25-ஹஜ்5

25-ஹஜ்

பாடம் : 121

குர்பானிப் பிராணிகளின் தோல்களை தர்மம் செய்ய வேண்டும்.

1717 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்குக் கூலியாக, அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

பாடம் : 122

குர்பானிப் பிராணியின் சேணங்கள் தர்மம் செய்யப்பட வேண்டும்.

1718 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்; அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.

பாடம் : 123

அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே!) நீர் நினைவு கூரும்:

நாம் இப்றாஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்துப் பின்வருமாறு கட்டளையிட்டோம்: நீர் எனக்கு எதனையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும் அதில் ருகூஉ, சுஜூது செய்(துதொழுது)வோருக்கும் அதைத் தூய்மை செய்து வைப்பீராக! மேலும், ஹஜ் செய்ய வரும்படி மக்களிடையே அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவான இடங்களில் இருந்தெல்லாம் வரும் மெலிந்த ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வரட்டும்! தங்களுக்குரிய பலன்களைக் காணட்டும். குறிப்பிட்ட நாட்களில், அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்லி குர்பானி கொடுக்கட்டும்! எனவே, அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்! பின்னர் அவர்கள் (தலைமுடி மழித்து, நகம் வெட்டி, குளித்து)த் தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) புராதன ஆலயத்தை தவாஃபும் செய்யட்டும்!'

இதுவே (ஹஜ்ஜின் வழிபாட்டு முறையாகும்)! மேலும் அல்லாஹ்வினால் புனிதப்படுத்தப் பட்டவற்றுக்கு யார் கண்ணியமளிக்கிறாரோ அது அவருக்கு அவருடைய இறைவனிடம் சிறந்ததாகும்! (22:26-30)

பாடம் : 124

குர்பானிப் பிராணியில் உண்ணப்பட வேண்டியவையும் தர்மம் செய்யப்பட வேண்டியவையும்.

இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டையாடிய குற்றத்திற்குப் பரிகாரமாகவோ நேர்ச்சையாகவோ குர்பானி கொடுப்பவர்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடலாகாது; மற்ற பிராணிகளைச் சாப்பிடலாம் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

ஹஜ்ஜுத் தமத்துஉவில் (கொடுக்கப்படும் குர்பானியை) உண்ணலாம்; பிறருக்கு உண்ணக் கொடுக்கலாம் என அதாஉ (ரஹ்) கூறுகிறார்கள்.

1719 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மினாவில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாட்களுக்கு மேல் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியைச் சாப்பிடமாட்டோம். பிறகு நபி(ஸல்) அவர்கள், சாப்பிடுங்கள்; சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி எங்களுக்குச் சலுகை வழங்கியதும் நாங்கள் சாப்பிட்டு, சேமித்து வைக்கலானோம்.

மதீனா வரும்வரை (சாப்பிட்டோம்)' என்று ஜாபிர் (ரலி) கூறினாரா என அதாஉ (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர் இல்லை' என்றார் என இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1720 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஜ்ஜை மட்டும் எண்ணத்தில் கொண்டு துல்கஅதா மாதத்தின் இருபத்தைந்தாம் நாள் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கியதும், குர்பானிப்பிராணியைக் கொண்டுவராதவர் தவாஃப் செய்துவிட்டு இஹ்ராமிலிருந்து விடுபட நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு துல்ஹஜ் 10ஆம் நாள் மாட்டிறைச்சி எங்களுக்கு வந்தது. இது என்ன? என நான் கேட்டேன். மக்கள், நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரின் சார்பாகப் பலியிட்டார்கள்' என்றனர்.

பாடம் : 125

தலைமுடியை மழிப்பதற்கு முன் குர்பானி கொடுத்தல்.

1721 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

குர்பானிகொடுப்பதற்கு முன் தலைமுடியை மழித்துவிடுதல் மற்றும் அதுபோன்றவற்றைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் குற்றமில்லை! குற்றமில்லை என்றனர்.

1722 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், நான் கல்லெறிவதற்கு முன்பே தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டேன்' என்றார். அதற்கு அவர்கள் குற்றமில்லை! என்றார்கள். பிறகு அவர், நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகத் தலையை மழித்துவிட்டேன்' என்றதும் அவர்கள் குற்றமில்லை! என்றார்கள். மேலும் அவர் நான் கல்லெறிவதற்கு முன்பாகப் குர்பானிகொடுத்துவிட்டேன்' என்றபோதும் அவர்கள் குற்றமில்லை என்றார்கள்.

1723 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், நான் மாலை நேரம் வந்த பின் கல்லெறிந்தேன்! என்று கேட்டதும். அவர்கள் குற்றமில்லை! என்று கூறினார்கள். பிறகு அவர், நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகத் தலையை மழித்துவிட்டேன்! என்றபோதும் அவர்கள் குற்றமில்லை! என்றே கூறினார்கள்.

1724 அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பத்ஹாவில் இருக்கும் போது நான் அங்கு வந்தேன். அப் போது அவர்கள், ஹஜ் செய்ய நாடிவிட்டீரா? எனக் கேட்க, நான் ஆம்!' என்றேன். எதற்காக இஹ்ராம் கட்டினீர்? என அவர்கள் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காக! என்றúன். உடனே அவர்கள், நல்லகாரியம் செய்தீர்! போய் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா-மர்வாவையும் தவாஃப் செய்யும்! என்றார்கள். பிறகு நான் கைஸ் கோத்திரத்தாரின் பெண்களில் (திருமண முடிக்கத்தகாத) நெருங்கிய உறவினர் ஒருவரிடம் வந்தேன்; அவர் எனது தலையில் பேன் பார்த்தார். பிறகு நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினேன். இந்த அடிப்படையிலேயே உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலம்வரை நான் மக்களுக்குத் தீர்ப்புக் கூறிவந்தேன்! உமர் (ரலி) அவர்களிடம் இதுபற்றி நான் கூறியதும் அவர்கள், நாம் இறைவேதத்தை எடுத்துக் கொண்டால், அதுவோ (ஹஜ் மற்றும் உம்ராவை) முழுமையாக நிறைவேற்றுமாறு நமக்குக் கட்டளையிடுகின்றது; நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை எடுத்துக் கொண்டால், நபி (ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணி பலியிடப்படும் இடத்தை அடையாதவரை இஹ்ராமிலிருந்து விடுபட்டதில்லை என்று தெரிகின்றது! எனக் கூறினார்கள்.

பாடம் : 126

இஹ்ராமின் போது தலை முடியில் களிம்பு தடவிப் படிய வைப்பதும் தலையை மழித்துக் கொள்வதும்.

1725 ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! உம்ரா செய்துவிட்டு மக்கள் தங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள்; ஆனால், நீங்கள் உம்ரா செய்து பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே, என்ன காரணம்? எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், எனது முடியைக் களிம்பு தடவிப் படிய வைத்துவிட்டேன்; எனது குர்பானிப் பிராணியின் கழுத்தில் மாலையும் தொங்கவிட்டுவிட்டேன்; எனவே குர்பானி கொடுக்காதவரை நான் இஹ்ராமிலிருந்து விடுபடக்கூடாது! என்றார்கள்.

பாடம் : 127

இஹ்ராமிலிருந்து விடுபடும் போது முடியைக் குறைத்துக்கொள்வதும், மழித்துக்கொள்வதும்.

1726,1727 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது தலையை மழித்தார்கள். அவர்கள், இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக! எனக் கூறியதும் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக! எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்.... என்றனர். நபி (ஸல்) அவர்கள் முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!) என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பின்படி தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! என்று ஒரு தடவையோ இரண்டு தடவையோ கூறியதாக உள்ளது.

இன்னுமொரு அறிவிப்பில் நான்காவது தடவையில், முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்.... எனக் கூறியதாக உள்ளது.

1728 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எனப் பிரார்த்தித்தார்கள்; உடனே, தோழர்கள் முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் மன்னிப்பு அளிப்பாயாக! என்றனர். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள் இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! என்று பிரார்த்தித்த போது தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்... என்றனர். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது தடவையாகவும் அதைக் கூறிய போது முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (மன்னிப்பு அளிப்பாயாக!) என்று கூறினார்கள்.

1729 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களில் ஒரு கூட்டத்தாரும் தலையை மழித்துக் கொண்டனர். மற்ற சிலர் முடியைக் குறைத்துக் கொண்டனர்.

1730 முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் முடியைக் கத்தரிக்கோலால் (கத்தரித்துக்) குறைத்துள்ளேன்.

பாடம் : 128

ஹஜ்ஜுத் தமத்துஉ' செய்பவர்கள் உம்ராவுக்கப் பின் தலைமுடியைக் குறைத்துக்கொள்ளல்.

1731 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்த போது, இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே சஈ' செய்தபின், இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமென்றும் பிறகு தலையை மழித்துக்கொள்ளவோ, முடியைக் குறைத்துக்கொள்ளவோ வேண்டுமென்றும் தம்முடைய தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

பாடம் : 129

துல்ஹஜ் பத்தாம் நாள் தவாஃபுஸ் ஸியாரத்' செய்தல்.

நபி (ஸல்) அவர்கள் தவாஃபுஸ் ஸியாரத்தை இரவு வரை தாமதமாக்கினார்கள் என ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் மினாவில் தங்கும் நாட்களில் தவாபுஸ் ஸியாரத் செய்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளார்கள்.

1732 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரேயொரு தவாஃப் செய்துவிட்டு மதிய ஓய்வு மேற் கொண்டார்கள். பிறகு துல்ஹஜ் பத்தாம்நாள் மினாவுக்கு வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாக (இப்னு உமர் ளரலின அவர்கள் கூறியதாக) மற்றோர் அறிவிப்பில் காணப்படுகின்றது.

1733 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். துல்ஹஜ் பத்தாம் நாள் நாங்கள் தவாஃபுஸ் ஸியாரத் செய்த போது ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் தாம்பத்தியஉறவு கொள்ள நாடினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அதற்கவர்கள், அவர் (நமது பயணத்தைத்) தடுத்துவிட்டாரா? எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள், அவர் துல்ஹஜ் பத்தாம் நாளே தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்!' என்றதும் அப்படியாயின் புறப்படுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 130

மறதியினாலோ அறியாமையினாலோ, மாலை நேரத்தில் கல்லெறிவதும் குர்பானிகொடுப்படுதற்கு முன்பு தலையை மழிப்பதும்.

1734 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் குர்பானிகொடுப்பது, தலையை மழிப்பது, கல்லெறிவது ஆகியவற்றை முற்படுத்தியோ பிற்படுத்தியோ நிறைவேற்றுவது சம்பந்தமாக வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், குற்றமில்லை! எனக் கூறினார்கள்.

1735 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது துல்ஹஜ் 10ஆம் நாள் பல கேள்விகள் கேட்கப்பட்டதற்கு, குற்றமில்லை! என்றே பதில் கூறினார்கள். ஒருவர் நான் குர்பானிகொடுப்பதற்கு முன் தலையை மழித்துவிட்டேன்! என்று கூறிய போது, நபி(ஸல்) அவர்கள் குற்றமில்லை! (இப்போது) குர்பானிகொடுப்பீராக! என்று கூறினார்கள். பிறகு அவர் நான் மாலை நேரமான பின்பே கல்லெறிந்தேன்! என்றதும் நபி (ஸல்) அவர்கள் குற்றமில்லை! என்றார்கள்.

பாடம் : 131

ஜம்ராவில், வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டிருக்கும் போது (மக்களுக்குத்) தீர்ப்பளித்தல்.

1736 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின் போது (தமது வாகனத்தின் மீது) அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் (சில சந்தேகங்களை) கேட்கத் தொடங்கினர். ஒருவர், நான் பலியிடுவதற்கு முன்பாக, தெரியாமல் தலையை மழித்துவிட்டேன்! என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் குற்றமில்லை! (இப்போது குர்பானிப்பிராணியை) அறுப்பீராக! என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்து கல்லெறிவதற்கு முன்பு தெரியாமல் அறுத்து குர்பானிகொடுத்துவிட்டேன்! எனக் கூறியதும் அவர்கள் குற்றமில்லை! இப்போது கல்லெறிவீராக! என்று கூறினார்கள். அன்றைய தினம் (பிற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில வழிபாடுகள் முன்னதாகச் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முன்னதாகச் செய்யப்பட வேண்டிய) சில வழிபாடுகள் பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் கேட்கப்பட்ட அனைத்திற்கும் நபி (ஸல்) அவர்கள் குற்றமில்லை! (விடுபட்டதைச் இப்போது) செய்வீராக! என்றே கூறினார்கள்.

1737,1738 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது நான் வந்தேன். அப்போது ஒருவர் எழுந்து, நான் இதற்கு முன் இது என நினைத்தேன்! என்றார். மற்றொருவர் எழுந்து, நான் இதற்கு முன் இது என நினைத்தேன்! குர்பானிகொடுப்பதற்கு முன் தலையை மழித்துவிட்டேன்; கல்லெறிவதற்கு முன் குர்பானிகொடுத்துவிட்டேன்! என இது போன்றவற்றைக் கூறலானார். அவ்வனைத்திற்குமே நபி (ஸல்) அவர்கள் குற்றமில்லை! (விடுபட்டதைச் செய்யுங்கள்! என்றே கூறினார்கள். அன்றைய தினம் வினவப்பட்ட எல்லாவற்றிற்குமே அவர்கள் குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்! என்றே கூறினார்கள்.

பாடம் : 132

மினாவில் தங்கும் நாட்களில் உரை நிகழ்த்துதல்.

1739,1740 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது மக்களே! இது எந்த நாள்? எனக் கேட்டார்கள். மக்கள் புனிதமிக்க தினம்' என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் இது எந்த நகரம்? எனக் கேட்டதும் மக்கள் புனிதமிக்க நகரம்' என்றனர். பிறகு அவர்கள் இது எந்த மாதம்? எனக் கேட்டதும் மக்கள் புனிதமிக்க மாதம்! என்றனர். பிறகு நபி (ஸல்) அவாகள், நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்! எனப் பல தடவை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்துவிட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா? என்றும் கூறினார்கள்.

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(வ்விறை)வன் மீது சத்தியமாக! இது நபியவர்கள் தமது சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்.

பின்னர் இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்! எனது இறப்புக்குப் பின் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்த நான் கேட்டேன் என்ற வாக்கியம் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

1741 அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா? எனக் கேட்டார்கள். நாங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதருமே நன்கறிவர்! என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, இது (குர்பானிகொடுப்பதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம்! என்றோம். பிறகு இது எந்த மாதம்? என அவர்கள் கேட்டதும் நாங்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்! என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு, இது துல்ஹஜ் மாதம் அல்லவா? என அவர்கள் கேட்க, நாங்கள் ஆம்! என்றோம். பிறகு இது எந்த நகரம்? எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் அல்லாஹ்வும் அவது தூதருமே நன்கறிவர்! என்றோம். அப்போதும் அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு இது புனிதமிக்க நகரமல்லவா? எனக் கேட்க, நாங்கள் ஆம்! என்றோம்.

பிறகு உங்களுடைய (புனிதமிக்க) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் இரட்சகனைச் சந்திக்கும் நாள் (மறுமை)வரை புனிதமானவையாகும்! என்று கூறிவிட்டு, நான் உங்களிடம் (இறைச்செய்திகள் அனைத்தையும்) சேர்ப்பித்துவிட்டேனா? எனக் கேட்டார்கள். மக்கள் ஆம்! என்றனர். பிறகு அவர்கள், இறைவா! இதற்கு நீயே சாட்சியாயிரு! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! ஏனெனில், செவியேற்பவரைவிட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்துகொள்பவராயிருக்கலாம்; எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாவிட வேண்டாம்! எனக் கூறினார்கள்.

1742 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது, இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்! என்றனர். உடனே அவர்கள் இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்க மக்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்! என்றனர். உடனே அவர்கள் (இது) புனிதமிக்க நகரமாகும்! இது எந்த மாதம் என்பதை அறிவிர்களா? என்றதும் மக்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்! என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் (இது) புனிதமிக்க மாதமாகும்! எனக் கூறிவிட்டு, உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்! எனக் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள், தாம் ஹஜ் செய்த போது நஹ்ருடைய நாளில் ஜம்ராக்களுக்குக்கிடையே நின்று கொண்டு, இது மாபெரும் ஹஜ்ஜின் தினமாகும்! எனக் கூறினார்கள்; மேலும், இறைவா! நீயே சாட்சி! என்றும் கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள். எனவே மக்களும் இது (நபி(ஸல்) அவர்கள் நம்மிடம்) விடைபெற்று (உலகை விட்டு)ச் செல்கின்ற ஹஜ்ஜாகும்! எனப் பேசிக் கொண்டனர்.

பாடம் : 133

தண்ணீர் வழங்குபவர்களும் மற்றவர்களும் மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் மக்காவில் தங்கலாமா?

1743,1744,1745 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவில் (ஹாஜிகளுக்கு) தண்ணீர் வழங்க வேண்டியிருப்பதால் மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் மக்காவில் தங்குவதற்கு அப்பாஸ் (ரலி), அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டர்கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

பாடம் : 134

கல்லெறிதல்.

நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் முற்பகல் நேரத்தில் கல்லெறிந்தார்கள். மறு நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்ததும் கல்லெறிந்தார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

1746 வபரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நான் எப்போது கல்லெறிவது? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் உமது தலைவர் எறியும் போது நீரும் எறியும்! என்றார்கள். நான் மீண்டும் அதே கேள்வி கேட்ட போது, நாங்கள் சூரியன் உச்சிசாயும் வரை காத்திருப்போம்; பிறகு கல்லெறிவோம்! என்றுக் கூறினார்கள்.

பாடம் : 135

பத்னுல்வாதி என்னுமிடத்திலிருந்து கல்லெறிதல்.

1747 அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், பத்னுல்வாதி எனுமிடத்திலிருந்து கல்லெறிந்தார்கள். அப்போது நான், அப்துர் ரஹ்மானின் தந்தையே! மக்கள் மேற்பரப்பில் இருந்தல்லவா கல்லெறிகின்றனர்? எனக் கேட்டேன். அதற்கவர்கள், எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்கள் (கல் எறிந்த வண்ணம்) நின்றிருந்த இடம் இது தான் ! எனக் கூறினார்கள்.

பாடம் : 136

(ஜம்ராக்களின் மீது கல்லெறியும் போது) ஏழு சிறுகற்களை எறிய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எறிந்ததாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

1748 அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்ததும், தமது இடப் பக்கத்தில் இறையில்லம் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும்படி நின்று கொண்டு, ஏழு சிறுகற்களை எறிந்தார்கள். பிறகு இவ்வாறுதான், அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்களும் எறிந்தார்கள்! என்று கூறினார்கள்.

பாடம் : 137

ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும் போது இறையில்லம் கஅபா, தமது இடப் பக்கமிருக்கும்படி நிற்பது.

1749 அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன்; அப்போது அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். அவர்கள் தமது இடது பக்கத்தில் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்குமாறு நின்று கொண்டார்கள். பிறகு அவர்கள் இதுவே அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அவர்கள் கல்லெறிந்த இடமாகும்! என்று கூறினார்கள்.

பாடம் : 138

ஒவ்வொரு கல்லையும் எறியும் போது தக்பீர் கூறவேண்டும்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக இப்னு உமர் (ரலி) அறிவித்துள்ளார்கள்.

1750 அஃமஷ் (ரஹ்) கூறியதாவது:

ஹஜ்ஜாஜ் சொற்பொழிவுமேடை (மிம்பர்) மீது ஏறி நின்று, (அல்பகரா அத்தியாயம் என்று கூறாமல்) பசுமாடு பற்றிக் கூறப்படுகின்ற அத்தியாயம் என்றும், (ஆலுஇம்ரான் அத்தியாயம் என்று கூறாமல்) இம்ரானின் சந்ததிகள் பற்றிக் கூறப்படுகின்ற அத்தியாயம் என்றும், (அந்நிஸா அத்தியாயம் என்று கூறாமல்) பெண்கள் பற்றிக் கூறப்படும் அத்தியாயம்' என்றும் கூறியதை நான் செவியேற்றிருக்கிறேன். இதுபற்றி நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் கூறிய போது அவர்கள், இதுபற்றி அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (பின்வருமாறு) கூறியதாக குறிப்பிட்டார்கள்.

நான் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் இருக்கும் போது, இப்னுமஸ்ஊத் (ரலி) ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும் போது பத்னுல்வாதி எனும் இடத்தை அடைந்து, அதில் உள்ள மரத்திற்கு நேராக வந்ததும் அதன் குறுக்கே நின்று கொண்டு, ஏழுகற்களை (ஒவ்வொன்றாக) எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் மீதுதாணையாக! யாருக்கு அல்பகரா அத்தியாயம் அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில்தான் (கல்லெறிந்தபடி) நின்றார்கள்! என இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 139

ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்த பின்பு அங்கு நிற்காமல் வந்துவிடுவது.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக (அதாவது, நபி ளஸல் ன அவர்கள் கடைசி ஜம்ராவில் கல்லெறிந்த பின்பு அங்கு நிற்காமல் திரும்பிவிட்டதாக) இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 140

இரண்டு ஜம்ராக்களில் கல்லெறிந்த பின்பு கிப்லாவை முன்னோக்கி, சமதளமான தரையில் நிற்பது.

1751 சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் முதல் ஜம்ராவில் ஏழுகற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நிற்பார்கள். தம் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று துஆ செய்வார்கள். பின்பு, இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிவார்கள். பிறகு இடது பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குப் போய், கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பின்பு பத்னுல் வாதி என்னுமிடத்திலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள்; அங்கு நிற்க மாட்டார்கள். பிறகு திரும்பி வந்து, இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கிறேன்! எனக் கூறுவார்கள்.

பாடம் : 141

முதல் ஐம்ராவிலும் இரண்டாவது ஐம்ராவிலும் கைகளை உயர்த்துதல்.

1752 சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் முதல் ஐம்ராவில் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கிக் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று துஆ செய்வார்கள். பின்பு இரண்டாவது ஜம்ராவில் அவ்வாறே கல்லெறிவார்கள். பிறகு இடப் பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குப் போய் கிப்லாவை முன்னோக்கி மிக நீண்ட நேரம் நின்று கொண்டு கைகளை உயர்த்தி துஆ செய்வார்கள். பின்பு பத்னுல் வாதி எனுமிடத்திலிருந்து, கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள். அங்கு நிற்க  மாட்டார்கள். பிறகு திரும்பி வந்து, இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கின்றேன்! எனக் கூறுவார்கள்.

பாடம் : 142

முதலிரண்டு ஐம்ராக்களிலும் பிரார்த்தித்தல்.

1753 ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மினா பள்ளிவாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜம்ராவில் கல்லெறியும் போது ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு, சற்று முன்னால் சென்று, கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பிறகு இரண்டாவது ஜம்ராவுக்கு வந்து அங்கும் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறது இடப் பக்கமாக, பள்ளத்தாக்கிற்கு அடுத்துள்ள பகுதிக்கு வந்து, கிப்லாவை முன்னோக்கி நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பிறகு ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்து ஏழு சிறுகற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அங்கிருந்து திரும்பிவிடுவார்கள். அங்கு நிற்க  மாட்டார்கள்.

சாலிம் (ரஹ்) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய இந்தச் செயலை, தம் தந்தை இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக அறிவித்ததை நான் செவியுற்றுள்ளேன். இப்னு உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே செய்பவராக இருந்தார்கள்.

பாடம் : 143

கல்லெறிந்த பின் நறுமணம் பூசிக்கொள்வதும் தவாஃபுஸ் ஸியாரத்திற்கு முன்பு தலை மழித்துக்கொள்வதும்.

1754 காசிம் (ரஹ்) கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்ட நாடிய போதும், தவாஃபுஸ் ஸியாரத் செய்யும் முன்னர், (ஜம்ராக்களில் கல்லெறிந்துவிட்டு, தலை மழித்துக் கொண்டு) இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபட்டுவிட்டிருந்த வேளையிலும், நான் அவர்களுக்கு எனது இவ்விரு கைகளால் நறுமணம் பூசியிருக்கின்றேன்! எனக் கூறித் தமது இரு கைகளையும் விரித்துக் காட்டினார்கள்.

பாடம் : 144

தவாஃபுல் வதா (விடைபெறும் தவாஃப்).

1755 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதை ஹஜ்ஜின் கடைசி வழிபாடாக ஆக்கிக்கொள்ள வேண்டும்' என மக்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆயினும் மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. (கடைசி தவாஃபான தவாஃபுல் வதாவை மட்டும் விட்டுவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது).

1756 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளைத் தொழுதுவிட்டு முஹஸ்ஸப் எனும் (மக்காவுக்கும் மினாவுக்குமிடையேயுள்ள) ஓரிடத்தில் உறங்கினார்கள். பின்பு வாகனத்தில் ஏறி இறையில்லம் கஅபாவிற்குச் சென்று அதை தவாஃப் செய்தார்கள்.

பாடம் : 145

தவாஃபுஸ் ஸியாரத் செய்த பின்பு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால்...?

1757 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர் நம்மை (மக்காவிலிருந்து செல்லவிடாமல்) தடுத்துவிட்டாரா? எனக் கேட்டர்கள். அதற்கு தோழர்கள் அவர் தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்! என்று கூற, நபி (ஸல்) அவர்கள் அப்படியானால் பரவாயில்லை! (நாம் போகலாம்!) என்றார்கள்.

1758,1759 இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ஒரு பெண் தவாஃப் செய்த பிறகு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது? எனக் கேட்டனர். அதற்கவர்கள் அவள் (தவாஃபுல் வதா செய்யாமல்) போய்விட வேண்டியது தான் ! என்றார்கள். அப்போது அவர்கள், உமது சொல்லை எடுத்துக் கொண்டு, ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களுடைய கூற்றை விட்டுவிட நாங்கள் தயாரில்லை! என்றனர். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்படியாயின் நீங்கள் மதீனா சென்றால் அங்கு(ள்ளோரிடம்) கேட்டுப் பாருங்கள்! என்றார்கள்.

அவர்கள் மதீனா சென்றதும் இது பற்றிக் கேட்டார்கள். அவர்களால் கேட்கப்பட்டவர்களில் உம்முசுலைம் (ரலி) அவர்களும் ஒருவராவார்கள். அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களின் நிகழ்ச்சியைக் கூறினார்கள்.

1760 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மாதவிடாய் ஏற்பட்ட பெண் தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டால் (மக்காவை விட்டுச்) சென்று விடுவதற்கு அவளுக்கு சலுகை வழங்கப்பட்டிருந்தது.

1761தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண் மக்காவை விட்டுச் செல்லக்கூடாது! என்று ஆரம்பத்தில் கூறிக் கொண்டிருந்தார்கள். பிறகு அவர்களே, நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு சலுகை வழங்கியுள்ளார்கள்! எனக் கூறினார்கள்.

1762 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் புறப்பட்டோம். நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்ததும் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா-மர்வாவையும் தவாஃப் செய்தார்கள்; ஆனால் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் குர்பானிப்பிராணியைக் கொண்டு வந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களுடைய மனைவிமார்கள், அவர்களுடைய தோழர்கள் அனைவரும் தவாஃப் செய்தார்கள். பிறகு அவர்களில் குர்பானிப்பிராணி கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டனர். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் ஹஜ்ஜின் எல்லா வழிபாடுகளையும் செய்தோம்.

நபி (ஸல்) அவர்கள் முஹஸ்ஸப் எனுமிடத்தில் தங்கியிருந்த - வீடு திரும்ப வேண்டிய- இரவில் நான், அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிர, உங்களுடைய மற்ற எல்லாத் தோழர்களும் ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்துவிட்டு (ஊர்) திரும்புகின்றனர்! என்றேன். அதற்கவர்கள், நாம் மக்காவுக்கு வந்த சேர்ந்த இரவில் நீ தவாஃப் செய்யவில்லைதானே! என்று கேட்டார்கள். நான் இல்லை! என்றேன். நபி (ஸல்) அவர்கள் நீ உன் சகோதரருடன் தன்யீம் என்ற இடத்திற்குப் போய், உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்துகொள்! மேலும் இன்னின்ன இடங்களில் என்னைச் சந்தித்துக்கொள்! எனக் கூறினார்கள். நான் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் தன்யீம் சென்று உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தேன். அப்போது, ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள், காரியத்தைக் கெடுத்துவிட்டாயே! நீ எங்களை (மக்காவிலிருந்து செல்லவிடாமல்) தடுத்து விட்டாய்! தவாஃப் செய்துவிட்டாயல்லவா? எனக் கேட்டார்கள். அதற்கவர்கள் ஆம்! என்றதும், அப்படியாயின் பரவாயில்லை; புறப்படு! என்றார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்காவாசிகளுடன் மேலே ஏறும் போது அவர்களை நான் சந்தித்தேன்; அப்போது நான் கீழே இறங்கிக் கொண்டிருந்தேன். அல்லது, நான் மேலே ஏறிக் கொண்டிருந்தேன்; அவர்கள் கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

பாடம் : 146

மக்காவிலிருந்து புறப்படும் நாளில் அப்தஹ்' எனுமிடத்தில் அஸ்ர் தொழல்.

1763 அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) கூறியதாவது:

நான் அனஸ்(ரலி) அவர்களிடம்,நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் 8ஆம் நாள் எங்கு லுஹ்ர் தொழுதார்கள்?' என கேட்டேன். அதற்கு அவர்கள் மினாவில்! என்று பதிலளித்தார்கள். அடுத்து நான், (மக்காவிலிருந்து) புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் நபி (ஸல்) அவர்கள் எங்கே அஸ்ர் தொழுதார்கள்? என்று கேட்டதற்கு, அப்தஹில்! என்று கூறிவிட்டு, உன்னுடைய தலைவர்கள் செய்வது போன்று நீயும் செய்துகொள்! என்று கூறினார்கள்.

1764 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப் மற்றும் இஷா ஆகிய தொழுகைகளை நிறைவேற்றியதும் முஹஸ்ஸப் எனுமிடத்தில் சற்று உறங்கிவிட்டு, பிறகு வாகனத்தில் ஏறி, இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்தார்கள்.

பாடம் : 147

முஹஸ்ஸபில் தங்குதல்.

1765 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல;) பயணம் எளிதாவதற்காக நபி (ஸல்) அவர்கள் தங்கி ஓய்வெடுத்த ஓர் இடமே முஹஸ்ஸப் ஆகும்.

1766 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல; அது நபி (ஸல்) அவர்கள் தங்கிய ஓரிடம்; அவ்வளவுதான்!

பாடம் : 148

மக்காவிற்குள் நுழைவதற்கு முன் தூத்துவாவில் தங்குவதும், மக்காவைவிட்டுத் திரும்பும் போது துல்ஹுலைஃபாவிலுள்ள பத்ஹாவில் தங்குவதும்.

1767 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் தூத்துவாவிலுள்ள இரண்டு கணவாய்களுக்கிடையே இரவில் தங்குவார்கள். பிறகு மக்காவின் மேற்பகுதியிலுள்ள கணவாய் வழியாக மக்காவிற்குள் நுழைவார்கள். அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ மக்காவிற்கு வந்ததும் மஸ்ஜிதுல் ஹராமில் வாசலருகேதான் ஒட்டகத்தைப் படுக்கவைப்பார்கள். பிறகு, மஸ்ஜிதில் நுழைந்து, ஹஜருல் அஸ்வதுக்கு வந்து, அங்கிருந்து தவாஃபை ஆரம்பிப்பார்கள். அந்த ஏழு சுற்றுக்களில் மூன்றில் ஓடியும் நான்கில் நடந்தும் தவாஃப் செய்வார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு, தமது கூடாரத்திற்குத் திரும்புவதற்கு முன்பாக ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடுவார்கள்.

மேலும், அவர்கள் ஹஜ்ஜையோ உம்ராவையோ முடித்துவிட்டு (மதீனாவுக்குத்) திரும்பும் போது, நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தை உட்கார வைத்துத் தங்கிய, துல்ஹுலைஃபாவிலுள்ள பத்ஹா என்னுமிடத்தில் வாகனத்தை உட்கார வைத்துத் தங்குவார்கள்.

1768 காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களிடம் முஹஸ்ஸப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நபி (ஸல்)அவர்கள், உமர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் அந்த இடத்தில் தங்கியிருக்கிறார்கள்! என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக எங்களிடம் கூறினார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், முஹஸ்ஸபில் லுஹ்ர், அஸ்ர் ஆகிய தொழுகைகளைத் தொழுவது வழக்கம்! என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

 மஃக்ரிப் தொழுகைகயையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுவார்கள்' என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்று நான் நினைக்கின்றேன் எனவும் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இஷாவையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுதார்கள் (என நாஃபிஉ ளரஹ்ன, உபைதுல்லாஹ் ளரஹ்ன அவர்களிடம் கூறினார்கள்) என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

(இஷாவைத் தொழுத) பிறகு, இப்னு உமர் (ரலி) அவர்கள் சிறிது நேரம் (அங்கேயே) உறங்கி விடுவார்கள்; பிறகு, நபி (ஸல்) அவர்கள் இப்படிச் செய்தார்கள்' என்றும் கூறுவார்கள் எனவும் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாக, உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.

பாடம் : 149

மக்காவிலிருந்து திரும்பும் போது தூத்துவாவில் தங்குதல்.

1769 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் (மக்காவுக்கு) வரும் போது தூத்துவாவில் இரவு தங்குவார்கள். விடிந்ததும் (மக்காவுக்குள்) பிரவேசிப்பார்கள். (மக்காவிலிருந்து) திரும்பும் போதும் தூத்துவாவில் விடியும்வரை தங்குவார்கள். மேலும், இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்வார்கள்' என்றும் கூறுவார்கள்.

பாடம் : 150

ஹஜ்ஜுக் காலத்தில் வியாபாரம் செய்தலும் அறியாமைக்கால கடைத் தெருக்களில் வாங்குதலும்.

1770 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

துல்மஜாஸ், உக்காழ் ஆகியவை அறியாமைக்கால வியாபாரத் தலங்களாகும். இஸ்லாம் தோன்றியதும் மக்கள் அவ்வியாபாரத்தலங்களை வெறுக்கலானார்கள். அப்போது (ஹஜ்ஜின்போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது என்ற 2:198ஆவது வசனம் அருளப்பெற்றது. இது ஹஜ்ஜுக் காலங்களில் வியாபாரம் செய்வதைக் குறிக்கின்றது.

பாடம் : 151

முஹஸ்ஸபிலிருந்து இரவின் கடைசி நேரத்தில் புறப்படுதல்.

1771 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஜ் முடித்துப் புறப்படும் நாளில் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர் நான் உங்களை (புறப்படவிடாமல்) தடுத்துவிட்டேன் எனக் கருதுகிறேன்' என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் காரியத்தைக் கெடுத்துவிட்டாயே! என்று கூறிவிட்டு இவர் நஹ்ருடைய (10ஆம்) நாளில் தவாஃப் செய்துவிட்டாரா? எனக் கேட்டார்கள். அதற்கு ஆம்' எனச் சொல்லப்பட்டதும் அப்படியாயின் புறப்படு! என்றார்கள்.

1772 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டோம். ஹஜ்ஜை மட்டுமே எண்ணத்தில் கொண்டு (மக்காவிற்கு) வந்ததும் நபி (ஸல்) அவர்கள் எங்களை இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு கட்டளையிட்டார்கள். நாங்கள் ஊர் திரும்பும் (நஃபருடைய) நாளின் இரவில் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி)அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், காரியத்தைக் கெடுத்து விட்டாயே! என்று கூறிவிட்டு இவர் நம்மைத் தடுத்துவிட்டாரே' என்றார்கள். பிறகு அவர்கள், நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில், நீ தவாஃப் செய்தாயா? எனக் கேட்டதும் அவர் ஆம்' என்றார். (அப்படியாயின்) நீ புறப்படு என்றார்கள்.

அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே என்றேன். அதற்கவர்கள், தன்யீம் என்ற இடத்திற்குப்போய் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள் என்றார்கள்.நான் என் சகோதரருடன் புறப்பட்டு (தன்யீமுக்கு)ச் சென்றேன். பிறகு நாங்கள் நபி (ஸல்) அவர்களை இரவின் கடைசி நேரத்தில் -போய்க் கொண்டிருக்கும் நிலையில்- சந்தித்தோம். அப்போதவர்கள் இன்னின்ன இடங்களில் நீ என்னைச் சந்திக்க வேண்டும் என்றார்கள்.


November 2, 2009, 12:17 AM

25-ஹஜ்2

25-ஹஜ்