69-(குடும்பச்) செலவுகள்

69-(குடும்பச்) செலவுகள்.1

பாடம் : 1

குடும்பத்தாருக்குச் செலவிடுவதன் சிறப்பு.

அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே!) இவர்கள் உங்களிடம், நாங்கள் எதை (தர்மமாக)ச் செலவிடவேண்டும்? என்று கேட்கிறார்கள். (தேவைக்குப் போக) மீதமுள்ளதை என்று நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் இம்மை மறுமை குறித்துச் சிந்தித்து உணர வேண்டும் என்பதற்காக அல்லாஹ் தன் வசனங்களை இவ்வாறு விளக்கிக் காட்டு கின்றான். (2:219)

ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அஃப்வ்' எனும் சொல், (குடும்பச் செலவுகள் போக) மீதத்தைக் குறிக்கும். 2

5351 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாக மாறும்.

இதை அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் ளஅப்துல்லாஹ் பின் யஸீத், அல்லது ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள்ன கூறுகின்றார்:

நான் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடம், இதை நீங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கின்றீர்களா? (அல்லது நீங்களாக இதைக் கூறுகின்றீர்களா?) என்று கேட்டதற்கு, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்தே (இதை நான் அறிவிக்கிறேன்) என்று பதிலளித்தார்கள். 3

5352 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன் என்று கூறினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 4

 

5353 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கணவனை இழந்த) கைம்பெண்ணுக் காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவர் ஆவார்' அல்லது இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவர் ஆவார்'.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5354 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மக்காவில் நோய்வாய்ப்பட்டிருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரித்துவந்தார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் செல்வம் உள்ளது. எனது செல்வம் முழுவதையும் (தர்மத்திற்காக)

நான் மரணசாசனம் செய்துவிடட்டுமா? என்று கேட்டேன். அவர்கள், வேண்டாம் என்று பதிலளித்தார்கள். நான் பாதியை (மரணசாசனம் செய்துவிடட்டுமா)? என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள்.

நான், (அப்படியென்றால்,) மூன்றிலொரு பங்கை (நான் மரணசாசனம் செய்யட்டுமா)? என்று கேட்டேன்.

அதற்கவர்கள் மூன்றிலொரு பங்கா! மூன்றிலொரு பங்கு கூட அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட அவர்களைத் தன்னிறைவு கொண்டவர் களாக விட்டுச்செல்வதே சிறந்ததாகும். நீங்கள் (அவர்களுக்காக) எதைச் செலவு செய்தாலும் அது நீங்கள் செய்த தர்மமே. எந்த அளவிற் கென்றால், நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகின்ற ஒரு கவளம் உணவும் கூட (தர்மமாகவே உங்களுக்கு எழுதப்படும்). அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை அளிக்கக்கூடும். அப்போது மக்கள் சிலர் உங்களால் பயன் அடைந்திடவும், வேறு சிலர் உங்களால் இழப்புக்குள்ளாகவும் கூடும் என்று சொன்னார்கள்.5

பாடம் : 2

மனைவி, மக்கள், நெருங்கிய உறவினர் ஆகியோருக்குச் செலவு செய்வது கடமையாகும்.6

5355 அபூஸா-ஹ் தக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒருவர் தமக்குத் தேவையானது போக மீதத்தை) தன்னிறை வான நிலையில் செய்யும் தர்மமே சிறந்த தர்மமாகும். மேலேயுள்ள (கொடுக்கும்) கைதான், தாழ்ந்துள்ள (வாங்கும்) கையை விடச் சிறந்ததாகும். உன் வீட்டாரிடமிருந்தே (உன் தர்மத்தை) நீ தொடங்கு! என்று சென்னார்கள்7 என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிவிட்டு, (கணவரிடம்) மனைவி, எனக்கு உணவளி, அல்லது என்னை மண விலக்குச் செய்துவிடு என்று கூறுகிறாள். அடிமை (தன் எசமானிடம்), எனக்கு உணவளி. என்னிடம் நீ வேலை வாங்கிக் கொள்! என்று கூறுகின்றான். மகன் (தன் தந்தையிடம்), எனக்கு உணவளியுங்கள். (உங்களை விட்டால் வேறு) யார்தான் எனக்குப் பொறுப்பு? என்று கூறுகின்றான் எனக் கூறினார்கள். மக்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களே! இதையுமா நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமி ருந்து செவியுற்றீர்கள்? என்று கேட்டனர். அதற்கு அவர்கள், இல்லை; இது அபூ ஹுரைராவின் (எனது) கூற்றாகும் என்று கூறினார்கள்.

5356 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன்னிறைவு பெற்ற நிலையில் (தேவை போக எஞ்சியதை) வழங்குவதே சிறந்த தர்மம் ஆகும். உன் வீட்டாரிடமிருந்தே (உனது தர்மத்தைத்) தொடங்கு.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.8

 

 

பாடம் : 3

ஒருவர் தம் குடும்பத்தாருக்கு ஓராண்டுக்குத் தேவையான உணவைச் சேமித்து வைப்பது (செல்லும் என்பது)ம், தம்மைச் சார்ந்தோருக்கு அவர் செலவிட வேண்டிய முறையும்.

5357 மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் என்னிடம், தம் குடும்பத்தாருக்காக ஓர் ஆண்டுக்கான, அல்லது ஆண்டின் ஒரு பகுதிக்கான உணவை (முன்கூட்டியே) சேமித்து வைப்பவரைப் பற்றி நீங்கள் (ஏதேனும் ஹதீஸ்) கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? என்று கேட்டார்கள். நான் (அப்படியொரு ஹதீஸ்) எனக்கு நினைவில்லை என்று சொன்னேன். பிறகு, உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஒரு ஹதீஸ் என் நினைவில் வந்தது: நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்சந் தோட்டத்தைன் விற்றுத் தம் குடும்பத்தாருக்கு, அவர்களுடைய ஓர் ஆண்டுக்கான உணவை (முன்கூட்டியே) சேமித்து வைப்பவர்களாக இருந்தார்கள்.9

5358 முஹம்மது பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மா-க் பின் அவ்ஸ் (ரலி) அவர்களிடம் சென்று (ஃபதக்' ன் சொத்து தொடர்பான பிரச்சினை குறித்துக்) கேட்டேன். அவர்கள் கூறினார்கள்:

நான் (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் (அழைத்ததன் பேரில் அவர்கள்) இடம் சென்றேன். (சிறிது நேரம் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.) அப்போது உமர் (ரலி) அவர்களின் மெய்க்காவலர் யர்ஃபஉ' என்பார் அவர்களிடம் வந்து, உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் பின் அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் (தங்களைச் சந்திக்க) அனுமதி கேட்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு அனுமதியளிக்கிறீர் களா? என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள், சரி' என்று கூறி, அவர்களுக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதியளித்தார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து, சலாம் (முகமன்) சொல்லி அமர்ந்தார்கள். பிறகு சற்று நேரம் கழித்து யர்ஃபஉ (வந்து) உமர் (ரலி) அவர்களிடம், அலீ (ரலி) அவர் களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் சந்திக்கத் தங்களுக்கு விருப்பமுண்டா? என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ஆம் என்று அவ்விருவருக்கும் (தம்மைச் சந்திப்பதற்கு) அனுமதியளிக்க, அவ்விருவரும் உள்ளே நுழைந்தனர். இருவரும் சலாம் சொல்லி அமர்ந்தனர்.

அப்பாஸ் (ரலி) அவர்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளி யுங்கள் என்று சொன்னார்கள்.

அப்போது உஸ்மான் (ரலி) அவர்களும் அவர்களுடைய நண்பர்களும் அடங்கிய குழுவினர், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (இந்த) இருவரிடையே தீர்ப்பளித்து, ஒருவரது பிடியிலிருந்து மற்றவரை விடுவித்து விடுங்கள் என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், பொறுங்கள். எந்த அல்லாஹ் வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலை பெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்களிடம் கேட்கின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாக மாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே!' என்று இறைத்தூதராகிய தம்மைக் குறித்துச் சொன்னதை நீங்கள் அறிவீர்களா? என்று (அக்குழுவினரிடம்) கேட்டார்கள். அந்தக் குழுவினர், அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் சொல்லத்தான் செய்தார்கள் என்று பதிலளித்தார்கள்.

பிறகு உமர் (ரலி) அவர்கள் (வாதியும் -பிரதிவாதியுமான) அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, அல்லாஹ்வின்பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள்.

அவ்விருவரும், (ஆம்) அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், அவ்வாறெனில், உங்களிடம் நான் இந்தப் பிரச்சினைக் குறித்துப் பேசுகின்றேன். (போரிடாமல் கிடைத்த) இந்த (ஃபய்உ) செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியி ருந்தான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதை அளிக்கவில்லை (என்று கூறிவிட்டு,) அல்லாஹ் எந்தச் செல்வத்தை (எதிரிகளான) அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பி அளித்தானோ அந்தச் செல்வம், உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப் போர் புரிவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்ததன்று. மாறாக, அல்லாஹ், தான் நாடுகின்றவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான் எனும் (59:6ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

தொடர்ந்து, எனவே இது இறைத் தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டுவிட்டு அதை நபி (ஸல்) அவர்கள் தமக்காகச் சேகரித்துக்கொள்ளவில்லை. அதை உங்களைவிடப் பெரிதாகக் கருதவு மில்லை. அதை உங்களுக்கு வழங்கவே செய்தார்கள்; உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில் (இறைத்தூதர் நிதியான) அதிலிருந்து இந்தச் செல்வம் மட்டுமே மீதமாயிற்று. அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் வருடச் செலவை அவர்களுக்கு வழங்கி வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதமுள்ளதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார் களோ அவற்றில் (சேமநல நிதியாக வைத்துச்) செலவிட்டு வந்தார்கள். இவ்வாறே அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள். ஆகவே, அல்லாஹ் வின் பொருட்டால் உங்களை நான் கேட்கின்றேன்: இதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள்.

அதற்கு (அங்கிருந்த குழுவினரான) அவர்கள், ஆம் (அறிவோம்) என்று பதிலளித்தார்கள். (பிறகு) அலீ (ரலி) அவர் களிடமும் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும், உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன்: நீங்கள் இதை அறிவீர்களா? என்று கேட்க, அவர்களிருவரும் ஆம் (அறிவோம்) என்று பதிலளித்தார்கள்.

ளதொடர்ந்து உமர் (ரலி) அவர்கள்,ன பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக் கொண்டான். அப்போது (ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன் என்று கூறி அ(ந்தச் செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்துக் கொண்டார்கள். அது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள் (என்று கூறிவிட்டு,) அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி உமர் (ரலி) அவர்கள், அப்போதும் நீங்கள் இருவரும் அபூபக்ர் (ரலி) அவர்கள் இப்படி இப்படி(ச் சொல்கிறார்கள்; இறைத்தூதர் நிதியான எங்களுடைய சொத்தைத் தர மறுக்கிறார்கள்) என்று சொன்னீர்கள்! (ஆனால்,) அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த விஷயத்தில் உண்மையே சொன்னார்கள்; நல்ல விதமாக நடந்து கொண்டார்கள்; நேர்வழி நடந்து வாய்மை யையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக் கொண்டான்.

அப்போது (ஆட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட) நான் அல்லாஹ்வின் தூதரு(டைய ஆட்சி)க்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் பிரதிநிதியாவேன் என்று

கூறி அ(ந்தச் செல்வத்)தை எனது ஆட்சிக் காலத்தில் இரண்டு வருடங்களுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களும் (அவர்களுக்குப் பிறகு) அபூபக்ர் (ரலி) அவர்களும் நடந்து கொண்ட முறைப்படி நானும் செயல்பட்டு வந்தேன்.

பிறகு நீங்கள் இருவரும் (இச்செல்வம் தொடர்பாகப் பேச) என்னிடம் வந்தீர்கள். உங்களிருவரின் பேச்சும் ஒன்றாகவே இருந்தது; இருவரின் நிலையும் ஒன்று பட்டதாகவே இருந்தது.

(அப்பாஸே!) நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரர் புதல்வரிடமிருந்து (-நபியிடமி ருந்து) உங்களுக்குச் சேர வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி வந்தீர்கள்.

(இதோ!) இவரும் (அலீயும்) என்னிடம் தம் மனைவிக்கு அவருடைய தந்தை (ஆகிய நபி)யிடமிருந்து கிடைக்க வேண்டிய பங்கைக் கேட்டபடி வந்தார். அப்போது (உங்கள் இருவரிடமும்) நான் நீங்கள் இருவரும் விரும்பினால், அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதி மொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார் களோ, அபூபக்ர் (ரலி) அவர்கள் அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டார்களோ, நான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன்படியே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும்' எனும் நிபந்தனையின் அடிப்படை யில் உங்கள் இருவரிடமும் இச்செல்வத்தை ஒப்படைத்துவிடுகிறேன். அவ்வாறில்லை யாயின், இது தொடர்பாக என்னிடம் நீங்கள் இருவரும் பேச வேண்டாம் என்று சொன்னேன். அதற்கு நீங்கள் இருவரும் அ(ந்)த (நிபந்தனையி)ன் அடிப்படையில் அதை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று சொன்னீர்கள். அதன்படியே அ(ச் செல்வத்)தை உங்கள் இருவரிடமும் நான் ஒப்படைத்தேன் என்று சொன்னார்கள்.

பிறகு (அங்கிருந்த குழுவினரிடம்), அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் நான் கேட்கின்றேன்: நான் அ(ச்செல்வத்)தை இவர்கள் இருவரிடமும் அ(ந்)த (நிபந்தனை யி)ன்படியே ஒப்படைத்தேனா? (இல்லையா?) என்று கேட்க, அதற்கு அக்குழுவினர் ஆம் என்றார்கள்.

அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி உமர் (ரலி) அவர்கள், நான் உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன்: நான் அ(ச் செல்வத்)தை உங்கள் இருவரிடமும் அ(ந்)த (நிபந்தனையி)ன்படியே ஒப்படைத்தேனா? (இல்லையா?) என்று கேட்க, அவ்விருவரும் ஆம் என்று பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடம் கோருகின்றீர்களா? எவனது கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்த தீர்ப்பையும் மறுமை நாள் நிகழும்வரை அளிக்கமாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியாவிட்டால், என்னிடம் அதை ஒப்படைத்துவிடுங்கள். அதை உங்களுக்கு பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன் என்று சொன்னார்கள்.10

பாடம் : 4

கணவன் (ஊரில்) இல்லாத போது மனைவி மற்றும் குழந்தைகளின் (பராமரிப்புச்) செலவு.

5359 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:  

(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் ளநபி (ஸல்) அவர்களிடம்ன வந்து, அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒரு மனிதர்; அவருக்குரிய(செல்வத்)திலிருந்து எங்கள் பின்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என் மீது குற்றமாகுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் நியாயமன அளவு தவிர (அவ்வாறு செய்ய) வேண்டாம் என்று பதிலளித்தார்கள்.

5360 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண், தன் கணவனின் சம்பாத்தியத் திலிருந்து அவனது உத்தரவின்றி (அற வழியில்) செலவிட்டால், அதன் பிரதி பலனில் பாதி அவனுக்கும் கிடைக்கும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.11

பாடம் : 5

அல்லாஹ் கூறுகின்றான்:

(தம் குழந்தைகளுக்குப்) பால்குடியை முழுமையாக்க விரும்புகிற(கண)வர்களுக் காகத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிறைவான இரண்டு ஆண்டுகள் அமுதூட்டு வார்கள். அமுதூட்டும் அவர்களுக்கு உணவும் உடையும் முறைப்படி வழங்குவது குழந்தைக்குரிய தகப்பன் மீது கடமையாகும். எவருக்கும் அவரது சக்திக்கேற்பவே தவிர கட்டளைகள் பிறப்பிக்கப்பட மாட்டா. ஒரு தாய் தன் குழந்தைக்காகவோ, ஒரு தந்தை தன் குழந்தைக்காகவோ துன்புறுத்தப்பட  மாட்டார்கள். (தந்தை இறந்துவிட்டால்) அதைப் போன்ற கடமை வாரிசுகள் மீதும் உண்டு. (தாய், தந்தை) இருவரும் ஆலோசனை கலந்து திருப்தி அடைந்து (ஈராண்டுகளுக்கு முன்பே) பால்குடிப் பழக்கத்தை நிறுத்திவிட விரும்பினால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:233)12

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:

அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரையில் முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடனேயே கழிகின்றன). (46:15)13

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:

(குழந்தைக்குப் பாலூட்டுவதில் தம்பதிய ரான) உங்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டால், தந்தையின் சார்பில் வேறொரு பெண் பாலூட்டுவாள். வசதியுடையவர் தம் வசதிக்கேற்பச் செலவு செய்யட்டும்! யாருக்கு அளவான வசதி அளிக்கப்பட்டுள்ளதோ அவர் தமக்கு இறைவன் வழங்கியதிலிருந்து செலவழிக்கட்டும்! அல்லாஹ், தான் வழங்கிய தற்கேற்பவே தவிர எவருக்கும் கட்டளைகள் பிறப்பிப்பதில்லை. கஷ்டத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் வழங்குவான். (65:6, 7)14

ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (2:233ஆவது வசனத்தின் விளக்கவுரையில்) கூறினார்கள்:

எந்தத் தாயும் தன் குழந்தை மூலம் (குழந்தையின் தந்தைக்கு) இடையூறு அளிப்பதை அல்லாஹ் தடை செய்துள்ளான். அது எவ்வாறெனில், தன்னால் குழந்தைக்குப் பாலூட்ட முடியாது எனத் தாய் மறுக்கிறாள். உண்மையில், தாய்ப்பால்தான் குழந்தைக்குச் சிறந்த உணவாகும். மற்றவர்களைவிடத் தாயே தன் குழந்தை மீது அதிகப் பரிவும் பாசமும் கொண்டவள் ஆவாள். எனவே, (குழந்தையின்) தந்தை, தன் மீது இறைவன் விதித்துள்ள கடமையை (ஜீவனாம்சத்தை) அவளுக்கு நிறைவேற்றிய பின்பும் அவள் (பாலூட்ட) மறுக்கக் கூடாது. (இதைப் போன்றே,) குழந்தையின் தந்தை தன் குழந்தை மூலம் அதன் தாய்க்கு இடையூறு அளிக்கலாகாது. (உதாரணமாக) தாய் பாலூட்ட முன்வந்தும், அவளுக்கு இடரளிப்பதற்காக மற்றொரு பெண்ணைப் பாலூட்டுமாறு கூறி, தாயைத் தடுப்பது கூடாது. ஆனால், தாயும் தந்தையும் மனமொப்பி வேறொரு பெண்ணைப் பாலூட்ட ஏற்பாடு செய்தால் குற்றமாகாது. மேலும், இருவரின் திருப்தியோடும் ஆலோசனையின் பேரிலும் பால்குடியை நிறுத்த இருவரும் விரும்பினால் அதுவும் குற்றமாகாது.

