அச்சநேரத் தொழுகை

 

அத்தியாயம் : 12

12-அச்சநேரத் தொழுகை

பாடம் : 1

அச்சமான நேரத்தில் தொழுவது.

அல்லாஹ் கூறுகின்றான்:

நீங்கள் பூமியில் பயணம் செய்யும் போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது; நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர். (4:101)

அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்குத் தொழவைக்க நீர் (இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் சஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்களைப் பற்றி எச்சரிக்கையாகஇருக்கட்டும்-ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப் பற்றியும், உங்கள் பொருட்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி)விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழேவைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது; எனினும் நீங்கள் எச்சரிக்கை யாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான். (4:102)

942 ஷுஐப் பின் அபீஹம்ஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் அச்சநேரத் தொழுகை (ஸலாத்துல் ஃகவ்ஃப்) தொழுதுள்ளார்களா? என்று கேட்டேன். அதற்கு சாலிம் (ரஹ்) அவர்கள் தம் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்த (பின்வரும்) ஹதீஸைக் கூறினார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தாத்துர் ரிகாஉ எனும்) போருக்காக நஜ்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றேன். அப்போது நாங்கள் எதிரிகளை எதிர் கொண்டு அவர்களுக்காக அணிவகுத்து நின்றோம். (போர் நடக்காவிட்டாலும் பீதி நிலவிக் கொண்டிருந்த அந்தப்போர்முனையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகை தொழுவிப்பதற்காக நின்றார்கள். (எங்களில்) ஓர் அணியினர் நபி (ஸல்) அவர் களுடன் நின்று தொழுதனர். மற்றோர் அணியினர் எதிரிகளை நோக்கி (அவர்களைக் கண்காணிப்பதற்காகச்) சென்றனர்.

நபி (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர் களுடன் ருகூஉச் செய்து இரு சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு (நபியவர்களுடன் தொழுத) அந்த அணியினர் தொழாமல் (எதிரிகளைக் கண்காணித்துக் கொண்டு) இருந்த மற்றோர் அணியினரின் இடத்துக்குச் சென்றுவிட்டனர். அந்த அணியினர் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த அணியினருடன் இரு சஜ்தாக்களைச் செய்து ஒரு ரக்அத் தொழுவித்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள். பிறகு அவர் களில் ஒவ்வொரு அணியினரும் எழுந்து ஒரு ருகூஉம் இரண்டு சஜ்தாக்களும் செய்து (மீதமிருந்த ஒரு ரக்அத்தைத்) தமக்காக நிறைவேற்றிக் கொண்டனர்.

பாடம் : 2

நின்று கொண்டும் வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டும் அச்சநேரத் தொழுகையை நிறைவேற்றலாம்.

(2:239, 22:27 ஆகிய வசனங்களின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ரிஜால் எனும் சொல் ராஜில் என்பதன் பன்மையாகும். அந்த) ராஜில் எனும் சொல்லுக்கு நிற்பவன் என்று பொருள்.

943 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(தனியாகப் பிரிந்து வரமுடியாத அளவுக்கு எதிரிகளுடன்) கலந்து விட்டால் நின்றவர்களாகவே தொழுது கொள்வார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

முஜாஹித் (ரஹ்) அவர்களின் கூற்றைப் போன்றே இப்னு உமர் (ரலி) அவர்களின் மேற்கண்ட கூற்றும் அமைந்துள்ளது. ஆனால், இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கூடுதலாகவும் (பின்வருமாறு) அறிவித்துள்ளார்கள்:

எதிரிகள் இதைவிடவும் அதிகமாக இருந்தால் நின்று கொண்டோ வாகனத்தில் அமர்ந்து கொண்டோ தொழுது கொள்ளட்டும்.

பாடம் : 3

அச்சநேரத் தொழுகையில் ஈடுபடுவோர் ஒருவருக் கொருவர் பாதுகாப்பாக இருந்து கொள்ளவேண்டும்.

944 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (போர்க்களத்தில் அச்சநேரத்) தொழுகைக்காக நின்றார்கள். மக்களும் (இரு வரிசையில்) அவர்களுடன் நின்று கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூற அனைவரும் தக்பீர் கூறினர். நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்த போது அவர்களில் (முதல் வரிசையில் நின்ற) சிலர் (மட்டும்) ருகூஉ செய்தனர். நபி (ஸல்) அவர்கள் சஜ்தாச் செய்த போது அவர்களும் அவர்களுடன் சஜ்தாச் செய்தனர். பிறகு இரண்டாவது ரக்அத்திற்காக நபி (ஸல்) அவர்கள் எழுந்த போது நபி (ஸல்) அவர்களுடன் (முதலாவது ரக்அத்தில்) சஜ்தாச் செய்தவர்கள் எழுந்து (இரண்டாவது வரிசைக்குச் சென்று நின்று கொண்டு) தம் சகோதரர்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். (இரண்டாவது வரிசையில் நின்று கொண்டிருந்த) அந்த அணியினர் (முதல் வரிசைக்கு) வந்து நபி (ஸல்) அவர்களுடன் சஜ்தாவும் செய்தனர். மக்கள் அனைவரும் தொழுகையில்தான் ஈடுபட்டிருந்த னர். ஆயினும் ஒருவரை யொருவர் பாதுகாத்துக் கொண்டிருந்தனர்.

பாடம் : 4

(எதிரிகளின்) கோட்டைகளை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் போதும் எதிரிகளை (களத்தில்) சந்திக்கும் போதும் தொழவேண்டும்.

அவ்ஸாயீ (ரஹ்), மக்ஹூல் (ரஹ்) ஆகியோர் கூறுகின்றார்கள்:

வெற்றி நெருங்கிய நிலையில் அவர்களுக்குத் தொழ இயலாவிட்டால் ஒவ்வொருவரும் தனித் தனியாகச் சைகை மூலம் தொழவேண்டும். சைகை மூலமும் தொழ முடியாவிட்டால் போர் முடிவுக்கு வரும் வரை அல்லது அச்சமற்ற நிலையை அடையும் வரை அவர்கள் தொழுகையைப் பிற்படுத்துவார்கள்; பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்வார்கள். (இரண்டு ரக்அத்கள் தொழக்கூட) அவர்களுக்கு இயலாவிட்டால் ஒரு ருகூஉம் இரண்டு சஜ்தாக்களும் செய்வார்கள்; தக்பீர் கூறுவது மட்டும் போதுமாகாது.* அச்சமற்ற நிலை உருவாகும் வரை தொழுகையை அவர்கள் பிற்படுத்துவார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(ஹிஜ்ரி 20ஆமாண்டு உமர் (ரலி) அவர்களது ஆட்சி காலத்தில் ஈரானிலுள்ள) துஸ்தர் எனும் கோட்டையை ஃபஜ்ர் பளிச்சிடும் நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தோம். போர்த்தீ கடுமையாக மூண்டது. மக்களால் தொழமுடியவில்லை. எனவே நாங்கள் (ஃபஜ்ர் தொழுகையை) சூரியன் உயர்ந்த பிறகே தொழுதோம். அத்தொழுகையை நாங்கள் அபூமூசா (ரலி) அவர்களுடன் தொழுதோம். (அந்தப் போரில்) எங்களுக்கே வெற்றி கிடைத்தது. அந்தத் தொழுகைக்குப் பகரமாக இவ்வுலகமும் அதிலுள்ளவை (எனக்கு வழங்கபட்டாலும் அது) எனக்கு மகிழ்ச்சியளிக்காது.

945 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது உமர் (ரலி) அவர்கள் குறைஷி இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே வந்து, அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மரையும் நேரம் நெருங்கியும் என்னால் அஸ்ர் தொழுகையை தொழ முடியாமற் போய்விட்டது என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! நானும்தான் இது வரை அத்தொழுகையை தொழ முடியாமற் போய்விட்டது என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் புத்ஹான் எனும் பள்ளத்தாக்கில் இறங்கி அங்கசுத்தி (உளூ) செய்து விட்டு சூரியன் மறைந்தபின் (எங்களுக்கு இமாமாக நின்று) அஸ்ர் தொழுகையைத் தொழு(வித்)தார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகையைத் தொழு(வித்)தார்கள்

பாடம் : 5

எதிரிகளைத் தேடிச் செல்பவரும் எதிரி களால் தேடப்படுபவரும் வாகனத்தில் பயணித்தவாறே சைகை மூலம் தொழுவது.

வலீத் பின் முஸ்லிம் அல்குறஷீ அவர்கள் கூறுகிறார்கள்:

நான், அவ்ஸாயீ (அப்துர் ரஹ்மான் பின் அம்ர்-ரஹ்) அவர்களிடம், ஷுரஹ்பீல் பின் சம்த் அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வாகனத்தின் மீது அமர்ந்து தொழுதது பற்றிக் கேட்டேன். அதற்கு அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள், (எதிரிகள்) தப்பிவிடுவதை அஞ்சினால் இவ்வாறு (வாகனத்தின் மீது பயணித்தவாறு சைகை மூலம்) தொழுவது கூடும் என்பதே எமது கருத்தாகும் என்று பதிலளித்தார்கள்.

வலீத் (ரஹ்) அவர்கள் பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழ வேண்டாம் எனும் நபிமொழியை தமது கருத்தாகும் என்று பதிலளித்தார்கள்.

வலீத் (ரஹ்) அவர்கள் பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை (உங்களில்) எவரும் அஸ்ர் தொழுகையைத் தொழவேண்டாம் எனும் நபி மொழியை தமது கருத்துக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

946 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரிலிருந்து திரும்பிய போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், பனூகுறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை (உங்களில்) எவரும் அஸ்ர் தொழுகையைத் தொழவேண்டாம் என்று கூறினார்கள்.

வழியிலேயே அஸ்ர் நேரத்தை மக்கள் அடைந்தனர். அப்போது சிலர், பனூகுறைழா குலத்தாரை அடையாத வரை நாம் அஸ்ர் தொழுகையை தொழவேண்டாம் என்று கூறினர். மற்ற சிலர், (தொழுகை நேரம் தவறிப்போனாலும் தொழவேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் நம்மிடம் (அவ்வாறு) கூறவில்லை; (வேகமாக அங்கு போய்ச் சேருங்கள் என்ற கருத்தில்தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்). எனவே, நாம் தொழுவோம் என்று கூறினர். நபி (ஸல்) அவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்ட போது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.

பாடம் : 6

சுப்ஹுத் தொழுகையை அதன் ஆரம்பநேரத்திலேயே இருள் இருக்கும்போதே தொழுவதும் தாக்குத-ன் போதும் போரின் போதும் அவ்வாறே தொழுவதும்.

947 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கைபருக்கு அருகில் ஓரிடத்தில்) சுப்ஹுத் தொழுகையை இருள் இருக்கும்போதே (அதன் ஆரம்பநேரத்திலேயே) தொழு(வித்)தார்கள்.

பிறகு (கைபரை நோக்கிப்)பயணமானார்கள். (கைபருக்குள் அவர்கள் பிரவேசித்த போது) அல்லாஹு அக்பர்-அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும் என்று (மூன்று முறை) கூறினார்கள். (முஸ்லிம்களைக் கண்ட) கைபர்வாசிகள் வீதிகளில் ஓடிக் கொண்டே, முஹம்மதும் அவரது ஐந்து அணிகள் கொண்ட) படையும் (வருகின்றனர்) என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தாக்குதலைத் தொடங்கி தம்முடன் போரிட்டவர்களை வீழ்த்தினார்கள். (போரில் கலந்து கொள்ளாத) அவர்களது குடும்பத்தாரைக் கைது செய்(து தம் வீரர்களிடையே ஒப்படைத்)தார்கள். அப்போது (பனூகுறைழா, பனூநளீர் குலங்களின் தலைவி) ஸஃபிய்யா அவர்கள் திஹ்யா அல்கல்பீ அவர்களிடம் (அன்னாரின் போர்ச்செல்வத்தின் பங்காகப்) போய்ச்சேர்ந்தார்கள். (பிறகு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க) சொந்தமானார்கள். பின்னர் அவரது விடுதலையையே மணக் கொடையாக்கி அவரை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொண்டார்கள்.

அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இந்த ஹதீஸை ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் போது அவர்களிடம், அபூ முஹம்மதே! நபி (ஸல்) அவர்கள் என்ன மணக் கொடை (மஹ்ர்) கொடுத்தார்கள் என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நீங்கள் கேட்டீர்களா? என்று நான் கேட்டேன். அதற்கு ஸாபித் (ரஹ்) அவர்கள், அவரையே (அதாவது அவரை விடுதலை செய்வதையே) அவருக்கு மணக் கொடையாக ஆக்கினார்கள் என்று கூறிவிட்டு புன்னகைத்தார்கள்.

October 23, 2009, 7:55 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top