30-நோன்பு2
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...அத்தியாயம் : 30
30-நோன்பு
ரமளானில் விடுபட்ட நோன்பை எப்போது நிறைவேற்ற வேண்டும்?
வேறு நாட்களில் நோற்கலாம் என்று அல்லாஹ் கூறுவதால் விடுபட்ட நோன்புகளைப் பிரித்துப் பிரித்து நோற்பதில் தவறில்லை! என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
விடுபட்ட ரமளான் நோன்புகளை நிறைவேற்றாமல் (துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது பொருந்தாது! என்று சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஒருவர் அடுத்த ரமளான் வரும்வரை விடுபட்ட நோன்பை நோற்காதிருந்தால் இரண்டு நோன்புகளையும் அவர் நோற்பார்; அவர் உணவளிக்கத் தேவையில்லை! என்று இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நோன்பை விட்டவர் (அதற்குப் பரிகாரமாக) ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்! என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட நோன்புகளை வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்றுதான் அல்லாஹ் கூறுகிறான்; உணவளிக்குமாறு கூறவில்லை.
1950 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர úவேறெப்போதும் என்னால் நிறைவேற்ற முடியாது.
நபி (ஸல்) அவர்களுக்கு ஆயிஷா (ரலி) பணிவிடை செய்ததே இதற்குக் காரணம் என்று யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
பாடம் : 41
மாதவிடாய் ஏற்பட்டவள் தொழுகையையும் நோன்பையும் விட வேண்டும்.
மிகுதியான நபி வழிகளும் சரியான முடிவுகளும் மனித யூகங்களுக்கு மாற்றமாகவே அமைந்துள்ளன. முஸ்லிம்கள் நபி வழியைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. மாதவிடாய் ஏற்பட்டவள் நோன்பைக் களாச் செய்ய வேண்டும்; தொழுகையைக் களாச் செய்ய வேண்டியதில்லை என்பதும் அவற்றுள் ஒன்றாகும் என்று அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1951 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அது தான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும்.
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 42
களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்து விட்டால்...?
களாவான நோன்பை நிறைவேற்றாமல் இறந்தவருக்காக முப்பது நபர்கள் தலா ஒரு நோன்பு நோற்றால் (அவர் சார்பாக) அது நிறைவேறிவிடும் என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1952 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்து விட்டால் அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் நோன்பு நோற்பார்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
1953 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் இறந்து விட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது என்றார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என் சகோதரி மரணித்து விட்டார்... என்று கூறியதாக இந்த ஹதீஸ் துவங்குகிறது.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னோர் அறிவிப்பில் ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, என் தாய் இறந்து விட்டார்... என்று கூறியதாக இந்த ஹதீஸ் துவங்குகிறது.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், நேர்ச்சை நோன்பு என் தாயாருக்குக் கடமையாக இருந்த நிலையில் என் தாய் இறந்து விட்டார்... என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கூறியதாக இந்த ஹதீஸ் துவங்குகிறது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், என் தாய் மீது பதினைந்து நோன்புகள் கடமையாக இருந்த நிலையில் இறந்து விட்டார்... என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கூறியதாக இந்த ஹதீஸ் துவங்குகிறது.
பாடம் : 43
நோன்பாளி எப்போது நோன்பை நிறைவு செய்வார்?
சூரியனின் வட்டம் மறைந்த உடன் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நோன்பை நிறைவு செய்தார்கள்.
1954 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மறைந்து, இந்த (கிழக்கு) திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்த (மேற்கு) திசையிலிருந்து பகல் பின்னோக்கி(ப்போ)னால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!
1955 அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் கூட்டத்தில் ஒருவரிடம், இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக! என்றார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே! என்றார். நபி (ஸல்) அவர்கள், இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! என்றார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே! என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! என்று கூறினார்கள். அதற்கவர் பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே? என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக! என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, இரவு இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வந்து விட்டால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்! என்றார்கள்.
பாடம் : 44
ஒருவர் தம்மால் இயன்ற தண்ணீர் மற்றும் அது போன்றவற்றால் நோன்பு துறப்பது.
1956 அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் ஒருவரிடம், இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக! என்றார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் தூதரே! மாலைநேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே! என்றார். நபி (ஸல்) அவர்கள், இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக! என்றார்கள். அதற்கவர், பகர் (வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக்கிறதே! என்றார். நபி (ஸல்) அவர்கள், இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக! என்றார்கள். அவர் இறங்கி மாவு கரைத்தார். பின்னர், நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்! என்று தமது விரலால் கிழக்கே சுட்டிக் காட்டிக் கூறினார்கள்.
பாடம் : 45
விரைவாக நோன்பு துறத்தல்.
1957 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.
1958 அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அவர்கள் நோன்பு நோற்றார்கள். மாலை (முடியத் தொடங்கும்) நேரம் வந்ததும் ஒரு மனிதரிடம், இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக! என்று கூறினார்கள். அதற்கவர், மாலை நேரம் (முழுமையாக) முடிவடையும் வரை காத்திருக்கலாமே! என்றார். நபி (ஸல்) அவர்கள், இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக! இரவு இங்கிருந்து முன்னோக்கி வருவதைக் கண்டால், நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்! என்றார்கள்.
பாடம் : 46
நோன்பு துறந்தபின் சூரியன் உதித்தால்...?
1959 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பு துறந்த பின்னர் சூரியன் தென்பட்டது.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹிஷாம் (ரஹ்) அவர்களிடம், அவர்கள் களா செய்யுமாறு கட்டளையிடப்பட்டார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் களா செய்வது அவசியமில்லாமல் போகுமா? என்று கேட்டார்கள். (களா செய்வது அவசியமாகும்! என்பது இதன் பொருள்.)
அவர்கள் களா செய்தார்களா? இல்லையா என்பது எனக்குத் தெரியாது! என்று ஹிஷாம் (ரஹ்) கூறியதாக மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
பாடம் : 47
சிறுவர்கள் நோன்பு நோற்றல்.
ரமளானில் போதையுடன் இருந்த ஒருவரிடம், உனக்குக் கேடு உண்டாகட்டும்! நமது சிறுவர்களெல்லாம் நோன்பு நோற்றிருக்கிறார்களே! என்று உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு அவரை அடித்தார்கள்.
1960 ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவாகள் முஹர்ரம் பத்தாம்நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்து விட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்! என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும் போது நோன்பு முடியும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.
பாடம் : 48
தொடர்நோன்பு நோற்பதும், நோன்பை இரவுவரை முழுமைப்படுத்துங்கள்! என்று அல்லாஹ் கூறுவதால் இரவில் நோன்பு கிடையாது எனும் கூற்றும்.
நபி (ஸல்) அவர்கள் (தாம் தொடர்நோன்பு நோற்றாலும்) மக்கள் மீது இரக்கம் கொண்டும் (அவர்களின் உடல் வலிமை அழிந்து விடாமல்) அவர்களைக் காப்பதற்காகவும் அதைத் தடுத்திருக்கிறார்கள்.
(கடமையாக்கப்படாததைத் தம் மீது கடமைபோன்றாக்கிக் கொண்டு) வணக்க வழிபாடுகளில் மிதமிஞ்சி மூழ்குவது வெறுக்கப்படுகிறது.
1961 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி(ஸல்) அவர்கள், நீங்கள் தொடர்நோன்பு நோற்காதீர்கள்! என்று (மக்களிடம்) கூறிய போது, நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே? என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் (எல்லா விஷயங்களிலும்) உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவுப் பொழுதைக் கழிக்கிறேன் என்றோ கூறினார்கள்.
1962 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொடர்நோன்பைத் தடுத்தார்கள். மக்கள், நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன் என்றார்கள்.
1963 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், நீங்கள் தொடர்நோன்பு நோற்காதீர்கள்; உங்களில் யாரேனும் தொடர்நோன்பு நோற்க நாடினால் சஹ்ர் வரை அவ்வாறு செய்யட்டும் என்று கூறினார்கள். நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே! என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்கு (ஆன்மீக ரீதியாக) உணவளிக்கவும் பருகத்தரவும் ஒருவன் இருக்கின்றான். இந்நிலையில் நான் இரவுப் பொழுதைக் கழிக்கிறேன் என்றார்கள்.
1964 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கள் மீது இரக்கப்பட்டுத் தொடர்நோன்பைத் தடுத்தார்கள். மக்கள், நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் உங்களைப் போன்றவன் அல்லன். என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் வழங்குகிறான் என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் மக்கள் மீது இரக்கப்பட்டு என்ற வாசகம் இடம் பெறவில்லை.
பாடம் : 49
அதிகமாகத் தொடர்நோன்பிருப்பதற்குக் கண்டனம்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு (தொடர்நோன்பு நோற்பதைக்) கண்டித்திருப்பதாக அனஸ் (ரலி) அறிவித்துள்ளார்கள்.
1965 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொடர்நோன்பைத் தடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே? என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன் என்றார்கள். தொடர்நோன்பிலிருந்து மக்கள் விலகிக் கொள்ள மறுத்த போது ஒரு நாள் அவர்களைத் தொடர்நோன்பு நோற்கச் செய்தார்கள். அடுத்த நாளும் நோற்கச் செய்தார்கள்; பிறகு (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (தொடர்நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன் என்று மக்கள் தொடர்நோன்பிலிருந்து விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிப்பதைப்போன்று கூறினார்கள்.
1966 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொடர்நோன்பு வைப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறினார்கள். நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரக்கூடிய நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்; எனவே நீங்கள் நற்செயல்(-அமல்)களில் உங்கள் சக்திக்கு உட்பட்டுச் சிரமம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று விடையளித்தார்கள்.
பாடம் : 50
சஹர் வரை தொடர்நோன்பு நோற்றல்.
1967 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், நீங்கள் தொடர்நோன்பு நோற்காதீர்கள். அப்படி உங்களில் யாரேனும் தொடர்நோன்பு நோற்பதாக இருந்தால் சஹர் வரை நோற்கட்டும் என்று கூறினார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே!? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்கு உணவளிப்பவனும் புகட்டுபவனும் உள்ள நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன் என்றார்கள்.
பாடம் : 51
உபரியான நோன்பை விடுமாறு ஒருவர் மற்றவரை வற்புறுத்தல்; இவ்வாறு விட்டவர் அதைக் களாச் செய்ய வேண்டியதில்லை.
1968 அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) ஆகிய இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். உமக்கு என்ன நேர்ந்தது? என்று அவரிடம் சல்மான் கேட்டார். அதற்கு உம்முத் தர்தா (ரலி) அவர்கள், உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தாவிடம், உண்பீராக! என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, நான் நோன்பு நோற்றிருக்கிறேன் என்றார். சல்மான், நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன் என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் நின்று வணங்கத் தயாரானார்கள். அப்போது சல்மான் (ரலி) அவர்கள், உறங்குவீராக! என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் சல்மான், உறங்குவீராக! என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள், இப்போது எழுவீராக! என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள், நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக! என்று கூறினார்கள். பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், சல்மான் உண்மையையே கூறினார்! என்றார்கள்.
பாடம் : 52
ஷஅபான் மாதத்தில் நோன்பு நோற்பது.
1969 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இனி) நோன்பை விடவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்; (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!
1970 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தைவிட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில வருடங்களில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள் நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்! என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழப்படும் தொழுகையே அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது! ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.
பாடம் : 53
நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதும் நோன்பை விட்டதும்.
1971 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறு எந்த மாதமும் முழுமையாக நோன்பு நோற்க மாட்டார்கள். (ரமளான் அல்லாத மாதங்களில்) அல்லாஹ்வின் மீதாணையாக! இனிமேல் நோன்பை விட மாட்டார்கள்! என்று மக்கள் கூறுமளவுக்கு நோன்பு நோற்பார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இனிமேல் நோன்பு நோற்க மாட்டார்கள்! என்று மக்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்.
1972 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இந்த மாதம் நோன்பு நோற்க மாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்குச் சில மாதங்களில் அவர்கள் நோன்பை விட்டுவிடுவார்கள்; இந்த மாதம் நோன்பை அவர்கள் விட மாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்கு அவர்கள் (சில மாதங்களில்) நோன்பு நோற்பார்கள்! அவர்களை இரவில் தொழும் நிலையில் நீ காண விரும்பினால் அவ்வாறே அவர்களைக் காண்பாய்; அவர்களை (இரவில்) உறங்கும் நிலையில் நீ காணவிரும்பினால் அவ்வாறே அவர்களைக் காண்பாய்!
1973 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களை ஒரு மாதத்தில் நோன்பாளியாக நான் பார்க்க விரும்பினால் அவ்வாறே அவர்களை நான் பார்ப்பேன். அவர்கள் நோன்பை விட்ட நிலையில் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்; இரவில் தொழக் கூடியவர்களாக அவர்களைப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்; அவர்களைத் தூங்குபவர்களாகப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்! நபி (ஸல்) அவர்களின் கையைவிட மிருதுவான எந்தப் பட்டையும் நான் தீண்டியதில்லை; நபி (ஸல்) அவர்களின் நறுமணத்தை விட நல்ல நறுமணத்தை நான் மோந்ததுமில்லை!
பாடம் : 54
நோன்பு நோற்றிருக்கும் போது விருந்தினர்க்குச் செய்ய வேண்டிய கடமை.
1874 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, உம்முடைய விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன! என்றார்கள். தாவூத் நபி (அலை) அவர்களின் நோன்பு எவ்வாறு இருந்தது? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், வருடத்தில் பாதி நாட்கள்! என்றார்கள்.
பாடம் : 55
நோன்பு நோற்றிருக்கும் போது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமை.
1975 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே! என்று கேட்டார்கள். நான் ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்றேன். நபி (ஸல்) அவர்கள் இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்! என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்! என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்! என்றார்கள். தாவூத் நபியின் நோன்பு எது? என்று நான் கேட்டேன். வருடத்தில் பாதி நாட்கள்! என்றார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின் நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய்விட்டேனே! என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்! என அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
பாடம் : 56
ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பது.
1976 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உயிருடனிருக்கும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குவேன் என்று நான் கூறிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. (இது பற்றி அவர்கள் என்னிடம் கேட்ட போது) என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் அவ்வாறு கூறியது உண்மையே! என்றேன். நபி (ஸல்) அவாகள், இது உம்மால் முடியாது! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வையும்! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்பலன் அளிக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்! என்றார்கள். நான், என்னால் இதைவிட சிறப்பானதைச் செய்ய முடியும். என்று கூறினேன். அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் விட்டுவிடுவீராக! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு என்னால் இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும்? என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!, இது தான் தாவூத் நபியின் நோன்பாகும்! நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்! என்றார்கள். நான் என்னால் இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும்? என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை! என்றார்கள்.
பாடம் : 57
நோன்பு நோற்றிருக்கும் போது குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமை.
இது பற்றிய நபி வழியை அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
1977 அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் தொடர்ந்துநோன்பு நோற்பதாகவும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி (ஸல்) அவர்களுக்குத் செய்தி எட்டியது; அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது நானாக அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும்! (அவர்கள் என்னை அழைத்து வரச் சொன்னார்களா, நானாகச் சென்று அவர்களைச் சந்தித்தேனா என்பது எனக்கு நினைவில்லை!) நபி (ஸல்) அவர்கள் நீர், விடாமல் நோன்பு நோற்பதாகவும் தூங்காமல் தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே! எனவே, நோன்பு வைப்பீராக! அதை விட்டுவிடவும் செய்வீராக! (இரவில்) எழுந்து நின்று வணங்குவீராக! தூங்கவும் செய்வீராக! ஏனெனில், உமது கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உமக்கும் உமது குடும்பத்தாருக்கும் நீர் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன! என்று கூறினார்கள். நான் இதற்கு எனக்கு சக்தி உள்ளது! என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் நீர் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக! என்றார்கள். அது எவ்வாறு? என்று நான் கேட்டேன். தாவூத் நபி (அலை) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்கள்; ஒரு நாள் விட்டுவிடுவார்கள்! மேலும், (போர்க்களத்தில் எதிரிகளைச்) சந்திக்கும் போது பின்வாங்க மாட்டார்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! இந்த (வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்? என்றேன்.
காலமெல்லாம் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் (இந்த சம்பவத்துக்கிடையே) எப்படிக் கூறினார்கள் என்பதை நான் அறிய மாட்டேன்; என்றாலும் காலமெல்லாம் நோன்பு நோற்றவர் நோன்பு நோற்றவரல்லர்! என்று நபி (ஸல்) அவர்கள் இருமுறை கூறினார்கள். (என்பது மட்டும் எனக்கு நினைவிருக்கிறது!) என்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
பாடம் : 58
ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றல்.
1978 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! என்று கூறினார்கள். இதைவிட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது! என்று நான் கூறினேன். முடிவில், ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக! என்று கூறினார்கள். மேலும் ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக! என்றார்கள். இதைவிட அதிகமாக(ஓத) எனக்கு சக்தி உள்ளது! என்று நான் கூறினேன். (நான் கேட்கக் கேட்க) குறைத்துக் கொண்டே வந்து முடிவில், மூன்று நாட்களில் ஒருதடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக! என்று கூறினார்கள்.
பாடம் : 59
தாவூத் நபியின் நோன்பு.
1979 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் வணங்குகிறீரோ? என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். நபி (ஸல்) அவர்கள், அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே செருகிவிடும்; (மேலும்) அதனால் உள்ளம் களைத்து (பலவீனமடைந்து) விடும்! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராக மாட்டார்! (மாதம் தோறும்) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலமெல்லாம் நோன்பு நோற்பதாகும்! என்றார்கள். அதற்கு நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு) சக்தி உள்ளவன்! என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அப்படியானால் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பார்கள்; (எதிரிகளைச்) சந்திக்கும் போது பின்வாங்கவு மாட்டார்கள்! என்று கூறினார்கள்.
1980 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் எனது நோன்பு பற்றித் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல்தலையணையை எடுத்துப் போட்டேன். அவர்கள் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா? என்று கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! (இதைவிட அதிகமாக நோற்க அனுமதியுங்கள்!) என்றேன்; அவர்கள் ஐந்த நாட்கள்! என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே...! என்றேன்; ஒன்பது நாட்கள்! என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே...! என்றேன்; பதினொரு நாட்கள்! என்றார்கள். பிறகு, தாவூத் நபி (அலை) அவர்களின் நோன்புக்கு மேல் (சிறப்புடையதாக) எந்த நோன்பும் இல்லை; அது வருடத்தின் பாதி நாட்களாகும்! எனவே, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பீராக! என்றார்கள்.
பாடம் : 60
மாதந்தோறும் பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நிலவு பிரகாசிக்கும் நாட்களில் (-அய்யாமுல் பீள்) நோன்பு நோற்றல்.
1981 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், ளுஹா நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும், உறங்குவதற்கு முன் வித்ர் தொழுகையை தொழுது விடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்.
பாடம் : 61
ஒரு கூட்டத்தாரிடம் சென்று, அங்கு நோன்பை முறிக்காமல் இருத்தல்.
1982 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர்கள் பேரீச்சம் பழங்களையும் நெய்யையும் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்கள் நெய்யை அதற்குரிய (தோல்) பாத்திரத்திலேயே ஊற்றுங்கள்; உங்கள் பேரீச்சம் பழங்களை அதற்குரிய பையில் போடுங்கள்; ஏனெனில், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்! என்றார்கள். பிறகு வீட்டின் ஒரு மூலையில் நின்று கடமையல்லாத தொழுகையைத் தொழுதார்கள், உம்முசுலைம் (ரலி) அவர்களுக்காகவும் அவர்களுடைய குடும்பத்தாருக்காகவும் பிரார்த்தித்தார்கள். அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எனக்கு விருப்பமான ஒன்று உள்ளது! என்றார். நபி (ஸல்) அவர்கள், அது என்ன? என்று கேட்டார்கள். உங்கள் ஊழியர் அனஸ்தான்! என்று உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறினார்கள். இம்மை மறுமையின் எந்த நன்மையையும் விட்டுவிடாமல் (எல்லா நன்மைகளையும்) கேட்டு, எனக்காக நபி (ஸல்) அவர்கள் பிராத்தித்தார்கள். இறைவா! இவருக்குப் பொருட் செல்வத்தையும் குழந்தைச் செல்வத்தையும் வழங்குவாயாக! இவருக்கு சுபிட்சம் (பரக்கத்) புரிவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.இன்று நான் அன்ஸாரிகளிலேயே அதிகச் செல்வந்தனாக இருக்கிறேன்!
எனக்குப் பிறந்த நூற்றியிருபதுக்கும் அதிகமான பிள்ளைகள் இறந்து, ஹஜ்ஜாஜ் (பின் யூசுஃப்) பஸ்ராவுக்கு வந்த காலத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டனர் என்று என் மகள் உமைனா என்னிடம் கூறினார்.
பாடம் : 62
மாதக் கடைசியில் நோன்பு நோற்றல்.
1983 முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இம்ரான் பின் ஹுஸைன்(ரலி) அவர்களிடமோ, அவர்கள் செவிமடுத்துக் கொண்டிருக்க மற்றொருவரிடமோ நபி (ஸல்) அவர்கள், இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா? என்று கேட்டார்கள். அம்மனிதர் இல்லை, அல்லாஹ்வின் தூதரே! என்றார். நபி (ஸல்) அவர்கள் நீர் நோன்பை விட்டு விட்டால் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக! என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைக் கருத்தில் கொண்டே, இம்மாதம் என்று சொன்னதாக எனக்கு இதை அறிவித்தவர் (மஹ்தீ பின் மைமூன்) கூறியதாக நான் நினைக்கிறேன்! என்று அபுந்நுஃமான் கூறுகிறார்.
நபியவர்கள் ரமளானையே கருத்தில் கொண்டு இம்மாதம் என்று சொன்னதாக நான் நினைக்கிறேன்! என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸல்த் என்பார் கூறவில்லை.
ஷஅபானின் கடைசி என்று மற்றோர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
பாடம் : 63
வெள்ளிக் கிழமை நோன்பு நோற்றல்.
வெள்ளிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்றால் அதை முறிப்பது அவசியமாகும்.
1984 முஹம்மத் பின் அப்பாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதைத் தடை செய்தார்களா என்று கேட்டேன். ஜாபிர் (ரலி) அவர்கள், ஆம் என்றார்கள்.
மற்றோர் அறிவிப்பில் வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு வைக்கக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாகக் கூறப்படுகிறது.
1985 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் வெள்ளிக் கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்க வேண்டாம்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
1986 ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், நான் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றிருந்த போது என்னிடம் வந்தார்கள். நேற்று நோன்பு நோற்றாயா? என்று கேட்டார்கள். நான் இல்லை! என்றேன். நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கும் இல்லை! என்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அப்படியானால் நோன்பை முறித்து விடு! என்றார்கள்.
நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை முறித்து விட்டேன்! என்று ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாக அபூஅய்யூப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 64
சில நாட்களை மட்டும் குறிப்பாக தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவற்றில் நோன்பு நோற்கலாமா?
1987 அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான், நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில நாட்களை வணக்கவழிபாட்டிற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்களா? என்று கேட்டேன். அதற்கவர்கள் இல்லை! அவர்களின் வணக்கவழிபாடு (-அமல்) நிரந்தரமானதாக இருக்கும்! நபி (ஸல்) அவர்களால் செய்ய முடிந்த (வணக்கத்)தை உங்களில் யார்தான் செய்ய முடியும்? என்று கூறினார்கள்.
பாடம் : 65
அரஃபா நாளில் நோன்பு நோற்றல்.
1988 உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அரஃபா (துல்ஹஜ்-9ஆம்) தினத்தில் நோன்பு நோற்றிருக்கிறார்களா? என்று என்னிடம் சிலர் விவாதித்தனர். சிலர் அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்கள் என்று கூறினர். மற்றும் சிலர் நோன்பு நோற்றிருக்கவில்லை என்றார்கள். அப்போது ஒட்டகத்தில் அமர்ந்திருத்த நபி (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பினேன்; அதை அவர்கள் குடித்தார்கள்.
1989 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபி (ஸல்) அவர்கள் குடித்தார்கள்.
பாடம் : 66
நோன்புப் பெரு நாள் (-ஈதுல் ஃபித்ர்) தினத்தில் நோன்பு நோற்றல்.
1990 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்க நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தனர். அவை: நோன்பை முடித்துப் பெரு நாள் கொண்டாடும் (ஈதுல் ஃபித்ர்) தினமும், குர்பானி இறைச்சியை நீங்கள் சாப்பிடும் (ஈதுல் அள்ஹா) தினமும் ஆகும்.
1991,1992 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நோன்புப் பெரு நாள், ஹஜ்ஜுப் பெரு நாள் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்பதையும், இரு புஜங்களில் ஒன்றை மட்டும் மறைத்து, மற்றொன்று வெளியே தெரியும் வண்ணம் ஒரு துணியைப் போர்த்திக் கொள்வதையும், ஓர் ஆடையை சுற்றிக் கொண்டு முழங்கால்களைக் கட்டி அமர்வதையும், சுப்ஹுக்குப் பிறகும், அஸ்ர் தொழுகைக்குப் பிறகும் தொழுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்!
பாடம் : 67
ஹஜ்ஜுப் பெரு நாள் (-ஈதுல் அள்ஹா) தினத்தில் நோன்பு நோற்றல்.
1993 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நோன்புப் பெரு நாள் தினத்திலும், ஹஜ்ஜுப் பெரு நாளன்றும் நோன்பு நோற்பதும் முலாமஸா, முனாபதா என்ற இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
1994 ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து, ஒருவர் ஒரு நாள் நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்! என்று கூறினார். அந்த மனிதர் (அவர்) திங்கட்கிழமையன்று -(நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்!) என்று கூறியதாக நான் நினைக்கிறேன்- அவர் குறிப்பிட்ட அந்த நாள் பெரு நாளாக அமைந்து விட்டது! ஆகவே, இப்னு உமர் (ரலி) அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நபி (ஸல்) அவர்கள் இந்த தினத்தில் நோன்பு நோற்பதைத் தடை செய்திருக்கிறார்கள்! என்று கூறினார்கள்.
1995 நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்து கொண்ட அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன. அவை: ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது! நோன்புப் பெரு நாள், ஹஜ்ஜுப் பெரு நாள் (ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா) ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது! சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது! (அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா), பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்), எனது இந்த (மஸ்துதுந் நபவீ) பள்ளி வாசல் ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறெதை நோக்கியும் பயணம் மேற்கொள்ளக் கூடாது!
பாடம் : 68
(துல்ஹஜ் மாதம் 11, 12, 13 ஆகிய அய்யாமுத்) தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்றல்.
1996 யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் மினாவில் தங்கக்கூடிய (தஷ்ரீக் உடைய) நாட்களில் நோன்பு நோற்பார்கள்! என்று தம் தந்தை உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாக ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
ஹிஷாமின் தந்தை உர்வா (ரஹ்) அவர்களும் அந்த நாட்களில் நோன்பு நோற்பார்கள்.
1997 & 1998 ஆயிஷா (ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் கூறியதாவது:
குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்படவில்லை!
1999 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தமத்துஉ எனும் முறையில் இஹ்ராம் கட்டியவரே அரஃபா நாள் வரை நோன்பு நோற்கலாம்! கர்பானிப் பிராணியும் கிடைக்கவில்லை. நோன்பும் நோற்கவில்லை என்றால் மினாவில் தங்கும் நாட்களில் நோன்பு நோற்கலாம்!
ஆயிஷா (ரலி) அவர்களும் இவ்வாறு கூறியதாக உர்வா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
பாடம் : 69
ஆஷூரா (முஹர்ரம் 10ஆம்) நாளில் நோன்பு நோற்றல்.
2000 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆஷூரா நாளில் விரும்பினால் நோன்பு நோற்கலாம்!
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2001 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் விரும்பியவர் (ஆஷூரா தினத்தில்) நோன்பு நோற்றனர்; விரும்பாதவர் விட்டுவிட்டனர்.
2002 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி (ஸல்) அவர்களும் நோற்றனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு பணித்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விட்டுவிட்டனர். விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்றனர்; விரும்பாதவர் விட்டுவிட்டனர்.
2003 ஹுமைத் பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்ற வருடம் ஆஷூரா நாளில் சொற்பொழிவுமேடை (மிம்பர்) மீது நின்று கொண்டு, மதீனாவாசிகளே! உங்கள் அறிஞர்கள் எங்கே? நபி (ஸல்) அவர்கள், இது ஆஷூரா நாளாகும். இதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கவில்லை என்று கூறியதை நான் செவியுற்றிருக்கிறேன். நான் நோன்பு நோற்றிருக்கிறேன். விரும்பியவர் நோன்பு நோற்கட்டும்; விரும்பாதவர் விட்டுவிடட்டும் என்று கூறினார்கள்.
2004 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். இது என்ன நாள்? என்று கேட்டார்கள். யூதர்கள் இது நல்ல நாள். இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், உங்களைவிட மூசாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான் என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
2005 அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஆஷூரா நாளை யூதர்கள் பெரு நாளாகக் கொண்டாடிவந்தனர். நபி (ஸல்) அவர்கள், அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்! என்றார்கள்.
2006 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அஷூரா எனும் இந்த (முஹர்ரம் 10ஆம்) நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!
2007 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, இன்று ஆஷூரா நாளாகும்; ஆகவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்! என்று அறிவிக்கச் செய்தார்கள்!
01.11.2009. 21:30