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபிஸால்' எனும் சொல்லுக்குப் பால்குடியை நிறுத்துதல்' என்று பொருள்.

பாடம் : 6

கணவனின் வீட்டு வேலைகளை மனைவி செய்வது.

5361 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஃபாத்திமா நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்த போது, ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே, நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அவர்கள், நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள் என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில்பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்). அப்போது அவர்கள், நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும் போது' அல்லது உங்கள் விரிப்புக்குச் செல்லும் போது' முப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும் என்று சொன்னார்கள்.15

பாடம் : 7

மனைவியின் பணியாள்

5362 அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஃபாத்திமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பணியாள் ஒருவரைக் கேட்டுச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அதைவிடச் சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கட்டுமா? நீ உறங்கும் போது முப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் மிகத் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ்' (அல்லாஹுவுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்! என்று கூறினார்கள்.16

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயையனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த மூன்றில் (ஏதோ) ஒன்று முப்பத்து நான்கு (முறை ஓத வேண்டியது) ஆகும்.

ளதொடர்ந்து அலீ (ரலி) அவர்கள்ன இவற்றை ளநபி (ஸல்) அவர்களிடம் கேட்டன பின்னால் (ஒரு நாளும் ஓதாமல்) நான் விட்ட தில்லை என்று கூறினார்கள். அவர்களிடம், ஸிஃப்பீன்' போரின் இரவில் கூடவா விட்ட தில்லை? என்று கேட்கப்பட்டது. அவர்கள், ஆம்; ஸிஃப்பீன் போரின் இரவில் கூடத் தான் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 8

ஆண் தன் வீட்டுப் பணிகளைச் செய்வது.

5363 அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்துவந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத் தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள் என்று பதிலளித்தார்கள்.17

பாடம் : 9

கணவன் செலவுக்கு(ப் பணம்) தராவிட்டால் அவனுக்குத் தெரியாமல் தனக்கும் தன் குழந்தைக்கும் வேண்டியதை நியாயமான அளவில் எடுத்துக்கொள்ள மனைவிக்கு உரிமை உண்டு.

5364 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான(பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண் டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தர மாட்டார்) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள்! என்று சொன்னார்கள்.18

பாடம் : 10

கணவனின் செல்வத்தையும் (அவன் வழங்கும்) செலவுத் தொகையையும் பாதுகாப்பது மனைவியின் பொறுப்பாகும்.

5365 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒட்டகத்தில் பயணம் செய்த (அரபுப்) பெண்மணிகளிலேயே சிறந்தவர்கள் குறைஷிப் பெண்களேயாவர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அறிவிப்பாளர்களில் இப்னு தாவூஸ், அபுஸ்ஸினாத் ஆகிய இருவரில்) ஒருவரது அறிவிப்பில் காணப்படுவதாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஒட்டகத்தில் பயணம் செய்த அரபுப் பெண்களிலேயே சிறந்தவர்கள்) நல்ல குறைஷிக் குலப் பெண்களாவர். அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள் ஆவர்.19

முஆவியா (ரலி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரிடமிருந்தும் இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் : 11

நியாயமான வகையில் மனைவிக்கு ஆடை வழங்குவது (கணவனின் கடமையாகும்).

5366 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கோடு போட்ட பட்டு அங்கி ஒன்றை (அன்பளிப்பாக) வழங்கினார்கள். ஆகவே, அதை நான் அணிந்து கொண்டேன். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை நான் பார்த்தேன். உடனே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண் களிடையே பங்கிட்டுவிட்டேன்.20

 

 

பாடம் : 12

கணவனின் குழந்தை(யைப் பராமரிக்கும்) விஷயத்தில் அவனுக்கு மனைவி ஒத்துழைப்பது (விரும்பத்தக்கதாகும்).

