31-தராவீஹ் தொழுகை

 

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அத்தியாயம் : 31

31-தராவீஹ் தொழுகை

பாடம் : 1

ரமளானில் (தொழுது) வணங்குவதன் சிறப்பு.

2008,2009 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் (மாதத்தின் சிறப்பு) பற்றி கூறினார்கள்:

யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ரமளானின் இரவுத் தொழுகையை அவரவர் தனியாகத் தொழுது கொள்ளும்) இந்நிலையில் மக்கள் இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந்தது! என்று இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2010 அப்துர்ரஹ்மான் பின் அப்துல்காரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். சிலரைப் பின் பற்றிச் சிறு கூட்டத்தினர் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே! என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றோர் இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதைவிட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்! என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுதுவந்தனர்.

இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

2011 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் (இரவுத்) தொழுகை தொழுதார்கள்.

2012 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிக் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல் நாளைவிட அதிகமான மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர்: ஆனால், நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குத் தான் வந்தார்கள். சுப்ஹுத் தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி, ஏகத்துவ உறுதி மொழிந்து, நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன். நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்! எனக் கூறினார்கள்.

நிலைமை இப்படியே இருக்க (ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்! என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2013 அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான், நபி (ஸல்) அவர்களின் தொழுகை ரமளானில் எவ்வாறு இருந்தது? என்று கேட்டேன். அதற்கவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்கள் தொழ மாட்டார்கள்; நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்: அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள் என்று கூறினார்.

மேலும் ஆயிஷா (ரலி) கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதரே! வித்ர் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குகிறீர்களே? (உளூநீங்கி விடுமே) என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா! என் கண்கள்தாம் உறங்குகின்றன;என் உள்ளம் உறங்குவதில்லை என்று கூறினார்கள்.

November 2, 2009, 8:07 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top