85-பாகப் பிரிவினைச் சட்டங்கள்

 

அத்தியாயம் : 85

85-பாகப் பிரிவினைச் சட்டங்கள்1

பாடம் : 1

அல்லாஹ் கூறுகின்றான்:

உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்; பெண்மக்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு, இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால், ஒரே பெண்ணாக இருந்தால் அவளுக்கு(ச் சொத்தில்) பாதி கிடைக்கும்.

இறந்தவருக்குப் பிள்ளை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவருடைய) பெற்றோர் ஒவ்வொரு வருக்கும் உண்டு. ஆனால், இறந்தவருக்குப் பிள்ளை இல்லாதிருந்து பெற்றோர் மட்டுமே வாரிசாக இருந்தால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு) உரிய தாகும். அப்போது இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவருடைய தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான் (மீதி தந்தைக்குச்) சேரும். (இவ்வாறு பிரித்துக் கொடுப்பது) அவர் செய்துள்ள மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்.

 உங்களுடைய பெற்றோர் மற்றும் மக்கள் ஆகியோரில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள்; (ஆகையால்,) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளை(யான இந்தப் பாகப் பிரிவினைச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.2

மேலும், உங்கள் மனைவியர் விட்டுச் சென்ற(சொத்)தில் அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்குக் கால் பாகம்தான். (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்.

தவிர உங்களுக்குப் பிள்ளை இல்லாதி ருப்பின், நீங்கள் விட்டுச் சென்ற(சொத்)தில் நான்கில் ஒரு பாகம் உங்கள் மனைவியருக்குக் கிடைக்கும். உங்களுக்குப் பிள்ளை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற(சொத்)தில் எட்டில் ஒரு பாகம் உங்கள் மனைவியருக்குக் கிடைக்கும். (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாசனத்தையும் கடனையும் நிறை வேற்றிய பின்னரேதான்.

(தந்தை, பாட்டன் போன்ற மூல வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற கிளை வாரிசுகளோ) யாரும் இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ -இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால்-அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு; ஆனால், இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தைச் சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். (இதுவும்) அவர்களின் மரண சாசனமும் கடனும் நிறைவேற்றப்பட்ட பின்னர்தான்; ஆயினும் (மரண சாசனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது; (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான் (4:11, 12).3

6723 ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒருமுறை) நோய்வாய்ப்பட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் என்னை உடல் நலம் விசாரிக்க நடந்தே வந்தனர். என்னிடம் அவர்கள் வந்த போது நான் மயக்கமுற்றிருந்தேன். பின்னர் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். பிறகு அந்தத் தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து கண்விழித்)தேன். அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! என் செல்வத்தை நான் என்ன செய்ய வேண்டும்? என் செல்வத்தின் விஷயத்தில் நான் என்ன

முடிவு செய்ய வேண்டும்? என்று கேட்டேன். அப்போது அவர்கள் எனக்கு பதிலேதும் கூறவில்லை. முடிவில் வாரிசுரிமை தொடர்பான (மேற்கண்ட வசனம்) இறங்கிற்று.4

பாடம் : 2

பாகப் பிரிவினை (கல்வி)யைக் கற்பித்தல்

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

யூகத்தின் அடிப்படையில் பேசக்கூடிய வர்கள் தோன்றுவதற்கு முன் (அடிப்படை யுள்ள பாகப் பிரிவினை போன்ற) கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள்.

6724 அல்லாஹ்வின் தூதலிர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அடிப்படையில்லாமல் பிறர் மீது) சந்தேகம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், இவ்வாறு சந்தேகம் கொள்வது மாபெரும் பொய்யாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5

பாடம் : 3

(இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.6

6725 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ளநபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்ன ஃபாத்திமா (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தங்களுக்குச்

சேர வேண்டிய சொத்தைக் கேட்டனர். அப்போது அவர்களிருவரும் ஃபதக்' பகுதி யிலிருந்த தமது நிலத்தையும் கைபரில் தமக்குக் கிடைத்த பங்கையுமே அவ்வாறு கோரினர்.7

6726 அவர்கள் இருவரிடமும் அபூபக்ர்

(ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

(இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவையாகும். இந்தச் செல்வத்திலிருந்து தான்  முஹம்மதின் குடும்பத்தினர் உண்பார்கள் என்று சொல்லக் கேட்டுள்ளேன் என்று கூறிவிட்டு, அல்லாஹ் வின் மீதாணையாக! இந்தச் செல்வத்தின் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு செயல்படக் கண்டேனோ அதில் எதையும் கைவிடாமல் நானும் அவ்வாறே செயல்படுவேன் என்று பதிலளித்தார்கள். இதனால் கோபித்துக் கொண்டு ஃபாத்திமா (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தாம் இறக்கும் வரை பேசவில்லை.8

6727 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

6728 முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மாலிக் பின் அவ்ஸ் பின் அல் ஹதஸான் (ரலி) அவர்களிடம் சென்று (ஃபதக் தொடர்பான நிகழ்ச்சி குறித்துக்) கேட்டேன். அவர்கள் கூறினார்கள்:

நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்களின் மெய்க் காவலர் யர்ஃபஉ' என்பவர் அவர்களிடம் வந்து, உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் பின் அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் தங்களைச் சந்திக்கத் தங்களுக்கு இசைவு உண்டா? என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள், ஆம்' என்று கூறி, அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். (சற்று நேரத்திற்குப்) பிறகு யர்ஃபஉ (வந்து), அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் சந்திப்பதில் தங்களுக்கு இசைவு உண்டா? என்று கேட்டார். ஆம்' என்றார்கள். (அனுமதிக்குப் பின் அவர்கள் இருவரும் உள்ளே வந்தனர்).

அப்பாஸ் (ரலி) அவர்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (-அலீக்கும்) இடையே (இந்தச் சொத்துத் தொடர்பாகத்) தீர்ப்பளியுங்கள் என்று சொன்னார்கள்.

உமர் (ரலி) அவர்கள், வானமும் பூமியும் எந்த அல்லாஹ்வின் கட்டளையால் நிலை பெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இறைத்தூதர்களான) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாக மாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு (அங்கிருந்த) அந்தக் குழுவினர், நபியவர்கள் அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள் என்று பதிலளித்தனர். உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர் களா? என்று கேட்டார்கள். அவ்விருவரும், (ஆம்) அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள் என்று பதிலளித்தனர்.

உமர் (ரலி) அவர்கள், அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயம் குறித்துப் பேசுகிறேன்: (போரிடாமல் கிடைத்த) இந்த (ஃபய்உ)ச் செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கினான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதை வழங்கவில்லை என்று கூறிவிட்டு, அல்லாஹ் எந்தச் செல்வத்தை (எதிரிகளான) அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அந்தச் செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங் களையும் (அறப்போர் புரிவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்ததன்று. மாறாக அல்லாஹ், தான் நாடுகின்றவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்கு கின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின் றான் எனும் (59:6ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

தொடர்ந்து, எனவே, இது இறைத் தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக்கொள்ளவில்லை; அதை உங்களை விடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில் அதிலிருந்து இந்தச் செல்வம் மட்டுமே எஞ்சியது. நபி (ஸல்)அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் வருடாந்திர செலவை அவர்களுக்குக் கொடுத்துவந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு எஞ்சியதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள். (இவ்வளவும் சொல்லிவிட்டு, அக்குழுவினரை நோக்கி) அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை நான் கேட்கின்றேன்: இதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ஆம்' (அறிவோம்) என்று பதிலளித்தனர். பிறகு, அலீ (ரலி) அவர்களிடமும் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும், உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன்: நீங்கள் இதை அறிவீர்களா? என்று வினவினார்கள். அவர்கள் இருவரும், ஆம்' (அறிவோம்) என்று பதிலளித்தனர்.

(தொடர்ந்து), பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக் கொண்டான். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், நான் அல்லாஹ் வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதி யாவேன் என்று கூறி, அ(ந்தச் செல்வத்)தைத் தமது கைவசம் எடுத்துக் கொண்டார்கள். அது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அப்போது நான், நான் அல்லாஹ்வின் தூதருடைய பிரதிநிதியின் பிரதிநிதியாவேன் என்று கூறி, அதை

(என் ஆட்சிக் காலத்தில்) இரண்டு வருடங்களுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நடந்து கொண்ட முறைப்படி செயல்பட்டு வந்தேன். பிறகு நீங்கள் இருவரும் என்னிடம் வந்தீர்கள்(; பேசினீர்கள்). உங்கள் இருவரின் கோரிக்கையும் ஒன்றாகவே இருந்தது; உங்கள் இருவரின் விஷயமும் ஒன்றாகவே இருந்தது.

ளஅப்பாஸ் (ரலி) அவர்களே!ன நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரரின் புதல்வர் (-நபி) இடமிருந்து உங்களுக்குச் சேர வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி வந்தீர்கள். அவரும் (-அலீயும்) தம் துணைவியாருக்கு அவருடைய தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி என்னிடம் வந்தார். அப்போது நான் (உங்கள் இருவரிடமும்,) (நபிகளார் செயல்பட்டபடி செயல்பட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில்) நீங்கள் இருவரும் விரும்பினால் உங்கள் இருவரிடமும் அதைக் கொடுத்து விடுகின்றேன் என்று சொன்னேன். (இப்போது) அதன்றி வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகின்றீர்களா? எவனது அனுமதியுடன் வானமும் பூமியும் நிலை பெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! நான் அந்தச் செல்வம் தொடர்பாக இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் இறுதிநாள் வரை அளிக்கமாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதை ஒப்படைத்துவிடுங்கள். அதை உங்களுக்கு பதிலாக நானே பராமரித்துக்கொள்வேன் என்று சொன்னார்கள்.9

6729 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் வாரிசுகள் ஒரு தீனாரைக்கூட (வாரிசுப்) பங்காகப் பெற மாட்டார்கள். என் துணைவியருக்கான வாழ்க்கைச் செலவும் என் (பிரதிநிதி மற்றும்) ஊழியரின் ஊதியமும் போக நான் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமேயாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10

6730 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது அவர்களின் துணைவியர் உஸ்மான் (ரலி) அவர்களை (என் தந்தை கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்து, (அல்லாஹ்வின் தூதரிடமி ருந்து) தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்க விரும்பினர். அப்போது நான் (அவர்களைப் பார்த்து), (இறைத்தூதர்களான) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லவில்லையா? என்று கேட்டேன்.

பாடம் : 4

ஒருவர் ஒரு செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவருடைய குடும்பத்தாருக்குரிய தாகும் எனும் நபிமொழி.

6731 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர் களின் உயிர்களைவிட நானே நெருக்க மான(உரிமையுடைய)வன் ஆவேன். ஆகவே, எவர் தம் மீது கடன் இருக்கும் நிலையில் அதனை அடைப்பதற்கான ஒன்றையும் விட்டுச்செல்லாமல் இறந்துவிடுகின்றாரோ அந்தக் கடனை அடைப்பது எனது பொறுப்பாகும். எவர் (இறக்கும் போது) ஒரு செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ அது அவருடைய வாரிசுகளுக்குரியதாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.11

பாடம் : 5

தாய், தந்தையிடமிருந்து ஒருவருக்குக் கிடைக்கும் சொத்துரிமை.

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

ஓர் ஆண் அல்லது பெண், ஒரு புதல்வியை விட்டுச்சென்றால் (அவர்களுடைய சொத்தி லிருந்து) அவளுக்குச் சரிபாதி (பங்கு) கிடைக்கும். பெண்மக்கள் இருவராகவோ அல்லது அதைவிடக் கூடுதலாகவோ இருந்தால் அவர்களுக்கு மூன்றில் இரண்டு பாகங்கள் கிடைக்கும். பெண்மக்களுடன் ஆணும் இருந்தால் அவர்களுடன் சொத்தில் பங்காளியாகும் நபருக்குச் சேர வேண்டிய பாகத்தை முதலில் கொடுத்துவிட்டுப் பிறகு எஞ்சியுள்ளவற்றை ஓர் ஆணின் பங்கு இரு பெண்ணின் பங்கிற்குச் சமமானது' என்ற விகிதத்தில் அவர்களிடையே பகிர்ந்தளிக்கப் படும்.12

6732 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பாகப் பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங் களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவின ரான) ஆணுக்கு உரியதாகும்.13

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 6

புதல்வியருக்கு(ப் பெற்றோரிடமிருந்து) கிடைக்கும் சொத்துரிமை.

6733 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(விடைபெறும்' ஹஜ்ஜின்போது) மக்காவில் நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. என் ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுகள் யாரும் எனக்கில்லை. எனவே, எனது செல்வத்தில் மூன்றில் இரு பங்கை நான் தர்மம் செய்துவிடட்டுமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், வேண்டாம்' என்றார்கள். அவ்வாறாயின் பாதியை தர்மம் செய்யட்டுமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், வேண்டாம்' என்று சொன்னார்கள். மூன்றிலொரு பங்கை (தர்மம் செய்யட்டுமா?) என்று கேட்டேன். நபியவர்கள், மூன்றிலொரு பங்குகூட அதிகம்தான். நீங்கள் உங்கள் பிள்ளைகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிடத் தன்னிறைவு உடையவர்களாக விட்டுச் செல்வதே சாலச்சிறந்ததாகும். (நல்ல நோக்கத்தில்) நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செலவுக்கும் உங்களுக்கு நிச்சயம் நற்பலன் வழங்கப்படும்; நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டுகின்ற ஒரு கவளம் உணவாயினும் சரி! (அதற்கும் நற்பலன் உண்டு) என்று சொன்னார்கள். உடனே நான், அல்லாஹ்வின் தூதரே! (ஹஜ் முடிந்து என் தோழர்கள் அனைவரும் மதீனா சென்று விடுவார்கள்.) நான் மட்டும் என் ஹிஜ்ரத் பூமி(யான மதீனாவு)க்குச் செல்லாமல் (மக்காவிலேயே) தங்கிவிடுவேனா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் (மதீனா) சென்ற பிறகு நீங்கள் இங்கேயே தங்கியிருந்து, அல்லாஹ்வின் திருப்தியை நாடி எந்த நல்லறம் புரிந்தாலும் அதன் மூலம் உங்கள் உயர்வும் அந்தஸ்தும் அதிகமாகவே செய்யும். நான் (மதீனா) சென்ற பிறகு, உங்கள் மூலம் சிலர் நன்மையடைவதற்காவும் மற்ற சிலர் துன்பம் அடைவதற்காகவும் நீங்கள் இங்கேயே தங்கவைக்கப்படலாம். ஆனால், பாவம், சஅத் பின் கவ்லா! (அவருடைய ஆசை நிறைவேறவில்லை) என்று மக்காவிலேயே இறந்துவிட்ட சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்கள்.

இதன் அறிவிப்பார்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்தவராவார்.14

6734 அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் யமன் நாட்டுக்கு எங்களின் போதகராகவும் ஆட்சி யாளராகவும் வந்தார்கள். அன்னாரிடம் நாங்கள், தம் மகளையும் சகோதரியையும் விட்டுவிட்டு இறந்துபோன ஒருவரைக் குறித்து (பாகப் பிரிவினை தொடர்பாக)க் கேட்டோம். அப்போது அவர்கள் (மொத்தச் சொத்தில்) மகளுக்குப் பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் அளிக்கும்படி கூறினார்கள்.

பாடம் : 7

(இறந்தவருக்கு) மகன் (உயிருடன்) இல்லாத போது மகனின் மகனுக்கு (பேரனுக்கு)க் கிடைக்கும் சொத்துரிமை.

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறு கின்றார்கள்:

(இறந்தவருக்கு) ஆண் மக்கள் (உயிருடன்) இல்லாத போது, அவர்களுடைய குழந்தைகள் (பேரன்கள், சொந்தக்) குழந்தைகளின் அந்தஸ்தைப் பெறுவர். பேரக் குழந்தைகளில் (-மகனுடைய மக்களில்) ஆண்கள் சொந்த ஆண் மக்களைப் போன்றும், அவர்களில் பெண்கள் சொந்த பெண் மக்களைப் போன்றும் ஆவர். அவர்கள் வாரிசுரிமை பெறுவதைப் போன்றே இவர்களும் வாரிசுரிமை பெறுவார்கள். அவர்கள் (இருக்கும் போது மற்ற வாரிசுகளில் யார் யாரை வாரிசுரிமை பெறாமல்) தடுப்பார்களோ (அவர்களை யெல்லாம்) இவர்களும் தடுப்பார்கள். மகன் (உயிருடன்) இருக்கும் போது மகனுடைய மக்கள் வாரிசுரிமை பெற மாட்டார்கள்.

6735 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பாகப்பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங் களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.15

பாடம் : 8

(இறந்தவருக்கு) மகள் இருக்கும் போது மகனுடைய மகளுக்கு (பேத்திக்கு)க் கிடைக்கும் சொத்துரிமை.

6736 ஹுஸைல் பின் ஷுரஹ்பீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூமூசா (ரலி) அவர்களிடம், (இறந்து போன ஒருவருக்கு) மகள், மகனுடைய மகள், சகோதரி ஆகியோர் (இருந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் சொத்துரிமை) குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் மகளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் கிடைக்கும் (மகனுடைய மகளுக்கு ஒன்றும் கிடையாது) என்று கூறி விட்டு, (வேண்டுமானால்,) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்று (கேட்டுப்) பாருங்கள். அன்னாரும் என் (கருத்தி)னையே பிரதிப-ப்பார்கள் என்று சொன்னார்கள். ஆகவே, இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் (சென்று) அபூமூசா (ரலி) அவர்களின் கூற்றைத் தெரிவித்து (இது குறித்து விளக்கம்) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், இவ்வாறு (மகனின் மகளுக்கு சொத்தில் பங்கு இல்லை என்று) நானும் சொன்னால் நிச்சயம் நான் வழிதவறியவனாகிவிடுவேன்; நான் நேர்வழிய டைந்தவர்களில் ஒருவனாக இருக்கமாட்டேன். இந்த விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே நானும் அளிக்கிறேன்: மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் வழங்கப்பட வேண்டும். அப்போது தான்  மூன்றில் இரு பாகங்கள் நிறைவாகும். எஞ்சியிருப்பது சகோதரிக்கு உரியதாகும் என்றார்கள். பின்னர் அபூமூசா (ரலி) அவர்களிடம் சென்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தோம். அப்போது, இந்தப் பேரறிஞர் (இப்னு மஸ்ஊத்-ரலி) உங்களிடையே இருக்கும் வரை என்னிடம் (விளக்கம்) கேட்காதீர்கள் என்று (புகழ்ந்து) சொன்னார்கள்.16

பாடம் : 9

(இறந்தவருக்குத்) தந்தையும் சகோதரர்களும் இருக்கும் போது பாட்டனாருக்குரிய சொத்துரிமை.17

அபூபக்ர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) ஆகியோர் பாட்டனார் தந்தை(யைப் போன்றவர்) ஆவார் என்று கூறினர். (அதற்கு ஆதாரமாக) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆதமின் மக்களே! எனும் (7:26ஆவது) வசனத் தொடரையும் நான் என் தந்தையரான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரின் மார்க்கத்தையே பின்பற்றுகிறேன் (என்று யூசுஃப் கூறினார்) எனும் (12:38ஆவது) வசனத் தொடரையும் ஓதினார்கள்.18

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்கள் நிறைந்திருந்தும் அவர்களில் யாரும் அபூபக்ர் (ரலி) அவர் களு(டைய இக்கருத்துக்)க்கு மாறுபடவில்லை.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: எனக்கு (மகன் இல்லாத போது) என் மகனுடைய மகன் (பேரன்)தான் வாரிசாவானே தவிர சகோதரர்கள் அல்லர். (அப்படியிருக்கும் போது) என் பேரனுக்கு (அவனுடைய தந்தை இல்லாத போது பாட்டனாகிய) நான் ஏன் வாரிசாக முடியாது?19

(இது தொடர்பாக) உமர் (ரலி), அலீ (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோரிடமிருந்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.20

6737 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பாகப்பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங் களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21

6738 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்தச் சமுதாயத்தில் யாரையேனும் நான் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால் அவரையே ஆக்கிக் கொண்டிருப்பேன். என்றாலும், இஸ்லாமிய சகோதரத்துவமே (எல்லா உறவுகளையும்விடச்) சிறந்தது' அல்லது நல்லது' என்று யார் விஷயத்தில் கூறினார்களோ (அந்த அபூபக்ர்-ரலி) அவர்கள்தாம், (சொத்துரிமை பெறுவதில்) பாட்டனாரை தந்தையின் இடத்தில் வைத்தார்கள்' அல்லது தந்தை' எனத் தீர்ப்பளித்தார்கள்.22

பாடம் : 10

(இறந்துபோன பெண்ணுக்குக்) குழந்தை உள்ளிட்ட வாரிசுகள் இருக்கும் போது கணவனுக்குக் கிடைக்கும் சொத்துரிமை.

6739 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இறந்துபோனவர் விட்டுச்சென்ற) செல்வம் (அவருடைய) குழந்தைகளுக்கு (மட்டுமே) உரியதாக இருந்தது. பெற்றோருக்கு(ப் பங்கு கிடைக்க வேண்டுமெனில் இறந்தவர்) மரண சாசனம் செய்திருக்க வேண்டும் என்றி ருந்தது. இதில் அல்லாஹ் தான் நாடியதை மாற்றியமைத்து, ஓர் ஆணுக்கு இரு பெண் களின் பங்கு' என்ற விகிதத்தை ஏற்படுத்தினான். பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் என்று நிர்ணயித்தான். (குழந்தை இருக்கும் போது) மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும் (குழந்தை இல்லாத போது) நான்கில் ஒரு பாகமும் நிர்ணயித்தான். (குழந்தை இல்லாத போது) கணவனுக்குச் சரிபாதியும் (குழந்தை இருக்கும் போது) நான்கில் ஒரு பாகமும் நிர்ணயித்தான்.23

பாடம் : 11

(இறந்தவருக்குக்) குழந்தை உள்ளிட்ட வாரிசுகள் இருக்கும் போது மனைவி, (அல்லது) கணவனுக்குக் கிடைக்கும் சொத்துரிமை.

6740 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ -ஹ்யான்' குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் (வயிற்றிலிருந்த) சிசு, (மற்றொரு பெண் அடித்ததால்) இறந்து பிறந்தது. அதற்கு நஷ்ட ஈடாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்கிட வேண்டுமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். பின்னர், நஷ்ட ஈடு வழங்கும்படி நபியவர்கள் தீர்ப்பளித்த அந்த(க் குற்றவாளி)ப் பெண் இறந்துவிட்டார். ஆகவே, (அவர் சார்பாக) அவருடைய தந்தைவழி உறவினர்கள் (அஸபாக்கள்) நஷ்ட ஈடு வழங்கிட வேண்டு மென்றும், அவரது சொத்து அவருடைய ஆண் மக்களுக்கும் கணவருக்கும் உரிய தென்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.24

பாடம் : 12

(இறந்தவருக்குப்) புதல்வியர் இருக்கும் போது மீதியைப் பெறும் சகோதரிகளின் சொத்துரிமை.25

6741 அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் (யமன் நாட்டுக்கு வந்த) முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், (சொத்தில்) பாதி (இறந்தவரின்) மகளுக்கும் (மீதிப்) பாதி சகோதரிக்கும் உரியது' என்று தீர்ப்பளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் மிஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் எங்களிடையே (மேற்கண்ட வாறு) தீர்ப்பளித்தார்கள் என்று காணப்படு கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில்' என்ற குறிப்பு இடம் பெறவில்லை.26

6742 ஹுஸைல் பின் ஷுரஹ்பீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (மகனின் மகளுக்குக் கிடைக்க வேண்டிய) இந்தச் சொத்து விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே அளிக்கிறேன்' அல்லது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்று சொல்லிவிட்டு (இறந்த வரின் சொத்தில்) மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் கிடைக்கும்; எஞ்சியது சகோதரிக்கு உரியதாகும் என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.27

பாடம் : 13

சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமை.28

6743 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நோய்வாய்ப்பட்டிருந்த போது (என்னை நலம் விசாரிப்பதற்காக) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள். அங்கசுத்தி (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் கேட்டு வாங்கி அங்கசுத்தி செய்தார்கள். பிறகு தாம் அங்கசுத்தி செய்த தண்ணீரை என் மீது தெளித்தார்கள். உடனே எனக்கு மயக்கம் தெளிந்துவிட்டது. அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சகோதரிகள் மட்டுமே இருக்கின்றனர். (என் சொத்துகள் யாருக்குச் சேர வேண்டும்?) என்று கேட்டேன். அப்போது தான்  பாகப் பிரிவினை தொடர்பான வசனம் அருளப்பெற்றது.29

பாடம் : 14

(நபியே!) கலாலா' (-அதாவது மூலவாரிசு களோ கிளைவாரிசுகளோ இல்லாத நிலை-) குறித்து உம்மிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள். (அவர்களிடம்) கூறுக: கலாலா' தொடர்பாக அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) தீர்ப்பளிக்கின்றான்: குழந்தை இல்லாத ஒருவன் இறந்து, அவனுக்கு ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச்சென்ற(சொத்)தில் பாதி கிடைக்கும். குழந்தை இல்லாத ஒருத்தி (இறந்து, அவளுக்கு ஒரு சகோதரன் மட்டும் இருந்தால் அவளு)க்கு அவன் (முழு) வாரிசாவான். சகோதரிகள் இருவராக இருந்தால் அவ்விருவருக்கும் அவன் விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரு பாகம் கிடைக்கும். சகோதர சகோதரிகளாகப் பலர் இருந்தால் அவர்களில் இரு பெண்களின் பங்குக்குச் சமமான(பங்கான)து ஓர் ஆணுக்குக் கிடைக்கும். நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கிக் கூறுகின்றான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான் (எனும் 4:176ஆவது இறைவசனம்).

6744 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ளநபி (ஸல்) அவர்களுக்குன இறுதியாக அருளப்பெற்ற (பாகப் பிரிவினை தொடர்பான) வசனம், அந்நிஸா' அத்தியாயத்தின் இறுதி வசனமான (நபியே!) கலாலா' குறித்து உம்மிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள் என்று தொடங்கும் வசனமாகும்.30

பாடம் : 15

(இறந்துபோன ஒரு பெண்ணுக்குத்) தந்தையின் சகோதரர் புதல்வர்கள் இருவர் உள்ளனர். அவர்களில் ஒருவர் (அவளுடைய) தாய் வழிச் சகோதரர் ஆவார். மற்றொருவர் (அவளுடைய) கணவர் ஆவார். (இவர் களிடையே அவள் விட்டுச் சென்ற சொத்தை எவ்வாறு பங்கிட வேண்டும்?)31

கணவருக்கு (அவளுடைய சொத்தில்) பாதியும், தாய் வழிச் சகோதரருக்கு ஆறில் ஒரு பாகமும் கிடைக்கும். எஞ்சியிருப்பது அவர்கள் இருவரிடையே சரி பாதியாகப் பங்கிடப்படும் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.32

6745 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர் களின் உயிரைவிட நானே நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். ஆகவே, எவர் செல்வத்தை விட்டுவிட்டு இறந்தாரோ அவரது செல்வம் (அவருடைய) தந்தை வழியிலுள்ள நெருங்கிய உறவினர்களுக் குரியதாகும். எவர் (குடும்பம் மற்றும் கடன் போன்ற) சுமைகள், சொத்தில்லா குழந்தைகள் ஆகியவற்றை விட்டுச் செல்கிறாரோ அவருக்கு நான் பொறுப்பாளியாவேன். அவருக்காக என்னை அழைக்கலாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6746 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பாகப் பிரிவினை தொடர்பாகக் குர்ஆன் நிர்ணயித்துள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்து விடுங்கள். பாகம் நிர்ணயிக்கப்பட்டவர்கள் எடுத்ததுபோக எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.33

பாடம் : 16

இரத்த பந்துக்கள்34

6747 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுக்காரர்களை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம். நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்துள் ளீர்களோ அவர்களுக்கும் அவர்களது பங்கை அளித்துவிடுங்கள் எனும் (4:33ஆவது) வசனத்தின் விளக்கமாவது:

முஹாஜிர்கள் மதீனாவுக்கு வந்த போது, அன்சாரி (ஒருவர் இறந்துவிட்டால் அவரு)க்கு அவருடைய உறவினர்கள் (-தவுல் அர்ஹாம்) அன்றி (அவருடைய) முஹாஜிர் (நண்பரே) வாரிசாகிவந்தார். நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் இடையே (இஸ்லாமிய) சகோதரத்துவத்தை ஏற்படுத்தியிருந்ததே இதற்குக் காரணம். (பின்னர்) இந்த வசனத்தின் முதல் தொடர் இறங்கிய போது, அது இரண்டாவது தொடரை மாற்றிவிட்டது.35

பாடம் : 17

சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்த பெண் (தன் பிள்ளைகளிடமிருந்து) வாரிசுரிமை பெறுவது.36

6748 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் தம் மனைவிக்கு எதிராக சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்தார். மேலும், அவர் அவளுடைய குழந்தையைத் தம்முடையதல்ல என்று சொன்னார். ஆகவே, அவ்விருவரையும் நபி (ஸல்) அவர்கள் பிரித்து வைத்தார்கள்; குழந்தையை மனைவியிடம் சேர்த்தார்கள்.37

பாடம் : 18

பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கி றாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். அவள் அடிமைப் பெண்ணாயிருப்பினும், சுதந்திரம் பெற்றவளாய் இருப்பினும் சரியே!38

6749 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உத்பா பின் அபீவக்காஸ் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். ஆகவே, அவனை நீ பிடித்து வைத்துக்கொள்' என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்கா வெற்றி ஆண்டின் போது சஅத் (ரலி) அவர்கள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். மேலும், அவர்கள், இவன் என் சகோதரரின் மகன். என் சகோதரர் இவனைக் கைப்பற்றும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியுள்ளார் என்று சொன்னார்கள். அப்போது ஸம்ஆவின் புதல்வர் அப்து (ரலி) அவர்கள் எழுந்து, இவன் என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுடைய மகன். அவரது படுக்கையில் (அதாவது அவரது அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்த போது) பிறந்தவன் என்று கூறினார்கள். ஆகவே, இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டு) சென்றனர். சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரருடைய மகன். அவர் இவனைக் கைப்பற்றிக்கொள்ளும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார் என்று கூற, ஸம்ஆவின் புதல்வர் அப்து (ரலி) அவர்கள், (இவன்) என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன். அவரது படுக்கையில் (அவரது அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்த போது) பிறந்தவன் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், அப்து பின் ஸம்ஆவே! இவன் உனக்கே உரியவன். ஏனெனில், (சட்டப்படி) தாய் யாருடைய அதிகாரத்தில் இருக்கின் றாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்பே உரியது என்று கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியும்) ஸம்ஆவின் புதல்வி(யுமான) சவ்தா (ரலி) அவர்களிடம், இவனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு மறைத்துக்கொள்! என்று சொன்னார்கள். சாயலில் அவன் உத்பாவைப் போன்று இருந்ததை நபியவர்கள் பார்த்ததே இதற்குக் காரணம். அதன் பிறகு அந்த மனிதர் இறக்கும்வரை அவரை சவ்தா (ரலி) அவர்கள் பார்க்கவில்லை.39

6750 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தாய் (பெண்) யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 19

(அடிமையாயிருந்த ஒருவருக்கு) வாரிசாகும் தகுதி அவரை விடுதலை செய்தவருக்கே உண்டு என்பது பற்றியும், கண்டெடுக்கப் பட்ட குழந்தைக்கு வாரிசு யார் என்பது பற்றியும்.40

கண்டெடுக்கப்பட்ட குழந்தை அடிமை யாகாது என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

6751 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமைப் பெண்ணாயிருந்த) பரீராவை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவளை விலைக்கு வாங்கிக்கொள். ஏனெனில், (அடிமையை) விடுதலை செய்தவருக்கே (அந்த அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு என்றார்கள். மேலும், பரீராவுக்கு ஓர் ஆடு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த ஆடு பரீராவுக்கு தர்மமாகும். (பரீராவிடமிருந்து) நமக்கு அது அன்பளிப்பாகும் என்று சொன்னார்கள்.41

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பரீராவின் கணவர் (முஃகீஸ்) சுதந்திரம் பெற்றவராக இருந்தார்.

ஹகம் அவர்களின் இந்த அறிவிப்பு முர்சல்' (அறிவிப்பாளர்தொடரில் நபித் தோழர் விடுபட்டது) ஆகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், முஃகீஸை நான் அடிமையாகவே கண்டேன் என்று சொன்னார்கள்.

6752 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அடிமையாயிருந்த ஒருவருக்கு) வாரிசாகும் தகுதி (அவரை) விடுதலை செய்தவருக்கே உண்டு.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 20

உன் மீது யாருக்கும் வாரிசுரிமை கிடையாது' என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்ட அடிமைக்கு (-சாயிபா), வாரிசு யார்?42

6753 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உன் மீது யாருக்கும் வாரிசுரிமை கிடையாது' என்ற நிபந்தனையின் பேரில் அடிமைகளை முஸ்லிம்கள் விடுதலை செய்வதில்லை. அறியாமைக் காலத்தவர்தாம் அவ்வாறு விடுதலை செய்துவந்தனர்.

6754 அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் (அடிமைப் பெண்ணாயிருந்த) பரீராவை விடுதலை செய்வதற்காக விலைக்கு வாங்க விரும்பினார்கள். பரீராவின் எசமானர்கள் பரீராவின் வாரிசுரிமை தங்களுக்கே இருக்க வேண்டும்' என நிபந்தனையிட்டார்கள். ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ் வின் தூதரே! விடுதலை செய்வதற்காக நான் பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். பரீராவின் எசமானர்களோ அவளுடைய வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனையிடுகின்றார்கள் என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பரீராவை விலைக்கு வாங்கி) விடுதலை செய்! ஏனெனில், (பொதுவாக) விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு அல்லது விலையைக் கொடுத்துவிடு என்று சொன்னார்கள். ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்கள் பரீராவை விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். (தொடர்ந்து கணவர் முஃகீஸுடன் சேர்ந்து வாழ, அல்லது திருமண உறவை முறித்துக்கொள்ள) பரீராவிற்கு விருப்ப உரிமை அளிக்கப்பட்டது. அப்போது பரீரா தனது விருப்பத்திற்கேற்ப (தனித்து) வாழ்வதையே தேர்ந்தெடுத்துக் கொண்டதுடன், இவ்வளவு இவ்வளவு (செல்வம்) எனக்குக் கொடுக்கப்பட்டாலும் நான் அவருடன் இருக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

அறிவிப்பாளர் அஸ்வத் (ரஹ்) அவர்கள் பரீராவின் கணவர் (முஃகீஸ்) சுதந்திர மனிதராக இருந்தார் என்று சொன்னார்கள்.

(அபூஅப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகின்றேன்:) அஸ்வத் (ரஹ்) அவர்களின் இந்த அறிவிப்பு முன்கதிஃ' (அறிவிப்பாளர் தொடரில் தொடர்பு அறுந்தது) ஆகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் முஃகீஸை நான் அடிமையாகவே கண்டேன் என்று கூறியதே சரியானதாகும்.

பாடம் : 21

விடுதலை செய்த எசமானர்களின் உறவிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் அடிமை பாவி ஆவான்.

6755 யஸீத் பின் ஷரீக் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள், நாங்கள் ஓதி வருகின்ற அல்லாஹ்வுடைய வேதத்தையும் (நபியவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற) இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறெதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை என்று கூறிவிட்டு, அந்த ஏட்டை வெளியே எடுத்தார்கள். அதில் காயங்களுக்கான தண்டனை குறித்தும் (உயிரீட்டிற்காகவும் ஸகாத்தாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயது குறித்தும் எழுதப்பட்டிருந்தன. மேலும், அதில் (பின்வருமாறு குறிப்பிடப்பட்டு) இருந்தது: மதீனா நகரம் அய்ர்' எனும் மலை யிலிருந்து ஸவ்ர்' மலை வரை புனிதமான தாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை உருவாக்குகின்றானோ, அல்லது (அவ்வாறு) புதிதாக ஒன்றை உருவாக்குகின்றவனுக்கு அடைக்கலம் அளிக்கின்றானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் புரிந்த கடமையான வழிபாடோ கூடுதலான வழிபாடோ எதுவுமே அவனிடமி ருந்து ஏற்கப்படாது. தன்னை விடுதலை செய்த எசமானர்களின் அனுமதியின்றி வேறு யாரையேனும் வாரிசுகளாக ஆக்கிக் கொள்ளும் அடிமை மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் புரிந்த கடமையான மற்றும் கூடுதலான வழிபாடுகள் எதுவும் அவனிடமிருந்து ஏற்கப் படாது. முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் கொடுத்தாலும் அது ஒன்றேயாகும். (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்.) அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள்கூட அடைக்கலம் தர முன்வரலாம். ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவரேனும் முறித்தால் அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் செய்த கடமையான வழிபாடு உபரியான வழிபாடு மற்றும் எதுவுமே மறுமை நாளில் ஏற்றுக் கொள்ளப்படாது.43

6756 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (முன்னாள் அடிமையின் சொத்திற்கு) வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அதை அன்பளிப்புச் செய்வதற்கும் தடை விதித்தார்கள்.44

பாடம் : 22

ஒருவரின் உதவியால் மற்றொருவர் இஸ்லாத்தை ஏற்றால் (இவருக்கு அவர் வாரிசாவாரா?)

(இஸ்லாத்தை ஏற்க உதவிய) அவருக்கு வாரிசுரிமை இல்லை என்றே ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கருதிவந்தார்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு என்றுதான் கூறினார்கள்.45

நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தமீமுத்தாரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: (இஸ்லாத்தை ஏற்க உதவியாக இருந்த) அவரே இவருடைய வாழ்விலும் சாவிலும் மனிதர்களிலேயே மிகவும் நெருக்கமான (உரிமையுடைய)வர் ஆவார்.

(புகாரியாகிய நான் கூறுகின்றேன்:) இது சரியான ஹதீஸா என்பதில் கருத்துவேறுபாடு காணப்படுகிறது.

6757 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (பரீரா எனும்) ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். பரீராவின் எசமானர்களோ பரீராவின் வாரிசுரிமை எங்களுக்கே வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் அவளை நாங்கள் உங்களுக்கு விற்கிறோம் என்று கூறினர். ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்கள் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அதற்காக) நீ விடுதலை செய்யாமல் இருந்துவிடாதே! விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது என்று சொன்னார்கள்.

6758 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். அப்போது பரீராவின் எசமானர்கள் அவளுடைய வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்தார்கள். நான் இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவளை நீ விடுதலை செய்! ஏனெனில், வெள்ளியைக் கொடுத்(து விலைக்கு வாங்கி விடுதலை செய்)தவருக்கே வாரிசுரிமை உரியது என்று சொன்னார்கள். ஆகவே, நான் பரீராவை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தேன். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, அவள் தன்னுடைய கணவரிடமி ருந்து (பிரிந்துவிட) விருப்ப உரிமையளித்தார்கள். அப்போது பரீரா, அவர் எனக்கு இவ்வளவு இவ்வளவு (செல்வம்) தந்தாலும் நான் அவருடன் சேர்ந்து வாழமாட்டேன் என்று கூறி தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

இதை அஸ்வத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.46

பாடம் : 23

(தம்மால் விடுதலையான அடிமைக்கு) வாரிசாகும் உரிமை பெண்களுக்கும் உண்டு.

6759 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமைப் பெண்ணாயிருந்த) பரீராவை விலைக்கு வாங்க ஆயிஷா (ரலி) அவர்கள் விரும்பினார்கள். அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பரீராவின் எசமானர்கள் வாரிசுரிமை தங்களுக்கே இருக்க வேண்டும் என்று நிபந்தனையிடுகின்றனர் என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவளை வாங்கி(விடுதலை செய்து)விடு! ஏனென்றால், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது என்று சொன்னார்கள்.

6760 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளியை(க் கிரயமாக)க் கொடுத்து (விலைக்கு வாங்கி, விடுதலை எனும்) பேருபகாரம் செய்தவருக்கே (அடிமைக்கு) வாரிசாகும் உரிமை உண்டு.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 24

ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப் பட்ட அடிமை அவர்களைச் சேர்ந்தவனே. ஒரு கூட்டத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவனே!

6761 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப் பட்ட அடிமை அவர்களில் உள்ளவனே' என்றோ, அல்லது இதைப் போன்றோ' அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.47

6762 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கூட்டத்தாரின் சகோதரி மகன், அவர்களில் உள்ளவன்' அல்லது அவர் களிலேயே உள்ளவன்' ஆவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.48

பாடம் : 25

(எதிரிகளால்) சிறை பிடிக்கப்பட்டவரின் வாரிசுரிமை.49

(பிரபல நீதிபதி) ஷுரைஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், எதிரிகளின் கையில் சிறைக் கைதியாய் உள்ளவருக்கு வாரிசுரிமை அளித்துவந்தார்கள். மேலும், (மற்றவர்களை விட) அவருக்குத்தான் அ(ந்தச் சொத்)து மிகவும் தேவை என்று கூறுவார்கள்.

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

சிறைக் கைதியின் மரண சாசனம், அடிமை விடுதலை, தனது செல்வத்தில் அவன் மேற்கொள்ளும் இதரப் பொருளாதார நடிவடிக்கைகள் ஆகியவற்றை, அவன் மதம் மாறாமல் இருக்கும்வரை அனுமதியுங்கள். ஏனெனில், அது அவனது செல்வம்; அதில் தான் விரும்பியவாறு அவன் செயல்படலாம்.

6763 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறந்துவிட்ட) ஒருவர் ஒரு செல்வத்தை விட்டுச்சென்றால் அது அவருடைய வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) தம் மனைவி மற்றும் மக்களை விட்டுச்சென்றால் அவர்களைப் பராமரிப்பது (மக்கள் தலைவரான) எமது பொறுப்பாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.50

பாடம் : 26

ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கோ, ஓர் இறைமறுப்பாளர் ஒரு முஸ்லிமுக்கோ வாரிசாக மாட்டார்.51

(முஸ்லிமான தந்தை இறந்த போது) இறைமறுப்பாளராக இருந்த ஒருவர் சொத்து பங்கிடுவதற்கு முன்பு முஸ்லிமானாலும் அவருக்கு வாரிசுரிமை கிடையாது.52

6764 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார். ஓர் இறைமறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாக மாட்டார்.

இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.53

பாடம் : 27

கிறிஸ்தவ அடிமை மற்றும் பின்விடுதலை அளிக்கப்பட்ட (முகாதப்) கிறிஸ்தவ அடிமை ஆகியோருக்கு வாரிசாகும் உரிமை யாருக்கு உண்டு என்பது பற்றியும், (தமக்குப் பிறந்த குழந்தையை) தம்முடையதல்ல' என்று மறுப்பவருக்குரிய பாவம் பற்றியும்.54

பாடம் : 28

(ஒருவர் மற்றொருவரை) சகோதரன் என்றோ, சகோதரன் மகன் என்றோ வாதிடுவது.

6765 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர் களும் அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களும் ஒரு சிறுவன் (யாருடைய மகன் என்பது) தொடர்பாகச் சர்ச்சையிட்டுக் கொண்டனர். சஅத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரர் உத்பா பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் மகன். இவன் தம்முடைய மகன் (ஆகவே இவனைப்

பிடித்து வர வேண்டும்) என்று அவர் என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார். இவனுடைய சாயலை (நீங்களே) பாருங்கள்! என்று கூறினார்கள்.

அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரன். என் தந்தையின் படுக்கையில் அவருடைய அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன் என்று சொன்னார்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுவனின் சாயலைப் பார்த்தார்கள். உத்பாவின் சாயல் வெளிப்படையாக அமைந்திருக்கக் கண்டார்கள்.

இருப்பினும், அப்து பின் ஸம்ஆவே! இவன் உனக்கே உரியவன். ஏனெனில், (சட்டப்படி) தாய் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கின்றாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்பே உரியது என்று கூறிவிட்டு(த் தம் துணைவியாரிடம்), சவ்தா பின்த் ஸம்ஆவே! இவனிடமிருந்து உன்னைத் திரையிட்டு மறைத்துக்கொள்! என்று சொன்னார்கள்.

அதற்குப் பிறகு அந்த மனிதர் சவ்தா (ரலி) அவர்களை (நேரடியாகப்) பார்க்க வில்லை.55

பாடம் : 29

வேறொருவரை தன் தந்தை என வாதிடு கின்றவன்.56

6766 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யார் தம் தந்தை அல்லாத ஒருவரை -அவர் தம் தந்தை அல்ல என்று தெரிந்து கொண்டே- தந்தை என்று வாதிடுகிறாரோ அவர் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்ட தாகிவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்.

6767 (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்) உபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை நான் அபூபக்ரா (ரலி) அவர்களிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து என் காதுகள் செவியேற்றன; என் இதயம் மனனமிட்டுக் கொண்டது என்று சொன்னார்கள்.

6768 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி) விடுகின்றாரோ அவர் நன்றி கொன்ற வராவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.57

பாடம் : 30

ஒரு பெண் தன் மகன் என (ஒருவனை) வாதிட்டால்...

6769 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ள தாவூத் (அலை) அவர்களின் காலத்தில்ன இரண்டு பெண்கள் வாழ்ந்தார்கள். அவர் களுடன் அவர்களுடைய புதல்வர்களும் இருந்தனர். (ஒருநாள்) ஓநாய் ஒன்று அவ்விருவரின் புதல்வர்களில் ஒருவனைக் கொண்டு சென்றுவிட்டது. அவர்களில் ஒருத்தி தன் தோழியிடம், உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது என்று கூற, அதற்கு மற்றவள், உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது என்று சொன்னாள். ஆகவே, இருவரும் தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றார்கள். தாவூத் (அலை) அவர்கள் அவ்விரு பெண்களில் மூத்தவளுக்குச் சாதமாகத் தீர்ப்பளித்தார்கள். (இந்தத் தீர்ப்பின் மீது கருத்து வேறுபாடு கொண்ட) அப்பெண்கள் இருவரும் தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்க) புறப்பட்டுச் சென்றார்கள். அன்னாரிடம் விஷயத்தைத் தெரிவித்தார்கள். அப்போது சுலைமான் (அலை) அவர்கள், என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்கு மிடையே (மீதமுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாக) பிளந்து (பங்கிட்டு)விடுகின்றேன் என்று கூறினார்கள். உடனே இளையவள் அவ்வாறு செய்துவிடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன் என்று (பதறிப்போய்) கூறினாள். ஆகவே, சுலைமான் (அலை) அவர்கள் அந்தக் குழந்தை இளையவளுக்கே உரியது' என்று தீர்ப்பளித்தார்கள்.

இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அன்றுதான் (கத்திக்கு) சிக்கீன்' எனும் சொல்லை (நபியவர்களின் வாயிலாக)ச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) முத்யா' என்னும் சொல்லைத்தான் நாங்கள் பயன்படுத்திவந்தோம் என்று கூறினார்கள்.58

பாடம் : 31

அங்க அடையாளங்களைக் கொண்டு தந்தை - பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்.

6770 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் நெற்றிக் கோடுகள் மின்னும் வண்ணம் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்து, உனக்குத் தெரியுமா? சற்றுமுன் (அங்க அடையாளங்களைக் கொண்டு தந்தை- பிள்ளையைக் கண்டறியும்) முஜஸ்ஸிஸ், (என் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸாவையும் (அவருடைய புதல்வர்) உசாமா பின் ஸைதையும் (அவர்கள் படுத்திருந்த போது அவர்களின் பாதங்களைப்) பார்த்துவிட்டு இந்தப் பாதங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானது' என்று சொன்னார் என்றார்கள்.59

6771 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்து, ஆயிஷா! முஜஸ்ஸிஸ் அல்முத்-ஜீ என்னிடம் வந்தார். அப்போது உசாமாவும் (அவருடைய தந்தை) ஸைதும் ஒரு துணியைப் போர்த்தி(க் கொண்டு படுத்து) இருப்பதைக் கண்டார். அவர்களிருவரும் தமது தலையை மூடியிருந்தனர்; (ஆனால்,) அவர்களின் பாதங்கள் வெளியே தெரிந்தன. அப்போது முஜஸ்ஸிஸ் இந்தப் பாதங்கள் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானவை' என்று சொன்னார் என்றார்கள்.60

November 7, 2009, 8:59 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top