5367 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்து விட்டார்கள். (இறக்கும் போது) ஏழு பெண் குழந்தைகளை' அல்லது ஒன்பது பெண் குழந்தைகளை' விட்டுச்சென்றார்கள். ஆகவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மண முடித்துக் கொண்டேன். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ஜாபிரே! நீ மணமுடித்துக் கொண்டாயா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்று சொன்னேன். அவர்கள், கன்னிப் பெண்ணையா? கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)? என்று கேட்டார்கள். நான், இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத் தான்(மணந்தேன்) என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்ட லாமே! என்று சொன்னார்கள்.

அதற்கு நான் நபி (ஸல்) அவர்களிடம், (என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், பல பெண் மக்களை விட்டுவிட்டு இறந்து விட்டார்கள். (வயதில்) அந்தப் பெண் மக்களைப் போன்ற ஒரு (இளம் வயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை. ஆகவே, நான் அவர்களைப் பராமரித்துச் சீராட்டி வளர்க்கும் (அனுபவமுள்ள) ஒரு பெண்ணை மணந்து கொண்டேன் என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு சுபிட்சத்தை அளிப்பானாக' அல்லது நன்மையைப் பொழிவானாக' என்று சொன்னார்கள்.21

பாடம் : 13

ஏழை (தமக்குக் கிடைக்கும் பொருளைத்) தம் வீட்டாருக்கே செலவிடுதல்.

5368 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, நான் அழிந்துவிட்டேன் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் ஏன் (என்ன நடந்தது)? என்று கேட்டார்கள். அவர், நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவி யுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன் என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஓர் அடிமையை விடுதலை செய்து விடுவீராக என்று சொன்னார்கள். அதற்கு அவர் என்னிடம் அடிமை இல்லையே! என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால், தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பீராக என்று சொன்னார்கள். அதற்கு அவர், அது என்னால் இயலாது என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால், அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக என்று சொன்னார்கள். அம்மனிதர், என்னிடம் வசதி இல்லையே! என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் உள்ள ஒரு கூடை (அரக்) கொண்டு வரப்பட்டது. உடனே அவர்கள், கேள்வி கேட்டவர் எங்கே? என்று கேட்டார்கள். அவர், இதோ! நான்தான் அது என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், இதை தர்மம் செய்யுங்கள் என்று சொன்னார்கள். அதற்கு அவர் எங்களைவிட அதிகத் தேவையுள்ள ஒருவருக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்? அல்லாஹ்வின் தூதரே! உங்களை சத்தியத்துடன் அனுப்பிய (இறை)வன் மீது ஆணையாக! மதீனாவின் இரு மலைகளுக்கிடையே எங்களைவிட அதிகத் தேவையுள்ள குடும்பத்தார் எவரும் இல்லை என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, அப்படியென் றால் நீங்கள்தாம் (அதற்கு உரியவர்கள்) என்று சொன்னார்கள்.22

பாடம் : 14

(குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அதைப் பராமரிக்கும்) அதைப் போன்ற கடமை வாரிசுகள் மீதும் உண்டு எனும் (2:233ஆவது) வசனத் தொடரும், குழந்தைக்குப் பாலூட்டும் பொறுப்பில் தாய்க்குப் பங்கு உண்டா? என்பதும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

மேலும், அல்லாஹ் இரு மனிதர்களை ஓர் உதாரணமாகக் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீதும் சக்தி அற்றவன். தன் எசமானுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர  மாட்டான். மற்றவனோ தானும் நேர் வழியில் இருந்து கொண்டு, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான். இவ்விருவரும் சமம் ஆவார்களா? (16:76)23

5369 ளநபி (ஸல்) அவர்களின் துணைவியா ரானன உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

ளநபி (ஸல்) அவர்களிடம்ன நான், அல்லாஹ்வின் தூதரே! என் (முதல் கணவரான) அபூசலமாவின் பிள்ளைகளுக்குச் செலவழிப்பதால் எனக்கு நன்மை உண்டா? நான் அவர்களை இன்னின்னவாறு (தேவை உள்ளவர்களாக) விட்டுவிட விரும்ப வில்லை. அவர்களும் என் பிள்ளைகளே! என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ஆம்! அவர்களுக்காக நீ செலவிட்டால் அ)தற்கான நன்மை உனக்கு உண்டு என்று பதிலளித்தார்கள்.24

5370 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ளஅபூசுஃப்யான் (ரலி) அவர்களின் துணைவியாரானன ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் ளநபி (ஸல்) அவர்களிடம் வந்துன அல்லாஹ்வின் தூதரே! அபூசுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான(பணத்)தை அவருடைய செல்வத்திலிருந்து நான் எடுத்துக்கொள்வதால் என்மீது குற்றம் உண்டாகுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் நியாயமான அளவிற்கு நீ எடுத்துக்கொள் என்று சொன்னார்கள்.25

பாடம் : 15

எவர் ஒரு (கடன்) சுமையை, அல்லது

ந-ந்தவர்க(ளான வாரிசுக)ளை விட்டுச் செல்கிறாரோ அவர்களின் பொறுப்பு என்னுடையது என நபி (ஸல்) அவர்கள் கூறியது.26

5371 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கடன்பட்ட நிலையில் இறந்துவிட்ட ஒருவர் (உடைய ஜனாஸா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப் பட்டால், இவர் தமது கடனை அடைக்கப் பொருள் எதையும் விட்டுச் சென்றுள்ளாரா? என்று கேட்பது வழக்கம். அவர் (தமது கடனை அடைக்கத்) தேவையானதை விட்டுச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டால், (அவருக்கு ஜனாஸா) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், முஸ்லிம்களிடம், உங்கள் தோழருக்காகத் தொழுங்கள் என்று கூறிவிடுவார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்த போது அவர்கள், நான் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட நெருக்கமானவன் ஆவேன். ஆகவே, இறை நம்பிக்கையாளர்களில் எவர் (தம் மீது) கடனை விட்டுவிட்டு இறந்துவிடுகின்றாரோ அவரது கடனை அடைப்பது என் பொறுப் பாகும். எவர் ஒரு செல்வத்தை விட்டுச் செல்கிறாரோ அது அவருடைய வாரிசுக ளுக்கு உரியதாகும் என்று சொன்னார்கள்.27

பாடம் : 16

அடிமைப் பெண்களும் அவர்கள் அல்லாத (சுதந்திரமான)வர்களும் செவி-த் தாயாக இருப்பது.

5372 நபி (ஸல்) அவர்களின் துணைவியா ரான உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரியான அபூசுஃப்யானின் புதல்வியைத் தாங்கள் மணந்துகொள் ளுங்கள் என்று ள நபி (ஸல்) அவர்களிடம்ன சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், இதை நீயே விரும்புகிறாயா? என்று கேட்டார்கள். நான், ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன் என்று சொன்னேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் அ(வளை மணப்ப)து எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று என்றார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அபூ சலமாவின் மகள் துர்ரா'வை மணந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோமே! என்று சொன்னேன். அதற்கு அவர்கள், (அதாவது என் துணைவியார்) உம்மு சலமாவுக்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா? என்று கேட்க, நான் ஆம் என்று சொன்னேன். அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அவள் (-உம்முசலமாவின் மகள்-) எனது மடியில் வளர்ப்பு மகளாக (இருந்துவருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடி சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூ சலமாவிற்கும் ஸுவைபா' (எனும் அடிமைப் பெண்) பாலூட்டியிருக்கிறார். ஆகவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரி களையோ (மணந்துகொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள்! என்று கூறினார்கள்.

( இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண் ஆவார்.) ஸுவைபாவை அபூலஹப் விடுதலை செய்திருந்தார்.28

05.11.2009. 09:36




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
35 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி