24-ஸகாத்தின் சட்டங்கள்2

பாடம் : 32

வெள்ளிக்குரிய ஸகாத்

1447 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. (வெள்ளியில்) ஐந்து ஊக்கியாவுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. (தானியங்களில்) ஐந்து வஸக்கைவிடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.

 இதை அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 33

ஸகாத்தைப் (பணமாக அன்றிப்) பொருட்களாகப் பெறல்

முஆத் (ரலி), யமன் வாசிகளிடம் நீங்கள் உங்கள் ஸகாத் பொருட்களான தீட்டாத கோதுமை, தீட்டிய கோதுமைக ஆகியவற்றுக்குப் பகரமாகத் துணிகள், ஆடைகளைத் தாருங்கள். இது உங்களுக்கு இலகுவானதாகவும் மதீனாவில் வசிக்கும் நபித் தோழர்களுக்கு நன்மை பயப்பாதாகவும் இருக்கும் எனக் கூறினார்கள் என தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

காலித் பின் வலீத் (ரலி) தமது கவசங்களையும் போர்க் கருவிகளையும் அல்லாஹ்வின் பாதையில் தானம் செய்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள். மேலும் ஸகாத்தைப் பிற தர்மங்களிலிருந்து வேறுபடுத்திக் கூறாமல் (பெண்களே!) உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள். பெண்கள் தங்கள் கழுத்தணிகளையும் காது வளையங்களையும் தர்மமாக அளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்கம், வெள்ளியைத்தான் தர்மமாகக் கொடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

1448 அனஸ் (ரலி) கூறியதாவது:

அபூபக்ர் (ரலி), அல்லாஹ் அவனுடைய தூதருக்குக் கட்டளையிட்டுள்ள (பிராணிகளுக்கான) ஸகாத் சட்டங்களைப் பற்றி எனக்கு எழுதியனுப்பிய போது ஒரு வயது பெண்ஒட்டகம் ஸகாத் கொடுக்க வேண்டிய ஒருவரிடம், அது இல்லாமல் இரண்டு வயது, பெண் ஒட்டகம் மட்டுமே இருந்தால் அதையே ஸகாத்தாக ஏற்றுக் கொண்டு ஸகாத் வசூலிப்பவர் ஸகாத் கொடுத்தவருக்கு இருபது திர்ஹம்களோ அல்லது இரு ஆடுகளோ கொடுக்க வேண்டும். அவரிடம் ஒரு வயதுடைய பெண் ஒட்டகம் இல்லாமல் இரண்டு வயதுடைய ஆண் ஒட்டகம் இருந்தால் அதை ஸகாத்தாக ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஸகாத் வசூலிப்பவர் அவருக்கு எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்று குறிப்பிட்டார்கள்.

1449 இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது :

(பெருநாளன்று) நான் நபி(ஸல்) அவர்களை கவனித்தேன். அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்னால் தொழுவித்தார்கள். பிறகு தமது உரை பெண்களின் செவிகளைச் சென்றடையவில்லை என அவர்கள் கருதியதால் பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் செய்து விட்டு, தர்மம் செய்யுமாறும் கட்டளையிட்டார்கள். பிலால்(ரலி), ஒரு ஆடையை ஏந்தியவராக நின்றிருந்தார்கள். அப்போது பெண்கள் அதில் (தமது அணிகலன்களைப்) போடலானார்கள்.

இந்த ஹதீஸின் அறிவிப்பார்களில் ஒருவரான அய்யூப் என்பார் இதை அறிவிக்கும் போது தமது காதையும் கழுத்தையும் சைகையால் காட்டினார்கள்.

பாடம் : 34

(ஸகாத்தைக் குறைக்கும் நோக்கில்) பிரிந்திருப்பவற்றைச் சேர்க்கவோ சேர்ந்திருப்பவற்றைப் பிரிக்கவோ கூடாது

இவ்வாறே நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.

1450 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் (ஆணையின் பேரில் அவனுடைய) தூதர் (ஸல்) கடமையாக்கிய ஸகாத் குறித்து எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுதிய போது ஸகாத் கொடுப்பதற்கு அஞ்சி, பிரிந்தவற்றை ஒன்று சேர்ப்பதும் ஒன்று சேர்ந்தவற்றைப் பிரிப்பதும் கூடாது என்று குறிப்பிட்டார்கள்.

பாடம் : 35

இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் ஒருவர் (தமது பொருட்களின் ஸகாத்துடன்) மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து தாமே செலுத்திவிடுவாராயின் அவர் தம் கூட்டாளியின் பங்கிற்குச் சமமான ஸகாத் தொகையைக் கணக்கிட்டு அதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வார்.

இரு பங்குதாரர்கள் அவரவர் பங்குகளைப் பிரித்தறிந்திருந்தால் அவ்விருவரின் பொருட்கள் சேர்த்துக் கணக்கிடப்பட மாட்டாது என தாவூஸ், அதாஉ (ரஹ்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

ஆடுகள் வளர்க்கக் கூடிய பங்காளிகளில் இவருக்கு நாற்பது ஆடுகளும் அவருக்கு நாற்பது ஆடுகளும் நிறைவாகிவிட்டாலே தவிர ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை என சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1451 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கிய ஸதகாவை பற்றி எனக்கு அபூபக்ர் (ரலி) எழுதும் போது, இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் (கூட்டாளிகள் இருவரில்) ஒருவர் (தன் பொருட்களின் ஸகாத்துடன்) மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து தானே செலுத்திவிடுவாராயின் அவர் தன் கூட்டாளியின் பங்குக்குக் சமமான ஸகாத் தொகையைக் கணக்கிட்டு அதை அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டார்கள்.

பாடம் : 36

ஒட்டகத்தின் ஸகாத்

இதுபற்றி அபூபக்ர் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூதர் (ரலி) ஆகியோர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர்.

1452 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் நாடுதுறத்தல் (ஹிஜ்ரத்) பற்றிக் கேட்டார். அதற்கவர்கள், உமக்கு என்ன கேடு? (எனச் செல்லமாகக் கேட்டுவிட்டு) நிச்சயமாக அதன் நிலைமை மிகவும் கடுமையானது. உம்மிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா? அவற்றிற்கு ஸகாத் கொடுத்துவருகிறீரா? எனக் கேட்டார்கள். அவர், ஆம்' என்றதும் நபி (ஸல்) அவர்கள், கடல்களுக்கப்பால் சென்று வேலை செய்வீராக! நிச்சயமாக அல்லாஹ் உமது உழைப்பின் ஊதியத்தைக் குறைத்துவிட மாட்டான் எனக் கூறினார்கள்.

பாடம் : 37

ஒருவயதுடைய பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகச் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லையென்றால்...?

1453 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ் தன் தூதருக்குக் கடமையாக்கிய ஸகாத் பற்றி அபூபக்ர் (ரலி) எனக்குக் கடிதம் எழுதினார். அதில், நான்கு வயதான பெண்ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டிய ஒருவரிடம் அது இல்லாமல் மூன்று வயதுடைய பெண்ஒட்டகம் இருந்தால் அதை அவரிடமிருந்து ஏற்கலாம். அத்துடன் அவருக்கு சக்தி இருந்தால் அவரிடமிருந்து இரு ஆடுகளை வசூலிக்க வேண்டும். அல்லது இருபது திர்ஹங்களை வசூலிக்க வேண்டும். மூன்று வயது பெண்ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லாமல் நான்கு வயது பெண்ஒட்டகம் இருந்தால் அதைப் பெற்றுக் கொண்டு, அவருக்கு இருபது திர்ஹங்களையோ இரண்டு ஆடுகளையோ வசூலிப்பவர் கொடுக்க வேண்டும். மூன்று வயதுடைய பெண்ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லாமல் இரண்டு வயது பெண்ஒட்டகம் இருந்தால் அதைப்பெற்றுக் கொள்ளவேண்டும்: அத்துடன் இரண்டு ஆடுகளையோ இருபது திர்ஹங்களையோ (ஸகாத் அளிப்பவர்) கொடுக்கவேண்டும். இரண்டு வயதான பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் மூன்று வயது பெண்ஒட்டகம் இருந்தால் அதைப் பெற்றுக் கொண்டு, அவருக்கு, வசூலிப்பவர் இருபது திர்ஹங்களையோ இரண்டு ஆடுகளையோ கொடுக்க வேண்டும். இரண்டு வயது பெண்ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லாமல் ஒரு வயது பெண் ஒட்டகம் இருந்தால் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் இருபது திர்ஹங்களையோ இரண்டு ஆடுகளையோ (ஸகாத் கொடுப்பவர்) வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.

பாடம் : 38

ஆடுகளின் ஸகாத்

1454 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பஹ்ரைனுக்கு (ஆளுநராக) அனுப்பப்பட்டதும் அபூபக்ர் (ரலி) எனக்குக் கடிதம் எழுதினார். அதில், பிஸ்மில்லாஹிர்ரமானிர்ரஹீம் இது அல்லாஹ் தனது தூதருக்கு ஏவி அவர்கள் முஸ்லிம்கள் மீது கடமையாக்கிய ஸகாத் (பற்றிய விவரம்) ஆகும். முஸ்லிம்களில் யாரும் கணக்குப்படி ஸகாத் கோரப்பட்டால் அதை வழங்க வேண்டும். கணக்குக்கு மேல் கோரப்பட்டால் கொடுக்க வேண்டாம்.

 

இருபத்து நான்கு ஒட்டகங்கள் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் ஒவ்வொரு ஐந்து ஒட்டகத்திற்கும் ஓர் ஆடு ஸகாத் கொடுக்க வேண்டும்.இருபத்தைந்து ஒட்டகம் முதல் முப்பத்தைந்து வரை ஒரு வயது பெண் ஒட்டகம், முப்பத்தாறு முதல் நாற்பத்தைந்துவரை, இரண்டு வயது பெண் ஒட்டகம், நாற்பத்தாறு முதல் அறுபது வரை மூன்று வயதுள்ள, பருவமான பெண் ஒட்டகம், அறுத்தொன்றிலிருந்து எழுபத்தைந்துவரை நான்கு வயது பெண் ஒட்டகம், எழுத்தாறிலிருந்து தொண்ணூறு வரை இரண்டு வயதுள்ள இரண்டு பெண் ஒட்டகங்கள், தொண்ணூற்றொன்றிலிருந்து நூற்றியிருபதுவரை மூன்று வயதுள்ள, பருவமடைந்த இரு பெண் ஒட்டகங்கள் ஸகாத் ஆகும். நூற்றியிருபதுக்கும் அதிகமாகிவிட்டால் ஒவ்வொரு நாற்பது ஒட்டகங்களும் இரண்டு வயது பெண் ஒட்டகம் ஒன்றும் ஒவ்வொரு ஐம்பதுக்கு மூன்று வயது பெண் ஒட்டகம் ஒன்றும் ஸகாத் ஆகும். யாரிடம் நான்கு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளதோ அவற்றிற்கு ஸகாத் இல்லை - உரிமையாளர் நாடினாலே தவிர! அவை ஐந்து ஒட்டகங்களாகிவிட்டால் அதற்குரிய ஸகாத் ஒரு ஆடு ஆகும். காடுகளில் மேயும் ஆடுகள் நாற்பதிலிருந்து நூற்றியிருபதுவரை இருந்தால், அதற்கு ஸகாத் ஓர் ஆடு ஆகும். நூற்றியிருபதுக்குமேல் இருநூறுவரை இருந்தால் இரு ஆடுகளும், இருநூறுக்கு மேல் முன்னூறு வரை மூன்று ஆடுகளும் முன்னூறுக்கும் அதிகமாகிவிட்டால் ஒவ்வொரு நூறுக்கும் ஓர் ஆடும் ஸகாத் ஆகும். காடுகளில் மேயக்கூடிய ஆடுகளில் நாற்பதில் ஒன்று குறைந்துவிட்டாலும் உரிமையாளர் நாடினாலே தவிர அதில் ஸகாத் இல்லை. வெள்ளியில் நாற்பதில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும். அதில் நூற்றுத் தொண்ணூறு திர்ஹம் மட்டுமேயிருந்தால் உரிமையாளர் நாடினாலே தவிர ஸகாத் இல்லை.

பாடம் : 39

ஸகாத் வசூலிப்பவர் விரும்பினாலே தவிர வயதான அல்லது குறையுள்ள அல்லது ஆண் பிராணிகள் ஸகாத் பொருளாகப் பெறப்பட மாட்டாது.

1455 அனஸ் (ரலி) கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ் தன் தூதருக்குக் கட்டளையிட்ட (ஸகாத்) சட்டங்களைப் பற்றி எனக்கு எழுதிய போது, ஸகாத் வசூலிப்பவர் விரும்பினாலே தவிர, வயதானவற்றையோ, குறைகள் உள்ளவற்றையோ, ஆண் பிராணிகளையோ ஸகாத்தாகப் பெறக்கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.

பாடம் : 40

ஒட்டகக் குட்டியை ஸகாத்தாக வசூலித்தல்

1456 & 1457 அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியவதாவது:

அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களிடத்தில் வழங்கிவந்த (ஸகாத்களில்) ஒரு ஒட்டகக் குட்டியை என்னிடம் தர மறுத்தாலும் அதற்காக அவர்களுடன் நான் போரி புரிவேன். (ஸகாத் கொடுக்க மறுத்தவர்கள் மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்)படி அபூபக்ர் (ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கிவிட்டான் என்பதைத் தவிர வேறொதுவும் நான் கருதவில்லை. ஆக, அது தான்  சரியானது என்பதை நான் அறிந்து கொண்டேன் என உமர் (ரலி) கூறினார்கள்.

பாடம் : 41

மக்களின் பொருட்களில் உயர் தரமானவற்றை ஸகாத்தாகப் பெறக்கூடாது

1458 இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (நீதி மற்றும் நிர்வாகத்தை கவனிக்க) அனுப்பிவைத்த போது அவரிடம் நீர் வேதம் கொடுக்கப்பட்ட மக்களிடம் செல்கிறீர். எனவே, அவர்களை முதன் முதலில் இறைவணக்கத்தின் பால் அழைப்பீராக! அவர்கள் அல்லாஹ்வை (ஏகன் என்று) அறிந்து கொண்டால் ஒவ்வொரு நாளும் இரவிலும் பகலிலுமாக ஐந்து வேளைத் தொழுகைகளை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு தெரிவிப்பீராக! தொழுகையை அவர்கள் நிறைவேற்றினால் அவர்களுடைய செல்வங்களிலிருந்து வசூலித்து அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டிய ஸகாத்தை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களிடமிருந்து ஸகாத் பெறுவீராக! மக்களின் பொருட்களில் உயர்தரமானவற்றை வசூலிக்காதீர்! என்று கூறி அனுப்பினார்கள்.

பாடம் : 42

ஐந்து ஒட்டங்களுக்குக் குறைவாக இருந்தால் அதில் ஸகாத் இல்லை

1459 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து வஸக்குகளைவிடக் குறைவாக உள்ள பேரீச்சம் பழத்தில் ஸகாத் இல்லை; ஐந்து ஊக்கியாக்களைவிடக் குறைவாக உள்ள வெள்ளியில் ஸகாத் இல்லை; ஐந்து ஒட்டகங்களைவிடக் குறைவானவற்றிலும் ஸகாத் இல்லை.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 43

மாட்டின் ஸகாத்

நிச்சமாய (மறுமையில்) ஒரு மனிதன் அல்லாஹ்விடத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒரு பசு மாட்டுடன் வருவான் என்பதை நான் அறிவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என அபூஹுமைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1460 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது உயிர் எவன் கையிலுள்ளதோ' அல்லது எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ' அவன் மீது ஆணையாக ! ஒருவனுக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றிற்கான ஸகாத்தை அவன் நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரிதாகவும் கொழுத்தாகவும் வந்து அவனைக் (கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும். அவற்றில் கடைசிப் பிராணி அவனைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவன் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்படும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்.

இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

பாடம் : 44

நெருங்கிய உறவினருக்கு ஸகாத் வழங்குதல்.

(நெருங்கிய உறவினருக்கு ஸதகா கொடுப்பவருக்கு) உறவினரைப் பராமரித்தல், தர்மம் செய்தல் என்ற இரு (நன்மைகளுக்கான) கூலிகளுண்டு என நபி(ஸல்) கூறினார்கள்.

1461அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:

அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ பள்ளிவாசலு)க்கு எதிரில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம். நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கன் நன்மையை அடையவே மாட்டீர்கள் என்ற (3:92) இறை வசனம் இறங்கியதும், அபூதல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா, நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள் எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் எனது மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக்கொள்ளுங்கள் எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகின்றேன் எனக் கூறினாக்ள். அதற அபூ தல்ஹா(ரலி) அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்! எனக் கூறிவிட்டு, அத்தோட்டத்தைத் தமது நெருங்கிய உறவினருக்கும் தமது தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார்.

1462 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். மக்களே! தர்மம் செய்யுங்கள்! என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்! என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை? எனப் பெண்கள் கேட்டதும், நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்; கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையி)லும் குறைவுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கிவிடுகிறீர்கள் என்று நபி(ஸல்) கூறிவிட்டு, (வீட்டிற்குச்) சென்றார்கள். இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் (ரலி) வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினர். அல்லாஹ்வின் தூதரே! ஸைனப் வந்திருக்கிறார் என்று கூறப்பட்டது. எந்த ஸைனப்? என நபி(ஸல்) அவாகள் வினவ, இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப்! என்று கூறப்பட்டது. அவருக்கு அனுமதி வழங்குங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப்பட்டது. அவர் (வந்ததும்) அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் எனக்குச் சொந்தமான ஒரு நகை இருக்கிறது. அதை தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்வூத், தாமும் தமது குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார். (என்ன செய்ய?) என்று கேட்டார். இப்னு மஸ்வூத் கூறுவது உண்மைதான்! உன் கணவரும் உன் குழந்தைகளுமே உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 45

குதிரைக்காக முஸ்லிம் ஸகாத் கொடுக்க வேண்டியது இல்லை

1463 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம் குதிரைகளுக்காகவும் அடிமைகளுக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 46

தன்னுடைய அடிமைக்காக முஸ்லிம் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை.

1464 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம், அடிமைகளுக்காகவும் குதிரைகளுக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 47

அநாதைகளுக்கு ஸகாத் கொடுத்தல்

1465அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போதவர்கள் என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலகவளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன் எனக் கூறினார்கள். ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா? எனக்கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் மௌனமாகிவிட்டார்கள். உடனே அந்த நபரிடம், என்ன ஆனது உமது நிலைமை? நீர் நபி(ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால் நபி(ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே! எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, கேள்வி கேட்டவர் எங்கே? என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள். பிறகு, நன்மையானது தீமையை உருவாக்காது தான் ; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகின்ற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால் நடைகளைக் கொன்றுவிடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன; -- பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும் சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ -- அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும் எனக் கூறினார்கள்.

பாடம் : 48

(ஒரு பெண்) கணவனுக்கும் தனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்கும் ஸகாத் கொடுப்பது.

இது குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

1466 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பள்ளிவாசலில் இருந்த போது நபி(ஸல்) அவாகள், பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள் எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்' எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் ஸைனப்' எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் எந்த ஸைனப்? எனக் கேட்டதும் பிலால்(ரலி), அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி(ஸல்) ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது எனக் கூறினார்கள்.

1467 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் நான், அல்லாஹ்வின் தூதரே! (என் முதல் கணவரான) அபூ சலமாவின் குழந்தைகளுக்குச் செலவழிப்பதற்காக எனக்கு நன்மையுண்டா? அவர்களும் எனது குழந்தைகளே! எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ அவர்களுக்காகச் செலவு செய்! அவர்களுக்காக நீ செலவு செய்ததற்கான நன்மை உனக்குண்டு எனக் கூறினார்கள்.

பாடம் : 49

(ஸகாத்- அடிமைகளை) விடுதலை செய்வதற்கும் கடன்பட்டிருப்பவர்களுக்கும் அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்)... எனும் (9:60ஆவது) இறைவசனம்.

அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (வசதியற்றோர்) ஹஜ் செய்வதற்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது ஸகாத் பொருளிலிருந்தே செலவழித்தாக கூறப்படுகின்றது.

ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், (அடிமையாயிருக்கும்) தந்தையை விடுதலை செய்ய தனது ஸகாத் பொருளை மகன் வழங்கலாம். அறப்போர் வீரர்களுக்கும் ஹஜ் செய்யாதவர்களுக்கும் வழங்கலாம்' என்று கூறிவிட்டு, தானதர்மங்கள் ஏழைகளுக்கும்... (என்று தொடங்கும் 9:60ஆவது) இறைவசனத்தை ஓதிவிட்டு, இவைகளில் எதில் நீ செலவழித்தாலும் நீ முறையாக செலவழித்தவனாவாய்' எனக் கூறினார்கள்.

காலித் அவர்கள் (ரலி) தமது போர்க் கவசங்களை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்தார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நாங்கள் ஹஜ்ஜுக்குச் செல்லும் போது நபி (ஸல்) அவர்கள் எங்களை ஸதகா ஒட்டகங்களின் மீது பயணம் செய்ய வைத்தார்கள் என அபூலாஸ் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

1468 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது இப்னு ஜமீல், காலித் பின் வலீத், அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) ஆகியோர் (ஸகாத் தர) மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், இப்னு ஜமீல் ஏழையாக இருந்து அல்லாஹ்வும் அவன் தூதரும் அவரைச் செல்வந்தராக்கிய பிறகு அவர் ஸகாத் தர மறுத்துள்ளார். காலிதைப் பொறுத்தவரை, நிச்சயமாக காலிதுக்கு நீங்கள் அநியாயம் இழைக்கின்றீர்கள். அவரோ தமது கவசங்களையும் போர்க் கருவிகளையும் அல்லாஹ்வின் பாதையில் வழங்கி விட்டாரே, அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி), அல்லாஹ்வின் தூதருடைய பெரிய தந்தையாக இருப்பதால் அவர் ஸகாத்தும் அதைப் போன்ற இன்னொரு மடங்கும் கொடுத்தாக வேண்டும் எனக் கூறினார்கள்.

பாடம் : 50

யாசிப்பதைத் தவிர்த்தல்

1469 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் யாசித்தார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் நபியவர்களிடம் அவர்கள் யாசித்தார்கள்; நபி(ஸல்) அவர்கள் அப்போதும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் அவர்கள் கேட்க, நபி(ஸல்) அவர்கள் மீண்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்களிடம் இருந்தது அனைத்தும் தீர்ந்துபோன பின் என்னிடத்தில் உள்ள செல்வத்தை நான் உங்களுக்குத் தராமல் பதுக்கி வைக்கவே மாட்டேன். ஆயினும் யார் சுயமரியாதையைப் பேணிக்கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான்; யார் பிறரிடம் தேவையற்றவராக இருக்கிறாரோ அல்லாஹ் அவரைத் தன்னிறைவுடையவராக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கின்றாரோ அவரை அல்லாஹ் பொறுமையாரனாக ஆக்குவான்; மேலும், பொறுமையைவிடச் சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படவில்லை என்றார்கள்.

1470 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தமது கயிற்றை எடுத்துக் கொண்டு(போய்) விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து சம்பாதிப்பது, ஒருவனிடம் வந்து யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.

1471 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதைவிடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவருக்கு இழிவு ஏற்படாமல் தடுத்துவிடுவான். மக்கள் அவருக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்.

இதை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1472 ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது என்று கூறினார்கள்.

அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.

ஆபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி)அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!' எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும்வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 51

யாசிக்காமலும் பேராசையின்றியும் இறைவன் (பிறர் மூலம்) தந்தால்...?

அல்லாஹ் கூறுகின்றான்:

அவர்களுடைய செல்வத்தில் யாசிப்போர்க்கும் வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு. (51:19)

1473 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னைவிட ஏழைக்கு கொடுங்களேன் என்பேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசைகொள்ளாமலும் இருக்கும் போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்) என்றார்கள்.

பாடம் : 52

மிகுதியாகப் பொருள் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பது.

1474,1475 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான்.

மேலும் கூறினார்கள்: வியர்வை வழிந்து மனிதனின் பாதிக் காதை அடையும் அளவுக்கு மறுமை நாளன்று சூரியன் மனிதனுக்கு மிக அருகில் வந்துவிடும். இந்நிலையில் மக்கள் ஆதம் (அலை) அவர்களிடமும் பிறகு மூசா (அலை) அவர்களிடமும் பிறகு முஹம்மத் (ஸல்) அவர்களிடமும் வந்து அடைக்கலம் தேடுவார்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அப்துல்லாஹ் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், நபி(ஸல்) அவர்கள் பரிந்துரை செய்வார்கள். இவ்வாறு படைப்பினங்களுக்கிடையே தீர்ப்பு கூறப்பட்டு முடிந்ததும், நடந்து சென்று சொர்க்கத்து வாசலின் கதவைப் பிடிப்பார்கள். அந்நாளிலே அல்லாஹ், நபி(ஸல்) அவர்களை மகாமு மஹ்மூத்' எனும் புகழுக்குரிய இடத்தில் எழுப்புவான். அப்போது அங்கு குழுமி இருக்கும் அனைவரும் நபி (ஸல்) அவர்களைப் பாராட்டுவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகின்றது.

பாடம் : 53

அவர்கள் மக்களிடம் கெஞ்சி எதையும் கேட்க  மாட்டார்கள் எனும் (2:273ஆவது) இறைவசனமும், எவ்வளவு செல்வமிருந்தால் தன்னிறைவுடையவனாவான்? என்பதும்,தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய எந்தச் செல்வத்தையும் அவன் பெற்றிருக்க  மாட்டான் எனும் நபிமொழியும், பூமியில் நடமாடி(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத்தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய தன்மானத்தைக் கண்டு, அறியாதவர் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறார்; அவர்களுடைய (முகத்தில் தெரியும் பசி மற்றும் ஏழ்மையின்) அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மக்களிடம் கெஞ்சி எதையும் கேட்க  மாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான் எனும் (2:273ஆவது) இறைவசனமும்.

1476 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓரிரு கவளம் உணவுக்காக அலைபவன் ஏழையல்லன்; மாறாக தன் வாழ்க்கைக்கு போதிய செல்வம் இல்லாமலிருந்தும் பிறரிடம் கேட்க வெட்கப்படுகின்றவனும் அல்லது (அப்படிக் கேட்டாலும்) கெஞ்சிக் குழைந்து கேட்காதவனுமே ஏழையாவான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

1477 முஃகீரா பின் ஷுஅபா(ரலி) அவர்களின் எழுத்தர் (வர்ராத் ளரஹ்ன அவர்கள்) கூறியதாவது:

நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட ஒன்றை எனக்கு எழுதுங்கள் என முஆவியா (ரலி) அவர்கள் முஃகீரா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதற்கு முஃகீரா (ரலி) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான்; இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார் (என ஆதாரமின்றிப் பேசுவது), பொருள்களை வீணாக்குவதும் அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என பதில் எழுதினார்கள்.

1478 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்த போது, நபி (ஸல்) ஒரு குழுவினருக்குக் கொடுத்தார்கள். அவர்களில் ஒருவருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். அவர் எனக்கு மிகவும் வேண்டியவராவார். அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! ஏன் அவரைவிட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீதுதாணையாக! அவரை நான் மூமின் (இறைநம்பிக்கையாளர்) என்றே கருதுகிறேன் என்று ரகசியமாகக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை முஸ்லிம் (என்று சொல்) என்றார்கள். சிறிது நேரம் மவுனமாக இருந்தேன். தொடர்ந்து, நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்த போது, அல்லாஹ்வின் தூதரே! அந்த மனிதர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் அவரை ஒரு மூமின் என்று கருதுகிறேன் என்றேன். அவரை முஸ்லிம் (என்று சொல்!) என்று நபி (ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். சிறிது நேரம் நான் மௌனமாக இருந்தேன். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் கூறினேன். அல்லாஹ்வின் தூதரே! அந்த மனிதர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவரை ஒரு மூமின் என்று கருதுகிறேன் என்றேன். அவரை முஸ்லிம் (என்று சொல்) என்றார்கள். பிறகு (சஅதே!) நான் ஒரு மனிதருக்குக் கொடுக்கிறேன்; ஆனால் நான் கொடுக்காதவர் என்னிடம் மிக நேசமானவராக இருக்கிறார். (அவருக்கு நான் கொடுத்ததற்கு) காரணம், (ஏதும் கொடுக்காதிருந்தால் குற்றம் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளிவிடுவானோ என்ற அச்சம்தான் என்றார்கள்.

முஹம்மத் பின் முஹம்மத் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில்,

(மூன்று முறை கேட்டு பதிலுரைத்தபின்) நபி(ஸல்) அவர்கள் சஅத் (ரலி)அவர்களது புஜத்திற்கும் கழுத்திற்கும் மத்தியில் அடித்து, சஅதே, இங்கே வா! என அழைத்து நிச்சயமாக நான் ஒருவருக்கு கொடுக்கிறேனெனில்... என்று மேலே கூறிய ஹதீஸைக் கூறினார்கள் என்று காணப்படுகிறது.

1479 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எந்தச் செல்வத்தையும் பெற்றிருக்க  மாட்டான்; பிறரும் அவனது நிலையை அறிந்து தர்மம் செய்ய  மாட்டார்கள், தானும் வலியச் சென்று கேட்க மாட்டான். (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்.)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1480 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக் கொண்டு காலைப் பொழுதில் மலைக்குச் சென்று (மலையேறி) விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தர்மம் செய்வது மக்களிடத்தில் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 54

(மரத்திலிருக்கும்) பேரீச்சம் பழத்தை மதிப்பிடுவது.

1481,1482 அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் தபூக் போரின் போது நபி (ஸல்) அவர்களோடு சென்று கொண்டிருந்தோம். வாதில்குரா எனும் இடத்தை அடைந்த போது ஒரு பெண் தன் தோட்டத்தில் இருந்ததைக் கண்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி (இத்தோட்டத்தில்) எவ்வளவு பழங்கள் தேறும், கணித்துக் கூறுங்கள்? எனக் கேட்டுவிட்டு பத்து வஸக் அளவு (தேறும்) எனக் கணித்தார்கள். பின்பு அப்பெண்ணிடம் இதில் கிடைப்பதைக் கணக்கிட்டுவை எனக் கூறினார்கள். நாங்கள் தபூக்கை அடைந்த போது இன்றிரவு கடும் கா அடிக்கும்; எனவே யாரும் வெளியில் செல்ல வேண்டாம். ஒட்டகமுடையவர்கள் அதை நன்கு கட்டி வைக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கட்டடையிட்டார்கள். நாங்களும் ஒட்டகங்களைக் கட்டிப் போட்டு விட்டோம். கடும் காற்று வீசத் தொடங்கிற்று. நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீறியவராக ஒரு மனிதர் வெளியே எழுந்து வந்தார். உடனே காற்று அவரை தய்யி என்ற மலையில் கொண்டு போய்போட்டது. வழியில், அய்லா என்ற ஊரின் மன்னன் நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை அன்பளிப்புச் செய்து ஒரு சால்வையும் போர்த்தினார். தம் நாட்டவருக்காக (ஜிஸ்யா வரி தருகிறோம்) என்று எழுதிக் கொடுத்தார்.

(போரிலிருந்து) திரும்பி, வாதில் குராவை' அடைந்த போது நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணிடம் உனது தோட்டத்தில் எவ்வளவு தேறியது? எனக் கேட்டார்கள். அதற்கு அப்பெண், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கணித்து பத்துவஸக் தான்' எனக் கூறினார். பின்பு நபி(ஸல்) அவர்கள் நான் விரைவாக மதீனா செய்ய வேண்டும். எனவே உங்களில் யாரேனும் என்னோடு விரைவாக மதீனா வர நாடினால் உடனே புறப்படுங்கள் என்றார்கள். மதீனா நெருங்கிய போது, இது நறுமணம் கமழும் நகரம் என்றார்கள். பின்பு உஹுத் மலையைப் பார்த்த போது இது அழகிய சிறிய மலை; இது நம்மை நேசிக்கிறது; நாம் அதை நேசிக்கிறோம் என்று கூறிவிட்டு, அன்ஸாரிகளில் சிறந்த குடும்பத்தினரை நான் அறிவிக்கட்டுமா? எனக் கேட்க தோழர்களும் ஆம்' என்றனர். நபி(ஸல்) அவர்கள், பனூநஜ்ஜார், குடும்பத்தினர், பின்பு பனூ அப்துல் அஷ்ஹல், பிறகு பனூசாஇதா அல்லது பனுல் ஹாரிஸ் இன்னும் அன்ஸாரிகளின் அனைத்துக் குடும்பத்தினரும் சிறந்தவர்களே என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில், பனூ ஹாரிஸா பின்பு பனூ சாஇதா என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று காணப்படுகிறது.

மற்றோர் அறிவிப்பில் உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; அதை நாம் நேசிக்கிறோம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் : 55

மழையின் மூலமாகவோ வாய்க்காலின் மூலமாகவோ நீர் (பாயப்) பெற்று விளைவனவற்றில் பத்தில் ஒரு பங்கு (அளவு ஸகாத் வசூலிக்கப்படும்).

தேனுக்கு (ஸகாத்) எதுவும் கொடுக்கத் தேவையில்லை என உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கருதுகிறார்கள்.

1483 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மழை நீராலோ, ஊற்று நீராலோ அல்லது தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு. ஏற்றம், கமலை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

விளை பொருட்களில் தரப்பட வேண்டிய ஸகாத்தின் அளவை மட்டும் கூறிவிட்டு எந்த அளவுள்ள விளை பொருட்களுக்கு ஸகாத் கொடுக்கப்பட வேண்டும் என்ற இப்னு உமர்(ரலி) அவர்களின் இந்த அறிவிப்பு தெளிவுபடுத்தாமல் போய்விட்டது. எந்த அளவுள்ள விளை பொருட்களில் ஸகாத் கடமையாகும் என்று தெளிவுபடுத்திக் கூறுகின்ற அபூசயீத் குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்ற (அடுத்து வரும் 1484 ஆம் எண் ஹதீஸானது, இந்த இப்னு உமர் (ரலி) அவர்களுடைய (1483ஆம் எண்) ஹதீஸிற்கு விளக்கமாக அமைந்துள்ளது.

ஒருவர் கூறுவதைவிட அதிகமான விவரத்தை நம்பகமான மற்றொருவர் கூறினால் அந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படும். நம்பகமானவர்களால் அறிவிக்கப்படும். தெளிவான ஹதீஸ் தெளிவற்ற ஹதீஸுக்கு (விளக்கமளித்து) தீர்மானமான ஒரு கருத்தைத் தரும்.

இது (எதைப் போன்றதெனில்) நபி(ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழவில்லை' என்ற ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை விட்டுவிட்டு, நபி(ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்கள்' என்று பிலால் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதைப் போன்றதாகும்.

பாடம் : 56

(விளைபொருட்களில்) ஐந்து வஸக் அளவிற்கும் குறைவான பொருட்களில் ஸகாத் கடமையில்லை.

1484 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(விளை பொருட்களில்) ஐந்து வஸக்குகûவிடக் குறைவானதில் ஸகாத் கிடையாது. ஐந்து ஒட்டகங்களைவிட குறைவாக உள்ளதில் ஸகாத் கிடையாது. ஐந்து ஊகியாக்களைவிடக் குறைவாக உள்ள வெள்ளிக்கும் ஸகாத் கிடையாது.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்: ஐந்து வஸக்குகளைவிடக் குறைந்ததற்கு ஸகாத் இல்லை என்னும் இந்த ஹதீஸ் முன்சொன்ன ஹதீஸிற்கு விளக்கமாக அமைந்துள்ளது. ஒருவர் கூறியதைவிட அதிகமான விவரத்தை நம்பகமானவர்கள் கூறினாலோ அல்லது அவர் கூறியதை அவர்கள் தெளிவுபடுத்தினாலோ ஹதீஸ் கலையில் ஏற்றுக்கொள்ளப்படும் (இந்த அடிப்படையில்தான் இந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படுகிறது).

பாடம் : 57

பேரீச்ச மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத்தை வசூலித்தலும், ஸகாத்தின் பேரீச்சம் பழத்தை எடுக்கும் சிறுவனை (தடுக்காமல்) விட்டு விடலாமா? என்பதும்.

1485 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்ளிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா? எனக் கேட்டார்கள்.

பாடம் : 58

(தானியத்திற்குரிய ஸகாத்தாகிய) பத்தில் ஒன்றோ மற்ற ஸகாத்தோ கடமையான ஒருவர், தமது பேரீச்சங் கனிகளை அல்லது பேரீச்ச மரத்தை அல்லது தோட்டத்தை அல்லது பயிர்களை விற்றுவிட்டு வேறு பொருட்களாகத் தமது ஸகாத்தை நிறைவேற்றுதலும் கடமையாகாதவர் தமது கனிகளை விற்றலும்.

பலன் உறுதிப்படும் நிலையை அடையும் வரை கனிகளை விற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனினும் பலன் உறுதிப்படுத்தப்பட்ட பின் எவருக்கும் விற்பதைத் தடை செய்யவில்லை. இங்கே ஸகாத் கடமையானவனர், ஸகாத் கடமையாகாதவர் என்று பிரித்துக் கூறவில்லை.

1486 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் பழங்களை விற்பதைத் தடுத்துள்ளார்கள். அவர்களிடத்தில் பலன் உறுதிப்படுவது என்றால் என்ன என்று கேட்கப்பட்டது.' (அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்துவிடுவதே! என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

1487 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் கனிகளை விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

1488 அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது

பழங்கள் (பழுத்து) சிவப்பு நிறம் அடைவதற்கு முன்னால் விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.

பாடம் : 59

தாம் தர்மம் செய்த பொருளைத் தாமே வாங்கலாமா?

ஒருவருக்குப் பிறர் கொடுத்த தர்மப் பொருளை மற்றவர் விலைக்கு வாங்குவது தவறில்லை. ஏனெனில், தர்மம் கொடுத்தவரே அப்பொருளை விலைக்கு வாங்குவதைத்தான் நபி (ஸல்) தடுத்தார்கள்; மற்றவர்களைத் தடுக்கவில்லை.

1489 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஒரு குதிரையை தர்மம் செய்தார்கள். பின்பு அது விற்கப்படுவதைக் கண்டு அதைத் தாமே பணம் கொடுத்து வாங்கிட நினைத்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்களிடம் வந்து அனுமதி கேட்டார். அப்போது நீர் தர்மம் செய்ததைத் திரும்பப் பெற வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதனால்தான் இப்னு உமர் (ரலி) அவர்கள் தாம் தர்மம் செய்த பொருளை விலைக்கு வாங்கிவிட்டிருந்தால் அதை மீண்டும் தர்மம் செய்யாமல்விட  மாட்டார்கள் என்று சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1490 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்வதற்காக நான் ஒருவருக்கு குதிரையொன்றை (தர்மமாக)க் கொடுத்தேன். ஆனால் அவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) வீணாக்கி விட்டார். எனவே நான் அதை விலைக்கு வாங்க நாடினேன். இன்னும் அவர் மிகக் குறைந்த பணத்திற்கே விற்றுவிடுவார் என்றும் எண்ணினேன். எனவே இதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், அதை வாங்காதீர்! உமது தர்மத்தை நீர் திரும்பப் பெற்றுக் கொள்ளாதீர்! அவன் அதை ஒரு திர்ஸத்திற்குத் தந்தாலும் சரியே. ஏனெனில் தர்மத்தைத் திரும்பப் பெறுபவன் தான் எடுத்த வாந்தியை உண்பவனைப் போன்றவனாவான் என்றார்கள்.

பாடம் : 60

நபி (ஸல்) அவர்களுக்குத் தர்மப் பொருள் (ஹராம்-தடுக்கப்பட்டுள்ளது).

1491 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹசன் (ரலி) ஸதகாப் பொருளான ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் சீ; சீ எனக் கூறித் துப்பச் செய்துவிட்டு, நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா? என்றார்கள்.

பாடம் : 61

நபி (ஸல்) அவர்களுடைய மனைவியரின் அடிமைகளுக்கு தர்மம் செய்தல்.

1492 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி ளஸல்ன துணைவியார்) மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு தர்மமாக வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இதன் தோலை நீங்கள் பயன்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். இது செத்தாயிற்றே! எனத் தோழர்கள் கூறியதும், இதை உண்பது தான்  தடுக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1493 (நபி ளஸல்னதுணைவியார்) ஆயிஷா (ரலி) கூறியதாவது:

அடிமையான பரீரா எனும் பெண்ணை விடுதலை செய்வதற்காக, (அவரை) நான் விலைக்கு வாங்க நாடினேன். ஆனால் அப்பெண்ணின் உரிமையாளர்கள் பரீராவை நாங்கள் உங்களுக்கு விற்றுவிட்டாலும்) அவரின் வாரிசுரிமை' எங்களுக்கு வேண்டும் என்று நிபந்தனையிட விரும்பினார்கள். நான் இதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். நபி(ஸல்) அவர்கள், நீ பரீராவை வாங்கிவிடு! வாரிசுரிமை விடுதலை செய்பவருக்குத்தான்! என்றார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்களுக்கு இறைச்சி கொண்டு வரப்பட்டது. அப்போது நான் இது பரீராவுக்கு தர்மம் செய்யப்பட்ட பொருள் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது பரீராவுக்கு தர்மமாகும்; நமக்கு அன்பளிப்பாகும் என்றார்கள்.

பாடம் : 62

தர்மம் (அன்பளிப்பாக) மாறுவது.

1494 உம்மு அத்திய்யா (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் (வீட்டிற்கு) சென்று (உண்பதற்கு) ஏதேனும் உள்ளதா? எனக் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), நீங்கள் நுஸைபாவுக்கு தர்மமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு அனுப்பி வைத்துள்ளார். அதைத் தவிர வேறொன்றும் நம்மிடம் இல்லை என்றார். நபி (ஸல்) அவர்கள் அப்படியெனில் அது தனது இடத்தை (அன்பளிப்பின் அந்தஸ்தை) அடைந்துவிட்டது என்றார்கள்.

1495 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பரீராவுக்கு தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும் என்றார்கள்.

பாடம் : 63

தனவந்தர்களிடமிருந்து ஸகாத்தை வசூலித்து ஏழைகள் எங்கிருந்தாலும் அவர்களுக்குக் கொடுப்பது.

1496 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீர் வேதமுடையவர்களிடம் செல்கிறீர். அவர்களிடம் சென்றடைந்துவிட்டால் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார் என்று (ஏகத்துவத்திற்கு) சாட்சியம் சொல்லும்படி அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டுவிட்டால், அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுவதைக் கடமையாக்கியுள்ளான்' என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்கு கட்டுப்பட்டுவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களில் ஏழைகளுக்குக் கொடுக்கப்படுகின்ற ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான்' என அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் சிறந்தவற்றை வசூலிப்பது குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்துகொள்ளும்! ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை.

இதை முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பும் போது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 64

ஸகாத் கொடுப்பவர்களுக்காக தலைவர் பிரார்த்திப்பது.

அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை வசூலிப்பீராக! அது அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்கும்! இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்) ஆறுதலும் அளிக்கும். (9:103)

1497 அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா(ரலி) கூறியதாவது:

யாரேனும் ஒரு கூட்டத்தார் தமது ஸகாத் பொருள்களைக் கொண்டு வந்தால் நபி (ஸல்) அவர்கள், இறைவா! இன்னாரின் குடும்பத்திற்கு நீ கிருபை செய்வாயாக! என்று பிரார்த்திப்பவராக இருந்தார்கள். எனது தந்தை (அபூஅவ்ஃபா) தமது ஸகாத்தைக் கொண்டு வந்தார். இறைவா! அபூஅவ்ஃபாவின் குடும்பத்தார்க்கு கிருபை செய்வாயாக என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

பாடம் : 65

கடலிலிருந்து கிடைப்பன.

புதையலில் கொழுப்புத் தலை திமிங்கம் (அம்பர்) சேராது. ஏனெனில் அது கடலலைகள் ஒதுக்கும் ஒரு பொருளாகும் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள்.

அம்பரிலும் முத்துக்களிலும் ஐந்தில் ஒரு பகுதி ஸகாத் உள்ளது என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இது தவறாகும். ஏனெனில்,) நபி (ஸல்) அவர்கள் புதையலுக்குத்தான் ஐந்தில் ஒரு பகுதி ஸகாத் என்றார்கள். தண்ணீரில் கிடைப்பவற்றுக்கு அல்ல.

1498 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்ரவேலர்களில் ஒருவர் தம் சமூகத்தைச் சேர்ந்த சிலரிடம் ஆயிரம் பொற்காசு (தீனார்) கடன் கேட்டார். (அதற்கு ஒருவர் இசைந்து) அவருக்குப் பணத்தைக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல்வழியாகச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் கடலில் செல்ல எந்த வாகனமும் கிடைக்கவில்லை. எனவே ஒரு மரக்கட்டையை எடுத்து அதில் துளையிட்டு ஆயிரம் பொற்காசையும் அதில் வைத்து அடைத்து கடலில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுவிட்டார். ஒரு நாள் அவருக்குக் கடன் கொடுத்த மனிதர் புறப்பட்டு (அவ்வழியே) வந்த போது மரக்கட்டை ஒன்று கிடப்பதைக் கண்டு அதை (எரிப்பதற்கு) விறகாகத் தம் வீட்டிற்கு எடுத்து வந்தார். அதை(க் கோடரியால்) பிளந்த போது தம் பொருளைப் பெற்றுக் கொண்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 66

புதையலின் ஸகாத் ஐந்தில் ஒரு பங்காகும்.

புதையல் என்பது பழங்காலத்தில் புதைத்து வைக்கப்பட்ட பொருளாகும். அது குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் ஐந்தில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும். சுரங்கம் புதையலில் சேராது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சுரங்கத்தில் ஏற்படும் இழப்புகளுக்கு நஷ்ட ஈடு தரத் தேவையில்லை. புதையலில் (ரிகாஸில்) ஐந்தில் ஒரு பங்கு உள்ளது எனக் கூறினார்கள்' என இமாம் மாலிக், இப்னு இத்ரீஸ் (ரஹ்) ஆகியோர் கூறுகின்றார்கள்.

 சுரங்கத்திலிருந்து வரும் ஒவ்வோரு இருநூறு தீனாரிலும் ஐந்து தீனாரை ஸகாத்தாக உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் வசூலித்தார்கள்.

அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட பூமியில் கிடைக்கும் புதையலுக்கு ஐந்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு. இஸ்லாமிய ஆட்சி நடக்கும் பூமியில் கிடைக்கும் புதையலில் (தங்கத்தைப் போன்றே) ஸகாத் உள்ளது. எதிரிகளின் பூமியில் பிறர் தவறவிட்ட பொருளைப் பெற்றுக் கொண்டால் அதைப் பிறருக்கு அறிவித்துவிடுங்கள். அது எதிரிகளின் பூமியிலிருந்து எடுக்கப்பட்டாலும் அதிலும் ஐந்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு என ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

சுரங்கம் பழங்காலத்தில் புதைக்கப்பட்ட புதையலைப் போன்றதே எனச் சிலர் கூறுகின்றனர்.

புதையலைப் பிறருக்கு (சொல்லாமல்) மறைப்பதும் ஐந்தில் ஒரு பங்கு கொடுக்காமல் இருப்பதும் தவறில்லை எனச் சிலர் கூறுகின்றனர்.

1499 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விலங்குகளாலோ (கால்நடைகளாலோ) கிணற்றின் மூலமாகவோ அல்லது சுரங்கத்திலே ஏதேனும் இழப்பு ஏற்பட்டுவிட்டால் (அதன் சொந்தக்காரனிடம்) நஷ்டயீடு கேட்கப்பட  மாட்டாது. புதையலில் (ரிகாஸில்) ஐந்தில் ஒரு பங்கு (ஸகாத்தாக) வசூலிக்கப்படும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 67

ஸகாத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கு (ஸகாத் பொருளை விநியோகிக்க வேண்டும்) எனும் (9:60ஆவது) இறைவசனமும், ஸகாத் வசூலிப்பவர்களிடம் தலைவர் கணக்குக் கேட்க வேண்டும் என்பதும்.

1500 அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், இப்னு லுத்பிய்யா என்றழைக்கப்படும் அஸத் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை பனூசுலைம் எனும் கோத்திரத்தாரிடையே ஸகாத் வசூலிப்பதற்காக நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்து) வந்ததும் அவரிடத்தில் கணக்குக் கேட்டார்கள்.

பாடம் : 68

ஸகாத்துடைய ஒட்டகத்தையும் அதன் பாலையும் வழிப்போக்கர்களுக்காகப் பயன்படுத்துவது.

1501 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உரைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்த போது மதீனாவின் பருவநிலை ஒத்துக்கொள்ளாமல் நோயுற்றனர். எனவே ஸகாத்தாகப் பெறப்பட்ட ஒட்டகம் இருக்குமிடத்திற்குச் சென்று அதன் பாலையும் சிறுநீரையும் குடிப்பதற்கு அவர்களை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால் அவர்கள் அங்கு சென்று ஒட்டகம் மேய்ப்பவரைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றனர். செய்தியறிந்த நபி(ஸல்) அவர்கள், அவர்களைப் பிடித்துவரை ஆள் அனுப்பினார்கள். அவர்கள் பிடித்து வரப்பட்டதும் அவர்களுடைய கைகளையும் கால்களையும் வெட்டினார்கள்; கண்(இமை)களின் ஓரங்களில் சூடிட்டார்கள்; அவர்களைக் கருங்கற்கள் நிறைந்த ஹர்ரா எனுமிடத்தில் (பற்களால்) கற்களைப் (பற்றிப்) பிடித்துக் கொண்டிருக்கும்படி விட்டு விட்டார்கள்.

பாடம் : 69

தலைவர் தம் கைகளால் ஸகாத்துடைய ஒட்டகத்திற்கு அடையாளமிடுவது.

1502 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று ஊட்டுவதற்காக ஒருநாள் காலை அப்துல்லாஹ் பின் அபீதல்ஹா எனும் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், அடையாளமிடும் கருவியைக் கொண்டு ஸதகா ஒட்டகத்திற்கு, தம் கையால் அடையாளமிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டேன்.

பாடம் : 70

நோன்புப் பெருநாள் தர்மம் (ஸதக்கத்துல் ஃபித்ர்) கடமை ஆகும்.

நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாகுமென அபுல் ஆலியா, அதாஉ, இப்னுசீரீன் (ரஹ் அலைஹிம்) கருதுகின்றனர்.

1503 இப்னு உமர் (ரலி) கூறியதாவது:

முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.

(குறிப்பு: ஸாஉ என்பது சுமார் 2.135 கிலோ கிராம் எடைக்கு சமமான அளவாகும்)

பாடம் : 71

நோன்புப் பெருநாள் தர்மம் முஸ்லிம்களிடையேயுள்ள அடிமை, அடிமையல்லாதார் அனைவர் மீதும் கடமை.

1504 இப்னு உமர் (ரலி) கூறியதாவது:

முஸ்லிம்களிடையேயுள்ள அடிமை. சுதந்திரமானவர் ஆண், பெண் அனைவருக்காகவும் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையை நோன்புப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று) நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.

பாடம் : 72

(நோன்புப் பெருநாள் தர்மம்) ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமை.

1505 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (நோன்புப் பெருநாள்) தர்மமாக ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையை உணவுக்காகக் கொடுத்துவந்தோம்.

பாடம் : 73

நோன்புப் பெருநாள் தர்மம் ஒரு ஸாஉ உணவுப் பொருள்.

1506 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாஉ அளவு ஏதேனும் உணவையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையையோ அல்லது ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாஉ அளவு பாலாடைக் கட்டியையோ அல்லது ஒரு ஸாஉ அளவு உலர்ந்த திராட்சையையோ கொடுப்போம்.

பாடம் : 74

நோன்புப் பெருநாள் தர்மம் ஒரு ஸாஉ அளவுப் பேரீச்சம் பழம்.

1507 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.

மக்கள் ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமைக்குப் பகரமாக அரை ஸாஉ அளவு தீட்டிய கோதுமையைக் கொடுத்தார்கள்.

பாடம் : 75

(நோன்புப் பெருநாள் தர்மம்) ஒரு ஸாஉ உலர்ந்த திராட்சை.

1508 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையையோ அல்லது ஒரு ஸாஉ உலர்ந்த திராட்சையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுத்துவந்தோம்.

முஆவியா (ரலி)வின் ஆட்சியில் ஷாம் நாட்டு உயர் ரகக் கோதுமை தாராளமாகக் கிடைத்த போது, இதில் (தீட்டிய உயர் ரகக் கோதுமையில்) ஒரு முத்'து (ஙமஉஉ) அதில் (தீட்டாத கோதுமையில்) இரண்டு முத்'துக்கு ஈடாகும் என்று முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 76

(நோன்புப் பெருநாள்) தர்மத்தைப் பெருநாளு(டைய தொழுகை)க்கு முன்பே கொடுத்தல்.

1509 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

1510 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாஉ உணவை (ஸதக்கத்துல் ஃபித்ர்) தர்மமாகக் கொடுத்துவந்தோம்.

அக்காலத்தில் தீட்டாத கோதுமையும் உலர்ந்த திராட்சையும் பாலாடைக் கட்டியும் பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தன.

பாடம் : 77

அடிமையின் மீதும் சுதந்திரமானவன் மீதும் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாகும்.

1511 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆண், பெண், அடிமை, சுதந்திரமானவர் அனைவர் மீதும் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாஉ தீட்டாத கோதுமையையோ பெருநாள் தர்மமாக நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.

அரை ஸாஉ தீட்டிய கோதுமை ஒரு ஸாஉ தீட்டாத கோதுமைக்கு சமம் என மக்கள் கருதினார்கள்.

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழத்தையே கொடுத்து வந்தார்கள். மதீனா நகர மக்களுக்குப் பேரீச்சம் பழத் தட்டுப்பாடு வந்த போது தீட்டாத கோதுமையைக் கொடுத்தார்கள். (தம் குடும்பத்திலுள்ள) சிறியவர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும், (அவருடைய பணியாளராக நானிருந்ததால்) எனது குழந்தைகளுக்காகவும் கொடுத்துவந்தார்கள். இந்த தர்மத்தைப் பெற்றுக்கொள்பவருக்கெல்லாம் கொடுத்துவந்தார்கள். மேலும் பெருநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித்தோழர்கள் (இந்த தர்மத்தைக்) கொடுத்துவந்தார்கள்.

பாடம் : 78

நோன்புப் பெருநாள் தர்மம் சிறியவர்களுக்காகவும் பெரியவர்களுக்காகவும் (ஏழைகளுக்கு) கொடுக்கப்பட வேண்டும்.

1512 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை அனைவர் மீதும் ஒரு ஸாஉ பேரீச்சம் பழமோ அல்லது ஒரு ஸாஉ தீட்டாத கோதுமையோ (ஏழைகளுக்கு) நோன்புப் பெருநாள் தர்மமாகக் (கொடுப்பதை) நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.

 

November 2, 2009, 12:08 AM

24-ஸகாத்தின் சட்டங்கள்1