60-நபிமார்களின் செய்திகள்3

பாடம் : 41

அல்லாஹ் கூறுகிறான்:

நாம் லுக்மானுக்கு ஞானத்தை வழங்கியிருந்தோம்.109 நீர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! யாரேனும் நன்றி செலுத்தினால் அவர் செலுத்தும் நன்றி அவருக்கே பயனளிக்கும். யாரேனும் நன்றி கொன்றால் உண்மையில் அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்கு தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான் (என்று கூறினோம்.)

மேலும், லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை நல்கிய போது கூறியதை நினைவு கூருங்கள்: என் அன்பு மகனே! நீ அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கிவிடாதே! உண்மையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமமாகும்! - மேலும், பெற்றோர் நலன் பேண வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் ந-வுக்கு மேல் ந-வை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால் தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்:) எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பி வர வேண்டியுள்ளது. ஆனால், எதனை நீ அறிய மாட்டாயோ, அதனை எனக்கு நீ இணை கற்பிக்க வேண்டு மென்று அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் அவர்களுடைய பேச்சை நீ ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதே! இவ் வுலகில் அவர்களுடன் நல்லமுறையில் நீ நடந்து கொள்! மேலும், யார் என் பக்கம் மீண்டுள்ளாரோ அவருடைய வழியை நீ பின்பற்று! பிறகு நீங்கள் அனைவரும் என் பக்கமே திரும்ப வேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன்.

(மேலும், லுக்மான் கூறினார்:) என் அருமை மகனே! ஏதேனும் ஒரு பொருள் கடுகளவு இருந்தாலும் சரி, மேலும் அது ஏதேனும் ஒரு பாறையில் அல்லது வானங் களில் அல்லது பூமியில் எங்கு மறைந்திருப் பினும் சரி, அல்லாஹ் அதனை வெளிப்படுத்துவான். அவன் நுண்மையானவனும் எல்லாம் தெரிந்தவனுமாவான். என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு. மேலும், நன்மை புரியும்படி ஏவு; தீமையை தடு! மேலும், எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதனைப் பொறுத்துக் கொள்! நிச்சயம் இவையெல்லாம் தீர்க்கமான விஷயங் களாகும். மேலும், மக்களை விட்டு முகத்தைத் திருப்பியவாறு பேசாதே! பூமியில் செருக்காய் நடக்காதே! அகந்தையும் ஆணவமும் கொண்ட எவனையும் அல்லாஹ் நேசிப்ப தில்லை. (31:12-18)

3428 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

எவர் இறை நம்பிக்கை கொண்டு, தம் இறை நம்பிக்கையில் அநீதியைக் கலந்திட வில்லையோ என்னும் (6:82) இறைவசனம் அருளப்பட்ட போது நபித்தோழர்கள், நம்மில் எவர் தான் தமது இறை நம்பிக்கை யுடன் அநீதியைக் கலந்திடவில்லை? என்று கேட்டார்கள். அப்போது (என் அருமை மகனே!) அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே. இணை வைப்பது மாபெரும் அநீதியாகும் (என்று லுக்மான் கூறினார்) என்னும் வசனம் அருளப்பட்டது. (பார்க்க: திருக்குர்ஆன் வசனம் 31:13)

3429 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

எவர் இறை நம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறை நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ என்னும் (6:82) வசனம் அருளப்பட்ட போது அது

முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமானதாகத் தென்பட்டது. ஆகவே, அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் தனக்குத் தானே அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இந்த வசனம் குறிப்பிடுவது) அதுவல்ல. அது இணைவைப்பையே குறிக் கின்றது. என் அருமை மகனே! அல்லாஹ் வுக்கு இணைவைக்காதே. நிச்சயமாக, இணை வைப்பு மாபெரும் அநீதியாகும் என்று (அறிஞர்) லுக்மான், தம் மகனுக்கு அறிவுரை கூறுவதை (திருக்குர்ஆன் எடுத்துரைக் கின்றதே, (31:13) அதை) நீங்கள் கேட்க வில்லையா? என்று சொன்னார்கள்.110

பாடம் : 42

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், ஒரு கிராம வாசிகளிடம் (நம்) தூதர்கள் வந்த போது நடந்த சம்பவத்தை உதாரணமாக இவர்களுக்குக் கூறுவீராக. நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பிய போது, அவர்கள் அவ்விருவரையும் பொய்யர்கள் எனத் தூற்றினார்கள். பிறகு நாம் மூன்றா மவரை அனுப்பி (அவ்விரு தூதர்களுக்கு) உதவினோம். அத்தூதர்கள் அனைவரும் (அம் மக்களை நோக்கி) உண்மையில் நாங்கள் உங்களிடம் இறைத் தூதர்களாய் அனுப்பப்பட்டுள்ளோம் எனக் கூறினார்கள். நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறிலர். மேலும் கருணைமிக்க இறைவன் எதையும் இறக்கிவைக்கவில்லை. நீங்கள் வெறும் பொய்யே கூறுகின்றீர்கள். என்று அந்தக்கிராம வாசிகள் கூறினார்கள். தூதர்கள் கூறினார்கள்: திண்ணமாக, நாங்கள் உங்களிடம் தூதர் களாக அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை எங்கள் அதிபதி நன்கறிகின்றான். மேலும் எங்கள் மீதுள்ள கடமை, தூதைத் தெளிவாய் (உங்களிடம்) சேர்ப்பித்து விடுவதைத் தவிர வேறில்லை! அதற்கு அக்கிராம வாசிகள், நாங்களோ, உங்களை எங்களுக்கு ஏற்பட்ட அபசகுனமாகக் கருதுகின்றோம். நீங்கள் (இந்த அழைப்பிலிருந்து) விலகிக் கொள்ளா விட்டால், நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லால் அடிப்போம். மேலும், நீங்கள் எங்க ளிடமிருந்து அவசியம் துன்பமிகு தண்டனை பெறுவீர்கள்! எனக் கூறலானார்கள். (அதற்கு) அத்தூதர்கள், உங்களுடைய அபச குனம் உங்களோடு தான் இருக்கிறது. உங்க ளுக்கு நல்லுரை கூறப்பட்டதற்காகவா (நீங்கள் இவ்வாறெல்லாம் பேசுகிறிர்கள்!) உண்மை யாதெனில், நீங்கள் வரம்பு மீறிய மக்களாவீர்! எனப் பதிலளித்தார்கள். (36:13-19) 111

பாடம் : 43

அல்லாஹ் கூறுகிறான்:

உங்கள் இறைவன் தன் அடியார் ஸகரிய்யா மீது பொழிந்த அருளைப் பற்றிய செய்தியாகும் இது.112 அவர் தம் இறைவனை மெதுவாக அழைத்த போது, அவர் பணிவுடன் வேண்டினார்: என் அதிபதியே! என் எலும்புகள் ந-வடைந்து விட்டன. மேலும், நரையினால் என் தலை மினுமினுப் பாகிவிட்டது. மேலும், என் அதிபதியே! நான் உன்னிடம் பிரார்த்தனை புரிந்து ஒரு போதும் ஏமாற்றம் அடைந்ததில்லை. எனக்குப் பின் என் உறவினர்கள் (மேற்கொள்ளக் கூடிய தீயவழி) பற்றி நான் அஞ்சுகின்றேன். மேலும், என்னுடைய மனைவி மலடியாக இருக்கின் றாள். எனவே, உனது தனிப்பட்ட அருளால் எனக்கு வாரிசை வழங்குவாயாக! அவர் எனக்கும் யஅகூபுடைய குடும்பத்தினருக்கும் வாரிசாகத் திகழட்டும். மேலும், என் இறைவா! அவரை விரும்பத் தக்க மனிதராய் ஆக்குவாயாக! (அவருக்கு பதிலளிக்கப்பட்டது:) ஸகரிய்யாவே! உங்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்று நாம் நற்செய்தி அறிவிக்கின்றோம். அதன் பெயர் யஹ்யா ஆகும். இந்தப் பெயருடைய எவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை.... (19:3-7)

தொடர்ந்து காண்க: இறைவசனங்கள்

(19:8-15)

3430 மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் அவர்கள் (விண் பயணத்திற்காக) அழைத் துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்கள்:

...பிறகு (வானவர்) ஜிப்ரீல் அவர்கள் ஏறிச் சென்று இரண்டாம் வானத்தை அடைந்தார். அதன் வாயிலைத் திறக்கச் சொன்னார். யார் அது? என்ற கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஜிப்ரீல் என்று பதிலளித்தார். உங்களுடன் இருப்பவர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், முஹம்மத் என்று பதிலளித்தார். அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப் பட்டிருந்ததா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஆம் என்று பதில் சொன்னார். நான் அங்கு சென்று சேர்ந்த பொழுது அங்கு யஹ்யா (அலை) மற்றும் ஈசா (அலை) ஆகியோர் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒன்று விட்ட சகோதரர்கள். (ஒருவருக் கொருவர் சின்னம்மா பெரியம்மா மகன்கள்.) ஜிப்ரீல் (அலை) அவர்கள், இது யஹ்யாவும் ஈசாவும் ஆவர். இருவருக்கும் சலாம் சொல் லுங்கள் என்று கூறினார். அவ்வாறே நான் சலாம் சொன்னேன். அவர்கள் இருவரும் சலாமுக்கு பதிலுரைத்தார்கள். பிறகு, நல்ல சகோதரரே! நல்ல நபியே! வருக! என்று கூறி (வாழ்த்தி)னார்கள்.113

பாடம் : 44

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், (நபியே!) மர்யத்தைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் விவரித்துக் கூறுவீராக!114 அவர் தம்முடைய குடும்பத் தாரை விட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில் அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந் திருந்தார்.(19:16)

வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவு கூருங்கள்: மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உனக்கு தனது வாக்கு பற்றி நற்செய்தி சொல்கின்றான். அதன் பெயர் மர்யத்தின் குமாரர் ஈசா அல் மஸீஹ் என்ப தாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும், அல்லாஹ்விடம் நெருங்கிய நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார். (3:45)

திண்ணமாக அல்லாஹ், அகிலத்தார் களைக் காட்டிலும் (முன்னுரிமை வழங்கி தனது தூதுப் பணிக்காக) ஆதத்தையும், நூஹையும், இப்ராஹீமின் வழித் தோன்றல் களையும், இம்ரானின் வழித்தோன்றல் களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டான். (3:33)

இப்ராஹீமுடன் தமக்குத் தொடர்பு இருப்பதாக உரிமை கொண்டாடுவதற்கு மனிதர்களிலே மிகவும் அருகதையானவர்கள் (யாரெனில்) அவரைப் பின்பற்றி வாழ்ந்த வர்களும், (இப்போது) இந்த நபியும், இவரது தூதுத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் களுமே ஆவர். அல்லாஹ், நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே உதவியாளனாகவும், ஆதரவாளனாகவும் இருக்கின்றான். (3:68)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், குர்ஆனி லுள்ள, அல்லாஹ் அகிலத்தார்களைக் காட்டிலும் (முன்னுரிமை வழங்கி தனது தூதுப் பணிக்காக) ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் வழித் தோன்றல்களையும் இம்ரானின் வழித் தோன்றல்களையும் தேர்ந் தெடுத்துக் கொண்டான் என்னும் (3:33) இறை வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது, இது அவர்களிடையேயுள்ள இறை நம்பிக்கையாளர்களைக் குறிக்கும். ஏனெனில் அல்லாஹ், இப்ராஹீமுடன் தமக்குத் தொடர்பு இருப்பதாக உரிமை கொண்டாடு வதற்கு மனிதர்களிலேயே மிகவும் அருகதை யானவர்கள் (யாரெனில்) அவரைப் பின்பற்றி வாழ்ந்தவர்களும் (இப்போது) இந்த நபியும், இவரது தூதுத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுமே ஆவர் (3:68) என்று கூறுகின்றான் என்று சொன்னார்கள்.

3431 சயீத் பின் முஸய்யப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தா னின் தீண்டலால் அக்குழந்தை கூக்குர லெழுப்பும். மர்யமையும் அவருடைய மகனையும் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்து விட்டு பிறகு, நான் இக் குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு உன்னிடம் பாது காப்புத் தேடுகிறேன் என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும்-என்ற 3:36-வது இறைவசனத்தை ஓதுவார்கள்.115

பாடம் : 45

(அல்லாஹ் கூறுகிறான்:)

மேலும், அந்நேரம் வந்த போது வானவர்கள் கூறினார்கள்: மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உன்னைத் தேர்ந் தெடுத்துக் தூய்மையாக்கினான். மேலும் அகிலத்துப் பெண்கள் அனைவரிலும்(உனக்கு முத-டம் அளித்து, தனது திருப்பணிக்காக) உன்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

(ஆகவே,) மர்யமே! நீ உன்னுடைய இறைவனைக் குனிந்து (சிரம்பணிந்து) வணங்குபவர்களுடன் நீயும் குனிந்து சிரம் பணி(ந்து வணங்கு)வாயாக! (என்று கூறினார்கள்.)

(நபியே!) இவை (யாவும் நீர் அறியாத) மறைவான செய்திகளாகும். இவைகளை நாம் உமக்கு வஹீயின் மூலம் அறிவிக்கின்றோம். அன்றி, மர்யமை (வளர்க்க) அவர்களில் எவர் பிணையேற்றுக் கொள்வதென்று (முடிவு செய்ய) அவர்கள் தங்கள் எழுது கோல்களை (ஆற்றில்) எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தர்க்கித்துக் கொண்ட போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (3:42-44)

3432 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இம்ரானின் மகள் மர்யம் தான் (அப்போது) உலகின் பெண்களிலேயே சிறந்தவர் ஆவார். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார்.

இதை அலீ (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

பாடம் : 46 அல்லாஹ் கூறுகின்றான்:

வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவு கூருங்கள்: மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உனக்கு தனது வாக்கு பற்றி நற்செய்தி சொல்கின்றான். அதன் பெயர் மர்யத்தின் குமாரர் ஈசா அல் மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும், (அல்லாஹ் விடம்) நெருங்கிய நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார்.

அன்றி, அவர் தொட்டி-ல் (குழந்தை யாக) இருக்கும் பொழுது (தன் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றியு)ம், (தன் நபித் துவத்தைப் பற்றி) வா-பத்திலும், மனிதர் களுடன் பேசுவார். தவிர, நல்லொழுக்க முடையோரில் உள்ளவராகவுமிருப்பார்.

(அதற்கு மர்யம் தன் இறைவனை நோக்கி,) என் இறைவனே! எந்த ஒரு மனிதருமே என்னைத் தீண்டாதிருக்கும் போது, எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டு விடும்? என்று கூறினார். (அதற்கு) இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு பொருளை(ப் படைக்க) நாடினால், அதனை ஆகுக என அவன் கூறுவது தான் (தாமதம்)! உடனே அது ஆகிவிடும் என்று கூறினான்.

மேலும் அவருக்கு வேதத்தையும் ஞானத்தையும், தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்பிப்பான். (3:45-48)

3433 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்கான சிறப்பு, மற்ற எல்லா உணவுகளையும் விட ஸரீதுக் குள்ள சிறப்பைப் போன்றதாகும். ஆண்களில் நிறையப் பேர் முழுமை பெற்றிருக் கின்றனர். ஆனால், பெண்களில் இம்ரானின் மகள் மர்யமையும் ஃபிர் அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை.

இதை அபூ மூசா அல் அஷ் அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.116

3434 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குறைஷிப் பெண்கள் தாம் ஒட்டகத்தில் சவாரி செய்த பெண்களிலேயே சிறந்தவர்கள். (தம்) குழந்தைகள் மீது அதிகப் பரிவுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிப் பாதுகாக்கக் கூடியவர்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்து விட்டு பின்பு, இம்ரானின் மகள் மர்யம் ஒட்டகம் எதிலும் சவாரி செய்ததேயில்லை என்று கூறினார்கள்.117

ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் வழியாக இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் : 47

அல்லாஹ் கூறுகிறான்:

வேதக்காரர்களே! உங்களுடைய மார்க் கத்தில் (எதையும்) மிகைப்படுத்தாதீர்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் சத்தியத்தைத் தவிர வேறு எதையும் கூறா தீர்கள். திண்ணமாக, மர்யமின் மைந்தர் ஈசா-அல்-மஸீஹ், அல்லாஹ்வின் தூதரும் மர்யமுக்கு அவன் அனுப்பிய அவனுடைய கட்டளையுமாவார்.118 மேலும், அல்லாஹ் விடமிருந்து வந்த ஓர் உயிரும் ஆவார். (அது மர்யமின் கருவறையில் குழந்தையாக வடிவம் பெற்றது.) எனவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! மேலும், மூன்று (கடவுள்) எனச் சொல்லாதீர்கள். (அப்படிச் சொல்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். இதுவே உங்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில், அல்லாஹ் ஒரே இறைவன்தான்; தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்வதை விட்டு அவன் தூய்மையானவன். வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியனவாகும். மேலும் (அவை அனைத்தையும் பராமரித்துப் பாதுகாக்கும்) பொறுப்பினை ஏற்பதற்கு அவனே போது மானவனாவான். (4:171)

3435 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்றும் ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்றும், அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (ஆகுக! என்னும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்) என்றும், அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர் என்றும், சொர்க்கம் (இருப்பது) உண்மை தான் என்றும், நரகம் (இருப்பது) உண்மை தான் என்றும், எவர் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் அவரது செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்.

இதை உபாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 48

(அல்லாஹ் கூறுகிறான்:)

மேலும், (நபியே!) மர்யத்தைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் விவரித்துக் கூறுவீராக! அவர் தம்முடைய குடும்பத் தாரை விட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில் அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யத்தின் முன்னிலையில் முழு மனித உருவில் தோன்றினார். உடனே மர்யம் கூறினார்: உம்மை விட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாவல் கோரு கின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்! அதற்கு அவர் கூறினார்: நான் உம் இறைவனின் தூதராவேன்: தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன். மர்யம் கூறினார்: எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்ட வில்லையே; நான் தீய நடத்தையுடையவளும் அல்லவே! அதற்கு வானவர் கூறினார்: அவ்வாறே நிகழும். உம் இறைவன் கூறிகின்றான்: அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது: மேலும், நாம் அக் குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்கு வதற்காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும் அது நடந்தே தீரும்!

பின்னர், மர்யம் அக்குழந்தையைக் கர்ப்பம் தரித்தார். கர்ப்பத்தோடு அவர் தொலைவான ஓர் இடத்திற்கு ஒதுங்கிச் சென்றார். பிரசவ வேதனை அவரை ஒரு பேரீச்சை மரத்தடியின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது. அப்போது அவர், அந்தோ! நான் இதற்கு முன்னரே மரணமடைந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டு போயிருந்திருக்கக் கூடாதா? என்று கூறலானார். அப்பொழுது கீழே இருந்து ஓர் வானவர் அவரை அழைத்துக் கூறினார்: நீர் கவலைப்படாதீர்: உம் இறைவன் உமக்குக் கீழே ஒரு நீரூற்றை அமைத்துள்ளான். (19:16-24)

3436 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டி-ல் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல் களால் ஜுரைஜ் என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா? என்று கூறிக் கொண்டார். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச்செய்யாதே! என்று கூறி விட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்த போது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆகவே, (அவள் அவரைப் பழிவாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு இது ஜுரைஜுக்குப் பிறந்தது என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூ செய்து தொழுது விட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, குழந்தையே! உன் தந்தை யார்? என்று கேட்டார். அக்குழந்தை, (இன்ன) இடையன் என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்து கொண்ட அந்த மக்கள், தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம் என்று கூறினார்கள். அதற்கு அவர், இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார். (மூன்றா மவர்) இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொ-வும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டி ருந்தான். உடனே அவள், இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்கு என்று துஆ செய்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே என்று கூறியது. பிறகு அவளது மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. -இந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்தது- பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே என்று கூறினாள். உடனே அக்குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு, இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), ஏன் இப்படிச் சொல்கிறாய்? என்று கேட்டதற்கு அக்குழந்தை, வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) நீ திருடிவிட்டாய்; விபசாரம் செய்து விட்டாய் என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்ய வில்லை என்று பதிலளித்தது.119

3437 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (விண்) பயணத்திற்காக அவர்கள் கொண்டு செல்லப்பட்ட இரவில் நடந்தவற்றை விவரித்துக் கூறியபடி, நான் மூசா (அலை) அவர்களைச் சந்தித்தேன் என்று கூறிவிட்டு அவர்(களின் அங்க அடையாளங்)களை வர்ணித்தார்கள். (அப்போது சொன்னார்கள்:)

மூசா (அலை) அவர்கள் (யமன் நாட்டைச் சேர்ந்த) ஷனூஆ குலத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரைப் போல ஒல்-யான(சதை குறைந்த)வராக, தலைமுடி தொங்கலாக (வாரி) விட்டிருப்பவராக இருந்தார்கள்.

(தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள்) நான் ஈசா (அலை) அவர்களைச் சந்தித்தேன் என்று கூறிவிட்டு, அவர்(களின் அங்க அடையாளங்)களை வர்ணித்தார்கள்: சிவப்பு நிறமுடையவர்களாக, நடுத்தர உயரம் உடையவர்களாக, (அப்போது தான்) குளியலறையிலிருந்து வெளியே வந்தவர் களைப் போல் அவர்கள் இருந்தார்கள். மேலும், நான் இப்ராஹீம் (அலை) அவர் களையும் பார்த்தேன். நான் தான் அவர் களுடைய சந்ததிகளிலேயே (தோற்றத்தில்) அவர்களுக்கு மிகவும் ஒப்பானவனாக இருக்கிறேன். என்னிடம் இரு பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் ஒன்றில் பாலும் மற்றொன்றில் மதுவும் இருந்தது. நீங்கள் விரும்பியதை எடுத்துக் கொள் ளுங்கள் என்று என்னிடம் சொல்லப்பட்டது. நான் பாலை எடுத்து அதைப் பருகினேன். உடனே, நீங்கள் இயற்கையான வழியில் செலுத்தப்பட்டு விட்டீர்கள். அல்லது நீங்கள் இயற்கையைப் பெற்றுக் கொண்டீர்கள் என்று என்னிடம் சொல்லப்பட்டது. நீங்கள் மதுவை எடுத்துக் கொண்டிருந்தால் உங்கள் சமுதாயம் வழிதவறிப் போயிருக்கும் என்றும் சொல்லப்பட்டது.120

3438 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மிஅராஜ் இரவில்) நான் ஈசா (அலை), மூசா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைப் பார்த்தேன். ஈசா (அலை) அவர்கள் சிவப்பு நிறமுடையவர்களாகவும் சுருள்முடியுடையவர்களாகவும் அகன்ற மார்புடையவர்களாகவும் இருந்தார்கள். மூசா (அலை) அவர்களோ மாநிறமுடையவர் களாகவும் உயரமானவர்களாகவும், படிந்த, தொங்கலான முடியுடையவர்களாகவும் சூடானிய இனத்தவர்களில் ஒருவரைப் போன்று(நீண்டு மெ-ந்தவர்களாகவு)ம் இருந்தார்கள்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3439 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களின் நடுவே அமர்ந்தபடி தஜ்ஜால் என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன்.121 ஆனால், தஜ்ஜால் என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனது கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும் என்று கூறினார்கள்.

3440 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்றிரவு கஅபாவின் அருகே நான் கனவில் (ஒரு நிகழ்ச்சியைக்) கண்டேன். மனிதர்களின் மா நிறத்திலேயே மிக அழகான மாநிறம் கொண்ட மனிதர் ஒருவர் அங்கிருந்தார். அவரது தலைமுடி அவரது தோள்களுக் கிடையே தொங்கிக் கொண்டிருந்தது; படிய வாரப்பட்ட தொங்கலான முடியுடையவராக அவர் இருந்தார். அவருடைய தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. இரு மனிதர்களின் தோள்கள் மீது தமது இரு கைகளையும் அவர் வைத்துக் கொண்டு கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்தார். நான், இவர் யார்? என்று கேட்டேன். மர்யமின் மகன் ஈசா அவர்கள் என்று பதிலளித்தார்கள். பிறகு, அவருக்குப் பின்னால் நிறைய சுருள் முடி கொண்ட, வலக் கண் குருடான ஒரு மனிதனைக் கண்டேன். அவன் நான் பார்த்த வர்களிலேயே இப்னு கத்தனுக்கு அதிக ஒப்பானவனாயிருந்தான்.122 அவன் இறையில்லம் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்த ஒரு மனிதரின் தோள்களின் மீது தன் இரு கைகளையும் வைத்திருந்தான். நான், யார் இது? என்று கேட்டேன். இவன் தஜ்ஜால் என்னும் மஸீஹ் என்று பதிலளித்தார்கள்.

நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களும் இதை அறிவிக்கிறார்கள்.

3441 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! ஈசா (அலை) அவர்களைக் குறித்து அவர்கள் சிவப்பு நிறமுடையவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக (இப்படித் தான்) கூறினார்கள்: நான் தூங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) கஅபாவை வலம் வந்து கொண்டி ருந்தேன். அப்போது மா நிறமுடைய தலைமுடி படிந்து தொங்கிய வண்ணமிருந்த ஒரு மனிதர் தமது தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டி ருக்க... அல்லது வழிந்து கொண்டிருக்க... அங்கே இருந்தார். நான், இவர் யார்? என்று கேட் டேன். மர்யமின் குமாரர் என்று பதிலளித்தார்கள். நான் (தொடர்ந்து முன்னேறிச்) சென்றேன். அங்கு சிவப்பான, தடிமனான, சுருட்டைத் தலை முடியுள்ள, வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், யார் இது? என்று கேட்டேன், தஜ்ஜால் என்று பதிலளித்தார்கள் (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு அதிக ஒப்பானவர் இப்னு கத்தன் தான்.

இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு கத்தன் குஸாஆ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதன். அறியாமைக் காலத்திலேயே அவன் அழிந்து விட்டிருந்தான்.

3442 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்க மானவன் ஆவேன்-இறைத் தூதர்கள் தந்தை வழிச்சகோதரர்கள் ஆவர்- எனக்கும் அவருக் கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3443 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் மக்களிலேயே மிகவும் நெருக்கமானவன் ஆவேன். இறைத் தூதர்கள் ஒரே தந்தையின் பிள்ளைகள் ஆவர். அவர்களின் தாய்மார்கள் பலராவர். அவர்களுடைய மார்க்கம் ஒன்றே.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே நபிமொழி அபூஹுரைரா

(ரலி) அவர்களிடமிருந்து வேறொரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3444 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள், ஒரு மனிதர் திருடிக் கொண்டிருப் பதைக் கண்டார்கள். அவனிடம், நீ திருடினாயா? என்று கேட்டார்கள். அதற்கு அவன், இல்லை; எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அவன் மீதாணையாக! என்று பதிலளித்தான். உடனே ஈசா (அலை) அவர்கள், அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டு, என் கண்ணை நம்ப மறுத்து விட்டேன் என்று சொன்னார்கள்.123

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3445 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள் என்று கூறினார்கள் என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டி ருக்கிறேன்.124

3446 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் தன் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, அவளுக்குக் கல்வி கற்பித்து, அவளுக்குக் கல்வி கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அளித்து அவளை (தானே) மணமும் முடித்துக் கொண்டார் எனில் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும். ஒருவர் ஈசாவின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என் மீதும் நம்பிக்கை கொண்டால் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும். ஓர் அடிமை தன் இறைவனுக்கு அஞ்சி, தன் எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்தும் நடப் பானாயின் அவனுக்கும் இரு நற்பலன்கள் கிடைக்கும்.

இதை அபூ மூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3447 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் (மறுமை நாளில்) கா-ல் செருப் பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர் களாகவும் விருத்தசேதனம் செய்யப் படாதவர் களாகவும் எழுப்பப்படுவீர்கள் என்று கூறிவிட்டு, பிறகு, எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில், நாம் முத-ல் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீட்டுவோம். இது நம்முடைய பொறுப் பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும். அதனை நாம் நிறைவேற்றியே தீருவோம் என்னும் (21:104) இறைவசனத்தை ஓதினார்கள். முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுப வர்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள். பிறகு, என் தோழர்களில் சிலர் (சொர்க்கத்திற்காக) வலப்பக்கமும், (சிலர் நரகத்திற்காக) இடப்பக்கமும் கொண்டு செல்லப்படுவார்கள். நான், இவர்கள் என் தோழர்கள் என்று கூறுவேன். இவர்களை விட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள், தம் கால் சுவடுகளின் வழியே (எங்கிருந்து வந்தார்களோ அந்த மதத்திற்குத்) திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள் என்று சொல்லப்படும். அதற்கு நான் நல்லடியாரான மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே, (இறைவா!) நான் இவர்களிடையே (உயிருடன்) வாழ்ந்து வந்த வரை நான் இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே இவர்களைக் கண்காணிப்பவனாகி விட்டாய். ஒவ்வொரு விஷயத்தையும் நீ பார்த்துக் கொண்டிருக் கின்றாய். நீ அவர்களைத் தண்டித்தாலும் அவர்கள் உன் அடிமைகள் தாம். (அதற்கும் உனக்கு முழு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்து விட்டால் (அது உன் கருணையாகும். ஏனெனில்,) நீ வல்லோனும் விவேகம் மிக்கோனும் ஆவாய் (5:117,118) என்று சொல்வேன்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

கபீஸா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

தம் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றவர்கள் யாரெனில், அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்தில் மதமாறியவர்கள்தாம்! அபூபக்ர் (ரலி) அவர்கள் (போராடி) அவர்களை வீழ்த்திவிட்டார்கள்.

பாடம் : 49

மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கி வருவது.

3448 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிரைத் தன் கையில் வைத்திருப் பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் உங்க ளிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ள வற்றையும் விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகிவிடும்.

இந்த நபிமொழியை அறிவித்து விட்டு அபூஹுரைரா (ரலி) அவர்கள், வேதம் வழங்கப்பட்டவர்களில் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் (முஹம்மதின்) மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார். மேலும், மறுமை நாளில் அவர் களுக்கெதிராக அவர் சாட்சியம் அளிப்பார் (4:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.125

3449 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்களுக்கு(த் தொழுவிக்கும்) இமாமாக இருக்க மர்யமின் மைந்தர் உங்களிடையே இறங்கு வாரேயானால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்?

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உகைல் பின் கா-த் (ரஹ்) அவர்களும் அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல் அவ்ஸாயீ (ரஹ்) அவர்களும் இதே போன்று அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 50

பனூ இஸ்ராயீல்-இஸ்ராயீ-ன் சந்ததிகள் பற்றிய குறிப்பு.126

3450 ரிப்யீ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்க மாட்டீர் களா? என்று கேட்டார். ஹுதைஃபா (ரலி) அவர்கள், தஜ்ஜால் வெளியே வரும் போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை இது நெருப்பு என்று கருது கின்றார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை இது குளிர்ந்த நீர் என்று கருதுகின்றார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்து விடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் எவர் சந்திக்கின்றாரோ அவர், தான் நெருப் பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டி ருக்கின்றேன் என்று சொன்னார்கள்.

 

3451 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே வாழ்ந்த ஒரு மனிதரிடம் (உயிரைக் கைப்பற்றும்) வானவர் அவரது உயிரைக் கைப்பற்றிச் செல்ல வந்தார். அந்த மனிதரிடம், (உன் வாழ்நாளில்) நீ ஏதாவது நன்மை செய்திருப்பதாக அறிந்திருக்கின்றாயா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், (அப்படி எதுவும்) எனக்குத் தெரியவில்லை என்று பதிலளித்தார். (நன்மை ஏதாவது செய்திருக்கின்றாயா என்று) சிந்தித்துப் பார் என்று கூறப்பட்டது. அவர், அப்படி எதுவும் (நன்மை) செய்ததாக எனக்குத் தெரிய வில்லை. ஆனால், நான் உலக மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். அப்போது, அவர்களிடம் நான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்பேன். அப்போது, வசதியுள்ளவருக்கு (கடனை அடைக்க) அவகாசம் தருவேன். வசதியில்லாதவரை மன்னித்து (கடனைத் தள்ளுபடி செய்து) விடுவேன் என்று பதிலளித்தார். அதன் காரணத்தால் அல்லாஹ் அவரை சொர்க் கத்தில் புகுத்தினான்.

இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.127

3452 மேலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நான் கேட்டிருக்கிறேன்:

ஒரு மனிதருக்கு மரணம் வந்தது. அவருக்கு வாழ்வைப் பற்றிய நிராசை ஏற்பட்டவுடன் தம் குடும்பத்தாருக்கு இறுதி உபதேசம் செய்தார். நான் இறந்து விட்டால், எனக்காக நிறைய விறகுகளைச் சேகரித்து அதில் நெருப்பை மூட்டிவிடுங்கள். நெருப்பு என் இறைச்சியைத் தின்று என் எலும்பு வரை சென்று விடும் போது நான் கருகிப் போவேன். உடனே, என் கருகிய எலும்புகளை எடுத்துத் தூளாக்கி, பிறகு காற்று அதிகமாக வீசும் ஒரு நாளை எதிர்பார்த்திருந்து (அந்நாள் வந்தவுடன்) கட-ல் அதை எறிந்து விடுங்கள் என்று அவர் சொன்னார். (அவர் இறந்த வுடன்) அவ்வாறே மக்கள் செய்தனர். அவரது எலும்புத் துகள்களை அல்லாஹ் ஒன்று திரட்டி, நீ ஏன் அப்படிச் செய்தாய்? என்று அவரிடம் கேட்டான். அவர், உன் அச்சத்தின் காரணத்தினால் தான் (அப்படிச் செய்தேன்) என்று பதிலளித்தார். ஆகவே, அல்லாஹ் அவரை மன்னித்து விட்டான்.

இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் சொல்லி முடித்தவுடன் அவர்களிடம் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள், நானும் நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறக் கேட்டிருக் கிறேன். அந்த மனிதர் மண்ணறை(களில் கஃபன் துணிகளைத் திருடும்) திருடனாக இருந்தார் என்று சொன்னார்கள.

3453 & 3454 ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது, தம் முகத்தின் மீது சதுரமான கறுப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்திலிருந்து அகற்றி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். தம் இறைத் தூதர்களின் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று கூறி, அவர்கள் செய்ததைப் போன்று செய்யக் கூடாது என்று (தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.128

3455 அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு) அமர்ந்திருந்தேன்.

(ஒரு முறை) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் வரும் போது நாங்கள் என்ன செய்ய வேண்டு மென்று நீங்கள் உத்திரவிடுகின்றீர்கள்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு, அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்.) அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் கேட்க விருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

3456 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள்.129 எந்த அளவிற் கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடிய வர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர் களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், வேறெவரை? என்று பதிலளித்தார்கள்.

3457 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தொழுகை நேரம் வந்து விட்டதை அறிவிக்கும் முறை ஒன்று தேவை என்று மக்கள் கருதிய போது) அவர்கள் (நெருப்பு வணங்கிகளைப் போல்) தீ மூட்டலாம் என்றும், மணியடித்து கூப்பிடலாம் என்றும் சொன்னார்கள். (இவையெல்லாம்) யூதர்கள், கிறிஸ்தவர்கள்(ஆகியோரின் போக்காகும்) என்று (சிலர் மறுத்துக்) கூறினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களுக்கு அதான் எனும் தொழுகை அறிவிப்புக்குரிய வாசகங்களை (கற்றுத் தந்து) அவற்றை இருமுறை கூறும்படியும் இகாமத் (என்னும் தொழுகைக்காக நிற்கும் போது சொல்லும்) வாசகங்களை ஒரு முறை மட்டும் சொல்லும் படியும் உத்திரவிடப்பட்டது.130

3458 மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

தொழுபவர் தன் கையைத் தனது பக்கவாட்டில் (இடுப்புக்கு மேல்) வைத்தி ருப்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் வெறுத்து வந்தார்கள். யூதர்கள் தான் அப்படிச் செய்வார்கள் என்று சொல்வார்கள்.131

இதே போன்று அஃமஷ் (ரஹ்) அவர்கள் வழியாக ஷுஅபா (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

 

3459 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இதற்கு முன் சென்ற சமுதாயங்களின் (ஆயுட்) காலத் தவணைகளிடையே உங்கள் ஆயுள் தவணை, அஸருக்கும் சூரியன் மறைவதற்கும் இடையேயுள்ள (குறைந்த) கால அளவாகும். உங்கள் நிலையும் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் நிலையும் தொழி லாளர்கள் சிலரை வேலைக்கு அமர்த்திய ஒரு மனிதரைப் போன்றதாகும். அவர் (தொழிலாளர்களிடம்), எனக்காக நடுப்பகல் நேரம் வரை ஒவ்வொரு கீராத் (ஊதியத்)திற்கு வேலை செய்பவர் யார்? என்று கேட்டார். யூதர்கள் ஒவ்வொரு கீராத்துக்காக நடுப்பகல் வரை வேலை செய்தார்கள். பிறகு அவர், நடுப்பகல் நேரத்திலிருந்து அஸர் தொழுகை வரை ஒவ்வொரு கீராத் (ஊதியத்)திற்கு எனக்காக வேலை செய்பவர் யார்? என்று கேட்டார். கிறிஸ்தவர்கள் நடுப்பகல் நேரத்தி லிருந்து அஸர் தொழுகை வரை ஒவ்வொரு கீராத்துக்காக வேலை செய்தார்கள். பிறகு அவர், அஸர் தொழுகையிலிருந்து சூரியன் மறையும் வரை இரண்டிரண்டு கீராத்துகளுக்கு எனக்காக வேலை செய்பவர் யார்? என்று கேட்டார்.

தெரிந்து கொள்ளுங்கள்: அஸர் தொழுகையிலிருந்து சூரியன் மறையும் வரை இரண்டிரண்டு கீராத்துகளுக்காக வேலை செய்தவர்கள் (முஸ்லிம்களாகிய) நீங்கள் தாம். தெரிந்து கொள்ளுங்கள்: உங்களுக்குத் தான் இருமுறை ஊதியம் கிடைத்துள்ளது...

இதைக் கண்ட யூதர்களும் கிறிஸ்தவர் களும் கோபமடைந்து, நாங்கள் அதிகமாக வேலை செய்திருக்க, கூலி (எங்களுக்குக்) குறைவாகக் கிடைப்பதா? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ், நான் உங்கள் உரிமையிலிருந்து எதையாவது குறைத்(து அநீதியிழைத்) திருக்கிறேனா? என்று கேட்டான். அவர்கள், இல்லை என்று பதிலளித்தார்கள். அல்லாஹ், அ(ப்படி சிலருக்கு மட்டும் அதிகமாகக் கொடுப்ப)து என் அருளாகும். அதை நான் விரும்பியவர்களுக்குக் கொடுக்கிறேன் என்று சொன்னான்.132

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3460 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(ஒருவர் மதுவை விற்பதாக அறிந்த போது) அல்லாஹ் இன்னாரை அழிப்பானாக! நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் சாபம் யூதர்கள் மீது உண்டாகட்டும்! அவர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப் பட்டிருந்தது. ஆனால், அவர்கள் அதை உருக்கி விற்றார்கள் என்று கூறியுள்ளார்கள் என்பதை அவர் அறிய மாட்டாரா? என்று உமர் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்.

இதையே நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஜாபிர் (ரலி) அவர்களும் அபூஹுரைரா

(ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.133

3461 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என் மீது (நான் சொன்னதாக) வேண்டு மென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர்

(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3462 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் (அவற் றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

 

3463 ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் (இந்த நபிமொழியை பஸரா விலுள்ள) இந்தப் பள்ளி வாச-ல் எமக்கு அறிவித்தார்கள். அவர்கள் அறிவித்ததிலிருந்து நாம் மறக்கவில்லை. ஜுன்தப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் மீது (அவர்கள் சொல்லாதைச் சொன்னதாக) பொய்யுரைத்திருப்பார்கள் என்று நாம் அஞ்சவில்லை.

(ஜுன்தப்(ரலி) அவர்கள் அறிவித்த தாவது:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். (ஒரு முறை) அவர் காயமடைந்தார். அவரால் வ- பொறுக்க முடியாமல் ஒரு கத்தியை எடுத்துத் தன் கையைத் துண்டித்துக் கொண்டார். அவர் இறக்கும் வரை இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டேயிருந்தது. அல்லாஹ், என் அடியான், தன் விஷயத்தில் (அவசரப்பட்டு) என்னை முந்திக் கொண்டான். அவன் மீது நான் சொர்க்கத்தை ஹராமாக்கி (அதை அவன் நுழையத் தடை செய்யப்பட்ட இடமாக ஆக்கி) விட்டேன் என்று கூறினான்.134

பாடம் : 51

பனூ இஸ்ராயீல்களிடையே வாழ்ந்த தொழுநோயாளி, குருடர், வழுக்கைத் தலையர் ஆகியோர் தொடர்பான நிகழ்ச்சி.

3464 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராக வும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழு நோயாளியிடம் வந்து, உனக்கு மிகவும் விருப்பமானது எது? என்று கேட்க அவர், நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள் என்று சொன்னார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை விட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், எந்தச் செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது? என்று கேட்க அவர், ஒட்டகம் தான்... (என்றோ) அல்லது மாடுதான்...(எனக்கு மிகவும் விருப்பமான தாகும்) என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும் என்று சொன்னார். பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். உனக்கு மிகவும் விருப்பமானது எது? என்று கேட்டார். அவர், அழகான முடியும் இந்த வழுக்கை என்னை விட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து) விட்டார்கள் என்று சொன்னார். உடனே அவ்வானவர், அவரது தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ் வானவர், எந்தச் செல்வம் உனக்கு விருப்பமானது? என்று கேட்டார். அவர், மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம் என்று சொன்னார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும் என்று சொன்னார். பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, உனக்கு மிகவும் விருப்பமானது எது? என்று கேட்டார். அவர், அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது) என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவிட, அல்லாஹ் அவருக்கு அவரது பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், உனக்கு எந்தச் செல்வம் விருப்பமானது? என்று கேட்க அவர், ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது) என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும் (-ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெரு மளவில்) கிடைத்தன. பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தமது பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது.) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த(இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கின்றேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன் என்று சொன்னார். அதற்கு அந்த மனிதர், (எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது) என்றார். உடனே அவ்வானவர், உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கின்ற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத் தான் அல்லவா? என்று கேட்டார். அதற்கு அவன், (இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இந்தச் செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன் என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும் என்று சொன்னார். பிறகு வழுக்கைத் தலையரிடம் தமது (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே சொன்னார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித் ததைப் போன்றே பதிலளித்தான். வானவரும், நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும் என்று சொன்னார். பிறகு (இறுதியாக), குருடரிடம் தமது தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்துபோய் விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ் வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவரு மில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கின்றேன் என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் செல்வந்தனாக்கினான். ஆகவே, நீ விரும்புவதை எடுத்துக் கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கின்ற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ் விற்காக சிரமப்படுத்த மாட்டேன். என்று சொன்னார். உடனே அவ்வானவர், உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தி யடைந்தான். உன் இரு தோழர்கள் (தொழு நோயாளி மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபம் கொண்டான் என்று சொன்னார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 52

(அல்லாஹ் கூறுகிறான்:)

குகை மற்றும் கல்வெட்டுக்காரர்கள் நம்முடைய வியக்கத்தக்க சான்றாய்த் திகழ்ந்தனர் என்று நீங்கள் கருதுகின் றீர்களா?135 இளைஞர்கள் சிலர் குகையில் தஞ்சம் புகுந்த போது பிரார்த்தித்தார்கள்: எங்கள் இறைவனே! உன்னுடைய பிரத்யேக அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் காரியங்களை ஒழுங்குபடுத்தித் தருவாயாக!

அப்போது நாம் அவர்களை அதே குகையில் பல்லாண்டுகள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தினோம்; பிறகு அவர்களை எழச் செய்தோம்.....(18:9-21)

 

பாடம் : 53

(மூவர் சிக்கிக் கொண்ட)குகைபற்றிய செய்தி.

3465 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் (சென்ற காலத்தில்) இருந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்த போது, (திடீரென) மழை பிடித்துக் கொண்டது. ஆகவே, அவர்கள் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். உடனே அந்தக் குகை (வாசலை மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை மூடி) அவர்களை அடைத்துக் கொண்டது. அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நம்மை (நமது) வாய்மையான செயல் தான் காப்பாற்ற முடியும். ஆகவே, நம்மில் ஒவ்வொருவரும், தான் எந்த விஷயத்தில் வாய்மையாக நடந்து கொண்டதாக நம்புகிறாரோ அதைக் கொண்டு (அல்லாஹ்விடம்) பிரார்த்திக் கட்டும் என்று ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டார்கள்.

ஆகவே, அவர்களில் ஒருவர் பின் வருமாறு பிரார்த்தித்தார்:

இறைவா! என்னிடம் ஒரு கூலியாள் எனக்காக ஒரு ஃபரக் (அளவு) நெல்(லை)

கூலிக்கு(ப் பேசி) வேலை செய்தார். பிறகு கூலியை (வாங்கிக் கொள்ளாமல்) விட்டு விட்டுச் சென்று விட்டார். நான் அந்த ஃபரக் அளவு நெல்லை எடுத்து வேளாண்மை செய்தேன். அதன் வருவாயிலிருந்து பல மாடுகளை வாங்கினேன். பிறகு (ஒரு நாள்) அவர் என்னிடம் தன் கூலியைக் கேட்டு வந்தார். நான் அவரிடம் அங்கு சென்று, அந்த மாடுகளை ஓட்டிச்செல் என்றேன். அதற்கவர், உங்களிடம் எனக்குரியது ஒரு ஃபரக் அளவு நெல்தானே! என்று கேட்டார். நான் அவரிடம், அந்த மாடுகளை எடுத்துக் கொள். ஏனெனில் அவை (நீ விட்டுச் சென்ற) அந்த ஒரு ஃபரக் நெல்-லிருந்து கிடைத்தவை தாம் என்று சொன்னேன். அவர் அவற்றை ஓட்டிச் சென்றார். (அதை நீ அறிவாய்.) நான் அதை உன் அச்சத்தின் காரணமாகவே செய்த தாக நீ அறிந்திருந்தால் எங்களை விட்டு (இந்தப் பாறையை) நீக்குவாயாக! அந்தப் பாறை அவர்களை விட்டு சற்றே விலகியது.

மற்றொருவர் பின்வருமாறு பிரார்த்தித்தார்:

இறைவா! எனக்கு வயது முதிர்ந்த தாய் தந்தையர் இருந்தனர். நான் ஒவ்வோர் இரவிலும் அவர்களுக்கு என் ஆடு ஒன்றின் பாலைக் கொண்டு செல்வேன். ஓர் இரவு அவர்களிடம் செல்லத் தாமதமாகி விட்டது. அவர்கள் தூங்கி விட்ட பின்பு சென்றேன். என் மனைவியும் என் குழந்தைகளும் பசியால் கூக்குரலெழுப்பி அரற்றிக் கொண்டிருந் தனர். என் தாய்தந்தையர் பருகுகின்ற வரை அவர்களுக்குப் புகட்ட மனமில்லாதவனாக நான் இருந்தேன். அதே வேளையில், அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பிடவும் நான் விரும்பவில்லை. நான் அவர்களை (பால் தராமல்) விட்டுவிட, அவர்கள் அதைக் குடிப்பதற்காக எதிர்பார்த்துக் காத்திருப்பதை நான் விரும்பவுமில்லை. ஆகவே, அதிகாலை நேரம் உதயமாகும் வரை நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். (இதை நீ அறிவாய்.) இதை நான் உன் அச்சத்தின் காரணத்தால் தான் செய்தேன் என்று நீ கருதினால் எங்களை விட்டு (இந்த அடைப்பை இன்னும் சற்று) நீக்குவாயாக! அவ்வாறே, அந்தப் பாறை அவர்கள் வானத்தைப் பார்க்கும் அளவிற்கு (இன்னும் சற்று) விலகியது. மற்றொருவர் இப்படிப் பிரார்த்தித்தார்: இறைவா! என் தந்தையின் சகோதரர் மகள் ஒருத்தி எனக்கு இருந்தாள். அவள் மக்களிலேயே எனக்கு அதிகப் பிரியமானவளாக இருந்தாள். நான் அவளை எனக்கு இணங்குமாறு அழைத்தேன். நான் அவளிடம் நூறு தீனார்களைக் கொண்டு வந்தாலே தவிர எனக்கு இணங்க முடியாதென்று மறுத்து விட்டாள். நான் அதனைத் தேடி அடைந்தபின் அவளிடம் எடுத்துக் கொண்டு சென்று அதைக் கொடுத்தேன். அவள் தன்னை என் வசம் ஒப்படைத்தாள். நான் அவளிடம் உடலுறவிற்காக அமர்ந்த பொழுது அவள், அல்லாஹ் வுக்கு அஞ்சு. முத்திரையை அதற்குரிய (சட்டப் பூர்வமான) உரிமையின்றி (திருமணம் முடிக்காமல்) திறக்காதே என்று சொன்னாள். உடனே நான் (உடலுறவு கொள்ளாமல்) எழுந்து விட்டேன். நூறு தீனார்களை (அவளிடமே) விட்டு விட்டேன். நான் இதை உன் அச்சத்தின் காரணத்தால் செய்ததாக நீ கருதினால் (மீத மிருக்கும் அடைப்பையும்) எங்களை விட்டு நீக்குவாயாக! எனவே, அல்லாஹ் அவர்களை விட்டு (முழுமையாக) நீக்கி விட்டான். அவர்களும் அதிலிருந்து வெளியேறினார்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.136

பாடம் : 54

3466 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முற்காலத்தில்) பெண்ணொருத்தி தன் மகனுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். அவள் அவனுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த போது வாகனத்தில் சென்ற ஒருவன் அவளைக் கடந்து சென்றான். அப்பெண், இறைவா! இவனைப் போல் என் மகன் ஆகும் வரை அவனுக்கு நீ மரணத்தைத் தராதே என்று பிரார்த்தித்தாள். உடனே அந்தக் குழந்தை, இறைவா! என்னை இவனைப் போல் ஆக்கி விடாதே என்று பிரார்த்தித்தது. பிறகு திரும்பச் சென்று(அவளது) மார்பில் பால் குடிக்கலானது. பிறகு (தரையில்) இழுபட்டுக் கொண்டே வந்த ஒரு பெண் அவளைக் கடந்து சென்றாள். அவளைப் பிறர் கே- செய்து விளையாட்டுப் பொருளாக நடத்திக் கொண்டிருந்தனர். (தன் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த) அந்தப் பெண், இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே என்று பிரார்த்தித்தாள். உடனே அக்குழந்தை, இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு என்று பிரார்த்தித்தது. பிறகு அது, வாகனத்தில் சென்றவன் இறைமறுப்பாளன் ஆவான். இந்தப் பெண்ணோ, இவளைப் பற்றி மக்கள் இவள் விபசாரம் செய்கிறாள் என்று (அபாண்டமாகக்) கூறுகிறார்கள். ஆனால், இவள், எனக்கு அல்லாஹ்வே போது மானவன் என்று கூறுகிறாள். அவர்கள், இவள் திருடுகிறாள் என்று (அவதூறாகக்) கூறுகிறார்கள். இவள், எனக்கு அல்லாஹ்வே போதுமானவன் என்று கூறுகிறாள் என்று (அக்குழந்தை) சொல்லிற்று.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.137

3467 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண் டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3468 ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் (மேடை) மிம்பரின் மீதிருந்தபடி, காவலர் ஒருவரின் கையிலிருந்த முடிக் கற்றை (சவுரிமுடி) ஒன்றை எடுத்து (கையில் வைத்துக் கொண்டு), மதீனா வாசிகளே! உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே? என்று கேட்டு விட்டு, நபி (ஸல்) அவர்கள் இது போன்றதி லிருந்து (மக்களைத்) தடுப்பதையும், பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்து போன தெல்லாம் இதை அவர்களுடைய பெண்கள் பயன்படுத்திய போது தான் என்று சொல்வதையும் நான் செவியுற்றிருக்கிறேன் என்று சொல்லக் கேட்டேன்.

3469 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக் கிறார்கள். அத்தகையவர்களில் எவராவது எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் பின் கத்தாப் அவர்கள் தாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3470 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தொண்ணூற் றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டி ருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, (எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா? என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், கிடைக்காது என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்று விட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்க லானார். அப்போது ஒரு மனிதர், (நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ! என்று அவருக்குச் சொன்னார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார்.

அப்போது இறைகருணையைப் பொழியும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) சச்சரவிட்டுக் கொண்டனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, நீ நெருங்கி வா! என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, நீ தூரப் போ! என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான். பிறகு, அவ்விரண்டுக்கு மிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள் என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்ல விருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.

இதை அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3471 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, (பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒரு மனிதர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில் அதில் ஏறிச் சவாரி செய்து அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில்) உழுவதற்காகத் தான் என்று கூறியது. எனச் சொன்னார்கள். மக்கள், சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா? என்று (வியந்து போய்க்) கூறினார்கள். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள், நானும் அபூபக்ரும் உமரும் இதை நம்புகிறோம் என்று சொன்னார்கள். அப்போது அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருக்கவில்லை. தொடர்ந்து, நபி (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் தன் ஆடு களுக்கிடையே (அவற்றை மேய்த்துக் கொண்டு) இருந்த போது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள் புகுந்து) ஓடி, ஆட்டை(த் தாக்கிக் கவ்விக்) கொண்டு சென்று விட்டது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றி விட்டார். உடனே, அந்த ஓநாய் அவரைப் பார்த்து, இவனே! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றி விட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந் நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே என்று கூறியது எனச் சொன்னார்கள். இதைக் கேட்ட மக்கள், சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) ஓநாய் பேசுமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், நானும் அபூபக்ரும், உமரும் இதை நம்புகிறோம் என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர் களும் அங்கே அப்போது இருக்கவில்லை.138

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்புத் தொடரிலும் அபூஹுரைரா (ரலி) அவர் களிடமிருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.

3472 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பனூ இஸ்ராயீ-ல்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், நிலத்தை, அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது) என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா? என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான் என்று சொன்னார். மற்றொருவர், எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள் என்று தீர்ப்பளித்தார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3473 ஆமிர் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற் றிருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு உஸாமா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது.... அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது.... (அவர்களுடைய அட்டூழியங்கள் அதிகரித்து விட்ட போது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லா தீர்கள். நீங்கள் இருக்கின்ற ஒரு பூமியில் அது பரவி விட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளி யேறாதீர்கள் என்று சொன்னார்கள். என்று பதிலளித்தார்கள்.

அபுந் நஸ்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அதிலிருந்து தப்பியோடும் நோக்கம் மட்டுமே கொண்டு நீங்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது.

(வேறு ஏதாவது காரணத்திற்காக அங்கிருந்து நீங்கள் வெளியேறினால் அதற்கு அனுமதியுண்டு.)

3474 நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள், அது, தான் நாடியவர்கள் மீது அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான் என்று தெரிவித்தார்கள். மேலும், கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள(விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்ட வராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப் பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும் என்று கூறினார்கள்.

3475 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந் தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசு வார்கள்? என்று தமக்குள் பேசிக் கொண் டனர். அவர்களில் சிலர், அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்? என்று கூறினர். (உஸாமா (ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தண்டனை களில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய் என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), உங்க ளுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்ட தெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக் காமல்) விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன் என்று சொன்னார்கள்.

3476 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் திருக்குர்ஆனின் ஒரு வசனத்தை ஓத நான் கேட்டேன். அவர் ஓதிய முறைக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். ஆகவே, அவரை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து விபரத்தைத் தெரிவித்தேன். அப்போது அவர்களின் முகத்தில் அதிருப்தி(யின் சாயல்) படிந்திருப்பதை உணர்ந்தேன். அவர்கள், நீங்கள் இருவருமே சரியாகத் தான் ஓதியிருக் கிறீர்கள். (எல்லா விஷயங்களிலும்) கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் (ஒவ்வொரு விஷயத்திலும்) கருத்து வேறுபாடு கொண்டு அதனால் தான் அழிந்து போனார்கள் என்று சொன்னார்கள்.139

3477 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

(முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத் துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. அந்த இறைத் தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்து விட் டார்கள். அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்து விடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக் கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

3478 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்) ஒரு மனிதர் இருந்தார். அல்லாஹ் அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கிவிட்ட போது தன் மகன் களிடம், உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன் என்று கேட்டார். அவர்கள், சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று பதில் கூறினர். அதற்கு அவர், நான் நற்செயல் எதையும் செய்யவேயில்லை. ஆகவே, நான் இறந்து விட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு என்னைப் பொடிப் பொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவி விடுங்கள் என்று சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை (அவரது உடல் அணுக்களை) அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) இப்படிச் செய்ய உத்திரவிடும்படி உன்னைத் தூண்டியது எது? என்று கேட்டான். அவர், உன் (மீது எனக்குள்ள) அச்சம் தான்(இப்படி உத்ரவிட என்னைத் தூண்டியது) என்று சொன்னார். உடனே அவரைத் தன் கருணையால் அவன் அரவணைத்துக் கொண்டான்.

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே நபி மொழி அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே வேறொரு அறிவிப் பாளர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3479 ரிப்யீ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உக்பா (ரலி) அவர்கள் ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதை எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்கள் பின் வருமாறு சொல்லக் கேட்டிருக்கிறேன். (மண்ணறையைத் தோண்டி கஃபன் துணியைத் திருடி விற்று வந்த) ஒரு மனிதருக்கு மரண (நேர)ம் வந்தது. அவர் இனி வாழ்வோம் என்ற நம்பிக்கையை இழந்து விட்ட போது தம் குடும்பத்தினரிடம் தன் இறுதி விருப்பத்தைத் தெரிவித்தார். நான் இறந்து விட்டால் எனக்கு நிறைய விறகுகளைச் சேகரித்து (சிதைக்குத்) தீமூட்டி விடுங்கள். அந்த நெருப்பு என் இறைச்சியைத் தின்று முடித்து என் எலும்பைச் சென்றடைந்து விட்டால், எரிந்து கருகிய எலும்புகளை எடுத்து அவற்றைப் பொடியாக்கி ஒரு வெப்பமான நாளில்.... அல்லது காற்று அதிகம் வீசும் ஒரு நாளில்.... என்னைக் கட-ல் தூவி விடுங்கள் என்று சொன்னார். (அவ்வாறே அவர்கள் செய்ய) அல்லாஹ் அவரை (அவரது அணுக்களை) ஒன்று திரட்டி, (முழு உருவையளித்து), ஏன் (இவ்வாறு) செய்தாய்? என்று கேட்டான். அவர், உன் அச்சத்தால் தான் என்று சொன்னார். எனவே, அவருக்கு அல்லாஹ் மன்னிப்பளித் தான்.140

வேறொரு அறிவிப்பில், உக்பா(ரலி) அவர்கள், ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்... என்று சொன்னார்கள். அதில் வெப்பமான ஒரு நாளில் என்பதற்கு பதிலாக, காற்று அதிகமாக வீசும் ஒரு நாளில் என்னும் வாசகம் இடம் பெற்றுள்ளது.

3480 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முன் காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூ-க்கச் செல்கின்ற) தனது (அலுவலரான) வா-பரிடம், (வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக்கூடும் என்று சொல்லிவந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்த போது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட்டான்.141

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3481 நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:

(முன் காலத்தில்) ஒரு மனிதர், வரம்பு மீறி (தீய செயல் புரிந்து) வந்தார். அவருக்கு மரணம் வந்த போது தன் மகன்களை அழைத்து, நான் இறந்து விட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு என்னைப் பொடிப் பொடியாக்கி பின்னர் காற்றில் தூவி விடுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வளவும் செய்த பிறகும்) அல்லாஹ் என்னை உயிராக்க முடிந்தால் எவரையும் வேதனைப்படுத்தாத அளவிற்கு ஒரு வேதனையை (தண்டனையாக) எனக்கு அவன் அளிப்பான் என்று கூறினார். அவர் இறந்து விட்ட போது அவ்வாறே அவரைச் செய்து விட்டார்கள். உடனே அல்லாஹ், பூமியை நோக்கி, அவரி(ன் உடல் அணுக்களி)லிருந்து உன்னில் இருப்பவற்றை ஒன்று சேர் என்று கட்டளையிட்டான். அவ்வாறே பூமி செய்தது. அவர் (அல்லாஹ்வின் முன்னிலையில் முழு உருப்பெற்று) நின்றபோது அல்லாஹ், நீ இப்படிச் செய்யும் படி உன்னைத் தூண்டியது எது? என்று கேட்டான். அவர், என் இறைவா! உன் அச்சம் தான் இப்படிச் செய்யும்படி என்னைத் தூண்டியது என்று பதிலளித்தார். ஆகவே, அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளித்தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3482 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத் தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்த போது அவள் அதற்குத் தீனியும் போட வில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவு மில்லை.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.142

3483 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான், நீ வெட்கப்படவில்லை யென்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள் என்பதும்.

இதை அபூ மஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3484 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான், நீ வெட்கப்படவில்லை யென்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள் என்பதும்.143

இதை அபூ மஸ்ஊத் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3485 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

( முன் காலத்தில்) ஒரு மனிதன் தன் கீழங்கியை தற் பெருமையின் காரணத்தால் (கணுக்கா-ன் கீழ் தொங்க விட்டு) இழுத்துக் கொண்டே நடந்த பொழுது, அவன் (பூமி பிளந்து, அதில்) புதைந்து போகும்படி செய்யப் பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக் குள் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3486 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உலகில்) இறுதிச் சமுதாயமான நாம் தாம் மறுமையில்(தகுதியிலும், சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதா யங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப்பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும்.144 ஆகவே, நாளை(சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களுக்குரியதும் ஆகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3487 ஒவ்வொரு ஏழு நாளிலும் தன் தலையையும் உடலையும் கழுவுகின்ற ஒரு நாள் ஒவ்வொரு முஸ்-முக்கும் இருக்க வேண்டும்.145

3488 சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா பின் அபீ சுஃப்யான்

(ரலி) அவர்கள் மதீனாவுக்கு இறுதியாக வருகை தந்தார்கள். அப்போது எங்களுக்கு உரையாற்றியபடி முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, இதை (போ- முடி வைத்துக் கொள்ளும் செயலை) யூதர்களைத் தவிர வேறெவரும் செய்வதை நான் பார்த்ததில்லை. மேலும், நபி (ஸல்) அவர்கள் இதைப் பொய்யானது என்று சொன்னார்கள். தலைமுடியில் (சவுரி முடியை) ஒட்ட வைப்பதைத் தான் நபி (ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.

இந்த நபிமொழி வேறொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

02.11.2009. 02:21




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
11 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி