56-அறப்போரும் அதன் வழிமுறைகளும்8

பாடம் : 176

இஸ்லாமிய அரசின் கீழுள்ள

பிற மதத்தவருக்காகப் பரிந்துரை செய்யலாமா? என்பதும், அவர்களுடன் கொடுக்கல் வாங்கல்கள் செய்வதும்.

3053 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (அன்று) வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா)? என்று கேட்டு விட்டு, அவர்களுடைய கண்ணீர் சரளைக் கல் பூமியை நனைத்து விடும் அளவிற்கு அழுதார்கள். பிறகு கூறினார்கள்:

வியாழக்கிழமையன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், ஓர் ஏட்டை என்னிடம் கொண்டு வாருங்கள். உங்க ளுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள் என்று கூறினார்கள். அப்போது மக்கள் (உரத்த குரலில்) சச்சரவிட்டுக் கொண்டார்கள். ஆனால், ஓர் இறைத் தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல. மக்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக நோயுற்று விட்டார்கள் என்று கூறினார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள், என்னை விட்டு விடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர் களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள (இறை நினைவில் லயித்திருக்கும் இந்த) நிலையே சிறந்தது என்று சொல்லிவிட்டார்கள். (எதையும் எழுதித் தரவில்லை)164 மேலும், அவர்கள் தமது மரணத் தருவாயில் மூன்று விஷயங்களைக் கட்டளையிட்டார்கள். அவை: அரபு தீபகற்பத்திலிருந்து இணை வைப்பவர்களை வெளி யேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக் குழுவினருக்கு நான் கொடுத்து வந்ததைப் போல் நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள்.

...மூன்றாவது கட்டளையை நான் மறந்து விட்டேன்...

யஅகூப் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் முகீரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் அரபு தீபகற்பம் பற்றிக் கேட்டேன். அவர்கள், மக்காவும், மதீனாவும், யமாமாவும், யமனும் (அரபு தீபகற்பத்தில் அடங்கும்) என்று பதிலளித்தார்கள்.

மேலும் யஅகூப் (ரஹ்) கூறுகிறார்: (மக்கா-மதீனா இடையே உள்ள) அல்-அர்ஜ் என்ற இடம் திஹாமாவின் முதற் கட்டமாகும்.

பாடம் : 177

தூதுக் குழுவினரை வரவேற்பதற்காக (ஆடையணிகளால்) அலங்கரித்துக் கொள்வது.

3054 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் கெட்டியான

பட்டு அங்கி ஒன்று சந்தையில் விற்கப்படுவதைக் கண்டார்கள், அதை (வாங்கி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து, அல்லாஹ்வின் தூதரே! இந்த அங்கியை வாங்கி, பெரு நாளின் போதும் தூதுக் குழுக்கள் வருகை தரும் போதும் இதனால் (உங்களை) அலங்கரித் துக் கொள்ளுங்கள் என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்களின் ஆடையாகும் ...அல்லது (மறுமையில்) எந்தப் பங்கும் இல்லாதவர்கள் தான் இதை அணிவார்கள்...... சொன்னார்கள். பிறகு, உமர்

(ரலி) அவர்கள் அல்லாஹ் நாடிய வரை (சிறிது நேரம்) தங்கியிருந்தார்கள். பின்பு, நபி (ஸல்) அவர்கள் பூவேலைப்பாடு செய்யப்பட்ட பட்டு அங்கி ஒன்றை உமர் (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்த நற் பேறும் இல்லாதவருடைய ஆடையாகும் அல்லது ......அல்லது - (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர் தான் இதை அணிவார்...... - கூறினீர்கள். பிறகு, இதையே எனக்கு அனுப்பி வைத்திருக் கிறீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இதை நீங்கள் விற்று விடுவீர்கள்; அல்லது உங்கள் தேவை எதனையாவது இதைக் கொண்டு நிறை வேற்றிக் கொள்வீர்கள் (என்பதற்காக இதை நான் உங்களுக்கு அனுப்பி வைத்தேன்) என்று கூறினார்கள்.165

பாடம் : 178

சிறுவனுக்கு இஸ்லாத்தை எடுத்து ரைப்பது எப்படி?

3055 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர் களின் ஒரு குழுவினருடன் நபியவர் களோடு (தான் இறைத் தூதர் என்று வாதாடிய) இப்னு ஸய்யாதை நோக்கிச் சென்றார்கள்.166 பனீ மகாலா குலத்தாரின் மாளிகைகளுக்கருகே சிறுவர்களுடன் (சிறுவனாக) அவன் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கி விட்டிருந்தான். நபி (ஸல்) அவர்கள் தம் கரத்தால் அவனது முதுகில் அடிக்கும் வரையில் அவன் எதையுமே உணரவில்லை. பிறகு, நபி (ஸல்) அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதர் தான் என்று நீ சாட்சி கூறுகின்றாயா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களை இப்னு ஸய்யாத் (கூர்ந்து) பார்த்து விட்டு,நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) உம்மீகளின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன் என்று பதிலளித்தான். அப்போது இப்னு ஸய்யாத் நபி (ஸல்) அவர்களிடம், நீங்கள் நான் அல்லாஹ்வின் தூதன் என்று (என்னை ஏற்றுக் கொண்டு) சாட்சி கூறுகின்றீர்களா? என்று கேட்டான். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதை நோக்கி, அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நான் நம்பிக்கை கொண்டேன் என்று கூறினார்கள். (பின்னர்) நபி (ஸல்) அவர்கள், (உன் நிலை பற்றி) நீ என்ன நினைக்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், என்னிடம் மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் உதிக்கின்றன என்றான். நபி (ஸல்) அவர்கள், உனக்கு இப்பிரச் சினையில் (உண்மையும் பொய்யும் கலந்து) குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று கூறிவிட்டு, நான் ஒன்றை மனத்தில் உனக்காக (உன்னை சோதிப்பதற்காக) மறைத்து வைத்துள்ளேன் . (அது என்ன என்று சொல்)என்று சொன்னார்கள். இப்னு ஸய்யாத், அது துக் என்று கூறினான். (அதாவது துகான் என்பதை துக் என அரைகுறையாகச் சொன்னான்.)167 உடனே நபி (ஸல்) அவர்கள், தூர விலகிப் போ! நீ உன் எல்லையை தாண்டி விட முடியாது என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவனைக் கொல்ல எனக்கு அனுமதியளியுங்கள். இவனது கழுத்தை நான் சீவி விடுகிறேன் என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை; இவன் அவனில்லையென்றால் இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை என்று சொன்னார்கள்.168

3056 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் தங்கியிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் செல்வதற்காக நடக்கலாயினர். பேரீச்சந் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் நபி (ஸல்) அவர்கள், இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்து விடும் முன்பே அவனிடமிருந்து அவனது பேச்சு எதையாவது கேட்டு விட வேண்டுமென்று திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு நடந்தார்கள். அப்போது இப்னு ஸய்யாத் தனது படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர் வையில் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் தண்டுகளுக் கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதைக் கண்டு இப்னு ஸய்யாதை, ஸாஃபியே!...-இது இப்னு ஸய்யாதின் பெயராகும்-... என்றழைத் தாள். உடனே இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து உட்கார்ந்தான். நபி (ஸல்) அவர்கள், அவள் அவனை அப்படியே விட்டு விட்டிருந்தால் அவன் (உண்மை நிலையைத்) தெளிவுபடுத்தியிருப்பான் என்று சொன்னார்கள்.169

3057 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

.....பிறகு170 நபி (ஸல்) அவர்கள் மக்க ளிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள்:

நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

பாடம் : 179

நபி (ஸல்) அவர்கள் யூதரிடம், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஈருலகிலும்) பாதுகாப்புப் பெறுவீர்கள் என்று கூறியது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.171

பாடம் : 180

எதிரி நாட்டிலிருக்கும் சிலர், அங்கு தமக்குச் செல்வமும் நிலங்களும் இருக்கும் நிலையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அந்த நாட்டை இஸ்லாமிய அரசு கைப்பற்றிக் கொள்ளும் பட்சத்தில் அது அந்தச் சிலருக்கே உரியதாகும்.

3058 உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடைய ஹஜ்ஜின் போது, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் நாளை (மக்காவில்) எங்கு தங்குகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (அபூதா-பின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுச் சென்றுள் ளாரா?172 என்று கேட்டு விட்டுப் பிறகு, குறைஷிகள் இறைநிராகரிப்பில் நிலைத்திருக்கப் போவதாக சத்தியம் செய்த இடமான முஹஸ்ஸப் என்கிற பனூ கினானா பள்ளத்தாக்கில் நாளை நாம் தங்கவிருக்கின்றோம்என்று கூறினார்கள். பனூ கினானா குலத்தார் குறைஷிகளிடம் பனூ ஹாஷிம் கிளையாருக்கு எதிராக, அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ள மாட்டோம்; அவர்களுக்குப் புக-டம் அளிக்கவும் மாட்டோம் என்று ஒப்பந்தம் செய்திருந்ததையே நபி (ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.173

3059 உமர் (ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமை அஸ்லம் (ரஹ்) கூறியதாவது:

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், (ஸகாத் கால்நடைகளின்) பிரத்தியேக மேய்ச்சல் நிலம் ஒன்றுக்கு ஹுனை என்றழைக்கப்படும் தமது அடிமை ஒருவரை (காவலராக) நியமித்தார்கள். அப்போது, ஹுனையே! உன் கையை முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதிலிருந்து காத்துக் கொள். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபப் பிரார்த்தனைக்கு அஞ்சு. ஏனெனில், அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை (அல்லாஹ் வினால்) ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும். சிறு ஒட்டக மந்தை களையும் சிறு ஆட்டு மந்தைகளையும் ஓட்டி வருபவர்கள் (மேய்ச்சல் நிலத்திற்குள்) நுழைய அனுமதியளி. (செல்வந்தர்களான) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் மற்றும் உஸ்மான் பின் அஃப்பான் ஆகியோரின் கால்நடை களைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. (அவற்றை உள்ளே நுழைய விடாதே.) ஏனெனில், அவ்விருவரின் கால்நடை களும் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய் விட்டால் அவர்களிருவரும் (தம் பிழைப்பிற்குத் தமது) பேரீச்சந் தோட்டங் களையும் விளைநிலங்களையும் பயன் படுத்திக் கொள்வார்கள். ஆனால், சிறிய ஒட்டக மந்தைகளையும் சிறிய ஆட்டு மந்தைகளையும் வைத்திருப்பவர்கள் தங்கள் கால்நடைகள் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய் விட்டால் (கலீஃபாவான) என்னிடம் தம் பிள்ளை குட்டிகளை அழைத்துக் கொண்டு வந்து, விசுவாசி களின் தலைவரே! நான் இவர்களை (பட்டினி கிடந்து) சாகவிட்டு விடவா?என்று கேட்பார்கள். ஆகவே, (முஸ்லிம்களின் பொதுநிதியிலிருந்து) தங்கத்தையும் வெள்ளியையும் (அவர்களுக்குத் தருவதை) விட (அரசின் பிரத்தியேக மேய்ச்சல் நிலத்திலிருந்து) தண்ணீரையும் புற்பூண்டுகளையும் தருவது எனக்கு இலேசானதாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவர்களுக்கு அநீதியிழைத்து விட்டதாக இவர்கள் கருதுகிறார்கள். இது இவர்களின் நாடு. இதற்காக இவர்கள் அறியாமைக் காலத்திலும் போரிட் டிருக்கிறார்கள்; இஸ்லாத்தின் காலத்திலும் இஸ்லாத்தைத் தழுவி இதற்காகப் போரிட்டிருக்கிறார்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவோரை) நான் ஏற்றியனுப்ப வேண்டிய (கால்நடைச்) செல்வம் மட்டும் தேவையில்லையென்றால் இவர் களுடைய நாட்டிலிருந்து ஓர் அங்குலத்தைக் கூட (கையகப்படுத்தி) பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக நான் ஆக்கியிருக்க மாட்டேன் என்று கூறினார்கள்.

பாடம் : 181

(அறப் போருக்குச் செல்ல முன்வரும்) மக்களை தலைவர் எழுதிப் பதிவு செய்வது.

3060 ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்களில் இஸ்லாத்தை ஏற்றிருப் பதாகக் கூறுபவர்களின் பெயர்களை எனக்காக எழுதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.174 நாங்கள் அவர்களுக்காக ஆயிரத்து ஐநூறு பெயர் களை எழுதினோம். அப்போது நாங்கள், நாம் ஆயிரத்து ஐநூறு பேர் இருக்க (எதிரிகளுக்கு) நாம் பயப்படுவதா? என்று கேட்டோம். (ஆனால், பிற்காலத்தில்) நாங்கள் அச்சப்பட்டுக் கொண்டு தனியாகத் தொழுமளவிற்கு சோதனைக் குள்ளாக்கப்பட்டிருந்ததை நான் பார்த்திருக்கின்றேன்.

அறிவிப்பாளர் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

 (மொத்தம்) ஐநூறு பேர்களை நாங்கள் கண்டோம்என்று ஹுதைஃபா (ரலி) மற்றோர் அறிவிப்பில் கூறுகிறார்கள்.

அறுநூறு பேரிலிருந்து எழுநூறு பேர் வரை என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் சொன்னதாக அபூ முஆவியா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.

3061 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன புனிதப் போரில் கலந்து கொள் வதாக (ராணுவ வீரர்கள் பட்டிய-ல்) எனது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், என் மனைவி ஹஜ் செய்ய

விருக்கிறாள்என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், நீ திரும்பிச் சென்று உன் மனைவியுடன் ஹஜ் செய் என்று கூறினார்கள்.175

பாடம் : 182

பாவியான மனிதனின் வாயிலாகவும் இந்த மார்க்கத்திற்கு அல்லாஹ் வலுவூட்டுகின்றான்.

3062 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் நாங்கள் (கைபர் போரில்) கலந்து கொண்டோம். தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்ட ஒரு மனிதரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள், இவர் நரகவாசி களில் ஒருவர் என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்த போது காயம் ஒன்று அவருக்கு ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து, இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று குறிப்பிட் டீர்களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்து விட்டார் என்று கூறப்பட்டது. அப்போதும் நபி (ஸல்) அவர்கள், அவர் நரகத்திற்கே செல்வார் என்று (மீண்டும்) கூறினார்கள். மக்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இந்தச் சொல்லை) சந்தேகப்படலாயினர். அவர்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது, அவர் (போரில் கொல்லப்பட்டு) இறக்கவில்லை. ஆயினும், அவர் கடும் காயத்திற்கு ஆளானார். இரவு வந்த போது, காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், அல்லாஹ் மிகப் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமாவேன் என்பதற்கு நானே சாட்சி கூறுகிறேன் என்று கூறினார்கள். பிறகு, பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் மக்களிடையே, முஸ்-மான ஆன்மா தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகின்றான் என்று பொது அறிவிப்புச் செய்தார்கள்.176

பாடம் : 183

ஒரு போரில் (தளபதி எவரும் இல்லாத போது) பகைவர்களைக் குறித்த அச்சம் ஒருவருக்கு ஏற்பட்டால் நியமிக்கப் படாமல் தானாகவே அவர் படைத் தளபதியாகலாம்.

3063 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மூத்தா போரின் போது177 போர்க் கள நிகழ்ச்சிகளை மதீனாவில் இருந்த படியே நேர்முக வர்ணணையாக விவரித்து,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். உரையில், இப்போது (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஸைத் பின் ஹாரிஸா எடுத்துக் கொண்டார். அவர் கொல்லப்பட்டு விட்டார். பிறகு அதை ஜஅஃபர் பின் அபீதா-ப் எடுத்துக் கொண்டார். அவரும் கொல்லப்பட்டு விட்டார். பிறகு அப்துல்லாஹ் பின் ரவாஹா எடுத்துக் கொண்டு விட்டார். இப்போது அவரும் கொல்லப்பட்டு விட்டார். பிறகு, கா-த் பின் வலீத் (நமது) உத்தரவு இன்றியே (கொடியை) எடுத்துக் கொண்டு விட்டார். அல்லாஹ் அவருக்கே வெற்றி வாய்ப்பை அளித்து விட்டான் என்று கூறி விட்டு, (இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது எனக்கு மகிழ்ச்சி யளிக்காது என்றோ, (இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்காது என்றோ சொன்னார்கள்.178 மேலும், இதைச் சொல்லும் போது நபி (ஸல்) அவர்களுடைய கண்கள் இரண்டும் கண்ணீரைப் பொழிந்து கொண்டிருந்தன.179

பாடம் : 184

படையனுப்பி உதவுதல்.

3064 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ -ஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாகக் கூறினர்.180 மேலும், தமது சமுதாயத்தினரை நோக்கி ஒரு படை யனுப்பி உதவும்படியும் நபி (ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளிலிருந்து எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள். அவர்களை நாங்கள் காரீகள் (குர்ஆனை மனனம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்து வந்தோம். அவர்கள் பகல் நேரத்தில் விறகு சேகரிப்பார்கள்; இரவு நேரத்தில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர். இறுதியில், பீரு மஊனா181 என்னுமிடத்தை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக் கொன்று விட்டனர். உடனே, நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ -ஹ்யான் ஆகிய குலங்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறை வசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதி வந்தோம்.

நாங்கள் எங்கள் இறைவனைச் சந்திக்கச் சென்று விட்டோம் என்றும், அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான்; நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தியடைந்தோம் என்றும் எங்கள் சமுதாயத்திற்கு எங்களைப் பற்றித் தெரிவித்து விடுங்கள் என்பதே அந்த வசனம்.

பின்னர், இந்த வசனத்தை ஓதுவது (இறைவனாலேயே) ரத்து செய்யப்பட்டு விட்டது.182

பாடம் : 185

பகைவர்களை வென்று அவர்களுடைய திறந்த வெளிப் பகுதியில் மூன்று நாட்கள் தங்குவது.

3065 அபூ தல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத் தாரை வெற்றி கொண்டால் அவர்

களுடைய திறந்த வெளிப் பகுதியில் மூன்று நாட்கள் தங்குவார்கள்.

இதே போன்று முஆத் (ரஹ்) அவர்களும் அப்துல் அஃலா (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 186

கனீமத் - போர்ச் செல்வத்தைப் போரின் போதும், பிரயாணத்திலும் பங்கிடுவது.

ராஃபிஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் துல்ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது ஓர் ஆடும் ஓர் ஒட்டகமும் எங்களுக்குக் கிடைத்தன. நபி (ஸல்) அவர்கள் பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாகக் கருதினார்கள்.183

3066 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைத் தாம் பங்கிட்ட இடமான ஜிஇர்ரானாவிலிருந்து (புறப்பட்டுப் போய்) நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்தார்கள்.184

பாடம் : 187

இணைவைப்பவர்கள் முஸ்-மின் செல்வத்தைக் கொள்ளையடித்துச் செல்ல, அதையே அவர் பிறகு பெற்றுக் கொண்டால்...

3067 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னுடைய குதிரை ஒன்று (என்னைக் கீழே வீழ்த்தி விட்டு ஓடிச்) சென்றது. அதை எதிரிகள் பிடித்துக் கொண்டனர். பின்னர், முஸ்லிம்கள் எதிரிகளை வென்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் அது என்னிடம் திருப்பித் தரப்பட்டு விட்டது. (இவ்வாறே) என்னுடைய அடிமை ஒருவன் தப்பியோடி ரோமர்(பைஸாந் தியர்)களுடன் சேர்ந்து கொண்டான். பைஸாந்தியர்களை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட போது அந்த அடிமையை

கா-த் பின் வலீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.

3068 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய அடிமையொருவன் தப்பி யோடி பைஸாந்தியர்களுடன் சேர்ந்து கொண்டான். கா-த் பின் வலீத் (ரலி) அவர்கள் பைஸாந்தியர்களை வெற்றி கொண்ட போது, அவனை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். (இவ்வாறே) இப்னு உமர் (ரலி) அவர்களுடைய குதிரை யொன்று விரண்டோடி பைஸாந்தியர் களிடம் சிக்கிக் கொண்டது. பைஸாந்திய நாட்டை கா-த் பின் வலீத் (ரலி)

அவர்கள் வெற்றி கொண்ட போது அதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர் களிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.

3069 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஸ்லிம்கள் பைஸாந்தியர்களைப் போர்க்களத்தில் சந்தித்த போது நான் ஒரு குதிரையின் மீது (பயணித்தபடி) இருந்தேன்; அப்போது முஸ்லிம்களின் (படைத்) தலைவராக கா-த் பின் வலீத்

அவர்கள் இருந்தார்கள். அவரை அபூபக்ர் (ரலி) அவர்கள் (தளபதியாக) அனுப்பியிருந்தார்கள். (எனது) அந்தக் குதிரையை எதிரிகள் எடுத்துக் கொண்டனர். எதிரிகள் தோற்கடிக்கப்பட்ட போது கா-த் பின் வ-த் (ரலி) அவர்கள் எனது குதிரையைத் திருப்பித் தந்து விட்டார்கள்.

பாடம் : 188

பாரசீக மொழியிலும் (அரபியல்லாத பிற அஜமி) மொழியிலும் பேசுவது.

அல்லாஹ் கூறுகிறான்:

வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளன வையே. திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன. (30:22)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

தூதர்கள் அனைவரையும் அவரவ ரின் சமுதாய மொழியிலேயே தூதுச் செய்தி அறிவிப்பவர்களாய் நாம் அனுப்பி வைத்தோம். (14:4)185

3070 ஜாபிர் பின் அப்தில்லாஹ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

(அகழ்ப் போரின் போது) நான் நபி (ஸல்) அவர்களிடம்,அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் ஆட்டுக் குட்டி ஒன்றை அறுத்தோம்; நான் ஒரு ஸாவு வாற்கோதுமையை அரைத்து மாவாக்கி யுள்ளேன்; ஆகவே, தாங்களும் இன் னொருவரும் (சேர்ந்து அதை உண்பதற்கு) வாருங்கள் என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அகழ் தோண்டு பவர்களே! ஜாபிர் விருந்துச் சாப்பாடு தயாரித்திருக்கிறார். சீக்கிரம் வாருங்கள் என்று உரத்த குரலில் அழைத்தார்கள்.186

3071 உம்மு கா-த் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் நான் என் தந்தையுடன் மஞ்சள் நிறச் சட்டை ஒன்றை அணிந்து கொண்டு சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இவள்) நன்றாயிருக்கிறாள். (இவள்) நன்றாயிருக்கிறாள்என்று சொன்னார்கள். நான் ((நபி (ஸல்) அவர்களின் இரு புஜங்களுக்கிடையே இருந்த) நபித்துவ முத்திரையுடன் விளையாடத் தொடங்கினேன். உடனே, என தந்தை என்னை அதட்டினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (குழந்தை தானே!) அவளை (விளையாட) விடுவீராக! என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்தச் சட்டையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்து விடு. பிறகும் அதைக் கிழித்து நைந்து போகச் செய்து விடு. மீண்டும் அதைக் கிழித்து நைந்து போகச் செய்து விடு என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள், அந்தச் சட்டை, நிறம் பழுத்துப் போய் மக்களால் பேசப்படும் அளவிற்கு உம்மு கா-த் (ரலி) அவர்கள் நெடுங்காலம் வாழ்ந்தார்கள் என்று கூறுகின்றார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறிய சனா (நன்றாயிருக் கிறாள்) என்னும் சொல் அபிசீனிய மொழிச் சொல்லாகும்என்றும் கூறுகின்றார்கள்.187

3072 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள் (சிறுவராயிருந்த போது) தருமப் பொருளாக வந்த பேரீச்சம் பழங்களி

லிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் வைத்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் பாரசீக மொழியில்,

 கிஹ் கிஹ்-சீச்சீ! (என்று சொல்லி விட்டு) நாம் தருமப் பொருளைச் சாப்பிட மாட்டோம் என்று உனக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள்.188

பாடம் : 189

(போர்ச் செல்வங்களை) மோசடி செய்வது (பெரும் பாவமாகும்).

அல்லாஹ் கூறுகிறான்:

எவரேனும் மோசடி செய்தால் மோசடி செய்த பொருளுடன் மறுமை நாளில் அவர் வருவார்.(3:161)

3073 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத்தார்கள். அப்போது, மறுமை நாளில் தன் கழுத்தில், கத்திக் கொண்டி ருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்து கொண்டு வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்) அப்போது நான், உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (இறைச் சட்டத்தை) எடுத்துரைத்து விட்டேன் என்று கூறி விடுவேன். இவ்வாறே, (மறுமை நாளில்) தன் கழுத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன் என்று கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்ளியும் தங்கமும் சுமந்து கொண்டு வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன் என்று கூறி விடுவேன். அல்லது அசைகின்ற எந்தப் பொருளையாவது தன் கழுத்தில் சுமந்து கொண்டு வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்என்று (அபயம் தேடி) அலறிய நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. (இறைச் சட்டத்தை) உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன் என்று கூறி விடுவேன் என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்.189

பாடம் : 190

(போர்ச் செல்வத்தில்) சிறிதளவு மோசடி செய்வது(ம் பாவமே).

(மோசடியாக மேலங்கியொன்றை எடுத்து வைத்திருந்த கிர்கிரா என்பவரைக் கையும் களவுமாகப் பிடித்த போது) நபி (ஸல்) அவர்கள் அவரது பொருள்களை எரித்து விட்டார்கள் என்று அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் கூறவில்லை. இது தான் (எரித்தார்கள் என்று கூறப்படாத இந்த அறிவிப்பு தான் எரித்து விட்டார்கள் என்று கூறப்பட்டுள்ள அறிவிப்பை விட) சரியானதாகும்.190

3074 அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் பயணச் சுமைகளுக்குக் காவலாக கிர்கிரா என்ற ழைக்கப்பட்ட மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (ஒரு நாள்) இறந்து விட்டார். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் நரகத்தில் நுழைவார் என்று கூறினார்கள். (இதைக் கேட்டு) நபித் தோழர்கள் அவரைப் பார்ப்பதற்காகச் சென்றனர். அங்கு அவர் மோசடி செய்து (திருடி) எடுத்து வைத்திருந்த மேலங்கி ஒன்றைக் கண்டார்கள்.191

(என் ஆசிரியர்) இப்னு சலாம் (ரஹ்) அவர்கள் கிர்கிரா வை கர்கரா என்று வாசிக்க வேண்டும் என்று கூறினார்கள் என அபூ அப்தில்லாஹ் புகாரீயாகிய (நான்) கூறுகிறேன்.

பாடம் : 191

போரில் கிடைத்த ஒட்டகங்களையும் ஆடுகளையும் (பங்கிடுவதற்கு முன்னால்) அறுப்பது வெறுக்கத் தக்கது.

3075 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் துல்ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது மக்களுக்குப் பசி ஏற்பட்டது. சில ஒட்டகங்களும் சில ஆடுகளும் (போர்ச் செல்வமாக) எங்களுக்குக் கிடைத் தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். ஆகவே, மக்கள் அவசரப்பட்டுப் பாத்திரங் களை அடுப்புகளில் வைத்து (சமைக்கத் தொடங்கி)விட்டார்கள். (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், பாத்திரங்களைத் தலைகீழாகக் கவிழ்க்கும்படி உத்தரவிட அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டன. பிறகு (அவற்றை) நபி (ஸல்) அவர்கள் பங்கிட் டார்கள். அவர்கள் பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாகக் கருதினார்கள். அவற்றில் ஓர் ஒட்டகம் ஓடி விட்டது மக்களிடம் சில குதிரைகளே இருந்தன. அந்த ஒட்டகத்தை அவர்கள் விரட்டிப் பிடிக்க முயன்றார்கள். அது அவர்களைக் களைப்படையச் செய்து விட்டது. ஒரு மனிதர் அதை நோக்கி ஓர் அம்பை எய்தார். அல்லாஹ் அந்த ஒட்டகத்தை (ஓட முடியாமல்) தடுத்து நிறுத்தி விட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள், காட்டு மிருகங்களில் கட்டுக் கடங்காதவை இருப்பது போல் இந்த விலங்குகளும் கட்டுக்கடங்காதவை யாகும். உங்களிடமிருந்து விரண்டோடி விடுபவற்றை இவ்வாறே செய்யுங்கள். (அம்பெய்து தடுத்து நிறுத்துங்கள்) என்று கூறினார்கள். நான், எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் நாளை (போர்க் களத்தில்) எதிரிகளைச் சந்திக்க நேரிடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். ஆகவே, நாங்கள் (அவற்றை வாட்களால் அறுக்காமல்) மூங்கில்களால் அறுக்க லாமா?என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரத்தத்தை ஓடச் செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை நீங்கள் உண்ணலாம்; பல்லையும் நகத்தையும் தவிர! இதைப் பற்றி (இந்த இரண்டினாலும் அறுக்கப்பட்டதை ஏன் உண்ணக் கூடாது என்பதற்கான காரணத்தை) நான் உங்களுக்குச் சொல்கிறேன்: பற்களோ எலும்பாகும். நகங்களோ அபிசீனியர் களின் கத்திகளாகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.192

பாடம் : 192

வெற்றிகள் குறித்து நற்செய்தி சொல்வது.

3076 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், துல் கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே யமன் நாட்டு கஅபா என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது (குதிரை) வீரர் களுடன் புறப்பட்டேன். அவர்கள் சிறந்த குதிரைப் படை வீரர்களாக இருந்தனர். என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். ஆகவே, அவர்கள் என் நெஞ்சில் அடித்தார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்களுடைய விரல்கள் பதிந்த அடையாளத்தை என் நெஞ்சில் நான் பார்த்தேன். அப்போது அவர்கள் இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு என்று பிரார்த்தித்தார்கள். நான் அதை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். நபி (ஸல்) அவர்களுக்கு அதை (உடைத்து எரித்து விட்டது) பற்றிய நற்செய்தி தெரிவிக்கச் சொல்லி ஆளனுப்பினேன். என்னுடைய தூதுவர், அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டு விட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கின்றேன் என்று கூறினார். உடனே, நபி (ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களுடைய குதிரைப் படையின ருக்கும் பரக்கத்(எனும் அருள் வளத்)தை அளிக்கும்படி பல முறை அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.193

பாடம் : 193

நற்செய்தி அறிவிப்பவருக்குக் கொடுக் கப்படும் அன்பளிப்பு.

(தபூக் போரில் கலந்து கொள்ளாமல் அசிரத்தையாக இருந்த குற்றத்திற்காக, தாம் மன்னிப்புக் கோரியதை ஏற்று) தமக்கு இறைவன் மன்னிப்பு வழங்கி விட்டான் என்னும் நற்செய்தி தமக்கு அறிவிக்கப்பட்ட போது (நற்செய்தியை அறிவித்தவருக்கு) கஅப் பின் மாலிக்

(ரலி) அவர்கள் இரண்டு துணிகளை (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.194

பாடம் : 194

(மக்கா) வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் கிடையாது.

3077 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், ஹிஜ்ரத் இனி கிடையாது. ஆயினும், ஜிஹாதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் (நிய்யத்) கொள்வதும் உண்டு. நீங்கள் அறப் போர் புரியப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் உடனே புறப்பட்டு விடுங்கள் என்று கூறினார்கள்.195

3078 & 3079 முஜாஷிஉ பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சகோதரர் முஜா-த் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, இவர் (என் சகோதரர்) முஜா-த்; தங்களிடம் ஹிஜ்ரத் செய்வதாக உறுதிமொழியளிக்(க வந்திருக்)கிறார் என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், மக்கா வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் கிடையாது. ஆயினும், நான் இவரிடம் இஸ்லாத்திற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி வாங்குவேன் என்று கூறினார்கள்.196

3080 அதா பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர் களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (முஸ்த-ஃபாவில்) ஸபீர் மலையருகே தங்கியிருந்தார்கள்.197 அவர்கள் எங்க ளிடம், நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மக்காவின் வெற்றியை அளித்த பின்னால் (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்யும் கடமை நீங்கி விட்டது என்று சொன்னார்கள்.

பாடம் : 195

இஸ்லாமிய அரசின் கீழுள்ள பிற சமுதாயப் பெண்கள் (அரச

துரோகக் குற்றமிழைக்கும் போது) அல்லது முஸ்-மான பெண்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் போது அவர்களின் முடியை, மற்றும் அவர்களின் ஆடையை அவிழ்த்துச் சோதிக்க வேண்டிய (பணி) நிர்பந்தம் (அரசு அதிகாரியான) ஒருவருக்கு ஏற்பட்டால், அவ்வாறு செய்ய அனுமதியுண்டு.

3081 சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்களுடைய ஆதரவாளர்களில் ஒருவரான அபூ அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான இப்னு அதிய்யா (ரஹ்) அவர்களிடம் இப்படிக் கூறினார்கள்:

உங்கள் தோழர் (அலீ) அவர்களுக்கு ரத்தம் சிந்துவதற்கான துணிவைக் கொடுத்தது எது என்று நான் அறிவேன்.

(ஏனெனில்) அவர் (பின்வருமாறு) சொல்ல நான் கேட்டிருக்கிறேன்:

என்னையும் ஸுபைர் (ரலி) அவர் களையும் நபி (ஸல்) அவர்கள் அனுப்பி, நீங்கள் இன்ன ரவ்ளா என்னும் இடத்திற்குச் செல்லுங்கள். அங்கு ஒரு பெண்ணை நீங்கள் காண்பீர்கள். அவளிடம் ஹாதிப் ஒரு கடிதத்தைக் கொடுத்திருக்கின்றார் என்று கூறினார்கள். நாங்கள் ரவ்ளாவுக்குச் சென்று, கடிதம் (எங்கே)? என்று (அப் பெண்ணிடம்) கேட்டோம். அந்தப் பெண், அவர் என்னிடம் கொடுக்க வில்லை என்று கூறினாள். நாங்கள், நீயாக அதை வெளியே எடுக்கிறாயா அல்லது நான் உன்னை நிர்வாணப்படுத்தட்டுமா? என்று கேட்டோம். உடனே, அவள் தன் நீண்ட கூந்தல் தொட்டுக் கொண்டிருக்கும் இடுப்பிலிருந்து அதை வெளியே எடுத்தாள். மடியிலிருந்து (கடிதம் கிடைத்த) உடனே நபி (ஸல்) அவர்கள், ஹாதிப் அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். ஹாதிப் அவர்கள் (வந்து), (அல்லாஹ்வின் தூதரே!) அவசரப்படாதீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நிராகரிக்கவு

மில்லை; இஸ்லாத்தின் மீது எனக்கு நேசத்தைத் தவிர வேறெதுவும் அதிகரிக்கவுமில்லை. தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர் களுடைய மனைவி மக்களையும் அவர்களது செல்வத்தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகையோர் இருக்கின்றனர். ஆனால், எனக்கோ எவருமே இல்லை. ஆகவே, அவர்களிடம் நான் எனக்கு ஓர் ஆதரவை உருவாக்கிக் கொள்ள விரும்பினேன் என்று கூறினார்கள். அவர்களுடைய இந்த வாக்குமூலத்தை நபி (ஸல்) அவர்கள் உண்மையானதென்று ஏற்றுக் கொண் டார்கள். ஆனால், உமர் அவர்கள், என்னை அவரது கழுத்தைக் கொய் தெறிய அனுமதியுங்கள். ஏனென்றால், அவர் நயவஞ்சகராகி விட்டார் என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களுக்கென்ன தெரியும்? அல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் தூய எண்ணத்தை அறிந்து கொண்டு (அவர்களை நோக்கி), நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டிருக் கலாம் எனச் சொன்னார்கள்.198

நபி (ஸல்) அவர்களின் இந்தச் சொல்லைக் கேட்டிருந்தது தான் அலீ (ரலி) அவர்களுக்கு இந்தத் துணிவைத் தந்திருக்கின்றது.

(இவ்வாறு அபூ அப்திர் ரஹ்மான் கூறினார்.)

பாடம் : 196

அறப்போர் வீரர்களை வரவேற்பது.

3082 இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஜஅஃபர்

(ரலி) அவர்களிடம், நானும் நீங்களும் இப்னு அப்பாஸ் அவர்களும் நபி (ஸல்) அவர்களை எதிர் கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்

டார்கள். அதற்கு அவர்கள், ஆம், நபி (ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸ் அவர்களையும் தம்முடன்) வாகனத்தில் ஏற்றிக் கொண்டார்கள்; உங்களை விட்டு விட்டார்கள் என்று பதிலளித்தார்கள்.

3083 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (சிறுவர்களாயிருந்த போது மற்ற) சிறுவர்களுடன் சேர்ந்து (தபூக் போரிலிருந்து திரும்பி வரும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை வரவேற் பதற்காக வதா மலைக் குன்றை நோக்கிச் சென்றோம்.199

பாடம் : 197

புனிதப் போரிலிருந்து திரும்பும் போது அறப்போர் வீரர் என்ன சொல்ல வேண்டும்?

3084 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (புனிதப் போரி

லிருந்து) திரும்பிச் செல்லும் போது மூன்று முறை அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன் என்று கூறிவிட்டு, இறைவன் நாடினால் நாங்கள் பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும், வணக்கம் புரிந்தவர்களாகவும், (அவனைப்) புகழ்ந்தவர்களாகவும், எங்கள் இறைவனுக்கே (நெற்றியை நிலத்தில் வைத்துச்) சிரம் பணிந்தவர்களாகவும் திரும்பிச் செல்கின்றோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கிக் காட்டி விட்டான்; தன் அடியாருக்கு உதவி புரிந்து விட்டான்; தன்னந் தனியாக (அனைத்துக்) குலங்களையும் தோற்க டித்து விட்டான் என்று கூறினார்கள்.200

3085 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உஸ்ஃபானிலிருந்து (போர் முடிந்து) திரும்பிய போது நாங்கள் அவர்களுடன் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். (தமது துணை வியார்) ஸஃபிய்யா பின்த்து ஹுயை

(ரலி) அவர்களை (வாகனத்தில்) தமக்குப் பின்னே அமர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஒட்டகம் கால் சறுக்கி விட அவர்களிருவரும் ஒரு சேரக் கீழே விழுந்தார்கள். உடனே, அபூ தல்ஹா

(ரலி) அவர்கள் (தம் வாகனத்திலிருந்து) கீழே குதித்து, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள்,

(முத-ல்) அந்தப் பெண்ணை (ஸஃபிய்யாவை) கவனி என்று கூறினார்கள். உடனே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் ஒரு துணியைத் தம் முகத்தின் மீது போட்டு மூடிக் கொண்டு ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் சென்று அவர்கள் மீது அந்தத் துணியைப் போட்டார்கள். பிறகு இருவருக்கும் அவர்களுடைய வாகனத்தைச் சரிசெய்து கொடுத்தார்கள். உடனே அவ்விருவரும் (வாகனத்தில்) ஏறிக் கொண்டார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதரைச் சுற்றிலும் (வட்டமாக) நின்று கொண்டு அவர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்றோம். நாங்கள் மதீனாவை நெருங்கி யவுடன் நபி (ஸல்) அவர்கள், பாவ மன்னிப்புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனையே வணங்கியவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக் கின்றோம் என்று கூறினார்கள். மதீனாவிற்குள் நுழையும் வரை அவர்கள் இப்படியே சொல்லிக் கொண்டி ருந்தார்கள்.

3086 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் அபூ தல்ஹா (ரலி) அவர் களும் நபி (ஸல்) அவர்களுடன் (போரிலிருந்து) மதீனா நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். நபி (ஸல்) அவர் களுடன் ஸஃபிய்யா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்களை நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டி ருந்தார்கள். அவர்கள் சிறிதளவு தூரத் தைக் கடந்து வந்து கொண்டிருந்த போது வழியில் வாகனம் சறுக்கி விழுந்தது. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் துணைவி யாரும் கீழே விழுந்தார்கள்.

அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மேலும், அனஸ் (ரலி) அவர்கள் இப்படிச் சொன்னார்கள் என்று எண்ணுகிறேன்:

அபூ தல்ஹா அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து குதித்து இறங்கி அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கு வானாக! தங்களுக்குக் காயம் எதுவும் ஏற்பட்டதா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை. ஆயினும், நீ அந்தப் பெண்ணை கவனி என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹா அவர்கள் தம் துணியைத் தம் முகத்தின் மீது போட்டு மூடிக் கொண்டு ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இருந்த திசையை நோக்கி நடந்து சென்று அவர்கள் மீது அத்துணியைப் போட் டார்கள். உடனே, அப் பெண்மணி (ஸஃபிய்யா (ரலி) அவர்கள்) எழுந்து கொண்டார்கள். பிறகு அபூதல்ஹா அவர்கள், அவர்கள் (நபியவர்கள் மற்றும் அன்னை ஸஃபிய்யா) இருவருக்காகவும் அவர்களுடைய வாகனத்தைச் சரி செய்து தந்தவுடன் இருவரும் ஏறிக் கொண்டனர். பிறகு, அனைவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். மதீனாவின் அருகே வந்த போது நபி (ஸல்) அவர்கள், பாவ மன்னிப்புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனை வணங்கியவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக் கின்றோம் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் நுழையும் வரை இவ்வாறு கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

பாடம் : 198

ஒருவர் பிரயாணத்திலிருந்து திரும்பிய வுடன் தொழுவது.

3087 ஜாபிர் பின் அப்தில்லாஹ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தேன். நாங்கள் (பிரயாணம் முடிந்து) மதீனாவிற்குத் திரும்பி வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், பள்ளிவாச-ல் நுழைந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக! என்று கூறினார்கள்.201

3088 கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பிரயாணத்திலிருந்து ளுஹா (முற்பகல்) நேரத்தில் திரும்பி வந்தால் பள்ளிவாச-ல் நுழைந்து உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்.202

பாடம் : 199

பிரயாணத்திலிருந்து திரும்பிய பின் உணவு அருந்துவது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் (பயணத்திலிருந்து திரும்பி வந்தவுடன்) தமக்கு வரவேற்புத் தந்து, முத-ல் தங்க இடம் கொடுத்து விருந்துபசாரம் செய்ப வருக்காக (வழமையாக நோற்கும் உபரி) நோன்பை (நோற்காமல்) விட்டு விடுவார்கள்.

3089 ஜாபிர் பின் அப்தில்லாஹ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்த போது ஒட்டகத்தையோ மாட்டையோ அறுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை இரண்டு ஊக்கியாக்களுடன் ஒரு திர்ஹம் அல்லது இரண்டு திர்ஹம்களைக் கொடுத்து என்னிடமிருந்து ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள். (மதீனா விற்கு அருகிலுள்ள) ஸிரார் என்னு மிடத்திற்கு அவர்கள் வந்த போது ஒரு மாட்டை அறுக்கும்படி உத்தர விட்டார்கள். அதன்படி அறுக்கப்பட்டது. அதை அனைவரும் உண் டார்கள். மதீனாவுக்கு வந்த போது பள்ளி வாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத் துகள் தொழும்படி எனக்கு உத்தர விட்டார்கள். (தொழுது முடித்த) பிறகு, ஒட்டகத்தின் விலையை எனக்கு நிறுத்துத் தந்தார்கள்.

3090 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு பிரயாணத்திலிருந்து திரும்பி வந்தேன். நபி (ஸல்) அவர்கள், இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக! என்று (என்னிடம்) கூறினார்கள்.

ஸிரார் என்பது மதீனாவின் ஓரத்திலுள்ள ஓரிடமாகும்.

01.11.2009. 23:16




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
66 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி