தீன்குலப் பெண்மணி டிசம்பர் 2011

தீன்குலப் பெண்மணி டிசம்பர் 2011
தலையங்கம்

கட்டண உயர்வு யார் காரணம்?

தமிழகத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் மிக கடுமையாக பால், பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஏரத்தாள நூறு சதவிகத்திற்கு நெருக்கமாக பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. கட்சி வேறுபாடின்றி இந்த உயர்வை மக்கள் எதிர்த்துள்ளனர்.

ஆகஸ்ட் 4 ஆம் நாள் தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா அரசு தாக்கல் செய்த பட்ஜெட் வரியில்லாதது என்று பெருமைப்பட்டுக் கொண்டனர். பட்ஜெட் விளக்க கூட்டம் என்று போட்டு மக்களிடம் பெருமை பீற்றிக் கொண்டனர். ஆனால் உள்ளாட்சி தேர்தல் முடிந்த கையோடு ஏழை, நடுத்தர மக்களின் தலையில் இடியை போட்டுள்ளார் ஜெயலலிதா.

இதற்கு முன்னர் இதைப் போன்று வாட் வரியை பட்ஜெட்டிற்கு பின்னர்

ஏற்றினார். கேட்டால் இலவச திட்டங்களுக்கு பணம் எங்கிருந்து வரும்? என்று திருப்பி கேட்டார்.

கொஞ்சம் விலையேற்றம் இருக்கலாம் என்று எண்ணிய நேரத்தில் மிக கடுமையாக விலையேற்றத்தை செய்து மக்கள் வயிற்றில் அடித்துள்ளார் ஜெயலலிதா.

விலையேற்றத்திற்கு காரணம் முந்தைய அரசு. அடுத்தது நிதி தராத மத்திய அரசு என்று குற்றம் சுமத்தியுள்ளார் ஜெயலலிதா.

ஒவ்வொரு ஆட்சியாளரும் சொல்லும் சாக்கு போக்கு இதுதான். முந்தைய அரசு சரிவர செயல்படவில்லை.

இவ்வாறு குற்றம் சுமத்திய இதே ஜெயலலிதாதான் எதிர்கட்சியாக இருக்கும் போது பேருந்துகளில் மறைமுகமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டள்ளன. செகுசு பேருந்து என்ற பெயரில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்தவர் இப்போது  இவ்வளவு பெரிய விலையேற்றத்தை எப்படி ஜீரணிக்கிறார் என்று தெரியவில்லை.

ஜெயலலிதா மிகவும் தைரியம் மிக்கவர் என்று சொல்வார்கள். உண்மையில் அப்படியிருந்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு முன்னர் விலையேற்றத்தை நடைமுறைபடுத்திவிட்டு தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் மக்களின் மனக்குமுறல் தேர்தல் முடிவாக வெளிப்பட்டிருக்கும்.

பேருந்து கட்டண உயர்வுக்கு காரணம். எந்த ஆட்சியும் சரிவர போக்குவரத்து நிறுவனங்களை செயல்படுத்தவில்லை என்பதுதான். ஆனால் உண்மை என்ன? போக்குவரத்து துறையில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகள் இவ்வற்றையெல்லாம் எந்த அரசும் கண்டு கொள்வதில்லை. இதனால்தான் போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றது.

கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்னர், இயங்கி வந்த தனியார் நிறுவனங்களில் எந்த நிறுவனமாவது திவலாகி உள்ளதா? தமிழக அரசு ஓட்டை உடைசல் பேருந்துகளை அரசு இயக்கிவரும் நேரத்தில் புத்தம் புதிய பேருந்துகளை தனியார் நிறுவனங்கள் எப்படி இயக்கி வருகின்றன? சில வழித்தடங்களில்

அரசு பேருந்துகளின் கட்டணத்தைவிடவும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. லாபம் இல்லாமலா தனியார் நிறுவனங்கள் புதிய பேருந்துகளை வாங்கி இயக்கி வருகின்றனர்?

பேருந்துகளை எப்படி பராமரிப்பது? குறைந்த செலவில் எப்படி லாபம் ஈட்டுவது என்பதை தனியார் நிறுவனங்களிடம் முதல்வர் பாடம் படிக்கட்டும். முந்தைய ஆட்சியை காரணம் காட்டி தப்பிக் நினைத்தால், நாங்கள்ஆட்சிக்கு வந்தால் அவர்களின் மோசமான ஆட்சியால் சீர்கெட்டிருக்கும் அரசு நிறுவனங்களை சீர் செய்ய கட்டணங்களை உயர்த்துவோம் என்று உண்மை சொல்லி வோட்டு கேட்டிருக்க வேண்டும்.

பேருந்துகளை சரிவர பராமரித்து சரியான வழிதடங்களில் பேருந்துகளை இயக்கி ஊழியர்களிடம் சரிவர வேலை வாங்கி, ஊழல் முறைகேடுகளை களைந்தால் குறைந்த கட்டணத்தில் பேருந்தகளை இயக்க முடியும்.

பல கோடி ரூபாய்களுக்கு இலவசங்களை வழங்கி வரும் தமிழக அரசு

அதை உடனடியாக நிறுத்திவிட்டு அடிப்படை தேவைகளுக்குரிய செலவுகளுக்கு அந்த பணத்தை பயன்படுத்த வேண்டும்.

தமிழகம் தற்போது ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடனில் உள்ளதாம். ஒரு ஐந்தாண்டு முடிந்துவிட்டால் தமிழகம் எத்தனை லட்சம் கோடி கடனில் மூழ்கும் என்பது தெரியவில்லை. இப்படியே போனால் உலகவங்கியும் பன்னாட்டு

வங்கியும்தான் தமிழகத்தை ஆளும் நிலை ஏற்படும்.

குற்றங்களும் தண்டனைகளும் தொடர் : 4

அவதூறுகள்

ராஜ் முஹம்மத் எம்.ஐ.எஸ்.ஸி,

ஒப்பாரி வைப்பவர்களுக்குரிய தண்டனை

துன்பம் ஏற்படும் போது கண்ணீர்விட்டு அழ அனுமதியுள்ளது. அதே நேரத்தில் சப்தமிட்டு ஒப்பாரி வைத்து அழுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு மறுமையில் தண்டனையையும் நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவையாவன:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர் பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது.

ஒப்பாரிவைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்.

அறிவிப்பவர் : அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரலி),

நூல் : முஸ்லிம் 1700

பொறுப்பை நிறைவேற்றாதவருக்குரிய தண்டனை

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதேனும் (அரசுப்) பதவி வழங்கக் கூடாதா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, "அபூதர்! நீர் பலவீனமானவர். அது (பதவி) ஒரு கையடைப் பொருளாகும். அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரிய பொறுப்புகளை நிறை வேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும் துயரமும் ஆகும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி),

நூல் : முஸ்லிம் 3729

அநீதியிழைத்தவருக்குரிய தண்டனை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். கருமித்தனத்திலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் கருமித்தனமானது, உங்களுக்கு முன்னிருந்தவர்களை அழித்தது; இரத்தங்களைச் சிந்துவதற்கும் இறைவனால் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவையாக ஆக்கிக் கொள்வதற்கும் தூண்டுகோலாக இருந்தது.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),

நூல் : முஸ்லிம் 5034

நல்ல செயல் செய்யாதவருக்குரிய தண்டனை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நரகவாசிகளில் ஒருவர் மறுமை நாளில் கொண்டுவரப் பட்டு, நரகத்தில் ஒரு முறை அழுத்தி எடுக்கப்படுவார். பிறகு அவரிடம், "ஆதமின் மகனே (மனிதா)! (உலக வாழ்வில்) எப்போதேனும் நல்லதைப் பார்த்தாயா? எப்போதேனும் அருட்கொடை ஏதும் உனக்குக் கிடைத்ததா?'' என்று கேட்கப்படும். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக, இல்லை என் இறைவா!'' என்று பதிலளிப்பார். அவ்வாறே, இவ்வுலகில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளில் ஒருவர் மறுமை நாளில் கொண்டுவரப்பட்டு, சிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார். பிறகு அவரிடம், "ஆதமின் மகனே! (உலகில்) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயா? எப்போதேனும் துன்பம் ஏதும் உமக்கு ஏற்பட்டதா?'' என்று கேட்கப்படும். அதற்கு அவர் "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை, என் இறைவா! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை. ஒரு போதும் நான் சிரமத்தைக் கண்டதுமில்லை'' என்று கூறுவார்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல் : முஸ்லிம் 5407

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை விட்டும் தடுக்க கூடியவனுக்குரிய தண்டனை

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.               

அல்குர்ஆன் 2:114

வீண் விவாதங்களில் மூழ்கியோருக்குரிய தண்டனை

உங்களுக்கு முன் சென்றோரைப் போல் (நீங்களும் இருக்கிறீர்கள்.) அவர்கள் உங்களை விட வலிமைமிக்கோராகவும், அதிக மக்கட் செல்வமும் பொருட் செல்வமும் உடையோராகவும் இருந்தனர். தங்களுக்குக் கிடைத்த பாக்கியத்தை அனுபவித்தனர். உங்களுக்கு முன் சென்றோர் தமது பாக்கியத்தை அனுபவித்தது போல் உங்களுக்குக் கிடைத்த பாக்கியத்தை நீங்கள் அனுபவித்தீர்கள். (வீண் விவாதங்களில்) மூழ்கியோரைப் போல் நீங்களும் மூழ்கி விட்டீர்கள். இவர்களது செயல்கள் இவ்வுலகிலும், மறுமையிலும் அழிந்து விட்டன. இவர்கள் தாம் இழப்பை அடைந்தவர்கள்.

அல்குர்ஆன் 9: 69

அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுவோருக்குரிய தண்டனை

அல்லாஹ் கூறாத ஒன்றை கூறியதாக யாராவது கூறினால் அவர் களுக்கு மறுமையில் கடுமையான தண்டனை உண்டு என்பதை கீழ்கண்ட வசனத்தின் மூலம் அறியலாம்.

"இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது' என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள். (இது) அற்பமான வசதிகள். (மறுமையில்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 16: 116.117

மறுமையை நம்பாமல் இருப்பவருக்குரிய தண்டனை

மறுமையை நம்பாமல் இருப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

அல்குர்ஆன் 17: 10

இறைவனின் வசனங்களை நம்பாமல் வரம்பு மீறி நடப்பவனுக்குரிய தண்டனை

"என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?'' என்று அவன் கேட்பான். "'அப்படித் தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தாய். அவ்வாறே இன்று மறக்கப்படுகிறாய்'' என்று (இறைவன்) கூறுவான். தனது இறைவனின் வசனங்களை நம்பாமல் வரம்பு மீறி நடப்பவனுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம். மறுமையின் வேதனை கடுமையானது; நிலையானது.              

அல்குர்ஆன் 20: 125-127

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுபவனுக்குரிய தண்டனை

பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளை மட்டும் மக்கள் சர்வ சாதாரணமாக நம்பி விடுகின்றனர். பெண்களுடன் ஆண்களைத் தொடர்புபடுத்திக் கூறும் செய்திகளையும் ஆர்வமுடன் செவிமடுத்து அதை நம்பவும் செய்கின்றனர்.

"இருந்தாலும் இருக்கும்' என்று கூறி அதை ஆமோதிக்கின்றனர். இதனால் ஒரு பெண்ணுடைய எதிர்காலமே சூன்யமாகி விடுவதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. தங்கள் மகளைப் பற்றியோ, சகோதரிகள் பற்றியோ மற்றவர்கள் இப்படிப் பேசினால் அவர்கள் அதை ரசிப்பார்களா?

செய்தி ஊடகங்களும் பெண்களின் ஒழுக்கம் குறித்து ஆராயாமல் பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஆனால் இஸ்லாம் மட்டும் பெண்களின் கற்பொழுக்கம் பற்றி அவதூறு பேசுவதைக் கடுமையான குற்றமாகக் கருதுகின்றது. மறுமையில் அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என்பதை கீழ்கண்ட வசனங்கள் உறுதிப்படுத்துகிறது.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். இதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டோரைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்பது ஐந்தாவதாகும். "அவனே பொய்யன்'' என்று அல்லாஹ் வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனையிலிருந்து அவளைக் காக்கும். "அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்'' என்பது ஐந்தாவதாகும். அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாமலும், அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவனாகவும், ஞானமிக்கவனாகவும் இல்லாமலும் இருந்தால் (உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும்) அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே. அதை உங்களுக்குத் தீங்காக நினைக்காதீர்கள்! மாறாக அது உங்களுக்கு நல்லது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விஷயத்தில் பெரும் பங்கு எடுத்தவனுக்குக் கடும் வேதனை உண்டு. இதைச் செவியுற்ற போது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? "இது தெளிவான அவதூறு'' என்று கூறியிருக்கக் கூடாதா? இதற்கு நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையானால் அல்லாஹ்விடம் அவர்களே பொய்யர்கள். இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அன்பும், அருளும் உங்களுக்கு இல்லாதிருந்தால் நீங்கள் எதில் ஈடுபட்டீர்களோ அதற்காக உங்களுக்குக் கடும் வேதனை ஏற்பட்டிருக்கும்.

அல்குர்ஆன் 24: 4-14

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர்.அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.      

அல்குர்ஆன் 24: 23

அபுல்காசிம் (முஹம்மத் - ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (நிரபராதியான) தம் அடிமைமீது விபசாரம் புரிந்துவிட்டதாக அவதூறு கூறுகிறாரோ, அவருக்கு மறுமை நாளில் (சாட்டையடி) தண்டனை வழங்கப்படும்; அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 3416

வெட்கக்கேடான செயல், பிறரிடத்தில் பரவ வேண்டும் என விரும்புவருக்குரிய தண்டனை

வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 24: 19

தூய்மை                                  தொடர் : 2

தூய்மையான உடை

எம்.எஸ்.ஜீனத் நிஸா, மேலப்பாளையம்

வாரத்திற்கு ஒரு முறையாவது குளித்தல் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழு நாட்களுக்கு ஒரு முறை குளிப்பது அல்லாஹ்வுக்காக (பருவமடைந்த) ஒவ்வொரு முஸ்லிமும் செய்யவேண்டிய கடமையாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி :898

வியர்வையுடன் இருப்பவர்கள் குளித்துத் தூய்மையாகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு துர்வாடையை ஏற்படுத்தும். இதனால் அவர்களை விட்டும் மக்கள் விலகிச்செல்லும் நிலை ஏற்படுகின்றது.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் ஜுமுஆ நாளில் (மதீனா அருகிலுள்ள) தங்கள் குடியிருப்புகளிலிருந்தும் மேட்டுப்புற கிராமங்களிலிருந்தும் முறைவைத்து (ஜுமுஆத் தொழுகைக்கு) வந்து கொண்டிருந்தனர். புழுதிகளில் அவர்கள் நடந்துவருவதால் அவர்கள் மீதும் புழுதியும் வியர்வையும் காணப்படும். அவர்களி(ன் உடலி)லிருந்து வியர்வை வழியும். (இந்த நிலையில்)- என் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்துகொண்டிருக்கும்போது- அவர்களில் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த தினத்துக்காக நீங்கள் தூய்மையுடன் இருக்கக்கூடாதா?'' என்று கேட்டார்கள்.

நூல் : புகாரி 902

உளூ செய்தல் :

இஸ்லாமிய கடமைகளில் முதன்மையாக உள்ள தொழுகைக்கு முன்னர் குறிப்பிட்ட உறுப்புகளை கழுவி தூய்மையாகிக் கொள்ள இஸ்லாம் கட்டளையிடுகிறது. வணக்கங்கள் மூலமும் இஸ்லாம் தூய்மை வலியுறுத்தியுள்ளது என்பதை விளங்கலாம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன் 5:6)

இச்சை நீர் ஏற்பட்டால் :

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: இச்சைக் கசிவு நீர் ("மதீ') அதிகமாக வெளியேறும் ஆடவனாக நான் இருந்தேன். நபி (ஸல்) அவர்களின் புதல்வி (ஃபாத்திமா என் மண பந்தத்தில்) இருந்ததால் இது பற்றிக் கேட்குமாறு (வேறு) ஒருவரை நான் பணித்தேன். அவர் (அது குறித்துக்) கேட்டபோது, "(அவ்வாறு இச்சைக் கசிவு நீர் வெளியேறினால்) உளூ செய்துகொள்வீராக! (குளிக்க வேண்டியதில்லை. ஆனால்,) பிறவி உறுப்பைக் கழுவிக்கொள்வீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி : 269

உறங்கும் முன் உளு செய்தல் :

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்து கொள்.

நூல் : புகாரி ;247

மர்ம உறுப்பின் முடிகளை களைதல் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

முஸ்லிம் :436

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களை(ந்து கொள்வதற்காகச் சவரக் கத்தியைப் பயன்படுத்து)வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது, நகங்களை வெட்டிக்கொள்வது, அக்குள் முடிகளை அகற்றிக்கொள்வது ஆகியவைதாம் அவை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் :430

மர்ம உறுப்பின் முடிகளை அகற்றுவதை 40 நாட்களுக்கு மேல் தாமதிக்கக் கூடாது

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றில் நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு வைக்கக்கூடாதென எங்களுக்குக் கால வரம்பு விதிக்கப்பட்டிருந்தது.

 நூல் : முஸ்லிம் ;431

வலது கையை பயன்படுத்துதல்

நாம் எந்தப் பொருளை சாப்பிடுவதாக குடிப்பதாக இருந்தாலும் வலது கையையே பயன்படுத்த வேண்டும், சிலர் வலது கையின் மூலம் ஏதாவது வேலை பார்த்துக்கொண்டிருந்தால் இடது கையை பயன்படுத்தி சாப்பிடுவதையும் குடிப்பதையும் வழக்கமாக்கியுள்ளனர். இதுவும் நாகரீகமற்றதாகும். இஸ்லாம் வலது புறத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கியுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக் கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக் கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால்தான் உண்கிறான்; இடக் கையால்தான் பருகுகிறான்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் : முஸ்லிம் 4108

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தாம் அங்கசுத்தி (உளூ) செய்யும்போதும், தலைவாரிக்கொள்ளும் போதும், காலணி அணிந்துகொள்ளும் போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.                    

நூல் : புகாரி 5854

நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகியன உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!'' என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

நூல் : புகாரி 5376

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்!

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 5855

தலைவாருதல்

அதிகமான வேலை பழுவின் காரணமாக பலர் தலைமுடிகளை சீர்செய்வதில்லை. பெரும்பாலும் பெண்கள் குழந்தைகளை கவனத்தில் கொண்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வரை பரட்டை தலையுடனே காணப்படுகின்றனர். அதன் பிறகும் மற்ற மற்ற வீட்டு வேலைகளின் காரணமாக தலைவிரிக்கோலமாகவே உள்ளனர். மேலும் தலைக்கு எண்ணெய் தேய்க்காமல் இருப்பதை நாகரீகமாகும் கருதுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் பரட்டைத் தலையுடயவராக ஒரு மனிதரைக் கண்டார்கள். அப்போது  (கோபமாக) இவர் தனது முடியைப் படிய வைக்கக்கூடிய ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளவில்லையா? என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : நஸயீ 5141

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொள்கிறார். தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக்கொள்கிறார். அல்லது தம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக்கொள்கிறார். பிறகு புறப்பட்டு (நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல் (பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பிறகு இமாம்  உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில் அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும் பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன.

நூல் ; புகாரி 883

கணவன் முன் ஒரு பெண் நிற்கும் போது அலங்காரத்துடன் இருக்க வேண்டும். தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் மிக முக்கியமானது தலைவாருதலாகும்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது : நான் ஒரு போரில் (தபூக்கில்) அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக் கொண்டிருந்தபோது, மெதுவாகச் செல்லக் கூடிய ஒட்டகத்தின் மீது இருந்தவாறு நான் அவசரப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் எனக்குப் பின்னாலிருந்து வாகனமொன்றில் வந்து சேர்ந்தார். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்,) "உமக்கு என்ன அவசரம்?'' என்று கேட்டார்கள். "நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்'' என்றேன். நபி (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்ணை மணந்தாயா. அல்லது கன்னி கழிந்த பெண்ணை மணந்தாயா?'' என்று கேட்டார்கள். நான், "இல்லை. கன்னிகழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)'' என்றேன். நபி (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்ணை மணமுடித்துக்கொண்டு, அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக் குலாவி மகிழ்ந்திருக்கலாமே!'' என்றார்கள். பிறகு நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்து (ஊருக்குள்) நுழையப் போனபோது நபி (ஸல்) அவர்கள், (நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இஷா நேரம் வரை சற்றுப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள்  தலை வாரிக்கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளட்டும்'' என்று சொன்னார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம், "புத்திசாலித்தனமாக நடந்துகொள்'' என்றார்கள். அதாவது "குழந்தையைத் தேடிக்கொள்'' என்றார்கள் என நம்பத் தகுந்த (அறிவிப்பாளர்) ஒருவர் என்னிடம் கூறினார்.

நூல் : புகாரி : 5245

ஆடை :

நம்முடைய ஆடைகளை நாம் தூய்மையாக வைத்திருக்குமாறு இஸ்லாம் நமக்கு கட்டளையிடுகின்றது .

உமது ஆடைகளைத் தூய்மைப் படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக!    

அல்குர்ஆன் 74 : 4,5

நபி (ஸல்)அவர்கள் ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதைப் பார்த்தார்கள் . அப்போது இவர் தனது ஆடையை  தூய்மைப்படுத்தக்கூடிய ஒரு பொருளை பெற்றுக்கொள்ளவில்லையா? என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி

நூல் : அபுதாவூத் : 3540

ஆடையில் சிறந்தது வெண்மை நிற ஆடையாகும். ஏனெனில் வெள்ளை நிற ஆடையை பொறுத்த வரையில் எந்த அசுத்தம் பட்டாலும் அதை தெளிவாக காட்டிவிடும். அசுத்தத்தை தூய்மை செய்யாமல் மற்றொரு முறை அதை பயன்படுத்த முடியாது. மற்ற ஆடைகளை எத்தனை முறை எவ்வளவு அசுத்தங்களுடன் பயன்படுத்தினாலும் அது யாருக்கும் தெரியாது. எனவே தான் நபியவர்கள் வெண்மை நிற ஆடையே தூய்மையானது அதையே பயன்படுத்துமாறு உபதேசம் செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வெண்மையான ஆடைகளை அணியுங்கள் . ஏனெனில் அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும் .மேலும் இறந்தவர்களையும் வெள்ளை ஆடைகளில் கஃபனிடுங்கள்.   

அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ் (ரலி) 

நூல் : திர்மிதி  915

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் : வெள்ளை ஆடையை அணியுங்கள். அது மிகத்தூய்மையானதும் அழகுமிக்கதுமாகும்.       

அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப்  (ரலி)

நூல் : திர்மிதி 2734

அசுத்தமான ஆடையில் தொழக்கூடாது.

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும், என்கிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் (அது காய்ந்துவிட்டிருந்தால்) அதைச் சுரண்டி விட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்துவிடட்டும். பின்னர் அந்த ஆடையுடன் தொழுதுகொள்ளலாம்'' என்று கூறினார்கள்.

நூல் : புகாரி : 307

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.              

அல்குர்ஆன் 5:6

உணவு :

நாம் உண்ணும் உணவு தூய்மையானவற்றையே தேர்வு செய்ய வேண்டும்.

"தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை?'' என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "தூய்மையானவைகளும், வேட்டையாடும் பிராணிகளில் எவற்றுக்கு நீங்கள் பயிற்சியளித்து அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கற்றுக் கொடுக்கிறீர்களோ அவை(வேட்டையாடியவை)களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன'' எனக் கூறுவீராக!      

அல்குர்ஆன்  5:4

தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது .     

அல்குர்ஆன் 5:6

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.                  

அல்குர்ஆன்16 :115

பால் அருந்திய பிறகு வாய் கொப்பளித்தல்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள். பிறகு "இதில் கொழுப்பு இருக்கிறது' (ஆகவே தான் வாய்கொப்பளித்தேன்) என்று சொன்னார்கள்.                 

நூல் : புகாரி 211

 வளரும் இன்ஷா அல்லாஹ்

கடவுளாக்கப்படும் மனிதர்கள்

இறைவனுக்கு இருக்கம் தனிப்பட்ட சக்திகள் உலகில் யாருக்கும் எதற்கும் இல்லை. மேலும் அவனின் ஆற்றலை யாருக்கும் இறைவன் வழங்கவும் இல்லை என்பதே இஸ்லாத்தின் நிலைபாடு. ஆனால்

இஸ்லாத்தின் பெயரை பயன்படுத்தி சில மனிதர்களுக்கு இறைவன் தன் ஆற்றலை கொடுத்திருப்பதாக நம்ப வைத்து அப்பாவி மக்களை வழிகெடுக்கிறார்கள். அதற்கு சான்றாக ஆதாரமற்ற சில அற்புத கதைகளை மக்களிடம் உலவவிட்டுள்ளனர்.

மனிதர்களும் அற்புதங்களை செய்ய முடியும் என்பதற்கு இறைவன் இறைத்தூதர்களுக்கு கொடுத்த சில அற்புதங்களை ஆதாரமாகவும் காட்டுகின்றனர்.

ஒருவர் இறைத்தூதர் என்பதற்கு அல்லாஹ் இறைத்தூதர்களுக்கு அற்புதங்களை கொடுத்தது உண்மைதான். என்றாலும் ஒரு அற்புதத்தை இறைவன் வழங்கினால் அவர் எல்லா அற்புதங்கûயும் செய்யமுடியும் என்ற பொருளல்ல. மேலும் குறிப்பிட்ட அற்புதங்களை, இறைவன் கூறும் நேரத்தில் மட்டுமே செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இறைவனைப் போன்ற எல்லா நேரத்தில் எல்லா அற்புதங்கûளும் அவர்களால் செய்ய முடியாது.

"இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்'' என்று கூறுகின்றனர்.

அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும்.

அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும்.

அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) "என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 17:90-93)

இவ்வுலகத்தின் அருட்கொடையாக வந்த நபிகளார் நினைத்தாலும் அவர்களால் எந்த அற்புதத்தையும் செய்ய முடியாது என்றால் மற்றவர்களால் செய்ய முடியுமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபி மூஸா (அலை) அவர்களுக்கு கைதடியை பாம்பாக மாற்றி ஓர் அற்புதத்தை அல்லாஹ் செய்து காட்டினால் இந்த அற்புதத்தை செய்த காரணத்தால் அந்த கைத்தடி எல்லா நேரத்திலும் கீழே போடும் போதெல்லாம் பாம்பாக மாறவில்லை.

தண்ணீர் வேண்டி மூஸா (அலை) அவர்களிடம் மக்கள் கேட்ட போது இந்த கைத்தடியால் பாறையில் அடித்த போது பறையிலிருந்து தண்ணீர் வந்தது.

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது "உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!'' என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த் துறையை அறிந்து கொண்டனர். "அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!'' (என்று கூறினோம்)                       

(அல்குர்ஆன் 2:60)

ஒரு கைத்தடி பாம்பாக மாறியது, இன்னொரு தடவை தண்ணீரை வரவழைத்தது. எனவே இந்த கைத்தடிக்கு சக்தி உண்டு எதையும் செய்ய முடியும் என்று மூஸா (அலை) அவர்களும் அவர்களுடன் இருந்தவர்களும் நினைவிக்கவில்லை. அப்படிப்பட்ட நம்பிக்கை மூஸா அவர்கள் ஊட்டவும் இல்லை.

ஏனெனில் பிர்அவ்னின் படை மூஸா (அலை) அவர்களைத் துரத்தி கடல்பகுதியில் நிறுத்திய போது மூஸா (அலை) அவர்களுடன் இருந்தவர்கள், மூஸாவே! உமது மந்திர கோலை எடுத்து நமக்கு வழிகாட்டும் என்று கூறவில்லை. மாறாக பிர்அவ்னிடம் நன்றாக மாட்டிக் கொண்டோம் என்றே கூறினார்கள். மூஸா (அலை) அவர்களும் இதே மந்திரக் கோல் உள்ளது. இதை வைத்து பிர்அவ்னின் சதி முறியடிக்கிறேன். என்று கூறாமல் என் இறைவன் வழிகாட்டுவான் என்றே கூறினார்கள்.

காலையில் (ஃபிர்அவன் கூட்டத்தினர்) அவர்களைப் பின் தொடர்ந்தனர்.இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது "நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்'' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். "அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்'' என்று அவர் கூறினார். "உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

 (அல்குர்ஆன் 26:61-63)

எனவே இறைவன் இறைத்தூதர்களுக்கு வழங்கிய எந்த ஒரு அற்புதமும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட முறையில் மட்டுமே இயங்கும். அது எல்லா நேரத்திலும் அற்புதங்களை செய்ய முடியாது என்பதை விளங்க வேண்டும்.

இந்த கருத்துக்களை கவனத்தில் வைத்துக் கொண்டு அவ்லியாக்கள் என்ற பெயரில் கூறப்படும் சில கதைகள், மனிதர்களை எப்படி இறைத் தன்மைக்கு கொண்டு சொல்கிறது என்பதை பாருங்கள். இந்த கதைகள் மாபெரும் தவசீலர் முஹியித்தீன் ஆண்டகை என்ற தமிழ் நூலில் இடம்பெற்றுள்ளது.

இந்த நூலில் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பெயரால் அற்புதங்கள் என்ற பெயரில் திருக்குர்ஆனுக்கும் நபிமொழிகளுக்கும் எதிரான பொய்யான பல கதைகள் புனையப்பட்டுள்ளன.

இராக் காடுகளிலுள்ள கர்க் எனும் பிரதேசத்தை அடைந்து அங்கு பாழடைந்த கட்டிடங்களைத் தம் இருப்பிடமாக்கிக் கொண்டு கடும் தவம் இருந்தார்கள்... அவர்களுடைய தவம் அகோரமானதாய் இருந்தது. ஒரு வருஷம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளைக் தின்று, தண்ணீர் குடியாமலிருந்து தவம் செய்தார்கள். மறு ஆண்டில் தண்ணீர் மட்டும் உட்கொண்டு வேறு எதவும் சாப்பிடாது தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் எதுவும் உண்ணாமலும் தண்ணீர் அருந்தாமலும் தூங்காமலும் தவத்தில் ஈடுபட்டார்கள். அல்லாஹ் உண்ணுவதோ குடிப்பதோ தூங்குவதோ இல்லை அல்லவா! அவன் அடியான் அல்லாஹ்வின் சில குணங்களைப் பெறும் தகுதியுடையவனானதும் அல்லாஹ்வின் அகப்பண்புகள் அவன் மூலமும் வெளிப்படுவதில் வியப்பென்ன இருக்கிறது!  

(பக்கம் : 33)

நபி (ஸல்) அவர்களும் ஹிரா குகையில் தனிமையில் இருந்தார்கள். ஆனால் இவ்வாறு இருந்தது நபித்துவம் வருவதற்கு முன்னர். வஹி வந்த பின்னார் அவர்கள் தனிமையில் தவம் இருக்கவில்லை. மேலும் அவர்கள் ஹிரா குகையில் இருந்த போது உணவுகளை உண்டுதான் வந்தார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேதஅறிவிப்பு (வஹீ) தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவே) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. (எனவே) அவர்கள் "ஹிரா' குகையில் தனித்திருந்து தம் வீட்டாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார்கள். அதற்காக (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். (அந்த உணவு தீர்ந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து அதைப் போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் பெற்றுச் செல்வார்கள்.            

நூல்: புகாரி (3)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "ஒரு பகல்' அல்லது "ஓர் இரவு' (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?'' என்று கேட்டார்கள். அதற்கு, "பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!'' என்று அவ்விருவரும் பதிலளித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்) தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது'' என்று கூறி விட்டு, "எழுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர். அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், "வாழ்த்துகள்! வருக'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், "அவர் எங்கே?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், "எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்'' என்று பதிலளித்தார். அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை'' என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், "இதை உண்ணுங்கள்'' என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் (4143)

இறைவனைத் தவிர எந்த ஒரு மனிதனாக இருந்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பசியுடன் இருக்கமுடியாது என்பதை மேற்கூறப்பட்ட சம்பவம் நமக்கு தெளிவாக விளக்கிறது. ஆனால் நபிகளாரை விட தகுதியில் குறைந்த அப்துல்காதிர் ஜீலானியால் எப்படி ஒரு வருடம் உணவு தண்ணீர் இன்றி இருக்க முடிந்தது?

எவரும் திருந்திவிடுவார்

நேர்வழி காட்டுவது வல்ல அல்லாஹ்வின் கையில் உள்ளது. ஆனால்

அப்துல்காதிர் ஜீலானி அவர்கள் பயான் செய்தால் அனைவரும் மெய்மறந்து கேட்டு நேர்வழி பெறுவார்கள். இறைவனின் ஒளி அவர்களுக்கு கிடைக்குமாம். அவர்களுடைய சொற்பொழிவைக் கேட்போருள் பகீஹ்கள், ஆலிம்கள், ஷைகுகள், அமீர்கள், உயர்தர அதிகாரிகள், கலீபாக்கள், ஜின்னுகள், மலக்குகள் மற்றும் மறைவான ஜின்கள் ஆகியவை இருப்பதுண்டு.

(பக்கம் : 50)

ஒரு அறிஞர் பயான் செய்தார். அதை மக்கள் ரசித்து கேட்கவில்லை. அடுத்து அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பயான் செய்தார்கள். இதைக் கேட்டவுடன் மக்கள் மனமுருகி கண்ணீர் விட்டனராம். இது பற்றி கேட்டபோது அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் அளித்த பதில் இதோ:

எனக்கோ அந்த மேடையில் ஏறியதுமே அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு மின்சார அதிர்ச்சி என் இதயத்துள் புகுந்தது. என் இதயம் விரிந்தது. அப்போது நான் பயபக்தி சூழ்ந்தவனாகச் சில வார்த்தைகள் சொன்னேன். அதன் பயன்தான் நீ கண்டது  

(பக்கம்:58)

அதாவது அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பயான் செய்யும் போது இறைவனின் அவர்களின் உள்ளத்தில் ஓர் அதிர்ச்சி ஏற்படுத்தி சிறப்பாக பயான் செய்யும் வகையில் அல்லாஹ் மாற்றிவிடுகின்றானாம். அதனால் மக்கள் அவர்களின் பயானைக் கேட்டு திருந்திவிடுகிறார்களாம்.

அவ்லியாக்களின் பயான் அனைவரின் உள்ளதையும் மாற்றிவிடும் என்று இந்த கதை கூறுகிறது. ஆனால் இறைநேசர்களில் முதன்மையானவரான நபிகளாரின் பயானை ஏராளமானோர் புறக்கணித்துள்ளனர். அதைக் கேட்டு சபித்தும் உள்ளனர்.

"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்'' எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் "ஸஃபா' மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, "பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!'' என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி (ஸல்) அவர்கள், "சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?'' என்று கேட்க, மக்கள் "ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை'' என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், நான் கடும் வேதனை யொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்'' என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், "நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?'' என்று கூறினான். அப்போது தான் "அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்......'' என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி (4770)

நபிகளாரின் ஓரிறைக் கொள்கை போதனைகளை கேட்டவர்கள் நபிகளாருக்கு அளித்த பதில்கள் மிக மோசமாக இருந்தது. அவர்களின் மனம் புண்படும்படி கடும் சொற்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

அவர்கள் (உம்மைப் பற்றிப்) பேசுவதன் காரணமாக உமது உள்ளம் கலங்குவதை அறிவோம்.

(அல்குர்ஆன் 15:97)

மிகச் சிறந்த இறைத்தூதரான நபிகளாரின் பேச்சு அவர்களை ஈர்க்கவில்லை. ஆனால் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பேசினால் அனைவரும் திருந்திவிடுவார்கள். மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளவார்கள் என்று கூறினால் இந்த கதையின் அடிப்படை கருத்து என்ன? நபிமார்களைவிட இவர்கள் கூடுதல் தகுதி உள்ளவர்கள் என்ற கருத்தை தரவில்லையா?

இதுபோன்று ஏராளமான இறைத்தூதர்களை மக்கள் புறக்கணித்துள்ளனர். ஏன் கொலைகூட செய்துள்ளனர்.

"உமது சமுதாயத்திற்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன் அவர்களை எச்சரிப்பீராக'' என்று நூஹை அவரது சமுதாயத்திடம் நாம் அனுப்பினோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள் என்று நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவன். அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான். குறிப்பிட்ட தவணை வரை உங்களுக்கு அவகாசம் தருவான். அல்லாஹ்வின் தவணை வரும் போது அது பிற்படுத்தப்படாது. நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?'' என்று அவர் கூறினார். "என் இறைவா! என் சமுதாயத்தை இரவிலும், பகலிலும் நான் அழைத்தேன்'' என்று அவர் கூறினார். "எனது அழைப்பு வெறுப்பைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு அதிகமாக்கவில்லை''"நீ அவர்களை மன்னிப்பதற்காக நான் அவர்களை அழைத்த போதெல்லாம் தமது விரல்களைத் தமது காதுகளில் வைத்துக் கொள்கின்றனர். தமது ஆடைகளால் மூடிக் கொள்கின்றனர். பிடிவாதம் பிடிக்கின்றனர். அதிகம் அகந்தை கொள்கின்றனர்''

(அல்குர்ஆன் 71:1-7)

இஸ்ராயீலின் மக்களிடம் உறுதி மொழி எடுத்தோம். அவர்களிடம் தூதர்களையும் அனுப்பினோம். அவர்கள் விரும்பாததைத் தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம் சிலரைப் பொய்யர் என்றனர். மற்றும் சிலரைக் கொன்றனர்.        

(அல்குர்ஆன் 5:70)

அல்ஃபலக் ஆத்தியாயத்தின் விரிவுரை    தொடர் : 6

மனிதனுக்கு தீங்கு தருபவை

உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்

113 வது அத்தியாயத்தின் பெயர்  ஃபலக் (அதிகாலை) என்பதாகும். இந்த அத்தியாயத்தின் மூலம் மனிதன் இறைவனிடம் எவ்வாறு பாதுகாப்புத் தேடவேண்டும் என்று அல்லாஹ் கற்றுத் தருகிறான். முதலில் இந்த

அத்தியாயத்தின் நேரடியான பொருளைப் பார்ப்போம்.

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ(1)مِنْ شَرِّ مَا خَلَقَ(2)وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ(3)وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ(4)وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ(5)

அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 133:1,2,3,4,5)

قُلْ - குல் - என்று இந்த அத்தியாயம் துவங்குகிறது. இதன் பொருள் சொல்வீராக என்பதாகும். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி இடப்படும் கட்டளையாக இருந்தாலும் இது அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியதாகும்.

எந்த விஷயம் நபிகள் நாயகத்துக்கு மட்டும் உரியதாக இருக்கிறதோ அவை தவிர மற்ற கட்டளைகள் நபியை நோக்கி சொல்லப்படுவது போல் இருந்தாலும் அது அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குர்ஆன் நபிகளுக்காக மட்டும் அருளப்படவில்லை.

أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ - அவூது பிரப்பில் ஃபலக் என்பதன் பொருள் அதிகாலையின் (வைகறைப் பொழுது) இரட்சகனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்பதாகும்.

இந்த வசனத்தில் இடம் பெறும் ஃபலக் என்ற வார்த்தைக்கு

1. அதிகாலை (வைகறைப் பொழுது) சுப்ஹ்

2. சந்திரன்

ஆகிய இரண்டு அர்த்தங்கள் உள்ளன. இதில் எந்த அர்த்தம் வைத்துக் கொண்டாலும் தவறில்லை. ஏனெனில் இரண்டுமே அரபிமொழி

அகராதியிலுள்ள அர்த்தம் தான். விடியற்காலையின் அல்லது சந்திரனின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று இரண்டில் எதைச் சொன்னாலும்

இரண்டுமே பொருத்தமானது தான். அதிகாலையும் வெளிச்சமாக இருக்கும். சந்திரனில் இருந்தும் வெளிச்சம் கிடைக்கும்.

பல தீமைகள் நமக்கு வெளிச்சம் இல்லாத்தால் இருட்டால் தான் ஏற்படுகிறது. எனவே தீமையில் இருந்து பாதுகாப்பு தேடுவதற்கு வெளிச்சத்தின் அல்லது சந்திரனின் இறைவன் என்ற சொல் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.

இரவு நேரத்தில் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டால் நம்மில் யார் யார் எந்தெந்த இடத்தில் இருக்கிறோம் என்று தெரியாது. மீண்டும் மின்சாரம் வந்துவிட்டால் கண்டு பிடித்து விடலாம். அது போன்று தான் வெளிச்சமும்.

எனவே சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுகிற வெளிச்சத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற இறைவனிடம் பாதுகாப்புத் தேடச் சொல்லுகிறான். அமாவாசை இருட்டாக இருந்தால் பிரயாணம் செய்ய இயலாது. அதனால் தான் இறைவனுக்கு ரப்புல் ஃபலக் என்று பெயர்.

எதிலிருந்து பாதுகாப்புத் தேட வேண்டும் என்பதையும் இறைவன் கற்றுத் தருகிறான்.

مِنْ شَرِّ مَا خَلَقَ - அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்து (நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.)

114 வது அத்தியாயத்தில் உள்ளத்தின் மூலமாக தவறான எண்ணங்களை விதைத்து நம் கண்ணை நம் கையாலேயே குத்திக் கொண்டு நம்மை நாமே அழித்துக் கொள்ளும் வேலை தான் வஸ்வாஸ். இப்படி உள்ளத்தில் தீய எண்ணங்களை போடும் சக்திகளை விட்டு பாதுகாப்பு தேடச் சொன்ன அல்லாஹ்  இந்த 113 ஆவது அத்தியாயத்தில் உடல்ரீதியான துன்பங்களிலிருந்து பாதுகாப்புத் தேடுவதைப் பற்றிப் பேசுகிறான்.

மனிதனுக்கு இரண்டு விதமான பாதுகாப்பும் தேவை தான். சூரத்துந்நாஸில் மனிதனின் ஈமானைப் பாதுகாக்க அதாவது மறுமையில் வெற்றிபெறத் தக்க பாதுகாப்பு பற்றியும், ஆத்மாவைப் பாதுகாப்பது பற்றியும் இறைவன் கற்றுத் தருகிறான். சூரத்துல் ஃபலகில் உலக வாழ்கையையும் அதில் நமது உயிரையும் உடலையும் உலகில் நம்மோடு தொடர்புடையவைகளின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேவை என்பதை இறைவன் கற்றுத் தருகிறான்.

இந்த வாக்கியத்தை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

மனிதன் சிலவற்றை தீங்கு தருபவை என்றும் சிலவற்றை நன்மை தருபவை என்றும் தீர்மானித்து வைத்துள்ளான். ஆனால் அது முற்றிலும் சரியானது அல்ல. ஏனெனில் மனிதன் நல்லவை என்று தீர்மானித்துள்ளவற்றிலும் மனிதனுக்கு கேடு ஏற்படலாம். மனிதன் தீமை எனத் தீர்மானித்துள்ளவற்றிலும் நன்மைகள் ஏற்படலாம். எனவேதான் தீயவற்றின் தீங்கில் இருந்து பாதுகாப்பு தேடுமாறு சொல்லாமல் அவன் படைத்த அனைத்தின் தீங்கில் இருந்தும் பாதுகாப்பு தேடுமாறு அல்லாஹ் அற்புதமாக நமக்கு கற்றுத்தருகிறான்.

இங்கு தருகிற பொருட்களிலிருந்து மட்டும் பாதுகாப்புத் தேட அல்லாஹ் சொல்லித் தரவில்லை. மாறாக அல்லாஹ் படைத்த அனைத்துப் பொருட்களிலிருந்தும் பாதுகாப்புத் தேடச் சொல்லித் தருகிறான்.

நாம் சாப்பிடுகிற சோறு நமக்கு ஆரோக்கியத்தைத் தந்து உயிர் வாழ்வதற்கு ஆகாரமாகவும் ஆதாரமாகவும் இருக்கிறது. இந்தச் சோற்றை வேறொரு கோணத்தில் ஆய்வு செய்தால், சோற்றிலும் கூட கேடு இருக்கத் தான் செய்கிறது.

இன்று எத்தனையோ மருத்துவர்கள் சக்கரை வியாதி உடையவர்களுக்கு கேள்வரகு, சோழம், கோதுமை போன்றவற்றைச் சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் சோற்றிலிருக்கிற மாவுச் சத்து சக்கரை நோயாளின் சக்கரை அளவைக் கட்டுப்படுத்தாது. அதே போன்று தான் ஒவ்வொரு சாப்பாட்டிலும் சொல்லுகிறார்கள்.

உருளைக்கிழங்கில் புரோட்டின் இருக்கிறது நன்றாகச் சாப்பிடுங்கள் என்று பொதுவாகச் சொல்லுவார்கள். அதே மருத்துவர்கள் ஒருவருக்கு உருளைக்கிழங்கு, தக்காளி சாப்பிடக் கூடாது என்பார்கள். அது மாதிரி, உப்பு சேர்க்க வேண்டும் என்றும் சேர்க்கக்கூடாது என்றும் பேசுவார்கள்.

இன்னும் சொல்வதாக இருந்தால், மழை பெய்கிறது. இது பலருக்கு நன்மை என்றாலும் சிலருக்குச் சிரமம் தரக் கூடியதாகத் தான் இருக்கும். உப்பு வியாபாரிக்கு மழை பெய்தால் நன்றாக இருக்காது. ஏனெனில் மழைத் தண்ணீரில் உப்புமூட்டை கரைந்து வெறும் சாக்கு மட்டுமே மிஞ்சும். இப்போது உப்பு வியாபாரிக்கு மழை கெடுதலாகி விட்டது.

இன்னும் சொல்லப் போனால், பெய்கிற மழை அளவுக்கு அதிகமாகப் பெய்தால் அது மனிதர்களுக்குப் பெரும் சிரமத்தை அளிக்கிறது. அது போன்று அளவுக்கு அதிகமான புயலுடன் மழை பெய்தாலும் மக்களுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்திவிடும். இப்படி எல்லாவற்றிலும் நல்லதும் இருக்கிறது. கெட்டதுமிருக்கிறது. அதனால் தான் தமிழில் ஒரு அழகான பழமொழி இருக்கிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று. அனைத்திலும் தீங்கு இருக்கிறது என்ற இஸ்லாத்தின் கருத்தை உண்மைப்படுத்தும் பழமொழி இது. எனவே இப்படி எல்லாவற்றிலும் ஒரு கெடுதி இருக்கத் தான் செய்கிறது. அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இறைவனிடம் அப்பீல் போட்டால் சரியாகி விடும்.

ஆண்கள் மூலம் பெண்களுக்கும் பெண்கள் மூலம் ஆண்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன். அதே சமயம்  ஆண்களினால் பெண்களுக்குக் கேடும். பெண்களினால் ஆண்களுக்குக் கேடும் ஏற்படத்தான் செய்கின்றன.

காசு பணத்தினால் மனிதனுக்குக் கேடும் இருக்கிறது. நன்மையும் இருக்கிறது. அதிகமான செல்வமிருந்தால் ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்து உதவலாம் என்று நினைப்பது நன்மை. அதே காசுபணம் அதிமாக இருப்பதினால் தான் அநியாயமும் செய்கிறான்.

இதுபோன்று பதவி அந்தஸ்து  எதை எடுத்துக் கொண்டாலும் நல்லதுமிருக்கிறது. கெட்டதுமிருக்கிறது. சாப்பாட்டிலும் நல்லது கெட்டது இருக்கிறது. மருந்து மாத்திரையிலும் கூட நல்லதும் கெட்டதும் இருக்கிறது. நோயைக் குணப்படுத்துகிற மருந்து மாத்திரையைக் கூட அதிகம் உண்பதினால் கேடு இருப்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். இப்படி திண்கிற சோற்றிலும் ஊற்றிக் கொள்கிற குழம்பிலும் குடிக்கிற தண்ணிரிலும் என்று இறைவன் படைத்த எல்லாவற்றிலும் கேடு இருக்கத் தான் செய்கிறது. அதனால் அனைத்தின் தீங்கில் இருந்தும் அவனிடம் பாதுகாப்புத் தேடுவது கடமை.

எல்லாவற்றிலும் நன்மையும் பயனும் இருப்பதைப் போல் தீங்கும் கேடும் இருக்கும்.

மனிதன் தீங்கு, கேடு தரக் கூடியதாக எதை நினைக்கிறானோ அதற்கு அர்த்தம் அதிக தீங்கு தரக்கூடியது என்பது தான். உலகில் தீங்கு தராத எதுவுமே இல்லை என்பது தான் உண்மை.

உதாரணத்திற்கு மனிதன் அதிகத் தீங்கு தரக் கூடியதாக பாம்புகளைக் கண்டு அஞ்சுகிறான். ஆனால் அந்தப் பாம்புகள் இல்லையென்றால் மனிதன் உயிர்பிழைக்கவே முடியாது. இன்று பல்வேறு பிரச்சனைகளுக்காக மனிதன் ஆப்பரேஷன் செய்து கொள்கிறான். நமது உடலை அறுக்கும் போது இரத்தம் ஓடிக் கொண்டேயிருந்தால் நாம் மரணித்து விடுவோம். நமது இரத்தத்தை உரைய வைப்பதற்கு பாம்புகளின் விஷம் தேவைப்படுகிறது.

அது போன்று நாய்களிடமும் நமக்கு நன்மையிருக்கத் தான் செய்கிறது. அம்மை நோய்க்கு நாய்களிடமிருந்து தான் மருந்து எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்படி நாய், பன்றி, கழுதை, குதிரை என்று எதை எடுத்துக் கொண்டாலும் நன்மையும் தீமையும் இருக்கத் தான் செய்கிறது. எதில் நன்மை அதிகம் இருக்கிறதோ அதை நன்மை என்று சொல்லி விடுகிறோம். எதில் தீமை அதிகம் இருக்கிறதோ அதை தீங்கு என்கிறோம்.

ஆனால் எந்த ஒன்றிலும் நூறு சதம் நன்மையோ அல்லது நூறு சதம் தீமையோ கிடையவே கிடையாது. மனிதனின் மலத்திலும் கூட நன்மை இருக்கத் தான் செய்கிறது. நமது மலம் பன்றிக்கு உணவாக இருக்கிறது. அந்தப் பன்றியிலிருந்தும் மனிதனுக்கு சில நன்மையிருக்கிறது. அதே போன்று இறைவனால் படைக்கப்பட்ட சூரியன், சந்திரன், வானம், பூமி, கோள்கள் கடல்கள் போன்றவற்றிலும் மனிதனுக்கு நன்மையும் தீமையும் இருக்கிறது.

அதனால் தான் இறைவன், நான் படைத்திருக்கிற அனைத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடவேண்டும் என்று நமக்குக் கட்டளையிடுகிறான். அதுவும் தினமும் பாதுகாப்புத் தேடிக் கொள்ளச் சொல்லுகிறான். ஒருமனிதனுக்கு ஆண்மீகப் பாதுகாப்பும் கிடைக்கிறது. உலகப் பாதுகாப்பும் கிடைக்கிறது. இதை விட சிறந்த ஒரு பாதுகாப்பும் மனிதனுக்கு இல்லவே இல்லை.

இதற்கு அடுத்தபடியாக இறைவன், தீங்கிலேயே தனித்தனியாக சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லியும் பாதுகாப்புத் தேடச் சொல்லுகிறான். அதில்,

وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ - பரவும் இருளின் தீங்கை விட்டும் (நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபியே கூறுவீராக)

காஸிகின் என்று சொன்னால் சந்திரன் என்ற பொருளும் உண்டு. அப்படியெனில் கிரகணம் பிடிக்கும் போது அதன் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடிக் கொள்ள வேண்டும். இந்த வசனத்திற்கு இருள் பரவும் போது ஏற்படும் தீங்கை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடவேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம். எப்படிப் பார்த்தாலும் இரண்டுமே மனிதர்களுக்குக் கேடான விசயமாகத்தான் இருக்கிறது.

கிரகணக் கேடு

சந்திர கிரகணம் ஏற்படும் போது மனித சமுதாயத்திற்கு மிகப் பெரும் கேடுவர வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன என்று வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனுடைய வெளிச்சம் என்பது சூரியனுடைய வெளிச்சத்தை வாங்கி பூமிக்கு திருப்பியனுப்புகிறது. சந்திரனுக்கென தனி வெளிச்சம் எதுவும் கிடையாது. உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால் அந்தக் காலத்தில் ரேடியம் தஸ்பீஹ் மணி வைத்திருப்பார்கள். அதை இருட்டில் வைத்தாலும் வெளிச்சமாக இருக்கும். அதற்குள் லைட் எதுவுமே இருக்காது. வெளிச்சத்தை வாங்கி பிரதிபலிக்கும். இருட்டில் பளிச்சென்று தெரிகிறது. இதுபோலத் தான் சந்திரனும் அமைந்துள்ளது.

சந்திரன் என்பது வெறும் மண் தான். சூரியன் போன்று அதில் நெருப்பு எதுவுமில்லை. ஆம்ஸ்ட்ராங் அதிலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்து காட்டிவிட்டான். சூரியனிலிருந்து வெளிச்சம் நிலவின் மீது பட்டு அதை பூமிக்கு கொடுக்கிறது.

கிரகணம் எப்படி ஏற்படுகிறதெனில், சூரியனின் வெளிச்சம் சந்திரன் மீது படாமல் இருக்கும் விதத்தில் பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் குறுக்கே வந்து நின்று கொள்ளும். சந்திரன் வானில் இருக்கும். ஆனால் வெளிச்சம் வராது. உதாரணத்திற்கு ஒரு பேட்டரி லைட் வெளிச்சத்தை கண்ணாடியில் அடித்தால் கண்ணாடியில் வெளிச்சம் பட்டு ஒளி எதிர் திசையில் பிரதிபலிக்கும். கண்ணாடிக்கும் பேட்டரிக்கும் மத்தியில் நான் குறுக்காக நின்றால் கண்ணாடியில் வெளிச்சம் படாது. இது போன்று சூரியனின் வெளிச்சம் சந்திரன் மீது படாமல் பூமி தடையாக நிற்பதால் இதற்குப் பெயர் சந்திர கிரகணம். 

ஒவ்வொரு கோள்களும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் ஈர்ப்பு விசையினால் கீழே விழாமலும் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாமலும் இருக்கிறது. சந்திர கிரகணம் ஏற்படும் போது சிறிய அளவுக்கு ஏதேனும் ஒன்றினுடைய ஈர்ப்பு குறையுமானால் அல்லது கூடுமானால் அனைத்தும் ஒன்றோடொன்று மோதி உலக அழிவு ஏற்பட்டுவிடும். இது நமக்குப் பெரிய தீங்கு தான். அதனால் தான் நபியவர்கள் சூரிய கிரகணத்தையோ அல்லது சந்திர கிரகணத்தையோ கண்டால் அதன் தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேடும் விதமாக நமக்குத் தனித் தொழுகையையும் பிரார்த்தனைகளையும் கற்றுத் தந்த செய்திகள் பல உள்ளன.

சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் உலக முடிவு நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்றவர்களாக எழுந்து பள்ளிக்குச் சென்றார்கள். நிலை, ருகூஉ, சஜ்தா ஆகியவற்றை நீண்ட நெடிய நேரம் செய்து தொழுதார்கள். நான் ஒரு போதும் அவர்கள் அவ்வாறு செய்யக் கண்டதில்லை. (தொழுகை முடிந்ததும்), அல்லாஹ் அனுப்பி வைக்கும் இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் ஏற்படுவனவல்ல. எனினும் அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கவே செய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும் நீங்கள் கவனம் செலுத்துங்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),

நூல்: புகாரி 1059

மேற்சொன்ன அடிப்படையில் சந்திரனுக்குக் கிரகணம் ஏற்பட்டால் முழு உலகத்திற்கும் பாதிப்பு வருவதினால் குறிப்பிட்டு அதிலிருந்து பாதுகாப்புத் தேடச் சொல்கிறான்.

இரவின் இருட்டினாலும் கேடு

சந்திரன் ஒளி இழக்கும்போது தான் இருட்டு உண்டாகிறது. சூரியன் மறைந்தவுடன் இருள் பரவத் தொடங்கினாலும், சந்திரனின் ஒளி பிரகாசமாக இருப்பின் நாம் ஓரளவு வெளிச்சத்தில் சென்று விடலாம். ஆனால் சந்திரனிலிருந்து ஒளி பிரகாசமாக இல்லாமல் இருந்தால் இருட்டாகிவிடும். இருட்டாக இருப்பதினால் தான் பாம்புக்கும் பள்ளத்துக்கும் வித்தியாசமில்லாமல் தெரிகிறது. இருட்டின் காரணமாக நம் கால்இடறி பள்ளத்தில் விழுந்து விடுகிறோம். நம்மையும் அறியாமல் அசிங்கத்தில் காலை வைத்து நடக்கிறோம். இதுவெல்லாம் இருட்டினால் ஏற்படும் தீங்குதான்.

இன்னும் சொல்லப் போனால், இருட்டின் காரணமாகத் தான் நமக்குப் பல்வேறு விதமான கெட்ட எண்ணங்களும் ஏற்படுகிறது. இருட்டைப் பயன்படுத்தி விபச்சாரம் நடக்கிறது. இருட்டைப் பயன்படுத்தித் தான் தப்புதண்டாக்கள் நடக்கிறது. போக்கிரிகளின் தங்கும் கூடாரமாகவும் இருட்டுத் தான் இருக்கிறது.

பொதுவாக இருட்டைப் பார்த்து எல்லாருக்குமே ஒருவித பயமுண்டு. இல்லாத பேய்பிசாசுகளை இருப்பதாக நம்புகின்றனர். இருட்டில் எதாவது ஆடுவதைப் பார்த்துவிட்டு அஞ்சி நடுங்குகிறோம்.

அடுத்ததாக, அல்லாஹ் சொல்லுகிற வசனம் மிகவும் முக்கியமானது. இந்த வசனத்திற்கு தவறாக நிறைய விரிவுரையாளர்களும் விளக்கம் சொல்லியுள்ளனர். பொதுவான மக்களும் இந்த வசனத்தைத் தவறாகவே கருதியுள்ளனர்.

وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ - முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் (நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபியே கூறுவீராக)

அரபி மொழியில் னஃப்பாஸாத் என்ற வார்த்தைக்கு முடிச்சுகளில் ஊதுபவர்கள் என்று பொருள் கொள்வது கூடாது. குறிப்பாக பெண்களுக்குச் சொல்லுகிற வார்த்தை அமைப்பு.

இந்த வசனத்தை வைத்து முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கு என்பதற்கு, பில்லி சூனியம் என்று அர்த்தம் வைக்கின்றனர். அதனால் சூனியம் என்பது உண்டு என்றும் அதற்கு நாம் பரிகாரத்தின் மூலம் பாதுகாப்புத்தேட வேண்டும் என்றும் தவறாக நம்புகின்றனர். அதாவது மந்திரத்தால் ஒருவனை வீழ்த்துவது என்று நம்புகின்றனர்.

ஒருவனைக் கத்தியைக் கொண்டோ அல்லது விஷத்தின் மூலமோ வீழ்த்த முடியும். ஆனால் இப்படி உடலில் தீங்கை ஏற்படுத்தாமல், வெறுமனே ஏதேனும் மந்திரங்களை உச்சரிப்பதின் மூலமோ அல்லது நாம் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு எங்கோ இருக்கிற எதிரியை அங்கிருந்தபடியே வீழ்த்த முடியும் என்று நம்புகின்றனர். உண்மையிலேயே இப்படி சூனியத்தின் மூலம் ஒருவனை வீழ்த்த முடியுமா? என்றால், முடியவே முடியவே முடியாது. இப்படி முடியாது என்று தெரிந்து கொண்டே பல்வேறு அறிஞர்கள் இதனைக் கூடும் என்று ஃபத்வா கொடுப்பதையும் பார்க்கிறோம். இன்னும் சொல்லப் போனால் உலகத்தில் பல்வேறு அறிஞர்கள் சூனியத்தை உண்மை என்று நம்புவதையும் அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்வதையும் பார்க்க முடிகிறது.

எனவே ஸிஹ்ர் - சூனியம் என்பது உண்மையா? அதைப் பற்றி இஸ்லாமிய மார்க்கம் என்ன சொல்கிறது? இன்று நடைமுறையில் பல்வேறு விசயங்களை சூனியத்தின் பெயரால் செய்கின்றனரே, இதெல்லாம் உண்மையா? என்கிற விசயங்களை அக்குவேறாக ஆணிவேறாக பிரித்து புரிந்து கொண்டால் நமது இம்மை மறுமை வாழ்க்கைக்கு உதவலாம் என்ற அடிப்படையில் சூனியத்தைப் பற்றிய ஆய்வுக்குள் நுழைவோம்! 

வளரும் இன்ஷா ஆல்லாஹ்

கேள்வி பதில்

கேள்வி : மன்ஜில் என்ற பெயரில் சில குறிப்பிட்ட திருக்குர்ஆன் அத்தியாயங்களை ஓத வேண்டும் என்றும் அவ்வாறு ஓதினால் அதனால் பெரும் பலன் ஏற்படும் என்றும் கூறுகின்றனர். இதற்கு சான்றாக பின்வரும் ஹதீஸை ஆதாரமாக காட்டுகின்றனர். இதற்குரிய பதிலை தரவும்.

ஹஜ்ரத் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் நபி (ஸல்) அவர்களின் அருகில் இருந்த போது ஒரு கிராமவாசி அங்கு வந்து நாயகமே எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். அவருடைய நோய் என்ன? என நபியவர்கள் வினவியதற்கு அவர் ஒரு வகையான பைத்தியம் என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களின் சமூகத்திற்கு அவரை அழைத்து வரச் செய்து அவர் முன்னிலையில் அவுது பில்லாஹி ஓதி, சூரத்துல் பாத்திஹா, சூரத்துல் பகராவின் ஆரம்பத்திலுள்ள நான்கு ஆயத்துக்கள், வஇலாஹுகும் இலாஹுன்(வ்)வாஹிது என்ற ஆயத், ஆயத்துல் குர்ஸி, சூரத்துல் பகராவின் கடைசியில் உள்ள மூன்று ஆயத்துக்கள், ஷஹிதல்லாஹு அன்னஹு என்ற ஆயத், சூரா முஃமினீனின் இறுதியில் உள்ள ஃபதஆலல்லாஹுல் மலிக்குல் ஹக் என்ற ஆயத், சூரா ஜின்னில் உள்ள வஅன்னஹு தஆலா ஜத்து ரப்பினா என்ற ஆயத், சூரா வஸ்ஸாப்பாத்தில் உள்ள முதல் பத்து ஆயத்துக்கள், சூரா ஹஷ்ருடைய கடைசி மூன்று ஆயத்துக்கள், சூரா குல்ஹுவல்லாஹு அஹது, சூரா குல் அஊது பிரப்பில் பலக், சூரா குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகியவற்றை ஓதினார்கள். உடனே அந்த மனிதர் எழுந்து சென்றார். அவருக்கு நோய் ஏதேனும் இருந்ததாக எண்ணுவதற்குக் கூட இடமில்லாதவாறு அவர் ஆகிவிட்டார்.

ஆர்.பாத்திமா, சென்னை

பதில் : திருக்குர்ஆன் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு சில குறிப்பிட்ட வசனங்களுக்கு பல சிறப்புகள் உள்ளன என்ற ஆதாரமற்ற இட்டுகட்டப்பட்ட பல செய்திகள் மக்களிடம் பரவலாக அறியப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிட்டது. இந்த செய்தி ஹாகிம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அரபி மூலம் இதோ:

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص  (4 / 458)

 8269 أخبرنا أحمد بن يعقوب الثقفي ثنا يوسف بن يعقوب القاضي ثنا محمد بن أبي بكر المقدمي حدثني عمرو بن علي المقدمي عن أبي جناب عن عبد الله بن عيسى عن عبد الرحمن بن أبي ليلى حدثني أبي بن كعب رضي الله عنه قال : كنت عند النبي صلى الله عليه و سلم فجاء أعرابي فقال : يا نبي الله إن لي أخا و به وجع قال : و ما وجعه ؟ قال : به لمم قال : فأتني به فأتاه به فوضعه بين يديه فعوذه النبي صلى الله عليه و سلم بفاتحة الكتاب و أربع و آيات من آخر سورة البقرة و هاتين الآيتين { و إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم } البقرة و آية الكرسي و آية من آل عمران { شهد الله أنه لا إله إلا هو } و آية من الأعراف { إن ربكم الله الذي خلق السموات و الأرض } و آخر سورة المؤمنين { فتعالى الله الملك الحق } و آية من سورة الجن { و أنه تعالى جد ربنا ما اتخذ صاحبة و لا ولدا } و عشر آيات من أول الصافات و ثلاث آيات من آخر سور الحشر و { قل هو الله أحد } و المعوذتين فقام الرجل كأنه لم يشك شيئا قط

 قد احتج الشيخان رضي الله عنهما برواة هذا الحديث كلهم عن آخرهم غير أبي جناب الكلبي و الحديث محفوظ صحيح و لم يخرجاه

تعليق الذهبي قي التلخيص : الحديث منكر

இந்த செய்தியை பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்கள், "அபூஜனாப் அல்கல்பீ என்பவரைத் தவிர மற்ற அனைத்து அறிவிப்பாளர்களையும் இமாம் புகாரி, முஸ்லிம் இருவரும் ஆதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த செய்தி பாதுகாக்கப்பட்ட ஆதாரப்பூர்வமானதாகும்'' என்று அந்த செய்தியின் கீழே  கூறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் ஹாகிம் அவர்கள் ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று கூறுவதில் கவனகுறைவாக நடந்த கொள்பவர், இவரின் இது போன்ற கருத்துக்களை ஆய்வு செய்த பிறகே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஹதீஸ்கலை அறிஞர்களின் கருத்து.

எனவேதான் இவரின் இந்த நூலை ஆய்வு செய்த இமாம் தஹபீ அவர்கள் அவர் ஆதாரப்பூர்வமானது என்று சொன்ன ஏராளமான செய்திகளை பலவீனமானது என்று கூறியுள்ளார்கள். இந்த செய்தியையும் ஆய்வு செய்த இமாம் தஹபீ அவர்கள் இந்த செய்தி மறுக்கப்படவேண்டியது என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இந்த செய்தியின் நான்காவது அறிவிப்பாளர் அபூ ஜனாப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள். அதன் விவரம் இதோ:

قال ابن سعد كان ضعيفا في الحديث ... وقال علي بن المديني كان يحيى بن سعيد يتكلم فيه وفي أبيه وقال البخاري وأبو حاتم كان يحيى القطان يضعفه ... وقال عمرو بن علي متروك الحديث وقال ابراهيم الجوزجاني يضعف حديثه وقال يعقوب ابن سفيان ضعيف... وقال النسائي ليس بالقوي وقال في موضع آخر ليس بالثقة يدلس... وقال ابن عمار ضعيف  - تهذيب التهذيب - (11 / 177)

இப்னு ஸஅத் அவர்கள் இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். யஹ்யா பின் ஸயீத் அவர்கள் இவரை விமர்சனம் செய்துள்ளார்கள் என்று அலீ பின் அல்மதீனி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று அம்ர் பின் அலீ கூறியுள்ளார்கள். இப்ராஹீம் அல்ஜவ்ஸஜானீ அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். யஃகூப் பின் சுஃப்யான் அவர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். இமாம் நஸாயீ அவர்கள் இவர் நம்பகமானவர் இல்லை என்றும் இருட்டடிப்பு செய்பவர் என்று கூறியுள்ளார்கள். இப்னு அம்மார் அவர்களும் இவரை பலவீனமானவர் என்றே கூறியுள்ளார்கள்.

(நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :11, பக்கம் :177)

எனவே இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்தக்கொள்ள முடியாது. என்றாலும் சில அத்தியாயங்களுக்கும் சில வசனங்களுக்கு குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளன என்று ஆதாரப்பூர்வமான செய்திகளும் உள்ளன. குறிப்பாக பாத்திஹா அத்தியாயம், பலக், நாஸ், ஆயத்துல் குர்ஸி போன்றவற்றிக்கு சில சிறப்புகள் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளன.

கேள்வி : மனைவி நன்றாக சமைக்க தெரியவில்லை என்பதற்காக அவரை அடிப்பதும் அவருடன் உறவு வைத்துக் கொள்வதை தவிர்ப்பதும் கூடுமா?

அமத்துல்லாஹ், ஆவடி, சென்னை

பதில் : பொருளாதாரத்தை திரட்டும் வேலை செய்யும் கணவருக்கு நல்ல உணவை சமைத்து கொடுப்பது மனைவியின் கடமை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில், நபி (ஸல்) அவர்கள் உட்பட நபித்தோழர்களுக்கு அவர்களின் மனைவியே சமைத்து கொடுத்துள்ளார்கள். மேலும் விருந்தினருக்கு நல்ல உணவை அளித்தும் உள்ளார்கள்.

உணவு சரியாக சமைக்க தெரியாதவர்கள் பக்கத்துவீட்டு பெண்கள் மூலமாகக்கூட நல்ல உணவை சமைத்து தம் கணவருக்கு கொடுத்துள்ளார்கள்.

என்னை ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் (மக்காவிலிருக்கும்போதே) மணந்துகொண்டார்கள். இந்தப் பூமியில்  அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரது குதிரையையும் தவிர வேறு எந்தச் சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரது தோல் கமலையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால் எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டை வீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டிசுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர்.

அறிவிப்பவர் : அஸ்மா (ரலி),

நூல் : புகாரி (5224)

உணவு சரியாக சமைக்க தெரியாத பெண்கள் முயற்சி செய்து நல்ல உணவை சமைப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சமைக்க தெரியாது என்பதற்காக அவர்களை அடிப்பதற்கோ அல்லது உறவு கொள்வதை முறித்துக் கொள்வதற்கோ மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.தமக்கு கட்டுப்படாமல் விவாகரத்து ஏற்பட்டுவிடும் என்ற நிலைக்கு பிணக்குகள் ஏற்பட்டால்தான் அடிப்பது மற்றும் உறவு கொள்வதை நிறுத்துவதும் கூடும்.

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவ னாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:34)

கேள்வி : பள்ளிவாசலில் நகைச்சுவையாக சிலர் பயான் செய்கிறார்கள். பள்ளிவாசலில் இப்படி சிரித்துக் கொண்டிருப்பது கூடுமா? என்று சுன்னத் வல்ஜமாஅத்தை சார்ந்தவர்கள் கேட்கிறார்கள். பள்ளிவாசலில் சிரித்து பேசலாமா?                                             

அப்சானா, நெல்லை

பதில் : பள்ளிவாசலில் நகைச்சுவையாக பேசுவதற்கு எந்த தடையும் இல்லை. அவசியம் ஏற்பட்டால் பள்ளிவாசலில் நாம் நகைச் சுவையாக பேசிக் கொள்ளலாம். ஆனால் தொழுகையாளிகளுக்கு இடையூறு இல்லாதவாறு பார்த்துக் கொண்டால் தவறில்லை. நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் பள்ளிவாசலில் சிரித்திருக்கிறார்கள். மேலும் நகைச்சுவை பேச்சுகளையும் பேசியுள்ளார்கள்.

முஸ்லிம்கள் திங்கட்கிழமை ஃபஜ்ர் தொழுதுகொண்டிருந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். (மரணத்தறுவாயிலிருந்த) நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையில் உள்ள திரையை விலக்கி அணிவகுத்து நிற்கும் மக்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே புன்னகைத்தவாறு  திடீரென அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க வரப்போகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பாமல் பின்புறமாக விலகலானார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட மகிழ்ச்சியினால் மக்களுக்குத் தொழுகையின் கவனம் மாறியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “"நீங்கள் தொழுதுமுடியுங்கள்என்று தமது கையால் சைகை செய்துவிட்டு அறைக்குள் நுழைந்து திரையைத் தொங்கவிட்டாக்ள். அன்றைய தினமே அவர்கள் இறந்துவிட்டார்கள்.    

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : புகாரி (1205)

நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திரிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்.

நன்மைகள் தரும் மென்மை

அப்துல் கரீம், துணை முதல்வர்,

இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்

இயந்திரமயமாகிவிட்ட நவீன உலகம் அறிவியல் பூர்வமாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. மேலும் முன்னேற்றங் களை, அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி வீறுநடை போடுகின்றது. ஒரு பக்கம் இந்த முன்னேற்றங்கள் மனித சமுதயாத்திற்கு நன்மை பயப்பவையாக இருந்தாலும் மறுபக்கம் இவைகளால் மனித குலத்திற்கு சில கேடுகள், தீமைகள் விழைவதையும் மறுப்பதற்கில்லை.

செல்போன், டி.வி, இண்டர்நெட் போன்ற அறிவியல் முன்னேற்றங்கள் ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதை விட மனிதர்களின் அறிவை மழுங்கச் செய்யும் காரியத்திற்கும், அவர்களின் ஒழுக்க வாழ்வை நாசப்படுத்துவற்குமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. மனிதர்கள் இக்கருவிகளால் தங்களுக்கு தாங்களே கேடு விழைவித்து கொள்கின்றனர்.

நவீன கருவிகளில் மனிதர்கள் தொலைந்து விட்டதால் அவர்கள் இழந்த இழப்புகள் ஏராளம். வளமான வாழ்வு, நல்ல நட்பு, குழந்தைகளின் பாசம், நல்லறிவு, நற்பண்புகள் இவ்வாறாக மனிதர்கள் தொலைத்த நன்மைகள் பல. இவற்றுள் மென்மையும் ஒன்று.

இக்காலத்தில் அதிகமானோர் மென்மை எனும் குணத்தை இழந்தவர்களாக, நளினத்தை தவறவிட்டவர்களாக இருக்கின்றார்கள். எப்போதும் பரபரவென்று இருப்பது, குழந்தைகள் உட்பட யாரைப்பார்த்தாலும் அவர்கள் மேல் எரிந்து விழுவது, சிறிய விஷயத்திற்கும் கடுமையாக நடந்து கொள்வது போன்ற அணுகுமுறைகளையே பெரும்பாலானோர் கடைபிடிக்கின்றனர். மொத்தத்தில் மென்மை எனும் பொன்னை, புதையலை, பொக்கிஷத்தை புறக்கணித்தவர்களாக தங்களுடைய வாழ்வை ஆக்கிக் கொண்டனர்.

மென்மைக்கு இருக்கும் மவுசை அறிந்து கொண்டால்... அறிந்து கொள்வோமே. பிறகு அதன் மூலம் இறைவன் பல மாற்றங்களை தருவான் என்று நம்புவோம்.

மென்மை இழந்தவன் நன்மை இழந்தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.

அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) ,

நூல் : முஸ்லிம் 5052

பிறரிடத்தில் நளினமாக, மென்மையாக நடந்து கொள்ளும் பக்குவம் இழந்தவர் எந்த நன்மையையும் பெறமுடியாது என்று நபிகளார் கூறுகின்றார்கள்.

நபிகளாரின் இக்கருத்து நூற்றுக்கு நூறு உண்மை என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். நல்லோர்களின் சகவாசத்தால் பல நன்மைகளை நாம் பெறுகிறோம். அவருடைய நல்ல பழக்கவழக்கங்கள், அவர்களின் மூலம் கிடைக்கும் நல்ல நண்பர்கள், நமது முன்னேற்றத்திற்கான வழிகள் என பல நன்மைகள் அவர்கள் வாயிலாக கிடைக்கப் பெறுகின்றது.  அவர்கள் நம்மிடம் நெருங்கி பழகுவதாலே இந்நன்மைகள் ஏற்படுகின்றது.. இதுவே நாம் கடினத்தன்மை கொண்டவர்களாக இருந்தால் இவர்கள் நம்மிடம் ஒட்டுவார்களா? ஒன்று அறவே நம்மிடம் ஒட்ட மாட்டார்கள். அல்லது அளவோடு நிறுத்திக் கொள்வார்கள். நாம் மென்மையாக அவர்களிடம் நடந்து கொண்டால் தான் நம்முடன் பழகுவதை தொடர்வார்கள். அவர்கள் மூலம் கிடைக்கும் நன்மைகளும் தொடரும். எனவே மென்மையாக நடந்து கொள்ளும் குணம் நம்மிடம் இல்லையானால் அதனால் நாம் ஏராளமான இழப்புகளுக்கு ஆளாகிறோம் என்ற நபிகளாரின் கருத்தை மனதில் பதியச் செய்ய வேண்டும்.

மென்மை தரும் நன்மைகள்

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்'' என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5055

மென்மை எனும் குணம் இறைவன் விரும்பும் குணம் என்றும், அதற்கு மற்றவைகளை விடவும் ஏராளமான சன்மானங்களையும், வெகுமதிகளையும் இறைவன் வழங்குவதாகவும் நபிகளார் தெரிவிக்கின் றார்கள். நபிகளாரின் இந்த ஒரு செய்தியிலேயே மென்மையின் மவுசு பளிச்சிடுவதை காணலாம்.

மென்மையால் மக்களை வென்றெடுத்த நபிகளார்.

மது, மாது, சூது, விபச்சாரம் போன்றவைகள் மலிந்திருந்த காலம் அறியாமைக்காலம். இவைகள் தான் அக்காலத்து மக்களின் அன்றாட பொழுது போக்குகள். இவைகளை செய்பவர் முழுமையான மனிதராகவும், செய்யாதோர் கேவலமாகவும்  பார்க்கப்பட்ட காலம். இக்காலத்து மக்களிடையே தான் நபிகளார் சத்தியப்பிரசசாரம் செய்து அவர்களை, பண்புள்ளவர்களாக, ஒழுக்கசீலர்களாக, தியாகிகளாக வார்த்தெடுத்தார்கள்.

இறுதியில் நபிகளாருக்காக எதையும் இழப்பதற்கு அது உயிராக இருந்தாலும் தயார் எனுமளவில் ஒரு பெரும் கூட்டம் உருவாகியிருந்தது. காட்டுமிராண்டித்தனாமான குணங்கள் கொண்டவர்களை இந்த நிலைக்கு மாற்றியதற்கு முழுமுதற்காரணம் நபிகளாரின் மென்மையான அணுகுமுறையே.

அனைத்து மக்களையும் நபிகளார் வென்றெடுத்ததற்கு அவர்களின் மென்மையான அணுகுமுறை ஒரு காரணம். இதை இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்.

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்.              

அல்குர்ஆன் 3 : 159

சத்தியக் கொள்கையின் பால் மக்களை வென்றெடுக்க நபிகளார் தன் கைவசம் வைத்திருந்த மென்மை எனும் வழிமுறையை நாம் நம் வசமாக்கினால் அதற்கான பலன் கிடைப்பது உறுதி.

வெறுமனே நபிகளார் நளினமாக நடந்து கொண்டார்கள் என்று கூறுவதை விட அதற்கு சில சம்பவங்களை குறிப்பிட்டால் பொருத்தமானதாய் அமையும். எனவே நபிகளார் தன்னுடைய மென்மையான அணுகுமுறையை வெளிப்படுத்திய சில நிகழ்ச்சிகள் :

வன்மையாளரிடம் மென்மை

நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் ஓரம் தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களைக் கண்டு அந்த சால்வையை வேகமாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால் அந்த கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின்  ஓரப் பகுதி நபி (ஸல்) அவர்களுடைய தோளின் ஒரு மூலையில் (காயப்படுத்தி) அடையாளம் பதித்திருந்ததை நான் கண்டேன். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்), "தங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்'' என்று கூறினார். உடனே, நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்து விட்டு, பிறகு அவருக்குக் கொடுக்கும்படி உத்தர விட்டார்கள்.

அறிவிப்பவர் ; அன்ஸ் பின் மாலிக் (ரலி),

நூல் : புகாரி 3149

ஒருமுறை நபியவர்கள் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கையில் யாசிப்பவர் நபிகளாரிடம் கடுமையாக நடந்து கொண்டு, நபிகளார் அணிந்திருந்த சால்வையினால் காயப்படுத்தி செல்வத்தை கேட்கின்றார். இவ்வாறு வன்மையாக நடந்து கொண்டவரிடமும் நபியவர்கள் சிரித்தவாறே மென்மையாக நடந்தார்கள் என்று இந்த சம்பவம் உணர்த்துகின்றது.

தன்னை திட்டியவரிடம் மென்மை

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது : யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அஸ்ஸாமு அலைக்கும்' (-உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு "வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (-அவ்வாறே உங்கள் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)'' என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்'' என்று சொன்னார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான்தான் "வஅலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)'' என்று கேட்டார்கள்.                      

நூல் : முஸ்லிம் 6024

நம்மை நோக்கி ஒருவர் எல்லை மீறி ஒரு வார்த்தையை உதிர்த்தால் பதிலுக்கு பல வார்த்தைகளால் அர்ச்சனை செய்வது தான் நமது வழக்கம். ஆனால் தன்னை திட்டியவருக்கு பதிலடி கொடுப்பதிலும் எல்லை மீறாமல் நபியவர்கள் நளினத்தை கடைபிடித்துள்ளார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது. அப்போதும் ஆயிஷா (ரலி) அவர்கள் கடுமையாக நடந்து கொள்வதை கண்டிக்கின்ற நபியவர்களின் உத்தமும் மின்னுகின்றது..

மாற்று மதத்தவர்களிடம் நளினம்

ஒரு கிராமவாசி பள்ளிவாசரினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித் தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்கள்'' என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். பிறகு (தண்ணீர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல் : முஸ்லிம் 6025

பள்ளியினுள் சிறுநீர் கழித்த மாற்று மதத்தவரிடம் நபிகள் நாயகம் அணுகிய நளினம், இது தான் நபியவர்களை பிற மதத்தவர்களையும் நேசிக்கச் செய்தது. நற்குணத்தில் நாயகராகவே நபிகள் நாயகம் திகழ்ந்திருக்கின்றார்கள், இன்றளவும் திகழ்கின்றார்கள் என்பதை இது பறைசாற்றுகின்றது.

மனிதனை அழகுபடுத்தும் மென்மை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.

அறிவிப்பவர் ; ஆயிஷா (ரலி),

நூல் : முஸ்லிம் 5056

எல்லாவற்றிலும் மென்மை தான் அழகு என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். ஏனைய பொருள்கள் என்ன தான் அழகாக இருந்தாலும் மென்மையான பொருள் அவைகளை விட அழகாக மிளிர்வதை உணரலாம். ஆதலால் தான் பலரையும் அது கவர்ந்திழுக்கக்கூடியதாக இருக்கின்றது. மென்மையாக இருப்பது மண், ஆடை, இலை போன்று எதுவாக இருந்தாலும் மனிதர்களை கவரக்கூடியதாக விளங்குகிறது.

அந்த மென்மை மனிதர்களிடம் இருக்குமானால் அது மனிதர்களையும் அழகாக்கிவிடும் என்பதை தான் நபிகளார் இந்த ஹதீஸில் கூறுகின் றார்கள்.

கடனாளியிடம் மென்மை ; கிடைப்பது பாவமன்னிப்பு

நாம் ஒருவருக்கு கடன் வழங்கி, அவர் குறித்த நாளுக்குள் தரவில்லையானால் அவரிடம் சற்று கடினமாக நடந்து கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. (பார்க்க புகாரி 2390) எனினும் அக்கடனாளியிடம் நாம் தாராள மனதுடன் மென்மையாக நடந்து கொண்டால் இறைவனும் நம்மிடத்தில் மறுமையில் மென்மையாக நடந்து கொள்கின்றான். நமது பாவங்களை மன்னிக்கின்றான். மென்மையான அணுகுமுறையால் கிடைக்கும் மற்றுமொரு நன்மை இது.

அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவர் (இறந்த பின்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்பட்டார். அவரிடம் அல்லாஹ், "உலகத்தில் நீ என்ன நற்செயல் புரிந்தாய்?'' என்று கேட்டான். (அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.) அதற்கு அந்த அடியார், "இறைவா! உன் செல்வத்தை எனக்கு நீ வழங்கினாய். அதை வைத்து நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதே எனது இயல்பாக இருந்தது. வசதியுடையவரிடம் மென்மையாக நடந்துகொள்வேன்; சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பேன்'' என்று சொன்னார். அதற்கு அல்லாஹ், "இ(வ்வாறு பெருந்தன்மையுடன் நடப்ப)தற்கு உன்னைவிட நானே மிகவும் தகுதியுடையவன். (எனவே,) என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்யுங்கள்'' என்று (வானவர்களிடம்) கூறினான்

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி),

நூல் : முஸ்லிம் 3181

குழந்தைகளிடம் மென்மை

இன்று எதுவுமறியாத குழந்தைகளிடம் சிறுவர்களிடம் கூட முரட்டுத்தனமாக, கடுமையாக நடந்து கொள்பவர்கள் உள்ளனர். (மார்க்க விஷயத்தில் கண்டிப்பதை குறிக்காது) அவர்களிடம் சிறு தவறு நிகழ்ந்தாலோ, ஒன்றுமே நிகழாவிட்டாலும் குழந்தைகளை மிரட்டுவதை சிலர் பழக்கமாக கொண்டுள்ளனர். நபியவர்கள் சிறுவர்களிடம் நளினமாக பழகக்கூடியர்களாக இருந்துள்ளார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற் கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் "அபூஉமைரே! பாடும் உனது சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?'' என்று கூடக் கேட்பார்கள்.

நூல் : புகாரி 6129

சிறுவர்களிடம் நளினமாக நடந்து கொள்வதே அவர்களை பண்படுத்துவதற்கு உதவியாய் இருக்கும் என்பதை அறிந்து கொண்டால் வளமான வாழ்வை நோக்கி அச்சிறுவர்களை அழைத்து செல்லலாம். அதை விடுத்து அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வோம் எனில் நம்மை விட்டும் அவர்கள் விரண்டோடுவதற்கே அது உதவும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

குறிப்பு : எல்லா சந்தர்ப்பங்களிலும் மென்மையாக நடந்து கொள்வது சரியாக இருக்காது. நம்முடைய கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய சில இடங்களில் கொஞ்சம் கடுமையாகவும நடந்து கொள்ள வேண்டும். நமது குழந்தைகள், குடும்பத்தினர்கள் ஒரு தீமையில் ஈடுபட முயல்கிறார்கள் எனில் அதை தடுக்கும் பொறுப்பு நம்மை சார்ந்தது. அவ்விடத்தில் மென்மையாக நடந்தால் முடிவு எதிர்வினையைத்தான் தரும். எனவே அது போன்ற இடங்களில் சற்று கடினமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே மார்க்கத்தின் நிலைப்பாடு.

விலங்குகளிடமும் மென்மை

"ஆயிஷா (ரலி) அவர்கள் (பயணத்துக்குப் பழக்கப்படாத) முரட்டு சுபாவமுடைய ஒட்டகம் ஒன்றில் ஏறிச் சென்றார்கள். அப்போது அதை விரட்டலானார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆயிஷா!) நளினத்தைக் கையாள்வாயாக'' என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பவர் : ஆயிஷா ரலி

நூல் : முஸ்லிம் 5057

மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளிடமும் நாம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நபிகளார் இந்த செய்தியில் கூறுகின்றார்கள். ஆனால் நடைமுறையில் மாடு, எருமை, கழுதை போன்ற விலங்குகளை காட்டுமிராண்டித்தனமாக சாட்டையடி, மற்றும் அதிக பளு சுமத்தி வதைக்கின்றார்கள். ஒரு முஸ்லிம் அனைத்து விலங்குகளிடம் மென்மையாகவே நடந்து கொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

தீன்குலப் பெண்ணின் குணங்கள்                  தொடர் : 8

நல்லதை தேர்ந்தெடுப்பாள்

எம்.எம்.ஸைபுல்லாஹ்,கடையநல்லூர்

15வது குணம் இறைநினைவில் ஈடுபடுவதில் பேணுதலுடையவளாக இருப்பாள்

அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலிலியையும் தயாரித்துள்ளான்.   

அல்குர்ஆன் 33:35

5197 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسِيرُ فِي طَرِيقِ مَكَّةَ فَمَرَّ عَلَى جَبَلٍ يُقَالُ لَهُ جُمْدَانُ فَقَالَ سِيرُوا هَذَا جُمْدَانُ سَبَقَ الْمُفَرِّدُونَ قَالُوا وَمَا الْمُفَرِّدُونَ يَا رَسُولَ اللَّهِ قَالَ الذَّاكِرُونَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتُ  رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையில் பயணம் மேற் கொண்டபோது "ஜும்தான்' எனப்படும் மலையொன்றைக் கடந்து சென்றார்கள். அப்போது, "செல்லுங்கள்: இது "ஜும்தான்' மலை ஆகும். தனித்துவிட்டவர்கள் வெற்றி பெற்றனர்'' என்று சொன்னார்கள். மக்கள், "தனித்துவிட்டவர்கள் என்போர் யார், அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் நினைவுகூரும் பெண்களும் ஆவர்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 5197

5272 عَنْ جُوَيْرِيَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنْ عِنْدِهَا بُكْرَةً حِينَ صَلَّى الصُّبْحَ وَهِيَ فِي مَسْجِدِهَا ثُمَّ رَجَعَ بَعْدَ أَنْ أَضْحَى وَهِيَ جَالِسَةٌ فَقَالَ مَا زِلْتِ عَلَى الْحَالِ الَّتِي فَارَقْتُكِ عَلَيْهَا قَالَتْ نَعَمْ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ قُلْتُ بَعْدَكِ أَرْبَعَ كَلِمَاتٍ ثَلَاثَ مَرَّاتٍ لَوْ وُزِنَتْ بِمَا قُلْتِ مُنْذُ الْيَوْمِ لَوَزَنَتْهُنَّ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَقُ عَنْ مُحَمَّدِ بْنِ بِشْرٍ عَنْ مِسْعَرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي رِشْدِينَ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ جُوَيْرِيَةَ قَالَتْ مَرَّ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ صَلَّى صَلَاةَ الْغَدَاةِ أَوْ بَعْدَ مَا صَلَّى الْغَدَاةَ فَذَكَرَ نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ رواه مسلم

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில்  என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல்  இதே நிலையில்தான் நீ  இருந்துகொண்டிருக்கிறாயா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்'' என்றேன். நபி (ஸல்) அவர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக் கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிலிமாத்திஹி (ஆகியவையாகும்)'' என்றார்கள். (பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)

அறிவிப்பவர் : ஜுவைரிய்யா(ரலி),

நூல் : முஸ்லிம் 5272

6318 عَلِيٍّ أَنَّ فَاطِمَةَ عَلَيْهِمَا السَّلَام شَكَتْ مَا تَلْقَى فِي يَدِهَا مِنْ الرَّحَى فَأَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسْأَلُهُ خَادِمًا فَلَمْ تَجِدْهُ فَذَكَرَتْ ذَلِكَ لِعَائِشَةَ فَلَمَّا جَاءَ أَخْبَرَتْهُ قَالَ فَجَاءَنَا وَقَدْ أَخَذْنَا مَضَاجِعَنَا فَذَهَبْتُ أَقُومُ فَقَالَ مَكَانَكِ فَجَلَسَ بَيْنَنَا حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى صَدْرِي فَقَالَ أَلَا أَدُلُّكُمَا عَلَى مَا هُوَ خَيْرٌ لَكُمَا مِنْ خَادِمٍ إِذَا أَوَيْتُمَا إِلَى فِرَاشِكُمَا أَوْ أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا فَكَبِّرَا ثَلَاثًا وَثَلَاثِينَ وَسَبِّحَا ثَلَاثًا وَثَلَاثِينَ وَاحْمَدَا ثَلَاثًا وَثَلَاثِينَ فَهَذَا خَيْرٌ لَكُمَا مِنْ خَادِمٍ وَعَنْ شُعْبَةَ عَنْ خَالِدٍ عَنْ ابْنِ سِيرِينَ قَالَ التَّسْبِيحُ أَرْبَعٌ وَثَلَاثُونَ رواه البخاري

 (என் துணைவியார்) ஃபாத்திமா அவர்கள் (மாவு அரைக்கும்) திரிகை சுற்றியதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (என்னிடம்) முறையிட்டார். (இது தொடர்பாக நபியவர்களிடம் தெரிவிக்கும் படி நான் கூறினேன்.) ஆகவே, ஒரு பணியாளரை (தமக்குத் தரும்படி) கேட்க நபி (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அப்போது (வீட்டில்) இல்லாததால் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அது பற்றிக் கூறி(விட்டுத் திரும்பலா)னார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்திருக்க முற்பட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், "(எழுந்திருக்க வேண்டாம்) அந்த இடத்திலேயே இருங்கள்'' என்று கூறிவிட்டு எங்களுக்கு நடுவில் வந்து அமர்ந்துகொண்டார்கள். அப்போது (என்னைத் தொட்டுக்கொண்டிருந்த) அவர்களுடைய பாதங்களின் குளிர்ச்சியை எனது நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள்.) "பணியாளரைவிட உங்களிருவருக்கும் (பயனளிக்கும்) சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் "படுக்கைக்குச் சென்றதும்' அல்லது "விரிப்புக்குச் சென்றதும்' அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று தடவையும், அல்ஹம்துலில்லாஹ் (புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். இது பணியாளை விட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அலீ பின் அபீதாலிப் (ரலி),

நூல் : புகாரி 6318

5274 عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ فَاطِمَةَ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسْأَلُهُ خَادِمًا وَشَكَتْ الْعَمَلَ فَقَالَ مَا أَلْفَيْتِيهِ عِنْدَنَا قَالَ أَلَا أَدُلُّكِ عَلَى مَا هُوَ خَيْرٌ لَكِ مِنْ خَادِمٍ تُسَبِّحِينَ ثَلَاثًا وَثَلَاثِينَ وَتَحْمَدِينَ ثَلَاثًا وَثَلَاثِينَ وَتُكَبِّرِينَ أَرْبَعًا وَثَلَاثِينَ حِينَ تَأْخُذِينَ مَضْجَعَكِ و حَدَّثَنِيهِ أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ حَدَّثَنَا حَبَّانُ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا سُهَيْلٌ بِهَذَا الْإِسْنَادِ  رواه مسلم

பாத்திமா (ரலி) அவர்கள் பணியாள் ஒருவரைக் கேட்பதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். தமது பணி(ச்சுமை) பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது "நம்மிடம் உனக்குப் பணியாளர் கிடைக்கப்போவதில்லை. பணியாளர் ஒருவரை விடச் சிறந்த ஒன்றை உனக்கு அறிவிக்கட்டுமா? நீ உனது படுக்கைக்குச் செல்லும்போது, முப்பத்து மூன்று முறை "சுப்ஹானல்லாஹ்' என்றும், முப்பத்து மூன்று முறை "அல்ஹம்துலில்லாஹ்' என்றும், முப்பத்து நான்கு முறை "அல்லாஹு அக்பர்' என்றும் சொல்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 5274

5247 سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ يَقُولُ سَمِعْتُ خَوْلَةَ بِنْتَ حَكِيمٍ السُّلَمِيَّةَ تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ نَزَلَ مَنْزِلًا ثُمَّ قَالَ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ لَمْ يَضُرَّهُ شَيْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْ مَنْزِلِهِ ذَلِكَ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கிவிட்டுப் பின்னர் "அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்' என்று கூறிப் பிரார்த்தித்தால், அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும்வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது.

(பொருள்: அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலம் அவனுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்து நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)

அறிவிப்பவர் :  கவ்லா பின்த் ஹகீம் (ரலி),

நூல் : முஸ்லிம் 5247

16வது பண்பு நல்லொழுக்கமுள்ள பெண்மணியாக இருக்க வேண்டும்

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும்,

 அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப் பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்

அல்குர்ஆன் 4:34

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدُّنْيَا مَتَاعٌ وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),

நூல் : முஸ்லிம் 2911

17வது பண்பு நல்ல தோழியை தேர்ந்தெடுக்க வேண்டும்

அநீதி இழைத்தவன் தனது கைகளைக் கடிக்கும் நாளில் "இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே'' என்று கூறுவான். தஇன்னாரை நான் உற்ற நண்பனாக ஆக்காமல் இருந்திருக்கக் கூடாதா?

அல்குர்ஆன் 25:27,28

உற்ற நண்பர்களாக இருந்தோரில் (இறைவனை) அஞ்சி நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருந்தோரைத் தவிர (மற்றவர்கள்) அந் நாளில் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 43:67

2101 قَالَ سَمِعْتُ أَبَا بُرْدَةَ بْنَ أَبِي مُوسَى عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَالْجَلِيسِ السَّوْءِ كَمَثَلِ صَاحِبِ الْمِسْكِ وَكِيرِ الْحَدَّادِ لَا يَعْدَمُكَ مِنْ صَاحِبِ الْمِسْكِ إِمَّا تَشْتَرِيهِ أَوْ تَجِدُ رِيحَهُ وَكِيرُ الْحَدَّادِ يُحْرِقُ بَدَنَكَ أَوْ ثَوْبَكَ أَوْ تَجِدُ مِنْهُ رِيحًا خَبِيثَةً  رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக்கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்!

அறிவிப்பவர் :  அபூமூசா (ரலி),

 நூல் : புகாரீ 2101

3688 عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ السَّاعَةِ فَقَالَ مَتَى السَّاعَةُ قَالَ وَمَاذَا أَعْدَدْتَ لَهَا قَالَ لَا شَيْءَ إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَمَا فَرِحْنَا بِشَيْءٍ فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, "மறுமை நாள் எப்போது வரும்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக் கிறாய்?'' என்று (திரும்பக்) கேட்டார்கள். அம்மனிதர், "எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர'' என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) நீ இருப்பாய்'' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், "நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்'' என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சி யடைந்ததைப் போன்று வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன் தான் இருப்பேன் என்று நான் நம்புகிறேன்; அவர்களுடைய நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 3688

6169 قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَقُولُ فِي رَجُلٍ أَحَبَّ قَوْمًا وَلَمْ يَلْحَقْ بِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ تَابَعَهُ جَرِيرُ بْنُ حَازِمٍ وَسُلَيْمَانُ بْنُ قَرْمٍ وَأَبُو عَوَانَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்  கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. அவர் விஷயத்தில் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "மனிதன் யார் மீது அன்புகொண்டுள்ளானோ அவர்களுடன்தான் இருப்பான்'' என்றார்கள்.      

நூல் : புகாரி 6169

குணங்கள் தொடரும் ....

தகவல் களஞ்சியம்   இவர் யார் ?

தொகுப்பு : மனாஸ், இலங்கை

1 நபி (ஸல்) அவர்கள் இந்த நபித்தோழரிடம் திருக்குர்ஆனை ஓதிக்காட்டுமாறு கேட்டார்கள்.

2 இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம்

மிகவும் மகத்தானது என்று தெரியுமா?'' என நபி (ஸல்) அவர்கள் இவரிடம்  கேட்டார்கள்

3 வீட்டுக்குள் நுழைவதற்கு மூன்று முறை அனுமதி  கேட்டு நபி வழியை நடைமுறைப்படுத்தியவர்.

4 அபூதல்ஹா (ரலி) அவர்கள் பைருஹா தோட்டத்தின் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார்கள்.

5 அகழ்ப்போரின் போது இவர்களின்  நாடி நரம்பில் அம்பு பாய்ந்துவிட்டது

6 நபி (ஸல்) அவர்களுடன் இப்னு ஸய்யாத் என்பவனை இவர்கள் சந்தித்தார்கள்.

7 இவர்கள் மது அருந்திய கொண்டிருந்த நேரத்தில்தான் மது தடைசெய்யப்பட்டது.

8 கண்டடுக்கப்பட்ட பொருளுக்கு என்ன சட்டம் என்பதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இவருக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

9 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் பர்தாவின் சட்டத்தைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டவர்.

10 உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில்  இரவுத் தொழுகைக்கு இவரின் தலைமையில் கீழ் மக்கள் தொழும்படி ஏற்பாடு செய்தார்கள்.

ஈவர் யார்?

விடை :

உபை பின் கஅப் (ரலி) அவர்கள்

1 ஆதாரம் முஸ்லிம் (1463)                       2 ஆதாரம் முஸ்லிம்  (1476)

3 ஆதாரம் முஸ்லிம் (4355)                       4 ஆதாரம் புகாரி (2758)

5 ஆதாரம் முஸ்லிம்  (4437)                    6 ஆதாரம் புகாரி (1354)

7 ஆதாரம் முஸ்லிம் (4012)                       8 ஆதாரம் புகாரி (2426)

9 ஆதாரம் முஸ்லிம் (2802)                       10 ஆதாரம் புகாரி (2010)

05.12.2011. 10:35





செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
30 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி