37-வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்து

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அத்தியாயம் : 37

37-வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்

பாடம் : 1

நல்ல மனிதரைக் கூலிக்கு அமர்த்துதல்.

அல்லாஹ் கூறுகிறான்:

அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்: என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்! (இவரைப் போன்ற) வலிமையுள்ளவரும் நம்பிக்கைக்குரியவரும்தான் நீங்கள் கூலிக்கு அமர்த்துவதற்குச் சிறந்தவராவார். (28:26)

நம்பகமான கருவூலக் காப்பாளர் பற்றி அவரும் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார் என நபிமொழியொன்று கூறுகின்றது.

பதவியை விரும்புபவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதவி வழங்கவில்லை.

2260 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தை மனபூர்வமாக நிறைவேற்றக் கூடிய, நம்பகமான கருவூலக் காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2261 அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் (எனது) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த மற்றும் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம்; (அவர்கள் இருவரும் நபி ளஸல்ன அவர்களிடம் பதவி கேட்டார்கள்; நான் (நபி ளஸல்ன அவர்களிடம்), இவ்விருவரும் பதவி கேட்பார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை. (முன்பே நான் இதை அறிந்திருந்தால் இவர்களைத் தங்களிடம் அழைத்து வந்திருக்கவே மாட்டேன்!) என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் எவர் பதவியை விரும்புகிறாரோ அவருக்கு நாம் பதவி கொடுக்க மாட்டோம்! என்று பதிலளித்தார்கள்.

பாடம்: 2

சில கீராத் கூலிக்காக ஆடு மேய்த்தல்.

2262 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்தததில்லை! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள், நீங்களுமா? என்று கேட்டார்கள். ஆம். மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்! என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

பாடம் : 3

தேவை ஏற்படும் போதும் முஸ்லிம்கள் கிடைக்காத போதும் இணைவைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துதல்.

நபி (ஸல்) அவர்கள் கைபரிலுள்ள யூதர்களிடம் வேலை வாங்கியிருக்கிறார்கள்.

2263 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குச் சென்றபோது) நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் பனூ அப்து பின் அதீ, பனூதீல் குலத்தைச் சேர்ந்த ஒருவரை (வழிகாட்டியாகக்) கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் தேர்ந்த வழிகாட்டியாக இருந்தார். அம்மனிதர் ஆஸ் பின் வாயிலின் குடும்பத்தாரிடம் உடன்படிக்கை செய்திருந்தார்; மேலும், அவர், குறைஷிக் காஃபிர்களின் மார்க்கத்தில் இருந்தார். நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அவரை நம்பித் தமது ஒட்டகங்களை அவரிடம்ஒப்படைத்து, மூன்று நாட்கள் கழித்து ஸவ்ர் குகையில் வந்து சேரும்படி கூறினார்கள். அம்மனிதர் மூன்றாம் நாள் காலையில் ஒட்டகங்களுடன் அவர்களிடம் வந்தார். உடனே, நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (மதீனாவை நோக்கிப்) புறப்பட்டார்கள். அவர்களுடன் ஆமிர் பின் ஃபுஹைரா என்பாரும் சேர்ந்து கொண்டார். பனூ தீல் கூட்டத்தைச் சேர்ந்த அந்த வழிகாட்டி அம்மூவரையும் மக்காவிற்குக் கீழே கடற்கரை வழியாக அழைத்துச் சென்றார்.

பாடம் : 4

மூன்று நாட்களுக்குப் பின்போ, ஒரு மாதத்திற்குப் பின்போ, ஒரு வருடத்திற்குப் பின்போ வேலை செய்வதற்காக, இப்போதே கூலியாளைப் பேசி வைத்துக் கொள்ளலாம்; முன்னர் அவர்கள் பேசிக் கொண்ட நிபந்தனைகள் உரிய நேரம் வந்ததும் செல்லுபடியாகும்.

2264 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி(ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் பனூஅதீ, பனூதீல் குலத்தைச் சேர்ந்த ஒருவரை (வழிகாட்டுவதற்காகக்) கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் குறைஷிக் காஃபிர்களின் மார்க்கத்தில் இருந்தார். நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் தமது ஒட்டகங்களை அவரிடம் கொடுத்து மூன்று இரவுகள் கழித்து எங்கள் ஒட்டகங்களுடன் ஸவ்ர் குகையில் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று அவரிடம் கூறினார்கள். அவர், (அவ்வாறே) மூன்றாம் நாள் காலையில் அவர்களின் ஒட்டகங்களுடன் அவர்களைச் சந்தித்தார்.

பாடம் : 5

அறப்போரின் போது கூலியாளை ஏற்படுத்திக் கொள்வது.

2265 யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி(ஸல்) அவர்களுடன் சிரமப் (போர் எனும் தபூக்) போரில் பங்கெடுத்துக் கொண்டேன். அந்தப் போர் எனது அறங்களிலேயே உறுதிமிக்கதாக எனக்குத் தோன்றியது. என்னிடம் கூலியாள் ஒருவர் இருந்தார். அவர் ஒரு மனிதரிடம் சண்டையிட்டார். அப்போது (அவர்களில்) ஒருவர், மற்றவரின் விரலைக் கடித்து விட்டார். கடிபட்டவர் விரலை உருவிய போது, கடித்தவரின் முன் பல்லை உடைத்து விட்டார். பல்கீழே விழுந்தது. பல்லுடைக்கப்பட்டவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்ற போது, நபி (ஸல்) அவர்கள் அதற்கு எந்த நஷ்டஈடும் இல்லை! என்று தீர்ப்பளித்து விட்டு, அவரிடம், ஒட்டகம் மெல்லுவது போன்று, நீர் மெல்லுவதற்காக அவர் உம்வாயில் தமது விரலைக் கொடுத்துக் கொண்டு இருப்பாரா? என்று கேட்டார்கள்.

2266 ஸுஹைர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இன்னொருவரின் கையைக் கடித்து விட்டார்; கடிபட்டவர் (கையை உருவிய போது) கடித்தவரின் முன் பல்லை உடைத்து விட்டார்! அதற்கு எந்த நஷ்ட ஈடும் தரத் தேவையில்லை என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

பாடம் : 6

ஒருவரைக் கூலிக்கு அமர்த்தும் போது வேலை செய்யும் காலத்தைக் குறிப்பிட்டு, வேலையைக் குறிப்பிடாமல் இருத்தல்.

அல்லாஹ் கூறுகிறான் :

(அப்போது ýஐப் ளஅலைன அவர்கள், மூசா ளஅலைன அவர்களிடம்) கூறினார் : நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நான் நாடுகிறேன்! ஆயினும், நீர் பத்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்! நான் உமக்குச் சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை. இறைவன் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்!

அதற்கு மூசா (அலை) அவர்கள் கூறினார்கள்: இதுவே எனக்கும் உங்களுக்குமிடையே (ஒப்பந்தமாகும்)! இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் (அதன் பிறகு) எவ்விதத்திலும் எனக்கு சிரமம் தரக்கூடாது! நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்! (28:27-28)

பாடம் : 7

விழும் நிலையில் இருக்கும் சுவரைச் செப்பனிட்டு நிலை நிறுத்துவதற்காக வேலையாளை அமர்த்திட அனுமதியுண்டு.

2267 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மூசா ளஅலைன, களிர் ளஅலைன ஆகிய) இருவரும் (ஒன்றாக) நடந்து சென்றபோது, விழும் நிலையிலிருந்த ஒரு சுவரைக் கண்டார்கள். உடனே, களிர் ளஅலைன அவர்கள் தமது கையை உயர்த்த, அது நேராக நின்றுவிட்டது. அப்போது மூசா ளஅலைன அவர்கள் களிர் ளஅலைன அவர்களிடம் நீர் விரும்பியிருந்தால் இதற்குக் கூலி வாங்கியிருக்கலாமே! என்று கூறினார்கள்.

இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

களிர் (அலை) அவர்கள் தம் கையை உயர்த்தினார்கள் என்று சொன்ன போது, அறிவிப்பாளர் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (களிர் ளஅலைன அவர்களைப் போல) கையை உயர்த்திக் காட்டி, இப்படி! என்று கூறினார்கள்.

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் களிர் ளஅலைனஅவர்கள் சுவரைத் தமது கரத்தால் தடவ, அதுநேராக நின்று விட்டது! என்று கூறியதாக நான் நினைக்கிறேன் என்று அறிவிப்பாளர் யஅலா (ரஹ்) அவர்கள் (ஐயப்பாட்டுடன்) அறிவிக்கிறார்கள்.

பாடம் : 8

நடுப்பகல் நேரம்வரை கூலிக்கு அமர்த்துதல்.

2268 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கும் வேதம்வழங்கப்பட்ட இரண்டு சமுதாயத்தாரான (யூத, கிறிஸ்த)வர்களுக்கும் உவமை., ஒரு மனிதரால் வேலைக்கு அமர்த்தப்பட்ட கூலியாட்களாவர்! ஒரு கீராத் கூலிக்குக் காலையிலிருந்து பகலின் நடுப்பகல் நேரம்வரை எனக்கு வேலை செய்பவர் யார்? என்று அம்மனிதர் கேட்டார். யூதர்கள் அவ்வாறு வேலை செய்தார்கள். பிறகு, நடுப்பகலிலிருந்து அஸ்ர்தொழுகை வரை ஒரு கீராத் கூலிக்கு எனக்காக வேலை செய்பவர் யார்? என்று அவர் கேட்டார். கிறிஸ்தவர்கள் அவ்வாறு வேலை செய்தார்கள். பிறகு, அஸ்ரிலிருந்து சூரியன் மறையும் வரை இரண்டு கீராத் கூலிக்கு எனக்காக வேலை செய்பவர்கள் யார்? என்று அவர் கேட்டார். (முஸ்லிம்களான) நீங்கள்தாம் அ(ப்படி வேலை செய்த)வர்கள்! யுதர்களும், கிறிஸ்தவர்களும் கோபமுற்று, அதிக வேலை நாங்கள் செய்திருக்கும் போது எங்களுக்கு ஏன் குறைந்த கூலி? என்று கேட்டனர். அதற்கு அவர் உங்களுக்கு உரியதை நான் குறைத்திருக்கிறேனா? என்று கேட்டார். அவர்கள் இல்லை! என்றனர். சிலருக்கு நான் அதிகமாகக் கொடுப்பது எனது அருட்கொடையாகும்! நான் விரும்பியவருக்கு நான் அதைக் கொடுப்பேன்! என்று அவர் கூறினார்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 9

அஸ்ர் தொழுகை வரை ஒருவரைக் கூலிக்கு அமர்த்துதல்.

2269 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கும், யூதர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் உவமை, ஒருவரால் கூலிக்கு நியமிக்கப்பட்ட மனிதர்களாவர்! ஒவ்வொரு கீராத் கூலிக்கு(காலையிலிருந்து) நடுப்பகல் நேரம்வரை எனக்காக வேலை செய்பவர் யார்? என்று அம்மனிதர் கேட்டார். யூதர்கள் ஒவ்வொரு கீராத் கூலிக்காக வேலை செய்தார்கள்; பிறகு கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு கீராத் கூலிக்காக வேலை செய்தார்கள். பிறகு, அஸ்ரிலிருந்து சூரியன் மறையும் வரை, இரண்டிரண்டு கீராத் கூலிக்கு (முஸ்லிம்களாகிய) நீங்கள்தான் வேலை செய்கிறீர்கள்; யூதர்களும், கிறிஸ்தவர்களும் கோபமுற்று, அதிக வேலை நாங்கள் செய்திருக்கும் போது எங்களுக்கு ஏன் குறைந்த கூலி? என்று கேட்டனர். அதற்கு அவர் உங்களுக்கு உரியதை நான் குறைத்திருக்கிறேனா? என்று கேட்டார். அவர்கள், இல்லை! என்றனர். சிலருக்கு நான் அதிகமாகக் கொடுப்பது எனது அருட்கொடையாகும்! நான் விரும்பியவருக்கு நான் அதைக் கொடுப்பேன்! என்று அம்மனிதர் கூறினார்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 10

கூலிக்காரனின் கூலியைத் தர மறுப்பது குற்றமாகும்.

2270 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மூவருக்கெதிராக மறுமை நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்) என்று அல்லாஹ் கூறினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 11

அஸ்ரிலிருந்து இரவுவரை ஒருவரைக் கூலிக்கு அமர்த்துவது.

2271 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகியோரின் உவமை, குறிப்பிட்ட கூலிக்கு, ஒரு நாள் முழுக்க இரவுவரை, தனக்காக வேலை செய்யும்படி ஒரு மனிதரால் அமர்த்தப்பட்டவர்கள் ஆவர்! அவர் (முதலில்) ஒரு கூட்டத்தாரை கூலிக்கு அமர்த்தினார்; அவர்கள் நடுப்பகல் வரை வேலை செய்து விட்டு, நீர் எங்களுக்குத் தருவதாகக் கூறிய கூலி எங்களுக்குத் தேவையில்லை; எங்கள் வேலை வீணாகட்டும்! எனக் கூறினார்கள். அப்போது கூலிக்கு அமர்த்தியவர் அவர்களிடம், இவ்வாறு செய்யாதீர்கள்! உங்கள் எஞ்சிய வேலைகளையும் பூர்த்தி செய்யுங்கள்! கூலியையும் முழுமையாகப் பெற்றுக் கொள்ளுங்கள்! எனக் கூறினார். அவர்கள் (ஏற்க) மறுத்து வேலையை விட்டுவிட்டனர். அவர்களுக்குப் பின், மற்றும் சில கூலியாட்களை அவர் வேலைக்கு அமர்த்தினார். அவர்களிடம் அவர், இன்று எஞ்சியுள்ளநேரத்தைப்பூர்த்தியாக்குங்கள்! அவர்களுக்குத் தருவதாகக் கூறிய கூலியை உங்களுக்குத் தருகிறேன்! என்றார். அவர்கள் அஸ்ர் தொழுகை வரை வேலை செய்து விட்டு, உமக்காக நாங்கள் வேலை செய்தது வீணாகட்டும்! எங்களுக்காக நீர் நிர்ணயித்த கூலியையும் நீரே வைத்துக் கொள்ளும்! என்றனர். அவர்கள் உங்கள் எஞ்சிய வேலையைப் பூர்த்தி செய்யுங்கள்! பகலில் இன்னும் சிறிது நேரமே மிச்சமுள்ளது! என அவர்களிடம் கூறினார். அவர்கள் (வேலை செய்ய) மறுத்து விட்டனர். பிறகு, அன்றைய பொழுதில் எஞ்சிய நேரத்தில் வேலை செய்வதற்காக மற்றொரு கூட்டத்தாரை அவர் வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் சூரியன் மறையும் வரை உள்ள எஞ்சிய நேரத்தில் வேலை செய்தனர். இதனால், அவர்கள் முதலிரண்டு, கூட்டத்தினரின் கூலியையும் சேர்த்து முழுமையாகப் பெற்றுக் கொண்டனர். இது தான் (முஸ்லிம்களாகிய) இவர்களுக்கும் இவர்கள் ஏற்றுக் கொண்ட பிரகாசத்திற்கும் உரிய உவமையாகும்!

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 12

கூலிக்கு அமர்த்தப்பட்டவர் கூலியை வாங்காமல் சென்ற பிறகு, கூலிக்கு அமர்த்தியவர் அதைக் கொண்டு உழைத்து அதைப் பெருகச் செய்திருந்தால் அல்லது ஒருவர் பிறரது செல்வத்தைக் கொண்டு உழைத்து அதில் லாபம் பெற்றிருந்தால்...

2272 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர்; இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர்; அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டுவந்து குகைவாசலை அடைத்து விட்டது. அப்போது அவர்கள் நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது! என்று தமக்குள் கூறிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர், இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கு பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக நான் வந்தேன். எனது தாயும், தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்கக் கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். ஆகவே, இறைவா! நான் இதை உனது திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களை விட்டுஅகற்று! எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!

மற்றொருவர், இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தார்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்கு பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்த போது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான்அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிடவேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவுகொள்ள முனைந்து) விட்ட போது, முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுதி தர மாட்டேன்! என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன். அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளை விட்டுத் திரும்பிவிட்டேன்; நான்அவளுக்குக் கொடுத்த தங்க நாயணத்தை அவளிடமே விட்டு விட்டேன். இதை உனது திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களை விட்டு அகற்று! எனக் கூறினார். பாறை விலகியது; ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.

மூன்றாமவர், இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களது கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தமது கூலியை விட்டுவிட்டுச் சென்று விட்டார். அவரது கூலியை நான் முதலீடுசெய்து, அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். அல்லாஹ்வின் அடியாரே! எனது கூலியை எனக்குக் கொடுத்து விடும்! என்று கூறினார். நீர் பார்க்கின்ற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்! என்று நான் கூறினேன். அதற்கவர் அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்! என்றார். நான் உம்மை கேலி செய்யவில்லை! என்று நான் கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச்சென்று விட்டார். இறைவா! இதை நான் உனது திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களை விட்டு அகற்று! எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்று விட்டனர்!.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 13

ஒருவர் தமது முதுகில் மூட்டை சுமந்து பெற்ற கூலியில் தர்மம் செய்வதும் சுமை சுமப்பவர் பெறுகின்ற கூலியும்.

2273 அபூமஸ்ஊத் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி கட்டளையிட்டால், எங்களில் ஒருவர் கடைவீதிக்குச்சென்று, சுமைதூக்கி ஒரு முத்து கூலியைப் பெற்று அதை தர்மம் செய்வார்! ஆனால், இன்று அவர்களில் சிலருக்கு ஓர் இலட்சம் தங்கக் காசுகள் உள்ளன!

அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் தம்மையே இவ்வாறு (அவர்களில் சிலருக்கு என்று) குறிப்பிட்டதாக நாம் கருதுகிறோம்! என்று அறிவிப்பாளர் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 14

தரகுக் கூலி

தரகருக்குக் கூலி கொடுப்பதில் தவறில்லை என்று இப்னு சீரீன், அதாஉ, இப்ராஹீம் அந்நகஈ, ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர் கருதுகின்றனர்.

இந்த ஆடையை இன்ன விலைக்கு விற்றுவிடு! இதைவிட அதிகமாக விற்றால் அது உனக்குரியது! என்று கூறுவது தவறில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதை இன்ன விலைக்கு விற்றுவிடு; இதைவிட அதிக விலைக்கு விற்றால் இது உனக்குரியது அல்லது உனக்கும் எனக்கும் பொதுவானது என்று கூறினால் அதில் தவறில்லை என்று இப்னு சீரீன் (ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்.

முஸ்லிம்கள் தமக்கிடையே விதிக்கக் கூடிய நிபந்தனைகள் (மார்க்கத்திற்கு முரணில்லாவிட்டால்) செல்லும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2274 தாவூஸ் (ரஹ்) கூறியதாவது:

சந்தைக்கு வரும் வணிகர்களை எதிர் கொண்டு வாங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். கிராமவாசிக்காக உள்ளூர்வாசி விற்றுத் தரக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். கிராமவாசிக்காக உள்ளூர்வாசி விற்கக் கூடாது என்பதன் பொருள் என்ன? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், இடைத் தரகராக இருக்கக் கூடாது என்றார்கள்.

பாடம் : 15

எதிரி நாட்டிலுள்ள இணைவைப்பாளரிடம் ஒருவர் கூலியாளாகப் பணி செய்யலாமா?

2275 கப்பாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் இரும்பு வேலை தெரிந்த கருமானாக இருந்தேன்; ஆஸ் பின் வாயில் என்பவனிடம் கூலிக்கு வேலை செய்தேன். எனக்குரிய கூலி அவனிடம் தங்கிவிட்டது; அதை கேட்பதற்காக அவனிடம் நான் சென்றபோது அவன், நீர் முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும் வரை உமக்குரியதை நான் தர மாட்டேன் என்றான். நான் நீ செத்து, பிறகு (உயிர் தந்து) எழுப்பப்டும் வரை அது நடக்காது! என்றேன். நான் செத்து, திரும்ப எழுப்பப்படுவேனா? என்று அவன் கேட்டான். நான், ஆம்! என்றேன். அதற்கவன், அப்படியானால் அங்கே எனக்குச் செல்வமும் குழந்தைகளும் கிடைப்பர்! அப்போது உமக்குரியதைத்தந்து விடுகிறேன்! என்றான். அப்போது, நம்முடைய வசனங்களை நிராகரித்து விட்டு, (மறுமையிலும்) நான், நிச்சயமாக பொருட்செல்வமும், மக்கள்செல்வமும்கொடுக்கப்படுவேன்! என்று கூறியவனை (நபியே) நீர் பார்த்தீரா! என்ற (19:77ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

பாடம் : 16

அல்ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தை ஓதிப் பார்ப்பதற்காக வழங்கப்படும் கூலி.

நீங்கள் கூலி பெறுவதற்கு அதிகத் தகுதியானது அல்லாஹ்வின் வேதம்தான்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

கற்றுக் கொடுப்பவர் நிபந்தனையிடாமல் அவருக்கு ஏதாவது கொடுக்கப்பட்டால் அதைப் பெற்றுக் கொள்ளலாம்! என்று ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

கற்றுக் கொடுப்பவருக்குக் கூலி கொடுப்பதை எவரும் வெறுத்ததாக நான் கேள்விப்படவில்லை! என்று ஹகம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் தம் ஆசிரியருக்குப் பத்து திர்ஹம் கொடுத்திருக்கிறார்கள்.

பொருட்களைப் பங்கு வைப்பவர்களுக்குக் கூலி கொடுப்பதில் தவறில்லை! என்ற இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

சாதகமான தீர்ப்புப் பெறுவதற்காகக் கொடுக்கப்படுவதே இலஞ்சம் என்று கூறப்பட்டுவந்தது! எனவும் அவர்கள் கூறினார்கள்.

மரத்திலுள்ள கனிகளை மதிப்பீடு செய்வதற்காக மதிப்பீடு செய்தவருக்கு நபித்தோழர்கள் கூலி கொடுத்துள்ளனர்.

2276 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித் தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்த போது, ஓர் அரபிக் குலத்தாரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்ட போது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அச்சயமம் அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும்பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்! என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து, கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா? என்று கேட்டனர். அப்போது, நபித் தோழர்களில் ஒருவர், ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது! என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.... என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர். கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். இதைப்பங்கு வையுங்கள்! என்று ஒருவர் கேட்ட போது, நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது! என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்துக் கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.

பாடம் : 17

ஆண் அடிமைகள் (தம் எஜமானர்களுக்குச் செலுத்தும் அன்றாடவரி(யைக் குறைக்க உதவுவது) மற்றும் அடிமைப் பெண்கள் (குறைவான விகிதத்தில்) வரி செலுத்த ஒப்பந்தம் செய்து கொள்(ள உதவு)வது.

2277 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமையாயிருந்த) அபூதைபா (ரலி), நபி (ஸல்) அவர்களுக்கு குருதிஉறிஞ்சி எடுத்தார்; நபி (ஸல்) அவர்கள் அவருக்கு ஒரு ஸாஉ அல்லது இரண்டு ஸாஉ உணவு கொடுக்குமாறு கட்டளையிட்டு, அவரது எஜமானர்களிடம் பேசி, அவர் செலுத்த வேண்டிய வரியைக் குறைத்தார்கள்.

பாடம் : 18

குருதி உறிஞ்சி எடுப்பவரின் கூலி.

2278 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குருதிஉறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள். குருதி உறிஞ்சி எடுத்தவருக்கு அதற்கான கூலியைக் கொடுத்தார்கள்!

2279 இப்னு அப்பாஸ் அவர்கள் (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குருதிஉறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள். அதற்கான கூலியை குருதி உறிஞ்சி எடுத்தவருக்குக் கொடுத்தார்கள். அதை (குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவதை) வெறுக்கத் தக்கதாகக் கருதியிருந்தால் நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் (கூலி) கொடுத்திருக்க மாட்டார்கள்.

2280 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துக் கொள்வார்கள்; எவரது கூலியிலும் நபி (ஸல்) அவர்கள் அநீதி இழைக்க மாட்டார்கள்.

பாடம் : 19

அடிமைகளின் எஜமானர்களிடம் பேசி, அடிமைகள் செலுத்த வேண்டிய வரியைக் குறைத்தல்.

2281 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுக்கும் ஓர் இளைஞரை அழைத்துவரச் செய்து குருதி உறிஞ்சிஎடுத்துக் கொண்டார்கள். அவருக்காக ஒரு ஸாஉ அல்லது இரண்டு ஸாஉ, ஒரு முத்து அல்லது இரண்டு முத்து (அளவிற்கு உணவு) கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். அவர் சம்பந்தமாகப் பேசி அவர் செலுத்த வேண்டிய வரியைக் குறைத்தார்கள்!

பாடம் : 20

விபசாரிகள் மற்றும் (விபசாரம் செய்யும்) அடிமைப் பெண்களின் வருமானம்.

ஒப்பாரி வைப்பவளுக்கும் பாடகிகளுக்கும் கூலி கொடுப்பதை இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) வெறுத்தார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை, -அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக- விபசாரத்திற்கு நிர்ப்பந்திக்காதீர்கள்! அப்படி எவரேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னரும், (அவர்களை) அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (24:33)

2282 அபூ மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாய்விற்ற காசு, விபசாரியின் வருமானம், சோதிடனுக்குரிய தட்சிணை ஆகியவற்றை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!

2283 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அடிமைப் பெண்கள் (விபசாரத்தின் மூலம்) பொருளீட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

பாடம் : 21

ஆண் விலங்குகளைப் பெண் விலங்குகளுடன் இணையச் செய்வதற்கு கட்டணம் பெறுதல்.

2284 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆண் விலங்குகளைப் பெண் விலங்குகளுடன் இணையச் செய்வதற்கு (பொலிப் பிராணியைக் கொண்டு பெண் விலங்குகளுக்கு சினையூட்டுவதற்கு) கட்டணம் பெறுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

பாடம் : 22

ஒருவர் ஒரு நிலத்தை வாடகைக்கு வாங்கிய பின், வாடகைக்கு விட்டவரோ பெற்றவரோ இறந்து விட்டால்...?

தவணை முடியும்வரை வாடகைக்குப் பெற்றவரை வெளியேற்றும் உரிமை வாடகைக்கு விட்(டு விட்டு, இறந்து விட்)டவரின் குடும்பத்தினருக்கு இல்லை! என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

வாடகைஒப்பந்தம் அதற்குரிய தவணை முடியும்வரை செல்லும்! என்ற ஹகம் (ரஹ்), ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்), இயாஸ் பின் முஆவியா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.

கைபரில் உற்பத்தியாகும் பயிர்களில் பாதி, உழைப்பவருக்கும் பாதி இஸ்லாமிய அரசுக்கும் சேர வேண்டும் என்ற அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் கைபர் நிலங்களை (யூதங்களுக்குக்) கொடுத்தார்கள். இந்த ஒப்பந்தம் நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்திலும் உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலும் நடைமுறையில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் இறந்த பின் அபூபக்ர் (ரலி) அவர்களோ, உமர் (ரலி) அவர்களோ வாடகைஒப்பந்தத்தைப் புதுப்பித்ததாகக் கூறப்படவில்லை! என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியள்ளார்கள்.

2285 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

விளைச்சலில் பாதி தரப்படும் என்ற அடிப்படையில், கைபருடைய நிலங்களை உழைத்துப் பயிரிட்டுக் கொள்வதற்காக, யூதர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள்.

(நபி ளஸல்ன அவர்களின் காலத்தில்) விளைநிலங்கள், அவற்றின் விளைச்சலில் ஏதேனும் (ஒரு பகுதியைப்) பெற்றுக் கொண்டு வாடகைக்கு (குத்தகைக்கு) கொடுக்கப்பட்டுவந்தன என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாக நாஃபிஉ (ரஹ்) கூறுகிறார்கள்.

2286 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

விளை நிலங்களைக் குத்தகைக்கு விடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

முடிவில் கைபரிலிருந்து யூதர்களை உமர்(ரலி) வெளியேற்றினார்கள்! என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

November 2, 2009, 8:30 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top