கூட்டு துஆ ஹாமித் பக்ரியின் ஆதாரம்

கேள்வி

ஹாமித் பக்ரி கூட்டு துஆ ஓதுவதற்கு ஆதாரமாக காட்டும் ஹதீஸைப் பற்றி விளக்கமாக சொல்லவும்.

முஹம்மத்

பதில் :

இது குறித்து ஏகத்துவம் ஆகஸ்ட் 2010 இதழில் விளியான ஆய்வுக் கட்டுரையை இதற்கு பதிலாகத் தருகிறோம்.

மறு ஆய்வு கூட்டு துஆ

....பித்அத்தின் உச்சக்கட்ட சபையான புகாரி சபையில் ஹாமித் பக்ரி மற்றொரு வாதத்தையும் எடுத்து வைத்துள்ளார். அது தான் கூட்டு துஆ ஓதலாம் என்பதாகும். இதே ஹாமித் பக்ரி தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்த போது கூட்டு துஆவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர்.

கூட்டு துஆ தொடர்பாக ஏற்கனவே ஏகத்துவத்தில் ஆய்வுத் தொடர்களை வெளியிட்டிருந்தாலும் தற்போது புதிதாக சில வாதங்களை ஹாமித் பக்ரி முன்வைத்திருப்பதால் அவற்றுக்குப் பதிலளிப்பது நமது கடமை என்ற அடிப்படையில் இந்தக் கட்டுரை இங்கே பதியப்படுகின்றது.

ஆதாரம்: 1

5478 - أخبرنا الشيخ أبو بكر بن إسحاق أنا بشر بن موسى ثنا أبو عبد الرحمن المقري ثنا ابن لهيعة : قال : حدثني أبو هبيرة عن حبيب بن مسملة الفهري و كان مجاب الدعوة أنه أمر على جيش فدرب الدروب فلما أتى العدو قال : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول لا يجتمع ملأ فيدعو بعضهم و يؤمن البعض إلا أجابهم الله ثم إنه حمد الله و أثنى عليه ثم قال : اللهم احقن دمائنا و اجعل أجورنا الشهداء فبينما هم على ذلك إذ نزل الهنباط أمير العدو فدخل على حبيب سرادقه

تعليق الذهبي قي التلخيص : سكت عنه الذهبي في التلخيص

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص [5 /24]

"ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் சிலர் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹபீப் பின் மஸ்லமா (ரலி,  நூல்: ஹாகிம் 5478

3456- حدثنا بشر بن موسى ، حدثنا أبو عبد الرحمن المقرئ ، حدثنا ابن لهيعة ، حدثني ابن هبيرة ، عن حبيب بن مسلمة الفهري وكان مستجابا أنه أمر على جيش فدرب الدروب ، فلما لقي العدو ، قال للناس : سمعت رسول الله صلى الله عليه وسلم ، يقول : " لا يجتمع ملأ فيدعو بعضهم ويؤمن سائرهم إلا أجابهم الله " ، ثم إنه حمد الله وأثنى عليه ، فقال : اللهم احقن دماءنا واجعل أجورنا أجور الشهداء ، فبينا هم على ذلك إذ نزل الهنباط أمير العدو ، فدخل على حبيب سرادقه ، قال أبو القاسم : الهنباط بالرومية صاحب الجيش.

حبيب بن سباع أبو جمعة الأنصاري ، ويقال : جنيد بن سبع

المعجم الكبير للطبراني [4 /12]

இதே செய்தி இமாம் தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு ஹாமித் பக்ரீ, கூட்டு துஆ ஓதலாம் என்று வாதிடுகிறார்.

இந்த இரண்டு நூற்களிலும் மூன்றாவது அறிவிப்பாளராக "இப்னு லஹீஆ' என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளனர். இவருடைய புத்தகங்கள் எரிந்து விட்டதால் இவரது மனனத்தன்மை பாதிக்கப்பட்டது என்பதே இவரது பலவீனத்துக்குக் காரணம்.

எனவே இவருடைய நூல் எரிவதற்கு முன்பு இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்பை ஏற்கலாம். இதற்குப் பிறகு இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்பை ஏற்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

قال أبو حاتم بن حبان البستي: كان من أصحابنا يقولون: سماع من سمع من ابن لهيعة قبل احتراق كتبه مثل العبادلة: ابن المبارك، وابن وهب، والمقرئ، وعبد الله بن مسلمة القعنبي، فسماعهم صحيح ومن سمع بعد احتراق كتبه فسماعه ليس بشئ.

سير أعلام النبلاء - الذهبي [8 /23]

இப்னு லஹீஆவிடமிருந்து இப்னு வஹப் அல்முக்ரிஉ மற்றும் முந்தைய காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவித்த அறிவிப்புகள் தரமானவை.

இப்னு லஹீஆ ஹதீஸ் கலையில் பலவீனமானவராவார். இவருடைய புத்தகங்கள் எரிவதற்கு முன்பு இவரிடமிருந்து (ஹதீஸை) எழுதியவர்களின் அறிவிப்புகள் மிகச் சரியானவை. உதாரணமாக இப்னுல் முபாரக், அல்முக்ரிஉ ஆகியோரைப் போன்று. இவ்வாறு அபூ ஹஃப்ஸ் ஃபல்லாஸ் என்பார் தெரிவிக்கின்றார்.

நூல்: சியரு அஃலாமின் நுபலாஃ (பாகம் : 8, பக்கம் : 11)

وكان صالحا، لكنه يدلس عن الضعفاء، ثم احترقت كتبه، وكان أصحابنا يقولون: سماع من سمع منه قبل احتراق كتبه مثل العبادلة: عبدالله بن وهب، وابن المبارك، وعبد الله بن يزيد المقرئ، وعبد الله بن مسلمة القعنبى - فسماعهم صحيح.

ميزان الاعتدال - الذهبي [2 /482]

இப்னு லஹீஆவின் புத்தகங்கள் எரிவதற்கு முன்பு அவரிடமிருந்து கேட்டவர்களின் அறிவிப்புகள் சரியானவை. உதாரணமாக அப்துல்லாஹ் பின் வஹப், அப்துல்லாஹ் பின் முபாரக் மற்றும் அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ ஆகியோரின் அறிவிப்புகள் சரியானவை.

நூல்: மீஸானுல் இஃதிதால் (பாகம் : 4, பக்கம் : 166)

وقال نعيم بن حماد سمعت بن مهدي يقول لا أعتد بشيء سمعته من حديث بن لهيعة إلا سماع بن المبارك ونحوه
تهذيب التهذيب - ابن حجر [5 /328]
وقال عبد الغني بن سعيد الأزدي إذا روى العبادلة عن بن لهيعة فهو صحيح بن المبارك وابن وهب والمقري وذكر الساجي وغيره مثله
تهذيب التهذيب - ابن حجر [5 /330]


இப்னு வஹப், இப்னுல் முபாராக், முக்ரீ ஆகியோர் இப்னு லஹீஆவின் மாணவர்கள். இம்மூவரும் இப்னு லஹீஆவிடம் ஆரம்ப நேரத்தில் செவியுற்றவர்கள் என்றும் இவர்கள் இப்னு லஹீஆவின் வழியாக அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் இமாம்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 5, பக்கம் : 330

அபாதிலாக்கள் என்று கூறப்படும் நபர்கள், அதாவது அப்துல்லாஹ் என்ற பெயரைக் கொண்ட நபர்கள் இப்னு லஹீஆவிடமிருந்து அவருடைய மூளை குழம்புவதற்கு முன்பு அவரிடமிருந்து அறிவித்தவர்கள் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே அப்துல்லாஹ் பின் முபாரக் அப்துல்லாஹ் பின் வஹப், அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ ஆகியோர் இப்னு லஹீஆவின் மனனத்தன்மை பாதிக்கப்படுவதற்கு முன்பு அறிவித்தவர்கள் என்பதால் இவர்களின் அறிவிப்பை ஏற்கலாம் என்று இந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஹாமீத் பக்ரீ கூட்டு துஆ ஓதுவதற்கு ஆதாரமாகக் காட்டும் மேலுள்ள செய்தியை இப்னு லஹீஆவிடமிருந்து அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ என்பவர் அறிவிக்கின்றார். இவர் இப்னு லஹீஆவின் மனனத்தன்மை பாதிக்கப்படுவதற்கு முன்பு அவரிடமிருந்து அறிவித்தவர் என்பதால் இது சரியான செய்தி என்று பக்ரீ வாதிடுகிறார்.

இந்த ஹதீஸில் இப்னு லஹீஆவின் விமர்சனத்தைத் தவிர்த்து வேறெந்த குறையும் இல்லாவிட்டால் இவரது இந்த வாதத்தை பரிசீலிக்கலாம். ஆனால் இச்செய்தி பலவீனம் என்பதற்கு வேறொரு குறையும் உள்ளது.

இந்த செய்தியை ஹபீப் பின் மஸ்லமா (ரலி) என்ற நபித்தோழரிடமிருந்து அபூ ஹுபைரா என்பவர் அறிவிக்கின்றார். ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 42 வது வருடத்தில் மரணிக்கிறார்கள். அபூ ஹுபைரா ஹிஜ்ரீ 41 வது வருடத்தில் தான் பிறக்கின்றார்.

وولي أرمينية لمعاوية، فمات بها سنة اثنتين وأربعين

سير أعلام النبلاء - الذهبي [3 /189]

ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ நாற்பத்து இரண்டாவது வருடத்தில் மரணித்தார்கள்.

நூல்: சியரு அஃலாமின் நுபலாஃ (பாகம் : 3, பக்கம் : 189)

قال المزي في تهذيب الكمال  :

عبد الله بن هبيرة بن أسعد بن كهلان السبئى الحضرمى ، أبو هبيرة المصرى . اهـ

' . قال سعيد بن كثير بن عفير : ولد سنة الجماعة . و قال أبو سعيد بن يونس : قرأت فى بعض الكتب القديمة : أنه مات سنة ست و عشرين و مئة .

அபூ ஹுபைரா ஜமாஅத் வருடம் என்றழைக்கப்படும் ஹிஜ்ரீ 41வது வருடத்தில் பிறந்தார்.

நூல்: தஹ்தீபுல் கமால்

ஆக ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் மரணிக்கும் போது அபூ ஹுபைராவின் வயது ஒன்றாகும். எனவே அபூஹுபைரா ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை. அவர்களிடமிருந்து எதையும் நேரடியாகக் கேட்கவில்லை என்பது உறுதியாகின்றது.

இந்த அடிப்படையில் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முறிவு இருப்பதால் இந்தச் செய்தி பலவீனமாகிறது. இதை ஹாமித் பக்ரி விளங்கியிருந்தால் இதை ஆதாரமாகக் கொண்டு கூட்டு துஆ என்ற பித்அத்தைச் செய்திருக்க மாட்டார்.

ஆதாரம்: 2

கைஸ் அல்மதனீ கூறுகிறார்:

ஒருவர் ஸைத் பின் சாபித் (ரலி) அவர்களிடம் வந்து ஒரு விஷயம் குறித்து வினவினார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறினார்கள்:

நீங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால் ஒரு நாள் நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் இன்னாரும் பள்ளியில் இருந்தோம். எங்கள் இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அவனை நினைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்கள் மௌனமாகி விட்டோம். நீங்கள் முன்பு ஈடுபட்டிருந்த காரியத்தை மீண்டும் தொடருங்கள் என்று கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு முன்பாக நானும் என்னுடன் இருந்தவரும் பிரார்த்தனை செய்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் பிரார்த்தனைக்கு ஆமீன் சொன்னார்கள்.

பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் (தனது பிரார்த்தனையில்) இறைவா, என்னுடைய இந்த இரு தோழர்கள் கேட்டதை உன்னிடம் கேட்கிறேன். மேலும் மறந்துவிடாத கல்வியையும் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.

உடனே நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே மறந்துவிடாத கல்வியை நாங்களும் அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்' என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இதில் தவ்சீ குலத்தைச் சாந்த வாலிபர் (அபூஹுரைரா) உங்களை முந்திவிட்டார்' என்றார்கள்.

நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா

கூட்டு துஆ ஓதலாம் என்று கூறக் கூடியவர்கள் இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலான அல்இசாபா ஃபீ தம்யீசிஸ் சஹாபா எனும் நூலில் இச்செய்தி சரியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றார். இப்னு ஹஜர் அவர்களின் இக்கூற்றையும் மேற்கண்ட செய்தியைச் சரிகாணுபவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

தங்களுடைய பித்அத்திற்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்காதா என்று தேடித் திரிந்தவர்களின் கண்ணில் இச்செய்தி பட்ட மாத்திரத்தில் முழுமையான ஆய்வு செய்யாமல் அரைகுறை ஞானத்தோடு இதை ஆதாரமாகக் கருதி மக்களுக்கு மத்தியில் இச்செய்தியைப் பரப்பியும் வருகின்றனர்.

உண்மையை உணர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தச் செய்தியைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் இச்செய்தி பலவீனமானது என்ற முடிவுக்கே வருவார்கள்.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கைஸ் அல்மதனீ இடம்பெறும் மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரை தவறுதலாக சரி என்று கூறி விட்டார்கள். இவருடைய தவறைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கூட்டு துஆவை நியாயப்படுத்துகிறார்கள்.

ஆனால் இந்தச் செய்தியை அறிவிக்கும் கைஸ் அல்மதனீ என்பவர் பலவீனமானவர் என்று இமாம் இப்னு ஹஜர் அவர்களே தனது நூலான தக்ரீபுத் தஹ்தீப் எனும் நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரபி 5

கைஸ் அல்மதனீ என்பவர் யாரென அறியப்படாதவர்.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம் : 1,  பக்கம் : 458

கைஸ் அல்மதனீ என்பவர் நம்பகமானவர் என்பது உறுதி செய்யப்படவில்லை. இவர் முகவரியற்றவர் என்பதால் இவர் பலவீனமானவர். இப்படிப்பட்டவர் அறிவித்த செய்தியை கூட்டு துஆ ஓதுவதற்கு எப்படி ஆதாரமாக எடுக்க முடியும்?

இவர் நம்பகமானவர் என்று ஒரு அறிஞர் கூட சான்று அளிக்கவில்லை.

இமாம் ஹைஸமீ அவர்கள் இந்த ஹதீஸைத் தனது நூலில் குறிப்பிட்டு இதில் இடம்பெறும் கைஸ் அல்மதனீ நம்பகமானவர் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

அரபி 6

இந்தச் செய்தியை தப்ரானீ பதிவு செய்துள்ளார். இதில் கைஸ் என்பவர் இடம்பெறுகிறார். இவரிடமிருந்து இவருடைய மகனைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. இதில் உள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாவர்.

நூல்: மஜ்மஉ ஸவாயித், பாகம் : 9, பக்கம் : 347

இவரைத் தவிர உள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று ஹைஸமீ சான்றளிக்கிறார். எனவே இவர் நம்பகமானவர் இல்லை என்பது இதிலிருந்து புரிகின்றது.

திர்மிதீ நூலுக்கு விரிவுரை வழங்கிய இமாம் முபாரக் ஃபூரி அவர்களும் இப்னு மாஜா நூலுக்கு விரிவுரை வழங்கிய இமாம் நூருத்தீன் சனதீ அவர்களும் இமாம் அல்பானீ அவர்களும் மற்றும் தற்கால சில அறிஞர்களும் கைஸ் அல்மதனீ பலவீனமானவர் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

எனவே ஹதீஸ் கலை அடிப்படையில் இவர் இடம்பெற்றுள்ள செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி பலவீனமானது என்பது நிரூபணமாகின்றது.

இந்தப் பலவீனமான ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டால் அந்தச் செயல் ஒருக்காலும் இறைவனால் அங்கீகரிக்கப்படாது. அது நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பித்அத் என்ற அனாச்சாரம் என்பதைக் கொள்கை வாதிகள் மறந்து விடக்கூடாது.

சரியான கொள்கையை விட்டு தடம் புரண்டு அசத்தியக் கொள்கைக்குச் செல்வதை விட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!

19.08.2010. 01:00

வரதற்சனை மவ்லிது விருந்து வித்தியாச

கேள்வி
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்..)

அன்பிற்க்கினிய சகோதரர் PJ அவர்களுக்கு..

1)நீங்கள் பேசிய இஸ்லாம் கூறும் பொருளியல் பாகம்-14 ல், திருக்குர்ஆன் சூரா 4:140 வசனம் குறிப்பிட்டு அல்லாஹ்வை கேலி செய்யும் சபையில் நீங்கள் அமராதீர்கள்.அதாவது பித்-அத் நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்வது தவறு.ஆனால் அதில் தரும் சாப்பாட்டை நம் வீட்டிற்க்கு அனுப்பி நாம் சாப்பிடுவது ஹராம் இல்லை என்று கூறி உள்ளீர்கள்.

 2) மெளலீது, ஹத்தம், ஃபாத்திஹா ஓதுவது ஹராம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை?

ஆனால் அதில் தரும் சீரனி, சாப்பாடு ஹராம் என்று கூறுகிறீர்கள்.

இதிலும் அல்லாஹ்வுடைய வசனம் கேலிதானே!  செய்யப்படுகிறது.அப்படி என்றால் இதை ஓதி நம் வீட்டிற்க்கு சாப்பாடு அனுப்பினால் நாம் சாப்பிடலாம் தானே! இதற்க்கு உங்களின் விளக்கத்தை கூறி எனக்கு புரிய வைக்கவும்.

நிரவி..காதிர் முஹ்யீதீன்.பிரான்ஸ்

பதில் :

வஅலைக்குமுஸ்ஸலாம்.

மார்க்கத்திற்கு மாற்றமாக நடக்கும் திருமணத்தை முன்னிட்டு தரப்படும் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகிறோம். இத்திருமணத்தை நாம் ஆதரிக்கக்கூடாது என்பதே இதற்குக் காரணம்.

இத்திருமணத்தை முன்னிட்டு தரப்படும் விருந்தில் பங்கெடுத்துவிட்டு நான் இத்திருமணத்தை ஆதரிக்கவில்லை என்று கூறினால் இந்தக் கூற்றில் எந்த உண்மையும் இல்லை. அந்த விருந்தில் நாம் கலந்துகொள்வதே அதை நாம் ஆதரிக்கின்றோம் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.

அதே நேரத்தில் இத்திருமண விருந்துக்கு நம்மை அழைத்து நாம் போகாவிட்டால் இதை நாம் புறக்கணித்து இருக்கின்றோம் என்பதை திருமணம் நடத்தியவர்கள் கூட விளங்கிக்கொள்கிறார்கள். இந்த அடிப்படையில் தான் திருமண விருந்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று கூறுகிறோம்.

அத்திருமணத்தில் தரப்படும் உணவு ஹராம் என்று நாம் கூறவில்லை. உணவே பரிமாராமல் மார்க்கத்திற்கு மாற்றமான திருமணம் நடந்தால் அப்போதும் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்றே கூறுவோம். ஏனென்றால் இவ்வாறு நாம் கூறுவதற்கு உணவு காரணமல்ல. மார்க்கத்திற்கு மாற்றமான திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்பதே காரணம்.

வரதட்சணை, பித்அத்துகள், ஷிர்க்கான பாடல்கள் போன்றவை திருமணங்களில் இடம் பெறுவதால் அந்தப் பாவத்திற்குத் துணை போய் விடக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தத் திருமணங்களையும், அதையொட்டி நடைபெறும் விருந்துகளையும் புறக்கணிக்கின்றோம். இது போன்ற திருமண விருந்துகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது அந்த உணவு ஹராம் என்பதற்காக அல்ல!

திருமணத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்கு நாம் கூறிய இந்த காரணம் நமது வீட்டில் இருந்துகொண்டு அந்த உணவை உண்ணும் போது ஏற்படாது. அதாவது இந்த உணவை நமது வீட்டில் இருந்துகொண்டு உண்பதால் அத்திருமணத்தை ஆதரிக்கும் நிலை ஏற்படவில்லை. இந்த உணவை உண்பது மார்க்கத்தில் எந்த அடிப்படையிலும் தவறில்லை என்பதால் இதை உண்ணுகிறோம்.

நமது வீட்டிற்கு உணவுகளைக் கொடுத்து விட்டால் அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. ஏனெனில் நமது வீட்டிற்குக் கொடுத்து விடப்படும் உணவு அன்பளிப்பு என்ற நிலையை அடைந்து விடுகின்றது.

பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப் பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள், ''இது பரீராவுக்குத் தர்மமாகும். ஆனால் நமக்கு இது அன்பளிப்பாகும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1495

தர்மப் பொருள்களை நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவது தடையாக இருந்தாலும், தர்மத்தைப் பெற்றவர் அதை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது அதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனவே அன்பளிப்பு என்ற அடிப்படையில் வீட்டிற்கு வரும் உணவுகளைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.

மவ்லூது ஹத்தம் ஃபாத்திஹா ஆகிய அநாச்சாரங்கள் அரேங்கற்றப்பட்டு தரப்படும் உணவு நம் வீட்டிற்கு வந்தாலும் அதை நாம் உண்ணக்கூடாது. மார்க்கத்திற்கு மாற்றமான சபையை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக இதை உண்ணக்கூடாது என்று நாம் கூறவில்லை.

மாறாக இவ்வாறு தரப்படும் உணவில் புனிதம் இருப்பதாகவும் மற்ற உணவைக் காட்டிலும் இந்த உணவுகளுக்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.

மவ்­து, கந்தூரி, ஃபாத்திஹா போன்றவற்றிற்காக உணவு தயாரிப்பவர்கள் அந்த உணவு முழுவதுமே பரக்கத் நிறைந்தது என்று கருதியே தயாரிக்கின்றார்கள். முழு உணவையும் வைத்து மவ்­து ஓதாமல் சிறிதளவு எடுத்து வைத்து ஓதினாலும் முழு உணவையும் தபர்ரூக் என்றே குறிப்பிடுவார்கள். அதற்கென்று தனி மகத்துவம் இருப்பதாகவே நினைக்கின்றார்கள். மவ்லூது ஓதுபவர்கள் முழு உணவையும் எடுத்து வைத்து மவ்­து ஓதாவிட்டாலும் அதை நேர்ச்சையாக எண்ணியே தயாரிப்பதால் அதைச் சாப்பிடக் கூடாது.

ஒரு உணவில் இப்படிப்பட்ட தவறான நம்பிக்கை வைக்கப்படுமானால் அதை உண்பது தடுக்கப்பட்டுவிடுகின்றது. மீறி இந்த உணவை உண்டால் இதில் புனிதம் இருப்பதாக மூடர்கள் நினைப்பதை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.

இந்த உணவு உங்களுக்கு மட்டுமல்ல வேறு யாருக்கும் ஆகுமானதல்ல. இந்த உணவு பூஜை செய்யப்பட்ட பொருட்களின் அந்தஸ்த்தை எட்டிவிடுகின்றது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், ­யச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:173

இந்த வசனத்தில் 'அறுக்கப் பட்டவை' என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் அரபு மூலத்தில் 'உஹில்ல' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். அதாவது அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறப்பட்ட பொருட்களை உண்ணக் கூடாது என்பதையும் சேர்த்தே இந்த வசனம் கூறுகின்றது.

இந்த அடிப்படையில் சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள் மட்டுமின்றி, முஸ்­ம்கள் என்ற பெயரில் அவ்­யாக்களுக்காகப் படைக்கப்பட்ட உணவுகளையும் புனிதம் இருப்பதாக கருதப்படும் உணவுகளையும் உண்ணக் கூடாது என்று கூறி வருகிறோம்.

வரதட்சனை திருமணத்தில் தரப்படும் உணவு பூஜிக்கப்படுவதில்லை. அதில் புனிதம் இருப்பதாக யாரும் நம்பிக்கை வைக்கவுமில்லை. மற்ற உணவுகளைப் போன்று அதுவும் சாதாரண உணவு என்ற நம்பிக்கையில் அது பரிமாறப்படுவதால் அதை உண்ணலாம் என்று கூறுகிறோம்.

14.08.2010. 07:15

பிறந்த நாள் கொண்டாடலாமா?

 கேள்வி

எனது குடும்பத்தினர் மாத்திரம் கலந்து கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடலாமா?     விளக்கம் தரவும்.

இர்பான்

பதில் :

வஅலைக்குமுஸ்ஸலாம்

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.

இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.

மேலும் இக்கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் அமைந்துள்ளது. மனிதனுடைய பிறப்பில் அவனுடைய சாதனை எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் அவன் வளர்வதும் இறைவனுடைய அருளாலே நடந்துகொண்டிருக்கின்றது. எனவே இதில் மனிதன் தன்னை பெருமைப்படுத்திக்கொள்வதில் என்ன தத்துவம் அடங்கியிருக்கின்றது?

மேலும் இறைவன் நமக்கு விதித்த காலக்கெடுவில் ஓராண்டு கழிந்துவிட்டது எனக் கவலைப்படுவதைத் தவிர பிறந்த நாளில் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கின்றது?

இது பிற்காலத்தில் கிரிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும். கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம் பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

3456حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ رواه البخاري

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

''உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா  நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள்.

புகாரி (3456)

எனவே பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நீங்கள் பிறரை அழைத்தாலும் பிறரை அழைக்காமல் உங்கள் குடும்பத்தினர் மட்டும் கொண்டாடினாலும் அது தவறு. இதை நாம் கைவிட வேண்டும்.

06.08.2010. 00:49

புது வீடு கட்டி சாப்பாடு போடலாமா?

 

கேள்வி

அஸ்ஸலாமு அலைக்கும்

புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்து சாப்பாடு போடலாமா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும்.

முஜிபுர் ரஹ்மான்

பதில் :

                இன்றைக்கு கிரகப்பிரவேசம் என்ற பெயரில் ஏராளமான தவறுகளை நம் சமுதாய மக்கள் செய்துவருகின்றனர். புதுவீட்டுக்கு வந்தவுடன் பால்காச்ச வேண்டும். வீட்டில் ஜமாஅத் தொழுகை நடத்தப்பட வேண்டும். ஃபாத்திஹா ஓதப்பட வேண்டும் என்று பலவிதமான மூடநம்பிக்கைகள் மக்களிடம் காணப்படுகின்றது. இவைகளுக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

                புதுவீடு கட்டி மக்களை அழைத்து விருந்துபோடுவதை மட்டுமே இஸ்லாம் அனுமதிக்கின்றது. இதைத் தவிர ஏனைய சடங்கு சம்பரதாயங்களை தடை செய்கின்றது.

7281حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ أَخْبَرَنَا يَزِيدُ حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ وَأَثْنَى عَلَيْهِ حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ حَدَّثَنَا أَوْ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ جَاءَتْ مَلَائِكَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ نَائِمٌ فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ فَقَالُوا إِنَّ لِصَاحِبِكُمْ هَذَا مَثَلًا فَاضْرِبُوا لَهُ مَثَلًا فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ فَقَالُوا مَثَلُهُ كَمَثَلِ رَجُلٍ بَنَى دَارًا وَجَعَلَ فِيهَا مَأْدُبَةً وَبَعَثَ دَاعِيًا فَمَنْ أَجَابَ الدَّاعِيَ دَخَلَ الدَّارَ وَأَكَلَ مِنْ الْمَأْدُبَةِ وَمَنْ لَمْ يُجِبْ الدَّاعِيَ لَمْ يَدْخُلْ الدَّارَ وَلَمْ يَأْكُلْ مِنْ الْمَأْدُبَةِ فَقَالُوا أَوِّلُوهَا لَهُ يَفْقَهْهَا فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ فَقَالُوا فَالدَّارُ الْجَنَّةُ وَالدَّاعِي مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَنْ أَطَاعَ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ عَصَى مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدْ عَصَى اللَّهَ وَمُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرْقٌ بَيْنَ النَّاسِ تَابَعَهُ قُتَيْبَةُ عَنْ لَيْثٍ عَنْ خَالِدٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ عَنْ جَابِرٍ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்கüடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் ''இவர் உறங்கிக்கொண்டிருக்கிறார்'' என்றார். அதற்கு மற்றொருவர் ''கண்தான் உறங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது'' என்று கூறினார். பின்னர் அவர்கள் ''உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்'' என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் ''இவர் உறங்குகிறாரே!'' என்றார். மற்றொருவர் ''கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார். பின்னர் அவர்கள் ''இவரது நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்துண்ணவுமில்லை'' என்று கூறினார்கள்.

பின்னர் அவர்கள், ''இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்துகொள்ளட்டும்'' என்றார்கள். அப்போது அவர்கüல் ஒருவர் ''இவர் உறங்குகிறாரே!'' என்று சொல்ல, மற்றொருவர் ''கண்தான் தூங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார். அதைத் தொடர்ந்து ''அந்த வீடுதான் சொர்க்கம்; அழைப்பாளர் முஹம்மத் (ஸல்) அவர்கள்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப் படிந்துவிட்டார்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்தவர் அல்லாஹ் வுக்கு மாறுசெய்துவிட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களை (நல்லவர் கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டிவிட்டார்கள்'' என்று விளக்கமளித்தார்கள்.

புகாரி (7281)

வானவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இந்த உவமையை கூறியதி­ருந்து இந்த உவைமையில் சொல்லப்படும் செய்தி சரியானது என்பதை புரியலாம். புது வீடு கட்டி விருந்து அளிப்பதை வானவர்கள் உவமையாகக் கூறுகின்றனர். இவ்வாறு விருந்தளிப்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட காரியமாக இருந்தால் அதை நபியவர்களுக்கு உதாரணமாக கூறியிருக்கமாட்டார்கள். புதுவீடு கட்டியதற்காக விருந்தளிப்பது சிறந்த செயல் என்பதாலே இதை நபியவர்களுக்கு உதாரணமாக கூறியுள்ளனர். எனவே புது வீடு கட்டினால் விருந்து ஏற்பாடு செய்வதற்கு மட்டும் அனுமதியுள்ளது. 

05.08.2010. 08:47

பாவியாக்கும் பராஅத் இரவு

பாவியாக்கும் பராஅத் இரவு

சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம்கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும்பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.

இது மாத்திரமாமாலை நேரத்தில் ரொட்டி சுட்டுவீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள்.

மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக ஆரம்பிக்கப்பட்டு விடும். ஹஜரத்தைக் கூட்டிச் செல்வதற்காக குழந்தைகளின் வரிசை ஒரு பக்கம். சில வீட்டினர் தங்கள் ரொட்டிகளை பள்ளிவாசலுக்கே அனுப்பி வைப்பார்கள். வழமைக்கு மாற்றமாக பள்ளிவாசலில் இறைச்சிக் குழம்பு வாடை மூக்கைத் துளைக்கும்.

தொழுகை முடிந்ததும் ஹஜரத் அவர்கள் வெளி வராண்டாவில் (வராண்டா இல்லாத ஊர்களில் உள் பள்ளியிலும்) யாசீன் ஓதுவார். எத்தனை தடவை தெரியுமாமூன்று தடவை ஓத வேண்டுமாம். எதற்காக?

முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும்

இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும்நீண்ட ஆயுளுக்காகவும்

மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும்.

அது மட்டுமல்ல! வழமை போல் 8 மணிக்கு நடைபெறும் இஷா தொழுகை அன்றிரவு 10மணிக்கு நடைபெறும். காரணம் ஹஜரத்திற்கு வந்த பாத்திஹா ஆர்டர்களை முடித்து விட்டுஇரவு 8 மணிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வந்து சேர முடியாத நிலை. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட தொழுகையை விட யாரோ உருவாக்கிய பராஅத் இரவு சிறந்ததாகப் போய் விட்டதுஏழு வருடம் படித்த மார்க்க அறிஞருக்கு?

அந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும். எத்தனை ரக்அத்கள் தெரியுமா? 100ரக்அத்களாம். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள் குர்ஆன்ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அந்த மத்ஹப் புத்தகங்களில் இவர்கள் செய்கின்ற இச்செயலுக்கு முரணாகக் கூறப்பட்டுள்ளது தான் வேடிக்கை. பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?

ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும்ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.

(இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது) மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.

(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.) பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லைஇவர்கள் குர்ஆன்ஹதீஸையும் பின்பற்றவில்லைமத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோஅல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக!

பராஅத் அன்று நோன்பு நோற்கலாமா?

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.

(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன்பாகம்: 2, பக்கம்: 273)

ஏன் இந்த சிறப்பு?

அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களாஅன்று தான் ஷஅபான் பிறை 15ல் வரும் பராஅத் இரவாம். அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கிவித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள்.

இத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமாபராஅத் இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று கருதியதால் தான். அது மட்டுமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான இரவில் நற்செயல் செய்வது தவறாஎன்பது தான் அக்கேள்வி.

மார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும்இல்லாதது என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. இவர்கள் செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதாகுர்ஆனை தெளிவுபடுத்த அனுப்பப்பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களாஅல்லது கூறியுள்ளார்களாஅல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களாஎன்றால் நிச்சயமாக இல்லை. பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும் பலவீனமானஇட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறிபாருங்கள்! இஸ்லாத்தில் சொல்லப் பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

இவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்! இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும்.

முதல் ஆதாரம்

தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.

அல்குர்ஆன் 44:2-4

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவுபராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம். திருக்குர்ஆனை பொறுத்த வரை ஒரு வசனத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும். அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு எதுஎன்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். (அல்குர்ஆன் 97:1)

அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமளான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன்2:185)

இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமளான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஅபான் மாதத்தின் 15ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

இரண்டாம் ஆதாரம்

ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்துபாவ மன்னிப்பு தேடுவோர் உண்டாநான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டாநான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டாநான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)நூல்: இப்னுமாஜா 1378

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும்இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.

அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

மூன்றாம் ஆதாரம்

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவுபடுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: திர்மிதி 670

இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் உர்வாவிடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ கூறிய கருத்தைப் பதிவு செய்துஇது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

நான்காவது ஆதாரம்

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போன்று வேறு எந்த மாதத்திலும் நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான். அறிவிப்பாளர்: அதாவு பின் யஸார்

நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764,

ஃபலாயிலுர் ரமளான் - இப்னு அபித் துன்யாபாகம்: 1, பக்கம்: 9, ஹதீஸ் எண்: 8

இந்த ஹதீஸை அறிவிக்கும் அதாவு பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்மஸ்வூதி என்பவர் இடம் பெறுகிறார். இவர் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் பக்தாதிற்கு வந்த பிறகு மூளை குழம்பி விட்டார். அதாவது இவரிடம் பக்தாதில் வைத்துக் கேட்டவர்கள் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். இவரிடமிருந்து அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஹைரான் என்பவராவார். அல்மஸ்வூதி என்ற அறிவிப்பாளர் மூளை குழம்பிய பிறகு தான் இவர் செவியேற்றுள்ளார். இந்த அடிப்படையிலும் இது மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.

ஐந்தாவது ஆதாரம்

ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும்ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ

நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா
பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9

இந்த ஹதீஸை அறிவிக்கும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள்இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில் (பாகம்: 2, பக்கம்: 129)குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என விமர்சித்து இவற்றைச் செய்யக்கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்கிறார்கள் என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் சுயூத்தி ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ (நபிவழியை பின்பற்றும் உத்தரவும்பித்அத்துகளை உருவாக்குவதற்குத் தடையும்) என்ற நூலில் (பாகம்: 1, பக்கம்: 17) இவ்வாறு ஷஅபான் 15வது இரவில்,இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதனால் ஏற்படும் அனாச்சாரங்களையும்அக்கிரமங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள்.

அறிஞர் இப்னு அபீ முலைக்கா அவர்கள் இவ்வாறு ஷஅபான் 15வது இரவை சிறப்பிப்பதை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

அய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீதிபதியாக இருந்த ஸியாதன் முன்கிரிய்யு என்பவர்,ஷஅபான் 15ஆம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும் என்று கூறியதாக இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது. என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியதை நான் செவியேற்றிருந்தால் அந்தப் பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன் என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 4, பக்கம்: 317)

முஹ்ம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஷஅபான் 15ஆம் இரவில் (அல்லாஹ்) இறங்குவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் பலவீனமானவனே! 15ஆம் இரவு (பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும்.) அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இறங்குகிறான் என்று கூறினார்கள்.

நூல்: அகீததித் ஸலஃப் அஸ்ஹாபுல் ஹதீஸ்பாகம்: 1 பக்கம்: 12

பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2697

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நூல்: முஸ்லிம் 3243

எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.

அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றிஅதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்.

 

16.07.2010. 18:33

ஸலவாதுன்னாரிய்யா ஓதலாமா?

 ஸலவாதுன்னாரிய்யா ஓதலாமா?

தமிழக முஸ்லிம்கள் சிலரிடம் ஸலவாத்துன்னாரியா என்ற ஸலவாத்தை ஓதும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது 4444 தடவை இந்த ஸலவாத்தை ஓதினால் ஏழைகள் பணக்காரர்களாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இது ஓதப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படிக்க 22.04.2010. 14:49

பெருநாள் வாழ்த்து கூறலாமா? கூடாதா?

அஸ்ஸலாமு அழைக்கும். பெருநாள் வாழ்த்து கூறலாமாகூடாதாதயவு செய்து விளக்கம் அளிக்கவும் 
ஏற்கனவே
 கூடாது என்று விளக்கப்பட்டு விட்டது. ஆனாலும் நாம் கூறியதை சிலர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அல்லது அனைவரும் சரியாகப் புரிந்து கொள்ளும்படி நாம் எழுதவில்லை. எனவே இது குறித்து சற்று விளக்கமாக விடை அளிக்கிறோம்.

வாழ்த்து என்றால் அதற்கு அர்த்தம் என்னநீங்கள் நலமாக இருக்க வாழ்த்துகிறேன் என்று கூறினால் உங்களிடம் இறைத் தன்மை இருப்பதாகத் தான் அதன் கருத்து அமைந்துள்ளது.

நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன் என்று கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆச் செய்யும் பொதுவான அனுமதியில் இது அடங்கும்.

ஆசி வழங்குவது போல் அமைந்துள்ள வாழ்த்துகிறேன் என்ற சொல்லை ஒரு முஸ்லிம் கூற முடியாது. வாழ்த்துகிறேன் என்று நீங்கள் கூறுவதால் அவர் வாழ்ந்து விடுவார் என்று நம்புகிறீர்களாஅப்படி நம்ப முடியாது. நம்பக் கூடாது. ஒரு முஸ்லிமுக்காக துஆச் செய்யலாம் என்ற பொது அனுமதியின் அடிப்படையில் பெருநாள்தினத்திலும் துஆச் செய்யலாம்.

ஆனால் இது பித்அத்தாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு செயல் எப்போது பித் அத் என்ற நிலையை அடையும் என்பதை விளங்கிக் கொண்டால் தான் இதில் நாம் கவனமாக இருக்க முடியும்.

ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு ரக்அத் நஃபில் தொழ விரும்பினால் அவர் தொழலாம். குறிப்பிட்ட நாளில் நோன்பு நோற்க விரும்பினால் நோற்கலாம். பொதுவாக நஃபில் தொழ அனுமதி இருக்கிறது என்பதே இதற்கு போதுமான ஆதாரமாகும்.

ஆனால் நாம் கவனமாக இல்லாவிட்டால் இது கூட பித்அத்தாக மாறிவிடும். நான் காலை எட்டு மணிக்கு நஃபில் தொழுகிறேன். அதனால் அனைவரும் எட்டு மணிக்கு நஃபில் தொழ வேண்டும் என்று ஒருவர் கூறினால் - அல்லது அவர் கூறுவதை மற்றவர்கள் ஏற்றுச் செயல்படுத்தினால் - அது பித்அத் ஆகிவிடும்.

நான் முஹர்ரம் மாதம் முதல் நாள் அன்று நோன்பு நோற்பதால் அனைவரும் நோற்க வேண்டும் என்று ஒருவர் கூறினாலோ அதை மற்றவர்கள் ஏற்றுச் செயல் படுத்தினாலலோ அதுவும் பித்அத் ஆகி விடும்.

ஒருவர் தன்னளவில் தானாக விரும்பிச் செய்ய அனுமதி கொடுத்தால் அவரோடு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் செய்வதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறினால் அல்லாஹ்வின் தூதருடைய அதிகாரத்தைக் கையில் எடுத்தவராவார்.

அவர் செய்கிறார் என்பதற்காக அதை மற்றவர்கள் ஏற்றுச் செயல்பட்டால் அல்லாஹ்வின் துதருடைய இடத்தை அந்த மனிதருக்கு அளித்து விட்டார்கள் என்பது பொருள். அனைவரும் இதைச் செய்ய வேண்டும் என்று கூறும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

ஒருவர் தான் விரும்பும் நாளில் நோன்பு நோற்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் நாம் மிஃராஜ்பராஅத் இரவுகளில் நோன்பு கூடாது என்று கூறுகிறோம். இதற்குக் காரணம் என்னஅல்லாஹ்வும் அவனது தூதரும் ஏற்படுத்தாமல் யாரோ ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வழக்கம் அனைவரும் செய்ய வேண்டும் என்ற நிலையை அடைந்து விட்டது தான் இதை பித்அத் என்று நாம் கூறுவதற்கான காரணம்.

ஒருவர் தற்செயலாக ரஜப் 27 அன்று நோன்பு நோற்றால் அது பித்அத் ஆகாது. இது அனைவரும் நோன்பு நோற்க வேண்டிய நாள் என்ற நிலையை ஏற்படுத்தினால் அது பித்அத் ஆகிவிடும்.

அனைவரும் ஒரு காரியத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டும் என்றால் அது வஹீயின் மூலம் மட்டுமே முடிவு செய்யப்பட வேண்டும்.

ஈத் முபாரக் என்பது எப்படி உள்ளதுஅது பெருநாள் அன்று சொல்ல வேண்டிய ஒரு வார்த்தை. அது மார்க்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஒருவர் தானாக விரும்பி அந்த வார்த்தையின்அர்த்தத்துக்காக சொன்னால் அது பித்அத் ஆகாது. ஆனால் ஒவ்வொரு முஸ்லிமும் சொல்ல வேண்டியதாக அது மாறினால் அது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டது என்று ஆகிவிடும்.

எவரோ ஒருவர் உருவாக்கிய சொல் அல்லாஹ்வின் தூதர் கூறிய சொல்லுக்கு நிகரான இடத்தைப் பெற்று விடுகிறது. அல்லாஹ்வின் தூதருடைய இடத்தை மற்றவர்களுக்கு வழங்கும் இந்தப் போக்கு தான் அனைத்து பித்அத்துகளுக்கும் அடிப்படையாக உள்ளது.

குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்ற நிலை ஏற்படுவதை அனுமதிப்பதுமார்க்கத்துக்கு ஆபத்தாகும்.

ஈத் முபாரக் மட்டுமின்றி ஹேப்பி ரம்ஜான்ஹேப்பி பக்ரீத்பெருநாள் வாழ்த்து, குல்ல ஆமின் அன்தும் பி கைர் என்பது போன்ற எந்தச் சொல்லுக்கும் இது தான் நிலை. ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுகிறோம் என்றால் அது அனைவராலும் ஒரே மாதிரியாகச் சொல்லப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் அப்படிக் கூறியதால் இது ஸுன்னத் ஆகிறது.

ஈத் முபாரக் என்று எவரோ வழக்கப்படுத்திய சொல்லை அனைவரும் குரிப்பிட்ட நாளில் சொல்ல வேண்டும் என்பது பித்அத் ஆகிவிடும். இது போன்ற விஷயங்களைப் பல வருடங்கள் நாம் சொல்லிப் பழகி விட்டதால் எப்படியாவது நியாயப்படுத்த சிலர் முயல்கின்றனர்.

பத்து வருடப் பழக்கத்தை விட மறுக்கும் இவர்கள் பல நூறு ஆண்டுப் பழக்கமானபராஅத்மிஃராஜ்மீலாதுஉள்ளிட்ட பித்அத்களை மக்கள் விட்டு விட வேண்டும் கூறும் தகுதியை இழந்து விடுகிறார்கள்.

மிஃராஜ் அன்று நோன்பு தானே வைக்கிறோம். அது தவறா என்று அவர்கள் கேட்பது போல் இது நல்ல அர்த்தம் உடைய சொல் தானே இது தவறா என்று கேட்கின்றனர்.

என்ன செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது அவசியம் தான். அது போல் யார் சொல்லிச் செய்கிறோம் என்பதும் முக்கியமானது.

ஈத் முபாரக் என்பது பெருநாளுக்கான வாழ்த்து முறை என்று ஆக்கியது அல்லாஹ்வின் தூதர் அல்ல. நோன்பு வைப்பது நல்லது என்றாலும் மிஃராஜ் அன்று நோன்பு வைக்கச் சொன்னது அல்லாஹ்வின் தூதர் அல்ல. வேறு யாரோ என்பதால் தான் அது பித்அத் ஆகிறது. அது போல் தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

حدثنا يعقوب حدثنا إبراهيم بن سعد عن أبيه عن القاسم بن محمد عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد رواه عبد الله بن جعفر المخرمي وعبد الواحد بن أبي عون عن سعد بن إبراهيم 2697

இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது ரத்துச் செய்யப்படும் என்பது நபிமொழி- 
நூல் : புகாரி
 2697

குறிப்பிட்ட சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்றில்லாமல் குறிப்பிட்ட நாளில் அதைச் சொல்லித் தான் ஆக வேண்டும் என்றில்லாமல் வாழ்த்தும் வகையில் இல்லாமல் மார்க்கம் அனுமதித்துள்ள வார்த்தைகளைப்பயன்படுத்தி பெருநாளிலோ மற்ற நாட்களிலோ துஆச் செய்தால் அது தவறில்லை.

பித்அத் என்பது நுணுக்கமான இன்னும் பல தன்மைகளைக் கொண்டது. நீங்கள் கேட்ட கேள்விக்கு இது போதும்.

12.12.2009. 07:41




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
100 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி