்டு அன்சாரிகள் அனைவரும் தங்களுக்காக அணிதிரளத் தயாராக உள்ளதாக அறிவித்தார். அபூஹுரைரா (ரலி), அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) ஆகியோரும் இதையே கூறினார்கள். ஆனாலும் உஸ்மான் (ரலி) அவர்கள் நான் அவர்களுடன் இப்புனித மண்ணில் போரிடத் தயாராக இல்லை என்று கூறிவிட்டார்கள்.

ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது என்பது ஒருபுறமிருக்க, ஒரு இஸ்லாமிய ஆட்சியின் தலைவர் என்ற முறையில் ஆட்சிக்கெதிராக அணிதிரண்டு வந்தவர்களை எதிர்த்து ஆட்சியாளர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. ஒரு கட்டத்தில் தனக்கு பாதுகாப்பாக வீட்டைச் சுற்றி இருந்த சஹபாக்களைக் கூட நீங்கள் எனக்காக கஷ்டப்பட வேண்டாம், போய் விடுங்கள் என்று கூறினார்கள்.

அச்சமயத்தில் சொல்லெணாத் துன்பங்களை அனுபவித்தார்கள். உச்சக்கட்டமாக உம்முல் முஃமினீன் என்றழைக்கப்படும் பெருமானார் (ரலி) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் (முஆவியா (ரலி)யின் சகோதரி) கூட அவமானப்படுத்தப்பட்டார்கள். "இழிவான இச்சூறாவளியில் சிக்கி நானும் என்னை அவமானப்படுத்திக் கொள்ளவா?'' என்று கேட்டபடி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மக்காவுக்குச் சென்று விட்டார்கள்.

ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக உஸ்மான் (ரலி) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். இறுதியாக ஒருநாள் வீட்டிற்குள் வைத்தே உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 35ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்கள். (இன்னாலில்லாஹ் வஇன்னா இலைஹி ராஜிஊன்). அவர்களின் வீடும் சூறையாடப்பட்டது. சொத்துக்களும் அபகரிக்கப் பட்டன.

உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்றவர்கள் முனாஃபிக்குகள் என்று சொல்லப்பட்டாலும் அச்செயலில் ஈடுபட்டவர்களில் முஹம்மது பின் அபூபக்கர் (ரலி) அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து முஸ்லிம்களின் பங்கும் உள்ளது என்பது தெளிவாகிறது.

அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் மகனார் முஹம்மது பின் அபூபக்கர் (ரலி) உஸ்மான் (ரலி) அவர்களின் தாடியைப் பிடித்து இழுத்த போது, உஸ்மான் (ரலி) அவர்கள் மிகவும் மனமுடைந்து போய் அவரிடம், "முஹம்மதே! உனது தந்தை அபூபக்கர் கூட எனது தாடியில் கை வைத்தது கிடையாதே'' என்று அழுதிருக்கிறார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராகத் திரண்டவர்கள் - அவர்களைக் கொல்லுமளவுக்குச் சென்றவர்கள் அத்தனை பேரும் இறை நிராகரிப்பாளர் (காஃபிர்)கள் அல்ல. ஆனாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடமும் ஏற்பட்ட குறையின் காரணமாகவே அவர்கள் தவறான முடிவுக்குச் சென்றார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியில் சிறு சிறு தவறுகள் ஏற்பட்டாலும் அவை திருத்திக் கொள்ளக் கூடியவை தான். உஸ்மான் (ரலி) அவர்கள் மீது சுமத்தப்பட்ட இத்தகைய சாதாரண குற்றச்சாட்டுகளைத் தவிர அவர்களது ஆட்சி முறை போற்றத்தக்க வகையில் தான் இருந்தது என்பதை யாரும் மறுக்கவியலாது. அவர்கள் மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுக்கள் பரிகாரம் காணக் கூடியவையாகத் தான் இருந்தனவே தவிர பழிதீர்க்கக் கூடியதாக இல்லை.

தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஜிஹாத்

உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராக ஜிஹாத் பிரகடனம் செய்தவர்கள் வேண்டுமென்றே உஸ்மானைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலோ, சொந்தப் பகையின் காரணமாகவோ இவ்வாறு செயல்படவில்லை.

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிமுறை அநீதி, அக்கிரமம் நிறைந்ததாக இல்லை. ஆனாலும் அவரை எதிர்த்தவர்கள் பார்வையில் சிறு சிறு தவறுகள் அநீதியாக - அக்கிரமமாகத் தெரிந்தது. அதன் காரணமாகவே "அக்கிரமக்கார ஆட்சியை எதிர்த்து ஜிஹாத்'' என்ற அஸ்திரத்தை எடுத்தார்கள். ஆனால் அதன் மறுபக்கமான - ஒரு ஆட்சித் தலைவரின் கீழ் குடிமக்கள் எப்படி நடக்க வேண்டும், ஆட்சியாளருக்கு எதிராக அணி திரள்வதற்கு உரிய காலகட்டம் என்ன? ஒரு ஆட்சியாளருக்கு எது வரை கட்டுப்பட்டு நடக்க வேண்டும் - என்று பெருமானார் (ஸல்) அவர்கள் விதித்துள்ள நெறிமுறைகளை அவர்கள் கவனிக்கத் தவறி விட்டார்கள்.

சுருக்கமாகச் சொல்தென்றால், நல்ல எண்ணத்தில் செய்யப்பட்ட தவறு என்பது தான் உஸ்மான் (ரலி) அவர்கள் செய்ததும், அவர்களை எதிர்த்தவர்கள் நடந்து கொண்ட முறையும்.

(இந்த சமுதாயத்தில்) தலைவர்கள் தோன்றுவார்கள். (அவர்களை) அறிந்து (அடையாளங் கண்டு) வெறுப்பீர்கள். (அவர்களை) அறிந்து கொள்பவர் (பாவத்தை விட்டு) தப்பித்துக் கொள்வார். வெறுப்பவர் விமோசனம் அடைந்து விடுவார். எனினும் அவர்களை திருப்தி கொண்டு பின்பற்றுபவர்கள் தான் (விமோசனம் அடைய மாட்டார்கள்.) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள், அவர்களை எதிர்த்து நாங்கள் போராடவா? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், தொழுது கொண்டிருக்கும் வரை (அவர்களுடன் போராட) வேண்டாம் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி),

நூல் : முஸ்லிம் 3445,3446

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "எனக்குப் பிறகு (ஆட்சியதிகாரத்தில் உங்களை விடப் பிறருக்கு) முன்னுரிமை வழங்கப் படுவதையும் நீங்கள் வெறுக்கின்ற சில விஷயங்களையும் பார்ப்பீர்கள்'' என்று சொன்னார்கள். "அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகின்றீர்கள். அல்லாஹ்வின் தூதரே?'' என்று மக்கள் கேட்க, நபி (ஸல்) அவர்கள், "(ஆட்சியாளர்களான) அவர்களுக்கு அவர்களது உரிமையை வழங்கி விடுங்கள். உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

நூல்: புகாரி 7052

மேற்கண்ட ஹதீஸ்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சியில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பிரதிபலிக்கின்ற வகையிலும், அதற்கான தீர்வுகளைத் தத்ரூபமாக தருகின்ற வகையிலும் அமைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.

நன்மையையும், தீமையையும் (ஆட்சியில்) காணும் போது, தீமையைக் காண்பவர் அதைக் கண்டிக்க வேண்டும்; அவ்வாறு கண்டித்தால் தான் மறுமையில் தப்பித்துக் கொள்ள முடியும்; அந்தத் தீமையில் திருப்தியடைந்தால் தண்டனை தான் கிடைக்கும் என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அதற்கேற்பத்தான் அலீ (ரலி) போன்ற முக்கிய சஹபாக்கள் எல்லாம் உஸ்மான் (ரலி) அவர்களைக் கண்டித்திருக்கிறார்கள். தீமை என்று தெரிந்ததை அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்ளவில்லை. அதே போல அதிபருக்கு எதிராகப் படைதிரட்டி வந்தவர்களையும் தடுத்திருக்கிறார்கள். அவர்களின் செயலையும் சரி காணவில்லை. போர் (ஜிஹாத்) தொடுக்கும் அளவிற்கு உஸ்மான் (ரலி) அவர்களின் நடவடிக்கை வரம்பு மீறி விடவில்லை என்பதையும் எடுத்துரைக்கிறார்கள்.

ஆனால் உஸ்மான் (ரலி) அவர்களை எதிர்த்து ஜிஹாத் செய்ய வந்தவர்கள், அவர்களைக் கொல்லுமளவிற்குச் சென்றவர்கள், "தொழுகையை நிலைநாட்டும் வரை போர் செய்யக் கூடாது'' என்ற விதிமுறையை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, முஸ்லிமில் இடம்பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தீமையில் இருந்தோம். நாங்கள் எந்த நன்மையில் இருக்கின்றோமோ அந்த நன்மையை (இஸ்லாத்தை) அல்லாஹ் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா?'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். "அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை உண்டா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். "அது எப்படி இருக்கும்?'' என்று நான் வினவினேன். அதற்கு அவர்கள், "எனது நேர்வழியைக் கொண்டு திருந்தாத எனது நடைமுறையைப் பின்பற்றாத தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்களில் மனித உடல்களையும், ஷைத்தானின் உள்ளங்களையும் கொண்ட மனிதர்கள் ஆட்சி செலுத்துவார்கள்.'' என்று பதிலளித்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! அந்த நிலையை அடைந்து விட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அந்த ஆட்சியாளர் உன்னுடைய முதுகில் அடித்துத் தாக்கி, உன் பொருளைப் பறித்துக் கொண்டாலும் நீ அவருக்கு செவி சாய்த்துக் கட்டுப்படு!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபத் அல் யமான் (ரலி),

நூல்: முஸ்லிம் 3435

இந்த நபிமொழி ஆட்சியாளருக்குக் கட்டுப்படுவது எந்தளவுக்கு முக்கியம் வாய்ந்தது, எது வரை கட்டுப்படுவது என்பதைத் துல்லியமாக விளக்குகிறது.

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸ் எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள்.

"யார் ஓர் ஆட்சியாளரிடத்தில் பைஅத் செய்து, அவரிடத்தில் கைப்பிடித்து உளமாற உறுதிமொழி வழங்கி விடுகின்றாரோ அவர் இயன்ற வரை அந்த ஆட்சியாளருக்குக் கட்டுப் படுவாராக! அவருக்குப் போட்டியாக இன்னொருவர் கிளம்பி விட்டால் அந்தப் போட்டியாளரின் கழுத்தைத் துண்டித்து விடுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி),

நூல்: முஸ்லிம் 3431

"நாங்கள் உற்சாகமாக இருக்கும் போதும், சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப் படும் போதும் கூட (ஆட்சியாளரின் கட்டளைக்கு) செவியேற்று, கட்டுப்பட்டு நடப்போம்; ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிட மாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை நாங்கள் ஆட்சியாளரிடம் கண்டாலே தவிர'' என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.

அறிவிப்பவர்: உப்பாதா பின் அஸ்ஸாமித் (ரலி),

நூல்: புகாரி 7056

ஒரு இஸ்லாமிய ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவதின் ஒழுங்குகளையும், ஜிஹாத் என்ற பெயரில் ஆட்சிக்கெதிராக கலகம், குழப்பத்தை ஏற்படுத்துவதின் ஆபத்தையும் மேற்கண்ட நபிமொழி தெளிவாக எடுத்தியம்புகின்றது.

எனவே ஜிஹாத் (கிதால்) சம்பந்தமான இஸ்லாத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து விட்டு மறுபக்கத்தை கவனிக்கத் தவறியதன் விளைவு தான் சத்திய சஹாபாக்களில் ஒரு பிரிவினர் கூட உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராக களமிறங்கியதும், கொலைப் பழியை சுமந்ததும்.

பெருமானார் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜத்துல் விதா எச்சரிக்கை எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும்.

முஸ்லிம்கள் படிப்பினை பெறுவதற்கு உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை ஒன்றே போதும். முஸ்லிம் அரசாங்கத்திற்கு எதிராக அதன் அதிபர் என்ன தான் அக்கிரமம் செய்தாலும் ஆயுதம் தாங்குவதற்கு அனுமதியில்லை. ஜிஹாதை வலியுறுத்தும் எத்தனை ஆதாரங்களை அவர்கள் எடுத்துக் காட்டினாலும் அவை இதற்குப் பொருந்தாது.

ஒரு அதிபர் என்ன தான் அநியாயம் செய்தாலும் அவர் தொழுகையை நிலைநாட்டும் வரை ஆயுதம் தூக்கக் கூடாது என்ற நபிகள் நாயகத்தின் எச்சரிக்கையை இவர்கள் விளங்கியிருந்தால் ஜிஹாதின் பெயரால் நடந்த முதல் படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஓரிறைக் கொள்கையை விட்டு விலகாத வரை எவருக்கு எதிராகவும் ஆயுதம் தூக்கக் கூடாது என்பதை விளங்கியிருந்தால் உஸ்மான் (ரலி) படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கும். தவறாகப் புரிந்து கொண்ட ஜிஹாத் வெறி உஸ்மான் (ரலி), பத்து சொர்க்கவாசிகளில் ஒருவர் என்பதையும், நபிகள் நாயகத்தின் மருமகன் என்பதையும், நபிகள் நாயகம் அவர்களின் திருவாயால் அவர் பெற்ற எண்ணற்ற நற்சான்றுகளையும் அலட்சியப்படுத்தும் அளவுக்கு அவர்களைக் கொண்டு சென்று விட்டது.

சட்டதிட்டங்களிலும் உட்பிரிவுகளிலும் முஸ்லிம்களுக்கிடையே அன்று கருத்து மோதல்கள் இருந்தன. இன்றும் இருக்கின்றன. இதன் காரணமாக ஒருவர் தலையை ஒருவர் வெட்டிச் சாய்க்கும் நிலை ஏற்படவில்லை. ஆனால் ஜிஹாத் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டதால் தான் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்க்கும் நிலை ஏற்பட்டது என்பதற்கு உஸ்மான் (ரலி) கொலை மட்டுமின்றி ரத்தக் கறை படிந்த வரலாறுகளின் பட்டியல் நீள்கின்றது.

ஜிஹாதைத் தவறாகப் புரிந்து கொண்டதால் இஸ்லாமிய வரலாறு சந்தித்த மேலும் பல அதிர்ச்சிகளைத் தொடர்ந்து பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்.

(குறிப்பு: இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்புகள், இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் எழுதிய இஸ்லாமிய வரலாற்று நூலான அல் பிதாயா வன் நிஹாயா மற்றும் அத்தபரீ, அல் இஸ்திஆப், அல் இஸாபா, தஹ்தீபுத் தஹ்தீப், தபக்காத்து இப்னு சஅத், தப்ஸீர் இப்னு கஸீர் ஆகிய நூற்களில் இடம்பெற்றவை)

தொழுகை தொடர் - 9

பி. ஜைனுல் ஆபிதீன்

தொழுகைக்காக உளூச் செய்வது அவசியம் என்பதையும் அதற்கான ஒழுங்குகளையும், தண்ணீர் கிடைக்காவிட்டால் உளூவுக்குப் பகரமாக தயம்மும் செய்யலாம் என்பதையும், தயம்மும் செய்வதற்கான ஒழுங்குமுறைகளையும் இது வரை நாம் பார்த்தோம்.

உளூச் செய்த பின்னால் நம்மிடமிருந்து ஏற்படும் சில நிகழ்வுகளால் உளூ நீங்கி விடும். அவ்வாறு நீங்கி விட்டால் மீண்டும் உளூச் செய்யாமல் தொழக் கூடாது என்று திருக்குர்ஆனும் நபிவழியும் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத பல காரியங்களை உளூவை நீக்கும் காரியங்கள் என்று தமிழக முஸ்லிம்களில் பலர் புரிந்து வைத்துள்ளனர். அதே போல் உளூவை நீக்குபவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சில காரியங்கள் உளூவை நீக்காது எனவும் சிலர் விளங்கி வைத்துள்ளனர். எனவே உளூவை நீக்கும் காரியங்கள் யாவை என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிவழியில் அறிந்து கொள்வோம்.

மலஜலம் கழித்தல்

உளூச் செய்த பின் ஒருவர் மலம் கழித்தாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ அவர் செய்த உளூ நீங்கி விடும். அவர் தொழுவதாக இருந்தால் மீண்டும் உளூச் செய்த பின்பே தொழ வேண்டும்.

மலம் கழிப்பது உளூவை நீக்கும் என்பதை 4:43, 5:6 ஆகிய வசனங்களைச் சிந்திக்கும் போது விளங்கலாம்.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:43)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கை களையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப் படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். (அல்குர்ஆன் 5:6)

மலம் கழித்த ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து தொழ வேண்டும் என்று இவ்விரு வசனங்கள் கூறுகின்றன. தண்ணீர் கிடைத்தால் உளூச் செய்வது அவசியம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே இருந்த உளூவை மலம் கழித்தல் நீக்கி விடும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

சிறுநீர் கழிப்பதும் உளூவை நீக்கி விடும் என்பதைப் பின்வரும் ஹதீஸைச் சிந்திக்கும் போது அறிய முடியும்.

காலுறை அணிந்தவர்கள் பயணிகளாக இருந்தால் மலம், சிறுநீர், தூக்கம் காரணமாக மூன்று நாட்கள் கால்களைக் கழுவத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)

நூல்கள்: நஸயீ 126, 127, 158, 159, திர்மிதீ 89, 3458, 3459

மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல், தூங்குதல் ஆகிய காரியங்கள் உளூவை நீக்கி விடும். அவ்வாறு நீக்குவதால் மீண்டும் உளூச் செய்ய வேண்டும். மீண்டும் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் (ஈரக்கையால் தடவுதல்) செய்யலாம். மற்ற உறுப்புகளைக் கழுவி உளூச் செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

காற்றுப் பிரிதல் உளூவை நீக்கும்

மலஜலம் கழிப்பதால் உளூ நீங்குவது போலவே காற்றுப் பிரிவதாலும் உளூ நீங்கி விடும்.

"ஹதஸ்' ஏற்பட்டவனின் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள். அப்போது "ஹள்ரமவ்த்' என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் "அபூஹுரைராவே! ஹதஸ் என்றால் என்ன?'' என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி), "சப்தத்துடனோ அல்லது சப்தமின்றியோ காற்றுப் பிரிவது தான்'' என்று விளக்கமளித்தார்கள்.

நூல்: புகாரி 135, 176

மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல், காற்றுப் பிரிதல் ஆகிய மூன்றும் உளூவை நீக்கி விடும் என்பது ஆதாரப்பூர்வமாக இருப்பதுடன் எந்த அறிஞரும் இதில் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.

மலஜலம் கழிப்பதன் ஒழுங்குகள்

மலஜலம் கழிப்பது உளூவை நீக்குவது போல் உளூவை நீக்கும் வேறு காரியங்களும் உள்ளன. அவற்றை அறிவதற்கு முன்னால் மலஜலம் கழிப்பதன் ஒழுங்குகளை நாம் அறிந்து கொள்வோம்.

மறைவிடத்தில் மலஜலம் கழித்தல்

மலஜலம் கழிக்கும் போது உள்ளுறுப்புகளை மற்றவர்கள் பார்க்காதவாறு மறைவிடத்தில் கழிக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிலுள்ள ஒரு தோட்டத்தின் அருகில் நடந்து சென்ற போது இரண்டு மண்ணறைகளில் இருவர் வேதனை செய்யப்படும் சப்தத்தைக் கேட்டார்கள். "இவ்விருவரும் பெரும் குற்றம் செய்ததற்காக வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைத்துக் கொள்ளாதவராக இருந்தார். மற்றவர் கோள் சொல்பவராக இருந்தார்'' என்று கூறினார்கள். பின்னர் ஒரு பேரீச்சை மட்டையைக் கொண்டு வரச் செய்து இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு மண்ணறையின் மீதும் ஒரு துண்டை வைத்தனர். "அல்லாஹ்வின் தூதரே, ஏன் இவ்வாறு செய்தீர்கள்?'' என்று கேட்கப் பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இது காயும் வரை இவர்களின் வேதனை இலேசாக்கப் படலாம்'' என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 216, 218, 1361, 1378, 6052, 6055

சிறுநீர் கழிக்கும் போது மறைத்துக் கொள்ளாதவராக இருந்தால் கப்ரில் வேதனை செய்யப் படுகின்றது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளதால் மறைந்த நிலையில் தான் சிறுநீர் கழிக்க வேண்டும்.

ஆயினும் மலம் கழிக்கும் போது மறைக்கும் அளவுக்கு சிறுநீர் கழிக்கும் போது மறைக்கத் தேவையில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நானும் கழிப்பிடம் சென்றேன். அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்றால் தொலைவாகச் செல்வது வழக்கம்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபீகுராத் (ரலி)

நூல்கள்: நஸயீ 16, 17 திர்மிதீ 20, அபூதாவூத் 1, இப்னுமாஜா 326

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்றால் (தூரமாகச் சென்று மணல்) திட்டுக்கள் அல்லது பேரீச்சை மரங்களுக்குப் பின்னால் மறைவாக அமர்வதை விரும்புவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜஃபர்,

நூல்: முஸ்லிம் 517

மற்றவர்கள் தம்மைப் பார்க்காத வகையில் தூரமாகச் சென்று, மணல் திட்டுக்கள் மற்றும் மரங்களுக்குப் பின்னால் மறைவாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலம் கழிப்பார்கள் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து நாம் அறிந்து கொள்கின்றோம். ஆனால் சிறுநீர் கழிக்கும் போது யாரும் பார்க்காதவாறு தூரமாகச் செல்ல மாட்டார்கள். தமது முன்புறத்தை மட்டும் மறைத்துக் கொள்வார்கள். அவர்கள் சிறுநீர் கழிக்கின்றார்கள் என்பதை மற்றவர்களால் அறிந்து கொள்ள முடியும்.

நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நடந்து கொண்டிருந்தோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சுவருக்கு முன்னால் அமைந்திருந்த குப்பை மேட்டுக்கு வந்து, நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். நான் அவர்களை விட்டு விலகலானேன். சைகை செய்து என்னை அருகில் வரச் செய்தார்கள். அவர்கள் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை அவர்களின் பின்புறமாக நான் நின்று கொண்டேன்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),

நூல்: புகாரி 225

கிப்லா திசையை இயன்ற வரை தவிர்த்தல்

உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்னோக்கவும் கூடாது; கிப்லாவை முதுகுக்குப் பின்னாலும் ஆக்கக் கூடாது. கிழக்கையோ மேற்கையோ நோக்கி அமருங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி),

நூல்: புகாரி 144, 394

கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமருங்கள் என்பது மதீனாவில் உள்ள மக்களைக் கருத்தில் கொண்டு சொல்லப் பட்டதாகும். மதீனாவிலிருந்து வடக்கு திசையில் கிப்லா அமைந்திருப்பதால் வடக்கு தெற்காக அமராமல் கிழக்கு மேற்காக அமரச் சொன்னார்கள். நமது நாட்டைப் பொறுத்த வரை மேற்குத் திசையில் அல்லது வடமேற்குத் திசையில் கிப்லா அமைந்திருப்பதால் நாம் வடக்கு தெற்காகத் தான் அமர வேண்டும்.

கிப்லாவை நோக்கி மலஜலம் கழிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தாலும் இந்தத் தடை திறந்த வெளியில் தான். கட்டடத்திற்குள் கிப்லாவை நோக்கலாம் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

மலஜலம் கழிக்கும் போது கிப்லாவையோ, பைத்துல் முகத்தைஸையோ நோக்காதே என்று சிலர் கூறுகின்றனர். நான் ஒரு நாள் எனது வீட்டின் முகட்டின் மீது ஏறினேன். நபி (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி இரு செங்கற்கள் மீது அமர்ந்து தமது தேவையை நிறைவு செய்ததைப் பார்த்தேன் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.

நூல்: புகாரி 145, 149

நான் (எனது சகோதரியும் நபிகள் நாயகத்தின் மனைவியுமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டின் மேல் ஏறினேன். நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை முதுகுக்குப் பின்னால் ஆக்கி சிரியாவை முன்னோக்கி தமது தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரி 148, 3102

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிப்லாவை நோக்கி சிறுநீர் கழிப்பதைத் தடை செய்திருந்தார்கள். அவர்கள் மரணிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால் அதை முன்னோக்கியதை நான் பார்த்திருக்கின்றேன் என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்: முஸ்னத் அஹ்மத் 14343

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்கி சிறுநீர் கழித்ததாக இவர் கூறுவது கட்டடத்திற்குள் நடந்ததாக இருக்க வேண்டும் என்று கருதினால் இப்னு உமருடைய அறிவிப்பும் இவரது அறிவிப்பும் ஒத்துப் போகின்றது.

கட்டடத்திற்குள் மலஜலம் கழிப்பதாக இருந்தால் கிப்லாவை முன்னோக்கத் தடை ஏதும் இல்லை என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து அறியலாம் என்பது பல அறிஞர்களின் கருத்தாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைத் தடை செய்து விட்டு அதற்கு மாற்றமாக அவர்களின் செயல் அமைந்திருந்தால் அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டுமே தவிர செயலைப் பின்பற்றக் கூடாது என்பது கருத்து வேறுபாடு இல்லாமல் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட விதியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தடை செய்துள்ளதால் நாம் மலஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கக் கூடாது. அவர்கள் அதற்கு மாற்றமாக நடந்ததற்கு அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்கள் இருக்கலாம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

இந்த வாதத்தில் உள்ள நியாயத்தையும் புறக்கணிக்காமல் முடிவு செய்வதற்கும் வழி இருக்கின்றது.

* திறந்த வெளியாக இருந்தால் கண்டிப்பாக கிப்லாவை முன்னோக்கவும் பின்னால் ஆக்கவும் கூடாது.

* கட்டடமாக இருந்தால் அதில் கிப்லாவை நோக்காது இருக்க வழி இருந்தால் அப்போதும் கிப்லாவை நோக்கக் கூடாது.

* கட்டடத்தில் கிப்லாவை நோக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை இருந்தால் அதுபோன்ற சந்தர்ப்பங்களில் கிப்லாவை முன்னோக்குவது குற்றமில்லை.

இப்படி முடிவு செய்தால் நபி (ஸல்) அவர்கள் தாம் இட்ட கட்டளையை தாமே ஏன் மீறினார்கள் என்பதற்கும் நமக்கு விடை கிடைக்கும். கிப்லாவை முன்னோக்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலை அங்கே இருந்திருக்கலாம். அதனால் அவ்வாறு இருந்திருப்பார்கள் என்று விளக்கம் அளிக்க இடம் உண்டு.

பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் கிழக்கு மேற்கில் அமைக்கப் பட்டிருந்தால் அங்கே நம்மால் வடக்கு தெற்காக அமர முடியாத நிலை ஏற்படலாம். அது போன்ற தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அது குற்றமில்லை என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயலை ஆதாரமாகக் கொள்ளலாம்.

நீங்கள் கழிப்பிடம் சென்றால் கிப்லாவை முன்னோக்காதீர்கள். அதைப் பின்னோக்கவும் செய்யாதீர்கள். கிழக்கு மேற்காக நோக்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறியிருந்தனர். நாங்கள் சிரியாவுக்கு வந்த போது அங்கே கிப்லாவை நோக்கி கழிவறைகள் அமைக்கப் பட்டிருப்பதைக் கண்டோம். எனவே சற்றே சாய்வாக அமர்ந்து (மலம் கழித்து விட்டு) அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்வோம் என்று அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரி 394

இந்த ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது நம்மால் இயன்ற வரை கிப்லாவை நோக்கி மலம் கழிக்காமல் இருக்க முயல வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.

வீட்டில் கிழக்கு மேற்காக கழிப்பிடம் அமைப்பதற்குத் தான் வசதி இருக்கின்றது என்றால் - அல்லது அமைக்கப் பட்ட கழிப்பிடங்களில் நாம் மலஜலம் கழிப்பதாக இருந்தால் - அது போன்ற சந்தர்ப்பங்களில் மட்டும் கிப்லாவை முன்னோக்குவதோ பின்னோக்குவதோ குற்றமாகாது.

வலது கையைத் தவிர்த்தல்

சிறுநீர் கழிக்கும் போது, அல்லது மலஜலம் கழித்து சுத்தம் செய்யும் போது அதற்கு இடது கையைத் தான் பயன்படுத்த வேண்டும்.

உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது தனது உறுப்பை வலது கையால் பிடிக்க வேண்டாம். வலது கையால் சுத்தமும் செய்ய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),

நூல்: புகாரி 153, 154, 5630

தேங்கிய நீரில் சிறுநீர் கழிக்கக் கூடாது

தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கவும் வேண்டாம். பின்னர் அதில் குளிக்கவும் வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 239

தேங்கி நிற்கும் தண்ணீர் மனிதர்கள் குளிப்பதற்கோ, உளூச் செய்வதற்கோ பயன்படக் கூடியதாக இருந்தால் அதில் சிறுநீர் கழிக்கலாகாது. வெறும் சாக்கடை நீராக இருந்தால் அதில் சிறுநீர் கழிப்பது தவறில்லை. "சிறுநீர் கழித்து விட்டு அதில் குளிக்கவும் வேண்டாம்'' என்ற சொற்றொடரிலிருந்து இதை அறியலாம்.

எனவே குளம், குட்டை, கண்மாய் மற்றும் ஏரிகளில் சிறுநீர் கழிக்கக் கூடாது.

புற்றுகளில் சிறுநீர் கழிக்கக் கூடாது

எறும்புகள், பாம்புகள், கரையான்கள் மற்றும் இது போன்ற உயிரினங்கள் வசிப்பதற்காக எழுப்பிக் கொண்ட புற்றுகள் மீது சிறுநீர் கழிக்கக் கூடாது. நஸயீ 34, அபூதாவூத் 27, அஹ்மத் 19847 ஆகிய ஹதீஸ்களில் இந்தத் தடையைக் காணலாம்.

மலஜலம் கழிக்கும் போது பேசக் கூடாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிக்கும் போது ஒருவர் ஸலாம் கூறினார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதில் கூறவில்லை. சிறுநீர் கழித்து விட்டு ஒரு சுவற்றுக்கு அருகில் நின்று தயம்மும் செய்தார்கள். பின்னர் அவருக்குப் பதில் கூறினார்கள். (நூல்: புகாரி 337)

பதில் ஸலாம் கூறுவதை தவிர்த்ததற்கு நபி (ஸல்) அவர்கள் உளூவுடன் இல்லாமல் இருந்தது தான் காரணம் என்றாலும் சிறுநீர் கழிக்கும் போதே, "சற்றுப் பொறு! தயம்மும் செய்து விட்டுப் பதில் கூறுகின்றேன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க முடியும். அவ்வாறு கூறாததிலிருந்து. அவர்கள் அவருடன் பேசுவதைத் தவிர்க்கின்றார்கள் என்பதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குப்பை மேட்டுக்கு அருகில் சிறுநீர் கழித்ததை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அதில் ஹுதைஃபா (ரலி) அவர்களை அருகே வரும்படி சைகையால் தான் அழைத்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே பேசுவதைத் தவிர்ப்பது தான் நபிவழியாகும்.

தலையை மறைத்தல்?

மலஜலம் கழிக்கும் போது தலையை மறைப்பது சுன்னத் என்று சில மார்க்க அறிஞர்கள் கூறி வருகின்றனர். இது எவ்வித ஆதாரமும் இல்லாத கட்டுக் கதையாகும்.

ஆண்களோ, பெண்களோ யாராயினும் மலஜலம் கழிப்பதற்காக தலையை மறைக்க வேண்டியதில்லை. அப்படி எந்தக் கட்டளையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பிக்கவில்லை.

மார்க்க சம்பந்தமான எழுத்துக்களை அப்புறப்படுத்துதல்?

இறைவனின் திருநாமம், திருக்குர்ஆன் வசனங்கள் போன்றவை நம்மிடம் இருந்தால் அதை அப்புறப் படுத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளை ஏதும் பிறப்பிக்கவில்லை.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று பொறித்த மோதிரம் ஒன்று இருந்தது. கழிப்பிடம் செல்லும் போது அதைக் கழற்றுவார்கள்'' என்ற கருத்துப் பட சில ஹதீஸ்கள் உள்ளன.

ஹம்மாம் என்பார் ஸுஹ்ரியிடமிருந்து அறிவிப்பதாக அமைந்த ஹதீஸ் அபூதாவூத் 18, திர்மிதீ 1668, நஸயீ 5118, இப்னுமாஜா 299 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல என்று அபூதாவூத், நஸயீ ஆகியோர் குறிப்பிடுகின்றனர். ஹம்மாம் என்பார் ஸுஹ்ரியிடமிருந்து எதையும் செவியுறவில்லை என்பதே இதற்குக் காரணம்.

ஹம்மாம் அல்லாத மற்றொரு வழியிலும் இது அறிவிக்கப் பட்டுள்ளது. அதன் முதல் அறிவிப்பாளராக ஸுஹ்ரி இடம் பெறுகின்றார். இவர் நபித்தோழர் அல்ல என்பதால் இது ஏற்கத்தக்க ஆதாரமாகாது. நபிகள் நாயகத்தை நேரில் பார்த்த நபித்தோழர் முதல் அறிவிப்பாளராக இருந்தால் தான் எந்த ஹதீசும் ஏற்கப் படும்.

மலஜலம் கழிக்கச் செல்லும் போது கூற வேண்டியவை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிவறையில் நுழையும் போது,

???

"அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் குபுஸி வல் கபாயிஸி'' என்று கூறுவார்கள்.

நூல்: புகாரி 142, 6322

கழிப்பிடத்திலிருந்து வெளியே வரும் போது,

???

"குஃப்ரானக'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

நூல்: நஸயீ 28, அஹ்மத் 24063

நடைபாதையில் மலஜலம் கழிக்கக் கூடாது

சாபத்திற்குரிய இரண்டு காரியங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். சாபத்திற்குரிய இரண்டு காரியங்கள் யாவை என்று நபித்தோழர்கள் கேட்ட போது, "மனிதர்கள் நடக்கும் பாதையிலும், மனிதர்களுக்கு நிழல் தரும் இடங்களிலும் மலஜலம் கழித்தல்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 397)

நடைபாதையில் மட்டுமின்றி பொதுமக்களுக்குப் பயன்படும் எந்த இடத்திலும் மலஜலம் கழிக்கக் கூடாது.

தண்ணீரால் சுத்தம் செய்தல்

அன்றைய அரபுகள் மலம் கழித்த பின் பெரும்பாலும் தண்ணீரால் சுத்தம் செய்ய மாட்டார்கள். சிறு கற்களால் துடைத்துப் போட்டு விட்டுச் செல்வார்கள். அரிசியை உணவாக உட்கொள்ளும் நமக்கு இது ஆச்சரியமாகவும், அருவருப்பாகவும் தோன்றலாம். கோதுமையையே உணவாக உட்கொள்பவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்காது.

இதைப் புரிந்து கொள்ள உதாரணம் கூறுவதென்றால் ஆடுகள் மற்றும் மாடுகள் மலம் கழிப்பதை உதாரணமாகக் கூறலாம். மாடுகள் சாணி இளகியதாகவும் பரவக் கூடியதாகவும் இருக்கும். ஆடுகள் புளுக்கைகளைத் தான் வெளிப்படுத்தும். அவ்வாறு வெளிப்படுத்திய பின் மலம் கழித்த எந்த அறிகுறியும் இருக்காது.

அரிசியை மட்டும் உணவாக உட்கொள்பவர்களுக்கும், கோதுமையை மட்டும் உணவாக உட்கொள்பவர்களுக்கும் இந்த அளவுக்கு வித்தியாசம் உள்ளது.

அன்றைய அரபுகள் மலம் கழித்த பின் கழுவுவதில்லை என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் எப்போதும் மலம் கழித்து விட்டுக் கழுவுபவர்களாக இருந்தார்கள்.

புகாரி 150, 152, 217 ஆகிய ஹதீஸ்களில் இதைக் காணலாம்.

தண்ணீரே கிடைக்காத போது மிகச் சில சந்தர்ப்பங்களில் அன்றைய வழக்கப்படி கற்களாலும் சுத்தம் செய்திருக்கின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்றனர். மூன்று கற்களை எடுத்து வருமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். இரண்டு கற்கள் தான் எனக்குக் கிடைத்தன. மூன்றாவதைத் தேடினேன். கிடைக்கவில்லை. எனவே ஒரு விட்டையையும் எடுத்துக் கொண்டு வந்தேன். அவர்கள் இரு கற்களை மட்டும் எடுத்துக் கொண்டு விட்டையை எறிந்து விட்டனர். இது அசுத்தம் எனவும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

நூல்: புகாரி 156

உங்களில் எவரும் கற்களால் சுத்தம் செய்வதாக இருந்தால் மூன்று கற்களுக்குக் குறைவாக சுத்தம் செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 386)

மலம் கழித்த பின் கற்களால் துடைத்துப் போடுவதால் சுத்தமாகி விடும் என்ற நிலையில் உள்ளவர்கள் அவ்வாறு செய்து கொள்ளலாம். மேலை நாடுகளில் பேப்பரால் துடைத்துப் போடுவது மார்க்கத்துக்கு விரோதமானது அல்ல என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

அவ்வாறு சுத்தமாகாது என்ற நிலையில் உள்ளவர்கள் தண்ணீரைப் பயன்படுத்திக் கழுவிக் கொள்வது தான் நல்லது.

சிறுநீர் கழிப்பதற்காக பள்ளிவாசல்களில் "டேலாக் கட்டி' என்ற சிறு கற்களைத் தயார் செய்து போட்டிருப்பார்கள். சிறுநீர் கழித்தவுடன் அந்தக் கல்லை இடது கையால் மர்மஸ்தானத்தில் ஒத்திக் கொண்டு நடைபோடுவார்கள். இது சுன்னத் என்றும் கூறுவார்கள்.

கற்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்தல் என்பது மலம் கழிப்பதற்குரியது தான்.

உங்களில் ஒருவர் மலம் கழிக்கும் போது (தகவ்வத) என்ற சொல்லைப் பயன்படுத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று கற்களால் சுத்தம் செய்யச் சொன்னார்கள். (நூல்: தப்ரானியின் அவ்ஸத் 1696)

எனவே மலம் கழித்து விட்டு சுத்தம் செய்வதற்குத் தான் கற்களைப் பயன்படுத்த வேண்டும்.

சிறுநீர் கழித்து விட்டு இடது கையை உள்ளே விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் நடை போட்டதில்லை. இது மார்க்க அறிவு இல்லாத மூடர்கள் கண்டு பிடித்து நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக் கட்டி விட்டனர்.

சிறுநீர் கழித்த பின் அதையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுளளனர்.

கப்ரில் வேதனை செய்யப் படும் ஹதீஸில், முஸ்லிமில் இடம் பெறும் அறிவிப்பில் (439) ஒருவர் சிறுநீர் கழித்து விட்டு சுத்தம் செய்யாதவராக இருந்தார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே சிறுநீர் கழித்தவுடன் ஒரு துளியும் ஆடையில் ஒட்டிக் கொள்ளாத வகையில் மண், பேப்பர், சிறு மண்ணாங்கட்டி போன்றவற்றால் உறிஞ்சச் செய்து விட்டு எடுத்தால் அதுவே போதுமாகும். (தண்ணீர் கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்)

இடது கையால் பிடித்துக் கொண்டு நடை போடவேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

நின்று கொண்டு சிறுநீர் கழித்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததாக யாரேனும் கூறினால் அதை நம்பாதீர்கள். ஏனெனில் அவர்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் வழக்கம் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்கள்: திர்மிதீ 12, நஸயீ 29, இப்னுமாஜா 303

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போதும் உட்கார்ந்தே சிறுநீர் கழித்தார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஆயினும் மிகச் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்துள்ளனர்.

புகாரி 224, 2471 ஆகிய ஹதீஸ்களில் இதைக் காணலாம்.

ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டிய புகாரி 225வது ஹதீஸில், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு குப்பை மேட்டுக்கு வந்து நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.

குப்பை மேடானது உட்கார்ந்து கொண்டு சிறுநீர் கழிப்பதற்கு ஏற்றதாக இருக்காது. அங்கே உட்கார வழியில்லாததால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர் என்பதை விளங்கலாம்.

சாக்கடைகள் தேங்கியுள்ள இடம், பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில், நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான சிறுநீர் கழிப்பிடங்களில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது குற்றமாகாது என்பதற்கு இதை ஆதாரமாகக் கொள்ளலாம்.

தவறான எண்ணங்களைக் கண்டு கொள்ள வேண்டாம்

காற்றுப் பிரிதல், சிறுநீர் கழித்தல் போன்றவை உளூவை நீக்கும் என்பதை முன்னரே கண்டோம்.

சிலருக்கு காற்றுப் பிரியாவிட்டாலும் காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்படும். அல்லது சிறுநீர் ஓரிரு சொட்டுக்கள் இறங்கி விட்டது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் ஆடையில் அதற்கான எந்த அடையாளமும் இருக்காது. இவர்கள் அதற்காக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

திட்டவட்டமாகத் தெரிந்தால் மட்டுமே உளூ நீங்கி விட்டதாக முடிவு செய்து கொள்ள வேண்டும்.

தொழும் போது ஏதோ ஏற்படுவதாகத் தனக்குத் தோன்றுகின்றது என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "(காற்றுப் பிரியும்) சப்தத்தைக் கேட்காமல், அல்லது அதன் நாற்றத்தை உணராமல் தொழுகையை விட்டுச் செல்ல வேண்டாம்'' என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 137, 177, 2056

வீண் சந்தேகத்தின் காரணமாக உளூ நீங்கி விட்டது என்ற முடிவுக்கு வர வேண்டியதில்லை.

மலஜலம் கழித்தல், காற்றுப் பிரிதல் தவிர வேறு எந்தக் காரியங்கள் உளூவை நீக்கும் என்பதை aஅடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ் காணலாம். 

Published on: June 28, 2011, 9:39 PM Views: 1418


www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top